மௌனம் பேசும்! – 04
மௌனம் பேசும்!
அத்தியாயம் – 04
மூன்று முடிச்சையும்,பையனே போட்டிருக்க அதில்,தாட்சாயிணி முகம் சுருங்கியது.கல்யாணி தான்,மகளை விழிகளால் தேற்றியது.
அடுத்தடுத்து இருவரின் விழிகளும் உரசிக் கொள்ள மறுத்தன.அவள் தவிக்க,அவன் தவிர்க்க என,உணர்வுகளின் போராட்டத்தில் அல்லாடின,இரு மனங்களும்.
“பாத்துக்கவே மாட்டாங்களா..?”நினைத்த பார்கவிக்கு அத்தனை கவலை,தோழியின் வாழ்க்கையை எண்ணுகையில்.பார்வை இருவரையும் விட்டு அகல மறுத்தது.
அடுத்து அக்னி பிரதட்சிணை.முதலில் பையன் எழுந்து கொள்ள,அடுத்து அவள்.பாதி நிமிர்ந்தவளின் கால்கள் புடவையில் பின்னிக் கொண்டு சதி செய்ய,பிடிமானத்திற்கு அவனின் கரத்தை அவள் பிடித்து விட,நொடியில் திரும்பியவனின் மறு கரமும் அவளின் முழங்கைப் பற்றி அவளுக்கு உதவி செய்திட,இருவருக்கும் இடையிலான இடைவெளி கொஞ்சமாய் தகர்ந்திருந்தன.
அவள் முழுதாய் எழுந்து கொண்டதுமே,அவன் கரங்கள் விலகல் கேட்க,அவளுக்கு தன் மீது கோபம்.மனதுக்குள் தன்னையே கடிந்து கொண்டாள்.
“அட பார்ர்ரா!”பார்கவியின் பார்வையில் சுவாரஷ்யம்.
அவனின் வேட்டியுடன் அவளின் சேலை நுனியை முடிச்சிட,தொடர்ந்து அவளின் சிறு விரலை தன் விரல் நுனியுடன் அவன் கோர்த்துக் கொள்ள வேண்டுமே.
பற்றாது பிடிக்காது மயிரிழை இடைவெளியில்,விரலை கொண்டு நகர்த்தி அவன் நொடிகளை நீட்டிக்க,அவளைத் தவிர வேறு எவருக்கும் அவனின் செய்கையும்,அந்த இடைவெளியும் அகப்படும் சாத்தியமில்லை.
அவன் தன் விரல் கோர்த்திருந்தால் கூட,அவள் அதை பெரிதாய் கண்டு கொண்டிருக்க மாட்டாள்.சடங்கு என்று அப்படியே மனம் ஏற்றிருக்கும்,என்பது சர்வ நிச்சயமே.
“பிடித்தால் பற்றிக்கொள்” என்பது போல், அவன் தந்தது,இடைவெளியா..?
“வேண்டுமென்றால் உன் விருப்பம்” என,அவன் சுமந்து நின்றது,பொருட்படுத்தாமையா..?
என்பது புரியாத போதிலும்,அவனின் உரசிடா சமீபம்,அவளை அலைக்கழித்தது என்னவோ,உண்மை.
நகர்ந்திடா பாதங்களும் நீளா இடைவெளியும்,அவள் முடிவிலேயே அடுத்த அடி என்பதை அவளுக்குணர்த்திட,விழிகள் சுழன்றோய்ந்தன.
சிறு தயக்கத்துடன்,மருதாணி தொப்பியுடனான,அவள் சிறு விரலை அவன் விரல் சேர்த்திட,அப்போதும் அவன் விரல் அவளதை வளைத்திடவில்லை.அவள் தான்,சுற்றி இறுக்கினாள்,சுற்றம் பார்த்தவாறே.
அடுத்தடுத்து சடங்குகள்,தாமதியாமல் நிகழ்ந்திட,சுபத்ராவின் முகத்தில் மட்டும்,அத்தனை வேதனை.விழிகள் அதனைக் காட்டிக் கொடுத்திட,இளையவள் வெண்மதிக்குமே மனம் ஆறவில்லை.
பார்கவி மட்டுந்தான்,முகத்தில் மகிழ்வை வெளிக்காட்டி நின்றாள்.”நல்ல பையன் தான..எதுக்கு கவல..?”என்று வெண்மதியிடம் வினவியவளுக்கு,முன்பிருந்த யோசனை இல்லை.
பையனைப் பார்த்த பின்பு,மனதில் ஒரு நிம்மதி பரவியது.பாவையவளுக்கு விருப்பமில்லை என்ற போது,அவள் மனதில் வந்து சேர்ந்திருந்த பொடுபொடுப்பு,கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து போயிருந்தது.
“போங்கக்கா!”முகத்தை வெட்டிக் கொண்டு அவள் சென்று விட,இவளுக்குத் தான் எரிச்சலானது.”போடி போறதுக்கு..”மனதுக்குள் கருவியவளுக்கு,பையனைப் பார்க்க பார்க்க,தன்னாலே அவன் மீதான மரியாதை கூடிப் போவது போல்.
“ஃப்ரெண்டு புருஷனா இல்லன்னா,நாமளே சைட் அடிச்சு இருப்போம்..ஹேன்ட்ஸமான ஆளு தான்..”தனக்குள் நினைத்தவளின் மனதில்;இன்றைய அவர்களின் தனிச்சையான நெருக்கம்,மனதில் படமாய் விரிய இதழ்களில் புன்னகை தேங்கியது.
பந்தியில் மணமக்கள் அமர்ந்திருக்க,”எங்க குடும்பத்துல மாப்ள சாப்டறத தான் பொண்ணும் சாப்பிடனும்னு வழக்கம்”கல்யாணியின் அக்காள் மங்கலம் பாவையவளிடம் அதட்டல் போல் கூறிட,சுபத்ராவின் முகம் மாறியது.
வெண்மதியுமே தாயின் தோளில் இடித்திட,பார்கவியுமே பொங்க விழைந்து,பையனை கண்டதும் அப்படியே அமைதியாகி விட்டாள்.
பையனின் வதனமோ,உணர்வற்று இருக்க சிலவற்றை ஏற்று,மற்றையவற்றை மறுத்து என அவன் இலை நிரம்ப,அவள் இலையிலும் அதே பட்சணங்கள்.
“போட்டோ எடுங்கப்பா..”யாரோ ஒருவரின் குரலில்,முதலில் அலைபேசியை எடுத்தது பார்கவி தான்.
புகைப்படங்களை எடுத்தவாறே,முகம் கடுகடுத்திட,ஒவ்வொன்றையும் கவனித்துக் கொண்டு தான் இருந்தாள்,பார்கவி.இதழ்களுக்குள் மங்கலத்திற்கு அத்தனை அர்ச்சனை வேறு நடந்தது.
இறுதியாய் ஜிலேபியை அவன் உடைத்துச் சுவைத்திட,அவளும் அப்போது தான் உணவை முடித்தாள்.ஆட்கள் இருப்பதால்,உண்ணச் சங்கடம் வேறு.
வண்டியில் ஏறி அமர்ந்ததும்,முதலில் பையனின் வீட்டுக்கு அழைத்துச் சென்றனர்.அவனின் வீடு.அவனின் இரசைனக்கு ஏற்றவாறு,அவன் கட்டிய வீடு.
அன்றிரவு,பாவையவளின் வீடு செல்ல என,அவர்கள் நினைத்திருந்தது,பையனின் மறுப்பில் தவிடுபொடியாக,கல்யாணி எத்தனை முயன்றும்,தன் பிடியை தளர்த்திக் கொள்ளவில்லை,அவன்.
சுபத்ராவுக்கு இதில்,இன்னும் கவலை.”நீ தம்பி கிட்ட சொல்லேன்..”என மகளை பிடித்துலுக்க,அவளோ நிர்தட்சண்யமாய் மறுத்தாள்.
“உங்க இஷ்டப்படி எல்லாம் பண்ணியாச்சு தான..இப்போவாச்சும் பேசாம இருங்க மா..”ஆற்றாற்றுப் போனவள் போல் அவள் உரைத்திட,தாயவரின் முகத்தில் பெரும் வாட்டம்.
அவனின் பிடிவாதமும்,அதற்கு தகுந்தாற் போல் அவள் சுமந்திருந்த அழுத்தமும்,ஒன்றுக்கொன்று சளைத்தது இல்லை எனவே,தாயவருக்குத் தோன்றியது.
அசைந்து கொடுக்க மறுத்தவர்களை,தம் வழிக்கு கொண்டு வர இயலாமல் தோற்றுப் போய்,அன்றிரவு அவனின் வீட்டிலேயே சொந்தங்கள் தங்கிக் கொள்வதாக ஏற்பாடு.
பெற்றவர்கள் கண்ணீருடன் விடை கொடுத்திட,பாவையவள் அழவில்லை.வெண்மதி அவளைக் கட்டிக் கொண்டு கதறியிருக்க,அவளின் முதுகைத் வருடி ஆறுதல் அளித்த போது முகம் மாறினாலும்,அதைக் காட்டிக் கொள்ள மறுத்தாள்.
அன்றிரவு மனைவியை கிளப்ப நடாரஜன் முயன்ற போதிலும்,மங்கலம் இருப்பதால் செய்ய முடியவில்லை.கண்காணிப்பு குழுவினர் போல்,அக்காளும் தங்கையும் நடந்து கொள்ள,அதில் அவருக்கு கடுங்கோபம்.
இரவு அறைக்குள் வந்தவளை ஒரு வித அச்சம் கவ்வ,அது அவசியமே இல்லை என்பது போல் அவன் உள்ளே வரவில்லை.வெளியில் வீசிய காற்றுக்கு, அவன் தேகத்தை ஒப்புக் கொடுத்திருந்தான்.
பால்கனிக் கதவை திறந்து வைத்து விட்டு,அங்கு நின்றிருந்தவனின் வரிவடிவமே இருட்டில் புலப்பட,அவளுமே பேசாமல் ஒரு முனையில் படுத்து உறங்க பிரயத்தனப்பட்டாள்.
புது இடம் என்பதால்,உடனடியாக உறக்கம் தழுவாதிருக்க,இமைகளுக்குள் கருமணிகள் அங்குமிங்கும்,உருண்ட வண்ணமே கிடந்தன.
விருப்பமின்றிய திருமணம்..
அதன் பின்னரான வாழ்க்கை..
அவள் மனதின் பிடிப்பு..
தவிர்க்க முடியாமல் உருவாகிய இப்பந்தம்..
ஒவ்வொன்றாய் எண்ணுகையில்,மனதின் அழுத்தம் கூடிப் போனது தான்,மிச்சம்.
இப்படியொரு நிர்ப்பந்தத்தில் உண்டாகிய இப்பந்தம்,அதன் நீளுகையும் அதை சுற்றியிருக்கும் இருவரின் வாழ்க்கையும்..
எதுவுமே,எப்படியாகும் என்று துளியும் அனுமானித்திட இயலாதிருக்க, வரையறைக்குள் அடங்க மறுத்து திக்கற்று திரிந்தன,எண்ணவலைகள்.
அழ வேண்டும் போல் இருந்தது,இப்படி ஒரு நிலையில் தன்னை கொண்டு நிறுத்தியதை சுட்டிக் காட்டியவாறு.அழுகையும் வரவில்லை.
அழுது எதுவும் மாறப் போவதில்லை என்று,புத்தி தெள்ளமாய் உணர்ந்திருக்க,மனதில் வெறுமனே வெறுமை மட்டுமே.
மனதின் தோன்றிய நினைவலைகளின் பிடியில்,அவள் முகவதனம் மாறி மாறி உணர்வலைகளை காண்பித்திட,இதழ்களும் தமக்குள் ஏதோ பிதுங்கி என அசைந்திட,பரவியிருந்த வெளிச்சம் வேறு நேரே,முகத்தில் தெறித்து கண்கள் கூசின.
விளக்கை அணைத்திடலாம் என,அவள் விழி திறந்திடும் போதே,அவன் நிழல் அவளை நிறைத்திட,விளக்கை அணைத்தவனின் பாதங்கள்,பக்கமாய் போடப்பட்டிருந்த சோபாவை நோக்கி நீண்டன.
நான்கு பேர் படுக்குமிடம் இருக்க,சோபாவில் தஞ்சமடைந்தவனை உணர்வற்ற விழிகளுடன் வெறித்தவள்,மீளவும் விழிகளை மூடிக் கொண்டாள்.
அவளுக்கு முதுகு காட்டியே அவன் சயனித்திருக்க,மறுநாள் அவள் விழித்தெழும் போது,அவன் இல்லை அவ்விடம்.
நேரத்தைப் பார்த்திட,அப்போது தான் ஆறரை மணி ஆகி இருந்தது.சுபத்ராவின் அறிவுரைகள் நினைவிலாட,எழுந்து குளித்துக் கொண்டு வெளியே வர,அங்கு உறவுகள் பெரிதாய் எவரும் இருந்திடவில்லை.
மங்கலத்தையும் மற்றவர்களையும்,அருளைக் கொண்டே பையன் அழைத்துச் செல்ல வைத்திருந்தான்.முரண்டு பிடித்த மனைவியை ஒருவாறு தன்னுடன் கூட்டிச் சென்றிருந்தார்,நடராஜன்.
அவள் வரும் போது,அருளும் தாட்சாயிணியுமே கூடத்தில் அமர்ந்திருக்க,கடமைக்கென புன்னகைத்த இருவரும்,அவளிடம் கூறியவாறு வெளியாகினர்.
கலகலவென்று இருந்த இடம்,தற்சமயம் அரவமின்றி அமைதியாய் இருக்க,அவள் மனதில் நிம்மதி படர்ந்தது.எப்படித் தான் அவன் வீட்டினரை எதிர் கொள்ளப் போகின்றோமோ,என்கின்ற கேள்வி மனதை கலவரப் படுத்தியிருக்க,இப்போது யாருமில்லை என்பதும்,பெரும் விடுதலை கிட்டிய ஆசுவாசம்.
கதவடைத்து விட்டு வந்தவன்,நேராக சமயலறைக்குள் நுழைந்திட அடுத்த சில நிமிடங்களில்,நல்லதோர் வாசனை நாசியை அணைத்திட,அவளுக்குமே டிக்காஷன் அதிகமாக ஒரு டீ கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று தோன்றிற்று.தனக்கானதை மட்டும் எடுத்துக் கொண்டு அவனோ,கூடத்துக்கு சென்று விட்டான்.
சமயலறைக்கு எட்டு வைத்திட,அதுவோ அத்தனை நேர்த்தியாய் கிடந்தது.அதைப் பார்க்கையில் பிரமிப்பு வேறு.
பசியில் வயிறும் சத்தம் போட,டீ போடலாம் என்று எண்ணினாலும்,தன்மானம் தடுத்தது.
கணவன் என்றாகிய போதிலும்,எந்த வித உரிமையும் எடுத்துக் கொள்ளக் கூடாது என மனம் தீர்க்கமாய் தீர்மானம் கண்டிருக்க,இதுவெல்லாம் அவனின் பொருட்கள் தானே,என மனசாட்சி இடித்துரைத்தது.
“இவ்ளோலாம் பாக்காத பைத்தியம்..நேத்து அந்தாளு வாங்கி வச்ச பெட்ல தான படுத்த..அவரு வீட்ல தான இருந்த..அப்போலாம் எங்க போச்சு உன் தன்மானம்..?ஒரு டீ தான போட்டுக் குடி..”
உள்ளிருந்த குரல் கொக்கரித்திட,பசியில் தலைவேறு வலிக்க ஆரம்பித்தது.
அதற்குள் வெண்மதியிடம் இருந்து அழைப்பு.எதற்கென்று அவளால் கணிக்க இயலுமாய் இருக்க,ஐயோவென்றானது.
“மறு வீட்டுக்கு கூப்டனும்..எத்தன மணிக்கு வரட்டும்..?”எடுத்த எடுப்பில் சுபத்ரா வினவிட,பாவையவளுக்கு எரிச்சலான எரிச்சல்.
“மறு வீடு ஒன்னு தான் கொற..”கடுப்பூற முணுமுணுத்தவள்,இப்போதைக்கு வேண்டாம் என்றிட,அன்னையவருக்கு ஆத்திரம் தான் ஏறியது.
“கல்யாணம் முடிஞ்சதும் பொண்ணு வீட்டுக்குத் தான் கூட்டிட்டுப் போனும்..அங்க தான் சடங்குன்னு அவங்க தான் சொன்னாங்க..ஆனா,அந்தப் பையன் விடல..இப்போ,மறு வீட்டுக்கு வந்து கூட்டிப் போறோம்னு சொன்னா,இவ விடல…ச்சே..”
இணைப்பை அணைத்தவரோ,இளையவளிடம் பொறிந்து தள்ள,கடந்து சென்ற ராஜ மாணிக்கத்தையும் பார்வை சுட்டெரித்தது.
சராசரி தாயார் போன்று,அவருக்குமே மகளை நல்ல இடத்தில் கட்டிக் கொடுத்து,அவளின் பெருவாழ்வைக் காண வேண்டும்,என்கின்ற ஆசை இருந்தது.பாவையவளின் திருமணத்தை எப்படியேனும்,நடாத்தி வைத்திட வேண்டும் என,கணவரின் புறம் நின்றவர் தான்,அவரும்.
ஆனால்,இந்த வரன்..?
அதில் சிறிதும் உடன்பாடில்லாதிருக்க,அதற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாய்,நேற்றும் இன்றும் என,அடுத்தடுத்து அடுக்கடுக்காய் சம்பவங்கள்.
“கல்யாண வீடு மாதிரியா இருக்கு இது..?மறுவீடு ஒன்னும் இல்ல..நேத்து கல்யாணம் நடந்துச்சுன்னு கற்பூரம் அடிச்சு சத்தியம் பண்ணாலும்,எவனும் நம்ப மாட்டான்..”கடுகடுத்தவாறே,சமயலறைக்குள் நுழைந்து மதியத்திற்கு சமைக்க ஆரம்பித்திட,வெண்மதிக்கு மனம் குறுகுறுக்கத் துவங்கியது.
அன்று,மருத்துவமனையில் வைத்து தமக்கையை நோக்கி,தானும் குற்றக்கணையை எய்ததில்,அவளுக்கு அவ்வளவு நெருடல்.
பெரியப்பாவின் பேச்சும் தந்தையின் வார்த்தைகளும்,அவளையும் திசை திருப்பியிருக்க,அவர்களின் கட்டளைக்கிணங்கத் தான்,அவளுமே அக்காளை குற்றம் சாட்டியது.
“ரொம்ப நல்ல பையன் மா..நீ தான் எப்டியாச்சும் உங்கக்கா மனசு மாறுறதுக்கு ஏதாச்சும் பண்ணனும்..”
“நீயும் ஏதாச்சும் சொல்லி திட்டு..அப்போவாச்சும் உங்கக்கா புத்திக்கு புரியும்..”
அசரீரி வார்த்தைகள் செவியோரம் பேசிப் போக,எதையும் ஆராயமல் பேசி,அவளை நோகடித்து திருமணத்திற்கும்,சம்மதம் சொல்ல வைத்து விட்டாள்.ஆனால்,அதன் பின்பே முழுமையான விவரம் தெரிய வந்திருக்க,அவளுக்கே தன் செயலில் அவ்வளவு ஆற்றாமை.
இப்படி ஒரு வாழ்க்கையில் உடன் பிறந்தவள்,தன்னை பிணைத்துக் கொள்ள தானும் ஒரு காரணமாகி விட்டோமே,என எண்ணியே அவள் மனம் வெதும்பினாள்,வெகுவாய்.
இங்கோ,
காலை உணவை பையன் சென்று கடையில் வாங்கி வர,அதற்குள் மீண்டும் தூங்கி எழுந்திருந்தாள்,பாவையவள்.
மேசையில் வைக்கப்பட்டிருந்த உணவுப் பொதியைக் கண்டதும்,விழிகளில் நிம்மதி சேர்ந்தாலும்,அதை எடுத்து சாப்பிட என்னவோ,தயக்கம்.
காலையில் மூளைக்குள் ஓடிய குழப்பத்தில் டீயும் அருந்த மறுத்திருக்க,இப்போது நல்ல பசி வேறு.கூடவே,உண்பதா இல்லையா என்கின்ற போராட்டம்.
பசியே முன்னிலை பெற,வேகவேகமாய் பிரித்தவள் சில நிமிடங்கள் உணவை காலி செய்திருக்க,அடுத்து உணவுக்கான பில்லைத் தேடினாள்.எப்படியும் குப்பைக் கூடைக்குள் போட்டிருப்பான் என்கின்ற நம்பிக்கையில்,அதையும் கிளறிட அங்குமில்லை.
கடையின் பெயரை பார்த்து,எங்கெங்கோ விசாரித்து விலையை கேட்டறிந்திடவே,மனம் சமப்பட்டது.
மடிக்கணினியுடன் பையன் மொட்டை மாடியில் வாசம் கொள்ள,அறையில் கிடந்த அவனின் அலைபேசியின் கீழே,காசுத் தாள்களை வைத்தவள் கூடத்துக்கு வந்து சோபாவில் சரிந்து அலைபேசித்திரையில் மூழ்கிப் போனாள்.
அறைக்குள் வந்தவனுக்கு,அவள் வைத்துச் சென்ற பணத்தை கண்டதும், கோபம் தான் வந்தது.”திமிரு புடிச்சவ..”மனதுக்குள் கருவியவனோ,அவளுக்காக வேண்டி வாங்கியிருக்க கூடாது,என தன்னைத் தானே கடிந்து கொண்டான்,அவளைத் திட்டித் தீர்த்தவாறே.
மதியம் கடந்திட,அவள் தான் வெளியில் உணவை ஆர்டர் செய்து வருவித்திருக்க, அவனுக்கானதை மேசையில் வைத்திட,அப்போது சரியாக பையன் வெளியே வந்தான்,அறையில் இருந்து.
உப்பிய கன்னத்துடன் அவள் நிமிர்ந்திட,அவளையும் உணவை ஒரு பார்வை பார்த்தவன்,அசட்டையாய் கடந்து செல்ல,விரல்களோ முன்னுச்சி முடியை பின்னே தள்ளி சிகை கோதி மீண்டன.
மாலை வரை அவன் வரவேயில்லை.அலுப்பாய் இருக்கவும்,கதவைத் திறந்து கொண்டு வந்து எட்டிப் பார்த்தவள்,நாளை எப்படியும் பக்கத்து வீடுகளுக்கு செல்ல வேண்டும் என எண்ணிக் கொண்டாள்.
சரியாக குறுக்கே வந்த மனசாட்சி,”நீ என்னடி இங்கயே வாழப் போறவ மாதிரி,அக்கம் பக்கத்து ஆளுங்களோட பேசவெல்லாம் ட்ரை பண்ற..?”என கேள்வி கேட்க,அதில் பக்கென்றானது.
“என்ன கொடுமடா இது..?”தலையில் அடித்துக் கொண்டவளுக்கு வேலைக்கு சென்றால் தேவலை என்றிருக்க,அதைச் செய்தால் அடுத்தவரின் கேள்விகளை சமாளித்திட முடியாது போகும் என்பதில் சோர்வாய் இருந்தது.
அன்றிரவு,அவன் வரும் முன்பே சோபாவில் சுருண்டு விட்டாள்,இழுத்துப் போர்த்திக் கொண்டே.அவன் உயரத்திற்கு,கால்களை மடக்கிக் கொண்டு அவன் உறங்கியிருக்க,அதில் இவளுக்குத் தான் மனவுளைச்சலானது.
அதனாலேயே,இந்த முடிவு.
பத்து மணி தாண்டி வீடு வந்தவனோ,அவள் நிம்மதியாக உறங்கி இருப்பதில் கோபம் கொண்டான்.அப்படியே ஏதாவதொன்றை உடைத்து சத்தம் காட்டி,அவளை எழுப்பி விடாலாமா என்றெல்லாம் அவன் சிந்தனை நகர,நெடுமூச்சுடன் குளியலறைக்குள் புகுந்தவனின் மனதில்,இயல்பைத் தாண்டியதோர் அழுத்தம்.
இந்த பந்ததத்தை சீக்கிரம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே,அவனின் ஒற்றை எண்ணமாய் இருக்க,அதற்கான நடைமுறைகளை உருப்போட்டவாறு,குளித்து தலையை துவட்டிய படி பால்கனிக்கு வந்தான்.
நிலவின்றிய கருவானத்தை வெறித்தவனின்,மனம் தவிப்புடன் அலைபாய்ந்தது.கோர்வையாய் நடந்தவற்றில்,அவனுமே மீதமின்றி தளர்ந்து போயிருந்தான்.
கதவடைத்து விட்டு வந்தவன்,தோழனுக்கு குறுஞ்செய்தியை தட்டி விட,நாளை சந்திக்க வரச் சொல்லி பதில் வந்தது,அவனிடம் இருந்து.
நினைத்தவுடனேயே,உறவதற்கு முற்றுப் புள்ளி வைத்திட மனங்கள் விழைந்திட,இடம் தருமோ காலம்..?
கசப்புக்களை தூர் வாரவேன்றே காதலொன்று காத்திருப்பின்,காயங்கள் காணாமல் போகத் தானே வேண்டும்.
காலம் ஆற்ற மறுத்ததை,காதல் மாற்ற வைத்திடும் என்பதை,மனங்களுக்கு யார் தான் எடுத்துரைப்பதாம்..?
காயமா..?காலமா.?
விதி வலியது.
●●●●●●●●●●●●
“நா கூட உன்ன ஹஸ்பண்ட பாக்கற வர,யோசிச்சி கிட்டே தான் டி இருந்தேன்..பட்,அவர பாத்ததுக்கு அப்றம் அப்டியே ஸ்டன் ஆகிட்டேன்னா பாத்துக்கோயேன்..பாத்ததுமே தோணுச்சு,அவரு தான் உனக்குன்னு..”
“அப்டி அமைதியா சாந்தமா சான்ஸே இல்ல போ..இப்டிப்பட்ட மனுஷன என்னன்னு தான் வேணாம்னு ஆடிட்டு நின்னியோன்னு டவுட்டா இருக்கு டி..நா மட்டும் முன்ன பார்த்து இருந்தா,சமத்து புள்ளயா மாப்ள கேட்டு போய் இருப்பேன்..”
பார்கவி தன்பாட்டுக்கு பேசிக் கொண்டே போக,அவளோ பாவையவளின் முறைப்பை சட்டை செய்யவேயில்லை.நில்லாமல்,புகழ்மழை தூவ,அதில் மற்றையவளுக்கு ஏக கடுப்பு.
“வாய மூடேன்டி..”
“என்ன பொண்டாட்டி டி நீ..?வாய் வலிக்க வலிக்க,உன் புருஷன புகழ்ந்து தள்ளுறேன்..நீ என்னன்னா,அத கேக்காம என்ன திட்ற..?ரொம்ப ஓவர் டி இதெல்லாம்..”
அவள் நொடித்துக் கொள்ளும் போதே,அவளை சந்திக்க தாதி வந்தார்,அறைக்கதவை தட்டிக் கொண்டு.
“டாக்டர்,உங்கள மீட் பண்ணனும்னு யாரோ லேடி ஒருத்தங்க வந்து இருக்காங்க..கேட்டா உங்க மாமியார்னு சொல்றாங்க..”என்றதுமே,பாவையவளுக்கு தூக்கி வாரிப் போட்டது.
கல்யாணியாகத் தான் இருக்கும் என மனம்,சரியாகக் கணித்திட பதறிக் கொண்டே வெளியே வந்தவளுக்கு,அவருடன் இருந்த மங்கலத்தை கண்டதும் இன்னும் பயமேறியது.
தொடரும்.
2026.10.18






forum இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0
இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!