• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Aththiyaayam 141: Kaalam Parakiirama Pandiyan Kaalam

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
காலம்: பராக்கிரம பாண்டியன் காலம்:

அத்தியாயம் 141:

கீராரின் நிலை சற்றே கவலைக்கிடமாக மாறியது. ஆனாலும் அவரது மனோ திடம் குறையவில்லை. அமர்ந்த வாக்கில் போரைக் கவனித்தார் கீரார். இப்போது மணி சேகரனும், காளையனும் மட்டுமே வாள் வீசினர் இவர்கள் தரப்பிலிருந்து. ஆனால் வீர பத்திரன் தரப்பிலோ அவனையும் சேர்த்து அறுவர் இருந்தனர். பயிற்சி செய்தபடி மணி சேகரனும் காளையனும் ஒருவருக்கொருவர் முதுகு காட்டியபடி வாள் வீசிக் கொண்டிருந்தனர். அவர்களைச் சுற்றிலும் வளையமாக அறுவர் நின்றிருந்தனர். கீராரின் வாளையும் எடுத்துக்கொண்டு இரு கரங்களாலும் போரிட்டான் மணி சேகரன். அவனது வீரமும் வேகமும் மிகவும் ஆச்சரியத்தை அளித்தன வீர பத்திரனுக்கு. மணி சேகரனின் வாள் வீர பத்திரனுடன் வந்த ஒருவனைப் பதம் பார்க்க அவன் ஆவென்ற அலறலுடன் சாய்ந்தான். அதனைப் பார்த்து மற்றவர்கள் பதட்டம் அடைந்தனர்.

"மணி சேகரா! உன் வீரமே வீரம்! நீ எங்களுடன் இணைந்து விட்டால் உனக்கும் பெரும் புகழும் பணமும் தேடி வரும். அதை விடுத்து இந்த வயோதிகர்களுக்காக நீ ஏன் உன் வாழ்க்கையை வீணாக்கிக் கொள்கிறாய்?" என்றான் வீர பத்திரன். அவனுக்கு மூச்சு இறைத்தது.

இந்த அவகாசத்தைப் பயன் படுத்திக்கொண்டு காளையனும் இறந்த போர் வீரனின் வாளை எடுத்துக்கொண்டு இரு கரங்களாலும் போரிட்டான். அதனைப் பார்த்து விட்ட கீரார் உற்சாகப்படுத்தினார்.

"நான் தீயவர்களை அழிப்பேனே அன்றி அவர்களுடன் நட்பு பாராட்டுவது இல்லை வீரா! வீண் பேச்சில் காலம் கடத்தாதே" என்று மேலும் தீவிரமாக போரிட்டான். வாட்களோடு வாட்கள் மோதும் ஓசை பெரிதாகக் கேட்டது. நடு நடுவே காயம் பட்ட வீரரகளில் அலறல் வேறு. இப்போது வீர பத்திரனுக்கு மணி சேகரனின் உத்தி புரிந்து விட்டது.

"வீரர்களே! அவர்களை பிரியுங்கள்! இருவரும் முதுகோடு முதுகு வைத்துப் போராடாமல் இருவருக்கும் இடைவெளி ஏற்படுத்துங்கள்! அவர்கள் இருவர் நாம் நால்வர்! மணி சேகரனுடன் நாம் இருவரும் இந்த ஆளுடன் நீங்கள் இருவரும் மோதுங்கள்! " என்றான்.

"சே! நீயெல்லாம் ஒரு வீரனா? ஒருவனுடன் இருவர் என மோதுகிறீர்களே! உங்களுக்கு வெட்கமாக இல்லை?" என்றார் விந்தையன்.

"உங்களுக்கு உண்மையிலேயே உங்கள் சீடர்கள் மீது அன்பிருந்தால் நீங்கள் அவர்களைத் தடுங்கள்! ரகசிய ஓலைகளை என்னிடம் கொடுத்து விட்டால் யாரும் இறக்க வேண்டாம். அவரவர் பாதையில் செல்லல்லாம்" என்றான் வீர பத்திரன்.

தன் சீடர்கள் மீதிருந்த காயங்களைப் பார்த்தார் விந்தையன். மணி சேகரனுக்கும் சரி காளையனுக்கும் சரி அதிகமாக அடி படவில்லை என்றாலும் அவர்கள் களைத்து விட்டனர் என்பது தெரிந்தது. அதிலும் கீராரின் நிலை தான் கவலைக்குரியதாக இருந்தது விந்தையனுக்கு. வீரர்களுக்கு சிறிது கால அவகாசமும் கீராருக்கு சிகிச்சையும் அளிக்க வேண்டுமானால் வீர பத்திரனிடம் தழைந்து போவதைத் தவிர வேறு வழியில்லை என்று புரிந்து கொண்டார் அவர். கீராரின் அருகாமையை விட்டு எழுந்து வந்தார். கைகளை உயரத் தூக்கி கத்தினார்.

"வீரர்களே! வாள் வீச்சை நிறுத்துங்கள்! நாம் ஒரு உடன்படிக்கைக்கு வருவோம்" என்றார். அனைவரும் போரை நிறுத்தினர்.

"இது தான் அறிவுக்கு அழகு! இதை முதலிலேயே செய்திருக்கலாமே? சொல்லுங்கள் குருவே! உங்களுக்கு என்ன வேண்டும்?" என்றான் வீர பத்திரன்.

"முதலில் கீராருக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். அதற்கான அவகாசம் வேண்டும். மற்றவை பிறகு" என்றார்.

"அவகாசம் தருகிறேன். ஆனால் அவர் மீண்டும் தாக்கக் கூடாது! இந்த நிபந்தனைக்கு நீங்கள் ஒப்புக்கொண்டால் நான் தாக்குதலை நிறுத்துகிறேன். இல்லையெனில் நீங்கள் அனைவருமே சாக வேண்டியது தான்."

"சாக வேண்டியது யார் வாழ வேண்டியது யார் என்பதை வனப்பேச்சி முடிவு செய்யட்டும். நீ சொல்லாதே! ஆனாலும் இவரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால் நீ போட்ட நிபந்தனைக்கு நான் ஒப்புக்கொள்கிறேன். முதலில் அவருக்கு சிகிச்சை அளித்து விட்டு வருகிறேன். காளையா அதோ அந்த தோல்பையை எடு" என்றார். வனப்பேச்சியின் அருகில் இருந்த தோல்பையை எடுத்து வந்தான் காளையன். அதில் காய்ந்த சில பச்சிலை உருண்டைகள் இருந்தன. அவற்றை சிறிது தண்ணீரில் கரைத்து கெட்டியானதும் அவற்றை கீராரின் நெஞ்சுக்காயத்தில் வைத்துக் கட்டுப் போட்டார் விந்தையன். பிறகு அந்தத் தோல் பையை எடுத்து தனது அரைக்கச்சில் முடிந்து கொண்டார். சிறிது தண்ணீரும் ஏதோ ஒரு மூலிகை மருந்தையும் கீராருக்குக் கொடுக்க அவருக்கு நன்றாக நினைவு திரும்பி விட்டது.

"குருவே! இந்தத் தோல்பை ஏது?" என்றான் மணி சேகரன்.

"இது போல நேரலாம் என ஊகித்து நான் எடுத்து வந்தது தான் மணி சேகரா! அதனை அவிழ்த்து சற்றே தொலைவில் வைத்திருந்தேன். சற்றே அருகில் வாருங்கள்" என்றார். குரு தங்களிடம் ஏதோ சொல்ல விரும்புகிறார் என்பதை புரிந்து கொண்ட காலையனும் மணி சேகரனும் அவர் அருகே குனிந்தனர்.

"காளையா! மனி சேகரா! காளையன் இடுப்பிலும் இதே போல ஒரு தோல் பை இருக்கிறதா?"

"ஆம் குருவே"

"அதில் அவன் எருக்கப் பாலையும் ஊமத்தை சாம்பலையும் கலந்து செய்து பொடி வைத்திருக்கிறான். அது கண்ணில் பட்டால் கண்கள் குருடாகி விடும். ஆகையால் முதலில் அவனை தாக்குங்கள்! மற்றவர்கள் அனைவரும் இறந்து போய் அவன் மட்டும் தனித்திருந்தால் அதனை நம் மீது நாம் எதிர்பாராத கணத்தில் பிரயோகித்துத் தப்பிவிடுவான். இப்போது மீண்டும் தாக்குதல் தொடங்கும். உங்களுக்கு அவகாசமும் ஓய்வும் தர வேண்டித்தான் நான் இப்படிச் செய்ய நேர்ந்தது. ஆகையால் கவனம் கவனம்" என்றார்.

"என்ன கூட்டுச் சதியில் ஈடுபடுகிறீர்கள் மூவரும்?" என்றான் வீர பத்திரன்.

"சதி செய்வது பற்றி உன்னிடம் தானே நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்? உற்ற நண்பனையே அழிக்க சதி செய்தாயே? உன்னால் அல்லவோ சேரன் எங்கள் மீது படையெடுத்தான்?" என்றான் மணி சேகரன் கோபமாக.

"ஹூம்! சேரன் படையெடுத்தாலும் ஒவ்வொரு முறையும் நீங்கள் தானே வெல்கிறீர்கள். ஆனால் இம்முறை அப்படி நிகழாது. அகத்திய ரகசியம் அடங்கிய ஓலை எங்கள் கையில் வந்த உடன் சேர மன்னர் பல மடங்கு பலம் பெற்று விடுவார். அவரிடம் செல்வங்கள் அபரிமிதமாகச் சேர்ந்து விடும். நீங்களும் பராக்கிரமனும் அவரது காலடியில் நின்று வணங்கும் நிலை வரும்" என்றான் வீர பத்திரன். அதனைக் கேட்டு சேர வீரர்கள் நகைத்தனர்.

"தென் பாண்டி நாட்டில் பிறந்து வளர்ந்து இவ்வள்வு பெரிய நிலையை அடைந்த நீ சேரர் பக்கம் சேர்ந்தது வேதனை மட்டுமல்ல வீரா துரோகமும் கூட" என்றான் காளையன்.

"நீ யார் என்றே எனக்குத் தெரியாது! நீயெல்லாம் எனக்கு அறிவுரை கூறும் அளவுக்கு வந்து விட்டதா?" என வீர பத்திரன் சொல்லவும் மீண்டும் சிரித்தனர் சேர வீரர்கள்.

"என் பெயர் காளையன். காணிகளில் ஒருவன். உன்னைப் போல காட்டிக்கொடுப்பவன் அல்ல! எங்களை எங்கள் காணிகளை செங்குன்றானாரே ஒரு சொல் மலையரசன் என்பார் என்றால் எங்களது விசுவாசத்தை நீ அறிந்து கொள்" என்றான் பெருமையாக காளையன்.

"விசுவாசம்! அது நாய்களுக்கானது காளையா! மனிதர்களுக்கானது இல்லை. இப்போது இப்படி வீண் பேச்சுப் பேசவா வாட் போரை நிறுத்தினார் உங்கள் குரு! ஏதோ சமாதான உடன் படிக்கை என்றாரே அதைப் பற்றிச் சொல்லுங்கள்" என்றான்.

குரு விந்தையன் முன்னால் வந்தார்.

"இதோ பார் வீர பத்திரா! உனக்கு நிதானம் தவறி விட்டது. நான் மீண்டும் ஒரு முறை கூறுகிறேன். இந்தப் பெட்டியில் உள்ள ஓலைகளை படித்துப் பார். அது வரையில் நாங்கள் உன்னையோ உன் ஆட்களையோ தாக்க மாட்டோம். அதில் எங்காவது இரும்பைத் தங்கமாக்கும் ரசவாதம் பற்றி அகத்தியர் பேசியிருக்கிறாரா என்பதை அறிந்து கொள். பிறகு ஒரு முடிவுக்கு வரலாம்" என்றார்.

"அப்படி அந்த ஓலைகளில் என்ன தான் இருக்கிறது "என்றான் கருப்பன்.

"அப்படிக் கேள்! அவற்றில் ஆசான் அகத்தியர் செய்த அறிவியல் அற்புதங்கள் இருக்கின்றன. அவரது காலத்தில் எண்ணெயில்லாமல் திரியில்லாமல் எரியும் விளக்குகளை அவர் கண்டு பிடித்திருக்கிறார். அதற்கான தத்துவங்கள் அடங்கிய ஓலைகளும் அவரது சீடர்களான மல்லிகை வண்டார் குழலி செங்குன்றன் எழுதிய ஓலைகளும் தான் அதில் இருக்கின்றன." என்றார் விந்தையன்.

"எண்ணெயில்லாம திரியில்லாம விளக்குகளா? அது என்ன மந்திரம் என எழுதியிருக்கிறதா அதில்?" என்றான் வீர பத்திரன்.

"நீ ஒரு முட்டாள் வீர பத்திரா! ஆசான் அகத்தியர் அறிவியலில் துணை கொண்டு தான் அத்தகைய விளக்கை நிர்மாணித்திருக்கிறாரே அன்றி மந்திரத்தால் இல்லை. அவர் மந்திரங்கள் எதையும் கண்டு பிடிக்கவில்லை மூடனே" என்றார்.

"வீரா நீ எங்கள் மன்னரிடம் சொன்னதற்கும் இவர் சொல்வதற்கும் சம்பந்தமே இல்லையே? அத்தனை மந்திரங்களும் அடங்கிய ஓலையை அல்லவோ நீ எடுத்துத் தருவதாகச் சொன்னாய்? அதில் ரசவாத ஓலைகளும் தானே அடக்கம்?" என்றான் கருப்பன்.

"இவர் நமக்குள் பிளவு ஏற்படுத்த வேண்டும் என இப்படிக் கூறுகிறார் கருப்பா! இவரை நம்பாதே! அதோ அந்த ஓலைகளில் என்ன இருக்கிறது என்பதை நீயே படித்துப் பாரேன். இத்தனை சொல்லும் இவருக்கு எண்ணெயில்லாம விளக்கெரிக்கத்தெரியுமா என்று கேளேன்" என்றான் வீர பத்திரன்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top