மௌனம் பேசும்! – 06
மௌனம் பேசும்!
அத்தியாயம் – 06
“என்ன தான் இருந்தாலும்,இவ முன்ன மாதிரி இல்ல..முன்னவெல்லாம் ஒரு மாதிரி அழுத்தம் இருக்கும் அவ மொகத்துல..அவளுக்கே தெரியாம,எப்பாச்சும் டீப் திங்கிங்கு போயிருவா..ரேரா தான் நடக்கும்..பட்,நா கண்டிருக்கேன்..ஆனா,இப்போ அவ அமைதியா நிம்மதியா இருக்குற மாதிரி ஃபீல் பண்றேன்..இது தான்,மஞ்சக் கயிறு மாஜிக்கோ..?”
தீவிரமாக நாடி தட்டி,தோழியை முகவதனத்தை ஆராய்ந்தவாறு,பார்கவியிடம் மெல்லமாய் கூறினாள்,மதுரா.
அவளுமே,பாவையவளுடன் பணிபுரிபவள் தான்.அவள் கணவன் வெளிநாட்டில் இருக்க,இரு மாதங்கள் அவனுடன் இருந்து விட்டு வருவதாக அங்கு சென்றவள்,திரும்பும் முன்பே அவள் தோழி திருமதியாகி இருக்க,அதையே இன்னும் அவளால் நம்ப இயலவில்லை.
இதற்குள்,கொஞ்சம் கொஞ்சமாய் பிடிபட்ட பாவையவளின் மாற்றங்கள்,அவளுக்குள் ஏதேதோ சிந்தனைகளை பரப்பி விட்டது.
“இவ பிடிக்காம தான் கல்யாணப் பண்ணிக்கிட்டாளா..?”நிச்சயம்,அவள் கேள்வியில் கேலி கலந்திருக்கவில்லை.
“யம்மா தாயே..உன் டவுட்ட எல்லாம் அவ கிட்டவே கேளு..ஆனாலும்,ஒரு மாசத்துல டெலிவெரிய வச்சிகிட்டு அதத் தவிர,மத்த எல்லாத்த பத்தியும் யோசிக்கற நீ..”
“அது அப்டி தான்..மெனுஃபெக்சரிங் டிஃபெக்ட்..”என்றவளின் பார்வை பாவையவளையே தொடர்ந்து போக,அதில் அவளுக்குமே கடுப்பாகி விட்டது.
“என்னன்னு டி என்னயவே பாத்து கிட்டு இருக்க..?”வார்த்தைகளில் கொஞ்சம் சூடு விரவியிருந்தது.
“எனக்கு என்னவோ,உன் கிட்ட சேன்ஜ் டி..என்னன்னு தான் புரில..சரி,எப்போ உன் ஹஸ்பன்ட இன்டர்ட்யூஸ் பண்ணப் போற..?” சிறு ஆர்வம் தொனிக்க வினவிட,எவ்வித உணர்வுகளை காட்டாதிருக்க,பாவையவள் பாடுபட்டுப் போனாள்.
“அந்தாள நா பாக்கறதே அதிசயம்..இதுல எங்கன்னு இன்டர்ட்யூஸ் பண்ண..?”மனசாட்சி வேறு இடையில் குறுக்கிட்டு குரல் கொடுக்க,அதில் இன்னுமே எரிச்சலானாள்.
“என்னடி ஒரு பதிலயும் காணோம்..”
“வீட்டுக்கு வர்ரேன்டி கூட்டி கிட்டு..”அப்போது அவளை சமாளிக்க மட்டுமே,கூறி வைத்தது.
“ஆமா,கண்டிப்பா வா கூட்டி கிட்டு..அந்த சின்ன வாண்டு வேற உன்ன கேட்டு அடமா அடம்..உனக்கு வீடியோ கால் பண்ணனும்னு அழுக..நா தான் நீ வேலயா இருப்பன்னு வேணாம்னு சொல்லுவேன்..”
“பேசாம இருந்துருக்கலாம்ல..?கொழந்தக்கி என்ன தெர்யும்..?”பொடுபொடுத்தாள்,மதுராவிடம்.
“யார சொல்ற டி நீ..?இவ தான் சின்னப் பசங்கன்னா பத்தடி தள்ளி நிப்பாளே..இவ சின்னப்பையன் கூட ஃப்ரெண்ட் ஆகி இருக்கான்னா,அது அதிசயம் தான்..”மேவாயில் கை வைத்தாள்,பார்கவி.
“எங்கக்கா பையன் டி..சரியான வாண்டு அவன்..இவ வந்து சட்டுன்னு அவன பிடிச்சிட்டான்னா பாத்துக்கோயேன்..அவனும் என்னன்னு இல்லாம இவ கூட அட்டாச் ஆகிட்டான்..அடிக்கடி,அழுக வேற யாழ் ஆன்டின்னு கிட்டு..”
“அது என்னடி அந்தப் பையன் கூட மட்டும்,அப்டி..?”பாவையவளிடம் கேட்க,அவள் பதில் சொல்லும் முன்பு,மற்றையவள் இடை புகுந்தாள்.
“இவ சொன்ன பேர அவனுக்கு வச்சதால ஒரு பாண்ட்..கேட்டா அப்டி தான் சொல்லுவா..அவனும் என்னன்னு இல்லாம ஒட்டி கிட்டான்..”
அதன் பின்னர் ஏதோ பேசிட,மீண்டும் பையனைப் பற்றியே கேள்விகள்.
அதற்கு மேலும்,அவளால் தோழியின் கேள்விகளை எதிர் கொள்ள முடியும் என்று,தோன்றாதிருக்க,மெல்ல நழுவி இருந்தாள்,அவ்விடத்தில் இருந்து.
●●●●●●●●●●
அவன் மன அமைதியின்,இருப்பிடத்தை தேடி வந்திருந்தான்,பையன்.
ஆள் அரவமின்றி மௌனம் சூழ,அத்தனை நிசப்தமாய் இருந்தது, சிவன் கோயில்.அதற்கு முற்றிலும் மாறாய்,அவன் மனதில் நினைவுகளுடனான இடி முழக்கங்கள்.
குளக்கட்டின் படியில் அமர்ந்து,இலக்கின்றி வெறித்தவனின் நிகழை,அவள் நினைவுகள் கட்டியிழுத்திட,அவன் காதலின் சுவடுகள் மறுபடியும் தீபங்களென ஒளிர்ந்தன.
அவள்..
அவள்..
அவள்..
அவள் மட்டுந்தான்.அவளைத் தவிர வேறேதையும்,அண்ட விடுவதில்லை,அவள் மீதான காதலது.
ஒவ்வொன்றிலும்,அவள் நினைவுகள்.நிஜத்தையும் நிகழையும் அழகாய்க் கொத்தித் தின்றிடும்,அவை.
கடந்தோடிய வருடங்களில்,அவன் சுமந்தது ஒன்றும்,அவளை மறக்க இயலா நிமிடங்களை அல்ல,நினைக்காமலே இருக்க முடியா கணங்களை.
அதை நினைக்கையில்,இப்போதுமே நெஞ்சில் அந்தக் கனம்,ஊர்ந்திடுவது போலிருக்க,விரல்கள் நெஞ்சுப் பகுதியை நீவி விட்டன,தன்னைப் போலவே.
வரித்திடா இயலா,அவனின் நேசத்தை வரமாய்ப் பெற்றவள்.உள்ளோடி உறைந்திருக்கும் அவன் உணர்வுகளின், உரிமம் கொண்டவள்.கரையில்லா அவன் காதலை,தனக்கென மட்டுமே சுமந்து நிற்பவள்,அவனின் பேரன்புக்காரி;அவன் அகம் கொண்ட,அழுத்தக்காரி.
எதற்காய்,அவள் மீது இத்தனை இத்தனை நேசம் என்று கேட்டால்,அது அவள் என்பதே நிச்சயம்,அவன் பதிலாய் இருக்கும்.ஏனென்றில்லை.எதற்கென்றில்லை.ஆத்மார்த்தமாய் உயிரின் ஆழத்தில் ஏதோ ஒன்று,அவளுக்கென மட்டும்.
கொள்ளைக் காதல் அவள் மீது.அணையின்றிய நேசம் அவளுக்கென.
அவளை மனதில் இருத்தித் தானே,இதற்கு முன்பும் திருமணங்களை அவன் நிறுத்தியது.இதோ இப்போதும்,திருமணம் வேண்டாமென முரண்டு பிடித்தது எல்லாம்,அவள் ஒருத்திக்கெனத் தானே.
ஆனால்,நடந்தது..?
நினைக்க நினைக்க,அத்தனை கோபம்.அவனை மீறியதோர் ஆற்றாமை,கார் மேகமென மனதில் பரவிடுவதை தவிர்த்திடவே முடியவில்லை.
இந்தத் திருமணத்தை தடுத்து நிறுத்த,இன்னும் முயற்சிகளை மேற்கொண்டு இருக்க வேண்டுமோ என,அவன் இந்த நாட்களில் பல முறை யோசித்ததுண்டு.
அவனும் முடிந்தளவில் முயன்று பார்த்தான்.ஏன்,திருமணத்தன்று கோயிலில் வைத்து தலைமறைவாகிடவும் விழைந்தவன்,அவன்.பூபாலன் மாத்திரம்,அவனை நிறுத்தவில்லை என்றால் அவன் அடங்கியிருக்கவே மாட்டான்.
“போ நீ ஓடிப் போ..அந்த பொண்ணு வாழ்க்கய கேள்விக்குறியாக்கிட்டு போய்ரு நீ..உங்கம்மா அப்டியே விட்ரும்னு நெனச்சியா..?உன் தம்பிய மாப்ள உக்கார வக்காம இருக்கும்னு என்னடா நிச்சயம்..?மானம் மரியாதன்னு உங்கம்மா இத பண்ணாதுன்னு தோணுதா உனக்கு..?”
அவரின் கத்தி முனை வார்த்தைகள்,பையனின் பாதங்களை வேரூன்ற வைத்திருக்க,அதன் பின் நடந்தது யாவும்,விதி வசமே.
அசை போட்டு பார்த்தவனில் இருந்து தன்னாலே பெருமூச்சொன்று விடுபட,அலைபேசியை எடுத்து நேரத்தைப் பார்த்திட,நேரம் கடந்திருந்தது.
வேக நடையுடன் வெளியே வர,கோயிலை பூட்டுவதற்கு வந்து கொண்டிருந்தார்,பூசாரி.
“நல்ல வேள தம்பி நீங்களே வந்துட்டீங்க..கோயில பூட்டனும்னு நா உங்கள தான் தேடி வரப் பாத்தேன்..”என்றவரிடம்,சிறு தலையசைப்புடன் விடை பெற்றவனின் பாதங்கள் வந்து தரித்தது என்னவோ,அந்த மரத்தடியில் தான்.
இளஞ்சிவப்பு நிறப் பூக்கள்,வஞ்சனையின்றி நிறைந்திருக்க,தரையிலும் கொட்டி மண்ணை மறைந்திருந்தன.எட்டி நின்று கிளையொன்றை பிடித்து,ஒற்றைப் பூவை பறித்தவனோ,அதை சுழற்றிப் பார்த்தான்.
அவள் கூந்தலில் இருந்து வீழ்ந்ததில் இருந்து,இந்தப் பூ என்றால் அவனுக்கு கொள்ளை இஷ்டம்.தோழி சூடி விட்ட பூவை தட்டி விட்டவளின் கோப முகம்,நினைவில் வந்து போக,அவன் உயிருமே நிறைந்து போன உணர்வு.
காதோரக் கூந்தலில் பூச்சூடிய,அவள் பூ முகம் நெஞ்சின் ஆழத்தை,அள்ளிக் கொள்ள,அதில் கடையிதழில் கண்ணுக்கே தெரியாததோர்,புன்னகை தவழ்ந்தோடியது.
கையில் எடுத்த பூவுடன்,தாவிப் படியிறங்கியவாறு கீழே வந்தவனின் விரல்கள்,தன் போக்கில் முன்னுச்சி சிகையை பின்னே தள்ளின.
விரல் ஏந்தி வந்த பூவை,க்ளவ் பாக்ஸை திறந்து அதற்குள் பத்திரப்படுத்தியவன்,வண்டியை கிளப்பியிருக்க அடுத்த பத்து நிமிடங்களில்,வீடு வந்து சேர்ந்திருக்க வாசலில் தான் இருந்தாள்,பாவையவள்.
காதில் பொருந்திய அலைபேசியுடன்,அவள் யாருடனோ அளவளாவிக் கொண்டிருக்க,அவளைப் பாராமல் கடந்து சென்றான்,உள்ளே.
இருவருக்குமிடையான இடைவெளி வெகுவாய் நீண்டிருக்க,அவளொருத்தி இருப்பது போன்றே நடந்து கொள்ளாமல் அவனும்,அவனின் பாராமுகத்தை பாராதது போல் அவளும்,என நாட்களை கடத்திட,சில நாட்களுக்கு பிறகு தற்செயலாய் ஒரு சந்திப்பு.
விழிகள் மோதிக் கொள்ளாமல்,அண்மைகள் மாத்திரம் சமீபித்து விலகிட,மீளவும் வார்த்தையாடல்கள் இன்றியதோர் மௌனம்.
இரவும் கவிழ்ந்திட,தனக்கான டீயுடன் கூடத்து சோபாவில் கால் நீட்டி அமர்ந்திருக்க,சுபத்ராவிடம் இருந்து அழைப்பு வந்தது.
“என்னம்மா..?” எடுத்த எடுப்பிலேயே,சலிப்பாய் கேட்க அவருக்கு கோபம் பொங்கியது.
“என்னடி இவ்ளோ சலிச்சிக்கிற..?அம்மா கூட பேச அவ்ளோ அழுத்துப் போச்சா என்ன..?”
“ஐயோ அப்டிலாம் இல்லமா..வேல முடிஞ்சு வந்த டயர்ட்..அது தான் அப்டி பேசிட்டேன்..என்ன விஷயம்னு சொல்லுங்க..”
“லதாவும் அவ புருஷனும் உன்ன பாக்கனும்னு இன்னிக்கி வீட்டுக்கு வர்ராங்களாம்..அதான் ஃபோன் பண்ணி சொல்ல சொன்னா..”
“ஐயையோ..”சத்தியமாய் பதறி விட்டாள்.தனியறையும் சமயலறையின் பிரிவினையும்,கண் முன்னே வந்து போக தலையை உலுக்கிக் கொண்டவளோ,அடுத்த செய்ய வேண்டியவற்றை எல்லாம் மனதில் ஓட்டிப் பார்த்திட,தலை சுற்றியது.
“என்ன யாழ்,சத்தமே இல்ல..ஹலோ..ஹலோ லைன்ல இருக்கியா..?”
“ஆங்..இருக்கேன்..இருக்கேன் மா..சொல்லுங்க..”
“என்ன சிக்னல் இல்லாம போச்சா..சரி அவங்க ஒரு மணி நேரத்துக்குள்ள வந்துர்ரதா சொன்னாங்க..வந்து தங்கவெல்லாம் மாட்டோம்னு சொன்னா..தம்பி இருக்காரு தான வீட்ல..?”
பையனைக் குறித்து அவர் கேட்க,பாவையவளுக்கு சுர்ரென்றிருந்தது.
“யாரு தம்பி மா..?”பிடிபடாதது போலவே கேட்டு வைத்திட,மறுமுனையில் சில நொடி அமைதி.
“உன் வீட்டுக்காரர்!”தொண்டையைச் செருமியவாறு அவர் கூறியதில்,இவள் முகம் தான் உணர்வற்றுப் போனது.
அத்தனை இருந்தும்,”மாப்பிள்ளை”என விளிக்க மறுப்பவரின் மனதில் படர்ந்திருக்கும் விருப்பமின்மையை,அவரின் அமைதி கோடிட்டு காட்டியிருக்க,அதைப் பற்றி அப்போது பேச அவள் விரும்பவில்லை.
என்னவாயினும்,பையன் அவளுக்கு தாலி கட்டியவன்.வீட்டின் மூத்த மருமகன்.அதற்கு தகுந்த மரியாதையை அவனுக்கு அளித்திட வேண்டும் என எண்ணியவளுக்கு,தாயாரின் இந்த ஒட்டாத் தன்மையில் கோபமோ கோபம்.
நல்ல வேளை,மறு வீடு என்றெல்லாம் அவனை தன் உறவுகளின் மத்தியில் நிறுத்தி வைக்கவில்லை என நிம்மதிப் பெருமூச்சு விட்டவளோ,அதற்கு மேலும் எதுவும் பேசாமல் அழைப்பை துண்டித்திட,சுபத்ராவின் முகம் கன்றிப் போனது.
“என்னால அந்தப் பையன மாப்ளயா ஏத்துக்கவே முடில டி..என்ன தான் பண்றது..?”வெண்மதியிடம் அவர் புலம்பித் தள்ள,அவளுக்குள்ளுமே உழல்வது அவ்வெண்ணம் என்பதால்,பதில் எதுவும் சொல்லவில்லை.
இங்கோ,
பரபரவென அனைத்தையும் ஒழுங்கு படுத்திட சுழலத் துவங்கினாள்,பாவையவள்.அவளுக்கெனவாங்கிய பொருட்களை எல்லாம்,சமயலறையை ஒட்டியிருக்கும் ஸ்டோர் ரூமில் போட்டு அதை அடைத்தவள்,அடுத்து வந்து தட்டினாள்,பையனின் அறைக் கதவை.
குளியலை முடித்து விட்டு,பாதி துவட்டியும் துவட்டாத சிகையோடு,தோளில் துவாய் சகிதம் நின்றவன்,என்னவென்று விழிகளால் வினவ,அவளின் பார்வையோ அவனைத் தாண்டி அறைக்குள் தாவியது.
“ம்ம்!”சற்றே உறுமலாய்,அவன் குரல்.
“பெரிம்மா பொண்ணு வீட்டுக்கு வர்ராளாம்..வேணாம்னு சொல்ல முடியாது..வந்தா டவுட் வந்தரும்..”அவனில் விழிகளை உரச விடாமல் உரைத்தவள்,தன்னறைக்குள் ஓடிப் போய் சில ஆடைகளை தூக்கிக் கொண்டு வந்து,அவன் ஆடைத் தாங்கியில் தொங்க விட,சலிப்பாய் பார்த்திருந்தான்,அவளை.
அவசர அவசரமாய் அங்குமிங்கும் அலைந்து,வீட்டை கூட்டிப் பெருக்கி என தனித்தே செய்தவளின் இதழ்கள்,தன்பாட்டில் அவனுக்கு அர்ச்சித்தன.
அவனுக்கும் அது புரிந்ததுவோ,உதவிக்கென வந்தவனை தீப்பார்வையால் தடுத்தவளுக்கு கோபம் தான்,நிஜத்திற்கும்.
அவளறையை பூட்டியவள்,பர்ஸை எடுத்துக் கொண்டு ஏதாவது வாங்கி வர வெளியில் கிளம்பிட முனைய,சட்டென அவன் கரம் அவளை பிடிக்க நீண்டது.
என்ன தோன்றியதோ,பையன் அவனுக்கும் விரல் தீண்ட நீண்ட கரத்தை பின்னிழுத்தவன்,அவளை நிறுத்துவதற்கு சடையைப் பற்றியிழுக்க,
“ஆஆஆஆ..அம்மா!”என்கினற அலறலில்,அவனுக்குத் தான் செவிப்பறை கிழிந்தது போன்றதோர்,பிரம்மை.
“எதுக்கு இழுத்தீங்க..?”சிடுசிடுவென வினவியவாறு அவள் பையனின் புறம் திரும்பிட,அவனோ மெல்லமாய் இதழசைத்தான்,”நா போறேன்!”என்பதாய்.
எங்கோ,தன் இதழசைவு அவளுக்கு விளங்கிடுமோ என்கின்ற யோசனையில்,அலைபேசியை எடுத்து தட்டச்சு செய்து தெரியப்படுத்த பார்த்திட,அதற்குள் முந்திக் கொண்டாள்,அவனின் மனையாள்.
“எனக்கு கடக்கிப் போகத் தெரியும்..”வெட்டிக் கொண்டு முகத்தை திருப்பியவளின் வார்த்தைகளில்,அவன் புருவங்கள் மெல்லிய சுருக்கத்தை காண்பித்திட,அதற்குள் வாசல் கதவை அண்மித்திருந்தாள்,அவள்.
மீண்டும்,சடையைத் தான் பிடித்திழுத்தான்.முதுகு வரை நீண்டிருந்த பின்னல்,அவன் கைக்கு வந்து விடுமோ என்கின்ற யோசனையில் உறுத்து விழித்தவளை,அழுத்தமாய் பார்த்து வைத்தான்,பையன்.
“நா போறேன்!”
“தேவல..”அவள் தன் பிடியில் இருந்து இறங்குவதாய் இல்லை.என்னவோ கோபம்,அவன் மீது.என்னவென்று,அவளுக்குமே ஆய்ந்தறிய முயலவில்லை.
“டைம பாரு..ஒரு பொண்ணு தனியா போலாமா..?”அவளுக்கென வார்த்தைகளை மெதுவாய்,அழுத்தம் திருத்தமாக அவன் உச்சரித்திட,சிலுப்பிக் கொண்டவளுக்கும் அவன் சொல்வதே சரியெனப் பட்டது.
“அவளுக்கு ஸ்வீட் தான் பிடிக்கும்..ஸ்வீட் ஏதாச்சும் வாங்கிட்டு வாங்க..”அக்மார்க் மனைவியாய் அதட்டி விட்டு,அவள் உள்ளே செல்ல அவன் தான் தலையைக் கோதிக் கொண்டே வெளியே சென்றான்.
பையன் வரும் போதே,மழை பிடிக்கத் துவங்கிட,கொஞ்சம் நனைந்தவாறு வீட்டுக்குள் வந்தவனைப் பார்க்க,அவளுக்கே பாவமாகிப் போனது.
குளித்தது போதாதென்று,மழையிலும் அவன் நனைந்திருக்க காய்ச்சல் வந்து விடுமோ என்றெல்லாம்,அவள் யோசித்திருக்க அவன் அதையெல்லாம் கண்டு கொள்ளவேயில்லை.
சில நிமிடங்களில் பின்னர்,அழைப்பு மணியோசை.
தன்னை சீர்படுத்தியவாறு அவள் வாசலுக்கு விரைந்திட,அவர்கள் தான் வந்திருந்தனர்.இருவரையும் அவள் வரவேற்று அமர வைத்திடும் போதே,கூடத்துக்கு வந்தான் பையன்.
அவனும் அவர்களை புன்னகை முகமாக உபசரித்திட,அவள் அவ்விடத்தில் அவன் வருகையை எதிர்பாக்கவே இல்லை.அவன் தனித்து அறைக்குள் கிடந்திருந்தால் கூட,அவளுக்கு அதில் எந்த வித வருத்தமும் இருந்து இருக்காது.
பொதுவாய் நலம் விசாரிப்புகள் என கதையாடல் நகர,அவள் விழிகள் தான் நொடிக்கொரு தடவை சுழன்று,அவன் முகவுணர்வுகளை ஆராய்ந்தறிந்தறிந்தன.
லதாவுக்கு மட்டுமல்ல,அவனின் கணவனுக்குமே பையனிடம் என்ன பேசிடவென்று தெரியவில்லை.கடமைக்காக அவள் கணவன் ராஜேஷ்,சில கேள்விகளை கேட்டு தானே பதில் கூறி இதுவா என்க,ஆமோதிப்பாய் அவன் சிரசசைத்தான்.
பாவையவளுக்கு மனம் ஒப்பாமல் போயிற்று.அவன் தனக்காக வந்திருப்பதில் அவள் மனம் தவிக்க,இதில் ராஜேஷுக்கும் அவனுக்கும் இடையிலான உரையாடல் வேறு,என்னவோ செய்தது.
“காஃபி போட்றேன்” என காரணம் காட்டி,சமயலறைக்குள் நுழைந்து சில வினாடிகளில்,சட்டென்று உருப்பெற்ற திகைப்பில் பையனின் விழிகள்,கொஞ்சமாய் விரிந்து கொண்டன.
“ஏங்க!”சத்தமாய் அவள் தான் அழைத்திருந்தாள்,உள்ளிருந்து.
அவனுக்கு அவ்வழைப்பே திகைப்ப வாரித்தர,அதில் இருந்து வெளிவர நொடிகளை தர மறுத்து,அடுத்த அழைப்பு.
“ஏங்க,கொஞ்சம் வாங்களேன்!”உரிமைப்பட்ட கணவன் போல்,அவள் கூப்பிட நெடுமூச்சு எறிந்து தலையைக் கோதியவாறு எழுந்து சென்றவனின்,இதயமும் தாளம் தப்பி துடித்தது.
அவள் அழைப்பு அவனை ஆட்டுவிக்க,அதில் உண்டாகிய இயலாமைக்கு கோபெமனும் சாயம் பூசி,அவன் உறுத்து விழித்திட,அவளோ பொங்கி வரும் பாலில் கவனமாய் இருந்தாள்.
“எனக்கு காஃபி சரியா வராது..நீங்க போடுங்க..”இறைஞ்சலுமின்றி கட்டளையுமின்றி அவள் கூற,பையனின் பார்வை உஷ்ணத்தை வீசியது,அளவின்றி.
“ம்ம்!” என்ற சீறலுடன் அவளை பார்க்கச் செய்தவன்,மறுப்பாய் தலையசைத்து மார்புக்கு குறுக்கே கையை கட்டியவாறு அங்கேயே காலூன்றிட,முறைப்புடன் தானே காஃபியை கலக்கலானாள்,அவள்.
சுவைத்துப் பார்த்தவளின் முகம் பிரதிபலித்த உணர்விலேயே,அவளின் காஃபி பற்றி புரிந்து போக,அவளை நகரச் சொல்லி விட்டு,அவனே கலக்கி எடுத்தான்.
அதன் வாசமே,ஆளை அள்ள ட்ரேயில் வைத்து அவன் நீட்டியதை வாங்கியவளின் விழிகளே போதும்,அவனுக்கான பாராட்டை தெரிவித்திட.
சிறிது நேரம் இருந்து விட்டு வந்தவர்கள்?கிளம்பிச் செல்ல,வழியனுப்ப வாசல் வரை வந்தவளின் காதில் மெல்ல கிசுகிசுத்தாள்,லதா.
“வர்ர வரன் எல்லாத்தயும் தட்டி விட்ட நீ இந்த வரன்கு என்னன்னு தான் டி சம்மதம் சொன்ன..?மனசு கேக்கல டி..” மன ஆதங்கத்தை அவள் கொட்டி விட்டு நகர,பாவையவளின் விழிகளில் கோபம் என்றால்,அதைக் கேட்டிருந்த பையனின் முகமோ பாறையென இறுகிற்று.
தொடரும்.
2026.10.24






forum இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0
இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!