கனி 11
கனி 11
அடுத்த நாள் பகலில், அமெரிக்கா செல்வதற்காக வெற்றி தனது பொருட்களைத் தயார் செய்துகொண்டிருந்தான். அவனருகில் சரண் மட்டும் இருந்தான்.
“அண்ணா… நான் பேக் பண்ணித் தாறேன். நீங்க கொஞ்சம் இருங்க”
என்று சரண் கூறிவிட்டு, வெற்றிக்குத் தேவையான பொருட்களை எடுத்துப் பேக் செய்யத் தொடங்கினான்.
கொலுசைக் கலைவாணியிடம் பாலிஷ் செய்யக் கொடுத்துவிட்டு வெற்றியின் அறைக்கு வந்த கனி,
‘இவற்றை எல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன்’ என்று சைகையில் காண்பித்தாள். சரணும் கட்டைவிரலை உயர்த்திக் காட்டிவிட்டு, அவன் அறைக்குச் சென்றான்.
கனி வெற்றிக்கு அருகில் அமர்ந்து, அவனுக்குத் தேவையான பொருட்களை ஒவ்வொன்றாகக் கேட்டு பேக் செய்துகொண்டிருந்தாள்.
ரெண்டு நிமிடங்கள் கழித்து, வெற்றி,
“கனி எப்போ வந்த?” என்று கேட்டான். அதைக் கேட்ட கனி ஆச்சரியமாக,
“உங்களுக்கு எப்படி தெரியும் அத்தானு?” என்று கேட்க, அவளது விழிகள் அகல விரிந்தன.
“உன்னோட வாசம், உன்னோட வாசமே காட்டிக் கொடுத்துடும் கனி, நீ வந்திருக்கேன்னு” என்று வெற்றி சொன்னான்.
அவள் தன் தோள்பட்டையை முகர்ந்து பார்த்துவிட்டு, “எனக்கு எதுவுமே தெரியலையே” என்றாள்.
“அது எனக்கு மட்டும்தான் தெரியும்” என்று வெற்றி பெருமையாகக் கூறினான்.
கனி ஏதோ சொல்ல வேண்டும் என்று நினைத்தாலும், வார்த்தைகள் அவளது தொண்டைக்குள்ளேயே சிக்கிக்கொண்டன. அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.
அவளது தடுமாற்றத்தை உணர்ந்த வெற்றி, “கனி… எங்கிட்ட எதுவும் கேக்கணும்னு நினைக்கிறியா?” என்று கேட்டான்.
சிறிது நேரம் தயங்கிய கனி,
“அத்தான்… கண்டிப்பா போகணுமா?” என்று மெதுவாகக் கேட்டாள்.
“ஆமா கனி. எனக்கு வேலை இருக்கு. அந்த வேலையை முடிச்சுதான் ஆகணும். நான் வந்து கிட்டத்தட்ட ரெண்டு மாதம் ஆகுது. பத்து நாள் லீவுல வந்தேன். இப்போ திரும்பிப் போய் வேலையை முடிச்சுட்டு சீக்கிரம் வந்துருறேன்” என்றான் வெற்றி.
அவள் மீண்டும் தயங்கியபடி, “அத்தான்… எனக்கு ஒரு பிரமிஸ் பண்ணிக் கொடுங்க” என்றாள்.
“என்ன?”
“என்னைத் தவிர வேற எந்தப் பொண்ணையும் பார்க்கக்கூடாது” என்றாள் கனி.
அதைக் கேட்ட வெற்றி லேசாகச் சிரித்தபடி, “உன்னையே பார்க்க முடியல கனி. இதுல நான் வேற எந்தப் பொண்ணைப் பார்க்கப் போறேன்?” என்றான்.
“அப்படி இல்லத்தான்… வேற எந்தப் பொண்ணையும் மனசுல கூட நினைக்கக்கூடாது” என்று கனி பிடிவாதமாகக் கூறினாள்.
அதற்கு வெற்றி,
“சரி” என்று சாதாரணமாகக் கூறிவிட்டு, மீண்டும் பேக் செய்வதில் கவனம் செலுத்தினான்.
சிறிது நேரம் அமைதியாக இருந்த கனி, “அமெரிக்கா போனதும் எனக்கு ஃபோன் பண்ணுவீங்களா அத்தான்?” என்று கேட்டாள்.
“அதுக்கு முதல்ல நீ நான் வாங்கிக் கொடுத்த ஃபோனை ஃபர்ஸ்ட் ஆன் பண்ணிக்கோ. கண்டிப்பா ஃப்ரீயா இருந்தா கால் பண்ணுவேன்.
இங்க பாரு கனி… நீ படிக்கிற பொண்ணு. வேற எதையும் மனசுல போட்டுக்கக்கூடாது. டாக்டர் ஆகுறது மட்டும்தான் உன் மைண்ட்ல இருக்கணும். சரியா?” என்றான் வெற்றி.
“ம்…” என்று மட்டும் கூறினாள் கனி.
வெற்றி உடை மாற்றிக்கொண்டு வெளியே வந்தான். அறை வாசலில் நின்றுகொண்டிருந்த கனி, அவனைப் பார்த்த வேகத்தில் அவனை அணைத்துக்கொண்டாள்.
அவள் அழுகிறாள் என்பதை உணர்ந்த வெற்றி, அவளைப் பிரிக்காமல் சில நொடிகள் அமைதியாக நின்றான்.
“கனி… லேட்டாகுது. முதல்ல சென்னை போகணும். அங்கிருந்து இன்னொரு இடத்துல ஃப்ளைட் மாறித்தான் அமெரிக்காவுக்குப் போகணும். சரியான நேரத்துக்குப் போகணும்” என்றான் வெற்றி.
கனி மெதுவாக அவனை விட்டு விலகினாள். அவளது கண்களில் கண்ணீர் இன்னும் வற்றவில்லை.
“கவனமா இருங்க அத்தான்” என்றாள்.
“நீயும் கவனமா இரு கனி. அம்மா, அப்பாவைப் பார்த்துக்கோ. மாமா, அத்தையையும் கவனமா பார்த்துக்கோ”
என்று வெற்றி அவளிடம் கூறினான்.
பின்னர் கலைவாணியிடம், “அத்தை… கனியைப் பார்த்துக்கோங்க. நீங்களும் கவனமா இருங்க” என்றான்.
அமிர்தவள்ளியிடமும் திருச்செல்வத்திடமும் விடைபெற்று, அவர்களையும் கவனமாக இருக்கும்படி கூறினான்.
சரண் கௌரியின் அருகில் வந்தபோது, அவள் ஒரு மாதிரியான ஏக்கப் பார்வையுடன் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள். ஏதோ சொல்ல நினைத்தவள், வாயைத் திறந்து மீண்டும் மூடிக்கொண்டாள். வீட்டில் எல்லோரும் இருக்க, எதையும் பேச முடியாமல் சங்கடப்பட்டாள்.
அவளது கண்களும் லேசாகக் கலங்கியிருந்தன.
அதை உணர்ந்த சரணுக்கு, அவளை அப்படி பார்க்கவே கஷ்டமாக இருந்தது.
“கவனமா இருங்க கௌரி”
என்று மட்டும் கூறிவிட்டு, வெற்றியுடன் முன் நடந்தான்.
அமிர்தவள்ளிக்கும் திருச்செல்வத்திற்கும் மனம் மிகவும் கஷ்டமாக இருந்தது. கண்பார்வை இல்லாத நிலையிலும் வெற்றி மீண்டும் வேலைக்காக அமெரிக்கா செல்கிறான் என்பதை நினைக்கும்போது, அவர்களால் அதைச் சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. ஆனாலும் சரண் அவனுடன் இருக்கிறான் என்ற தைரியத்தில்தான், வெற்றியை அனுப்பி வைத்தனர்.
அவன் செல்லும் திசையையே கனி கண்ணீருடன் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அதே நேரத்தில், தேனிலவுக்காகத் தாய்லாந்து செல்லத் தயாராக இருந்த மித்ரனும் கிருத்திகாவும் கிளம்பினர்.
அனைவரும் ஒவ்வொருவராக வீட்டை விட்டு கிளம்பியதும், வீடே வெறிச்சோடிப் போனதுபோல் அமைதியாக இருந்தது.
அவர்களது அறைக்குச் சென்ற கனி, வெற்றி கொடுத்த அலைபேசியை உயிர்ப்பித்தவள், கௌரியிடம் சென்று அதைப் பற்றிக் கேட்க ஆரம்பித்தாள்.
*****
தாய்லாந்தில் பாங்காக் விமான நிலையத்தில் தரையிறங்கியதும், மித்ரனும் கிருத்திகாவும் தாய்லாந்தின் அழகை ரசித்தபடி வெளியே வந்தனர்.
பாங்காக் நகரம் உயரமான கட்டிடங்களாலும், வண்ணமயமான விளக்குகளாலும், பரபரப்பான சாலைகளாலும் எப்போதும் செழுமையாகக் காட்சியளிக்கும். நகரின் ஒரு பக்கம் நவீன வணிக வளாகங்கள் என்றால், மறுபக்கம் பழமையான கோயில்களும் பாரம்பரியக் கட்டிடங்களும் அழகைக் கூட்டும்.
தாய்லாந்தின் முக்கியமான வர்த்தக நகரமாகவும் பாங்காக் விளங்கியது. வணிக வளாகங்கள், சந்தைகள், நட்சத்திர விடுதிகள், உணவகங்கள் என நகரம் எப்போதும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கும்.
தாய்லாந்தின் சிறப்பு அதன் கோயில்கள், பாரம்பரிய உணவுகள், இரவு சந்தைகள், அழகிய கடற்கரைகள் மற்றும் தீவுகள்தான். அந்த நாட்டின் ஒவ்வொரு பகுதியும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவத்தைத் தரும்.
விமான நிலையத்திலிருந்து காரில் புறப்பட்ட மித்ரனும் கிருத்திகாவும், வெற்றி முன்கூட்டியே அவர்களுக்காகப் பதிவு செய்து வைத்திருந்த வீட்டை நோக்கிச் சென்றனர்.
கார் அந்த வீட்டின் முன் வந்து நின்றதும், மித்ரனும் கிருத்திகாவும் காரிலிருந்து இறங்கினர்.
சிறியதாக இருந்தாலும் அழகாக அமைந்திருந்த அந்த வீடு, ஒரு படுக்கையறை, ஹால் மற்றும் அதனுடன் இணைந்த குளியலறையுடன் இருந்தது. வீட்டின் முன்புறம் சிறிய நீச்சல் குளமும், அதற்கருகில் இருவரும் அமர்ந்து சாப்பிடுவதற்காக அழகான குட்டி வரண்டாவும் அமைக்கப்பட்டிருந்தது.
அவர்கள் தங்கியிருந்த இடத்தில் தனியுரிமைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. அவர்களுக்கான உணவு, தேநீர் போன்றவை வரண்டாவில் வைத்துவிட்டு ஊழியர்கள் சென்றுவிடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அவர்கள் உள்ளே நுழைந்ததும், மேசையின் மீது குளிர்ந்த வரவேற்பு பானங்கள் தயாராக வைக்கப்பட்டிருந்தன.
அதைப் பார்த்த கிருத்திகா மெதுவாகச் சிரித்தாள். “மித்து, நம்ம இப்பவே வெளிய போகலயே!”
என்று கேட்டாள். உடல் முழுவதும் பயணக் களைப்பில் இருந்ததால், அவளது கண்கள் இரண்டும் சொருகிக்கொண்டிருந்தன.
மித்ரனுக்கும் அதே உடல் சோர்வு இருந்தது. “இல்லடி… முதல்ல தூங்கணும்” என்றான்.
இருவருக்குமே விமானப் பயணம் என்பதால், பயணக் களைப்பு அதிகமாக இருந்தது.
அடுத்த நாள் காலை, மித்ரனும் கிருத்திகாவும் தாய்லாந்தின் புகழ்பெற்ற வாட் அருண் கோயிலுக்குச் சென்றனர்.
சாவ் பிரயா நதிக்கரையில் கம்பீரமாக உயர்ந்து நின்ற அந்தக் கோயிலைப் பார்த்ததும், கிருத்திகாவின் முகத்தில் வியப்பு மலர்ந்தது.
“மித்து… இவ்வளவு அழகா இருக்கே” என்று அவள் மெதுவாகக் கூறினாள்.
“சரி, அப்புறம் இதெல்லாம் பார்க்கலாம். வா… முதல்ல சாமி கும்பிடலாம்”
என்று மித்ரன் அவளது கையைப் பிடித்தபடி கோயிலுக்குள் அழைத்துச் சென்றான்.
இருவரும் இறைவனை மனதார வேண்டிக்கொண்டனர். கிருத்திகா கண்களை மூடி, தங்களுடைய திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும் நீண்ட நாட்கள் அன்போடும் இருக்க வேண்டும் என்று வேண்டிக்கொண்டாள்.
பின்னர் இருவரும் கோயில் வளாகத்தில் அருகருகே நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டனர். சில புகைப்படங்களில் மித்ரன் கிருத்திகாவின் தோளைச் சுற்றி கை வைத்திருக்க, அவள் வெட்கத்துடன் அவன் அருகில் நெருங்கி நின்றாள்.
“இது நல்லா வந்திருக்கா?” என்று கிருத்திகா புகைப்படத்தைப் பார்த்து மித்ரனிடம் கேட்டாள்.
“நீ இருக்கிறதால நல்லாதான் இருக்கும்” என்று அவளது கன்னத்தைக் கிள்ளியபடி கூறினான்.
அவள் வெட்கத்துடன் சிரித்தாள். அங்கிருந்து புறப்பட்ட இருவரும், பாங்காக் நகரின் புகழ்பெற்ற மிதக்கும் சந்தைக்குச் சென்றனர். படகுகளில் அமைக்கப்பட்டிருந்த சிறிய கடைகளையும், வண்ணமயமான பொருட்களையும், விதவிதமான உணவுகளையும் பார்த்தபடி சிறிது நேரம் சுற்றினர்.
அதன்பிறகு, நகரின் மற்றொரு அழகான சுற்றுலாத் தலத்திற்குச் சென்று, அங்கிருந்த இயற்கை அழகையும் ரசித்தனர்.
மாலை நேரத்தில் கடற்கரைக்குச் சென்றதும், சூரியன் மெதுவாக மறையத் தொடங்கியிருந்தான். வானம் முழுவதும் மாலை நேர வண்ணங்கள் பரவியிருக்க, இருவரும் கடற்கரையில் அருகருகே நடந்து சென்றனர். கிருத்திகா தன் கையை மித்ரனின் கைக்குள் கோர்த்துக்கொண்டாள்.
“மித்து… இந்த நாள் முழுக்க உன்னோட இருக்கிறது ரொம்ப சந்தோஷமா இருக்கு. லவ் பண்ணும்போது கூட நாம வெளியே போனதே இல்லையே” என்று ஏக்கமாகக் கூறினாள்.
“ஆமா… நான் கூப்பிட்டதும் நீ அப்படியே வந்துருவ. நான் வெளிய எல்லாம் வர மாட்டேன் மித்து. யாராவது பார்த்துருவாங்க. ஏதோ நான் உன்னை கடத்திட்டு போற மாதிரி இல்ல பேசுவ”
என்று அவள் பேசியதைப் போலவே மித்ரன் நடித்துக் காட்டினான்.
“என்னடா பண்றது… அப்போ சிட்டுவேஷன் வேற. பட் இப்போ யாரும் நம்மள கேள்வி கேட்க மாட்டாங்கல்ல” என்றவன், அவளது நெற்றியில் அழுத்தமாக ஒரு முத்தமிட்டான்.
“பப்ளிக் ப்ளேஸ் மித்து” என்று கிருத்திகா கூச்சத்துடன் கூறினாள்.
“நீ என் பொண்டாட்டி டீ” என்று மித்ரன் உரிமையாகக் கூறினான்.
சிறிது நேரம் கடற்கரையில் இருந்துவிட்டு, இருவரும் இரவு நேரத்தில் பாங்காக் நகரில் இருந்த பெரிய அழகான உணவகத்திற்குச் சென்றனர்.
வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த அந்த உணவகத்தில், தாய்லாந்தின் பாரம்பரிய உணவுகளுடன் பலவிதமான உணவுகளும் பரிமாறப்பட்டன.
இருவரும் அருகருகே அமர்ந்து, அந்த நாள் முழுவதும் பார்த்த இடங்களைப் பற்றிப் பேசிக்கொண்டே இரவு உணவை ரசித்தனர்.
உணவை முடித்துக்கொண்டு, இரவு நேர நகரத்தின் விளக்குகளை ரசித்தபடி இருவரும் மீண்டும் தங்களுடைய ரிசார்ட்டுக்குத் திரும்பினர்.
“எனக்கு டயர்டா இருக்கு. நான் குளிச்சுட்டு வந்துறேன்” என்று கிருத்திகா கூறினாள்.
“கிருத்திகா… நான் உனக்காக ஒரு டிரெஸ் வாங்கி வச்சிருக்கேன். ப்ளீஸ்… அதை போட்டுட்டு வருவியா?” என்று மித்ரன் கேட்டான்.
“என்ன டிரெஸ்?”
“நீ பார்த்தாலே தெரியும். போட்டுட்டு வெளியே வா” என்றான்.
கிருத்திகா அந்த உடையைப் பார்த்ததும், அதில் நெட் மெட்டீரியல் இருப்பதை கவனித்தாள்.
“ஐயோ… நான் இதெல்லாம் போட்டுக்க மாட்டேன் மித்து” என்றாள் வெட்கத்துடன்.
“போட்டுட்டு வெளியே வா. நான் மட்டும்தான் பார்க்கப் போறேன்” என்று மித்ரன் கொஞ்சலாகக் கூறினான்.
அவள் அவனை முறைத்துப் பார்த்துவிட்டு, வெட்கத்தில் தன் கைகளால் முகத்தை மூடிக்கொண்டாள்.
“எனக்கு ரொம்ப வெட்கமா இருக்கு…” என்றாள்.
“சரி… நீ போய் குளிச்சுட்டு வா. அப்புறம் போட்டுக்கோ”
என்று மித்ரன் அவளைச் சமாதானப்படுத்தினான்.
“ம்…”
என்று மெதுவாகக் கூறிய கிருத்திகா, உடையை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் சென்றாள்.
அவள் குளிக்கச் சென்றதும், மித்ரனும் வெளிப்புறக் குளியலறைக்குச் சென்று குளித்துவிட்டு வந்தான்.
கிருத்திகா வெளியே வருவதற்குள், அறையை அழகாகச் சுத்தம் செய்து, சிறிய விளக்குகளை எரியவிட்டு, காதலான சூழலை ஏற்படுத்தி வைத்தான்.
சிறிது நேரத்திற்குப் பிறகு, குளியலறைக் கதவைத் தட்டியபடி,
“கிருத்திகா…” என்று அழைத்தான்.
“என்ன மித்து?”
“நான் வேணா உன்னை குளிக்க வைக்கட்டுமா? பாவம்… எத்தனை நாள் கஷ்டப்பட்டு தனியா குளிச்சிருப்பல்ல”
என்று மித்ரன் கொஞ்சலாகக் கேட்டான்.
“ஒண்ணும் வேணாம் மித்து. நீ பேசாம இரு”
என்று கிருத்திகா வெட்கத்துடன் கூறினாள். கதவு திறந்ததும், கிருத்திகா நெட் துணியால் ஆன அந்த உடையை அணிந்தபடி வெளியே வந்தாள். உடை அவளுக்கு ஒருவித தயக்கத்தைக் கொடுத்ததால், டவலை முதுகிலிருந்து மார்பு வரை போர்த்திக்கொண்டு, வெட்கத்துடன் நின்றாள்.
அவளைப் பார்த்த மித்ரன் சில நொடிகள் பேசாமல் நின்றான்.
“இந்த டிரெஸோட அழகையே மறச்சுட்டியே டீ” என்று கூறி, அவள் போர்த்தியிருந்த டவலை மெதுவாக எடுத்தான்.
உடனே கிருத்திகா இரு கைகளாலும் தன் தோள்களை மறைத்துக்கொண்டாள்.
அவளது அந்த வெட்கத்தைப் பார்த்த மித்ரன், அவளருகில் வந்து இரு தோள்களிலும் குறுக்காகக் கைகளை வைத்தபடி,
“வேணாம்டீ… இதுக்கு மேல என்னால முடியாது. ரொம்ப கஷ்டப்பட்டு கண்ட்ரோல் பண்ணேன். இரண்டு மாசம் உன்னைப் பக்கத்துல வச்சுக்கிட்டு எதுவும் செய்யாம இருந்தது எனக்கு எவ்வளவு கஷ்டம்னு எனக்குதான் தெரியும்! இதுக்கு மேல என்னால முடியாதுடீ… ப்ளீஸ்” என்று கெஞ்சலாகக் கூறினான்.
கிருத்திகா வெட்கத்தில் தலை குனிந்தபடியே அவனை நெருங்கி நின்றாள். கட்டில் முழுவதும் பூக்கள் நிரம்பியிருக்க, அறையைச் சுற்றிலும் மெழுகுவர்த்திகள் மின்னிக்கொண்டிருந்தன.
மித்ரன் அவளது முகத்தை மெதுவாகத் தன் பக்கம் திருப்பி, அவளது சம்மதத்தை உணர்ந்ததும், அவளது உதடுகளில் மென்மையாக முத்தமிட்டான்.
அந்த முத்தம் மெல்ல மெல்ல ஆழமாக, இருவருக்குள்ளும் நீண்ட நாட்களாகத் தேங்கியிருந்த காதலையும் வெளிப்படுத்தியது.
கிருத்திகா கூச்சத்தில் அவனிடமிருந்து விலக முயன்றபோது, மித்ரன் அவளைத் தன்னருகே அணைத்துக்கொண்டான்.
அவளது இதழ்களை மீண்டும் சிறை செய்த அவனது முத்தத்தில், இரண்டு மாதங்களாக அடக்கி வைத்திருந்த தாபங்களை தீர்க்க ஆரம்பித்தவன், கொஞ்சம் கொஞ்சமாக அவளைத் தன்னவளாக்கினான்.
********
12 எபி மட்டும் வெற்றி இருக்க மாட்டான். 13 எபிக்கு வெற்றிய அமெரிக்கால இருந்து கூட்டிட்டு வந்துரலாம்.
நன்றி உறவுகளே! ❤️






forum இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0
இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!