arrow_back
கனியாத்ரேயம் கனி 26 எபிலாக்
கனியாத்ரேயம் chevron_right பகுதி 26 / 26

கனி 26 எபிலாக்

visibility 8
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

கனி 26 எபிலாக்

 

ஒன்பதாவது மாத வளைகாப்பு முடிந்து, பிரசவத்திற்காக மட்டும் கல்லூரியில் விடுப்பு எடுத்திருந்தாள் கனி.

குழந்தைக்குத் தேவையான உடைகள் அனைத்தையும் வாங்குவதற்காகக் கனியை அழைத்துக்கொண்டு கடைக்குச் சென்றிருந்தான் வெற்றி. குழந்தைக்கும் பிரசவத்திற்கும் தேவையான பொருட்களை ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்து வாங்கிக்கொண்டிருந்தனர்.

“கனி, நான் டாக்டர்கிட்ட சிசேரியன் பண்ணச் சொல்லிக் கேட்டிருக்கேன். அவங்களும் ஓகே சொல்லிட்டாங்க. நீ எதுக்கும் பயப்படாத. உனக்கு எந்த வலியும் இல்லாம அழகா நம்ம குழந்தையை வெளியே எடுத்துடுவாங்க. அதுக்கப்புறம் உன் பக்கத்திலேயே நான் இருப்பேன். உனக்கு எந்தக் கஷ்டமும் வராம பார்த்துப்பேன். நம்ம குழந்தையையும் நல்லா பார்த்துப்பேன். நீ எதுக்கும் கவலைப்படாதே, சரியா?” என்று அவளுக்குத் தைரியம் கொடுத்தான் வெற்றி.

“ஏன் அத்தான், நார்மல் டெலிவரி நல்லதுதானே? அப்புறம் ஏன் சிசேரியன்?” என்று கனி கேட்க, 

“அதெல்லாம் நமக்கு வேணாம். நான் சொல்றதைக் கேளு, சரியா?” என்றான்.

“ஆனா அத்தான்…”

“கனி, பேசாம நான் சொல்றதைக் கேளு!” என்று அவளது தலையில் மெதுவாகத் தட்டியவன், 

“எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன். நீ எதுக்கும் பயப்படாதே” என்று சமாதானப்படுத்தினான்.

கனிக்கு அவன் இப்படிச் செய்வது கொஞ்சம் வருத்தமாக இருந்தாலும், அதைப் பெரிதாக எடுத்துக்கொண்டு குழப்பிக்கொள்ளவில்லை.

ஓரிரு நாட்களுக்குப் பிறகு, ஆராத்யாவைத் தூக்கிக் கொஞ்சிக்கொண்டிருந்த கனியைப் பார்த்த கிருத்திகா, “கனி, இந்த நிலைமையில நீ ஆராத்யாவைத் தூக்காதே. இப்போ ஆருவுக்கு வெயிட் ஏறிடுச்சு!” என்றாள்.

ஆராத்யாவுக்கு அப்போது ஒரு வயது பூர்த்தியாகியிருந்தது.

“அப்படியெல்லாம் சொல்லாதீங்க கிருத்திகாக்கா. குழந்தை வெயிட்டே கிடையாது எனக்கு” என்று சிரித்தாள் கனி.

“விடு கிருத்திகா, பரவாயில்லை. கொஞ்ச நேரம் அவளே வச்சுக்கட்டும்” என்று அமிர்தவள்ளி சொல்ல, கிருத்திகாவும் அமைதியானாள்.

ஆராத்யாவுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது கனிக்கு லேசாக வயிற்றுவலி ஏற்பட்டது. ஆனால், அதைக் கண்டுகொள்ளாமல் குழந்தையுடன் நேரத்தைக் கழித்தாள். அவளை எந்த வேலையும் செய்யவிடாமல் பார்த்துக்கொண்டதால், வீட்டிற்குள் குறுக்கும் நெடுக்குமாக நடந்துகொண்டிருந்தாள்.

சுருக் சுருக்கென்று அவ்வப்போது வலி வந்து மறைந்தது. சூட்டு வலியாக இருக்குமென்று நினைத்தவள், அதைப் பற்றி யாரிடமும் சொல்லாமல் இருந்தாள்.

இரவு உணவை முடித்துவிட்டு, வெற்றி வீட்டின் மண்டபத்தில் அமர்ந்திருந்தான். நேரம் செல்லச் செல்ல வலி அதிகரிக்கத் தொடங்கியது. வலியைத் தாங்க முடியாத நிலையில், இரவு எட்டு மணியளவில் வெற்றியிடம் சென்ற கனி, “அத்தான்… வயிறு வலிக்குது. என்னால முடியல!” என்று வேதனையுடன் சொல்லவும், வெற்றி பதறிப்போனான்.

“சரி, கனி. உடனே ஹாஸ்பிடல் போகலாம்!” என்றவன், மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல ஏற்கெனவே தயார் செய்து வைத்திருந்த பைகளையும் எடுத்துக்கொண்டு அவளை அழைத்துச் சென்றான். குடும்பத்தினர் அனைவரும் மருத்துவமனைக்கு வந்தனர்.

கனியைப் பரிசோதித்த மருத்துவர், அவளுக்குப் பிரசவ வலி தொடங்கியிருப்பதை உறுதிப்படுத்தினார்.

“டாக்டர், சிசேரியன் பண்ணிடலாம்தானே?” என்று பதற்றத்துடன் கேட்டான் வெற்றி.

“வெற்றி, உங்க மனைவிக்கு சிசேரியன் சான்ஸே இல்ல. சர்விக்ஸ் ஏழு சென்டிமீட்டர் ஓபனா இருக்கு. இன்னும் கொஞ்ச நேரத்துல குழந்தை பிறந்துடும். இப்போதைக்கு இயல்பான பிரசவத்தைத் தொடர்வதுதான் சரியாக இருக்கும்,” என்றார் மருத்துவர்.

அதைக் கேட்ட வெற்றி அதிர்ச்சியில் உறைந்துபோனான். தான் திட்டமிட்டு வைத்திருந்த அனைத்தும் கைமீறிப் போய்விட்டதை உணர்ந்தவனுக்குக் கை, காலெல்லாம் நடுங்கத் தொடங்கியது.

இன்னும் கொஞ்ச நேரத்துக்கு என் பொண்டாட்டி எவ்வளவு வலியை அனுபவிக்கணுமே? என்ன செய்வது? என்று தவித்தவனுக்குத் தன்னுடைய பதற்றத்தைக்கூடக் கட்டுப்படுத்த முடியவில்லை.

கலைவாணியும் மணிமாறனும் கனியின் வேதனைக் குரலைக் கேட்டுக் கலங்கிப்போயிருந்தனர். மகள் வலியில் துடிப்பதைப் பார்க்க எந்தப் பெற்றோருக்குத்தான் மனம் தாங்கும்?

அப்போது ஒரு செவிலியர் வெற்றியைப் பார்த்து, “சார், நீங்க உள்ள வாறீங்களா?” என்று கேட்டார்.

“இல்ல, நான் வெளியிலேயே இருக்கேன்” என்றான் வெற்றி.

வெளியில் இருந்த மித்ரனும் அமிர்தவள்ளியும் அவனைச் சமாதானப்படுத்தினர்.

“ஏன்டா, உன் பொண்டாட்டி உன்னைத் தேடுவாளே! உன்னோட குழந்தைதானே! உள்ளே போய் அவளுக்குத் துணையா இரு” என்று சொல்லி அவனை உள்ளே அனுப்பி வைத்தார் அமிர்தவள்ளி

கனியின் அருகில் சென்ற வெற்றி, அவளது தலையைக் கோதிவிட்டான்.

“கனி, நம்ம குழந்தை நல்லபடியா பிறந்துடும். ஒண்ணும் இல்ல. நான் இருக்கேன்ல!” என்று அவளுக்குத் தைரியம் கொடுக்க முயன்றான். ஆனால், அவனது குரலே பிசிர்தட்டியது.

வலியைத் தாங்க முடியாமல் கனி முகத்தை இரண்டு பக்கமும் மாற்றி மாற்றி அசைத்துக் கதறினாள். அடுத்த நொடியே வெற்றியின் கையை இறுகப் பற்றிக்கொண்டாள். அவளது விரல்கள் அவனுடைய மணிக்கட்டில் அழுத்தமாகப் பதிந்தன. கனியின் நகங்கள் தோலைக் கீறி ரத்தம் வருமளவுக்கு அவள் அவனது கையை இறுக்கமாகப் பற்றியிருந்தாள்.

அதுவரை கனிக்கு வலியே வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்த வெற்றி, அவள் அனுபவித்துக்கொண்டிருக்கும் வேதனையை உணர்ந்தான். அவனையும் அறியாமல் கண்கள் கலங்கின.

“வலி தாங்க முடியல… அம்மா!” என்று கனி கதறியபோது, அவளது வேதனையைப் பார்க்க முடியாமல் வெற்றி துடித்துப்போனான்.

“அத்தான்…” என்று வலியோடு அவனை அழைத்தாள்.

“பொண்டாட்டி, இன்னும் கொஞ்ச நேரம்தான். நம்ம குழந்தை வந்துடும். தைரியமா இரு!” என்று அவளது தலையை வருடிக்கொடுத்தான். அப்போது மருத்துவர் உள்ளே வந்தார்.

“வலியின் தீவிரத்தில் கனி வெற்றியின் கையை மீண்டும் இறுகப் பற்றிக்கொண்டு கதறினாள். அவளது முகத்தில் தெரிந்த வேதனையைப் பார்க்க முடியாமல் தவித்தவன், இதை பார்ப்பதற்கு பார்வையே இல்லாமல் இருந்திருக்கலாம் என்று தோன்றியது.  

அவளது நெற்றியில் வழிந்த வியர்வையைத் துடைத்துவிட்டான். “கனி, குழந்தை வெளியே வரப்போகுது. நான் சொல்றபடி செய்யணும். வலி வரும்போது நல்லா மூச்சைப் பிடிச்சுப் புஷ் பண்ணுங்க!” என்றார் மருத்துவர்.

வலியின் அடுத்த அலை எழவும், கனி கண்களை இறுக மூடிக்கொண்டு குழந்தையைப் பெற்றெடுக்க முயன்றாள்.

“அத்தான்… முடியல!” என்று அழுதவள், வெற்றியின் கையை மேலும் இறுகப் பற்றிக்கொண்டாள்.

“நான் இருக்கேன்டீ. தைரியமா இரு!” என்று அவளது கண்ணீரைத் துடைத்துவிட்டு, அவளுக்குத் தைரியம் சொல்லிக்கொண்டிருந்தான் வெற்றி. ஆனால், அவனுக்குள் பயம் அதிகரித்துக்கொண்டே இருந்தது.

“வெற்றி, உங்க வைஃபோட காலை கொஞ்சம் பிடிங்க” என்று செவிலியர் சொல்லவும், கனியின் இடது காலைச் சற்றே உயர்த்திப் பிடித்தான். மறுபுறம் செவிலியர் அவளது மற்றொரு காலைத் தாங்கிப் பிடித்திருந்தார்.

“இன்னொரு தடவை நல்லா புஷ் பண்ணுங்க, கனி!” என்று மருத்துவர் சொல்லவும், கனி பற்களைக் கடித்துக்கொண்டு மீண்டும் முயற்சி செய்தாள்.

குழந்தை வெளியே வருவதற்கு ஏதுவாக மருத்துவர் தேவையான மருத்துவ நடைமுறைகளை மேற்கொண்டார். வலியில் துடித்துக்கொண்டிருந்த கனிக்கு ஒவ்வொரு நொடியும் ஒரு யுகமாகக் கழிந்தது.

இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த வெற்றி, அவளது வலியைக் குறைக்கத் தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்ற தவிப்பில் அவளது கையைப் பற்றிக்கொண்டு நின்றான்.

அடுத்த சில நொடிகளில், குழந்தை வெளியே வருவதை அவன் பார்த்துக்கொண்டிருந்தான்.

அந்தக் காட்சியைக் கண்டதும் வெற்றியின் முகம் வெளிறிப்போனது. தன் குழந்தை பிறக்கப்போகும் மகிழ்ச்சியை முழுமையாக உணர்வதற்குள், அவனது பார்வை மங்கியது. தலைசுற்றி, கால்கள் தடுமாற, அதற்கு மேல் நிற்க முடியாமல் மயங்கி விழுந்தான் வெற்றி.

குழந்தை அழும் சத்தம் வெளியே கேட்டதும், அங்கே காத்திருந்த அனைவரும் அமைதியாக ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். குழந்தை பிறந்துவிட்டது என்ற மகிழ்ச்சியில் இருந்தவர்களின் கவனத்தை, இரண்டு செவிலியர்கள் வெற்றியைத் தாங்கிப் பிடித்துக்கொண்டு வெளியே அழைத்து வந்த காட்சி திசைதிருப்பியது.

அதைக் கண்ட அமிர்தவள்ளி பதறிப்போனார்.

“ஐயோ! வெற்றிக்கு என்ன ஆச்சு?” என்று அமிர்தவள்ளி பதற்றத்துடன் கேட்க, மித்ரன் தனது அண்ணனைத் தாங்கிப் பிடித்துக்கொண்டான்.

“பயப்படாதீங்க. குழந்தை பிறக்கிறதைப் பார்த்ததும் பயந்து மயங்கிட்டார். பெருசா ஒண்ணுமில்லை. ஒரு பத்து நிமிஷத்துல சரியாகிடுவார்” என்று செவிலியர் அமிர்தவள்ளியிடம் கூறினார்.

வெற்றியை அருகிலிருந்த அறைக்கு அழைத்துச் சென்று படுக்க வைத்தனர். சிறிது நேரத்துக்குப் பிறகு அவன் கண் விழித்ததும், மித்ரன் அவனைத் தாங்கிப் பிடித்து அருகிலிருந்த கதிரையில் அமர வைத்தான். முகத்தில் தண்ணீர் தெளித்துப் பதற்றப்படுத்தாமல், அவன் முழுமையாக விழித்திருப்பதை உறுதிப்படுத்திய பிறகு குடிக்கத் தண்ணீர் கொடுத்தனர். அவனைச் சமாதானப்படுத்தி மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குக் கொண்டுவந்தனர்.

வெற்றி, பெண் குழந்தைதான் பிறக்கும் என்று சவால் விட்டிருந்தான். ஆனால், அந்தச் சவாலில் வெற்றியடைந்தது கனிதான். பிறந்தது ஆண் குழந்தை!

கிருத்திகாவுக்கு குழந்தை பிறந்த வேலையில் அமிர்தவல்லி என்னென செய்தாரோ, அவ்வனைத்தையும் இப்பொழுது கனியாவிற்கும் செய்தார். 

 

****

மூன்று வருடங்கள் உருண்டோடியிருந்தன. காலம் வேகமாக நகர்ந்திருந்தாலும், அந்தக் குடும்பத்தினரின் வாழ்க்கையில் மகிழ்ச்சிக்குக் குறைவில்லை. குழந்தைகளின் மழலைப் பேச்சும் குறும்புகளும் வீடுகளை எப்போதும் கலகலப்பாக வைத்திருந்தன.

வெற்றி கனியின் மகன் ஷஷ்டிக் வேந்தனும், கௌரி–சரணின் இரட்டைக் குழந்தைகளான அகரனும் அய்ஸ்னவியும் ஒரே வருடத்தில் பிறந்தவர்கள். மூவரும் ஒரே வயதுடையவர்களாக வளர்ந்துவந்தனர்.

அதேபோல், மித்ரன்–கிருத்திகாவின் மகளான ஆராத்யா இப்போது நான்கு வயதை எட்டியிருந்தாள். ஆறு மாதங்களுக்கு முன்புதான் அவளுக்குத் தம்பி ஹரிக்கிருதன் பிறந்திருந்தான்.

அமிர்தவள்ளி, கலைவாணி, மலர்விழி என மூவருக்கும் பேரக்குழந்தைகள்தான் உலகமாக மாறியிருந்தனர். குழந்தைகளைத் தூக்கிக் கொஞ்சுவதும், அவர்களுடன் விளையாடுவதும், சாப்பாடு ஊட்டுவதும், அவர்களது மழலைப் பேச்சைக் கேட்டு ரசிப்பதுமாகப் பொழுதைக் கழித்தனர். குழந்தைகள் ஒன்றாகச் சேர்ந்து விளையாடும்போது அவர்களைக் கவனித்துக்கொள்வதிலேயே நேரம் போவதே தெரியாமல் இருந்தது.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருந்ததைப் போலவே, அனைவரின் தொழிலும் நல்ல முன்னேற்றத்தை அடைந்திருந்தது.

வெற்றியும் சரணும் இணைந்து தங்களது சொந்தக் கன்ஸ்ட்ரக்ஷன் நிறுவனத்தை நடத்தி வந்தனர். ஆரம்பத்தில் சிறிய அளவில் தொடங்கிய அவர்களது நிறுவனம், இப்போது நல்ல வளர்ச்சியைக் கண்டிருந்தது. இருவரும் ஒருவருக்கொருவர் துணையாக இருந்து, பல கட்டுமானப் பணிகளை வெற்றிகரமாக முன்னெடுத்துச் சென்றனர். அவர்களது உழைப்பும் விடாமுயற்சியும் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைப் பெற்றுத் தந்திருந்தன.

கௌரியும் தனது தொழிலை ஆன்லைன் மூலமாகச் சிறப்பாக நிர்வகித்துக்கொண்டிருந்தாள். அதேபோல், தென்னந்தோப்பு மற்றும் அரிசிமண்டி தொடர்பான கணக்குகள் உள்ளிட்ட பொறுப்புகளை கிருத்திகா கவனித்துக்கொண்டாள்.

கிருத்திகாவின் பெற்றோரும் அமிர்தவள்ளியின் வீட்டிற்கு அருகிலேயே ஒரு வீட்டை எடுத்து வசிக்கத் தொடங்கியிருந்தனர். இதனால் இரு குடும்பத்தினரும் அடிக்கடி சந்தித்துக்கொண்டு மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழித்தனர்.

மணிமாறன் நடத்தி வந்த மளிகைக் கடையும் நல்ல முன்னேற்றத்தை அடைந்திருந்தது. வாடிக்கையாளர்களின் வருகை அதிகரித்திருந்ததுடன், கடையின் வருமானமும் உயர்ந்திருந்தது. தனது உழைப்புக்கான பலன் கிடைக்கத் தொடங்கியதில் மணிமாறனும் மகிழ்ச்சியடைந்திருந்தான். குடும்பத்தினர் அனைவரும் தங்களது வாழ்க்கையில் முன்னேறுவதைக் கண்டு ஒவ்வொருவரும் மனநிறைவுடன் இருந்தனர்.

இப்படியாக, குடும்பத்திலும் தொழிலிலும் மகிழ்ச்சியும் முன்னேற்றமும் நிறைந்திருந்த அந்த நாட்களில், கனியின் வாழ்க்கையில் மற்றுமொரு முக்கியமான தருணம் வந்திருந்தது.

திருமணத்திற்குப் பிறகும், குழந்தையைப் பெற்றெடுத்த பின்னரும் தனது மருத்துவப் படிப்பைத் தொடர வேண்டும் என்ற கனியின் ஆசை இப்போது நிறைவேறியிருந்தது. அமிர்தவள்ளியும் கலைவாணியும் அவளுக்குப் பெரும் துணையாக இருந்தனர். கனி கல்லூரிக்குச் செல்லும் நேரங்களில் ஷஷ்டிக் வேந்தனைப் பார்த்துக்கொள்வது முதல், அவளுக்குத் தேவையான ஒவ்வொரு உதவியையும் செய்வது வரை இருவரும் அவளுக்குப் பக்கபலமாக இருந்தனர்.

அவர்களின் ஆதரவாலும் தனது விடாமுயற்சியாலும் கனியின் மருத்துவப் படிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்திருந்தது. இன்று அவளது பட்டமளிப்பு விழா!

கல்லூரி வளாகமே விழாக்கோலம் பூண்டிருந்தது. தனது உழைப்புக்கான அங்கீகாரத்தைப் பெறப்போகும் மகிழ்ச்சியில் கனி திளைத்துக்கொண்டிருந்தாள். அவளது அருகில் நின்ற வெற்றி, அவளைப் பெருமிதத்துடன் பார்த்தான். தனது மனைவி மருத்துவராக வேண்டும் என்ற ஆசை இன்று நிறைவேறியிருந்ததில் அவனுக்கு அளவற்ற மகிழ்ச்சி.

“என்ன டாக்டர் மேடம், இப்போ ரொம்பப் பெருமையா இருக்கா?” என்று குறும்பாகக் கேட்டான் வெற்றி.

“அதெல்லாம் ஒண்ணுமில்லை அத்தான்! சந்தோஷமா இருக்கு” என்று சிரித்தாள் கனி. அவளது தலையைக் கோதிவிட்டான்.

அவனை முறைத்துப் பார்த்தவள், “போதும் அத்தான்! எல்லாரும் பார்க்கிறாங்க!” என்று வெட்கத்துடன் சொல்ல, அவனோ சிரித்துக்கொண்டே அவளது கையைப் பற்றிக்கொண்டான்.

கனி பட்டம் பெற்றபோது, அவளது கண்கள் மகிழ்ச்சியில் கலங்கின. இத்தனை நாட்களாகத் தான் கடந்து வந்த பாதை அவளது மனக்கண்ணில் நிழலாடியது. படிப்பு, திருமணம், குழந்தை, குடும்பப் பொறுப்புகள் என அனைத்தையும் சமாளித்து இன்று இந்த இடத்தை அடைந்திருந்தாள்.

அவளது மகிழ்ச்சியைக் கண்ட வெற்றி, அவளைப் பெருமையுடன் அணைத்துக்கொண்டான்.

“எனக்குத் தெரியும் கனி. நீ கண்டிப்பா உன்னோட கனவை அடைவன்னு எனக்குத் தெரியும்!” என்றான்.

“எல்லாரும் எனக்குத் துணையா இருந்ததாலதான் அத்தான்!” என்றாள் கனி.

அவளைப் பெருமையுடன் பார்த்த வெற்றி, அவளது நெற்றியில் முத்தமிட்டான். தனது வாழ்க்கையில் கிடைத்த மிகப்பெரிய பரிசு வெற்றியின் அன்பும் ஆதரவும்தான் என்பதை உணர்ந்தான்.

காரில் ஏறிய பிறகு,

“அத்தான் நம்ம ஹனிமூன் போகவே இல்ல. இப்போ போகலாமா?” ஆசையாக கேட்டிருந்தாள்.

“போகலாம் பொண்டாட்டி, வேந்தன அம்மாக்கிட்ட குடுத்து போயிட்டு வருவோம்” அவனுக்கும் ஆசையாகதான் இருந்தது.

அன்றிரவு குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக உணவருந்திவிட்டு, தங்களுக்குச் சொந்தமான அறைக்குச் சென்றனர்.

குளித்துவிட்டு வெளியே வந்த கனி, “எல்லாத்துக்கும் நீங்கதான் காரணம் அத்தான்! இந்த வாட்டி என்னைக் குறை சொல்லக்கூடாது. முழுக்க முழுக்க நீங்கதான் காரணம்!” என்றபடி கையிலிருந்ததை அவனிடம் நீட்டினாள்.

மனைவி எதற்குத் தன்னைத் திட்டுகிறாள் என்று புரியாமல், “என்ன பொண்டாட்டி?” என்று வாங்கிப் பார்த்தவன், கர்ப்பப் பரிசோதனைக் கருவியின் முடிவைக் கண்டதும் அதிர்ச்சியில் உறைந்துபோனான். அதில் இரண்டு கோடுகள் இருந்தன. 

“உண்மையா, பொண்டாட்டி?” என்று ஆச்சரியத்துடன் கேட்டான்.

“ஆமா, ஹனிமூன் கேன்சல்” என முகத்தை தொங்க வைத்துக்கொள்ள,

“இன்னும் ஒரு வாட்டி போய்க்கிலாம் பொண்டாட்டி” அவளை சமாளித்தான்.

“சரி அத்தான்! ஆனா, இந்த வாட்டி நான் லேபர் ரூமுக்குத் தனியாவே போயிடுவேன். நீங்க வரவே வேண்டாம்!” என்று அவனைச் செல்லமாக முறைத்தாள் கனி.

“இந்த முறை நான் மயங்கி விழாம உன் பக்கத்துல இருப்பேன், பொண்டாட்டி!” என்றவன், அவளை அள்ளி அணைத்து முத்தமழை பொழிந்தான்.

பிரசவ அறையில் வெற்றி இந்த முறை தைரியமாக நிற்க வாழ்த்தி, அவர்களிடமிருந்து விடைபெறுவோம்!

 

சுபம்.

 

 

🌸 அன்பான வாசகர்களுக்கு… 🌸

உங்களுடைய ஒவ்வொரு வாசிப்பும், விருப்பங்களும், கருத்துகளும், அன்பும் எனக்கு மிகவும் முக்கியமானவை. என்னுடைய எழுத்துப் பயணத்தில் என்னுடன் பயணிக்கும் உங்கள் அனைவருக்கும் என் இதயத்தின் ஆழத்திலிருந்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்! 🥹❤️

இனியும் உங்கள் அன்பும் ஆதரவும் தொடரும் என்ற நம்பிக்கையுடன்…

 

அன்புடன்,

லட்சுமி தமிழ்கௌஷி 🌹

 

 

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்