• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

காதல் அடைமழை காலம் - 05

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

பர்வீன்.மை

மண்டலாதிபதி
Author
Joined
Jun 20, 2019
Messages
266
Reaction score
2,133
Location
Chennai
காதல் அடைமழை காலம் - 05

2019-10-08-16-39-03-866.jpg
அத்தியாயம் – 05

“ நீ என்ன சொல்ற ஜமீலா? எனக்கு குழப்பமா இருக்கு” கமர் தன் மூத்த மருமகளிடம் ஆலோசனை கேட்டார். ரசியாவிற்கு திருமணம் செய்ய வேண்டும் என்றதும் இரு மகன்களும் ஊரையே அலசி வரன் கொண்டு வந்திருந்தனர். மூத்த மகனான அமீர் ஒரு வரனையும், இரண்டாவது மகனான முபாரக் ஒரு வரனையும் தேர்ந்தெடுக்க, இரண்டில் எதை முடிப்பது என கமருக்கு மிகுந்த குழப்பம். இரண்டு வரன்களுமே அந்த ஊரின் பெருத்த தனவான்களின் வீட்டு வரன்கள்”
“ எனக்கு என்ன தெரியும் மாமி. உங்க இஷ்டம் போல பாருங்க “ என எப்போதும் போல நழுவினார் ஜமீலா.
“ சரி தான்….. எனக்கு குழப்பமாயிருக்கு னு தான் உங்கிட்ட கேட்டேன். நீ என்னடானா இப்படி சொல்ற. என்னப்பா அமீர்….. உங்களுக்கு கல்யாணம் முடிந்து இத்தனை வருஷம் ஆச்சு. இன்னும் உன் பொண்டாட்டி குடும்ப விஷயத்தை பேச பயப்படுறா…. இவ தானே வீட்டிற்கு மூத்த மருமகளா இருந்து எல்லாத்தையும் எடுத்து நடத்தணும்.....” என மகனிடம் அலுத்து கொண்டார்.

“ உம்மா…. இன்னும் எத்தனை வருஷமானலும் இவ இப்படி தான் மா இருப்பா. அவ குழந்தை மா” என சிலாகிக்க, ஜமீலாவின் முகம் கணவரின் கொஞ்சலில் சிவந்தது.

“ மாமி…. நான் சபூராவ கூப்பிடுறேன். நீங்க அவ கிட்ட கேளுங்க….. அவ நல்ல யோசனையா சொல்லுவா” என்றவர் தன் சிவந்த முகத்தை மறைக்க உள்ளே விரைந்தார். இந்த மூன்று வருடங்களில் சபூரா அந்த வீட்டின் மிக முக்கிய நபராய் மாறி இருந்தார். அன்பிலும், பண்பிலும் மட்டுமல்லாமல் பொறுப்பிலும் அக்கறையிலும் அனைவரின் நெஞ்சிலும் நீங்காத இடம் பெற்றிருந்தார். ரமீஸுக்கு உணவூட்டி விட்டு யாஸ்மீனை தோளில் போட்டு தட்டி கொடுத்தபடியே அங்கே வந்தார் சபூரா. அமீர் அமர்ந்திருப்பதை கவனித்தவர் தன் சேலை முந்தானையை தலையில் போட்டு தன் தலைமுடியை மறைத்தார். இஸ்லாமிய பெண்கள் ஆண்களின் முன்பும், அந்நியர்களின் முன்பும் தங்களது தலைமுடியை மறைத்து தான் நிற்க வேண்டும். அது அவர்களுக்கு கொடுக்கும் மரியாதையாகவே கருதபடுகிறது. ரமீஸ் ஓடிச் சென்று முபாரக் மடியில் அமர்ந்து கொள்ள யாஸ்மின் அமீரிடம் தாவினாள்.

“ அஸ்மா…. பிள்ளைகள கூட்டுட்டு உள்ளே போய் விளையாடுமா…. இங்க எல்லாரும் பேசிட்டு இருக்காங்க” என ஜமீலா பிள்ளைகளை தன் சின்ன நாத்தனாரோடு உள்ளே அனுப்பினார்.

“ மாமி…. நீங்க கூப்பிட்டதா லாத்தா( அக்கா) சொன்னாங்க….” என இழுத்தார் சபூரா.

“ உட்காருமா சபூரா”- அமீர்.

“ பரவாயில்லை மச்சான்”

“ அட உட்காருமா… முக்கியமா பேசணும்” என்றதும் முபாரக் ரகசியமாய் தன்னருகே அமர கண் காட்ட, அவரை செல்லமாக முறைத்தவர் கமரின் அருகில் அமர்ந்தார். அவரோடவே ஜமீலாவும் அமர்ந்தார். மருமகளிடம் தன் குழப்பத்தை தெரிவித்த கமர் சபூராவின் ஆலோசனைக்காக காத்திருந்தார்.

“ நா… நான் ஒன்று சொன்னா யாரும் தப்பா நினைச்சிக்க மாட்டீங்களே” சிறிது நேரம் யோசித்த பின் சபூரா தயக்கமாய் வினவினார்.

“ சொல்லுமா…..”

“ எனக்கு ரசியாவ வெளியே கொடுக்கறதுல உடன்பாடில்ல மாமி…. அவ கொஞ்சம் வாய் துடுக்கானவ…. சட்டு னு கோபப்பட்டுடுவா… நீங்க சொல்ற பெரிய இடத்திலயெல்லாம் அவளை அனுசரிச்சி போவாங்களா னு தெரியல” தயங்கி தயங்கி பேசியவர் நிறுத்தி அனைவரையும் பார்க்க, எல்லாருமே அமைதியாக இருந்தனர். சபூரா சொல்வது நூற்றுக்கு நூறு உண்மையல்லவா. ரசியாவின் முரட்டு குணத்தால் அன்றாடம் காயபடுபவர் அவர் தானே?

“ நான் அவளை தப்பா எதுவும் சொல்லல மாமி. எல்லாருக்கும் ஒரே மாதிரி குணம் இருக்குறதில்ல. நம்ம ரசியாவிற்கும் எவ்ளோ நல்ல குணங்கள் இருக்குது. அவ தைரியமான பொண்ணு மட்டுமில்ல புத்திசாலியும் கூட. எத்தனை இக்கட்டான சூழ்நிலையையும் துணிச்சலா சமாளிக்கிற குணம் அவ கிட்ட இருக்கு. என்ன தான் சட்டு சட்டு னு கோபப்பட்டாலும் மனசுல எதையும் வைச்சிக்க மாட்டா. அவ கொஞ்சம் வித்தியாசமானவ அவளுக்கு ஏத்த மாதிரி அவளை பற்றி தெரிஞ்ச பையனுக்கு கொடுத்தா நல்லாயிருக்கும்றது என்னுடைய அபிப்பிராயம்” என கூறி முடித்தார். ஜமீலா ஆவென அவரை தான் பார்த்து கொண்டிருந்தார். எப்படி இவளால் இவ்வளவு நிதானமாக அதுவும் இத்தனை பேர் இருக்கும் சபையில் தைரியமாக பேச முடிகிறது என்பது தான் அவரது யோசனையின் சராம்சம்.

“ நீ சொல்றது சரி தான் சபூரா. அவள பெரிய இடத்தில கொடுக்கணும்றத விட அவ சந்தோஷமா இருக்குற இடத்தில கொடுக்கறது தான் முக்கியம். நாம சொந்தத்தில பார்ப்போம் அமீர்….” என தன் முடிவின் மாற்றத்தை மகனிடம் தெரிவிக்க, அனைவருமே அதை ஆமோதித்தனர்.

அன்றிரவு யாஸ்மீனை தூங்க வைத்து விட்டு கணவரின் அருகில் வந்தமர்ந்தார் சபூரா.

“ என்னங்க…. நான் இன்னைக்கு மாமி முன்னாடி பேசினது தப்பா? யாராவது என்னை தப்பா நினைச்சிப்பாங்களா?” தயங்கி தயங்கி கேட்டார்.

மனைவியை தன் தோளோடு அணைத்து கொண்டவர், “ உன் மேல யாராவது கோபப்படுவாங்களா சபூ? உன்னை இன்னைக்கு நேற்று பார்க்கல. மூணு வருஷமா பார்க்குறோம். ரசியாவ பத்தொன்பது வருஷமா பார்க்குறோம். யார் எப்படி னு தெரியாதா சபூ? என்றார் ஆதரவாக.

“ ப்பா….. இப்போ தான் என் மனசு நிம்மதியா இருக்கு” என்றார் கணவரை ஒன்றியபடியே.

“ எப்படி சபூ? ரசியா உன்னை இவ்வளவு கஷ்டப்படுத்தினாலும் அவளுக்கு நன்மையை மட்டுமே நினைக்கிற”

“ அவ சின்ன பொண்ணுங்க…. ஏதோ புரியாம பேசுறா…. அதுக்காக அவளுக்கு கெட்டது நினைக்கணுமா?”

“ சரி தான்….. நான் உனக்கு சப்போர்டா பேசுனா… நீ அவளுக்கு சப்போர்டா பேசுற… ம்… உன்னோட நல்ல மனசை அவ எப்போ புரிஞ்சிக்க போறாளோ” என பெருமூச்சு விட்டார்.

“ அவளுக்கும் புருஷன், குடும்பம் னு வந்த பிறகு புரிஞ்சிப்பா. …என்னங்க…. எனக்கு ஒன்று தோணுது…. சொல்லலாமா? சொன்ன பிறகு என்னை தப்பா நினைக்க கூடாது. உங்களுக்கு பிடிக்கலனா விட்டுடலாம்” மீண்டும் தயக்கமாய் வினவினார்.

“ என்னலா பீடிகை எல்லாம் பலமா இருக்கு? சுத்தி வளைக்காம விஷயத்தை சொல்லு” மனைவியை ஊக்கினார் முபாரக்.

“ நீங்க ஆசாத்தை பற்றி என்ன நினைக்கிறீங்க?” கேட்டு விட்டு கணவனின் முகத்தை ஆராய்ந்தார்.

“ யாரு? நம்ம கடைல வேலை செய்ற ஆசாத்தா?”

“ ஒழுங்கா யோசிச்சி சொல்லுங்க…. ஆசாத் வேலைகாரனா?”

“ இல்ல…இல்ல…. வேலைகாரன் இல்ல. பதினேழு வயசுல தொழில் கற்றுக்கட்டும் னு அவங்க வாப்பா நம்ம கடையில வந்து விட்டாங்க. ஆசாத் வாப்பாவும் எங்க வாப்பாவும் பால்ய சிநேதருங்க சபூ… அவங்களும் பெரிய குடும்பம் தான். என்ன… நடுவுல கொஞ்சம் நசிந்து போயிட்டாங்க. எட்டு வருஷமா நம்ம கடையிலயே இருந்து தங்கச்சிங்க கல்யாணத்தை எல்லாம் முடிச்சிட்டான். கூடிய சீக்கிரமே அவங்க சொந்த ஊருல கடை வைக்க போறேன்னு சொன்னான். அவன் போயிட்டா நாங்க ரொம்ப தடுமாறுவோம் சபூ. நல்ல பையன். எந்த கெட்ட பழக்கமும் இல்லாத உழைப்பாளி. நீ வேணா பாரேன்… அவன் புதுசா கடை ஆரம்பிச்ச பொறகு பெரிய ஆளா வருவான். ஆமா… இப்போ எதுக்கு அவனை பற்றி பேசுற?” பொறி தட்டினாற் போல் கேட்டார் முபாரக்.

“ எதுக்காக பேசுறேன்னு இன்னுமா புரியலை?” கேள்வியை கணவனிடமே திருப்பினார்.

“ நம்ம ரசியாவ அவனுக்கு கொடுக்கலாம் னு நினைக்கிறியா? அது எப்படி முடியும்? அவங்க நம்ம அளவு வசதி இல்லயே?” தாடையை தடவினார் அவர்.

“ எனக்கு மட்டும் என்ன வசதி இருந்தது?”

“ அதையும் இதையும் சேர்க்காத சபூ. ரசியா என்னை மாதிரி கிடையாது. அவ ரொம்ப அந்தஸ்து பார்பா…. “

“ அதெல்லாம் நாம தான் எடுத்து சொல்லி புரிய வைக்கணும்ங்க. அவளுக்காக அந்தஸ்த மட்டுமே பார்த்து கட்டி வைக்க முடியுமா? அவள புரிஞ்சிக்கிற மாதிரி பையனை தானே பார்க்கணும்? ஆசாத்துக்கு நம்ம ரசியாவ ரொம்ப வருஷமா தெரியும். அவங்க தானே ரசியா ஸ்கூல் போற வரைக்கும் காவலுக்கு குதிரை வண்டி பின்னால போனது. அவளோட துடுக்கு தனம், கோபம் பற்றி எல்லாம் ஓரளவு தெரிஞ்சி தான் இருக்கும். ஆசாத் ரசியாவிற்கு ரொம்ப பொருத்தமானவரா இருப்பாருன்றது என்னோட கணிப்பு” என தன் மனதிலுள்ளதை போட்டு உடைத்தார்.

ஆரம்பத்தில் சபூரா கூறுவது ஒத்து வராது என தோன்றினாலும் அவர் இறுதியில் பேசியது சரி என தான் பட்டது முபாரக் மனதிற்கு. தன் தங்கையின் குணத்திற்கு அன்பும் பொறுமையும் உடைய ஆசாத் வெகு பொருத்தமாகவே இருப்பான் என தோன்றியது.

மறுநாள் காலை சபூரா கூறியதனைத்தையும் தன் தாயிடம் கூறினார் முபாரக். சிறிது நேரம் யோசித்தவர் தனக்கு சம்மதம் என கூறினார். அதற்கு பின் விஷயம் அமீருக்கு சென்றது. அவரும் சம்மதித்து விட, அடுத்து ஆசாத்திடமும் அவர் குடும்பதாரோடும் பேச்சுவார்த்தை நடந்தது. ரசியாவிற்கு சம்மதம் என்றால் எங்களுக்கும் சம்மதம் என கூறிவிட்டனர் ஆசாத் தரப்பு. இப்போது ரசியாவை சம்மதிக்க வைப்பது தான் மலைப்பாக இருந்தது.

சபூரா,” இது எனது ஏற்பாடு என ரசியாவிற்கு தெரிய வேண்டாம்…. தெரிந்தால் யோசிக்காமலே மறுத்துவிடுவாள்” என்று கூறி ஒதுங்கி கொண்டார். கமரும் மற்றவர்களும் சேர்ந்து ஒரு வழியாக ரசியாவை சம்மதிக்க வைத்தனர். ஜமீலா நடப்பதை எல்லாம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

“ ஆசாத்திடன் பணம் இல்லை என்பதால் நீ அவரை மறுக்கிறாய் அல்லவா ரசியா? ஆனால் ஆசாத் உன்னிடம் பணம் இருக்கிறது என்பதால் தான் கல்யாணத்துக்கு சம்மதித்திருக்கிறார் என்று உன்னால் கூற முடியுமா? என்ற முபாரக்கின் கேள்வி ரசியாவை அசைத்திருந்தது. அவருக்கு நன்றாக தெரியும் ஆசாத் ஒரு போதும் பணத்திற்கு மயங்குபவர் இல்லை. இந்த எட்டு வருடங்களில் ஒரு நாள் கூட ஆசாத் வரம்பு மீறி பேசியதில்லை. எந்த சலுகையும் கூட எடுத்ததில்லை. அவர் இந்த திருமணத்திற்கு சம்மதித்திருக்கிறார் என்றால் அதற்கு அவர் தன் குடும்பத்தின் மீது வைத்திருக்கும் நேசம் மட்டுமே காரணமாக இருக்கும் என உணர்ந்தார்.
 




Attachments

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top