You must have JavaScript enabled in order to use this order form. Please enable JavaScript and then reload this page in order to continue.


மாந்த்ரீகன் - 19

#1
அடர்ந்த காட்டின் நடுவில் கரிய நிற கிளைகளைக் கொண்ட புன்னை மரம் ஒன்று அகன்று விரிந்து வளர்ந்திருந்தது. செழித்து வளர்ந்திருந்த அம்மரத்தின் பசுமையான இலைகள், தலை தொடும் உயரம் வரையில் தாழ்ந்து வந்திருந்தன. ஒட்டுச்செடிகளாய் பரவியிருந்த பல வெண்ணிற பூக்களின் நறுமணத் தாது சூழ்ந்திருந்த அம்மரத்தின் நிழல்தனில் மாந்தை குல இளைஞர்கள் தற்காலிக இருப்பிடம் அமைத்திருந்தனர்.

இயற்கையாய் விரிந்த குடை போல் நிற்கும் அந்த மரத்தினைச் சுற்றி நச்சு இலைகளையும், சிறிய விலங்குகளுக்கான வலைகளையும் மாந்தை குலத்தினர் விரித்து வைத்திருப்பதால் இரண்டு நாட்கள் தங்கும் அளவிற்கு இது பாதுகாப்பான இடம் தான். அந்தி சாயும் நேரம் வேட்டைக்குச் சென்றவர்கள் ஒருவர் பின் ஒருவராக திரும்பி வர, மாந்தன் மட்டும் இறுதி வரையில் வரவில்லை.

மாந்த்ரீக குலத்தில் மாந்த்ரீக பயிற்சியும், வீரேந்திரபுரியில் வாள் பயிற்சியும் பெற்றவனை வன விலங்குகளால் அவ்வளவு எளிதில் நெருங்க இயலாது என்பது அவர்கள் அனைவருமே அறிந்த விஷயம். அதுவும்போக கடந்த ஐந்து வாரங்களும் யாளியைப் பிரிந்திருக்க முடியாமல், ஒளிந்து மறைந்தபடி நாவினியன் வீட்டை அவன் சுற்றி சுற்றி வருவதை அனைவரும் கண்டும் காணாமல் இருந்திருக்கின்றனர். ஆகையால் இப்போதும் அவன் அங்குதான் சென்றிருப்பான் என்று தாங்களே உறுதி செய்து கொண்டனர்.

நாவினியனும் இதையே நினைத்திருந்ததால் மாந்தனை தேடாமல் மற்றவர்களோடு உண்டு உறங்க துவங்கினான். முன்னிரவு நேரம் நாவினியனது கனவில் குள்ளநரிகள் கூட்டம் ஒன்று, மாமரங்கள் நிறைந்த கானகத்தில் மாந்தனை சுற்றி வளைப்பது போல கனவு வந்தது. அவன் எதிர்பாராத நேரத்தில் கூரிய நகங்கள் கொண்ட குள்ளநரி ஒன்று, சடாரென்று மாந்தனின் முதுகில் பாய்ந்தது....

அவ்வளவுதான், "மாந்தா..." என்று அலறிக்கொண்டே நாவினியன் உறக்கம் கலைந்து எழுந்து விட்டான்.

அவனருகில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவர்கள் அனைவரும் அவன் சத்தத்தால் விழித்து எழுந்து, "என்ன ஆனது இனியா?..." என்று வினவினர்.

தன் உள்ளுணர்வு சொல்வதை அப்படியே சொன்னால் மற்றவர்களும் மாந்தனை நினைத்து அஞ்சக் கூடும் என்று நினைத்த நாவினியன், "ஒன்றுமில்லை... மாந்தன் வழக்கம் போல என்னிடம் வம்பு செய்வதாய் கனவு கண்டேன்..." என்று பொய் சொல்லிவிட்டு திரும்பி படுத்து கொண்டான்.

முன் வரிசையில் இருந்த ஒருவன், "ஹா.. ஹா.. அதற்குத்தான் இப்படி அலறினாயா?" என்றான் நக்கலாய்.

அவனுக்குப் பின்னால் இருந்தவன், "அதுசரி, மாந்தன் இந்த வருடம் தன்னால் வேனில் விழா கொண்டாட முடியாத காரணத்தால், நாவினியனையும் சேர்த்து கொண்டாட முடியாமல் செய்துவிட்டான். அப்படி செய்தால் இவனுக்கு எப்படி இரவில் நிம்மதியாக உறக்கம் வரும்?...." என்றதும் முதலாமவன் 'கொல்லென...' சிரித்தான்.

ஆனால் நாவினியனால் அந்த சிரிப்பில் பங்கேற்க முடியவில்லை, 'மாந்தனுக்கு என்ன ஆபத்து வரப்போகின்றது?...' என்ற பதற்றத்தால் அவன் இமைகள் இரண்டும் இணைய மறுத்தது.

அவனைப்போலவே இங்கு குலத் தலைவியின் குடிலில் இருந்த யாளியின் இமைகளுக்கும் உறக்கம் பிடிக்கவில்லை, இதயத்தினுக்கோ உறங்கவே பிடிக்கவில்லை. இன்று காலையில் தான் மாந்தை தேவி பாட்டி அவளைத் தன் குடிலுக்கு அழைத்து வந்திருந்தார். ஐந்து வாரங்களாய் அவர் யாளியை பிரிந்திருந்ததால், மாந்தன் திரும்பி வரும் வரையில் மட்டும் தங்கள் குடிலில் இருக்கட்டும் என்று தன்னோடு அழைத்துச் சென்றிருக்கிறார்.

தினமும் மாந்தன் உறங்கும் பின் வாயில் திண்ணையில் குளத்து மீன்களை வேடிக்கை பார்த்தபடி அமர்ந்திருந்தாள் யாளி... அமாவாசை நெருங்கிவிட்டதால் நிலவில்லா வானத்து விண்மீன்களைக் காணும் பொழுது, தன்னைப்போலவே தலைவனின் துணை இழந்து தவிப்பதாய்த் தோன்றிற்று. அவளின் மனச்சுமை ஆற்றிட நினைத்து வீசிடும் தென்றல் காற்றும், ஏனோ மன்னவனின் வாசத்தையே அவளுக்கு நினைவுபடுத்தியது. எதிர் இருக்கும் இயற்கை அழகு எதிலும் சிந்தை கலக்காமல், மனதை தொலைத்துவிட்டு தவிக்கும் மங்கையவளின் பின்னால் ஓசையின்றி வந்து நின்றார் மாந்தை தேவி பாட்டி.

குலத்தலைவி, "அம்மாடி யாளி... காலையிலிருந்தே உன் வதனத்தில் புன்னகையைக் காணவில்லையே... உணவுகளையும் நீ சரியாய் உட்கொள்ளவில்லை, ஏனம்மா இன்று என்னவோ போல் இருக்கின்றாய்?" என்றார் அவளின் கூந்தல் வருடி...

'உயிரைத் தொலைத்துவிட்டு உடல் மட்டும் இருப்பதனால் உணவு உள் செல்ல மறுக்கின்றது!...' என்று எவ்வாறு அவரிடம் உண்மையைச் சொல்ல முடியும்? ஆகவே யாளி, "அதெல்லாம் ஒண்ணுமில்ல பாட்டி... ஏனோ இன்னிக்கி எனக்கு பசிக்கல..." என்று பொய் கூறினாள்.

தனது பருவ வயதை கடந்து, தனது குலத்தின் பருவ வயதுடையோரின் காதல் இச்சைகள் புரிந்து, அந்நோய்க்கு தகுந்த சிகிச்சை தரும் வித்தை தெரிந்தவர் மாந்தை தேவி பாட்டி. அவரின் அறிவு மணநாள் காணப் போகும் புதுப் பெண்ணின் பசலை நோயின் வீரியத்தை அறியாது இருக்குமா? யாளி தன் வாய் திறந்து கேட்காமலேயே அவள் மனம் ஆறிடும் படியான பதில்களை பாட்டி சொல்லத் துவங்கினார்.

பாட்டி, "மாந்தனை நினைத்து கவலை கொண்டாயா யாளி?"

"மாந்தன் இதுவரைக்கும் எப்பவுமே நான் பாக்குற தூரத்தில இருப்பான், அதான் திடீர்னு பக்கத்துல இல்லைனதும் மனசுக்கு சங்கடமா இருக்கு. வேட்டை விழாவ முடிச்சுட்டு எல்லாரும் எப்போ வருவாங்க பாட்டி?..."

'எப்போது வருவார்கள்?...' எனும் இந்த கேள்வியை இந்த ஒரே நாளில் பத்தாவது முறையாக யாளி கேட்கிறாள். மூன்று தினங்களில் வந்து விடுவார்கள் என்று பாட்டி ஒவ்வொரு முறையும் பதில் சொன்னாலும், இப்பொழுது வரையில் அந்த பதில் அவளின் சித்தத்தில் ஏற வில்லை போலும்.

யாளியின் அருகில் வந்து அமர்ந்த பாட்டி, "நான் உனக்கு பதில் சொல்ல வேண்டுமானால், நீ எனக்காக இந்தக் கொன்றை பழங்களை உண்ண வேண்டும்..." என்று நிபந்தனை விதித்தார்.

இதுவரை அவள் சுவைத்த பழத்திலேயே கொன்றைப் பழம்தான் அதிக சுவை வாய்ந்தது, அதுவுமே இன்று கசப்பாக தோன்றியது யாளியின் நாவிற்கு. இருந்தும் பதில் கேட்கும் ஆர்வத்தில் இரண்டு பழங்களை மட்டும் உண்டு முடித்தாள். இதையாவது உட்கொண்டாளே என்ற திருப்தியோடு பாட்டி வேட்டை விழாவினை பற்றி சுருக்கமாக விவரிக்கத் தொடங்கினார்.

பாட்டி, "ஆதிக்காலத்தில் வேட்டையாடுவது மட்டுமே எம் குலத்தின் முக்கியத் தொழிலாக இருந்து வந்தது. அதன் பின் எங்களின் மூதாதையர் வனத்து நிலத்தை பண்படுத்தி பயிரிட துவங்கினார்கள். காலத்திற்கு ஏற்ப உணவீட்டும் முறையை நாங்கள் மாற்றி கொண்டாலும் ஆதி பழக்கத்தை மறந்து விடக் கூடாது என்பதற்காக கொற்றவை திருவிழாவில் வேட்டை விழாவினை முக்கிய நிகழ்வாக நிகழ்த்துகிறோம். மாந்தை குலத்து இள வயது வாலிபர்கள் அனைவரும் விருப்பத்தோடு அதில் கலந்து கொள்வார்கள்."

யாளி, "ஆனா நான் நிறைய பேர ஊருக்குள்ள பார்த்தேனே, அவங்க ஏன் வேட்டைக்கு காட்டுக்கு போகல பாட்டி?..."

"வீட்டிற்கு ஒரு ஆண்மகன் வேட்டை விழாவில் பங்கேற்க வேண்டும் என்பது மட்டுமே எங்கள் நிபந்தனை. ஒன்றுக்கு மேற்பட்ட ஆண் பிள்ளைகள் இருக்கும் வீடுகளில் எவராவது ஒருவரை மட்டும் விழாவிற்கு அனுப்பி விட்டு மற்றவர்களை தங்களோடு இருத்திக்கொள்வர்."

"ஓ... அதனாலதான் நம்ம தாத்தாவும் வேட்டைக்கு போகலையா பாட்டி?"

"ஆமாம் யாளி, முதல் நாளில் ஒரு சிலருக்குத்தான் விரும்பிய மிருகம் கிட்டும், ஏனையவர்களுக்கு இரண்டாவது நாள் கிட்டும். பொதுவாகவே மூன்றாம் நாள் வேட்டை முடித்து கிளம்பத் தயாராகி விடுவார்கள்... மூன்றாம் நாள் முடிவிலும் அனேகம் பேருக்கு விருப்பமான மிருகம் கிடைக்கவில்லை என்றால் மட்டுமே நான்காவது நாளும் தங்கி வேட்டையாடுவார்கள். ஆனால் அப்படி ஒரு சூழ்நிலை நான் சிறுமியாக இருக்கும் பொழுது ஒரு முறை மட்டும் நேர்ந்தது, அதன் பிறகு இன்று வரை ஒருபோதும் நான்கு நாள் வேட்டை விழா நிகழ்ந்ததில்லை..."

"அப்போ மூணாவது நாளாகும் போது, முதல் நாள் வேட்டையாடின மிருகம் கெட்டு போயிடாதா பாட்டி?"

"ஹா... ஹா... அதைச் சொல்ல மறந்துவிட்டேனா? வேட்டைக்குச் சென்றவர்களுக்கு உணவே அவர்கள் வேட்டையாடிய மிருகம் தான். தனியாகவோ அல்லது கூட்டமாகவோ காட்டிலேயே சுட்டு சமைத்து சாப்பிட்டு விடுவார்கள்."

"அப்புறம் எப்டி பாட்டி, அவங்க என்ன வேட்டையாடினாங்கனு மத்தவங்களுக்கு தெரியும்?"

"மிருகத்தின் கொம்பையும் அவற்றின் பற்களையும் வைத்து, ஒரு மிருகத்தின் வயதையும் உருவத்தையும் மிகச் சுலபமாய் நிர்ணயிக்க முடியும். அப்படித்தான் அவரவர் வேட்டையாடிய மிருகத்தின் தரத்தை நிரூபிப்பரம்மா..."

"பாட்டி நீங்க தப்பா நினைக்கலேன்னா நான் உங்கள ஒன்னு கேட்கலாமா?"

"என் பேத்தியை நான் தவறாக நினைப்பேனா? தயங்காமல் கேளம்மா..." என்றார்.

யாளி தயங்கித் தயங்கி, "அது வந்து.. இதுக்கு முன்னால எப்பவாவது ரெண்டு நாள்ல வேட்டை விழா முடிஞ்சு திரும்பி வந்து இருக்காங்களா?" என்றாள்.
 
#2
பாட்டி மென்னகையோடு, "ஒரு முறை அவ்வாறு நிகழ்ந்திருக்கின்றது, மாந்தன் இங்கிருந்து அரண்மனைக்கு கிளம்பும் முன்னால் இரண்டு நாட்களிலேயே வேட்டை விழா முடிந்து விட்டிருந்தது. இம்முறையும் அனைவருக்கும் விரைவில் வேட்டை மிருகம் கிடைத்து விட்டால் நாளை இரவிலேயே வீடு திரும்பி விடுவார்கள். நீ கவலை கொள்ளாமல் உள்ளே வந்து உறங்கம்மா..."

"நான் இன்னைக்கு ஒரு நாள் மட்டும் இங்கேயே படுத்துக்கட்டுமா பாட்டி?"

"சரி உறங்கு, ஆனால் ஒரு நிபந்தனை..."

"என்ன பாட்டி?"

"நீ சரியாக உணவு உண்ணாத காரணத்தால் மூன்றாம் ஜாமத்தில் உனக்கு குவளையில் பால் கொண்டு வந்து தருகிறேன். மறுக்காமல் பருகிக்கொள்ள வேண்டும், சம்மதமா?"

"ம்.. சரி பாட்டி..."

அடுத்த ஐந்து நிமிடத்தில் அவளுக்கான மான்தோலால் ஆன படுக்கை விரிப்பும், பட்டுத் துணியால் ஆன போர்வையும் தயாரானது. நெடுநேரம் உறக்கம் வராமல் உழன்று கொண்டிருந்தவள், முதல் ஜாமம் முடியும் நேரத்தில் உறக்கம் கொண்டாள்.

கனவில் அந்த கள்வன் அவளைத்தேடி வந்தான்... பூக்குவியலாய் படுத்திருந்த பூவை அவளை பொற்குவியலை கண்ட ஏழை போல கை நிறைய அள்ளிக் கொண்டு, கானகம் நோக்கி நடக்கத் துவங்கினான். அசைவுகளால் உறக்கம் கலைந்து கண்விழித்தவள் தன்னவனது அருகாமை தந்த இதத்தில் மயங்கி தளிர்க் கொடி போல அவன் மார்போடு ஒன்றிக் கொண்டாள். மாந்தன் தன் பங்கு அன்பினை காட்ட நினைத்து யாளியின் முன் நெற்றியில் முத்தமிட்டான். அந்த ஈர முத்தத்தில் நினைவு திரும்பியவளுக்கு, நிகழ்வது எல்லாம் கனவில்லை நிஜமென்று புரிந்தது.

அலறியடித்து பதறி எழுந்த யாளி, "மாந்தா... என்ன செய்யிற?..." என்று கத்தினாள்.

"தெரியவில்லையா? உன்னை கடத்திச் செல்கின்றேன்..." என்றான் கொஞ்சமும் குறும்பு குறையாமல்.

"வேணாம், விடு மாந்தா... பாட்டி தாத்தா முழிச்சு பார்த்தா என்னை காணும்னு தேடுவாங்க... நான் வீட்டுக்கு போகனும்..." என அவன் கைகளில் இருந்து துள்ளி இறங்கிட முயன்றாள்.

தப்பி தவறி கூட அவளை விடக்கூடாது என்று இறுக்கமாக பிடித்துக் கொண்ட மாந்தன், "பதறாதே கண்ணே, அவர்கள் நாளை காலை வரையில் எழமாட்டார்கள். அவர்களின் தலைப்பகுதியில் திசைப்பூண்டு செடியின் கொழுந்து இலைகளை தூவி விட்டேன். அதை எப்போது அங்கிருந்து எடுக்கின்றேனோ, அதுவரையில் அவர்கள் உறக்கத்திலேயே இருப்பார்கள்."

"ஏன் இப்டி செஞ்ச மாந்தா?..."

"ஏனா? பசிக்கிறதடி..."

"பல்லதட்டி கையில கொடுத்திடுவேன்..."

"அந்த பசியில்லை... இது சாதாரண வயிற்றுப்பசிதான். உன்னைக்காணாமல் என்னால் ஒரு மனதாய் வேட்டையாட முடியவில்லை, பழங்களும் கசக்கின்றது. பசியின் வீரியம் தாளாமல் தான் உன்னைத் தேடி வந்துவிட்டேன்..."

"நான் உன்ன நம்பமாட்டேன்..."

"ஏன் நம்ப வேண்டுமென்று நான் சொல்லட்டுமா?...

"சொல்லுங்களேன் பாக்கலாம்..."

"பாட்டியையும் தாத்தாவையும் மயக்கிய என்னால், உன்னையும் மயங்க வைத்து தூக்கிச் சென்றிருக்க இயலாதா? எதற்காக நினைவு பிறழாமல், தூக்கம் கலைக்காமல் தூக்கி சுமக்கிறேன்?"

"கரெக்ட்டாத்தான் சொல்ற, ஆனாலும் பாட்டிக்கு தெரிஞ்சா வருத்தப்படுவாங்க மாந்தா...."

"என் பசி உன் மனதை கரைக்கவில்லையா? எனில் வா, உன்னை குடிலிலேயே விட்டுவிடுகின்றேன்."

முகத்தை சோகமாக வைத்துக் கொண்டு, இறைஞ்சிப் பேசுபவனை பார்க்கையில் அவளுக்கும் பாவமாகவே இருந்தது. இருந்தும் தன் மனம் கொண்ட உறுதியை தளரவிடாமல், "அதுக்காக என்னை இப்டி தூக்கிட்டு போனா சரியாகிடுமா? பாட்டி வேற மூன்றாம் ஜாமத்துல பால் கொண்டு வந்து தருவேன்னு சொன்னாங்க, அவங்களுக்கு இப்போ தெரியலைனாலும் காலைல கண்டுபிடிச்சுடுவாங்க மாந்தா...." என்று செல்லம் கொஞ்சினாள்.

"அப்படியா சங்கதி? சரி, மூன்றாம் ஜாமம் முடியும்முன் உன்னை வீட்டில் சேர்த்துவிடுகிறேன், போதுமா?..."

"ம்...."

காதல் கொண்ட மனமும், அந்த மனம் கொண்ட மன்னவனும் ஒரே திசையில் செல்லும் பொழுது, சொல் பேச்சு கேட்காத உடலை வைத்துக்கொண்டு அவளின் அறிவு என்னதான் செய்ய இயலும்?

மாந்தன் யாளியை தூக்கிக் கொண்டு நெடுந்தூரம் சென்ற பிறகு மெதுவாக கண் திறந்த காரொளி நாதன் தாத்தா, தனது அருகில் படுத்திருந்த மாந்தை தேவி பாட்டியிடம் ரகசிய குரலில், "அவன் இந்த நேரத்தில் இங்கே வருவான் என்று உனக்கு எப்படித் தெரியும் தேவி?" என்றார்.

மாந்தை தேவி பாட்டி பதில் கூறாமல் திசைப் பூண்டின் மயக்கத்தை முறிக்கும் தும்பை பூவில் செய்யப்பட்ட தங்களது தலையணையை எடுத்து, அதன் அருகில் கிடந்த திசை பூண்டு செடியின் இலைகளை தூரமாய் தள்ளிவிட்டார்.

காரொளி நாதன் தாத்தா மீண்டும் ஒருமுறை, "கேட்கிறேனே, பதில் சொல் தேவி..." என்றார்.

அவரை முறைத்துக்கொண்டே பாட்டி, "அதுதான் உங்களின் பரம்பரை பழக்கமாயிற்றே... நாற்பத்தைந்து வருடங்களுக்கு முன்னால் திருமணம் நிச்சயமான புதிதில் தாங்கள் இதே முறையில்தான் என்னைக் காண கள்ளத்தனமாய் வந்தீர்கள். இருபது வருடங்கள் முன்னால் உங்களின் ஆசை மகள் இதே போன்று நம்மை மயங்க வைத்துவிட்டு, காதலனோடு கள்ளத்தனமாய் சென்றாள். பிறகு உங்களின் பேரன் மட்டும் உங்கள் பரம்பரைக்கு விதிவிலக்காகவா இருக்கப் போகின்றான்? அவரையைப் போட்டால் துவரையா வந்து முளைக்கும்? ஆதி எப்படியோ அந்தமும் அப்படித்தானே..."

"எனில் அனைத்திற்கும் காரணம் நான்தான் என்கின்றாயா தேவி?"

"இல்லை என்பீர்களா? 'என் பிள்ளையிடம் ஏதேனும் ஒரு குறை உண்டா? இவனை மணந்துகொள்ள நீ ஒற்றைக்காலில் நின்று தவம் செய்திருக்கிறாய் என்று வாய் ஓயாமல் பெருமை பாராட்டுவார்களே என் மாமியார். அவர் இன்று இருந்திருக்க வேண்டும், பிறகு தெரியும் வேடிக்கை..." என்றார்.

"என் அன்னையை கொஞ்சாமல், உன்னால் ஒரு நாள் கூட கடக்க முடியாதா தேவி?"

"ஆமாம், குறையில்லா என் மன்னவனின் அன்னையை கொஞ்சிப் பேச வேண்டும் என்று எனக்கு வேண்டுதல் பாருங்கள்..."

"அதுசரி, நாங்கள் கள்வர்களாகவே இருந்துவிட்டு போகின்றோம். அனைத்தும் தெரிந்த நீ ஏன் யாளியை அவனோடு செல்ல விட்டாய்?"

"யாளி நமது மகள் போல் கிடையாது என்பதனால். அவள் புத்திசாலிப்பெண், மூன்றாம் ஜாமம் முடிவதற்குள் நிச்சயம் திரும்பி வந்து விடுவாள் பாருங்களேன்..."

"ஓகோ... அவள் விரைவில் திரும்பி வர வேண்டும் என்பதற்காகத்தான் மூன்றாம் ஜாமப் பொழுதில் பால் தருகிறேன் என்று சொல்லி வைத்தாயா?"

"அவள் விரைவில் திரும்பி வரவேண்டும் என்பதற்காக இல்லை. உங்கள் பேரன் அவளை விரைவில் திருப்பி அனுப்ப வேண்டும் என்பதற்காக சொல்லி வைத்தேன்...."

"ஹா... ஹா... மிகச்சரியான யோசனைதான். அதுசரி நமக்கு இப்பொழுது மூன்றாம் ஜாமம் வரையில் கால அவகாசம் கிடைத்திருக்கிறதே, இந்த பொழுதில் நாம் என்ன செய்யலாம்?"

"ம்... கோணி தைக்கலாம்... குதிர் அளக்கலாம்... தள்ளி படுங்கள். கொள்ளுப் பேரன் பெரும் வயதாகிவிட்டது, இந்த வயதில் வரும் ஆசை உடலுக்கு கேடு..."

"நான் மீண்டும் திசைப்பூண்டின் இலைகளை நாட வேண்டியிருக்கும் போல் இருக்கிறதே..." என்று தாத்தா நெருங்க நெருங்க, பாட்டியின் பொய்க் கோபம் என்னும் முகத்திரை விலகத் துவங்கியது.

தோகையை ஏந்திய மயிலென தன் காதலியை ஏந்திக்கொண்டு வனத்தினுள் நடந்தான் மாந்தன். அதுவரையில் பயணிக்கும் பாதையை கவனிக்காமலிருந்த யாளி, தாமதமாகவே தன் சுற்றுப்புறத்தினை கூர்ந்து நோக்கினாள்.

யாளி, "இது வழக்கமான பாதை இல்லையே, எங்க போறோம்?"

"அமைதியாக வா யாளி... உனக்கு பூலோக சொர்கத்தை காட்டுகின்றேன்...."

"சரி, கீழ இறக்கி விடுங்க, நான் நடந்து வர்றேன்..."

"அவசியமில்லை, இது நாகங்கள் இரை தேடி உலவும் நேரம். நாம் சேர வேண்டிய இடமும் வெகுதூரமில்லை, அருகில் வந்துவிட்டோம்..."

"அப்புறம் ஏன் இங்க கூட்டிட்டு வந்த? உனக்கு ஏதாவது ஆயிடப்போகுது மாந்தா..."

"மாந்தை மக்களின் வாசம் எம் மலை நாகங்களுக்கு நன்கு பழக்கம், எனவே எங்களை அவை ஏற்றுக் கொள்ளப் பழகி விட்டன."

மாந்தனின் பதில் அந்த பேதைக்கு முழுதாய் விளங்காமல் இருந்தாலும், அவன் மீது இருந்த நம்பிக்கையின் காரணமாக அமைதியாக வேடிக்கையில் தன் கவனத்தை செலுத்தலானாள். அரைமணிநேர பயணத்திற்கு ஏதோ ஒரு குளக்கரைக்கு அருகில் வந்து அவளை இறக்கி விட்டான். நிலவில்லாததால் இருளின் தீவிரம் நிறைந்த அந்த காட்டுப்பகுதியில், முதல் பார்வைக்கு எதுவும் தெளிவாக தெரியவில்லை.

மாந்தன் ஒரு உலர்ந்த மரக்கட்டையின் முனையில் தன் மந்திர சக்தி மூலம் நெருப்பு உண்டாக்கி குளத்திற்கு அருகில் இருந்த பாறையின் இடுக்கினில் சொருகி வைத்தான். அவன் வரவினால் அது நேரம் வரை துயின்று இருந்த சிற்சில ஒளிரும் செடிகளும், ஞவல்களும் (மின்மினி) தனது இருப்பினை தெரிவிக்கும் படியாக ஒளிர்ந்து மறைந்தன. அந்த ஒளி மங்கிய இடத்தில் சத்தமில்லாமல் வழிந்து செல்லும் நீல நிற சிறு ஓடை கொள்ளை அழகோடு காட்சி தந்தது.

குளத்தின் வலப்பக்கம் மிகப்பெரிய ஆலமரம் ஒன்று தன் விழுதுகள் முழுதும் நிறைய ஞவல்களை சுமந்தபடி நிமிர்ந்து நின்றிருந்தது. அம்மரத்தில் பசுந்தழைகளை ஒன்று சேர்த்துக் கட்டிய புதிய ஊஞ்சல் ஒன்று காற்றில் அசைந்தாட, யாளியின் கால்கள் தன்னிச்சையாய் அதை நோக்கி நகர்ந்தது. அது இரண்டு பேர் சேர்ந்து அமரும் அளவிற்கு மிகப்பெரிய ஊஞ்சல். யாளியை அதில் ஏற்றிவிட்டு மாந்தன் தானும் ஏறி அமர்ந்தான். அவனுடைய மந்திரத்திற்கு இணங்கிய மரம் ஊஞ்சலை ஆட்டுவித்தது.

ஊஞ்சலின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க, புல்லின் அடியிலும் விழுதின் நடுவிலும் பதுங்கியிருந்த ஞவல்கள் வெளிவரத் துவங்கியது. கற்பனையிலும் கதைகளிலும் மட்டுமே கேட்டு ரசித்த ஓர் கவிதை உலகம் அவள் கண் முன்னே விரிந்து கிடந்தது. அந்த இடத்தில் காதலனின் தோள் சாய்ந்து கானகத்துக் குளிர் காற்றில் ஊஞ்சல் ஆடுகையில், அவள் உயிர் இப்பிறவி கொண்டதன் உள்ளர்த்தம் உணர்ந்தது. வாழ்வின் இனிமையான நிமிடங்களை ஆசை தீர ரசித்து தீர்த்தவள் இறுதியாய் நிகழ் உலகுக்கு திரும்பினாள்.
 
#3
தன் பவள வாய் திறந்து, "ஏன் மாந்தா? நாம இங்கேயே ஒரு குடிசை போட்டு வாழ்ந்துக்குவோமா?" என்று வார்த்தை முத்துக்களை உதிர்த்தாள்.

"அதற்கு வாய்ப்பில்லையடி கண்ணே..."

"ஏன்? பாட்டி நாம இங்க இருக்குறதுக்கு ஒத்துக்க மாட்டாங்களா?"

"அதற்கில்லை, நாம் உன் உலகத்தினுக்கு செல்ல வேண்டும்."

"என்ன! எதுக்கு? ஏன் மாந்தா? நாம இங்கேயே இருக்கலாம்... அப்பா ஆசிர்வாதத்தோட நாம கல்யாணம் பண்ணலாம்னு நீ சொன்னதால, நீ போய் அப்பாவை கூட்டிட்டு வருவன்னு நான் நினைச்சேன், நீ என்னடான்னா இப்டி சொல்ற..."

"கருந்துளை பற்றி பல ரகசியங்கள் உனக்கு தெரியாது யாளி, காலம் கனியும் பொழுது உனக்கு விளக்கிச் சொல்கிறேன்..."

"திடீர்னு இப்டி சொன்னா பாட்டியும் தாத்தாவும் எப்படி இத தாங்கிக்குவாங்க?"

"யாளி, 'இங்கேயே இருந்தால் என்றாவது ஒருநாள் நீ அரசனாக வேண்டிய சூழ்நிலை உருவாகும், அது உனக்கு ஆபத்தாகவும் உருமாறும். உனக்கு அந்த தொல்லை இனி வேண்டாம், நீயும் உன் மனைவியும் எங்கேயாவது சென்று சந்தோசமாக வாழ்ந்தால் சரி...' என்று சொன்னதே, என் பாட்டி தான்..."

"ஆனா அது ரொம்ப கஷ்டம் மாந்தா... சொர்க்கம் மாதிரி இருக்குற இந்த அழகான இடத்தில வாழ்ந்துட்டு, நரகம் மாதிரி என்னோட உலகத்தில ஒரு நாள் தாக்குப் பிடிக்கிறதே உனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கும்... அங்க அழகான மலையும் இல்ல, அன்பான மனுஷங்களும் இல்ல. எங்களோட சொத்து எல்லாத்தையும் நாங்களே அழிச்சுக்கிட்டோம்... நாம வேற ஏதாவது ராஜ்ஜியத்துக்கு போவாமா?"

"என்னைத்தேடி அங்கும் அவர்கள் வருவார்கள் யாளி... நரகமாயினும் சொர்க்கமாயினும், என் தேவதையோடு நான் இருந்தால் போதும் என்ற முடிவிற்கு நான் வந்துவிட்டேன்... பாட்டியின் முடிவும் அதுவே, நம்மேல் நமக்கு ஈர்ப்பு உள்ளதென்று நாம் உணரும்முன்பே, பாட்டி நம்மை உணர்ந்திருந்தார். நான் பச்சைமலை பற்றிய ரகசியத்தை சொன்னதும் அவர் அனுமதியும் தந்தார்."

"பச்சை மலையில தான் கருந்துளை இருக்குதா?"

"சரியாய்ப் போயிற்று, கருந்துளை நாம் உருவாக்க வேண்டிய ஒரு மாய சக்தி, அதை அங்கே பெட்டகத்தில் போட்டு கட்டி வைத்திருப்பார்களா என்ன?"

"அப்புறம் என்ன ரகசியம்தான் அங்க இருக்கு?"

"அது எம் குலத்தில் வெகு சிலரே அறிந்திருக்கும் ரகசியம். ருத்ர சிவன் பச்சை மலை குகையினில் வீற்றிருக்கின்றார். எங்களின் மாந்திரீக பலமானது எங்களது முன்னோர்களிடமிருந்து கிடைக்கும் தொல்கொண்டியை பொறுத்து மாறுபடும் என்று சொல்லியிருக்கிறேன் இல்லையா? அப்படி தன் வம்சத்தினருக்கு மாந்திரீக பலத்தை தொல்கொண்டியாக கொடுக்க விரும்பாத முன்னோர்களும், மணம் செய்யாமல் ஈசனை நினைத்து வாழ்ந்த முனிகளும் பச்சை மலைக்கு சென்று, சிவனின் பாதங்களில் தங்களது மந்திர சக்தியையும், ஆத்மாவையும் சமர்ப்பித்து விடுவார்கள். அப்படி சேர்ந்த மொத்த ஆத்ம பலனும் சிவனிடம் குவிந்து கிடக்கின்றது. அது ஒன்றாகவும் இருக்கலாம் நூறாகவும் இருக்கலாம் லட்சங்களாகவும் இருக்கலாம்... சிவனை வேண்டி விரும்பி வணங்கினால் தன்னுள் இருக்கும் ஆத்மபலனை அடையும் வழியை ஈசன் காட்டுவார்."

"நீ இதுக்கு முன்னால அங்க போயிருக்கிறியா மாந்தா?"

"இல்லை, எனக்கு இதையெல்லாம் என் கொள்ளுப்பாட்டி சொல்லிச்சென்றார். அந்த குகையையே நான் இனிமேல்தான் தேடி கண்டுபிடிக்க வேண்டும். நான் மலைக்கு சென்று திரும்ப எத்தனை நாள் ஆகுமென உறுதியாய் கூற இயலாது. ஆனால் வெறியாட்ட விழாவிற்குள் வந்துவிடுவேன் யாளி...."

"புரிஞ்சிடுச்சு... அதுக்காகத்தான் என்ன இப்போ தனியா கூட்டிட்டு வந்து சமாதானமா பேசி ஏமாத்துற, இல்ல? போங்க... நான் வீட்டுக்கு போறேன்..." என்று ஊஞ்சலில் இருந்து குதித்து இறங்கினாள். கரடு முறடான கற்கள் அவளை முன்னேறி செல்ல விடாமல் தடுத்து விளையாடியது.

பொறுமையாய் அவளை பின் தொடர்ந்து வந்த மாந்தன், "நீ உண்மையில் புத்திசாலிதான் யாளி. உன்னை பிரிவின் கனம் தாங்கும் வகையில் தேற்றி வைக்கத்தான் நான் இங்கே அழைத்து வந்தேன். நான் இல்லாத ஒருநாளிலேயே இவ்வளவு உடைந்துவிட்டாயே... ஒரு வாரம் எப்படி தாக்குபிடிப்பாய் என்ற குழப்பத்தின் முடிவாக எனக்கு இதுதான் தோன்றிற்று? என் மகாராணிக்கு என்மேல் கோபமா?" என்றான்.

"ஏன்னு தெரியல, ஆனா எதையோ நினைச்சு என் மனசு படபடன்னு அடுச்சுக்குது மாந்தா..."

"நான் அருகிலிருக்கும் பொழுது என் மகாராணியின் வதனத்தில் வேதனை படர்வதா? கூடாதே...." என சொல்லிக்கொண்டே அவளை பின்னிருந்து அணைத்துக் கொண்டான்.

மகரந்த வாசனை கொண்ட மன்னவன் பெண்ணவள் பின் நின்று அணைத்ததும் அவள் மனம் சிறகுகளின்றி பறக்க துவங்கியது. பாந்தமாய் அவளின் தோள் மேல் ஒட்டி விளையாடும் புடவையை தொட்டான். தொட்ட இடம் அனல் பட்ட இடம் போல சட்டென்று தட்டிவிட்டாள் பேதை அவள். கைப்படத்தானே தடையுண்டு, காற்றுப்பட தடையேது எனும் எண்ணம் ஊறிட, விழி முன்னிருக்கும் வெண்சங்குக் கழுத்தினை மெல்ல நெருங்கினான்.

வெப்பக் காற்று தீண்டியதன் விளைவாய் வெட்கப்பூ பூக்க, அந்த வெண்நிலவு முகம் செந்நிறம் பூசிக்கொண்டது. அனுமதி கிடைத்த ஆனந்தத்தில் அடுத்த கட்டத்திற்கு முன்னேற முனைந்தன அவனின் களவாணிக் கைகள் இரண்டும். ஆயிரம் கோடி ஆண்டுகள் கடந்தாலும் பெண் எனும் உணர்வு பெண்ணை விட்டு மறைந்திடுமா என்ன?

சடுதியில் அவனிடமிருந்து விலகியவள், "போதும் போதும்... எனக்கு முதல்ல ஒரு சத்தியம் செய்ங்க. இப்டி இஷ்டத்துக்கு ஊர சுத்துறதெல்லாம் கொற்றவை விழாவோட முடிச்சுக்கனும். நம்ம கல்யாணத்துக்கு அப்புறம் என்ன கேக்காம எங்கேயும் போகக்கூடாது... சம்மதமா?"

"போராளிகள் இவ்வளவு உறுதியாய் நின்றால், ஆளும் வர்கத்தினர் அடிபணிந்து தானே காரியத்தை சாதிக்க வேண்டும். தங்களின் நிபந்தனைக்கு சம்மதிக்கின்றேன், ஆனாலும் இவ்வளவு அடக்குமுறை தங்களுக்கு ஆகாது மகாராணி..."

யாளி, "அது... நேரமாச்சு, பாட்டி தேடுவாங்க.. வீட்டுக்கு போகலாம்..." என்று விழிசுருக்கி செல்லமாய் வினவிட, அவளை அழைத்து வந்தது போலவே திருப்பிக் கொண்டு போய் விட்டான்.

விதவிதமான கற்பனைகளோடு மாந்தன் வேட்டை விழாவிற்கென அமைக்கப்பட்ட தற்காலிக குடிலுக்கு வந்து சேர்ந்தான். எவருக்கும் தெரியாதென்ற நினைப்போடு நாவினியனுக்கு அருகில் வந்து படுத்துக்கொண்டான்.

அது நேரம் வரையில் அமைதியாக இருந்த நாவினியன், மாந்தன் படுத்தவுடன் அவனை இறுக்கி பிடித்து கொண்டு, "வாருங்கள் இளவரசே... தங்களுக்காகத் தான் நான் நெடுநேரமாய் உறங்காமல் காத்திருக்கின்றேன். தங்களின் நகர்வலம் நல்லபடியாக முடிந்ததா? ஆங்... உங்களுக்கான வரவேற்பினை அளிக்க மறந்து விட்டேனே..." என ஒரு உருட்டை கட்டையை எடுத்து மாந்தன் முன்னால் ஆட்டினான்...
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top