• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Madhumitha's Vallamai Thaaraayo 32

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Madhumitha

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
234
Reaction score
317
Location
Rajapalayam
வல்லமை தாராயோ 32 – மதுமிதா

மொட்டை மாடியில் நடந்து கொண்டிருந்தாள் சுரேகா. மென்சூரியன் மெல்ல எழுந்து வண்ணங்களை வானமெங்கும் இறைத்தபடி மலர்ந்து கொண்டிருந்தது. இருள் மறைந்து ஒளி பிறக்கும் இந்த இளங்காலைப் பொழுது தான் எத்தனை ரம்மியமானது.

மலைகளின் வெளிகளுக்கு காலையில் உணவுதேடிச் சென்று மாலையில் கூடடையத் திரும்பிச் செல்லும் பறவைகளின் வரிசை புவியியலையும் பறவைகளின் வரலாறையும் அல்லவா எழுதிச் செல்லுகிறது.

சுற்றிலும் தெரியும் மரங்களின் மலர்களின் காட்சி எந்தப் பருவத்தில் இலையுதிரும் எப்பருவத்தில் செழித்து பலனளிக்கும் எனும்

தாவரவியலின் நுட்பத்தையும் அன்றோ எடுத்துக்காட்டுகிறது.

காலையில் நடைப்பயிற்சியில் சூரியனின் பயண வழிப்பாதையை உத்தராயணம் தட்சிணாயணம் எனக் காட்டியும், இரவுகளில் நிலவின் பௌர்ணமி வரையிலான வளர்ச்சியையும் அமாவாசை வரையிலான தேய்வையும் நட்சத்திரங்களின் சிமிட்டலையும் காட்டி வான சாஸ்திரத்தை கற்பிக்கிறதே.

மொட்டைமாடி என்பது வெறும் மொட்டைமாடி மட்டுமல்ல. மொட்டை மாடி ஒரு பிரபஞ்சகண்ணாடி.

வத்தல், வடாம் போட, துவைத்த துணிகள் காயவைக்க மட்டுமல்ல மொட்டைமாடி என்பதை அறியும் தருணம் இங்கே எத்தனை பேருக்கு கிடைத்துள்ளது.

குளிர்கால நடைப்பயிற்சி கூடமாகவும், உடற்பயிற்சி, தியானம், மூச்சுப்பயிற்சிக்கான களமாகவும் இருக்கும் மொட்டை மாடி பல அதிசயங்களைக் கொண்டு வந்து சேர்க்கும். அதுவும் அததற்கான நேரங்களில் மட்டுமே அளிக்கும். காற்றின் ஸ்பரிசம், மனதைத் துடைத்து பளிச்சிடச் செய்யும்.

பலவித உருவங்களைக் காட்டிச் செல்லும் மேகக்கூட்டம், கண்சிமிட்டி நெருங்கப் பார்க்கும் நட்சத்திரக்கூட்டம் என எந்த நேரமென்றில்லாது எல்லா நேரங்களிலும் நட்பின் அணைப்பாய் ஆறுதல் தரும்.

நடைப்பயிற்சியின் போது எத்தனையோ புது சிந்தனைகள் எழுவதை அவதானித்திருக்கிறாள். சட்டென்று ஒரு முடிவு பிடிபடும். அடுத்த என்ன காரியம் செய்ய வேண்டும் என்னும் புது சிந்தனை உதயமாகும். அதை நடைமுறைப்படுத்தும்போது சரியான உள்ளுணர்வு சரியான நேரத்தில் கிடைத்தது என்பதை உணர்ந்திருந்தாள். ஆமாம். மொட்டைமாடி பிரபஞ்ச கண்ணாடி மட்டுமல்ல. மொட்டைமாடி ஒரு போதிமரம். ’மொட்டைமாடி எனக்கொரு போதிமரம் நாளும் எனக்கொரு சேதி தரும்’ என்று பாடி விட்டு நடையைத் தொடர்ந்தாள். காற்று மெல்ல தவழ்ந்து உடலையும் மனதையும் குளிர்வித்துக் கொண்டிருந்தது.

காற்று தான் எத்தனை மகத்துவம் பொருந்தியது. கண்களால் காண இயலா 'காற்றின் மகத்துவம்' காலங்களால் போற்றப் படவேண்டியது. உணர மட்டுமே இயலும் காற்று கணந்தோறும் வாழவைக்கும் மனிதகுலத்துக்கான வரம்.

காற்று உயிர்களை வாழ்விக்கச் செய்யவல்லது. காற்றுவெளி மண்டலமே பூமியைக் கதிர்களின் தீங்கிலிருந்து காக்கும் கவசமாகவும் உள்ளது. காற்று இல்லையேல் வாழ்வில்லை. உயிரில்லை. உலகில்லை.

நாம் சுவாசிக்கும் தூய காற்று நுரையீரல்களை நிரப்பி, இரத்தத்தை சுத்திகரித்து, உடலை ஆரோக்கியமாக இயங்கச் செய்கிறது. ஓட்டம், நடை, விளையாட்டு, உடற்பயிற்சி, நடனம், உடலை வருத்தும் வேலை என வியர்வை வழிய செய்யும் அனைத்துப் பணிகளும் அதிக கொள்ளளவில் காற்றினை நுரையீரலுக்கு அனுப்பி உடலை சீராக இயங்கச் செய்கிறது.

மூச்சுக்காற்று பல சந்தர்ப்பங்களில் உணர்வுகளை மாற்றியமைக்கும் வல்லமையுடையது. கோபமாக இருக்கும்போது 1,2,3 பத்து வரை எண்ணுங்கள் என்று சொல்வர்.கோபம் குறைய வேண்டுமென்பதற்காக. கண்ணைமூடிக் கொண்டு மூச்சினை மெதுவாக,நன்றாக,முழுவதுமாக உள் இழுத்து வெளியிடவேண்டும். மூச்சுப் பயிற்சி செய்தால் உணர்வுகளை நம் வசப்படுத்தும் சக்தி அதிகரிக்கும். முற்காலங்களில்,முனிவர்கள் காடுகளுக்குச் சென்று தவம் செய்தது தங்கள் உணர்வுகளைத் தங்கள் கட்டுக்குள் வைத்துக் கொள்வதற்கே.காட்டிற்கோ,மலையுச்சிக்கோ கடும் பயணம் செல்ல வேண்டாம். இருக்கும் இடத்திலிருந்தே மூச்சுப் பயிற்சி மூலம் உணர்வுகளை,எண்ணங்களை நம் வசம் செய்யலாம். மந்திரம் மாயம் எதுவுமில்லை. மனமிருந்தால் போதும்.

மூச்சுப் பயிற்சியினை ஆரம்பித்து விட்டால், அந்த அமைதி எப்போதும் உடனிருக்கும்படி பார்த்துக் கொள்ள இயலும். எந்த சூழலிலும். இந்த அமைதியெனும் போதையினை ஒருமுறை அனுபவித்துவிட்டால், புகை, குடி... போன்ற வேறெந்த போதையும் முன்னே நிற்க இயலாது.

மூச்சுக் காற்றின் முறையான,முழுமையான உள் இழுப்பில் அறிவின் மற்றோர் ஊற்றுக்கண் திறப்பது திண்ணம்.

உடல்நலத்தை, மனநலத்தை காக்கும் காற்றெனும் வரப்பிரசாதம் போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றல்லவா. காற்றினை மாசுபடாது காத்து அடுத்த தலைமுறையினருக்கு பொக்கிஷமாக அளிக்கும் பணியை சரியாகத்தான் நாம் செய்கிறோமா.

நீரை நிலத்தை மாசுபடுத்தியாகி விட்டது. மலைகளை இல்லாமல் ஆக்கிக் கொண்டிருக்கிறோம். தூய்மையான காற்றையும் இல்லாமல் செய்து ஆக்சிஜனை விலைக்கு வாங்கும் காலத்துக்கு வந்துவிட்டோம் என்பது மனித குலத்துக்கு பெரும் வீழ்ச்சி அல்லவா.

நீண்ட ஆங்கில் வி போன்ற வரிசையில் பறந்த பறவைக் கூட்டம் கவனத்தைக் கலைத்தது. சற்றும் ஓய்வின்றி மேற்குத்தொடர்ச்சி மலையை நோக்கி அவை பறந்து கொண்டிருந்தன.

ஓய்வே இல்லாமல் தான் சூரியன் இயங்குகிறது, நட்சத்திரங்களும், காற்றும் என இயற்கை களைப்பு என்ற ஒரு வார்த்தை இன்றியே தொடர்ந்து இயங்குகிறது. சட்டென்று நினைவுக்கு வந்தாள்.



“அக்கா நூலகத்துக்கான கட்டடம் கட்டுறதுக்கு இடம் இல்லைன்னா நூலகத்தை அருகில் இருக்கும் அரசுப்பள்ளிக்கு மாத்தணும்னு கடிதம் வந்திருக்குக்கா” என்று நூலகர் சொன்னதும் அதிர்ந்து போய் விட்டாள் சுரேகா. அத்தனை வருடப் பணிகளும் விழலுக்கு இறைத்த நீராகிவிடுமோ?


“நான் இப்போ வர்றேன் லைப்ரரிக்கு. அந்தக் கடிதத்தைப் பார்க்கணும்.

இல்லக்கா வீட்டுக்கு கிளம்பிட்டேன்.”

“அப்போ அதை போட்டோ எடுத்து வாட்ஸப்பில் அதை அனுப்பறீங்களா?”

“வேணாங்க்கா”

“இல்லம்மா அது என்னன்னு விபரம் பார்க்கதான். நான் பேஸ்புக்கில் இதை எழுதறேன். உங்களுக்கு வந்த கடிதத்தை போட்டோவாகப் போட மாட்டேன். சரி ஒண்ணு பண்ணுங்க. பக்கத்தில் அரசு பள்ளிக்கூடம் இல்லைன்னு அவங்களுக்கு பதில் கடிதம் எழுதுங்க. அவங்க அப்படிதானே நமக்கு பதில் தர்றாங்க”

“என்னக்கா. இப்படி சொல்லுறீங்க”

“ஆமாம்மா. அவங்களுக்கு நீங்க இதை எழுதுங்க. அதுக்குள்ள வேற என்ன பண்ணலாம்னு பார்க்கலாம். இத்தனை அமைப்புகள் நம்ம ஊரில் நமக்கு நம்ம லைப்ரரிக்கு ஆதரவா இருக்கிறாங்களே. நேரடியா எல்லா அமைப்புகளும் சேர்ந்து போராட்டம் ஒண்ணு அறிவிச்சிடலாம். வேறவழியில்லை” என்று சொல்லி இருந்தாள்.

இன்றைக்கு அனைத்து அமைப்புகளுக்கும் நண்பர்களுக்கும் இதைச் சொல்ல வேண்டும். வீட்டு வேலைகளை சீக்கிரம் முடித்தால் தான் தொலைபேசியில் பேச முடியும் என்று மாடியிலிருந்து இறங்கினாள்.

ஆனல், இப்போது எதற்கு இந்தப் போராட்டம். இந்த போராட்டத்தால் என்ன பலன். என்னதான் நல்ல விஷயம் நடக்க முடியும். ஆலைப் போராட்டம், வனங்களை அழித்து சாலைகள் வேண்டாம் என்னும் வாழ்க்கை ஆதார போராட்டங்களே அரசின் மனதை அசைக்க இயலவில்லையே.

இல்லை இல்லை இப்படி மனம் தளர்ந்து விடக்கூடாது. ஏதாவது செய்ய வேண்டும்.

ஒரு ஊரை எடுத்துக்கொண்டால் அதில் எத்தனை மதுக்கடைகள் இருக்கின்றன. அத்தனை சினிமா தியேட்டர்கள் இருக்கின்றன. எத்தனை மருத்துவமனைகள் இருக்கின்றன. சென்னையிலேயே தேவ நேயப்பாவாணர் நூலகம், கன்னிமரா நூலகம் இருக்கும்போதும் அண்ணா நூற்றாண்டு நூலகம் கட்டப்பட்டது. இங்கே நாம் ஒவ்வொரு வருடமும் கட்டும் நூலக செஸ் வரிப் பணம் எங்கே போகிறது? அந்தப் பணத்திலேயே கட்டலாமே… தென்றல் நகருக்கான இந்த பெண்கள் நூலகத்துக்கான கட்டடம் கட்ட எம் எம் ஏ தனது ஃபண்ட்டிலிருந்து தருவதாகச் சொன்னாரே முதலில் அவரிடம் பேசலாம் என்று முடிவு செய்தாள்.

வேலைகள் முடிந்ததும் மொபைலை எடுத்தாள். முதலில் எம் எல் ஏ தங்கபாண்டியன் அவர்களுக்கு தொலைபேசினாள்.

“வணக்கம்மா. என்ன விஷயம்” உதவியாளர் பேசாமல் அவரே பேசினார்.

“வணக்கங்க. நூலக விஷயமா பேசணும்”

“சொல்லுங்கம்மா”

“நூலகத்துக்கான கட்டடம் கட்டுறதுக்கு இடம் இல்லைன்னா நூலகத்தை அருகில் இருக்கும் அரசுப்பள்ளிக்கு மாத்தணும்னு கடிதம் வந்திருக்குன்னு லைப்ரேரியன் சொன்னாங்க. என்ன பண்ணறதுன்னு தெரியல. நம்ம தென்றல்நகர் எல்லா அமைப்புகளும் சேர்ந்து போராட்டம் நடத்தலாம்னு தோணுது. இன்னும் எந்த அமைப்புக்கும் பேசல. நீங்க நூலகத்துக்கான இந்தப் போராட்டத்துக்கு தலைமை தாங்க சம்மதம் சொன்னீங்கன்னா அவங்க எல்லோர்டயும் பேசணும். உங்களுக்கு எப்போ வசதிப்படும்னு கேட்கிறதுக்காக பேசினேன். நீங்க இங்கே இருக்கிறீங்களா. சென்னையில் இருக்கிறாங்களான்னு தெரிஞ்சுக்கலாம்னு. இந்த மூணு நாட்களுக்குள் இருந்தா நல்லா இருக்கும்”

“இங்கேதாம்மா இருக்கிறேன். கண்டிப்பா செய்யலாம். நான் தேதியும் நேரமும் சொல்லறேன்”

“ரொம்ப நன்றிங்க. ஆனா ஆலைப் போராட்டம், சாலை போராட்டங்களுக்கு நடுவில் இது தேவையான்னும் இருக்கு”

“நான் உடனே உங்களை கூப்பிடறேன்மா” என்று போனை வைத்து விட்டார்.

பெண்கள் முக்கியத்துவம் குறித்து ஒரு கட்டுரை வேணும்மா என்று சுகன்யா கேட்டது நினைவுக்கு வந்தது. சுரேகாவுக்கு ஒரு நிமிடம் எதுவும் தோன்றவில்லை. பெண் வீட்டில் வீட்டுக்காக செய்யும் வேலைகள் மட்டுமே அவளுடைய குடும்பத்துக்கு முக்கியம். அவளுடைய மற்ற எந்தப் பணிகளும் குடும்பத்துக்கு தேவையில்லாத விஷயமே. எழுத்துலகிலோ அவள் என்னென்ன சிரமங்களுக்கு இடையில் எழுத வருகிறாள் என்பது தேவையே இல்லாத விஷயம். இந்த நூலக விஷயம் வேறு ஒரு முடிவில்லாத இலக்கை நோக்கி பயணித்துக்கொண்டிருக்கிறது. இதில் என்ன எழுதுவது.

மொபைல் ஒலித்தது.

“எம் எல் ஏ தான்மா பேசறேன். மேலே பேசிட்டேன். உங்க நூலகம் இப்படியே இருக்கலாம். எங்கேயும் மாத்த வேணாம்னு சொன்னேன். அங்கே சரின்னு சொல்லிட்டாங்க. லைப்ரரிக்கு நாம கேட்ட அந்த இடம் டி ஆர் ஓ நேரடியாக வந்து பார்க்கிறேன்னு சொல்லி இருக்கிறாங்க”

“ரொம்ப நன்றிங்க”

போனை வைத்த உடனே லைப்ரேரியனிடம் இருந்து போன் வந்தது.

“அக்கா என்ன பண்ணலாம்”

“இப்பதான்மா எம் எல் ஏ பேசினாரு. நம்ம லைப்ரரிய எங்கேயும் மாத்த வேணாமாம். மேலே அவர் பேசிட்டாராம்”

“அப்ப நான் என்ன பண்ணட்டும்?”

“நீங்க பக்கத்துல பள்ளி எதுவும் இல்லைன்னு பதில் எழுதிடுங்க போதும். லைப்ரரிக்கு நாம கேட்ட அந்த இடம் டி ஆர் ஓ நேரடியாக வந்து பார்க்கிறேன்னு சொல்லி இருக்கிறாங்களாம். இதையும் சொன்னார்“
இது ஒரு தொடர்கதை தானோ.

பெண்ணின் பெருமையைப் பேசும் கட்டுரையினை இப்போது எழுத வேண்டும். அதற்கு முன்பு பேஸ்புக் வந்தாள்.
 




Madhumitha

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
234
Reaction score
317
Location
Rajapalayam
பேஸ்புக்கில் சட்டமன்ற உறுப்பினர் தங்கம் தென்னரசு அவர்கள், ஊர்ப்புற நூலகர்களின் நலன் கருதி, சட்டசபையில் ஊர்ப்புற நூலகர்களுக்கு காலமுறை ஊதியம் அளிக்கும் விஷயத்தை முன்வைத்து கேட்டுக்கொண்ட விஷயத்தை டைம்லைனில் தரவுகளுடன் பதிவு செய்திருந்தார். அதை தன்னுடைய டைம் லைனில் ஷேர் செய்து அதற்கு சுரேகா நன்றி தெரிவித்தாள். அங்கு திரு தங்கம் தென்னரசு அவர்களும் நன்றி தெரிவித்தார்.

“மகிழ்ச்சியும், நன்றியும் மா. தென்றல் நகர் நூலகத்திற்காக நீங்கள் மேற்கொண்ட முயற்சியை விடவா?

“முழுமையாக நடந்தால் மகிழ்ச்சி. இத்தனை வருடங்களாகியும் கட்டடத்துக்கான வழிமுறை வரவில்லையே. அனைத்து கட்சிகளும் கட்சியின் நலன்களோடு மக்களின் நலனுக்காக இணைந்து செயல்படும் நாளில் அல்லவா மக்களுக்கான ஜனநாயகம் மலரும்... உங்களைப் போன்றவர்கள் அதனை முன்னுதாரணமாக நடத்திக் காட்டினால் மகிழ்வோம்.

“உங்கள் நாவலின் அத்யாயங்களைத் தொடர்ந்து படித்துவருபவர்களில் ஒருவன் என்ற வகையில், நீங்கள் தென்றல்நகர் சட்ட மன்ற உறுப்பினரின் முயற்சி குறித்து எழுதியிருந்ததை அவரிடம் சொன்னேன். தனிக்கவனம் எடுக்க வேண்டித் தெரிவித்தேன். அது குறித்து உரிய உயர் மட்டத்தில் பேச வேண்டியிருப்பின் நானும் உடன் வருவதாக சொல்லி இருக்கிறேன் தோழர். அனைவரும் இது போன்ற விஷயங்களில் மாச்சர்யமின்றி ஒன்றிணைவது அவசியமே!

“ஆஹா... நன்றி... இதையே இங்கே குறிப்பிட விரும்புகிறேன். சட்டமன்ற உறுப்பினரும் நீங்களும் இவ்விஷயத்தில் இவ்வளவு ஒத்துழைக்கும்போது... கட்சி சார்பு இன்றி மேலிடத்திலும் முடிவெடுத்தால் சிறப்பு... இதையே கட்சி சார்பின்றி இணைய வேண்டும்னு கேட்டுக் கொள்கிறேன். மற்ற நாடுகளில் இதைத்தானே செய்கிறார்கள். இதை நீங்களே ஆரம்பித்து வையுங்கள்.

“மகிழ்ச்சி தோழர் ...

நிச்சயம் தோழர். நன்றி என்பது வெறும் மூன்று எழுத்து வார்த்தை இல்லைன்னு இந்த நொடியில் உணர்கிறேன்... இதற்கு மேல் வேறு எதுவும் தட்டச்ச முடியாமல் விழிநீர் மறைக்கிறது தோழர்.

இதை எழுதிவிட்டு வந்ததும், எந்தக் கட்சியினர் என்ன பணியை ஆரம்பித்தால் என்ன, என்ன பணியினைச் செய்தால் என்ன. அனைத்தும் மக்களின் நலனுக்காக தானே இருக்க வேண்டும். அரசின் உயர்பதவிகளில் இருப்பவர்கள் பிரதமராகட்டும், முதல்வராகட்டும், யாராக இருந்தாலும் மக்களுக்கான பணி செய்பவர்கள் தானே. இங்கே இந்தத் தேவை இருக்கிறது என்றால் அதை செய்ய வேண்டியதுதானே அவர்களின் பணி. ஆயிரக்கணக்கான மனுக்களை ஏன் அனுப்பிக்கொண்டே இருக்க வேண்டும். ஒவ்வொருவரையும் போய் ஏன் காத்திருந்து பார்த்து நினைவு படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். கேள்விகளை நிறுத்து என்று சொல்லிக்கொண்டு கட்டுரை எழுத வந்தாள். சரியாக அசோக் வந்ததும் எழுதியதை நிறுத்தினாள்.

கட்டுரையை எழுத ஒரு வாரமானது.

புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை

வெற்றி பெற்ற மனிதரெல்லாம் புத்திசாலியில்லை என்று பாடிக்கொண்டே கட்டுரையை மெயிலில் அனுப்பினாள்.

பெண்ணின்றி அமையாது உலகு
=============================

பெண் இல்லாது உயிர் செழிக்காது. உலகில் உயிர் தரிக்காது. பெண் என்பவள் உலகம் செழிக்க மனிதம் தழைக்க காரணமாய் இருப்பவள்.

உலகம் தோன்றிய காலந்தொட்டு பெண்ணின் முக்கிய பங்கு தன் கருவில் உயிரைச் சுமந்து சந்ததியை உலகுக்கு அளிப்பது என்பதே அவள் மீது அவளாகவே விரும்பியும் பிறரால் அவளின் தலையில் சுமத்தப்பட்டும் இருக்கும் கருத்தாகும். உயிரளிப்பதில் பெண்ணுக்கு முக்கியமான பங்கு இருப்பதால் இந்த உண்மையை மறுப்பதற்கும் இல்லை. இது இயற்கையின் நியதி.

பெண்வழிச் சமூகமாக இருந்த காலத்தில் பெண்ணைத் தலைமையாகக் கொண்டு இயங்கிய தாய்வழிச்சமூகம், பின்னர் அவளின் நிலை கொஞ்சம் கொஞ்சமாக தாழ்வுநிலைக்கு தள்ளப்பட்டது. அவளுக்குண்டான அனைத்து உரிமைகளும் மறுக்கப்பட்டன. தனது மனைவி தனது குழந்தைக்கே தாய் என்னும் உரிமை நிலைநாட்டப்படவேண்டிய கட்டாயம் நிகழ்ந்த போது மனித நலன் கருதி சட்டங்களும் இதனையே முன்னிறுத்தியது. பூர்வகுடியினர் சமுதாயத்தில் இன்றும் பெண்ணே தலைமை தாங்கி அவர்களின் சமுதாயத்தை வழிநடத்துகிறாள்.

அந்நியர்கள் நம் தேசத்தை ஆக்கிரமித்தபோது, போரில் முதல் பலி இலக்கான, பெண் என்பவள் மானம் காக்க முதலில் தன் உயிரை மாய்த்துக் கொள்ளத் துணிந்தாள் என்பது வரலாற்றில் இருந்து தெரிய வருகிறது.

மேலும் மன்னன் இறந்தான் அல்லது தோல்வியுற்றான் என்னும் செய்தி கேட்ட தருணம் கூட்டுத் தற்கொலைகளும் நிகழ்ந்தன. 'சதி' என்னும் பெயரில் உயிரிழக்கும் பெண்களும் இருந்தனர். இராஜாராம் மோகன்ராய் போராடி சதி என்பதை வேரோடு போக்கினார்.

மேலும் அறியா சிறு வயதிலேயே பால்ய விவாகம் செய்யப்பட்டு கணவனை இழந்த பெண்களின் துயரம் கவனிக்கப்படாமல் இருந்தபோது, பெண்ணை அவலத்திலிருந்து மீட்க விதவா விவாகத்துக்கும் அப்போதிருந்தே முயற்சிகள் எடுக்கப்பட்டன.

மகாகவி பாரதியாரின் 'சந்திரிகையின் கதை' விதவா விவாகத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டதாகும்.

பத்து வயதில் கன்னிப்பெண்ணாக விதவையானவள் விசாலாட்சி. அவளின் அண்ணி கோமதி கர்ப்பிணிப்பெண். ஒரு பெண்ணைப் பெற்றுவிட்டு, அவள் இறக்கும் தருவாயில், அக்குழந்தையை விசாலாட்சியின் கையில் கொடுத்து,

''நான் இரண்டு நிமிஷங்களுக்கு மேல் உயிருடனிருக்க மாட்டேன். என் பிராணன் போகுமுன்னர் உன்னிடம் சில வார்த்தைகள் சொல்லிவிட்டுப் போகிறேன். அதை உன் பிராணன் உள்ளவரை மறந்து போகாதே! முதலாவது, நீ விவாகம் செய்து கொள். விதவா விவாகம் செய்யத்தக்கது. ஆண்களும் பெண்களும் ஒருங்கே யமனுக்குக் கீழ்ப்பட்டிருக்கிறார்கள். ஆதலால், ஆண்களுக்குப் பெண்கள் அடிமைகளாய், ஆண்களுக்குப் பெண்கள் அஞ்சி ஜீவனுள்ளவரை வருந்தி வருந்தி மடியவேண்டிய அவசியமில்லை. ஆதலால், நீ ஆண் மக்கள் எழுதி வைத்திருக்கும் நீசத்தனமான சுயநல சாஸ்திரத்தைக் கிழித்துக் கரியடுப்பிலே போட்டுவிட்டு, தைரியத்துடன் சென்னைப் பட்டணத்துக்குப் போய் அங்கு கைம்பெண் விவாதத்துக்கு உதவி செய்யும் சபையாரைக் கண்டுபிடித்து, அவர்கள் மூலமாக, நல்ல மாப்பிள்ளையைத் தேடி வாழ்க்கைப்படு. இரண்டாவது, நீயுள்ளவரை என் குழந்தையைக் காப்பாற்று. அதற்கு சந்திரிகை என்று பெயர் வை'' என்றாள்.

இதை விசாலாட்சியிடம் சொல்லிவிட்டு கோமதி உயிரை விடுகிறாள்.

விசாலாட்சி, பின்னர் ஜீ.சுப்பிரமணிய அய்யர் உதவியுடன், மறுமணம் செய்துகொள்ள, வீரேசலிங்கம் பந்துலு வீட்டுக்குச் செல்வாள் எனத் தொடரும் கதை.

பாரதியார் பெண்ணின் உரிமைக்காக விடுதலைக்காக பெரிதும் எழுதியவர். பாரதி கண்ட புதுமைப்பெண் என்றே நூறு ஆண்டுகளுக்குப் பின்னரும் ஒருதுறையில் வெற்றி பெற்ற பெண்ணைப் பற்றி பேசுகிறோம். பேசிவருகிறோம். வேறு ஆடவர் பெண்ணின் உரிமைக்காக குரல் கொடுக்கவில்லையா.

திருவள்ளுவரும், பெண்மையின் உறுதியான பண்பான கற்பென்னும் திண்மையை பெற்றுவிட்டால், அதைவிடப் பெருமைக்குரியது வேறு என்ன உள்ளது என்கிறார்.

'பெண்ணின் பெருந்தக்க யாவுள
கற்பென்னும் திண்மை உண்டாகப் பெறின்.'

எந்தத்துறை என்றில்லாது எல்லா துறைகளிலும் பெண் முன்னேறி வருகிறாள். ஆனால் பெண் என்பவள் எந்தத் துறையில் முன்னேறியவளாக இருந்தாலும் அவள் முதலில் தாக்கப்படுவது ஒழுக்கம் குறித்த வார்த்தைகளை முன்வைத்தே. இது இந்த இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டிலும் தொடர்கிறது.

இன்று அனைத்துத் துறைகளிலும் பெண்களின் நிலை மேம்பட்டு பெண் என்பவள் முன்னுதாரணமாகக் கருதப்படுகிறாள். ஆணுக்கு இணையாக அயராது பணிசெய்வதில் முழுமையாக தன்னை அர்ப்பணிக்கிறாள். மருத்துவம், வானியல், அரசியல், இராணுவம் முதற்கொண்டு அவளின் பங்களிப்பு பரவலாக அனைத்துத் துறைகளிலும் இருக்கிறது.

மேலும் குடும்பத்தின் வேலைச் சுமையும் அவளுக்கு அதிகமாகி வீட்டிலும் பணிபுரியும் இடத்திலும் அதிகமாக உழைக்கும் கட்டாயம் ஏற்படுகிறது. அவளுக்கான முக்கிய சிக்கல் பாலியல் ரீதியான உளவியல் சிக்கல். முதல் எதிரியாக பாலியல் ரீதியாக தாக்கப்படுகிறாள். அதை சரியாகக் கையாண்டு கண்ணுக்குத் தெரியும், கண்ணுக்குத் தெரியாத எதிரிகளை சந்தித்து வெற்றிகொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் அவளுக்கு. அத்தனை வலிகளையும் கடந்து அவள் சமூகத்தில் உயர்வர முனைகிறாள். வெற்றியும் பெறுகிறாள்.

எனினும் சமுதாயத்தில் தனியார் துறைகளில் ஆணுக்கு இணையான ஊதியம் பெண்ணுக்குக் கொடுக்கப்படுவதில்லை. இந்த மேற்கத்திய பொருளாதார கலாசாரம் இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுக்க பரவியுள்ளது. ஆண் பெண் இருபாலருக்கும் ஒரே ஊதியம் அளிக்கும் காலம் வரும்போதே பெண்ணுக்கு முழு உரிமை கிடைத்ததாக எடுத்துக்கொள்ள முடியும்.

இப்போது பொதுவாக ஆணின் பிறப்பு விகிதத்துக்கு இணையாகப் பெண்ணின் பிறப்புவிகிதம் உள்ளது. சமமாக இருக்கும் இந்த விகிதாசாரத்தில் பெண்ணுக்கு உண்மையான ஜனநாயக நாட்டில் பிரதிநிதித்துவ அரசியலில் 50% நியாயமாக அளிக்கப்படவேன்டும். 33% இட ஒதுக்கீடு என்பது பெண்ணுக்கு இழைக்கப்படும் அநீதியேயாகும். அந்த 33 சதவிகித ஒதுக்கீடு கூட சட்டமாக்க இயலாத காலகட்டத்தில்தான் இன்னும் இருந்துகொண்டிருக்கிறோம். பெண்கள் அடிமைப்பட்டுக்கிடக்க வேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். ஐம்பது சதவிகிதம் ஒதுக்கீடு செய்யப்படும்வரை பெண்களுக்கு சமவாய்ப்பு தருகிறோம் என்று கூறுவது தவறு மட்டுமல்ல பெண்களை ஏமாற்றும் செயலாகும்.

'ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழ்வோம் இந்த நாட்டிலே' என்று வலியுறுத்திக்கூற இன்று ஒரு பாரதி நம்மிடம் இல்லையே.

பெண்களுக்காக உரிமைக்குரல் கொடுப்பவர்கள் பெண்களுக்கு இந்த உயர்வுநிலை வரும்வரை தொடர்ந்து குரல் கொடுத்தே ஆக வேண்டும். இந்த காலம் விரைவில் வரும் என்று நம்புவோம். நம்பிக்கையே வாழ்க்கை.

அன்புடன்
சுரேகா

டிவியில் செய்தி படக்காட்சிகளாக ஓடிக்கொண்டிருந்தது.

தாய்லாந்து குகையில் இருந்து 12 மாணவர்களும் கோச்சும் மீட்கப்பட்டனர்.

ஆஹா எவ்வளவு அருமையான காட்சி. மகிழ்வான செய்தி. 17 நாட்கள் மாணவர்களைக் காக்க எடுத்துக்கொண்ட போராட்டம் இனிதே முடிவடைந்தது. குழந்தைகளின் முகங்களை வீடியோவில் காட்டாமல் மருத்துவமனைக்கு அழைத்து வந்ததும், கோச் வருத்தம் தெரிவித்ததும், பெற்றோர்களின் பொறுமையான காத்திருப்பும் அரசின் தேர்ந்த செயல்பாடும் அனைத்துமே பாராட்டுதலுக்குரியது... ஒவ்வொரு உலக நிகழ்விலிருந்தேனும் நாம் ஏதும் கற்றுக்கொள்வோமோ.

ஓகிப்புயலும் குரங்கணி விபத்தும் மறக்க நினைத்தாலும் கண்முன்னே வந்தது. அந்த சிறிய நாட்டில் வசிக்கும் அவர்கள் தான் உயிரின் மதிப்பை அறிந்தவர்கள். அந்த அரசுக்கும் அவர்களைக் காக்க ஈடுபட்ட அத்துனைபேருக்கும் அவ்வளவு நன்றி தெரிவிக்க வேண்டும்... இதிலிருந்து நம் நாட்டிலும் பாடம் கற்றுக்கொள்வார்களா என்று தோன்றும் போதே. காலம் மாறும்; நிச்சயம் மாற்றும். நம்பிக்கையே வாழ்க்கை.

இதே நம்பிக்கை தென்றல் நகர் மக்களுக்கு நூலகத்தை அளிக்கும்.

நூலகரிடம் இருந்து தொலைபேசி அழைப்பு.
"அக்கா 14.7.18 அன்னிக்கு வத்றாப் பக்கம் சுந்தரபாண்டியம் அகத்தாபட்டி கிராமத்துல சாயந்திரம் 4 மணியளவில் அரசு நூலகத்துக்கான புதிய கட்டிடத்தை திறந்து வைக்க கல்வி அமைச்சர் வர்றாருக்கா"

"நாம நம்ம வாசகர் வட்டத்திலிருந்து நம்ம நூலக உறுப்பினர்கள் எல்லாம் சேர்ந்து நூலக இடத்துக்காக ஒரு மனு கொடுக்கலாமாம்மா"

"இன்னும் இன்விடேஷன் வரலைக்கா. விருதுநகரில் காலை ஒன்பது மணிக்குன்னும் சொல்லறாங்க. எது எப்போன்னு சரியா தெரிஞ்சதும் சொல்லறேன்கா"

14 ஆம் தேதி அளிக்க இருக்கும் இந்த மனுவாவது நூலகத்துக்கான இடத்தைப் பெற்றுத் தந்தால்.....

நம்பிக்கை என்னும் ஒளிவிளக்கை கையில் ஏந்திக்கொண்டு இருள் நிறைந்த பாதையில் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து நடந்து போய்க் கொண்டிருக்கிறாள். இலக்கை அடைவாளா? காலம் பதில் சொல்லட்டும்.

முற்றும்.
 




Last edited:

sakthipriya

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
1,855
Reaction score
5,222
Age
40
Location
coimbatore
தென்றல் நகர் நூலகம் கட்டீ கதையை வெற்றிகரமாக முடிச்சாச்சு வாழ்த்துக்கள் மதுமிதா
 




Madhumitha

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
234
Reaction score
317
Location
Rajapalayam
தென்றல் நகர் நூலகம் கட்டீ கதையை வெற்றிகரமாக முடிச்சாச்சு வாழ்த்துக்கள் மதுமிதா
இன்னும் கட்டலையேம்மா. உங்க வாக்கு பலிக்கட்டும்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top