Alagiyin kaadhal thavam - 12

umadeepak25

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
அத்தியாயம் – 12

ஐநூறு வருடங்களுக்கு முன்:

எதற்கும் நான் அஞ்சேன்! என்பது போல் மிடார நாட்டு அரண்மனை இப்பொழுது அலிகான் கண்களுக்கு காட்சி அளித்தது. போர் தொடுத்து, ஆட்சியை கைப்பற்றலாம் என்ற அவரின் எண்ணத்தில் மண் விழுந்தது.

ஒற்றன் அளித்த செய்தியை வைத்து, சூழ்ச்சி செய்ய எண்ணி காயை நகர்த்தியதற்கு பதிலடியாக உடனே இளமாறன் மூலம் அரசர் எச்சரிக்கை விடுத்து இருந்தார். சிறுவன் தானே என்று நினைத்தவர், அவனின் உணர்ச்சியை தூண்டி விடலாம் என்று தப்பு கணக்கு போட்டு விட்டார்.

விளைவு, குமாரிதேவியின் ஆக்ரோஷமும், அரசரின் புத்தி கூர்மையும் பெற்று இருந்தவனுக்கு புலியை போல், பதுங்கி இருந்து வேட்டையாடும் வித்தை தெரிந்து, அவரின் சாம்ராஜ்யத்தை வேட்டையாடி விட்டான்.

இப்பொழுது மரணத்தின் பிடியில், அவர் அந்த அரண்மனை வாயிலின் முன்பு தூக்கு மேடையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தார். மக்கள் அங்கே என்ன நடக்க போகிறதோ என்ற பதைப்புடன், அங்கே பார்த்துக் கொண்டு இருந்தனர்.

அரண்மனை முதல் மாடி தாழ்வாரத்தில், அரசர் தன் பாதுகாவலர்களோடும், நம்பிக்கை கொண்ட இரு மந்த்ரிகளோடும் அமர்ந்து இருந்தார். இளமாறன், கீழே உள்ள சபையில் அரசரின் கட்டளைக்காக காத்துக் கொண்டு இருந்தான், அவனை வெட்டி சாய்க்க.

“அலிகான்! உன் கடைசி ஆசை என்ன? உன்னை இந்த இடத்தில் நிறுத்தி இருப்பது, இப்பொழுது நீ செய்த வேலைக்காக மட்டும் அல்ல. சில வருடங்களுக்கு முன்பே, நீ செய்த சில தவறுகளை கண்டு கொண்ட பின் அப்போதைய அரசர் விஷ்வாதிரன் உம்மை பிடிக்க வரும் பொழுது, நீ அவரின் மனைவி முன்பே துடிக்க துடிக்க கொன்றாயே!”

“ அது மட்டுமா! உன் தங்கை மகனை எடுத்து வளர்த்து, அவனை நீ உன் போல் வளர்த்து, இன்று மக்களின் வயிற்றில் அடித்தது மட்டுமில்லாமல், பெண்களை அவன் இழிவுபடுத்தியதற்காகவும் சேர்த்து தான் இப்பொழுது நீ இங்கே இருக்கிறாய்”.

“உன்னிடம் கடைசி ஆசையை கேட்டது கூட, இந்த இடத்தில் கேட்கப்படும் ஒரு சம்ப்ரதாயதிர்க்கு மட்டுமே என்பதை நீயும், இந்நேரதிர்க்குள் புரிந்து கொண்டு இருப்பாய்” என்று கம்பீரமாக அரசர் எட்டு திக்குக்கும் கேட்கும் படி, இதனை உரைக்கவும் ஒரு நிமிடம் அலிகானின் உடம்பு தூக்கி போட்டது.

அலிகானுக்கு, அரசர் கூறியதை கேட்டு அவனுக்கு ஒன்று நன்றாகவே புரிந்தது. சில வருடங்களுக்கு முன்பே, இதனை நிச்சயம் கண்டு கொண்டு இருந்து, சரியான சந்தர்ப்பம் கிடைக்கவும், இப்பொழுது தன்னை இங்கு நிறுத்தி இருகின்றனர் என்று.

அதிலும், அரசர் இளங்கோவன் தான் இதனை கண்டு பிடித்து இருப்பார் என்பது அவனின் அசைக்க முடியாத நம்பிக்கை. அவரை பற்றி அவன் நன்கு அறிவான், வீரத்தில் மட்டுமல்லாது புத்தி கூர்மை படைத்த வல்லவர் என்பதையும் அவன் அறிவான்.

“இத்தனை ஆண்டுகளாக, ஏன் என்னை விட்டு வைத்து இருந்தீர்கள்? என்னை பற்றி எல்லாம் தெரிந்து இருந்தும், அதற்க்கு காரணம் என்ன?” என்று தனக்குள் எழுந்த கேள்வியை அப்பொழுது கேட்டான் அலிகான்.

“காரணம் தெரிய வேண்டுமா உனக்கு? கேட்டுக் கொள்! உன் பெற்றவர்களுக்கும், உன் தர்ம பத்தினிக்கும் நான் வாக்கு கொடுத்து இருந்தேன்”.

“உன்னை அப்பொழுது கொல்லாமல், இருந்ததற்கு இன்னொரு காரணம், உன் மருமகன் பாசில். உன் தங்கையும், தங்கை கணவரும் சென்ற இடத்தில் இறந்த செய்தியை கேட்டு, அப்பொழுது உன்னிடம் விட்டு சென்ற சிறுவனை உன் குழந்தையாக எடுத்து வளர்த்தாயே பாசிலை. அந்த ஒரு காரணத்துக்காக மட்டுமே, நீ இன்று வரை உயிர் பிழைத்தாய்”.

“ஆனால், உன் மருமகனை விட்டு எப்பொழுது இந்த சாம்ராஜ்யத்தையும், என் மகளையும் பிடிக்க நினைத்தியோ அப்பொழுதே முடிவு செய்துவிட்டேன் உனக்கான தண்டனையை” என்று அழுத்தமாகவும், அதே சமயம் கம்பீரத்துடனும் கூறிய அரசரை எல்லோரும் வியந்து பார்த்தனர்.

ஆனால், அலிகானோ அரசர் கூறிய இச்செய்தியில் கொதிநிலைக்கே சென்றான். அவனின் தர்ம பத்தினிக்கு தெரிந்து இருக்கிறது என்றால், தன் செயல்களை அவள் ஒன்று கண்காணித்து இருக்க வேண்டும். இல்லை என்றால், அரசர் அவளுக்கு செய்தி அனுப்பி இருக்க வேண்டும்.

கிட்டத்தட்ட உயிர் பிச்சை கேட்டு இருக்கிறாள், அவனுக்கு தன் உயிர் அப்பொழுதே சென்று விட்டது போலானது. அந்த வருத்தம், கோபம் எல்லாம் சேர்ந்து மேலும், தன் விஷத்தை கொட்ட தொடங்கினான்.

“உம் மகளை, என் மருமகன் கூட்டி வர சென்று இருக்கிறான் என்று நினைத்தீரா அரசே! அவனின் முழு பெயர் என்னவென்று தெரியுமா, தங்களுக்கு?”

“சபாஹ் பாசில்! சபாஹ் என்றால் கொலை செய்ய கூட தயங்காதவன் என்று அர்த்தமாகும். அவளை, அவன் கொல்லாமல் விட மாட்டான். கால சக்கரத்திற்குள் சென்றால், திரும்ப வர இயலாது என்று அவனுக்கும் தெரியும்”.

“உம் மகள் எங்கு இருந்தாலும், அவள் உயிர் பிழைக்க மாட்டாள். என் மருமகன், அவளை இப்படி எல்லோரின் முன்பும் கொலை செய்தே தீருவான் ஹா ஹா!” என்று கூறி சிரிக்கவும், அங்கு உள்ள மக்களே கொதித்து விட்டனர், அவனின் ஆணவத்தையும், வார்த்தைகளையும் கேட்டு.

“போதும் நிறுத்து! உனக்கு இப்பொழுது இன்னும் ஒரு விஷயத்தை கூறுகிறேன், கேள். காவலரே! அந்த படத்தை எல்லோருக்கும் தெரியுமாறு, எடுத்து காட்டுங்கள்” என்று கட்டளையிட்டார்.

அரசர் நின்று இருந்த தாழ்வாரத்தின் மேல் இருந்து, ஒரு பெரிய துணி ஒன்றை கையிற்றால் கட்டி இருந்ததை எடுத்து விட்டனர். அந்த பெரிய துணியில், ஆதித்ய வர்மாவின் படத்தை தத்ரூபமாக வரைந்து இருந்தாள் இளவரசி மதியழகி.

“அலிகான்! அந்த படத்தை நன்றாக கவனித்து பாரும், அதில் இருப்பது யாரென்று தெரிகிறதா?” என்று கேட்டார் அரசர்.

அவனுக்கு அப்பொழுது, அது யாரென்று தெரியவில்லை. ஆனால் அந்த முகம், அவனுக்கு பரிச்சயமானதாக தோன்றியது. அவனின் முக பாவத்தை கண்டு கொண்ட அரசர், மனதிற்குள் சிரித்துக் கொண்டார்.

“இவன் யாரென்று, உனக்கு இப்பொழுது தெரியவில்லை என்று புரிகிறது. ஆனால் நான் ஒன்றை கூறியாக வேண்டும், உன் மருமகன் பாசில் மரணம், இவன் கையால் தான் நிகழ போகிறது” என்று கூறிவிட்டு இளமாறனுக்கு கண் ஜாடை காட்டவும், அவன் ஒரே வெட்டாக அவன் தலையை கொய்து எடுத்தான்.

அங்கே நடந்த விஷயம், அரசிகள் இருவரின் காதுக்கும் சென்றது. அவர்கள் மனதிலும், அரசர் அவ்வளவு உறுதியாக அவன் கையால் தான் மரணம் என்று, எப்படி சொல்லுகிறார் என்று தெரியவில்லை. அவன் யார்? அலிகானுக்கு பரிச்சயமானவன் என்றால், பாசிலுக்கும் தெரிந்து இருக்குமே.

மகளை அந்த பாசிலிடம் இருந்து, அவளின் மனம் கவர்ந்தவன் காப்பாற்றுவானா? என்ற கேள்வி இருவர் மனதிலும், படையெடுத்துக் கொண்டு இருந்தது. அப்பொழுது அங்கே வந்த அரசர், அவர்கள் கேட்ட கேள்விக்கு எல்லாம் பதில் கூறி, அவர்களை திடுக்கிட செய்தார்.

இன்று:

தஞ்சையில் காமாட்சி சேகரித்த தகவல் எல்லாம், அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அவர் ஒன்று நினைக்க, இங்கு அவர் சேகரித்த தகவல்கள் எல்லாம், ஒரு பக்கம் வியப்பாகவும், மறுபக்கம் கவலையும் அளித்தது.

இந்த பத்து நாளில், அவர் எல்லா இடத்திற்கும் அலைந்து அவர் வேண்டிய தகவல்களை சேகரித்து இருக்கிறார். கடைசி கட்ட தகவலை, அந்த பெரியவரிடம் இருந்து வாங்கி வந்த பின், அவர் வீட்டில் யோசனையாவே இருந்தார்.

ரவிவர்மன், தன் மனைவி இன்று ஒரு நிலை இல்லாமல் யோசனையோடு தவித்துக் கொண்டு இருந்ததை பார்த்து அவர் அருகில் அமர்ந்தார். அவர் அமர்ந்ததை கூட உணராமல், இன்னும் அவர் உலகத்திலே இருக்கவும், மனைவியின் கையை பிடித்து அவரை அழைத்தார்.

அதில் சுய உணர்வுக்கு வந்த காமாட்சி, கணவரை கண்டு முழிக்க தொடங்கினார்.

“என்ன காமாட்சி இது? நாம இந்த ஊருக்கு வந்து, பதினஞ்சு நாளாகிடுச்சு. இந்த பத்து நாளும், நீ தேடி போன விஷயங்கள் எல்லாத்தையும் எப்போவும் என் கிட்ட ஷேர் பண்ணுவ, இன்னைக்கு என்ன ஆச்சு உனக்கு? ஏன் இப்படி இருக்க?” என்று மெதுவாக அவர் தலை கோதி, மிகவும் மென்மையாக கேட்டார் அவரிடம்.

அவரோ, இத்தனை நாள் சேகரித்தது எல்லாம் ஒன்றுமில்லை என்பது போல், இன்று சேகரித்த விஷயங்களை எல்லாம் சொல்லி, தன் மன பாரத்தை இறக்கி வைத்தார். இறக்கி வைத்த அடுத்த நிமிடம், தேம்பி அழ தொடங்கினார்.

ரவிவர்மனுக்கும், கேட்ட விஷயங்கள் அதிர்ச்சியை தந்தது. ஆனால் இப்பொழுது, அடுத்து என்ன செய்ய வேண்டும் என்பதை யோசிக்க தொடங்கினார். முதலில் மனைவியை சமாதானப்படுத்த நினைத்தார், ஆகையால் மெதுவாக அவரை எழுப்பி சாப்பிட வைத்து, மாத்திரை கொடுத்து தூங்க வைத்தார்.

அதன் பின் பல யோசனைக்கு பிறகு, அவர் ரமணணிற்கு அழைத்தார். அவனிடம், இங்கு சேகரித்த அத்தனையும் ஒன்று விடாமல் கூறினார். அதைக் கெட்டவனுக்கும், பலத்த அதிர்ச்சி தான். ஆனால், ரவிவர்மன் அடுத்து செய்ய வேண்டியதை கூறவும், அவனும் யோசிக்க தொடங்கினான்.

“சித்தப்பா! இப்போதைக்கு இந்த விஷயம் நமக்குள்ள இருக்கட்டும், ஆதிக்கு தெரிய வேண்டாம். மேற்கொண்டு என்ன செய்றதுன்னு நான் மெதுவா சொல்லுறேன் சித்தப்பா, இப்போ அவசரப்பட வேண்டாம்” என்று கூறினான்.

“டேய்! வில்லன் வந்துட்டான் சொல்லுறேன், நீ கூலா மெதுவா பார்த்துக்கலாம் சொல்லுற” என்று அதட்டினார்.

“ஹையோ சித்தப்பா! இப்போ அவசரப்பட்டு, நாமளே அவனுக்கு ஆதியும், மதியும் இருக்கிற இடத்தை அவனுக்கு காட்டி கொடுக்கனுமா இப்போ. அதுவுமில்லாம, இப்போ ஐஜி இந்த கேஸ் செம இண்டரஸ்டிங்கா இருக்குன்னு டெய்லி ரிப்போர்ட் பண்ண சொல்லி இருக்கார்”.

“இந்த நேரத்துல, இந்த விஷயம் ஆதிக்கு மட்டுமில்லை, வேற யாருக்கும் தெரிய கூடாதுன்னு நினைக்கிறேன். முதல அவங்க இங்க சேபா லேன்ட் ஆகட்டும், பாரிஸ் ல இருந்து. அப்புறம் மெதுவா ஆதி கிட்ட விஷயத்தை சொல்லி, இன்னும் ஜாக்கிரதையா இதை ஹான்டில் பண்ணலாம்” என்று அழுத்தமாக அவன் கூறவும், அவரும் யோசித்து விட்டு சரியென்றார்.

அங்கே பாரிஸில், ஈபிள் டவர் முன்பு பாடல் காட்சி ஷூட்டிங் நடந்து கொண்டு இருந்தது. அதை வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்தனர், மதியும், பிரகதியும்.

கிருஷ்ணா, அந்த புதுமுக நடிகை ராதா ஷிகாருடன் சேர்ந்து ஆடிக் கொண்டு இருந்தான். கை, கால்களை விதவிதமாக ஆட்டி அவர்கள் ஆடுவதை பார்த்து மதிக்கு சிரிப்பாக இருந்தது. அவள் சிரிப்பதை பார்த்து, மதியிடம் என்னவென்று கேட்டாள் பிரகதி.
 

umadeepak25

SM Exclusive
Author
SM Exclusive Author
#2
“நான் முறையாக பரதம் கத்துகிட்டேன் பிரகதி, ஆனா இது என்ன நடனம்ன்னு தெரியல எனக்கு. கொஞ்சம் இதை பார்க்கும் பொழுது, எனக்கு சிரிப்பா இருக்கு” என்று மதியழகி கூறினாள்.

அவள் தன்னை கொஞ்சம் கொஞ்சமாக, இங்கு உள்ள பாஷையை கற்று கொண்டு வருகிறாள் சிறிது நாளாக. பிரகதி அவளை மாற்றிக் கொண்டு இருக்கிறாள், எல்லா விதத்திலும்.

“ஹா ஹா! இது ஹிப் ஹாப், இப்படி தான் இந்த டான்ஸ் இருக்கும். இன்னும் நீ சல்சா, பால்லெட், டாங்கோ, நாட்டுப்புற கரகாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம், கதகளி இப்படி நிறைய நடனம் பார்த்தது இல்லையே, எல்லாத்தையும் நான் உனக்கு யூ ட்யுப் ல காட்டுறேன்”.

“இதை எல்லாம் பார்த்துட்டு, உனக்கு எது பிடிச்சு இருக்கு சொல்லு, அடுத்து அது படிக்கலாம் நாம சரியா” என்று சிரித்துக் கொண்டே பிரகதி கேட்கவும், அவளும் சரி என்றாள்.

அதன் பின், இருவரும் யூ ட்யூபில் மூழ்கி இருந்தனர். இங்கே ஆதியோ, கிருஷ்ணாவின் நடனத்தை கவனிக்காமல், அவன் மனம் கவர்ந்தவளை கவனித்துக் கொண்டு இருந்தான்.

“டேய் ஆதி! அங்க கிருஷ்ணா சரியா ஆடுறானா, இல்லையான்னு பாரு டா. நானும் வந்ததில் இருந்து பார்க்குறேன், லொகேஷன் பார்த்ததோடு சரி, அப்புறம் என்ன ஆடுறாங்கன்னு கூட பார்க்க மாட்டேன்குற” என்று விஷ்வா அவனிடம் எகிறிக் கொண்டு இருந்தான்.

“டான்ஸ் மாஸ்டர், டைரக்டர் எல்லாம் இங்க தான இருக்காங்க. அவங்க எல்லாம் பார்த்துக்குவாங்க, நீ என்னை இப்போ டிஸ்டர்ப் பண்ணாத” என்று கூறினான் ஆதி.

விஷ்வா, பார்த்துக் கொண்டு இருந்தவன், இது வேலைக்காக போவதில்லை என்று தெரிந்து கொண்டு, கட் அண்ட் பாக் என்று டைரக்டர் பார்த்து கத்தினான். அவன் கத்திய பின், என்னவென்று மதியும், பிரகதியும் தங்களின் கவனத்தை அங்கு திருப்பினர்.

ஆதிக்கு, எரிச்சலாக இருந்தது. அவன் எதற்கு இப்பொழுது கட் அண்ட் பாக் கூறினான் என்று. அவனை தனியாக இழுத்து சென்று, விசாரிக்க தொடங்கினான்.

“டேய்! எதுக்கு டா இப்போ இப்படி சொன்ன?” என்று சிறிது அதட்டினான்.

“ஏன் டா சொல்ல மாட்ட? அங்க அந்த டைரக்டர் நீ கவனிக்கலைன்னு தெரிஞ்சா, இதான் சாக்குன்னு இன்னும் அதிக ரோல் இழுப்பான். அதுக்கு அப்புறம் உனக்கு கிருஷ்ணா பொறுமை பத்தி தெரியும், அவனுக்கு கோபம் வந்தா என்ன செய்வான்னு”.

“இந்த நேரத்துல, இதை கவனின்னு சொன்னா, நீ என்னை திட்டுற. என்ன டா இப்படி ஆகிட்ட, சிஸ்டரை பார்த்ததற்கு அப்புறம். முதல ஊருக்கு போன உடனே, மம்மி கிட்ட சொல்லி உனக்கு சீக்கிரம் சிஸ்டர் கூட கல்யாணம் பண்ணி வைக்கணும்”.

“அப்போ தான் டா, எனக்கு நிம்மதியா இருக்கும். இல்லைன்னு வை, எப்போ பார்த்தாலும், நான் உனக்கு வேப்பில்லை அடிச்சிகிட்டே இருக்கணும் ஆமா” என்று பொரிந்து விட்டான்.

அவனோ அசடு வழிந்துவிட்டு, இது எல்லாம் அரசியல் ல சாதாரணம் என்ற வசனம் போல் தூசி தட்டி, அவனை சரி கட்டி அழைத்து வந்தான்.

“டைரக்டர், மாஸ்டர், கிருஷ்ணா எல்லோரும் சீக்கிரம் சரியா பண்ணுங்க. ரோல் வேஸ்ட் பண்ண கூடாது, இந்த சாங் ஹிட் ஆகணும், அதுக்கு எல்லோரும் சரியா செய்ங்க” என்று அழுத்தமாக கூறிவிட்டு, மீண்டும் அவன் தன் பணியை தொடர்ந்தான்(அதான் மதியை சைட் அடிக்கும் வேலை).

அவனை பார்த்த விஷ்வா, தலையில் அடித்துக் கொண்டு, இவனை திருத்த முடியாது என்பது போல் பார்த்து விட்டு, அங்கே ஷூட்டிங்கை கவனிக்க தொடங்கினான்.

அடுத்த பத்து நாட்களும், இதே போல் கழிந்து மதியும் இப்பொழுது பாஷையை மாற்றிக் கொண்டு அதை சரளமாக பேசவும் தொடங்கி இருந்தாள். இன்றைய கலாச்சாரம், நாட்டில் நடக்கும் சில அரசியல், கல்வி, விளையாட்டு என அணைத்து விஷயங்களையும் பிரகதி அவளுக்கு ஒவ்வொரு நாளும், கத்துக் கொடுத்துக் கொண்டே இருந்தாள்.

ஏற்கனவே புத்தி கூர்மையும், வேகமாக கற்றுக் கொள்ளும் திறனும் இருந்ததால், அவள் சீக்கிரமாக எல்லாவற்றையும் விரல் நுனியில் தெரிந்து வைத்து இருந்தாள்.

இது எல்லாவற்றிற்கும் மேலாக, ஆதியும், அவளும் மௌனமாக கண்கள் வழியே காதல் செய்து கொண்டு இருந்தனர். கண்களால், அவள் பேசும் பாஷை அவனுக்கு புரியும் அளவிற்கு இருவரும் நெருங்கி இருந்தனர்.

எல்லாவற்றையும் முடித்துக் கொண்டு, பாரிஸில் இருந்து அவர்கள் சென்னை வந்தடையும் பொழுது வில்லன் அவர்களுக்காக காத்துக் கொண்டு இருந்தான்.

தொடரும்...
 

umadeepak25

SM Exclusive
Author
SM Exclusive Author
#4
ஹாய் மக்களே,
இதோட கடந்த காலம் ஸ்டாப் பண்ணி இருக்கேன், இனி கடந்த காலம் கடைசி பகுதியில் தான் வரும்.. இனி நிகழ்காலம் தான், இதுவரை எந்த ஒரு கதைக்கும் நான் இப்படி யோசிச்சு, suspense எல்லாம் வச்சு எழுதல.
முதல் முறையா சற்று வித்தியாசமான கதை களம், (எனக்கு இது ரொம்ப புதுசு) எடுத்து இப்படி உங்க தலையை பிச்சிக்குற மாதிரி suspense வச்சு கொண்டு போவேன்னு நினைக்கல..
இதான் மெயின் பார்ட், இதுல இருந்து கதை இனி பாஸ்ட் moving தான் . அடுத்து அடுத்து போஸ்ட் போட முயற்சி செய்றேன் friends.. கீப் சப்போர்டிங், உங்கள் கருத்துகளையும் பதிவு பண்ணுங்க பா..

இப்படிக்கு,
உமா தீபக்
 

Advertisements

Top