20 என் முதல் காதல்

#1
சாகிர் நேராகத் தேடி வந்தது கிஷோரின் இல்லத்திற்குத் தான்... அப்போது தான் வனிதாவிடம் எப்படி பேசி சமாளிக்க வேண்டும் என சேகர் கிஷோருக்கு சொல்லிக் கொடுத்து முடித்தான்... அதற்குள் சாகிர் வரவே, சேகரும் அங்கேயே இருந்தான்...

"கிஷோர்... உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும்"

"பரவாயில்லை... இவர்கள் எனது நண்பர்கள் தான்... நீங்கள் கூறலாம்"

"சைதன்யா வீட்டுக்கு வரச்சொல்லி, அவளுடைய கம்பெனியை என் பெயருக்கு மாற்றி இதைக் கொடுத்துச் சென்றாள்... சீக்கிரமே ரெஜிஸ்ட்ரேஷன் பண்ணித் தருகிறேன் எனவும் கூறினாள்"

"வாட்? நீ என்ன சொல்லி அவளை மிரட்டினாய்?"

"நான் எதுவுமே மிரட்டவில்லை... இப்போது தான் என் குற்ற உணர்வு முழுமையாகி இருக்கிறது... எனக்கே என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் தான் இங்கு வந்தேன்"

"நீ ஆசைப்பட்டது போல் பணம் பதவி கிடைத்து விட்டதே... இங்கு ஏன் வந்தாய்?"

"முதலில் என்னால் இதை ஏற்றுக்கொள்ள முடியாது... நான் என்னை வாழ விடுங்கள் என்று தான் கேட்டேன்... வாழ வழி செய்யுங்கள் என்று கேட்கவில்லை... இன்னொரு விஷயம், சைதன்யா இப்படி செய்தது தெரிந்தால் அவளது கணவன் என்ன நினைப்பான்? அவர்களே இப்போது தான் சேர்ந்துள்ளார்கள்"

"அவன் எதுவும் நினைக்க மாட்டான்... சைதன்யாவின் முடிவே அவனது முடிவும்..."

"இல்லை... எனக்குத் தயக்கமாக உள்ளது... நீங்கள் கொஞ்சம் அவரிடம் பேசுவீர்களா? நான் நிச்சயமாக எந்த சொத்துக்களையும் வாங்க மாட்டேன் என்று உறுதியாக சொல்லி விடுங்கள்"

"அதற்கெல்லாம் அவசியமில்லை" என்றான் சேகர்... சேகர் வாயைத் திறந்ததும் கிஷோர் அமைதியாகி விட, பாரதி கோபத்தின் உச்சியில் இருந்தான்...

"நீங்கள் யார்?"

"உன்னால் கெடுக்கப்பட்ட சைதன்யாவின் கணவன் என்று சொல்வதை விட, உனக்கு வாழ்க்கைத் தந்த சைதன்யாவின் கணவன் என்று கர்வமாக சொல்கிறேன்"

"அது..."

"பழைய விஷயங்களைப் பற்றி நான் எப்போதுமே நினைத்ததும் இல்லை... இனி நினைக்கப் போவதும் இல்லை... எனவே அதைப்பற்றி மட்டும் பேச வேண்டாம்... நான் விரும்பிய பவதாரணி தீர்க்கமாக முடிவெடுப்பவள்... நெடுநாட்கள் கழித்து அவள் பழைய என் பவியாக மாறியதை அவளது குரல் மூலம் இன்று உணர்ந்தேன்... அது போதும் எனக்கு... அவள் என்னுடைய பவதாரணியாக வாழ ஆசைப்படுகிறாள்... விட்டு விடுங்கள்... அவளின் மூலம் வரும் வருமானத்தில் பெரும்பகுதியை ஏழைகளுக்கு செலவிடுங்கள்... நன்றாக வாழுங்கள்... நீங்கள் செல்லலாம்... விரைவில் நாங்கள் இருவரும் வந்து உங்களுக்கு பத்திரப்பதிவு முடித்து தருவோம்" என சேகர் கூறியதும், அடுத்து என்ன பேசுவது என புரியாமல் மெதுவாக கிளம்பி சென்றான் சாகிர்...

சாகிர் பேச ஆரம்பிக்கும் போதே, அங்கு வந்திருந்த சைதன்யாவும் அனைத்தையும் கேட்டுக்கொண்டு இருந்தாள்... அவளது முகத்தில் புன்னகை தவழ்ந்தது... அடுத்து உள்ளே செல்லலாம் என அவள் உள்நுழையவும், அவள் வந்தது கூடத் தெரியாமல் மீண்டும் பேச ஆரம்பித்தனர் மூவரும், சாகிரைப் பற்றி...

"எனக்கு உங்கள் மேல் மிகவும் கோபம் பாஸ்... சைதன்யா மேமை அப்படி பண்ணிய அவனை, நடுவீட்டில் அமர வைத்து, சொத்துக்களைக் கொடுத்து, இதெல்லாம் நன்றாகவா இருக்கிறது? உங்களுக்கு அவனைப் பார்த்தவுடன் கோபம் வந்து இருக்க வேண்டாமா?"

"உனக்கு வந்ததா பாரதி?"

"ஆம்... ஆனால் நீங்களே அமைதியாக இருக்கும் போது நான் என்ன செய்வது என்று அமைதியாகி விட்டேன்"

"அப்படியானால் நீ இன்னும் தாரணியை என் மனைவியாக பார்க்கவில்லை... அப்படித்தானே?"

"என்ன பேச்சு பாஸ் இது?"

"அவள் என் மனைவி... அவளை நான் காதலிக்கிறேன்... இவ்வளவு வருடங்கள் அவள் காதலை உணர்ந்து காதலித்து இருக்கிறாள், நான் உணராமல் இருந்து உள்ளேன்... அவ்வளவு தான்... அவளைப் பார்க்கும் போது அவள் சேகரின் தாரணியாக அனைவரும் பார்க்க வேண்டும் என விரும்புகிறாள்... அதனால் தான் சைதன்யா என்ற அவளது அடையாளத்தை விட்டுக் கொடுக்கிறாள்"

"அதெல்லாம் ஓகே... ஆனால் ஏன் அந்தப் பொறுக்கிக்கு கொடுக்க வேண்டும்" என பாரதி கேட்க,

"எனக்குமே கொஞ்சம் அதில் வருத்தம் தான்" என கிஷோரும் கூறினான்...

"அவள் அப்படிச் செய்ததால், இனி அவன் மனம் மாறாது... அந்தக் குற்ற உணர்ச்சியை விட பெரியத் தண்டனை என்ன இருக்க முடியும் சொல்லு? நிச்சயமாக அவன்.இனி நல்லவனாகவே இருப்பான்... கிஷோர், சைதன்யா உங்கள் தங்கை ரோஷ்னியின் தோழி... அவ்வளவு தான்... அந்த ஒரு காரணத்திற்காக மட்டுமே, உங்கள் அப்பா அவளுக்கு மிகப்பெரிய பண உதவி செய்து, கம்பெனி வளர உதவி செய்து, உங்களைத் திருமணமும் செய்து கொடுத்தார்... அப்படிப்பட்ட உயர்ந்த மனிதரின் மகன் நீங்கள்... நீங்கள் இப்படி எல்லாம் நினைக்கக் கூடாது... அதற்காக உங்களைக் குறை கூறவில்லை... என் தாரணிக்கேத் தெரியாமல் அவளைக் காத்தவர் நீங்கள்..."

"இல்லை சேகர்... தவறாக எல்லாம் நினைக்கவில்லை... என் தங்கையின் உயிர் போக காரணமாயிருந்தவன் நன்றாக வாழப் போகிறான் என்ற கையாலாகாதத்தனம் தான்..." என்று கிஷோர் கூறும்போதே,

"ஐம் சாரி கிஷோர்... நான் உங்களை மிகவும் வருத்தப்படுத்தி விட்டேனோ?" என்றாள் சைதன்யா... அவள் அங்கு நின்று கொண்டு இருப்பதை அப்போது தான் கவனித்தனர் இருவரும்... பாரதி ஏற்கனவே அவளைப் பார்த்தாலும், அவளும் கேட்கட்டும் என்ற நினைப்பில் பாராதது போல் இருந்தது தனிக்கதை...

"நான் மட்டும் அன்று அவனைப் பார்க்கச் செல்லவில்லை எனில், நிச்சயமாக இந்த நொடி வரையிலும் ரோஷ்னி வாயில் இருந்து அவனைப் பற்றி தவறாக எதுவும் வெளியே வராது... ஏனெனில் ரோஷ்னி அவனை அவ்வளவு நேசித்தாள்... உயிர்த்தோழி என்னிடம் இருந்தே பிரிந்து சென்றாள் அவனுக்காக... இத்தனை வருடங்கள் அவனும் கஷ்டப்பட்டு இருக்கிறான்... உங்களது அலுவலகத்தில் வேலை பார்த்தாலும் கூட, ஏன் இன்னொரு திருமணம் செய்ய நினைக்கவில்லை? அவனது அழகுக்கு அவனே பெண் பார்த்துக் கொள்ளலாம்... அதையெல்லாம் விட்டு என்னை பிஸினஸ் பண்ண விடு என்று கெஞ்சுகிறான் எனில், அவனது மனதில் குற்ற உணர்வு இருக்கிறது என்று புரிந்து கொண்டேன்... அந்தக் குற்ற உணர்வு போதும்... அதுவே பெரிய தண்டனை தான்... அவன் எப்படி வாழ வேண்டும் என்று ரோஷ்னி ஒரு ஆசையுடன் இருந்திருப்பாள் அல்லவா! அந்த ஆசைக்காகவாது நாம் உதவி செய்யலாம் என்று எண்ணினேன் கிஷோர்... இன்னொரு விஷயம், சேகர் கூறியபடி தான், நான் சைதன்யா என்ற அடையாளம் இல்லாமல், தாரணியாக வாழ ஆசைப்படுகிறேன்... அதனால் தான் கொடுத்தேன்... உங்களுக்கு வருத்தம் இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள்" என்றாள் தாரணி...

"என் தங்கைக்காக என்று கூறி விட்டாய்... இனி என்ன வருத்தம்? அவன், அவன் போக்கில் வாழட்டும்... நான் என் வாழ்க்கையை வாழப் போகிறேன்" என்றவன் பெண் வீட்டுக்கு செல்ல வேண்டும் என்று பாரதியுடன் கிளம்பினான்... சேகரும் தாரணியும் அமைதியாக காரில் ஏறி தங்கள் வீட்டுக்குச் சென்றனர்...

வனிதா குழப்பத்தில் இருக்கும் போது, திடீரென அவளது தாய், மாப்பிள்ளை பார்க்க வந்து இருப்பதாகவும், ஏதோ பேச விழைவதாகவும் கூறினார்...

சற்று கோபத்துடன் வந்த வனிதாவிற்கு, அவனது முகத்தைப் பார்த்ததும், எல்லாக் கோபமும் போயிற்று... மீண்டும் அங்கே வெட்கம் தலைதூக்கியது... தன்னையே நொந்து கொண்டாள் வனிதா..

அவளது முகமாற்றத்தைப் படித்தவன், சேகர் சொல்லிக் கொடுத்த டிப்ஸ் ஃபாலோ பண்ண ஆரம்பித்தான்...

"நான் கொஞ்சம் பேச வேண்டும் வனிதா... நீ என் மீது கோபமாக இருக்கிறாய் அல்லவா? அதுவும் இப்படி கல்யாணக் களையே இல்லாமல்?! அந்த அளவுக்கு என்னை வெறுத்து விட்டாயா?"

"இல்லை இல்லை... எனக்கு உங்கள் மீது வருத்தம்... கோபம் கூட இல்லை..."

"நமக்குள் ஏன் பிரச்சினை? தன்யா தான் அல்லவா? அவளை ஷார்ட் நேம் வைத்து தன்யா எனக் கூறுகிறேன், அவளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறேன் என்று நினைக்கிறாய் அல்லவா?"

"நான் நினைப்பது இருக்கட்டும்... நீங்கள் அப்படித்தான் நடக்கிறீர்கள்?"

"சோ என் மீது நம்பிக்கை இல்லை... பயமாக இருக்கிறது"

"நம்பிக்கை இருக்கிறது... ஆனால் தெரியவில்லை"

"சரி இங்கே பார்... சாகிர் என்பவன் எனக்கு அனுப்பிய மெசேஜ்களை... நான் அப்படியே அதை சேகருக்கு ஃபார்வர்டு செய்து, இது உன் பிரச்சினை நீ பார்த்துக்கொள் என்று கூறி விட்டேன்... சந்தோஷம் தானே?"

கிஷோர் கேட்டு முடிப்பதற்குள் கன்னத்தில் கை வைத்து நின்றான்... தலை சுற்றியது போல் இருந்தது... ஆம், வனிதா கொடுத்த அரையின் தாக்கம் அது...

"எவ்வளவு பெரிய பிரச்சனையில் தாரணி மாட்டிக்கொண்டு இருக்கிறாள்... நீ இங்கே வந்து என்ன செய்கிறாய்?" என்றவள் உடனடியாக சேகருக்கு அழைப்பு விடுக்க, சேகரும் தொலைபேசியில் நடந்த பிரச்சனையைத் தாரணி தீர்த்ததைப் பற்றி ஏதோ நல்ல பிள்ளை போல் கூறினான்...

"நல்ல வேளை... எல்லாம் நல்லபடியாக முடிந்தது... நீ இப்படி இருப்பது எனக்கு பிடிக்கும் என்று நினைத்தாயா? தாரணியைத் திருமணம் செய்தும் அவளை நீ நெருங்காமல், வேறு யாரையும் நெருங்க விடாமல் பாதுகாத்தாய் அல்லவா? அந்த கிஷோர், தங்கையின் தோழியையே அப்படிப் பார்த்தவன், மனைவியை எப்படித் தாங்குவான் என நினைத்து ஆச்சரியப்பட்ட அந்தக் கிஷோரைத் தான் எனக்கு பிடிக்கும்... உன்னை அல்ல"

"நான் தாரணியைப் பற்றிப் பேசினால் கோபப்பட்டாய் நீ"

"ஆம்... அவளுக்கு முக்கியத்துவம் கொடுத்து பேசினால் பிடிக்காது, அதற்காக அவளுக்கு உதவி செய்யாதே என்று கூறமாட்டேன்... நீ நீயாகவே இரு. என்னிடம் கொஞ்சம் பார்த்துப் பேசு.. அது போதும்... முட்டாள்" பேசிக்கொண்டே இருந்தவள் அவன் தன்னை ரசிப்பது தெரிந்ததும் மீண்டும் முகம் சிவந்தாள்...

'இவங்களுக்கு புரியவைக்க இவர் இன்னும் எவ்வளவு அடி வாங்குவாரோ? நல்லவேளை இப்பவாவது ஒரு முடிவுக்கு வந்தாங்களே' பெருமூச்சு விட்டான் பாரதிக்கண்ணன்...
 

Sponsored

Latest Episodes

Advertisements

New threads

Top