அத்தியாயம் – 1
“லவ்வுல சிக்கும் பசங்களே
லவ்வுல சிக்கும் பசங்களே
இங்க வாங்கடா வாங்க வாங்க
மாஸ்டர் கிளாஸு எடுப்பேன்
ஹேய் கல்யாண விருந்தே
ஹேய் ஹேய்
வா அடிச்சு நொறுக்கே
ஆஹான்”
சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்த அந்தப் பிரபலமான பாடலை முணுமுணுத்துக் கொண்டே ஒருவனைப் போட்டு அடித்து நொறுக்கிக் கொண்டிருந்தான் அருள்மொழி வர்மன் – நம் கதையின் நாயகன்.
அவன் அடித்ததில் முகம் ஒரு பக்கம் இட்லி போல் வீங்கியிருக்க, இரண்டு பற்கள் எங்கு சென்று விழுந்ததென்றே தெரியவில்லை.
லத்தியோடு சேர்த்து அந்த மனிதனின் கைகளும் உடைந்து விழும் அபாயத்தில் இருக்க,
வலியில் அலறுவதற்குக் கூட திராணியற்று ஈனஸ்வரத்தில் முனங்கிக் கொண்டிருந்தான் அவன்.
அப்போது மிகவும் தயக்கத்துடன் அருள்மொழி வர்மனை நெருங்கிய தலைமைக் காவலர் சுப்பிரமணி,
“சார்!!! இன்னும் கொஞ்சம் அடிச்சா செத்துருவான் சார்..” என்று மெதுவாக இழுக்க,
கூர் ஈட்டியாய் அவரை வந்து தாக்கியது அருள் மொழியின் பார்வை!!!!
ஒற்றைப் பார்வைக்கே மனிதருக்குள் கிலி பிறக்க, எச்சிலைக் கூட்டி விழுங்கியவர்,
“இல்லை சார்.. செத்துட்டா விசாரணை கமிஷன் அது இதுன்னு நம்மளைத் தான் இழுத்து அடிப்பாங்க” என்று ஒரு வழியாய் சொல்லி முடிக்க,
இங்கே அதே சமயம் அந்தப் பாடலும் முழுதாய் பாடி முடித்திருந்தது.
மெதுவாய் பிய்ந்து போயிருந்த லத்தியை தூக்கி எறிந்தவன், சுண்டு விரலால் காதைக் குடைந்தபடி சுப்பிரமணியின் பக்கம் திரும்பி,
“உங்க பொண்ணுக்கு ஒரு பதிமூணு இல்லை பதினாலு வயசு இருக்குமா சுப்பு???” என்று கேட்க,
“பதி.. பதினைஞ்சு சார்… பாப்பா டென்த் படிக்கிறா..” அவன் எங்கு வருகிறான் என்று புரிந்து தயக்கத்துடன் சுப்பிரமணி பதிலளித்தார்.
“உங்க வைஃப் வேலைக்காக வெளியூர் போயிட்டா, உங்க பக்கத்து வீட்டுக்காரங்க வீட்ல தான் உங்க பொண்ணு, நீங்க போற வரைக்கும் இருப்பான்னு சொல்லிருக்கீங்க தானே???”
குரலில் அதே அழுத்தம் தான். ஆனால் அவனின் முகம் என்னவோ மிகவும் இலகுவாகத் தான் காட்சியளித்தது.
அவன் இறுதியில் எங்கு வந்து நிற்பான் என்று புரிந்து கொண்ட சுப்பிரமணியும்,
“சார்!! இவன் பண்ணது சரின்னு நான் சொல்லலை.. ஆனா இவனுக்கு ஏதாவது ஆச்சுன்னா தேவையில்லாம நமக்கு தான் வில்லங்கமா முடியும்!!!” என்று அவர் தன் கூற்றிற்கான காரணத்தை விளக்க,
அவன் செவியில் அதுவெல்லாம் சென்று சேர்ந்ததாகவே தெரியவில்லை.
“எட்டு வயசு பொண்ணு சுப்பு!!!! என்ன தெரியும் அதுக்கு?? இருபது வருஷமா அக்கம் பக்கத்துல இருக்கோமேன்னு நம்பிக்கையில இவனை நம்பி பிள்ளையை விட்டுட்டு போனா!!!! பிளடி ****!!!”
ஆத்திரத்தில் முகம் சிவக்க மீண்டும் அங்கே இவனின் அடியில் சுருண்டு விழுந்து கிடந்தவனின் முகத்திலே பலமாய் ஒரு அடி வைக்க,
ரத்தம் பீறிட்டுக் கொண்டு வழிந்தது!!!
அதைக்கண்டு கூட நாயகனின் ஆத்திரம் அடங்கும் வழியைக் காணவில்லை.
விசாரணைக் கமிஷனைச் சந்திப்பது அவனுக்கு புதிதில்லை என்றாலும் இந்த முறை அவனைக் காக்கவென்றே அங்கு வந்து சேர்ந்தார் அந்த மாவட்டத்தின் காவல்துறை துணை கண்காணிப்பாளர்(DSP) வேல் முருகன்.
“சார் டி.எஸ்.பி சார் வந்திருக்காரு!!!” என்று ஒரு காவல் அதிகாரி வந்து தகவல் சொல்ல,
குற்றுயிரும் குறை உயிருமாய் தரையில் கிடந்தவனை எட்டி மிதித்த அருள் மொழி வர்மன்,
“உனக்கு ஆயுசு கெட்டின்னு நினைக்காத!!! வந்து வச்சுக்கிறேன் உன்னை!!!!”
என வார்த்தைகளைக் கடித்துத் துப்பியவன்,
அங்கே ஹேங்கரில் தொங்கிக் கொண்டிருந்த அவனின் சீருடையை எடுத்து அணிந்து கொண்டே, ஒரு மிடுக்குடன் அந்த அறையை விட்டு வெளியேறினான்.
அவனைத் தொடர்ந்து சுப்பிரமணியும் வெளியே வர,
அங்கே காவல் ஆய்வாளர் என பெயர் பதாகை பொறிக்கப்பட்டிருந்த அவனின் அறைக்குள் அவர்களுக்காக பதற்றத்துடன் காத்துக் கொண்டிருந்தார் வேல் முருகன்.
அறைக்குள் சாவதானமாக நுழைந்து அவருக்கு மரியாதைக்காக சல்யூட் வைத்த அருள் மொழி வர்மனை முறைத்துக் கொண்டே,
“என்ன அருள்?? போன் பண்ணா எடுக்க மாட்டீங்களா?? அக்யூஸ்ட் எங்க?? இந்த நியூஸ் ரொம்பவே சென்சிடிவ்!! மீடியா ஆல்ரெடி இதை டீப்பா கவர் பண்ண ஸ்டார்ட் பண்ணிட்டாங்க.. நம்ம உடனடியா இவனை கோர்ட்ல பிரொடியூஸ் பண்ணி ஆகணும்!!!”
என்று அவர் பதற்றத்துடன் விசாரிக்க,
அவனிடமோ துளியும் அந்த பதற்றம் இல்லை!!!
“ஏன் சார் இவ்வளவு டென்ஷன்!!! உட்காருங்க!! சுப்பு, சாருக்கு டீ சொல்லுங்க!!!! நல்லா இஞ்சி தட்டிப் போட்டு கொடுக்கச் சொல்லுங்க.. அப்போதான் அவருக்குப் பிடிக்கும்.. ஹான்!! டீ கொஞ்சம் ஸ்டாராங்க இருக்கட்டும்” என்று பக்குவம் வேறு அவன் சொல்லிக்கொண்டிருக்க,
முடிந்தால் பார்வையாலே அவனை பஸ்பம் ஆக்கியிருப்பார் டி.எஸ்.பி.
“அருள்!!! பீ சீரியஸ்!!! வெளிய அவ்வளவு மீடியா பீப்பிள் நின்னுட்டு இருக்காங்க.. நீங்க கொஞ்சம் கூட பொறுப்பே இல்லாம விளையாடிட்டு இருக்கீங்க?? எங்க அந்த அக்யூஸ்ட்?? இருக்கானா இல்லை செத்துட்டானா???”
மேலிடத்திலிருந்து வந்த அழுத்தம் தந்த எரிச்சல் மிகுதியில் அவர் தொண்டைப்கிழிய கத்திக் கொண்டிருக்க,
அப்போது,
“குத்தால அருவியில
குளிச்சது போல் இருக்குதா?
குத்தால அருவியில
குளிச்சது போல் இருக்குதா?
ஏ, ஜிலுக்கு சிக்கான் ஊஞ்சல் ஆடுது
அட மஞ்ச குருவி ஊஞ்சல் ஆடுது
ஏ ஜிலுக்கு சிக்கான் ஊஞ்சல் ஆடுது
அட மஞ்ச குருவி ஊஞ்சல் ஆடுது”
என்று நாயகனின் கைபேசி சப்தம் எழுப்பி வேல் முருகனின் இரத்த அழுத்தத்தை மேலும் உயர்த்தியது.
“ஆஃப் பண்ணுங்க!! முதல்ல அதை ஆஃப் பண்ணுங்க அருள் மொழி!!!! ஒரு இன்ஸ்பெக்டர் மாதிரி கொஞ்சமாச்சும் நடந்துக்கோங்க..” என்று அவர் சப்தமிட,
மிகவும் பொறுமையாக தன் கைபேசியை எடுத்து பாடலை நிறுத்தியவன்,
“இன்ஸ்பெக்டருக்குன்னு தனி நடை எதுவும் இருக்கா சார்?? டிரெய்னிங் பீரியட்ல எனக்கு மட்டும் எதுவும் சொல்லியே தரலையே??”
என்று அப்பாவியாய் முகத்தை வைத்துக்கொண்டு நக்கல் செய்தான் நாயகன்.
பதிலுக்கு, வேல்முருகன் எந்நேரமும் வெடித்துச் சிதறிவிடுவேன் எனும் நிலையில் கடுப்போடு அவனை முறைத்தபடி நின்றிருந்தார்.
நிலைமை மோசமாவதைத் தொடர்ந்து தலைமை காவலர் சுப்பிரமணி தான்,
“ஐயா!!! அந்தப்பய உயிரோட தான் இருக்கான்.. அங்க உள்ள இருக்கான்” என்று தகவல் சொல்லி அவரைக் கையோடு அழைத்துச் செல்ல,
வேல்முருகன் நாயகனை முறைத்துக் கொண்டு தான் அறையில் இருந்து வெளியேறினார்.
அதை ஒரு தோள் குலுக்கலுடன் கடந்து விட்டவன்,
“டேய் மகேஷு!!! மணி ஒன்னாச்சு.. எனக்கு சாப்பாடு வந்திருச்சா??? இன்னைக்கு மட்டன் பிரியாணி செஞ்சு கொடுத்து விடச் சொன்னேன்.. எங்க அம்மா சீரக சம்பாவுல செஞ்சுச்சா இல்லை பாஸ்மதியில செஞ்சுச்சான்னு வேற தெரியலையே”
என்று கேட்டவாறே அவன் இருக்கையில் போய் அமர,
எப்போதும் போல் அவனின் இந்த குணாதிசியத்தில் அயர்ந்து தான் அவனைப் பார்த்தனர் மற்ற காவலர்கள்.
இங்கே சுப்புவுடன் சென்று கொண்டிருந்த டி.எஸ்.பி கூட,
“என்னய்யா இவன் இப்படி இருக்கான்?? சின்னக்குழந்தையை ரேப் பண்ணிட்டான்னு, நியூஸ், ஃபேஸ்புக்ன்னு இதான் டிரெண்டிங்ல போயிட்டு இருக்கு.. ஸ்டேஷன் முன்னாடி அவ்வளவு மீடியா பீப்பிள் குவிஞ்சு நிக்குறாங்க.. இவன் என்னடான்னா ஜாலியா பாட்டு கேட்டுட்டு உட்காந்திருக்கான்”
என்றவர் இன்னுமே அவனின் நடவடிக்கையை எண்ணி பல்லைக் கடித்தார்.
“சார்!!! இவர் எப்பயுமே இப்படின்னு தான் டிபார்ட்மெண்ட்க்கே தெரியுமே…. இருந்தும் இவர் முடிக்க முடியாத கேசைக் கூட சீக்கிரமே சால்வ் பண்ணிடுவாருன்னே கமிஷனர் கூட இவரை எதுவும் சொல்றதில்லை.. அதுவும் இல்லாம அவங்க பெரியப்பா மினிஸ்டர் வேற.. ” என்று சுப்பு பதிலளிக்க,
வேல்முருகனுக்கு அதை ஒத்துக்கொள்வதைத் தவிர வேறு வழி இருக்கவில்லை.
உண்மை தானே, ஆறு வருடங்களாக இழுத்துக் கொண்டிருந்த கேஸ் ஒன்றை, இவனிடம் அவர் ஒப்படைத்த போது, வெறும் பத்தே நாட்களில் குற்றவாளியை அவரின் கைகளில் ஒப்படைத்துவிட்ட வித்தைக்காரன் ஆகிற்றே நம் நாயகன்!!!
அவருக்குப் பிடிக்கவில்லை என்றாலும், அவனின் திறமையை எண்ணி மேலும் பேச்சை வளர்க்காமல் வாயை மூடிக்கொண்டவர், உள்ளே சென்று அந்த குற்றவாளியைக் காண,
அவன் இருந்த நிலைமையைக் கண்டு அடுத்த சுற்று கோபத்திற்கு தயாராகி விட்டார்.
“என்னய்யா இப்படி பேய் அடிச்ச மாதிரி நொறுக்கி வச்சிருக்கான்?? இவ்வளவு காயத்தோட எப்படி கோர்ட்ல பிரொடியூஸ் பண்றது???”
என்று தலையில் கைவைத்துவிட்டார் அந்த பாவப்பட்ட டி.எஸ்.பி.
அதற்குள் இங்கே வெளியே குவிந்து நின்ற ஊடக மக்களுக்கு தன் பாணியிலேயே பதிலளித்து அவர்களை விரட்டி விட்டிருந்த அருள் மொழி,
“ரொம்ப யோசிக்காதீங்க சார்!! இந்த நாதாரி எல்லாம் வாழவே தகுதி இல்லாதவன்!!! எனக்கிருக்க வெறிக்கு இவனை இப்படியே நசுக்கி பிழிஞ்சிருவேன்!! ஆனா ஏதோ தியாகியை கொன்னுட்ட மாதிரி நீங்களும் உங்க டிபார்ட்மெண்டும் ரொம்ப துள்ளுவீங்க!!! அதுனால போனா போகுதேன்னு விட்டு வச்சிருக்கேன்.. சீக்கிரம் இவனை அள்ளிப்போட்டுட்டு போங்க!!! இல்லைனா மனசு மாறினாலும் மாறிடுவேன்” என்று அவன் இலகுவாகப் பேச,
வேல் முருகனுக்கு வந்த கோபத்திற்கு அளவில்லை. ஆனாலும் அவனிடம் எதிர்த்துக்கொண்டு பேசினால், அதற்கே இந்த கிறுக்கன் என்ன வேண்டுமென்றாலும் செய்வான் என்று அனுபவத்தில் உணர்ந்திருந்தவர்,
“சுப்ரமணி!!!! இவனை ஹாஸ்பிடல்ல கொண்டு அட்மிட் பண்ணுங்க!! நான் கமிஷனர் ஆபீஸ் போயிட்டு அங்க வரேன்!!!!”
என்று அருள்மொழியை முறைத்தபடி கட்டளை இட்டவர்,
அங்கிருந்து கிளம்பும் முன்,
“உங்க ஆட்டிட்யூட் கண்டிப்பா நீங்க சேஞ்ச் பண்ணியே ஆகணும் அருள்!!!! இப்படி இருந்தா இங்க நிலைச்சு நிக்க முடியாது!!!”
வீண் உபதேசம் தான்!! ஆனாலும் வாயை அடக்க முடியாமல் அருள்மொழிக்கு அறிவுரை வழங்கிவிட்டே அவர் கிளம்ப,
எப்போதும் போல் ஒரு தோள் குலுக்கலுடன் அதை கடந்து விட்டவன்,
“சுப்பு!! இந்த சாரை ஹாஸ்பிடல் கூட்டிட்டு போறப்போ வழியில என்னை குவார்ட்டர்ஸ்ல இறக்கி விடுங்க!!!” என்றவாறே முதல் ஆளாய் அவன் ஜீப்பில் போய் அமர்ந்துவிட,
அவனின் திட்டத்தை கண்டுகொண்ட சுப்பிரமணியும் ஒரு பெருமூச்சுடன் அந்தக் குற்றவாளியை கைத்தாங்கலாக அழைத்துக்கொண்டு வந்து ஜீப்பில் ஏற்றினார்.
அருள்மொழியின் கண்ணசைவில் ஜீப் வேகமெடுக்க, வாகனங்கள் அதிகம் வந்து கொண்டிருக்கும் சாலையில் அருள்மொழி சுப்பிரமணிக்கு கண்ணைக் காட்ட, அதைப் புரிந்து கொண்டு அந்தக் குற்றவாளியின் கை விலங்கை அவிழ்த்து விட்டார் அவர்.
இவர்களின் திட்டம் புரியாமல், அந்தக் குற்றவாளியும் அருள்மொழியிடமிருந்து தப்பித்துவிடும் நோக்கில், தன் உடலில் மிச்சமிருந்த சக்தி எல்லாம் திரட்டி ஜீப்பில் இருந்து குதித்து ஓட,
அருள்மொழியின் திட்டப்படி, எங்கிருந்தோ சரியாய் அதே நேரம் வந்த டிப்பர் லாரி மோதி, அடித்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியாகி இருந்தான் அந்தக் குற்றவாளி.
இந்தக் கேஸ் துவங்கும் போதே குற்றவாளியின் முடிவு இதுவாகத்தான் இருக்கும் என இத்தனை வருடமாக அருள்மொழியுடன் வேலை பார்த்த அனுபவத்தில் உணர்ந்து வைத்திருந்த சுப்பிரமணி,
“விசாரணைக் கமிஷன் வைப்பாங்க சார்!!!” என்று பாவமாய் சொல்ல,
“இதெல்லாம் நமக்கு என்ன புதுசா??? விடுங்க சுப்பு!!! நைட்டு மொத ராத்திரி படத்துக்கு ரெண்டு டிக்கெட் இருக்கு போவோமா???” என்று தன் குளிர் கண்ணாடியை அணிந்து கொண்ட படி உல்லாசமாய் கேட்க,
‘ யாரு சாமி நீ!??’ என்று எப்போதும் போல் இன்றும் அவனைப் புரிந்து கொள்ள முடியாமல் அயர்ந்து போனவர், மேலிடத்திலிருந்து கேட்கப்படும் கேள்விகளுக்கு இப்போதே பதிலைத் தயார் செய்வதில் மும்முரமானார்.
எட்டு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளி என்பதால், இந்த முறை விசாரணைக் குழு இவனைப் பெரிதாய் தண்டிக்காமல்,
“தப்பு பண்றவங்களுக்கு தண்டனை கொடுக்க தான் கோர்ட் இருக்கு, ஜட்ஜ் இருக்காங்க.. நீங்க குற்றவாளியைக் கண்டுபிடிக்கிறதோட நிறுத்திக்கோங்க மிஸ்டர். அருள்மொழி.. சட்டத்தை இன்னொரு முறை கையில எடுக்காதீங்க.. இதான் உங்களுக்கு ஃபைனல் வார்னிங்!!! இந்த ரெண்டு வருஷத்துல இதோட அஞ்சாவது தடவை எங்க முன்னாடி இப்படி அப்பியர் ஆகுறீங்க நீங்க.. இதுவே கடைசியா இருக்கட்டும்.. இனியும் இப்படிப் பண்ணா, கண்டிப்பா உங்க மேல சிவியர் ஆக்ஷன் எடுக்க வேண்டி இருக்கும்”
என்று கடுமையான எச்சரிக்கையை பரிசளித்தே, அவனை அனுப்பி வைத்தனர்.
“என்ன சார் எப்பயும் போல சஸ்பெண்டா???”
முன் அனுபவத்தில் சுப்பு கேட்க,
சுண்டு விரலால் காதைக் குடைந்து கொண்டு வெளிவந்த அருள் மொழியும்,
“ப்ச்!! இல்லையா சுப்பு!! நானும் சஸ்பென்ட் பண்ணுவாங்க.. ஒரு பத்து நாளு ஊர்ப்பக்கம் போய் ஜாலியா இருந்துட்டு வரலாம்னு நினைச்சேன்.. இவங்க என்னை ஏமாத்திபுட்டாங்க இப்படி” என்று அவன் உச்சுக்கொட்ட,
‘ இவரை எந்த நேரத்துல இவங்க அம்மா பெத்தாங்களோ?? ஒரு திணுசாத் தான் இருக்காரு!!! ஹம்ம் நல்லவேளை இவருக்கு இன்னும் கல்யாணம் எல்லாம் ஆகலை.. எந்தப் பொண்ணு வந்து மாட்டப்போகுதோ?? ஹம்ம்.. யாரா இருந்தாலும் கொஞ்சம் பொறுமையாவே இவர்கிட்ட வந்து மாட்டட்டும் ‘ என சுப்பு, இன்னும் அவன் வாழ்க்கையில் அடியெடுத்தே வைத்திராத அவனின் வருங்கால மனைவியை எண்ணி பரிதாபம் கொள்ள,
அதே நேரம் சுப்பு பரிதாபம் கொள்ளும் அந்தப் பாவையோ,
“நானெல்லாம் உன்னை மாதிரி இல்லை.. கண்டிப்பா லவ் மேரேஜ் தான் பண்ணிப்பேன்.. நம்ம அம்மா அப்பா மாதிரி சண்டை போட்டுட்டே இல்லாம ரொம்ப பொறுமையா நான் சொல்றதெல்லாம் கேட்டு, என் ஆசையெல்லாம் புரிஞ்சு, என்னைக் கையில வச்சுத் தாங்குற மாதிரி ஒருத்தன் என்னைத் தேடி கூடிய சீக்கிரம் வருவான்!! அவனை ஆசை தீரத் தீர லவ் பண்ணி ஒரு ரெண்டு வருஷம் கழிச்சு தான் நான் கல்யாணம் பண்ணிப்பேன்”
எதிர்காலக் கனவுகள் கண்ணில் மின்ன, குரலில் அத்தனை துள்ளலோடு தன் எதிர்பார்ப்பை தன் தமக்கையிடம் பகிர்ந்து கொண்டிருந்தாள் ரதி மீனா – நம் கதையின் நாயகி.
“ஆரம்பிச்சுட்டியா??? உன் பேச்சை மட்டும் அம்மா கேட்டுச்சு, பாத்ரூம் கழுவுற விளக்கமாத்தை வச்சு வாயிலேயே நாலு போடும் டி மீனா!!! லவ் எல்லாம் நம்ம குடும்பத்துக்கு செட் ஆகாது.. பகல் கனவு காணாம ஒழுங்கா பாத்திரத்தை தேய்ச்சு கழுவு!!!”
பின் புறத்தில் இருந்த கல்லில், துணிக்கு சோப்பு போட்டுக்கொண்டே தங்கைக்கு நிதர்சனத்தை புரிய வைக்க முயன்றாள் ரதியின் தமக்கை வான்மதி!!!
“எனக்கென்ன பயமா உன்னை மாதிரி?? அம்மா கேட்டா நானே சொல்லுவேன்.. ஆசைப்பட்டதும் உடனே கிடைச்சிட்டா அதுக்கென்ன மரியாதை?? என் லவ்வுக்காக நான் போராடி, நாலு அடி வாங்கி, இரண்டு மிதி வாங்கி அதுக்கப்பறம் அது என் கைக்கு கிடைக்குற லவ்ல இருக்க கிக்கே தனி தெரியுமா???”
ரதி மீனா அந்த உணர்வை அனுபவித்து உடல் சிலிர்க்க சொல்லிக் கொண்டிருக்க,
“அடியே வானு!!!!! மீனா!! எங்கிட்டு இருக்கீங்க???”
சந்தோஷமாய் கூச்சலிட்டுக் கொண்டே பின் பக்கம் வந்து சேர்ந்தார் சுந்தரி!!!
“என்னம்மா வாய்ஸ் ரொம்ப குதூகலமா வருதே?? கல்யாண் அத்தான் வீட்டுல இருந்து போன் பண்ணாங்களா???”
ரதிமீனா விசாரிக்க, கல்யாண் பேரைக் கேட்டதும் வான்மதியின் முகத்தில் தன்னாலே ஒரு வெட்கம் வந்து ஒட்டிக் கொண்டது.
கல்யாண், இரண்டு நாட்களுக்கு முன்பு வான்மதியை பெண் பார்த்துவிட்டுச் சென்றிருந்த மாப்பிள்ளை.
தஞ்சாவூரில் சிறிய அளவில் ஒரு மெக்கானிக் ஷாப் வைத்திருக்கும் கல்யாணிற்கு வான்மதியைப் பார்த்தவுடனே பிடித்துவிட, வான்மதிக்கும் கிட்டத்தட்ட அதே நிலை தான்.
அதிலும் இருவரும் தனியாய்ப் பேசிய அந்த ஐந்து நிமிடத்திலே, வான்மதிக்கு அவன் கொடுத்த மரியாதையும் அக்கறையுமே, பெண்ணிற்கு அவன் மேல் ஈர்ப்பை உருவாக்கியிருந்தது.
இப்போது தாயிடம் இருந்து வரும் வார்த்தைக்காக அவள் எதிர்பார்ப்புடன் அவரைப் பார்த்திருக்க,
சுந்தரியோ அவளின் ஆசைக்கு மூடுவிழா நடத்துவதைப் போல்,
“பொண்ணு பார்த்துட்டு போனவங்களை எல்லாம் அத்தான் பொத்தான்னு கூப்பிடுவியா டி கூறுகெட்ட கழுதை!! அப்படியே உங்க அப்பா மாதிரி” என்று இரண்டாம் மகளைத் திட்டியவர்,
வான்மதியின் கன்னம் பற்றி திருஷ்டி கழித்து,
“என் ராசாத்தி டி நீ!!! அதிர்ஷக்காரி இவன்னு உன் ஆச்சி நீ பொறந்தப்ப இருந்தே சொல்லிட்டே இருக்கும்.. அது நெசம் தான் போல” என்று அவர் சந்தோஷத்தில் ஆர்ப்பரிக்க,
“ம்மா!! என்ன விஷயம்னு ஒழுங்கா சொல்லு பில்டப் கொடுக்காம!!!” அவரின் பேச்சை இடைவெட்டினாள் ரதிமீனா.
“இவ ஒருத்தி அவசரக்குடுக்கை!!!”
மீனாவின் தலையில் வலிக்காமல் கொட்டியவர்,
“நம்ம வானுவை, பெரிய குடும்பத்துல இருந்து பொண்ணு கேட்டிருக்காக டி.. ஜாதகம் கூட நல்லா பொருத்துதாம்.. மாப்பிள்ளை போலீசாம்.. நம்ம முத்து மாமா இப்போ தான் தாக்கல் சொன்னாரு.. நாளைக்கு பொண்ணு பார்க்க வாராகளாம்.. விசயத்தைக் கேட்டதுல இருந்து கையும் ஓடலை, காலும் ஓடலை எனக்கு.. அடியே மீனா!! அக்காவை பொழுசாய டவுனுக்கு கூட்டிட்டு போய் மூஞ்சியை பள பளன்னு ஆக்கி கூட்டிட்டு வந்துரு.. காசு கடுகு டப்பாவுல வச்சிருக்கேன்”
வான்மதியின் அதிர்ச்சி தாங்கிய முகத்தை கவனிக்காமல் சுந்தரி அடுக்கிக் கொண்டே போக,
“ம்மா!! அதான் அன்னைக்கு வந்து பொண்ணு பார்த்திட்டு போனாங்களே.. அவங்களை நமக்கும் பிடிச்சிருக்கு, அவங்களுக்கும் அக்காவை ரொம்ப பிடிச்சிருக்கு.. அப்பறம் எதுக்கு புதுசா யாரையோ கூட்டிட்டு வந்து கலகம் பண்ற நீ??”
அக்காவின் ஆசை அறிந்ததால், அவளுக்கு பதிலாக ரதி நியாயம் கேட்க,
“பொண்ணுன்னு இருந்தா நாலு பேர் வந்து பார்த்திட்டு போகத்தான் செய்வாங்க.. அதுக்காக எல்லாத்துக்கும் சரி சொல்ல முடியுமா?? எவடி இவ?? நம்ம வசதிக்கு எது தோது படுமோ அதைத்தான் முடிக்கணும்.. நல்ல வாழ்க்கை ஒண்ணு தேடி வரப்போ அதை பார்க்காம கண்டதையும் யோசிப்பியா??”
என்று சின்ன மகளை அதட்டியவர்,
“வானு!! இவ பேச்சைக் கேட்காம ஒழுங்கா நல்ல படியா ரெடியாகி போய் இந்த இடம் அமையனும்னு வேண்டிக்கிட்டு துர்க்கை அம்மன் கோயில்ல முதல்ல நெய் விளக்கு போட்டுட்டு வா”
மூத்த மகளுக்குக் கட்டளையிட,
அவளும் தன் ஆசையோடு சேர்த்து வெளிவரத் துடித்த கேவலையும் தொண்டைக்குள் போட்டு அடக்கிக்கொண்டு, தலையாட்டியபடி தன் அன்னை சொன்ன வேலையை செய்யப் போக,
ரதி மீனா கடுப்புடன் தன் தாயையும் தமக்கையையும் பார்த்தபடி நின்றிருந்தாள்.
‘ மனசுக்கு பிடிச்சதை வெளிய சொல்லாம, இவங்க பேச்சுக்கு ஆடுறா பாரு!! அப்பறம் வந்து என்கிட்ட புலம்பட்டும், இவளுக்கு இருக்கு!!!’ என ஆதங்கத்துடன் பல்லைக் கடித்தபடி பாத்திரம் விளக்கத் தொடங்கிய ரதிக்கு,
அந்த முகம் தெரியாத திடீர் மாப்பிள்ளை மீது ஆத்திரம் ஆத்திரமாய் வர, அதை கையில் கிடைத்த பாத்திரத்தில் காட்டிக் கொண்டிருந்தாள் பேதை!!!!
நாயகனின் குணம் அறியாமல், அவனை எப்படி நாளை விரட்டிவிடுவது என ரதி தீவிர சிந்தனையில் இருக்க, நாளை அவள் வாழ்க்கையையே அவன் புரட்டிப் போடப் போகிறான் என்பதை பாவம் அவள் அப்போது அறியவே இல்லை!!!