Chocolate boy - 14

#1
சாக்லேட் பாய் – 14

மனமும் உடலும் சோர்ந்தவளாய் வீடு வந்து சேர்ந்தாள் தர்ஷினி. அவர்கள் பழகியது குறுகிய காலமாக இருந்தாலும் அதற்கு முன்னரே ஒருவரை ஒருவர் காதலித்தவர்கள் தான் . ஹர்ஷாவால் தன்னை வெறுக்க முடியாது என தோன்றியது அவளுக்கு. அதிலும் அந்த ரிங்டோன் கேட்ட பிறகு மனதின் ஒரு ஓரத்தில் நம்பிக்கை இன்னும் கொஞ்சம் மிச்சமருந்தது. வீட்டின் அழைப்பு மணியை அழுத்தி விட்டு காத்திருந்தாள் தர்ஷினி. சிறிது நேரம் கழித்து அவளது தாயார் மல்லிகா வந்து திறந்தார்.

“ ம்மா.. செம டயர்ட்மா இன்னைக்கு .... ஸ்ட்ராங்கா ஒரு இஞ்சி டீ தாங்க” என்றபடி வந்தவள் உள்ளே புதிதாக ஒரு ஆணும் பெண்ணும் இருந்ததை கண்டாள்.சற்று வயதானவர்கள் தான்...

மரியாதை நிமித்தமாக புன்னகையோடு “வாங்க” என வரவேற்றாள் தர்ஷினி.
“யாருமா இவங்க?” என தன் தாயிடம் கேட்பதற்குள்,” வாம்மா தர்ஷினி.... இப்போ தான் ஆபிஸிலிருந்து வர்றீயா?” என்றார் அந்த பெண்மணி.

“ஆமா...” என புன்சிரிப்போடு கூறியவள் தன் தந்தை சந்திரசேகர் அருகில் சென்று நின்றாள். மேலும் அவர்கள் தர்ஷினியை சில கேள்விகள் கேட்க, தர்ஷினியும் பதலிளித்துக் கொண்டிருந்தாள். என்ன தான் அவர்கள் இயல்பாக பேசினாலும் அவர்களின் கண்களில் ஒரு வித ஆராய்ச்சி பார்வை தென்பட, தர்ஷினிக்கு உள்ளுக்குள் மணியடித்தது. நாசூக்காக நழுவி உள்ளே வந்துவிட்டாள்.

சமையலறையில் மல்லிகா டீ போட்டு கொண்டிருந்தார். வந்திருப்பவர்களை பற்றி ஏதேனும் விவரம் கேட்கலாம் என தாயின் முகத்தை கண்டவள் துணுக்குற்றாள். மல்லிகாவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தது.

“ அய்யோ... அம்மா ஏன் இவ்ளோ டெரர்ரா இருக்காங்க” என எண்ணியவள் தாயின் முகத்தையே பார்த்து கொண்டிருக்க

“என்னை எதுக்குடி அப்படி பார்க்குற? என் முகத்துல இளிச்சவாய் னு ஏதும் எழுதியிருக்கா?” சிடுசிடுத்தார் மல்லிகா.

“ ஏன்மா இப்படி கோவப்படுறீங்க?” தர்ஷினி புரியாமல் கேட்க

“ பின்னே... நீ பண்ண வேலைக்கு உன்னை மடியில தூக்கி வைச்சி கொஞ்சுவாங்களா? எங்க நம்பிக்கைய மொத்தமா கொன்னுட்டியேடி பாவி.... நீ இப்படி காதல் கீதல் னு வழி மாறி போவேன்னு நாங்க கொஞ்சமும் நினைக்கலயே.... நீ ராத்திரி முழுக்க போனும் கையுமா இருக்கும் போதே மனசுக்கு ஏதோ நெருடலா இருந்துச்சி. “ மல்லிகா பொரிந்து கொண்டிருக்க, தர்ஷினிக்கோ உடல் நடுங்க தொடங்கியது.

“ நம்ம லவ் மேட்டர் எப்படி வீட்ல தெரிஞ்சது? கடவுளே இப்போ தான் நான் ரொம்ப தைரியமா இருக்கணும். எப்படி சமாளிக்க போறேன்னு தெரியலயே.... அம்மாவே இந்த காய் காய்றாங்க அப்போ அப்பா என்ன சொல்வாங்களோ” மனசுக்குள் பயஉணர்வு கண்டபடி பரவிக் கொண்டிருக்க

“இந்தா தள்ளி நில்லு. முதல்ல அவங்க கிளம்பட்டும் அப்புறம் இருக்கு உனக்கு” என சீறியவர் கோப்பைகள் அடுக்கிய தட்டை எடுத்து கொண்டு ஹாலிற்கு விரைந்தார். என்றைக்காக இருந்தாலும் அவள் எதிர்கொள்ள வேண்டிய சூழல் தான். ஆனால் அவள் இப்போது இருக்கும் மனநிலையில் இதை சமாளிக்கும் தெம்பு அவளிடம் இருக்குமா என தெரியவில்லை. ஆழ்ந்த பெருமூச்சு ஒன்றை விடுத்தவள் ஹாலில் கேட்ட பேச்சை கவனித்தாள்.

“ எங்களுக்கு தர்ஷினியை ரொம்ப புடிச்சிருக்கு. தரகர் கிட்ட ஜாதகம் வாங்கி பொருத்தம் கூட பார்த்துட்டோம். அமோகமா பொருந்தியிருக்கு. இனிமே நீங்க தான் சொல்லணும். யோசிங்க.... எங்கள பத்தி, எங்க குடும்பத்தை பத்தி விசாரிச்சி பாருங்க. உங்களுக்கு சம்மதம் னா நாங்க பையனோட முறையா பொண்ணு பார்க்க வர்றோம்” வந்திருந்த ஆண் பேசிக் கொண்டிருக்க திகைத்து போனாள் தர்ஷினி.

“இது என்ன புது பிரச்சனை? ஓ.... நம்ம காதல் விஷயம் தெரிந்ததுனால அப்பா நமக்கு அவசர அவசரமா மாப்பிள்ளை பார்க்கிறார் போலயே”என எண்ணிய நொடி நிலைமை பூதாகரமாக அவள் முன் தோன்றியது.


“ வீட்ல கலந்துகிட்டு சீக்கிரமே சொல்றேன். “ என அவர்கள் செல்லும் வரை இன்முகமாக பேசினார் சந்திரசேகர்.

அவர்கள் செல்லும் வரை பொறுத்திருந்தவர், ” தர்ஷினி” என உரக்க அழைத்தார். சமையலறையில் அன்னையிடம் வசவு வாங்கி கொண்டிருந்தவள் தந்தையின் அழைப்பில் திடுக்கிட்டாள். அவள் மெதுவாக ஹாலிற்கு வர அவளோடு மல்லிகாவும் வந்தார். தர்ஷினியின் பெற்றோர் கண்டிப்பானவர்கள். கொஞ்சம் பழைய கால ஆட்கள். அவர்கள் காலத்தில் ஒழுக்ககேடாக அறியபட்ட காதல் தற்போது அவரவர் பிறப்புரிமையாக கருதபட்டாலும் இன்னும் அவர்களின் எண்ணவோட்டம் மாறவில்லை. அது தர்ஷினிக்குமே தெரியும். அதனால் தான் தன் தந்தையிடம் காதல் வசனமெல்லாம் எடுபடாது என கருதி ஹர்ஷாவை பற்றி அதிகமாக தெரிந்து வைத்து கொண்டாள். நிச்சயம் தந்தை தன் விருப்பத்தை மறுப்பார் என அவளுக்கு தெரியும். ஆனால் அவர் ஹர்ஷாவை சந்தித்தால் அவரது மனம் சற்று மாறலாம் என நம்பினாள். ஹர்ஷாவின் தோற்றமும், தோழமையான அவனது அணுகுமுறையும், மரியாதையான பேச்சும் கண்டிப்பாக தந்தையின் மனதை அசைக்கும் என நினைத்திருந்தாள் அதை ஹர்ஷாவிடமும் ஒரு முறை கூறியிருக்கிறாள். ஆனால் இப்போது ஹர்ஷா அதை செய்வானா? Lets break up.... lets break up என அவன் கூறியதே செவிகளில் ஒலித்துக் கொண்டிந்தாலும் கூடவே அவன் பேசியில் ஒலித்த ரின்டோனும் சேர்ந்து ஒலிக்க நிச்சயம் அவன் விஷயம் தெரிந்தால் தான் எதிர்பார்த்ததை செய்வான் என நம்பிக்கை கொண்டாள்.

தன் முன்னே அமைதியாக தலைகுனிந்து வந்து நிற்கும் மகளை கூர்ந்து பார்த்தார் சந்திரசேகர்.

“ என்ன தர்ஷினி! நாலு எழுத்து படிச்சிட்டு கொஞ்சம் சம்பாதிக்க ஆரம்பிச்சதும் உலகமே உன் கையில வந்துட்டதா நெனப்பா?” என்றார் கோபம் அடக்கிய குரலில்.

“ இல்லப்பா...” என தலையசைக்க, “ எத்தனை நாளா உனக்கும் அவனுக்கும் பழக்கம்? ம்...?” என அதட்டினார்.

“ ஒ...ஒரு மாசாமாப்பா.... அவரு....”தர்ஷினி கூடுதலாக ஒரு வார்த்தை கூட பேசவிடவில்லை அவர்.

“ அப்போ பார்க், பீச், தியேட்டர் எல்லாம் சுற்றி முடிச்சாச்சா?”

தந்தையின் ஏளனத் தொனியில் விலுக்கென நிமிர்ந்தவள்,” அந்த மாதிரி நாங்க எங்கயும் போனதில்லைபா” என்றாள் முகம் சிவக்க.

“ ஒரு இடத்திற்கு கூடவா போனதில்ல?” அவர் நம்பாமல் கேட்க.

“ அ...அவர் வீட்...வீட்டிற்கு இரண்டு முறை போயிருக்கேன் பா” என்றாள் தலை கவிழ்ந்து.

“ என்னது அவன் வீட்டுக்கு போயிருக்கீயா? அவ்ளோ தைரியமாடி உனக்கு?” மல்லிகா கோபத்தில் கத்த,

“ பொறு... பொறு மல்லி... நான் தான் விசாரிச்சிட்டு இருக்கேன்ல” என மனைவியை அடக்கி விட்டு,

“ அவங்க வீட்ல என்ன சொன்னாங்க?” என கேட்டார்.

“ அங்....அங்க யாருமில்லபா. அவர் சென்னைல த...தனியா தான் ப்ளாட் எடுத்து தங்கியிருக்காரு அவரோட குடும்பம் திருச்சில இருக்காங்க.” அவள் சொல்லி முடிக்கும் முன்பே மல்லிகா வின் கரம் அவள் கன்னத்தை பதம் பார்த்தது.

“ வெட்கமாயில்ல உனக்கு? அவன் கூட தனியா அவன் வீட்டுக்கு போக எங்கிருந்து உனக்கு தைரியம் வந்தது? காலம் கெட்டு கிடக்குதே னு நாங்க தினமும் வயித்துல நெருப்பை கட்டிட்டு இருக்கோம் நீ அவன் கூட தனியா போய் கூத்தடிச்சிட்டு வர்றீயா?” அன்னை அடித்ததை விட அவள் வார்த்தைகள் மிகவும் வலித்தது அவளுக்கு.

“ அம்மா.... நீ நினைக்குற மாதிரி இல்லமா. ஹர்ஷா உண்மையில ரொம்ப கண்ணியமாவர் மா. “ அவள் விளக்க தொடங்க

“ தர்ஷினி!இந்த கால புள்ளைங்க உங்களுக்கு இது தான் நாகரிகமா தெரியுது.ஆனா நீ சொல்றதை எல்லாம் ஏத்துக்குற அளவுக்கு நாங்க இன்னும் நாகரிகமாகல. இந்த காதல் கத்திரிக்காய் எல்லாம் நம்ம குடும்பத்திற்கு ஒத்து வராது. எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு பழைய தர்ஷினியா இரு” என்றவர் வெளியே கிளம்பி சென்றுவிட்டார். அவருக்கு மகள் காதலிக்கிறாள் என்பதே பெரும் அவமானமாக, கோபம் மூட்ட கூடிய விஷயமாக இருந்தது. அதை தாண்டி மகளின் விருப்பம், ஹர்ஷா பற்றியெல்லாம் அவர் யோசிக்கவேயில்லை.

நிச்சயம் தன் முதல் முயற்சியிலேயே தனது தந்தை ஒத்துக்கொள்வார் என தர்ஷினி எதிர்பார்க்கவில்லை. மெல்ல மெல்ல தான் கரைக்க வேண்டும். முதலில் இந்த விஷயத்தை ஹர்ஷாவிடம் கூற வேண்டும் என எண்ணியவள் தன் அலைபேசியை தேடி போனாள்.

தொடரும்.....

தங்கள் ஆதரவை எதிர்நோக்கும்

பர்வீன்.மை FB_IMG_1545312707044.jpg
 

Advertisements

Latest updates

Top