arrow_back
அன்றிலவன்(ள்) அன்றில் 5
அன்றிலவன்(ள்) chevron_right பகுதி 5 / 15

அன்றில் 5

visibility 26
star படைப்பை ரேட் செய்யுங்கள்
பகிர்

அன்றில் – 05

 

விமானத்தில் விஐபி இருக்கையில் பயணிக்கத் தயாரான வீரா, கிஷோரி எங்கே என்று தேடினான். அப்போதுதான் அவனது அடியாட்களில் ஒருவன், கிஷோரி தனக்கு அவசர வேலை இருப்பதாகக் கூறிவிட்டுச் சென்றதைத் தெரிவித்தான்.

 

நேற்று அவள் இப்படி நடந்துகொண்டாள் என்று நினைத்தவன் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

 

அதிக விலை கொடுத்து வாங்கிய விமானச் சீட்டில் அமர்ந்தவன், லியாவைப் பார்ப்பதற்காகத் துபாய்க்குப் பறந்தான். தாயின் உடல்நிலை ஒத்துழைக்காத காரணத்தால் அவரைத் தன்னுடன் அழைத்துச் செல்லவில்லை.

 

தனக்கு மிகவும் அன்பான லியாவைக் கட்டியணைத்து முத்தமிட்டவன், அவளுக்குத் தனது கையாலேயே உணவை ஊட்டினான். வீராவை ஒரு பக்கம்கூட நகரவிடாமல் தன்னுடனேயே வைத்துக்கொண்டாள் லியா.

 

இரண்டு நாட்கள் லியாவுடனேயே பொழுதைக் கழித்தான் வீரா.

 

மூன்றாம் நாள் இந்தியாவுக்குத் திரும்பியவன், முதலில் பார்க்கச் சென்றது தனது தாய் ராஜேஸ்வரியைத்தான்.

 

உண்மையிலேயே ராஜேஸ்வரியின் உடல்நிலை சரியில்லாமல்தான் இருந்தது. ஏற்கெனவே அவரால் கால்களைச் சரியாக அசைக்க முடியாது. அதோடு அவர் சரியான நேரத்திற்கு உணவும் மாத்திரைகளும் எடுத்துக்கொள்ளாமல் இருந்தார். உணவு உட்கொள்ளும் நேரம் தவறியதால் வயிற்றில் அமிலம் அதிகரித்து அல்சர் ஏற்படும் நிலை உருவாகியிருந்தது.

 

தாயின் நிலையைக் கண்ட வீராவுக்குக் கவலையாக இருந்தது.

 

“ஏம்மா டைமுக்கு சாப்பிடல?” என்று கவலையுடன் கேட்டான்.

 

ராஜேஸ்வரி பெருமூச்சுவிட்டபடி எதுவும் பேசாமல் மறுபுறம் திரும்பிக்கொண்டார். தாயின் முகத்தைத் தன் பக்கம் திருப்புவதற்காக வீரா முயன்றான். ஆனால் அவர் திரும்பினால்தானே!

 

“இன்னும் கொஞ்சம் ஃபோர்ஸா திருப்பி என் கழுத்தை ஒடிச்சிடு” என்று ராஜேஸ்வரி கூறியதும் கண்களை அகல விரித்து அவரைப் பார்த்தான் வீரா.

 

வைத்தியிடம் கண்ணைக் காட்டி என்னவென்று விசாரித்தான். அவரோ வீராவின் காதருகே சென்று குசுகுசுவென்று கூறினார்.

 

“அந்தப் பொண்ணைப் பார்க்க அவங்களைக் கூட்டிட்டுப் போகலன்னு கோவமா இருக்காங்க வீராபாய்” இதைக் கேட்ட வீரா தாயிடம் திரும்பினான்.

 

“அம்மா வாங்க வெளியே போலாம்” என்று கூறியவன், தாயிடம் வேறு எதுவும் பேசாமல் கிஷோரி இருக்கும் இடத்தை அறிந்துகொண்டு அங்கே சென்றான்.

 

கிஷோரி வீட்டில்தான் இருந்தாள்.

 

சூரியன் சுட்டெரித்த பூமியைப் பார்த்த வானமும் மெல்ல இருளத் தொடங்கியது. மாலை நேரம் வந்துவிட்டது. அன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், விடுமுறை நாட்களில் வழக்கமாகச் செய்வதுபோல வீட்டிலேயே இருந்தாள் கிஷோரி.

 

வெள்ளை நிறத்தில் பேபி பிங்க் கலந்த ஃபிராக் அணிந்து கண்ணாடி முன் நின்றவள், தனது ஐபோனில் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தாள்.

 

அப்போது அவளது தொலைபேசிக்கு வாட்ஸ்அப் வழியாக ஓர் அழைப்பு வந்தது. அந்த எண்ணை அவள் நன்றாகவே அறிந்திருந்தாள். அழைப்பை ஏற்க விருப்பமில்லை என்றாலும், அழைப்பை ஏற்றுக் காதில் வைத்தாள்.

 

மறுமுனையில் இருந்தவன் பேசத் தொடங்கினான்.

 

“அக்கா நான் தியான் பேசுறேன்”

 

“தெரியுது சொல்லு” என்று அலட்சியமாகப் பதிலளித்தாள் கிஷோரி.

 

இவ்வளவு நடந்த பிறகும் அவன் ஏன் தனக்குக் கைப்பேசியில் அழைக்க வேண்டும் என்ற வெறுப்பு அவளுக்குள் இருந்தது.

 

“எப்படிக்கா இருக்க?” என்று ஆசையுடன் கேட்டான் தியான்.

 

“இருக்கேன்” என்றாள் அவள். அவனிடம் பதிலுக்கு நலம் விசாரிப்பாள் என்று ஆர்வத்துடன் காத்திருந்தான் தியான். ஆனால் அவளிடமிருந்து அப்படியொரு கேள்வியும் வரவில்லை.

 

கிஷோரி தன்னிடம் முகம் கொடுத்துப் பேசாமல் இருப்பது தியானுக்கும் கவலையாகத்தான் இருந்தது. இருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் பேசினான்.

 

“அப்பா நல்லா இருக்காரா? இன்னும் என்மேல கோவமா இருக்காரா?” அவனது குரலிலேயே ஏக்கம் தெரிந்தது.

 

கிஷோரி பெருமூச்சுவிட்டாள். அவனுக்குப் பதில் கூறவே அவளுக்குப் பிடிக்கவில்லை. அதே நேரத்தில் அவனைத் திட்டவும் மனம் வரவில்லை. வேதனையால் நிறைந்திருந்த அவளது மனம் கண்களில் கண்ணீரைத் தேக்கி வைத்திருந்தது.

 

அவளிடமிருந்து எந்தப் பதிலும் வராததால் தியான் மீண்டும் அழைத்தான்.

 

“அக்கா”

 

“உங்கூட பேசினா அப்பா எதுவும் சொல்ல மாட்டாரு. ஆனா எனக்கு உங்கூட பேசப் பிடிக்கல. இதுக்கு அப்புறம் எனக்குக் கால் பண்ணாத”

என்று விசும்பலுடன் கூறியவள் அழைப்பைத் துண்டித்தாள்.

 

பின்னர் தரையில் அமர்ந்து இரு கைகளுக்குள்ளும் முகத்தைப் புதைத்துக்கொண்டாள்.

 

தாயில்லாமல் பிள்ளைகளை எத்தனை கஷ்டப்பட்டு வளர்த்திருந்தார் சுபாஸ்! கிஷோரியும் தம்பி தம்பி என்று அவன் மீது உயிரையே வைத்திருந்தாள். அவனுக்காக எவ்வளவோ கஷ்டப்பட்டிருந்தாள்.

 

அவற்றையெல்லாம் நினைக்க நினைக்க அவளது மனம் கொதித்தது. அந்த நினைவுகளிலிருந்து தன்னைத் திசைதிருப்புவதற்காக ஃபேஸ்புக்கைத் திறந்தாள்.

 

திறந்தவுடன் வீராவின் புகைப்படங்கள் திரையில் தோன்றின. ஒற்றைப் புருவத்தை உயர்த்தியவள், அவனது புகைப்படங்களை வெறுப்புடன் பார்த்தாள்.

 

கட்டுமஸ்தான உடலமைப்புடன் ஜிம்மில் எடுத்த புகைப்படங்களாக இருந்தன. ஆனால் அவற்றை ரசித்துப் பார்க்க அவளுக்கு மனம் வரவில்லை.

 

ஃபேஸ்புக்கில் அவனது பெயர் ‘வீரா – வீராதித்யன்’ என்று இருந்தது. அவனது முழுப் பெயரையே இப்போதுதான் அறிந்துகொண்டாள்.

 

அவனது புகைப்படங்களைப் பார்க்கப் பிடிக்காமல் போகவே தொலைபேசியை அணைத்துவிட்டு நிமிர்ந்தாள்.

 

வாசலில் ஏதோவொரு பெரிய உருவத்தின் நிழல் தெரிந்தது. எழுந்து சென்று பார்த்தவளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

 

அங்கே நின்றிருந்தது வீரா!

 

அவனைப் பார்த்தவுடனேயே கிஷோரியின் முகம் மாறியது.

 

அன்று அவனது வீட்டில் நடந்த சம்பவம் நினைவுக்கு வந்தது. கோடி கொடுத்தாலும் அவன் கொட்டிய வார்த்தைகளை அள்ளிச் செல்ல முடியுமா? எவ்வளவு தேடி அலைந்தாலும் அவன் திட்டிய வார்த்தைகளைத் திரும்பப் பெற்றுக்கொள்ள முடியுமா?

 

அப்படியிருக்க அவன் எந்த முகத்தை வைத்துக்கொண்டு தனது வீட்டு வாசலுக்கு வந்திருக்கிறான் என்று அவனையே வெறித்துப் பார்த்தாள்.

 

அவனும் அவளையே பார்த்துக்கொண்டிருந்தான். அவர்களுக்கு இடையில் என்ன நடக்கிறது என்று புரியாமல் வைத்தியும் இருவரையும் உற்றுப் பார்த்தார்.

 

கிஷோரி வீராவைப் பார்த்து ஆத்திரத்துடன் கேட்டாள்.

 

“உங்க மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கீங்க?”

 

அவனிடம் எப்படியாவது திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவளுக்குள் எழுந்தது. அவன் பேசிய வார்த்தைகள் அவளது மனதை எவ்வளவு நோகச் செய்திருந்தன!

 

ஆனால் உண்மையிலேயே வீராவுக்கு இப்படிச் சுற்றிவளைத்துப் பேசுவதெல்லாம் அவ்வளவாகப் புரிவதில்லை. புருவங்களைச் சுருக்கியவன் குழப்பத்துடன் கேட்டான்.

 

“புரியல”

 

அவனது பதில் கிஷோரியின் கோபத்தை மேலும் அதிகரித்தது.

 

“திறந்த வீட்டுக்குள்ள ஏதோ வார மாதிரி இங்க யாரும் வர வேண்டாம். உங்களுக்கும் எனக்கும் நடுவுல அந்தப் பென்டிரைவ்தானே இருந்துச்சு? அதையும் திருப்பித் தந்துட்டேனே! இனி என்ன இருக்கு?” மூச்சுவிடாமல் பேசிவிட்டாள். பேசி முடித்ததும் அவளுக்கு மூச்சு வாங்கியது.

 

இதுவரை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த வைத்தியால் அதற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

 

“மா வீராபாயோட அம்மாதான் உங்களைப் பார்க்கணும்னு சொன்னாங்க. அதான்”

 

அவர் சொல்லி முடிப்பதற்குள் கிஷோரி இடைமறித்தாள்.

 

“உங்க வீராபாயவே பார்க்க வர வேண்டாம்னுதான் சொல்றேன். இதுல அவரு அம்மா யாரு? முகம் தெரியாதவங்களை நான் எதுக்குப் பார்க்கணும்?”

 

தன்னைப் பற்றிப் பேசியதற்கே வீராவின் கோபம் உச்சத்தைத் தொட்டிருந்தது. இப்போது அவனது தாயையும் இழுத்துப் பேசியதால் அவனது கண்கள் செந்தணலாக மாறின.

 

அவள் தொடர்ந்து பேசுவதற்கு முன்பே போதும் என்பதுபோலக் கையைக் காட்டியவன்,

 

“ஸாரி” என்று மட்டும் கூறிவிட்டு அங்கிருந்து வேகமாக வெளியேறினான்.

 

மகன் திரும்பி வருவதை ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தார் ராஜேஸ்வரி.

 

“என்னப்பா போலாமா?” என்று கேட்டார்.

 

“இந்த டாப்பிக்கை இதோட விட்டுருங்கம்மா” என்று தாழ்மையாகக் கூறியவன் ஜீப்பைக் கிளப்பினான்.

 

வைத்தியிடம் என்ன நடந்தது என்று ராஜேஸ்வரி கண்களால் கேட்டார். அவரோ பின்னர் சொல்வதாகச் சைகை செய்தார். பின்னர் ராஜேஸ்வரியிடம் நடந்த அனைத்தையும் வைத்தி கூறினார்.

அதைக் கேட்ட ராஜேஸ்வரி உடைந்துபோனார்.

 

‘ஏன் என்னுடைய பையனுக்கு மட்டும் இப்படியெல்லாம் நடக்குது?’ என்று மனதுக்குள் புலம்பினார்.

 

கிட்டத்தட்ட ஒன்றரை மாதங்களாக வீராவும் கிஷோரியும் சந்தித்துக்கொள்ளவில்லை. இருவருக்கும் இடையில் நடந்தவற்றை வேணியிடம் கிஷோரி கூறவுமில்லை.

 

 

******

 

அன்று பெசன்ட் நகரில் புதிதாகக் கட்டப்பட்டிருந்த பிரம்மாண்டமான ஷாப்பிங் மால் திறப்பு விழா நடைபெற்றது.

 

ஹனிபீஸ் குழுவினருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததால், கிஷோரி தனது குழுவிலிருந்து ஐந்து பேரை அழைத்துக்கொண்டு அங்கே சென்றாள். அதோடு அந்த வணிக வளாகத்துக்கான விளம்பரப் பணியையும் பெற்றிருந்ததால் கேமராவையும் உடன் எடுத்துச் சென்றாள்.

 

வணிக வளாகத்தின் உட்புற அலங்காரங்கள் அனைத்தும் இன்றைய காலத்துக்கு ஏற்றவாறு நவீனமாகவும் அழகாகவும் அமைக்கப்பட்டிருந்தன.

 

பெண்களைக் கவரும் பல்வேறு நிறுவனங்களின் அழகுசாதனப் பொருட்களும் அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. வாசனைத் திரவியங்கள் ஐநூறு ரூபாயிலிருந்து ஐயாயிரம் ரூபாய்க்கும் அதிகமான விலையில் கிடைத்தன.

 

ஆண்களுக்கான ஆடைகள் முதல் குழந்தைகளுக்கான ஆடைகள் வரை பலவகையான ஆடைகள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. பாரம்பரிய ஆடைகளிலிருந்து உள்ளாடைகள் வரை அனைத்தும் தரமான முறையில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

 

இந்திய, இத்தாலிய, சீன, துருக்கிய, ஜெர்மன், சவுதி எனப் பல நாடுகளின் உணவகங்கள் அங்கே அமைக்கப்பட்டிருந்தன. அவற்றிலிருந்து வீசிய உணவுகளின் மணம் வருவோரையும் போவோரையும் கவர்ந்திழுத்தது.

 

விளம்பரப் பணிக்காகக் கேமராவைக் கழுத்தில் மாட்டிக்கொண்ட கிஷோரி ஒவ்வொரு பகுதியாகப் படம்பிடித்துக்கொண்டே சென்றாள்.

 

வீராவின் வருகை அவள் எதிர்பாராத ஒன்றாக இருந்ததால், அவளுக்கு ஒரு சிறிய அதிர்ச்சியைக் கொடுத்தது.

 

வீராவின் வருகையைப் படம்பிடிக்குமாறு வணிக வளாகத்தின் பங்குதாரர்கள் கேட்டிருந்தனர். வேண்டா வெறுப்பாக அவனை மட்டும் தனியாகப் படம்பிடித்துக்கொண்டாள்.

 

வீராவுக்கோ அவளிடம் குறும்பு செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. அவளைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தவன் தனது குளிர்கண்ணாடியை எடுத்து அணிந்துகொண்டான்.

 

அவன் அமரப்போகும் இருக்கையில் யாராவது முட்களை வைத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று கிஷோரியின் மனம் ஏங்கியது.

 

அதேபோல், அவள் படம்பிடித்துக்கொண்டிருக்கும்போது யாராவது தன் மீது இடித்து, தான் தடுமாறி விழுந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று வீராவும் குறும்பாக நினைத்தான்.

 

ஷாப்பிங் மாலில் அமைக்கப்பட்டிருந்த உடற்பயிற்சிக் கூடத்தை வீராவின் கையால் திறந்து வைத்தனர்.

 

‘எங்க சேனல்ல ஒரு இன்டர்வியூ கேட்டதுக்கு என்னமா டிமாண்ட் காட்டினான்! இன்னைக்கு ஜிம் திறந்து வைக்கிறானே!’ என்று மனதுக்குள் முணுமுணுத்தாள் கிஷோரி.

 

அதே நேரத்தில் ஒரு ரௌடியை வைத்து உடற்பயிற்சிக் கூடத்தைத் திறக்கிறார்களே என்ற எண்ணமும் அவளுக்குள் எழுந்தது. எல்லாம் நன்றாகத்தான் நடந்துகொண்டிருந்தது.

 

திடீரெனப் படம்பிடிப்பதை நிறுத்தியவள் வீராவை உற்றுப் பார்த்தாள். பின்னர் அவனைக் கண்களால் சைகை செய்தாள்.

 

அவனோ தனக்குப் பின்னால் யாராவது நிற்கிறார்களா என்று திரும்பிப் பார்த்தான். அங்கே சிலர் நின்றுகொண்டிருந்தனர். ஒருவேளை அவர்களுக்குத்தான் கிஷோரி சைகை செய்கிறாள் என்று நினைத்தவன் அதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.

 

ஆனால் கிஷோரி மீண்டும் மீண்டும் முயற்சி செய்தாள். அதுவும் தோல்வியிலேயே முடிந்தது!

 

வீராவுக்கோ இந்த விஷயத்தில் ஒன்றும் புரியவில்லை. அவள் எதற்காகத் தன்னைக் கண்களால் சைகை செய்கிறாள் என்று யோசித்துக்கொண்டிருந்தான்.

 

ஒரு கட்டத்தில் அந்தச் சைகை தனக்குத்தான் என்பதை உணர்ந்தவன், அவசரமாகத் தனது பேன்ட்டின் ஜிப்பை யாருக்கும் தெரியாமல் பார்த்துக்கொண்டான்.

 

ஜிப் சரியாக மூடியிருந்தது.

 

அப்போதுதான் அவனுக்கு நிம்மதியானது. அவனது அடியாட்களோ அன்று சற்று போதையில் ஊர் சுற்றிக்கொண்டிருந்தனர்.

 

கிஷோரியால் அதற்கு மேல் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. கேமராவை வேணியிடம் கொடுத்தாள்.

 

“நான் எங்க போறேனோ அந்த இடத்தை கொஞ்சம் ஷூட் பண்ணு” என்று கூறினாள்.

 

அங்கே கூட்டம் அதிகமாக இருந்தது. தான் திடீரென ஓடிச் சென்றால் அனைவருடைய கவனமும் தன் மீது திரும்பிவிடும் என்பதால் மெதுவாக நகர்ந்தாள். வீராவை நோக்கி ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்தாள்.

 

கிஷோரி ஏன் தன்னை நோக்கி நேராக வர வேண்டும் என்று வீராவுக்குப் புரியவில்லை. அவள் தன்னை நெருங்குவதை அவனால் தவிர்க்க முடியவில்லை.

 

இன்று அவள் யூடியூப் குழுவினருடன் வந்திருப்பதால் ஏதாவது குறும்புப் படப்பிடிப்பு நடத்தத் திட்டமிட்டிருக்கிறாளோ என்று சந்தேகப்பட்டான். அதனால் சற்றுப் பின்தங்கியே நின்றான்.

 

அதாவது, ஒருவரை நோக்கி நேராகச் சென்று, அவருக்குப் பின்னால் நிற்பவரைக் கட்டியணைப்பது போலவோ அல்லது நேராக நிற்பவரையே கட்டியணைப்பது போலவோ பல குறும்புக் காணொளிகளை அவன் யூடியூப்பில் பார்த்திருந்தான்.

 

அப்படி ஏதாவது எதிர்பாராத சம்பவம் நடந்துவிடுமோ என்று அவனது உள்ளம் படபடத்தது.

 

இன்னும் இரண்டு அடிகள் எடுத்துவைத்தால் அவன் அருகில் சென்றுவிடலாம்.

 

கிஷோரி தன்னைக் கட்டிப்பிடிக்க வந்தால் அவளைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று உறுதியாக இருந்தான்.

 

கண்ணிமைக்கும் நேரத்தில் அவள் அவனருகில் வந்து சேர்ந்தாள்.

 

எதற்காகத்தான் இவ்வளவு அருகில் வந்தாளோ!

 

******

 

அடுத்த அத்தியாயம்

அன்றில் 6

அன்றில் 6 வீராவின் அருகில் வந்தவள் சத்தமாக, “வீரா” எனக் கத்தினாள். அவனுடைய தோள்பட்டையை நோக்கி வந்த கத்தியைப் பிடித்துக்கொண்டு, அவனை ஒற்றைக்கையால் வேறு பக்கம் தள்ளினாள். வீராவை தாக்க வந்தவன், கிஷோரி பிடித்திருந்த கத்தியை வேகமாக உருவி இழுத்தான். “அப்பா…” என்று கத்தியிருந்தாள்.…...

அடுத்த அத்தியாயம் படிக்க →

இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0

இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!

உங்கள் கருத்தைப் பகிருங்கள்