அன்றில் 15
அன்றில் 15
விமானத்திற்குள் அவன் அருகில் அமர்ந்திருந்தவள், விமானம் மேலே எழும்பும்போது வீராவின் கையை இறுக்கமாகப் பற்றிக்கொண்டாள்.
கோழிக்குஞ்சைப் போல அவனோடு ஒன்றிக்கொண்டாள். அவனது கணீரென்ற குரலில், “என்ன பயமா?” என்று அவன் கேட்டிட, உதட்டைப் பிதுக்கித் தலையை டிங் டிங் என்று ஆட்டினாள்.
“நீ எல்லாம் துபாய்க்கு வரலன்னு யாரு திட்டப்போறா?” இவள் இப்படியெல்லாம் பயந்துகொண்டு வரச் சொல்லி யாரும் வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கவில்லையே!
பவ்யமாக முகத்தை வைத்துக்கொண்டு, “ராஜிமா” என்றாளே!
தாய் என்றதும் அவன் வேறு எதுவுமே கூறவில்லை. நான்கு மணி நேரம் கழித்து துபாயில் வந்து இறங்கினர்.
தங்களுடைய பொருட்களை எல்லாம் எடுத்துக்கொண்டு வெளியே வந்தனர். அவனுக்காகக் காத்திருந்த காரில் இருவரும் ஏறினர். இந்தியாவில் இருக்கும் வீராவின் வீடே பிரம்மாண்டமாக இருக்க, துபாயில் இருக்கும் அவனுடைய சித்தப்பாவின் வீட்டைப் பார்ப்பதற்கு மிகவும் ஆவலாக இருந்தாள் கிஷோரி.
கார் வந்து நின்ற இடமோ, வானளவு உயர்ந்து நிற்கும் உலகின் உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா.
அண்ணாந்து பார்த்தபோது அடிக்கும் வெயிலில் அவளது கண்கள் கூசியது. இருவரும் கூலரை அணிந்துகொண்டு கீழே இறங்கினர்.
“உங்க சித்தப்பா வீட்டுக்குப் போகலையா?” என்று அவள் கேட்க,
அவளை மேலிருந்து கீழாக அளந்தவன், “எதுக்கு? அங்க போயும் என் மானத்தை வாங்குறதுக்கா?” என்று கூறிவிட்டு அவள் அருகில் நிற்கக்கூட விரும்பாமல், அறையைப் பதிவு செய்வதற்காக உள்ளே நடந்தான்.
அறைக்கான சாவியை அவளிடமே கொடுத்தான். லிஃப்டில் ஏறி அறைக்கு வந்தவள் கதவைத் திறந்தாள். அங்கே இரண்டு கட்டில்கள் இருப்பதைப் பார்த்ததும், “என்ன வீரா, உன் மேல உனக்கே நம்பிக்கை இல்லையா?” என்று கேட்டாள்.
“எதுக்கு?” அவள் மொட்டையாகக் கேட்டிருக்க, அவனுக்குப் புரியவில்லை போலும்.
“இல்ல, சிங்கிள் பெட் ரெண்டு இருக்கே, அதான் கேட்டேன்” என்று அவனைச் சீண்டிப் பார்க்கும் வகையில் கேலியாகக் கேட்டாள்.
“என் மேல எல்லாம் எனக்கு நம்பிக்கை இருக்கு. உன் மேலதான் நம்பிக்கை இல்ல. அதான் சிங்கிள் பெட் ரெண்டு” என்றான். தெனாவட்டாகக் கூறிவிட்டு, அணிந்திருந்த கோட்டை கழற்றித் தோளில் மாட்டிக்கொண்டான்.
அவன் தன் மீது நம்பிக்கை இல்லை என்றதும், “ஏன்? ஏன்?” என்று படபடப்புடன் கேட்டாள்.
“உன்னை எப்படி நம்ப முடியும்? என்னை நீ ரேப் பண்ணிட்டா?”
வீரா இப்படியெல்லாம் பேசுவான் என்று அவள் நினைக்கவே இல்லை.
“ஏது, நான் உன்னையவா?” என்று குட்டி விழிகளைப் பெரிதாக்கி அவனை உற்றுப் பார்த்தாள். ‘இதெல்லாம் நடக்கிற காரியமா?’ என்று கேட்கத்தான் தோன்றியது. இருந்தாலும் அவள் எதுவும் கேட்கவில்லை. அவன் அதற்கும் ஏதாவது கூறினால், இவளால் என்ன விளக்கம் கூறிவிட முடியும்?
“ஆமா! கிஸ் பண்ற உனக்கு, ரேப் பண்றது அவ்வளவு பெரிய விஷயமா? என் கற்பை நீ சூறையாடிட்டா என்ன பண்றது?” என்று கூறிவிட்டு, தனது சூட்கேஸில் இருந்த டவலை எடுத்துக்கொண்டு குளியலறைக்குள் புகுந்துவிட்டான்.
இவன் இப்படியெல்லாம் பேசுவது அவளுக்குச் சரியாகப் படவில்லை. சற்று ஜாக்கிரதையாக இருக்கத்தான் தோன்றியது.
டவலைச் சுற்றிக்கொண்டு வெளியே வந்தவன், நாசுக்காக டிரௌசரை மாற்றிவிட்டு, உடல் கொடுத்த அசதியால் கட்டிலில் மல்லாந்து படுத்தான்.
துபாய் வந்த ஆர்வத்தில் இருந்தவள், கண் அயர்பவனைத் தட்டி எழுப்பி, “நம்ம வெளியே எங்கேயும் போகலையா?” என்று கேட்டாள்.
அவனுக்கோ துபாய் அடிக்கடி வந்து போகும் இடம் என்பதால் அவ்வளவாக ஈடுபாடு இல்லை.
“டயர்டா இருக்கு. கொஞ்சம் தூங்கி எழுந்திருக்கிறேன்”
அவன் நன்றாக உறங்கத் தொடங்க, அவளுக்கும் சற்று அலுப்பாக இருந்தது. கிஷோரிக்கு அசதியாக இருந்தாலும் உறங்கத் தோன்றவில்லை. அறையின் பால்கனியிலிருந்து துபாயின் அழகை ரசித்துக்கொண்டிருந்தவள், தனக்குக் காபி வரவழைத்துப் பருகினாள்.
ஒரு மணி நேரம் கடக்க, அவளுக்குப் போர் அடித்தது. வேறு வழியில்லாமல் கட்டிலில் அமர்ந்து அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
டிரௌசர் மட்டும் அணிந்திருந்தவன், மேலே எதுவும் அணியாமல் அந்த ஏசி அறையில் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தான். அவனது டிரௌசர் பாக்கெட்டிலிருந்து புடைப்பாகத் தெரிந்த கைப்பேசியை எடுத்து நோண்டிப் பார்க்க அவளுக்கு ஆர்வம் ஏற்பட்டது.
மெதுவாகப் போனில் கையை வைத்தவள், அதை இழுக்க முயன்றாள். ஆனால், அது வரவே இல்லை. தனது கூந்தல் நுனியால் அவனது இடையை லேசாக வருடினாள். தூக்கத்திலேயே சிரித்துக்கொண்டு நெளிந்தவன், முன்புறமாகத் திரும்பிப் படுத்தான்.
நைசாக அவனது போனைத் தன் கையில் எடுத்தாள். திரையை உயிர்ப்பித்தாள். அது ஃபேஸ் லாக்கில் வந்து நின்றது.
‘படுபாவி! எவ்வளவு பாதுகாப்பா வச்சிருக்கான்!’ உதடுகள் முணுமுணுக்க, அவனது போனைப் படுக்கைக்கு அருகில் இருந்த மேசையில் வைத்துவிட்டாள்.
சில மணி நேரம் உருண்டு புரண்டு படுத்தவன், தனது தொடைப் பகுதியில் கைவிட்டுக் கைப்பேசியைத் தேடினான். அது இல்லையென்றதும் படக்கென்று எழுந்தமர்ந்து கட்டிலில் துழாவிப் பார்த்தான்.
அவன் செய்கையைப் பார்த்து, “ஃபோன் டேபிள்ல இருக்கு” என்றாள்.
அதை எடுத்துக்கொண்டவன், “அது எப்படி டேபிளுக்குப் போச்சு?” என்று அவளைப் பார்த்து முறைத்தான்.
“ஃபோன் கீழே விழப்போற மாதிரி தெரிஞ்சுது”
அவள் முழுவதுமாகக் கூறி முடிப்பதற்குள் அவன் இடைமறித்தான்.
“எதுக்கு லாக் ஓபன் பண்ண ட்ரை பண்ண?”
அவனது கேள்வியில் திகைத்தவள், ஒன்றும் தெரியாததுபோல், “இல்லையே! நான் எதுவும் ட்ரை பண்ணலையே!” என்றாள் பவ்யமாக.
“ஹா… அப்போ இது யாரு முகம்?”
அவளது பக்கம் போனைத் திருப்பிக் காட்டினான். திரையில் தெரிந்த அவளது புகைப்படத்தைப் பார்த்தவள், பல்லை இளித்தபடி, “இல்ல, போன்ல என்ன இருக்குன்னு பார்க்கலாம்னு…” என்றாள்.
திரையில் தெரிந்த தனது புகைப்படத்தை அவள் கண்களைக் குறுக்கித் தீவிரமாகப் பார்ப்பதைக் கண்டு அவளுக்கே சிரிப்பாக இருந்தது.
“என்னோட போனைப் பார்க்க வேண்டிய அவசியம் உனக்கு இல்ல. புரிஞ்சுதா?”
“ஏன் ஆதி, அப்படிச் சொல்ற? நான் உன் ஃபியூச்சர் வைஃப். அப்புறம் என்ன?”
“அப்படி ஒண்ணு ஃபியூச்சர்ல நடந்தா பார்க்கலாம்” என்று அவளது புத்திக்கு எட்டும் வகையில் கூறினான்.
“நடக்கும், நடக்கும். நீ வேணா பாரு!” என்று துணுக்குத்தனமாகக் கூறினாள்.
“லுக் கிஷோரி! உனக்கு என் மேல இருக்கிறது லவ் இல்ல. அஃபெக்ஷன். புரியுதா?”
அவளை விட்டு விலக எவ்வளவோ கூறிவிட்டான். ஆனால், அதையெல்லாம் அவள் கேட்டால்தானே!
“லவ்வுக்கும் அஃபெக்ஷனுக்கும் டிஃபரென்ஸ் தெரியாம நான் இல்லை. ஐம் ரியலி கிரேஸி அபவுட் யூ”
“ஹா… அப்படியா? அப்போ என்னைய எவ்வளவு பிடிக்கும்?” என்று கேட்டுவிட்டு, அவளைப் பார்க்காமல் பால்கனிப் பக்கம் திரும்பிக்கொண்டான்.
அவன் அருகில் வந்தவள், “ரொம்பப் பிடிக்கும். ரொம்ப ரொம்பப் பிடிக்கும்” என்றதோடு அவனை இறுக அணைத்தாள்.
அவன் எதிர்பாராத விதமாக இருந்தாலும், தனது நெகிழ்ச்சியை வெளிக்காட்டாதவன், “என்னைப் பத்தி உனக்கு சரியா தெரியாது. தெரிஞ்சா நீ என்னை விட்டுட்டுப் போயிருவ” என்றான்.
அவனை உற்றுநோக்கினாள் அவள்.
“கண்டிப்பா போகமாட்டேன்”
அவனது முதுகில் மெதுவாகத் தன் மென்மையான முகத்தைச் சாய்த்தாள். அவனோ மனதை அவளிடம் சாயவிடாமல், அவள் கோத்திருந்த விரல்களைத் தளர்த்தினான்.
அவன் முழுவதுமாகக் கருப்பு நிற உடைக்கு மாறிவிட்டு வெளியே கிளம்புவதைப் பார்த்தவள், “நானும் ஃபுல்லா பிளாக் டிரஸ் போடணுமா, ஆதி?” என்று கேட்டாள்.
அதற்கெல்லாம் அவன் எங்கே பதில் கூறினான்?
“நான் வெளியே போயிட்டு ஒன் ஹவர்ல வந்துருவேன். நீ ரூம்ல இரு” என்று கூறியவன், டி-ஷர்ட்டிற்கு மேல் அணியும் கோட்டைத் தோளில் மாட்டிக்கொண்டு வெளியே செல்ல முற்பட்டான்.
வேகமாக வந்தவள் அவன் கையைப் பிடித்தாள்.
“இந்தியாவுலருந்து இவ்வளவு தூரம் வந்தது ரூமுக்குள்ளேயே இருக்கிறதுக்குத்தானா? என்னையும் வெளியே கூட்டிட்டுப் போ”
ஒற்றைப் புருவத்தை உயர்த்திவிட்டு, கைப்பேசியை எடுத்தாள். ராஜிமாவுக்கு வாட்ஸ்அப்பில் அழைக்கட்டுமா என்று சைகையில் கேட்டாள்.
அவளது தொல்லையைத் தாங்க முடியாதவன் பெருமூச்சுவிட்டான்.
“நான் போற இடம் உனக்குச் செட் ஆகாது. நாளைக்கு வேற இடத்துக்குக் கண்டிப்பா கூட்டிட்டுப் போறேன்”
“வீரா ப்ளீஸ்! நான் உங்கூட வாறேன். எனக்குப் போர் அடிக்குது”
அவள் கெஞ்சுவதைப் பார்த்தவன், ‘சொன்னா புரியாது. வந்து அனுபவி’ என்று மனதிற்குள் எண்ணிக்கொண்டு, விருப்பமில்லாமல் சலிப்புடன் தலையை அசைத்தான்.
நீல நிற ஃபிராக் அணிந்திருந்தவள், அதன் மேல் வெள்ளை நிறச் சட்டையைப் பட்டன் போடாமல் தளர்வாக விட்டிருந்தாள். அவனது இடக்கரத்தோடு தனது கையை அவள் கோத்துக்கொண்டாள். அவனது கடுமையான பார்வையைப் பெற்றுக்கொண்டாலும், நமுட்டுச் சிரிப்புடன் அவனோடு நடந்தாள்.
லிஃப்டில் கூட அவன் கையை விடாமல் வர, சுற்றியிருந்தவர்கள் இருவரையும் ஒருவிதமாகப் பார்த்தனர்.
கருப்பு நிற லம்போர்கினி அவன் முன் வந்து நிற்க, அதிலிருந்து இறங்கிய ஓட்டுனர் சாவியை அவனிடம் கொடுத்துவிட்டுச் சென்றான்.
ஆச்சரியத்துடன் பார்த்தவள், “உனக்கு இங்க லைசன்ஸ் உண்டா?” என்று கேட்டாள்.
லம்போர்கினியை இயக்கியவாறே, “ம்… இன்டர்நேஷனல் லைசன்ஸ்” என்றான். ‘இவன் கொஞ்சம் இல்ல, ரொம்பவே பெரிய ஆள்தான் டோய்!’
அவனைப் பார்த்து உதட்டைப் பிதுக்கிவிட்டு, ஜன்னல் வழியே துபாயை ரசிக்கத் தொடங்கினாள்.
சுத்தம் என்றால், துபாயின் தெருக்களைத்தான் எடுத்துக்காட்டாகச் சொல்ல வேண்டும் போலிருந்தது. ஒரு குப்பைகூட இல்லாமல் நேர்த்தியாகக் காட்சியளித்தன.
‘அந்த ரோட அப்படியே உத்துப் பார்த்தோம்னா மூஞ்சி தெரியும்டா மூஞ்சி! அப்படியே அங்கேயே ஷேவிங் பண்ணி, தலை சீவி, பவுடர் அடிச்சு, விபூதி பூசி, பொட்டு வச்சிக்கிட்டு, ஒரு பானை சோத்தை ரோட்டுல கொட்டி, குழம்புகளை ஊத்திக் குழைச்சு அடிக்கலாம் டா!’
இந்த வடிவேலு காமெடிதான் அவளுக்கு நினைவில் வந்து மறைந்தது.
அவளுக்கென்ன? அப்படியே ரோட்டிலேயே மேக்கப்பையும் சேர்த்துப் போட்டுக்கொள்ளக்கூடியவள்தான்!
“வீரா, இப்போ நம்ம எங்க இருக்கோம்?” இடத்தை அறிந்து படம் பிடித்து ஸ்டேட்டஸில் வைக்கத்தான் கேட்டாள்.
“துபாய்ல” என்றான் வேண்டுமென்றே அவளை வெறுப்பேற்றும் வகையில்.
அவளது முகம் உர்ரென்றானது.
“ஏன்? அது எனக்குத் தெரியாதா?” என்று கேட்டவளுக்கு அவனது கேசத்தை அப்படியே கொத்தாகப் பிடுங்கத்தான் தோன்றியது.
அதன் பிறகு அவனிடம் எதுவும் பேசவில்லை. கைப்பேசியில் லைவ் லொக்கேஷனைப் பார்த்துவிட்டு, ஒரு சிறிய காணொளியை எடுத்து ஸ்டேட்டஸில் வைத்தாள்.
பெரிய பெரிய உணவகங்களைக் கடந்து, ஒரு சிறிய தெருவுணவுக் கடைத்தொகுதியின் அருகே காரை நிறுத்தினான். அந்தத் தெருவுக்குள் வாகனத்தை எடுத்துச் செல்லலாம் என்றாலும், அதிக நெரிசல் இருந்ததால் நுழைவாயிலிலேயே நிறுத்தினான்.
காரைவிட்டு இருவரும் இறங்கினர். அடிக்கும் வெயிலில் கண்கள் கூச, வீரா கூலரை அணிந்துகொண்டான்.
“இந்த ப்ளேஸ் ஸ்ட்ரீட் ஃபுட்டுக்கு ஃபேமஸ். வீடியோ எடுத்துக்க உனக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும்” என்றான்.
கூறிய பிறகு, அவளிடமிருந்து எந்தச் சத்தமும் வராததால் அவளது பக்கம் திரும்பிப் பார்த்தான். அவளோ நான்கு கடைகள் தள்ளி, ஒரு கடைக்காரரிடம் அனுமதி பெற்று வீடியோ எடுத்துக்கொண்டிருந்தாள்.
‘எங்க இருந்தாலும் அவளோட வேலையை கரெக்ட்டா செய்றாளே!’
என்று அவன் உதடுகள் ஒருவித நமட்டுச் சிரிப்புடன் முணுமுணுத்தன.
யூடியூபில் காண்பதைப் போலவே, சிங்கிறால், நத்தை, கடல் சங்கு போன்றவற்றைச் செக்கச்செவேலென வறுத்து, அதன்மேல் சுவையூட்டிகளைத் தூவி, பலவகைச் சாஸ்களைத் தெளித்து அழகாக அடுக்கி வைத்திருந்தனர்.
வாயில் ஊறிய எச்சிலை விழுங்கியவாறு வீடியோ எடுத்துக்கொண்டிருந்தாள்.
அவள் அருகில் வந்தவன், “சாப்பிட்டு சீக்கிரம் கிளம்பணும்” என்றான்.
“என்ன சாப்பிடப்போறோம்?”
அவளது வாய் மட்டுமே அசைந்தது. கண்கள் இன்னமும் கைப்பேசியில் இருந்த கேமராவைக் குவியப்படுத்திக்கொண்டிருந்தன.
“பிடிச்சதுதான்” என்றான்.
தனக்குப் பிடித்ததைச் சாப்பிடலாம் என்கிறானே என்று ஆச்சரியப்பட்டவள், அவனைக் காதலுடன் பார்த்தாள். அவனோ சிங்கிறாலை ஒரு பிடி பிடித்துக்கொண்டிருந்தான்.
அவள் தன்னைப் பார்ப்பதை உணர்ந்தவன், “என்ன பார்த்துட்டு இருக்க? உனக்குப் பிடிச்சதை ஆர்டர் பண்ணிச் சாப்பிடு. சீக்கிரம் கிளம்பணும்” என்றான்.
‘அதானே பார்த்தேன்! எனக்குப் பிடிச்சதை ரெண்டு பேரும் சேர்ந்து சாப்பிடப்போறோமான்னு நினைச்சேன். இவனைக் கல்யாணம் பண்ணி ரொமான்ஸ் பண்றதெல்லாம் ரொம்பக் கஷ்டமா இருக்கும் போலயே!’ என்று தன் தலைவிதியை எண்ணி நொந்துகொண்டவள், தனக்குத் தேவையானதை வாங்கி வீடியோ எடுத்தாள்.
இருவரும் உணவைச் சுவைத்தவாறே பேசிக்கொண்டனர். அவள் நண்டின் காலை உடைக்கச் சிரமப்பட, அவன் அதை உடைத்துக் கொடுத்தான்.
‘இதை உடைக்கக்கூட நம்ம கிட்ட ஸ்ட்ரெங்த் இல்லையே! சே!’ என்று உள்ளுக்குள் நொந்துகொண்டாள்.
அவன் உண்டு முடித்துவிட்டு, ஐந்து விரல்களையும் ஒவ்வொன்றாகச் சுவைத்தான். அதைப் பார்த்தவள் அருவருப்பாக உதட்டைப் பிதுக்கினாள்.
உடனே அவன், “நீ வேணா டேஸ்ட் பண்ணிப் பார்க்கிறியா?” என்றானே!
“ச்சே!” அவளது முகமே அஷ்டகோணலாக மாறியது.
“நான் உன் விரலைச் சொன்னேன்” என்றதோடு அவளைப் பார்த்து நாக்கை மடித்துக் கடித்தான்.
வீராதித்யனின் முகத்தில் ஒருவிதமான தேஜஸ் உருவாகியிருக்க, மீண்டும் காரின் நான்கு சக்கரங்களும் வேகமாகச் சுழலத் தொடங்கின.
“இப்போ நம்ம எங்க போறோம், ஆதி?”
அவனது தோளில் லேசாகச் சாய முற்பட்டாள். “லியாவைப் பார்க்கப் போறோம்” என்றான்.
படக்கென்று நிமிர்ந்த அவளது தலை வேறெங்கும் திரும்பாமல் அவன் பக்கம் திரும்பியது. கோபமா, கவலையா என்று புரியாமல் தன்னைத்தானே குழப்பிக்கொண்டாள்.
“இனி எனக்கு ஒரே ஜாலி!” என்றதோடு காரில் சினிமாப் பாடலையும் ஒலிக்கச் செய்தான்.
வீரா, கிஷோரியைக் குழப்ப முயல்வது நன்றாகவே தெரிந்தது. அவன் செய்யும் செயல்கள் பிடிக்கவில்லை என்றாலும், இரண்டு மூன்று முறை ஆழமாக மூச்சை இழுத்துவிட்டு, தன்னைத்தானே நிதானப்படுத்திக்கொண்டாள்.
தான் குழம்பவில்லை என்பதை வெளிக்காட்டுவதற்காகக் கிஷோரி,
“லியா என்னைவிட அழகா இருப்பாளா?” என்று கேட்டாள். பெண்களுக்கே உரிய குணமல்லவா!
“ம்… ரொம்ப அழகா இருப்பா” என்றான்.
“எங்கிட்ட இல்லாதது அவகிட்ட அப்படி என்ன இருக்கு?” லேசாக முகம் தொங்கியது. ஆனால், அவனுக்கு அது சிரிப்பாக இருந்தது.
“நிறைய நிறைய இருக்கு. அதெல்லாம் உங்கிட்ட சொல்ல முடியாது” என்றான்.
கிஷோரிக்கோ வாய்க்கொழுப்பு சும்மா விட்டுவிடுமா?
“அப்புறம் ஆதி, லியா உன்னைய எப்படி கூப்பிடுவா?”
அவள் பக்கம் பாராமலேயே, “எப்படியும் கூப்பிட மாட்டா. அவளால பேச முடியாது” என்றான்.
உண்மையைக் கூறிய அவனது முகத்தில் எந்தவிதச் சலனமும் தென்படவில்லை. திடுக்கிட்டாள் கிஷோரி.
லியா ஊமையா? அதனால்தான் இவ்வளவு இரக்கமாக இருக்கிறானா? அதைக் கேட்கலாமா, வேண்டாமா?
கேட்டுவிடலாம் என முடிவு செய்தவள், “ஆதி, லியா ஊமையா?” என்று தயக்கத்துடன் கேட்டாள்.
“ச்சீ ச்சீ! அவ ஸ்லாங்குல நல்லா பேசுவா” என்றான்.
‘இவன் என்ன என்னைக் குழப்புறானா? பேச மாட்டேன்னு சொல்றான். ஆனா, அவர் ஸ்லாங்குல நல்லா பேசுவானு சொல்றான். ஒருவேளை அப்நார்மல்லா இருப்பாளோ?’ இவ்வாறு பல கேள்விகள் அவளை உலுக்கிக்கொண்டிருந்தன.
அப்படி ஏதாவது இருந்தால், அவர்களுக்கு இடையில் தான் குறுக்கே நிற்கவே கூடாது என்று கிஷோரி மனதைத் திடப்படுத்திக்கொண்டாள்.
“நான் மறுபடியும் கேட்கிறேன்னு தப்பா எடுத்துக்காத, ஆதி… லியா…” என்று தடுமாறியவள், “ஸ்பெஷல் சைல்டா? இல்ல நார்மல் பர்சனா? அந்த மாதிரியா?” என்று கேட்டாள்.
வேகமாகச் சென்ற காரைத் திடீரெனப் பிரேக் போட்டு நிறுத்தியவன், “அப்படியெல்லாம் ஒண்ணுமே இல்ல. அவ நல்லா ஆரோக்கியமா இருக்கா. போதுமா? சும்மா நொய் நொய்னு கேள்வி கேட்டுக்கிட்டே வராத. புரிஞ்சுதா? இன்னும் அஞ்சு நிமிஷத்துல அங்க போயிடலாம். லியா யாருன்னு பார்த்ததுக்கப்புறம் அவ பக்கம் கூடத் தலைவச்சுப் படுக்க மாட்ட. போதுமா?” என்றான். அதன் பிறகு கிஷோரி பேசவே இல்லை.
அவர்கள் செல்ல வேண்டிய இடம் வந்தது. காரை நிறுத்திவிட்டு இறங்கியவன் நடக்கத் தொடங்க, அவன் பின்னால் நடந்தாள்.
காரைவிட்டு இறங்கிய பிறகு கிஷோரியின் மனதில் லியாவின் எண்ணம் வேரூன்றியது. அவளைப் பார்க்கவும், அவளைப் பற்றித் தெரிந்துகொள்ளவும் மனம் ஆவலானது. ஒருவேளை தன்னைவிடப் பேரழகியாக இருப்பாளோ என்ற லேசான பொறாமையும் இளமனதைச் சோதிக்கத் தொடங்கியது.
யார் அந்த லியா?
*****
உங்கள் கருததுக்களை பார்த்தால் எனக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கும் நன்றி உறவுகளே 🙏❤️






forum இந்தக் கதையைப் பற்றி விவாதிக்கவும் 0
இதுவரை கருத்துகள் இல்லை. முதல் கருத்தைப் பதியுங்கள்!