• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

chapter1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

whatabout my story

  • better

    Votes: 0 0.0%
  • not bad

    Votes: 0 0.0%
  • bad

    Votes: 0 0.0%

  • Total voters
    3

sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
அத்தியாயம்-1

அதிகாலை வேளை. சூரியன் கூட விழித்து எழுந்து தன் கதிர்களை இன்னும் வீசாத நிலையில் சந்திரா விழித்து எழுந்து படுக்கையில் அமர்ந்திருந்தாள். சந்திரா கடிகாரத்தில் மணி பார்த்தாள். அதிகாலை நாலரை என்று அது காட்டியது.

“ஏய்! இப்பதான் உனக்கு விடிஞ்சுச்சாடி. மணி ஆறாகப் போகுது. இப்பதான் வாசக் கூட்டப் போறியா? உன்னச் சொல்லி தப்பில்ல. உன்ன செல்லம் கொடுத்து கெடுத்து வைச்சிருக்காளே உன் அத்தே அவளச் சொல்லனும்” என்று கண்ணை உருட்டிக் கொண்டு கமலம் பாட்டி போன வாரம் பேசிய வார்த்தைகள் அவள் மனதில் வர பரபரப்பு தொற்றிக் கொண்டது.

பாட்டி விழித்து வருவதற்குள் குளித்து விட்டு வந்து வாசலைக் கூட்டி, தண்ணீர் தெளித்து கோலம் போட்டுடனும் இல்லைன்னா நான் அவ்வளவுதான். என்னால அத்தைக்கு வேற திட்டு விழும் என்ற பயம் அவளை தொற்றிக் கொண்டதால் போர்வையை மடித்து வைத்து விட்டு, உடைகளை சரி செய்துக் கொண்டு, தன் துணிகளை தூக்கிக் கொண்டு குளியலறை நோக்கி விரைந்த சந்திரா எதிரே வந்த சின்ன அத்தை சாந்தி மீது மோதிக் கொண்டாள்.

“ஏய் சந்திரா என்ன இது? எங்க பாத்துட்டு வர்ற நீ? கண்ணு தெரியுதா இல்லையா?” என்று கோபமாகத் திட்டினாள் சாந்தி.

“மன்னிச்சுக்கோங்க அத்தே” என்ற சந்திராவின் கண்களில் கண்ணீர் குளமாகியிருந்தது.

“சரி சரி இனியாச்சும் பாத்து போ. என்ன புரிஞ்சுதா?” என்று அதட்டிவிட்டு பதிலை கூட கேட்காமல் அகல சந்திராவின் மனதில் இதுவே நம்ம அத்தையா இருந்திருந்தால் “சந்திரா செல்லம்! என்ன அவசரம்? மெதுவா போ.” என அன்பாகச் சொல்லி செல்லமாக கன்னத்தில் தட்டியிருப்பாங்க என நினைத்தவள் விசாலாட்சியின் அன்பான சிரித்த முகத்தை நினைத்தவாறு குளியலறையில் நுழைந்தாள்.

சந்திரா தலைக்குக் குளித்து விட்டு, மஞ்சள் நிறத் தாவணி பச்சை கலர் பாவாடைக்கு மாறி, தலையைத் துவட்டாமல் துண்டைக் கட்டிக் கொண்டு வாளியில் தண்ணீர், துடைப்பம், கோலப் பொடியுடன் அவசரமாய் பரபரப்புடன் வாசலுக்குச் செல்ல எதிரே அவள் அத்தை விசாலாட்சி குளிக்க வந்தாள்.

“என்ன செல்லம். இன்னிக்கும் நீ முன்னாடியே குளிச்சிட்டியா? நான்தான் லேட்டா?” என்று அன்பாய் கேட்ட அத்தையின் முகத்தை பார்த்தவுடன் கவலைகள் மறந்து ஆம் என்பது போல் புன்னகைத்தாள்.

“சரி இன்னிக்கு வெள்ளிக்கிழமை இல்லியா? நீ போயி வாசல பெருக்கி அழகா பெரிசா ஒரு புள்ளிக் கோலம் போட்டுட்டு வந்துடு. அம்மா குளிச்சிட்டு உனக்கு காபி போட்டு வைக்கிறேன் அப்புறம் பொறுமையா போ. அவசரம் எதுவும் இல்லை” என்று கன்னத்தைத் தட்டி விட்டு விசாலாட்சி குளியலறை நோக்கிச் சென்றாள்,

விசாலாட்சிக்கு வயது நாற்பதிருக்கும். அன்பான கனிவான முகம் மட்டுமல்ல; அன்பான மனமும் கொண்டவள். வீட்டின் மூத்த மருமகள். அவளின் அத்தைதான் என்றாலும் பத்து வயதிலேயே திருமணமாகி தன் குடும்பத்தைப் பிரிந்து பத்து வயதில் அந்த வீட்டில் சந்திரா நுழைந்த நாள் முதல் அவள் காட்டிய அன்பினால் தன் தாயாகவே பார்க்க ஆரம்பித்து விட்டாள். ஆரம்பத்தில் அத்தை என்று அழைத்து வந்தவள் பின் அம்மா என்று கூப்பிட ஆரம்பித்து விட்டாள். அவளும் தன் மகளாகவே பாவித்ததால் எதுவும் சொல்ல வில்லை. குடும்பத்தினர் முன்னிலையில் அவர்களை அத்தை என்று சொன்னாலும் தனிமையில் அம்மா என்றுதான் அழைப்பாள் சந்திரா.

“சரிங்க அம்மா” என்று தலையசைத்துச் சென்ற சந்திராவுக்கு அந்த வார்த்தைகள் தந்த உற்சாகத்தில் அவள் விரைவாகச் சென்று, தன் மெல்லிய விரல்களால் புள்ளிக் கோலத்தை அழகான ஒவியத்தை போல் தீட்டி விட்டு, தன் கோலத்தின் அழகை ரசித்து விட்டு “சபாஷ்டி சந்திரா கலக்கிட்ட” என்று தன்னையே பாராட்டி விட்டு சமையலயறைக்குச் சென்றாள்.

அழகான சின்ன வட்ட முகமும், குறும்பு நிறைந்த மயக்கும் சிறிய விழிகளும், அடர்ந்த கருத்த கூந்தலும், சின்ன இதழ்களும், மெல்லிய பிஞ்சு கைகளும், சின்ன இடையும் மெல்லிய உடல்வாகும் உடைய பதினெட்டு வயது பெண்தான் சந்திரா.

பெரிய அரண்மனை போன்ற அந்த வீட்டில் பல வேலைகாரர்கள் இருந்தாலும் முன் வாசலைப் பெருக்கி கோலத்தை அந்த வீட்டின் மருமகள்தான் செய்ய வேண்டும் என்பது பாட்டியின் உத்தரவு. கமலம் பாட்டி பார்க்கும் முன் நடக்கவில்லை என்றால் வீடு ரெண்டு பட்டு விடும் என்பதால் சந்திரா முதல் வேலையாக அதை முடித்து விடுவாள்.

சந்திரா முன் வாசல் வேலையை முடித்துவிட்டு சமையலறைக்குள் நுழையும் போது குளித்து விட்டு வந்து விசாலாட்சி காலை சமையலை ஆரம்பித்துக் கொண்டிருக்க அவள் அருகில் வந்த சந்திரா “அம்மா நான் வரதுக்குள்ள உங்கள யாரு சமைக்க சொன்னது?” என்று செல்லமாக கடிந்துக் கொண்டாள்.

“ஏன் மகாராணி வந்து உத்தரவு கொடுத்தாதான் நான் சமைக்கனுமா?” என்று பொய் கோபத்துடன் கேட்டபடி முறைக்கவும் செய்தாள் விசாலாட்சி.

“ஆமா நான் வந்து சொன்ன பின்னாடிதான் சமைக்கனும்.” என்று அசராமல் பதில் தந்த சந்திராவை பார்த்து விசாலாட்சி சிரித்தாள்.

“அம்மா இந்த வேலை எல்லாம் பாக்கதான் நான் இருக்கேன் இல்ல. நீங்க என்ன சமைக்கனுமுன்னு சொன்னீங்கன்னா சமைச்சிட்டுப் போறேன். நீங்க ஏன் சிரமப் படறீங்க?” என்று கேட்டபடி வந்த சந்திரா இன்னும் தலை வாராதிருப்பதைக் கவனித்து விட்டாள்.

“ஆமா நீ குளிச்சிட்டு வந்து எத்தனை நேரமாச்சு? ஈரத் துண்ட இப்படியே தலையில கட்டிக்கிட்டு இருந்தா என்ன ஆகறது? சளி பிடிச்சிக்காது? நீ போயி தலைய துவட்டிட்டு வா.” என்று அன்பாக கட்டளை இட்டாள் விசாலாட்சி.

“இல்லம்மா வீட்டுல எல்லாருக்கும் காபி தரனும் அத முடிச்சிட்டு நான் உடனே செய்யறேன்” என்று சொன்னவளிடம் “சந்திரா அதெல்லாம் நான் பாத்துக்கிறேன் அதுவுமில்லாம பாட்டி பாத்தா உன் அம்மாவதான் திட்டுவாங்க. இப்ப நீ போ. நான் சொன்னா நீ கேட்பியா இல்ல மாட்டியா?” என்று மிரட்ட சரி என்று தலையசைத்துச் சென்றாள் சந்திரா.

சந்திரா செல்லும் வேளையில் எதிர் வந்த சாந்தி “ஏய்! காபி போட்டுட்டியா? அங்க பாட்டி, மாமா எல்லோரும் முழிச்சிட்டாங்க.” என்று கோபமாக இரைந்தாள்.

சந்திரா எதுவும் பேசாமல் அமைதியாக நின்றுக் கொண்டிருந்தாள்.

“இல்ல சாந்தி நான்தான் அவள தலைய துவட்டுன்னு சொல்லி அனுப்பிச்சேன், நான் காபி போட்டுட்டேன். இப்ப கொடுத்திடலாம்.” என்று பரிந்து வந்த அத்தை விசாலாட்சியிடம் “இல்லக்கா இப்பவே நேரமாச்சு. அத்தய பத்திதான் உங்களுக்கு தெரியுமில்ல.” என்று பயத்துடன் சொன்னாள் சாந்தி.

“சரி கண்ணம்மா இங்க வா. இந்த காபிய எடுத்துட்டு போயி பாட்டிக்கும் உன் மாமாவுக்கும் வேகமாக கொடுத்துட்டு வந்துடு” என்று அன்போடு சொல்ல விசாலாட்சி சொல்ல “சரிம்மா” என்று தலையசைத்து கையில் ரெண்டு காபி டம்ளர்கள் கொண்ட தட்டுடன் மாமாவின் அறையை நோக்கிச் சென்றாள் சந்திரா.

“அக்கா நம்ம சந்திரா நல்லா வளர்ந்துட்டா. ரொம்ப பொறுப்பா நடந்துக்கறா. இப்பதான் சின்ன பொண்ணா இந்த வீட்டுக்கு வந்த மாதிரி இருக்குக்கா.” என்று அவள் சென்றபின் பாராட்டினாள் சாந்தி.

“சாந்தி நீ ஏன் எப்ப பார்த்தாலும் அவள திட்டிக்கிட்டே இருக்க. கொஞ்சம் அன்பா சொல்ல வேண்டியதுதானே? அவ நல்ல பொண்ணு சொன்னா கண்டிப்பா புரிஞ்சுக்குவா இல்ல” என்று விசாலாட்சி கேட்டாள்.

“அக்கா நானும் அவ நிலையில இருந்து வந்தவதான். நான் இந்த குடும்பத்தில மருமகளா வந்தப்ப நீங்கதான் என்ன பாத்துக்கிட்டிங்க. எனக்காக எவ்வளவு முறை அத்தைகிட்ட திட்டு வாங்கினிங்க அக்கா. சந்திரா நல்ல பொண்ணுதான். எனக்கும் அவள் பிடிக்கும் ஆனா நீங்க அவகிட்ட ரொம்ப அன்பா இருக்கீங்க அதனாலதான் அவ தப்பு செஞ்சு நீங்க அத்தைகிட்ட மாட்டக் கூடாதுன்னு நான் கண்டிப்பா இருக்ககேன் அவ்வளவுதான்” என்று தெளிவாகப் பேசிய சாந்தியினை பார்த்து வியந்து நின்றாள் விசாலாட்சி.

“அக்கா இதெல்லாம் உங்கிட்ட இருந்து நான் தெரிஞ்சிக்கிட்ட விசயம்தான். நான் உங்கள அக்கான்னு கூப்பிட்டாலும் நீங்க எனக்கு அம்மாதான். சரிக்கா நான் போயி அவருக்கும் ராகுலுக்கும் காபி கொடுத்து வர்றேன்” காபி டம்ளர்களுடன் தன் அறையை நோக்கிச் சென்றாள் சாந்தி.

சந்திரா தன்னுடைய மாமா விசுவநாதன் அறைக்குள் மெல்ல நுழைந்த போது அவர் அப்பொழுதுதான் படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்திருந்தார்.
 




Last edited:

sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
விசாலாட்சியின் கணவன் விசுவநாதன் வயது நாற்பத்தி ஐந்து இருக்கும். கம்பீரமான ஆணின் அடையாளங்கள் அனைத்தும் உடைய அவர், கனிவான அன்பான இதயமும் கொண்டவர். தன் தாயின் மீது பாசமும், மரியாதையும் கொண்டவர் என்றாலும் தன் தாய் செய்யும் சில காரியங்களை எதிர்ப்பார் ஆனால் தாயின் வார்த்தைகளை மீற இயலாமல் பிறகு ஏற்றுக் கொள்வார். தாயுக்கும் தெரியாமால் சில உதவிகளை மறைமுகமாக செய்வதும் பின் அதற்காக தாயிடம் திட்டு வாங்குவதும் அவர் வழக்கம்.

சந்திராவைக் கண்டவுடன் விசுவநாதன் மாமா சிரித்த முகத்துடன் “குட்மார்னிங் சந்திரா” என்றார்.

“குட்மார்னிங் மாமா. அத்த காபி கொடுத்திட்டு வர சொன்னாங்க” என்று காபியை நீட்ட வாங்கிக் கொண்டு “உன் பாட்டிக்கு கொடுத்திட்டியா?” என்றார்.

“இல்ல மாமா. இனிதான்” என “சரி நீ போயி உன் பாட்டிக்கு சூடு ஆறதுக்குள்ள காபி கொடு” என்று மாமா விசுவநாதன் சொல்ல, “சரிங்க மாமா” என்று தலையசைத்து பாட்டியின் அறையை நோக்கிச் சென்ற அவளின் மனதில் பயம் தொற்றிக் கொண்டது.

பாட்டி கமலம் அம்மாள் காலையிலேயே எழுந்து முகம் கழுவி வாய் கொப்பளித்து நாற்காலியில் அமர்ந்திருந்தார்கள். கனத்த சரீரத்துடன் மிரட்டும் விழிகளுடன், கம்பீரமாக கடுமையான சிறு புன்னகையும் இல்லாமல் இருக்கும் அவர்களை கண்டால் அந்த குடும்பமே மிரளும்.

கமலம் அம்மாள் அன்பானவர்தான் என்றாலும் பழைமை மாறாதவர். முன்னோர்கள் வகுத்த சம்பிரதாயத்தையும் சடங்குகளையும் மீறக் கூடாது என்று கொள்கை கொண்டவர். சந்தோலா என்ற அந்த பழைமை வாய்ந்த கிராமத்தில் கமலம் அம்மாளின் குடும்பமே அந்த கிராமத்தின் மிகப் பெரிய பணக்காரக் குடும்பம். அரண்மனை போன்ற பல அறைகள் கொண்ட விசாலமான அந்த கால வீடும், பல வேலையாட்களும், பண்ணையாட்களும், கணக்கிலடங்கா நிலங்களும், தோப்புகளும் அவர்களுக்கு உண்டு.

கமலம் அம்பாள் கணவர் தர்மலிங்கம் இறந்து பல ஆண்டுகள் ஆனாலும் அவரின் செல்வாக்கு குறைய இல்லை. “பெரியம்மா” என்றும் “முதலாளியம்மா” என்றும் மரியாதையுடன் அழைக்கும் கிராமத்தினரில் பெரும்பாலான மக்கள் அவரிடம் கூலி வேலை செய்து பிழைப்பவர்கள்தான். கோவில் திருவிழா என்றாலும் கிராமத்தில் எந்த நிகழ்வு என்றாலும் அவரின் அனுமதி நாடி ஊரின் பெரியவர்கள் வந்து விடுவார்கள்.

கமலம் அம்மாள் அனுமதியுடன் அவர்கள் தரும் பொருள் உதவியுடன் அது நடக்கும். கிராமத்தில் யாருக்கு பணப் பிரச்சினை என்றாலும் அவர்களிடம் வந்து நிற்கும். மக்களிடம் நிலம், நகை ஆகியவற்றை அடமானம் பெற்றுக் கொண்டு பணம் தருவார்கள். குறித்த காலத்தில் பணத்தை திருப்பி தர முடியாமல் அவர்களிடம் இழந்தவர்கள் பலர்.

கமலம் அம்மாளுக்கு பிறந்த இரு பிள்ளைகளில் இளைய மகன் சிவநாதன் அவர்களின் சொல்படி எல்லாவற்றையும் முடித்து விடுவான் என்பதால் அவன் மேல் நம்பிக்கை அதிகம். தாய்க்கு தப்பாமல் பிறந்த பிள்ளை அவர்.

மூத்த மகன் விசுவநாதனுக்கு இரக்க சுபாவம் என்பதால் கணக்கு பார்க்கும் வேலை மட்டும்தான் மற்றபடி எல்லாம் சிவநாதன்தான்.

திருமணமாகி ஆகி வந்ததிலிருந்து சந்திராதான் பாட்டிக்கு காபி எடுத்துச் செல்வது வழக்கம் என்பதாலும் பல முறை திட்டு வாங்கியும், தண்டணைக்கு உள்ளாகியும் அவைகள் தந்த அனுபவத்தால் பாட்டியிடம் எப்படி நடந்துக் கொள்வது என்று கற்றுக் கொண்டு நல்ல மருமகள் என்று பெயரும் வாங்கி விட்டாள். கமலம் அம்மாளுக்கு தன் முதல் பேரன் மனைவி என்பதால் தனி அன்பும் உண்டு.

“பாட்டி! அத்தை உங்களுக்கு காபி கொடுத்து வரச் சொன்னாங்க” என்று பணிவுடன் நீட்ட கமலம் காபியை எடுத்துக் கொண்டவுடன் எந்தக் குறையும் சொல்லி விடக் கூடாது என்று மனதில் எண்ணி பயந்தாள். நல்ல வேளை எதுவும் சொல்லவில்லை.

“சந்திரா! உன் மாமா, சின்ன மாமா எல்லோருக்கும் காபி கொடுத்திட்டியா?” என்று கேள்விக் கேட்டு அவளைப் பார்த்தார் பாட்டி.

“மாமாவுக்கு இப்பதான் தந்துட்டு வர்றேன். சின்ன மாமாவுக்கும், ராகுலுக்கும் சின்ன அத்தை காபி எடுத்திட்டு போயிட்டாங்க” என்றாள்

“சரி நீ என்ன இன்னும் தலைய வாராம, துண்ட கட்டிட்டு நிற்கிறே. தலைக்கு குளிச்ச உடனே தலைய காய வைச்சி சடை பின்னிடனும் இல்லன்னா தலை முடி வீடு முழுக்க கொட்டும். அது குடும்பத்துக்கு ஆகாதுடி, இத உன் அத்தை உங்கிட்ட சொல்லலியா?” என்று பாட்டி கேட்டு நிறுத்தினார்.

“அத்தையும் சொன்னாங்க பாட்டி. நான் உடனே செஞ்சிடறேன் பாட்டி” என்று மறுப்பு சொல்லாமால் வார்த்தைகளை உதிர்த்தாள். சந்திராவின் அந்த பணிவு அவர்களை சந்தோஷமாக்கியது.

“சரி நீ போயி தலைய வாரிட்டு உன் அத்தைக்கு போயி சமையல்ல உதவி செய். என்ன புரிஞ்சுதா?” என்றபடி காபி டம்ளரை நீட்ட வாங்கிக் கொண்டு மாமாவின் அறைக்குச் சென்று டம்ளரை எடுத்துக் கொண்டு சென்றாள்.

சந்திராவின் கொலுசு ஒலி கேட்டு அவள் வருகையை அறிந்துக் கொண்ட விசாலாட்சி அவள் அருகில் வர “இந்தா இதக் குடிச்சிட்டு போயி தலை வாரிட்டு வா” என்று காபியை நீட்ட வாங்கிக் குடித்து விட்டுச் சென்றவள், சிறிது நேரத்தில் பின்னலிட்டு வந்து விட்டாள்.

“அம்மா நான் ரெடி. நீங்க தள்ளுங்க மீதிய நான் பாத்துக்கிறேன்” என்று அத்தையின் அருகில் வம்படியாய் நின்றாள்.

“இந்த நேரத்துக்கு செய்ய வேண்டிய வேலை எல்லாம் முடியப் போகுது. சட்டினிதான் அரைக்கனும் அவ்வளவுதான்.” என்று சொன்னாள் அத்தை.

“அம்மா இப்ப நீங்கதான் தலை துவட்டாம இருக்கீங்க? உங்களுக்கு சளி பிடிக்காது?” என்று கேள்வி கேட்டு சிரித்தாள் சந்திரா.

“அம்மாவையே கேள்வி கேட்கறியா நீ? உன்ன” என்று அவள் அத்தை முறைக்க “எனக்கு சளி பிடிக்க கூடாதுன்னு கவலைப்படும்போது நான் உங்கள பத்தி கவலைப்படக் கூடாதா?” என்றாள் சந்திரா.

“சரி இந்த சட்டினிய அரைம்மா” என்ற விசாலாட்சி சொல்ல “சரி அம்மா நான் பாத்துக்கறேன் நீங்க போங்க” என்று அத்தை சென்று விட்டாள். அவள் சட்டினி அரைக்க ஆரம்பித்து விட்டாள்.

விசாலாட்சி சென்று தலையை துவட்டி பின்னலிட்டு வர “சட்டினி ரெடிம்மா” என்று காட்டினாள் சந்திரா.

“சரி வா மீதி வேலைய பாக்கலாம்” என்று அத்தையும் மருமகளும் சாரி அம்மாவும் மகளும் பேசிக் கொண்டே சமையலை மும்முரமாக செய்தனர்.

இரவு சாப்பாடு முடிந்த நேரத்தில் கமலம் அம்மாள் சாய்வு நாற்காலியில் அமர்ந்து இருந்தார். சந்திரா கண்ணில் பட “அம்மா சந்திரா இங்க வா” என்று அழைத்தார்.

“என்ன பாட்டி?” என்று கேட்டபடி நின்றவளிடம் “உனக்கு தினமும் நான் சொல்லனுமா? ராத்திரியானா தூங்கப் போறதுக்கு முன்னாடி கொஞ்சம் நேரம் மகாபாரதம் படிக்கனும் இல்ல. அந்த மகாபாரதப் புத்தகத்தை கொண்டு வந்து படி.” என்றார்.

“சரிங்க பாட்டி” என்று அவள் சென்று மகாபாரதப் புத்தகத்தை எடுத்து வந்து பாட்டியின் காலடியில் அமர்ந்துக் கொண்டவள் நேற்று விட்ட தொடர்ச்சியைப் படித்தாள்.

சந்திராவின் கணீர் என்ற குரலும் கதையை நிறுத்தி உணர்ச்சி பூர்வமாகப் படித்த விதம் பாட்டிக்கு மகிழ்ச்சியைத் தர “அம்மாடி சந்திரா, நீ நல்லா கதை படிக்கிற.” என்று மனதாரப் பாராட்டினார்.

கமலம் அம்மாளுக்கு தன் அருகில் அமர்ந்து யாராவது தினமும் மகாபாரதம் படிக்க வேண்டும். வழக்கமாக திருமணத்திற்குபின் பெண்களை பள்ளிக்கு அனுப்பும் வழக்கம் அந்த கிராமத்திலும் அவர்கள் வீட்டிலும் இல்லை என்றாலும் படிப்பின் அருமையை உணர்ந்திருந்த கமலம் அம்மாள் தன் வீட்டுப் பெண்கள் படிக்க விரும்பினால், வீட்டிலிருந்தபடியே பள்ளி படிப்பை முடிக்க அனுமதி அளித்திருந்தார்.

சந்திராவின் அத்தை விசாலாட்சியும், சின்ன அத்தை சாந்தியும் கூட திருமணம் முடிந்தபின் பன்னிரென்டாம் வகுப்பு வரை முடித்திருந்தனர். சந்திராவும் பத்தாம் வகுப்பை மாவட்ட அளவில் முதலிடம் பெற்று முடித்துவிட்டாள். விசாலாட்சி அத்தைக்கு தன் மருமகள் மாவட்ட அளவில் முதலிடம் பெற்றதில் சந்தோஷம் என்றாலும் பாட்டிக்கு ஏற்பட்ட மனவருத்ததால் அவள் கல்வி ஒராண்டு தடைப் பெற்றது.

விசாலாட்சி அத்தை மற்றும் அவள் மாமா விசுவநாதன் முயற்சியாலும், கலெக்டருக்கு பயின்றுக் கொண்டிருந்த அவள் கணவன் விக்ரமின் பிடிவாதத்தாலும் ஒராண்டுக்குபின் அவள் கல்வியை தொடர அனுமதி கிடைத்தது. சந்திரா அதை பயன்படுத்தி தற்பொழுது பன்னிரென்டாம் வகுப்பு தேர்வை எழுதிவிட்டு தேர்வு முடிவுக்காக காத்துக் கொண்டிருக்கிறாள்.

சந்திரா கதை படித்து முடித்திருந்த வேளையில் வீட்டின் டெலி போன் மணி அடித்தது.

அரண்மனை போன்ற அந்த வீட்டில் மையத்தில் இருக்கும் அதன் மணி அடித்தால் வீட்டில் உள்ள பெரியவர்கள்தான் அதனை எடுத்துப் பேச வேண்டும் என்று கட்டளை உள்ளது. சிறியவர்கள் எடுக்கக் கூடாது அதை மீறி எடுத்துப் பேசினால் பாட்டி அவர்களை கடுமையாகத் திட்டுவார்கள். வீட்டின் ஆண்கள் இல்லாத நிலையில் பெரிய பெண்கள் எடுத்துப் பேசலாம். சிறு வயதினர் அவசியப்பட்டால் மட்டும் பேச வேண்டும். டெலி போனை பெரியவர்களே அனாவசியமாக பேசுவதும் அதிக நேரம் பேசுவதும் பாட்டிக்குப் பிடிக்காது. குறிப்பாக வீட்டுப் பெண்கள் என்றால் கேட்க வேண்டியதில்லை.

“என்னம்மா அப்படி இத்தனை மணி நேரம் என்ன பேச வேண்டிக் கிடக்குது. வீட்டில இருக்கிற வேலைய விட்டுட்டு இப்படி பேசிட்டிருந்தா வீடு விளங்குமா?” என்று கேட்டு விடுவார்.

சந்திரா வீட்டிற்குள் புதியதாக வந்த காலத்தில் அதைத் தொட்டு பாட்டியிடம் கடுமையான தண்டனைகளை வாங்கியுள்ளதால் இன்றும் அதைத் தொட அவளுக்கு பயம்தான். பாட்டி இல்லாத சில நாட்களில் அவள் அதை எடுத்துப் பேசியிருக்கிறாள். நல்ல வேளையாக அவள் மாமனார் விசுவநாதன் எடுத்துக் கொண்டார்.

“ஹலோ” என்றவரின் முகத்தில் புன்னகையும், சந்தோஷமும் தொற்றிக் கொண்டது.

“விக்ரம்! நீயாப்பா பேசுகிறது?” என்று கேட்டவர் சிரித்துக் கொண்டேப் பேசினார்.

“நல்லா இருக்கியாப்பா? உன் கலெக்டர் டிரெயினிங் எல்லாம் நல்லா போகுதா?” என்று நலம் விசாரித்தார்
 




sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
“அம்மா விக்ரம் டெல்லியிலிருந்து பேசுறான். நீங்க பேசறீங்களா?” என்று தன் தாயிடம் கேட்டார். விக்ரம் என்ற பெயரை கேட்டவுடன் சந்திரா மனதில் பட்டாம்பூச்சிகள் பறந்தன. அவள் மகிழ்ச்சியை அவள் முகத்தின் புன்னகையே பிரதிபலித்தது. அவள் மனதின் துள்ளலுக்கு காரணம் விக்ரம் அவள் கணவன் என்பதே காரணம்.

“விக்ரமா இரு நான் வர்றேன்” என்று சொன்னவர் சந்திராவை பார்த்து “சந்திரா நீ போயி உன் புருசன் விக்ரம் பேசறான்னு சொல்லி உன் அத்தைய கூட்டிட்டு வா” என்று கட்டளையிட்டார்,

“சரி பாட்டி” என்று சென்றவள் வேகமாக நடந்துச் சென்று வீட்டில் தன் அறையில் இருந்த அத்தையிடம் “அம்மா அவரு பேசறாரு. உங்கள பாட்டி கூப்பிட்டுட்டு வரச் சொன்னாங்க” என்று சொன்னவளின் முகத்தில் வெட்கம் படர்ந்திருந்தது.

“புருசன்னதும் வெட்கத்தப் பாரு” என்று கேலி செய்தவள் முன்னே செல்ல அவள் பின்னே சென்று சிறிது தூரம் தள்ளியே நின்றாள் சந்திரா. அத்தையும் சிரித்து பேசினாள். சிறிது நேரத்தில் சின்ன மாமா சிவநாதன், சின்ன அத்தை சாந்தியும் பேசி முடித்தனர். சந்திராவுக்கு தன்னை எப்பொழுது அழைப்பார்கள் என்ற ஆவல் தொற்றிக் கொண்டதால் காதுகளை தீட்டிக் காத்திருந்தாள். ஆனால் சரிப்பா என்று அவள் மாமா வைக்க அவள் முகம் வாடி விட்டது.

சரி மாமா என்ன பேசினாருன்னு நாளை அத்தைகிட்ட கேட்டு தெரிஞ்சுக்கலாம் அதோட என்ன ஏன் பேசக் கூப்பிடலைன்னு அத்தைகிட்ட சண்டையும் போடனுமுன்னு தன்னை சமாதானப் படுத்திக் கொண்டிடுந்த வேளையில் “சந்திரா கலெக்டர் டிரெயினிங்க உன் புருசன் முடிச்சிட்டு இந்த மாசம் ஊருக்கு வரானாம். சந்தோஷந்தானே?” என்றார் பாட்டி.

“சந்தோசம் பாட்டி” என்று தலையசத்தவள் அதற்கு மேல் கேட்க விரும்பாமல் அமைதியாக மகாபாரதப் புத்தகத்தை எடுத்துக் கொண்டு அங்கிருந்து அகன்றாள்.

விக்ரம் வருகிறானா? அவரைப் பார்த்து எவ்வளவு மாசங்கள் ஆச்சு? பாட்டி என்ன சொன்னாங்க? கலெக்டர் டிரெயினிங் முடிஞ்சிடுச்சா? அய்யா இனி அவர தினமும் பாக்கலாம் என்ற நினைப்பே அவளுக்கு தித்தித்தது.

அவளையும், குடும்பத்தையும், ஊரையும் விட்டு டெல்லிக்கு எஞ்சீனியரிங் படிக்கச் சென்று ஆறு வருடங்கள் மேல் ஆகிவிட்டன. முதலில் எஞ்சீனியரிங் படிக்கச் சென்றவன் அடுத்து ஐ.ஏ.எஸ் எனப்படும் இந்திய ஆட்சியியல் தேர்வுக்கு பயின்று தேர்ச்சிப் பெற்று தற்பொழுது அதற்கான பயிற்சியை முடிக்க உள்ளான். விடுமுறை நாட்களில் சில நாட்கள் அவன் வந்து தங்கிச் செல்வான். விக்ரம் வரும் நாட்களில் பெரும்பாலும் வெளியில் நண்பர்களுடன் சுற்றச் சென்று விடுவான். வீட்டில் இருக்கும் நேரத்தில் அவனுக்கு அருகில் யாராவது இருந்துக் கொண்டேதான் இருப்பார்கள். சந்திரா எவ்வளவு முயற்சி செய்தாலும் பேசுவது கடினம்தான். வீட்டில் யாரும் பார்க்காத வேளையில் தட்டுத் தடுமாறி ஒன்று இரண்டு வார்த்தைகள் பேசி விடுவாள்.

சந்திரா தன் அறைக்குச் சென்று கட்டிலில் படுத்துக் கொண்டவள் தூக்கம் வராததால் தன் பள்ளிப் பருவ கால நினைவுகளில் அவள் மூழ்கினாள். விக்ரம் சந்திராவை அவன் கல்யாணம் செய்துக் கொண்டதற்கும், கலெக்டருக்கு படிக்கச் சென்றதுக்கும் பள்ளியில் நண்பர்களின் இடையே நடந்த சண்டைதான் காரணமாக அமைந்தது.

ஆம். சந்திராவை விட ஐந்து ஆண்டுகள் பெரியவனான விக்ரமும் அவளும் ஒரே பள்ளியில் படித்து வந்தார்கள். பள்ளிக் காலத்திலேயே சந்திராவின் அமைதியான அழகு, அன்பான பேச்சு, அறிவால் அவனுக்கு அவள் மீது ஒரு மயக்கம் உண்டு. ஆனால் சிறு வயதிலிருந்தே எல்லாவற்றிலும் தானே முதல் பரிசு பெற்று விட வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன்.

பள்ளியில் ஆண்டு விழா போட்டிகள் தொடங்கின. சில வருடங்களாகவே எல்லா போட்டிகளிலும் விக்ரம் குமாரும் தான் முதல் பரிசுப் பெற்று வந்த நிலையில் இந்த முறை அவனுக்கு சமமாக அவனது வகுப்புத் தோழனுமான வினய் குமாரும் போட்டி போட்டான். விக்ரமுக்கு தனக்கு இந்த வருடம் முதல் பரிசு கிடைக்குமா? என்று முதல் முறையாக கவலை வந்தது. போட்டிகள் முடிவுகள் அறிவிக்கப் பட்டன.

ஆம். வினய் குமார் அவனை வென்று விட்டான். வினய் குமார் வென்றதாக அறிவித்ததும் பலத்த கைத் தட்டல்களுக்கு நடுவே அவள் மேடை ஏறி பரிசை பெற்றுக் கொண்டான். பள்ளி மாணவர்களிடமிருந்து இருந்து “வினய் வினய்” என்ற கோஷம் வந்தது. விக்ரமுக்கு அது அவமானமாக இருந்தது.

விக்ரம் எப்ப தோற்பான் என்று காத்திருந்த அவர் நண்பர்கள் விக்ரமின் கோபத்தை தூண்டும் விதமாக “என்னடா விக்ரம் இப்படி ஒரு போயும் போயும் அவங்கிட்ட தோத்து போயிட்டியே. நீ வருசா வருசம் வென்ற போட்டிகள்ள ஒன்னக் கூட விடாம அந்த வினய் ஜெயிச்சிட்டான்.
நீ தோத்தாங் கோலி ஆயிட்ட” என்று கிண்டல் செய்து, கை கொட்டிச் சிரித்து வெறுப்பேற்றினார்கள்.

வெற்றிக் கோப்பையுடன் வந்த வினய்குமார் அவனைப் பார்த்து கேலியாகச் சிரித்துக் கொண்டே “அவன் இந்த போட்டியில் மட்டுமில்ல. கல்யாணம் செய்யறதுலயேயும் தோற்கப் போறான். ஏன்னா எனக்கும் ஐந்தாவது படிக்கும் நந்தினிக்கும் அடுத்த மாசம் கல்யாணம். அவன முடிஞ்சா அதுக்கு முன்னாடி கல்யாணம் செய்ய சொல்லு” என்று நண்பர்கள் மத்தியில் சவால் விட்டான்

விக்ரமுக்கு தோல்வி தந்த வலியுடன் நண்பர்கள் பேச்சும் சேர்ந்துக் கொள்ள அவர்களிடம் “ஏய்! வினய் என் பாட்டிகிட்டச் சொல்லி உனக்கு முன்னாடியே அவ தோழி சந்திராவ கல்யாணம் பண்றேன் பாருங்கடா. என் பாட்டி யாருன்னு உங்களுக்கு எல்லாம் தெரியுமில்ல. பாட்டி எனக்காக என்ன வேண்டுமானாலும் செய்வாங்க தெரியுமில்ல.” என்று கறுவிச் சென்றான் விக்ரம்.

விக்ரமின் குடும்ப வழக்கப்படியும், சந்தோலா கிராம வழக்கப்படியும் அவர்களின் சிறு வயதிலேயே திருமணம் செய்து விடுவார்கள். விக்ரமுக்கு பதினைந்து வயதாகி விட்டதால் பெண் தேடிக் கொண்டிருப்பது அவனுக்கு தெரியும். பாட்டிக்கு அவனிடம் உள்ள செல்வாக்கை பயன்படுத்தி சந்திராவை பொண்டாட்டி ஆக்கி விட வேண்டும் என்று திட்டமிட்டான்.

அன்று மாலை வேளையில் பள்ளி முடிந்து வந்த விக்ரம் வழக்கமான உற்சாகமின்றி சோர்வாகக் காணப் பட்டான். வழக்கமாக கை நிறைய கோப்பை சான்றிதழ்களுடனும் வந்து பெருமையாகப் பேசும் விக்ரம் வெறுங்கையுடன் கவலையுடன் வந்து அறையில் அமர்ந்திருப்பதை பார்த்த பாட்டி “விக்ரம் கண்ணா! என்னாச்சுடா? ஏன் கவலையா இருக்கே? ஏன் இந்த வருசம் எந்த பரிசும் கொண்டு வரலை?” என்று அவன் அருகில் அமர்ந்து பாசத்துடன் கேட்டாள் கமலம் அம்மாள்.

“பாட்டி! அந்த வினய் எல்லா பரிசையும் வாங்கிட்டான். எனக்கு ஒரு பரிசையும் விட்டு வைக்காம எல்லாத்தையும் அவனே ஜெயிச்சிட்டான்” என்று அழுகையுடன் சொன்னான் விக்ரம்.

“அழாதேப்பா. அவன் இந்த தடவதான் ஜெயிச்சா. அடுத்த முறை நீ அவன தோக்கடிச்சு எல்லாத்தையும் நீயே ஜெயிச்சிடு” என்று சமாதானப் படுத்த முயன்றாள் பாட்டி.

“இல்ல பாட்டி என்ன தோக்கடிச்சது மட்டுமில்லாம எனக்கு இன்னொரு சவாலும் விட்டுட்டான்.” என்ற விக்ரம் தனக்கும் தன் நண்பனுக்கும் நடந்த சண்டையைப் பற்றியும், கல்யாணம் குறித்த சவாலையும் அழுதுக் கொண்டே சொன்னான்.

“பாட்டி நீங்க என்ன செய்வீங்கன்னு தெரியாது. அந்த ராணி கூட படிக்கும் சந்திராவ உடனே எனக்கு கல்யாணம் செஞ்சு வைச்சிடுங்க அதுக்கப்புறம் அந்த சந்திரா என் பொண்டாட்டி ஆயிட்டா நான் வினய சவால்ல ஜெயிச்சிடுவேன். செய்வீங்களா பாட்டி?” என்று பாட்டியின் மடியில் தலை வைத்து படுத்து குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தான் விக்ரம். கமலம் அம்மாள் பேரன் மீது இருந்த அளவு கடந்த பாசம் தன் பேரன் விரும்பிய சந்திராவையே அவன் ஆசைப்படியே மனைவியாக்கியது.

சந்திராவின் ஏழைப் பெற்றோர்கள் வேறு வழியின்றி அவளை திருமணம் செய்து தர சம்மதிக்க அடுத்த இரண்டே வாரங்களில் அவள் விக்ரம் மனைவியாக தன் தாய், தந்தை, தோழிகள், தான் வளர்ந்த வீடு, உறவினர்கள் எல்லவாற்றையும் பிரிந்து பெரிய இடத்து மருமகளாக பத்து வயதில் வந்து விட்டாள்.

விக்ரமின் எதிரியான வினய்க்கு தனக்கு முன்னரே விக்ரம் திருமணம் செய்துக் கொண்டதால் அவன் மீது கோபம் அதிகமாகியது. படிப்பிலும் சரி விளையாட்டிலும் மாறி மாறி வென்றனர்.

விக்ரம் எஞ்சீனியரிங் படிக்கச் சென்று விட்டான் ஆனால் வினய்குமாரால் அவ்வாறு செல்ல இயலவில்லை, வினய்குமாரை சந்திக்கும் பொழுதெல்லாம் விக்ரம் தான் எஞ்சீனியரிங் படிப்பதை பற்றி பேசியும் அவனால் இயலாததையும் பற்றி பேசி அவமானப்படுத்துவான் விக்ரம்.

ஒருநாள் விக்ரம் அவ்வாறு பேசும்பொழுது “நீ என்ன கலெக்டருக்கா படிக்கிற? நானும் டிகிரி படிக்கிறேன். நீயும் டிகிரி படிக்கிற. என்னா நான் பி.எஸ்.சி நீ பிஇ அவ்வளவுதான்” என்று ஆத்திரத்தில் கூறிவிட்டான் வினய்.

விக்ரம் அப்பொழுது அவனிடம் “ஏய்! நீ சொன்ன அந்த கலெக்டர் படிப்ப படிச்சி கலெக்டராகி காட்டறேன்” என்று சவால் விட்டான். வினயை இந்த சவாலிலும் வெல்ல வேண்டும் என்று வெறித்தனமாக படிச்சதன் விளைவாக அவன் நினைத்ததை அடைந்து விட்டான்

சந்திராவுக்கு தனக்கு கல்யாணமாகி எட்டு ஆண்டுகள் ஆகி விட்டது என்ற எண்ணமே மலைப்பை தர அவள் கண்களை தூக்கம் தழுவ உறங்கி விட்டாள்.

மறுநாள் காலை சந்திரா வழக்கம் போல் அத்தைக்கு சமையலில் உதவி செய்ய வந்தாள். விசாலாட்சி அத்தையை பார்த்தவள், அவளிடம் எதுவும் பேசாமல் வேலை செய்தாள். சந்திராவின் நடவடிக்கைகள் அவள் அத்தைக்கு ஆச்சரியமளித்தது.

சந்திராவின் அருகில் வந்த அவள் அத்தை “என் தங்கத்துக்கு இன்னிக்கு என்ன ஆச்சு?” என்றாள். சந்திரா தொடர்ந்து அமைதியாக இருந்தாள்.

அத்தை உடனே அவளை இழுத்து அணைத்தவள் “செல்லம்! அம்மா மேல என்ன கோபம்? காலையில குட்மார்னிங் சொல்லல. இப்ப பேச மாட்டிக்கிற? நீ சிரிக்கக் கூட மாட்டிக்கிற. என்ன கோபமுன்னு தெரிஞ்சா ஏதாவது செய்யலாம்?” என்றாள்.

“இப்ப மட்டும் செல்லம், தங்கமுன்னு கொஞ்சுங்கம்மா. நேத்து அவரு போன் செஞ்சப்ப நீங்க, மாமா, சின்ன மாமா, சின்ன அத்தை, பாட்டின்னு எல்லாம் பேசினிங்க. என்ன ஏன் கூப்பிடலை? நீங்க என்னக் கூப்பிட்டு பேச சொல்லுவீங்கன்னு எவ்வளவு ஆசையா இருந்தேன் தெரியுமா?” என்று உரிமையுடன் சண்டை போட்டாள் சந்திரா.

“ஓ! என் கண்ணம்மா கோபத்துக்கு இதுதான் காரணமா? சாரிடா செல்லம்! இந்த அத்தைய மன்னிச்சுகோடா. அடுத்தமுறை கண்டிப்பா உன்ன பேச வைக்கிறேன்” என்று கெஞ்சலாகப் பேசினாள் அத்தை.

“அம்மா... நீங்க போயி எங்கிட்ட மன்னிப்பு கேட்டுகிட்டு நான் சும்மா விளையாட்டுக்குதான் பேசினேன். உங்கள பத்தி எனக்கு தெரியாதா?” என்றாள் சந்திரா.
 




sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
“என் பொண்ணப் பத்தி எனக்கு தெரியாதா?” என்ற அத்தை “சந்திரா சொல்ல மறந்துட்டேன். அவனுக்கு கலெக்டருக்கான டிரெயினிங் முடியப் போகுதாம். அதனால அடுத்த வாரத்தில எப்ப வேணாலும் வந்திடுவானாம். அதுமட்டுமில்ல அவனுக்கு டெல்லில இல்லைன்னா இந்தியாவுல எங்க வேண்டுமானாலும் பதவி கிடைக்குமாம். அங்க உடனே போகனுமாம்.” என்று பெருமையாகச் சொன்னாள்.

“அப்ப அவரு உடனே நம்ம கிராமத்த விட்டு போயிடுவாரா அம்மா?” என்று வருத்தத்துடன் கேட்டவளின் முகம் வாடிப் போயிருப்பதை கவனித்த விசாலாட்சி “உடனே இல்ல அவங்க கூப்பிடற வரைக்கும் நம்ம கிராமத்தில கொஞ்சம் நாள் தங்குவானாம். அப்புறமாதான் கிளம்பி போவானாம்” என்று சமாளித்தாள் அத்தை.

“அம்மா! பெரிய மாமா, சின்ன மாமா மாதிரி இங்க இருந்து வேலை செய்ய முடியாதா? நம்ம ஊருலயே அவருக்கு வேலை போட மாட்டாங்களா?”

“அப்படி இல்லம்மா அரசாங்கம் எங்க வேலை கொடுக்குதோ அங்கதான் அவன் போக முடியும். இங்கயே போட்டா நல்லதுதான் ஆனா அது நம்ம கையில் இல்லையே” என்றாள்.

“அவருக்கு நம்ம ஊருலயே வேலை கிடைக்கனுமுன்னு நான் ஆண்டவன வேண்டிக்கிறேன். நீங்களும் வேண்டிக்கோங்க அம்மா” என்றாள் சந்திரா.

“சரி சரி நாம சாயங்காலம் அதச் செய்யலாம், இப்படியே பேசிக்கிட்டிருந்தா காலையில சமையல் வேலை அவ்வளவுதான். வா அதப் பாக்கலாம்” என்றாள் அத்தை.

“அம்மா! நான் இருக்க உங்களுக்கு என்ன கவலை? நீங்க என்ன செய்யனுமுன்னு சொல்லுங்க” என்றவளிடம் அத்தை அன்றைய சமையலை பற்றிச் சொல்ல அவள் பரபரப்பாக சமைக்க ஆரம்பித்து விட்டாள்.

சந்திராவின் சமையல் செய்யும் வேகத்தை பார்த்த அத்தை விசாலாட்சிக்கு ஆரம்ப பொழுதில் கைகளை சுட்டுக் கொண்ட இளம் சந்திரா நினைவுக்கு வந்தாள். ஆம். இதே சமையலறையில் அவள் சாதம் வடிப்பதற்குள் கைகளைப் புண்ணாக்கிக் கொண்ட அவளுக்கு மருந்து போட்ட காட்சிகள் மனதில் தோன்றி மறைந்தன.

“அம்மா! என்ன அப்படி அதிசயமாக என்னைப் பார்த்துக் கொண்டிருக்கீங்க?” என்றாள் குழம்பை கிண்டியபடி கேட்டாள் சந்திரா.

“ஒண்ணுமில்லம்மா. இதே அறையில் சோறு வடிக்கத் திணறின என் செல்லம் சந்திராவா இது? உன் வேகத்தப் பாத்தா என் கண்ணே பட்டுடும் போல” என்றாள் அத்தை.

“எல்லாம் உங்ககிட்ட இருந்து கத்துகிட்டதுதான் அம்மா. நான் செஞ்ச தப்ப எல்லாம் திருத்தி நீங்கதானே சரி செஞ்சீங்க, அது மட்டுமா நான் எது செஞ்சாலும் எப்படி செஞ்சாலும் இப்பவும் உங்களுக்கு அது ருசியாகத்தான் இருக்குதுன்னு நீங்க சொல்லுவீங்க” என்று சமைத்துக் கொண்டே சந்திரா சொன்னாலும் அதுதான் உண்மையும். சந்திரா என்ன செஞ்சாலும் அது விசாலாட்சிக்கு அமிழ்தம்தான் அதற்கு காரணம் அவள் மீதுள்ள பாசம்தான்.

“சமையல் முடிஞ்சிடுச்சு அம்மா. நீங்க என்ன சொன்னீங்க? உங்க கண்ணு பட்டுடுமா? படட்டும். என் அம்மா கண் பட்டா எனக்கு எதுவும் ஆகாது” என்று சொல்லிக் கொண்டே அவளை கட்டிக் கொண்டு மார்பில் சாய்ந்துக் கொண்டாள் சந்திரா.

அன்று மாலை சாந்தி அத்தை மகனான பத்து வயது ராகுல் வெளியில் சென்று கிரிக்கெட் விளையாடி விட்டு வீட்டுக்கு வந்தவன் வீட்டிற்குள் வந்ததும் தன் வீட்டிற்கு அருகிலிருந்த தோழி மாலதியிடம் தன் விளையாடியதைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தான். மாடியிலிருந்து அதைக் கவனித்த சந்திராவுக்கு விக்ரமின் பழைய நினைவுகள் தோன்றின.

சந்திரா திருமணமாகி வந்திருந்த சில மாதங்களில் ஒரு மாலைப் பொழுதில் சந்திரா வீட்டில் தன் அறையில் அமர்ந்துக் கொண்டு புத்தகங்களை புரட்டிக் கொண்டிருந்தாள்.

“சந்திரா! சந்திரா! நீ எங்க இருக்க?” என்று கத்திக் கொண்டே வந்தான் விக்ரம். அவள் தன் அறையில் கட்டிலுக்கு அருகில் கீழே தரையில் படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தவன் “நீ இங்க இருக்கீயா?” என்று கட்டிலில் அமர்ந்துக் கொண்டான்.

“சந்திரா! நான் இன்னிக்கு எப்படி விளையாடினேன் தெரியுமா? நான் எவ்வளவு ரன் அடிச்சேன் தெரியுமா? என் டீமே என்னாலதான் ஜெயிச்சது. எனக்கு எவ்வளவு சந்தோசமாக இருக்கு தெரியுமா?” என்று பேசிக் கொண்டே சென்றான் விக்ரம்,

“அப்படியா! எனக்கு தெரியும். நீங்க ஜெயிக்கலைன்னு யாரு ஜெயிப்பாங்க?” என்ற சந்திராவிடம் “உன் புருசன் அவ்வளவு கெட்டிக்காரன் தெரிஞ்சுக்கோ. சரி சரி எனக்கு தாகமா இருக்கு. நீ போயி பானையிலிருந்து சில்லுன்னு ஒரு சொம்பு தண்ணி எடுத்துட்டு வா” என்று அதிகாரமாகச் சொன்னான் விக்ரம்.

விக்ரம் என்ன சொன்னாலும் அதை உடனே செய்யனுமுன்னு அவளுக்கு அவள் அம்மா உட்பட எல்லாம் அறிவுரை சொல்லியிருந்ததால் அவள் சரி என்று சென்று எடுத்து வந்து தந்தாள்.

“சந்திரா! இதேமாதிரி நான் என்ன சொன்னாலும் நீ செய்யனும் ஏன்னா நான் உன் புருசன். நீ என் பொண்டாடி புரிஞ்சுதா?” என்று மிரட்டினான் விக்ரம்.

சரி என்று தலையசைக்க அவளை ஏதாவது செய்ய வேண்டுமென்று நினைத்தவன் “சந்திரா என் கை கால் எல்லாம் வலிக்குது புடிச்சு விடு” என்று உத்தரவிட்டான் விக்ரம்.

சந்திராவும் அவன் கைகளை பிடிக்க வர அவள் பிஞ்சு விரல்கள் பட்டதும் அவன் உடனே வெடுக்கென்று கையை எடுத்துக் கொண்டவனாய் “சரி சரி நீ படிச்சிட்டிருந்த இல்ல நீ படி சந்திரா. நானும் ஹோம்வோர்க் செய்யனும். என் பேக எடுத்துட்டு வா” என்று சொன்னதும் சந்திரா எடுத்து தர அவன் படிக்க ஆரம்பித்து விட்டான்.

சந்திராவின் கணவன் விக்ரமுக்கு அவளை தன் பொண்டாடி என்று அதிகாரம் செய்யவும், மிரட்டவும், வேலை வாங்கவும் பிடிக்கும் என்பதால் செய்வானே தவிர அவனை துன்புறுத்த மாட்டாள் ஏனென்றால் அவன் மனம் கவர்ந்த பெண் அவள்.

சந்திராவுக்கே தான் ஏன் விக்ரமை பற்றி எப்பொழுதும் நினைத்துக் கொண்டிருக்கிறேன் என்று ஆச்சரியமாக இருந்தது ஆனால அவன் வருகையை அவள் எதிர்பார்த்து ஓவ்வொரு நாளும் காத்திருந்தாள்.

அன்று மாலை சந்திராவும், அவள் அத்தையும் அமர்ந்துக் கொண்டு சாமிக்கும் தங்களுக்குமாக பூக்களைக் கட்டிக் கொண்டிருந்தார்கள்.

“அம்மா! அவரு வர்றதா போன வாரம் போன் செஞ்சாரில்ல. ஏன் இன்னும் வரல? அதுக்கப்புறம் ஒரு போன் கூட இல்ல” என்று கேட்டாள் சந்திரா.

“இங்க பாருடா என் செல்லத்துக்கு அவ புருசனப் பாக்க எவ்வளவு ஆர்வம்? நான் வேணா போன் பன்னி உன் பொண்டாட்டி உன்ன பாக்கனுமிங்கறா உடனே கிள்ம்பி வாடான்னு சொல்லட்டுமா?” என்று கிண்டல் செய்ய “போங்க அம்மா” என்று வெட்கத்தில் சிணுங்கினாள்.

“அவனுக்கு டிரெயினிங் முடியனும் அதுக்கப்புறம் அவன் போக அவங்க அனுமதி தரனும் அப்புறம்தானே அவன் வர முடியும்” என்ற அத்தையின் வார்த்தைக்கு வழக்கம் போல் தலையசைத்தாள் சந்திரா.

மாமியாரும் மருமகளும் பேசிக் கொண்டே பூவைக் கட்டி முடிக்க விசாலாட்சி “சரி சரி இந்த பூவ சாமிக்குப் போட்டிடலாம். இத எனக்கும், உன் சின்ன அத்தைக்கும் வைச்சிக்கலாம். இது உனக்கு” என்று பங்கு பிரித்தவள் “சந்திரா நீ திரும்பு நான் உன் தலையில் வைச்சி விடறேன்” என சந்திரா திரும்பிக் கொள்ள மருமகளுக்கு பூவை அழகாக வைத்து விட்டாள். மாலை வேலைகளில் தினமும் தன் மருமகளுக்கு அழகா பூ வைத்து விடுவது அவள் வழக்கம்.

“ம் உன் புருசன் வந்தப் பின்னாடி நானா உனக்கு பூ வைச்சு விட முடியும்” என்று கிண்டலாக கேட்டு அவளையேப் பார்க்க “ஏன் வைச்சா என்னவாம்? என்று புரியாமல் கேட்டாள் சந்திரா

“ஏய்! அதுக்கப்புறம் உனக்கு அவன்தான்டி பூ வைச்சி விடனும்” என்ற அத்தையிடம் “அம்மா அதெல்லாம் முடியாது. நான் எப்பவும் உங்க கையாலதான் பூ வைச்சுக்குவேன்” என்று அவசரமாகச் சொன்னாள் சந்திரா,

“சரி அதையும் நான் பாக்கத்தானே போறேன்” என்ற நேரத்தில் டெலிபோன் மணி அடித்த்து.

“அம்மா போன் அடிக்குது” என்ற சந்திரா என்று அத்தையிடம் சொல்ல “நீ போயி போன எடுத்து யாருன்னு கேள்” என்றாள் அத்தை.

“அம்மா நான் எப்படி?” என்று தயங்கியபடி சொன்ன சந்திராவிடம் “வீட்டில யாருமில்ல. பாட்டி கூட வெளியில போயிருக்காங்க. போன் ரொம்ப நேரமா அடிக்குது, ஏதாவது முக்கிய சேதியா இருக்கலாம் அதனால நீ விரைவா போயி யாரு என்னன்னு கேளு. நான் இந்த பூவ பத்திரமா எடுத்து வைச்சிட்டு பின்னாடியே வர்றேன்” என்றவுடன் சரி என்று தலையசைத்து வேகமாகச் சென்று போனை எடுத்து “ஹலோ நான் சந்திரா பேசறேன். நீங்க?” என்றாள்.

“நான் விக்ரம் பேசறேன்.” என்ற வார்த்தைகளை அவன் உதிர்த்தவுடன் அவள் காதுகளில் அது தேனாக பாய அவள் எதுவும் பேச இயலாமல் சிலையாகி விட்டாள்
 




Rani

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
234
Reaction score
661
Nice start......60’s கதைகளை ஞாபகப்படுத்தும் கதை ஓட்டம் ...வாழ்த்துக்கள் சக்தி....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top