• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

புறநானுற்று சிறுகதைகள்---- 26--- வீரனின் இருப்பிடம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,081
Reaction score
49,948
Location
madurai
அது ஒரு சிறிய வீடு. தாழ்ந்த கூரையையும் அதனைத் தாங்கும் நல்ல மரத்துரண்களையும் உடையது. வீட்டின் வெளியே இருந்து கண்டால் அடர்த்தியான மலைப் பகுதியிலுள்ள ஒரு குகையைப் போலத் தென்பட்டது. மறக்குடியினராகிய வீரப் பெருமக்கள்
வசிக்கின்ற வீதி அது.

அந்த வீட்டில் ஓர் இளைஞனும் அவனுடைய தாயும் வசித்து வந்தனர். தாய் வயதான கிழவி. கணவனை இழந்தவள். மகன் போர்வீரன். கண்டவர்கள் இமையால் நோக்கி மகிழத்தக்க கட்டழகன். இளமைக் கொழிப்பும் அழகான தோற்றமும் வீரப்பண்பும் ‘நாங்கள் இந்த இளைஞனை விட்டு நீங்கமாட்டோம்’ என்று சொல்லிக்கொண்டிருப்பன போல அவன் உடலில் ஒன்றுபட்டுக் கலந்திருந்தன.

இந்த ஆணழகனும் இவன் தாயும், வசித்த அதே வீதியில் இவர்கள் வீட்டிற்கு அடுத்தவீட்டில் வேறொரு மறவர் குடும்பம் வசித்துவந்தது.அந்தக் குடும்பத்தில் வாலைப்பருவத்துக் கன்னிப் பெண் ஒருத்தி இருந்தாள். அழகையும் ஆண்மையையும் தேடிக் கண்கள் துறுதுறுப்புக் கொண்டு திரியும் பருவம் அவளுக்கு.

கிழவியின் மகன் வீட்டிலிருந்து வெளியே போகும்போதும், வெளியிலிருந்து வீட்டிற்கு வரும்போதும் தன் வீட்டுப் பலகணி வழியே அவன் அழகைப் பருகும் வாய்ப்பை அவள்தவறவிடுவதே இல்லை. பலகணியின்வழியாக வெளியே தெரியும் அந்தஆண்மையின் எடுப்பான அழகைத்தன்னுடைய நீள் விழிகளுக்குள் அடக்கமுயலும் முயற்சியில் அவளுக்கு வார்த்தைகளால் விளக்க முடியாத ஒரு தனி விருப்பம்இருந்தது.

சில சமயங்களில் இளைஞன் வெளியேசென்றிருக்கும் நேரங்களில் அவன்வீட்டிற்குச் சென்று கிழவியிடம் அவனைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிற பழக்கமும்அவளிடம் உண்டு. அத்தகைய போதுகளில் எல்லாம் தன்னைக் கவர்ந்த ஆணழகனின் தாயோடு பேசுகிறோம் என்ற பெருமிதம்அந்தப் பெண்ணின் மனத்தில் பொங்கிச்சுரக்கும்.அவள் காலம் போவதே தெரியாமல் கிழவியிடம் அவனைப் பற்றிப்பேசிக் கொண்டிருப்பாள். அவன் விரும்பிஉண்ணும் உணவுப் பொருள்கள், உடுக்கும்உடைகள், பேசும் பேச்சுக்கள், பழகும்பழக்கவழக்கங்கள், எல்லாவற்றையும் வாய்அலுக்காமல் கிழவியிடம் கேட்டுக்கொண்டிருப்பாள்.

அன்புடையவர்களைப் பற்றிய எல்லாச்செய்திகளையும் அறிந்து கொள்ளத்துடிதுடிக்கும் ஆர்வம் ஒன்றுதான் அன்பு என்ற உணர்ச்சிக்கு ஏற்ற அடையாளம்போலும்!

சில நாட்களாக அந்தக் கன்னியின் கண்களும் பலகணியும் அவளை ஏமாற்றின. அந்தக் கட்டிளங்காளை வீதியில் அடிக்கடிதென்படவில்லை.அவ்வளவேன்? அவனைக் காணவே காணோம். வயதானகிழவியாகிய தாயைவிட்டு விட்டு அந்த வீரஇளைஞன் எங்கே போயிருக்க முடியும்? அவள் சிந்தித்தாள். அவளுக்குப்புரியவில்லை. புரிந்து கொள்வதற்கு ஆசை. ஆனால் அதே சமயத்தில் தயக்கம், பெண்மைக்கு உரிய வெட்கம்.

பக்கத்து வீட்டிற்குப் போய்க் கிழவியிடம் கேட்டுவிட வேண்டுமென்ற ஆசை முதிர்ந்தபோது அவள்
வெட்கத்தைக்கை விட்டாள். வெட்கம் ஆசைக்காக விட்டுக்கொடுத்து விட்டது. மனத்தில் துணிவை உண்டாக்கிக்
கொண்டுகிழவியைக் காண்பதற்குச் சென்றாள்.

“வா! அம்மா வா! எங்கே உன்னைச் சிலநாட்களாகக் காணவில்லை? உட்கார்ந்துகொள்:”

கிழவி அவளை வரவேற்றாள். அவள்உட்காரவில்லை. நாணிக்கோணியவாறுஅருகிலிருந்த தூண் ஒன்றைப் பற்றிக்கொண்டு நின்றாள்.

“என்னடி பெண்ணே உட்காரச் சொன்னால் உட்காராமல் துணைப் பிடித்துக் கொண்டுநிற்கிறாய்?”

“............”

“வீட்டில் ஆண்பிள்ளைகள் யாரும் இல்லையே? உனக்கு ஏன் இந்த வெட்கம்?”

“அதற்கில்லை பாட்டி உங்களை ஒன்றுகேட்க வேண்டும். அதுதான்.”

“ஏன் தயக்கம்? என்ன கேட்க வேண்டுமோகேளேன்! சொல்கிறேன்.”

“அவர் எங்கே பாட்டி? சில நாட்களாகத் தென்படவே இல்லையே?”

“அவரா? நீ யாரைக் கேட்கிறாய்?”

“அவர்தான் பாட்டி உங்கள் பிள்ளை.”

தரையில் காலை நீட்டிக் கொண்டுஉட்கார்ந்திருந்த கிழவி தலையை நிமிர்த்திப் பார்த்தாள். துணைப் பிடித்துக்கொண்டு நின்றிருந்த பெண்ணின் தலை கவிழ்ந்திருந்தது. கன்னங்கள் சிவந்திருந்தன. கால் கட்டைவிரல் தரையைக் கீறிக் கொண்டிருந்தது. உதடுகளை மீறி வெளிவர முயன்றகுறுப்புச் சிரிப்பை வலிய முயன்று அடக்கிக்கொண்டாள் கிழவி.

“யார்? என் மகனைப் பற்றியாகேட்கின்றாய்? புலி எங்கேபோயிருக்கிறது?’ என்பது குகைக்குத் தெரியுமா பெண்ணே?”

“புதிர் போடாதீர்கள் பாட்டி தெளிவாகச்சொல்லுங்கள்” “புதிர் இல்லையடிபெண்ணே பெற்றவள் இதோ இருக்கிறேன். பெற்ற
வயிறும் இதோ இருக்கின்றது. ஆனால் அவன் எந்தப் போர்க்களத்தில் சென்று போர் புரிந்து கொண்டிருக்கின்றானோ?”

பெற்றவள், தன் மகன் வீரன் என்ற பெருமிதத்தோடு கூறினாள். புலி வாழும் குகைக்குப் புலியினால் ஏற்பட்ட பெருமையைப் போல அவளும்அவள் வயிறும் வீரமகனைப் பெற்றதால் பெருமை கொண்டாடின.

துணைப் பற்றியவாறு நின்றுகொண்டிருந்த பெண்ணின் விழிகள்மலர்ந்தன. இதழ்கள் சிரித்தன. அந்தச்சிரிப்பும் மலர்ச்சியும் உங்கள் மகனின்அழகை மட்டுமே இதுவரை மதிப்பிட்டேன். இன்று வீரத்தையும் மதிப்பிடச் செய்துவீட்டீர்கள்’ என்று கிழவியிடம் சொல்லாமற்சொல்வது போலிருந்தன.

ஓர் ஆண்மகனின் வீரம் இரண்டுபெண்களுக்கு எவ்வளவு பெருமையைக்கொடுக்கிறது பாருங்களேன்!

சிற்றில் நற்றுண் பற்றி நின்மகன்
யாண்டுளனோஎன வினவுதி என்மகன்
யாண்டுளன் ஆயினும் அறியேன் ஒரும்
புலிசேர்ந்து போகிய கல்லளை போல
ஈன்ற வயிறோ இதுவே
தோன்றுவன் மாதோ போர்க்களத் தானே(புறநானூறு – 86)

சிற்றில் = சிறிய வீடு, நற்றுண் = நல்லதூண், வினவுதி = கேட்கிறாய், யாண்டு = எங்கு, கல்லளை = கற்குகை, சேர்ந்து = தங்கி.






 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top