• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Madhumitha's Vallamai Thaaraayo 24

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Madhumitha

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
234
Reaction score
317
Location
Rajapalayam
வல்லமை தாராயோ 24 – மதுமிதா

மூன்று வருடங்களுக்கான நூலக வாடகைப் பணம், இணையத்தில் முதலமைச்சருக்கு மனு அளித்த காரணத்தால் மட்டுமே கிடைத்த விபரத்தை வலைப்பதிவிலும் பேஸ்புக்கிலும் பதிவு செய்தாள் சுரேகா.

இன்னும் வேறு யாரேனும் இணையம் வழியாக முதலமைச்சருக்கு மனு அளிக்க விரும்பினால் உபயோகமாக இருக்கும் என்றே அந்தத் தகவல்களைப் பகிர்ந்தாள்.

நூலகத்தில் பள்ளிக் குழந்தைகள் வந்து பள்ளியில் பேச, கட்டுரை எழுத புத்தகங்களை வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போனார்கள்.

நூலகர் முத்துலட்சுமி குழந்தைகளுக்கு ஓவியப்போட்டி கட்டுரைப் போட்டிகளை வைத்தார். அதில் குழந்தைகள் ஆர்வமாக கலந்து கொண்டு பரிசுகளைப் பெற்றனர்.

பெண்கள் நூலகத்தில் அரசாங்கத்திலிருந்து போடப்படாத தங்களுக்குப் பிடித்த புத்தகங்கள், பத்திரிகைகளை தாங்களே கலந்து பேசி ஆளுக்கு இருபது ரூபாய் என்று தங்களுக்குள் வசூலித்து வாங்கிக் கொண்டனர்.

வாசகர் கூட்டம் என்று மாதா மாதம் நடத்தி, தாங்கள் வாசித்த புத்தகங்களைப் பற்றி பேசும்போது, அவர்களிடையே தயக்கங்கள் மாறி பேசும் ஆற்றல் வளர்ந்தது. தினமும் செய்தித்தாள் வாசித்து சமூக அரசியல் விஷயங்களை தைரியமாக தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.

ஒரு நாள் நூலகரிடமிருந்து சுரேகாவுக்கு அழைப்பு.

“அக்கா நூலகர் தினம் கொண்டாடணும். ஆகஸ்ட்12 ஆம் தேதி நூலகர் தினம். அன்னிக்கு வெள்ளிக்கிழமை ங்கறதால இன்னிக்கே அதை வெச்சுக்கலாமா ... வெள்ளிக்கிழமை வரலக்ஷ்மி விரதம் வேற இருக்குதே... அவசரங்கறதால வேற யாரையும் கூப்பிடல. இன்னிக்கே நூலகத்துக்கு வாங்கக்கா நீங்கதான் பேசணும்” என்று நூலகர் அழைத்திருந்தார்.

சரி என்று காலை 11 மணிக்கு நூலகத்துக்குப் போனாள் சுரேகா.

வாசகிகள் இருபதுக்கு மேற்பட்டோர் இருந்தனர்.

நூலகர் மற்றும் நூலகம் பற்றி பேசலாம் என்று போனதும், “இன்றைக்கு நூலகருக்கு பேச நேரம் ஒதுக்கணும்” என்று வரவேற்புரை அளித்த முத்துலட்சுமியையே இன்னும் கொஞ்சம் பேசுங்க என்றாள் சுரேகா.

“புத்தகத்தைக் கிழிக்காமல் கொண்டு வாங்க. நூலகத்தில் இத்தனை புத்தகங்கள் இருக்கிறதென்றால் அக்கா போல எழுத்தாளர்களால் தான் நூலகர்கள் நாங்க இருக்கிறோம். அதனால இப்போ அக்கா எழுத்தாளர்களையும் அவங்க எழுதறத புத்தகங்களைப் பத்தியும் பேசுவாங்க” என்றும் சொல்லி விட்டார்.

’பார்த்தவிழி பார்த்தபடி’ன்னு ஒரு புஸ்தகம்கா. டேபிளுக்கு வரும்... வந்தது தெரியும்… அப்புறம் டேபிளில் இருக்கவே இருக்காது போயிடும். வரும் போகும் இன்னும் நான் இந்தப் புத்தகத்தைப் படிக்கவே இல்லக்கா’ என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே வாசகிகள் தலையை பலமாக ஆட்டிக் கொண்டிருக்க, ’எழுதுனவங்க பெயரைச் சொல்லுங்க என்றாள் சுரேகா. கேட்டவுடன் நூலகர் பதில் சொல்லவில்லை... வாசகிகள் ’வித்யா சுப்ரமணியம். கயிலைப் பயணம் பற்றிய புஸ்தகம்’ என்று ஒரே குரலில் கூறினார்கள்.

இப்போது சுரேகா பேச வேண்டும்.

சுரேகா அவர்களிடம் எதுவும் சொல்லாமல், மொபைலை பேசுவதற்கு முன்னால் மேஜையில் வைப்பது போல எழுத்தாளர் வித்யா சுப்ரமணியம் அவர்களுக்கு போன் செய்தாள்.

போனை வித்யாம்மா எடுக்கவில்லை என்றதும் மொபைலை சைலண்ட் மோடை மாற்றி ரிங் டோனில் வைத்துவிட்டு பேச ஆரம்பித்தாள்.

“நூலகர் இல்லாமல் நூலகம் செயல்பட முடியாது. இப்போ இருக்குற நம்ம நூலகர் இங்கே வர்றதுக்கு முன்னாடி இங்கே இருந்த எல்லா நூலகர்களையும் இன்னிக்கு நினைவு கூர்கிறேன். அவங்க எல்லோருமே மிகச் சிறப்பாக பணி செஞ்சவங்க. போற்றத்தகுந்தவங்க. இப்போ வந்திருக்கிற முத்துலட்சுமி நம்ம நூலகர் நமக்கு வெறும் நூலகராக மட்டும் இருக்கல. நூலக வளர்ச்சிக்கான பணிகளை மட்டும் அவங்க பார்த்துக்கல. அதுக்கும் மேல நம்ம குழந்தைங்களுக்கு நல்ல ஆசிரியராக, நமக்கு சிறந்த தோழியாக இருக்கிறாங்க. அதுவும் இரண்டு பேருக்கு இங்கே கவுன்சிலிங் போல மனரீதியான ஆறுதலைக் குடுத்தும், வேலைக்குப் போக உதவியும் செய்திருக்கிறாங்க…

அக்கா என்னக்கா இது… எழுத்தாளர்களைப் பற்றியும் புஸ்தகங்களைப் பற்றியும் பேசுங்கக்கா…

இதை நூலகர் தினமான இன்றைக்காச்சும் நாங்க சொல்லணும்தானேம்மா

என்று அடுத்த ஒன்னரை மணி நேரப் பேச்சில் வெவ்வேறு விஷயங்களைத் தொட்டு, அங்கங்கே நடக்கும் சமூக எழுச்சிப் போராட்டங்களைக் குறித்து சொல்லி, இப்போதைய பல எழுத்தாளர்களையும் அவர்கள் எழுதிய புத்தகங்களைப் பற்றியும் பேசினாள்.

வித்யாம்மா அவரின் உப்புக் கணக்கு புத்தகம் என்று பேச ஆரம்பித்ததும் அது எழுத்தாளர் வித்யா சுப்ரமணியம் அவர்களைப் பற்றிய குழு உரையாடலாக மாறிய போது சரியாக அப்போது வித்யாம்மாவிடமிருந்து அழைப்பு வந்தது.

போனை எடுத்த சுரேகா, “வணக்கம்மா. இன்றைக்கு நூலகர் தினம். நூலகரை வாழ்த்திவிட்டுப் பேசும்போது உங்களைப் பற்றி உங்கள் வாசகிகள் பேசினாங்க. அதனால் உங்களுக்கு போன் செய்தேன். போன் ஸ்பீக்கரில் போடறேன்மா” என்றாள் சுரேகா.

போனில் இதை எதிர்பார்க்காத வித்யாம்மா மகிழ்வுடன் கேட்டுக் கொண்டார். சுரேகா இதுவரை நடந்த விஷயங்களையும் வாசகிகள் பற்றியும் கூறியதும் பெரிதும் மகிழ்ந்தார்.

இங்கேயோ எழுத்தாளரின் குரலைக் கேட்ட வாசகிகளிடையே மகிழ்ச்சி நிறைந்த பரபரப்பு ஏற்பட்டது.

மொபைல் போனில் எழுத்தாளரும் அவருடைய வாசகிகளும் பேசுவதை மனம் நிறைந்து கேட்டுக் கொண்டிருந்தாள் சுரேகா.

அன்றைக்கு இருபது வாசகிகள் வந்திருந்தனர். நூலகரும் ஆறு வாசகிகளும் போனில் பேசினர். அனைவரின் மகிழ்ச்சியும் தொத்து வியாதிபோல உற்சாகமாகத் தொத்திக் கொண்டது.

தவமணி, சாந்தி, ஆனந்தம், ரேகா, சுதா என்று ஒவ்வொருவரும் பேசிக்கொண்டிருந்தபோது தாங்கள் ரசித்த அந்தப் புத்தகத்தைப் பற்றி பேசினர்.

“நன்றிம்மா உங்களிடம் பேசிய ஏழு பேரும் இங்கே இருக்கிறாங்க. அவங்க எப்போ வருவாங்க நம்ம நூலகத்துக்கு அழைச்சிட்டு வாங்க என்று கூறியவர்களிடம் கண்டிப்பாக ஒருநாள் வருவாங்கன்னு சொல்லியிருக்கிறேன். அவசியம் இங்கே தென்றல் நகருக்கு ஒருநாள் வாங்க.” என்றாள்.

“எல்லோரையும் பார்க்க கண்டிப்பாக வருவேன்” என்று மகிழ்வுடன் கூறினார்.

இதைவிட பெரு மகிழ்ச்சி என்ன வேண்டும் என்று அனைவரும் பேசிக் களித்தனர்.

நூலகருக்கு நினைவுப்பரிசு வழங்கி நூலகர் தினம் மகிழ்வுடன் முடிந்தது.

இந்த விபரத்தை முகநூலில் புகைப்படத்துடன் பகிர்ந்து கொண்டதும் எழுத்தாளர் வித்யாசுப்ரமணியம் மகிழ்ந்து நன்றி தெரிவித்தார்.

இப்படியாக நூலகத்தில் ஆரம்ப காலத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக சீரான வளர்ச்சி இருப்பது கண்கூடாகத் தெரிந்தாலும், இன்னும் நூலகத்துக்கு சொந்த இடம் கிடைக்கவில்லை.

*

‘36 வயதினிலே’ திரைப்படம் இன்னும் பார்க்கவில்லை என்று திரைப்படம் வந்த சமயத்தில், 52 வயதினிலே எப்போது எடுக்கப்போறாங்க காத்திருக்கிறேன் என்று பேஸ்புக்கில் எழுதியிருந்தாள் சுரேகா.

கமெண்ட்டில், நமக்கு 16 வயதில் 16 வயதினிலே படம் வந்தது. இவங்க 36 வயதினிலே படம் எடுக்கும்போது நமக்கு 52 வயசு ஆகிடுச்சே என்றும் எழுதினாள்.

அந்தப் பதிவில் நண்பர் இயக்குநர் செல்வகுமார், இதே தலைப்பிலேயே நீங்க எழுதலாமே சுரேகா என்றார்.

செல்வா அப்போ படம்…

நானே எடுக்கிறேன்

மெய்யாலுமா நடக்கிற காரியமா

நீங்க எழுதுங்க நடத்திக் காட்டிவிடுவோம்

காலம் அனுமதித்தால்… அவசியம் அசத்தலாம் செல்வா..

காலத்திடம் இந்த உரையாடலையே ஒரு அப்ளிகேஷனாக அனுப்பி வைப்போம்

செல்வா… இந்த நாள்… குறிச்சு வெச்சுக்கோங்க… சரித்திரத்தில் இடம் பெறும்… இது எந்த படத்தில் யாரு பேசின வசனம்னு பாத்து… அந்த வாய்ஸில் கேட்டுக்கோங்க என்று தொடர்ந்தது உரையாடல்.

பேஸ் புக்கில் நடந்த இந்த உரையாடலை நினைவில் வைத்திருந்து, ஒரு கதையின் காட்சியை எழுதி கதைக்கு எந்தத் தலைப்பும் வைக்காமல், நண்பர் இயக்குநர் செல்வகுமாருக்கு அனுப்பி வைத்தாள்.

அந்தக் கதையின் காட்சி இப்படியாக விரிந்தது….
 




Madhumitha

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
234
Reaction score
317
Location
Rajapalayam
வயலில் வளர்ந்து மலர்ந்திருந்த சூரியகாந்தி பூக்களிடையே அவளே ஒரு சூரியகாந்தியாய் ஒளிர்ந்தாள். அவள் ஓடுவது சூரியகாந்தி பூவே ஓடுவது போலிருந்தது. அப்படியே இயற்கையின் அழகை ரசித்தபடி தென்னந்தோப்புக்குள் வந்தாள். அங்கே தான் அந்த குடில் இருந்தது. உயரமாக இருந்த காரணத்தால் காற்றோட்டம் அதிகமாயிருந்தது. பனையோலையால் மேலே வேயப்பட்டிருந்தது.

குடிலின் வாசலில் இருந்து பார்த்தாள். அசோக் அங்கே இருப்பதைப்பார்த்து அவனை நோக்கி ஓடினாள் ...அவன் அருகே போனதும் கரும்புச்சாறு சாப்பிடுகிறாயா சுரேகா என்று கேட்டான். சரி என்றாள். வாங்கம்மா என்றான் அருகில் இருந்தமண்டையன்.

அவள் மண்டையன் அந்த இயந்திரத்தில் கரும்பு தோகைகளை வெட்டி எடுத்துவிட்டு கரும்பை நுழைப்பதை பார்த்துக் கொண்டிருந்தாள். இங்கே சாறு வழிவதையும் அந்தப்பக்கமாக சக்கை விழுவதையும் பார்த்து ரசித்தாள்.

மாமா அங்கிருந்து கையாட்டி அழைப்பதைப்பார்த்து அங்கே போன அசோக்கின் கைகளில் திரும்பும்போது எலுமிச்சையும் மாம்பழமும் இருந்தது.

கரும்புச்சாறில் அதைக் கலந்து கொடுத்தான் . தித்திப்பில் தாகம் தீர வெயிலில் வீட்டிலிருந்து சைக்கிளில் அவனுடன் வந்த களைப்பு தீர்ந்தது.

குடிலுக்கு அவளை அழைத்துப் போனவன் சுரேகா என்று அழைத்ததும் ஓடி வந்து அவனுடைய கழுத்தைக்கட்டிக்கொண்டு தொங்கினாள். அசோக் அவளைப் பிடித்துக் கொண்டான்.

எப்போதுமே அவள் அவனை இப்படித்தான் கழுத்தைக்கட்டித் தொங்குவாள். வீட்டில் எல்லோரும் கொழந்தையை பிடிச்சுக்கோடா விட்டுடாதே என்று சொல்வார்கள்.

அவளை இறுகப்பிடித்து அணைத்து முத்தம் கொடுத்தான். அவளும் அவன் கன்னங்களில் முத்தமிட்டாள் . அவன் சட்டென அவள் இதழ்களில் முத்தமிட்டான். அவள் அதிர்ந்து தன்னை விடுவித்துக்கொண்டு குடிலை விட்டு வெளியே வந்து மாமா எங்கே இருக்கிறார் என்று பார்த்துக்கொண்டே ஓடினாள்... சுரேகா நில்லு என்ற கையைப் பிடித்தான்... அப்பா கிட்ட சொல்லாதே என்றான். அவள் கையை விடுவித்துக்கொண்டு மாமாவை நோக்கி ஓட ஆரம்பித்தாள் …
ஓடும்போது சுரேகா அவனைத் திரும்பிப் பார்த்துவிட்டு ஓட்டத்தைத் தொடர்ந்தாள். அவளின் ஓட்டம் மானின் ஓட்டத்தைப் போலவும், காற்றில் அசையும் மலரொன்று திரும்பிப் பார்ப்பது போலவும் தோன்றியது அசோக்கிற்கு. அவளைப் பின்தொடர்ந்து ஓட நினைத்தவன் சட்டென்று நின்றுவிட்டு அவளின் ஓட்டத்தை ரசிக்க ஆரம்பித்தான்.

சுரேகா மண்டையன் இருக்கும் இடத்தைக் கடக்கும்போது ஓட்டத்தை நிறுத்தி விட்டு மேலும் கீழும் மூச்சு வாங்க நடந்தாள். கரும்பைப் பிழியும் மிஷினுக்கு அந்தப்பக்கமாக நின்று மாமாவைப் பார்த்தாள். கரும்புச் சாற்றை அந்தப்பக்கம் காய்ச்சிக் கொண்டிருந்தார்கள்.

மேலே இருந்த மாமா சுரேகாவைப் பார்த்ததும் மேலே வரும்படி கையசைத்தார். அவளுக்கு ஆசையாக இருந்தாலும், தனியே மேலே ஏறிப்போக கொஞ்சம் பயமாகவும் இருந்தது. ஒருமணிநேரமாக இரண்டு வேலையாட்களுடன் மாமா அங்கேதான் இருந்தார்.

கீழே பெரிதாக அடுப்பு எரிந்துகொண்டிருக்க, மிகப்பெரிய வெல்லப்பாகு காய்ச்சும் கொப்பரையில் கரும்புச்சாறு வெல்லப்பாகாக மாறிக்கொண்டிருந்தது. அந்தப்பக்கம் மரப்பலகையில் வெல்லம் செய்ய வெல்லப்பாகு ஆறவைக்கப்பட்டிருந்தது. அருகில் ஆறியதை எடுத்து மண்டை வெல்லம் செய்துகொண்டிருந்தார்கள்.
சுரேகா இங்கே வா என்று கூப்பிட்ட மாமா அவள் அருகே வந்ததும் அவள் கையில் கொஞ்சம் இனிப்பை வைத்துசாப்பிட்டுப்பாரு என்றார். பிசுபிசுப்பாய் கையில் விழுந்ததை உணர்ந்ததும் அவள் முகம் கோண ஆரம்பித்தைப் பார்த்ததும், சாப்பிட்டுப் பாரும்மா என்றார். அவள் மெதுவாக வாயில் வைத்ததும் அந்தச் சுவை அவளுக்கு மிகவும் பிடித்துப்போயிற்று. இது என்ன மாமா என்று மாமாவின் பக்கமாய் வந்தாள். பிடிச்சிருக்கா. அதான் சாப்பிடச் சொன்னேன். என்றவர் அவள் கையில் இன்னும் கொஞ்சம் எடுத்துக்கொடுத்தார். இதுதான் ஜவ்வு முட்டாய் என்றார். அவளுக்கு அந்த ஜவ்வு மிட்டாய் மிகவும் பிடித்துவிட்டது. திகட்டுவது போலிருந்ததால் பிறகு இன்னும் கொஞ்சம் சாப்பிடணுமென்று நினைத்துக்கொண்டாள். ஒரு பக்கம் ஒரு பாத்திரத்தில் தேனைப் போல இருந்தது. இது தேன்பாகு என்றார் மாமா. அதுவும் இனித்தது. இங்கே பெரிய கொப்பரையில் நீளமான கரண்டிகளில் கிண்டிக்கொண்டிருந்தனர். பெரிய கரண்டியை தூக்கி வெல்லப்பாகை தூக்கி ஊற்றிப் பார்த்தனர். கிண்டறாங்க சரி. ஏன் தூக்கி ஊத்துறாங்க மாமா என்றாள். கம்பிப்பதம் வருதான்னு பார்க்கிறாங்கம்மா. வா உனக்கும் காட்டறேன் என்று அவளைக் கரண்டியைப் பிடித்துக்கொள்ளச் சொன்னார். கரண்டியை அவளால் பிடித்துத் தூக்கக்க்கூட முடியவில்லை. அவரே கரண்டியைத்தூக்கு வெல்லைப்பாகை ஊற்றிக் காட்டினார். மாமா இப்போ அப்பிடியே கம்பியைப்போல விழுதே என்று ஆச்சர்யமாகக் கேட்டாள். ஆமாம்மா இன்னும் கொஞ்ச நேரத்துல இறக்கிடலாம். நல்ல பக்குவமாயிடுச்சு. இனி அந்தப் பலகைங்கள்ல ஊத்தி ஆற வெச்சு வெல்லம் செய்யணும் என்றார். இந்தக் கரண்டிய பிடிக்க பயப்படறியே என்றார். இல்லை மாமா நான் பயப்படலையே என்றவளிடம், நம்மட்ட வேலை செஞ்சாளே வள்ளி, அவ ஒருத்தியாவே இந்தக் கொப்பரையை தூக்கி வெல்லப்பாகை பலகையில் ஊத்திடுவாள் தெரியுமா என்றார். ஒருத்தியாக இவ்வளவு பெரிய கொப்பரையைத் தூக்குறதா அதுவும் சூடாக வெல்லப்பாகு இருக்கும் கொப்பரையை என்று கண்களை அகல விரித்தபடி ஆச்சரியமாகப் பார்த்தவள் அப்புறம் என்றாள். அப்புறம் வெல்லப்பாகை கொஞ்ச நேரம் ஆறவிட்டு வெல்ல உருண்டைகள் செய்யணும். அப்புறம் வெல்ல உருண்டைகளை அதில் ஆற விடணும் என்று ஓலைப்பாய்களைக் காட்டினார்.

அசோக் வந்தான். அவனைப் பார்த்ததும் மாமா அருகிலேயே ஒட்டி நின்றுகொண்டாள் சுரேகா. மாமா அவனிடம் அசோக்கு இவளை அங்கே வெல்லம் பிடிக்கிற இடத்துக்குபத்திரமா கூப்பிட்டுப்போயி காட்டு. தனியா இறங்க விடாதே என்றார்.

அவள் அசோக் தன்னைப் பிடித்துவிடாத படி தள்ளி நின்றாள். அசோக்கோட போயி அங்கே உட்காரு. நான் வந்துடறேன் என்றார். அசோக் இந்த ஜவ்வு மிட்டாய் தேன்பாகு எல்லாம் வீட்டுக்குப் போகும்போது எடுத்துப்போ என்று அவனிடம் கொடுத்தார். இப்போது அவள் கண்களில் பயம் நீங்கி குறும்பு கொப்பளிக்கத் தொடங்கியது. அசோக் படி இறங்கும்போது அவன் முதுகில் தாவி ஏறி கட்டிக்கொண்டாள்.

சுரேகா பாத்து இறங்கணும் என்று மாமா சொன்னதும் அவனை விட்டு இறங்கி, பாவாடையைச் சற்றே தூக்கிப்பிடித்தபடி படிகளில் இறங்கி நடந்தாள். இங்கே அடுப்பில் கரும்புச் சக்கைகள் போடப்பட்டு அடுத்த ஈடு வெல்லப் பாகுக்காக தகதகவென எரிய ஆரம்பித்தது. மாமா தலையில் சும்மாடு போல் கட்டியிருந்த துண்டை உதறி வியர்வையைத் துடைத்துக்கொள்ள ஆரம்பித்தார். அவரும் அவர்களுடன் சேர்ந்து கொள்ள மூவரும் மதிய உணவு சாப்பிட குடிலை நோக்கிப் போனார்கள்.

இதை வாசித்துவிட்டு, “நல்ல ப்ளோ இருக்கு சுரேகா. நீங்க ரெண்டு பேருமே கதாபாத்திரங்களாகிட்டீங்களா. நல்லா வந்திருக்கு. இது போன்ற காட்சி இதுவரையில் எந்தத் திரைப்படத்திலும் வரல. தொடர்ந்து எழுதுங்க. அப்படியே ஒரு ஒன் லைன் ஸ்டோரி குடுங்க. அப்புறம் அதை டெவலப் செஞ்சுக்கலாம் சுரேகா” என்று நண்பர் செல்வகுமார் குறிப்பிட்டார்.

மகிழ்ச்சியாக இருந்தது சுரேகாவுக்கு. இதுவரையில் திரைப்படங்களில் வராத காட்சி என்று செல்வகுமார் குறிப்பிட்டது சரி இன்னும் கொஞ்சம் எழுதிப் பார்க்கலாம் என்று தோன்றியது.

அதை நினைவில் வைத்துக் கொண்டு சுரேகா அடுத்து எழுதிய ஒரு ஒன் லைன் ஸ்டோரி ஒரு தத்துப் புத்திரனையே சுரேகாவுக்கு அளிக்கும் என்பதை அவள் நினைத்துப் பார்த்திருக்கவில்லை
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
arumaiyana pathivu sis. vellapaghu seivathu inimai. surekhavin kathaiyil ashokum & avalum nayaka. nayakiyiyai nice sis
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top