அன்றில் 9
அன்றில் 9
மாயதேவ் இறந்ததை உறுதி செய்த வைத்தி, “சார், அவன் செத்துட்டான்” என்று கூறியபடி தொப்பியைக் கழற்றினார். உடனே ஐஜிபியும் தனது தொப்பியைக் கழற்றினார்.
ருத்ராட்க்ஷனின் தம்பியைக் கொன்றதற்காக வைத்தீஸ்வரன் எதுவுமே கூறவில்லை. இப்படிப்பட்ட ஒரு கேடுகெட்ட அயோக்கியன் உயிரோடு இருப்பதைவிட, இல்லாமல் இருப்பதே சிறப்பு என்ற எண்ணமே அவருக்குள் மேலோங்கியிருந்தது.
இவனால் எத்தனை கல்லூரி மாணவர்கள், பள்ளிக்குச் செல்லும் சிறுவர்கள், குடும்பப் பாரத்தைச் சுமக்கும் கணவர்கள் எனப் போதைப்பொருளுக்கு அடிமையானவர்களின் பட்டியலை அடுக்கிக்கொண்டே போகலாம். இனி அடுத்த இலக்கு ருத்ராட்க்ஷன்தான். அவன் எப்போது வசமாக மாட்டுவான் என்று தெரியவில்லை. ஆனால், மாட்டினால் அவனுக்கும் இதே கதிதான்!
வைத்தியோ, “சார், நீங்க இதுக்கு மேல இங்க இருக்க வேண்டாம். பிரச்சினை ஆகிடும். நீங்க ஹாஸ்பிடல் போய்க் கட்டுப் போடுங்க” என்றார்.
அப்போதுதான் ஐஜிபிக்குத் தனது கையில் ஏற்பட்டிருந்த காயம் நினைவுக்கு வந்தது.
ஐஜிபி ஆம்புலன்ஸுக்கு அழைப்பு விடுத்துவிட்டு, தனக்குச் சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனைக்குச் சென்றார்.
ஆம்புலன்ஸ் வந்து மாயதேவின் உடலை எடுத்துச் சென்றது. அதன்பிறகு, வீரக்பர் வழக்கை முடிப்பதற்கான அறிக்கையைத் தயாரித்தார்.
காவல்துறையினர் மாயதேவைக் கைது செய்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லும் வழியில் அவன் தப்பிச் சென்றதாகவும், அவனைப் பிடிக்க முயன்றபோது வைத்தியின் துப்பாக்கியைப் பறித்து வீரக்பரைச் சுட்டதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டார். அதன்பிறகு, வைத்தியைச் சுடுவதற்கு மாயதேவ் ஆயத்தமானபோது, ஐஜிபி தனது காயமடைந்த இடக்கையையும் பொருட்படுத்தாமல் வைத்தியைக் காப்பாற்றுவதற்காக மாயதேவின் காலில் சுட்டதாகவும், அவன் சரிந்து விழுந்த வேளையில் ஐஜிபி சுட்ட மற்றொரு குண்டு அவனது மார்பைத் துளைத்ததாகவும் வழக்கை முடித்தார்.
ருத்ராட்க்ஷனுக்கோ தாள முடியாத கோபம் ஆறாத சினமாக மாறியது. தம்பியை இழந்த துயரத்தில், நேரில் சென்று ஐஜிபியைக் கொலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவனுக்குள் வேரூன்றியிருந்தது.
இரண்டு மாதங்கள் கடந்தன.
வீராதித்யன் துபாயிலிருந்து பெற்றோரைப் பார்ப்பதற்காக வந்திருந்தான். அதுவும் அவர்களுடைய திருமண நாளைக் கொண்டாடுவதற்காக முன்கூட்டியே வந்திருந்தான்.
வீரக்பரின் வீட்டில்,
“இப்பதான் எங்களைப் பார்க்க வாரதுக்கு கண்ணு தெரிஞ்சுதா? உனக்கு இங்க அம்மா அப்பா இருக்கோம்னு நினைப்பு இருக்கா இல்லையான்னு எனக்குத் தெரியல ஆதி” என்று ராஜேஸ்வரி மகனைக் கடிந்துகொண்டார்.
வீராதித்யன் என்ன சொல்லிச் சமாளிப்பது என்று தெரியாமல், தந்தையிடம் தன்னைக் காப்பாற்றுமாறு கண்களால் இறைஞ்சினான்.
“ஏய் ராஜி! அவனே ரொம்ப நாளைக்குப் பிறகு வந்திருக்கான். ஏன் திட்டிக்கிட்டே இருக்க? பாவம், எவ்வளவு இளைச்சுப் போய் வந்திருக்கான் பாரு. உன் கையால சமைச்சுக் கொடு” என்று மனைவி பிள்ளையைத் திட்டுவதைப் பார்க்க முடியாத வீரக்பர், அவளுடைய கோபத்தைத் தணிக்க முயன்றார்.
“நீங்க கொஞ்சம் சும்மா இருக்கீங்களா?” என்று கணவனைப் பார்த்துக் கத்தினார் ராஜேஸ்வரி.
காஃபி போடுவதற்காகச் சமையலறைக்குச் சென்றவர், பாத்திரங்களை உருட்டும் சத்தத்தை எழுப்பினார். அந்தச் சத்தம் இடி முழக்கம்போல வெளியே வரை கேட்டது.
“டேய் ஆதி, இதுக்கு மேல அவளைச் சமாளிக்க எனக்குக் கஷ்டம்டா. நீயே போய்ச் சரணடைஞ்சுரு” என்று வீரக்பர் தனது மகனுக்கு அறிவுரை கூறினார்.
வீராதித்யன் பூனைபோல் சமையலறைக்குள் சென்றான். அங்கே ராஜேஸ்வரி கண்களைக் கசக்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தான். அன்னையிடம் எதுவுமே கூறவில்லை.
கலந்து வைத்திருந்த காஃபியை ஒரு டம்ளரில் ஊற்றிப் பருகியவன், டம்ளரைக் கழுவுவதற்காகத் தாயின் அருகில் வந்தான்.
“அம்மா, தள்ளுங்க. கப்பைக் கழுவி வக்கிறேன்” என்று கூறியபடி, தனது இடுப்பால் தாயை மெதுவாக நகர்த்தினான்.
ஆனால், ராஜேஸ்வரி வீராவின் கையிலிருந்த டம்ளரைப் பிடுங்கி வெளியே தூக்கி எறிந்தார். அது வீரக்பரின் காலடியில் வந்து விழுந்தது.
“எனக்கெல்லாம் காஃபி கிடையாதா?” என்று வெளியிலிருந்து அக்பர் குரல் கொடுத்தார்.
“ஹா… நான் போட்டு வச்ச காஃபி தொலைஞ்சு போச்சு. நீங்க போலீஸ்தானே, கண்டுபிடிச்சுக் குடுங்க” என்று ராஜேஸ்வரி தீவிரமாகக் கூற, வீரக்பர் நுனி நாக்கைக் கடித்துக்கொண்டார்.
ஆதி தாயின் கன்னத்தைப் பற்றிக் கொஞ்சிப் பார்த்தான். ஆனால், அவர் அவனைவிடவும் பிடிவாதமாக இருந்தார்.
“சும்மா போடா!” என்று கடிந்தார்.
“ம்மா…”
“ப்ளீஸ்மா!”
வேறு வழியில்லாத நிலையில், அவனுடைய வழக்கமான சமாதானப்படுத்தும் உத்தியைக் கையில் எடுத்துக்கொண்டான். முகத்தைச் சோர்வாக வைத்துக்கொண்டு, ராஜேஸ்வரியின் கையைப் பிடித்து,
“அம்மா, ரொம்பப் பசிக்குது. சமைச்சுக் கொடுங்கம்மா” என்றால் போதும், ராஜேஸ்வரி கோபத்தை விட்டுவிடுவார்.
ஆனால், இந்த முறை அவனுடைய முயற்சி சரிப்பட்டு வரவில்லை. மகனின் கையைத் தட்டிவிட்டவர்,
“கல்யாணம் பண்ணிட்டு உன் பொண்டாட்டிகிட்ட சமைச்சுக் கேளு. என்னை விட்டுடு” என்றார்.
கல்யாணம் என்றதும் ஆதி அதிர்ந்தான். “ம்மா…!”
“எதுக்கு இப்பக் கத்துற? எங்கிட்ட காட்டுற வாலு, உனக்குன்னு ஒரு பொண்டாட்டி வந்தா காட்ட முடியாது. அதான?” என்றார் ராஜேஸ்வரி.
“அப்படி இல்லம்மா. இப்பதான் எனக்கு இருபத்தாறு வயசு. அதுக்குள்ள என்னம்மா அவசரம்?” என்று கேட்டான்.
ஒருபுறம் அவனுக்குப் பயமாகவும் இருந்தது. ஒருவேளை தனக்குப் பெண் எதுவும் பார்த்து வைத்திருப்பார்களோ என்ற எண்ணம் வேறு அவனைப் பிடித்துக்கொண்டது.
“உனக்கு ஒரு நல்ல பொண்ணைப் பார்த்துக் கல்யாணம் பண்ணி வச்சிட்டா, அவ உன் பக்கத்துலயே இருப்பா. நான் கத்த வேண்டிய அவசியம் இருக்காதுல்ல, அதான்” என்றார் ராஜேஸ்வரி.
அவர் கூறுவதிலும் உண்மை இருக்கத்தான் செய்தது.
அதற்கு மேல் பொறுக்க முடியாத ஆதி, “நீங்க கல்யாணம் மட்டும் ஃபிக்ஸ் பண்ணுங்க. நான் துபாய்க்குப் போயிட்டு வீட்டுக்கு வரவே மாட்டேன்” என்று வீம்பாகக் கூறினான்.
“கால ஒடச்சி வீட்டிலேயே வச்சிருவேன், பார்த்துக்கோ” என்று கோபத்தோடு மிரட்டினார் ராஜிமா.
அடுத்த இரண்டு மூன்று நாட்களுக்கு ஆதி, துபாய் என்ற வார்த்தையைக்கூடத் தனது வாயால் உச்சரிக்கவில்லை.
பெற்றோரின் இருபத்தேழாவது திருமண நாளைக் கொண்டாடுவதற்காக, ஆசிரமத்தின் ஒரு நாள் செலவையும் முன்கூட்டியே அவனே ஏற்றுக்கொண்டான். அதன்பிறகு இருவருக்கும் புதிய உடைகள் வாங்குவதற்காக அவர்களை அழைத்துச் சென்றான்.
பல நாட்களுக்குப் பிறகு, மகனின் ஆசைக்காக வீரக்பர் வண்ணச் சட்டை அணிந்து வெளியே வந்தார். ராஜேஸ்வரிக்குமே அந்த உடை பிடித்திருந்தது.
இருவரும் தங்களுக்குப் பிடித்தமான ஆடைகளைத் தேர்ந்தெடுத்தனர். அதற்கான பணத்தைத் தான் செலுத்துவதாகக் கூறிய ஆதி, இருவரையும் காரில் அமரச் சொன்னான்.
அவன் பணம் செலுத்துவதற்காக வரிசையில் நின்றிருந்தான். அங்கிருந்த சிலர், இவன் ஐஜிபியின் மகன் என்பதை அடையாளம் கண்டுகொண்டனர். வரிசையில் நிற்காமல் நேரடியாகப் பணம் செலுத்துவதற்காக அவனை அழைத்தனர். ஆனால், ஆதி அதை மறுத்துவிட்டான்.
தன்னைப் போலவே வரிசையில் நிற்பவர்களுக்கும் வேலைகள் இருக்கும் என்று கூறியவன், தானும் வரிசையில்தான் பணம் செலுத்துவேன் என்று பிடிவாதமாக நின்றான்.
மகனைக் காணவில்லையே என்று நினைத்த வீரக்பர் அவனைத் தொலைபேசியில் அழைத்தார்.
“இதோ வந்துட்டேன் பா” என்று பதிலளித்த ஆதி அழைப்பைத் துண்டித்துவிட்டு, கடையின் வாசலை நோக்கி நடந்தான்.
வீரக்பரும் காரை நிறுத்திய இடத்திலிருந்து கடையின் வாசலுக்கு காரை நகரத்தினார்.
அடுத்த நொடியே, பெரிய லாரி ஒன்று அவர்கள் இருந்த காரின் மீது மோதியது. மோதிய வேகத்தில் ராஜேஸ்வரி காரிலிருந்து வெளியே தூக்கி வீசப்பட்டார். வீரக்பரோ காருக்குள் சிக்கிக்கொண்டார்.
தன் கண் முன்னே இப்படி ஒரு விபத்து நடக்கும் என்று எதிர்பார்க்காத ஆதி,
“அம்மா! அப்பா!” என்று தெருவில் நின்று பலமாகக் கத்தினான்.
அவனது அலறலைக் கேட்ட அனைவரும் ஓடிவந்தனர். சிலர் ராஜேஸ்வரியைக் காப்பாற்ற முயன்றனர். ஆதி தந்தையைத் தேடினான். காருக்குள் நசுங்கி, உயிருக்கும் மரணத்துக்கும் இடையில் போராடிக்கொண்டிருந்தார் வீரக்பர்.
ஆதி தாய், தந்தை இருவரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றான். ஆனால், வீரக்பரின் உயிர் மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே பிரிந்துவிட்டது.
விஷயமறிந்த வைத்தீஸ்வரன் மருத்துவமனைக்கு ஓடோடி வந்தார். அவருக்கே அந்தத் துயரத்தைத் தாங்க முடியவில்லை என்றால், ராஜேஸ்வரியின் நிலையைச் சொல்லவா வேண்டும்?
ராஜேஸ்வரிக்குக் காலில் ஏற்பட்ட எலும்பு முறிவுகூட வலிக்கவில்லை. ஆனால், தன்னுடனேயே வாழ்ந்து, தனது உடலோடு கலந்த உயிராக இருந்த கணவர் இப்போது இல்லை என்பதை நினைக்கும்போதெல்லாம் கண்ணீர் தாரைதாரையாகப் பெருகியது.
தனது உயிரை இறைவன் பறித்திருக்கக் கூடாதா என்று மனம் ஏங்கியது. தன்னுடைய உயிரையும் எடுத்துக்கொள்ளும்படி இறைவனிடம் மன்றாடினார்.
ஆதியின் மார்பில் சாய்ந்து கதறினார். தாயின் கதறலைக் கேட்டவன் மனதைக் கல்லாக்கிக்கொண்டான். கண்கள் கலங்கிவிடாமல் இருக்க அவற்றை இறுக மூடிக்கொண்டான். தாயின் கண்ணீரைத் துடைக்க அவனது கைகள் செயலற்றுப் போயின. அவளுக்கு ஆறுதல் கூற அவனுடைய வார்த்தைகள் ஊமையாகின.
லாரி வந்து காரை இடித்துத் தள்ளியதை இப்போதும் நினைத்துப் பார்த்தால் ஆதியின் உடல் முழுவதும் சிலிர்த்தது. நடந்ததெல்லாம் ஒரு கெட்ட கனவாக இருக்கக்கூடாதா என்று அவனது மனம் ஏங்கித் தவித்தது.
அந்த மீளாத் துயரிலிருந்து இருவராலும் மீண்டுவர இயலவில்லை. வீரக்பர் கொடுத்த அன்பும் அரவணைப்பும் அவரது இழப்பை இருவருக்கும் பல வழிகளில் வலிக்கச் செய்தன.
நாட்கள் செல்லச் செல்ல, வைத்தீஸ்வரனுக்குக் காக்கி உடையை அணியவே பிடிக்கவில்லை. ஒருநாள் வீராவைத் தனியாகச் சந்தித்துப் பேசினார்.
ஏற்கெனவே தந்தையின் மரணம் கார் விபத்தால் ஏற்பட்டதல்ல என்ற சந்தேகத்தில் இருந்தவனுக்கு, வைத்தீஸ்வரன் கூறிய தகவல்கள் அந்தச் சந்தேகத்தை உறுதிப்படுத்தின.
வைத்தியிடம் ருத்ராட்க்ஷனைப் பற்றி விசாரித்தவன், அவனைத் தேடும் பணியில் இறங்கினான். அந்தத் தேடலின்போது ஒருமுறை ருத்ராட்க்ஷன் வீராவிடம் மாட்டிக்கொண்டான்.
அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த கிஷோரி பதறிப்போனாள்.
“அய்யய்யோ அம்மா! அப்புறம் என்ன ஆச்சு?” என்று கேட்டாள். அவளுடைய விழிகளில் பதற்றம் அப்பட்டமாகத் தெரிந்தது.
“அவன் அந்த நேரமே தப்பிச்சுப் போயிட்டான். நீ ஒண்ணும் செய்யாத ஆதிக்கிட்ட சொன்னா, அவன் எதுவும் கேக்க மாட்டான். அதான் சீக்கிரம் ஒரு கால்கட்டு போட்டுடலாம் பார்க்குறேன். நான் பார்க்குற பொண்ணெல்லாம் பிடிக்கலைன்னு சொல்லிட்டு இருக்கான். நீ யாரையாவது லவ் பண்றியான்னு கேட்டா, அதுவும் இல்லைன்னு சொல்றான். எங்க போய் முடியுமோன்னு இருக்கு” என்று ராஜிமா தனது வருத்தத்தை வெளிப்படுத்தினார்.
அவருடைய கவலையைப் புரிந்துகொண்ட கிஷோரி, ஆறுதல் அளிக்கும் விதமாக ராஜிமாவின் தோளை அழுத்தமாகப் பற்றினாள்.
அதே இடத்தில் இருந்தால் ராஜிமாவின் மன அழுத்தம் குறையாது என்று எண்ணியவள், அவரை வீட்டிலிருந்த ரோஜாத் தோட்டத்துக்கு அழைத்துச் சென்றாள். மனதில் இருந்த பாரத்தையெல்லாம் ஏதோ ஒரு வகையில் இறக்கி வைத்ததுபோல் ராஜேஸ்வரிக்கு இருந்தது. மனம் சற்று லேசானது.
பூக்களின் மகரந்தக் காட்டில்
இருந்த தேனீக்கள்
இதழ் விரித்துச் சிரிக்கையில்
அந்தி மாலையில் தேனீர்
வேண்டுமாம் — அதரங்களில்
ஊறிய அமிர்தங்களை
சிந்தாமல் சிதறாமல்
செவ்வனே குடிக்கச் சொன்னது
ரோஜாப் பூக்கள்
ராஜிமாவின் தோளில் கையைப் போட்ட கிஷோரி,
“மெதுவா ஒவ்வொரு ஸ்டெப்பா எடுத்து வைங்கம்மா” என்றாள்.
கிஷோரி கூறியதைப் போலவே ராஜிமாவும் மெதுவாக நடந்து வந்தார்.
“டேய், நான் மறந்துட்டேன். கைல கட்டைப் பிரிச்சு மாத்தணும்தானே?” என்று ராஜிமா கேட்டார்.
“ஆமாம்மா. கட்டை மாத்தணும். அப்பா இப்போ வந்துடுவாங்க. அப்பாக் கூடப் போய் நான் மாத்திக்கிறேன்” என்று கிஷோரி பணிவாகக் கூறினாள்.
“அதெல்லாம் முடியாது. ஆதிகிட்ட சொல்லி உன்னை அழைச்சிட்டுப் போகச் சொல்றேன். அப்பா பொறுமையா வரட்டும். நீ இரு” என்று கிஷோரியின் மீதுள்ள அக்கறையில் ராஜிமா கூறினார்.
கிஷோரி வீட்டுக்குக் கிளம்பியாக வேண்டும். அதைக் கூறுவதற்கே அவள் தயங்கிக்கொண்டிருந்தாள்.
“இல்லம்மா, கட்டை மாத்திட்டு அப்படியே வீட்டுக்குக் கிளம்புறேன்” என்றாள்.
ராஜிமாவை விட்டுச் செல்வது அவளுக்கும் கவலையாகத்தான் இருந்தது. இருப்பினும், இன்னொருவர் வீட்டில் தங்கியிருப்பது அவளுக்கு அசௌகரியமாக இருந்தது.
ராஜிமாவுக்குமே அவள் கூறியது சரியென்று தோன்றியது.
“உன் கட்டை மாத்திட்டு நீ வீட்டுக்குக் கிளம்பு. இன்னொருத்தர் வீட்டு பொண்ணை நாங்க ரொம்ப நாளைக்கு எங்க வீட்டிலேயே வச்சிருக்கிறது நாகரிகமும் இல்ல” என்றார். கிஷோரி சரியென்று தலையாட்டினாள்.
வீராதித்யனை அழைத்த ராஜிமா, கிஷோரியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு கட்டளையிட்டார். வேறு வழியின்றித் தாயின் சொல்லுக்கு அடிபணிந்தான்.
துணைக்கு வைத்தியை அழைத்தபோது, அவரோ இதுதான் சாக்கென்று நழுவிக்கொண்டார். செய்வதறியாமல் கிஷோரியை மட்டும் அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்குச் சென்றான்.
மருத்துவரிடம் ஆலோசனை பெற்ற பிறகு, கிஷோரியின் கட்டைப் பிரித்து மாற்றிவிட்டு அவளை அழைத்துக்கொண்டு காருக்குத் திரும்பினான்.
ஆனால், சூழ்நிலை அவனுக்குச் சாதகமாக இல்லை. ஏதோ ஒன்று தவறாக இருப்பதை அவனால் உணர முடிந்தது.
காரை வேகமாகக் கிளப்பினான்.
“வீரா, எதுக்கு இவ்வளவு ஃபாஸ்ட்?” என்று கிஷோரி கேட்டாள்.
சாலையில் மற்ற வாகனங்களுக்கு இடையில் புகுந்து சென்ற காரின் வேகத்தைக் கண்டு அவளுடைய இதயத் துடிப்பு லேசாக அதிகரிக்கத் தொடங்கியது.
“சொல்றேன். கை எப்படி இருக்கு?” என்று கேட்டான்.
“இப்போ எனக்குப் பரவாயில்ல. ஆனா, நீங்க போற வேகத்துக்கு என்னால எதையும் பிடிக்க முடியல” என்றாள்.
ஒரே கையை வைத்துக்கொண்டு அவளால் எவ்வளவுதான் சமாளிக்க முடியும்?
‘இவன் எதுக்கு இந்த மாதிரியெல்லாம் பண்றான்? ஒருவேளை வேணும்னே பண்றானோ?’ என்று அவளுக்குத் தோன்றியது. பெருமூச்சு விட்டபடி கிஷோரி,
“யாராவது நம்மளை ஃபாலோ பண்றாங்களா?” என்று கேட்டுக்கொண்டே பின்னால் திரும்ப முயன்றாள்.
“பின்னாடித் திரும்பாத!” என்று வீரா கத்தினான்.
சாலையில் சென்ற ஒவ்வொரு வாகனத்தையும் முந்திக்கொண்டு சென்றான். வேகம் அதிகரிக்க அதிகரிக்க, அவளால் இருக்கையில் நிலையாக அமரவே முடியவில்லை.
கிஷோரியால் காயமடைந்த கையைச் சும்மா வைத்துக்கொண்டிருக்க முடியவில்லை. அதனால், காரின் ஜன்னலைத் திறந்தாள். அதைக் கண்ட வீராவுக்கு மேலும் எரிச்சல் ஏற்பட்டது.
“உன்னை யாரு இப்பக் கண்ணாடியைத் திறக்கச் சொன்னா?” என்று கடுப்புடன் கேட்டான்.
அவன் காரைச் செலுத்திய வேகத்துக்கு எதிராகக் காற்று பலமாக வீசியது. ஜன்னல் திறந்திருந்ததால் கிஷோரியால் கண்களைக்கூட முழுமையாகத் திறக்க முடியவில்லை.
வீராவின் காரை நான்கு கார்கள் துரத்திக்கொண்டிருப்பதைப் பக்கவாட்டுக் கண்ணாடி வழியாகப் பார்த்த கிஷோரி அச்சமடைந்தாள்.
ஒரு கைதான் இப்போதுதான் குணமாகிக்கொண்டிருக்கிறது. அதற்குள் இன்னொரு கைக்கும் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற பயம் அவளைப் பற்றிக்கொண்டது.
பயந்துபோனவள், காரின் கதவோரக் கண்ணாடியில் சாய்ந்திருந்ததைத் தவிர்த்து, இருக்கையின் உட்புறமாக நகர்ந்தாள்.
வீரா எவ்வளவு வேகமாகச் சென்றும், ஒரு கார் அவனுடைய வேகத்துக்கு ஈடுகொடுத்து இணையாகவே வந்துகொண்டிருந்தது. அதுவும் கிஷோரி அமர்ந்திருந்த பக்கத்தில்!
“ஏய், குனிஞ்சுரு!” என்று வீரா கத்தினான்.
ஆனால், கார் சென்ற வேகத்தாலும் அந்தப் பரபரப்பான சூழ்நிலையாலும் அவன் கூறியது கிஷோரியின் காதில் சரியாக விழவில்லை.
“என்ன?” என்று அவள் கேட்க, அவன் ஒற்றைக் கையால் குனியுமாறு சைகை காட்டினான்.
ஏற்கெனவே பயத்தில் இருந்தவளுக்கு எதுவுமே புரியவில்லை.
ருத்ராட்க்ஷனுடைய ஆட்கள்தான் வீராவைத் துரத்துகிறார்கள் என்பதை அவளாகவே புரிந்துகொண்டாள்.
“வீரா, இவங்க ருத்ராட்க்ஷனோட ஆட்களா?” என்று சந்தேகத்தைத் தெளிவுபடுத்துவதற்காகக் கேட்டாள்.
இவளுக்கு எப்படித் தெரிந்தது என்று ஒரு நொடி அவளைப் பார்த்தவன்,
“ஆமா” என்றான்.
வீராவைத் துரத்திவந்த கார் அவனுடைய காரை இடித்தது.
அந்த அதிர்ச்சியில் கிஷோரி சடுதியாக வீராதித்யன் மீது மோதினாள். அவளுடைய மென்னிதழ்கள் அவனது கன்னத்தில் உரசியதும், அதைத் தவிர்க்க அவன் திரும்பினான்.
அடுத்த நொடியே இருவரின் இதழ்களும் ஒன்றோடொன்று புதைந்துகொண்டன.
இருவருமே இதை எதிர்பார்க்கவில்லை.
வீரா காரின் மறுபுறத்தைப் பார்த்தபோது, கிஷோரியை நோக்கி ஓர் அம்பு பாய்ந்து வந்தது. இருவரின் இதழ்களும் பிரிந்த அந்த நொடியில், வீரா அந்த அம்பைக் கையால் பிடித்தான்.
உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் தோழர்களே 🙏❤️






forum இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0
இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!