arrow_back
கனியாத்ரேயம் கனி 25
கனியாத்ரேயம் chevron_right பகுதி 25 / 26

கனி 25

visibility 10
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

கனி 25

 

 

மூன்று மாதங்களுக்குப் பிறகு, காலையில் வழக்கம்போலக் கல்லூரிக்குக் கிளம்பிய கனியை வெற்றியே காரில் அழைத்துச் சென்று கல்லூரியில் விட்டு, அவள் கல்லூரிக்குள் செல்வதைப் பார்த்துவிட்டு, கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த இடத்திற்குக் கிளம்பினான்.

அவனுடைய நிறுவனத்தின் கட்டுமானப் பணிகள் வெவ்வேறு இடங்களில் நடைபெற்றுக்கொண்டிருந்தன. அன்று ஒரு புதிய வீட்டின் கட்டுமானப் பணிகளைப் பார்வையிடுவதற்காக அங்குச் சென்றிருந்தான். அங்கே வேலைகளை மேற்பார்வையிட்டபடியே, அடுத்த திட்டத்தைச் சரணுக்குத் தெளிவுபடுத்தி, சித்தாள் வேலை பார்ப்போருடன் சிறிது நேரம் உரையாடினான். அவனுடைய வேலைகள் எல்லாம் முடிய, அப்போதுதான் கதிரையில் அமர்ந்தான்.

மணி பத்தைக் கடக்க, அப்போது கனியிடமிருந்து அழைப்பு வந்தது.

வேலையில் கவனமாக இருந்தவன், அவளுடைய அழைப்பைக் கண்டதும் உடனே எடுத்தான்.

“சொல்லு டீ”

“அத்தான்… எனக்கு உடம்பு சரியில்ல”

அவளுடைய சோர்வான குரலைக் கேட்டதும் வெற்றி நிமிர்ந்து நின்றான்.

“என்னாச்சு டீ? ஏன் குரல் ஒரு மாதிரி இருக்கு?”

“எனக்குச் சுத்தமா முடியல. காலையிலிருந்து வாந்தி வாந்தியா வருது. தலை வேற சுத்துது. என்னால காலேஜ்ல இருக்க முடியல. வீட்டுக்குப் போகணும். ப்ளீஸ்… என்னைக் கூட்டிட்டுப் போறீங்களா?”

அதற்கு மேல் அவள் பேசவில்லை. அழைப்பைத் துண்டித்தாள். அவள் சொன்னதைக் கேட்டதும் பதறியவன், அழைப்பு துண்டிக்கப்பட்டதும் மேலும் பயந்துபோனான்.

அங்கிருந்து கிளம்பிய வெற்றி, உடனே சரணுக்குக் கைப்பேசியில் அழைத்தான்.

“சரண், நான் கனியைப் பார்க்கக் காலேஜுக்குப் போறேன். அவளுக்கு உடம்பு சரியில்லையாம். இங்கே இருக்கிற கட்டுமான வேலைகளை நீ கொஞ்சம் பார்த்துக்கோ”

“அண்ணா, கனிக்கு என்னாச்சு?”

“தெரியலடா. உடம்பு சரியில்லன்னு சொல்றா. நான் போய்ப் பார்த்துட்டு வாறேன்”

“சரி அண்ணா. நீங்க போயிட்டு வாங்க. இங்கே நான் பார்த்துக்கிறேன்”

சரணிடம் வேலையை ஒப்படைத்துவிட்டு, வெற்றி உடனே கல்லூரிக்குக் கிளம்பினான்.

கல்லூரியை அடைந்ததும், வாசலில் அவனுக்காகக் காத்திருந்த கனியைப் பார்த்தான். அவளுடைய முகமே சோர்வாக இருந்தது.

“என்ன பொண்டாட்டி, ஏன் இப்படி இருக்க? வா, முதல்ல ஹாஸ்பிட்டல் போகலாம்”

அவளுடைய கையைப் பிடித்து அழைத்துச் சென்றவன், காரில் அமர வைத்துவிட்டு மறுபக்கம் வந்து ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தான்.

கார் கிளம்பியதும் கனியைப் பார்த்தவன், “காலைல சாப்பிட்டது எதுவும் ஒத்துக்கலையா டீ?” என்று கேட்டான்.

“வீட்ல தோசை சாப்பிட்டேன், அத்தான். காலேஜ் வந்து தண்ணி மட்டும்தான் குடிச்சேன். காலையில சாப்பிட்டது ஃபுல்லா வாந்தி எடுத்துட்டேன்”

“சரி, முதல்ல டாக்டரைப் பார்த்துடலாம். அப்புறம் என்ன செய்யணும்னு பார்த்துக்கலாம்”

அவன் காரை ஓட்டிக்கொண்டிருக்க, கனி ஏதோ யோசனையில் அமைதியாக இருந்தாள்.

அவள் சோர்வாக இருப்பதைப் பார்த்தவன், “உனக்குக் கடைசியா பீரியட்ஸ் எப்போ வந்துச்சு?” என்று கேட்டான்.

தனக்கு நாட்கள் தள்ளிப்போகவில்லை. ஒரு மாதமே தள்ளிப்போயிருப்பதை உணர்ந்தவள், “ரெண்டு மாசம் இருக்கும், அத்தான்” என்றாள்.

அவ்வளவுதான்!

அவள் சொன்னதைக் கேட்டதும் வெற்றி திடீரென பிரேக் போட்டு காரை நிறுத்தினான்.

“என்னடீ நீ? இதையெல்லாம் கவனிச்சுப் பார்க்க வேண்டாமா? ரெண்டு மாசமா பீரியட்ஸ் ஆகலன்னா, நீ கவனமா இருக்க வேண்டாமா?”

அவன் கேட்டதும் கனி முகத்தைச் சுருக்கினாள்.

“எனக்கே தெரியலையே, அத்தான். காலேஜ், படிப்புன்னு வீடு, அப்படின்னு இருந்துட்டேன். இப்போ நீங்க கேக்கும்போதுதான் ஞாபகம் வந்துச்சு”

வெற்றி எதுவும் பேசாமல் அவளைப் பார்த்தான்.

இரண்டு மாதங்களாக மாதவிடாய் வரவில்லை. இப்போது தலைசுற்றல், வாந்தி, சோர்வு என எல்லாம் சேர்ந்து வரும்போது அவனுடைய மனதில் ஒரே எண்ணம்தான் தோன்றியது. தன் மனைவி கர்ப்பமாக இருக்கிறாள்.

அவன் அமைதியாக இருப்பதைப் பார்த்த கனி மெல்லக் கேட்டாள்.

“அத்தான்…”

“ம்”

“நான் பிரெக்னன்ட்டா இருக்கேன்னு தோணுது”

அவள் சொன்னதும் வெற்றி அவளைப் பார்த்தான். அவளுடைய முகத்தில் தயக்கமும் எதிர்பார்ப்பும் கலந்திருந்தன.

“சரி. முதல்ல ஹாஸ்பிட்டல் போய் டெஸ்ட் பண்ணிப் பார்க்கலாம். அப்புறம் தெரிஞ்சுக்கலாம்” என்றவன் காரைக் கிளப்பினான்.

அவனுடைய குரல் வழக்கம்போல இருந்தாலும், மனதிற்குள் பல எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன. கொஞ்ச நேரம் இருவரும் அமைதியாக வந்தனர். அப்போது கனி மீண்டும் அவனை அழைத்தாள்.

“அத்தான்…”

“என்ன டீ?”

“உங்களுக்குக் குழந்தைங்க பிடிக்கும்தானே?”

அவளுடைய கேள்வியைக் கேட்டதும் வெற்றி ஒரு நொடி அவளைப் பார்த்தான். பிறகு எதுவும் பெரிதாக யோசிக்காதவனைப் போல,

“பிடிக்கும்தான்” என்றான் சாதாரணமாக.

அவனுடைய பதிலைக் கேட்ட கனி மெல்லப் புன்னகைத்தாள்.

“எதுவும் யோசிக்காத, பொண்டாட்டி. முதல்ல டாக்டரைப் பார்த்துடலாம்” என்றான். கனி அவனுடைய கையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள்.

மருத்துவமனையை அடைந்ததும், வெற்றி கனியை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றான். முதலில் கனிக்கு இரத்தப் பரிசோதனை செய்தார்கள். அதன் பின்னர் ஸ்கேன் செய்வதற்காகக் காத்திருந்தனர்.

சிறிது நேரத்தில் கனி ஸ்கேன் அறைக்குள் செல்ல, வெற்றியும் அவளுடன் சென்றான். மருத்துவர் ஸ்கேன் செய்யத் தொடங்கியதும், கனி பதற்றத்துடன் வெற்றியைப் பார்த்தாள். அவன் அவளுடைய கையைப் பிடித்துக்கொண்டு அருகிலேயே நின்றிருந்தான்.

சில நொடிகளுக்குப் பிறகு, திரையில் தெரிந்த அந்தச் சிறிய உருவத்தைக் காட்டிய மருத்துவர் புன்னகைத்தார்.

“கங்கிராஜுலேஷன்ஸ், மிஸ்டர் அண்ட் மிஸஸ் வெற்றி! உங்க வைஃப் கர்ப்பமாக இருக்காங்க. சரியாக இரண்டு மாதங்கள் ஆகியிருக்கு”

திரையில் தெரிந்த தங்களுடைய குழந்தையைப் பார்த்த கனியின் கண்கள் கலங்கின.

வெற்றியும் திரையிலிருந்து பார்வையை அகற்ற முடியாமல் நின்றான். தங்களுடைய குழந்தையை முதன்முதலாகப் பார்த்த அந்த நொடி, அவனுடைய மனம் முழுவதும் மகிழ்ச்சியால் நிறைந்தது.

கனியைத் திரும்பிப் பார்த்தவன், அவளுடைய கண்களில் கண்ணீரைக் கண்டதும் அவளுடைய கையை மெதுவாக அழுத்தினான்.

“அத்தான்… நம்ம குழந்தை!” என்று உணர்ச்சியுடன் முணுமுணுத்தாள் கனி.

“ஆமாடீ… நம்ம குழந்தை!” என்றான் வெற்றி.

இருவரும் ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகைத்துக்கொண்டனர். அந்தச் சிறிய திரையில் தெரிந்த உயிர், அவர்களுடைய உலகத்தையே இன்னும் அழகாக்கியிருந்தது.

மருத்துவர் கனிக்குத் தேவையான மருந்துகளையும், கர்ப்பகாலத்தில் எடுத்துக்கொள்ள வேண்டிய ஃபோலிக் ஆசிட் சத்துமாத்திரைகளையும் பரிந்துரைத்தார்.

“டாக்டர், நான் காலேஜ் படிச்சிட்டு இருக்கேன். வாமிட் நிக்கிறதுக்கு ஏதாவது மாத்திரை கொடுக்க முடியுமா?” என்று கனி கேட்டாள்.

மருத்துவர் வாந்தியைக் கட்டுப்படுத்துவதற்கான மாத்திரைகளை எழுதிக்கொடுத்தார்.

மருத்துவர் எழுதிய மருந்துச் சீட்டைப் பெற்றுக்கொண்ட வெற்றி, கனியை அழைத்துக்கொண்டு மருந்தகத்திற்குச் சென்று மருந்துகளை வாங்கினான்.

பின்னர் மெதுவாகக் காரைச் செலுத்தி அவளை வீட்டிற்கு அழைத்து வந்தான். கனியை இறக்கிவிட்டவன், அவளை உள்ளே செல்லச் சொல்லிவிட்டு வேலைக்குக் கிளம்பினான்.

கனி உள்ளே வருவதைப் பார்த்த கீரை ஆய்ந்துகொண்டிருந்த அமிர்தவள்ளி, “என்னம்மா, இன்னைக்கு காலேஜ்ல இருந்து சீக்கிரமா வந்துட்ட? உடம்புக்கு ஏதாவது சரியில்லையா?” என்று கேட்டார்.

“அத்தைம்மா, உடம்பு முடியல. ஹாஸ்பிட்டல் போயிட்டு வந்தேன்”

“என்னாச்சு கனி? இப்போ பரவாயில்லையா?” என்று பதற்றத்துடன் கேட்டார் அமிர்தவள்ளி.

கனி பதில் சொல்லாமல், கையில் வைத்திருந்த மருத்துவமனை அறிக்கைகளை அவரிடம் நீட்டினாள்.

அவற்றை வாங்கிப் பார்த்த அமிர்தவள்ளி, ஸ்கேன் அறிக்கையைப் பார்த்ததும் ஒரு நொடி திகைத்தார்.

“என்னம்மா இது?” என்று கேட்டார்.

“நான் பிரெக்னன்ட்டா இருக்கேன், அத்தைம்மா. ரெண்டு மாசம் ஆகுதுன்னு டாக்டர் சொன்னாங்க”

அவள் சொன்னதைக் கேட்டதும் அமிர்தவள்ளிக்கு ஒரு சில நொடிகள் என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அடுத்த நொடியே அவரது முகம் மலர்ந்தது. கனியின் தலையை அன்பாக வருடினார்.

“அம்மாடி, எவ்வளவு பெரிய நல்ல விஷயம்! நம்ம வீட்டுக்கு இன்னொரு வாரிசு வரப்போகுதுன்னு நினைக்கவே சந்தோஷமா இருக்கு, கனி. கொஞ்ச நாளைக்கு இப்படித்தான் மசக்கையா இருக்கும். அப்புறம் சரியாகிரும். ஏதாவது பிரச்சினைன்னா உடனே சொல்லணும், சரியா?”

கனியும் வெற்றியும் தங்கள் வாழ்க்கையை இன்னும் ஆரம்பிக்காமல் எத்தனை நாட்கள் இப்படியே இருப்பார்கள் என்று பல இரவுகள் தூக்கமின்றிக் கவலைப்பட்டிருந்த அமிர்தவள்ளிக்கு, இப்போது மனம் நிம்மதியடைந்தது.

“சரி அத்தைம்மா” என்றாள் கனி.

அடுத்த நொடியே அமிர்தவள்ளி கலைவாணிக்குப் போன் செய்து விஷயத்தைச் சொன்னார். செய்தியைக் கேட்ட கலைவாணி, கடையை மூடிவிட்டு மணிமாறனையும் அழைத்துக்கொண்டு வருவதாகக் கூறினார்.

கனி கர்ப்பமாக இருக்கும் செய்தியைக் கேட்டதும் மணிமாறனும் கலைவாணியும் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தனர். மகளைப் பார்க்கும் ஆவலுடன் இருவரும் கடையை மூடி வைத்துவிட்டுக் கிளம்பினார்கள்.

கலைவாணியும் மணிமாறனும் வீட்டிற்கு வந்ததும், மகளைக் கண்ட அவர்களுடைய முகத்தில் மகிழ்ச்சி மலர்ந்தது. கலைவாணி கனியை அன்பாக அணைத்துக்கொண்டார். மணிமாறனும் மகளின் தலையை வருடிக்கொடுத்தார்.

“உனக்குப் பிடிச்ச பால்கோவா!” என்று கலைவாணி ஆசையாக மகளுக்கு ஊட்டிவிட, கனிக்கோ மீண்டும் குமட்டத் தொடங்கியது.

அப்போது மித்ரன் வெற்றிக்குக் கைப்பேசியில் அழைத்தான். அழைப்பை எடுத்ததும்,

“அண்ணா, என்னைச் சித்தப்பா ஆக்கிட்டீங்க! ரொம்ப நன்றி அண்ணா!” என்று உற்சாகமாகச் சொன்னான்.

மித்ரனின் பேச்சைக் கேட்ட வெற்றிக்குச் சிரிப்புடன் வெட்கமும் வந்தது.

அருகில் நின்றிருந்த சரண், மித்ரன் சொன்னதைக் கேட்டதும், “வாழ்த்துக்கள் அண்ணா!” என்றான். வெற்றி புன்னகையுடன் அவனைப் பார்த்துத் தலையசைத்தான்.

கனி கல்லூரிக்குச் செல்லும் நாட்களில் வெற்றியே அவளைத் தனது காரில் அழைத்துச் சென்று பத்திரமாகக் கல்லூரியில் விட்டுவிட்டுச் செல்வான். கல்லூரி முடியும் நேரத்திற்கு முன்பே அங்கே வந்து காத்திருப்பான். அவள் வெளியே வந்ததும் பத்திரமாக வீட்டிற்கு அழைத்து வருவான். கர்ப்பகாலத்தில் அவளுக்குச் சிரமம் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதிலும், அவளுடைய தேவைகளை நிறைவேற்றுவதிலும் வெற்றி மிகுந்த கவனத்துடன் இருந்தான்.

கருவுற்றிருந்ததால் நாட்கள் எப்படிக் கழிகின்றன என்பதுகூட கனிக்குத் தெரியவில்லை. கல்லூரிக்குச் செல்வதும், வீட்டுக்கு வருவதும், மருத்துவமனைக்குச் சென்று பரிசோதனைகளை முடித்துக்கொண்டு வருவதுமாக நாட்கள் வேகமாக நகர்ந்தன.

கனியின் வயிறும் நாளுக்கு நாள் வளரத் தொடங்கியது. சில நேரங்களில் குழந்தை வயிற்றுக்குள் அசைவதைக் கண்டு அவள் வியப்புடன் தன் வயிற்றைத் தடவிப் பார்ப்பாள். அருகிலிருக்கும் வெற்றியின் கையைப் பிடித்து வயிற்றின் மீது வைப்பாள். குழந்தையின் அசைவை உணரும்போதெல்லாம் அவனுடைய முகத்தில் தோன்றும் புன்னகையைக் கண்டு கனி மகிழ்வாள்.

அப்படித்தான் ஒருநாள் கட்டிலில் அமர்ந்துகொண்டு குழந்தையுடன் பேசிக்கொண்டிருந்தாள் கனி. அப்போதும் குழந்தை அசையவே இல்லை. வெற்றி கனிக்குத் தேவையான மாத்திரைகளை எடுத்துக்கொண்டு அவளருகில் வந்தான்.

“பொண்டாட்டி, மாத்திரை போட்டுக்கோ”

மாத்திரைகளையும் தண்ணீரையும் அவளிடம் கொடுத்து, அவற்றை விழுங்கும்வரை அருகிலேயே இருந்தான்.

அவன் குரல் கேட்ட அடுத்த நொடியே குழந்தை வயிற்றுக்குள் அசைந்தது.

அதை உணர்ந்த கனி ஆச்சரியத்துடன் தன் வயிற்றைப் பார்த்தாள்.

“இவ்வளவு நேரம் அம்மா பேசினேன். நீ அசையவே இல்ல. உங்க அப்பா பேசினதும் அசையிறியா? பேட் பாய்!” என்று குழந்தையைச் செல்லமாகக் கோபித்துக்கொண்டாள்.

“பொண்டாட்டி, நமக்குப் பொண்ணுதான். அதான் நான் பேசினதும் மூவ் பண்றா!” என்றான் வெற்றி பெருமையாக.

“இல்ல அத்தான், நமக்குப் பையன்!”

“பொண்ணுதான்டீ பொறப்பா!” என்று வெற்றி உறுதியாகச் சொல்ல, கனி முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.

அவளுடைய முகத்தைத் தன் பக்கம் நேராகத் திருப்பியவன், “பெட் வச்சிக்கலாமா?” என்று கேட்டான்.

“என்ன பெட்?” என்று முகத்தை உர்ரென்று வைத்துக்கொண்டே கேட்டாள்.

“பொண்ணு பொறந்தா அவ மட்டும் போதும். பையன் பொறந்தா அவன் மட்டும் போதும்”

அவன் சொன்னதைக் கேட்ட கனி புருவத்தை உயர்த்தினாள்.

“இதெல்லாம் ஒரு பெட்டா, அத்தான்? பையன் பொறந்தா இன்னும் ஒரு குழந்தை பெத்துக்குவோம்!”

“நமக்குப் பொண்ணுதான் பொறக்கும். நம்ம ஒண்ணோட நிறுத்திக்கலாம்”

“இன்னும் கொஞ்ச நாள்தானே, பார்க்கலாம்!” என்று தன் அத்தானுக்கு சவால் விட்டாள் கனி.

வெற்றி ஆசையாகக் கனியின் வயிற்றில் முத்தமிட்டான்.

“அப்போ எனக்கு?” என்று ஏக்கத்துடன் கேட்டாள் கனி.

மனைவியின் ஏக்கத்தைப் புரிந்துகொண்டவன், அவளுடைய இரு கன்னங்களிலும் முத்தமிட்டு, “போதுமா, பொண்டாட்டி?” என்று கேட்டான்.

அவள் மறுத்துத் தலையசைக்க, அவளுடைய இதழ்களை மென்மையாகச் சிறைபிடித்தான்.

நாட்கள் நகர்ந்து கனிக்கு ஏழாவது மாதமும் தொடங்கியது. அன்று வழக்கமான பரிசோதனைக்காக வெற்றியும் கனியும் மருத்துவமனைக்குச் சென்றனர். பரிசோதனைகளை முடித்துவிட்டு வந்த மருத்துவர், குழந்தை நலமாக இருப்பதாகக் கூறினார். அதைக் கேட்ட இருவருக்கும் மனம் நிம்மதியானது.

வீட்டிற்கு வந்ததும் இருவரும் அமர்ந்திருக்க, அமிர்தவள்ளி மகிழ்ச்சியுடன் அவர்களிடம் வந்தார்.

“வெற்றி, கனி… நம்ம வீட்டுல இன்னொரு சந்தோஷமான விஷயம் நடந்திருக்குடா!”

“என்னம்மா?” என்று ஆர்வத்துடன் கேட்டான் வெற்றி.

“கௌரியும் கர்ப்பமாக இருக்கா!” என்றார் அமிர்தவள்ளி.

அந்தச் செய்தியைக் கேட்டதும் கனியும் வெற்றியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். இருவருடைய முகத்திலும் மகிழ்ச்சி மலர்ந்தது. தங்கள் குடும்பத்தில் மூன்று குழந்தைகள் வரப்போகிறார்கள் என்பதை நினைத்துப் பார்த்ததும் கனிக்குப் பெரும் சந்தோஷமாக இருந்தது.

கனிக்கு அமிர்தவள்ளி எந்த வேலையும் கொடுப்பதில்லை. கிருத்திகாவைக் கவனித்துக்கொண்ட அதே அக்கறையுடன் கனியையும் கவனித்துக்கொண்டார்.

ஒருநாள் கிருத்திகா கனிக்காகப் பால் காய்ச்சிக்கொண்டு வந்து கொடுத்தாள். அப்போது ஆராத்யாவைக் கையில் வைத்துக் கொஞ்சிக்கொண்டிருந்த கனி, “வயிறு ஃபுல்லா இருக்கு அக்கா,” என்றாள்.

“வெற்றி அண்ணாவைக் கூப்பிடவா, கனி?” என்று கிருத்திகா கேட்டதும், கனி சிரித்தபடி பாலை வாங்கிப் பருகினாள்.

கிருத்திகா கருவுற்றிருந்தபோது கனி அவளுக்குச் செய்தவை நினைத்துப் பார்த்த இருவரின் இதழ்களிலும் புன்னகை அரும்பியது.

அதேபோல, கிருத்திகா கௌரியையும் நன்றாகக் கவனித்தாள்.

வாரங்கள் கடக்க, கனியின் கால்களும் லேசாக வீங்கத் தொடங்கியிருந்தன. அதைக் கவனித்த வெற்றி, அவளுக்கு எந்தச் சிரமமும் ஏற்படக்கூடாது என்று பார்த்துக்கொண்டான்.

அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வீட்டிலேயே இருந்தவன், கனியை வசதியாக அமர வைத்துவிட்டு வெதுவெதுப்பான தண்ணீரைக் கொண்டு வந்தான். அவளுடைய கால்களை மெதுவாகக் கழுவிவிட்டு, மென்மையாக மசாஜ் செய்தான். பின்னர் அவளுடைய கால் நகங்களை வெட்டுவதற்காகத் தன் மடியில் அவளுடைய பாதங்களை வைத்துக்கொண்டு, சுத்தமான டவலால் துடைத்துவிட்டான்.

“நகம் வெட்டும்போது வலிச்சா சொல்லு, பொண்டாட்டி”

“சரி அத்தான்”

அவளுடைய கால்களைப் பத்திரமாகப் பிடித்துக்கொண்டு ஒவ்வொரு நகமாக வெட்டினான். முடித்ததும் அவளுடைய பாதங்களை மெதுவாகத் தடவிவிட்டான்.

வெற்றி தன்னைக் கவனித்துக்கொள்ளும் விதத்தைப் பார்த்த கனியின் மனம் நெகிழ்ந்தது. அவனுடைய அன்பை வார்த்தைகளால் சொல்ல முடியாவிட்டாலும், அவளுடைய பார்வையிலேயே அந்த நெகிழ்ச்சி தெரிந்தது.

கனியின் பிரசவத்திற்கான ஏற்பாடுகளையும் வெற்றி முன்கூட்டியே கவனிக்கத் தொடங்கியிருந்தான். முப்பத்தெட்டு வாரங்கள் நிறைவடைந்ததும் சிசேரியன் மூலம் குழந்தையைப் பெற்றெடுக்க மருத்துவரிடம் முன்கூட்டியே பேசி வைத்திருந்தான். பிரசவ நேரத்தில் கனி வலியால் அவதிப்படுவதைத் தன்னால் பார்க்க முடியாது என்பதாலேயே, அவளுக்குச் சிரமம் ஏற்படாமல் இருக்க இவ்வாறு முன்கூட்டியே ஏற்பாடுகளைச் செய்திருந்தான்.

அவளையும் வயிற்றில் வளரும் தங்கள் குழந்தையையும் பத்திரமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதே அவனுடைய ஒரே எண்ணமாக இருந்தது.

 

******

அடுத்த அத்தியாயம்

கனி 26 எபிலாக்

கனி 26 எபிலாக் ஒன்பதாவது மாத வளைகாப்பு முடிந்து, பிரசவத்திற்காக மட்டும் கல்லூரியில் விடுப்பு எடுத்திருந்தாள் கனி.குழந்தைக்குத் தேவையான உடைகள் அனைத்தையும் வாங்குவதற்காகக் கனியை அழைத்துக்கொண்டு கடைக்குச் சென்றிருந்தான் வெற்றி. குழந்தைக்கும் பிரசவத்திற்கும் தேவையான பொருட்களை ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்து வாங்கிக்கொண்டிருந்தனர்.“கனி, நான்…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்