அன்றில் 4
அன்றில் 04
கிஷோரி, ஸ்டுடியோவில் விமன்ஸ்வுட் நிகழ்ச்சிக்காக அவர்கள் உருவாக்கிய குறும்படத்தைத் தங்களது யூடியூப் சேனலில் பதிவிடத் தயாராகிக் கொண்டிருந்தாள்.
“விமன்ஸ்வுட்ல போட்டதை நம்ம சேனல்ல போடும்போது, நாம போட்ட டிஸ்க்ளைமர் வந்துடுமே” என்றாள் வேணி.
“டிஸ்க்ளைமர் போட அவனுக்குத் தகுதியே இல்ல” என்று கூறியவள், மதில் குறும்படத்தை ஹனிபீஸ் யூடியூப் தளத்தில் பதிவேற்றினாள். அதன் பிறகு, நேற்றிரவு வீரா தனது ஆட்களுடன் வீட்டிற்கு வந்ததைக் கூறினாள். வேணியோ வாயைப் பிளந்தபடி அவளையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“வீடு தெரியாம எப்படி ஒரு பெண்ணோட வீட்டுக்கு வர முடியும்? நீ அட்ரஸ் கொடுத்தியா?” என்று வேணி கேட்க,
“இல்லடீ” என்று சலிப்புடன் பதிலளித்தாள் கிஷோரி.
“இப்பல்லாம் நீ பொய் சொல்லவும் ஆரம்பிச்சிட்டியா?” என்று வம்படியாக அவளைக் குடைந்தாள் வேணி.
“அடி, எங்கப்பா மேல சத்தியமா அட்ரஸ் கொடுக்கலடீ. அட்ரஸ் எப்படி கண்டுபிடிச்சான்னு நானும் கேட்கல. மைல்டா சிரிச்சுட்டு பந்தா காட்டுவான். எனக்கு அதெல்லாம் பிடிக்காது. அவனுக்குப் பணம் இருக்குன்னா, அதை நிரூபிச்சிட்டான்” என்று கிஷோரி கூறியது நூறு சதவீதம் உண்மைதான். பணத்தைச் செலவழித்துத்தான் அவளைப் பற்றிய விவரங்களைத் துழாவியிருந்தான் வீரா.
வேணியும் அதை ஏற்றுக்கொண்டு, அவளிடம் வேறு எதுவும் கேட்டு குடையவில்லை. அந்த மாதம் யூடியூப் வருமானத்தைப் பெற்றுக்கொண்டு, தனது குழுவினருக்குச் சம்பளத்தைப் பிரித்துக் கொடுத்தாள் கிஷோரி. அடுத்த படப்பிடிப்புக்கான இடத்தையும் தேடத் தொடங்கினாள்.
அப்போது கிஷோரியின் வாட்ஸ்அப்புக்கு, தெரியாத எண்ணிலிருந்து அழைப்பு வந்தது. அதுவும் வீடியோ கால். சந்தேகத்துடன் அழைப்பை ஏற்றாள். வேறு யாருமில்லை, அந்தப் பூமர் ஆன்டிதான்!
நேற்று கிஷோரி கழுவி ஊற்றியதையெல்லாம் துடைத்துவிட்டு, எதுவுமே நடக்காதது போல,
“கண்ணு எப்படி இருக்க?” என்று சிரித்தவாறே கேட்டார் அமுதா.
இவளோ இளிக்கவா, முறைக்கவா என்று தெரியாமல் பதில் கூறாமல் அவரையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள். மறுபுறம் வேணி குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கத் தொடங்கிவிட்டாள்.
“அமெரிக்கா மாப்பிள்ளை இந்தியாவுக்கு வந்துட்டாரு. நீ ஊன்னு சொன்னா, அடுத்த முகூர்த்தத்துல கல்யாணம்” என்று அமுதா கண்களை அசைத்து, வாயைக் கோணலாக வைத்துக் கூறியதும் கிஷோரிக்குத் தானாகவே சிரிப்பு வந்துவிட்டது.
இந்தப் பூமர் ஆன்டியை எப்படிக் கழற்றிவிடுவது என்று யோசித்தவளுக்கு, அவளது புத்திக்கு எட்டிய வழி இதுதான்.
“ஆன்”
என்று வாயைத் திறந்தவள், அப்படியே மூடாமல் முப்பது நொடிகள் அசையாமல் இருந்தாள்.
“டீ”
என்று சொல்லிவிட்டு, அடுத்த பதினைந்து நொடிகளும் அப்படியே இருந்தாள்.
பூமரிங் அமுதாவோ,
“எம்மா, நான் பேசுறது கேக்கலையா? சிக்னல் இல்லையா?” என்று கேட்டார்.
“டவர்” என்று பதிலளித்தவள்,
“இல்ல”
என்று கூறி ஒரு நாடகத்தையே நடத்திவிட்டு, காணொளி அழைப்பைத் துண்டித்தாள். அடுத்த நொடியே அமுதாவின் எண்ணையும் தடை செய்துவிட்டாள்.
“யூடியூபரா இருக்கேன்னு நீ நிரூபிச்சிட்டடீ” என்று கிஷோரியை மெச்சினாள் வேணி.
கிண்டியில் இருக்கும் ஒரு பூங்காவை ஒட்டிய தெருவில் அன்றைய படப்பிடிப்புக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். நடிப்பவர்கள் அனைவரும் முன்கூட்டியே வந்துவிட, கிஷோரியும் வேணியும் மட்டும் தாமதமாக வந்தனர்.
வாகனங்கள் செல்லும் தெரு என்பதால் படப்பிடிப்பு நடத்துவது சற்று சிரமமாகவே இருந்தது. எப்படியிருந்தாலும், கிஷோரியின் மனதுக்குத் திருப்தி ஏற்படும் வரை காட்சிகளை மீண்டும் மீண்டும் படமாக்கிக் கொண்டே இருப்பாள்.
அன்றைய படப்பிடிப்பு வேறொரு காட்சிக்காக இருந்தது. புதிய குறும்படத்தின் கதாநாயகன் அறிமுகமாகும் பகுதியை மட்டுமே படமாக்கத் திட்டமிட்டிருந்தாள். அவளது வரவுசெலவுத் திட்டத்துக்கு ஏற்றவாறு ஜீன்ஸ் துணியால் தைக்கப்பட்ட சட்டையையும் காக்கி நிறப் பேன்ட்டையும் தேர்ந்தெடுத்துக் கொடுத்திருந்தாள். கண்களுக்குக் குளிர்கண்ணாடியும் ஏற்பாடு செய்திருந்தாள்.
அப்போது ரேங்லர் மாடல் கருப்பு நிற ஜீப் ஒன்று, அவர்கள் இருந்த திசைக்கு எதிரே வந்து நின்றது. அதைக் கவனித்த கிஷோரி, ஜீப்பின் வடிவத்தைப் பார்த்து வியந்தாள். அது படத்தில் இடம்பெற்றால் நன்றாக இருக்கும் என்று நினைத்தவள், உடனே ஒரு காட்சியைப் படமாக்கத் திட்டமிட்டாள்.
“அண்ணா, அந்த ஜீப்ல இருந்து கதவைத் திறந்து ஓனர் இறங்கி வருவாரு. அதே டைம்ல நீங்களும் வந்துருங்க. ஜீப்ல இருந்து இறங்குறவருக்குப் பதிலா உங்களை எடிட் பண்ணிப் போட்டுருவேன்”
என்று கூறும்போது அவளுக்கே கொஞ்சம் அசிங்கமாகத்தான் இருந்தது. இருந்தாலும், அப்படிப்பட்ட வண்டியை வாடகைக்குக்கூட எடுக்கும் அளவுக்குக் கையில் பணம் இல்லையே!
ஒரு கண்ணை மூடிக் கேமரா வழியாகப் பார்த்தவள், படப்பிடிப்பைத் தொடங்கினாள். ஜீப்பின் கதவு திறப்பதைப் பார்த்ததும்,
“கமான், கமான்” என்று சத்தமாகக் கூறினாள்.
ஜீப்பிலிருந்து இறங்கியவனுக்கு அங்கே ஏதோ படப்பிடிப்பு நடப்பது தெரிந்தது. இருப்பினும், தனக்குத் தேவையானதைச் செய்துகொள்வதற்காக கீழே இறங்கினான்.
“வாவ்! வாவ்! வாவ்!” என்று இடைவிடாமல் கூச்சலிட்டாள் கிஷோரி.
ஜீப்பிலிருந்து இறங்கியவனுக்கோ, அங்கே நடந்துகொண்டிருந்த காட்சிகள் அனைத்தும் பக்காவாகப் பொருந்தின.
“ஏய், கேமராவை விட்டுட்டு வெளியே வாடீ” என்று வேணி அவளைக் குலுக்கிவிட, கிஷோரி சுயநினைவுக்கு வந்தாள். நடிக்க வைத்திருந்த நபர் ஜீப்பின் கதவைத் திறந்துவிட்டு வெளியே வராமல் இருப்பதை அவள் கவனித்திருந்தாள். ஆனால், வேணி ஏன் இவ்வளவு குழப்பமடைந்தாள் என்பதுதான் அவளுக்குப் புரியவில்லை.
“வே வேன்னு கத்துறியே! ஜீப்ல இருந்து யார் வந்திருக்காங்கன்னு பார்த்தியா, வீரா! கவனிச்சியா இல்லையா?”
அப்போதுதான் கிஷோரியின் மரமண்டைக்கு உரைத்தது. படப்பிடிப்பின்போது ஜீப்பிலிருந்து இறங்கியவன் வீராவைப் போலத் தோன்றியிருந்தான். ஆனால், அது ஏதோ பிரம்மையாக இருக்குமென்று நினைத்திருந்தாள்.
எச்சிலை விழுங்கினாள் கிஷோரி. அவன்தானோ என்று நினைத்தால், அவனேதான் அவள் முன்னே வந்து நிற்கிறான். இதை அவளால் எப்படி நம்ப முடியும்?
அவளது மனதுக்குள், ‘ஹேண்ட்சம் பாபி வந்துட்டான்’ என்ற எண்ணம் தோன்றியது. கேமராவைக் கழுத்தில் மாட்டியபடியே அவன் அருகில் சென்றாள்.
“ஹாய் வீரா, என்ன இந்தப் பக்கம்?” அவள் கூறிய வணக்கத்துக்குப் பதிலாக, வீரா ஒரு பக்கமாகச் சிரித்தான்.
“ஹ்ம்ம்… ஏன், நீங்க இருக்கிற பக்கம் நான் வரக்கூடாதா?” அம்மா அழைத்தார்கள் என்று எப்படிக் கூறுவது எனத் தெரியாமல் அவன் தடுமாறிக் கொண்டிருந்தான்.
“நோ வீரா, ஐ ஜஸ்ட் ஆஸ்கிங்” என்று கூறியவள், அவனுடன் சிரித்துப் பேசத் தொடங்கினாள்.
வேணியோ வெறுப்பின் உச்சத்தில் இருந்தாள். இன்னும் எவ்வளவோ வேலைகள் இருக்க, இவள் இப்படி நின்று பேசிக்கொண்டிருக்கிறாளே என்று எரிச்சலடைந்தாள்.
ஜீப்பின் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்திருந்த வைத்தி, பின்னால் திரும்பி,
“ராஜிமா, ஜோடி எப்படி இருக்கு?” என்று கேட்டார்.
ராஜேஸ்வரியோ, அந்தக் காட்சியைக் கண்கொள்ளாக் காட்சியாகப் பார்த்துக் கொண்டிருந்தார். மகன் அவ்வளவு எளிதில் எந்தப் பெண்ணிடமும் பழகுவதில்லை. ஆனால், கிஷோரியிடம் சிரித்துச் சிரித்துப் பேசுவதைக் கண்டதும் அவரது உள்ளம் பூரிப்படைந்தது.
‘வீரா, இருக்கிற கண்டதையும் கட்டிக்கிட்டு வாழ்றதுக்கு, இந்த மாதிரி ஒரு பொண்ணைக் கட்டிக்கிட்டு வாழ்ந்தால்தான் என்னவாம்? நான் எவ்வளவு சொல்லியும் கேட்க மாட்டேங்கிறானே?’
மகனின் வாழ்க்கை எப்படியாவது வெளிச்சமாகிவிடாதா என்ற ஏக்கம் அவரது உள்ளத்தில் இருந்தது. அந்த ஆசை நிறைவேறாத வேதனையோடு அவரது வார்த்தைகளும் நொடிந்தன.
மறுபுறம் வேணியோ இடுப்பில் கைவைத்துக் கொண்டு முறைத்துக் கொண்டிருந்தாள்.
“கிஷோரி, ஷூட்டிங் லேட் ஆகுது. சீக்கிரம் வாடீ” என்று எரிச்சலுடன் அழைத்தாள்.
அவர்களது பேச்சுக்கு இடையூறாக வேணியின் குரல் ஒலித்ததால், ஜீப்புக்குள் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ராஜேஸ்வரி அவளை மனதுக்குள் கடிந்துகொண்டார்.
கிஷோரியின் பரபரப்பான சூழ்நிலையை உணர்ந்த வீரா,
“நாளைக்கு கொஞ்சம் வீட்டுக்கு வர முடியுமா?” என்று கேட்டான்.
தனது தாய் அவளுடன் பேச வேண்டும் என்று கூறினால், கிஷோரி ஏதாவது தவறாக நினைத்துக் கொள்வாளோ, மறுத்துவிடுவாளோ என்ற தயக்கம் அவனுக்குள் இருந்தது.
எதற்காக வரச் சொல்கிறான் என்று கூறியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால், அவன் எதையும் கூறவில்லை. அதனால் அவளே கேட்டாள்.
“எதுக்கு?”
“ஒண்ணும் இல்ல, சின்ன மேட்டர்தான்” என்று அவன் கூறியதும்,
‘மேட்டரா?’ என்று நினைத்தவளின் இமைகள் உயர்ந்தன. அவளது விழிகள் பெரிதாக விரிந்தன. அவள் யோசிப்பதை உணர்ந்தவன்,
“இங்க பேச முடியல. அதான் வீட்டுக்கு வரச் சொன்னேன். தட்ஸ் இட்” என்றான்.
“ஓகே, நாளைக்கு டென்னுக்கு அப்புறம் வாறேன்” என்று ஒப்புக்கொண்டாள்.
கிஷோரி நாளை வீட்டுக்கு வருவதாக ராஜேஸ்வரியிடம் கூறிய வீரா, அவரைச் சமாதானப்படுத்திவிட்டு வீட்டுக்கு அழைத்துச் சென்றான்.
கிண்டியில் படப்பிடிப்பு வேலைகளை முடிப்பதற்குள் மாலையாகிவிட்டது. ஸ்டுடியோவுக்கு வந்த பிறகு, நாளை வீராவின் வீட்டுக்குச் செல்ல வேண்டியிருப்பதைப் பொறுமையாக வேணியிடம் கூறினாள் கிஷோரி.
“உன்னைத்தானே கூப்பிட்டிருக்கான்? சோ, நீ மட்டும் போயிட்டு வா. நான் வரல” என்று வேணி கூற, கிஷோரி அதற்கு மறுப்பாக எதுவும் சொல்லவில்லை.
அடுத்த நாள் காலையில், வழக்கத்தைவிட முன்னதாகவே எழுந்தாள் கிஷோரி. ஸ்டுடியோவுக்குத் தனியாக வந்து தேவையான வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு, வேணிக்கு நினைவூட்டல்களையும் அனுப்பினாள்.
பின்னர், ஒன்பது மணி அளவில் தனது ஸ்கூட்டரில் வீராவின் வீட்டை நோக்கிப் புறப்பட்டாள்.
முந்தைய நாள் இருந்த தடுமாற்றங்கள் எதுவும் இன்று அவளிடம் இல்லை. அவனது வீட்டுப் பூந்தோட்டத்தில் இருந்த ரோஜா மலர்களைப் பறிக்க அவளது கைகள் பரபரத்தது உண்மைதான். ஆனால், அவள் அவற்றைப் பறிக்கவில்லை. செடியிலேயே இருந்தால் இன்னும் மூன்று நாட்களாவது உயிருடன் இருக்குமே என்று விட்டுவிட்டாள்.
வீட்டுக்குள் நுழைவதற்கு அவளை யாரும் பெரிதாகச் சோதிக்கவில்லை. உள்ளே நுழைந்தபோதே மேல்தளத்திலிருந்து வீராவின் கோபக் குரல் ஆங்காரமாகக் கேட்டது.
அவன் இருந்த தளத்துக்கு வந்து சேர்ந்தாள் கிஷோரி. அவளைக் கண்டவன், அமருமாறு கையசைவில் தெரிவித்தான்.
தனது மடிக்கணினியை மேசையில் வைத்திருந்தான். யாரோ ஒருவரிடம் கோபமாகப் பேசிக்கொண்டிருப்பது நன்றாகவே தெரிந்தது.
சிறிது நேரத்தில் அவனது குரல் கெஞ்சலாக மாறியது.
“லியா, ப்ளீஸ் சாப்பிடு. சாப்பிடாம இருக்காத. நான் எப்படியாவது வந்துருவேன்”
‘லியாவா, யாரது?’ என்று புரியாமல் விழித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள் கிஷோரி.
அவனது கெஞ்சல் கொஞ்ச நேரம்தான் நீடித்தது. அடுத்த நொடியே சிங்கத்தின் கர்ஜனையைப் போல அவனது குரல் உயர்ந்தது.
“காசைக் கொட்டிக் கொட்டித் தாறேன். ஒழுங்காப் பார்த்துக்க முடியாதா? ஒவ்வொரு வாட்டியும் லியாக்கிட்ட என்னால கெஞ்ச முடியாதுன்னுதான் உங்களைப் பாடிகார்ட்டா வச்சிருக்கேன். முடியலைன்னா சொல்லுங்க, வேற ஆள் பார்க்கிறேன். மைண்ட் இட்”
நாடி நரம்புகள் புடைக்கக் கத்தியவன், அடுத்த நொடியே மீண்டும் லியாவிடம் கெஞ்சத் தொடங்கினான்.
“ஏன் லியாம்மா இப்படி பண்ற?” என்று மனமுடைந்து கேட்டான்.
பின்னர் வைத்தியிடம், லியாவைப் பார்க்க வேண்டும் என்றும் உடனடியாக விமானப் பயணச்சீட்டை ஏற்பாடு செய்யுமாறும் கூறினான்.
வீரா வார்த்தைக்கு வார்த்தை ஒரு பெண்ணின் பெயரைச் சொல்லிக் கெஞ்சுவதைக் கேட்ட கிஷோரியால் அதற்குமேல் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
“வீரா, யார் அந்த லியா?” என்று அவள் கேட்டது மட்டும்தான் தாமதம்.
அவன் தன்னிடம் கொட்டித் தீர்த்த கோபத்தை அப்படியே அவள் முகத்தில் அறைந்தாற்போலக் காட்டினான்.
“இட்ஸ் நன் ஆஃப் யுவர் பிசினஸ்” என்று கூறியவன், ‘உனக்கான எல்லையில் மட்டும் நீ இரு’ என்பதுபோல அவளை நோக்கி ஒற்றை விரலைக் காட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்தான்.
அவன் கூறிய வார்த்தைகளைக் கேட்ட சில நொடிகளிலேயே அவளது முகம் மாறிவிட்டது. சங்கடமாக இருந்தது. அவன் பேசியதை எப்படி ஏற்றுக்கொள்வது என்று தெரியவில்லை. லியா யாரென்று கேட்டது அப்படியென்ன குற்றமா?
அது ஒரு பெண்ணின் பெயர் என்பது மட்டும் நன்றாகவே உறுதியானது. அவள் அவனது காதலியா? இல்லை, மனைவியா? அப்படியில்லையென்றால் வேறு ஏதாவது உறவாக இருக்குமோ?
இப்படிப் பல கேள்விகள் அவளது சிந்தனையைக் குழப்பின.
அவனது அடியாட்கள் அவளையே பார்த்துக் கொண்டிருந்தனர். அந்த இடத்தில் தொடர்ந்து இருக்க அவளுக்குப் பிடிக்கவில்லை. ‘வெளியே போ’ என்று அவன் கூறியிருந்தால்கூட, விறுவிறுவென வெளியே வந்திருப்பாள்.
இப்படி வீட்டுக்கு அழைத்து அவமானப்படுத்திவிட்டானே என்று அவளுக்கு அவமானமாக இருந்தது.
“எனக்கு நிறைய வேலை இருக்கு. நான் கிளம்புறேன். வீராக்கிட்ட சொல்லுங்க” என்று நாசுக்காகக் கூறிவிட்டு வெளியே வந்தாள். தனது ஸ்கூட்டரை இயக்கினாள்.
‘யார் அந்த லியா? அவளுக்காக ஏன் என்னிடம் கோபத்தைக் காட்ட வேண்டும்?’ என்ற வேதனையே அவளது மனதைச் சுற்றிச் சுற்றி வந்தது.
அப்போதுதான் தனக்குள் ஏற்பட்டிருந்த புதிய மாற்றம் அவளுக்குப் புரிந்தது. வீரா வெறுப்பாகப் பேசியதற்காகத் தனது உள்ளம் ஏன் இப்படிக் கசந்துபோக வேண்டும்?
“வீரா எனக்கு யாரு? நான் எதுக்குக் கவலைப்படணும்?” என்று குழந்தையைப் போலத் தன் மனதைத் தேற்றிக்கொண்டாள்.
******
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் வாசக நெஞ்சங்களே🙏❤️






forum இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0
இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!