அன்றில் 14
அன்றில் 14
இரண்டு வாரங்களுக்குப் பிறகு, குளிர்ந்த காற்றின் வேகம் குறைய, மேகம் மூடிய வானம் சூரியனின் முகத்தைக் காட்டத் துடிக்க, ராஜிமாவின் உதட்டில் ஒட்டியிருந்த கள்ளச் சிரிப்போடு தொடங்கியது இந்த இனிமையான காலைப் பொழுது.
கண்களைக் கவரும் வகையில் நன்கு பூத்துக் குலுங்கிய ரோஜாக்களைப் பறித்துச் சுவாமி படங்களுக்கு வைத்தார் ராஜிமா. பூரிப்புடன் ஒரு தாம்பாளத்தில் செக்கச் சிவந்த ரோஜாப் பூக்களைப் பறித்து அழகாக அடுக்கி வைத்திருந்தார்.
சுவாமி படங்களுக்கு விளக்கேற்றி, நைவேத்தியம் வைத்து, தூப தீபங்கள் காட்டி, வீடு முழுவதும் சாம்பிராணிப் புகை பரவச் செய்திருந்தார். காலையில் எழுந்ததிலிருந்து, இயலாத காலை வைத்துக்கொண்டு எக்கி எக்கி நடந்து, ஒவ்வொரு வேலையாகச் செய்துகொண்டே இருந்தார்.
தாய் செய்யும் வேலைகளெல்லாம் மகனுக்கு வித்தியாசமாகத் தென்பட்டன. எதற்காக இவ்வளவு வேலைகளைச் செய்ய வேண்டும்? எல்லா வேலைகளுக்கும் ஆட்கள் இருந்தும் தாய் கஷ்டப்படுவதை மகன் விரும்பவே இல்லை. அது அவனுக்குச் சரியாகவும் படவில்லை.
“அம்மா, யாரும்மா உங்களைக் கஷ்டப்பட்டு வேலை பார்க்கச் சொல்றா? உட்காருங்கம்மா. வேலை பார்க்கத்தான் ஆளுங்க இருக்காங்களே”
இயலாத காலை வைத்துக்கொண்டு அவர் எக்கி எக்கி நடப்பதைப் பார்க்க அவனுக்குச் சங்கடமாக இருந்தது.
“எல்லாம் காரியமாதான். நீ போயிட்டுக் குளிச்சிட்டு வேஷ்டி கட்டிட்டு வா. ஓடு”
என்று தனது புத்திரனை வார்த்தைகளாலேயே விரட்டினார். தாயை மேலிருந்து கீழாகப் பார்வையால் அளந்தான்.
“எந்தக் கோயிலுக்கும்மா போறோம்?”
வழக்கமாக ராஜிமா கோயிலுக்குச் செல்வதாக இருந்தால்தான் இப்படி எல்லாம் புறப்படுவார்.
“அதெல்லாம் போற வழியில சொல்றேன். நை நைன்னு கேள்வி கேட்டுட்டு இருக்காம, ஃபர்ஸ்ட் நான் சொன்னதைச் செய். சாமி கும்பிட்டு வருவியோ, இல்ல தொழுதுட்டு வருவியோ, ரெண்டுல ஏதாவது ஒண்ணைச் செஞ்சிட்டு வா”
அவன் பிறந்ததிலிருந்து அவனுக்கு மதத்தைக் காரணம் காட்டி ஒரு நாளும் பாகுபாடோ, பிரிவினையோ காட்டியதில்லை.
அவனுக்குப் பிடித்தமான மதத்தைப் பின்பற்றலாம் என்று பெற்றோர் கூறியிருந்ததால், அவன் இரண்டையுமே பின்பற்றி வந்தான். கோயிலுக்குச் சென்றால் அஷ்டாங்க நமஸ்காரம் செய்வான். மசூதிக்குச் சென்றால் தொழுகை மேற்கொள்வான்.
அவனும் சென்று குளித்து, வேஷ்டி சட்டை அணிந்துகொண்டான். அதன்மேல் நாசியைத் துளைக்கும் ஜவ்வாதுடன் ஜாஸ்மின் அத்தரையும் சேர்த்துத் தடவிக்கொண்டான். ராஜிமா கோயிலுக்குச் செல்ல இருப்பதால், அவன் முதலில் தொழுகையை மேற்கொண்டான்.
தொழுகைக்குப் பின் முழுக்கைச் சட்டையின் பட்டன்களைக் கழற்றிவிட்டு, கைகளை மடித்தவாறு படிக்கட்டுகளில் இறங்கி வந்தான். அவனது நடையில் தந்தையின் சாயலைக் கண்ட ராஜிமா சற்றுக் கலங்கித்தான் போனார். அந்தக் கலக்கத்தைத் தனக்குள்ளேயே புதைத்துக்கொண்டவர், மகன் அருகில் வந்தவுடன் பத்து விரல்களாலும் அவனது முகத்தைத் தடவி, நெட்டி முறித்தார்.
வீராவின் வெறும் நெற்றியைப் பார்த்தவர், சுவாமி அறையிலிருந்து குங்குமத்தை எடுத்து ஒரு கோடாகப் பூசினார்.
“அம்மா, கோயிலுக்குக் கிளம்பலாமா?” என்று அவன் தாயிடம் கேட்க,
“கொஞ்சம் பொறு. நல்ல நேரத்துக்கு இன்னும் பத்து நிமிஷம் இருக்கு”
வெளியே கிளம்புவதற்கு ராஜிமா நேரம் காலமெல்லாம் பார்த்து வைத்திருந்தார்.
“என்னம்மா நீங்க! கஷ்டத்தைச் சொல்லிச் சாமி கும்பிடத்தானே கோயிலுக்குப் போறோம்? அதுக்கும் நல்ல நேரம் பார்க்கணுமா?”
வீரா கூறியதைவிட, இவ்வளவு நேரம் வேஷ்டி சட்டை அணிந்துகொண்டு காத்திருப்பதுதான் அவனுக்குப் பிடிக்கவில்லை. ஓரிரு முறை அவன் இடையில் கட்டிய வேஷ்டி நழுவிவிடும் என்பதால், அதைக் கவனித்துக்கொண்டே நிற்க வேண்டியிருந்தது.
ராஜிமா கூறிய பத்து நிமிடங்கள் கழிந்ததும், வீரா காரை ஓட்டுவதற்காக ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்தான்.
“நீ இன்னைக்கு கார் ஓட்டாத. வைத்தி ஓட்டட்டும்” என்றார் ராஜிமா.
செல்லும் வழியில் கடைத்தெருவின் பக்கம் காரை நிறுத்தி ராஜிமா கீழே இறங்க, வீராவும் இறங்கினான்.
“அம்மா, நீங்க வண்டியில இருங்க. என்னென்ன வேணும்னு சொல்லுங்க. நான் வாங்கிட்டு வாறேன்” என்றான்.
அவனையே பார்த்துச் சிந்தித்தவர், “நீ அதுக்கெல்லாம் சரிப்பட்டு வரமாட்ட, ஆதி” என்று கூறி, அவனது கையைப் பிடித்துக்கொண்டு மெதுவாக நடந்தார். வைத்தியும் ஒருபுறம் பூ, பழங்கள், வெற்றிலை பாக்கு, இனிப்பு வகைகள் என்று வாங்கச் சென்றார்.
ராஜிமா ஜவுளிக்கடையின் வாசலில் வலது காலை எடுத்து வைத்ததுதான் தாமதம்,
“சொல்லியிருந்தா வீட்டுக்கே ஜவுளிக்கடையைக் கொண்டு வந்து இறக்கியிருப்பேன், ம்மா” என்று வீரா சலித்துக்கொண்டான்.
மகனின் நச்சரிப்பைத் தாங்க முடியாமல், “கொஞ்சம் வாயை வச்சுக்கிட்டு வாயேன்” என்று அலுத்துக்கொண்டார் ராஜிமா.
தங்கம் முதல் கொண்டு, தேவையான அனைத்துப் பொருட்களையும் ஒன்று விடாமல் வாங்கிவிட்டார். இவை எல்லாவற்றையும் இவ்வளவு நேரம் பார்த்துக்கொண்டிருந்த வீராவுக்கு, அரசல் புரசலாக ஏதோ ஒன்று மண்டைக்குள் சிக்கியது.
“அம்மா, எனக்குப் பொண்ணு பார்க்கத்தானே போறீங்க?”
“ம்… புரிஞ்சா சரிதான். பொண்ணைப் பத்தி எதுவுமே சொல்ல மாட்டேன். நீ வந்தே பார்த்துக்கோ, சரியா? இந்தக் கல்யாணமும் நீ வேணாம்னு சொன்னா, உன்னோட கல்யாணத்தைப் பார்க்கிற பாக்கியம் எனக்குக் கெடைக்காம, நான் பொணமாக வேண்டிய பாக்கியத்தை நீ பார்க்க வேண்டி வரும்”
ராஜிமா இப்படி ஒரே வசனத்தில் அவனது வாயை அடைப்பார் என்று அவன் எதிர்பார்க்கவே இல்லை.
தந்தையும் இப்போது இல்லை. தாயும் இல்லாமல் போய்விட்டால் என்ற எண்ணத்தைக்கூட அவனால் நெருங்க முடியவில்லை. அவனது கண்கள் கலங்கிவிட்டன.
அந்தப் பெண் கிஷோரிதான் என்று அவனுக்கே நன்றாகத் தெரியும். ஆனாலும், அவளைத் தவிர வேறு யாராக இருந்தாலும் நல்லதென்று அவனுக்குள் ஒரு நப்பாசை இருந்தது.
வண்டி வந்து நின்ற இடத்தை, காரின் ஜன்னல் வழியாகத் தலையை நீட்டி எட்டிப் பார்த்தான். அது கிஷோரியின் வீடு இல்லை. அவனது மனம் முழுவதும் நிம்மதி பரவியது.
அவளது தொல்லைகளை நினைத்தவன், இப்போது பார்க்கும் பெண் எப்படி இருந்தாலும் பரவாயில்லை, தானும் மணந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தான்.
அது அவளது வீடு இல்லை என்பதால், பயமில்லாமல் ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து வீட்டைச் சுற்றிப் பார்த்தான். எல்லா வசதிகளும் இருந்தாலும், அது ஒரு சாதாரணமான சிறிய வீடுதான். வீராவுக்கு அந்த வீடு பிடித்திருந்தது.
வீட்டில் மாட்டப்பட்டிருந்த புகைப்படங்களை உற்றுப் பார்த்தான். அவற்றில் போஸ் கொடுத்துக்கொண்டிருந்தது வேணி.
ஒருவேளை வேணியைத்தான் திருமணம் செய்துகொள்ள வேண்டுமோ என்று எண்ணியபோது, வாயைத் திறந்தவனுக்கு வார்த்தைகள் வராமல் தொண்டை அடைத்தது. இதயம் இறுகியது.
தோழியின் தொல்லையையே தாங்க முடியாதவன், வேணியின் தொல்லையை எப்படி எதிர்கொள்வான் என்று எண்ணியபோது, இரத்தக் கண்ணீர் வடிக்கத் தோன்றியது.
வந்தவர்களை வேணியின் தாய் தந்தையர் நன்றாகவே கவனித்துக்கொண்டிருந்தனர். சற்று தாமதமாகவே காக்கிச் சீருடையைக் கழற்றிவிட்டுக் கலர் உடை அணிந்து சுபாஸ் வருகை தர, வீராவுக்கு அது அதிர்ச்சியைக் கொடுத்தது.
வீரா கோபத்தில் வெளியே செல்ல ஆயத்தமாக, அவனைத் தனது கையோடு பிடித்து வைத்திருந்தார் அவனுடைய தாய்.
அவனிடம் ஒரு வார்த்தைகூடக் கேட்காமல், கொண்டு வந்திருந்த தட்டுகளைச் சுபாஸிடம் கொடுத்தார் ராஜிமா. சுபாஸுடன் வேணியின் தாய் தந்தையரும் சேர்ந்து அவற்றைப் பெற்றுக்கொண்டனர்.
அவர்கள் கொடுத்த தட்டை உள்ளே இருந்த கிஷோரியிடம் கொடுக்க, வெட்கமே இல்லாமல் பூரித்துப்போயிருந்தாள் பெண்ணவள். அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு எல்லாம் பத்து சதவிகிதம்தான் அவளுக்குள் தேங்கியிருக்கும்.
தான் அணிந்திருந்த உடைக்கு விடுதலை கொடுத்துவிட்டு, ராஜிமா பார்த்துப் பார்த்து வாங்கிய ஆடை அணிகலன்களை எல்லாம் அணியத் தொடங்கினாள்.
மரூன் நிறப் புடவையில் அணிந்து வந்தவள், ஒரு பொட்டைக்கூட மிச்சம் வைக்காமல் எல்லா நகைகளையும் அணிந்திருந்தாள். மாதுளை விதைகளின் சாற்றைப் பிழிந்து அவளது ரோஜா இதழ்களுக்குச் சிவப்பேற்றியதுபோல், மலர்ந்த புன்னகையுடன் கையில் காஃபித் தட்டை ஏந்தி வந்தாள்.
“கிஷோரி, கொஞ்சமாவது வெட்கப்பட்டுக்கிட்டு, தலை குனிஞ்சு நடந்து வாடீ” என்று வேணி மிச்சம் மீதியிருந்த நம்பிக்கையுடன் அவளிடம் வேண்டுகோள் வைத்தாள்.
“சத்தியமா வரல” என்று அசராமல் கூறினாள் கிஷோரி. வேணிக்கோ சந்தேகமாக இருந்தது.
“இன்னைக்குத்தான் வெட்கப்படல. ஃபர்ஸ்ட் நைட்டுக்காவது வெட்கப்படுவியடீ?”
உண்மையிலேயே தீவிரமாகக் கேட்டாள்.
“அதுவும் எனக்குத் தெரியலடீ. ஃபர்ஸ்ட் நைட்டு முடிஞ்சு அடுத்த நாள் சொல்றேன்” என்று அவள் கூற, வேணி தன் தலையில் அடித்துக்கொண்டாள்.
கிஷோரி சம்பிரதாயத்துக்காகக் காஃபியைக் கொடுத்துவிட்டு, சபையின் முன் அமர்ந்திருந்த பெரியவர்களிடம் ஆசீர்வாதம் பெற்றாள்.
காஃபி கொடுக்கும்போதெல்லாம் அவளைப் பார்க்காதவன், வேண்டா வெறுப்பாகக் காஃபியைப் பருகிவிட்டுக் கோப்பையைக் கீழே வைத்து எழும்போதுதான், அவள் அணிந்திருந்த புடவையின் நிறத்தையே கவனித்தான்.
இதுவரை அவளை மேற்கத்திய உடைகளிலேயே பார்த்தவன், இன்று அவளிடம் ஏதோ ஒரு புதுமையை உணர்ந்தான். மேலும் அவளை உற்றுப் பார்க்கத்தான் தோன்றியது.
கிஷோரியின் விழிகளுக்குள் ஒளிந்திருந்த துருதுருப்பு அவனைப் பார்த்து, புருவங்களை ஆட்டி, ‘என்னா?’ என்று கேட்க, அவன் அதில் முழுவதுமாகச் சொக்கித்தான் போனான்.
இந்த அழகிய செவ்விதழ்கள்தானா தனக்கு முத்தம் கொடுத்தன என்று எண்ணியபோது, அவனது மனம் தேனாய்ச் சர்க்கரையாய் இனித்தது.
அவனுக்குள் இருந்த மனசாட்சி, ‘கண்ணா, லட்டு திங்க ஆசையா?’ என்று கேட்டு அவனைக் கேலி செய்தது.
நினைவுலகத்திலிருந்து மீண்டதும், அதே ஆத்திரமும் அதே கோபமும் அவனை மீண்டும் ஆட்கொண்டன. அவனது மனம் எதையும் ஏற்றுக்கொள்ள முடியாமல் தடுமாறியது.
வீரா வீட்டிற்கு வந்துவிட்டான். ராஜிமாவின் நெஞ்சில் இத்தனை நாட்களாகச் சுமந்திருந்த பாரமெல்லாம் குறைந்துபோனது.
அன்னையை முறைத்துப் பார்த்தான். எதுவுமே கூறவில்லை. என்ன செய்வதென்றும் அவனுக்குத் தெரியவில்லை.
கிஷோரியின் பிடிவாத குணத்தை அறிந்தவன், அவளது வாழ்க்கையை வீணடிக்க விரும்பவில்லை.
அவளுக்கு அலைபேசி வழியாகக் குறுஞ்செய்தி அனுப்பினான்.
‘உன்னோட கேரக்டருக்கும் என்னோட கேரக்டருக்கும் ஒத்துவராது. இதோட இப்படியே விட்டுருவோம். அதுதான் உனக்கும் நல்லது, எனக்கும் நல்லது. சொன்னா கேளு. பிடிவாதம் பிடிக்காத’
நிச்சயதார்த்தம் முடிந்தும் ஏன் அவன் மனம் மாறவில்லை என்று குறுஞ்செய்தியைப் படித்தவளுக்குக் கவலையாக இருந்தது.
‘எல்லாத்தையும் நான் மேனேஜ் பண்ணிக்கிறேன். எல்லாம் ஒத்துப்போகும். நீ எதுவும் யோசிக்க வேணாம்’ என்று அவள் பதிலளித்தாள்.
இரண்டு நாட்கள் கழிந்தும் அவனது மனம் இன்னும் ஒரு நிலைக்கு வரவில்லை. எண்ணிலடங்காத சிந்தனைகள் அவனுக்குள் ஓடின. லியாவைப் பற்றிய சிந்தனையும் அவற்றில் சேர்ந்துகொண்டது. அவளிடம் இதைப் பற்றிக் கூறியாகவே வேண்டும். வேறு வழியில்லை.
ராஜிமாவின் அறையில், அவர் தனது காலுக்குத் தைலம் தேய்த்துக்கொண்டிருந்தார்.
“அம்மா, நான் துபாய்க்குப் போயிட்டு வாறேன்” என்றான்.
“அவளையும் கூட்டிட்டுப் போ” ராஜிமா கூறியது வீரா எதிர்பார்த்த பதில்தான்.
“அம்மா, எங்களுக்கு இன்னும் கல்யாணம் ஆகலம்மா” என்று சலிப்புடன் கூறினான்.
“இருக்கட்டும். எங்கேஜ்மென்ட்டுக்குப் பிறகு ஹனிமூன் மாதிரி போயிட்டு வாங்க”
என்று அன்னை ராஜிமா அசால்ட்டாகக் கூற, அவரைப் பிரமிப்பாகப் பார்த்தான்.
‘கல்யாணத்துக்கு முன்னாடியே ஹனிமூனா? இதை எங்கே போய்ச் சொல்ல?’ என்று நினைத்தான் வீரா.
“மூணு நாளைக்கு மட்டும் போயிட்டு வந்துடுறேன், மா” என்று கெஞ்சிக் கேட்டான்.
“அந்த மூணு நாளைக்கும் அவளைக் கூட்டிட்டுப் போடா” என்றார் தாய்.
வேறு வழியில்லை.
“ம்…” என்றான்.
சுபாஸிடம் பேசி ராஜிமா சம்மதம் பெற்றிருந்தார். மூன்று நாட்கள்தான் என்பதால் அவரும் ஒத்துக்கொண்டார். சுபாஸுக்கு இருவரின் மீதும் அதீத நம்பிக்கை இருந்தது.
விமான நிலையத்தில், விமானத்துக்காகக் காத்திருந்தனர் இருவரும். இவர்களை வழியனுப்ப சுபாஸ், ராஜிமா, வேணி, வைத்தி ஆகியோரும் வந்திருந்தனர்.
வேணிக்கும் வைத்திக்கும் மட்டுமே இருவரும் எவ்வளவு ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பது தெரியும்.
*****






forum இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0
இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!