• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சாகாவரம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Jaalan

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
111
Reaction score
361
நல்லூர் பெரிய கோவிலில் நான் நுழைந்த போது பிரமித்து தான் போனேன். என்னே கட்டமைப்பு, என்னே கலையுணர்வு. உழியால் உயிருண்ட மானிடராய் சிற்பங்கள் மனதை மயக்கின. இவ்வளவு திறமையான சிற்பிகளை படைத்த பிரம்மன்அதனை ரசிக்க மனிதரை படைக்கவில்லை போலும், பார்ப்பாரின்றி இக்கோயிலும் சிற்பங்களும் பாலடைந்து போயிற்று. பால் குடிக்கும் பிள்ளையாரும் பிள்ளை வரம் கொடுக்கும் சாமியார்களும் இல்லாதலால் இங்கு பக்தர்கள் அலை மோதவில்லை. அலையில்லா ஆழ்கடலை போலவே இக்கோயிலும் தன் அதிசயங்களை உள்ளடக்கி ஊமையாய் நிற்கின்றது. எனக்கு ஏன் இவ்வளவு அக்கறை என்கிறீர்களா, நான் ஒரு தொல்லியல் மாணவன், என் ப்ராஜக்ட்டுக்காகவே நான் இங்கு வந்திருக்கிறேன். இக்கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழைமையானது ஆங்காங்கே இடிந்த போதும் இன்னும் ஒரு கிழட்டு சிங்கம் போல கம்பீரமாய்தான் நிற்கிறது, இதன் இத்தகைய நிலைக்கு இதை கட்டிய மன்னனும் ஒரு காரணம் என்றால் நம்ப முடிகிறதா. குறுநில மன்னன் நலஞ்செயன் கட்டிய கோயில் தான் இது, சென்ற இடமெல்லாம் வெற்றி கண்ட அவன் தவம் புரிந்து சிவனிடம் சாகா வரமும் பெற்றான். சிவனின் வரம் தான் கிரடிட் கார்டு ஆஃபர் போன்றதாயிற்றே. Terms & condition பின்னர் தானே தெரியும். அதுபோல இவன் வரமும் சாவை தடுத்ததே தவிர முதுமையை தடுக்கவில்லை அதனால் சிவன் மேல் கடுங்கோபம் கொண்டான். தடை செய்யப்பட்ட வேதங்களையும் சாத்தானையும் பின்பற்ற, அவன் மகன்களும் மனைவியும் சதி செய்து அவனை கோயிலின் ஓர் மண்டபத்தில் அடைத்து வெளியேறா வண்ணம் மந்திரக் காவல் போட்டனர். இன்று வரை அவன் தீராப் பசியுடன் இங்கே உலவுகிறான், இவ்வாறாக கதை போகிறது.
இதற்கிடையில் நலஞ்செயனை இங்கே பார்த்தேன் அங்கே பார்த்தேன் பழம் வாங்கி சாப்பிட்டான், பரோட்டா திருடினான் என ஏகத்துக்கு வதந்தி. கோயில்களில் திரிதந்தாலும் நான் என்றும் பெரியார் கட்சி தான். சாமியும் , சாத்தானும் என்னை என்றுமே ஈர்த்தத்தில்லை. இவ்வாறாக நான் எண்ணிக்கொண்டிருக்கையில் நாங்கள் பிரதான மாடத்தை அடைந்தோம், அங்கு நுழைந்ததும் காற்றில் ஈரப்பதத்தை உணர முடிந்தது. ஒரு பிரம்யமான அமைதி எங்கும் நிறைந்திருந்தது. கல்லால் ஆன அந்த மாடத்தின் மேற்கூரை ஆங்காங்கே இடிந்து இருந்தது அந்த ஓட்டைகளினூடே கதிரவன் தன் ஒளிக்கற்றையை செலுத்தி தரையில் பல ஓவியங்கள் இட்டிருந்தான். இருபுறமும் அடிக்கொரு சிற்பங்கள் எங்களை
வரவேற்க, சுயம்வரத்தில் கன்னியாய் நாங்கள் ஒவ்வொன்றையும் ஆராய்ந்து கொண்டிருந்தோம்.
அப்போது என் நண்பன் என்னிடம் கிசுகிசுத்தான்

" அந்த நலஞ்செயன் மண்டபம் இதுக்கு பக்கத்துல தான்டா இருக்கு.. அங்க பாத்தியா" மாடத்தின் பக்கத்திலிருந்த சுவற்றின் ஓட்டையை காட்டினான், " அங்க இருந்துதான் நலஞ்செயன் இந்த மாடத்த பார்ப்பானாம்"

" நீயும் இந்த கதையை நம்புறியா" தலையில் அடித்துக் கொண்டேன்.

" யப்பா கருப்பு சட்டை பகுத்தறிவு அது இதுனு ஆரம்பிச்சராத" அலுத்து கொண்டான் அவன்.

நான் அவன் முதுகில் ஒரு தட்டு தட்டிவிட்டு அந்த ஓட்டையை மறுபடியும் பர்ர்த்தேன் எனக்குள் ஓர் உணர்வு அருகில் சென்று பார்க்க வேண்டும் என தூண்டியது, நெருப்பை பார்த்தால் தொடத் தூண்டுமே அம்மாதிரியான உணர்வு. அந்த ஓட்டையில் தெரிந்த அந்த இருள் என்னை ஈர்த்தது, அப்போது திடீரென இரு கண்கள் இருளிலிருந்து என்னை பார்த்தது. அந்த நிமிடம் என் இதயம் துடிப்பு மார்புக்கூட்டுக்குள் இடியாய் விழுந்தது. சுதாரித்துக்கொண்டு மறுபடியும் பார்த்தேன், அதற்குள் அக்கண்கள் இருளில் மறைந்திருந்தது.
நான் விரைந்து என் நண்பனிடம் நடந்ததை கூறினேன் அவனோ " அப்படி சொல்லு, சாமியாவது பூதமாவதுனு பகுத்தறிவு வசனம் பேசுவியே. இப்ப என்னாச்சு" என்று சிரித்தான்.
" நான் பயப்படலாம் இல்ல வித்தியாசமா தெரிஞ்சுது அதான் உன்ட்ட சொன்னேன்."

" எல்லாரும் இப்டிதான் சமாளிப்பாங்க" நக்கல் அவன் சிரிப்பில்.

"என்ன கிண்டலா, நான் இப்பவே அந்த மண்டபத்துக்கு போய் வரேன் பார்க்கரியா" நான் சீறினேன்.

" பார்ரா.. எங்க போ! பார்க்கலாம்" மறுபடியும் சிரித்தான்.

கோபம் என் தலைக்கேறியது அடுத்த வார்த்தை பேசாமல் அங்கிருந்து நகன்றேன் அந்த திகில் மண்டபத்தின் நுழைவு வாயிலைத் தேடி,
நான் அங்கிருந்து செல்லும் வரை அவன் என்னை அழைப்பான் என எதிர்பார்த்தேன், பயத்தினால் அல்ல, அக்கறையினால். ஏமாற்றமான அந்த எதிர்பார்ப்பு என் சினக் கனலில் எண்ணை ஊற்றியது. 'இவனுக்கு நான் யாரென காட்டுவேன் ' நான் சொல்லி முடிப்பதற்குல் நுழைவு வாயிலை அடைந்தேன்.
நுழைவு வாயில் என சொல்லுமளவிற்கு அங்கு ஏதுமில்லை ஆளுயரத்துக்கு கல்லினால் வாயில் அடைக்கப்பட்டு இருந்தது. கள்ளியும் உடை மரங்களும் அதனை அலங்கரித்தன. இந்த மண்டபத்தில் என்ன இருக்கிறது என்று கூட யாருக்கும் தெரியாது. மூட நம்பிக்கைகள் அச்சத்தில் வளர்க்கப்பட்ட முட்செடி, களையெடுக்கும் நேரம் வந்துவிட்டது, பெருமூச்செறிந்து விட்டு கல்லின் மேலேறி மர்ம மண்டபத்தினுள் குதித்தேன்.
மண்டபம் முழுதும் இருள் சூழ்ந்திருந்தது ஆங்காங்கே கூரையின் ஓட்டைகள், கீரள்கல் வழியே சூரிய ஒளி, வாளாய் இருளை கிழித்துக்கொண்டிருந்தது. மரத்தின் வேர் பாம்பை போல தொங்க, புளுக்கை நாற்றம் என்னை மூழ்கடித்தது.
என் மொபைல் போனால் ஏற்படுத்திய சிறு ஒளி வட்டத்தை துணையாய் கொண்டு அந்த இருள் தேசத்தில் பயணித்தேன். கூரையில் வௌவால் கூட்டம் தொங்கிக்கொண்டு தூங்க, தரையெங்கும் புறா இறகுகள் சிதறி கிடந்தன. இந்த மர்ம காட்சிக்கு பிண்ணணி்இசையாக புறாக்கள் குனுகும் ஓசை எதிரொலித்தது. இவ்வளவு தான் இந்த ஆயிரம் ஆண்டு மர்மமா? எனக்கு சலித்துபோனது. இனியும் இங்கு கால விரயம் செய்யமுடியாது என எண்ணிக்கொண்டு திரும்பி செல்ல எத்தனித்தேன். அப்போதுதான் அதைப் பார்த்தேன், ஒரு உருவம் இருளில் என்னை கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தது. என் இதயம் துடிக்கும் ஒலி காதில் கேட்டது, இரத்தம் முழுவதும் குளிர் தொற்றியது. இது வெறும் மர வேர் தான் என கூறி என்னை திடப்படுத்திக்கொண்டு, என் மொபைல் டார்ச்சை அதன் மேல் செலுத்தினேன். அது வேரோ , பிரமையோ இல்லை. அது உண்மையிலே ஓர் கிழவன் தான் கைரேகை முகம் படரும் வரை முதிர்ந்துருந்தான் அவன். முகமெங்கும் ரோமங்கள் . தாடி அவன் உடல் முழுவதும் ஆடையாய் போர்த்தியிருந்தது. அவன் கண்கள்.. ஆ!! அந்த கண்கள்.. இதே கண்கள் தான் என்னை முன்னர் பார்த்தது, இவை தான் என்னை இங்கு வரவைத்தன, ஆனால் எதற்காக?.. என் பயத்தை முடிந்தவரை மறைத்து கொண்டு யார் நீ?.. என்றேன் அதட்டும் தொனியில்.
ஆனால் அக்கிழவன் அஞ்சவில்லை, மாறாக சிரித்தான். அவனது அந்த சிரிப்பு காதை துளைத்து இதயத்தில் இடியாய் இரங்கியது. உடல் முழுவதும் அச்சம் உஷ்ணமாய் ஏற, தொண்டை அடைத்தது. பகுத்தறிவு பயத்தின் பிடியில் கருகி சாம்பலானது. நான் பயத்தில் உறைந்த வேளை கிழவன் தள்ளாடி என்னை நெருங்கினான். என் கால்கள் பின்னோக்கி செல்வதை உணர்ந்தேன். சுதாரித்தவனாய் தப்பிக்க விரைந்தேன் விதி காலை இடற, தடுமாறி விழுந்தேன். மொபைல் என்னை விட்டு பறந்தது. நான் விழுந்த அதிர்ச்சியில் கலைந்த வௌவால் கூட்டம், என் முகத்தை மொய்க்க, பயமும் வலியும் கலந்து துடித்தேன். வௌவால்களிடம் இருந்து நான் தப்பிய வேளை, கிழவன் என்னை நெருங்கிருந்தான். கைத்தடியை ஓங்கி என்னை அடிக்காமல், நெற்றியை லேசாக தொட்டான். என் தலை சுற்ற தொடங்கியது, வாய் அடைக்க , கால் நடுங்க கண்களை மெல்ல மெல்ல இருள் சூழ்ந்தது. நான் மயங்கினேன்.

கண்களை திறந்த போது எவ்வளவு நேரம் மயங்கிருந்தேன் என தெரியவில்லை, யுகம் போல இருந்தது. மெல்ல எழுந்தேன் என் உடல் தளர்வானதாய் உணர்ந்தேன். அருகில் என் நண்பன் குரல் கேட்டது, அவனை அழைக்க தோன்றியது, என்னை காப்பாற்றடா என கூவதோன்றியது. அந்த உந்துதலில் மெல்ல எழுந்து குரல் வந்த ஓட்டையினை நோக்கி நடந்தேன், என் நண்பன் ஒரு கூட்டத்தினருடன் பேசிக்கொண்டருந்தான், என்னால் முடிந்த வரை சத்தமாக அவன் பெயரை கூவி அழைத்தேன். அந்த கூட்டத்தில் யாருக்கும் என் குரல் கேட்டதாய் தெரியவில்லை, மும்முரமாய் அவர்களுக்குள் பேசி கொண்டிருந்தனர் ஆனால் ஒருவன் மட்டும் என்னை நோக்கினான். அந்த முகம்.. பரீட்சயமான அந்த முகம் .. அது என் முகம் தான் ஆனால் அது நானில்லை. என் இதயம் நின்றதாய் உணர்ந்தேன். என் முகத்தை தொட்டு பார்த்தேன் முகமெங்கும் தாடி, கசக்கிய துணி போல் தோலெங்கும் சுருங்கியிருந்தது, என் கையில் கசங்கிய காகிதத்தில் எழுதியது போல பழைய தமிழில் நலஞ்செயன் என பச்சை குத்தியிருந்தது. படபடக்கவும் பயப்படவும் திரானி இன்றி நான் ஏறிட்டு நோக்கினேன், என் முகத்தில் நான் கண்டிராத அமானுஷ்ய புன்னகையுடன் என்னை பார்த்துவிட்டு, என் பார்வையின் எல்லையை கடந்து மறைந்தான், என் உருவில் அவன்.
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான சிறுகதை,
ஜாலன் டியர்
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
அருமையான எழுத்து நடை ?????? பயத்துடனே படித்தேன் ???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top