• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aththiyaayam 12: Agathiyar kaalam

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
அத்தியாயம் 12.

மிகுந்த உற்சாகத்தோடு தான் ஆசான் அகத்தியர் தனது கல்விச்சாலைக்குள் நுழைந்தார். அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது ஒருபக்கம் என்றால் மற்றொரு பக்கம் அவரது மாணவர்களின் ஒற்றுமையும் நற்குணங்களும் அவருக்கு அதிக மகிழ்ச்சியைக் கொடுத்தன. இவர்களைக் கொண்டு இனி வரும் தலைமுறையை அறிவியலில் சிறந்தவர்களாக மாற்றி விடலாம் என கனவு கண்டார் அவர். அவற்றைப் பற்றி யோசித்துக்கொண்டே தனது குடிலை நோக்கி நடக்க முற்பட்டார்.

செங்குன்றன் எதையோ காட்டி மற்றவர்களுக்கு விளக்கிக் கொண்டிருந்த காட்சி அவரது கருத்தைக் கவர்ந்தது. அருகில் சென்ற பின்னர் தான் தெரிந்தது அது ஒரு மின் கலம் என்று. வெள்ளிக் குச்சிகள் மின் ஊக்கியாக செயல்பட அந்த மின் கலத்தில் இருந்த அமிலத்துக்குள் காரத்தை ஊற்றினான். அதில் கிடைத்த மின் சக்தியானது வெள்ளிக்கம்பிகளால் கவரப்பட்டு செப்பு இழைகள் மூலமாக தங்க இழைகளை ஒளிர வைத்துக்கொண்டிருந்தன. அதைப்பார்த்தது மகிழ்ச்சியில் மனம் பொங்கியது அவருக்கு.

"வாழ்த்துக்கள் செங்குன்றா! வெள்ளிக்கம்பிகள் தான் மின் கடத்திகள் அல்லது மின் ஊக்கிகள் என கண்டுகொண்டாய் போலிருக்கிறதே! நன்று நன்று! இதனை நீயாகவே கண்டறிந்தது எனக்கு மிகவும் மகிச்சி பயக்கிறது. வெறுமே ஒளிரச் செய்வதற்கு மட்டும் இந்த ஆற்றலைப்பயன்படுத்தாமல் வேறு எந்த வகைகளில் பயன்படுத்தலாம் என சிந்தித்து புதிய கருவிகளை வடிவமைக்கும் முயற்சியில் இனி நீ ஈடுபடு" என்றார்.

செங்குன்றன் அவரது பாதங்களைப் பணிந்து அப்படியே செய்வதாகக் கூறினான். அன்றைய இரவு மாணவர்கள் ஆசான் செய்த அரிய அறுவை சிகிச்சை பற்றியே பேசினர். இறுதியில் உறக்கம் அவர்களைப் பற்றியபோது ஆசானது குடில் இன்னமும் வெளிச்சமாக இருப்பதையும் அவர் எதையோ எழுதிக்கொண்டிருப்பதையும் பார்த்தார்கள்.

மறு நாள் பொழுது விடிந்த போது அந்த இளைஞனுக்கு நன்றாக நினைவு திரும்பி விட்டது. குருதி நிறைய வெளியேறியதால் மிகவும் பலவீனமாக இருந்தான் அவன். மருத்துவ மாணவர்கள் மூவரும் சென்று பார்த்தனர். வேப்பிலை ஆடையில் தான் சென்றனர். அவனது அன்னை அவனுக்கு சங்கினால் பால் அளித்துக்கொண்டிருந்தாள். இதுவும் ஆசானின் அறிவுரையாகத்தான் இருக்கும் என எண்ணினர். இவர்களைக் கண்டதும் வணங்கினான் அந்த இளைஞனும் அவனது அன்னையும்.

"நான் இன்று முழுவதும் இந்தக்குடிலியே தான் இருக்கப்போகிறேன் இளைஞர்களே! மற்றவர்களை ஊருக்கு அனுப்பி விட்டேன். இரு வாரங்கள் கழித்து இவனையும்க் அழைத்துக் கொண்டு தான் செல்வேன்" என்றாள் அந்தப் பெண்மணி.

"தாயே நீங்கள் இந்தக் குடிலில் இருப்பது பற்றி கவலை இல்லை. ஆனால் இப்போது இவனுக்கு உறக்கம் மிகவும் முக்கியம். ஒரு நாளில் குறைந்தது பத்து நாழிகையாவது இவன் உறங்கினால் தான் உடல் வலுப்பெறும். ஆகையால் உணவு அளித்து விட்டு நீங்கள் வெளியேறி விடுங்கள்" என்றான் சுஸ்ருதன்.

"அப்படியே செய்கிறேன். ஆனால் என்னால் வீணாக அமர்ந்து காலம் கழிக்க இயலாது. இந்த பாடசாலையின் உணவு தயாரிக்கும் பொறுப்பை நான் ஏற்றுக்கொள்கிறேன். நீங்கள் கொண்டு வரும் காய் கனிகளையும் கிழங்குகளையும் கொண்டு சுவையான உணவு தயாரிக்க என்னால் இயலும்" என்றாள். அப்படியே செய்வதாக முடிவானது. அவர்கள் அந்த இளைஞனை உறங்க விட்டு விட்டு வெளியேறினார்கள்.

"தாயே! உங்கள் மகனுக்கு எப்படி அடி பட்டது? அவனது பெயர் என்ன?" என்றாள் மல்லிகை. இப்போது அவர்கள் உணவு உண்டு முடித்து குடிலில் சற்றே ஓய்வாக அமந்திருந்தனர். ஓய்வு நேரம் என்பதால் அத்தனை மாணவர்களும் உடனிருந்தனர்.

"சொல்கிறேன் என் செல்வங்களே! இவன் எனது மகன். பெயர் காளையன். உண்மையிலயே காளையின் வலுவும் வீரமும் கொண்டவன் என் மகன். போர்க்கலைகள் பயில இவன் செண்பகப் பொழிலுக்குச் சென்று அனைத்தையும் கற்றுத்தேர்ந்தான். அரசனிடம் வீரானாகப் பணியில் சேரலாம் என திட்டமிட்டிருந்தான். அப்போது நேற்று காட்டில் விறகு வெட்டச் சென்றான். கீழே நின்றபடி எந்த மரத்தை வெட்டலாம் என இவன் நோட்டமிட்டுக்கொண்டிருக்கும் போது மேலே கிளையை வெட்டிக்கொண்டிருந்த ஒருவனின் கோடரி தவறி இவன் தலையில் கூரான பகுதி படும்படி விழுந்து விட்டது. அடுத்த கணம் நினைவு தப்பி விட்டது இவனுக்கு. உதிரப்போக்கு வேறு. என்ன செய்ய என தவித்து நின்ற போது அந்த வழியே வந்த இருவர் எங்களை அகத்தியர் பாடசாலைக்குப் போகும் படி அறிவுறுத்தினர். அவர்கள் உண்மையிலேயே மனிதர்கள் தானா இல்லை தெய்வங்களே அந்த உருவில் வந்து என் மகனுக்கு உதவி செய்தனரா என எனக்குத் தெரியவில்லை" என்று சொல்லி கண்ணீரைத் துடைத்துக்கோண்டாள்.

செங்குன்றனுக்கு ஆச்சரியம் தாளவில்லை. யாரது நம் ஆசானின் அறிவுத்திறமையை முழுமையாக புரிந்து வைத்திருப்பது? ஆசானால் காளையனைக் காப்பாற்ற முடியும் என யோசித்து சொல்லியிருக்கிறார்களே? என்று எண்ணினான்.

"ஏனம்மா! அந்த வழிப்போக்கர்கள் எப்படி இருந்தார்கள். பெயர் ஏதாவது சொன்னார்களா?"

"பார்க்க மிகவும் இளையவர்களாகத் தோன்றினார்கள். உங்கள் வயது தான் இருக்கும். ஆணின் பெயர் ஆதவன் எனவும் பெண்ணின் பெயர் பொன் மகள் எனவும் சொன்னார்கள். உண்மையிலேயே அந்த ஆதவன் தான் வானத்திலிருந்து இறங்கி வந்தானோ என்று எண்ணுகிறேன். நான் அதைச் சொன்ன போது அவர்கள் எதுவும் மறுத்துப் பேசவில்லை. வெறுமே சிரித்தார்கள் அத்தனை தான். அது தான் எனக்கு மேலும் ஐயத்தைக் கொடுக்கிறது." என்றாள்.

ஆதவனும் பொன் மகளும் தான் இவர்களை வழிகாட்டி அனுப்பியிருக்கிறார்கள் என்ற செய்தி ஆச்சரியத்தை அளித்தது அவர்களுக்கு. இதனை ஆசானிடம் சொல்ல வேண்டும் என குறித்து வைத்துக்கொண்டனர். அன்றைய மதிய வகுப்புகள் ஆரம்பமாயின. மதியங்கள் பொதுவாகவே விவாதங்கள் நடைபெறும் நேரம் என்பதால் அனைத்து மாணவர்களும் கலந்துகொள்வார்கள். இன்றும் அப்படியே தான் நடந்தது.

"ஆசானே! நேற்று நீங்கள் செய்த அறுவை சிகிச்சை உலகில் என்றும் நிலைத்த புகழோடு விளங்கும். ஆனால் சில விஷயங்கள் எங்களுக்குப் புரியவில்லை. அவற்றை விளக்க முடியுமா?"

"நிச்சயம் விளக்குகிறே சுஸ்ருதா! நீ இதுவரையில் பொறுமையாக இருந்ததே அதிகம்! உனக்கு அறுவை சிகிச்சைகளில் எத்தனை ஆர்வம் என எனக்குத் தெரியாதா? ஆனால் அதற்கு முன்னால் ஒரு கேள்வி! நாம் ஏன் அறுவை சிகிச்சையின் போது வேப்பிலை ஆடை அணிகிறோம்? இதற்கு மருத்துவ மாணவர் அல்லாதவர் விடையளித்தால் நன்றாக இருக்கும்" என்றார்.

வண்டார்குழலி தான் பேசினாள்.

"அறுவை சிகிச்சை என்பது மிகவும் பலவீனமான நிலையில் உள்ள ஒரு மனிதரின் மீது செய்யப்படுவது. உடல் பலவீனமாக இருப்பதால் நோய்த்தாக்குதலுக்கு அவர் ஆளாக நேரிடலாம். அதைத் தவிர்க்கவே வேப்பிலை ஆடைகளை அணிகிற வழக்கத்தைக் கொண்டு வந்தீர்கள். காரணம் வேப்பிலை என்பது கிருமிகளை அழிக்கும் தன்மை உடையது" என்றாள்.

"நன்று மகளே! மிக நன்று! அதே காரணம் தான் வேப்பிலைச் சாற்றால் கை கழுவுவதற்கும் நொச்சி இலைச் சாற்றால் கழுவதற்கும் காரணம். பேசாமல் இருப்பதற்கும் அதுவே காரணம். நமது வாயிலிருக்கும் உமிழ் நீரில் ஏதேனும் கிருமிகள் இருந்தால் அதைக்கூட தாங்கும் சக்தி அந்த நோயாளிகளுக்கு இருப்பதில்லை."

"நன்றாகப் புரிந்தது ஆசானே! ஆனால் அறுவை சிகிச்சைக்கு ஏன் தங்கக் கத்திகளையும் வெள்ளி இழைகளையும் பயன் படுத்த வேண்டும்? இரும்புக்கத்திகள் இன்னமும் கூர்மையானவை அல்லவா?"

"உண்மை தான் தொல்காப்பியா! ஆனால் இரும்பு துருப்பிடிக்கும் தன்மையது. ஆனால் வெள்ளியோ தங்கமோ அப்படிப்பட்ட தன்மை உடையவை அல்ல! அதனால் தான் அவற்றைப் பயன் படுத்துக்கிறோம். நமது உடல் பல பொருட்களை ஏற்றுக்கொள்ளாது. ஆனால் வெள்ளியை எளிதாக ஏற்றுக்கொள்ளும் தன்மை உடையது என ஆராய்ச்சியில் கண்டறிந்தேன். அது தான் வெள்ளிக்கம்பிகளைப் பயன்படுத்தினேன்."

"அப்படியானால் ஆசானே! வெள்ளிக்கம்பிகளைக் கொண்டும் அரக்குப்பூச்சிகளின் இழைகளைக் கொண்டும் வெட்டுப்பட்ட உடலில் பாகங்களை இணைக்கலாமா"

"அருமையான கேள்வி சுஸ்ருதா! முடியலாம் என்பதே என் பதில்! நீ இதைக் குறித்த ஆராய்ச்சியைத் தொடர்ந்து செய்து வா! ஒட்டுச் சிகிச்சையில் உனது பெயர் உலகம் உள்ளளவும் நிலைத்து நிற்கும். உனது ஆராய்ச்சியை வழிகாட்டியாகக் கொண்டு பின்னாட்களில் பல மருத்துவர்கள் அந்த அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்வார்கள்." என்றார் ஆசான் அகத்தியர். சுஸ்ருதனின் முகம் மலர்ந்தது.

"ஆசானே! இப்போது நீங்கள் செய்த அறுவை சிகிச்சையைப் பற்றி விளக்கமாக்ச் சொல்லலாமா?"

கேட்ட மல்லிகையைப் பார்த்து சிரித்தார் அகத்தியர்.

"சொல்கிறேன் மல்லிகை! முதலில் அந்த இளைஞனைக் கொண்டு வரும் போதே அவனுக்கு மூளையில் ஏதோ ஒரு இடத்தில் குருதி உறைந்து விட்டது என்பதைப் புரிந்து கொண்டேன். காரணம் அவனது வாயிலிருந்து நிண நீர் ஒழுகியது. இதைக் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். தலையில் அடிப்பட்ட பின்னர் எந்த மனிதனுக்கு வாயிலிருந்து ஏதோ ஒரு வகை திரவம் அல்லது அவர்கள் உண்ட உணவுப்பொருள் வாய் வழியாக வந்தால் அது ஆபத்தின் முதல் அறிகுறி. காரணம் தலையில் அடிபட்ட காயம் கபாலத்தையும் துளைத்து மூளை வரை சென்றிருக்கிறது என்பதன் அறிகுறி அது தான்"

வண்டார் குழலி வேக வேகமாக அனைத்தையும் ஒரு ஓலைச்சுவடியில் எழுதிக்கொண்டிருந்தாள். தொடர்ந்தார் அகத்தியர்.

"அதை அவதானித்ததும் மூளையின் எந்தப்பாகத்தில் அந்த உறைவு ஏற்பட்டிருக்கலாம் என்பதைதான் பார்க்க வேண்டும். அடிபட்டவரின் இடது பகுதி செயலிழப்பது போலத் தெரிந்தால் மூளையின் வலப்பக்கத்தில் பாதிப்பு உள்ளது. அதே போலவலப்பக்கம் செயலிழப்பது போலத் தோன்றினால் இடபக்கம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதைஅறியலாம். அதை வைத்து உத்தேசமாக குருதி உறைந்துள்ள பகுதியை அறிந்து கொள்ளலாம். பொதுவாக அடிபட்டவுடன் அதன் அருகிலேயே தான் அந்த உதிர உறைவு இருக்கும். பத்து நாழிகைகள் கடந்த பின்னர் தான் அவை மெதுவாக நகர ஆரம்பிக்கும் ஆகையால் அடிபட்ட இரு நாழிகைக்குள் வந்து விட்டால் காயத்தின் பக்கத்திலேயே உறைவைத் தேடலாம்" என்றார்.

மாணவர்களுக்கு ஆசானின் அறிவுத்திறமை வியப்பளித்தது.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top