• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

சமஸ்தானம் - 08

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Andanoor sura

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,087
Reaction score
1,105
Location
Gandarvakottai
குளத்தூர்

ராய ரகுநாத தொண்டைமானுக்கும் அடுத்த மன்னராக யாரைத் தேர்ந்தெடுக்கலாம், என்பதில் பெரிய, சிறிய, பழைய அரண்மனைகள் பெரும் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தன.

அமைச்சர் வெங்கப்ப அய்யர் பேரேடு விரித்து வைத்தும் சொல்லிவிட்டார். அவர் சமஸ்தானத்தின் நிதிநிலை, இராணுவ, தளவாட நிலையை மட்டும் பார்ப்பவரில்லை. எத்தனையாவது இடத்தில் சூரியன் இருக்கிறான், குரு யாரைப் பார்க்கிறான், ராகு, கேது, சனி இடங்களையும், அதன் சூனியங்களையும் பார்த்து கணிப்பவர். தொண்டைமான் குடும்ப ஜாதக பேரேட்டின்படி, வரும் பௌர்ணமிக்குள் அடுத்த மன்னன் முடிசூடியாக வேண்டும். இல்லையேல், அதன்பிறகு குரு பார்க்க வேண்டிய இடத்தை ராகு பார்க்கிறது. ராகு பார்க்க சூரியன் மகுடம் சூடுவது, சுக்கிரன் வீட்டை சனி ஆள்வதற்கு ஒப்பானது.

வெங்கப்ப அய்யர் ஜமுக்காளம் விரிக்கப்பட்ட தளத்தில் பெரிதாக சம்மணமிட்டபடி, அடுத்த முடிசூடும் நாளுக்கு கெடு வைக்கையில், அத்தனை பேரும் வெங்கப்ப அய்யர் பிரயோகிக்கும் வார்த்தை மீதே செவிகள் இருந்தன.

சிலோனிலிருந்து அவசரமாக வரவழைக்கப்பட்டிருந்த ராய ரகுநாத தொண்டைமானின் சிற்றப்பாவின் மூத்த மகன் விஜயராய தொண்டைமான், இடைக்கால மன்னராக மகுடம் சூடி இருந்தார். மரணமுற்ற மன்னருக்கு ராஜ மரியாதை இறுதி சடங்குகள் செய்ய வேண்டும் என்பதற்காகவே, அந்த முடியை அவர் ஏற்றிருந்தார். அவருக்கு அந்த முடியும் மீது சற்று விருப்பம் இருந்திருக்கவில்லை.மகுட முடியை அவர் முள் முடியாகவே ஏற்றிருந்தார். இருபத்து ஒன்பது வயது வாலிபர் அவர். அவரது தலையில் அம்மன் இலட்சனையுடன் கூடிய மகுடமிருந்தாலும் அதை அவர் வேண்டா, வெறுப்புடனே தலையில் ஏற்றிருந்தார். அதை எத்தனை விரைவாக, அடுத்த தலைக்கு மாற்ற முடியுமென காத்திருந்தார்.

‘ அடுத்த மன்னரை தேர்வு செய்வதில் பெரிய, பழைய , சிறிய அரண்மனைக்குள் குழப்பம் நீள்கிறது. இன்னும் கொஞ்சக்காலம் அதற்காக நாட்களைக் கடத்தலாமா...?’ முத்துக்குமரப் பிள்ளை கேட்டதும், பேரேடு விரித்து நாட்குறி சொல்லிக்கொண்டிருந்த வெங்கப்ப அய்யர் நிமிர்ந்து பார்க்கலானார்.

தன்னை விடவும் மூத்த அமைச்சர் கேட்டிறிருந்த கேள்வியை உள்வாங்கிய வெங்கப்ப அய்யர், நிமிர்ந்து முத்துக்குமரப் பிள்ளையை ஒரு பார்வைப் பார்த்துவிட்டு சொன்னார், ‘ வரும் பௌர்ணமிக்குப் பிறகு பீடை காலம் ?’

‘ எவ்வளவு காலத்திற்கு...?’

‘ இராமன் வனவாசம் சென்றது எத்தனை காலமோ, அத்தனை காலத்திற்கு...’

சுற்றி அமர்ந்திருந்தவர்கள் நாக்கை கடித்துக்கொண்டார்கள்.

‘ சரி, அதே நாளில் புதிய மன்னருக்கு மகுடம் சூட்டிவிடலாம். அதற்குள் இச்சீமையை ஆளும் தகுந்த மன்னரைத் தேர்வு செய்துவிடலாம்...’ குளத்தூர் அரண்மனையினர் சொல்லி எழுந்ததும், அதை ஆமோதிக்கும் பொருட்டு அனைத்து அரண்மனையினரும் எழுந்தார்கள்.

அந்நாள் கொண்டே புதிய மன்னர் பதவியேற்பதற்கான மேடை, பந்தல் அமைக்கும் வேலைகள் தொடங்கின. ஆசாரவாசல், அரண்மனைவாயில், சமஸ்தானத்திற்கு உட்பட்ட கோயில்கள் அலங்கரிக்கப்பட்டன. அன்றைய தினத்திலிருந்து முப்பது நாட்களுக்கும் சிவன் கோயிலுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தேறின. அரண்மனையின் மதில், வாசல், பெருஞ்சுவர்களில் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. கீழ, மேல ராசவீதிகளில் பூவாசம், பொன்வாடை வீசத் தொடங்கின.

ராய ரகுநாத தொண்டைமான் அரண்மனைக்கும் பிரகாதம்பாள் கோவிலுக்குமிடையேயான தெரு வீதிகள் பிரத்யேகமாக தோரணம், மாலைகளால் அலங்கரிக்கப்பட்டன. பிரகாதம்பாள் கோவில் குடமுழக்கு அளவிற்கு புத்துயிர் பெற்றது. அங்குதான் மன்னர் முடி சூடும் நிகழ்வு நடைபெறுவதாக இருந்தது. கோவிலுக்குள் தோரண மேடை, சொக்கட்டான்சாரிகை, வாழைத் தோரணம்..கோவில் கருவரைக்கும் சற்று வெளியே கீழ்புற குன்றின் மேலே நித்திய கல்யாண மேடை, அதன் மேல் பஞ்சும், மலரும் விரித்த நாற்காலி. நாற்காலியொட்டி திண்டு வைத்து, முல்லை செண்டு வைத்த அமர்வு.

பௌர்ணமிக்கு இன்னும் ஐந்து நாட்கள் என்கிற அளவிற்கு நாட்கள் குறுக, குறுக, மேளதாளங்கள் முழங்கின. எங்கும் பேரிகைச் சத்தம். சங்கு முழக்கம்...இதற்கு முன்பு சீமையை ஆண்ட மன்னர் வழிக் குடும்பத்தினர்களுக்கு தனித்தனி இருக்கைகள் ஒதுக்கப்பட்டன. களப்பிரர்கள், முத்து அரையர்கள், பல்லவராயர்கள், அவர்களின் கீழ் அம்பலகாரர்கள், காரியக்காரர்கள், சேர்வைக்காரர்கள், அரண்மனை காவலர்கள், கோட்டைக் காவலர்கள், சிப்பாய் தலைவர்கள், முந்தைய போரில் மாய்ந்துபோனவர்களின் குடும்பத்தினர்கள், ஊர்க்காவலர்கள், அம்பலத்தான், வேட்டுவன், சனக்கட்டுள்ள இனத்தலைமைகள்,.. அமர்வதற்கென தனித்தனியே இடங்கள், இருக்கைகள்....

மன்னர் முடிசூடும் விழாவையொட்டி, வடவாளம் பெருங்குளத்துமேட்டில் சேவல்கட்டு விளையாட்டு நடந்தேறியது. தஞ்சைச்சீமை, திருத்துறைப்பூண்டி, நாகூர் சேவல்கள் சேவற்கட்டில் பெரும் ஆதிக்கம் காட்டிக்கொண்டிருந்தன. பொற்பனைக்கோட்டை வாயிலிடத்தில், அக்கோட்டையைச் சுற்றியுள்ள பெண்களின் ஒயிலாட்டம் நடந்தேறியது. மறவன்கோட்டைக்குள் பூஞ்சிட்டு துப்பட்டா விரித்து, சோடி சோடியாக தாயங்கள் உருட்டினார்கள். அரண்மனை, கோட்டை , கொத்தளம் என சுற்றிலும் இரவுபகல் பாராது விளையாட்டு, பொழுதுபோக்கு, வேடிக்கைகள் நடந்தேறுவதாக இருந்தன.

புதிய மன்னர் முடிசூடப் போகும் படலத்தைப் பார்க்க, விராலிமலையிலிருந்து கால்நடையாக வந்தவர்களில் மூன்று பேர், இரவு ஒரு பொழுது சித்தனவாசலில் தங்கிவிட்டு போகலாமென சமணர் படுக்கையில் படுத்தார்கள். இரண்டு பேர் ஆழ்ந்து தூங்க, ஒருவன் மட்டும் தூக்கம் வராமல், புரண்டு படுக்கவும், எழுந்து உட்காரவுமாக இருந்தான். அவன்பெயர் சித்தார்த்தன். அவனது கோதாட்டத்திற்குப் பெயர் போனவன். அவன் மற்ற இருவரையும் எழுப்பினான். எழுந்த வேகத்தில் ஒருவனுக்கு சமணபடுக்கையின் மேற்பாறை தலையில் இடிப்பதாக இருந்தது. மற்றொருவன் இடித்தவனின் தலையைத் தடவிவிட்டபடி, சித்தார்த்தனைப் பார்த்துக் கேட்டான். ‘ நீ தூங்கவில்லையா.?’

‘ தூக்கம் வர மாட்டேங்கிறது.’

‘ ஏன்....?’

அவன் தென்மேற்கு திசையை நோக்கிக் கையைக் காட்டினான். அவர் காட்டியத் திசையில் பெருங்குன்று தெரிந்தது. குன்றின் மீது பெரிய தீஒளி வட்டம் கட்டி ஒளிர்ந்தது.

‘ என்னவென்று, ஓரெட்டு போய் அதைப் பார்த்துவிட்டு வந்துவிடலாமா?’

‘ ஆமாம், பார்த்துவரலாம்...’

மூன்று பேரும் நடந்தார்கள். சித்தனவாசல் மேட்டிலிருந்து பார்க்கையில் தீவட்டம் தெரிந்த குன்று அருகில் இருப்பதைப் போலிருந்தது. அதை நோக்கி நடக்க , நடக்க அக்குன்று தூரம் தூரம் செல்வதைப் போலிருந்தது. ஒரு வழியாக நடந்து மூவரும் அக்குன்றைத் தொட்டிருந்தார்கள். அக்குன்று கொடும்பாளூரை ஒட்டியதாக இருந்தது..

குன்றின் மீது வட்டமாக முண்டாசு கட்டிய ஆடவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களின் மையத்தில் நான்கு சிறுமுட்டுகளாக காசுகள் குவிக்கப்பட்டிருந்தன. சுற்றிலும் வட்டம் கட்டி நின்றிருந்த ஆட்களை விலக்கி எட்டிப்பார்த்தான் சித்தார்த்தன். ‘ இங்கே என்ன நடக்கிறது?’

‘ இங்கே கோதாட்டம் நடக்கிறது...’

சித்தார்த்தன் திரும்பி தன் கூட வந்திருந்தவர்களைப் பார்த்து, ‘ நான் நினைத்ததுதான்...’ என்றவாறு சிரித்தான்.

‘ நானும் கலந்துகொள்ளலாமா...?’

‘ அம்மன் காசு இருக்கிறதா...?’

‘ ஆம் வைத்திருக்கிறேன்...’

‘ கட்டலாம்....’

‘ என்ன சொல்லி கட்ட வேண்டும்...??’

‘ வரும் பௌர்ணமி அன்று, அடுத்த மன்னராக மகுடம் சூடப் போவது யாரென்று சொல்லி கட்ட வேண்டும்...’

சித்தார்த்தன் கோதாட்டத்திற்குப் பெயர் போனவன். உடம்பை ஒரு குலுக்கு குலுக்கிக்கொண்டு கேட்டான், ‘ யாரையெல்லாம் சொல்லி கட்டியிருக்கிறீர்கள்..?’

‘ இது இது ராய ரகுநாத தொண்டைமானின் நேர் வாரிசு பெருந்தேவி ஆயி , இது ராய ரகுநாத தொண்டைமானின் சித்தப்பாவின் மூத்தமகன் விஜய ரகுநாத தொண்டைமான். இது குளத்தூர் நமணதொண்டைமான் அரண்மனையினர் கைகாட்டும் யாரோ ஒருவர்...’

‘ மூன்று கணிப்புகள் மட்டும் தானா?’

‘ மூன்றைத் தவிர கணிக்க தொண்டைமான் குடும்பத்தில் வேறு யார் இருக்கிறார்கள்...?’

‘ நான்காவதாக ஒன்றைச் சொல்லிக் கட்டலாமா..?’

‘ என்னே ! நான்காவதாகவா...? மன்னன் மகுடம் சூட வேறு யார் இருக்கிறார்கள்’

‘ சரியான வேடிக்கை பயல் இவன். காசை நம்மிடம் இழப்பது உறுதி. எங்கே கட்டும்...’ என்றவாறு அவனை ஏளனமாக பார்த்தார்கள்.

சித்தார்த்தன் மடியில் முடிந்து வைத்திருந்த காசுகளில் ஒரு பிடி அள்ளி, தனியே வைத்து, அதைச் சுற்றிலும் இலைச் சாறுகளால் வட்டம் கட்டியடி சொன்னான் ‘ நாளை, திட்டமிட்டபடி முடி சூடும் படலம் நடந்தேறாது. தடங்கல் ஏற்படும்..‘ என்றவாறு பாறையின் மீது விரல்களை மடக்கி , நெட்டிப் பறித்தவாறு நிமிர்ந்தான். வட்டங்கட்டி நின்றவர்கள் அவனை ஒரு புதிரைப் போல பார்த்தார்கள்.
 




Last edited:

Raman

அமைச்சர்
Joined
May 29, 2019
Messages
3,164
Reaction score
8,052
Location
Trichy
கோதாட்டம்என்றால்?? ??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top