• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Mayak Koattai - Minnal : Aththiyaayam 32.

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Srija Venkatesh

SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
408
Reaction score
4,349
Location
chennai
அத்தியாயம் 32.

மூவரையும் கைது செய்து போலீஸ் அழைத்துச் செல்வதை ஊரே வேடிக்கை பார்த்தது. அவமானத்தால் குன்றிப் போயினர் நால்வரும். எதற்காக தங்களை கைது செய்கிறார்கள்? எங்கே அழைத்துச் செல்கிறார்கள் என எதுவும் தெரியவில்லை. போகும் வழியில் போலீசாரிடம் கேட்டும் அவர்கள் எதுவும் சொல்லவில்லை. ஒரு மணி நேரப் பயணத்துக்குப் பிறகு நெல்லையில் ஒரு காவல் நிலையத்தில் வண்டி நின்றது. அவர்களை உள்ளே அழைத்துச் சென்று அமர வைத்தனர். இன்ஸ்பெக்டர் இன்பராஜ் வந்தார்.

"இதைப் பாருங்கப்பா! உங்களை எதுக்குக் கூட்டிக்கிட்டு வரச் சொன்னாங்கன்னு தெரியுமா?" என்றார் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தவாறே.

"சார்! நாங்க எந்தத் தப்பும் பண்ணல்ல! எங்களை எதுக்காக கைது பண்ணி இங்க கூட்டிக்கிட்டு வந்திருக்கீங்க? உங்க மேல மான நஷ்ட வழக்குப் போடுவோம்" என்றான் அருண்.

"ஓ! தாராளமா போடுங்களேன். இப்பவே போடுறீங்களா பேப்பர் தரச் சொல்லவா?" என்றார் கிண்டலாக.

"சார்! யாரா இருந்தலும் கைது செய்ய தகுந்த காரணம் இருக்கணும், அவங்க கிட்ட எதுக்காகக் கைது செய்யறீங்கன்னு சொல்லணும். லேடீசைக் கைது செய்ய லேடி போலீஸ் தான் வரணும். இப்படி நிறைய சட்டம் இருக்கு நம்ம நாட்டுல. ஆனா நீங்க எதுவும் சொல்லாம நாலு அப்பாவிங்களை கைது செஞ்சு கூட்டிக்கிட்டு வந்திருக்கீங்க?" என்றான் அரவிந்தன்.

"என்னடா பெரிய சட்டம் பேசுற? நீ என்ன மினிஸ்டர் வீட்டுப் பிள்ளையா? சட்டப்படி தான் எல்லாம் செய்யணுமோ?" என்றார்.

"அப்ப மினிஸ்டர் வீட்டுப்பிள்ளைங்களுக்கு ஒரு சட்டம் எங்களை மாதிரி சாதாரணமானவங்களுக்கு ஒரு சட்டம்னா நம்ம நாட்டுல இருக்கு? இது எனக்குத் தெரியாதே?" என்றான் அரவிந்தன் கிண்டலாக.

எழுந்து வந்து பளீரேன அறைந்தார் இன்பராஜ்.

"வேய்! இந்த விளையாட்டெல்லாம் நம்ம கிட்ட வேணாம். கொலை செஞ்சுட்டு ஒண்ணுமே தெரியாத மாதிரி நடிக்குறவங்களை வெத்திலை பாக்கு வெச்சு அழைக்கணுமோ?" என்றார்.

அவர் அடித்ததில் பொறி கலங்கிப் போனான் அரவிந்தன். அருணும் பூஜாவுமே பயந்து போனார்கள். மருதனின் நிலையோ சொல்லவே வேண்டாம். நடுங்கியபடி அமர்ந்திருந்தான்.

"சார்! நான் ஒரு ஜர்னலிஸ்ட்! என்னை அடிச்சதை பெரிய இஷ்யூவா மாத்திருவேன். இன்னைக்கே போலீஸ் அராஜகம்னு சாயங்காலப் பேப்பர்ல ந்யூஸ் வரும்படியா செய்ய என்னால முடியும். தெரியுமா?" என்றான்.

சட்டென உஷாரனார் இன்பராஜ்.

"சரி சரி! ரொம்பப் பேசாத! நீங்க யாரு என்ன விவரம்னு டீட்டெயிலா சொல்லுங்க எஃப் ஐ ஆர் போடணும்" என்றார்.

"எதுக்கு சார் எஃப் ஐ ஆர் போடணும்? எங்க மேல உள்ள குத்தத்தை நிரூபிக்க உங்க கிட்ட ஆதாரம் இருக்கா? அப்படி இல்லாம நீங்க எப்படி எங்களைக் கைது பண்ணலாம்?"

"என்னப்பா நீங்க? எது சொன்னாலும் எடக்கு மடக்காவே பேசுறீங்க? இப்ப உங்களுக்கு என்ன வேணும்?"

"முதல்ல நாங்க எங்க வக்கீலை வரவழைக்கணும். அவங்க வந்து என்ன சொல்றாங்களோ அதுக்கப்புறம் தான் நாங்க பேசுவோம்" என்றான் அரவிந்தன் அழுத்தமாக.

"யாரு உன் வக்கீல்?"

"குமுதா தெரியும் இல்லையா? அவங்க தான் என் வக்கீல்"

"ஐயையோ அந்தப் பொம்பளையா? அது பொது நல வழக்குப் போட்டே பெரிய ஆளான வக்கீலாச்சே? அவ உன் கேசை எடுத்துப்பாளா?"

"சார் மரியாதையாப் பேசுங்க! அவங்களுக்கு எனக்கும் கல்யாணம் ஆகப் போகுது. ஒரு ஃபோன் பண்ணிக் கூப்புடுறேன்" என்று சொல்லி ஃபோனை எடுத்து அழைத்தான். மறுமுனையில் என்ன பேசினார்களோ தெரியவில்லை முகம் சற்றே தெளிவானது அவனுக்கு.

"இன்னும் அரை மணியில வந்துடறேன்னு சொன்னாங்க! அது வரைக்கும் நீங்க எங்க மேல எஃப் ஐ ஆர் போட முடியாதுன்னு சொல்லச் சொன்னாங்க" என்றான்.

ஏதோ முணுமுணுத்துக்கொண்டே டீயை உறுஞ்சினான் இன்பராஜ். சொன்னபடியே அரைமணியில் வந்து விடடள் குமுதா. சிக்கென்ற தோற்றத்தோடு வக்கீல் கோட்டுடன் நுழைந்தவளை மரியாதையாகப் பார்த்தனர் நால்வரும்.

"என்ன இன்ஸ்பெவ்க்டர் சார்! விலங்கு மாட்டியிருக்கீங்க? எவிடென்ஸ் பக்காவா இல்லைன்னா உங்களுக்குத்தான் பிரச்சனை. அதுவும் ஒரு பொண்ணு வேற இருக்கங்க! லேடி போலீஸ் எங்க?" என்றாள் படபடவென.

"இந்தாம்மா! எங்களுக்கு பாடம் சொல்லித்தராதே! எங்களுக்கும் சட்டம் தெரியும். கொலைகாரப் பசங்க" என்றார் இன்பராஜ். அவரது பேச்சை சட்டை செய்யாமல் நேரே நால்வரிடமும் வந்தாள் குமுதா.

"உங்களை எதுக்குக் கைது பண்ணியிருக்காங்கன்னு சொன்னாங்களா? அப்படி என்ன செஞ்சீங்க அரவிந்த் மலையில? போலீஸ் ஸ்டேஷன்ல அதுவும் எஃப் ஐ ஆர் போடுற வரைக்கும் நிலைமை வந்திருக்கு?" என்றாள்.

"ஏதோ கொலை செஞ்சுட்டோம்னு சொல்றாங்க குமுதா. என்னென்னே புரியல்ல" என்றான் அரவிந்தன்.

"என்னைக் கேளும்மா! பாவநாசத்துல சொரிமுத்தையானார் கோயில் பக்கத்துல டெம்போவை பள்ளத்துக்குள்ள தள்ளி விட்டு ஒருத்தனைக் கொன்னிருக்காங்க. அதுக்கு ஐ விட்னஸ் எங்கிட்ட இருக்கு" என்றான்.

"வாட்? இவங்களா? அதைப் பார்த்ததுக்கு ஐ விட்னஸ் வேற இருக்கா? எங்கே கூப்பிடுங்க பார்க்கலாம்" என்றால் குமுதா.

"அவனைக் காட்ட நான் என்ன முட்டாளா? அதெல்லாம் முடியாது. கொலைக்கேசு உன்னால எதுவும் செய்ய முடியாது" என்றார் இன்ஸ்பெக்டர்.

"என்னால என்ன முடியும் முடியாதுன்னு அப்புறமாப் பார்த்துக்கலாம். முதல்ல பாவநாசத்துல நடந்த சம்பவத்துக்கு இவங்களை ஏன் நெல்லைக்குக் கூட்டிக்கிட்டு வந்தீங்க? அம்பாசமுத்திரம் தானே போகணும்?" என்றாள் குமுதா.

"இது பெரிய கேஸ். அதனால தான் இங்க கூட்டிக்கிட்டு வந்தோம்"

"சரி! இது கொலைன்னு யாரு புகார் குடுத்திருக்காங்க? எந்த ஆதாரத்தை வெச்சு இவங்களை அரெஸ்ட் செஞ்சீங்க?"

"யாரும் புகார் குடுக்கலை. விபத்துன்னு தான் புகார் வந்தது. ஆனா அது பேப்பர்ல வந்ததும் ஒரு ஆளு என்னை வந்து பார்த்து இவங்க நாலு பேரும் டெம்போவோட ஒரு ஆளை பள்ளத்துல தள்ளி விட்டதாகவும் அதை அவரு பார்த்ததாகவும் சொன்னாரு. அப்படி ஒருத்தர் சொன்னா உடனே ஆக்ஷன் எடுக்க வேண்டியது எங்க கடமை. அதனால தான் அரஸ்ட் பண்ணி இங்க கொண்டு வந்தேன்" என்றார்.

"சரி ஆனா புகார்னு எதுவும் வராத வரையில இவங்களை நீங்க கைது செய்ய முடியாது. அதனால ஜாமீன் தேவையில்லை. இவங்க ஒரு கையெழுத்துப் போட்டுட்டு என் கூட கூட்டிக்கிட்டுப் போறதுக்கு சட்டம் அனுமதிக்குது. அதுக்கு நீங்க எதிர்ப்பு சொல்ல முடியாது"

கெட்ட வார்த்தைகளால் திட்டினான் இன்ஸ்பெக்டர்.

"கூட்டிக்கிட்டுப் போ! ஆனா இந்த ஊர் எல்லையை அவங்க தாண்டக் கூடாது"

"நியாயப்படி இங்க விசாரிக்க வேண்டிய வழக்கே இல்ல இது! அம்பாசமுத்திரம் போலீஸ் ஸ்டேஷன்ல தான் எல்லாமே நடக்கணும். அதனால இவங்க அந்த வட்டாரத்தைத் தாண்ட மாட்டாங்க. என் சொந்த ஷ்யூரிட்டியுஇல இவங்க நாலு பேரையும் கூட்டிக்கிட்டுப் போறேன்." என்றாள் உறுதியான குரலில்.

உரத்த குரலில் வக்கீல்களையும் மற்றவர்களையும் திட்டியபடியே அனுமதித்தான் இன்ஸ்பெக்டர் இன்பராஜ். ஒரு வழியாக போலீஸ் ஸ்டேஷனை விட்டு அவர்கள் வரும் போது மதியமாய் விட்டது. நேரே அவர்களை அரவிந்தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றாள் குமுதா. இவர்களைக் கண்டதும் ஏதேதோ கேட்க விரும்பிய அனைவரையும் தடுத்து அவர்களை மாடிக்கு அழைத்துப் போனாள்.

"முதல்ல நீங்க பாவநாசத்துக்கு எதுக்குப் போனீங்க? அங்க என்ன நடந்தது? உண்மையான விவரத்தை எங்கிட்ட சொல்லுங்க பிளீஸ்" என்றாள் குமுதா.

நால்வரும் மாறி மாறி நடந்தது அனைத்தையும் வர்ணித்தனர். அவர்கள் மீகாமர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்றதும் மெல்லிய நகை ஓடியது அவள் இதழ்களில். காரில் அமர்ந்திருக்கும் போது தாங்கள் கண்ட காட்சியை வர்ணித்த போது அவளால் கோபத்தையும் சிரிப்பையும் அடக்கவே முடியவில்லை.

"என்ன விளையாடறீங்களா? வக்கீல் கிட்ட பொய் சொல்லக் கூடாது தெரியும் இல்ல? என்ன அரவிந்த் இது? நீங்களுமா இப்படிப் பொய் பேச ஆரம்பிச்சுட்டீங்க?" என்றாள் பாதி கோபம் பாதி இகழ்ச்சியாக.

"இல்ல குமுதா! நாங்க எதையும் கற்பனை பண்ணிச் சொல்லல்ல. இது தான் நடந்த உண்மை. எங்களை நம்பு பிளீஸ்" என்றான் அரவிந்தன்.

சற்று நேரம் குறுக்கும் நெடுக்குமாக நடந்தாள்.

"உம்! நீங்க சொல்றது உண்மைன்னே வெச்சுப்பம். ஆனா அதை கோர்ட்டுல நிரூபிக்க முடியாதே? ஓடிப்போனான் ஒருத்தன்னு சொன்னீங்களே அவன் தான் ஐ விட்னசா இருக்கணும். ஸோ போலீசாரோட கண்ணோட்டத்துல நடந்தது கொலை அதை செஞ்சது நீங்க நாலு பேரும் அதைக் கண்னால பார்த்த சாட்சி அந்த ஆளு. உம்" என்று சொல்லி மேலும் நடந்தாள்.

"இந்தக் கேசை வேற மாதிரி தான் ஹேண்டில் பண்ணணும். நீங்க சொன்ன உண்மைகளை நான் சொல்ல முடியாது. சில பொய்கள் சொல்ல வேண்டி வரலாம். பொய்மையும் வாய்மையிடத்த புரை தீர்ந்த நன்மை பயக்கும் எனின் அப்படீன்னு திருவள்ளுவரே சொல்லியிருக்காரு. அதனால சில பொய்களைச் சொல்ல நீங்க தயாராகணும்"

"சொல்லுங்க குமுதா! பொதிகை மலையைக் காப்பாத்தணும். அதுக்கு நாங்க இந்தக் கேஸ்ல இருந்து வெளிய வரணும். அதுக்காக நீங்க என்ன சொன்னாலும் கேக்கறோம்" என்றாள் பூஜா.

"குட்! முதல்ல நீங்க சம்பவம் நடந்தப்ப பாவநாச மலையில காணிக்குடியிருப்புல இருந்தீங்கன்னு சொல்லணும். அதுக்கு சாட்சியா சில காணிகளை தயார் செஞ்சிடலாம். அதை நாம நிரூபிச்சுட்டா கேசே இல்லாமப் போயிரும்" என்றாள் உற்சாகமாக.

"ஆனா கணிகள் பொய் சொல்ல ஒத்துக்கணுமே?" என்றான் அருண் கவலையோடு.

அத்தனை நேரம் பேசாமல் இருந்த மருதன் வாய் திறந்தான்.

"நாம பூப்பரீட்சை கொடுத்துட்டோம்னா நாம என்ன சொன்னாலும் கேப்பாங்க. அதனால கவலைப்பட வேண்டாம்" என்றான் ஆறுதலாக. டென்ஷனானான் அரவிந்தன்.

"சரியாப் போச்சு! நீ அதை இன்னமும் மறக்கலியா? இதுக்கு ஆயுள் தண்டனையே தேவலாம் போலிருக்கு. என்னால எரியுற நெருப்புல இறங்கி நடக்க முடியாது. என்னை ஆளை விடு" என்றான் கோபமாக.

"அரவிந்த்! தயவு செஞ்சு இப்படிப் பேசாதீங்க. நிலைமையோட தீவிரம் உங்களுக்குப் புரியல்ல. இன்பராஜ் பேசுறதைப் பார்த்தால் அவன் சேட்டோட ஆள் மாதிரி தெரியுது. உங்களை ரோட்டுல வெச்சு கொலை செய்ய ஆள் அனுப்புன சேட்டுக்கு லாக்கப்ல உங்களை போட்டுத்தள்ள எவ்வளவு நேரம் ஆகும்? நீங்க கைதாகாம இருக்குறது ரொம்ப முக்கியம். அதனால நான் இப்பவே முன் ஜாமீனுக்கு ஏற்பாடு செய்யறேன். நீங்க பூப்ரீட்சையோ என்னவோ அதைக் கொடுத்துட்டு வாங்க. அப்புறம் நாம இந்தக் கேசை இல்லாம ஆக்கிரலாம். " என்றாள்.

"ஐயோ குமுதா! பூப்பரீட்சைன்னா என்னவோ பூக்குள்ள நடந்து வரதுன்னு நெனச்சியா? இல்ல! மரத்தை நெருப்பு வெச்சுக் கொளுத்துவாங்களாம். எரியுற மரத்துக்கு ஊடே நாங்க நடந்து வரணுமாம். எரிஞ்சு சாகுறதை விட லாக்கப்ல சாகுறதே மேல்" என்றான் அரவிந்தன்.

"இல்ல அரவிந்த! உங்களுக்கு ஒண்ணும் ஆகாது. ஆப்பிரிக்காவுல ஜூலுன்னு ஒரு பழங்குடியினம் இருக்காங்க. அவங்கள்லயும் தூய்மையை நிரூபிக்க இப்படி ஒரு வழக்கம் உண்டுன்னு கேள்விப்பட்டிருக்கேன். சமீபத்துல கூட ஒரு வெள்ளைக்காரர் அவர் உண்மையாவே அவங்களுக்கு தொண்டு செய்யுற நோக்கத்தொட தான் வந்திருக்காருன்னு இந்த வழியில நிரூபிச்சிருக்காராம். படிச்சேன். அதனால நீங்க தைரியமா பாவநாசத்துக்குப் புறப்படுங்க" என்றாள்.

"நீ வரலையா?"

"இல்ல அரவிந்த்! எனக்கு இங்க வேலைகள் இருக்கு. நீங்க போயிட்டு எனக்கு இன்ஃபார்ம் பண்ணுங்க. இப்பவே புறப்படுங்க" என்றாள்.

குளித்து உணவு உண்டு நால்வரும் மீண்டும் பூப்பரீட்சை கொடுக்க பொதிகை மலைக்குப் பயணப்பட்டார்கள்.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஸ்ரீஜா வெங்கடேஷ் டியர்
 




lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
மருதன் பூப்பரீட்சையில் இருந்து வெளியே வரவில்லை, அதைக்கண்டு அரவிந்த் பயப்படுவதும் நிற்கவில்லை.
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
குமுதா நினைப்பது நடக்குமா???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top