• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அதிகாலைக் குறும்படம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

AniRaje

மண்டலாதிபதி
Joined
Dec 8, 2018
Messages
336
Reaction score
800
Location
Universe
அதிகாலைக் குறும்படம்

தொம், தொம்னு யாரோ கீழ்தளத்தில் நடக்கும் சத்தத்தில் விழித்தேன். மரத்தரையில் மெதுவா நடந்தாலும் இரவின் அமைதியில் அதிக ஒலியுடன் கேட்கும் சத்தம். கண்ணைக் கசக்கி மிகவும் முயன்று விழி திறந்து மணி பார்த்தேன். அதிகாலை மணி மூன்று. நானே ஒரு மணிக்கு தான் படுத்தேன். பவித்ராவும் குழந்தைகளும் பத்து மணிக்கு படுத்துட்டாங்க. இப்ப எங்க இருந்து சத்தம் வருது?

இரண்டு மூணு நாளா இப்படி தான் நடுராத்திரி சத்தம் கேட்குது. நானும் அசதியில் எழும்ப சோம்பல் பட்டுட்டுத் தூங்கிடுவேன். நானும் பசங்களும் இன்று ஒண்ணா ஒரு அறையில் படுத்திருக்கிறோம். மூன்று நாளா பவித்ரா கீழே தான் தனியா படுக்குறா. ஏன்னு கேட்டா ஒழுங்கா ஒரு பதிலும் வரலை.

“அய்யோ, பவித்ரா தனியா கீழே இருக்கா… யாரு நடக்குறா?”. மனசுக்குள் கிலி பரவ பாதுகாப்பு ஏற்பாட்டை கைபேசியில் உறுதி செய்தேன். எல்லாக் கதவும் மூடி தான் இருந்தன. அப்பாடா… நிம்மதி மனதில் பரவியது. ஒரு பயம் மனதிலிருந்து விடுதலையான உணர்வு. தூக்கம் முழுதாய் தொலைந்தது.

சரி, பவித்ராவை பார்த்துவிட்டு வந்து தூங்கலாம்னு எழுந்தேன். கீழே போனேன். கீழ் படுக்கையறையில் அவளைக் காணவில்லை. எங்க போயிருப்பா? கழிவறையிலும் இல்லை. மேலேயும் இல்லை. என்னாச்சு இவளுக்கு? இரண்டு மூணு நாளா இவ பண்ணுவது ஒரே குழப்பமா இருக்கு.

பகலில் ரொம்ப அசதியா இருக்கா. வழக்கமா எழுந்திருக்கிற நேரத்திற்கு எழும்பாம கொஞ்சம் தாமதமா எழுகிறாள். ஏன்? மனக்குழப்பத்தை விட்டுப் பவினு கூப்பிட வாய் திறக்கும் நேரம், குழந்தைகள் கூடாரத்தின் மேல் இருந்த போர்வைக்கு வெளியே ஒரு ஒளி வந்தது. முணு முணு சத்தம் வந்தது. இங்க யாரு இப்ப இருக்கிறது? பவியா?

சந்தேகத்தோட பவினு நான் கூப்பிட… கூடாரத்தின் துணியை அகற்றிய பவியின் முகம் எனக்குத் தெரிந்தது. பவி முகத்தில் என்னை எதிர்பார்க்காத, சேட்டை செய்து மாட்டிக் கொண்ட ஒரு குழந்தையின் பாவனை. எனக்குள் அவளைக் காணாத பதட்டம் குறைந்து மனதில் மெல்லிய சுவாரசியம் புகுந்தது.

“என்ன பவி இங்க பண்ணுற?”

“என்ன பண்ணுறேன். ஒன்னும் பண்ணலையே ரவி. சும்மா தான் பசங்க விளையாட்டு சாமான் குப்பையா உள்ள இருந்துச்சு. அதை கூடாரத்துக்குள்ளே அடுக்கி வச்சுகிட்டு இருந்தேன்”.

“இந்த நேரத்திலா?”

“முழிப்பு வந்துடுச்சு. அதான்.” பவியின் குரலில் சலிப்பும், சமாளிப்பும்.

“உனக்கு முழிப்பு வந்திடுச்சா? சும்மா சொல்லாத, நீயெல்லாம் எங்க எப்ப எந்த நேரத்தில் படுத்தாலும் கவலையில்லாமல் தூங்குற ஆளு. உனக்கு முழிப்பு வந்திடுச்சா? அதுவும் இப்ப சுத்தம் பண்ணுறியா? கேட்கிறவன் கேணையன்னா இருந்தா நீ கேப்பையில் நெய் வடியுதுனு சொல்லுவ.”

“அது தான் ரவி, உங்ககிட்ட சொல்லுறேன்.”

“அது தானே உன்னைப் போய் அக்கறையாக் கேட்டேனே! என்னைச் சொல்லனும். எக்கேடோ கெட்டுப் போ. நான் தூங்கப் போறேன்.”

“போங்க. யாரு உங்க கையைப் பிடிச்சு இழுத்தது? போய் தூங்குங்க. எனக்கு என்ன, எதை, எப்ப செய்யனும்னு தெரியும். சும்மா என்னை நோண்டி நையாண்டி பண்ணிக்கிட்டு. கடுப்பக் கிளப்பாம ஓடிடுங்க.”

கடுப்பில் மாடிப்படி நோக்கிச் சென்றேன். அப்ப தான் எனக்கு ஒண்ணு மனதில் உறைத்தது. பவி கூடாரத்தை விட்டு வெளியே தலையை மட்டுமே நீட்டிப் பேசினாள். அவள் வெளியே வர முயலவில்லை. என்னைக் கடுப்பேற்றி துரத்தக் குறியாய் இருந்ததும் புரிந்தது. என் கோபம் மறைந்து, இவ உண்மையா என்ன செய்கிறாள் என்கிற கேள்வி முளைத்தது.

சத்தமிடாமல் திரும்பிப் பார்த்தேன். பவி திரும்ப அந்தக் கூடாரத்தினுள். ஓசைப்படாமல் பூனைப்பாதம் வைத்து மெதுவாய் நடந்தேன். கூடாரத்துக்குள் எட்டிப் பார்த்தால்… ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது பிக் பாஸ் பார்க்கும் பவியின் திருட்டுத் தனம் வெட்ட வெளிச்சம் ஆனது.

எனக்குள் தூங்கிக் கொண்டிருந்த குழந்தை மனம் வெளி வந்தது. வாயைக் குவித்துச் சத்தமாய் நான் “பூம்” என்றேன்.

இதை எதிர்பார்க்காத பவியின் கையில் இருந்த பாப்கான் அவள் பயந்ததில் சிதறியது. அந்த நொடியை பயன்படுத்தி நானும் கூடாரத்தினுள் நுழைந்தேன்.

“அய்யோ… நீங்க தானா? நான் பயந்துட்டேன் ரவி.”

“என்ன பவி பண்ணுற?”

“ரொம்ப மன அழுத்தமா இருந்துச்சு… அதுதான்”

“வீட்டுல எப்பவும் போல தானே இருக்க. பசங்களுக்கு தான் இணையதளப் படிப்பு புதுசு. எனக்கு வலைதள வேலை புதுசு. உனக்கு எப்பவும் போல தானே பவி. உனக்கு என்ன மன அழுத்தம் புதுசா வந்திடும் சொல்லு?”

“ஏன் சொல்ல மாட்டீங்க? என் கஷ்டம் உங்களுக்குத் தன்னாலும் புரியாது, நான் சொன்னாலும் புரிஞ்சுக்க முயற்சி பண்ண மாட்டீங்க. போங்க உங்களுக்கு ஒண்ணும் புரியாது. ஓடிப் போயிடுங்க ரவி. பக்கத்தில் இருந்தா நான் கடிச்சு வச்சுடுவேன். இந்த நேரத்தில் மருத்துவமனைக்குக் கூட தைரியமா போக முடியாது.” இதை பவி கிண்டலாய் சொன்னாலும், சொல்லும் போதே அவள் குரல் கரகரத்தது. அவள் முகத்தில் இயலாமை. ஆற்றாமை. இந்தப் பவி எனக்கு மிகவும் புதுசு.

“பரவாயில்லை. நீ சொல்லு நான் கேட்கிறேன். எனக்கு புரியுதா புரியலையானு அப்புறம் பார்க்கலாம்.”

இதைக் கேட்ட பவி என்னைக் கேலியாய் முறைத்தாள்.

“கோவிச்சுக்காத பவி. விளையாடலை. நீ சொல்லு நான் புரிஞ்சுக்க முயற்சிக்கிறேன்.”

நம்பாத பார்வை பார்த்த பவி, ஏதோ நினைப்பில் பாதி மனதாக என்னிடம் சொல்ல ஆரம்பித்தாள்.

“நிம்மதியா ஒரு இரண்டு மணி நேரம் மதியம் தூங்கிட்டு இருந்தேன். அது முடியாம போச்சு. ரசிச்சு எனக்கு பிடிச்ச, உங்க யாருக்கும் பிடிக்காத உப்புமா செஞ்சு மதியம் சாப்பிடுவேன். மனசுக்கு பிடிச்ச ரம்மியமான காதல் கதைப் புத்தகம் படிச்சேன். சத்தமா பாட்டுப் போட்டு பாத்திரம் தேய்ச்சேன். பசங்க பள்ளிக்கூடம், வகுப்புக்கு சாரதியாய் இருந்தேன். இன்னும் கொஞ்சம் அதிக நேரம் இருந்தா, புவனாவைக் கூப்பிட்டுக் கைபேசியில் ஊர்கதை உலகக் கதைனு சும்மா புரணி பேசுவேன். அது எல்லாம் இப்ப போச்சு.”

“ஏம்மா? இப்ப ஏன் பண்ண முடியலை?” நக்கலாகக் கேட்டேன்.

“ஏன்னு கேட்குறீங்க? தமிழ் பள்ளியில் பசங்களை சேர்த்து விட்டதுக்கு எனக்கு கிடைச்ச கைமேல் பலன் தான் இது. தமிழ் புரிஞ்சு பேசுறாங்கனு பெருமை படுவதா? இல்லை எனக்கு ஆப்பா முடிஞ்சத நினைச்சு அழுவதா? வேற என்ன சொல்ல? எல்லாம் என் நேரம்.”

“இதுக்கு போயா உனக்கு ஸ்டெரெஸ்?”

“இப்ப என்னால் தமிழில் கூட சுதந்திரமா யாருக்கிட்டவும் வீட்டில் இருந்து பேசவோ எதையும் படிக்கவோ முடியலை. என் கஷ்டம் எனக்கு. என் பக்கத்தில் சட்டமா உட்கார்ந்துகிட்டு நான் என்ன பண்ணுறேன் ஏது பண்ணுறேனு எல்லாத்தையும் சி.ஐ.டி. சங்கர் மாதிரி பார்க்குறாங்க பசங்க. ஒரு ப்ரைவசி இல்லை. எல்லாம் இந்த பவிக்கு வந்த லாக் டௌன் சோதனை.”

நான் அவளையே சிரித்த முகமாய் பார்க்க, அவள் மேலும் கடுப்பாய் தொடர்ந்தாள்.

“பெரிசு கழுகு மாதிரி எப்பவும் என்னையவே நோட்டம் விட்டுகிட்டு இருக்கு. சின்னதுக்கு பாம்பு காது. அதுக்கு கவனம் இங்க இல்லைனு நினைச்சுப் பேசினா, சரியா எல்லாத்தையும் கேட்டுட்டு என் புலம்பல்களை உங்ககிட்டயும், என் அம்மாக்கிட்டவும் சொல்லி எனக்கே ஆப்பு வைக்குது. அது கூட பரவாயில்லை, என்னைக் கிண்டல் பண்ணி ரெண்டும் சேர்ந்து சிரிக்குதுங்க. என் பொழப்பு சிரிப்பா போச்சு. இந்த வீட்டில் எனக்கு சுதந்திரமே இல்லை. நாலு வார்த்தை கூடக் குறைய சொல்ல முடியுதா? அம்மா யூ ஆர் மீன், கருவாடுனு வந்துடுறாங்க. இதுல நீங்க எப்பவும் உங்க பசங்களுக்கு தான் ஜால்ரா போடுவீங்க”

பவியின் ஆதங்கம் எவ்வளவு உண்மைங்கிறது குழந்தைகளைப் பெற்று அவர்கள் வளர்வதை பக்கத்தில் இருந்து பார்க்கும் அப்பாவிற்கு மட்டுமே புரியும். நானும் அவர்களுள் ஒருவராய் மாறியதால் எனக்கு அவள் சொல்லுவது சரியாய் சரியான கோணத்தில் புரிந்தது.

“அப்ப நான் தான் உன்னை தொல்லை படுத்தலை.” என்ன பதில் வரும் என்று தெரிந்தேக் கேட்டேன்.

“நினைப்புதான்… போங்க… நல்லா வாயில வந்திடும். ஒரு மிக்ஸி போட முடியுதா? குக்கர் விசில் அடிச்சா நான் என்ன பண்ண? அது கூட பரவாயில்லை. மூணு வேளையும் உங்களுக்கு மாடி ஏறி வந்து கதவைத் தட்டி சாப்பாடு கொடுக்குற கொடுமை இருக்கே. அதை சாப்பிட்டாலும் பரவாயில்லை. காலை சாப்பாடு, ராத்திரி வரைக்கும் அப்படியே காஞ்சு கிடக்கும்.”

“அவ்வளவு அக்கறை இருந்தா ஊட்டிவிடு, பவி” எகத்தாளமாய் நான்.

“ம்ம்ம்… சும்மா பேச்சுக்கு சொல்லதீங்க ரவி… உள்ள வந்து சாப்பாடு குடுக்கவே பயம்மா இருக்கு. எந்த நேரத்தில் எப்படி எரிஞ்சு கத்துவீங்களோனு? இதுல ஊட்டி விட்டுட்டாலும். சனியும் தெரியலை, ஞாயிரும் புரியலை. எல்லா நாளும் ஒரே மாதிரி தான் இருக்கு.”

“சரி விடு. எல்லாம் சரி ஆகிடும். நீ தானே நாங்க வீட்டில் இருக்கணும்னு ஆசைப்பட்ட. அதுக்குள்ள அலுத்துக்கிற”

“உங்க எல்லோரையும் வீட்டில் பார்க்க நல்லா தான் இருக்கு. ஆனால் யாருக்கும் பேச தான் நேரமில்லை. மொத மாதாம் நல்லா தான் இருந்துச்சு. ஆகஸ்ட் வரைக்கும் கூட பரவாயில்லை. போக போக உங்க எல்லாருக்குமே வெளிய போகாத கடுப்பு. அதை அழகா என்கிட்ட காமிக்கிறீங்க. மொழச்சு மூணு இலை விடலை நான் பெத்ததுக்கு எல்லாம் நான் பயப்படுறேன். ம்ம்ம். நான் அவங்களை அதட்டினது போக… அவங்க என்னை, சத்தமா கைபேசியில் பேசாத. கவனிக்க முடியலைனு சொல்லுதுங்க. என் நேரம். பேச்சே எனக்கு மறந்திடும் போல.”

“சரி, தினமும் இனி பேசலாம். அது சரி அதுக்கும் நீ கூடாரத்துக்குள்ள இருக்கிறதுக்கும் என்ன சம்பந்தம்? சொல்லு. கையில் பாப்கான், காதில் ப்ளூடூத், அந்த பக்கம் என்னத்த மறைக்கிற? காட்டு பார்க்கலாம்.”

“ஒண்ணும் இல்லை.”

“முழுக்க நனைஞ்சாச்சு… இனி எதுக்கு முக்காடு? காட்டு பவி”

“ரவி, சிரிக்க கூடாது. சிரிக்க மாட்டேன்னு சொல்லுங்க. காட்டுறேன்”.

“சரி, சிரிக்கலை. காட்டு பவி.”

அந்த பக்கம் இருந்த உப்புமாவை பவி காட்ட. உப்பும்மா என்னைப் பார்த்து சிரித்தது. என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை.

“நீ என்ன பேயா, பிசாசா? மூன்று மணிக்கு உப்பும்மா கிண்டி சாப்பிடுற? ஹ… ஹா… ஹா… “

“சிரிக்க மாட்டேனு சொன்னீங்க.”

“சாரி. மன்னிச்சுக்கோ. அடக்க முடியலை. என்ன பிக் பாஸா? எத்தனை நாளா நடக்குது இந்த மிட் நைட் டுபுசுக்கு டுபுசுக்கு பிக் பாஸ்? சொல்லு.”

பவியின் மடக்கிய கை விரல் ஒன்று, இரண்டு, மூன்று என்று ஒவ்வொன்றாக பிரிந்து மூன்றில் நின்றது. நான் நினைத்தது சரிதான். மூணு நாளா சத்தம் கேட்டது இது தானோ?

“ஏன் தூக்கத்தைக் கெடுத்து இப்ப பார்க்கிற. பகல்ல பார்க்கலாம்ல? சொல்லு பவி. கேட்குறேன்ல. திரு திருனு முழிக்காம சொல்லு.”

“பகல்ல பசங்களை வச்சுகிட்டு பார்க்க முடியலை… என்ன? நொண்ணனு? ஒரே கேள்வியா கேட்டு நோகடிக்குறாங்க. இது என்ன பசங்க பார்க்கிற மாதிரியா இருக்கு? எனக்கு ஒரு வடிகாலா இப்படி எதையோ பார்க்கிறேன். முந்திலாம் நாம ஒண்ணா சேர்ந்து படம் பார்ப்போம். இப்ப வீட்டிலேயே இருந்தாலும் உங்களுக்கு எப்ப பார்த்தாலும் வேலை. எப்பவும் பசங்க வீட்டில் இருக்காங்க. அவங்க முன்னாடி சண்டை கூட போட முடியலை. அதான் தூக்கம் வராம ஒரு நாள் பார்த்தேன். ரொம்ப நல்லா இருந்துச்சு. தனியா அமைதியா எனக்கு பிடிச்சதை யாருடைய குறுக்கீடும் இல்லாமல் பார்க்க முடிந்தது. பிடிச்சிருந்தது. அதான் அப்படியே தொடருது. அலாறம் வைத்து எழுந்து ஒரு 1-2 மணி நேரம் பார்க்கிறேன். நேத்து, டைனிங் டேபிளுக்கு அடியில் உக்கார்ந்து பார்த்தேன். இன்னைக்கு ஒரு மாற்றத்திற்கு கூடாரத்துக்குள்ள உட்கார்ந்து பார்த்தேன். உங்க கிட்ட மாட்டிக்கிட்டேன். நாளைக்கு வேற இடம் தேடனும்.”

“இரண்டு பசங்களுக்கு அம்மா மாதிரியா பேசுற? சின்னபுள்ளை தனமா பேசிகிட்டு. உனக்கே ஓவரா இல்லை.”

கடிகாரம் அதிகாலை 3:30 மணி என்று காட்டியது. “சரி போங்க. நீங்க தூங்குங்க. உங்களுக்கு காலையில் ஏதோ மீட்டிங் இருக்கும்ல. நான் பார்த்துட்டு படுக்குறேன். போய் படுங்க ரவி. ஐம் ஆல்ரைட். நான் நல்லா தான் இருக்கேன். போங்க. இடத்தைக் காலி பண்ணுங்க. கூடாரத்துக்குள்ள காத்து வரட்டும்.”

“அதுல்லாம் முடியாது. தள்ளி உட்காரு. எனக்கு ஒரு ப்ளூடூத்தைக் கொடு. எனக்கும் பசிக்குது. உன் கையில் இருக்கும் பாப்கானை என்கிட்ட கொடுத்திட்டு, நீ உன் உப்புமாவ சாப்பிடு. ஒரு உனக்கு பிடிச்ச ஏதாச்சும் போடு. சேர்ந்து கொஞ்ச நேரம் பார்க்கலாம். அப்புறம் போய் தூங்குவோம்.”

என்னை, பவி நம்பாமல் குறுகுறுனு பார்க்க, நான் சும்மா இருக்காமல், “அவ்ளோ அழகாவா இருக்கேன்?” என்று கேட்க.

“நினைப்புதான்… இந்தாங்க பாப்கான். வேற எதுவும் வேணுமா?”

“இல்லை. நேரமாச்சு. சீக்கிரம் போடு. பார்த்துட்டு படுப்போம்.”

மேலும் ஒரு அரை மணி நேரம் சேர்ந்து குறும்படம் ஒன்றை பேசிக்கொண்டும், ஒருத்தரை ஒருத்தர் கலாத்துக் கொண்டும் பார்த்துவிட்டு, இருவரும் அவர் அவர் இடத்தில் போய் நிம்மதியாய் படுத்தோம்.

காலையில் என் பெரிசு, சின்னதிடம் சண்டையிட்டு பவியிடம் குறைகூறும் சத்தத்தில் தான் எழுந்தேன். “அம்மா பாரும்மா, கூடாரத்தில் பாப்கானா கொட்டி கிடக்கு. கேட்டா இல்லைனு பொய் சொல்லுது எருமை. நீ வந்து என்னனு கேளும்மா.”

அதைத் தொடர்ந்து பவியின் சத்தம்… “எந்த எருமை கொட்டுச்சோ அது இன்னைக்கி நைட்டுக்குள்ள சுத்தம் பண்ணிடும்.”

எருமைனு என்னைச் சொன்னாளா? இல்லை அவளைச் சொன்னாளா?. இது என் மண்டைகுள் ஓடிய எண்ணம். என் இதழ் தன்னால் முறுவலை தத்தெடுத்தது. இன்னும் பவி ஏதோ சொல்லுறா… கூர்ந்து கெட்க ஆரம்பித்தேன்.

“நீ போய் உன் வேலையை பாரு. குறை சொல்லுறதை மொத நிறுத்து. காலையிலே பஞ்சாயத்தைக் கூட்டாமல். ஓடிடுங்க. ஒழுங்கா பள்ளிப்பாடம் பண்ண ஆரம்பிங்க. வந்தேன், யாரு என்னனு கேள்வியே கேட்காமல் வெளுத்திருவேன். உங்க அப்பாவுக்கும் சேர்த்து தான் சொல்லுறேன். வெளுத்தா எல்லாம் சரியாகிடும். எப்ப பாரு ஒரே குற்ற பத்திரிக்கை. மாற்றி மாற்றி சொல்லிக்கிட்டு. நிறைய வேலை இருக்கு. போங்க.”

அதுக்குபிறகு அங்கு ஒரு சத்தமும் கேட்கவில்லை. என் பிள்ளைகள் என்னை மாதிரி. சமர்த்து. சக்கரைக்கட்டிகள். இன்று சத்தமிட்டாலும் பவி குரலில் ஒரு துள்ளல் இருந்தது என் கவனத்தில் பதிந்து என் மனதைக் குளிர்வித்தது. இன்னைக்கி ராத்திரி கொட்டாமல் பாப்கான் சாப்பிட வேண்டும் என்கிற ஒரு பெரிய தெளிவான முடிவுடன் என் படுக்கையை விட்டு முறுவலுடன் எழுந்தேன்.


- அனிராஜி / AniRaje





 




Chanmaa

இணை அமைச்சர்
Joined
Dec 26, 2019
Messages
740
Reaction score
684
அருமையான பதிவு
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top