• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

kk 4

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anisiva

SM Exclusive
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,578
Reaction score
7,649
Location
Tvl
அத்தியாயம் 4

லெட்டரை படிக்க ஆரம்பித்தான்.

‘முகில், நான் மைதிலி. உங்களுக்கு என்னை ஞாபகம் இருக்கும்னு நினைக்கிறேன். உங்கக்கூட கொஞ்சம் பேசணும். காலேஜ் டைம்ல மொபைலில் கூப்பிடவும், இது தான் என் நம்பர்..’ என்று முடித்திருந்தாள்.

என்ன இது?

‘ஜெய் அத்தனை தூரம் அவள் குடும்பத்தைப் பற்றி சொல்லியும் இதைத் தொடர்ந்தால் எத்தனை திண்ணக்கம் இருக்க வேண்டும்?’ மனசாட்சி வேறு ஒரு பக்கம் அவனைக் கேள்வியால் துளைத்தது.

அவள் சொன்னபடி கூப்பிட்டுப் பேசலாம் என்று நினைக்கவில்லை அவன். இப்போதைக்கு வேலையைத் தக்க வைக்க முயற்சிப்போம் என்று மனம் நினைத்ததே ஒழிய, கை அது பாட்டுக்கு அந்த கடிதத்தைப் பத்திரப்படுத்தி அவனின் சட்டை பாக்கெட்டில் வைத்துக்கொண்டது.

அடுத்த நாளில் அவன் சென்ற அலுவலகத்தில் அவனுக்கு வேலை உறுதியாகிவிட, விரைவில் அங்குச் சேர வேண்டிய நிலை. சந்தோஷமாக ஊர் திரும்பினான்.

ஜெய்யிடம் தனக்கு வேலை உறுதியானதைச் சொல்ல அவனைத் தேடி அவன் வீட்டிற்குச் செல்ல இன்று நேரத்துடன் சென்டர் சென்றுவிட்டதாக அவன் அன்னை கூறினார்.

ஒரு ஸ்வீட் பேக்கட்டுடன் அவனைப் பார்த்து விஷயத்தைச் சொல்ல, அங்கு வந்தனர் மைதிலி அண்ட் கோ.

“எங்களுக்கெல்லாம் கிடையாதா...?” என்றாள் மைதிலி, இவனை நேர் பார்வை பார்த்து.

தயக்கம் எல்லாம் இவனுக்கு மட்டுமே. ஏனெனில் அருவா மீசையும், வீச்சருவா சகிதம் அவள் பின்னே அவள் தந்தை மாதிரி ஒரு உருவம் நிற்பது போல் ஒரு பிரமை.

“எடுத்துகோங்க...” என்றபடி அவளுக்கும் அவளின் குழுவினருக்கும் இவன் தர, அவனை வாழ்த்திவிட்டு எடுத்துக்கொண்டனர்.

“சாரிண்ணே உங்களைப் பத்தி தெரிஞ்சிக்காம, கடை பையன்னு சொல்லிட்டேன்...” அந்தத் துடுக்கான பெண், பெயர் பாரதியாம், சொன்னாள்.

“பரவாயில்லைங்க...” என்றபடி மைதிலியை ஒரு பார்வை பார்த்துவிட்டு இவன் புறப்பட எத்தனிக்க, ஜெய் முகத்தில் அப்படி ஒரு நிம்மதி பரவியது.

‘ம்ம், உனக்கு உன் பிரச்சனை...’ முகிலின் மைண்ட் வாய்ஸ்!

ஏதாவது சொல்வானோ என்றெண்ணி அவனையே பார்த்திருந்தாள் மைதிலி. அது புரிந்தும் அமைதியாகக் கிளம்பிவிட்டான் முகில். மைதிலியின் அத்தியாயத்தை வளர்க்க வேண்டுமா கூடாதா என்ற குழப்பம்.

சென்னை கிளம்ப வேண்டும் என்று இருந்ததால், நேரத்தை வீணாக்காமல் காரியத்தில் இறங்கிவிட்டான் அவன். வேலைக்குப் போகப் போகிறான் என்றதும் அவன் தந்தையைப் பழைய மாதிரி பார்க்க முடிந்தது. எல்லாம் இந்தப் பதவி படுத்தும் பாடு. கோபம் எல்லாம் போய் மீண்டும் பழைய மாதிரி அவனின் நண்பராகி விட்டார். மகன் வேலையில் சேர்கிறான் என்றதும் ஏக கவனிப்பு.

“கொஞ்சம் துணி புதுசா எடுத்துக்கோ முகில்...” என்றார் அவனிடம்.

“இல்ல, இருக்குறதே போதும், சென்னையில் நல்லா கிடைக்குமே, அப்புறமா அங்க வாங்கிக்கிறேன் ப்பா...” எவ்வளவோ தடுத்து பார்த்தும் அவன் தந்தை நினைத்தை சாதித்தார்.

சென்னையில் வேலையில் சேர்ந்து, புது இடத்தில் செட்டில் ஆக அவனுக்குச் சில மாதங்கள் எடுத்தது. அவளை மறந்து போனான் என்றில்லை, ஆனால் இப்போது இருந்த சூழ்நிலை அவள் நினைவுகளைச் சிறிதேனும் மறக்கடித்துக் கொண்டிருந்தது.

நடக்காமல் போகலாம் என்று தெரிந்தே ஒரு விஷயத்தை ஆழம் பார்க்க அவன் மனம் ஒப்பவில்லை. அவன் புது பணியும் அதற்கேற்றார் போல் அவன் நேரத்தைக் குறைத்திருக்க, இதுவரையிலும் தனிமை நிலைகளைத் தவிர மற்ற நேரங்களில் மைதிலியை பற்றி அதிகம் நினைக்கவில்லை.

அப்படியே சென்றிருந்தால் அவளை மறந்திருப்பானோ என்னவோ.? ஆனால் பாரதி அவனுக்குப் போன் செய்தாள்.

“முகில், நான் பாரதி பேசுறேன், ஞாபகம் இருக்கா? தஞ்சாவூரில் மைதிலியோட ஃபிரண்ட்...”

“சொல்லுங்க பாரதி. என்ன விஷயமா போன் பண்ணியிருக்கீங்க?”

“நீங்க செஞ்சது கொஞ்சமும் சரியில்லைங்க.”

‘என்ன சொல்கிறாள்? நான் ஒண்ணுமே செய்யலையே...’ என்றெண்ணி, “என்ன செஞ்சேன்?” என்றான்..

“என்ன செஞ்சீங்களா? நீங்கப் பாட்டுக்கு வந்துட்டீங்க, அந்த பொண்ணு என்ன கஷ்டப்படுறா தெரியுமா?”

‘மைதிலியா?’

“ஹலோ ஹலோ இருக்கீங்களா?”

“ஹான், இருக்கேன். சொல்லுங்க.”

“அவ உங்கக்கிட்ட லெட்டர் குடுத்தாளாம். அதுக்கும் பதில் இல்லையாம். உங்களுக்கு பிடிச்சிருக்கோ இல்லையோ, அதை அவக்கிட்ட நேரிடையா சொல்லிட்டீங்கன்னா உங்களுக்குப் புண்ணியமாப் போகும்.”

“...”

அவன் பதில் சொல்லும்முன், “அவளை கஷ்டப்படுத்தாதீங்க... வச்சிடுறேன்..” என்று அவள் மனதில் பாரத்தை ஏற்றிவிட்டு போனை வைத்தாள்.

பாரதி மூலம் விஷயம் கேள்வி பட்டதிலிருந்து அவன் மனம் தவிக்க ஆரம்பித்தது. ‘என்னைப் போல் அவளும் என்னை மறக்க முடியாமல் இருக்கிறாளா?’ இத்தனை சஞ்சலத்திலும் அவன் மனம் சந்தோஷத்தில் துள்ளியது நிஜம்.

இந்தக் காதல் கதையை வளர்க்கலாமா வேண்டாமா என்ற சிந்தனையெல்லாம் மாயமானது. அன்றே அவளிடம் பேசிவிட எத்தனித்து தொலைபேசியில் தொடர்புகொண்டான். இரண்டாவது ரிங்கில் எடுத்தாள்.

“ஹாலோ மைதிலி, நான் முகில் பேசுறேன்...” சற்று நேர அமைதிக்குப் பின்,

“எந்த முகில்?” குரலில் வழிந்தோடிய குறும்பு காட்டிக்கொடுத்தாலும்.

“கம்பியூட்டர் சென்டரில் பார்த்திருக்கோமே, நீங்கக் கூட பஸ் ஸ்டாண்டில் வச்சு லவ் லெட்டர் கொடுத்தீங்களே...”

“என்னது லவ் லெட்டரா?!!”

“அட ஆமாங்க. மினரல் வாட்டர் பாட்டிலில் மறைச்சு குடுத்தீங்களே.”

“ஹலோ, யாரோ என் பெயரை போட்டு கொடுத்திட்டா, அது நான் தந்ததாயிடுமா?”

‘அட நல்ல கேட்கிற மா கேள்வி. ஒருவேளை பாரதி என்னிடம் விஷயத்தைச் சொன்னது இவளுக்குத் தெரியாதா.’

“ஓ அப்படியா? அப்போ, சாரிங்க. விஷயம் தெரியாம உங்களுக்கு ஃபோன் பண்ணிட்டேன். வச்சிடுறேன்.” என்று வைத்துவிட்டான்.

அவள் கோபத்தில் இருக்கிறாள். விஷயத்தைக் கொஞ்சம் ஆறப் போடுவோம் என்பது இவன் எண்ணமாக இருந்தது. ஃபோனை வைத்த மைதிலி, தன் பக்கமிருந்த பாரதியிடம்,

“கொழுப்ப பார்த்தியாடி இந்த முகிலுக்கு. எப்போ ஃபோன் பண்ண சொன்னேன், இவ்வளவு மாசம் கழிச்சு இப்ப பண்றான் பாரேன்...”

பாரதி திருட்டு முழி முழித்ததை மைதிலி இருந்த குழப்பத்தில் கவனிக்காமல் விட்டாள்.

“இவன் யோசிச்சு ஆற அமர பேசினா நானும் கண்ணா, நாதான்னு உருகிடணுமா?”

அவள் பேச பாரதிக்கு குழப்பமாய் இருந்தது.

“முகில் முகில்னு உருகிட்டு இப்ப ஏன்டி மைதிலி மாத்தி பேசுறே?”

மைதிலிக்கு அத்தனை ஆத்திரம். “சே இவனிடம் போய் மயங்கினேனே..” என்று. தோழி வேறு அதையே சொல்லவும், “நீ கொஞ்சம் சும்மாயிருக்கியா.” என்று அவள் வாயை அடைத்தாள்.

“மைதிலி நான் என்ன சொல்ல வரேன்னா...”

“நீ ஒன்னும் சொல்ல வேண்டாம், இந்த விஷயத்தைப் பத்தி உன் கிட்டையும் சொல்லியிருக்கக் கூடாது. நீயே ஒரு ஓட்டை வாய்...”

‘ஆமாடி ஆமா... அவன்கிட்ட நான் எல்லாத்தையும் சொல்லிட்டேன். நீ இப்ப நடிச்சிட்டு இருக்கேன்னு அவனுக்கு நல்லா தெரியுமுடி.’

பாரதி மனதில் ஓடியது எல்லாம் மட்டும் மைதிலிக்கு கேட்டிருந்தால்...?.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
அனிசிவா டியர்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top