• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

💕நெஞ்சம் மறப்பதில்லை!💕.12.

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

S.M.Eshwari.

அமைச்சர்
SM Exclusive
Joined
Jun 7, 2021
Messages
2,164
Reaction score
6,070
Location
India
நெஞ்சம் மறப்பதில்லை.12.

"நீங்க சொல்லுற மாதிரி எல்லாம் பண்ண முடியாது சார்."

"நான் வெளிய போகுறதுக்கு என்ன பண்ணனும்னு மட்டும் சொல்லுங்க போதும்."

"அது பெரிய டாக்டர்கிட்ட தான் கேக்கணும். நானும் ரெண்டு மூனு நாளா இதைத்தானே சார் சொல்லிக்கிட்டு இருக்கேன்."

"என்னால இங்க இருக்கவே முடியாது. யோசிச்சு யோசிச்சே தலையே வெடிச்சுரும் போல இருக்கு."

"அதுக்கு நான் என்ன சார் பண்ணமுடியும்? நான் வெறும் நர்ஸ் மட்டும்தான் சார். பேஷண்ட டிஸ்சார்ஜ் பண்ணுறதெல்லாம் டாக்டர் தான் முடிவு செய்யணும்."

"அவர்தான் வரவே மாட்டேங்கறாரே."

"சார் இது கவர்மெண்ட் ஆஸ்பத்திரி. நீங்க நினைச்ச நேரமெல்லாம் வரமாட்டாங்க."

"ப்ளீஸ்... என் நிலைமை புரியலையா உங்களுக்கு? இங்கேயே இருந்தா பைத்தியம் புடிக்கிற மாதிரி இருக்கு. என்னைய வெளிய விடுங்க." என்று மெதுவாக ஆரம்பித்து உச்சஸ்துதியில் கத்தினான் பொறுமையிழந்து.

மருத்துவமனை வராண்டாவில் நடந்து கொண்டிருந்த சண்முகமும் ஆதியாவும் அந்த சத்தம் கேட்டு, அறையின் உள்ளே ஏதேச்சையாக எட்டிப் பார்க்க, அங்கு அவர்கள் பார்த்தது, மருத்துவமனை உடையில் தலையை இருகைகளால் தாங்கியபடி, காலில் கட்டோடு, கட்டிலில் அமர்ந்திருந்தவனைத்தான்.

வாரிசுச்சான்றிதழுக்காக அரசு மருத்துவர் கையெழுத்து வாங்குவது தொடர்பாக, அன்று இருவரும் மருத்துவமனை வந்திருந்தனர்.

இவர்களைக் கண்ட அந்த செவிலியர் சிறிது யோசித்துவிட்டு, "இவரை பாக்கதான் வந்தீங்களா?" எனக் கேட்டார். அன்று பெற்றோரின் இழப்பால் கதறியழுதவள் முகம் அவருக்கு நன்கு பதிந்து இருந்தது.

"சார் ஏதாவது விபரம் வேணும்னா இவங்களைக் கேளுங்க."

சண்முகமும்‌ ஆதியாவும் ஒன்றும் புரியாமல் பார்க்க, "நீங்க... இவரைப்பாக்க தானே வந்தீங்க… உங்க அப்பா அம்மா ஆக்ஸிடென்டான அன்னைக்குதான் இவருக்கும் ஆக்ஸிடென்ட் ஆச்சும்மா." என்று கூறியவர் அவனைப் பார்த்து,
"ஏதாவது தெரியணும்னா இவங்களை கேட்டுத் தெரிஞ்சுக்கோங்க." என்று கூறி விட்டு‌, அவனுக்குரிய மருந்து மாத்திரைகளை வைத்துவிட்டு வெளியேறிவிட்டார்.

ஒருவேளை இவர்களுக்கு இவனைத் தெரிந்திருக்கும். அதனால் பார்க்க வந்திருப்பதாக எண்ணிக் கொண்டார்.

அவர்களைப் பார்த்தவனது முகத்தில் இருந்த ஆர்வம் இவர்களை குழப்பியது.

"நான் யார்னு உங்களுக்குத் தெரியுமா?" இந்தக் கேள்வியில் தெரிந்த பரிதவிப்பும், ஆர்வமும் மேலும் இவர்களைக் குழப்ப ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

நீ யார்? என்று கேட்பவர்களைப் பார்த்திருக்கிறோம். நான்‌ யார் தெரியுமா? என்ற அகம்பாவக் கேள்வியையும் கேட்டிருக்கிறோம்.

ஆனால் ''நான் யாரென்று சொல்லுங்களேன்." என்று பரிதவிப்பாக கேள்வி கேட்பவனைப் பார்த்தவர்களுக்கு, திருவிழாவில் தொலைந்த சிறுபிள்ளையாக, யாராவது என் பெற்றோரைக் காட்டுங்களேன் என்றிருந்தது.

முகத்தில் தெரிந்த முதிர்ச்சி, பார்வையில் இல்லை. பார்வையில் சிறு அலைபாயல். எதையோ தேடும் அலைக்கழிப்பு.

விபத்து நடந்த இரவு, ஆம்புலன்ஸில் ஏற்றிவரப்பெற்றவர்களில் இறந்தவர்கள் மார்ச்சுவரிக்கும், காலில் எலும்பு முறிவுடன் மயக்க நிலையிலும் இருந்தவனை தீவிரசிகிச்சைப் பிரிவிற்கும் என எடுத்து செல்லப்பட்டனர்.

அவனைப் பரிசோதித்துப் பார்த்ததில் இடது கனுக்காலில் எலும்பு முறிவு அறியப்பெற்று, அதற்கான சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. எனினும் அவன் மயக்கம் மட்டும் தெளியவில்லை. உடலில் வேறு எங்கும் பெரிய காயமோ பாதிப்போ எதுவுமில்லை. காலில் எலும்புமுறிவும், சிறிது நாள் ஓய்வில் சரியாகும் நிலைமைதான். எனினும் நினைவு மட்டும் திரும்பவில்லை. மூன்று நாட்களாக கண்விழிக்காமல் இருந்தவனது நிலைமை கோமாவாக இருக்குமோ என்ற சந்தேகத்தை மருத்துவர்களுக்கு ஏற்படுத்திய நிலைமையில் தான், நான்காம் நாள் கண் விழித்தான்.

அவனைத் தேடியும் யாரும் வரவில்லை. இந்த நிலைமையில் அவனுக்கான சிகிச்சை மந்த நிலையில்தான் நடந்தது.

கண் விழித்தவனுக்கு இருக்கும் இடமும் தெரியவில்லை. இருக்கும் நிலைமையும்‌ பிடிபடவில்லை. காலின் வலி மட்டும் அவனுக்கு அடிபட்டிருப்பதை உணர்த்தியது.
அமைதியாகவே இருந்தான்.

செவிலிப்பெண் வந்து அவன் விழித்திருப்பதைக் கண்டு ஆச்சரியத்துடன், "கண்ணு முழிச்சிட்டீங்களா?" எனக் கேட்க பதில் பேசவில்லை. தன்னைச் சுற்றி இருப்பவைகளைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான்.

அவன் அமைதியாக இருப்பதைக் கண்ட செவிலியரும், "சார்… உங்க பேரென்ன? அட்ரஸ் ஃபோன் நம்பர் சொல்லுங்க. உங்க ஃபேம்லிக்கு இன்ஃபார்ம் பண்ணனும்." என்று சற்று சத்தமாகக் கேட்டார்.

அப்பொழுதுதான் பேரா! ஃபேமிலியா! என யோசித்தான்.
அவனின் அமைதி அவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்த, அவரும் இவன் கண் விழித்ததை மருத்துவருக்கு தெரிவிக்க சென்றுவிட்டார்.


மருத்துவரும் வந்து சோதனை செய்தவர், "உன் பேரென்னப்பா." எனக் கேட்டார்.
அவனிடமிருந்து பதில் வராமல் போக, "தம்பி... உனக்கு ஆக்ஸிடென்ட் ஆகி நாலுநாள் ஆச்சு. கால்ல அடிபட்டிருக்கு. இன்னைக்கு தான் கண்ணு முழிச்சிருக்க. உன்னைத் தேடியும் யாரும் வரல. உன்னப்பத்தின விவரங்களை சொன்னா, உன் சொந்தக்காரங்களுக்கு தகவல் சொல்லிவிடலாம்." எனப் பொறுமையாக சிறுபிள்ளைக்குச் சொல்வது போல் சொல்லிக் கொண்டிருந்தார்.

அவரை ஏறிட்டுப் பார்த்தவன், மருத்துவர் கூறிய விபரங்களை சேகரித்து யோசித்துப் பார்த்தான். எனினும் எவ்விபரமும் அவன் நினைவுக்கு வரவில்லை.

அவரைப் பார்த்து இடவலமாகத் தலையாட்ட, என்னவென்று மருத்துவர் கேட்க, "எனக்கு... எதுவும்... நினைவுக்கு வரவில்லை." என்று கூறினான். நான்கு நாட்களாக பேசாத குரல்வளை பிசிரடிக்க, இறுகிய குரலில் தட்டுத்தடுமாறி பதிலுரைத்தான்.
மருத்துவரும் சற்று சிந்தித்துவிட்டு, "இப்ப தானே கண்ணு முழிச்சிருக்க. கொஞ்சம் நேரம் போகட்டும். அப்புறம் வந்து பாக்குறேன்." என்று கூறிச்சென்று விட்டார்.


தனித்திருந்தவன் தன்னைச் சுற்றி மீண்டும் ஆழ்ந்து கவனிக்க, அது மருத்துவமனை என்பதும், தனக்கு சிகிச்சை நடைபெறுகிறது என்பதும் புறிய ஆரம்பித்தது. எனினும் எவ்வளவு யோசித்தும் தான் யாரென்பது மட்டும் பிடிபடவில்லை. ஆழ்ந்து யோசிக்க யோசிக்க தலைவலி தான் மிஞ்சியது.

அது அரசு மருத்துவமனை. துணைக்கும் யாருமில்லை. உடனிருப்பவர்களின் உந்துதலைப் பொருத்துதான் கவனிப்பும் இருக்கும். அங்கு பிரசவம், குடும்ப கட்டுப்பாடு மற்றும் ஆரம்பகட்ட சிகிச்சைகள் மட்டுமே. சிறப்புசிகிச்சைக்கோ, மேல்மட்ட அறுவை சிகிச்சை முதலியவற்றிற்கு கோவை ஜி.எச்.தான் அனுப்பி வைக்கப்படுவர். விபத்து நடந்த இடம் அவினாசிக்கும் கோவைக்கும் இடையில் என்பதால் அருகிலிருந்த அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருந்தனர்.

மருத்துவருக்கும் அவன் நிலைமை சிறிது சந்தேகத்தை ஏற்படுத்தியது. எனினும், செவிலியரிடம், " ரெண்டு நாள் போகட்டும் பார்க்கலாம்." எனக் கூறிவிட்டார்.

நேரந்தவறாமல் மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. முதல்நாளில் இருந்த அமைதி அவனுக்கு மறுநாளில் இல்லை. சிந்தித்தல் அவனை மன உலைச்சலுக்கு ஆட்படுத்தியது. அதன் விளைவு அவனுக்குக் கோபமும், நிதானமின்மையையும் ஏற்படுத்தியது.

தன்னைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும்‌ என்ற ஆர்வம் சிலசமயங்களில் கோபக்காரனாகவும், இயலாமை சிலசமயங்களில் அவனைக் குழந்தையாகவும் ஏங்க வைத்தது.

இந்த நிலைமையில் தான் சண்முகம் மற்றும் ஆதியாவைப் பார்த்தவன் இவர்கள் மூலம் தன்னைப்பற்றி அறிந்து கொள்ள முடியுமா? என்ற எண்ணமும், ஒருவேளை தன்னைத் தெறிந்தவர்களோ என்ற எதிர்பார்ப்பும் தோன்றியது.

அவனைப் பார்த்தவர்களுக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை. ஒரு வாரமாக ஷேவ் செய்யப்படாத முகம். ஒருவாரம் படுக்கையில் இருந்ததினால் சோகை படர்ந்த நிறம். அவற்றையும் மீறிய ஏதோ ஒரு தெளிவும், வசீகரமும் அவன் முகத்தில். அமைதியாக அறையை விட்டு வெளியேறத் திரும்பினர்.

"சார்! ப்ளீஸ்… இந்த நிமிசத்துல இருந்து எனக்கு தெறிஞ்சவங்கனு பார்த்தா நீங்க ரெண்டு பேருதான். வேற யாரும் எனக்கு ஞாபகத்துல வரலை. இங்க இருந்து வெளியே போனாலாவது ஏதாவது தெரியுமானு தெரியல. அதுக்கு ஏதாவது ஹெல்ப் பண்ண முடிஞ்சா பண்ணுங்க." எனக் கேட்டவனிடம்,

"நாங்க டாக்டரைப் பார்த்துவிட்டு வந்துர்றோம் தம்பி." எனக் கூறிவிட்டு வெளியேறினர்.

அவனின் ஏக்கப் பார்வை, இளகிய மனம் கொண்ட சண்முகத்தையும், தன்னுடைய துக்கத்தைத் தனியாக அனுபவிப்பவளுக்கு அவனின் யாருமற்ற தனிமையும், வெவ்வேறு விதமாக இருவரையும் பாதித்தது.

மருத்துவரை சந்தித்தவர்கள் வந்த வேலையை‌ முடித்துக்கொண்டு அவனைப்பற்றி விசாரித்தனர்.
மருத்துவரோ, "ரெண்டுமூனு நாளா கவனிச்சதுல அந்தப் பையனுக்கு அம்னீஷியாவா இருக்கலாம்னு சந்தேகமா இருக்கு." என்று கூறினார்.

"அதுக்கான ட்ரீட்மெண்ட் கொடுக்கலையா சார்?" என ஆதியா கேட்க,

"அதுக்கு கோயம்புத்தூர் ஜி.எச்.தாம்மா போகணும். அங்கதான் தலையில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டிருக்கானு ஸ்கேன் பண்ணி பாக்க முடியும். ஹெட் இன்ஜூரி ஏதாவது இருக்கானு பாக்கணும். அதுக்கப்புறம் தான் சைக்யாட்ரிஸ்ட்கிட்ட ட்ரீட்மெண்ட் எடுக்கணும்."

"அப்ப அங்க கொண்டு போக வேண்டியது தானே சார்?"

"இது ஆக்ஸிடென்ட் கேஸ்மா. இன்னும் யாரும் தேடி வரல. ஹாஸ்பிடல் மாத்துனா போலிஸ்க்கு இன்ஃபார்ம் பண்ணனும். நிறைய ஃபார்மாலிட்டிஸ் இருக்கு. உறவுக்காறங்க யாராவது வந்துட்டா எல்லாம் அவங்க பாத்துப்பாங்க." என்றார் தன் பொறுப்பு மறந்தவராக.

"யாரும் தேடி வரலைனாலோ, இல்ல தேடிவர லேட்டாச்சுனாலோ என்ன டாக்டர் பண்ணுவீங்க?" என்றாள் அவர் பதிலில் எரிச்சலுற்றவளாக அதைக் காட்டி கொள்ளாமல்.

"அதை அப்புறம் தாம்மா யோசிக்கணும். நினைவு வரலைனா ட்ரீட்மென்ட் கு வேற ஹாஸ்பிடல் தான் அனுப்பணும்." என்றார் விட்டேத்தியாக. இங்கு வேறு ஹாஸ்பிடல் எனக் குறிப்பிட்டது மனநல மருத்துவமனை என்பது தாமதமாகத்தான் அவர்களுக்குப் புரிந்தது.

இவரிடம் பேசுவது வீண் என்ற எண்ணத்துடன் இருவரும் வெளியேறினர்.

"என்ன அங்கிள் இவரு இப்படி பேசுறாரு? அங்க அவங்களைப் பார்க்கவும் ரொம்ப பாவமா இருக்கு." என்று ஆதியா கூற,

"அதை நீ சொல்றியாம்மா?"

"எதை அங்கிள்?"

"இல்ல… ஒரே சமயத்துல பெத்தவங்க ரெண்டு பேரையும் இழந்து நிக்கிற. நீ அந்தப்புள்ளயப் பாத்து பரிதாபப்படுற."

"இறந்து போறதுங்கறது முடிவு தெரிஞ்ச சோகம் அங்கிள். ஆனா தொலைஞ்சு போறதுங்கறது அப்படி இல்லை." என்றாள் ஆதியா.

இறப்பைப் பொறுத்தவரையிலும் துக்கம் என்பது முடிவு தெறிந்த ஒன்று. ஆனால் குடும்பத்தில் ஒரு நபர் மாயமாதல் என்பது என்றுமே நிகழ்கால துக்கம். அவர் கிடைக்கும் வரைக்குமோ அல்லது அவரைப்பற்றிய தகவல் அறியும் வரைக்குமே அது நீடிக்கும். நல்லா இருக்காங்களா இல்லையா? ஏதாவது ஆபத்துல சிக்கி இருக்காங்களா? உயிரோடு இருக்காங்களா? இப்படி ஆயிரம்‌ கேள்விகள் மனதிற்குள் ஓடும். அதுவும் காணாமல் போன நபர் பெண்ணாக இருந்து விட்டால் பெற்றவர்களின் நிலைமையை கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.

"இவரு குடும்பத்துல இருக்கறவங்க நிலைமைய நினைச்சா இன்னும் கவலையா இருக்கு. இவரோடு நிலைமை தெரியாம அவங்களும், அவங்களுக்கு தகவல் கொடுக்க முடியாம இவரும் இங்க இப்படி இருக்கறது கொடுமை அங்கிள்."

"எனக்கும் அதுதாம்மா‌ யோசனையா இருக்கு. அவனுக்கும் சின்ன வயசு.
நம்மகிட்டேயிருந்து ஏதாவது உதவி கிடைக்கும்னு வேற நம்பிக்கிட்டு இருக்கான்."

இருவரும் பேசிக்கொண்டே அவனிருந்த அறையைக் கடக்க, சன்னல் வழியாக இவர்களைக் கண்டவன்,"சார்…" என்று கத்தி அழைத்தான். அவன் பார்வை முழுதும் வாயிலை நோக்கி இவர்களை எதிர்பார்த்தே இருந்தது.

குரல் கேட்டவர்கள் இருவரும் அறைக்குள் செல்ல,
"ஏதாவது விபரம் தெரிஞ்சதா. நான் வெளியே போக முடியுமா?" எனக் கேட்க இருவரும் மறுப்பாகத் தலையசைத்தனர்.

அவர்களுக்கும் அவன் நிலைமையை எப்படி விளக்குவது என்று விளங்கவில்லை.

"சார்… என்னை எப்படியாவது டிஸ்சார்ஜ் பண்றதுக்கு மட்டும் ஹெல்ப் பண்ணுங்க. எனக்கு இங்க இருக்கவே பிடிக்கலை."என்றான் இவர்களிடம்.

ஹாஸ்பிடல் வாசமும், வாசனையும் யாருக்குதான் பிடிக்கும்.

"சரிப்பா. நான் என்ன பண்ணனும்னு விசாரிச்சுட்டு, உனக்கு ஏதாவது உதவ முடியுமானு பாக்குறேன். அதுவரைக்கும் அமைதியா நிதானமாக இரு. பதட்டப்படாம யோசிச்சா உனக்கே கூட உன்னைப் பத்தின ஞாபகம் திரும்பலாம். எதுக்கும் டென்ஷனாகாதே." என்று ஆறுதல் கூறினார்.

அவன் எதிர்பார்ப்பதும் இது போன்ற ஆறுதலைத் தானே. சிறு ஈரம் போதும். வறண்ட நிலத்தில் புல் தழைய. அது போலத்தான் சண்முகத்தின் வார்த்தைகள் அவனுக்கு நம்பிக்கையை விதைத்தது. அது அவன் முகமலர்ச்சியிலும் பிரதிபலித்தது.

வெளியேற முற்பட்டவர்களிடம், "சார் உங்க பேரு?" எனக்கேட்டான்.

"இந்தப்புள்ள பேரு ஆதியா. என் பேரு சண்முகம்." என்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.

"இப்போதைக்கு எனக்குத் தெரிந்த இரண்டு பெயர்கள்." எனக் கூறிக்கொண்டான்.

"உங்க அப்பா அம்மா எப்படி இருக்காங்க?" என ஆதியாவைப் பார்த்து விசாரிக்க,

"அவங்க இப்ப இல்லை." எனக் கூறினாள் வெறுமை கலந்த குரலில்.

'ஓ…! என்னைவிட மோசம் போலிருக்கே இவங்க நிலைமை. எனக்கு சுயம் மட்டும்தான் தெரியலை.' என எண்ணிக் கொண்டான்.

இருவருக்குமே அடுத்தவர் துன்பம் பெரிதாகப்பட்டது.

வெளியே வந்தவர்கள், ஒரு செவிலியரை அழைத்து விபரம் கேட்க, "யாராவது கார்டியனாப் பொருப்பேத்துகிட்டு, போலிஸ் ஸ்டேஷன்லயும், ஹாஸ்பிடல்லயும்
எழுதிக் கொடுத்துட்டு கூட்டிட்டுப் போகலாம்." என்று கூறினார்.

சண்முகத்திற்கும் இது ஒன்றும் புதிதல்ல. லஷ்மியிடம் பேசிவிட்டு அடுத்து செய்வது பற்றி யோசிக்கலாம் எனப் பேசிக்கொண்டு இருவரும் வீடு திரும்பினர்.

சண்முகத்தின் வீடு ஐந்து ஏக்கர் நிலத்தின் நடுவே அமைந்த தோட்டத்துவீடு. லஷ்மியின் பிறந்த வீட்டு சீதனமாக அவருக்கு நிலம் வழங்கப்பட, அதிலேயே வீட்டைக்கட்டிக் கொண்டு விவசாயமும் செய்து வருகின்றனர்.

சண்முகத்திற்கு பிரிந்து வந்த சொத்து, சாலையோரம் என்பதால் அதில் கடைகளைக் கட்டி வாடகைக்கு விட்டுவிட்டு, அதில் ஒன்றில் அவர் ஹார்டுவேர் நடத்திவருகிறார். மீதி இடத்தை தென்னை மரங்களை நட்டு தோப்பாக்கிவிட்டார்.

ஆதியாவுடன் வீட்டுக்கு வந்தவர் அவளை சாப்பிட வைத்து பாப்பாத்தியுடன் ஸ்கூட்டியில் ஆதியாவின் வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

பிள்ளைகளோடு சண்முகமும் லஷ்மியும் இரவு உணவு வேலையை முடித்துவிட்டு, படுக்கைக்கு அனுப்பினர். இருவரும் வீட்டுத் திண்ணையில் வந்து காற்றோட்டமாக அமர்ந்தனர்.

சண்முகம் இன்று மருத்துவமனையில் நடந்ததைப் பற்றியும், அவனைப்பற்றியும் கூறிக் கொண்டிருந்தார்.
"ஏங்க...அந்தப்பையனுக்கு எத்தனை வயசு இருக்கும்?"

"நமக்கு கல்யாணம் ஆனபிறகு காலாகாலத்துல குழந்தை பிறந்திருந்தா அந்தப் பையன் வயசுதான் இருந்திருக்கும்."

இதைக் கேட்டவுடன் லஷ்மி யோசிக்கவே இல்லை. அவனுக்கு தம்மால் ஏதாவது உதவ முடியுமா என யோசிக்க ஆரம்பித்து விட்டார்.
அன்பு கொண்ட மனம் அன்பு செய்தலைக் தவிர வேறு எதையுமே யோசிக்காது.


அன்பிலார் எல்லாம் தமக்குரியர்
அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு.
 




Last edited:

Priyakutty

அமைச்சர்
Author
Joined
Nov 22, 2021
Messages
3,081
Reaction score
3,130
Location
Salem
ஓ... எதிர் ல வந்த கார் ல இருந்தது சூர்யா அஹ்....

ஞாபகம் மறந்துட்டாரு.... 😔

அவங்க அவருக்கு ஹெல்ப் பண்றாங்களே....

இப்படிதான் ரெண்டு பேரும் பார்த்துகிட்டாங்களா....❤
 




S.M.Eshwari.

அமைச்சர்
SM Exclusive
Joined
Jun 7, 2021
Messages
2,164
Reaction score
6,070
Location
India
ஓ... எதிர் ல வந்த கார் ல இருந்தது சூர்யா அஹ்....

ஞாபகம் மறந்துட்டாரு.... 😔

அவங்க அவருக்கு ஹெல்ப் பண்றாங்களே....

இப்படிதான் ரெண்டு பேரும் பார்த்துகிட்டாங்களா....❤
ஆமாம்மா ரெண்டு பேரும் மீட்டிங்😊😊😊😊

Thanks for your comments dear 🥰🥰🥰🙏🏻🙏🏻🍫🍫🍫🍫
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top