அத்தியாயம் 15 - இணைந்த நிழல்கள்

#1
இணைந்த நிழல்கள்
1549888485426.png


தங்களுடனே கோட்டைக்கு திரும்பியவருக்கு உளவாளிகள் பிடிபட்டது எப்படி தெரியும்? குழப்பம் தாண்டவமாட நின்றிருந்தனர் சந்திரனும், கவினயனும்..

எப்படி இளவரசே? சந்திரன், ஆர்வம் தாளாமல் காதைக்கடிக்க, மௌனமாய் சிரித்தான் ஆதன்.

கவினயனின் நிலை பற்றி கூறவேண்டியதில்லை. செய்தி அவனுக்கு எட்டும் முன்னே ஆதனுக்கு ரகசியம் கசிந்திருக்கிறது.

உளவாளிகள் என்றதுமே என்ன செய்தி? யாருக்கு கொண்டு வந்திருப்பார்கள்? கன்யாவின் மூளை படு துரிதமாக கணக்குகளை போட துவங்கியதுடன், ஆதனின் அடுத்த சொல்லுக்கு ஆர்வமாய் காத்திருந்தது.

சில முக்கிய அதிகாரிகளையும் அழைத்து வர சொல்லியவன், மெல்ல மெல்ல விவரிக்கத் தொடங்கிய விஷயங்களை கேட்டு கன்யா, சந்திரன், கவினயன் ஆகிய மூவரும் வெவ்வேறு விதமான உணர்வுக்குவியல்களில் மூழ்கிபோயினர்.

ஆதனின் பார்வை கழுகின் பார்வையை ஒத்தது. துறைமுகத்தில், கப்பற்படையை பார்வையிட்டு முடித்த பிறகு, மரக்கலங்களை நோட்டமிட்டபடி சுற்றி வந்தவனின், பார்வையில் கடற்கரையில் நிகழ்ந்த துறவி,வணிகனின் சம்பாஷணை படு துல்லியமாக விழுந்தது.

அவர்களின் முகபாவத்தையும், உதட்டசைவையும் கொண்டே அவர்கள் பேசுவதை ஊகிக்க கூடிய வல்லமை அவனுக்கிருந்தது. அந்த வேல் வீரனின், பார்வையின் துல்லியத்தை வியாக்காதவர்கள் இருக்க முடியாது.

மணல் மேடிட்டிருந்த கரைக்கு வந்து, சுங்க சாவடியின் தலைமைகாவலதிகாரியிடம் அவர்களை கண்காணிக்குமாறு ரகசியமாக பணித்தவன் மற்ற இருவருடனும் கோட்டைக்கு திரும்பிவிட்டான்.

காவலதிகாரி, கண்காணித்த விஷயங்களை துரிதமாக கோட்டைக்குள் வந்து தன்னிடம் மட்டுமே அறிவிக்க வேண்டும் என்றும் பணித்திருந்தான். நட்பு நாட்டு இளவரசரின் கட்டளையை மீற முடியாமல் மருகியபடியே செய்து முடித்தான் சுங்ககாவலதிகாரி.

ஆதனின் ஊகங்களுடன், அந்த உளவாளிகளின் சம்பாஷணையும் ஒத்துப்போகவே, பரபரவென ஒரு புதிய திட்டம் ஆதனுக்குள் உருவாகி விட்டிருந்தது.

அதை தான் விவரித்துக்கொண்டிருந்தான்.

அவன் இருக்கும் இடத்தில் தோல்வி என்ற ஒன்றுக்கு, சிறு இடைவெளி கூட விட அவன் தயாரில்லை.

“சேரர்கள் படை திரட்டிக்கொண்டு தீவை நெருங்குவதற்கு முன்னதாகவே நம் கூட்டுப்படை அவர்களை கடலில் எதிர்கொள்ள வேண்டும். தாக்குதலை நாமே முதலில் தொடங்குவோம்.” உறுதியான திடக்குரலில் சொல்லி முடித்தான் ஆதன்.

பலத்த மௌனம் ஆட்சி செய்தது அங்கே..

படைத்தளபதியாக திட்டங்களை தீட்டுவதும், ஒழுங்கு செய்வதும் கவினயன். அதில் மூக்கை நுழைக்கும் ஆதனால், அவனுக்கு ஆத்திரம் தலைக்கேறியது.

கன்யாவிற்கு நாமே தாக்குதல் தொடுத்து செல்ல வேண்டும் என்பது எத்தனை தூரம் சாத்தியப்படும் என்று ஐயமாக இருந்தது. திட்டம் பிசகினால் மொத்தமும் சர்வ நாசமாகிவிடும். ஒவ்வொரு அடியையும் எச்சரிக்கையுடன் எடுத்து வைக்க வேண்டும். குடிகளுக்கு சிறு தீங்கும் நிகழ்ந்து விடக்கூடாது என்பதில் முனைப்பாக இருந்தாள் அவள்.

“சந்தேகங்களின் மீது திட்டங்களை கட்டமைக்கிறார். நம் விரல் கொண்டே நம் கண்களை குத்திக்கொள்வதற்கு சமம் இது..” கவினயனே மௌனத்தை உடைத்தெறிந்தான்.

ஆதன் இதை எதிர்பார்த்தே இருந்தான். ஆனாலும் நிதானத்தை சிறிதும் இழக்காமல் தன் முடிவில் உறுதியாக இருந்தான்.

“தேவி!! எங்கள் படை போரில் கலந்து கொள்வதாக இருந்தால், என் திட்டத்தை ஒப்புக்கொள்ள வேண்டும். சந்தேகத்தின் மீதே திட்டத்தை கட்டமைத்திருக்கிறேன். ஆனால், சிறிதும் பிசக வாய்ப்பேயில்லை.”

ஆதன், கன்யாவின் கண்கள் சந்தித்துக்கொண்ட போது அவளின் கலக்கத்தை அவனால் மொழி பெயர்த்துக்கொள்ள முடிந்தது.

“தீவிற்கு அரணாக இருப்பது கடல். தீவின், மேற்கு பகுதியில் கடல்கொள்ளையர்கள் தொல்லை செய்வதால் அந்த வழியை அவர்கள் பயன்படுத்த மாட்டார்கள். தீவின் தென் பகுதியில் இருக்கும் காடு,மலைகளை கடந்து வருவது கடினம். அதற்கான சாத்தியமும் குறைவு. தீவை அரைவட்டம் சுற்றிக்கொண்டு கிழக்கு பகுதியில் நுழைய முற்படமாட்டார்கள். வடமுனை தான் அவர்களின் நுழைவாயிலாக இருக்கும். வணிகர்களுடன் ரோமானியப்படையினரை கலக்க செய்து அதிரடியாக, உங்கள் கப்பற்படையை அழித்துவிட்டால் எளிதாக உங்களை அடிமைப்படுத்தி விடலாம். யவனச் சேரிகளில் நாளுக்கு நாள் கூட்டம் பெருகி வருவதை கவனித்தீர்களா?”

இறுதியாக ஆதனின் கேள்வியில் மயிர்கூச்செறிந்தது. கடற்படையை அழித்து விடுவதா? அதுமட்டும் நடந்தால், வெற்றியை பாதி எட்டிவிடுவார்கள் சேரர்கள்.

“என் திட்டத்தை ஒப்புக்கொள்வதாக இருந்தால் கூறுங்கள். மீண்டும் சந்திக்கலாம்.” போர்ப்பயிற்சி பட்டறைக்குள் இருந்த கூடாரத்தை விட்டு விறுவிறுவென வெளியேறினான் ஆதன்.

“அவர் நம்மை நெருக்குகிறார்.” என்றான் கவினயன் நெற்றி சுருங்க.

அவன் திட்டத்தை கவினயன் உட்பட, அதிகாரிகள் சிலர் ஒப்புக்கொள்ளவில்லை. கவினயன் மறுப்பு சொல்லிக்கொண்டே இருந்தான்.

“தேவி!! இதில் வெற்றிக்கான சாத்தியக்கூறுகள் குறைவு. அவர் சேர நாட்டை தன் ஆட்சிக்கு கீழ் கொண்டு வருவதற்கு நம் படைபலத்தை மறைமுகமாக பயன்படுத்திக்கொள்கிறார்.”

“தீவைக் காக்க நாமும் அவர் படைபலத்தை கோரியிருக்கிறோம் தளபதி..அவர் திட்டத்தை ஆதரிக்க முடிவு செய்துவிட்டேன்.” என்றாள், தீர்க்கமான பார்வையுடன்.

தன் முக்கியத்துவம் பறிபோனதில், கவினயனின் உள்ளத்தில் ஆறாத சினம் பெருக்கெடுத்தது.

கன்யா தன் முடிவை அறிவித்த பிறகு, கூடாரத்தை விட்டு வெளியேறி மாளிகையை அடைந்ததும், “தாய் வழி தாயத்தை உடைத்தெறிவேன், பேரரசுக்குரிய ஆட்சிக்கட்டிலை கைப்பற்றுவேன் என்று வெற்று மொழிகளை பேசுவதை விட்டு போருக்கான தயார்படுத்தலை துவங்குங்கள் தென்னவரே!!” மலைராயரின் எள்ளல் அவனுக்கு ஊசியால் குத்துவது போலிருந்தது.

ஆதனும், கன்யாவின் புறம் சாய்ந்து விட்டதில், எரிமலைக்கு இணையாக அவனுள்ளமும் எந்நேரமும் கொதித்துக்கொண்டிருந்தது.

“தீவின் கப்பற்படையையும், படைக்கலங்களையும் பற்றிய ரகசியங்களை கசிய விடுபவர்களுக்கு தண்டனை வழங்குவது தானே நியாயம்.”

தென்னவன் எதைக்குறிப்பிடுகிறான் என்று புரிந்தது அவர்களுக்கு.

“தற்சமயம், சோணாடு நம் நேச நாடு.” என்றான் வெண்மதியோன், இழிவாக.

“குமரித்தீவு சிற்றரசாகி சோணாட்டுக்கு அடி பணிய போகிறது.” அவன் விசித்திர பேச்சு புரியாமல் மலைராயனும், வெண்மதியோனும் விழித்தனர்.

“போரில் உதவி புரிவதற்காக நம் இளவரசி கொடுக்கபோகும் விலை நம் நாடு..”

“இல்லையே!!!!!!!” என இழுத்தவனை ஆக்ரோஷமாக தடுத்தவன்,

“நம் நாட்டை விலை பேசிவிட்டார் கன்யாதேவி. சேர நாட்டுடனான போரை எதிர்கொள்ள பலமின்றி, சோணாட்டுக்கு அடிபணிய தயாராகி விட்டார்.”

“நீ சொல்வது புரியவில்லை.” சாத்தியமில்லாத ஒன்றை சொல்லிகொண்டிருக்கிறானே தென்னவன் என்பது போல வியப்பாக பார்த்துக்கொண்டிருந்தனர்.

“மக்களையும், பேரரசியையும் இவ்வாறாக நம்பசெய்ய வேண்டும்.” என்ற தென்னவன், மேலும் தெளிவாக விவரித்ததும் வாயடைத்துப்போனார்கள் மற்ற இருவரும்.

*********************************************************************

ஆதனுடன் தானும் வெளியேறிய சந்திரன், “எப்படி இளவரசே? எங்களுடன் தானே கோட்டைக்கு திரும்பினீர்கள்?” என்றான் புரியாமல்.

“நான் முன்னமே கண்டறிந்ததை தான் நீங்கள் இருவரும் கூறினீர்கள்.” என்றான் ஆதன்.

“கண்காணிக்க சென்ற தளபதியை ஏன் தடுத்தீர்கள்?”

“ஒருவேளை இவன் அவர்கள் பார்வையில் விழுந்து விட்டால், அவர்கள் சுதாரித்து விடுவார்கள். அதை தடுக்கத்தான்..”

“என்னையும் தடுத்தீர்களே?”

“நீயும் ஆர்வக்கோளாறு தான் சந்திரா!! அதுமட்டுமில்லை. இளவரசிக்கும் நம் மீது பூரண நம்பிக்கை வர வேண்டும். அப்பொழுது தான் நம் திட்டங்களை ஏற்பார். பரஸ்பரம் நம்பிக்கையை எற்படுத்தவே இதை பயன்டுத்திக்கொண்டேன்..”

இளவரசரின் சாதுர்யத்தையும், தந்திரத்தையும் மெச்சிக்கொள்ளாமல் இருக்கமுடியவில்லை சந்திரனால்..

“தந்திரத்தால் எதையும் சாதிக்கும் வலிமை உங்களிடம் இருக்கிறது.”

“என் தந்திரத்தை ஆக்கத்திற்கு மட்டுமே பயன்படுத்துகிறேன் சந்திரா!! முதுகில் குத்துவது கோழையின் செயல். அதை என்றுமே செய்ததில்லை நான்..”

இளவரசர் தன் கூற்றை தவறாக அர்த்தம் செய்து கொண்டதில் பதறிப்போனவன் “தெரியும் இளவரசே!! கவிரநாட்டுடனான போரிலும், முதலில் தவறிழைத்தது அந்நாட்டு அரசன் தான். எதிரிகளிடமிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள தந்திரமும் தேவை..” படபடவென பேசி முடித்தவனைக் காணும் போது, ஆதனுக்கு அனிச்சையாகவே புன்னகை மலர்ந்தது.

“கன்யாதேவி நம்மை நோக்கி தான் வருகிறார்.” ஆதன் அர்த்தமாய் சந்திரனை நோக்க அவன் அங்கிருந்து விலகிவிட்டான்.

“திட்டத்தை நீங்கள் இன்னும் முழுதாகவே விளக்கவில்லை??” அவள் கண்களும் கேள்வியை தொடுத்து நின்றது.

“கேட்கும் பொறுமை யாருக்குமே அங்கிருக்கவில்லை தேவி!!”

“எனக்கு நிறைய சந்தேகங்கள் இருக்கிறது.” அவள் பிறைநெற்றி சுருங்கி விரிந்தது.

“விவரிக்கிறேன். குழம்ப வேண்டாம். திட்டத்தை நிறைவேற்றினால் வெற்றி நிச்சயம்.” என்றான் அழுத்தமாக.

ஆழமாக அவனை இரு நொடிகள் நோக்கியவள், “நம்புகிறேன்..” நிதானமாக உச்சரித்து விட்டு திரும்பியவளை அழைத்து நிறுத்தினான் ஆதன்.

“தேவி!!”

“தீவைக்கைப்பற்றும் எண்ணத்தை முழுதாக கைவிடவில்லை. சேர நாட்டுடனான போருக்கு பின் நமக்கிடையிலும் போர் மூள வாய்ப்புகள் அதிகம்.” அவன் இதயம் பெரும் தாளத்துடன் சப்தித்தது. அவளிடம் மட்டும் தந்திரத்தைக் கூட கையாள முடியவில்லை. நேருக்கு நேர் மோது என்று அவன் மனமே வாட்டுகிறது.

“எதிர்பார்த்தேன்..” பளீரென புன்னகைத்தவள், விலகிப்போய் தன் பயிற்சியில் கவனம் குவித்தாள்.

அவள் வேலுக்கு விசை கொடுக்கும் விதமாக பின்னால் இழுக்கும்போது ஆதன் அவளை நெருங்கினான்.

“உதவட்டுமா?” கேட்டபடியே அவன் கரங்கள், அவள் கரத்தின் மீது பதிந்தது. வேல், முன்னை விட அதிகமான விசையோடு பின்னுக்கு இழுபட்டது.

மீள முடியாத படி விழிகள் இரண்டும் பின்னிக்கொண்ட வேளை, காலம் உறைந்து நிற்க, இதயம் இரண்டும் கட்டுப்பாடின்றி தெறித்து சிதற, இருவரும் சேர்ந்து வீசிய வேல் இருமடங்கு பலத்துடன் காற்றை கிழித்துக்கொண்டு எல்லையைத் தாண்டி சென்று நிலத்தை குத்தி நின்றது.

நிலத்தில் இருவேறாய் பிரிந்திருந்த நிழல்கள், ஒன்றாக பிணைந்து விட்டதிலேயே அவள் பார்வை பதிந்து கிடந்தது. அலைகடலின் பேரோசை இதயத்தின் வழியே காதுக்குள் ஒலித்தது.
 
#5
Fantastic epi kalpana. The way you narrate is awesome. All the factors like Thrill, betrayal, romance, bravery, strategy etc needed for a historical fiction is presented in an elegant way kalpana. I don't know what to say. Super super super. The language is wow. You are rocking. The fast paced narration is adding to the beauty. Waiting for adhans and kanyas next move.
 
#6
மூளை தீட்டியது தந்திரம்
மனசு சொல்லுவது கன்யா மந்திரம்
அவள் முகமோ அவன் மனதில் சித்திரம்
ஆதனுக்கோ அவன் நிலை விசித்திரம்
அவங்க காதல் படைக்குமா சரித்திரம்...
 

Find SM Tamil Novels on mobile

Latest updates

Latest Episodes

Mobile app for XenForo 2 by Appify
Top