arrow_back
கனியாத்ரேயம் கனி 12
கனியாத்ரேயம் chevron_right பகுதி 12 / 15

கனி 12

visibility 7
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

கனி 12 

 

அடுத்த நாள் மாலையில் அமெரிக்காவில் நியூயார்க் நகரத்தில் வெற்றியும் சரணும் அவர்கள் தங்கும் வீட்டிற்குச் சென்றனர். இருவருக்கும் தனித் தனி அறைகள் உண்டு.

 

வெற்றி தனது அறைக்குச் செல்லாமல் சரணிடம்,

 

“சரண்… என்னோட ரூமை கொஞ்சம் கிளீன் பண்ணி கொடு” உரிமையாகக் கேட்டான்.

 

“ஓகே அண்ணா. நீங்க வெளியே வெயிட் பண்ணுங்க. நான் ரூமை ஃபுல்லா கிளீன் பண்ணித் தாறேன்”

என்று கூறிய சரண், வெற்றியை வெளியே இருக்கச் சொல்லிவிட்டு வெற்றியின் அறைக்குள் சென்றான்.

 

அங்கிருந்த பொருட்களை ஒவ்வொன்றாகப் பார்த்து சுத்தம் செய்யத் தொடங்கினான்.

 

அறையில் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்த நைராவுடன் வெற்றி எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சரணின் கண்ணில் பட்டன. அவற்றை எல்லாம் எடுத்த சரண், குப்பைத்தொட்டியில் இட்டான்.

 

அதன்பிறகு அறையில் இருந்த தூசியை எல்லாம் தட்டி சுத்தம் செய்தான். பழைய பெட்ஷீட்டைக் கழற்றி, புதிய பெட்ஷீட்டை விரித்து, தலையணைகளையும் ஒழுங்காக வைத்தான்.

 

அறை முழுவதையும் சுத்தம் செய்து முடித்த பிறகு, கதவைத் திறந்து வெளியே வந்த சரண்,

 

“அண்ணா… ரூம் கிளீன் பண்ணியாச்சு. இப்போ நீங்க யூஸ் பண்ணிக்கலாம்” என்றான்.

 

இருவரும் குளித்துவிட்டு வந்த பின்னர், சரண்,

 

“அண்ணா… கான்ஸ்ட்ரக்ஷன் வேலைக்கு நாளைக்கு பார்க்கலாம். இப்போ ரெஸ்ட் எடுங்க. இன்னைக்கு மட்டும் ஃபுட் வெளியே ஆர்டர் பண்ணிக்கலாம். நாளைக்கு க்ரோசரிஸ் எல்லாம் வாங்கிட்டு வந்து சமைச்சுத் தாறேன்” அக்கறையாகக் கூறினான்.

 

அப்போது பல யோசனைகளில் இருந்த வெற்றி, எதுவும் பேசாமல் கட்டைவிரலை மட்டும் உயர்த்திக் காட்டினான்.

 

சரண் பர்கர் ஆர்டர் செய்தான்.

 

உணவு வந்ததும், இருவரும் சாப்பிட அமர்ந்தனர்.

 

பர்கரை கையில் எடுத்த வெற்றிக்கு, வீட்டில் கனி அருகில் இருந்து அவனுக்குத் தேவையானதை எல்லாம் கவனித்துக்கொண்டதும், அவன் சாப்பிடும்போது அருகில் இருந்து ஊட்டிவிட்டதும் நினைவுக்கு வந்தது.

 

அங்கே இருந்தபோது இட்லி, சப்பாத்தி, பூரி என்று வீட்டுச் சாப்பாட்டின் சுவை நாக்கிலே ஒட்டியிருந்தது. இப்போது அவை எட்டாத கனியானது. உடன் அவன் கனியும்தான்!

 

வெற்றி சாப்பிடும்போதெல்லாம், கனி இருந்திருந்தால் இப்போது அவனருகில் அமர்ந்து,

 

“அத்தான்… சாப்பிடுங்க”

 

என்று சொல்லி, அவனுக்கு ஊட்டிவிட்டிருப்பாள் என்ற எண்ணம் வந்து போனது.

 

சில நொடிகள் அமைதியாக இருந்த வெற்றி, மீண்டும் சாப்பிடத் தொடங்கினான். ஆனால் அவன் மனதில் கனியின் நினைவு மட்டும் வந்து கொண்டே இருந்தது.

 

சரண் உடல் அலுப்பு தாங்க முடியாமல் உறங்கச் சென்றான்.

 

வெற்றி, கட்டிலில் புரண்டு கொண்டிருந்தாலும், உறக்கம் மட்டும் தூரமானது. கண்களுக்கு ஓய்வு தேவையெனக் கண்களை மூடிக்கொண்டு படுத்திருந்தான்.

 

மனதில் பூத்த கனியில் மயங்கிட நெஞ்சம் தயங்குதே

உனை அணைத்திட காற்றில் கைகளைத் துழாவுதே

என் உடல் தழுவும் காற்றையும் என் மனம் மறுக்குதே!

தொலைத்த விழிகளைத் தேடாமல்,

உன் விழிகள் என் மனவிழியோடு பூட்டி வைக்கவா?

ஏக்கம் எல்லாம் பெண்ணே!

என்னை உன் நினைவில் வாட்டுதே!

 

மறுநாள் காலையில் எழுந்த வெற்றி, வழக்கம்போல் தன்னைச் சுற்றியிருந்த பொருட்களை எல்லாம் தடவி தடவி தேடினான். அப்போது தினமும் காலையில் கனி வந்து அவனுக்குத் தேனீர் கொடுப்பது நினைவுக்கு வந்தது.

 

கனியின் நினைவுகளைத் தேக்கி வைத்த பின்னர், தயாராகி கட்டுமான வேலைக்குச் சென்றான்.

 

அங்கு சென்றதும், கட்டிடத்தின் பணிகள் குறித்து கேட்டறிந்துவிட்டு, சரணிடம்,

 

“இந்தப் ப்ராஜெக்ட்டுக்கு இனிமேல் ஆர்கிடெக்ட் நைரா வேண்டாம். இதுக்குப்பிறகு வேற யாராவது ஒரு ஜென் ஆர்கிடெக்ட்டைப் போடு”

என்று அழுத்தமாகக் கூறினான்.

 

“ஓகே அண்ணா” என்று சரண் கூறினான்.

 

வெற்றி கட்டுமானப் பணிகளைச் சரிபார்க்கச் சென்றபோது, சரணும் எப்போதும் அவனுக்குப் பக்கத்திலேயே இருந்தான். பார்வை இல்லாமல் கட்டுமானப் பணிகளைச் சரிபார்ப்பது ஆபத்தானது என்பதால், வெற்றி தனியாக எங்கும் செல்ல சரண் அனுமதிக்கவில்லை.

 

கட்டிடத்தின் மேல்தளத்திற்குச் செல்ல வேண்டிய நேரத்தில்,

 

“அண்ணா… நீங்க இங்கேயே இருங்க. நான் போய்ப் பார்த்துட்டு வர்றேன்”

என்று சரண் கூறினான்.

 

ஆனால் வெற்றி, “இல்ல சரண்… நான் வந்து பார்க்கிறேன்”

 

என்று கூறிவிட்டு, சரணின் உதவியுடன் மேலே சென்றான்.

 

அங்கு சென்றதும், ஒவ்வொரு பீமையும் கைகளால் தடவிப் பார்த்தான். சில இடங்களில் கைகளால் தட்டிப் பார்த்தும், கட்டுமானத்தின் தரத்தைத் தொட்டுணர்ந்தும் பார்த்துக்கொண்டிருந்தான்.

 

பார்வை இல்லாவிட்டாலும், கட்டுமானப் பணிகளில் எந்தக் குறையும் இருக்கக்கூடாது என்பதில் வெற்றி மிகவும் கவனமாக இருந்தான். அதனால் ஒவ்வொரு பகுதியையும் தானே தொட்டு உணர்ந்து பார்த்துக்கொண்டிருந்தான்.

 

கட்டுமானம் முடிந்திருந்த ஒரு பகுதியின் அளவை சரண் கூறியதும், அந்த அளவை மனதில் கணக்கிட்டுக்கொண்டான்.

 

“ஓகே… இது இந்த அளவுல கரெக்ட்டா இருக்கு” என்று தனது கணக்கின் அடிப்படையில் அந்த இடத்தின் அளவை மனதில் உறுதிப்படுத்திக்கொண்டான்.

 

மனக்கண்ணில் அந்த வேலையை உருவாக்கியவன், தனது அனுபவத்தையும் கணக்கையும் வைத்து கட்டுமானத்தின் ஒவ்வொரு அளவையும் துல்லியமாகக் கணித்துக்கொண்டிருந்தான்.

 

கட்டுமானப் பணிக்குத் தேவையான பொருட்கள் வாங்கியதற்கான பற்றுச்சீட்டுடன் கூடிய ஆவணங்களைச் சரிபார்த்த சரண், வெற்றியிடம் கையெழுத்தைப் பெற்றுக்கொள்ள, வெற்றியின் விரல்கள் தானாகவே

 

“வெற்றி கனி” என்று எழுத்துகளை எழுதியது.

 

அதைப் பார்த்த சரண்,

 

“அண்ணா… நீங்க கையெழுத்தைத் தப்பா போட்டுட்டீங்க. நீங்க வெற்றி கனி என்று போட்டிருக்கீங்க. புதிய ஸ்டேட்மென்ட் கொண்டு வர்றேன். அதுல சரியா கையெழுத்துப் போடுங்க”

என்றான்.

 

“சாரி” என்று வெற்றி கூறினான்.

 

வெற்றியின் பாக்கெட்டில் இருந்து அலைபேசி சத்தமிட, அதை எடுத்த வெற்றி, சரணிடம் கொடுத்து,

 

“யாரு கால் பண்ணுறாங்க?”

என்று கேட்டான்.

 

“அண்ணா… கனிமா கால் பண்ணுறாங்க” என்றான்.

 

கனியின் பெயரைக் கேட்டதும், வெற்றிக்குள் அவளிடம் பேச வேண்டும் என்ற ஆசை எழுந்தது. இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல், சரணிடம்,

 

“எடு… பேசுறேன்” என்றான்.

 

சரண் போனை வெற்றியிடம் கொடுக்க, வெற்றி அழைப்பை ஏற்றான்.

 

“ஹலோ…” என்றான்.

 

மறுமுனையில் கனி ஆர்வமாக,

 

“அத்தான்… ஊர் வந்து சேர்ந்துட்டீங்களா? நல்லா இருக்கீங்களா? மருந்தெல்லாம் எடுத்துக்கிட்டீங்களா? சரண் அண்ணா கண்ணுக்கு மருந்து ஊத்தி விட்டாரா? என்று அக்கறையோடு கேட்டாள்.

 

“ம்… இருக்கேன். நான் சேஃபா இருக்கேன். சரண் மருந்து போட்டான்” என்று வெற்றி கூறினான்.

 

அதன்பிறகு, வெற்றி தன்னிடம்,

 

“நீ நல்லா இருக்கியா?”

என்று கேட்பான் என்று கனி எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஆனால் வெற்றி அவளிடம் அதைக் கேட்கவில்லை.

 

“நீ கவனமா இரு கனி. படிக்கிறதுல கவனம் செலுத்து. வீட்ல எல்லாரையும் கேட்டேன் சொல்லு. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு. அப்புறமா அடிக்கிறேன்” என்று மட்டும் கூறிவிட்டு போனை வைத்துவிட்டான்.

 

வெற்றி இப்படி செய்ததால், ஆர்வமாக இருந்த கனி ஏமாற்றமடைந்தாள்.

 

இங்கு கௌரியோ சரணுடன் வாட்ஸ்அப்பில் சாட் செய்ய ஆரம்பித்திருந்தாள்.

 

தாய்லாந்தில் இருந்து வந்ததிலிருந்தே மித்ரனும் கிருத்திகாவும் முன்பைவிட அதிகமாக நெருக்கமாக இருந்தனர். இருவருக்குள்ளும் இருந்த நெருக்கம் நாளுக்கு நாள் அழகாக அதிகரித்துக்கொண்டே இருந்தது. இருவரும் சந்தோஷமாக நாட்களைக் கழித்துக்கொண்டனர்.

 

கனியின் இரண்டாம் ஆண்டு கல்லூரியும் தொடங்கியிருந்தது. நண்பர்களுடன் கல்லூரியில் நேரத்தைச் செலவிடும்போது, அவளுடைய மனதும் கொஞ்சம் லேசாக இருந்தது.

 

வெற்றி இல்லாத அந்த வீடு அவளுக்குள் ஒரு விதமான வெறுமையை ஏற்படுத்தியது. அலைபேசியில் அழைத்தால்கூட, ஓரிரு வார்த்தைகள்தான் பேசுவான். அதற்கு மேல் அவன் பேசுவதுமில்லை. இருப்பினும், அவளுடைய மனது அவனைத்தான் தேடியது.

 

கனியின் மனநிலையை அமிர்தவள்ளி நன்றாகவே புரிந்திருந்தார். அவள் வெளியில் சந்தோஷமாக இருப்பது போலத் தெரிந்தாலும், உள்ளுக்குள் வெற்றியை நினைத்து எவ்வளவு கஷ்டப்படுகிறாள் என்பதும் அவருக்குப் புரிந்திருந்தது.

 

ஒரு நாள் மணிமாறன் வெற்றிக்கு போன் செய்து பேசினார். அவன் எப்போது ஊருக்குத் திரும்பி வருவான் என்பதையும், அங்குள்ள நிலைமை எப்படி இருக்கிறது என்பதையும் கேட்டுத் தெரிந்துகொண்டார்.

 

வெற்றியும் வழக்கம்போல் அவரிடம் பேசிவிட்டு, போனை வைத்தான்.

 

இரண்டு மாதங்கள் முடிந்திருந்த நிலையில், ஊரில் கோயில் திருவிழாவும் ஆரம்பமானது. திருவிழாவில் ஊரே களைகட்டியது. கடைவீதிகள், இராட்டினம், ரயில் வண்டி, பலூன் சுடுதல் போன்ற விளையாட்டுகளும் அந்நாட்களில் சிறப்பாகவே இருந்தன.

 

வீட்டில் இருந்த பெண்கள் அனைவரும் பால்குடம் எடுக்க, காலையிலேயே கோவிலுக்குச் சென்றிருந்தனர். பால்குடம் ஊர்வலமும் ஆரம்பமானது. கோயிலைச் சுற்றி மூன்று சுற்றுகள் சென்று, பால்குடத்தை எடுத்துச் சென்று சாமிக்கு அபிஷேகம் செய்தனர்.

 

அப்போது, சாமிக்கு அபிஷேகம் செய்துவிட்டு, தன் கையில் இருந்த பாலை சாமிக்கு ஊற்றிவிட்டு கோயில் பிரகாரத்தை விட்டு வெளியே வந்த கிருத்திகா, திடீரென மயங்கி சரிந்தாள்.

 

“கிருத்தி அக்கா!” என்று கனி பதறியபடி அவளைத் தாங்கிப் பிடித்தாள்.

 

ஓடி வந்த மித்ரன், கிருத்திகாவைத் தூக்கி ஓரமாகக் கொண்டு சென்று படுக்க வைத்தான். கலைவாணி அவளுடைய முகத்தில் தண்ணீர் தெளிக்க, அமிர்தவள்ளி காற்று வீசிக்கொண்டிருந்தார்.

 

சிறிது நேரத்தில் கிருத்திகாவுக்கு மயக்கம் தெளிந்ததும், அவளை எழுப்பி உட்கார வைத்தனர். அவளுக்குத் தண்ணீரும் கொடுத்தனர்.

 

“என்னம்மா ஆச்சு? ஆஸ்பிடல் போகலாமா?” என்று அமிர்தவள்ளி பதற்றமாகக் கேட்டார்.

 

“காலையில இருந்து சாப்பிடல அத்தைம்மா… அதனால மயக்கம் வந்துருக்கும்” என்று கிருத்திகா தடுமாற்றத்துடன் கூறினாள்.

 

அப்போது அருகில் இருந்த வயதான பாட்டி ஒருவர், கிருத்திகாவின் முகத்தை உற்றுப் பார்த்துவிட்டு,

 

“உன் முகத்தைப் பார்த்தா அப்படி தெரியலையேம்மா… ஏதோ விசேஷம் மாதிரி தெரியுது. நாள் எதுவும் தள்ளிப் போச்சா?” என்று பாட்டி கேட்டார்.

 

கிருத்திகா வெட்கத்துடன் தலையைக் குனிந்து,

 

“ஆமா…” என்றாள்.

 

அடுத்த நொடியே அமிர்தவள்ளி, கலைவாணி, மித்ரன், கனி, கௌரி என அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி குத்தாட்டம் போட்டது.

 

குடும்பத்தோடு சுவாமி தரிசனம் செய்துவிட்டு, மகிழ்ச்சியான செய்தியைக் கொண்டாடுவதற்காக அனைவரும் வீட்டிற்குத் திரும்பினர்.

 

கனியும் கௌரியும் சேர்ந்து கேசரி செய்தனர். கேசரி தயாரானதும், அனைவருக்கும் ஆசையாகப் பகிர்ந்தனர்.

 

“இன்னிக்கு மட்டும்தான் மாமா உங்களுக்கு சுகர் போட்டு கேசரி. மத்த நாளைக்கெல்லாம் கிடையாது” என்று கனி சிரித்தபடி கூறினாள்.

 

“ஆமா ஆமா… இன்னிக்கு மட்டும்தான்” என்று அமிர்தவள்ளியும் சிரித்தபடி கூறினார்.

 

யாருக்கும் கேட்காதவாறு அமிர்தவள்ளி, திருச்செல்வத்தின் காதருகில் சென்று,

 

“என்ன கிழவரே… நான் சொன்னேன்தானே அடுத்த வருஷம் தாத்தா பாட்டி ஆகிருவோம்னு இப்போ சந்தோஷமா?” என்று கேட்டார்.

 

“சந்தோஷம் இல்லாம இருக்குமா வள்ளி?” என்று திருச்செல்வம் மகிழ்ச்சியுடன் கூறினார்.

 

திருச்செல்வம், “இதைப்போல வெற்றிக்கும் ஆண்டவன் கண்ணைத் திறந்துட்டா போதும் வள்ளி” என்று கூற,

 

“ஆமா ஆமா… எல்லாம் சீக்கிரம் நடக்கும். குழந்தை வர நேரம், எல்லாம் சரியாகிடும்” என்று கூறி அமிர்தவள்ளி மகிழ்ந்தார்.

 

அன்றிரவே பூ மிதித்தல் விழாவும் நடைபெற இருந்தது. கிருத்திகாவும் அமிர்தவள்ளியும் வீட்டில் இருக்க, ஏனையோர் கோயிலுக்குச் சென்றிருந்தனர்.

 

கரித்துண்டுகள் எரிந்து சிவந்து, தீக்கனல்களாக இருளில் ஜொலித்தன. தகித்துக்கொண்டிருந்த அனலின் அருகே ஒருவராலும் நிற்க முடியவில்லை. அத்தனை வெப்பம்!

 

கூடியிருந்த மக்கள், அம்மனைத் தரிசிப்பதற்காக ஆவலுடன் காத்திருந்தனர். முதலில் பூக்குழி இறங்குவதற்காக, கும்பத்தில் வைத்திருந்த அம்மனைப் பூசாரி கையில் ஏந்தியபடி நிற்க, பக்தர்கள் அனைவரும் பக்திப் பரவசத்துடன்,

 

“ஓம் சக்தி! பராசக்தி!” என்று விண்ணதிரக் கோஷமிட்டனர்.

 

அந்தக் கோஷங்களுக்கிடையே, அம்மனை ஏந்தியபடி பூசாரி முதலில் பூக்குழியில் இறங்கினார். அவரைத் தொடர்ந்து மற்றவர்களும் பூக்குழி இறங்கத் தயாராகினர்.

 

கனி மட்டும் சுற்றிலும் என்ன நடக்கிறது என்பதைக்கூட உணராமல், மனமுருகி அம்மனை வேண்டிக்கொண்டிருந்தாள்.

 

‘அம்மா… என் அத்தானுக்கு எப்படியாவது கண்பார்வை கிடைச்சிடணும். அவரால் மறுபடியும் இந்த உலகத்தைப் பார்க்க முடியணும். அவரோட வாழ்க்கையில் மறுபடியும் சந்தோஷம் வரணும். என் வேண்டுதலை மட்டும் நிறைவேத்திடும்மா!’ என்று கண்ணீருடன் வேண்டிக்கொண்டிருந்தவளுக்குத் தான் என்ன செய்யப்போகிறோம் என்பதுகூட அப்போது தெரியவில்லை.

 

அம்மனை வேண்டியபடியே இருந்த கனி, திடீரெனக் கூட்டத்தைக் கடந்து பூக்குழியை நோக்கி நடந்தாள். அவளுடைய கால்கள் அனலை நெருங்கியபோதுதான், கலைவாணியின் பார்வை மகளின் மீது விழுந்தது.

 

அடுத்த நொடி, கனி பூக்குழிக்குள் இறங்கிவிட்டாள்!

 

அவ்வளவு நேரமும் தங்களுடன் நின்றுகொண்டிருந்த கனி, திடீரெனப் பூக்குழிக்குள் இறங்கியதைக் கண்ட கலைவாணி, மித்ரன், கௌரி, திருச்செல்வம் நால்வரும் அதிர்ச்சியில் உறைந்துபோயினர். அடுத்து என்ன செய்வதென்றே தெரியாமல் திகைத்து நின்றனர்.

 

தன் மகள் தீக்குழியில் இறங்கியதைக் கண்ட கலைவாணி, பதற்றத்தில் செய்வதறியாமல் தவித்தார்.

 

‘அம்மா… உன்னை நம்பிப் பூக்குழியில் இறங்கிட்ட என் மகளுக்கு நீதான்மா காவல்! அவளை நல்லபடியா வெளியே கொண்டுவந்து சேர்த்திடும்மா!’

என்று கலைவாணி மகளுக்காக மனமுருகி வேண்டிக்கொண்டார்.

 

சுற்றியிருந்தவர்கள் அனைவரும் பதற்றத்துடன் பார்க்க, கனி மட்டும் தன் அத்தானுக்குக் கண்பார்வை கிடைக்க வேண்டும் என்ற ஒரே வேண்டுதலுடன் பூக்குழியைக் கடந்து நடந்தாள்.

 

பூக்குழியிலிருந்து வெளியே வந்ததும், கலைவாணியும் கௌரியும் கனியின் இருபுறமும் அவளைத் தாங்கிப் பிடித்துக்கொண்டனர்.

 

கனி நேராக அம்மனை நோக்கித் திரும்பி, இரு கைகளையும் கூப்பி வணங்கினாள். அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்துகொண்டே இருந்தது.

 

தன் கால்கள் அனலைக் கடந்து வந்ததைக்கூட உணராமல், வெற்றியின் கண்களில் மீண்டும் ஒளி பிறக்க வேண்டும் என்ற நம்பிக்கையுடன் அம்மனின் முன் மனமுருகி வேண்டி நின்றாள் கனி.

 

 

கனியை அமர வைத்து, அவளுடைய கால்களை நீட்டச் செய்த கௌரி, உடனே அவளுடைய பாதங்களில் சந்தனம் பூசினாள்.

 

மகளின் நிலையைப் பார்த்த கலைவாணிக்குக் கண்ணீரை அடக்கவே முடியவில்லை. என்ன செய்வதென்றே தெரியாமல், மகளைப் பார்த்தபடி கண்ணீர் சிந்தினார். திருச்செல்வமும் மனம் கலங்கிப்போய் நின்றார்.

 

மித்ரனுக்கோ பேசுவதற்கே வார்த்தைகள் வரவில்லை.

 

‘உண்மையாகவே என் அண்ணனுக்கு ஏற்றவள் கனி அண்ணிதான்!’ என்று மனதிற்குள் பெருமையாக நினைத்துக்கொண்டான் மித்ரன்.

 

 

*******

வாசக நெஞ்சங்களே பதிவுகள் பிடித்திருந்தால், ஊக்கப்படுத்துங்கள் நன்றி🙏❤️

அடுத்த அத்தியாயம்

கனி 13

கனி 13  சந்திரன் வீடு செல்லும் வேளையில் எழுந்தவள், அன்றாடக் கடமைகளை முடித்துவிட்டு, பகலவன் வரும் முன்னே அவளது கோரிக்கையை வைத்தாள். "அத்தான் சீக்கிரம் வரச் சொல்லு, சூரிய பகவானே!" எனச் சூரியனிடம் தூது அனுப்பியிருந்தாள். வழக்கம்போல மணக்க மணக்கத் தேனீரை அனைவருக்கும் கொடுக்க, கிருத்திகாவிற்கு…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்