• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அத்தை வீடு...

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Status
Not open for further replies.

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
*அது ஒரு பொற்காலம்!!!*

*அத்தை !*
*அப்பாவின் உடன் பிறப்பு*

எப்படா கோடை விடுமுறை என்று ஏங்கித் தவித்த காலம் உண்டு.

இப்போது ஏண்டா கோடைவிடுமுறை வருகிறது என்று பொங்கிக் கலங்குகிற காலமாகிவிட்டது.

கோடை காலம் வந்தால், கூடவே விடுமுறையும் வரும்.
மார்ச் மாத நடுவில், ஊரில் இருந்து அத்தையும் தாத்தாவும் விடுமுறைக்கு குழந்தைகளை விடச் சொல்லி கடிதம் எழுதிப்போட்டிருப்பார்கள்.
அத்தை வீட்டுக்குப் போவதா, தாத்தா வீட்டுக்குப் போவதா என்று பெற்றோர் குழம்பித் தவிப்பார்கள்.

*குழந்தைகள், அத்தை வீட்டுக்கும் போறோம், தாத்தா வீட்டுக்கும் போறோம். அங்கே கொஞ்ச நாள். இங்கே கொஞ்சநாள்... என்று சொல்வார்கள்.*

*உலகின் அத்தைகள், இன்னொரு அம்மாக்கள். ‘என் அண்ணோவோட புள்ள, என் தம்பியோட பொண்ணு’ என்றெல்லாம் கொண்டாடித் தீர்த்துவிடுவார்கள்.*

இத்தனாம்தேதி குழந்தைகளுடன் வருகிறோம் என்று கடிதம் கைக்கு வந்ததுமே அத்தைகளுக்கு றெக்கையே முளைத்துவிடும்.

தெருவுக்கே சொல்லிவிடுவார்கள்.
எப்போதும் அம்மாவின் முந்தானையைப் பிடித்துக்கொண்டே வலம் வரும் குழந்தைகள், அப்பாவைக் கட்டிக்கொண்டே தூங்கிப் பழகிய குழந்தைகள், அத்தை வீட்டுக்குள் நுழைந்ததும், அப்பா அம்மாவை மறந்தேவிடுவார்கள்.

அத்தைதான் குளிப்பாட்டிவிடணும்

அத்தைதான் தலைவாரிவிடணும்.

அத்தைதான் சாப்பாடு ஊட்டணும்.

அத்தை கூட கடைக்குப் போறேன்.

அத்தை கூட குளத்துக்குப் போறேன்... என்று ஒருநாளில் நூறுமுறையேனும் அத்தை, அத்தை என்று அழைத்துக் கொண்டே இருப்பார்கள் குழந்தைகள்.

‘ஊர்லேருந்து உன் அண்ணன் பசங்க வந்துட்டாங்க. நம்மளையெல்லாம் கண்டுக்குவீங்களா?’ என்று மாமாக்கள் கேலி பேச, வீடு இன்னும் வெடித்துச் சிரிக்கும்.

அத்தைப் பையன்கள், அத்தைப் பெண்கள் என்று அவர்களுடன் ஆட்டம் போடுவதும் கண்ணாமூச்சி விளையாடுவதும் சொட்டாங்கல் விளையாடுவதுமாகப் பொழுது போகும்.

நான்கைந்து நாள், அத்தைப் பசங்க நிறையவே விட்டுக் கொடுப்பார்கள். அடுத்தடுத்த நாளில், ‘அம்மா, பசிக்குதுன்னு உக்கார்ந்திருக்கேன். அவங்களுக்கு போட்டுகிட்டே இருக்கே’ என்று மூஞ்சி காட்டுவார்கள்.

‘நகருடி... எங்க அம்மா பக்கத்துல நான் படுத்துக்கணும்’ என்று அக்கடா என்று படுக்கிற வேளையில் யுத்தத்தைத் தொடங்குவார்கள்.

‘சரிசரி... இன்னிக்கி இவங்க, நாளைக்கு நீ’ என்று அத்தை சொல்ல, ஊரிலிருந்து வந்திருக்கும் குழந்தைகளுக்கும் பெருமிதம் பிடிபடாது. ’நல்ல அத்தை’ என்று கழுத்தைக் கட்டிக்கொண்டு தூங்குவார்கள்.

அத்தை வீட்டுக்கு அக்கம்பக்கத்தில் உள்ள பசங்களும் தோஸ்த்தாகிவிடுவார்கள்.

கிட்டிப்புல்லு, கோலிகுண்டு, ஐஸ்பாய் என விளையாட... வெயிலாவது மண்ணாவது. யார் வீட்டிலாவது கூப்பிட்டு இளநீர் தருவார்கள். நுங்கு கிடைக்கும் காலமும் இதுதான். அத்தை நுங்கை அழகாகப் பிரித்து, தோலெல்லாம் எடுத்து, சிரத்தையாகக் கொடுப்பாள்.

அந்த பனங்காயின் மேல்பாகத்தைக் கொண்டு, இணைத்து, இருசக்கரமாக்கி, அந்தச் சக்கரத்தில் நீண்ட கழி ஒன்றை இணைத்து மாமாக்கள் தர, இரண்டுநாளைக்கு அதை உருட்டிக் கொண்டு, ஓடுவதும் ஆடுவதும் குளிரக் குளிரக் கிடைக்கிற சந்தோஷ ஜூஸ்கள்.

அப்போதெல்லாம் அடுப்பாங்கரையே அவ்ளோ பெருசு.

விறகு அடுப்புதான். சாயந்திரமானால், வாசல்பக்கம் தாண்டி, தெருவின் பாதிவரைக்கும் பஜ்ஜிவாசம் பரவும்.

வாழைக்காய் பஜ்ஜி, கத்தரிக்காய் பஜ்ஜி, வெங்காய பஜ்ஜி,போண்டா என்று சுடச்சுட பண்ணிக்கொடுத்துக்கொண்டே இருப்பார்கள் அத்தைகள்.

இன்னொரு நாள் அரிசி உப்புமா இருக்கும்.

பிற்பாடு அழைத்துச் செல்ல பெற்றவர்கள் வந்த போது விவரங்களெல்லாம் சொல்ல, ‘அட... ஆச்சரியமா இருக்கே. அரிசி உப்புமாலாம் அவன் சாப்பிடவே மாட்டான்’ என்று அம்மா அதிசயிப்பாள்.
‘அத்தை பண்ற அரிசி உப்புமா அப்படி’ என்று அம்மாவின் காலை வாரிச் சிரித்துக் குதூகலிப்பார்கள்.

தாத்தாவின் வீடு மட்டும் என்னவாம். படக்கென்று பேசிவிடமுடியாதுதான். குபீரென்று சிரித்துவிட முடியாதுதான்.
ஆனால் எதுவேண்டுமானாலும் தாத்தாவிடம் கேட்கலாம். எல்லாவற்றுக்கும் பதில் சொல்வார்கள் தாத்தாக்கள். ஒரு பாட்டில் நிறைய கோலிகுண்டு சேகரித்து வைத்திருக்கிற தாத்தாக்கள் இருக்கிறார்கள்.

அந்தக் காலத்தில் பாட்டுப்புத்தகங்கள் உண்டு. சினிமாப் பாட்டுப் புத்தகங்கள். விதம்விதமாய், ரகளை பண்ணியிருப்பார்கள் அந்த சின்னூண்டுப் புத்தகத்தில். கதைச்சுருக்கம், டெக்னீஷியன்ஸ் பெயர்கள், இசையமைப்பாளர், இயக்குநர் பெயர்கள், பாடல் எழுதியவர்கள், பாடியவர்கள், பாடல்கள் என பல நாட்கள், அந்தப் பாடலைச் சித்திக்களுடன் சேர்ந்து பசங்க பாடுவார்கள்.

நலம்தானா இயலாததாக...
உடலும் உள்ளமும் நலம்தானா...
என்று சித்தி பாட, கோரஸாக சேர்ந்துகொள்வார்கள் பசங்களும்.
‘இது என்ன படம் தெரியுமா. தில்லானா மோகனாம்பாள். கொத்தமங்கலம் சுப்புன்னு ஒரு ரைட்டர். விகடன்ல தொடரா எழுதினாரு. அதைத்தான் ஏ.பி.நாகராஜன் படமா எடுத்தாரு. சிக்கல் சண்முகசுந்தரமா சிவாஜியும் மோகனாம்பாளா பத்மினியும் நடிச்சிருப்பாங்க. ரொம்பப் பிரமாதமான படம்’ என்று ஒவ்வொரு பாட்டுக்கு அடுத்தும் படம் குறித்த தகவல்களை அழகாக, கதை போல் சொல்வார்கள்.

‘அந்தப் பரண்ல, பெட்டி இருக்கே... அதுல என்ன இருக்கு தாத்தா’
எல்லா வீடுகளிலும் பரண் இருக்கும். பரணில் பெட்டி இருக்கும். அந்தப் பெட்டிக்கு தாத்தாக்களே சொந்தக்காரர்களாக இருப்பார்கள். ‘பெட்டியைத் தொறந்து பாக்கணுமா’ என்று கேட்டுவிட்டு, அந்த வயதிலும் ஏணியோ ஸ்டூலோ போட்டு, பெட்டியை இறக்கித் தருவார்கள் தாத்தாக்கள்.

அரை டிராயருடன் தாத்தா படம் இருக்கும். அதுவும் எப்படி டிராயர் தெரியுமா. அப்போதெல்லாம் டிராயர் அவிழ்ந்து விழாமல் இருக்க, தோள் பகுதி ரெண்டிலும் டிராயருடன் ‘வார்’ வைத்துத் தைத்திருப்பார்கள். அப்படியான டிராயருடன், கல்லூரிப் பட்டமளிப்புடன், முறுக்கு மீசையுடன், வானத்தைப் பார்த்துக் கொண்டே, கன்னத்தில் கைவைத்துக் கொண்டு, பூஜாடிக்கு அருகில் நாற்காலியில் அமர்ந்தபடி தாத்தாவும் அருகே பாட்டியுமாக... என்றிருக்கும் படங்களைப் பார்த்து கதை சொல்ல, தாத்தாவுக்கு இன்னொரு ஜென்மம் வேண்டும். அவ்வளவு கதைகள், அதனுள்ளே படிந்திருக்கின்றன. ஆனால் ஒவ்வொரு படமும் கதையும் சுவாரஸ்யம் நிறைந்தவை.

இன்னொரு பெட்டியில், மகாத்மா காந்தியும் மகாகவி பாரதியாரும் கல்கியும் இருப்பார்கள். மு.வ.வும், தீபம் நா.பார்த்தசாரதியும் மூதறிஞர் ராஜாஜியின் சக்கரவர்த்தி திருமகனுமாக பரணில் இருப்பார்கள். தாத்தா காலத்தில் லக்ஷ்மியின் கதைகள்தான் பெரிதாகக் கொண்டாடப்பட்டன என்று கொசுறு கொசுறாக, பல முக்கியத் தகவல்களைச் சொல்லிக்கொண்டே இருப்பார்கள் தாத்தாக்கள்.

மாலை நேரங்களில், கோயிலும் அதன் எதிரில் உள்ள குளமும் *தாத்தாவின் கைப்பிடித்துக் கொண்டு போய் நின்றால்தான், கொள்ளை அழகு.*
*சுடச்சுட வேர்க்கடலைப் பொட்டலமும் காராச்சேவுப் பொட்டலும் வாங்கிக் கொண்டு, குளத்தங்கரையின் படிக்கட்டுகளில்* கோயில் பற்றி, ராஜாக்கள் பற்றி,
குளங்கள் பற்றி, நீச்சல் பற்றிச் சொல்லச் சொல்ல...
இங்கே எல்லா தாத்தாக்களும் ராஜராஜசோழனாகவும் மனுநீதிச் சோழனாகவும் தெரிவார்கள்.

*அங்கே... அத்தை அத்தை என்று வாய்கொள்ளாமல் கூப்பிட்டது போல, இங்கே தாத்தா தாத்தா என்று கேள்விகளால் ஞாபகங்களைக் கிளறிவிடுவார்கள்.*

விடுமுறை முடியும் தருணத்திற்கு பத்து நாட்களுக்கு முன்பாகவே அம்மாவோ அப்பாவோ அம்மாவும் அப்பாவுமோ அழைத்துப் போக வந்துவிடுவார்கள்.

தாத்தாவைக் கட்டிக்கொண்டு இன்னும் நாலுநாள் கழிச்சு வரேன் என்று குழந்தைகள் கெஞ்சும். ‘தாத்தா தாத்தா சொல்லு தாத்தா...’ என்று பொக்கைக் கன்னக்குழிகளில் விரலால் கோலமிடும். ‘இப்ப போகலாம். வேணும்னா, காலாண்டுப் பரிட்சை லீவுல வரலாம்’ என்று நொண்டிச் சமாதானம் சொல்லி, ஏமாற்றுவார்கள் பெற்றவர்கள்.

’என்னடியம்மா. வீடே அமைதியா இருக்கு’ என்று அத்தைகளிடம் யாரேனும் கேட்பார்கள். ‘கலகலன்னு இருந்துச்சு. எங்க அண்ணன் பசங்க, அத்தை அத்தைன்னு கூப்பிட்டுக்கிட்டு இங்கிட்டும் அங்கிட்டுமாக ஓடித்திரிஞ்சாங்க. அவங்க போனதும், வீடே வெறிச்சுன்னு ஆகிப்போச்சு’ என்று அத்தைகள், புலம்பிக்கொண்டே இருப்பார்கள்... அடுத்த வருட கோடைவிடுமுறை வரும்வரைக்கும்!

இங்கே... ‘மோர்க்குழம்பு பண்ணும் போதெல்லாம் எங்க அக்கா பசங்க ஞாபகமா வருது. அவங்களுக்கு சேமியா உப்புமான்னா பிடிக்காது. அதனால செய்றதே மறந்துபோச்சு எனக்கு. தேங்கா பர்பி கேட்டுதுங்க பசங்க. பண்ணி, ஒரு டப்பால அடைச்சுக் கொடுத்தேன். மிச்சமா, ரெண்டே ரெண்டு பர்பி இருக்கு. ஆனா திங்கறதுக்குப் பிடிக்கலை. இது அவங்களுது. என் அக்காப் பசங்களுது. அக்கா பையன் என் தோடு ஜிமிக்கியை ஆட்டி ஆட்டி விளையாடுவான். அதுவொரு விளையாட்டாம். கண்ணாடில முகம் பாக்கும்போதெல்லாம் ஜிமிக்கி தெரியும்ல. அப்படி ஜிமிக்கி தெரியும்போதெல்லாம் அக்கா பசங்கதான் கண்ணுக்குள்ளேயே நிக்கிறாங்க’ என்று சித்தி புலம்பிக்கொண்டே இருப்பாள்.

அத்தைகள் போல, சித்திகள் போல, புலம்ப மாட்டார்கள் தாத்தாக்கள்.
முகத்தில் இறுக்கம் படிந்து, கலகலப்பு வடிந்து, ஏதோவொரு சோகமேகச் சூழலுக்குள் திக்கித்திணறிக் கிடப்பார்கள்.
அந்தச் சின்னக்குளத்தில் இருந்து வெளியாகிற லேசான அலைகளும் கரைப்பக்கம் வந்து வந்து எட்டியெட்டிப் பார்க்கிற மீன்களும் கேட்டுவிட்டுப் போகும்...

’என்ன தாத்தா... பேரப்பசங்களைக் காணோம்’ என்று.

*அதெல்லாம் ஒரு காலம். கார்காலம். பொற்காலம்!*

இன்று எல்லார் வீட்டிலும் ஒரு குழந்தை.
அத்தை, சித்தப்பா முறை ஒழிந்து விடுமோ என்ற பயம் உள்ளது.
உறவை பேணுவோம்.

இன்று வீட்டிற்க்கு ஒரு குழந்தை என்ற கலாச்சாரம் வந்த பிறகு, அத்தை, பெரியப்பா, சித்தப்பா, மாமா, சித்தி, பெரியம்மா என்கின்ற உறவுகளே மறைந்து கொண்டிருக்கும் கால கட்டத்தில் நம் குழந்தைகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன.

*நாளைக்கு நம் குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர்களின் காலத்திற்கு பிறகு, உறவு என்று சொல்லிக் கொள்ளவும், ஒரு கோடை விடுமுறைக்கு அத்தை, பெரியப்பா, சித்தப்பா, மாமா என்று போக போக்கிடம் இல்லாத ஒரு எதிர் காலம் நம் குழந்தைகளை எதிர்நோக்கி இருக்கின்றது.*

*வீட்டில் விளையாடிக் கொள்ள அண்ணன், தம்பி, தங்கை என்கிற உறவுகள் கூட இல்லாத காலகட்டத்தில் நம் குழந்தைகள் வளர்வது, அவர்களுக்கு எதிர்காலத்தில் _emotionally orphaned children_ என்கிற ஒரு நிலையினை உருவாக்க நாம்தான் காரணமோ என்கின்ற குற்ற உணர்ச்சியும் தோன்றுகின்றது.*
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
அருமை டா படிக்கும் போதே ஏதோ ஒரு இனம் புரியாத அழுத்தம்
நைஸ் டா ??
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
அருமை டா படிக்கும் போதே ஏதோ ஒரு இனம் புரியாத அழுத்தம்
நைஸ் டா ??
:love: ama mahakka....
 




Status
Not open for further replies.

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top