அன்றில் 3
அன்றில் – 03
இதழைச் சரிசெய்துவிட்டு, தொண்டையைச் செருமி அழைப்பை அழுத்திக் காதில் வைத்தாள்.
“கிஷோரி!” என்றான் அவன் பதற்றத்துடன்.
வேண்டுமென்றே அவள், “யாரு?” என்றுவிட்டு, உதட்டோரம் கள்ளச்சிரிப்புடன் நுனி நாக்கைக் கடித்துக்கொண்டு ஒற்றைக் கண்ணை மூடி வெட்கித்தாள்.
வீரா தன்னைத்தானே யாரிடமும் அறிமுகப்படுத்தியதே இல்லை. இதுதான் முதல் முறை.
“ஹா… நான்தான் வீரா”
“ஹா வீரா! இந்த நேரத்துல கால் பண்ணியிருக்கீங்க, சொல்லுங்க?” என்றாள் அவள்.
மீண்டும் பென்டிரைவ் மாறிய விஷயத்தைக் கூறியவன், அவசரமாகத் தனது பென்டிரைவ் தனக்கு வேண்டும் என்பதையும் கேட்டான்.
கிஷோரிக்கு இப்போது என்ன செய்வதென்றே தெரியவில்லை. மணி ஏழாகிவிட்டது. உடல் முழுவதும் அலுப்பு வேறு. மீண்டும் அவனது இல்லத்திற்குச் செல்ல ஒன்றரை மணி நேரமாகுமே!
“அப்படியா? என்ன சொல்லுறீங்க?” தற்செயலாக நடந்ததைப் போலக் கேட்டிருந்தாள்.
“எக்ஸ்சேஞ்ச் பண்ணும்போது நீங்க கொடுத்த பென்டிரைவ் மாறிடுச்சு. என்னோட பென்டிரைவ் எனக்கு அர்ஜென்ட்டா வேணும்”
அவனது கழுத்தே இறுகும் அளவுக்குச் சூழ்நிலை அவனை நெருக்கியது.
“நாளைக்கு மார்னிங் கொண்டு வந்துடறேன் ஓகேவா?”
கிஷோரியின் பதிலுக்கு அவன் எதுவும் கூறாமல் அழைப்பைத் துண்டித்தான்.
“யாருடீ போன்ல?” கேட்டாள் வேணி.
“அது வீரா டீ!”
கிஷோரி கூறும்போது அவள் முகத்தில் ஒரு விதமான துள்ளல். அதனை வேணி எதையும் ஆராயாமலேயே கண்டுகொண்டாள்.
உதட்டைப் பிதுக்கியவாறு, “ம்… தெரியுது” என்றாள் வேணி.
கிஷோரியின் உதட்டில் உறைந்திருந்த சிரிப்பைக் கண்டு வேணிக்குப் பைத்தியம் பிடிப்பது போல இருந்தது.
காரின் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தபடி நமுட்டுச் சிரிப்பை அடக்கிக்கொண்டு, ஆள்காட்டி விரல் நுனியை முன் பற்களில் தேய்த்துக்கொண்டிருந்தாள் கிஷோரி.
வேணி தோழியின் தோளைத் தட்டினாள்.
“நீ ஏதாவது வீராவ லவ் பண்ணுறியா டீ?”
மையிட்ட விழிகளைப் பெரிதாக்கி, “என்னடீ புசுக்குன்னு இப்படி கேட்ட?” என்றாள் அவள்.
“மூஞ்சியும் சரியில்ல முழியும் சரியில்ல. அப்புறம் எப்படி கேக்கணும்னு சொல்லு?”
வேணியின் கூர்மையான பார்வை அவள் தோழியை விட்டுத் தப்பவே இல்லை. இரவில் கூட வானவில் தோன்றுமே என்றிருந்தது அவளது உணர்வுகள்.
“அதுக்குப் பேரு லவ் இல்லடீ கிரஷ்” என்றாள் கிஷோரி அசட்டுச் சிரிப்போடு.
“ம்… ம்…” என்று ஒருமுறை முறைத்துவைத்தாள் வேணி.
மற்ற நாட்களில் வேணியின் வீடு வரை சென்று, அவளை வீட்டில் விட்ட பிறகுதான் கிஷோரி தன் வீட்டிற்கு வருவாள். ஆனால் இன்று அப்படி இல்லை.
வீட்டினுள் வந்தவள், வீட்டின் முன்பக்கக் கதவைத் தாழிட மறந்திருந்தாள். வழக்கம்போல சுபாஸ் டியூட்டியில் இருக்க, சமையலறையில் பாத்திரங்களைத் திறந்து பார்த்துவிட்டு, புத்துணர்ச்சி பெறக் குளியலறைக்குள் புகுந்தாள்.
சில்லென்ற நீர் உடலைத் தழுவி அவளது அலுப்பைப் போக்க, குளிர்ந்த தேகம் புத்துணர்வைப் பெற்றது.
அவள் விரும்பிய வெள்ளை நிற ஸ்லீவ்லெஸ் நைட்டியை அணிந்துகொண்டாள். விசிறிக் காற்று கூந்தலை வருடிக்கொண்டிருக்க, அதை முறுக்கி ஒரு கிளிப்பில் அடக்கினாள்.
அறையை விட்டு பசியோடு வெளியே வந்தவள் வீட்டைப் பார்த்ததும் அதிர்ச்சியில் உறைந்தாள்.
அவர்களது வீட்டுச் சோஃபாவில் வீரா காலுக்கு மேல் கால் போட்டு, ஆயுதம் தாங்கிய தனது ஆட்களுடன் அமர்ந்திருந்தான்.
அவளது கோலத்தைப் பார்த்தவன் தலைகுனிந்தான். அவனது குழுவினரும் வேறு திசையைப் பார்த்தனர்.
மீண்டும் விறுக்கென்று அறைக்குள் நுழைந்து உடையை மாற்றினாள்.
வீட்டின் முகவரியை எப்படி அறிந்தான்? ஏன் இந்த நேரத்தில் வீட்டிற்கு வந்தான்? கதவைத் தாழிடாதது அப்போதுதான் நினைவுக்கு வந்தது. தந்தையும் இல்லாத நேரமிது. ஒருவேளை இவன் இருக்கும் நேரத்திலேயே தந்தை வந்துவிட்டால், தன்னைப் பற்றி என்ன நினைப்பார்?
எண்ணற்ற சிந்தனைகள் அவளது மூளையை ஆட்டிப்படைத்தன.
பெருமூச்சுவிட்டபடி பென்டிரைவை எடுத்துக்கொண்டு ஹாலிற்கு வந்தாள்.
“ஸாரி வீரா டைட் சிச்சுவேஷன்”
அவனது பென்டிரைவைக் கொடுத்துவிட்டு, தன்னுடையதைப் பெற்றுக்கொண்டாள்.
அவசரமாகத் தனக்கு ஐந்து நிமிடங்கள் ஒதுக்கித் தர முடியுமா என்று ஹிந்தியில் கேட்டவன், அவள் பதில் கூறாமல் இருக்க, கிஷோரிக்கு ஹிந்தி தெரியாது என்பதை மறந்துவிட்டதை உணர்ந்தான்.
கிஷோரிக்கும் ஹிந்தி தெரியாது; எனக்கும் தெரியாது. இதற்குப் பிறகு வீராவின் உரையாடல்கள் எல்லாம் தமிழிலேயே வரும் அன்பர்களே!
“ஸாரி கிஷோரி நாங்க ஒரு ஃபைவ் மினிட்ஸ் இங்க இருக்கலாமா?” என்று கேட்டான்.
“யா ஷ்யூர்”
உதடுகளால் கூறிய வார்த்தைகள் மட்டும்தான் அவை. அவளது மனம் முழுவதும் இந்த நேரத்தில் மட்டும் தந்தை வந்துவிடக் கூடாதென வேண்டிக்கொண்டிருந்தது.
தனது லேப்டாப்பை எடுத்து பென்டிரைவைப் பொருத்திவிட்டு வேலையில் மூழ்கினான்.
ஐந்து நிமிடங்கள் கேட்டவன், பதினைந்து நிமிடங்களாகியும் கிளம்பவில்லை. இன்னும் பத்து நிமிடங்கள் இருந்தால், ‘தந்தையைப் பார்த்துவிட்டுத்தான் இவன் செல்வான் போல’ என மனதிற்குள் புழுங்கிக்கொண்டிருந்தாள்.
அவனது கைகள் லேப்டாப்பில் தட்டச்சு செய்துகொண்டிருக்க, “கிஷோரி நீங்க மட்டும் வீட்ல தனியா இருக்கீங்களா?” என்றான்.
“அப்பாக்கூட இருக்கேன்” என்று படபடப்புடன் கூறினாள் அவள்.
அவன் தலையை மட்டும் ஆட்டினான்.
“நீங்க ஒரே பொண்ணா?”
அவன் ஒவ்வொன்றாகக் கேட்க,
“தம்பி இருக்கான்” என்றாள்.
நேரத்தைப் பார்த்துப் பார்த்துப் பதில் கூற வேண்டியிருந்ததால் அவளுக்குக் கடுப்பாக இருந்தது.
அப்போது சுபாஸின் போலீஸ் வண்டிச் சத்தம் கேட்டது.
கிஷோரிக்கோ, ஒருத்தன் என்றால் பரவாயில்லை எப்படியாவது சமாளித்துவிடலாம். ஆனால் வீராவின் ஆட்கள் ஒவ்வொருவரும் அர்னால்டின் அளவுக்கு இருந்தனர். இவள் என்னதான் செய்வாள்?
சமாளிப்பதற்கு மனதைத் திடப்படுத்திக்கொண்டாள்.
வாசலுக்கு வந்த சுபாஸ் தொப்பியைக் கழற்றிவிட்டு வீட்டைப் பார்க்க, ஆண்கள் பலர் நிற்பதைக் கண்டு என்ன நடக்கிறது என்று புரியாமல் உள்ளே நுழைந்தார்.
தேக்கு மரத் தூண்களைப் போல நின்றவர்கள் சுபாஸைக் கண்டதும் எச்சரிக்கையுடன் நிமிர்ந்தனர். கிஷோரி, “அப்பா!” என்றவுடன் அவர்கள் தங்கள் நிலைக்கு வந்தனர்.
சுபாஸ் வந்ததும் வராததுமாக,
“அப்பா பிரண்ட்ஸ் வந்திருக்காங்க. டீ போட்டுத் தாரீங்களா?” என்று சமாளிக்க முயன்றாள்.
இவர்களை எல்லாம் தனது நட்பு வட்டாரத்தில் பார்த்ததே இல்லை என்பதுபோல சுபாஸின் பார்வை அவளை நோக்கி நிற்க, வீராவும், ‘உனக்கு நான் எப்போ நண்பனானேன்?’ என்பதுபோல அவளைப் பார்த்தான்.
இவர்கள் இருவரும் இப்படிப் பார்க்க, இவளோ யாருடைய பார்வையையும் பொருட்படுத்தாமல் இயல்பாக இருந்தாள்.
‘ஸ்’ எனச் சத்தமிட்டு வார்த்தையை விழுங்கிய வீரா, “தேங்க்ஸ் அங்கிள் டீ வேணாம்” என்றான்.
இதற்கு மேல் இங்கு இருந்தால் சுபாஸ் குழம்பிவிடுவார் போலிருந்தது. வீராவைப் பார்த்துத் தலையசைத்துவிட்டு அவர் அறைக்குள் நுழைந்தார்.
அதற்குள் வீரா தனது வேலையை முடித்து, லேப்டாப்பை மடித்து எழுந்தான். வைத்திக்கு அழைப்பு விடுத்துக் காரை அனுப்பச் சொன்னான்.
கார் வந்தவுடன் அவளுக்கு நன்றி கூறிவிட்டு, தனது ஆட்களுடன் அங்கிருந்து நகர்ந்தான்.
தந்தையின் அருகில் வந்த கிஷோரி,
“இப்போ வந்துட்டுப் போறதுதான்ப்பா வீரா. எங்க ரெண்டு பேரோட பென்டிரைவ் மாறிடுச்சுப்பா. ரெண்டுமே ஒரே டிசைன் அதான்” என்றாள்.
“அதனாலதான் ஃப்ரெண்ட் ஆகிட்டீங்களா? அவனைப் பார்த்தா உனக்கு எப்படிமா தெரியுது?”
போலீஸின் பார்வை என்றால் சும்மாவா!
“அவன் ரௌடிதான்ப்பா பட் நல்ல ரௌடி” என்று மகள் கூறியபோது, ஓடும் பாம்பைக் கையால் பிடிக்கும் வயது என்பதனை உணர்ந்தார் சுபாஸ்.
“ஹா அப்படியா?” பிரமாதம் என்பதைப் போலக் கூறிவிட்டு, “எனக்கு என்னமோ அவன் பார்த்த ரௌடி மாதிரி தெரியலையேம்மா” என்றார்.
“அப்போ எப்படி தெரியுதுப்பா?” என்று தீவிரமாகவும் ஆர்வமாகவும் கேட்டாள்.
மகளை அறியாதவரா அவர்? கிஷோரியின் கண்களில் புதிதாக ஒரு மினுமினுப்பு பிரகாசித்தது.
“அவன் அதுக்கு மேலடா. வெறும் ஃப்ரெண்ட் மட்டும்தானேமா? நீ எந்த முடிவு எடுக்குறதா இருந்தாலும் யோசிச்சு எடுமா” என்று தகப்பனாக அறிவுறுத்தினார்.
தந்தை கூறியதன் பொருளை உணர்ந்தவள் ஆரவாரமாக,
“அப்பா நான் லவ் பண்ணல!” என்றாள்.
“கொஞ்ச நாள்ல வந்துச் சொல்லுவம்மா”
இப்போது கிஷோரிக்குப் புரியவில்லை.
“என்னதுப்பா?” என்று சந்தேகமாகக் கேட்டாள்.
“சொல்லும்போது சொல்றேன்” என்றுவிட்டு, இருவருக்கும் இரவு உணவு எடுத்து வைக்கச் சென்றார்.
******
வீராவின் அரண்மனையில், அவனது அன்னை ராஜேஸ்வரி உறங்காமல் மகனுக்காகக் காத்திருந்தார்.
பலமுறை வேலையாட்களிடம் சொல்லி மகனுக்கு அழைப்பு விடுக்கச் செய்தும், அவன் ஒரு அழைப்பைக்கூட ஏற்கவில்லை. அவருக்கோ கோபம். ஒரே வீட்டில் இருந்துகொண்டு அவரைப் பார்க்கக்கூட முடியாத அளவுக்கு அப்படி என்ன வேலை?
ராஜிமாவின் உடல் நடுங்கத் தொடங்கிவிட்டதாக அவரது வேலையாள் அவசரமாக வீராவிடம் கூறுமாறு வைத்திக்குக் குறுஞ்செய்தி அனுப்பினார்.
வீராவுக்குத் தூக்கிவாரிப்போட்டது.
அடுத்த பத்தாவது நிமிடத்தில் தாயின் காலடியில் வந்து நின்றான் வீரா.
“ஏன்மா இப்படி பண்ணீங்க?” என்று உடல் வியர்த்து விறுவிறுக்க விசனத்துடன் கேட்டான்.
ராஜிமாதா பேசவே இல்லை. மௌனம் சாதித்தார்.
தாயின் ஏக்கத்தைப் புரிந்துகொண்டவன், “ரெண்டு நாள் கொஞ்சம் பிஸிமா ஸாரி” என்றுவிட்டு தாயின் மடியில் தலையைச் சாய்த்தான்.
மகனைத் தாங்கிய தாயின் மடி அவனுக்காக இறங்கியது. அவரது ஐந்து விரல்களும் அவனது கேசத்தை மென்மையாகக் கோதின.
“வைத்தி இதுக்கப்புறம் ஆறு மணிக்குப் பிறகு வெளிய எங்கேயும் போக வேண்டாம்”
அவரது உத்தரவுக்குச் செவிசாய்த்தார் வைத்தி.
“ஒரு பொண்ணு வீட்டுக்குப் போக வேண்டிய நிலைமை. அதான் இன்னைக்கு வெளியே போனோம்” என்று வைத்தி ராஜிமாவிடம் கூற,
‘பெண் வீட்டிற்கா?’ என்பதுபோல வாயைப் பிளந்தார் அவர்.
வீராவிடம் தாய் வினவ, வைத்தியிடமே கேட்குமாறு அவன் கூறினான்.
வைத்தி, ரயிலில் அவளுடன் இடித்தது முதல், அவள் பார்க்கும் பார்வை வரை, கிஷோரியின் வீட்டிற்குச் சென்றது உட்பட அனைத்தையும் அக்குவேறு ஆணிவேறாகக் கூறினார்.
அதுமட்டுமல்லாமல், “ராஜிமா அந்தப் பொண்ணு நம்ம வீராபாயைப் பார்க்குறதுக்காகவே இப்படி எல்லாம் பண்றாளோன்னு தோணுது” என்றார்.
அவர் கூறி முடித்ததுதான் தாமதம், வீரா தலையை நிமிர்த்தினான்.
“ஏன் வைத்தி நீங்க வேற!” என்று சலித்துக்கொண்டான் வீரா.
தாயிடம் இப்படி எல்லாம் கூறினால், அவனது திருமணத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிடுவாரே! அதையும் வேறு வீரா சமாளிக்க வேண்டுமே!
“உஷ்!” என்று வீராவைப் பார்த்துச் சைகை செய்த ராஜிமா, “நீங்க சொல்லுங்க” என்று வைத்தியிடம் கூறினார்.
“நம்ம வீராபாய்க்கும் அந்தப் பொண்ணு மேல நல்ல எண்ணம்தான் இருக்கு ராஜிமா. அந்தப் பொண்ணு வீராபாயை விரும்புதான்னு தெரியலை” என்று கூறி முடித்தார் வைத்தி.
வைத்தி பேசும்போது வீரா அவரை முறைத்துக்கொண்டே இருந்தான்.
கதையை நன்றாகக் கேட்டுவிட்டு, இந்த நேரத்தில் பெண்ணின் வீட்டிற்குச் சென்றது தவறு என்பதை வீராவுக்குப் புரியவைத்தார் ராஜிமா.
“வீரா நான் அந்தப் பொண்ணைப் பார்க்கணும். நான் பார்க்குற பொண்ணுதான் உனக்குப் பிடிக்கல. உன்னையே ஒரு பொண்ணு தேடி வரான்னு தோணுது”
“அப்படி எல்லாம் பார்க்க முடியாதும்மா. வைத்தி சொல்லுற மாதிரி எதுவுமே இல்ல” என்று உறுதியாகக் கூறினான் வீரா.
“அதெல்லாம் எனக்குத் தெரியாது. நான் பார்த்தே ஆகணும். அந்தப் பொண்ணைப் பார்க்கக் கூட்டிட்டுப் போகலன்னா உங்கூட நான் பேசமாட்டேன்” என்று சபதம் செய்தார் ராஜிமா.
பதற்றமடைந்த வீரா, லேசாகக் குரலை உயர்த்தி, “ம்மா” என்று கெஞ்சினான்.
ராஜிமாவிடமிருந்து பதிலே இல்லை.
கிஷோரியை எப்படி அழைப்பது? அவள் தன்னைப் பற்றி மேலும் என்ன நினைப்பாள்? என்று யோசித்த வீரா, வைத்தியைப் பார்த்து முறைத்துக்கொண்டு கடுகடுத்தான்.
*****






forum இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0
இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!