• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thaalikkayiru 7

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

paulrasaiya

நாட்டாமை
Joined
Jun 5, 2018
Messages
36
Reaction score
206
Location
Irenepuram
அத்தியாயம் -7-

காற்று வரிசையாக நட்டிருந்த வாழை இலைகளை கிழித்துக்கொண்டிருந்தது, கிழிந்த இலைகள் காற்றுக்கு நன்றி சொல்வதைப்போல அசைந்து கொண்டு நின்றது.

தூரத்தில் சிலர் வயல் வேலை செய்து கொண்டு நின்றார்கள். தேவி குளத்தில் அருகிலிருந்த வயலங்கரை பங்களாவில் மதிய உணவை முடித்து விட்டு சாய்வு நாற்காலியில் அமர்ந்து காற்றை எதிர்கொண்டு வயலை ரசித்தபடி இருந்தார் தீப்பொறி திவாகர்.

வெளியே பைக் வரும் சத்தமும் கேட்டு நின்றது. மர மாடிப்படிகளில் நடக்கும் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தார். சூர்யா புன்னகையோடு உள்ளே நுழைந்தான்.

”அங்கிள்...நல்லா இருக்கீங்களா? என்ன வரச்சொன்னீங்களாமே!” அவருக்கு எதிரே கிடந்த இருக்கையில் தன் உடலை ஒப்படைத்தான் சூர்யா.

”வா சூர்யா, உன் அப்பாவோட உடம்பு இப்போ எப்பிடி இருக்கு?”

”இப்போ பரவாயில்ல, டிரீட்மெண்டுக்கு சென்னை போன என் அப்பா செங்கல் பட்டில இருக்கிற தங்கச்சி வீட்டில கொஞ்ச நாள் இருந்திட்டு வர்றேன்னு சொன்னார் அதனால அங்கேயே விட்டுட்டு வந்திட்டேன்.”

”சூர்யா, நானும் உன் அப்பாவும் அந்த காலத்துல நெருங்கிய நண்பர்கள். நாம தூரத்துச் சொந்தமும் கூட. நான் அமெரிக்கா போனதுக்கப்பறம் அந்த நட்பு முறிஞ்சு போச்சு, இனிமே நான் அமெரிக்கா போகப் போறதில்ல, உன்ன இங்க வரச்சொன்னதே உன்கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசத்தான்.!” டீப்பாயின் மீதிருந்த வெளிநாட்டு சிகரெட் ஒன்றை உருவி வாயில் நட்டு அதை நெருப்பிடம் நீட்டினார் தீப்பொறி திவாகர்.

சிகரெட் பாக்கெட்டை சூர்யாவிடம் நீட்ட வேண்டாமென்று வேசம் போட்டான் சூர்யா. அவன் உள்மனது ஆசைப்பட்டது.

”என்ன விஷயம் அங்கிள்? சொல்லுங்க?”

”உன் சேரியில இருக்கிற ஒரு பொண்ணு என் மகன் பிரபாகரன் மேல ஆச வெச்சிட்டா, என் மகனும் அந்த பொண்ணு மேல ஆச வெச்சிட்டான், அட ஆசப் படுறதில என்ன தப்பிருக்கு அனுபவிச்சா அனுபவிக்கட்டுமேன்னு விட்டிட்டேன், நம்ம பையன் கொஞ்சம் ரூட் மாறி கட்டிக்கிட்டா அந்த சேரிப்பொண்ணத்தான் கட்டிக்குவேன்னு ஒத்தக் கால்ல நிக்கறான். இந்த தீப்பொறி திவாகர் நெருப்பு மாதிரி தொட்டா சாம்பல் தான் மிஞ்சுமுன்னு என் பையனுக்கு நல்லாவே தெரியும் , இருந்தாலும் என்கிட்டயே சவால் விட்டிட்டான். நம்ம ரேஞ்சுக்கு என்ன பண்ணியிருப்பேன்னு நீயே சொல்லு சூர்யா.” சிக்ரெட்டில் படிந்திருந்த சாம்பலை ஆஸ்ட்ரேக்குள் கொட்டிவிட்டுச் சொன்னார் தீப்பொறி திவாகர்.

”அங்கிள், பிரபாகரன் ஒரு அப்பாவியா இருக்கிறத நினச்சி நான் ரொம்ப ஃபீல் பண்றேன், என்னப் பொறுத்தவரைக்கும் பெண்கள் ஒரு பூ மாதிரி, பூ மேல ஆசைப்படுறதில தப்பே இல்ல, முகர்ந்து பார்த்துட்டு விட்டிடணும், உங்க மகன் பிரபாகரன் மாதிரி அந்தப் பூவ அடைய நினைக்கிறது ரொம்ப ரொம்ப தப்பு, நானா இருந்தா அந்தப் பூவ முகர்ந்து பார்த்திட்டு வேரோட பிடுங்கி எறிஞ்சிருப்பேன்.!” பொறுமையின்றி டீப்பாயிலிருந்த சிகரெட் ஒன்றை எடுத்து பற்ற வைத்துக் கொண்டான் சூர்யா.

”கரெக்ட், நீ சொன்னது மாதிரி என் பையன் மேல ஆசப்பட்ட அந்தப் பொண்ண தீர்த்துக் கட்டுறதுக்கு கேடி ஜோசப்ப ஏற்பாடு பண்ணீட்டேன். இண்ணைக்கோ நாளைக்கோ அவ கணக்கு குளோஸ் ஆயிடும்!’’.

”என் சேரியில குடியிருக்கிற பொண்ணுன்னு சொன்னீங்க, ஆனா அவ யாருன்னு சொல்லலையே அங்கிள்.”

”உன் தோட்டத்துல வேல செய்யற கருப்பசாமியோட பொண்ணு, பேரு வசந்தி.”

”வசந்தியா?

”என்னப்பா, வசந்தியின்னு சொன்னதும் வாயடைச்சுப் போயிட்ட?

”அங்கிள், அந்தப் பொண்ணு மேல நானும் ஒரு கண் வெச்சிருந்தேன். இண்ணைக்கோ நாளைக்கோ அந்த வசந்திய என் காலடியில விழ வச்சு என் ஆசைக்கு இணங்க வெச்சிடலாமுன்னு நெனச்சிருந்தேன், ஆனா நீங்க அவ உயிருக்கே உல வெச்சிட்டீங்களே.!” மனதில் வருத்தம் நிலை கொள்ள அதைக் காட்டிக் கொள்ளாதது போல் நடித்தான்.

வசந்தியை அடையலாம் என்று காத்திருந்தவனுக்கு அவளை தீர்த்துகட்ட முடிவு செய்தது பிடிக்கவில்லை என்றாலும் பிடித்தது போல் பாவனை செய்தான்.

அவன் உடல் வளைந்து நெளியும் பாம்பைப்போல நெளிந்தது. புகை அவனுக்கு பகை ஆனது. எரிந்து கொண்டிருந்த பாதி சிகரெட்டை ஆஸ்ட்ரேயில் குத்தி அணைத்தான். புகை சற்று கூடுதலாக மேலெழுந்தது.

வெளியில் கார் ஒன்று வேகமாய் வந்து நின்றது, வாசுதேவன் வேகமாய் காரை விட்டு இறங்கி மாடிப்படிகளில் ஏறினான். அவன் காலடிச்சத்தமே ஏதோ அவசரம் என்பதைச் சொல்லியது.

”அண்ணா, .வசந்திய கொல பண்றேன்னு சொல்லிகிட்டு போன கேடி ஜோசப் அவள கொல பண்ணாம அவ கழுத்தில தாலியக் கட்டியிட்டான்.!” பதட்டத்துடன் சொன்னான் வாசுதேவன்.

”என்னது ..கேடி ஜோசப் வசந்தி கழுத்துல தாலி கட்டியிட்டானா?”

”ஆமாண்ணா மடத்து இசக்கி கோவில்ல வெச்சு தாலி கட்டினத என் வீட்டு வேலைக்காரன் பார்த்துட்டு என்கிட்ட சொன்னான்.”

”ஏய்...இருக்காது, ஒரு முரடன் அதுவும் பணத்துக்காக கொலையே பண்றவன் அப்பிடியெல்லாம் பண்ணியிருக்க மாட்டான், உன் வீட்டு வேலைக்காரன் வேற யாரையோ பார்த்துட்டு தப்பா சொல்லி இருக்கலாம்!”

”அண்ணா.. என் வீட்டு வேலைக்காரன் சொன்னத முதல்ல நானும் நம்பல, கருப்பசாமியோட குடிசைக்கு பக்கத்துல இருக்குற என் ஃபிரண்டுகிட்ட ஃபோன் பண்ணி கேட்டேன், அவனும் ஆமான்னு சொன்னான்!” வாசுதேவன் மேலும் மேலும் பதட்டமாகவேச் சொன்னான்.

”முட்டாள், என்கிட்ட அஞ்சு லட்சம் பணம் அட்வான்ஸ் வாங்கிகிட்டு எனக்கே அல்வா குடுக்க நினைக்கிறானா? இந்த தீப்பொறி திவாகர் கிட்டயே ஏமாத்து வேல காட்டுறானா? இப்பவே அவன் வீட்டுக்குக் கிளம்பறேன்.!”

”அண்ணா அவசரப்படாதீங்க...நீங்க இங்கேயே இருங்க, அவனுக்கு ஃபோன் போட்டு அவன இங்க வரச்சொல்வோம்.!”

”ஆமா அங்கிள் அதுதான் நல்லதுன்னு எனக்கும் தோணுது!” சூர்யாவும் தன் மனதில் தோன்றியதைச் சொன்னான்.

தீப்பொறி திவாகர் சற்று அமைதியானார். இருந்தாலும் டென்சன் குறையவில்லை. மீண்டும் ஒரு சிகரெட் பத்த வைத்தார். புகை அவன் உடலுக்குள் போய் வந்தாலும் மனசு அடித்துக்கொண்டே கிடந்தது.

வசந்தி கழுத்துல தாலி கட்டிகிட்டு குடும்பம் நடத்துனா பிரபாகரன் மனசு புண்படுமே, அவளையே நினைச்சுகிட்டு வாழ்க்கையை அழிச்சிடுவானே, ஒரேயடியா அவ மேல போயிட்டா கொஞ்ச நாள் துக்கம் அப்பறம் அது மறந்து போகும், இது அவளை பார்க்கும் போதெல்லாம் அவளோட ஞாபகங்கள் தாலாட்டுமே. ச்சே என்ன பண்றது!” தீப்பொறி திவாகர் தாறு மாறாய் சிந்தித்தார்.

வெளியே புல்லட் சத்தம் கேட்டது. அது கேடி ஜோசப்பின் புல்லட் சத்தம் போல் கேட்க இருக்கையை விட்டு எழுந்து திறந்திருந்த ஜன்னல் வழியே பார்த்தார்.

கேடி ஜோசப் புல்லட்டை ஸ்டேண்டு போட்டு நிறுத்திவிட்டு மாடிப்படிகளில் ஏறி வந்து கொண்டிருந்தான்.

”வா கேடி ஜோசப் வா, உனக்கு நூறு ஆயுசு, இப்பத்தான் உன்னப் பத்தி பேசிகிட்டு இருந்தேன், வசந்திய புணமாக்கிட்டு வருவேன்னு இந்த சூர்யாகிட்ட பெருமையா பேசிகிட்டு இருந்தேன், நீ என்னடாண்ணா அவ கழுத்துல தாலியக் கட்டி மனைவியாக்கியிட்டியாமே!” நக்கலாகவே கேட்டார் தீப்பொறி திவாகர்.

”எத்தனையோ பேரோட உயிரச் பறிச்ச எனக்கு வசந்திய கொல பண்ண மனசு வரல, அவள உயிரோட விட்டா நீங்க அவள வாழவிடமாட்டீங்கன்னு எனக்கு நல்லாவேத் தெரியும், அவ வாழணுமுன்னு நினச்சித்தான் அவ கழுத்துல நான் தாலி கட்டினேன், இந்தாங்க உங்ககிட்ட வாங்கின அட்வான்ஸ் பணம்!” சொல்லிவிட்டு நோட்டுக்கட்டை எடுத்து டீப்பாயின் மீது வைத்தான் கேடி ஜோசப்.

”அங்கிள், உங்க மகனுக்குத்தான் வசந்தி மேல ஆச இருக்குன்னு நினச்சேன் ஆனா கேடி ஜோசப்புக்கும் வசந்தி மேல ஆச இருக்குன்னு இப்பத்தானே புரியுது, செடிய வேரோட பிடுங்கியிருந்தா யாருக்கும் எந்த பிரச்சனையும் இருந்திருக்காது ஆனா நீ அவ கழுத்துல தாலியக் கட்டி மறுபடியும் பிரச்சனைய உண்டு பண்ணீட்டியே!” உரத்த குரலில் சொன்னான் சூர்யா.

” இது எனக்கும் அவருக்கும் உள்ள விவகாரம், இதுல நீ பேசுறதுக்கு எந்த உரிமையும் இல்ல. மிஸ்டர் தீப்பொறி திவாகர், வசந்தி உங்க வீட்டுக்கு மருமகளா வர ஆசப்பட்டவ, அவள தடுத்து நிறுத்தி அவ கழுத்துல தாலிய கட்டினேன் ஏன் தெரியுமா? உங்க வீட்டுக்கு அவ மருமகளா வரக்கூடாதுன்னுதான், இப்ப அந்த வசந்தியால உங்களுக்கு ஏதாவது பிரச்சனையா சொல்லுங்க?” கம்பீரமாய் கேட்டான் கேடி ஜோசப்.

”இப்ப பிரச்சனையே நீ தான். வசந்தி உயிரோட இருந்தா என் மகன் நிம்மதியா இருக்க மாட்டான், அதனால வசந்தி உயிரோட இருக்கக் கூடாது முடியுமா முடியாதா?”

”முடியாதுன்னா என்ன செய்வீங்க!”

”உன்ன மாதிரி எத்தன ஜோசப்புகளையும் எங்களால உருவாக்க முடியும், பணத்த விட்டெறிஞ்சா உன்ன விடவும் பலசாலிய எங்களுக்கு பாடிகாட்டா வெச்சிருக்க முடியும்!” வாசுதேவன் உணர்ச்சிவசப்பட்டு பேசினான்.

”பணத்தால உன்னால முடிஞ்சா எதுவும் செய், இந்த கேடி ஜோசப்ப அசைக்க இதுவரைக்கும் எவனும் பொறந்ததும் இல்ல, இனி பொறக்கப் போறதும் இல்ல, நான் சொல்லிகிட்டு எதையும் செய்யவும் மாட்டேன், செஞ்சிகிட்டு எதையும் சொல்லவும் மாட்டேன். வர்றேன்!” மிடுக்காய் அவன் சொல்லிவிட்டு யார் பதிலுக்கும் காத்திருக்காமல் மரப்பலகைகளின் படிக்கட்டுகள் வழியே நடந்தான். அவன் காலடிச்சத்தம் அடங்கும் வரை அமைதி நிலவியது.

வெளியே புல்லட் ஸ்டார்ட் ஆகும் சத்தம் கேட்டது. கேடி ஜோசப் மின்னல் வேகத்தில் மறைந்தான். இப்படியொரு அதிர்ச்சியை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

எந்த முரடனாவது கொலை செய்யச் சொன்ன பொண்ணை திருமணம் செய்து கொள்வானா? அவள் மீது அவனுக்கு ஈர்ப்பு ஏற்பட்டு அப்படிச் செய்தானா?

திருடப்போன இடத்தில் சாப்பிட்டு ஏப்பம் விடும் திருடனைப்போல வசந்தியை தீர்த்துக்கட்டப்போன கேடி ஜோசப் அவள் கழுத்தில் தாலி கட்டிவிட்டானே.

பிரபாகரனை எப்படி சமாளிப்பது என்று தெரியாமல் தடுமாறிக்கொண்டிருந்தார் தீப்பொறி திவாகர். அவர் நிலமையைத் தெரிந்து கொண்டு வெளிநாட்டு சரக்கு பாட்டிலைத் திறந்து ஒரு லார்ஜ் ஊத்தி அவரிடம் நீட்டினான் வாசுதேவன். அதில் சமாதானம் அடைந்தார் தீப்பொறி திவாகர்.

”அண்ணா…ஒரு வகையில அவன் செஞ்சது நல்லதாகவே எனக்குப் படுது, அந்தச் சேரிப்பொண்னு நம்ம வீட்டுக்கு மருமகளா வந்தா நமக்குத் தான் கேவலம். அனா இப்போ அந்த பொண்ணு கழுத்துல கேடி ஜோசப் தாலி கட்டி மனைவியாக்கியிட்டான், பிரச்சனை தீர்ந்தது மாதிரி தானே..!’’ வாசுதேவன் தன் மனதில் பட்டதைச் சொன்னான்.

’’இல்ல தம்பி..இந்த காலத்துப் பசஙகள அவ்வளவு சாதாரணமா எடை போட்டிட முடியாது, நினைச்ச பொண்ணு கிடைக்கலையின்னா ஏடாகூடமா ஏதாவது பண்ணிடுவானோங்கிற பயம் என் மனசுக்குள்ள நிக்குது!’’

”அண்ணா…ஒரு நடுத்தர வீட்டு மகனா பிரபாகரன் இருந்தா நீங்க யோசிக்கிறது மாதிரி நடக்க வாய்ப்பு இருக்கு, பிரபாகரன் கோடீஸ்வரரான உங்க மகன், இதெல்லாம் மறந்துட்டு நாம காட்டுற பொண்ண கட்டிக்கப் போறானா இல்லையான்னு பாருங்க!” வாசுதேவன் நம்பிக்கையோடு சொன்னான்.

” ஒரு விஷயம் நாம யோசிக்கணும், கேடி ஜோசப் அவள மனைவியாக்கி வேற ஊருக்கு எங்கும் போயிடல, பக்கத்து ஊரான முள்ளஞ்சேரிதான் அவன் வீடு, நாளைக்கு பிரபாகரன் அந்த வசந்திய மறுபடியும் மீட் பண்ண வாய்ப்பு இருக்கு அதனால கேடி ஜோசப் இந்த ஊர்ல இருக்கக்கூடாது அதுக்கு ஏதாவது வழி பண்ணுங்க அங்கிள்” சூர்யா குட்டையைக் கலக்கி அதில் மீன் பிடிக்க வழி உண்டா என்று பார்த்தான்.

தீப்பொறி திவாகர் மீண்டும் குழம்பினார். அவர் மனதுக்கு கேடி ஜோசப் திருமணம் செய்து கொண்டது சரியென்று படவே இல்லை.

எதையோ யோசித்தபடி இருந்தார். சூர்யாவும் வாசுதேவனும் அவரை தனிமையில் விட்டு விட்டு மாடிப்படி விட்டு கீழே இறங்கிக் கொண்டிருந்தார்கள்.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
நான்தான் First,
பால்ராசய்யா சார்
 




stella

அமைச்சர்
Joined
May 21, 2018
Messages
1,458
Reaction score
2,327
Age
28
Super sir 4 episodes ondra kuduthirukeenga story is very very awesome romba viru viruppa poguthu keep rocking sir
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Dhivakar, Surya and Vasudhevan moonu perum evvalavu ketta ennam pidichavanga
Ivaroda paiyanukkaaga Vasanthi saaganumaa, Paalraasaiyaa Sir?
Vasudhevan konjam paravayillai polave
 




lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
ஒரு பொண்ணு வாழக்கூடாது என்று என்னமா யோசிக்கிறார்கள்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top