• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Kanne Unthan Kai Valaiyaay.....Episode 21.

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
அத்தியாயம் 21.

யாரோ கிணற்றில் குதித்துத் தன்னைத் தூக்கியது லேசாக நினைவு இருந்தது அனிதாவுக்கு. அதைச் செய்தது மாமன் மகனா? அவனுக்கு என் மேல் அப்படி என்ன அக்கறை? அம்மா அவனை நம்புகிறாள். ஆனால் ஆனந்தன் விஷயத்தில் அவள் கணிப்புத் தவறாகப் போய் விட்டது. ஆனால் கதிரவன் எங்கே? அவனுக்கு நடந்தது எல்லாம் தெரியுமா? ஹூம்! தெரிந்து என்ன ஆகப்போகிறது? என ஏதேதோ யோசித்து மனதைப் புண்ணாக்கிக்கொண்டிருந்தாள் அனிதா. அவள் கண்களில் இருந்து தானாக கண்ணீர் வழிந்தது.

"இனி நீ அழவே கூடாது கண்ணம்மா! உன் வாழ்க்கையில இனி தான் வசந்தம் மலரப் போகுது. கடந்த ஆறு மாசம் நடந்ததை எல்லாம் கெட்ட கனவா நெனச்சு மறந்துரு. உனக்கு ஒரு புது வாழ்க்கை நான் அமைச்சுத்தரேன்" என்ற அன்னையை புதிராக நோக்கினாள்.

"ஆமா அனிக்கண்ணு! உன் மாமன் மகன் உன்னை கல்யாணம் செஞ்சுக்க துடிக்கிறான். நீ என்ன சொல்ற?" என்றாள். கண்களை மூடினாள் அனிதா. அவள் கண்ணுக்குள் ஏனோ கதிரவனின் முகம் வந்து போனது.

"கல்யாணமா? எனக்கா?"

"ஆமா! அனிக்கண்ணு! அந்த ஆனந்தன் இப்ப கிரிமினல்.அதனால உன்னை சட்டமே அவன் பிடியில இருந்து விடுவிச்சிருருச்சு. உமா மேடம் ஃபோன் பண்ணி சொல்லிட்டாங்க. அவங்க தான் உனக்காக வாதாடுனாங்க. இப்ப நீ ஒரு சுதந்திரப் பறவை. மணக்கத்தடையில்லை" என்றாள்.

ஆனந்தனிடமிருந்து விடுதலை என்றதும் மனதில் நிம்மதி பெருகியது .நெடு நாட்ககாக நெஞ்சை குத்திக்கொண்டிருந்த விஷ முள் அகன்றது போலத் தோன்ற கண்களை மூடினாள். கண்கள் தன்னிச்சையாக கண்ணீரைப் பொழிந்து கொண்டே இருந்தன. அவை நிம்மதி பெற்றதன் அறிகுறி என்பதால் சரசம்மாள் பேசாமல் மகளின் தலையைத் தடவியபடி அமர்ந்திருந்தாள்.

"கண்ணு! நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லையேடா?"

"அம்மா! நான் உன்னோடவே இருக்கேன்! என்னை மறுபடியும் தள்ளாதே"

"இல்லை கண்ணம்மா! இப்பத்தான் நான் தெளிவா முடிவெடுத்திருக்கேன். உனக்கு என் மேல நம்பிக்கை இன்னும் போகலியயே? சொல்லு அனிக்கண்ணு?"

தாயின் மேலா? நம்பிக்கை போவதா? அதுவும் அனிதாவுக்கா? " என்னம்மா இப்படிக் கேக்குற?"

"அப்ப நான் சொல்றதுக்கு சம்மதம் சொல்லு! இன்னும் ஒரு வாரத்துல கல்யாணம் ஏற்பாடு செஞ்சிருக்கேன். வலுவான கைகள்ல உன்னை ஒப்படைச்சுட்டு நான் நிம்மதியா இருக்கப் போறேன். " என்றாள்.

"அம்மா! நான் வந்து.."

"ஏற்கனவே கல்யாணமானதால மறுமணம் கூடாதுன்னு நினைக்குற பத்தாம்பசலியா நீ? சொல்லும்மா! "

"அப்படி இல்லம்மா! ஆனா..."

"ஆனாவும் இல்ல ஆவன்னாவும் இல்ல. உன் மாமன் மகன் ரொம்ப நல்லவன். உன்னை ரொம்ப நேசிக்கிறான். முதல்லயே தெரிஞ்சிருந்தா அவனுக்கே உன்னை கல்யாணம் செஞ்சு வெச்சிருக்கலாம். ஆனா தெரியாம போயிட்டது. சரி எல்லாத்துக்கும் காலம் நேரம் கூடி வரணும் இல்ல?"

"அம்மா அவருக்கு... என்னைப்பத்தி....." வார்த்தைகள் துண்டு துண்டாக வந்தன. "எல்லாம் தெரியும். இப்ப எதுவும் யோசிக்காதே! நல்லபடியா வீட்டுக்கு வா. அப்புறம் பேசலாம்" என்று பேச்சைக் கத்தரித்தாள்.

மீண்டும் அனிதா கண் விழித்த போது முரட்டு மீசை ஆட்கள் இருவரும் அவள் கட்டிலின் அருகில் நின்றிருக்க பீதியில் உடல் தூக்கிப் போட நடுங்கினாள் அனிதா.அந்த முரட்டு மீசை அடியாட்களைக் கண்டதும் அனிதா தன்னையறியாமல் கத்தியிருக்க வேண்டும். அம்மாவின் கூடவே சில நர்ஸ்களும் ஓடி வந்தனர். அவர்களைக் கை காட்டி ஏதோ சொல்ல முயன்றாள் அனிதா. ஆனால் நாவு ஒத்துழைக்கவில்லை. அம்மாவின் முகத்தில் தெரிந்த புன்னகையைக் கண்டு அசந்தே போனாள் மகள். அதற்குள் ஒரு முரட்டு மீசை இவளைப் பார்த்து சினேகமாகப் புன்னகைக்கவும் திணறிப்போனாள்.

"என்னைத் தெரியலியா மேடம்? நான் மாடசாமி. நம்ம கம்பெனியில சரக்கு ஏத்துற டிப்பார்ட்மெண்டுல வேலை செய்யுறேனே?" என்றான். அப்போது தான் சட்டென உரைத்தது அனிதாவுக்கு. அப்படியானால் அன்றைக்கு பேருந்தில் தன்னை தொடர்ந்தது, வீட்டை நோட்டம் விட்டது இவர்கள் தானா?ஏன் செய்தார்கள்? என்னைப் பாதுக்காக்கவா? அப்படியானால் இவர்களை ஜெயந்தி மேடம் தான் ஏற்பாடு செய்திருக்க வேண்டும். ஆனால் அம்மா அதைப் பற்றி ஒன்றும் சொல்லவில்லையே?" என்று யோசித்தாள்.

மகளின் திருதிருத்த முகம் சிரிப்பைத்தர சிரித்தாள் அன்னை.

"மாடசாமி! என் மகளுக்கு ஒண்ணுமே புரியல்ல! அதான் முழிக்குறா. தலையில அடிபட்டிருக்கு இல்ல?" என்றாள். மூவரும் சேர்ந்து சிரிக்கவும் பே என விழித்தாள் அனிதா.

"மேடம்! நீங்க பெரிய ஆபத்துல இருந்து தப்பிட்டீங்க! இனிமே உங்களுக்கு எதுவும் ஆகாது. இந்தாங்க கருப்ப சாமி துண்ணூறு. பூசிக்குங்க. அவரு தான் உங்களைக் காப்பாத்தினாரு." என்றான் மாடசாமி. அருகில் இருந்தவனை இப்போது அடையாளம் தெரிந்தது. அவன் முத்து. எப்படி இவர்களை மறந்தாள்? முத்து முன்னால் வந்தாள்.

"மேடம்! எங்க தோப்புல இருந்து எளனி வெட்டிக்கொண்டு வந்தேன். சாப்பிடுங்க. உடம்பை நல்லா பார்த்துக்குங்க. இனி தான் உங்களுக்கு சந்தோஷமே இருக்கு" என்றான் வெகுளியான குரலில். அவனது பேச்சு மனதைத் தொட இவர்களைக் கண்டா நாம் பயந்தோம் என மனது கேட்டது. ஆனால் இன்னமும் பல கேள்விகளுக்கு விடையே இல்லையே? என தாயை ஏறிட்டாள். புரிந்து கொண்ட ஆண்கள் இருவரும் மேலும் சிறிது நேரம் நலம் விசாரித்து விட்டுக் கிளம்பினார்கள்.

"அம்மா! இவங்களை உனக்கு முன்னமே தெரிஞ்சிருக்கு. எங்கிட்ட நீ எதையோ மறைக்கிறன்னு நினைக்கறேன். இவங்களை ஏற்பாடு செஞ்சது யாரு? ஜெயந்தி மேடம் தானே?"

"ஆமாம் கண்ணு! ஆனா ஜெயந்தி மேடம் மட்டும் இதைச் செய்யல்ல அவங்க கணவரும் சேர்ந்து தான் செஞ்சாங்க. இதோ அவங்களே வந்துட்டாங்களே" என்றாள் அம்மா. விழியை பெரிதாக வட்டமாக்கினாள் அனிதா. காரணம் ஜெயந்தி மேடத்தோடு வந்தது அவள் கம்பெனி எம் டி அல்லவா?

"மேடம் இவங்க...இவங்க.."

"என்ன அப்படிப் பார்க்குற அனிதா? இவரு தான் என் கணவர். மிஸ்டர் செந்தில். நம்ம கம்பெனியோட சேர்மேன்." என்றாள் சிரித்தபடி.

"மேடம் எத்தனை நாள் பழகினோம்? ஒரு நாள் கூட நீங்க கம்பெனி ஓனர்னு சொல்லவே இல்லையே?" என்றாள் ஆச்சரியமாக.

"சொல்ல வேண்டிய அவசியம் ஏற்படல்ல அனிதா. அவ்வளவு தான். மத்தபடி சொல்லக் கூடாதுன்னு ஒண்ணும் இல்ல. நீ கல்யாணத்துக்கு சம்மதிச்சிட்டதா உங்கம்மா சொன்னாங்க. ரொம்ப சந்தோஷம் அனிதா. அதுவும் நீ ..." அவள் ஏதோ பேசப் பேச அம்மா இடை மறித்தாள்.

"இவங்க ஆளுங்க தகவல் குடுக்கலைன்னா நம்ம கதி அதோ கதி தான் அனி" என்றாள் அம்மா பரபரப்பாக. ஏதோ புரிந்து கொண்டவள் போல சிரித்தாள் ஜெயந்தி.

"எல்லாம் கடவுள் செயல்." என்று முடித்துக்கொண்டாள் சுருக்கமாக.

"இனிமே நம்ம கம்பெனிக்கு வேலைக்கு வர மாட்டே! எங்களுக்குத்தான் ஒரு நல்ல ஊழியரை இழந்த வருத்தம்" என்றார் செந்தில். விழித்தாள் அனிதா.

"ஏன் வேலைக்கு வர மாட்டாள்? இவர்களாகவே முடிவெடுத்து விட்டார்களே? ஒரு வேளை தன் வேலை பிடிக்காமல் இதையே சாக்கு என வைத்து வெளியில் துரத்துகிறார்களோ? என்ன ஆயிற்று இன்று? " என யோசித்தாள்.

""ஐயையோ! மறுபடியும் கண்ணை விரிச்சு பார்க்க ஆரம்பிச்சுட்டா. உன்னை வேலையில் இரு ந்து துரத்தல்லை அனிதா. நீ திறமையான பெண். உன்னை இழக்க எங்களுக்கு மனம் வருமா? ஆனா சூழ்நிலை அப்படி இருக்கு." என்று சொல்லி வேறு எதுவும் விளக்கமும் கொடுக்காமல் விடை பெற்றுப் புறப்பட்டார்கள். அம்மாவுக்கும் அவர்களுக்கும் இடையே ஏதோ ரகசியம் இருக்கிறதோ என ஐயுற வைத்தது இருவரிடமும் கண் பர்வை பரிவர்த்தனை. அம்மா என்னிடம் என்ன மறைக்கிறாள்? என யோசித்தாள். தலை வலித்தது. எனது இந்த நிலை கதிரவனுக்குத் தெரியுமா? தெரிந்திருக்காது. அப்படி இருந்தால் அவன் கட்டாயம் என்னை வந்து பார்த்திருப்பான். நான் நினைவில்லாமல் கிடந்த போது ஒரு வேளை வந்தானோ? எங்கோ எப்போது மயக்கத்தில் அவன் குரலும் கேட்டதாக நினைவு இருக்கிறதே?

"என்ன யோசிக்குற அனிம்மா?"

"அம்மா நீ சொன்ன மாமன் மகன் என்னை வந்து பார்க்கவே இல்லையே?"

பதிலுக்குத் திணறினாள் அம்மா. "இல்லம்மா வந்து...உன்னோட விவாகரத்து விஷயமா அங்க இங்கேன்னு அலைஞ்சான் இல்ல? அதான் ஓய்வு எடுத்துக்கறான். அவனைப் பார்க்காமல் இருக்க முடியலியா? இன்னும் ஒரு வாரம் தானே?" என்றாள் அம்மா பரிகாசமாக. அம்மாவை அப்படி உற்சாகமாகப் பார்க்க பரவசமாக இருந்தாலும் மனதின் ஓரத்தில் ஏதோ நிரடியது.

"அம்மா! நான் மயக்கமா இருந்தப்ப என்னைப் பார்க்க யார் யார் வந்தாங்க?" அம்மாவின் கண்களில் குறும்பு தெரிந்ததோ? என ஒரு கணம் ஐயுற்றாள்.

"ஜெயந்தி மேடம், அவங்க வீட்டுக்காரர், அப்புறம் அந்த மாடசாமியும், முத்து அவ்ள தான். என் ஸ்கூல் டீச்சருங்க சில பேரு. அவ்ள தான். ஏன்? யாரையாவது எதிர்பார்க்குறியா?"

எதுவும் பேசாமல் மௌனமாக உறங்கத் தலைப்பாட்டாள்.

வீடு வந்து இரு நாட்கள் ஓடி விட்டன. அம்மா பழங்கள், மீன் என போஷாக்கான உணவு கொடுத்தாள். மனதின் கவலை மறைந்ததாலோ என்னவோ இப்போது அனிதாவின் அழகு பல மடங்கு அதிகமாகத் தோன்றியது. அதை அம்மா சொன்ன போது இதைப் பார்த்து ரசிக்க கதிரவன் இல்லையே என்ற ஏக்கம் மனதை வாட்டியது. இன்னும் நான்கேகே நாட்களில் மாமன் மகனை மணக்க வேண்டியவள் இப்படி நினைப்பது முறையா? எனத் தன்னைத்தானே கேட்டுக்கொண்டாள். முன்னர் வாயை மூடிக்கொண்டிருந்த காரணத்தால் நிறைய அவஸ்தைப்பட வேண்டியதாயிற்று. இனியும் அதே தவறைச் செய்யக் கூடாது என நினைத்து கதிரவனின் எண்ணை சுழற்றினாள்.

அவளுக்காகவே காத்திருந்தது போல எடுத்தான் ஃபோனை. அவன் ஆழ்ந்த குரலில் ஹலோ என்கவும் படபடத்த இதயத்தை கைகளால் இறுகப் படித்தாள். நாக்கு புரளவில்லை. ம் ம்மென்ற ஒலி மட்டுமே வந்தது.

"ஹலோ? அனிதா" என்றான். தன் பெயரை அவன் உச்சரித்த பரவசத்தில் கிறங்கினாள். அவனே தொடர்ந்தான்.

"உங்களுக்கு அடிபட்டுதுன்னு கேள்விப்பட்டேன். நல்லா இருக்கீங்களா? என்னால ஏதாவது உதவி தேவையா? அதுக்குத்தான் ஃபோன் செஞ்சீங்களா அனிதா?" என்றான் சுமுகமான ஆனால் ஒதுக்கமான குரலில்.

தடியால் அடித்தது போல துடித்துப் போனாள் அனிதா. நான் அவனை நினைப்பது போல அவன் என்னை நினைக்கவில்லையா? எப்படி நினைப்பான்? நான் என்ன புதுப்பெண்ணா? எனக் கண்ணீர் வந்தது.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top