• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

திகில் சிறுகதை - 4 | நிழல்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Vijayanarasimhan

அமைச்சர்
SM Exclusive
Joined
Oct 16, 2018
Messages
1,699
Reaction score
5,206
Location
Chennai, Tamil Nadu, India
திகில் சிறுகதை - 4 | நிழல்

என் வீட்டில் யாரோ இருக்கிறார்கள்!

இதை எப்படிச் சொல்வதென்று தெரியவில்லை, நான் இல்லாதபோது என் வீட்டிற்கு எவனோ ஒருவன் வந்துபோகிறான், பலமுறை அவன் இருக்கும்போதே நான் வந்துவிடுவேன், உடனே எங்கேயாவது ஒளிந்துகொள்வான்!

என் மனைவி அவனுடன் பேசிக்கொண்டிருப்பாள், அவர்களின் பேச்சுக்குரல் நன்றாகக் கேட்கும், ஆனால் நான் நுழையும்போது அவன் இருக்கமாட்டான், அவளும் ஒன்றுமே நடக்காததைப் போல மிக இயல்பாய் என்னுடன் பேசுவாள்... சொல்லப்போனால், அவனுடனான பேச்சை என்னுடன் தொடர்வதைப் போலப் பேசுவாள்...

என்னால் என் மனைவியைச் சந்தேகப்பட இயலவில்லை, சந்தேகிக்காமலும் இருக்க முடியவில்லை!

இது ஒரு நரக வேதனை!

இதோ... இப்போது கூட நான் கடைக்குப் போய்விட்டு வருகிறேன், கதவைத் திறக்கக் கைநீட்டுகிறேன், உள்ளே அவர்களின் பேச்சுக்குரல் கேட்கிறது... சொற்கள் தெளிவாகக் கேட்கவில்லை, ஆனால் ஒரு ஆண் குரல், ஒரு பெண் குரல், அதில் எந்தச் சந்தேகமும் இல்லை! கதவைத் திறக்காமல் நிற்கிறேன்... என்ன பேசுகிறார்கள்? என் வீட்டுக் கதவில் காதை வைத்து நானே ஒட்டுக்கேட்பதற்கு எனக்கு மனம்வரவில்லை!

எங்களுக்குத் திருமணமாகிப் பதினைந்து வருடங்கள் ஆகப்போகிறது, காதல் திருமணம், அவ்வப்போது பல சண்டைகள் போடுவோம், ஆனால், அடிப்படையில் ஈருடல் ஓருயிர்!

ஒருவேளை பிரச்சனை என்னிடம் இருக்குமோ?

இது நானே செய்துகொள்ளும் கற்பனையோ?

அவனது குரல் கேட்கிறதே... எல்லாம் என் மனம் செய்யும் மாயமா?

ஒரு நொடிக்குள் மனத்தில் ஆயிரம் சிந்தனைகள் மின்னலாய் வெட்டி மறைகின்றன... மனத்திற்குள் ஒரு வழக்காடு மன்றமே நிகழ்கிறது... எனக்குச் சார்பாய் சில குரல்கள், என் மனைவியின் சார்பாய் சில குரல்கள்... நடுநிலையாய் சில!

இருங்கள்... எனக்குள்ளேயே இத்தனை சிந்தனைகளா? இத்தனைக் குரல்களா? அப்படியென்றால் அவனது குரலும் என் கற்பனைதானா?

அப்படித்தான் இருக்க வேண்டும்... என்னவளை எனக்குத் தெரியும்... நிச்சயம் இது என் கற்பனைதான்...

ஓசைபடாமல் கதவைத் திறந்துகொண்டு நுழைகிறேன்...


வாசலுக்கு நேரெதிரே சமையலறை, இடதுபுறம் எங்களின் பிரதான படுக்கையறை, அவள் அங்குதான் இருக்கிறாள், துணிகளை மடித்துக்கொண்டு...

பேசிக்கொண்டே இருந்தவள் என்னைப் பார்த்ததும் ஒரு நொடி திகைத்து நின்றாள், அவள் முகத்தில் ஒரு குழப்பம், ஒரு அச்சம், ஒரு கேள்வி,

“எப்ப வாசப்பக்கம் போன?”

அவளது கண்கள் அனிச்சையாக அறையோடு ஒட்டியிருந்த குளியலறைக் கதவை நோக்கின.

அவன் அங்குதான் ஒளிந்திருக்கிறானோ?

நான் சடாலென்று பாய்ந்தேன்... குளியலறைக்குள் தட்டுத்தடுமாறி நுழைந்தேன், நான் திறந்த வேகத்திற்கு அந்த ‘பிளஷ்’ கதவு கையோடு வராமலிருந்தது வியப்புதான்!

உள்ளே யாருமில்லை!

சுற்றிமுற்றிப் பார்த்தேன்... நாலுக்கு ஆறு அறை, ஒரு கதவு, கம்பிகளும் கண்ணாடித் தகடுகளும் மூடியிருந்த ஒரு காற்றுப்புழக்க சன்னல், அதுவும் கூரை உயரத்தில், அது வழியாக எங்கும் செல்ல இயலாது! அதுவும் அந்தச் சன்னலருகே இருந்த ஒட்டடைகள் கலையாமல் இருந்தன...

அவன் எங்கே?

குளியறைக் கண்ணாடியில் என்னை நானே பார்த்துக்கொண்டேன்... எனது பிம்பம் என்னைப் பார்த்து எள்ளலாகச் சிரிப்பதைப் போல இருந்தது!

”என்ன டா? ஏன் இப்படி பேய் மாதிரி நுழைஞ்ச பாத்ரூம்குள்ள?”

என் மனைவி கதவருகில் வந்து நின்று கேட்டாள்...

“அர்ஜெண்ட்டா வருது... நீ போ, வரேன்...”

என்றபடி கதைவைச் சாத்தித் தாழிட்டுக்கொண்டேன்.

அவளது முகத்திலும் குழப்பம் அப்பியிருந்தது... நடிக்கிறாளா? இல்லை, பயமா? அவனை நான் கண்டுபிடித்துவிடுவேன் என்ற பயமா?

எப்படித் தப்பித்தான்?

அவன் உண்மையா? என் கற்பனையா?

குழாயைத் திறந்துவிட்டு நீரைக் கைகளில் பிடித்து முகத்தில் அடித்துக்கொண்டேன்... குளிர்ந்த நீரில் முகங்கழுவுவது எனக்கு மிகப் பிடிக்கும்... புத்துணர்வாக உணர்வேன்...

இன்று அப்படி இல்லை... ஆனாலும் கொஞ்சம் ஆசுவாசமாக உணர்ந்தேன்... தெளிவாகச் சிந்திக்கலாம் என்று தோன்றியது.

’ஏன் இப்படி பேய் மாதிரி நுழைஞ்ச’

என் மனைவியின் குரல் எனக்குள் எதிரொலித்தது. பேய்... பேய்... பேய்?

ஒருவேளை இது ஏதேனும் பேய், ஆவி போன்று ஏதாவதாக இருக்குமோ?

ச்ச... பேயெல்லாம் வெறும் கற்பனை... பொழுதுபோக்கச் சொல்லிவைத்த கதைகள்!

அதெப்படி? கொஞ்சம் கூட உண்மை இல்லாமலா உலகம் முழுக்க இவ்வளவு பேய்க்கதைகள் உருவாகி உலவிக் கொண்டிருக்கும்?

ஏன் இருக்காது? மனிதனின் கற்பனை அபாரமானது!

டிராகன் போன்ற கற்பனை மிருகங்கள் உலகின் எத்தனை கலாச்சாரத்தின் தொன்மங்களில் உள்ளன? நம்மூரில் யாளி, ஐரோப்பாவில் வைவர்ன்...

அவையெல்லாம் உண்மையிலேயே கற்பனையா? ஏன் அப்படி ஒரு மிருகம் முன்னால் இருந்திருக்கக் கூடாது? டைனோசர்களின் ஏதோவொரு சந்ததியாக இருக்கலாமே?

எப்படி ஒரு கற்பனை, ஒரு பொய் உலகம் முழுவதும் பரவும்?

என் சிந்தனை தொட்டுத் தொட்டு எங்கெங்கோ சென்றது; டிராகன், உலக வரலாறு, நாகரிகங்களிடையிலான கொடுக்கல் வாங்கல் என்று என் எண்ணவோட்டம் தடம்மாறியதில் மனைவியைச் சந்தேகப்படும் பட்டிமன்றங்களை மறந்து அன்றிரவு நான் நிம்மதியாகத் தூங்கினேன்.

ஏதோ ஒரு கனவு, என்னவென்று நினைவில்லை, சட்டென்று கண்விழித்தேன். மணி என்ன?

எங்கள் படுக்கையறைச் சுவரில் இருந்த எண்கள் ஒளிரும் கடிகாரத்தை நோக்கி என் கண்கள் திரும்பும்போதுதான் அதை உணர்ந்தேன்...

எங்கள் அறையில் அவன் இருக்கிறான்!

நான் நேராகப் பார்க்கவில்லை, நான் விழித்துக்கொண்டுவிட்டேன் என்பதைக் காட்டிக்கொள்ளவில்லை... எனது ஓரக்கண் பார்வையில் அவன் தெரிந்தான்!

என் கால்மாட்டில், அறையின் மூலையில் இருந்த நாற்காலியில் அவன் அமர்ந்துகொண்டிருக்கும் நிழலுருவம்...

என் மூளையில் ஜிவ்வென்று ஒரு ஊற்று... உடலெங்கும் அலையலையாய் பரவியது... கை கால்களில் மயிர்க்கூச்செறிதல்... அந்த அட்ரெனலின் மின்சாரத்தைச் சொற்களில் வர்ணித்துவிட இயலாது!

கண்ணிமைக்கும் நேரத்தில் அறைவிளக்கைப் போட்டு நான் துள்ளியெழுந்தேன்...

நாற்காலியில் எனது அழுக்குத்துணிகள்!

இவைதானா இருட்டில் ஓரக்கண் பார்வைக்கு ஓர் ஆள் அமர்ந்திருப்பதைப் போலத் தோன்றின?

என்னால் நம்பமுடியவில்லை!

ஓர் ஆள் அமர்ந்திருந்ததை நான் நன்றாகப் பார்த்தேன் (உணர்ந்தேன் என்று சொல்வது பொருத்தம்!)

நின்றபடியே நான் அந்தத் துணிக்குவியலை ஆராய்ந்தேன்... அவை நாற்காலியில் மூட்டை போலக் குவிந்திருந்தன... இது எப்படி ஒரு ஆளைப் போலத் தோற்றம் அளித்திருக்கும்? நாற்காலியின் முதுகுத்தாங்கலுக்கு மேலாக அவனது தலையை நான் பார்த்தேன்... அந்த நிழலுருவத் தோற்றத்திற்கும் துணிகளின் இந்த வடிவத்திற்கும் தொடர்பே இல்லை... எப்படி?

என் கற்பனையா? இதெல்லாம் கனவா?

”என்ன ஆச்சு டா? ஏன் லைட்டப் போட்டிருக்க?”

என் மனைவி தூக்கக் கலக்கத்தில் கேட்டபடியே என் பக்கம் திரும்பினாள், நான் நின்ற நிலையைப் பார்த்துச் சற்றே அதிர்ந்தவளாக உடனே எழுந்து அமர்ந்தாள்,

“அர்ஜுன்! என்ன ஆச்சு? ஏன் இப்படி வேர்த்திருக்கு?”

அவளது பார்வை அனிச்சையாக அறையில் குளிர்சாதனத்தை நோக்கியது, அது இயங்கிக்கொண்டுதான் இருக்கிறது! அப்போதுதான் நானும் உணர்ந்தேன், என் உடல் வியர்வையில் தொப்பலாக நனைந்திருந்தது... அறையில் நிலவிய குளிர்ச்சியை நான் உணரவில்லை... புழுக்கமாக உணர்ந்தேன்!

எதிரில் இருந்த பீரோ கண்ணாடியில் என்னைப் பார்த்தேன்... என் பிம்பம் என்னைப் பார்த்து எள்ளலாகச் சிரிப்பதைப் போல இருந்தது... இருங்கள்...

என் பிம்பம் வியர்வையில் தொப்பலாக நனைந்திருக்கவில்லையே, ஏன்?

என் கைகள் அனிச்சையாக என் உடலைத் தடவின, வியர்வையின் ஈரத்தை நன்றாக உணர்ந்தேன், நான் அணிந்திருந்த உள்மேலாடை என் உடலோடு ஒட்டிக்கொண்டிருந்தது, ஆனால், கண்ணாடியில் தெரிந்த என் பிம்பத்தில்...

நான் குழப்பத்துடன் கண்ணாடியை நெருங்க... சட்டென்று இருள் கவ்வியது!

மின்வெட்டு!

தெருவிளக்குகள் கூட எரியவில்லை, அப்படி ஒரு காரிருள்... கும்மிருட்டு!

இந்த இருள் கவிவதற்கு முன், நான் கண்ணாடியை நெருங்கிய அந்தக் கண்ணிமைக்கும் கணப்பொழுதின் ஒரு சிறுகூறில், கண்ணாடியிலிருந்து என்னை நோக்கி நெருங்கிய எனது பிம்பத்தின் முகம்...

அதில் இருந்த அந்தக் குரூரப் புன்னகை...

என் மனத்தில் அதுதான் வியாபித்திருந்தது!

ஏற்கனவே அட்ரெனலின் பாய்ந்திருந்த என் உடலில் மீண்டும் ஒரு சில்லிடல் பரவியது!

அந்த இருட்டிலும் கண்ணாடியில் என் பிம்பம் அசைவதை என்னால் பார்க்க முடிந்தது! நான் அசையவில்லை!

”அர்ஜூன்?”

என் மனைவியின் குரலில் குழப்பம் பெரிதாகத் தொனித்தது...

சட்டென்று அறையில் மீண்டும் வெளிச்சம் பரவியது, அவள் தனது கைப்பேசியின் விளக்கை இயக்கியிருந்தாள்...

கண்ணாடியில் என் பிம்பம் நானாகவே இருந்தது... நான் அதன் கண்களை உற்றுப் பார்த்தேன், அதுவும் என் கண்களை உற்றுப் பார்த்தது... அதன் உடலும் வியர்வையில் நனைந்திருந்தது...

“என்னடா? பாதி ராத்திரில எழுந்து ஏன் இப்படி நிக்குற? என்ன ஆச்சு?”

அவளது குரலில் வாஞ்சையும் கவலையும் இருந்தன...

”ஒ- ஒன்னுமில்ல... ஏதோ கனவு...”

நான் கண்ணாடியைப் பார்த்தபடியே மீண்டும் படுக்கையில் அமர்ந்தேன்... என் பிம்பம் என்னைத் துல்லியமாகப் பின்பற்றியது!

”தண்ணி குடி...”

அருகிலிருந்த புட்டியை எடுத்துத் தந்தாள், வாங்கி ஒரு மடக்கு குடித்தேன்... குளிர்ந்த நீர் என் தொண்டையில் பட்டு, உணவுக் குழாய் வழியாக இறங்குவதை உணர்ந்தேன்... உடல் இளகியது, மனத்தின் விறைப்பும் குறைந்தது... அறையில் நிலவிய குளிர்பதனத்தை மீண்டும் உணர்ந்தேன்... வியர்வையில் நனைந்திருந்த உடல் குளிரில் இலேசாக நடுங்கியது...

”உடம்பு சரியில்லையா?”

என் நெற்றியில் கைவைத்துப் பார்த்தபடியே கேட்டாள்,

“அதெல்லாம் இல்ல, ஏதோ கனவு... என்னனு ஞாபகமில்லை... தூங்கலாம் வா...”

”பனியன மாத்து, ஒரே வேர்வ!”

நான் என் கைப்பேசியின் விளக்கையும் இயக்கிக்கொண்டு எழுந்தேன், வியர்வையில் நனைந்திருந்த உள்மேலாடையைக் கழட்டி அந்த நாற்காலியின் மீது போட்டுவிட்டுத் துண்டால் உடலைத் துடைத்துக்கொண்டு பீரோவைத் திறந்து ஒரு மெல்லிய டி-சட்டையை எடுத்து மாட்டிக்கொண்டேன்... பீரோவை மூடும்போது என் கண்கள் அதன் கண்ணாடியில் தெரிந்த என் பிம்பத்தை நோக்கின...

அது என் முகம்தானா? கண்ணாடியில் தெரிந்த முகத்தில் ஒரு குரூரப் புன்னகை தெரிகிறதா? ஒரு வேளை கைப்பேசி விளக்கின் அரைகுறை வெளிச்சத்தில் அப்படித் தோன்றுகிறதோ?

பீரோவை மூடிவிட்டுப் படுக்கையில் சரிந்தேன், கைப்பேசி விளக்கை அணைத்துவிட்டுக் கண்களை மூடினேன். மனசில் அமைதியில்லை!

இதெல்லாமே என் கற்பனைதானோ? தேவையில்லாமல் இவளை வேறு சந்தேகப்படுகிறேன்! அவளிடம் நேரடியாகப் பேசிவிட்டால் என்ன? பேசினால் எல்லாப் பிரச்சனைக்கும் ஒரு முடிவு கிடைக்கும்.

இல்லை... கொஞ்ச நாள் பொறுப்போம். எல்லாப் பிரச்சனைகளும் பேசினால் தீராது, சில அதிகமாகிவிடும்! உண்மையாக இருந்தாலும் பொய்யாக இருந்தாலும் நான் இவளைச் சந்தேகிக்கிறேன் என்பது தெரிந்தால் அவளுக்கு என் மீது வெறுப்புதானே வரும்? பிரச்சனை பெரிதாகத்தானே ஆகும்?

அப்புறம் இதுக்கு என்னதான் தீர்வு? இப்படியே மனவுளைச்சலோடு எவ்வளவு நாள் இருப்பது?

இதெல்லாம் என் கற்பனைதான் என்று வைத்துக்கொள்வோம்... அதை மாற்ற முயல்வோம்... நாளையிலிருந்து யோகா செய்வோம், தியானம் செய்வோம்...

என் சிந்தனை மீண்டும் அலையத் தொடங்கியது.

என் மனைவி என் தலையை வாஞ்சையுடன் வருடிக் கொடுத்தாள்... அதன் சுகத்தில் நான் என்னை அறியாமல் தூங்கிவிட்டிருந்தேன்.

***​

எங்கள் வீட்டில் இரவில் அவ்வப்போது ஏதோ ஒரு உருவம் நடமாடுவதைப் போலத் தோன்றியது. இரண்டொருமுறை நான் நேரடியாய் என் கண்களால் பார்த்தேன், பிடிக்க எத்தனிப்பதற்குள் அவன் அல்லது அது எப்படியோ மறைந்துவிடும்.

ஒருநாள் இரவு சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உந்துதலால் விழித்துக்கொண்டேன், குளியலறைக்குச் செல்ல எழுந்தபொழுது கூடத்தில் யாரோ நிற்பதைப் போல இருந்தது, ஓசைபடாமல் படுக்கையறைக் கதவருகே சென்று நின்று பார்த்தேன்... முழுதாக ஓர் ஆள் நிற்பதன் நிழலுருவம் (silhouette) தெரிந்தது... நான் ஒரே தாவலில் அவனை நெருங்கவும், அவன் வாசலுக்கருகில் இருந்த சன்னலை நோக்கித் தாவவும் சரியாக இருந்தது! நான் சன்னலருகே ஓடிச் சென்றேன், அங்கே யாரும் இல்லை, ஆனால் சன்னலுக்கு வெளியே ஒரு பூனை (என்ன நிறமோ, இருட்டில் எல்லாம் கருப்பாகத்தான் தெரிந்தது!) அந்த உருவம் சன்னலை நோக்கித் தாவியபோது சுருங்கியதைப் போலத் தோன்றியது எனக்கு இப்போது... அது பூனையாக மாறிவிட்டதா?

இதெல்லாம் உண்மையில் நிகழ்கிறதா? என் கற்பனையா?

அடுத்த சில நாள்கள் பெரிதாய் ஒன்றும் நிகழவில்லை. நான் தினமும் காலையிலும் மாலையிலும் தியானமும் சில யோகாசனங்களும் பயின்றேன் (எல்லாம் யூடியூப் குருக்களின் வழிகாட்டலில்!). பிரச்சனை என் கற்பனைதான் என்ற எண்ணம் மெல்ல மெல்ல உறுதிபடத் தொடங்கியது.

கண்ட கண்ட கதைகள் படிப்பதையும், நிகழ்ச்சிகளைப் பார்ப்பதையும் நிறுத்திக்கொள்ள முடிவு செய்திருந்தேன்.

மீண்டும் சில முறை நானில்லாத போது என் மனைவி யாருடனோ பேசிக்கொண்டிருக்கிறாள், யாரோ வீட்டிற்கு வந்துபோகிறான் என்ற எண்ணம் வந்தது.

இதில் என்னை மிகவும் குழப்பும் விஷயம் என்னவென்றால் என் மனைவி அவனுடன் விட்ட பேச்சை நான் வந்தவுடன் என்னிடம் தொடர்வதைப் போலப் பேசுவதுதான்!

மிக இயல்பாக அவள் அதைச் செய்வாள்!

சில சமயம் நான் நுழைந்தவுடன் அவள் முகத்தில் ஒரு குழப்ப ரேகை வந்துபோகும், ஆனால், சட்டென சகஜமாய் தொடர்வாள்!

இன்றும் அப்படித்தான், இரவுணவிற்கு முன் நான் குளித்துவிட்டு வந்து எங்கள் அறையில் உடையணிந்து கொண்டிருந்தேன், அடுத்திருந்த சமையலறையில் அவளது குரல் கேட்டது, கூடவே அவனது குரலும்!

அவனுக்குத் தோசை பரிமாறிக்கொண்டே அளவளாவிக்கொண்டிருந்தாள்!

இது நிச்சயம் என் கற்பனை அல்ல! அவர்கள் இருவரின் குரலும் எனக்குத் தெளிவாகக் கேட்டன. அவன் ஏதோ சொல்ல, அவள் சிரிக்க...

எனில் இடையில் இருந்த அமைதி அவர்களின் திட்டமா? அன்று நான் ஏறக்குறைய அவனைக் கண்டுபிடித்துவிட்டேன் என்பதால் சில நாள்கள் அடக்கி வாசித்திருக்கிறார்களா!

என் உடலில் ஜிவ்வென்று ஒரு சூடேறியது, இரண்டில் ஒன்று பார்த்துவிடுவது என்று நான் ஓசைப்படுத்தாமல் எங்கள் அறையைக் கடந்து, சரேலெனச் சமையலறைக்குள் புகுந்தேன்...

இதோ... உண்ணும் மேசையில் அவன் அமர்ந்திருக்கிறான்... கண்ணிமைக்கும் நேரந்தான், நான் வந்ததை உணர்ந்தவன் சட்டென எழுந்து ஓடினான்... இல்லை...

‘எழுந்து ஓடினான்’ என்று சொல்ல முடியாது, ‘தாவினான்’ என்றுதான் சொல்ல வேண்டும்... சடாரெனச் சன்னலை நோக்கித் தாவினான்...

அவனைக் காணவில்லை!

நானும் அவனைத் தொடர்ந்து சன்னலை நெருங்கினேன்... சன்னல் மூடியிருந்தது!

உண்ணும் மேசை இருக்கும் பகுதியில் வெளிச்சம் அவ்வளவாக இருக்காது... அழகுக்காக அப்பகுதியில் பொன்னிற ஒளி உமிழும் விளக்குகள் நிறைந்த ஒரு சரவிளக்கை மாட்டியிருந்தோம்... அதன் மங்கிய ஒளியில் நான் என்ன பார்த்தேன் என்று எனக்குச் சில நொடிகள் ஒன்றும் புரியவில்லை...

நாற்காலியில் இருந்தவன் ஒரு பூனையைப் போலச் சன்னலை நோக்கித் தாவினான்... பிறகு அவனைக் காணவில்லை! சன்னலும் சாத்தியே இருக்கிறது!

நான் ஆழ்ந்த யோசனையில் சன்னலை வெறித்தபடி நின்றிருந்தேன். அதன் கண்ணாடியில் என் முகம் வெளிக்காட்சியோடு கலந்து தெரிந்தது... அந்தக் குரூரப் புன்னகை... அதை எப்படிச் சொல்வது?

உண்மையில் அதுதான் என் முகமா? நாந்தான் அப்படிக் குரூரமாகச் சிரிக்கிறேனா?

அரைகுறை வெளிச்சத்தில் தெரிந்த அந்த அரைகுறை பிம்பத்தில் என்னவோ ஒன்று...

எது நிஜம்? எது என் கற்பனை?
சட்டென என் மீது ஏதோ பட்டது... மின்சாரம் தாக்கியதைப் போல என் உடல் தூக்கிவாரிப் போட... கண்களில் பொறிபறக்க... உடல் உதற, கைகள் நடுங்க, கால்கள் தளர...

நான் அப்படியே சரிந்து தரையில் அமர்ந்தேன்...

சில நொடிகள்... நான் ஆசுவாசப்படுத்திக்கொண்டு பார்த்தபோது, என் மனைவி அருகில் நின்றிருந்தாள்!

அவளது முகத்தில் அப்படியொரு
குழப்பம், அச்சம், கலக்கம்... அவள் கண்கள் என்னை பார்த்த பார்வையில் ஆயிரம் கேள்விகள்!

”அ- அர்ஜுன்... என்ன ஆச்சு டா? எதுக்குத் திடீர்னு எழுந்து ஜன்னல் பக்கம் வந்த? ஏன் அப்படி வெறிச்சுப் பார்த்துட்டு நின்ன? நான் தொட்டதும் ஏன் இப்படிப் பதறிப் போயி விழுந்த?”

நான் எதற்கும் பதில் சொல்லாமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன்...

என் மனத்தில் அப்போது நிகழ்ந்ததைச் சொற்களில் வருணிப்பது கடினம்! தி.நகர் ரங்கநாதன் தெருவில் திடீரென ஒரு பாம்பு நுழைந்தால் அந்தப் பெருங்கூட்டமான மனிதர்கள் எப்படி அங்குமிங்கும் சிதறி ஓடுவார்கள்? அப்படி எண்ணங்களின் ’பிரவுனியன் மோஷன்’ என் மனத்தில் அப்போது! ஏதேதோ கேள்விகள், விடைகள், கருத்துகள், குழப்பங்கள்... தலைக்குள் ஆயிரம் தும்பிகள் மொய்ப்பதைப் போல ஒரு ரீங்காரம்...

அதன் உந்தலில் அவளை நேரடியாகக் கேட்டுவிடுவது என்று முடிவு செய்தேன். கேட்டேன்.

அவள் நொறுங்கிப் போனாள்!

சடசடவெனப் பேசினாள், சட்டென அமைதியானாள், அழுதாள், மீண்டும் சடசடவெனப் பேசினாள்...

***​

இருவரும் சோர்ந்து படுத்திருந்தோம்.

ஒருவகையில் இது என் மனநோய் என்று இருவருமே முடிவுகட்டியிருந்தோம்.

இருவருக்கும் தூக்கம் பிடிக்கவில்லை... விட்டத்தை வெறித்தபடிப் படுத்திருந்தோம்...

ஏதோ நினைத்துக்கொண்டவளாக என் மனைவி சட்டென அவளது போர்வையை எடுத்து என் மீது வீசினாள், அது வீசப்பட்ட வேகத்தில் விரிந்து என்னைத் தாண்டி என் அருகில் விழுந்--

என் இதயம் ஒரு கணம் அப்படியே தம்பித்து நின்றது... போர்வை முழுதாகத் தரையில் விழவில்லை, நிற்கும் ஒரு ஆளின் மீது விழுந்ததைப் போல, கூடாரத்தைப் போலக் காற்றில் நின்றது, அதற்குள் ஒரு ஆள் நிற்பதைப் போன்ற வடிவம்...

முழுதாய் ஒரு நொடிகூட இல்லை, நான் கத்த எத்தனித்தேன், வாய் வரவில்லை...

அந்த உருவம் சட்டெனப் போர்வையை என் மீது வீசிவிட்டுக் காற்றைப் போல வாசல்பக்கமாய் ஓடிவிட்டது... அது சென்றபின்தான் என்னால் கத்த முடிந்தது...

“ஏய்ய்ய்ய்...” என்றேன், எழுந்து அமர்ந்தேன்!

என் மனைவியும் திடுக்கிட்டு எழுந்தாள், நான் நடந்ததை அவளுக்கு விளக்க முற்படுவதற்குள் அது மீண்டும் வரப்போகிறது என்பதை உணர்ந்தேன்... அதே நொடி, அது போன வேகத்திலேயே மீண்டும் காற்றைப் போல வந்தது...

சரேலென, காற்றில் தூசுப் படலம் வருவதைப் போல... ஒரு தடகள வீரன் ஓடிவருவதைப் போல, ஆனால், நூறு மடங்கு வேகத்தில்...

அது வந்த வேகத்தில் எங்களை நெருங்கவும், நான் எழுந்து நிற்கவும், அது என்னைத் தள்ளிவிடவும், நான் வெட்டப்பட்ட மரம்போலச் சரிந்து விழுந்-

வியர்வையில் குளித்திருந்தேன்... உடம்பெல்லாம் ஒரு நடுக்கம், புழுக்கமும் குளிரும் சேர்ந்த ஒரு சூழல்...

நான் என் படுக்கையில் மல்லாந்து படுத்திருந்தேன்...

சுற்றும் முற்றும் பார்த்தேன், என் படுக்கையறையின் சன்னலும் கதவும் சாத்தித்தான் இருந்தன.

அருகில் என் மனைவி இல்லை!

அவள் என்னோடு சண்டைபோட்டுக்கொண்டு சென்றுவிட்டாள், நேற்றா? முந்தாநாளா? நினைவில்லை!

வீட்டில் நான் தனியாக இருக்கிறேன்... நிச்சயம் இங்கு யாரோ இருக்கிறார்கள்!

என்னால் அதை நன்றாக உணர முடிந்தது!

நான் எங்குச் சென்றாலும் என்னை யாரோ கவனிக்கின்றார்கள் என்பதை நான் உணர்ந்தேன்!

படுக்கையிலேயே மெல்ல எழுந்து அமர்ந்தேன். அருகில் இருந்த மேசை விளக்கை எரியவிட்டு, நீர் புட்டியை எடுத்துக் கடகடவெனக் குடித்தேன், என் கைகள் நடுங்கிக்கொண்டிருந்தன...

குளிர்ந்த நீர் என்னுள் செல்லச் செல்லச் சிறுது ஆறுதலாய் இருந்தது... ஆசுவாசமாய் இருந்தது!

புட்டியை மூடி அருகில் வைத்துவிட்டுக் கைபேசியை எடுக்கப் போனேன். அப்போதுதான் எதிரில் இருந்த பீரோ கண்ணாடியைப் பார்த்தேன்...

அதில் இருந்த என் பிம்பம் என்னையே பார்த்துக்கொண்டிருந்தது...

அதன் வழமையான அந்தக் குரூரப் புன்னகையுடன் என்னைப் பார்த்து ‘என்ன?’ என்பதைப் போலத் தலையை ஒரு சிலுப்பு சிலுப்பியது...

எனக்குக் குலைநடுங்கியது!

ஒருவேளை நானே எனக்குத் தெரியாமல் அனிச்சையாய் என் தலையை அசைத்தேனோ?

என் குழப்பத்திற்கு மேலும் இடங்கொடுக்காமல் என் பிம்பம் என்னைப் பார்த்துக் கையசைத்தது...

நான் என் கையை அசைக்கவில்லை... எனக்கு உறுதியாகத் தெரியும்...

இதுவும் கனவா?

இல்லை! இப்பொழுதுதான் ஒரு கனவிலிருந்து எழுந்து அமர்ந்திருக்கிறேன்... இது நிச்சயம் கனவல்ல... எனக்கு உறுதியாகத் தெரிந்தது...

நான் யோசித்துக்கொண்டிருக்கும் போதே கண்ணாடியில் எனது பிம்பம் படுக்கையை விட்டு எழுந்து என்னை நோக்கி வந்தது...

மெல்ல பீரோவை நெருங்கியது... நான் அசைவற்றுத் தம்பித்து அமர்ந்திருந்தேன்...

எனது பிம்பம் பீரோவை நெருங்கி வந்து கண்ணாடியைத் தொட்டது...

கண்ணாடி ஒரு நீர்ப்படலத்தைப் போலச் சலசலத்தது... எனது பிம்பம் மிக இலாவகமாக அதைத்தாண்டி வெளியே வந்தது...

முற்று முழுதாக எனக்கு முன் என்னைப் போலவே இன்னொரு நான்!

எனது கண்ணாடிப் பிம்பம் உயிரும் உடலும் பெற்று எனக்கு முன் நின்றது!

”அர்ஜுன்... நம்மோட ஆராய்ச்சி வெற்றி பெற்றுவிட்டது... கண்ணாடிகளின் மின்-காந்தப் புலத்தடையை நாம தாண்டிட்டோம்... நான் உன் யூனிவர்ஸுக்குப் பலமுறை வந்துட்டேன்... வா, என்னோட யூனிவர்ஸுக்கு வா... கமான் அர்ஜுன்...”

என் பிம்பத்தைப் பின்தொடர்ந்து நான் கண்ணாடி வழியாக அதன் பேரண்டத்திற்குள் நுழைந்தேன்... நிழல் பேரண்டம்!
*************

வணக்கம் நண்பர்களே...

கதையைப் படித்ததற்கு நன்றி! உங்கள் கருத்து / விமர்சனத்தைத் தவறாமல், தயங்காமல் பகிர்ந்துகொள்ளுங்கள்...

5வது கதையோடு இந்த திகில் வரிசைக்கு ஒரு இடைவெளிவிட்டு, வேறு வரிசைகளை முயல இருக்கிறேன்... 5வது கதையின் தலைப்பு ‘யட்சி’... விரைவில் யட்சியுடன் உங்களைச் சந்திக்கிறேன்...

உங்களின் தொடர்ந்த ஆதரவிற்கு நன்றி...

நன்றி,
வி :) 🙏 🙏
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
கொஞ்சமும் பிசிறே இல்லாத நடை. யூகிக்க முடியாத க்ளைமாக்ஸ். நகம் கடிக்க வைத்த களம். அடுத்தது என்ன என்று எண்ணிக் கொண்டே படித்ததில் பாரலல் யுனிவர்ஸ் கான்செப்ட் வந்தவுடன் பக்கென்று சிரித்து விட்டேன் சகோ. இப்போதுதான் நமது தளத்தில் வந்து கொண்டிருக்கும் கருந்துளை, குவாண்டம் தியரி, சார்பியல் தியரி என்று கலந்து கட்டி அடித்ததில் மேல்மாடி கொஞ்சம் சூடேறி இருந்தது. இதில் இங்கும் parallel universe என்று படித்தவுடன் குபீர் தான்.
அதுசரி, கண்ணாடியின் மின்காந்த புலத்தடையை தாண்டினால் மற்றொரு யுனிவர்சுக்கு பயணம் செய்ய முடியுமா? அது கண்ணாடியா அல்லது வோர்ம் ஹோலா? அல்லது வேறொரு டைமென்ஷனா?
அல்லது அதுவும் அர்ஜுனின் கற்பனையா? அவனுக்கு மன சிதைவா?
நிறைய கேள்விகளை எழுப்புகிறது சகோ
 




இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe

இளநிலா

முதலமைச்சர்
SM Exclusive
Joined
May 9, 2020
Messages
8,284
Reaction score
16,794
Location
Universe
Unakku bayama?
Of coarse

ஏன் நானும் மனித பிறவிதானே எனக்கும் அச்சம்,மடம்,நானம்,பயிர்பு எல்லாம் இருக்கும்தானே😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,488
Reaction score
44,928
Location
India
Of coarse

ஏன் நானும் மனித பிறவிதானே எனக்கும் அச்சம்,மடம்,நானம்,பயிர்பு எல்லாம் இருக்கும்தானே😉😉😉😉😉😉😉😉😉😉😉😉😉
Adiyei eruma tamil than thappa type panrenu patha english kuda thappu🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️

Unakku? நாணம்? பயிர்ப்பு? Ithellam irukku?🤦🏻‍♀️🤦🏻‍♀️🤦🏻‍♀️
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top