• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Solladi sivasakthi - 22

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
இன்ப அதிர்ச்சி


சக்திக்கும் சிவசக்திக்கும் இடையிலான அந்தக் காதல் பரிமாற்றங்கள் நிகழ்ந்தப் பின்னர், இருவரும் நேரடியாக பேசிக் கொள்ளும் வாய்ப்பு கிட்டவேயில்லை. சிவசக்தி ஐ.ஏ.எஸ் தேர்வுப் படிநிலைகளை கடந்து நேர்முகத் தேர்விற்கு முன்னேறிவிட்டாள்.

சிவசக்தியின் வெற்றியை நோக்கிய அவளின் இலட்சியப் பயணம் முடிவுறும் வேளை நெருங்கிக் கொண்டிருந்தது. இதை அறிந்து கொண்டு சக்திசெல்வன் ரோஜாப் பூங்கொத்தை வீட்டிற்கு அனுப்பி வாழ்த்துத் தெரிவித்தான். ஆனால் நேரில் வரமுடியாத சூழல் ஏற்பட்டதை எண்ணி அலைபேசியில் தொடர்பு கொண்டு தன் காதலையும், வந்து வாழ்த்த முடியாத ஏக்கத்தையும் சிவசக்தியிடம் சொல்லி வருந்தினான். பிரிவினால் காதல் கறைந்துவிடப் போவதில்லை எனினும் ஏக்கம் அவளை கரைத்துக் கொண்டிருந்தது. இதற்கிடையில் ஜெயாவின் திருமண வேலைகள் மும்முரமாய் நடக்கலாயின.

நாளைத் திருமணம் என்ற தருவாயில் சிவசக்தி இல்லத்தில் ஜெயா சக்தியின் அறையில் கவலைத் தோய்ந்த முகத்தோடு அவள் மடியில் படுத்துக் கொண்டிருந்தாள்.

"ஜெயா... நாளைக்கு உனக்குக் கல்யாணம்... நீ ஏன்டி இப்படி மூஞ்சை தொங்கப் போட்டிட்டு இருக்க" என்று சக்தி கேட்க ஜெயா படுத்தபடியே "மனசெல்லாம் ஏதோ பன்னுது சக்தி... சந்தோஷமா இருக்கத்தான் முயற்சி பன்றேன்... ஆனா என்னால முடியல... நான்தான் எங்க வீட்டில ஒரே பொண்ணு... நானும் போன பிறகு அம்மாவும் அப்பாவும் என்ன பண்ணுவாங்க... அப்பாக்கிட்ட எனக்கு எப்பவுமே கோபம் இருக்கும்... எப்படியாவது எங்க அப்பாகிட்ட இருந்து தப்பிச்சி போயிடலாம்னு தோணும்... இப்போ அப்பாவை விட்டுவிட்டு போகிறதை நினைச்சா கவலையா இருக்கு... வாய் ஓயாம அட்வைஸ் பண்ணிக்கிட்டே இருப்பாரு... ரூல்ஸ் போட்டுக்கிட்டே இருப்பாரு... அதெல்லாம் நான் ரொம்ப மிஸ் பண்ணப் போறேன்... " என்று சொல்லி அவள் மடியில் முகத்தைப் புதைத்துக் கொண்டு கண்ணீர் வடித்தாள்.

"ஏ... ஜெயா...அழறியா... இதெல்லாம் நம்மோட விதிடி... இதை நாம மாற்ற முடியாது... மனசைப் போட்டு குழப்பிக்காம சந்தோஷமா இரு... அதுவும் இல்லாம நீ கல்யாணம் பண்ணிக்கப் போற ராம் ரொம்ப ரொம்ப நல்லவர்... ஸோ உன்னோட கல்யாண வாழ்க்கை ரொம்ப சந்தோஷமானதா இருக்கும்... எனக்கு நிறையவே நம்பிக்கை இருக்கு... நீ சந்தோஷமா இருந்தா ஜோதிப்பாவும் அம்மாவும் சந்தோஷமா இருப்பாங்க... அப்புறம் வீட்டுக்கு நான் ஒரே பொண்ணுன்னு நீ எப்படிச் சொல்லலாம்... நான் ஒருத்தி இருக்கேன் இல்ல...ஸோ டோன்ட் வொர்ரி பேபி... பீ ஹேப்பி... எங்க சிரி பார்க்கலாம்..." என்று அவளுக்கு சக்தி சிரிப்பு மூட்டிவிட ஜெயா கண்கலங்கியபடியே சிரிக்கத் தொடங்கினாள்.

"போதும் விடு சக்தி" என்று எழுந்து கொண்டவள் "நாம இரண்டு பேரும் இப்ப போலவே எப்பவுமே இருக்க முடியுமா சக்தி ?" என்று ஏக்கத்தோடு கேட்டாள்.

"உண்மையை சொல்லனும்னு அப்படி முடியாது... வாழ்க்கையில் நாம அடுத்த படிநிலைக்கு போகும் போது சில விஷயங்களை நாம இழந்துதான் ஆகனும்..." என்றாள்.

"என்னடி இப்படி சொல்ற ?" என்று ஜெயா அதிர்ச்சியோடு கேட்க,

"அதுதான் ஜெயா யதார்த்தம்... அதை நாம ஏத்துக்கிட்டே ஆகனும்... நாம கடந்து வந்த நாட்களை நினைச்சுதான் பார்க்கலாம்... அதேப் போல ஒரு நாள் வராது... நம்ம நட்பு அப்படியேதான் இருக்கும்... ஆனா இப்ப இருக்கிற மாதிரியே அப்புறமும் இருக்கனும்னு நினைக்கிறது சாத்தியமே இல்ல... இந்த நிமிஷம் இந்த மொமன்ட் திரும்பக் கிடைக்கவே கிடைக்காது... அதனால் இந்த நிமிஷத்தை அனுபவிப்போம்... பின்னாடி திரும்பிப் பார்க்காலமே ஒழிய போக முடியாது... நம்ம வாழ்க்கையில வர மாற்றத்தை ஏத்துக்கிட்டு நாம முன்னேறி போய்க்கிட்டே இருக்கனும்" என்று சக்தி உரைத்த போது ஜெயா கண்ணீர் துளிகளுடன் தொலைந்துவிடப் போகும் அந்த நிமிடங்களை எண்ணி வருத்தம் கொண்டாள்.

இன்று சக்தி அவள் தோழியிடம் உரைத்தவை அத்தனையும் உண்மை. ஜெயாவின் திருமணத்திற்கு பிறகு அவர்கள் நட்பின் பிணைப்பு இத்தனை நெருக்கமாய் இருக்காது. இருவரின் வாழ்க்கையிலும் மாற்றங்களும் முன்னேற்றங்களும் ஏற்பட்டு வேறுவேறு நிலையில் இருப்பர். அப்போது அவர்கள் சந்தித்துக் கொள்ளவே நேரம் கிட்டாது. அப்படியே அபூர்வமாய் சந்தித்து கொண்டாலும் இத்தனை நெருக்கமாய் பேசிக் கொள்ள முடியாது.

ஜெயாவின் மனநிலையை மாற்ற சக்தி தன்னால் இயன்ற வரை முயன்று கொண்டிருந்தாள்.

ஜெயா கேள்வி குறியோடு "சக்தி ப்ரோ கல்யாணத்துக்கு வருவாராடி ?" என்றாள்.

சக்தி சலிப்பாய் புன்னகைப் புரிந்து "யாருக்கு தெரியும்... மிஸ்டர்.சக்தியை நேர்ல பார்த்தே ரொம்ப நாளாச்சு... சாருக்கு டைமே இல்ல... போஃன் பண்ணி பிஸியா இருக்கேன்... சாரின்னு சொல்லி ஏதாச்சும் பொக்கே அனுப்புவாரு... அவருக்கு போன்ல உருகி உருகி காதலிக்கிறதோட கடமை முடிஞ்சிப் போகுது... நான் அந்த மனிஷனை கல்யாணம் பண்ணா... காத்திருந்து காத்திருந்தே கிழவியாயிடுவேன்... " என்று புலம்பித் தீர்த்தவளை உற்று நோக்கிய ஜெயா அவளின் ஏக்கத்தை நன்கு உணர்ந்து கொண்டாள்.

அந்த சமயத்தில் ஜெயாவின் போஃன் ஒலிக்க அவள் அந்த அழைப்பைப் பார்த்து "சக்தி ப்ரோக்கு நூறு ஆயுசு" என்று சொல்லியபடி போஃன் ஸ்பீக்கரை ஆன் செய்தாள்.

சக்தியும் ஜெயாவுடன் ஆர்வமாய் கைப்பேசியை நோக்க "ஹெலோ ஜெயா..." என்றான்.

"சக்தி ப்ரோ... எப்படி இருக்கீங்க ?!"

"ஏதோ இருக்கேன் ஜெயா... உங்க எல்லோரையும் பார்க்க கூட வர முடியல..." என்று அவன் சொன்னதை கேட்டு சக்தி ஜெயாவிடம் கண்ணசைத்துச் சிரித்தாள்.

"எல்லாரையும் பார்க்க முடியலன்னு பொதுவா சொன்னா எப்படி ? சக்தியை பார்க்க முடியல... அதானே உங்க வருத்தம் ?!" என்று ஜெயா கேட்டதும் அவன் பதில்பேசாமல் மௌனமாயிருந்தான். அவனின் அமைதி அவனின் மனவேதனையை சக்திக்கு புரியவைக்க அவள் தன் விழியோரம் ஒதுங்கிய நீரைத் துடைத்துக் கொண்டாள். அங்கே அவனின் நிலைமையும் அவ்வாறே இருந்தது.

இருபக்கமும் நிலவிய அமைதியை

ஜெயா கலைத்தபடி "என்ன சக்தி ப்ரோ?" என்று கேட்டாள்.

உடனே எதிர்புறத்தில் அவள் குரலால் சிந்தனையிலிருந்து மீண்டு

"நத்திங் ஜெயா... சரி அது போகட்டும்... கல்யாணம் வேலையெல்லாம் எப்படி போயிட்டிருக்கு... ஜோதி சார் பாவம் தனியா கஷ்டப்படறாரோ ?!" என்று அக்கறையாகக் கேட்டான்.

"இல்ல... ஹெல்புக்கு ஸ்கூல் ஸ்டாப்ஸ் எல்லாம் இருக்காங்க... பாத்துக்கிறாங்க... அதை எல்லாம் விடுங்க... நீங்க எப்போ வர்றீங்க ?!" என்று ஜெயா கேட்ட போது அவனின் பதிலுக்காக சிவசக்தி ஆர்வமாய் காத்திருந்தாள்.

அவர்களை ஏமாற்றும் விதமாய் "ஸாரி ஜெயா... நான் இப்போ டெல்லியில் இருக்கிறேன்... வொர்க் நிறைய இருக்கு... என்னால கல்யாணத்துக்கு வரமுடியாத சூழ்நிலை... கோபப்படாதே ப்ளீஸ்" என்று அவன் சொன்னதும் சக்தியின் எதிர்பார்ப்பு உடைந்து போனது.

"போங்க சக்தி ப்ரோ... நீங்கக் கல்யாணத்துக்கு வரலன்னா என்கிட்ட பேசவே வேண்டாம்" என்று ஜெயா உரைக்க,

"ப்ளீஸ் ஜெயா... புரிஞ்சிக்கோ... நீதான் சக்தியை எப்படியாச்சும் கன்வின்ஸ் பண்ணனும்... அவளுக்கு தெரிஞ்சா கன்னாபின்னான்னு கத்துவா... " என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே ஜெயா சிவசக்தியின் முகத்தை கவனித்தாள்.

அவள் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக் கொண்டிருந்தது. அவன் சொல்லும் காரணங்களைக் கேட்க விரும்பாமல் அவள் அங்கிருந்து வேகமாய் எழுந்து சென்று விட ஜெயா அவனிடம்

" ப்ரோ... போன் ஸ்பீக்கர்ல இருந்தது... சக்தி நீங்க சொல்றதை கேட்டு கோபப்பட்டு போயிட்டா" என்று ஜெயா உரைத்தாள்.

"என்ன ஜெயா இப்படி பண்ணிட்ட?" என்று கேட்டு சக்திசெல்வன் வருத்தமுற்றான்.

"நான் என்ன பண்ணுவேன்... அவ ஏற்கனவே உங்க மேல கோபத்திலதான் இருந்தா... இப்போ நீங்க பேசினதை கேட்டு ரொம்ப டென்ஷனாயிட்டா ?!"

"சரி ஜெயா... சக்திகிட்ட போஃனை கொடு..." என்றான்.

"ட்ரை பண்றேன்... அவ பேசுவான்னு எனக்கு நம்பிக்கை இல்ல" என்று உரைத்துவிட்டு "சக்தி" என்று அழைத்தபடி வீடு முழுவதும் தேடியவள் பின்னர் மாடியில் சிவசக்தி தன் கண்களை துடைத்தபடி நின்றுக் கொண்டிருப்பதை கவனித்தாள்.

"சக்தி... " என்று ஜெயா போஃனை அவளிடம் நீட்ட "நான் பேசமாட்டேன்" என்றாள்.

"ப்ளீஸ் சக்தி... பேசு" என்று கெஞ்சியவளிடம் அவனுக்கு கேட்கும் விதமாய் "எதுக்கு பேசனும் நான் பேசமாட்டேன்... காதலிக்கிற வரைக்கும்தான் பின்னாடியே சுத்துவாங்க... அப்புறம் அவங்க எங்கன்னு நாம அவங்கள தேடிட்டு அலையனும்" என்று அவள் சொன்ன வார்த்தை சக்திசெல்வனின் செவிகளில் விழுந்தது.

சக்தியின் பிடிவாதத்தை மாற்ற முடியாது என ஜெயா எண்ணிவிட்டுக் காத்திருப்பில் இருந்த சக்திசெல்வனிடம் "சாரி ப்ரோ... சக்தி பேச மாட்டேன்னு சொல்லிட்டா.... நீங்க முடிந்தளவுக்கு வர ட்ரை பண்ணுங்களேன்... " என்று கேட்க "ம்ம்ம்" என்று ஏமாற்றத்தோடு பதிலுரைத்து விட்டு அழைப்பைத் துண்டித்தான்.

அவன் திருமணத்திற்கு வந்துவிட மாட்டானா என்ற ஏக்கம் இப்போது கோபமாய் மாறி இருக்க அவன் எத்தனை முயன்றும் அவளிடம் பேசவே முடியவில்லை. அவனின் அழைப்பைப் பிடிவாதமாய் அவள் ஏற்க மறுத்தாள்.

ஜெயாவின் திருமண விழா வரவேற்பு ஆரம்பிக்க அரங்கம் முழுக்க உறவினர்களை விட ஆசிரியர்களின் கூட்டமும் மாணவர்களின் பட்டாளமும் திரண்டிருந்தது. அவர்களில் பலரும் விருந்தாளிகளாய் அமர்ந்தில்லாமல் எல்லோருமே தங்களுக்கென்ற ஒரு பொறுப்பை எடுத்துக் கவனித்து கொண்டனர்.

ராம் ஜெயாவின் ஜோடிப் பொருத்தம் அம்சமாய் இருக்க வந்தவர்கள் எல்லோருமே அதைப் பற்றி பாராட்டி பேசிக் கொண்டனர். விஜய் அன்று நடந்த மோசமான அனுபவத்திற்குப் பிறகு மீண்டும் சிவசக்தியை சந்தித்தான். சிவசக்தி கோபமாய் இருப்பாளோ என்று விஜய் நினைக்க அவள் எல்லாவற்றையும் மறந்து இயல்பாய் பேசியது அவனுக்கு வியப்பாய் இருந்தது. ஆனந்தி சக்திக்கு உதவியாக அவளுடனே இருந்தாள். இரவு வெகு நேரம் கழித்து வரவேற்பு முடிந்துவிட அப்போதும் சக்திசெல்வன் வரவில்லை. சக்தியின் முகத்தில் வேலை செய்த களைப்பை விட அவன் எப்படியாவது வந்துவிடுவான் என்ற எதிர்பார்ப்பின் ஏமாற்றம் அதிகமாயிருந்தது. உண்மையிலேயே சக்திசெல்வன் வேலையில் சிக்கி கொண்டதால்தான் வரவில்லை என ஜெயா சொல்ல அதை சிவசக்தியின் மனம் சமாதானமடைய மறுத்தது.
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
காலையில் திருமணமும் முடிந்து சடங்குகள் நடந்த வண்ணம் இருக்க சக்தி மணமகள் அறையில் இருந்த பொருட்களை ஒழுங்குபடுத்தியபடி பரிசுப் பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தாள்.

அப்போது சிவசக்தியின் போஃன் ஓயாமல் ஒலிக்க சக்திசெல்வனின் அழைப்பைக் கவனித்து நிராகரித்தாள்.

அந்தச் சமயம் ஆனந்தி சிவசக்தியிடம் "அக்கா... சக்தி அண்ணா" என்று சொல்ல சிவசக்தி வேலையை கவனித்தபடி "இப்போ உங்க சக்தி அண்ணாவுக்கு என்னடி... போஃன் பண்ணினாராக்கும்... வேலையா இருக்கேன்னு போய் சொல்லு... " என்று நின்றிருந்த ஆனந்தியிடம் உரைக்க அவள் பதில் பேசாமல் புறப்பட்டு விட்டாள்.

பின்னர் சிவசக்தி தனக்குத்தானே புலம்பியபடி "வேலைதான் முக்கியம்னா எதுக்கு துரத்தி துரத்திக் காதலிக்கனும்.. இப்போ பிஸியா இருக்காராம்... இவங்களுக்கு எல்லாம் காதல் ஒரு கேடு..." என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே சிவசக்தியை பின்னோடு ஒரு கரம் அணைத்துக் கொள்ள அப்படியே அதிர்ந்து போனாள்.

சக்திசெல்வனின் கரத்தில் சிக்கிக் கொண்ட சிவசக்தி அவனின் அணைப்பைத் திகைப்போடு பார்த்திருந்தாள்.

"என்ன சொன்ன... என்ன சொன்ன.. இவங்களுக்கு எல்லாம் காதல் ஒரு கேடான்னா... உன்னைப் பார்க்க என் வேலை எல்லாம் விட்டுவிட்டு ஓடி வந்திருக்கேன்டி... இப்பவும் பேசமாட்டியா ?" என்று சிவசக்தியை கேட்க நாம் அவனின் அணைப்பில் இருக்கிறோம் என்பதை அப்போதுதான் உணர்ந்தாள்.

அவனின் கரத்தை அவள் விலக்கிக் கொள்ள முயற்சி செய்யவே இல்லை. அன்று அவனிடம் தான் கண்ட காதல் அவனின் கூர்மையான விழிகளில் ஆழமாய் இருப்பதை மெய்மறந்து ரசித்தபடி அவள் லயித்திருக்க, சக்திசெல்வன் இன்ப அதிர்ச்சியில் ஆழ்ந்திருந்தவளின் விவரிக்க முடியாத அழகை ரசித்தபடியே நின்றிருந்தான்.

அவர்கள் இந்த உலகையே மறந்து தங்கள் காதலில் மூழ்கித் திளைத்திருந்தனர் என்றே சொல்லலாம்.

நீண்டதொரு பிரிவு


சிவசக்தி அந்தச் சந்திப்பை எதிர்பார்க்காதவளாய் வியப்போடு "எப்போ வந்தீங்க ?! " என்று கேட்க,

அவளைப் பின்புறம் அணைத்துக் கொண்டிருந்தவன், அவளின் முகத்தைப் பார்த்தபடி வந்து நின்றான். அவளின் தோள்களில் மாலையைப் போல் தன் கரங்களை கோர்த்தபடி "நான் வந்து ரொம்ப நேரமாச்சு... ஜெயா ராமை பார்த்து விஷ் பண்ணேன்... ஜோதி சார்கிட்டயும் மற்ற டீச்சர்ஸ் கிட்டயும் பேசினேன்... அப்புறம் ஆனந்தியை பார்த்து இல்லத்தில இருக்கிறவங்கள பத்தி எல்லாம் விசாரிச்சேன்... எங்கடா என் தேவதையை காணோமேன்னு தேடினேன்... போஃன் பண்ணிப் பார்த்தேன்... மேடம் எடுக்கல... கடைசியா ஆனந்திதான் நீ இங்க இருக்கன்ன என்னை கூட்டிட்டு வந்தா... நீ என்னடான்னா அவ சொன்னதைக் காதில வாங்காம என்னை சீரியஸா திட்டிட்டு இருந்த... " என்று புன்னகை ததும்பிய முகத்தோடு உரைத்துக் கொண்டிருக்க சிவசக்தி அவனின் விவரிப்பையும் உடையையும் ஆச்சர்யமாய் பார்த்தவண்ணம் இருந்தாள்.

அவன் என்றும் இல்லாமல் வேட்டிச் சட்டையில் இருக்க அது அவனை இன்னும் கம்பீரமாகவும் மிடுக்காகவும் காட்டிக் கொண்டிருந்தது. அந்தத் தோற்றத்தில் அவனைக் கண்டு மெய்மறந்திருந்தவள் முன் சக்திசெல்வன் தன் கையை அசைத்து "சக்தி" என்று அழைக்க அவள் மீண்டு வந்தாள்.

"என்ன சார் மாப்பிள்ளை மாறி டிரெஸ் பண்ணி இருக்கீங்க ?!" என்று கேட்டாள்.

"எப்பவுமே பாஃர்மலாவே டிரஸ் பண்ணி போறடிச்சிடுச்சு... அதான் கொஞ்சம் வித்தியாசமாய்... நல்லா இருக்கா சக்தி" என்று தன் காதலியின் பதிலுக்காக அவன் ஆவலாகக் காத்திருக்க

அவள் முகத்தைச் சுருக்கியபடி "ம்ஹும்..." என்று தலையசைத்தாள்.

"எல்லாருமே நல்லா இருக்குன்னு சொன்னாங்கடி... உனக்கு மட்டும் என்ன?" என்று புரியாமல் கேட்டான்.

"இப்படி உங்களைப் பார்த்தா... பார்க்கிற பொண்ணுங்க மனசெல்லாம் சலனப்படாதா... வேண்டாம்...இனிமே நீங்க பாஃர்மல்லியே வாங்க... அது கொஞ்சம் பெட்டர்... " என்றாள்.

அவன் அவள் பதிலை கேட்டு குலுங்கிக் குலுங்கி சிரித்தபடி "இவ்வளவு பொஸஸ்ஸிவ்வாடி நீ... யாரும் என்னைப் பார்க்க கூடக் கூடாதா?" என்று கேட்டான்.

"யாரும் பார்க்கவும் கூடாது... நீங்களும் யாரையும் பார்க்கவும் கூடாது... இந்த சக்திசெல்வன்... சிவசக்திக்கு மட்டும்தான்" என்றாள்.

"அப்படின்னா சரி... நானும் மாப்பிள்ளை மாதிரி டிரஸ் பண்ணிருக்கேன்... நீயும் மணப்பெண் மாதிரிதான் இருக்க... இப்பவே ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிக்கலாம்" என்றான் குறும்பானப் புன்னகையோடு.

"ஓ... எஸ்... பண்ணிக்கலாமே... நான் ரெடி" என்றாள்.

இப்போது சக்திசெல்வன் அவளின் பதிலை கேட்டுப் பார்வையை அகலவிரித்து "கேட்டதும் ஒகே சொல்லிட்ட?" என்றான்.

"ஆமாம்... என் சைடில எந்தப் பிரச்சனையும் இல்ல... எல்லாருக்கும் ஒகே... " என்றாள்.

சக்திசெல்வன் மௌனமாய் அவள் தெளிவைக் கண்டு ஆச்சரியப்பட அவள் மீண்டும் "என்னாச்சு மிஸ்டர். சக்தி... எப்படி சமாளிக்கிறதுன்னு யோசிக்கிறீங்க... கரெக்டா... எனக்குத் தெரியாதா உங்களைப் பத்தி... உங்க அம்மா கன்வின்ஸாகாம என்னை நீங்கக் கல்யாணம் பண்ணிக்க மாட்டீங்கன்னு" என்று புன்னகையித்தாள்.

"ஓ... அந்தத் தைரியமா... ஆனா நான் சொன்னது சொன்னதுதான்... இப்போ நாம கல்யாணம் பண்ணிக்கப் போறோம்" என்று இம்முறைக் கொஞ்சம் அழுத்தமாக உரைத்தான்.

இப்போதும் சிவசக்தி அவன் பேச்சை நம்பாமல் முறைத்தபடி "என்ன பூச்சாண்டி காட்டிறீங்களா ?" என்றாள்.

"ஐம் சீரியஸ்" என்று சொல்லித் தன் கழுத்திலிருந்த தங்க செய்யின்னை எடுத்து அவள் கழுத்தில் மாட்டிவிட்டான்.

"என்ன பண்றீங்க... இப்படி செய்யின் மாட்டிட்டா உங்க ஊர்ல கல்யாணமா ?" என்று புருவத்தை உயர்த்தி வினவினாள்.

"மனதை பரிமாறிப்பதும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கிறதுதான் கல்யாணம்னா... அது நமக்குள் எப்பவோ நடந்திடுச்சு சக்தி... இல்ல தங்கத்தால் தாலி கட்டினாதான் கல்யாணம்னா... இப்போ நான் போட்டதும் தாலி மாதிரிதான்... என்ன... தாலிக்குப் பதிலா எஸ் டாலர் இருக்கு... எஸ் பாஃர் சக்தி செல்வன்... இப்போ என்னை நான் உன்கிட்ட கொடுத்திட்டேன்... தட்ஸ் இட்" என்று பெரிய விஷயத்தைச் செய்துவிட்டு வெகுசாதரணமாய் பதிலளித்தான்.

சக்தி அவன் சொன்னதை கேட்டுக் வியப்பு குறியோடு "என்ன சக்தி நீங்க... இதென்னா விளையாட்டா ?!" என்று சொல்லி அந்த டாலரை கைகளில் பிடித்துப் பார்த்தாள்.

அவன் சொன்ன வார்த்தைகளின் ஆழம் புரிய அந்தத் தருணத்தை எப்படி எதிர்கொள்வது எனப் புரியாமல் அதிர்ச்சியில் உறைந்திருக்க

"விளையாட்டு இல்ல... வெரி சீரியஸ்... நான் கட்டின வாட்ச்சை கோபத்தில் கழட்டிக் கொடுத்த மாதிரி இதையும் கழட்டின... நான் மனிஷனாவே இருக்க மாட்டேன்" என்று முகத்தை இறுக்கமாக வைத்துக் கொண்டு சக்திசெல்வன் எச்சரிக்க அந்த செயலின் மூலம் அவனின் காதலை உணர்ந்தவள் "நோ சக்தி... கழட்ட மாட்டேன்" என்று சொல்லி உணர்ச்சிவசப்பட்டு சிவசக்தி அவனை கட்டியணைத்துக் கொண்டு "தேங்க்ஸ்" என்றாள்.

சக்திசெல்வனும் அவளை இறுக அணைத்துக் கொள்ள அந்த வெகுநாள் பிரிவை இருவரும் சமன்படுத்த அந்த நெருக்கத்தில் இருவரும் கரைந்துப் போயினர்.

முதலில் சிவசக்தி மெல்ல அவனின் அணைப்பில் இருந்து மீண்டபடி அவனை நிமிர்ந்து நோக்கி "நீங்க எப்போ என்ன பண்ணுவீங்கன்னே என்னால புரிஞ்சிக்கவே முடியல சக்தி... சரி வாங்க வெளியே போகலாம்... யாராவது ரூமுக்கு வந்திடப் போறாங்க" என்று சொல்லி விலகிச் சென்றவளின் கைகளைப் பிடித்து தடுத்தபடி "நான் கிளம்பனும் சக்தி" என்றான்.

அவன் சொன்னதை கேட்டு அதிர்ச்சியோடு திரும்பி "இப்பத்தானே வந்தீங்க... உடனே கிளம்பனுமா ?" என்று கேட்டு முகம் வாடினாள்.

அவன் அவள் முகத்தை தன் விரல்களால் மெல்ல வருடியபடி "இப்ப உடனே ப்ஃளைட் பிடிச்சாதான்... டெல்லிக்கு போக முடியும்... கிளைன்ட் மீட்டிங் அட்டன்ட் பண்ண முடியும்..." என்று அவன் தன் நிலைமையை எடுத்துரைக்க

"இப்படி வந்துட்டு உடனே போறதுக்கு வராமலே இருக்கலாம்... " என்று சிவசக்தி கோபித்துக் கொண்டு முகத்தை திருப்பிக் கொண்டாள்.

மீண்டும் சக்திசெல்வன் அவள் முகத்தை தன் புறம் திருப்பி "இப்படி சொன்னா நான் என்ன பண்றது சக்தி... வந்தாலும் தப்பு... வரலனாலும் தப்பா ?" என்று தவிப்போடுக் கேட்க சிவசக்தி விழியோரத்தில் நின்றிருந்த அவள் கண்ணீரை துடைத்தபடி "ஒகே ஒகே... ஐ அன்டர்ஸ்டான்ட்... நீங்க கிளம்புங்க" என்றாள்.

"சும்மா கிளம்புங்கன்னு சொன்னா... கொடுக்க வேண்டியது கொடுக்கலியே" என்று அவன் அவளின் இதழ்களை நெருங்கியபடி கேட்க, அவள் அவன் முகவாயை பிடித்துத் திருப்பி கன்னத்தில் அவள் இதழ்களைப் பதித்தாள்.

"கொடுத்தாச்சு... போலாமா ?" என்று சிவசக்தி நகர்ந்துச் செல்ல

சக்திசெல்வன் ஏமாற்றத்தோடு "திஸ் இஸ் சீட்டிங்... நான் இதை ஒத்துக்கமாட்டேன்" என்றான்.

சிவசக்தி அவனைப் பார்த்து சிரித்தபடி "நீங்க ஒத்துக்கிட்டாலும் ஒத்துக்கிலானாலும் இப்போதைக்கு இவ்வளவுதான்" என்று சொல்லியபடி அறைக் கதவை திறந்து வெளியேச் சென்றாள்.

"சக்தி ... ப்ளீஸ்... டோன்ட் டூ திஸ் டூ மீ... இட்ஸ் நாட் பேஃர்" என்று சொல்லி அவன் கெஞ்சிக் கொண்டே பின்னோடு வர

சிவசக்தி அவனை கவனியாமல் நேராக மேடையில் நின்று கொண்டிருந்த ஜெயா ராம் அருகில் போய் நின்று கொண்டாள்.

சக்திசெல்வன் சிவசக்தியை முறைத்தபடி ராமின் அருகில் வந்து கைக் குலுக்கிவிட்டு "நான் போயிட்டு வர்றேன் ராம்... ஜெயாவோட வால்த்தனமும் துருதுருப்பும் எப்பவுமே மாறிடாம பாத்துக்கோங்க... அதுதான் அவளோட அடையாளமே" என்றான்.

ராமும் முகத்தில் புன்னகையோடு "ம்.. பாத்துக்கிறேன்" என்று தலையாட்டினான்.

ஜெயா அவனிடம் "இப்பதான் வந்தீங்க... அதுக்குள்ள கிளம்பனும்னு சொன்னா எப்படி ?!" என்று வருத்தத்தோடு கேட்டாள்.

"புரிஞ்சிக்கோ ஜெயா... வேலை இருக்கு" என்று சொல்ல ஜெயாவும் அவனின் நிலைமையைப் புரிந்தபடி "ஒகே ப்ரோ... டேக் கேர்" என்று சொல்லி தலையாட்டினாள்.

எல்லோரிடமும் விடைப் பெற்று கொண்டு அவன் வாசலில் நின்ற தன் காரை நோக்கிச் செல்ல பின்னோடு வழியனுப்ப வந்த சிவசக்தியை கோபமாய் பார்த்தான். அந்தப் பார்வையை தாங்கிக் கொள்ள முடியாமல் "சாரி சக்தி... கோபமா போகாதீங்க... ப்ளீஸ்" என்று கெஞ்சினாள்.

"நீ கூப்பிட்டதும் என் வேலை எல்லாம் விட்டுவிட்டு ஓடி வந்தேன் இல்ல... அதுக்கு எனக்குத் தேவைதான்" என்று முகத்தை திருப்பிக் கொண்டவனின் கைகளை பிடித்தபடி "இதுக்கெல்லாமா கோச்சுப்பாங்க... விடுங்க சக்தி" என்றாள்.

"நான் இதை விடமாட்டேன்... எல்லாத்துக்கும் மொத்தமா உன்கிட்ட இருந்து வட்டியும் முதலுமா நான் வசூல் பன்றேனா இல்லையான்னு மட்டும் பாரு" என்றான்.

"சரி பார்க்கிறேன்... இப்போ உங்க கோபத்தை விட்டுவிட்டு... கொஞ்சம் ஸ்மைல் பண்ணுங்களேன்" என்று மீண்டும் அவள் கெஞ்ச

அவன் அவளின் பரிதாபமான முகப் பாவனையை பார்த்துக் கொஞ்சம் இறங்கி இயல்பாக மாறிப் புன்னகைச் செய்தபடி "பை சக்தி... டேக் கேர்..." என்று சொல்லி கார் கதவை திறக்க சென்றவனிடம் "சக்தி ஒரு நிமிஷம்..." என்றாள்.
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
அவன் புருவத்தை உயர்த்தி அவளைப் பார்க்க "நீங்க உங்கம்மாகிட்ட நார்மலா பேசிறீங்கதானே" என்று வினவினாள்.

அவன் சிறிது நேரம் யோசித்தபடி "நான் நார்மலா பேசிறேன்... ஆனால் அவங்கதான் என் மேல கோபமா இருக்காங்க... சரியா பேசிறதில்லை" என்றான்.

"கோபமா இருக்காங்கன்னு காரணம் சொல்லாம நீங்க அவங்ககிட்ட சமாதானமா பேசுங்க... அவங்க இடத்தில இருந்து பார்த்தால் அவங்க செய்றது நியாயம்தான்... அவங்க சொன்னதில எந்தத் தப்பும் இல்லை சக்தி" என்று சிவசக்தி சொல்ல அவன் அவளை வியப்பாய் பார்த்துக் கொண்டிருந்தான்.

"அவங்க பக்கம் தப்பு இல்லைன்னு எதை வைச்சு சொல்ற ?!" என்று வினவினான்.

"இத்தனை செல்வாக்கு பணம் பதவிக்கு இடையிலும் உங்களை இவ்வளவு பொறுப்பா நல்லவரா வளர்த்திருக்காங்கன்னா... நிச்சயம் அவங்க தப்பு செய்யறவங்களா இருக்கவே முடியாது... அவங்க என்னை வேண்டாம்னு சொல்ல ஏதோ ஒரு நியாயமான காரணம் இருக்குன்னு எனக்கு தோணுது... நீங்க அதை முதல தெரிஞ்சிக்கிட்டு... அப்புறம் நம்ம காதலை பத்தி பொறுமையா எடுத்துச் சொல்லி புரிய வையுங்க" என்றாள்.

சக்திசெல்வன் அவளின் பேச்சைக் கேட்டு நெகிழ்ச்சியோடு "என்ன சொல்றதுன்னே எனக்கு தெரியல... எங்க அம்மாவை நம்ம கல்யாணத்துக்கு கன்வின்ஸ் பண்ணிடுவேன்னு எனக்கு நம்பிக்கை இருந்தது... ஆனா உங்க இரண்டு பேரோட உறவு எப்படி இருக்குமோன்னு பயந்துட்டு இருந்தேன்... ஆனா இப்போ அந்த பயம் இல்லை... நீ அம்மாவை புரிஞ்சிக்கிட்ட மாதிரி அம்மாவும் உன்னை நிச்சயம் புரிஞ்சிப்பாங்க... நீ புரிய வைச்சிடுவ... நான் இப்போ உண்மையிலேயே ரொம்ப சந்தோஷமா இருக்கேன்... தேங்க்யூ சோ மச் ..." என்று சக்திசெல்வன் சொல்லி சுற்றும் முற்றும் பார்த்து யாரும் தங்களை கவனிக்கவில்லை என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு அவளை தன் புறம் இழுத்து கன்னத்தில் முத்தமிட்டுவிட்டு விடுவித்தான்.

சிவசக்தி நாணத்தோடு கன்னத்தை துடைத்தபடி "என்ன சக்தி இது... கொஞ்சம் கூட இடம் பொருள் தெரியாம" என்றாள்.

அப்போது சக்திசெல்வனின் முகம் பிரகாசமாய் மின்ன "என் கண்ணுக்கு எந்த இடமும் தெரியல... பொருளும் தெரியல... நீ மட்டும்தான் தெரிஞ்ச... " என்று சொல்லி கண்ணடித்துச் சிரித்துவிட்டு "ஒகே பை டியர்... டேக் கேர்" என்று உரைத்துவிட்டு அவன் காரில் ஏற சிவசக்தி புன்னகையோடு அவனை வழியனுப்பினாள்.

அவர்களின் ஆழமான காதலை உணர்ந்து கொள்ள அந்த சில நிமிட சந்திப்பே போதுமானது. அதற்கு பிறகான நீண்ட பிரிவினையும் கூட அவர்கள் காதலின் உறுதியைக் குலைத்துவிட முடியாது.

சிவசக்திக்கு இம்முறை அவனின் பிரிவு வலியை விட இன்பமான அனுபவத்தையே ஏற்படுத்தி இருந்தது.

அன்று ஜெயாவின் திருமண வைபவம் இனிதே முடிந்துவிட்ட நிலையில் சக்தியும், ஜெயாவின் தாய் தந்தையரும் அவளைக் கண்ணீரோடு வழியனுப்பி வைத்தனர். ஜெயாவும் கண்ணீர் நிரம்பிய கண்களோடு புறப்பட்டுச் செல்ல ராம் அவளைச் சமாதானம் செய்தபடி அழைத்துச் சென்றான்.

சக்திசெல்வன் டெல்லிக்குச் சென்ற பிறகு அவன் வேலையில் சிக்குண்டான். இதற்கிடையில் அவன் அம்மாவை சந்தித்து பேசிப் புரிய வைக்க வேண்டுமென்ற எண்ணம் நிறைவேறாமலே இருந்தது. இருவரும் மாறி மாறி தம் வேலைகளில் மும்முரமாகி விட்டிருந்தனர்.

அன்று சக்திசெல்வன் எப்படியாவது தன் அம்மாவிடம் பேசிவிட வேண்டும் என மீனாக்ஷியின் அறைக்குள் நுழைந்தான். அவனைப் பார்த்ததும் மீனாக்ஷி வேலையில் ஆர்வமாய் இருப்பது போல் பாவனை செய்துக் கொண்டிருந்தார்.

சக்தி தன் அம்மாவின் முன்னே வந்து நின்று "மாம் உங்ககிட்ட பேசனும்" என்றான்.

"நான் பிஸியா இருக்கேன் சக்தி நாம அப்புறம் பேசுவோமே" என்றார்.

"நான் இப்பவே பேசனும்... எனக்காக உங்க வேலையைக் கொஞ்ச நேரம் ஒதுக்கி வையுங்க" என்று அவன் தீர்க்கமாக உரைக்க

மீனாக்ஷி அவனை நிமிர்ந்து நோக்கிய போது அவன் பேசியே தீருவேன் என்று பிடிவாதமாய் நின்றிருந்ததைக் கவனித்தார்.

இப்போது தன் வேலைகளை ஒதுக்கி விட்டு வேண்டா வெறுப்பாய் "ம் சொல்லு" என்றார்.

"சிவசக்தியை நான் காதலிக்கிறேன்னு உங்களுக்கு ஏற்கனவே தெரியும்... அவதான் எனக்கு மனைவியா வரனும்னு நான் ஆசைப்படறேன்... இதுதான் என் முடிவு ... உங்க முடிவு என்ன?" என்று பளிச்சென்று கேட்டுவிட்டான்.

"அதான் உன் முடிவை நீ தீர்க்கமா சொல்லிட்டியே... அதுல நான் சொல்றதுக்கு என்ன இருக்கு ?!" என்று மீனாக்ஷி சொல்லிவிட்டு அலட்சியமாய் முகத்தை திருப்பிக் கொண்டார்.

"என்னோட எல்லா டெசிஷனை நீங்க ஏத்துக்கிட்டு இருந்திருக்கீங்க... இப்ப மட்டும் என்ன மாம் ?!"

"இதுவரைக்கும் நீ என் மகனா இருந்த... ஆனா இப்போ ?" என்று குழப்பமாக அவர் அவனை நோக்க

"இப்போ இல்ல... நான் எப்பவுமே உங்க மகன்தான்... அதுல எந்த மாற்றமும் இல்லை..." என்றான்.

"அப்படின்னா நான் சொல்ற விஷயத்தை மறுக்காம செய்யனும்... செய்வியா சக்தி"

"சிவசக்தியை விட்டுவிட்டு நான் வேறொரு பெண்ணை கல்யாணம் பன்றதை தவிர வேற எது சொன்னாலும் நான் கேட்கிறேன்" என்றான்.

"அப்படின்னா கம்பிளீட்டா லாஸ்ல போயிட்டிருக்கிற துபாயில் ஒரு பெரிய ஹோட்டல் விற்பனைக்கு வந்திருக்கு... அந்த ஹோட்டலை யாருமே வாங்க தயாராயில்லை... ஆனா உங்கப்பா அதை வாங்க டிசைட் பண்ணிட்டிருக்கார்... நஷ்டத்தில போயிட்டிருக்கிற அந்த ஹோட்டலை நீ தனியா நிர்வகிச்சு... உன் திறமையால லாபகரமானதா மாத்தனும்... ரொம்ப சேலஞ்சிங்கான டாஸ்க்... உன்னால முடியுமா ?!" என்று கேட்டார்.

முடியுமா என்று தன் அம்மா கேட்பது அவனுக்கு ஆச்சர்யமாய் இருந்தது. தன் மீதான நம்பிக்கை தன் அம்மாவுக்கு குன்றிவிட்டதை அவன் அப்போது உணர்ந்து கொண்டான்.

"நீங்க இப்படி என்கிட்ட கேட்டிருக்க கூடாது... நான் எந்த விஷயத்தையாவது செய்ய முடியாதுன்னு பின்வாங்கி இருக்கேனா ?!" என்று கோபம் கலந்த தொனியில் உரைத்தான்.

மீனாக்ஷி கொஞ்சம் நேரம் யோசித்துவிட்டு "தென் கோஹெட் சக்தி... நீ உன்னை நிரூபிக்க கிடைச்சிருக்கிற பெரிய வாய்ப்பு இது" என்றார்.

சக்தி பேச வந்தது ஒன்று. ஆனால் அவன் அம்மா அவனை முற்றிலும் வேறு திசையில் திருப்பி அவன் பேச எண்ணியதை மாற்றி விட்டார். அவனுக்கு தன் அம்மாவின் புத்திசாலித்தனத்தை எண்ணி வியக்கவே தோன்றியது.

அவன் யோசித்தபடி நிற்க மீனாக்ஷி அவன் முகத்தைப் பார்த்து "வேறு ஏதாவது விஷயம் சொல்லனுமா ?!" என்று கேட்க

"சிவசக்தியை நான் கல்யாணம் பண்ணிக்கிறதை பத்தி உங்க முடிவை நீங்கச் சொல்லவே இல்லையே மாம்" என்று மீண்டும் கேட்டான்.

"நான் சொன்ன விஷயத்தை நீ செய்... நீ சொன்ன விஷயத்தைப் பத்தி நான் யோசிக்கிறேன்" என்று இறுதியாக உரைத்துவிட்டு மீண்டும் தன் வேலையில் இறங்கினார்.

அதற்கு மேல் சக்திசெல்வன் மீனாக்ஷியிடம் பேசாமல் புறப்பட்டான். அவன் அம்மாவின் திட்டம் அவனுக்கு புரியாமல் இல்லை. தன்னையும் சிவசக்தியும் வெகு தொலைவு தள்ளி வைப்பதே அவரின் எண்ணம்.

ஆனால் இந்தப் பிரிவு அவர்களின் காதலை பலவீனமாய் மாற்றிவிடாது என்ற உறுதியாக நம்பினான். சிவசக்தியிடமும் அவன் இது குறித்து சொல்ல அவளும் தைரியமாக சம்மதம் தெரிவித்துவிட்டாள். அவளுக்கு சக்தியின் மீது அசாத்தியமான நம்பிக்கை இருந்தது.

இருப்பினும் அவள் அவனுக்குத் தைரிய வார்த்தைகள் சொன்னாலும் மனதளவில் பெரும் வேதனையை அடைந்திருந்தாள்.

அவர்கள் வாழ்வில் இதுவரையில் வந்த இடைவெளி எல்லாம் ஒன்றுமில்லை என்றளவுக்கு அத்தனை பெரிய நீண்டப் பிரிவை அவர்கள் கடந்து வர நேரிட்டது.

சிவசக்தியும் யூ.பி.எஸ்.சி நேர்முகத் தேர்வை எதிர் கொண்டு வெற்றியும் கண்டுவிட்டாள். ஐ.ஏ.எஸ் தேர்வில் வெற்றி கண்டதில் பாராட்டுக்கள் அவளுக்கு ஏராளமாய் குவிந்தன.

பிறகு சிவசக்தி இரண்டு வருட ஐ.ஏ.எஸ் பயிற்சிகளை கடந்து வர வேண்டி இருந்தது. இதற்கிடையில் ஒரே ஒரு முறை கூட அவர்கள் சந்திக்கும் வாய்ப்பு கிட்டவேயில்லை. அவர்கள் இருவருமே சந்திக்கும் தருணம் எப்போது என்பதற்கான விடை அவர்களுக்கே தெரியவில்லை.

உண்மையிலேயே அவர்கள் காதலை மனதில் சுமந்தபடி பயணித்து வந்தப் பாதை முடிவற்றதாய் போய்க் கொண்டே இருக்க, சிவசக்திக்கு முசோரியில் பயிற்சி காலம் முடிந்து ராமநாதபுரத்தில் சப்-கலெக்டர் பதவியில் பணியாற்றும்படியாக அறிவுறுத்தப்பட்டது.

இப்போது நம் முன்னிலையில் நிற்பது அவசர புத்தியோடும் அசட்டுத் தைரியத்தோடும் அதீத கோபம் கொண்டு பார்த்த சிவசக்தி இல்லை வாசகர்களே!

இந்த இரண்டு வருடத்தில் அவள் கற்றுக் கொண்ட அனுபவமும், சந்தித்த பல்வேறு விதமான மனிதர்களுடனான பழக்கங்களும், காதலனின் பிரிவும் அவள் தோற்றத்தை முற்றிலுமாய் மாற்றி வேறுவிதமாய் நம் முன் தோன்றச் செய்தது .

சிவசக்தி முகத்தில் வெளிப்பட்ட கம்பீரமான அழகு, பார்வையில் தெரிந்த தெளிவு, அவளின் உயரமான உருவத்திற்கு ஏற்ற நிமிர்ந்த நடை, ரசிப்பைத் தாண்டி மரியாதையாய் பார்க்க வைக்கும் உடை மாற்றம் என அவள் நம் பாரதி கண்ட புதுமை பெண்ணின் மொத்த இலக்கணமாகவே காட்சியளித்தாள்.

சிவசக்தி பயிற்சி மையத்தில் இருந்து சென்னைக்கு சென்ற பின் தன் வேலையில் சேர்வதற்கு எண்ணிக் கொண்டிருக்கையில் மீனாக்ஷியின் செகரெட்டிரியின் அழைப்பு வந்தது.

மீனாக்ஷி சிவசக்தியை சந்திக்க விரும்புவதாகவும் அவளை டெல்லிக்கு வரும்படி கேட்க , சக்திக்கு மறுக்க மனம் வரவில்லை. அவள் சென்னைக்கு செல்வதற்கு முன்பு அந்த அழைப்பை ஏற்று மீனாக்ஷியை பார்க்கச் சென்றாள்.

மீண்டும் டெல்லி விமான நிலையத்தை சிவசக்தி வந்தடைந்தாள். ஒவ்வொரு முறையும் தான் அங்கே சக்திசெல்வனை சந்திக்க நேரிட்டதை எண்ணிக் கொண்டாள். இம்முறையும் அவ்வாறு பார்க்க முடியுமா என்று எண்ணியபடி தயங்கி நிற்க அவள் யோசனையைத் தடை செய்யும் விதமாய் ஒரு ஆடவன் அவளை நெருங்கி

"நீங்க மிஸ்.சிவசக்தியா" என்று விசாரித்தான்.

"எஸ்" என்று சொல்ல அந்த ஆடவன் "மேடம் உங்களுக்காக வெயிட் பன்றாங்க" என்று அழைத்துச் சென்றான்.

சிவசக்தியை ஒரு சிவப்பு நிற கார் அருகில் அந்த ஆடவன் அழைத்துச் சென்று உள்ளே ஏறச் சொன்னான். சக்தி கொஞ்சம் யோசனையோடு உள்ளே ஏற

மீனாக்ஷி தனக்கே உரியக் கம்பீரத்தோடு உள்ளே அமர்ந்திருந்தாள்.

அவர்கள் இருவருக்கும் இது அறிமுக சந்திப்பு இல்லையெனிலும் இதுதான் முதல் முறை அவர்கள் இருவரும் நேரெதிராய் பேசிக் கொள்ளப் போவது.
 




Sapphire

இணை அமைச்சர்
Joined
Oct 24, 2019
Messages
540
Reaction score
482
Mam how can i read solladi sivasakthi novel.. pls help me
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top