மௌனம் பேசும்! – 05
மௌனம் பேசும்!
அத்தியாயம் – 05
கல்யாணி என்றாலே,அவள் சமாளிக்கத் திணறுவாள் என்றிருக்க,அவருடன் மங்கலமும்.உள்ளுக்குள் இலேசாக உதறல் எடுத்த போதிலும்,அதை வெளிக்காண்பித்திடாமல் புன்னகையுடனேயே அவர்களை நோக்கி நடந்து வந்தாள்.
“வாங்க..வாங்கத்த..”வரவேற்றவளுக்கு,அடுத்து என்ன கேட்பது,பேசுவதென்றே தெரியவில்லை.வீடு வராமல் மருத்துவமனைக்கு தேடி வந்திருப்பதே,யோசனையை தந்திருக்க அதைப் பிடித்தே அவள் எண்ணங்கள் சுழன்றன.
“உன் கூட கொஞ்சம் பேசனும்னு தான் வந்தோம்..வேலயா இருக்கியா நீ..?”கல்யாணி அக்கம் பக்கம் பார்த்தவாறு உரைத்திட,மறுப்பை பதிலாகக் கொடுத்தவள் இருவரையும் அழைத்துச் சென்றாள்,வெளியே இருக்கும் உணவகத்துக்கு.
திருமணம் ஆகி பத்து நாட்கள் கடந்திருந்தது.இருமுறை கல்யாணி அலைபேசியில் கதைத்திருக்க,பட்டும் படாமலேயே அவளும் பேச்சு வைத்துக் கொள்வாள்.
சட்டென்று,நெருங்கிப் பழகிட இயலவில்லை.பிரியப் போகும் உறவுப் பாலத்தின்,பக்கச் சங்கிலிகளை ஏன் இழுத்துப் பிணைத்துக் கொள்ள வேண்டும் என்கின்ற மனநிலையும்,அதற்கோர் காரணம்.
பையனுமே,தன் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று,அவளை கூப்பிடவில்லை.கல்யாணியும்,அவளை வீட்டுக்கு வரும் படி கூறாதிருக்க,அவளும் அதைப் பற்றி பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை.
அவளுக்கும்,கடமைக்கேனும் அங்கு சென்று வர வேண்டும் என்கின்ற எண்ணம் இருந்தது.அவள் உறவுகளுக்கு அவனை மனதில் இருத்தி,பட்டென்று மறுப்பு சொன்னவளின் மனம்,அவன் பக்கத்தினர் என்று வருகையில் அவன் பக்கமிருந்து யோசித்தது.
“மாமியார் வீட்டுக்கு போனியா..?பொய்ட்டு வர வேண்டியது தான..?”சுபத்ரா அடிக்கடி நச்சரித்திட,அதை சாக்காக வைத்து அவனிடம் கேட்க முனைந்திட,அவனின் தீப்பார்வையில் பின்னடைந்தவள்,அதன் பின் சத்தமேயின்றி நாட்களை கடத்தியிருக்க,இதோ அவர்களே வந்திருந்தனர்,அவளைத் தேடி.
“என்ன சொல்லட்டும் அத்த சாப்பிட..?” தன்மையாய் வினவியவள்,அவர்கள் விருப்பமறிந்து அவற்றை பேரரிடம் எடுத்து வரச் சொல்லி விட்டு திரும்ப,மங்கலம் தங்கையின் காதுகளில் மெதுவாய் எதையோ கிசுகிசுத்துக் கொண்டிருந்தார்.
“ம்ம் பேசு!”என அவர் சைகை காட்ட,கல்யாணிக்கு சிறு தயக்கம்.பேசும் விடயம்,அதன் பாரதூரம் பற்றி பெரிதாய் நினைத்திடாத போதும்,அதைப் பற்றி பேச மனம் கொஞ்சமே கொஞ்சம் ஒப்பாமல் போயிற்று.
அவரின் தயக்கத்தில்,மங்கலத்துக்கு எரிச்சலானது.
“ஆமா,கல்யாணம் பண்ணி பத்து நாளாச்சுல..மாமியார் வீட்டுப் பக்கம் வரனும்னு ஒரு தடவயாச்சும் தோணுச்சா என்ன..?”காரமாக கேட்க,இவளுக்குத் தான் என்னவோ போலானது,அவரின் அதிகாரத்தில்.
“உன்னத் தான் கேக்கறேன்..பத்து நாள்ல ஒரு தடவயாச்சும் உன் மாமியார் வீட்டுக்கு வரனும்னு தோணுச்சா என்ன..?மறு வீடும் போகல..என்ன உங்கம்மா வீட்டால வாங்கன்னு கூட சொல்லலியா என்ன..?”
இறுதியில் கேலி தெறித்தது.சூழ்நிலையைக் கையாளத் தெரியாததோர் தடுமாற்றம்,அவளை சுற்றி வளைத்திட,வார்த்தைகளும் வரவில்லை.
“உன்னத் தான் கேக்கறேன்..வாய்ல என்ன கொழுக்கட்டயா..?வீட்டுக்கு மருமகன்னு வந்தா,அதுக்கேத்த மாதிரி நடந்துக்க வேணாம்..கொஞ்சமாச்சும் பொறுப்பு இருக்கனும்..எங்க இருந்து தான் புடிச்சியோ..”
அவளைத் திட்டி,கல்யாணியிடமும் அங்கலாய்த்துக் கொண்டார்.
“எங்க பக்கத்துல கல்யாணம் முடிஞ்சா பொண்ணு மாப்ளய விருந்துக்கு கூப்புட்றது வழக்கம்..ஆனா,உன் புருஷன் அதுக்கும் மாட்டேன்னு சொல்லிட்டு நிக்கறான்..பொண்டாட்டின்னு நீ எதுக்கு இருக்க..?அவன் கிட்ட கொஞ்சம் பேசி கீசி சரி கட்ட வேணாம்..” என்க,திகைப்பது அவள் முறையாயிற்று.
அவளுக்குத் தெரியும்,இப்படி விருந்துபசாரங்கள் நடந்தேறும் என்று.அவன் அதைப் பற்றி எதுவுமே கூறாதிருக்க,இவர்களின் பக்கத்தில் அந்தப் பழக்கம் இல்லை போலும் என்று தான்,அவள் அனுமானம் செய்ததே.
“என்ன முழிச்சு பாக்கற..?ஓஹ்,ஒருவேள புருஷன் கிட்ட எதுக்கும் போக தேவல்லன்னு நீ தான் சொன்னியா..?”
அவர் தானே ஊகித்துப் பேச,அவசரமாக இல்லையென்று தலையசைத்தாள்.
“வாயத் தெறந்து பேசு..”
“இல்ல..அப்டி எதுவும் சொல்லல..”
“ம்ம்..”தொண்டையைச் செருமியவர்,”உங்களுக்குள்..”எனக் கேட்க வரும் முன்பே,கல்யாணி அவரின் கரத்தைப் பற்றியிருக்க,அவர் கேட்க வந்தது புரிந்ததும்,சட்டென்று கண்ணீர் கோடிட்டது,பாவையவளின் விழிகளில்.
படபடவென இமை சிமிட்டி,கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டவளின் செயலில்,ஒரு மாதிரியாகிற்று கல்யாணிக்கு.என்னவென்றாலும்,பொது இடத்தில் வைத்து அவர்களின் தனிப்பட்ட வாழ்வை நோக்கி எந்த வித கேள்வியையும் வீசியிருக்க கூடாது என காலம் கடந்து கத்தியது,மனசாட்சி.
“ப்ச்..நீ எதுக்கு என்ன பிடிச்சு நிறுத்துற..?கேக்கற கேள்வி தான இது..?என்னவோ,பொண்ண பெக்காத அம்மா மாதிரி நொடிச்சிக்கிற..”தங்கையை கடிந்தவரின் பார்வை,அவளைச் சாடியது.
“க்கும்..நீ முழிக்கிறத பாத்தாலே எல்லாம் புரிது..”அவர் நக்கல் பேச,இவளுக்கோ தேகம் கூசியது.கோபத்தை காட்ட இயலா தன்னிலை,கண்ணீராய் உருவெடுக்க காலம் கேட்டது.
யாரின் இரகசியத்தையும்,தோண்டித் துருவும் பழக்கம் அவளுக்கு இல்லை.அவள் விடயத்திலும்,சம்பந்தமின்றி எவரும் தலையிடுவதை,அவள் விரும்ப மாட்டாள்.
மற்றவர்களின் இயல்பான விடயங்களை,விவரம் கேட்கவே அத்தனை யோசிப்பவளை,அவர்களின் தனிப்பட்ட அந்தரங்கத்தை அவர்கள் அலசியது,நிலைகுழைய வைத்தது.
பெற்ற அன்னையே,எதுவும் கேட்கவில்லை.
அவள் மருத்துவர் என்றாலும்,இவற்றையெல்லாம் சுலபமாய் எதிர்கொள்ள முடிவதில்லை,அவளால்.
“இங்க பாரு..நா எதுக்கு இதெல்லாம் கேக்கறேன்னா,உங்க வாழ்க்க நல்லா இருக்கனும்னு தான்..எனக்கு என் பையன் வாழ்க்க முக்கியம்..”
“உனக்கு எப்டியோ,அவன் உன்ன பிடிக்காம தான் கட்டி கிட்டான்..அவனுக்கு வேறொரு பொண்ணு மேல இஷ்டம் இருந்து அது சேராம போயிருச்சுன்னு,இவ்ளோ நாள்,ஒண்டிக்கட்டயாவே இருந்துட்டான்..”
அவர் பேசப் பேச,அவள் இன்னும் அடிப்பட்டுப் போனாள்.என்னவோ,அந்த வார்த்தைகள் அவளை ஆழம் கீறிற்று.
“நாங்க தான் எப்டியோ சரி கட்டி உனக்கு கல்யாணம் பண்ணி வச்சோம்..லவ்வுன்னு கிவ்வுன்னு அவன் வாழ்க்க நாசமா போறத பாத்துட்டு இருக்க முடியுமா சொல்லு..?” எங்கோ தொடங்கி,எதையோ பிடித்து பேச்சு திசைமாறிச் செல்வது போலொரு எண்ணம்,தங்கையின் மனதில்.
“இப்போ,அவன கட்டி வச்சாச்சு..நீயும் தான..உனக்கும் வரன் தேடி அமயவே இல்லன்னு தான,கொற இருந்தும் உங்கப்பா அத கூட கண்டுக்காம,எங்க வீட்ல உன்ன கட்டிக் கொடுத்தாரு..”
அவரின் கூற்றில் ஆத்திரம் பொங்க,முகம் ஜிவுஜிவுத்த போதிலும்,அடுத்த அவரின் குற்றச்சாட்டில் அகமும் சேர்த்து கன்றியது.
கல்யாணி அமைதி காத்தார்,இவ்விடயத்தில்.
அவருக்கு,மற்றையவரின் இதைக் குறித்தான பேச்சில் பிழை சொல்ல எதுவும் இருக்கவில்லை.நிஜத்திற்குமே,பாவையவளின் தந்தையே மகனைக் கேட்டிருக்க,அதில் இறுமாப்பும் அவருக்கு.
“இப்போ,கைல கெடச்ச வாழ்க்கய நீ தான கெட்டியா புடிச்சக்கனும்..புருஷங்காரன்,ஒரு பக்கமா போனா நீ தான்,அவன இழுத்து நம்ம கைக்குள்ளயே வச்சிக்கனும்..அது கூட தெரியாம இருந்தா,எப்டி புருஷன முந்தானைல முடிஞ்சு வச்சுக்கறதாம்..?”
ஈற்றில்,அவர் நகைத்திட தன் கண்ணீரையும் கோபத்தையும் கட்டுக்குள் வைத்திட அரும்பாடு பட்டாள்,பாவையவள்.
“மொத வாய்க்கு ருசியா சமச்சுப் போடு..அப்போ தான்,அவன் பட்டுன்னு வழிக்கு வருவான்..தள்ளிப் போகனும்னு அவன் நெனச்சா,நீ எடம் கொடுக்காம அவன இறுக்கிப் பிடி..”
“அப்போ தான்,உங்க வாழ்க்கயும் ஒரு வழிக்கு வரும்..அவன் மனசுல எடம் பிடிக்க வேண்டியது உன் பொறுப்பு..சூது வாது தெரியாத பொண்ணா இருக்கியேன்னு தான்,இவ்ளோ தூரம் உன் கிட்ட பேசறதே..”
“ஒழுங்கா அவன முந்தானைல முடிஞ்சுக்கற வழிய பாரு..இன்னும் பத்து மாசத்துல கைல புள்ளயோட வரனும் பாத்துக்க..இல்லன்னா,அவனுக்கு வேற பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி வச்சுருவேன் ஆமா..”
பிரித்தறியா இயலா குரலில் உரைத்து விட்டு,இருவரும் கிளம்பிச் செல்ல அப்படியே மேசையில் தலை வைத்து படுத்து விட்டாள்,பாவையவள்.
“அவனுக்கு வேறொரு பொண்ணு மேல இஷ்டம்..”
“அவன் உன்ன பிடிக்காம தான் கட்டி கிட்டான்..”
அவர்களின் அலசலில் துவண்ட மனதில்,ரீங்காரமாய் இவ்வார்த்தைகள் வலம் வர,இதுவரை இல்லாததோர் அழுத்தமொன்று அவள் மனதை ஆக்கிரமித்தது.
கோபம்..
ஆற்றாமை..
ஆதங்கம்..
அழுகை..
என கலவையான உணர்வுகள் மனதில் மையம் கொள்ள,அவற்றை காட்ட இடமின்றி உள்ளுக்குள் அமிழ்த்தியவளுக்கு,இப்போதே இந்த பந்தத்தை விட்டு விலகிச் சென்றால், என்னவென்று ஒரு நொடி தோன்றிடவே செய்தது.
மனதை சிரமப்பட்டு கட்டுக்குள் கொண்டு வந்தாள்.மேலெழுந்த உணர்வுகளை புதைத்துக் கொண்டவள் அறிந்திருக்க வாய்ப்பில்லை,அவை கரைமீறும் நாளும் இன்றே தான்,என்பதை.
●●●●●●●●●●●
அன்று மதியமே வீட்டுக்கு வந்திருந்தான்,பையன்.தோழனை சந்திக்கச் சென்றவனின் வேலை சுலபமாகவே முடிந்திருக்க,அதன் பின்னர் அலுவலகத்திற்கு கிளம்பிய போதிலும்,மனம் அமைதியைத் தேடியது.
விஷ்ணுவும்,அவனின் முகமாற்றத்தை கண்டு கொண்டு,ஏதோ ஊகித்தவனாய் தான் பார்த்துக் கொள்வதாகச் சொல்ல,சரியென்ற தலையசைப்புடன் வீடு வந்து சேர்ந்திருந்தான்,சீக்கிரமாகவே.
அவன் எப்போதும் செல்லும்,சிவன் கோயிலுக்கு வண்டியைத் திருப்பிய போதிலும்,அதற்கும் மனமின்றிப் போக,எண்ணங்கள் அவனை இல்லத்திலேயே இழுத்து சேர்ப்பித்திருந்தன.
குளித்து தலையை துவட்டியவாறு, விவாகரத்து பத்திரங்களை பார்த்தவனுக்கு தனது முடிவு,நூற்றுக்கு நூறு சதவிகிதம் சரியென்கின்ற எண்ணமே.
கையெழுத்து இட நினைத்தும்,உடனே அதை செய்திருந்தான்.அதை முடிப்பதற்குள்,தோழனிடம் இருந்து அழைப்பு.வக்கீல்,அவன் தான் கூப்பிட்டிருந்தான்.
இலேசான எரிச்சலும் வரப்பெற,அழைப்பை துண்டித்தவனின் லாக் ஸ்க்ரீனில் எக்கச்சகமான நாட்டிஃபிகேஷன்.அனைத்தும் அவனிடமிருந்தான குறுஞ்செய்திகளுக்கானது என்றிருக்க,வாட்ஸ் அப்பினும் அவன் நுழையேவ யோசித்திட,மீண்டும் அலைபேசி அலறியது.
“இவனோட!”மனதுக்குள் பொருமியவாறு,இணைப்பை அணைத்தவன் வாட்ஸ் அப்பினுள் சென்று,தோழன் அனுப்பியிருந்த குரல் பதிவுகளை ஒலிக்க விட,அத்தனை அறிவுரைகள் கெஞ்சல் குரலில்.
“உன்னோட,விருப்பம்னு யோசிக்காம சரின்னு ஒத்துகிட்டேனோன்னு இருக்கு..திரும்ப ஒரு தடவ யோசிடா..விஷ்ணுவுக்கு தெரிஞ்சா என்ன செருப்பால அடிப்பான்..”கிட்டத்தட்ட இறைஞ்சும் நிலையில் பேசியிருந்தான்,புகழேந்தி.
“உங்களுக்குள்ள என்ன தான் டா ப்ரச்சன..உங்கம்மாவ இப்போ தான் பாத்தேன்..அவங்க அக்கா கூட போய் உன் பொண்டாட்டிய பாத்துட்டு வந்தேன்னு ரொம்ப சந்தோஷமா சொல்றாங்க..அப்றம் என்னடா மச்சான்..?”
அவன் பேசியதை பெரிதாய் செவிமடுக்காதவன்,அடுத்தடுத்தவற்றை தொட,புகழின் அறிவுரைகள் யாவும் வெறுமனே,காற்றோடு கலந்தது.
அலைபேசியை தூக்கி கட்டிலில் போட்டவன்,சமயலறைக்கு வந்திட,இரு பிரிவுகளாய் தரிசனம் தந்தது,அவ்விடம்.
அவன் பொருட்கள் ஒரு புறமிருக்க,அவளுக்கானதை தனியாக வாங்கி,ஆங்காங்கே நிரப்பி வைத்திருந்தாள்,அவனின் மனையாள்.
ஒற்றை எரிவாயு அடுப்பு,சமையல் பாத்திரங்கள் முதற்கொண்டு தேவையானவற்றை இரு நாட்களுக்குள் வாங்கி வந்தவளை சிறு அதிர்வுடன் தான் கண்டான்,அவன்.
“காச நாசம் பண்றா..திமிரு திமிரு..”உள்ளோடிய எண்ணத்தை அப்படியே விழிகளில் முறைப்பாய் படிய விட,அவள் விழிகளுக்குள்,அது சிக்காமல் போயிருந்தது.
காலையில் டீ போடுவது துவக்கம்,சமைப்பது வரை தனித்தனியே தான்.முதலிரு நாட்களும் அவனறையில் உறங்கியவள்,மறுநாளே காலியாய் இருந்த அறையை சுத்தம் செய்து தனக்கென மாற்றிக் கொள்ள,அதன் பின் நித்திரா தேவி அறைகுறையாய் தழுவிய போதிலும்,அவனறை பக்கம் தலைகாட்டவில்லை.
“இன்னும் என்ன என்ன பண்ணப் போறாளோ..?”அவளின் செயலாக்கங்களில் அவன் திகைத்து சிந்தித்திருக்க,”எதிர்பாராததை எதிர்பாருங்கள்” என்பது போல் காசை அவன் முன்னே நீட்ட,பையனின் பார்வை எதற்கென்பது போல் அவளைத் தழுவி,நீட்டிய கரத்தில் நிலை கொண்டது.
“எல்லாம் தனித்தனி..சரியா பாத்தா,உங்க வீட்ல தங்கி இருக்குறது கெஸ்ட் மாதிரி தான..ஸோ,அதுக்கான ரென்ட்..”
அவனைப் பாராது உரைத்து,அவன் பணம் தந்திட,ஆழ நெடுமூச்சிழுத்தே தன்னை கட்டுப்படுத்திக் கொண்டு நின்றான்,அவன்.
“வேண்டாம்”என மறுக்க வந்தவனுக்கும் அவள் முன் கீழிறங்கக் கூடாது என்கின்ற வீம்பு பிடித்தாட்ட,வெடுக்கென காசைப் பிடுங்கிக் கொண்டு அலட்சியமானதோர் பாவனை காண்பித்து விட்டு நகர்ந்து இருந்தான்,அலட்டலின்றி.
பழையதை அசை போட்டவாறு,தனக்கு காஃபியை கலக்கியவன்,அதன் பின் அதை சுவைத்தவாறு,அலைபேசியில் ஆழ்ந்து போனான்.
முன்னுச்சி முடியை பின்னே தள்ளியவனின் விரல்கள்,தன்னாலே அவற்றின் பின்னே மறைந்து கொள்ளும் உச்சி நுதலின் தழும்பில் கோடு கீற,அதுவும் தனித்ததோர் அழகியலாய்.
கூடத்தில் இருந்தவனைக் கண்டாலும்,காட்டிக் கொள்ளாமல் உள்ளே நுழைந்தவளை,தலைவலி படுத்தி எடுத்தது.
வந்து பேசியவர்கள் தந்து சென்ற அழுத்தமும்,அழுகையை அடக்கியதும் ஒருமிக்க கை கோர்த்திட,எல்லாம் சேர்ந்து தலைவலியைத் தந்திருந்தது.
இதில்,மருத்துவமனையில் இருந்து வேறு தொடராய் அழைப்புக்கள்,அவள் ஆவணம் ஒன்றின் மென் நகல் கேட்டு.ஏற்கனவே அவர்கள் கேட்டது தான்.இவள் தான் திருமணப் போராட்டத்தில்,அதை சுத்தமாய் மறந்து போயிருக்க,இன்று அவள் ஆவணத்தினை சமர்ப்பித்திட வேண்டிய இறுதி நாளும் கூட.
“இரு அனுப்பி விட்றேன்..”அழைப்பெடுத்து,தேன்மொழியிடம் கூறியவள்,தன் பொருட்களை அலச அதுவோ சிக்காமல் போக்குக் காட்டி,அவளை எரிச்சலுக்குள்ளாக்கியது.
“எங்க வச்சேனோ..?”நொந்தவாறு அனைத்தையும் இழுத்துப் போட்டுத் தேட,சில பல நிமிடங்கள் தொடர்ந்த தேடுதல் வேட்டையில் பின்னரே,பையனின் அலுமாரியில் வைத்தது,நினைவுகளில் வெட்டிச் சென்றது.
சுபத்ரா,அத்தனை பத்திரம் சொல்லி,அவற்றை பத்திரப்படுத்தும் படி கூறியிருக்கவே,அவனின் கோப்புக்களுடன் அதையும் அவள் வைத்தது.
“அது ரூம்கு போனுமா..?”பொருமியவாறு வந்தவள்,அவனிடம் அனுமதி கேளாமல் தகவலாய் உரைத்த பின்,பையனின் அறைக்குள் பிரவேசித்திட,அதன் நேர்த்தியில் இம்முறையும் அத்தனை வியப்பு அவளுக்கு.
அலுமாரி திறந்திருக்க,அவள் தேடியதும் ஆட்டம் காட்டாமல் அகப்பட,அதை கையில் எடுத்து வரும் போதே,விழிகளில் விழுந்தது மேசையில் கிடந்த விவாகரத்துப் பத்திரம்.
ஏதோ,என்று நினைத்த போதும் அதை பார்த்திடாமல்,பாதங்கள் நகர மறுத்திட,எடுத்துப் பார்த்தவளின் விழிகளில் வெறுமை ஆழமாய் புகுந்து கொண்டது.
ஒரு நொடி,சின்னதோர் நடுக்கம் வந்தாலும்,அதுவும் அகன்றிட,உணர்வின்றிய விழிகள் அதை வெறித்தன,சில நிமிடங்களுக்கு.
அவள் நினைத்த படி,எதுவும் நடந்திராதிருக்க இதுவொன்றும்,அவளுக்கு அவ்வளவு ஏமாற்றத்தை வாரித் தரவில்லை.ஆனால்,இத்தனை சீக்கிரம்..?
அவன் காலம் தாழ்த்தி இருப்பின்,நிச்சயம் அவள் செல்வதும் இதே முடிவுக்குத் தான் என்றிருப்பினும்,சொற்ப நாட்களில் நடந்து விட்டதில்,இனம் புரியாதோர் ஆற்றாமை.
அது தான்,மனதை கூறு போட யாரையும் குற்றம் கூறுவும் முடியவில்லை,அவளால்.
எல்லாம் விதி,அவ்வளவு தான்.அது மட்டுந்தான். தனக்குத் தானே தேற்றிக் கொண்டவள்,ஆழத்தில் தள்ளியவை எல்லாம்,அணை உடைத்து கரை மீறிப் பாய,அதுவே அவளை நிதானமிழக்க போதுமானதாய்.
அதுவும்,அவனின் கையெழுத்து..?
அது,அவளின் மீதான பிடித்தமின்மையின் சாட்சியமாக காட்சியளித்தது.
எதுவும் யோசித்திடவில்லை.மாறி விடக் கூடும் என்கின்ற நம்பிக்கையும் துளியும் துளிர்த்திடாது போக,அருகே கிடந்த பேனாவை எடுத்த விரல்கள்,பரபரத்தன.
கோடிட்ட இடங்களில்,அவள் எழுத்துக்கள் நிரம்பிட,அது கையெழுத்து மட்டுமல்ல,அவளின் வாழ்க்கையும் என்பது அவளுக்கு மறந்தே போயிருந்தது.ஏன்,அவனுக்கும் கூடத்தான்.
“உங்க இஷ்டப்படி டைவோர்ஸ் பேப்பர்ஸ்ல சைன் பண்ணிட்டேன்..போய் எடுத்துப் பாருங்க..”உணர்வற்ற வார்த்தைகள் அவன் செவி மோதிட,அதற்குள் அவள் நகர்ந்து இருந்தாள்,அவன் முன்னிலையில் இருந்து.
தன்னறைக்குள் நுழைந்து அவள் கதவை சாற்றிக் கொள்ள,இரவு கடந்தும் அவள் வெளியே வரவில்லை.விழித்திருந்தால் யோசனைகள் வரும் என்று,உறக்கத்தை விரட்டிப் பிடித்து,பூரணமின்றிய உறக்கத்துக்குள் தன்னை புகுத்திக் கொண்டிருந்தாள்.
உறங்க வரும் போதே,பையனின் பார்வை விவாகரத்து பத்திரத்தின் மீது படிய,பெருமூச்சுடன் அதை அப்படியே எடுத்து வைத்தான்.அதை மீளவும் ஆராயவில்லை.அதற்கு அவன் மனம் இடம் தரவுமில்லை.
அவள் எவ்விதமான ஆர்ப்பாட்டமுமின்றி,கேளாமலே ஒப்புதல் தந்ததில்,அவனுக்குள்ளுமே நிம்மதியின் சாயல்.
இலக்கின்றி விட்டத்தை வெறித்தவனின் நெஞ்சமெல்லாம்,அவன் நேசத்தின் சுவடுகள் பூ பூத்தன.எங்கோ,எதற்கோ அவன் கொண்ட உணர்வு;அவன் ஜீவனில் பற்றிக் கொண்ட நெருப்பு,அவன் உயிரில் உறைந்து இன்று வரை,அவனை ஆட்டுவிக்காமல் இல்லை.
யாரையுமே,தன் வாழ்வில் பிணைத்துக் கொள்ள அவன் கிஞ்சிற்றும் தயாரின்றி இருக்க,விதி செய்ததில் அவனுக்கு கோபமோ கோபம்.
நினைவுகளின் ஆதிகத்தில்,துவண்டவனின் விழிகள் தாமாகவே மூடிக் கொள்ள,சுவாசங்கள் கூட சீரின்றித் தவித்து கொஞ்சம்,ஆசுவாசம் கேட்டது.
யாவும் அவன் ஆதிக்கம் என்று அவனிருக்க,அதிகாரமே அவளது என்று அவன் உணரும் காலம்..?
நேசங்கள் உயிர்த்தருமோ,நெஞ்சமதின் தேடல்களுக்கு..?
தொடரும்.
2026.10.20






forum இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0
இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!