• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அனல் மேலே பனித்துளி

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் - 1


பரபரப்புக் குன்றாமல் அந்த இரவு நேரத்திலும் லாஸ்வேகாஸ் நகரம் இயங்கிக்கொண்டிருந்தது. பரபரப்பு குறையாமல் இருக்கும் அந்த நகரத்தில், கணினித் திரையில் பார்வையைப் பதித்திருந்த ரொனால்ட்டோ எட்வர்ட், புருவத்தில் முடிச்சுடன், யோசனையில் ஆழ்ந்திருந்தான்.
அவன் யோசனைக்குக் காரணம், அவன் படித்துக்கொண்டிருந்த ஒரு ப்ளாக்கில் வெளி வந்த செய்தியைப் பற்றியது. அதுவும் ஒரு மலைக் கிராமத்தில் நடக்கும் சில சுவாரஸ்யமான, மற்றும் திடுக்கிடும் சம்பவங்களைப் பற்றியது அந்த ப்ளாக். முதலில் அஸ்வாரஸ்யமாகப் படிக்கத் தொடங்கிய அந்த ப்ளாகில் இருந்த செய்திகளை, பிறகு இடையிட்டு நிறுத்த மனமின்றி, அன்றைய நாள் பதித்திருந்தச் செய்திகளைப் படித்துவிட்டே எழுந்தான் ரொனால்டோ.
அவன் மனம் இன்றும், அந்த ப்ளாகில் பதித்திருந்த செய்திகளை அசைப்போட்டுக் கொண்டிருந்தது. நாகரீகத்தில் பிறந்து, நாகரீகத்திலேயே வளர்ந்த அந்த வெள்ளைக்கார இளைஞனுக்கு, கிராமத்தில் நடக்கும் அந்தச் சம்பவங்கள் அதிசயமாகத் தான் இருந்தது. நம்பவும் முடியாமல், நம்பாமல் இருக்கவும் முடியாமல், இரு மனமாய், அவன் இருக்கக் காரணம், அந்த ப்ளாக் அவன் நண்பனுடையது. அதுவும் அந்தச் சம்பவங்களுக்கு நேரடி சாட்சியாக இருப்பவன். ஏன் அந்தச் சுவாரஸ்யங்களில் அவனும் ஒருவன்....
அன்று படித்த செய்தியை அவன் மனம் ஏற்க மறுத்தது. ஆனாலும் நடந்தது உண்மை தானே... அதே சிந்தனையில் இருந்தவன், தன் நண்பன் திவாகர் உள்ளே வந்ததையும் கவனிக்காமல் இருந்தான்.
இனி இருவரும் பேசிக்கொள்ளும் வார்த்தையாடல்கள் அனைத்தும் ஆங்கிலமாக இருந்தாலும் இங்குத் தமிழில் தருகிறேன்....
“என்னாச்சு ரோன்? என்ன யோசனை?” கேட்டுக்கொண்டே திவாகர், தனது செல்லைச் சார்ஜில் போட்டு விட்டு அவன் அருகில் வந்து அமர்ந்தான்.
திவாகர், இந்திய நாட்டில், தமிழ் மண்ணில் பிறந்து வளர்ந்தவன். மேல் படிப்பிற்காக அமெரிக்கா சென்ற இடத்தில், ஒரே கல்லூரியில் படிக்கும் ரொனால்டோவுடன் நட்பு பாராட்டி, இருவரும் இப்பொழுது இணைபிரியாத நண்பர்களாக மாறியிருந்தனர்.
ரொனால்டோவின் வீடு மிக அருகில் இருந்தாலும், அவனுடைய பொழுது திவாகருடன் தான் கழியும். பாதி நாட்கள் அவன் அங்கேயே உறங்கியும் விடுவான். அந்த அளவு நட்பாகப் பழகினர் இருவரும்.
“ஹே ரோன்.... என்னாச்சு இவ்வளவு யோசனை?” மீண்டும் அவனை உலுக்கி அழைத்தான் திவாகர்.
“இப்பத் தான் உன்னோட ப்ளாக் படிச்சேன்.... இது ரொம்ப ஸ்டுபிட்டா இருக்கு.... எப்படி உங்க ஊருல இப்படி செய்யச் சொல்றாங்க? அதுவும் மூணு மாசத்துல நாலு கொலை நடந்திருக்கு.. போன வாரம் மட்டும் இரண்டு கொலை... எப்படி நடக்குது?...
அந்தக் கொலையானவங்கள, நடுக் காட்டுல கொண்டு போய், அங்க இருக்கற காட்... என்ன பேரு?” பெயர் சொல்ல வராமல் ரொனால்டோ நிறுத்த, திவாகர், “காட்டு காளியம்மன்....” என்று எடுத்துக்கொடுத்தான்.
“ஹான்... காட் கிட்ட போட்டா.... அன்னிக்குள்ள அவங்க பாடி காணாம போகுது.... எப்படி? மிருகங்க தானே சாப்பிடும்?” தலையைப் பிய்த்துக் கொண்டு, கேள்விகளை அடுக்கினான் ரொனால்டோ.
“கொலையானவங்க கிட்ட மிருகங்க வரவே வராது.... அது அம்மன் வந்து அவங்கள சாப்பிடறதா சொல்றாங்க.... இருள் கவிழற நேரம் தான் அம்மன் வருமாம்.... அங்க இருக்கற கருப்பசாமி..... பார்க்கவே நமக்குக் குலை நடுங்கும்.... பயங்கரமா இருக்கும்... எங்க அப்பா ஃபாரஸ்ட் ஆளு தானே... அவங்களே அங்க போகப் பயப்படுவாங்க.... அதுவும் தப்பு செய்யறவங்க பாடி எங்க இருக்கும் தெரியுமா?” தங்கள் ஊரைப் பற்றி அவனுக்கு விளக்க முனைந்தான் திவாகர்.
“எங்க இருக்கும்?” கேள்வியான பார்வையோடு ரொனால்டோ அவனிடம் கேட்டான்.
இதே கேள்வியை, அவன் ப்ளாக்கை படிக்கத் தொடங்கிய நாளிலிருந்து கேட்டுக்கொண்டு தான் இருக்கிறான்... பலமுறை கேட்டால், என்றாவது ஒருநாள் அதற்கான முதல் முடிச்சு தன்னிடம் சிக்குமா? என்ற ஒரே ஆவலில் தான் ரொனால்டோ அவனிடம் கேள்விகளால் துருவுவது. அவனது ஆர்வம் தெரிந்து தான் திவாகரும் பொறுமையாக அதற்குப் பதில் சொல்வதும். ஏனென்றால் ரொனால்டோ ஒரு பத்திரிக்கைத் துறை ஆராய்ச்சியாளன்.
“அந்தக் காட்டுத் தொடக்கத்துல ஒரு சாமி சிலை இருக்கும்.... அது என்ன சாமின்னு யாருக்கும் தெரியாது.... உருவம் இருக்கிற மாதிரி இருக்கும்... ஆனா கிளியரா தெரியாது... அந்தச் சாமி சிலை கிட்டத் தான்....” திவாகர் சொல்ல, மீண்டும் தன்னுடைய ஆராய்ச்சி, தொடக்க நிலைக்கே வந்துவிட்ட உணர்வுடன், தன் தலையைக் கோதிக்கொண்டான் ரொனால்டோ.
“இன்னிக்கு என்ன நியூஸ்? ஏதாவது புதுசா?”
“ஹம்.... இன்னிக்கு ஒண்ணும் ஸ்பெஷல் இல்ல... ஆனா என் தங்கை ஜோதிக்குத் தான் உடம்பு முடியலையாம்.... அந்தக் கொலையானவங்கள பார்த்தாலே இவ இப்படி ஆகிடறா... கடும் காய்ச்சலாம்.... ஒருவாரமா விடவே இல்லையாம்... இன்னிக்குத் தான் காளிக்கு கெடா கொடுக்கிறார்களாம்.... நாளைக்கு சரியாகிடும்...” திவாகர் சொல்ல, தலையில் அடித்துக்கொள்ளலாம் போன்று இருந்தது ரொனால்டோவிற்கு.
“ஜுரம்ன்னா டாக்டர் கிட்ட போகணும் டிவா (ரொனால்டோ உச்சரிக்கும் திவாகரின் பெயர்).... ஆடு கொடுத்தா சரியாகுமா என்ன....” எவ்வளவு முயன்றும் அவனது குரலில் நக்கல் தெரித்தது.
“இது தான் அந்த ஊர்களின் நம்பிக்கை... நான் போய் டாக்டர் கிட்ட போங்கன்னு சொன்னேன்னு வை... என்னை அடுத்த நாள் அந்தச் சாமி சிலை கிட்ட தான் பார்க்கணும்... உனக்குத் தெரியுமா ரோன்... நாளைக்கு நான் போன் செய்யும்போது பாரேன், அவளுக்குக் குணமாகிடுச்சுன்னு சொல்லுவாங்க....” திவாகரும் பெருத்த நம்பிக்கையுடன் கூறினான்.
“எனக்கு உன்னை எந்த லிஸ்ட்ல சேர்க்கறதுன்னு தெரியலை.... நீ படிச்சவன், இதெல்லாம் சாத்தியமா?” என்று வருத்தமாகக் கூறிவிட்டு, “உங்க ஊருக்குப் போன் வேறயா... நீ இன்னிக்கு பேசினதுக்கே மூணு நாள் லைன் ட்ரை பண்ணிருக்க... என்ன சொன்னாங்க உன் பேபி வைஃப்?” ரொனால்டோ கிண்டலாகக் கேட்க, திவாகர் முகத்தினில் புன்னகை நிரம்பியது.
“செல்வா நலமா இருக்கா ரோன்... நான் போன் செய்யலேன்ன உடனே கொஞ்சம் பயந்திருக்கா.... அப்பறம் அப்பா தான் மழை பெய்ததுல லைன் இல்லைன்னு சொல்லிச் சமாதானம் செய்திருக்கார்..... அப்பாவுடைய வயர்லெஸ்ல பேசச் சொல்லி அடம் செய்திருக்கா....” சிரிப்போடு திவாகர் சொல்ல, ரொனால்டோ வாய் விட்டுச் சிரித்தான்.
திவாகரின் மனைவி செல்வமாரி, ரொனால்டோ கூறுவது போலவே சிறுப்பெண் தான்.... திவாகருக்கும் அவளுக்கும் பத்து வருடங்களுக்கு மேற்பட்ட வயது வித்தியாசம். அதைக் கேட்ட ரொனால்டோவோ அதிர்ந்து நின்றான். சுள்ளிப் பொறுக்கிக் கொண்டிருந்த செல்வமாரியையும், படிப்பே முடித்திராத திவாகரையும் திருமண பந்தத்தில் இணைத்தனர், பெரியவர்கள். பெரியவர்கள் என்பதை விட சாமியாடி என்று தான் சொல்ல வேண்டுமோ??
சிறுப்பென் என்பதால் எப்பொழுதும் ரொனால்டோ செல்வமாரியை குறிக்கும் சொல் பேபி வைஃப்.... காட்டு இலாக்கா அதிகாரி என்பதனால் அவரது வீட்டில் மட்டுமே தொலைப்பேசி வசதி உண்டு.... அதுவும் என்றாவது ஒருநாள் மட்டுமே ஒழுங்காக வேலை செய்யும்.
திவாகரின் தந்தை, பரமேசன், அந்த கிராமங்களுக்குக் காட்டு இலாக்கா சார்பாக வந்து, அந்த ஊர் மக்களும், அவர்களின் கட்டுப்பாடும் பிடித்துப்போக, அங்கேயே அந்த ஊரில் ஒருவராக இருக்கத் துவங்கினார். ஆனால் தன் மகனை மட்டும் படிக்க வைக்க வேண்டும் என்ற குறிக்கோளோடு, சாமியாடியிடம் குறிகேட்டு, அவனை வெளியூருக்கு அனுப்பிப் படிக்க வைத்து, பின்பு வெளிநாட்டிற்கும் அனுப்பிப் படிக்க வைத்தார்.
அந்த ஊர் சாமியாடியின் வாக்குபடி திவாகருக்கும் செல்வமாரிக்கும் திருமணம் முடிய, திவாகர் படிக்க வெளிநாடு கிளம்பி வந்தான். விடுமுறையில் செல்லும் காலத்தில் எல்லாம் அந்த ஊர் மக்களின் கட்டுப்பாடும், அவர்களின் இன்ப துன்பங்களைப் பார்த்து வளர்ந்தவன் என்பதால், அவன் அந்தத் திருமணத்தை வெறுக்கவும் இல்லை... ஒதுக்கவும் இல்லை.... மாறாக செல்வமாரியை தனது செல்வமாகக் கருதத் துவங்கினான்.
“க்யூட் பேபி....” ஒரு பெருமூச்சுடன் ரொனால்டோ சொல்ல, திவாகர் தனது படிப்பு சம்மந்தமாகப் படிக்கத் தொடங்கினான்.
திவாகரையே பார்த்துக்கொண்டிருந்த ரொனால்டோவிற்கு ஒரு யோசனை தோன்றியது. “அவனுடன் அந்த ஊருக்கு நேரில் சென்றால் என்ன? இன்னும் இரண்டு மாதத்தில் படிப்பும் முடியப் போகிறது.... அவனும் ஊருக்குச் சென்றுவிடுவான்.... அந்த ஊரின் ரகசியத்தையும், சுவாரஸ்யங்களையும் நேரில் கண்டால் என்ன?” அவன் மனதில் கேள்விகள் எழத் தொடங்கியது.
“ஹும்... அவனிடம் பிறகு பேசலாம்...” என்று எண்ணிக்கொண்டு, மீண்டும் அந்த ப்ளாகில் அவன் பதித்த செய்தியைப் படித்து உள்வாங்கத் துவங்கினான். தனக்கு நெருடலாக இருக்கும் சில விஷயங்களைக் குறிப்பெடுக்கத் தொடங்கினான்.
விண்ணை முட்டி நிற்கும் மரங்கள்.... மேகக்கூட்டங்கள் அந்த மரங்களுக்கு இடையில், புகுந்து விளையாடிக்கொண்டு, பச்சைப் பசுமைக்கு வெள்ளித் திரையிட்டது போல அழகாகக் காட்சியளித்தது. மிதமான சாரல் மழை, காற்றின் தாலாட்டில் இலைகள் சலசலக்கும் சத்தம், அந்தப் பசுமைக்கு சதங்கையாக ஒலித்தது.
இத்தகைய பசுமையை தனக்குள் பொதித்து வைத்தது, நூறுகுடி ஆட்சி.... நூறுகுடி.... நூறு சின்னஞ்சிறிய மலைக் கிராமங்கள் ஒன்றாக இணைந்ததால் இப்ப பெயர் என்றும், நூறு மூத்தக் குடியினர் இன்றும் தங்கள் மரபு மாறாமல் இருப்பதும் இந்தப் பெயருக்குக் காரணம் எனலாம்...
அந்தக் கிராமத்தில் இருக்கும் காளிப்பாவை கோவிலில் ஊடுக்கைச் சத்தம் எதிரொலித்துக் கொண்டிருந்தது. அம்மனின் முன்பு மண்டியிட்டு அமர்ந்திருந்தாள் அந்தப் பெண் பாவை. வாடிய கொடியாக இருந்த அவள் மீது, சந்தன நீர் தெளிக்கப்பட்டு, அவள் நெற்றியில் காளியின் குங்குமமும் வைக்கப்பட்டது.
“காளியாத்தா.... இந்தப் பொண்ணு மேல இருக்கற அந்த ஆவிங்க எல்லாம் போகணுமாத்தா...” என்ற பூசாரியின் குரல் ஓங்கி ஒலிக்க, அந்தச் சத்தம் அந்த இடத்தையே அதிரச் செய்தது.
அந்தச் சிறு பெண் நிமிர்ந்து பார்க்க, அவளின் பெற்றவர்கள் கொண்டு வந்திருந்த ஆட்டின் மீது நீர் தெளித்து, மூன்று முறை கோவிலை வளம் வந்து, சாமியாடி அதனைக் காளிக்கு பலி கொடுத்தார். அதன் உதிரத்தைக் கொண்டு வந்து அவள் முகத்தினில் தெளிக்க, பெரிய கூச்சலுடன் அந்தப் பெண் மயங்கிச் சரிந்தாள்.
“ஜோதி.... ஏய் புள்ள ஜோதி... எழுவே....” அங்கிருந்த நீரை அவள் முகத்தினில் தெளித்து, அவளது தாய் பஞ்சமத்தி எழுப்ப, மெதுவாகக் கண்திறந்து பார்த்தாள் ஜோதி.
“அம்மா...” மெதுவாக அவள் முனக, “காளியாத்தா... வார்த்த பேசாத புள்ள பேசிருச்சு... இனி குணமாயிரும்....” பஞ்சமத்தி அந்தத் தெய்வத்தை கைகூப்பி வணங்கினாள்.
ஜோதியைத் தூக்கிக்கொண்டு, அவளின் தந்தை வீரத்தியன் வீட்டிற்குச் செல்ல, வழியில் பரமேசன் எதிர்ப்பட்டார்.
“என்ன வீரத்தி? ஜோதி எப்படி இருக்கா?” அவரின் கேள்விக்கு, வீரத்தியன் கண்ணீரே பதிலாக வந்தது.
“எல்லாம் சரியா போயிரும்யா.... என்ன... இந்தத் தரவ புள்ள ரொம்ப தத்தளிக்குது.... என்னவோ கல்யாணம் கட்ட வேண்டிய வயசுல இப்படி இருந்தா, சுத்துப்பட்டுல எவனும் கட்ட மறுக்கிறான்.... சாமியாடியும் இவ கல்யாணத்துக்கு ஒரு வழி சொல்ல மாட்டேங்குதே...” அவளின் நிலையை நினைத்துப் பரமேசனும் வருத்தமாகக் கூறினார்.
வீரத்தியன் கண்ணீர் அதிகமாக, “இவளோட புருஷன் சீமையில தான் பிறந்திருக்கான் போல... இவளோட புருஷன எவனும் கட்ட முடியாதுய்யா.... வருவான் பாரு சிங்கக்குட்டி.... ஆகாய விமானத்துல....” அவரைத் தேற்ற கிண்டலில் இறங்கினார் பரமேசன்.
அவரின் கூற்றில் சிரித்து, “ஆமாம்யா... படிக்காத இந்தக் கிறுக்கிய கட்ட, சீம துரை தான் வருவாரு.... போங்கய்யா.... உம்ம மவன்ட்ட இருந்து தாக்கல் வந்துச்சா....”
“ம்ம்... பொழுது விடியப் பேசுனான்... சரியா புள்ளைக்கு உடம்புக்கு ஆவாது... வீட்டுக்குக் கூட்டிப்போங்க... நான் பிறகு வந்துப் பார்க்கறேன்...” கூறிவிட்டு, பரமேசன் தன் கால்களை எட்டிப் போட்டார்.
ஜோதி, பதினெட்டு வயதைக்கடந்து, திருமணமாகாமல் நிற்கும் பெண். அந்தக் குடியிலேயே இத்தனை வயதுக்குத் திருமணம் ஆகாமல் இருக்கும் ஒரே பெண்ணும் கூட. மிகவும் சுட்டி.... அந்த ஊரில் 'செவத்தப் பொண்ணு' என்று அழைக்கப்படும் அவள், துள்ளித் திரியும் பருவ மங்கை. அந்தச் சாமி சிலையின் முன்பு கொலையான பிணங்களைக் கண்டால், ஜுரம் வந்துவிடும்.
சில சமயம் ஓரிரு நாட்களில் குணமடையும் அவள், சில முறை இவ்வாறு ஒருவாரம் எழுந்திருக்க முடியாமல் அவதிப்படுவதும் உண்டு. அப்பொழுது காளி கோவிலில் கெடா பலி கொடுத்து, அங்குக் கொடுக்கும் ஒரு பச்சிலை மூலிகையும் உட்கொண்டால் அடுத்த நாளே சரியாகிவிடும்.
வீட்டிற்கு வந்த ஜோதியை வெளியில் நிற்க வைத்து, அந்தச் சாரல் குளிரிலும் பச்சைத் தண்ணீரை ஊற்றி வீட்டிற்குள் அழைத்துச் சென்றார் பஞ்சமத்தி.
அவளுக்கு உடைமாற்றி, கோரையில் படுக்கவைத்து, கஞ்சிக் கிளறி புகட்டிவிட்டு, பச்சிலை அரைக்கச் சென்றார். கண்களைத் திறந்து பார்த்த ஜோதிக்கு, அந்த இடமே இருளாகத் தெரிய, பேய்கள் அவளை நெரிப்பது போலவும் எண்ணம் எழ, அவசரமாக எழுந்து அமர்ந்தாள்.
“என்ன தாயி... படக்குன்னு ஏந்திருக்கிற.?” பச்சிலையுடன் பஞ்சமத்தி வர, மிரட்சியுடன் ஜோதி அவள் அன்னையைப் பார்த்தாள்.
“மா... நான் ஏன்மா ஊர்வாய்ல புகுந்துட்டு உசிரோட இருக்கணும்.... என்னைய எல்லாம் கேலி பேசுறாங்கம்மா...” அவளுக்குத் திருமணம் ஆகாமல் இருப்பதும், அவளின் இந்த ஜுரத்தையும், அந்த ஊரில் சிலர் அவளின் முகத்திற்கு நேராகக் கேலி பேசுவர்.
“தாயி... சாமியாடியும் பொறுக்கத் தான் சொல்லுதாக.... அவரும் உனக்கு ஜோடி செய்து வைக்கலையே... அடுத்த முறை சாமியாடி கால்ல விழுந்து கேட்றலாம்.... நீ மனசுல ஏதும் வைக்காம உறங்கு தாயி....” அவர் கூறிவிட்டு, அவள் தலையைத் தன் மடியில் வைத்துக்கொண்டார்.
அவரின் கண்களிலும் கண்ணீர் தான்.... அவரின் காதுபடவே, வீரத்தியனும் பஞ்சமத்தியும் ஏதோ பெரும் பாவம் செய்தது போலவும், அதனால் தான் ஜோதிக்குத் திருமணம் ஈடேறாமல் இருப்பது போலவும் ஊருக்குள்ளும் வதந்தி பரவிக்கொண்டு தான் இருந்தது.
அவளின் அழகில் மயங்கி வந்த ஒரு சிலருக்கும் சாமியாடியிடம் குறி கேட்டதற்கு, வேறு பெண்களை, அவர்களுக்கு மணமுடித்து வைத்தாரே அன்றி, ஜோதியின் பெயரை ஒரு முறை கூடச் சொல்லவே இல்லை.
இரவு கவிழத் தொடங்கவும், ஊர் மக்கள் சந்தடி குறைந்து, தங்கள் குடிசைகளில் அண்ட, அந்த ஊரின் அருகே இருந்த துணை மலையில் வெளியூர் வியாபாரிகளின் நடமாட்டம் அதிகரித்தது. ஒரு சில இடத்தில் தீ ஜுவாலை அந்த இருட்டைக் கிழித்துக்கொண்டு, தனது ஒளியை நிலைநாட்ட, அந்த இடத்தைக் கிழிக்கும் அளவிற்கு ஓலம் கேட்டது......
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் - 2


அந்த ஓலச் சத்தத்தைக் கேட்ட ஜோதி எழுந்து அமர, “தாயி.... நீ படு தாயி... அந்தக் கிறுக்கி அடிக்கடி இப்படி ஊளை எழுப்பிக்கிட்டு கிடக்கும்... நீ உறங்கு...” அவளது அன்னை பஞ்சமத்தி சொல்ல, ஜோதி அமைதியாகப் படுத்தாள்.
சிறிது நேரம் தொடர்ந்த அந்த ஓலச் சத்தம், பிறகு நின்றுவிட, ஜோதி தனது கண்களை இறுக மூடிக்கொண்டாள். சிறிது நேரத்திலேயே அவள் உறங்கத் துவங்க, அவளைப் பார்த்துவிட்டுப் பஞ்சமத்தி எழுந்து மெதுவாகத் தன் கணவன் அருகில் சென்றார்.
“பொண்ணு தூங்கிடுச்சா.?” வீரத்தியன் கேட்க, “ம்ம்..” என்ற ஒற்றை முனகலுடன் தன் கணவன் அருகே கவலையுடன் அமர்ந்தார்.
“என்ன முனவுத?. என்ன சொல்ல வேணுமோ சொல்லு?” தானும் எழுந்து அமர்ந்து, பஞ்சமத்தி கையைப் பற்றிக்கொண்டார்.
“இன்னும் நம்ம மவளுக்கு கல்லாணம் கூடி வரலையே.... சாமியாடியும் வாயத் திறக்க மாட்டேங்குது.... வயசும் ஏறுதுல்ல... ரெண்டாந் தாரமா கட்டக் கூட வக்கில்லாம இருக்கே இந்தப் பொண்ணுக்கு....” தனது கவலையை, தன் கணவனுடன் பகிர்ந்தார்.
அப்பொழுது வீரத்தியனின் இரண்டாம் மனைவி, பஞ்சமத்தியின் தங்கை கொடிவஞ்சி அங்கு வர, இருவரும் அவளைத் திரும்பிப் பார்த்தனர்.
“ஏக்கா... நம்ம ஊருல பூசை போடறாகல... அப்போ ஒரு பூசை நாம போட்டு, சாமியாடி மேல சாமி இறங்க, நாம குறி கேட்டா என்னக்கா? இன்னும் இது கன்னிகழியாம வச்சிருக்கறது நம்ம குடும்பத்துக்கே ஆவாதுக்கா....” தனது கவலையையும் அவர் மேலே இறக்கி வைத்தாள் கொடிவஞ்சி.
“ஏய் கொடி.... என்னத்த பேசரவ?. நம்ம பொண்ணுக்கு இத்தனை அம்சமிருந்தும், அந்தக் கொடியவங்க கண்ணுல படாம இருக்கேன்னு நானே நிதம் அம்மனுக்கு வணங்கிட்டு இருக்கேன்... நீ வேற வவுத்துல நெருப்பு வைக்காத....” பஞ்சமத்தி அவசரமாகத் தனது கலக்கத்தை பகிர்ந்தார்.
“ஹ்ம்ம்...” என்று தனது துண்டைத் தோளில் போட்டுக்கொண்ட வீரத்தியன், “இன்னும் ஒரு பூச பார்க்கலாம்... அப்படி இதைக் கட்ட எவனும் வரல... இதை அந்தக் கன்னி கிணத்துல தள்ளிட வேண்டியது தான்... நல்ல நேரம்... எனக்கு மத்தது பயனுங்களா போயிட்டுதுங்க...” தனது மனத்தைக் கல்லாக்கிக் கொண்டு, அங்கிருத்த தடுப்பிற்குள் சென்றார்.
ஜோதியின் மீது வீரதியனுக்கும் அளவு கடந்த பாசம் தான்... அவர் கையில் ரோஜாபூவாகச் சிரித்த அந்தக் குழந்தையைப் பார்த்து அவருக்கு உள்ளம் துள்ள, ஊருக்கே நெல்லை வாரி இரைத்து, தன்னுடைய சந்தோஷத்தைப் பகிர்ந்தார். ஜோதி வளர வளரப் பெருமை பிடிபடாமல் சுற்றினார்.
அவளது அழகைக் கண்டு அந்தக் கிராமத்தில் வாய் பிளக்காத ஆளே கிடையாது. அதுவும் அவளின் நிறம் அங்குத் தனியாக இருக்கும்.... சிவப்புமின்றி, கோதுமை நிறமுமின்றி, கலவையான நிறத்தில், ரோஜாவின் மெல்லிய பிங்க் நிறம், அவளின் கன்னத்தில் திட்டுத் திட்டாக, அவளது அழகிற்கு அழகு சேர்க்கும்.
அந்தக் குடியின் பெண்களில் மிக்க படித்த பெண் ஜோதி தான். எட்டாம் வகுப்புவரை படிக்க வைத்த வீரத்தியனை, பரமேசன் மேலே படிக்க வைக்க ஊக்கம் கொடுக்க, ஊர் கட்டுப்பாடு என்று மற்றவர்கள், ஊர் விட்டு ஊர் பெண்கள் சென்று படிக்கக் கூடாது என்றும் மறுத்துவிட்டனர். அத்துடன் ஜோதியின் படிப்பும் இறுதிக்கு வந்து, ஆடு மேய்க்கும் பணி கொடுக்கப்பட்டது.
அவளைப் படிக்க வைக்க முடியாதது வீராத்தியனுக்கும் வருத்தம் தான்... ஆனால் தொன்று தொட்டு வழக்கத்தில் இருக்கும் ஊர்க் கட்டுப்பாட்டை மீறி நடக்க முடியாமல், அவளைத் திருமணம் செய்து கொடுக்க முடிவெடுத்தார்.
ஜோதிக்குப் பிறகு பஞ்சமத்திக்கு உருவான கரு எதுவும் நிற்காமல் போக, ஆண் வாரிசு வேண்டி, வீரத்தியன் அவளது தங்கை கொடிவஞ்சியை திருமணம் செய்தார்.
அவளும் நம்பிக்கையை வீண் போக விடாமல், இரண்டு ஆண் பிள்ளைகளைப் பெற்றுத் தந்தாள். ஜோதிக்கு அவள் தம்பிகள் என்றால் மிகுந்தப் பாசம்.... ஆண் வாரிசுகள் வந்துவிட்டாலும், அந்தப் பாசமிகு தந்தைக்கு ஜோதி என்றும் ஒரு படிமேல் தான். அப்படி இருக்க, அவர் இந்த முடிவை எடுக்க எவ்வளவு கடினப்பட்டிருக்க வேண்டும்!!!
இரு பெண்களும் அழுகையில் கரைய, “இந்த மனுஷனுக்குப் புத்தி பிசகி போயிட்டு.... என் மவளையும் நான் பலிக்கொடுக்கணுமா? காளியாத்தா உனக்குக் கண்ணில்லையா?” பஞ்சமத்தி சத்தமாகவே அழுது புலம்பினாள்.
“இந்தப் பூசைக்கு எம்மவளுக்கு ஒரு முடிவு தெரிஞ்சாகணும்... அவ கல்லாணம் நடக்கும்க்கா?.” கொடிவஞ்சி அவளுக்கு ஆறுதல் கூறிக்கொண்டே அழுகையில் கரைந்தாள்.
வீரத்தியன் முகத்தில் விரக்தி புன்னகை நெளிந்தது. அவர் மனதில் அன்று பரமேசன் கூறியவைகள் நினைவில் வந்தது. “நிசமாவே இந்தக் குடியில பிறக்காதவன் தான் இவ புருஷனோ... ஆத்தா உன் மனசுல என்னாத்தா...” அவர் வேண்டுதலுடன் கண்மூடினார்.
அவரவர் அவரவர் எண்ணங்களில் மூழ்கி இருக்க, வெளியில் சண்டையிடும் சத்தமும், அழுகைச் சத்தமும் பலமாகக் கேட்டது. சத்தத்தைக் கேட்ட வீரத்தியன், வேல் கம்பை எடுத்துக்கொண்டு, வேகமாகக் கதவை அடைத்துக் கொண்டு வெளியில் செல்ல, கொள்ளையர்களினால், குன்றின் மேல் இருந்த வீடுகளில் சூறையாடப் பட்டிருந்தது.
“அய்யோ... என் மவள தூக்கிட்டுப் போயிட்டானுங்க....” ஒரு தாயின் கதறல் ஒலிக்க, வீரத்தியன் அங்கு விரைந்தார்.
அடிக்கடி அந்தக் கிராமத்தில் நடக்கும் விஷயம் தான் அது.... கஞ்சா தோட்டத்தில், அந்த இலைகளைப் பறிக்க வரும் வியாபாரிகள்!! சில முறை பல நாட்கள் அங்குத் தங்க நேரிடுவதும் உண்டு.... அந்த நேரம் அவர்கள் உணவிற்காகவும், சல்லாபத்திற்காகவும், அருகில் இருக்கும் இவர்கள் குடியில் புகுந்து, திணை, கிழங்கு போன்றவைகளைத் தூக்கிச் செல்வதும், அதனுடன் சிறு பெண்களைத் தூக்கிச் செல்வதும் வாடிக்கை தான். அதனாலேயே அந்தக் கிராமத்தில் சிறு பெண்களுக்குமே திருமணத்தை விரைவில் முடித்துவிடுவர்.
அவர்களோடு மட்டுமின்றி, அடர்ந்த காட்டில் போலீசின் கண்களிலிருந்து தப்பிக்க தஞ்சம் புகும் கொள்ளையர்களினாலும் அந்தக் கிராமம் அடிக்கடி சூறையாடப்படும்....
சில பல முறை, சில மணமான பெண்களின் மீதும், இந்த வன்முறை பாயும்..... அப்பொழுது????
வீரத்தியனும் சிலரும் அந்தக் கயவர்களைத் துரத்திச் செல்ல, அந்தச் சிறு பெண்ணைத் தூக்கிப் போட்டுவிட்டு, உணவுப்பொருட்களுடன் அங்கிருந்து விரைந்து மறைந்தனர்.
அந்தச் சிறுப்பென் விழுந்த இடம் ஒரு பாறை.... அதில் தலை மோதி அந்தச் சிறு பெண் உயிரற்ற உடலாகக் கிடக்க, அந்தத் தாய் அழும் சத்தம் விண்ணை முட்டியது.
மறுநாள் வழக்கம் போலவே விடிய, அனைவரும் அந்தச் சிறு பெண்ணின் வீட்டின் முன் அமர்ந்திருந்தனர். “நல்ல நேரங்க.... எம்பொண்ணு மானம் போய்ச் சாவாம நல்லவலாவே செத்தாலே...” நல்லதிலும் கெட்டது என்று அந்தச் சிறு பெண்ணின் தந்தை கூறிக்கொண்டிருந்தார்.
அனைவரும் ஆமாம் என்று தலையசைத்து அமைதியாக இருக்க, அந்தச் சிறு பெண்ணின் இறுதிச் சடங்கும் நடந்தது. ஜோதி எழுந்து அங்கு வந்தாள். அந்தச் சிறு பெண்ணைப் பார்த்து அவள் கண்கள் நிலைக்குத்தி நின்றது. அழகாக, சென்ற வாரம் தன்னுடன் விளையாடியவள், இன்று இவ்வாறு இருப்பது அவளுக்குப் பெருத்த வலியைத் தந்தது. நேராக அவள் ஓடையை நோக்கிச் சென்றாள்.
ஓடையில்..... அவளின் பின்னால் அந்த ஓலமிட்ட, கிறுக்கி என்றழைக்கப்படும் கண்ணழகி வந்து நின்றாள். திடுக்கிட்டு ஜோதி திரும்ப, அவளைப் பார்த்துச் சிரித்தவள், “சோறு கொண்டாந்தியா... சோறு... சோறு...” வயிற்றைத் தடவிக்கொண்டு அவள் கேட்க, அவள் நிலைப் பார்த்து இரக்கப்பட்ட ஜோதி, வேகமாகச் சென்று, அவளுக்கு உணவு எடுத்து வந்தாள்.
அவசரமாக உண்டதினால், தொண்டையில் உணவு அடைக்க, அந்த ஓடைத் தண்ணீரை அள்ளிக் குடித்து, தனது பசியைப் போக்கிக் கொண்டாள், அந்தக் கண்ணழகி.
ஜோதி அவளைப் பாவமாகப் பார்க்க, “ஊருக்குள்ள பல பேரு இருக்காங்க... எனக்குச் சோறுப் போட்டத் தாயி நீ.... நல்லா இருக்கணும்... மவராசி...” வாழ்த்துடன் காட்டின் ஓரத்தில் இருந்த அவளது இருப்பிடத்திற்கு சென்றாள்.
ஜோதி அவளையேப் பார்த்துக்கொண்டிருக்க, “ஹே குட்டி... இங்கன என்னத்த செய்யறீங்க... உடம்பு சுகமாச்சா?” பரமேசன் அங்கு வர, சந்தோஷத்துடன் ஜோதி அவர் கைப்பற்றிக்கொண்டார்.
“அய்யா... எப்படி இருக்கீங்க? நான் நல்லா இருக்கேன்... உடம்பு சுவமாச்சு.... அந்தப் பொண்ணு பாவமுங்கய்யா... ஏன் இந்தக் குடியில பிறந்த பொண்ணுங்களுக்கு மட்டும் இந்த நிலைமை... இது எப்பங்கய்யா மாறும்?.” அவரைப் பார்த்த சந்தோஷத்தில் தொடங்கி, அந்தப் பெண்ணின் நிலை நினைத்து வருத்தத்துடன் முடித்தாள்.
“மாறும்... ஒருநாள் கட்டாயம் மாறும்... நாம மாத்தலாம்....” கூறிவிட்டு, அவளது தலையை வாஞ்சையாகத் தடவினார் பரமேசன்.
“சரி விடுங்கய்யா... அண்ணா எப்போ வராங்க? இப்பத் தான் கிளம்பின மாதிரி இருக்குது.... ரெண்டு வருஷத்துக்கும் மேல ஓடிருச்சு இல்ல....” ஜோதி திவாகரைப் பற்றி விசாரித்தாள்.
“அவன் அடுத்த மாசத்துல வந்திருவான்ம்மா... உனக்கு என்ன வேணுமுன்னு கேட்கச் சொன்னான். உனக்குப் பிடிக்குமுன்னு முட்டாய் வாங்குவான்... அதைத் தவிர வேற என்ன வேணும்...” விளையாட்டாக அவர் கேட்க, ஜோதி தீவிர யோசனையில் ஆழ்ந்தாள்.
“எனக்கு மாப்பிள்ளைய பிடிச்சிட்டு வரச் சொல்லுங்கய்யா... எங்க ஆத்தாளும் அப்பனும் தான் ரொம்ப வருத்திக்கிறாங்க...” விளையாட்டாக ஜோதி சொல்ல, அதில் பொதிந்திருந்த வருத்தம், என்னவோ அப்பட்டமாகத் தெரிந்தது.
“நிசமா சொல்லிடவா...” அவரும் கண்டுக்கொள்ளாமல் விளையாட
“அய்யே... நான் விளையாடுதேன்... அப்படி ஏதும் செய்துபுடாதீங்க.... எனக்கு அதுல எல்லாம் ஆச இல்ல... இந்த ஊர் சனங்க நிம்மதியா இரவுல தூங்கனும்... அந்தக் களவாணிங்க எப்போ வந்து, என்ன செய்வாணுங்கன்னு தெரியாம, நிதமும் யாரும் உறங்கறது இல்ல... அதுக்கு ஒரு விடிவு வரவைக்காம விடக் கூடாதுங்கய்யா” ஜோதி தீவிரமாகக் கூறினாள்.
“வைக்கலாம் வைக்கலாம்.... அங்க செல்வா உன்னைப் பார்க்கக் காத்துட்டு இருக்கா.. வாப்போகலாம்...” பரமேசன் சொல்ல, ஜோதி புன்னகையுடன் அவருடன் நடந்தாள்.
ஜோதியும் செல்வாவும் ஆருயிர்த் தோழிகள்.... ஜோதி பிறந்ததும் வீரத்தியன் பரமேசன் கையில் குழந்தையைக் கொடுத்து, “நீங்கப் பிடிங்கய்யா... உங்கள மாதிரி எம்பொண்ணு நாலெழுத்து படிச்சி நல்லா வருமய்யா.... அப்படியே புள்ளைக்கு பேரும் வச்சிப்புடுங்க....” அவர்க் கூற, அந்தக் குழந்தையை வாங்கிய பரமேசன், அதன் அழகு வடிவான முகத்தைப் பார்த்து, ‘ஜோதிர்மயி...’ என்று பெயர் வைத்தார்.
அதுவே மருவி இன்று ஜோதியாக நிற்கிறது. அவருக்கு அவளும் ஒரு மகள் தான்.... திவாகர் அவளைத் தங்கை என்றே கூறுவான்.... செல்வமாரி திவாகரின் மனைவியாக முடிக்கப்பட்டதும், ஜோதிக்கு மிகுந்த சந்தோஷம்....
சிரிப்பினூடே ஜோதி வீட்டினுள் நுழைய, “ஜோதி... புள்ள... எப்படி இருக்குத.? உடம்பு இப்படி மெலிஞ்சி போயிடுச்சே...” செல்வா அவளை அணைத்துக்கொள்ள, ஜோதி புன்னகையுடன் அவளைப் பார்த்தாள்.
“என்ன புள்ள கேட்குதே... நீ சிரிக்கிற...”
“இல்ல... அண்ணா வரச் சந்தோஷத்துல நீ பூசி இருக்கியோ? உடம்பு ரெண்டு சுத்து போட்டிருக்க.... எங்க அண்ண வந்து என் பொஞ்சாதி எங்கன்னு தேடப்போகுது...” கிண்டலுடன் ஜோதி அவளை அணைத்தாள்.
வெட்கத்தால் தனது முகத்தை மூடிக்கொண்டு, “அவுக வருவாகளாம்... பிறகு இங்கத் தான் இருக்கபோறாகளாம்.... என்னவோ இங்கன பள்ளிக்கூடம் தொடங்கப் போறாவ போலச் சோதி.... நீயும் கல்லாணம் கட்டற வரப் படி... இப்ப கல்லாணம் கட்டி நான் என்ன செய்யுதேன்... அவிக அங்க நான் இங்க...” திவாகரைப் பிரிந்த ஏக்கத்தில், செல்வா பெருமூச்சு ஒன்றை வெளியிட்டு, சொல்ல, ஜோதி அவளைப் பார்த்துச் சிரித்தாள்.
“எதுக்கு இப்படி சிரிக்குத... பேய் கீய் பிடிச்சிடுச்சோ.?” தாடையில் கைவைத்து கேட்க, அவள் கன்னத்தைப் பிடித்து அப்படியும் இப்படியும் ஆட்டினாள்.
“சோதி... வலிக்குது... விடுத...” வலியால் செல்வா கத்த, “எங்க அண்ணன் வரட்டும் சொல்லறேன்... என்னய பேய்ன்னு சொல்லுதா அண்ணேன்னு...” அவள் சொல்ல, செல்வா கையெடுத்து கும்பிட்டாள்.
“அம்மா தாயி.... உனக்கு எதுனா ஆச்சு, உங்க அண்ணே என்னய துரத்தி விற்றுவாக.... கொஞ்சம் பார்த்துச் சொல்லிக்கொடு ராசாத்தி..” செல்வா பாவமாகப் பார்த்து கேட்க, ஜோதி சிரிக்கத் தொடங்கினாள்.
பின்பு இருவரும் பேசிக்கொண்டே அன்றைய சமையலைச் செய்ய, திவாகரின் அம்மா வைஜயந்தி வந்து சேர்ந்தார். அவரும் இவர்களுடன் இணைய, பரமேசன் அமைதியாக அவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்தார்.
திவாகர் உள்ளே நுழையவும், ரொனால்டோ அவனை ஆவலுடன் பார்த்தான். அவன் பார்வைப் புரிந்த திவாகர், “என்ன ரோன்... எனிதிங் இம்பார்டன்ட்?” என்று கேட்க, ரொனால்டோ வேக வேகமாக “ஆம்” என்று தலையசைத்தான்.
“என்னாச்சு?”
“நானும் உன்கூட உங்க ஊருக்கு வரேன்.... உங்க ஊரப் பார்க்க ஆசையா இருக்கு...” சிறு பிள்ளை போல அவன் கேட்க, திவாகர் தனக்குள் சிரித்துக்கொண்டான்.
“சரி ரோன்... உனக்கு விசா, டிக்கெட் எல்லாம் வாங்கணுமே... நான் இப்போ சீக்கிரம் கிளம்பணும் இல்ல... நாளாகிடுச்சே....” அவன் அதற்கு ஏதாவது செய்திருப்பான் என்று தெரிந்தே, வாயைக் கொடுத்தான்.
“விசா அப்பளை செய்துட்டேன்.... டிக்கெட் அப்பறம் வாங்கலாம்... உங்க வீட்டு அட்ரஸ் கொடுத்திருக்கேன்....” அமைதியாக ரொனால்டோ சொல்ல, திவாகர் இப்பொழுது வாய்திறந்தே சிரித்தான்.
“எதுக்கு சிரிக்கிற?.” அப்பாவியாக ரொனால்டோ கேட்க
“இல்ல... நீ எல்லாத்துக்கும் ரெடியா இருப்பன்னு தெரியும்... அதுனால தான் கேட்டேன்...”
“உனக்குத் தெரியும்னு தான் எனக்கும் தெரியுமே...” ரொனால்டோ கூறிவிட்டு, அவனது ப்ளாகைப் படிக்கத் தொடங்கினான்.
“என்ன இது புதுசா போட்டிருக்க? இந்தக் கொள்ளை எப்போ நடந்தது? நான் எப்படி மிஸ் பண்ணினேன்?” ரொனால்டோ கேட்டுக்கொண்டே அதைப் படிக்கத் தொடங்கினான்.
“ரொம்ப பாவம்... சின்னப் பொண்ணு இல்ல...” படித்துக்கொண்டே ரொனால்டோ கேட்க,
“போன வாரம்... ஹும் பாவம் ரொம்ப சின்னப் பொண்ணு தான்...” கூறிக்கொண்டே, ஊரில் உள்ளவர்களுக்கு, தான் வாங்கி வந்தப் பொருட்களை, பெட்டியில் அடுக்கத் தொடங்கினான்.
“நான் என்ன வாங்கணும்? என்ன என்ன வேணும்?” ரொனால்டோ கேட்டுக்கொண்டே, தனது கணினியில் ஆழ்ந்தான்.
“ஒண்ணும் வேண்டாம்... அதையெல்லாம் தூக்கிட்டுப் போக முடியாது... ரொம்ப கஷ்டம்...” திவாரகரின் பதில் அவனது காதில் எட்டியதாகவே தெரியவில்லை.
நாட்கள் சென்றது.... பரமேசனும், அவர்களின் சில அதிகாரிகளும் ரோந்தில் இருக்க, அந்த இரு வாரங்கள் எந்த அசம்பாவிதமுமின்றி அந்தக் கிராமம் நிம்மதியாக இருந்தது.
அந்த நிம்மதி நிலையில்லை என்பது போல நடந்தது, ஒரு சிறுத்தையின் வருகை.... ஊருக்குள் சிறுத்தையின் நடமாட்டம் தெரியத் தொடங்கி இருந்தது. எப்பொழுது யார் மீது பாயுமோ என்ற பீதியுடனே மீண்டும் அவர்களின் தூக்கத்தைத் தொலைத்தனர் மக்கள்.
திவாகரும் ரொனால்டோவும் கிளம்பும் நாளும் வந்தது. அங்கிருக்கும் குழந்தைகளுக்குச் சாக்லேட், மற்றும் அங்கிருக்கும் பிஸ்கட் என்று அவன் வாங்க, அதைப் பார்த்த திவாகர் சிரித்தான்.
“இதையெல்லாம் தூக்கிட்டு போக முடியாது.... நடக்கறதே கஷ்டம்...” திவாகர் சொல்ல
“நான் எடுத்துட்டு வருவேன்...” விடாப்பிடியாக அவன் வாங்கிக்கொண்டே கிளம்பினான்.
இருவரும் ஒரு வழியாக மலையடிவாரத்திற்கு வந்து, ஜீப் வரும் தொலைவுவரை ஜீப்பில் வந்து, மீதி தூரம் நடந்தே இணை மலைக்கும் வந்து சேர்ந்தனர்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் - 3


“என்னால நடக்க முடியலை.... ரொம்ப டயர்ட்...” தஸ் புஸ் என்று மூச்சு வாங்கிக்கொண்டே ரொனால்டோ ஒரு பாறையின் மீது அமர, திவாகர் அவனைப் பார்த்துச் சிரித்தான்.
“சிரிக்காத... என் காலப் பாரு...” சூவின் உள்ளிருந்து அவனது காலை எடுத்துக் காண்பித்து, ரொனால்டோ பாவமாகப் பார்க்க, அவன் காலைப் பார்த்த திவாகரோ அதிர்ந்தான்.
பழக்கம் இல்லாத நடையில், சிவப்பு சிவப்பாகக் கொப்பளங்களும், சதை வழண்டும் இருக்க, “இதுக்குத் தான் இவ்வளவு வெயிட் தூக்காதன்னு சொன்னேன்... சொல்றத கேட்கிறதே இல்ல.... அது இல்லனா கூடக் கொஞ்சம் வேகமா நடக்கலாம்...” சலித்துக்கொண்டே, அவன் காலை நீர் விட்டுக் கழுவி, கையில் இருந்த துணியால் துடைத்தான்.
“பரவால்ல விடு... வீட்டுக்கு போய்க் குளிச்சிக்கலாம்... அதுக்கு போட மருந்து எடுத்துட்டு வந்திருக்கேன்....” பெருமையாக ரொனால்டோ கூறிக்கொண்டிருக்க, திவாகரின் காதில் தேனெனும் இனிமையான கழுதையின் குரல் ஒலித்தது.
“ஹே ரோன்.... கழுதை வருது.... அதுல வேற ஏதும் சுமை இல்லைனா.... நாம பெட்டிய வச்சிக்கிட்டு போயிடலாம்....” திவாகர் ஆவலாகப் பார்க்க, அங்கு வந்தது அவனது துணைவியே தான்.
“செல்வா....” அவளைக் கண்டதும் முகம் மலர்ந்து திவாகர் கூவ, ரொனால்டோ ஒரு எதிர்பார்ப்புடன் திவாகர் பார்த்த திசையைப் பார்த்தான்.
அங்குக் குட்டையாக, ஒல்லியான மெலிந்த தேகத்துடன், புடவையைச் சுற்றிக்கொண்டு வந்த பெண்ணைப் பார்த்து ரொனால்டோ விழித்தான். திவாகரோ காதலாகத் தன் மனைவியைப் பார்த்துக் கையசைத்தான்.
“பேபி வைப்....” ரொனால்டோ சந்தேகமாகக் கேட்க, திவாகரோ அதை ஆமோதிக்கும் நிலையில் கூட இல்லை. தனது மனைவியை நெடுநாளுக்குப் பின் கண்ட சந்தோஷத்தில் அவள் அருகே சென்றான்.
அவன் அருகே நெருங்கி வந்து, அவளது கைகளைப் பற்றிக்கொள்ள, செல்வா வெட்கத்துடன் தலைகுனிய, அவள் கால் விரல் நிலத்தினில் கோலம் போட, அவள் நின்ற நிலையை, ரொனால்டோ தனது காமெராவில் பதித்தான்.
“செல்வா... எப்படி இருக்க.?” திவாகர் ஆசையுடன் கேட்க, “ம்ம்... நீங்க?” என்ற ஒற்றை முனகலில் பதில் கூறினாள்.
“நான் நல்லா இருக்கேன்... நீ என்ன கழுத ஓட்டிக்கிட்டு?. அப்புறம் என்ன இளைச்சிப் போயிட்ட?.” இருவரும் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்து, ரொனால்டோ இருப்பதையும் மறந்து பேசத் தொடங்கினர்.
“நானா இளைச்சிட்டேன்?. சோதி என்னைப் பெருத்ததா சொல்லிச்சு....” வியந்து போய் அவள் கேட்க
“சும்மா கிண்டல் செய்திருப்பா.... வம்பிழுக்க.... நீ என்ன கழுதை இழுதுட்டு வர...” விடாமல் நெருங்கி நின்று அவன் கேட்டான்.
“சித்த தள்ளி நில்லுங்களேன்...” சிணுங்கலாகக் கூறி, “உங்க மூட்டை நிறைய இருக்கும்ன்னு மாமா சொன்னாவ.... அது தான் கழுதைய ஓட்டிக்கிட்டு வந்தே..... வாங்க உங்க மூட்டைய எடுத்து அதுல ஏத்துங்க... வீட்டுக்குப் போவலாம்... எங்க உங்க கூட வந்த வெள்ளைக்காரவக....” அவனிடம் பேசிக்கொண்டே திவாகரின் பின்னால் எட்டிப்பார்த்தாள்.
“ஹே ரோன்... என்னோட பேபி வைஃப்....” திவாகர் சிரிப்புடன் ஆங்கிலத்தில் சொல்ல, செல்வா அவனது வாய்ப் பார்த்துக்கொண்டு நின்றாள்.
“ஹாய்...” அவன் கைக்குலுக்க தனது கையை நீட்ட, அவனது செயலில், திவாகரின் பின்னால் ஒளிந்தாள் செல்வா.
ரொனால்டோ புரியாமல் பார்க்க, “இங்க அதெல்லாம் பழக்கம் இல்ல ரோன்... சொல்லிருக்கேன் இல்ல...” என்று அவனிடம் கூறிவிட்டு, “அவங்க வணக்கம் சொல்லுதாக.... வேற ஒண்ணும் இல்ல செல்வா... நீ வா.. நாம வீட்டுக்குப் போகலாம்...” என்று அவளிடம் சொல்லிக்கொண்டே கழுதையின் மீது பெட்டிகளை ஏற்றினான்.
ரொனால்டோவும் உதவ, “ஜோதி எப்படி செல்வா இருக்கா? இப்ப உடம்பு வரதில்லையே...” என்று அவன் கேட்டுக்கொண்டிருக்கும் போதே, கொட கொடவென்று சைக்கிள் சத்தம் கேட்டது.
“சோதி வருது....” செல்வா அவசரமாகக் கூறி, அவள் வரும்வழியைப் பார்க்க, அங்குச் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு ஜோதி வந்துக்கொண்டிருந்தாள்.
“ஹே ஜோதி.... எப்படி இருக்க?” திவாகர் அவளிடம் ஓட, சிறு பிள்ளையெனச் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு அவனை நோக்கி வந்தாள் ஜோதி.....
“என்ன ஜோதி... உன் உடம்பு எப்படி இருக்கு? ரொம்ப காய்ச்சலா?” வாஞ்சையாகக் கேட்டுக்கொண்டே அவள் தலையைத் தடவினான்.
“இல்லணே... இப்போ கொஞ்ச நாளா பேய் பிடிக்களைணே... என்னவோ கொஞ்சம் சரியா இருக்கு... நீ எப்படி இருக்க? இப்படியா ஒழுங்கா திண்ணாம கிடப்ப... பாரு வவுறு ஒட்டி இருக்கு....” அக்கறையுடன் அவள் கேட்டாள்.
அவளைத் தோளோடு அணைத்தவன், “இங்க வந்துட்டேன்ல ஆக்கிப் போடு... தொந்தி வரும்...” கிண்டலுடன் அவளை அழைத்துக்கொண்டு செல்வா அருகில் வந்தான்.
ரொனால்டோ அவர்களை வேடிக்கைப் பார்க்க, “பாத்தீகளா... அவளைப் பார்த்தவுடனே என்னைய விட்டுப்புட்டு போயிட்டாக...” கோபமாகச் செல்வா கூறுவது போல் இருந்தாலும், அவளின் கண்கள் இருவரையும் வாத்சல்யத்துடன் பார்த்துக்கொண்டிருந்தது.
அவள் கூறுவது புரியாவிட்டாலும், திவாகரின் தங்கை பற்றி அவள் ஏதோ கூறுகிறாள் என்று புரிந்த ரொனால்டோ இதழ் விரித்து, சிரித்து வைத்தான்.
“உங்களுக்கு நான் பேசுது விளங்குதா..” செல்வா சந்தேகமாகக் கேட்க, தோளைக் குலுக்கிவிட்டு ரொனால்டோ திவாகரைப் பார்த்தான்.
“துரைக்கு ஒண்ணும் விளங்கல போல?. ஏய் சோதி... வாப்புள்ள... இவங்க மூட்டைப் பெருசா இருக்குது.... இப்ப எடுத்தாத் தான் சீக்கிரம் போக முடியும்....” என்று செல்வா கத்த, வேகமாக ஜோதி அவள் அருகில் ஓடி வந்தாள்.
“ஏத்து புள்ள... மணியாவுது... இருள் சாயப் போகுது... அப்பறம் புலி வரும்புள்ள...” என்று ஜோதி கூறிக்கொண்டிருக்கும் போதே, ஒரு யானைக் கூட்டம் வந்தது.
“ஹே ரோன் அங்கப் பாரு... யானைகள்...” திவாகர் காட்ட, ரொனால்டோ தனது காமெராவை எடுத்துக்கொண்டு படம் எடுக்கத் தொடங்கினான்.
“ஏண்ண.... கூடவே இந்தப் படம் பிடிக்கிறவர எதுக்கு கூட்டியாந்த?” ஜோதி கேட்க, ரொனால்டோவைத் திரும்பிப் பார்த்தவன், சிரிக்கத் தொடங்கினான்.
“எதுக்கு அண்ண சிரிக்கிற.?”
“ரோன்... ரொம்ப பெரிய ஆளு... அவன போய் நீ சாதாரணமா சொல்லிட்ட.... அவனுக்கு நம்ம ஊர பார்க்க ஆச... அதுக்கு தான் கூட்டிவந்தேன்....” திவாகர் சொல்லிக்கொண்டிருக்க, யானைகள் சென்ற திசையில் சலசலக்கும் சத்தம் கேட்டது.
“அண்ண சீக்கிரம் வா.... யானை கூட்டம் வருது... அந்தப் படம் பிடிக்கறவங்கள கூப்பிடுங்க.... வேகம்...” ஜோதி அவசரமாகச் சொல்ல, செல்வா கழுதைகளை ஓட்ட, ஜோதி, அந்தப் பெட்டிகளை வைத்துக்கொண்டு, சைக்கிளைத் தள்ள, ஏதோ விபரீதம் என்று புரிந்து, ரொனால்டோவின் கைப் பற்றி இழுத்துக்கொண்டு வேகமாக நடந்தான்.
“என்னால நடக்க முடியலை... ஸ்லொவ்.... ஸ்லொவ்...” ரொனால்டோ கத்த
“ஸ்லொவ் நோ.... திருடங்க நடமாட்டாம் இருக்கும் போல... சீக்கிரம் வாங்க... ஊருக்குள்ள போய்ச் சொல்லணும்...” அவள் சைக்கிள் தள்ளிக்கொண்டு போகும் வேகத்திலேயே, அந்தத் திருட்தைத் தடுக்கும் வேகம் தெரிந்தது. திவாகரும் செல்வாவும் பேசிக்கொண்டே வர, ஜோதிக்கு உதவும் பொருட்டு, ரொனால்டோ சைக்கிள் தள்ள, அவனைத் திரும்பிப் பார்த்துவிட்டு, அதே வேகத்தில் தள்ளத் துவங்கினாள்.
சிறிய நிலப்பரப்பு போல இருந்த இடம் வந்ததும்.... ஜோதி அவனிடம் கூறாமல், வேகமாகச் சைக்கிளில் ஏறி மிதிக்க, ரொனால்டோ அவளைப் புரியாமல் பார்த்தான்.
“நாங்க எப்பயாவது ஓடைக்கு வரும்போது சலசலப்பு தெரிஞ்சி போச்சுன்னா... ஓடிப் போய்ப் பிள்ளைங்கள எல்லாம் தூக்கி காளிபாவை கோயில்ல விடுவோம்... அதுக்குத் தான் போவுது...” செல்வா விளக்கம் சொல்ல, தான் இருந்த பொழுதைவிட, இப்பொழுது இன்னும் பதட்டம் அதிகரித்து இருப்பது போலவே தோன்றியது திவாகருக்கு.
“ரோன்... சீக்கிரம் வா... கொள்ளைக்காரங்க வந்தாலும் வருவாங்க...” திவாகர் சொல்லி, நடையை எட்டிப்போட்டு, இருவரும் வீட்டிற்குச் சென்றனர்.
இவர்கள் வரும்பொழுது, பெட்டியை இறக்கி வைத்துவிட்டு, “அய்யா... களவாணிங்க வருவாகப் போல.... சீக்கிரம் வாங்க...” ஜோதி குரல் கொடுத்துக்கொண்டிருக்க, பரமேசன் வேகமாக வந்து, அவளுடன் இணைந்தார்.
“திவா... வாப்பா... நீ உள்ளார போய்க் குளி... நான் வந்துடறேன்... வா ரொனால்டோ...” திவாகரையும், ஆங்கிலத்தில் ரொனால்டோவையும் வரவேற்று அவசரமாக ஜோதியுடன் சென்றார்.
உள்ளே வாராமல் வெளியிலேயே நின்றவன் வேடிக்கை பார்க்க, ஜோதியும், பரமேசனும், சிறு பெண்களை எல்லாம் காளிப்பாவை கோவிலில் விட்டுவிட்டு, அவரவருக்கு முடிந்த அளவு திணை, கம்பு, நெல் போன்றவற்றை வீட்டின் திண்ணை போன்ற இடத்தில் வைத்துவிட்டு, அவரவர் வீட்டினுள் அடைந்தனர்.
அனைத்தும் மின்னல் வேகத்தில் நடத்திவிட்டு, அதே வேகத்தில் ஜோதியையும் அவர்கள் வீட்டில் விட்டு, பரமேசன் மின்னலென வீட்டினுள் நுழைந்து கதவைத் தாழ்ப் போட்டார்.
செல்வா சொம்புத் தண்ணீரை நீட்ட, “இன்னிக்கு எந்த அசம்பாவிதமும் நடக்கக் கூடாது...” வேண்டுதலுடன் பரமேசன் திவாகரையும் ரொனால்டோவையும் கவனித்தார்.
“ஏன் கோவில்ல விடறீங்க...” புதியதாக இருக்க, ரொனால்டோ தனது சந்தேகத்தைக் கேட்க, திவாகர் விளக்கம் சொல்லத் துவங்கினான்.
“ரோன்.... கோவில் கிட்ட கொள்ளைக்காரர்கள் போகமாட்டாங்க.... அப்படி மீறிப் போனா உயிரோடவும் இருக்க மாட்டாங்க... இந்த மாதிரி முன்கூட்டியே தெரிஞ்சா, பிள்ளைங்கள கோவில்ல விட்ருவோம்..... அவங்களுக்கு எந்தத் தீமையும் வராது....” திவாகர் சொல்ல, ரொனால்டோ புருவத்தை உயர்த்தினான்.
“நிஜமாவா...” அவன் கேட்க, “ஆமா... நிஜமா நடக்கறது தானே...” பரமேசன் கூறி, சாப்பிடத் தொடங்கினார்.
உணவை உண்டதும், ரொனால்டோவிற்கு மேல் மச்சு போன்ற இடத்தில், படுக்க வைத்து, திவாகர் தனது அறைக்குச் சென்றான்.
ரொனால்டோ மிகவும் ஆர்வமாகத் தனது காதைத் தீட்டிக்கொண்டு இருக்க, வெளியில் எந்த அரவமுமின்றி அமைதியாக இருந்தது. ஆனால் சிறிது நேரத்திலேயே கண்ணழகியின் ஊளைச் சத்தம் அந்த வீதியில் முழங்க, அவசரமாக எழுந்து சாளரத்தின் வழியாகப் பார்த்தான்.
தலைவிரி கோலமாக கண்ணழகி நடந்து செல்ல, அவள் பின்னோடு ஒரு பெண் நடந்து சென்றாள். “யார் இந்தப் பெண்.... எதுக்கு இவ பின்னாலேயே போறா.... ஏன் இவ இப்படி சத்தம் போடறா...” கேள்விகள் அணிவகுக்க ரொனால்டோ பார்க்க, அந்தப் பெண்கள் இருவரும் அவர்கள் வீட்டின் சிறு தொலைவில் இருந்த காட்டிற்குள் சென்றனர்.
அவன் எட்டிப் பார்த்தது வரை அவர்கள் கட்டுக்குள் செல்வது வரையே தெரிய, அதற்கு மேல் பார்க்க முடியாமல் திணறினான். “ஷிட்...” அவன் கால்களை உதற, அவன் பாதம் அந்தத் திடலில் பட்டு, வலி உயிர் வேதனையாக உடலில் பரவியது.
“இதுபோல அடிக்கடி நடக்கும்ன்னு நினைக்கிறேன்... பார்க்கலாம்...” என்று ஒரு மாத்திரையைப் போட்டுக்கொண்டு, உறங்கத் துவங்கினான்.
அவன் கனவில் யாரோ தன்னை நெருங்கி, கழுத்தை நெரிப்பது போலவும்.... தன் குடலை உருவுவது போலவும் இருக்க, வியர்த்து விறுவிறுக்க எழுந்து அமர்ந்தான்.
“என்னக் கனவு இது? ஏன் இப்படி வருது?” ரொனால்டோ எழுந்து மீண்டும் சாளரம் வழியே வெளியில் வேடிக்கைப் பார்க்கத் துவங்கினான். மீண்டும் இரு ஆணின் நடமாட்டத்தைத் தொடர்ந்து, யானை ஒன்று ஊருக்குள் உலவ, தனது காமெராவின் மூலம் அவற்றைப் படம் பிடிக்கத் துவங்கினான்.
அந்த ஆண் உருவங்கள், ஆதிவாசியின் தோற்றத்தோடு ஒத்துப்போனது. தனது மனதில் திவாகரின் ப்ளாக்கில் பதித்திருந்த செய்தியை நினைவு கூர்ந்தான்.
இது போன்ற எந்தச் செய்தியும் அதில் பதிவிடப்படாததை நினைத்து, இது புது செய்தி என்று தனக்குள் கூறிக்கொண்டு, ஒரு நோட்டை எடுத்து, அதில் தான் பார்த்தவற்றை எழுதத் துவங்கினான்.
சிறிது நேரத்திலேயே அந்தக் கண்ணழகி வர, அவளுடன் சென்ற பெண் திரும்ப அவளுடன் வராமலே இருந்தாள்.
“அந்தப் பொண்ணு எங்க? இவ யாரு? பைத்தியம் தானே...” அவன் யோசனையில் ஆழ்ந்து, அப்படியே சாய்ந்து உறங்கவும் தொடங்கினான்.
மறுநாள் அதிகாலையிலேயே, “ஏய் செல்வா.... நேரமாச்சு வாப்புள்ள...” வெளியில் நின்றுகொண்டு ஜோதி கத்த, அவள் சத்தத்தில் கண் விழித்த ரொனால்டோ, அவசரமாகக் கீழே இறங்கிச் சென்றான்.
வேகமாக வந்துவிட்டானே தவிர, அவளிடம் எப்படிக் கேட்பது என்று புரியாமல் அவன் நிற்க, “செல்வாவ கூப்பிட்டா, இவக எதுக்கு இத்தனி வேகமா ஓடியாறாங்க...” சத்தமாகவே முணுமுணுத்துக் கொண்டு, அவள் வீட்டு வாசலைப் பார்க்க, ரொனால்டோ புரியாமல் அவள் முகம் பார்த்தான்.
தன்னைத் தான் அவள் எதுவோ சொல்கிறாள் என்று புரிந்து, “எனக்கு ஒண்ணு தெரியணும்...” என்று சைகையில் கூறினான்.
“இவக என்ன ஊமையா... இல்லையே... நேத்து பேசிச்சே...” அவன் முகத்தைப் பார்த்துக்கொண்டே அவள் யோசிக்க, ரொனால்டோ அவளைப் பார்த்து அழகாகப் புன்னகைத்தான்.
“இவக எதுக்கு சிரிக்கிறாக? என்னைய பார்த்தா கிறுக்கி மாதிரி இருக்கோ?” யோசித்துக்கொண்டே வீட்டினுள் வேகமாக நுழைந்தாள் ஜோதி.
ரொனால்டோ அவளைப் பின்தொடர, “இதப் பாரு... என்னையப் பத்தி உனக்குத் தெரியாது... இப்படி நீ பின்னால வரத பார்த்தா என்னைய உனக்குக் கட்டி வச்சிருவாக... அப்பறம் உன் காலம் மூச்சூடும்.. நீ இங்கன தான் கிடைக்கணும்.... அப்பறம் உன்னையும் காக்கா தூக்கிட்டுப் போகும்... குருவி கொத்தும்...” ஜோதி சொல்லிக்கொண்டிருக்க, எதுவும் புரியாத ரொனால்டோவோ அவளின் கண்களின் அசைவையும், கைகளின் அசைவையும் வேடிக்கைப் பார்த்தான்.
ஜோதி அவன் பார்வை கண்டு வாயை மூட, “ஜோதி இப்படி எல்லாம் மிரட்டினா அவரு பயப்படுவாரா... அவர் எவ்வளவு பெரிய ஆள் தெரியுமா?” திவாகர் சிரிப்புடன் சொல்ல, ஜோதி சிறிது பயந்தே போனாள்.
“அண்ணே தெரியாம பேசிட்டேன்.... அவர மன்னிக்கச் சொல்லு அண்ணே...” ஜோதி கெஞ்ச, ரொனால்டோ சந்தேகமாகப் பார்க்க, அவள் கூறியவற்றை திவாகர் அவனிடம் கூறினான்.
“ரியலி.....” குறும்புடன் ரொனால்டோ கேட்க, அவனது கேள்வியில்திவாகர் சிரிக்க, ஜோதி பேந்தப் பேந்த விழித்தாள்.
“அப்போ இதுக்கு தண்டனையா அவ எனக்கு ஊரைச் சுத்திக் காட்டணும்...” ரொனால்டோ கண்டிப்புடன் சொல்ல, திவாகர் ஜோதியைப் பார்த்தான்.
‘அவள் சிறிது பயந்தவள் தான்.... ஆனால் இந்த ஊரில் உள்ள இடங்கள் அனைத்தும், அவளுக்கும் செல்வாவுக்கும் நன்கு தெரியும்.... இவர்கள் ஆடு மேய்க்கும்போது சுற்றியவர்கள் தானே....’ யோசனையுடன் திவாகர் நின்றிருக்க, செல்வா அனைவருக்கும் கருப்பட்டிக் காபி கொண்டு வந்தாள்.
அவளைப் பார்த்துக் கண்சிமிட்டிய திவாகர், “செல்வா... நீயும் ஜோதியும் ரோன்க்கு ஊரக் காட்டுங்க... போட்டோ எடுத்துப்பான்... பிறகு நான் விளக்கிச் சொல்லிக்கறேன்... ஸ்கூல் தொடங்கற வேலையா நான் வெளியப் போகணும்...” திவாகர் சொல்ல, இருவரும் சரி என்று மண்டையை உருட்டினர்.
“தேங்க்ஸ் டிவா....” சந்தோஷத்துடன் கூறிய ரொனால்டோ அவசரமாகக் குளிக்கக் கிளம்ப, திவாகர் காட்டிய அறைக்குள் சென்று குளித்துவிட்டு, விரைவிலேயே தயாராகி வந்தான்.
காலை உணவை உண்டு முடித்து, செல்வாவும், ஜோதியும் ஆடுகளை ஓட்டிக்கொண்டு, ரொனால்டோவுடன் கிளம்பினர்
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் - 4


மலைகள் தொடர்ந்து கைகோர்த்து நிற்க, ஒரு பக்கம் கஞ்சாத் தோட்டமும், மறுபுறம் அடர்ந்தக் காடும், ஆங்காங்கு விண்ணை முட்டி நிற்கும் மரங்களும் நிறைந்த இடங்களில், வீடுகள் நிறைந்து இருக்கும் என்று அறிய முடியாமல், பச்சைப்பசேல் என்று மரங்களும், செடி கொடிகளும், நிரம்பிய அந்த இடங்களைச் சுற்றிக்காட்டிகொண்டு வந்தனர் ஜோதியும், செல்வாவும்.
அந்தப் பச்சைப் பசேல் இடங்களையும், மேகப் பொதிகள் கைக்கெட்டும் தூரத்தில் இருப்பது போன்று இருக்க, உற்சாகத்துடன் போட்டோ எடுத்துக்கொண்டான் ரொனால்டோ. அவனை ஒரு இடத்தில் விட்டு, ஜோதியும் செல்வாவும் பேசிக்கொண்டிருக்க, இவர்கள் விட்டிருந்த ஆட்டு மந்தையின் சிறு ஆட்டுக்குட்டி, வழிதவறி ஓடப்பார்த்தது.
அதைக் கவனித்த ஜோதி, வேகமாக ஓடி, அந்த ஆட்டைப் பிடித்து, அதன் முகத்தோடு முகம் வைத்து உரசி கொஞ்சத் துவங்கினாள். புகைப்படம் எடுத்துக்கொண்டே, திரும்பிய ரொனால்டோவிற்கு அந்தக் காட்சி ஏனோ மனதில் பதிய, அவனது கைத்தானாக எழும்பி, அதைத் தன் கையில் இருந்த கேமராவில் பதித்துக் கொண்டது.
அவளை இரண்டு மூன்று புகைப்படம் எடுத்த பின், அவள் தன்னை கவனிக்கிறாளா என்று பார்த்துவிட்டு, அவள் அருகில் சென்றான். “ஜோ.... ரியல்லி.... மேரேஜ்...” என்று அவளிடம் வம்பு வளர்க்கக் கேட்டு, அவளையும், தன்னையும் சுட்டிக்காட்டினான்.
முதலில் புரியாமல் விழித்தவள், பரமேசன் சொல்லிக் கொடுத்திருந்த சிறு சிறு ஆங்கில வார்த்தைகளை, மூளையைத் தட்டி யோசித்து, அவன் கேட்ட ‘மேரேஜ்’ என்ற வார்த்தையைப் பிடித்து, அவன் தான் சொன்னதைத் தான் சொல்கிறான் என்று புரிந்து, அவனைப் பார்த்து முறைத்தாள்.
“நீ அம்மன் மாதிரி இருக்க....” திக்கித் திணறி அவன் ஆங்கிலத்தில் கூற, இன்னும் அவள் முறையலைக் கைவிடாமல் நின்றுகொண்டிருந்தாள்.
“தப்பா புரிஞ்சிக்கிற....” என்று அவசரமாக மறுத்து, தனது மொபைலில் இருந்த ஒரு அம்மன் படத்தைக் காட்டி, “நீ அப்படியே இருக்க...” சைகையில் அவன் சொல்ல, அவன் சொல்லத் திணறுவதைப் பார்த்து, அவள் இதழ்க் கடையில் சிரிப்பு மலர்ந்தது.
அவள் சிரிப்பைப் பார்த்து, தனது தோளில் தானே தட்டிக்கொண்டு, மீண்டும் புகைப்படம் எடுக்கும் பணியைத் தொடர்ந்தான். ஜோதியின் கண்கள் அவனைப் பார்த்தது. சிறு பிள்ளையெனக் கேமராவைக் கையில் வைத்துக்கொண்டு, தங்கள் இடங்களைப் படம் பிடிக்கும் அவனைப் பார்த்து, முகத்தில் புன்னகை அரும்பியது. அந்தச் சிரிப்பினூடே செல்வா அருகில் சென்று அமர்ந்தாள்.
“அண்ண...” ரொனால்டோவை சத்தமாகச் செல்வா அழைக்க, செல்வாவின் குரல் கேட்டு, அவன் திரும்பிப் பார்த்தான். காலையில் இருந்தே இந்த அழைப்பைக் கேட்டு, திவாகரிடம் விளக்கம் கேட்டு, தெரிந்துகொண்டிருந்தான் ரொனால்டோ.
“அண்ண கம்மிங்...” அவன் பதிலுக்குக் குரல் கொடுக்க, செல்வா 'ஞே' என்று விழித்த படி ஜோதியைப் பார்த்தாள்.
“கம்மிங்னா.... வரேன்னு தானே சொல்லறீக....” ஜோதி ரொனால்டோவிடமே சந்தேகம் கேட்க, அவள் கேட்பது புரியாமல் ரொனால்டோ அவர்கள் அருகில் வந்தான்.
“சாப்பிடலாம்... பசிக்குது....” செல்வா வயிற்றைத் தடவிக்கொண்டு, உணவு என்பது போலக் கேட்க, அவள் சாப்பிட அழைக்கிறாள் என்று தெரிந்த ரொனால்டோ, திவாகர் தன்னிடம் தந்திருந்த டிபன் பாக்சைத் திறந்தான்.
அதில் அவனுக்கென்று தனியாக இவர்கள் வாங்கி வந்திருந்த பிரட் இருக்க, அவன் அதைச் சாப்பிடத் தொடங்க, வித்தியாசமான ஒலி அவன் செவிகளில் விழுந்தது. அவன் நிமிர்ந்து பார்க்க, ஜோதியும் செல்வாவும், தாங்கள் கொண்டு வந்திருந்த கலயத்தில் இருந்த கஞ்சியை உறிஞ்சி, அருகில் இருந்த ஊறுகாயைத் தொட்டு நக்கிக் கொண்டிருந்தனர்.
முதலில் அவன் முகம் சுளித்துப் பார்க்க, ஜோதி கலயத்தை நீட்டி, “வேணுமா...” என்று கேட்க, வேகமாக வேண்டாம் என்று தலையசைத்தான்.
“வேண்டாவா... சரி நீ ரொட்டியை தின்னு..” கூறிவிட்டு, “செல்வா... உனக்குத் தெரியுமா... அந்தக் களவாணிங்க நேத்து வரல போல.... வீட்டுல இருந்த திணையெல்லாம் அப்படியே இருந்துச்சு....”
“அப்படியா... எனக்குத் தெரியாதே... அவிக ஊருல இருந்து வந்திருக்காவ இல்ல...” வெட்கத்துடன் தரையில் குழி பறித்துக்கொண்டே செல்வா சொல்ல, ஜோதி அவளைப் பார்த்துச் சிரிக்கத் தொடங்கினாள்.
அவளின் சிரிப்பில் கவரப்பட்ட ரொனால்டோ அவள் முகத்தைப் பார்க்க, அவள் கன்னங்களோ, அவள் சிரித்ததில் சிவந்து போய் இருந்தது. ரோனின் மனம் ரசனைக்குத் தாவ, அவளது சிரிப்புடன் கூடிய அழகைப் படம் பிடிக்க அவன் மனம் பரபரத்தது.
உடனே சிரிப்பை நிறுத்திய ஜோதி கண்களில் கண்ணீர் எட்டிப்பார்க்க, செல்வா அவள் கண்களைத் துடைத்து, “உனக்குன்னு பிறந்த மகாராசன் வானத்துல இருந்து குதிச்சு வருவான் புள்ள.... எதுக்கு அழுதுக்கிட்டு.... அவிக சொன்னாக... கிறுக்குத் தனமா எதுவும் உளறாதன்னு... நான் கிறுக்கித் தான்..... உளறி உன்னையா சங்கடப்பட வச்சிப்புட்டேன்....” செல்வாவும் கண்ணீரில் கரைந்தாள்.
சிரித்துக்கொண்டிருந்த இருவரும் திடீரென்று அழவும், எதுவும் புரியாமல் விழித்த ரோன், “என்னாச்சு... சாப்பாடு நல்லா இல்லையா....” அவன் ஆங்கிலத்தில் கேட்க, இருவரும் அவனைப் பாவமாகப் பார்த்து, மேலும் அழுதனர்.
தனது பாக்சில் இருந்த பிரட்டை நீட்டியவன், “இத ஷேர் பண்ணிக்கலாம்...” அவன் சொல்ல, இருவரும் மறுத்துவிட்டு, ஒருவர் மாற்றி மற்றொருவர் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு, மீண்டும் கஞ்சியைக் குடிக்கத் தொடங்கினார். எதுவும் புரியாத ரோன், தோளைக் குலுக்கிக்கொண்டு, தன்னுடைய உணவை முடித்துக்கொண்டான்.
அதற்குப் பின் மூவரும் அமைதியாக ஓடையருகே வர, அதன் அருகே பறந்து விரிந்திருந்த காட்டைச் சுட்டிக்காட்டிய ஜோதி, “இங்க களவாணிங்க தொல்லை சாஸ்த்தி... பொருள களவாடினாதோட இல்லாம, பொண்ணுங்க மானத்தையும் களவாடுவாங்க.... அவனுக எங்குட்டுருந்து வராங்கன்னே தெரில.... எதுக்கு இங்க வந்து தங்கறாங்கன்னு தெரில... உள்ளார களவாணிங்க நிறைய இருக்கானுங்க... இவனுகளுக்கு பயந்துட்டே, எங்க ஊருல பொண்ணுங்கள வெரசா கண்ணாலம் கட்டிருவாங்க.....” குரலில் வலியுடன் ஜோதி சொல்ல, அவள் சொல்ல வருவது புரிந்ததோ இல்லையோ, அவள் குரலில் இருந்த வலியை ரோன் உணர்ந்தான்.
அந்தக் காட்டைச் சுட்டிக் காட்டியதில், இதில் ஏதோ இருக்கிறது என்று அவன் புரிந்து, அவள் முகத்தைப் பார்த்துவிட்டு, ரோன் கேமராவுடன் அந்தக் காட்டை நெருங்கிப் படம் பிடிக்கத் தொடங்கினான். அவனுக்கு அதன் உள்ளே சென்று, அதில் இருக்கும் ரகசியங்களை அறிய வேண்டும் என்ற ஆவல் பெருகியது.
திரும்பிச் செல்வாவையும் ஜோதியையும் பார்த்தான். அவர்கள் இருவரும் ஓடைத் தண்ணீரில் கால் நனைத்துக்கொண்டு, அமர்ந்து ஏதோ பேசிக்கொண்டிருக்க, ஆடுகள் அங்கிருந்த புற்களை மேய்ந்துகொண்டிருந்தது. அப்பொழுது ஒரு ஆடு அந்தக் காட்டினுள் ஓடத் துவங்க, ஜோதி பேசுவதில் மும்முரமாக இருக்க, ரோன் அவளைப் பார்த்துவிட்டு, அதைப் பிடிக்க ஓடினான்.
சிறிது தூரத்தில் ஒரு மரத்தருகே இருந்த புற்களை அது மேய்ந்துகொண்டிருக்க, ரோன் அதை விட்டு, சுற்றிலும் வேடிக்கைப் பார்க்கத் துவங்கினான்.
இன்னும் சிறிது தூரம் சென்றால், மரங்கள் நீண்டு வளர்ந்து ஒன்றோடொன்று இணைந்து குடை பிடித்து, சூரிய ஒளியைத் தனக்குள் அனுமதியாமல், அந்த இடத்தையே இருளாக மாற்றி இருந்தது.
அந்தக் கிளைகளின் அடர்த்தியிலும், அது கீழே படர்ந்திருந்த விதமும் ஒரு குகை போலக் காட்சியளித்தது. அந்த இடமே வித்தியாசமாக இருக்க, தனது கேமராவை எடுத்து, பிளாஷ்ஷைப் பொருத்தி, அதைப் படம் பிடிக்கத் தயாரானான்.
அப்பொழுது...... தொலைவில் ஒரு பெண் ஓட முடியாமல், கீழே விழுந்து எழுந்து, திரும்பிப்பார்த்துக்கொண்டே வர, புகைப்படம் எடுக்க உயர்ந்தவனின் கை, கீழே இறங்கியது. ஏதோ விபரீதம் என்று புரிந்தவன், கேமராவை தனது கழுத்தில் மாட்டிக்கொண்டு அவள் அருகே ஓட, அதற்குள் அந்தப் பெண் கீழே விழுந்து எழ முடியாமல் அழுதாள்.
“ஜோ.... ஜோ.... செல்வா....” பதட்டமான குரலுடன், அந்தப் பெண்ணைக் கையில் வாரிக்கொண்டு, அவளின் உடலைப் பாதி மறைத்திருந்த ஆடைகளுடன் தூக்கிக்கொண்டு ஓடி வந்தான்.
அவன் குரல் கேட்டுத் திரும்பியவர்கள், அவன் கையில் இருந்த பெண்ணைப் பார்த்து, திடுக்கிட்டு அவன் அருகில் ஓட, உயிருக்குத் துடித்த நிலையில் அந்தப் பெண் கண்ணீருடன், தன் மூடாத உடல் பாகங்களை, இருக்கும் துணி கொண்டு, சரி செய்துகொண்டு வந்தாள்.
“கீழ விடுங்க.... விடுங்க கீழ....” ஜோதி ஆவேசமாகக் கத்த, அவள் தரையைப் பார்த்துக் கையைக் காட்டிய விதமே, அவள் கீழே விடச் சொல்கிறாள் என்று புரிந்து, அவளை அங்கிருந்த ஒரு பாறை அருகில் கிடத்தினான்.
கீழே கிடத்தியவன், நில்லாமல் ஓடிச்சென்று, தனது டிபன் பாக்சில் ஓடைத் தண்ணீரை எடுத்துக்கொண்டு வந்து அவள் முகத்தினில் தெளித்து, தன் கையில் இருந்த பாட்டில் தண்ணீரை அவளுக்குப் புகட்டக் கொடுத்தான்.
அவனைப் பார்த்த அந்தப் பெண் மேலும் தனது உடம்பைக் குறுக்கிக் கொள்ள, “அவரு நல்லவரு தான் இளஞ்சி.... நீ எதுக்குப் புள்ள அந்தக் காட்டுக்குள்ள போன.... இப்படியாகும்னு தெரியுமில்ல.... என்னாச்சு புள்ள.... எத்தன பேரு இருந்தாவ...” அவள் உடலில் இருந்த காயங்களை ஆராய்ந்துகொண்டே, ஜோதி கேட்க, உதிரம் வழிந்த அவள் உதடுகளைச் செல்வா தனது முந்தானையில் துடைத்தாள்.
“ரெண்டு பேரு.... லட்சுமி உள்ளார போயிருச்சு சோதி.... நானா உள்ளார போல... எல்லையில நின்னுத் தான் கூப்பிட்டேன்.... இவனுங்க என்னைத் தூக்கிட்டுப் போய்.... நாசம்....” அழுகையுடன் சொல்ல முடியாமல் அந்தப் பெண் கலங்க, ஜோதி வாய்விட்டே கதறினாள்.
“என்ன கொடும புள்ள நமக்கு எல்லாம்.... இந்த மண்ணுல பிறந்த குத்தமா.... இல்ல பொட்ட புள்ளையா புறந்த குத்தமா.... இனி உன்னை உசுரோடவே விடமாட்டாங்களே.... ஊரு சனம் சேர்ந்து விஷம் வைப்பாங்களே....” தலையில் அடித்துக்கொண்டு, அவள் கதறிய கதறலில் ரோன் திகைத்தான். செல்வாவும் அவளுடன் அழ, அந்தப் பெண் அவன் இருப்பதால் கூசி, கண்ணீருடன் தன் உடலை மூட, அவசரமாகத் தான் அணிந்திருந்த மேல் சட்டையை எடுத்து ஜோதியிடம் நீட்டினான்.
“ஜோ... அவளுக்குப் போடு...” ஆங்கிலத்தில் கூறி, அவளிடம் சைகையிலும் சொல்ல, ஜோதி அவனை நன்றியுடன் பார்த்து, வேகமாகச் சட்டையை அணிவித்தாள்.
“சோதி.... என்னைய இங்கன விட்டுப் போயிடு.... ராவு வரப் போகுது.... வர மிருகங்க கடிச்சி தின்னட்டும்... நான் மானம் போய்ச் செத்தேன்னு சொல்ல வேணாம்.... விட்டுப் போயிடு....” மூச்சுக்குத் திணறியபடி, அவள் ஜோதியிடம் கையெடுத்து கும்பிட்டுக் கேட்க, அவள் கையில் இருந்த சட்டைத் துணியைப் பார்த்தாள் ஜோதி.
தன்னைக் காத்துக் கொள்ள போராடியதில், ஒருவனுடைய சட்டைத் துணி கிழிபட்டு, அவள் கையில் இருக்க, அதை எடுத்துப் பார்த்த ஜோதி, அதைக் கசக்கி விட்டெறிந்தாள்.
“இல்ல புள்ள நீ ஊருக்குள்ள வா... உன்ன இப்படியே விட்டுப் போவ மாட்டேன்...” ஜோதி சொல்ல, “சோதி... அங்கன அப்படி சாவரத்துக்கு இதே சரிதான் சோதி...” செல்வா அழுகையுடன் சொல்ல, ஜோதி அவளை எரித்து விடுவது போலப் பார்த்தாள்.
அதற்குள் அங்கு அவளைத் தேடிக்கொண்டு வந்த அவளது தாய், அவள் இருந்த நிலையைப் பார்த்து, தலையில் அடித்துக்கொண்டு கதற, அவள் பின்னோடு வந்த சிலர் ஊருக்குள் விஷயத்தைப் பரப்பினர்.
ஜோதி ஒரு முடிவெடுத்திருக்க, நிமிடத்தில் அனைத்தும் அவள் கை மீறிப் போக..... தனது தாய்க்கு தெரிந்ததுமே அந்தப் பெண் ஜோதியைப் பரிதாபமாகப் பார்த்து, தனது இறுதி மூச்சை வெளியிட, ஜோதி அவளைத் திகைப்புடன் பார்த்தாள்.
நடக்கும் சம்பவங்களை நேரில் பார்த்த ரொனால்டோவோ திகைப்பின் உச்சத்தில் இருந்தான். “இப்படியும் சிறு பிள்ளைகளை வேட்டையாடும் மிருகங்களா....” அவன் மனதில் கனல் எழ, வேமாகக் காட்டை நோக்கிப்போனான்.
“ரோன்.... இங்கவா... வீட்டுக்குப் போகலாம்...” அதற்குள் விஷயம் கேள்விப் பட்டு வந்த திவாகர் அவனை இழுத்துக்கொண்டு வீட்டிற்குச் சென்றான்.
“புல் ஷிட்.... என்ன நடக்குது இங்க.... சின்னப் பொண்ணு டிவா.... அவ ஓடி வந்தத பார்க்கணுமே... பாவம்டா...” மனது ஆறாமல் புலம்பிக்கொண்டு வந்தான்.
“அவளுக்கு அடுத்த வாரம் கல்யாணம் தெரியுமா?” திவாகர் அவனைக் கேட்க, புரியாத பார்வை பார்த்தான் ரோன்.
“இங்க எதுவுமே சரி இல்ல.... யார் அவங்க....”
“இவங்க கடத்தல்காரங்க.... ஊருல கொள்ளை அடிச்சிட்டு வந்து இங்க பதுங்கரவங்க... இப்படி நிறையா இருக்கு... இந்த மக்களோட பெரும்பான்மைத் தொழிலே ஆடு, மாடு, கழுதை மேய்கிறது தானே... இல்ல விறகு எடுக்கப் போறது... அப்படிப் போகும்போது மாட்டிக்கிறாங்க.... இதை மாத்தனும்” திவாகர் சொல்லிக்கொண்டிருக்க, அவர்களைக் கடந்து, அந்தச் சிறு பெண்ணைத் தூக்கிக்கொண்டு சென்றனர்.
சிறிது நேரத்திலேயே அவளது உடல் அடக்கம் செய்யப்பட்டு, அனைவரும் களைந்து சென்றனர்.
இரவும் கவிழ்ந்தது.... கண்களை மூடினாலே அந்தச் சிறு பெண் தவிப்புடன் ஓடிவந்தது நினைவு வர, ரோன் எழுந்து சாளரம் அருகே வந்து சேர்ந்தான்.
மற்ற அனைவரும் இது அடிக்கடி நடக்கும் விஷயம் என்பது போல நகர்ந்து செல்ல, அவனுக்கு மனம் ஆறாமல், அந்தக் கயவர்களை பிடிக்கும் எண்ணமே மேலோங்கியது.
மீண்டும் முந்தைய இரவு போலே.... அந்தக் கிறுக்கி நடந்து வந்தாள். ஆனால் இன்று அந்தப் பெண் அவளுடன் இல்லை.... சிறிது நேரத்திலேயே ஒரு ஆதிவாசி போன்ற மனிதன் வந்தான். அவன் கையில் வேல் கொம்பு இருந்தது.
அப்படியே வேடிக்கைப் பார்த்துக்கொண்டே, அன்று அலைந்த அலைச்சலில், ரோன் உறங்கியும் போனான். மறுநாள் காலை அவன் எழும்பொழுதே ஊரில் ஆங்காங்கே பரபரப்பாக அனைவரும் நின்றுகொண்டிருந்தனர்.
ரொனால்டோ வெளியில் வந்துப்பார்த்தபோது, “நேத்து அந்தப் பொண்ண கொன்னவங்க செத்துட்டாங்க...” சொல்லிவிட்டு, அவனையும் அழைத்துக்கொண்டு, சாமி சிலை அருகே சென்றான் திவாகர்.
இவர்கள் அங்குச் செல்ல, அப்பொழுது அங்கு வந்த ஜோதியும் செல்வாவும், அங்குக் கிடந்தவர்களைப் பார்க்க, ஜோதி அவர்களைப் பார்த்து மயங்கிச் சரிய, அவள் அருகில் இருந்த ரொனால்டோ அவளைத் தன் மடியில் தாங்கினான்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் - 5


“ஜோ.... ஜோ.... என்னாச்சு....” பதட்டத்துடன் ரொனால்டோ அவளை மடியில் தாங்கிக்கொண்டே, கன்னத்தைத் தட்டிக் கொண்டு அழைக்க, எந்த அசைவுமின்றி கிடந்தாள் ஜோதி.
“டிவா..... ஜோ....” எதுவும் புரியாமல் ரோன் திவாகரை துணைக்கு அழைத்தான்.
திவாகரும் சுற்றுப்புறம் மறந்து அவள் கன்னத்தைத் தட்டி எழுப்பினான். அவள் எழாமல் இருக்க, ரோன் பதட்டத்துடன் தனது கைக்குட்டையை எடுத்து, அவள் முகத்தைத் துடைத்தான்.
அடுத்து யாரும் எதிர்பார்க்கும் முன், ரொனால்டோ அருகில் இருந்த திவாகர் வீட்டிற்கு ஜோதியைத் தூக்கிக்கொண்டு சென்றான். திவாகர், மற்றும் அங்கிருந்தவர்கள் திகைக்க, ஜோதியின் தாயார் அவன் பின்னோடு ஓடினார்.
“கீழ விடுங்க.... கீழ விடுங்க...” அவர் கூறிக்கொண்டே பின்னோடு செல்ல, ரோன் எதையும் கவனிக்கும் நிலையில் கூட இல்லை. வீட்டுத் திண்ணையில் கிடத்தி, வேகமாக வீட்டிற்குள் சென்று தண்ணீரை எடுத்து வந்து, அவள் முகத்தினில் தெளிக்க, ஜோதி மெதுவாகக் கண் திறந்து பார்த்தாள்.
அவள் மலங்க விழித்துக் கிடக்க, அவள் உடலில் சூடு பரவத் தொடங்க, பஞ்சமத்தி அவளைத் தொட்டுப் பார்த்து, “மீண்டும் சூடு கண்டிருச்சே....” என்று அழத் தொடங்கினாள்.
அவள் நெற்றியில் கை வைத்து ஆராய்ந்த ரோன், உடனே ஓடிச்சென்று, ஒரு மாத்திரையையும், தண்ணீரையும் எடுத்து வந்து, அவளுக்குப் புகட்ட, அவள் விழுங்கியவுடன், “மருந்து எல்லாம் திங்கக் கூடாது....” என்று அதிர்ச்சியுடன் கத்தினாள் பஞ்சமத்தி.
அனைவரும் திகைத்து நிற்க, “ரோன்... இங்க மாத்திரை எல்லாம் சாப்பிட மாட்டாங்க....” என்ன நடக்கப் போகிறதோ என்ற பதட்டத்துடன், அங்குக் கூடி இருந்தவர்களைப் பார்த்தான் திவாகர்.
அங்கு வேகமாக வந்த வீரத்தியன், ஜோதியைத் தூக்கிக்கொண்டு வீட்டிற்கு நடக்கத் துவங்க, ரோன் திவாகரைப் புரியாமல் பார்க்க, “இங்க இப்படித் தான் நடக்கும் ரோன்.... நீ போய் ப்ரஷ் பண்ணு... ப்ளாக் டீ போடச் சொல்றேன்...” என்று அவனிடம் கூறிவிட்டு, “அம்மா... டீத்தண்ணி போடுங்க...” கூறிக்கொண்டே திவாகர் உள்ளே செல்ல, ரோன் திரும்பி ஜோதியைப் பார்த்தான்.
அப்பொழுது வீரத்தியனின் கையில் தொங்கிக்கொண்டிருந்த ஜோதி ரோனைப் பார்த்தாள். புரியாமல் நிற்கும் குழந்தைபோல, தனித்து நின்ற அவனைப் பார்த்தவளின் மனதில் தாய்மை உணர்வுத் தலை தூக்க, அவனைப் பார்த்துப் புன்னகைப் புரிந்தாள்.
அந்தப் ஒற்றைப் புன்னகைக்கு அத்தனை சக்தியா.... புரியாத கலக்கத்தில் நின்றிருந்த ரோனும் பதிலுக்குப் புன்னகைத்து, வீட்டினுள் சென்றான்.
அவன் உள்ளே செல்லவும், திவாகர் அவனை எதிர்கொண்டு பிடித்துக்கொண்டான். “இங்க இப்படி எல்லாம் பொண்ணுங்களத் தூக்கக் கூடாதுடா.... அது தப்பு... மாத்திரையும் போடமாட்டாங்க... பச்சிலை அரச்சித் தருவாங்க... அதுலயே சரியா போயிடும்... இது ஏதாவது சாமிக்குத்தம் ஆகிடப் போகுது...” திவாகர் சொல்லிக்கொண்டிருக்க, அங்கே பெரும் அமைதி நிலவியது. மீண்டும் மீண்டும் திவாகர் அதையே சொல்லிக்கொண்டிருக்க, அதனைக் கேட்டுக்கொண்டு உள்ளே வந்தார் பரமேசன்.
பரமேசன் அமைதியாக அமர, அங்கு “ஜோதிக்கு உடம்புக்கு ரொம்ப ஒண்ணும் இல்ல... அவ சாதாரணமா இருக்கா... ரோன் சமயத்துல மாத்திரை கொடுத்ததுனால..........” அவர் கூறிவிட்டு, நன்றியுடன் ரோனைப் பார்க்க, திவாகர் புரியாமல் பார்த்தான். அவனது குழப்பத்திற்கு காரணம், ரோன் மாத்திரை கொடுத்ததை பரமேசன் சாதாரணமாக எடுத்துக்கொண்டு பேசியது தான்.
கோபத்துடன் அவனிடம் திரும்பிய ரோன், “நீயும் படிச்சவன் தானே.... உனக்கு அறிவில்லை... ஜுரத்துக்கு மருந்துக் கொடுக்காம பச்சிலை கொடுக்கச் சொல்ற... இப்படி பயப்படற...” திவாகர் வாயைத் திறக்கவும் அவசரமாக, “சரி... அதுலயும் சரியாத் தான் போகும்... இல்லைன்னு சொல்லலை... நம்ம ஊருலயும் இப்போ ஹெர்பல் விரும்பறாங்க தான்.... அதுக்குன்னு...” கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல், திவாகர் மீது பாய்ந்தான் ரோன்.
“நான் என்ன செய்யட்டும்... இங்க அப்படித் தானே.... சொல்லுங்கப்பா....” தனது தந்தையை துணைக்கழைக்க, பரமேசன் பதிலேதும் சொல்லாமல், உள்ளே சென்றார்.
அமைதியுடன் ரோன் தோட்டத்திற்குப் போக, செல்வா திவாகரின் கையைப் பற்றினாள். அவன் திரும்பிப் பார்க்க, “சோதி நல்லா இருந்தா போதாதா.... ஊர்க் குத்தம் ஏதும் வராது... நம்பிக்கையா இருங்க.... அவளுக்கு நல்லது தான் நடக்கும்....” செல்வா அவனது பதட்டம் புரிந்து ஆறுதல் கூறிப் புன்னகைத்தாள்.
அந்த வீட்டில் அமைதியே நிறைக்க, ரோன் குளித்துவிட்டு, கையில் கமெராவுடன் தயாராகி வந்தான். “செல்வா சாப்பாடு எடுத்து வை....” திவாகர் சொல்ல, ஒரு சிறு தலையசைப்புடன் அதனை உண்டுவிட்டு, ரோன் தனியாகக் கிளம்பினான்.
திவாகர் அவனை அதிசயமாகப் பார்த்து, “ரோன்... உனக்கு வழி தெரியாது.... இரு நானும் வரேன்...” என்று சொல்ல
“நான் ஓடைக்கிட்ட இருக்கேன் நீ வா...” கூறிவிட்டு, அவனது பதிலை எதிர்பார்க்காமல் அங்கிருந்து நகர்ந்தான்.
ஓடைக்குச் செல்லும் வழியில் இருந்த ஜோதியின் வீட்டைக் கடக்கும்பொழுது, அவளது வீட்டு வாயிலில் நின்று, “ஜோ...” என்று அவன் அழைக்க, அக்கம் பக்கம் இருந்த வீடுகளில் உள்ளவர்கள் எட்டிப்பார்த்தனர்.
யாரோ அழைக்கும் குரல் கேட்டு வெளியில் வந்த கொடி, அங்கு இருந்தவனைப் பார்த்து அதிசயித்து, “வாங்க வாங்க... நீங்கத் தான குடிக்கு வந்த வெள்ளக்காரவக... உட்காருங்க...” அவனுக்கும் தமிழ் தெரியும் என்ற எண்ணத்துடன் அவள் பேசிக்கொண்டே போக, ரோன் புரியாமல், அவள் கைகாட்டிய இடத்தில் அமர்ந்தான்.
“எனக்கு ஜோவப் பார்க்கணும்.... இப்ப அவ உடம்பு எப்படி இருக்கு....” அவன் ஆங்கிலத்தில் கேட்க, தலையைச் சொரிந்தபடி, கொடிவஞ்சி முழித்துக்கொண்டு நின்றாள்.
“ஜோதி....” அவன் மெதுவாக உச்சரிக்க, “சோதிப்புள்ளய கேட்கறீகளா.... அது தூங்குது...” தூங்குகிறாள் என்று சைகையில் சொல்ல, “ஓ...” என்ற ஒற்றை வார்த்தையுடன், உடல் நலம் பற்றி எப்படிக் கேட்பது என்று யோசித்து, அவனும் சைகையில் கேட்க, கொடி பதில் கூறிக்கொண்டிருக்கும் போதே, அவளது பிள்ளைகள் இருவரும் ஓடி வந்தனர்.
“யாரும்மா....” ஒரு சிறுவன் கேட்க, “இவக தான் நம்ம திவாகர் அண்ண வீட்டுக்கு வந்திருக்காவ.... சோதி சொல்லிச்சு இல்ல...” மற்றொருவன் பதில் கூறினான்.
“ஏலேய் ராசப்பா.... முத்து.... உள்ளார போங்க...” வீரத்தியன் குரல் ஒலிக்க, இருவரும் எழுந்து வெளியில் ஓடிச்சென்றனர்.
“இங்க பாருங்க.... இங்கன பொட்டப் புள்ளைகள, அந்நியங்க தொட்டுத் தூக்க செய்யமாட்டாங்க.... நீ அதையும் செய்து, அதுக்கு மாத்திரை கொடுக்கறவ... ஊருல நாலு பேரு நாக்குல பல்லுப் போட்டுப் பேசுவாக..... இங்கன எதுக்காக வந்து நிக்கிறவ... மன்னாடி கேட்குறேன்... என் பிள்ளைய பாக்காத... கை எடுத்துக் கும்பிடுதேன்.... போயிரு....” வீரத்தியன் கெஞ்ச, அவர் பேசுவது புரியாவிட்டாலும், தன்னிடம் ஏதோ கெஞ்சுகிறார் என்று உணர்ந்து அங்கிருந்து நகர்ந்தான்.
ஓடையருகில் சென்று அமர்ந்தவன், அந்த ஊருக்குள் நுழைந்த நிமிடத்திலிருந்து நடந்தவற்றை யோசிக்கத் தொடங்கினான். ‘நடு இரவில் சென்ற அந்தப் பெண் யார்.... அவளைத் தொடர்ந்த அந்தப் பெண் யார்..... அந்தக் காட்டு வாசிகள் போன்ற மனிதர்கள் யார்..... பகல் பொழுதில் அவர்களைப் பார்க்கவில்லையே... எங்கே அவர்கள்... எதற்கு ஊருக்குள் நடமாடுகிறார்கள்” என்ற கேள்விகளுடன் அங்கிருந்த காட்சியைக் கண்டுகொண்டு இருந்தான்.
அப்பொழுது அவனுக்குப் பின்னால், “பசிக்குது சோறு கொடு....” என்ற குரல் வர, திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்தான்.
கண்ணழகி தான் நின்றுகொண்டிருந்தாள். அவனைப் பார்த்தவள், “சோறு கொடு பசிக்குது....” என்று கூறி மீண்டும் அவனிடம் கை நீட்ட, ரோன் ஒன்றும் புரியாமல் முழித்தான்.
“இல்லையா... சோதி தரும்....” என்று கூறிவிட்டு, அங்கிருந்து நகர்ந்து ஊரைச் சுற்றிக்கொண்டு, இரண்டு குடிகளுக்கும் நடுவே இருந்த அடர்ந்த மரங்களுக்கு இடையே சென்றாள்.
“இது யாரு...” என்று யோசனை எழ, விடை தெரியாத கேள்விகள் பல இருப்பது போல் தோன்ற, அப்பொழுது கண்ணழகி கூறிய ‘சோதி’ என்ற பெயர் அவன் மூளையில் உரைத்தது.
“ஜோவ கேட்கறாங்க போல...” அவன் ஒரு புதிய அர்த்தம் கண்டுபிடிக்க, அவன் மனதில் ஜோதியின் முகம் வந்தது.
ஆட்டுக்குட்டியைக் கொஞ்சும்பொழுது இருந்த அந்த முகமும், ஊருக்குள் சென்று கயவர்களிடமிருந்து சிறு பெண்களைக் காப்பாற்றும் தீவிரமும், நேற்று அந்தப் பெண்ணை அந்தக் கோலத்தில் பார்த்து அவளின் தவிப்பு, இன்று மயங்கிச் சரிந்த அவள் முகத்தில் இருந்த பய உணர்வும், பின்பு தன் தந்தையின் கையில் இருந்தபடியே அவனைப் பார்த்துப் புன்னகைத்தது.... என்று அவளின் ஒவ்வொரு முகமும் அவன் மனதில் வந்து சென்றது.
“ஜோ... கலர்புல் கேர்ள்... லைக் யு சோ மச்...” அவன் உதடுகள், அவன் அறியாமலேயே உச்சரிக்க, இதழில் நெளிந்தப் புன்னகையுடன் திரும்பி அந்தக் காட்டைப் பார்த்தான்.
“அங்கு என்ன தான் இருக்கிறது.... போய்ப் பார்த்தா என்ன...” எண்ணம் தோன்றியவுடன், வேகமாக எழுந்து காட்டை நோக்கிச் சென்றான்.
அப்பொழுது தான் யானைக் கூட்டம் வந்து சென்றதன் அடையாளமாக, அதன் கால் தடங்கல் பதிந்திருக்க, மெதுவாக நடந்து அந்தக் காட்டின் உள்ளே நடக்கத் தொடங்கினான். அந்தக் குகை போன்ற இடம் அருகில் நெருங்க நெருங்க, அங்குச் சூழ்ந்திருந்த இருட்டு, அவன் முன்னேறுவதைத் தடுத்தது.
தன் பாக்கெட்டில் இருந்த சிறிய டார்ச்சை எடுத்து, அதுவும் போதாமல் போக, வேறுவழியின்றி, அந்த வெளிச்சத்திலேயே அந்தக் குகைக்குள் நுழைந்தான். அங்கிருந்த தீப்பந்தமும், பாட்டில்களும், அந்தப் பெண்ணின் சிதறி உடைந்திருந்த கண்ணாடி வளையல்களும், அவளின் கிழிந்த ஆடைத் துண்டுகளையும் பார்த்தவன் மனம், வேகமாக அடித்துக்கொண்டது.
அங்கிருந்த சில பொட்டலங்களைப் பார்த்தவன், அதை எடுத்துத் தனது மூக்கில் வைத்து ஆராய, அதன் நெடியே அது போதை வஸ்து என்று தெரிந்து, அதை விட்டெறிந்தான். சுற்றிலும் தனது பார்வையை அவன் சுழற்ற, அந்தக் குகை போன்ற இடத்திற்கும் மேலே இன்னும் அந்தக் காடு நீண்டுகொண்டு போனது.
“மேலே செல்லலாமா...” என்று எழுந்த எண்ணத்தை, “இங்கு இவ்வளவு பயங்கரம் இருக்கும்போது செல்ல வேண்டாம்... இன்னும் என்ன இருக்குமோ...” என்ற ஒரு எண்ணம் தடுக்க, என்ன செய்வதென்று புரியாமல் நின்றான்.
“இந்த டார்ச்சின் ஒளி போதாது” என்று தோன்ற, “இல்ல இதே போதும்... இன்னும் ரொம்ப தூரத்திற்கு இப்படி இருட்டு இருக்காது....” என்று நினைத்துக் கொண்டு, மேலும் உள்ளே செல்லக் காலை எடுத்து வைத்தான்.
அவனுக்குப் பின்னால் சலசலப்பு சத்தம் கேட்க, சிறிது பதட்டம் தொற்றிக்கொள்ள, திரும்பிச் சத்தம் வந்த திசையைப் பார்த்தான். “ரோன்.... ரோன்....” பதட்டமான திவாகரின் குரல், அவனை நெருங்கியது.
“ஹியர் டிவா....” ரோன் குரல் கொடுத்துக்கொண்டே, டார்ச்சை அவன் திசையில் காட்டினான்.
“வெளிய வா....” திவாகர் சத்தமிட, ரோன் அவனை நோக்கிச் சென்றான்.
“வெளிய வா.... வீட்டுக்குப் போகலாம்... இங்க எதுக்கு உள்ள வந்த.... ஏதாவது ஆனா என்ன செய்யறது...” திவாகரின் குரலில் இருந்த பதட்டத்தில் ரோன் சிரித்தான்.
“ஒண்ணும் ஆகாது... பட் டிவா காடு இன்னும் உள்ள போகுது.... உள்ளப் போய்ப் பார்க்கலாம் இல்ல...” ஆவல் கலந்த எதிர்பார்ப்புடன் அவன் கேட்க, அவன் கைப் பற்றி இழுத்துக்கொண்டு திவாகர் வெளியே சென்றான்.
“ரோன்.... இந்தக் காடு இங்க இருந்து போய்... அங்க நாம வந்தோமே இணை மலைக்கும்.... இந்தப் பக்கம் நம்ம பக்கத்துக்குக் குடிக்கும் போகும்.... அங்க குடி முடியற இடத்துல காடு வளரும்... உள்ள போனவங்க யாரும் உயிரோட வந்தது இல்ல... ரொம்ப அடர்தின்னு சொல்லுவாங்க.... இதோ... அந்தப்பக்கம் காடும் இதோட வந்து சேரும்.... அந்தப் பக்கம் இருக்கிற காட்டுல உள்ளத் தான் அந்தக் காளி கோவில் இருக்கு.... நாம போன் பேசணும்னா கூட இணைமலைக்குப் போய்ப் பேசலாம்.... உனக்குப் பேசணுமா” திசைகளைக் காட்டி திவாகர் சொல்லிக் கேட்க, “எனக்கு யார் இருக்கா பேச....” ரோன் கூறிவிட்டு முன்னே நடந்தான்.
அவனைப் பற்றி அறிந்த திவாகர், “சாரி ரோன்...” கூறிக்கொண்டே பின்தொடர, “அங்க போய் வேணா நெட் கிடைக்கிறதான்னு பார்க்கலாம்.... வா உன் லேப்டாப் சார்ஜ் போட்டு வச்சிருக்கேன்... போய் எடுத்துட்டு போகலாம்...” அவனை அழைத்துக்கொண்டு வீட்டிற்குச் சென்று, லேப்டாப்பை எடுத்துக்கொண்டு, இணைமலைக்கு சென்றனர்.
விட்டு விட்டுக் கிடைத்த இணைப்பில், இருவரும் மெயில் செக் செய்து முடித்துக் கிளம்ப, அந்த இடத்தில் இருந்த சிலர் கிளம்பிவிட, அந்த இடமே காலியாக இருந்தது.
“என்ன டிவா... இங்க இவ்வளவு காலியா இருக்கு.... நீ இங்க கஞ்சா பிசினஸ் நடக்குதுன்னு சொன்ன....”
“நைட்க்கு தான் வருவாங்க.... அப்போ தானே போலீஸ், பாரஸ்ட் கண்ணுல மண்ணைத் தூவலாம்...” திவாகர் பேசிக்கொண்டே நடந்து, அவர்கள் இருக்கும் மலைக்கு மேல் ஏறிவர, மாலை மயங்கி இருள் கவிழத் தொடங்கியது.
உடுக்கைச் சத்தம் அவர்கள் காதுகளுக்கு எட்ட, நேராக அவர்கள் அங்கிருந்த சாமி சிலையருகே சென்றனர். சாமியாடி தயாராக இருக்க, அவருடன் இன்னொருவரும் தயாராக நின்றார். மாண்டு போனவரின் உடல்களை இருவரும் இழுத்துக்கொண்டு, காளி கோவிலை நோக்கிச் சென்றனர்.
உடுக்கையின் சத்தம் நிமிடத்திற்கு நிமிடம் அதிகரிக்க, இருவரும் வந்து சேரும் வரை அந்த ஒலி தொடர்ந்தது.
அனைத்தும் புதியதாக இருக்க, ரோன் தனது கேமராவை எடுக்க, திவாகர் அவன் கைபற்றித் தடுத்தான். ஜோதி அங்கு மெதுவாக நடந்து வந்து அவன் அருகில் நின்றாள். அவளின் பார்வை அவனைத் தழுவ, அதை உணராத ரோன் வேடிக்கை பார்ப்பதில் மும்முரமாக இருந்தான்.
சிறிது நேரம் சென்று ஏதோ உள்ளுணர்வுத் தோன்ற, ரோன் திரும்பிப் பார்க்க, அவன் பார்ப்பதற்கே காத்திருந்தார் போல, ஜோதியின் இதழ்கள் விரிந்தது.
பதிலுக்கு ரோனும் புன்னகைக்க, “இது உனக்குப் புதுசா இருக்கா...” மென் குரலில் ஜோதி கேட்டாள்.
அவள் பேசுவது புரியாமல் ரோன் தனது மொபைல் ரெகார்டரை ஆன் செய்ய, தோளைக் குலுக்கி, அவளது கேள்விக்கு அவன் பதில் சொல்ல, ஜோதியின் கீற்றுப் புன்னகை மலர்ந்தது.
“இங்க இப்படித் தான்... என்னைத் தூக்கிட்டு போய் உடனே மருந்து கொடுத்தப் போல... நன்றி.... மருந்து ஒரே கசப்பு... எப்படி அதைத் திங்குற...” இதற்கும் ரோன் தோள் குலுக்கலையே பதிலாகத் தர, ஜோதி சிரிப்பை அடக்கிக் கொண்டு, தலைகுனிந்தாள்.
“என்னைப் பார்த்தா சிரிப்பா இருக்கா.... என்னன்னு தெரியல நீ விழுந்ததும் ரொம்ப பயந்துட்டேன்....” ரோன் ஆங்கிலத்தில் சொல்ல
“நீ பேசறது எனக்குப் புரியல... நான் பேசறது உனக்குப் புரியல... என்னத்த செய்யறது.... எனக்குப் படிக்கணும்னு ரொம்ப ஆசை... அண்ண மாதிரி உங்க ஊருக்கு எல்லாம் வந்துப் படிக்கணும்... இந்த ஊருல என்னைப் பார்த்து எல்லாரும் அவங்க பிள்ளைங்கள படிக்க வைக்கணும்...” ஜோதி தனது ஆசையைச் சொல்லிக்கொண்டே போக, சாமியாடி வந்து சேர்ந்ததும், உடுக்கைச் சத்தம் நின்றது.
நேராக ஓடைக்குச் சென்று குளித்து வந்து, கோவிலுக்குள் நுழைந்தவர் பூசைப் போடத் துவங்கினார். அதற்கு மேல் ஜோதி ரோனிடம் பேசாமல் நகர்ந்து செல்ல, ரோன் வேடிக்கைப் பார்ப்பதில் மும்முரமானான்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் - 6


வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவன், திடீரென்று தனது பார்வையை ஜோதியைத் தேடித் திருப்ப, ஜோதியோ அந்தக் கோவிலின் பின் புறத்திற்கு சென்றுகொண்டிருந்தாள். ‘அனைவரும் இங்கிருக்க, ஜோதி எதற்கு அங்கே செல்கிறாள்’ என்ற எண்ணம் எழ, மெதுவாகக் கூட்டத்திலிருந்து நழுவி, அவளைப் பின் தொடர்ந்தான்.
கோவிலின் பின் சென்றவள், நின்றுத் திரும்பிப் பார்க்க, ரோன் ஒரு மரத்தின் பின் மறைந்து நின்றான். சுற்றி முற்றிப் பார்த்துக்கொண்டு ஜோதி மீண்டும் தனது நடையைத் தொடர, ரோனுக்கு அவள் எங்குச் செல்கிறாள் என்று பார்க்கும் ஆர்வமும் அதிகரித்தது.
மீண்டும் சில நிமிட நடைக்குப் பிறகு, ஜோதி நிற்க, அங்கிருந்த ஒரு பெரிய கல்லின் பின்னால் ஒளிந்துகொண்டான். அங்கு நின்றவள், தன் முந்தானையில் சுருட்டி வைக்கப்பட்டிருந்த இரண்டு கிழங்குகளை எடுத்து வைத்துவிட்டு, மீண்டும் வந்தது போலவே திரும்பி நடந்து, கோவிலினுள் இருந்த கும்பலில் கலந்தாள்.
“இவ எதுக்கு இங்க வந்து என்னவோ வச்சிட்டுப் போறா....” ரோன் யோசனையுடன் அங்கிருந்து நகராமல் நின்றான். சிறிது நேரத்தில் பூஜை முடிந்து கும்பல் களைந்து செல்லத் துவங்கியது. உடுக்கைச் சத்தத்தின் ஒலியும் நின்றுவிட, அந்த இடமே நிசப்தத்தைத் தத்தெடுத்துக்கொண்டது.
அந்த அமைதியும், அந்த ஊரின் கதையும் ரோனிற்கு சிறு பயத்தை விதைக்க, இருந்தாலும் நின்று பார்த்துவிடுவது என்ற முடிவுடன் அங்கேயே நின்றான்.
கோவிலின் உள்ளே சத்தம் மெல்ல அடங்க, சருகுகள் மிதிபடும் சத்தம் கேட்டது. ரோன் பார்வையை கூர்மைப் படுத்திக்கொண்டு பார்க்க, கண்ணழகி மெல்ல நடந்து வந்தாள். வந்தவள், அதுவே வழமை போல, அங்கிருந்த கிழங்குகளை எடுத்து, அதன் தோலை பல்லில் கடித்துத் துப்பி, வேகமாக உண்ணத் துவங்கினாள்.
“இவளுக்கு ஏன் இவ சாப்பாடு வைக்கிறா.... இவ மனநிலை பாதிக்கப்படவ மாதிரி தானே இருக்கா....” அதே யோசனையுடன் மெதுவாகக் கோவிலை நோக்கிச் சென்றான்.
அவனுக்காகக் காத்திருந்த திவாகர், “எங்க போன ரோன்.... நான் உன்னைத் தேடிட்டு இருக்கேன்.... சீக்கிரம் வா...” என்று கூறிவிட்டு முன்னே நடக்க, ரோன் குழப்பத்துடன் மெதுவாக நடந்தான்.
“என்னாச்சு ரோன்... சீக்கிரம் வா...” திவாகர் அவசரப்படுத்த, ரோன் தனது நடையை எட்டிப்போட்டு அவனுடன் இணைந்தான்.
“என்ன திவா... என்னாச்சு... ஏன் இந்த அவசரம்...” ரோன் புரியாமல் கேட்க, மழைத் தூரத் துவங்கியது. “இதுக்குத் தான் சொன்னேன்... சீக்கிரம் வா...” திவாகர் அவன் கைபற்றி இழுக்க, இருவரும் வீட்டினுள்ளே நுழையும் தருவாயில், வித்தியாசமான ஒரு ஒலிக் கேட்டது.
ரோன் அதைக் கேட்டு அதிர்ந்து நிற்க, “நடுச்சாமம் நெருங்கப் போகுது... அந்தப் பிணங்களை எடுக்கக் காளியும் கருப்பனும் வந்திருப்பாங்க... அது தான் இந்தச் சத்தம்...” திவாகர் கூறிவிட்டு, ரோனை இழுத்து உள்ளேத் தள்ளிக் கதவை அடைத்தான்.
ஐந்து நிமிடங்கள்வரை தொடர்ந்த அந்தச் சத்தம் சட்டென்று நிற்க, ரோன் திவாகரைப் பார்த்தான். “எல்லாம் முடிஞ்சது...” திவாகர் சொல்லிவிட்டு, கைக்கால் கழுவி, சாப்பிட அமர்ந்தான்.
ரோன் அவனுடன் சாப்பிட அமர்ந்து, அமைதியாகச் சாப்பிட, அவன் மனமோ அன்று நடந்த சம்பங்களில் சுற்றி வந்தது. சாப்பிட்ட திவாகர் அறைக்குச் செல்லத் திரும்ப, “டிவா... ஜோதி என்கிட்டே என்னவோ சொன்னா... என்னால புரிஞ்சிக்க முடியலை... ப்ளீஸ்... அதைக் கேட்டு அவ என்ன சொன்னான்னு சொல்லு...” ரோன் தனது செல்லை எடுத்து நீட்டிக்கொண்டே கேட்க, திவாகர் அதை வாங்கிக் கேட்டான்.
ஜோதியின் குரல் தெள்ளத் தெளிவாக, அந்தக் கூட்டத்தின் சத்தத்தையும் மீறிக் கேட்க, அதைக் கேட்ட திவாகருக்கோ அதிசயமாக இருந்தது. “ஜோதியா பேசியது....” சந்தேகத்துடன் திவாகர் கேட்க, ரோன் அவனைப் பார்த்து முறைத்தான்.
“சரி... சரி... இதுல... உனக்கு அவ தேங்க்ஸ் சொல்லிருக்கா... நீ கொடுத்த மாத்திரை கசப்பாம்... நீ பேசறது அவளுக்குப் புரியலையாம்... அவ பேசறது உனக்கும் புரியலையாம்... என்னை மாதிரி படிக்கணும்னு ரொம்ப ஆசையாம்... அவளைப் பார்த்து இந்த ஊருல எல்லாரும் நிறைய படிக்கணுமாம்...” ஜோதி பேசிய முக்கிய சாராம்சத்தை அவன் சொல்ல, ரோன் புன்னகையுடன் கேட்டுக்கொண்டான்.
“ஓ... வரச் சொல்லு நாம படிக்க வைக்கலாம்...” சாதாரணமாக ரோன் கூறிவிட்டு, தனது பெட்டில் படுக்க, “அவகிட்ட நீ என்ன சொல்லணும்னு நான் சொல்லவா...” கிண்டலுடன் திவாகர் கேட்டான்.
“ஒண்ணும் வேண்டாம்.... நானே அவளுக்கு இங்கிலீஷ் சொல்லிக்கொடுக்கிறேன்... பேச வைக்கிறேன்... நீ இங்க ஸ்கூல் ஆரம்பிக்கணும்னு தானே சொன்ன... சீக்கிரம் ஸ்டார்ட் பண்ணு...” கண்களை மூடிய நிலையில் ரோன் கூறினான்.
அவன் கூறியதைக் கேட்டுப் புன்னகைத்த திவாகர், “நடப்பது எல்லாம் நன்மைக்கே” என்கிற ரீதியில் நினைத்து, “குட் நைட் ரோன்....” என்று கிண்டலாகக் கூறிவிட்டு, தனது அறைக்குச் சென்றான்.
மூடிய ரோனின் கண்களில், கனவு மிதக்கும் விழிகளுடன் ஜோதி பேசியதும், அதற்கு முன்பு ஆசை மின்னும் விழிகளுடன் அவள் பேசியதும் விரிந்தது. “நான் உனக்குச் சொல்லித் தரேன் ஜோ.... உன் கனவை நினைவாக்கறேன்....” நினைத்துக்கொண்டே உறங்கத் துவங்கினான்.
அவன் அசந்து தூங்கவும், அந்த இரவின் நிசப்தத்தைக் கிழித்துக்கொண்டு ஒலித்தது சலங்கை ஒலி. அது மீண்டும் அந்த இடத்தையே சுற்றி வர, ரோனின் தூக்கம் கலைந்து எழுந்து அமர்ந்தான்.
சாளரம் வழியாக அவன் எட்டிப்பார்க்க, அங்கு ஆட்களின் நடமாட்டம் இல்லாமல், அமைதியாக இருந்தது. ஆனால் சதங்கை ஒலி மட்டும் அந்த இடத்தை நிறைத்தது. யாரோ நடக்கும்பொழுது ஏற்படும் சத்தம் தான் இது... ஒவ்வொரு அடிக்கும் சத்தம் எழும்ப, ரோன் சிறிது நேரம் அமர்ந்து பார்த்துக்கொண்டிருந்தான்.
சிறிது நேரத்தில் அந்தச் சத்தம் நிற்க, ரொனால்டோ மீண்டும் உறங்கத் துவங்கினான். மறுநாள் காலை விடிந்தவுடன், அவனை எழுப்பிய திவாகர், அவன் பல் துலக்கி வந்ததும், “ஜோதி கூட இன்னொரு பக்கம் போய்ச் சுத்திப் பாரு ரோன்...” என்று கூறினான்.
“ஓ... செல்வாவும் வருவாளா?” கேட்டுக்கொண்டே தனது காமெராவை சார்ஜ் செய்ய எடுத்தான்.
“கரண்ட் இல்ல ரோன்.... நீ கிளம்பு... கரண்ட் எப்போ வரும்னு தெரியலை... மொபைல்ல சார்ஜ் இருக்கு இல்ல...” கேட்டுவிட்டு, அவன் கிளம்ப உதவினான் திவாகர்.
விரைவாக இருவரும் கிளம்பி வெளியே வர..., செல்வா தயாராக இருந்தாள்.
“என்ன ரோன் இன்னிக்கு எங்க போகப் போற?” பரமேசன் கேட்க
“தெரியல அங்கிள்.... செல்வா எங்க கூட்டிப் போறாளோ அங்க போகப்போறேன்... எப்போ கரண்ட் வரும் அங்கிள்?” கேட்டுக்கொண்டே நிமிர்ந்தான்.
அவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டே வாய் பேச முடியாத திவாகரின் தாய் நிற்க, “ஆன்ட்டி... டீ வேணும்....” கேட்டுவிட்டு அங்கேயே அமர்ந்தான்.
திவாகர் தன் தந்தையுடன் கிளம்ப, செல்வாவும் அவனுடன் வர, வழியில் எதிர்ப்பட்ட வீரத்தியன் ரோனைத் திரும்பிப் பார்த்துவிட்டு, “ஏ புள்ள மாரி.... இது என்னவே வழக்கத்துல இல்லாத வழக்கமா இருக்கு... அந்நியனோட ஊரு சுத்துத....” என்று அவளைக் கடிந்துகொண்டார்.
“இல்ல மாமா... அண்ணனோட அவரு தான் போகச் சொன்னாக... இவரு என்ற அண்ணன் தேன் மாமா... ஊர சுத்தி பார்க்கத் தானே வந்திருக்காவ... என்ற மாமா சொன்னதத் தான் செய்யுதேன்...” கூறிவிட்டு அவள் நகரத் தொடங்கி, அவர் அமைதியாக நிற்கவும் அவர் முகம் பார்க்க, வீர்த்தியன் முகம் சற்று வாடிப் போயிற்று.
“சரிங்க மாமா... நான் வெரசா வீட்டுக்குப் போவனும்... பொறவு பார்க்கலாம்...” கூறிவிட்டு ரோனுடன் நடந்தாள்.
ஏதோ சிறிய வாக்குவாதம் என்பது வரை கண்டுகொண்ட ரோன், செல்வாவை குழப்பமாகப் பார்க்க, “ஒண்ணும் இல்ல... சும்மானாச்சுக்கும் பேசினோம்...” அவனுக்குச் சமாதானமாகக் கூறிவிட்டு, ஓடையருகே சென்றாள்.
அங்கு ஜோதி கண்ணழகியுடன் தீவிரமாக எதுவோ பேசிக்கொண்டிருக்க, அதனைப் பார்த்த ரோன் குழம்பிப் போனான். “என்ன இது இந்த மனநலம் சரியில்லாத பொண்ணுகிட்ட ஜோ இவ்வளவு தீவிரமா பேசுறா...” மனதினில் நினைத்துக்கொண்டு ஜோதியை நெருங்கினான்.
“பசிக்குது சோறு கொடு... கிழங்கு வேணாம்.... கனி கொடு..” மீண்டும் மீண்டும் கண்ணழகி கேட்க
“நான் நாள கனி கொண்டாறேன்... இன்னிக்கு இது தான் கிடைச்சது.... இத தின்னு... நிறையக் கனி தரேன்...” ஜோதி பொறுமையாகச் சமாதானம் செய்துகொண்டிருந்தாள்.
“கனி தான் வேணும்... ரொம்ப பசிக்குது... உடம்பு நோவு...” கண்ணழகி சம்மந்தம் இல்லாமல் பேசி அழத் தொடங்க, ஜோதி சிறிதும் பயமின்றி அவளது கையைப் பற்றிக்கொண்டாள்.
அவர்கள் உரையாடலைக் கேட்ட செல்வா, “சோதி... நான் மதியம் தின்னக் கனி கொண்டாந்தேன்... நீ அவுகளுக்கு கொடு... பாவம் பசிக்குமில்ல....” என்று தனது கூடையில் இருந்த கனியை எடுத்துத் தர, அவசரமாக அவள் கைகளில் இருந்தே அதைப் பரித்துக்கொண்ட கண்ணழகி, வேக வேகமாகச் சாறு வழிய, இரண்டு கனிகளைத் தின்றாள்.
செல்வா அவளை வாஞ்சையுடன் பார்த்துக்கொண்டிருக்க, ஜோதி வழியும் சாரை துடைத்துக்கொண்டிருந்தாள். ரோன் அவர்களை ஆச்சரியமாகப் பார்க்க, “இது ரொம்ப பாவம்... ஊரே ஒதுக்கி வச்சிட்டாங்க...” ஜோதியின் குரல் தேய்ந்து ஒலிக்க
“சோதி... சோதி... ஊர்க்காரங்க வராங்க போல....” பதட்டத்துடன் செல்வா சொல்ல, ஜோதி அவசரமாக ரோனை இழுத்துக்கொண்டு அங்கிருந்த ஓடைக்கு இறங்கினாள்.
கண்ணழகியை பார்த்த அந்த மக்கள், “ஏ கிறுக்கி..... இங்கன உட்கார்ந்து என்ன செய்யுத........ போக்கிறுக்கி... ஊருக்கு ஆவாது...” என்று விரட்ட, அவளும் ஓலத்துடன் அங்கிருந்து எழுந்து ஓடினாள்.
“எதுக்கு இப்படி செய்யறாங்க....” ரோன் புரியாமல் சைகையில் கேட்க
“அவிக பைத்தியம்... ஊருல ஒதுக்கிட்டாங்க.... விஷம் கொடுத்துச் சாவடிக்க பார்த்தாக... ஆத்தா சித்தம் போல... சாவு அவகள அண்டாம போயிருச்சு...” செல்வா சொல்ல, ஜோதி அழுகையுடன் ஓடும் கண்ணழகியையே அசையாமல் பார்த்திருந்தாள்.
அவள் கண்கள் கலங்கி இருக்க, செல்வா அவள் கண்களைத் துடைத்து, “அதோட விதி சோதி... வா நாம அண்ணனுக்கு ஊரச் சுத்திக் காட்டுவோம்... அந்தக் கருப்பன் காட்டுப் பக்கம் போவலாம்....” செல்வா சொல்ல, சரியென்று தலையசைத்த ஜோதி முன்னே நடந்தாள்.
“ஜோ... டோன்ட் க்ரை...” ரோன் அவள் கைப்பற்றி நிறுத்த, தன் கையில் பதிந்திருந்த அவன் கரங்களைப் வெறித்துப் பார்த்தாள். ரோன் கையை விலக்கிக் கொள்ள, “நீ பேசறது எனக்கு எதுவுமே புரியலையே... என்ன சொல்ற...” வருத்தத்தில் தோய்ந்து வெளி வந்தது ஜோதியின் குரல்.
அவள் கூறியது புரிந்ததோ இல்லையோ, அவள் கண்களிலும் குரலிலும் இருந்த வருத்தம் மட்டும், ரோனிற்கு அடையாளம் காண முடிந்தது.
“டோன்ட் க்ரை...” ஆங்கிலத்தில் கூறி, சைகையிலும் கூறினான். அதை ஜோதி கவனத்துடன் கேட்டு, மனனம் செய்ய, அவள் உதடுகளின் அசைவில், அதைக் கண்டுகொண்ட ரோன், அவள் தவறாகக் கூறுவதை திருத்திக் கூறினான்.
விருப்பமுடன் ஜோதி அதைப் பையில.... “நான் உனக்கு இங்கிலீஷ் சொல்லித் தரவா...” ஆவலுடன் ரோன் கேட்டான். அவனுக்கு அந்தக் குடியில் ஏதாவது ஒரு திருத்தம் செய்ய வேண்டும். அது ஜோதியாக இருந்தால், விருப்பத்துடனும் ஈடுபாட்டுடனும் செய்வாள்... என்று நன்கு தெரிந்து, ஆங்கிலம் பயிற்றுவிக்க முன்வந்தான்.
செல்வா ஜோதியைப் பார்க்க, “நீயும் சொல்லு...” ரோன் ஆங்கிலத்தில் சொல்லி, அபிநயம் பிடிக்க, ஒருமுறை சொல்லிப் பார்த்த செல்வா, “எனக்கு வராது... விட்டிருங்க...” என்று கெஞ்சத் துவங்கினாள்.
செல்வாவைப் பார்த்து ஒரு வருத்தப் புன்னகையை சிந்திவிட்டு, “நாம போகலாம்...” என்று கூறி, அந்தப் பாதையின் திசையைக் காட்ட, ஜோதி அதையும் தன்னுள்ளே பதிய வைக்கத் தொடங்கினாள்.
அந்த அடர்ந்தக் காட்டின் உள்ளே ரோன் நுழையப் போக, அங்கிருந்த உருவம் தெரியாத பொம்மைகளும், கற்சிலைகளும் பார்ப்பதற்கே பயத்தைக் கொடுத்தது. ரோன் அவற்றைத் தன் செல்போன் காமெராவில் படம் பிடிக்க, “இங்கன உள்ளார போனா தான் அந்தக் கருப்பன் சாமி இருக்கும்.... அதைத் தாண்டி உள்ளார போனா காளியாத்தா கோவிலுக்குப் போற பாத இருக்கும்... நீங்கப் போறதுனா கருப்பன் கோவிலு வரப் போங்க... அதுக்கும் மேல கால் வைக்க முடியாது...” ஜோதி கூறிக் கைக்காட்டிய திசையில், ரோன் பார்த்துவிட்டு, அவள் கூறியது புரியாமல், தனது மொபைல் ரெகார்டரில் பதிந்து வைத்தான்.
“கோவு....” ஜோதி ஆங்கிலத்தில் சொல்ல, அவளின் உச்சரிப்பில் சிரித்த ரோன், மெதுவாக நடந்து, அந்தக் கற்சிலைகளை தொட்டுப் பார்த்தான். “நிக்காதீக உள்ளார போங்க... வெரசா வருவீகலாம்...” ஜோதி சொல்ல, ரோன் முழிக்க, கையை அந்தத் திசையில் காட்டி, கருப்பன் சாமிக்கு அடையாளமாக மீசையைக் காட்டி, நடந்து சென்று... நின்று, அவள் சொல்லி முடித்துப் பெருமூச்சுவிட, ரோன் அவளைப் பார்த்துச் சிரித்தான்.
“எம்பொழப்பு சிரிப்பா இருக்குதோ... வெரசா கிளம்புங்க...” ஜோதி சொல்ல, “அஆங்கறேன்...” செல்வா பின் பாட்டுப் பாடினாள்.
இருவரையும் பார்த்துப் புன்னகைத்துவிட்டு, ஜோதியின் கைப் பற்றி இழுக்க, “நாங்க வரக் கூடாது... போய்யா... கட்டுனவ மாதிரி கைய பிடிச்சு இழுக்கறவ... எங்க அய்யன் பார்த்துச்சு... இன்னிக்கு நீ காவு தேன்...” ஜோதி அவனிடமிருந்து கையை உருவிக்கொண்டே கூறினாள்.
“வா ஜோ... இடம் காட்டு”
“நாங்க வரக்கூடாதுய்யா... கூறு கெட்டவன்... போய்யா...” கடுப்புடன் ஜோதி கூற, அவளின் கன்னத்தைத் தட்டிவிட்டு, அவள் காட்டிக் கொடுத்த திசையில் நடந்தான் ரோன்.
கருப்பன் கோவில் வரைச் சென்றவன், மீண்டும் ஆவல் உந்த அதைத் தாண்டிச் செல்லப் போக, ஜோதியின் “ஆ... ஆத்தா....” என்ற அலறல் சத்தம் கேட்டது. பதட்டத்துடன் ரோன் ஓடிவர, காலில் தைத்த முள்ளுடன், ரத்தம் வடிய ஜோதி நின்றுகொண்டிருந்தாள்.
“என்னாச்சு... எப்படி ஆச்சு...” ரோன் கீழே அமர்ந்து, அவள் பாதத்தை ஆராய, அவன் அவள் கையைத் தீண்டும்போது இல்லாத ஒரு கூச்ச உணர்வு, இப்பொழுது தலை தூக்க, அவனிடமிருந்து தன் காலை உருவ முயன்றாள்.
“இரு ஜோ... இப்படி ரத்தம் வருது...” காலை விடாமல் ரோன் சொல்ல, அமைதியாக அவன் தன் காலை ஆராயும் பாங்கைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அதற்குள் செல்வா ஒரு பச்சிலையுடன் வர, அதைப் பார்த்த ஜோதி, தன் காலை உருவிக்கொண்டு, அவள் கொடுத்த இலையைப் பிழிந்து, அந்தப் புண்ணின் மீது போட்டு, தன் தாவணியின் துணியைக் கிழித்து கட்டுப் போட்டுக்கொண்டாள்.
“டாக்டர் கிட்ட போகலாமா?” ரோன் அவள் காலைப் பார்த்துக்கொண்டே கேட்க
“இந்தப் பச்சிலை கட்டினா எல்லா காயமும் போயிடும்... நீ வருந்தாத...” கூறிவிட்டு, காயம் படாதது போல ஜோதி முன்னே நடந்தாள். வீட்டிற்கு வந்த ரோன், திவாகரிடமும் பேசாமல் அப்படியே உறங்கியும் போனான். அவன் உறங்குவதைப் பார்த்த திவாகர், எழுப்பாமல் விட, மாலை மங்கி இருள் கவிழும் நேரத்தில் சுகமான கனவுடன் விழித்தான் ரோன்.
இரவு உணவையும் முடித்துக்கொண்டு வந்து படுத்த ரோனின் நினைவுகளில் ஜோதியாக ஒளி கொடுத்தால் ஜோதி. உறக்கம் அவன் கண்களைத் தழுவ மறுக்க, அவளுடைய குரலை, தனது செல்லிலிருந்து கேட்டுக்கொண்டிருந்தான். அந்தக் குரலில் இருந்த சிறு பிள்ளைத் தனமும், நொடியில் மாறும் முக பாவங்களும் என்று அவளது முகத்தைத் தன் மனக்கண்ணில் கொண்டு வந்து ரசித்துக்கொண்டிருக்க, தூக்கம் கண்களைத் தழுவும் போல் இருந்தது.
ஆனால் அவன் தூக்கத்திற்கு ஆயுள் இல்லை என்பது போல மீண்டும் அந்தச் சலங்கைச் சத்தம் கேட்டது. யாரென்று பார்த்துவிடும் ஆவல் உந்த, மெதுவாக மற்றவர்களின் உறக்கம் கெடாமல், வெளியில் சென்றான்.
அந்தச் சதங்கை ஒலியின் திசையில் அவன் சிறிது தூரம் நடக்க, யாருமே கண்ணுக்குப் புலப்படவும் இல்லாமல், நடுவழியில் தயங்கி நின்றான். அந்தச் சதங்கை ஒலி கேட்டுக்கொண்டு தான் இருந்தது. ஆனால் ஆள் நடமாட்டம் தான் இல்லை.
ரோன் எந்தத் திசையில் செல்லலாம் என்று ஆராய்ந்து கொண்டிருக்க, அவன் தோளில் விழுந்தது ஒரு கரம்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் - 7


தோளில் கை விழுந்தவுடன், திடுக்கிட்டுத் திரும்பிய ரோன், பரமேசனைப் பார்த்து, ஒரு சில வினாடிகள் நிறுத்தி இருந்த தன் இதயத்தின் துடிப்பை மீண்டும் உணரத் துவங்கினான்.
“அங்கிள்....” வெளியே வராத குரலில் ரோன் அழைக்க
“என்ன இந்த நேரம் வெளிய வந்திருக்க..... இப்படி எல்லாம் வரக் கூடாது... காத்துக் கருப்பு அடிச்சிரும்... உள்ள போ... உன்ன நல்ல படியா ஊருக்கு அனுப்ப வேண்டியது எங்க கடமை இல்லையா... ஊர காலையில சுத்திக்கலாம்...” கூறிக்கொண்டே அவன் தோள்பற்றி வீட்டிற்கு அழைத்து வந்தார்.
“இல்ல அங்கிள் ஒரு மாதிரிச் சத்தம் கேட்டேன்... கால் கொலுசுச் சத்தம் மாதிரி... ஆனா யாரும் இல்ல....” ரோன் தான் வந்ததன் காரணத்தை விளக்கினான்.
“இங்க யாரும் இந்த நேரத்துல வரமாட்டாங்க ரொனால்டோ.... ஆத்தா தான் ராத்திரி சுத்தயிருப்பா.... சில நாளைக்கு இப்படி ஊரச் சுத்தி காவல் இருப்பா.... அவ கால் கொலுசுச் சத்தம் தான் இது....” இருவரும் பேசிக்கொண்டே நடக்க, அவர்களுக்குப் பின்னால் யாரோ தொடர்வது போல இருந்தது.
அதை உணர்ந்த ரொனால்டோ திரும்பிப் பார்க்க, அங்கு யாரும் இல்லாமல் வெறும் வெற்றுப் பரப்பாய் இருந்தது. ரோன் அப்படியே நின்றுவிட, “என்னாச்சு ரொனால்டோ... உள்ள வா...” பரமேசன் அழைக்க, ரோன் திகைத்த பார்வையுடன் சுற்றி முற்றிப் தேடினான்.
“என்ன தேடற, .... யார தேடற...” புரியாமல் பரமேசன் கேட்க, “யாரோ நம்ம பின்னால வராங்க.... என்னால உணர முடியுது....” ஒருவித பயம் அவன் குரலில் தெரிந்தது.
“ம்ம்.... சாமியா இருக்கும்... அதுக்கு தான் இங்க யாரும் வெளிய வரக்கூடாதுன்னு சொல்றது... போ... போய்ப் பேசாம தூங்கு... இங்க அப்படித்தான்...” ஒருவித எச்சரிக்கை இருந்தது அவரது குரலில். அவரைப் பார்த்துவிட்டு ரோன் அமைதியாகத் தனது இடத்திற்குச் செல்ல நகர்ந்து நின்றான்.
“என்ன ரொனால்டோ இன்னும் சந்தேகமா...” பரமேசன் அவனிடம் கேட்க, “நீங்க என்ன இந்த நேரத்துல வெளிய வந்திருக்கீங்க... உங்களுக்கு இப்போ ட்யூட்டியா....” சந்தேகமாக ரோன் கேட்டான்.
“கதவைத் திறக்கற சத்தம் கேட்டுத் தான் வெளிய வந்தேன்... எங்களுக்கும் ராத்திரியில வேலை இல்ல... போகவும் மாட்டோம்... ஏன்னா இங்க இருக்கற நிலைமை அப்படி....” சொல்லிவிட்டு, கூடத்தில் விரித்திருந்த பாயில் படுத்துக்கொண்டார். திவாகரின் தாய் வைஜயந்தி நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் இருக்க, அதற்கு மேல் பேசி அவரின் தூக்கத்தையும் கெடுக்க வேண்டாம் என்ற முடிவுடன், “அங்கிள்... நான் உங்ககிட்ட சிலது கேட்கணும்... நாளைக்கு காலையில கேட்கறேன்...” கூறிவிட்டு, அவனது படுக்கையில் படுத்துக்கொண்டான்.
உறக்கம் அவன் கண்களைத் தழுவ மறுக்க, பிரண்டுப் படுத்துக்கொண்டிருந்தான். ‘தங்களைத் தொடர்ந்தது யாரா இருக்கும்.... என்னால உணர முடிஞ்சதே... என்ன இது ஒரே மர்மமா இருக்கு.... என்ன ரகசியம் புதைஞ்சி இருக்கு...” என்ற பல யோசனையுடன் அவன் கண்களை மூட, மூடிய விழிகளுக்குள், அனைத்தையும் புரம் தள்ளிவிட்டு ஜோதி வந்து சிம்மாசனமிட்டு அமர்ந்துக்கொண்டாள்.
அந்தக் கண்கள் பேசும் மொழியில் திளைத்து, அவள் இதழ்கள் உதிர்க்கும் மொழியில் முழ்கி அவன் முக்குளிக்க, சுகமானதொரு உணர்வில் நல்ல ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றான்.
மறுநாள் காலை அவனை எழுப்பியது ஜோதியின் குரலே.... “அய்யா.... நான் மேட்டுல கிழங்கு நாத்து எடுத்துவைக்கிறேங்க... வெரசா வாங்க.... செல்வா... வாரியா... நான் போயிட்டு இருக்கேன்....” வெளியில் நின்றுகொண்டே ஜோதி கேட்டுக்கொண்டிருந்தாள்.
அதனைக் கேட்ட ரோன் அவசரமாக எழுந்து அமர்ந்தான். ஜோதி என்ன சொல்கிறாள் என்று புரியாமல் அவன் முழிக்க, திவாகர் ரோனிடம் சொல்லிக்கொண்டு செல்ல வந்திருந்தான். அவனைப் பார்க்க, “நான் வயலுக்குப் போறேன்... நீ செல்வாவோட வா...” என்று அவனுக்குப் பதில் சொல்லிவிட்டு,
“வா ஜோதி... நானும் தயாராகிட்டேன்... நாம போகலாம்... செல்வா அய்யா கூட வருவா...” திவாகர் அவளை அழைத்துக்கொண்டு, நில சதுப்புப் போல இருக்கும் இடத்திற்கு, கிழங்கு பயிரிட அழைத்துச் சென்றான்.
அங்கே ஏற்கனவே சிலர் தயாராக இருக்க, திவாகரைப் பார்த்தவுடன், அவனுக்கு மரியாதையுடன் வணக்கம் தெரிவித்து, அவனைப் பார்த்து வணங்கினர். திவாகருக்கு சங்கடமாக இருக்க, அவர்களைப் பார்த்து வெறும் தலையசைப்புடன், அங்கிருக்கும் சேற்றில் கால் வைத்தான்.
ஜோதியும் அவனுடன் இறங்கி, கிழங்கு நாத்துகளைப் பதித்துக்கொண்டிருக்க, ஜோதியின் குரலைக் கேட்டவுடன் அனைத்தையும் மறந்துப் போன ரோன், செல்வாவுடன் வயலுக்கு வந்து சேர்ந்தான். வந்தவன் சிறிதும் தயக்கமின்றி, சேற்றில் இறங்க, திவாகர் தடுப்பதற்குள், அவனருகில் வந்திருந்தான். “ரோன் எதுக்கு நீ இங்க வர.... சேறு...” திவாகர் சொல்ல, “நல்லா இருக்கு... புது அனுபவம்” என்றுக் கூறி, திவாகர் கைகளிலிருந்தவற்றை வாங்கி நடத் துவங்கினான்.
அவன் நடவு செய்துகொண்டே திரும்பிப் பார்க்க, அதிசயமான பிறவியைப் பார்ப்பது போல ஜோதி அவனைப் பார்த்துக்கொண்டு இருந்தாள். அவள் பார்வையைக் கண்டுகொண்டவன், ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்க, ஒருவித வெட்கம் குடிபுக, தன் தலையைக் குனிந்துகொண்டாள்.
அந்த வெட்கமும் பார்க்க அழகாக இருக்க, தன்னிடம் கேமரா இல்லையே என்று அவன் மனம் பரபரக்கத் துவங்கியது. ஒரு ஏக்கப் பார்வையை அவன் ஜோதி மீது செலுத்த, ஜோதியோ அவனை ஓரக்கண்ணால் பார்வையிடத் துவங்கினாள்.
அவள் பார்வையும் புதியதாக இருக்க, ரோன் அவளை வேடிக்கைப் பார்க்கத் துவங்கினான். அவனைக் கண்டுகொண்ட திவாகர், “ரோன்... ஹே ரோன்... அடிவாங்காம ஊர விட்டுப் போகபோறதில்லைன்னு முடிவு செய்துட்டியா.... இப்படி என் தங்கையைப் பார்க்காதே...” ஒருவித கண்டிப்பு அவன் குரலில் நிறைந்திருந்தது.
“எனக்கு அவளைப் பிடிச்சிருக்கு டிவா.... அவளோட ஒவ்வொரு செய்கையிலும் என்னவோ வித்தியாசம்.... இங்க உள்ளவங்கள்ல அவ தனியா தெரியறா... அவ என் இதயத்தைத் திருடிட்டான்னு நினைக்கிறேன்....” ரோன் தன் மனதை திவாகரிடம் பகிர்ந்தான்.
எப்பொழுதுமே ‘திருமணம் ஒரு வேலி.... அதில் உண்மை இருப்பதில்லை.... சுமையும் சண்டையும் மட்டுமே நிரந்தரம்...’ என்ற தனது சொந்த அனுபவத்தினால், ஆழ்ந்த எண்ணத்தில் இருந்த ரோன், ஜோதியைப் பற்றி இவ்வாறு கூறவும், திவாகர் திகைத்தே போனான்.
அதிலும் வந்து பத்து நாட்கள் கூட முழுதாக முடியாத நிலையில் ரோனின் இந்தப் பேச்சு... அவனைத் திகைக்க வைக்காமல் போனால் தான் அதிசயம். ஜோதியைத் திரும்பிப் பார்த்த திவாகர், “அவ... அவளுக்கு...” என்று அடுத்த கட்ட பயம் வந்து குடிகொள்ள, மிரட்சியுடன் திவாகர் தயங்கினான்.
அவனுக்கும் தெரியுமே!! ஜோதியை ஆசையுடன் திருமணம் செய்துகொள்ளக் கேட்கும் வாலிபர்களின் நிலையை!! அத்தகைய நிலை தன் நண்பனுக்கு வேண்டாம் என்ற முடிவுடன், அங்கிருந்த ஒரு வாலிபனை சுட்டிக்காட்டினான் திவாகர்.
ரோன் புரியாமல் பார்க்க, “இவன் ஜோதி அப்பாட்ட, ஜோதிய பொண்ணு கேட்டான். அவருக்கும் விருப்பம் தான்... இங்க கல்யாணம் முடிவு செய்யணும்னா சாமியாடிகிட்ட குறி கேட்கணும்... சாமியாடிகிட்ட ஜோதிக்கும் அவனுக்கும் கல்யாணத்துக்குக் கேட்டா.... அவனுக்கு அதோ.... அந்தப் பொண்ணு தான் மனைவின்னு சாமியாடி காட்டிட்டார்....” என்று வேறொரு பெண்ணைக் காட்டினான்.
“என்னது... அப்போ அவன் லவ்... என்ன பைத்தியக்காரத் தனமா இருக்கு... அவன் மனசு எப்படி மாறும்...” காதலின் ஆழத்தை உணர்ந்து அவன் கேட்க, திவாகர் சிரித்துவிட்டு, “அவனுக்கு இப்போ ரெண்டு பிள்ளைங்க.... அந்தப் பொண்ணு மேல உயிரா இருக்கான்... சாமியாடி குறி சொன்னா... எல்லாரும் அதை ஏத்துக்கணும்... அது தான் எல்லாரோட விருப்பமும் கூட.... இன்னொன்னு தெரியுமா? ஜோதிய பொண்ணு கேட்ட எல்லாருக்கும் வேற பொண்ண தான் கட்டி வச்சிருக்கார் சாமியாடி... இன்னும் அவளுக்கு அதுக்கு வழி இல்ல போல... அவங்க அம்மா ரொம்ப மறுகறாங்க...” திவாகர் சொல்லிவிட்டு, ரோனை கலக்கத்துடன் பார்த்தான்.
“என்ன டிவா...” அவனது கலக்கத்தைப் புரிந்துக்கொண்ட ரோன் கேட்க, “ரோன்... இப்போ இன்னும் கொஞ்ச நாள்ல பூஜை போடப்போறாங்க... அதுல ஜோதிக்கு கல்யாணத்தப் பத்தி, சாமியாடி சொல்லலைனா.... கிணத்துல தள்ளிடப் போறாங்கலாம்....” சொல்லி முடிக்கும்போதே திவாகரின் கண் கலங்க, ரோனோ அதிர்ச்சியின் உச்சத்தில் இருந்தான்.
“டிவா... ஒரு உயிரைக் கொல்ல எப்படி முடியும்.... ரொம்பப் பாவமில்ல... என் ஜோதி...” என்று அவன் வாய் பேச, அவனது பார்வை வருத்தமாக ஜோதியைத் தழுவியது.
அவனது ‘என் ஜோதி...’ என்ற வார்த்தையைத் திவா கண்டுகொள்ள, குறுகிய இடைவேளையில் அவனது மனதை கொள்ளைக் கொண்ட ஜோதியை நினைத்து வியந்தான்.
“ஜோதிய உனக்குப் பிடிச்சிருக்கா ரோன்... நீ அவள விரும்பறியா...” தனது சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்ள திவாகர் வெளிப்படையாகக் கேட்டான்.
பதிலேதும் கூறாமல், ரோன் தனது வேலையில் மூழ்கினான். சிறிது நேரம் அவனைப் பார்த்துக்கொண்டு இருந்த திவாகர், பின்பு அவனும் தனது வேலையில் கவனத்தைத் திருப்பி, வேலையை முடித்து, வயலை விட்டு வெளியில் வந்தான்.
அவனுடன் வந்த ரோன் அமைதியாகத் தன் கைகளையும், திவாகரையும் பார்க்க, “இங்க இருந்து ஓடை பக்கம் தான்... அங்கப் போய் கைக்கழுவிக்கலாம்...” சொல்லிவிட்டு திவாகர் ஜோதியுடன் நடந்தான்.
ஜோதியும் திவாகரும், கைக்கால் கழுவிட்டு, முகத்தைத் துடைத்துக்கொண்டு மேலே வர, அப்பொழுது தான் ரோன் தண்ணீருக்குள் இறங்கினான். ஏதோ கவனமாக இருந்தவன், கவனம் இல்லாமல் கால் வைக்க, வழுக்கித் தண்ணீருக்குள் விழுந்தான்.
விழுந்த வேகத்தில் அவன் தலை ஒரு பாறையில் உராய, தோல் கிழிந்து உதிரம் வரத் தொடங்கியது. வலியில் அவன் முனக, அதைப் பார்த்த ஜோதி அவனிடம் விரைந்தாள்.
திவாகரும் அவனிடம் விரைய, அதற்குள் அவள் கையில் இருந்த துண்டால் அதைத் துடைத்து, தண்ணீரில் மீண்டும் நனைத்து, பதட்டத்துடன் அவனது காயத்திற்கான மருந்திற்காகப் பச்சிலைத் தேடி ஓடினாள்.
அவன் அருகில் அமர்ந்த திவாகர் அவளை வேடிக்கைப் பார்க்க, “டிவா.... காயம் பட்டிருக்கு... நீ அவள வேடிக்கைப் பார்க்கற... எனக்கு ரொம்ப வலிக்குது டிவா...” வலி மிகுந்த குரலில், தன்னை கவனியாமல், ஜோதியை வேடிக்கைப் பார்க்கும் தன் நண்பனைப் பார்த்து, கடுப்புடன் கேட்டான் ரோன்.
“ஜோதி எதுக்கு இவ்வளவு பரபரப்பா ஒடறான்னு யோசிச்சிட்டு இருக்கேன்....” யோசனையுடன் தமிழில் கூறிவிட்டு, ரோன் அவனைத் தட்ட, “சாரி... சாரி ரோன்..... அவ எதுக்கு இப்படி ஓடறான்னு நான் வேடிக்கைப் பார்க்கறேன்....” ஆங்கிலத்தில் கூறிய திவாகர் சிரித்தான்.
“என்ன... எனக்கு அடிப்பட்டது உனக்குச் சிரிப்பா இருக்கா...” கடுப்பு குறையாமல் ரோன் கேட்டான்.
“இல்ல... ரோன்... எனக்கு என்னவோ ஜோதிக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்குன்னு நினைக்கிறன்... இப்படி ஓடரா....” கூறி, அங்கிருந்த கல்லில் பச்சிலை வைத்து அரைக்கும் ஜோதியைப் பார்த்தான்.
“என்னாச்சு மாமா... இவகளுக்கு என்ன அடிப்படிருக்கு...” கேட்டுக்கொண்டே செல்வா வந்து சேர்ந்தாள்.
திவா பதில் கூறுவதற்குள், “செல்வா... இங்கனவா புள்ள இத அர... நான் அவுகளுக்கு சாறு போடுதேன்...” ஜோதி கூறிவிட்டு, அவள் வருகிறாளா என்று கூடப் பார்க்காமல் ரோன் அருகில் வந்தாள்.
அவன் தாடையைப் பற்றித் தூக்கி, நெற்றியில் சதை வழண்ட இடத்தில் அவள் பச்சிலை சாரைப் பூச, மிக அருகில் தெரிந்த அவள் முகத்தை ரோன் பார்த்தான். அந்த அழகில் மயங்கி, அவன் கண்கள் அவள் முகத்திலேயே நிலைக்க, மீண்டும் சென்று செல்வா அரைத்த மிச்சமுள்ள சாரையும் எடுத்து வந்தவள், அவன் நெற்றியில் போட்டு, “பாத்து இறங்கக் கூடாது... உன் கண்ணு எங்குட்டு புடனிலையா இருக்குது... இப்ப அடிபட்டு உட்காந்து இருக்க...” கோபமாக அவனிடம் கேட்டாள்.
அவனிடம் பதில் இல்லாமல் போக, ஜோதி நிமிர்ந்து அவன் முகம் பார்க்க, அவன் கண்களின் வீச்சில் சிக்குண்டு, அவன் கண்களில் தன் கண்களையும் கலந்தாள். இருவரும் சுற்றம் மறந்து ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக்கொண்டு இருக்க, தன் தாடையில் இருக்கும் ஜோதியின் கைப் பற்றிக்கொண்டான் ரோன்.
அவன் ஸ்பரிசம் அவளுள் உணர்வுகளைத் தட்டி எழுப்ப, அது தாளாமல் கண்களைத் தாழ்த்த, அப்பொழுது அவனது கால்களில் இருந்த சேற்றுக்கரையைப் பார்த்தாள். உரிமையுடன் தன் கையில் இருந்த ஈரத் துண்டை வைத்து, அதைத் துடைத்துவிட, அவளின் செயலில் ரோன் நெகிழ்ந்துப் போனான்.
அவளது கரத்தைப் பற்றியவன், அவள் முகத்தை நிமிர்த்தி, “ஜோ... தேங்க்ஸ் அ லாட்... ரொம்ப வருஷத்துக்கு அப்பறம் அம்மாவோட அன்பு எப்படி இருக்கும்ன்னு உணர்றேன்... தேங்க்ஸ்...” என்று அவள் கையை இறுகப் பற்றிக்கொண்டான்.
ஜோதி அவனையேப் பார்க்க, “ஜோதி... அவனுக்கு உன்னைப் பார்த்தா அவங்க அம்மாபோல இருக்காம்... அம்மாவோட அன்ப உணர்ந்து இருக்கானாம்...” அவன் கூறியவற்றை ஜோதியிடம் கூற, திவாகரைத் திரும்பிப் பார்த்த ஜோதி, “அவுகளுக்கு அம்மா இல்லையா...” ரோனைப் பற்றித் தெரிந்துகொள்ளும் ஆவலில் கேட்டாள்.
“அம்மாவும் இருக்காங்க... அப்பாவும் இருக்காங்க... ஆனா ரெண்டு பேரும் அவன விட்டுப் போயிட்டாங்க... அவன் தனியா தான் படிச்சி வளர்ந்தான்... தனியாத் தான் இருக்கான்...” திவாகர் சொல்ல, இயல்பிலேயே இருக்கும் அவளது தாய்மை உணர்வு மேலெழுந்து, அவன் கையின் மேல் தன் கையை வைத்துப் அழுத்திக்கொண்டாள்.
ரோன் அவள் கையின் அழுத்தத்தை உணர்ந்து, திவாகரைப் புரியாமல் பார்க்க, “நான் உன்னைப் பத்தி.... உங்க அம்மா அப்பாவ பத்திச் சொன்னேன் ரோன்... வேறொன்னும் இல்ல...”
“ஹ்ம்ம்...” என்று ஒரு பெருமூச்சொன்றை வெளியிட்ட ரோன், “அவங்களைப் பத்தி பேச வேண்டாம்... அவங்க எனக்கு ஒண்ணும் இல்ல...” கொஞ்சம் கோபமாக வெளிவந்தது ரோனின் குரல்.
ஜோதியும் செல்வாவும் அவர்களை வேடிக்கைப் பார்க்க, ஜோதியின் கையை விலக்காமலே ரோன் அமர்ந்திருந்தான். அவளது கரங்களைப் பற்றியிருக்கும்போது ஏதோ ஒரு அமைதி, ஏதோ ஒரு சுகமான உணர்வு தோன்ற, அவள் கையை எடுத்துத் தன் நெஞ்சின் மீது வைத்துக்கொண்டான்.
தன் கையை அவனிடம் கொடுத்துவிட்டு, அந்த உணர்வே சிறிதுமின்றி, தன் இடம் அதுவே என்பது போல, தன் கையை எடுக்காமல் அவன் காலடியில் அமர்ந்தாள் ஜோதி. அவள் அமர்ந்திருந்த நிலை அவனுக்குப் பிடிக்க, அவள் தலையைத் தன் மடியில் சாய்த்து... “என் கூட வந்திரு ஜோ... இந்த ஊரு உனக்கு வேண்டாம்... உன்னைக் கொன்னுடப் போறாங்களாம்...” என்று மனதில் நினைத்த ரோனுக்கு, அதைக் கத்திச் சொல்லி, அவளைத் தூக்கிக்கொண்டு விமானம் ஏறிவிடும் வேகம் அவனுள் எழுந்தது.
அந்த வேகத்தில் அவன் தவிக்க, ஜோதியோ கையை எடுக்காமல் நிம்மதியில் அமர்ந்திருக்க, இருவருக்கும் இருக்கும் மோன நிலையைக் கலைக்க விரும்பாமல், திவாகர் தன் மனைவியிடம் சென்றான்.
அப்பொழுது அந்த வழியாக வந்த சாமியாடி, இருவரும் இருந்த நிலையைப் பார்த்து அதிர்ந்து நின்றார். தன்னை மறந்து இருந்த ஜோதி அதை அறியாமல் போக, வேகமாகச் சாமியாடி ஊருக்குள் சென்றார்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் - 8


சாமியாடி, ஜோதியையும் ரோனையும் பார்த்துவிட்டுச் செல்ல, அதை அறியாத இருவரும் தங்கள் கண்களாலேயே மற்றவருடன் கலந்துவிடும் நோக்கத்தில் பார்த்துக்கொண்டிருந்தனர். அதற்கு மேல் அந்தச் சிறு கண்களின் தாக்கம் தாளாமல், அவன் மடியினில் முகம் புதைத்தாள் ஜோதி.
அதற்காகவே காத்திருந்தார் போல ரோனின் கைகள், அவள் தலையில் பதிந்தது. அவள் முடியில் நுழைந்து விளையாடிய அவன் கை, அவள் தலையில் அழுத்தத்தைக் கொடுக்க, ஜோதி நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள்.
“ஜோ...” அவன் அழைக்கும் குரலில் தான் அத்தனை நெகிழ்ச்சி.... அந்தக் கண்களில் ஆயிரம் அன்பு.... ஜோதி அவன் கண்களில் பின்னிக்கொண்டு தவிக்க, ரோன் அவளைத் தன் அருகில் பற்றி இழுத்தான்.
வெட்கம் அவளைச் சிறையெடுக்க, அவன் அருகில் வர ஜோதி முரண்ட, அதுவும் அவனுக்கு வேடிக்கையாக இருக்க, மற்றொரு கையையும் அவளது தோளுக்கு எடுத்துச் சென்றான்.
இருவரும் தங்கள் நிலையில் லயித்து இருக்க, யானைகள் பிளிறும் சத்தத்தில் ஜோதி அவனை விட்டுத் தள்ளி அமர்ந்தாள். ஏமாற்றம் மிஞ்ச ரோன் அவள் முகம் பார்க்க, “அய்ய.... ஆசையைப் பாரு....” வெட்கத்துடன் ஜோதி தண்ணீரின் அருகில் சென்றாள்.
ரோன் அவளைப் பின்தொடர, தண்ணீரில் கால்களை அசைத்து, முகம் நிறைந்த வெட்கத்துடன் நின்றுகொண்டிருந்த ஜோதியை நெருங்கினான். “ஜோ...” ரோன் மீண்டும் ஆசையுடன் நெருங்க, ஜோதி தன் கைகளினால் முகத்தை மூடிக்கொண்டாள்.
அவள் கைகளை விலக்கிய ரோன், ஜோதியின் கண்கள் சென்ற திசையைப் பார்க்க, அங்குத் திவாகர் செல்வாவை மடியில் அமர்த்திக்கொண்டு, அவள் கழுத்தினில் முகம் புதைத்திருந்தான். அதைப் பார்த்த ரோன் ஜோதியைப் பார்க்க, அந்தக் கண்களில் இருந்த ஏக்கம் ஜோதிக்கும் விளங்கியது.
“அய்ய.... நான் மாட்டேன்....” வெட்கத்துடன் கூறிவிட்டு ஜோதி அங்கிருந்து ஓடிச்சென்றாள். அதனைப் பார்த்த ரோன் சிரிக்க, மேலே சென்றவள் பழிப்புக் காட்டிவிட்டு, தனது வீட்டை நோக்கி ஓடினாள். காட்டுச்செடிகள் நிறைந்திருந்த இடத்தில் அமர்ந்திருந்த திவாகரையும் செல்வாவையும் பார்த்த ரோன், அவர்களுக்குத் தனிமையளித்து விட்டு, பாறைகள் மேலே ஏறிச்சென்று, வீட்டை நோக்கி நடந்தான்.
வீட்டை நோக்கி நடந்தவனுக்கு, அந்த இடமே தேவலோகம் போல் இருந்தது. அங்கிருக்கும் மக்கள் அனைவரும் தேவர்கள்போலக் காட்சியளிக்க, அந்தப் பசுமையை நின்று, மெதுவாக ரசித்துக்கொண்டு வந்தான். மேகப் பொதிகளைக் கையில் பிடித்து விளையாடும் சிறுவனாக மாறி, தத்தித் தாவிக் குதித்து நடக்க, வீரத்தியன் அவன் முன்பு எதிர்ப்பட்டார்.
“என்ன துர.... என்ன இம்புட்டு சந்தோஷமா இருக்கீக.... எதுனா நல்ல தாக்கலோ?” அவனின் சந்தோஷத்தைப் பார்த்த வீரத்தியன் ஆவலுடன் கேட்டார்.
“ஆமா.... நான் சந்தோஷமா இருக்கேன்...” ஆங்கிலத்தில் அவன் கூறியது புரியாத வீரத்தியன், அவன் கைப் பற்றி, அவரின் வீட்டுத் திண்ணையில் அமர வைத்தார்.
அவனும் அங்குச் சென்று அமர, சாமியாடி அங்கு வந்து சேர்ந்தார். வீரத்தியனின் வீட்டுத் திண்ணையில் ரோனைப் பார்த்த அவர் அதிர, “என்னங்கய்யா.... இவகளப் பார்த்து இப்படி நிக்குதீங்க.... நல்ல பிள்ளை தானுங்க.... சோதி சரிஞ்சி போச்சுல, அப்போ, ஊரு வழக்கம் புரியாம செய்துட்டு.... நான் சொன்ன புறவு திரும்பியும் பார்க்கல.... அது தான் நம்ம குடிக்கு வந்திருக்கவகள நாம மரியாதை கேடா நடத்தலாங்களா.... மாப்பு கேட்டுப் பேசலான்னு தானுங்க....” தலையைச் சொரிந்துக்கொண்டு வீரத்தியன் அவரிடம் கூறினான்.
குற்றம் சாட்டும் பார்வையை அவனின் மீது வீசிய சாமியாடி, “ஆமா வீரத்தி... நீ சொல்லுத சரிதான்.... எனக்குக் கொஞ்சம் சோலி இருக்கு.... பார்த்துபுட்டு புறவு வாரேன்....” வீரத்தியனிடம் கூறிவிட்டு, ரோனைப் பார்த்துவிட்டு, அங்கிருந்து நகர்ந்தார்.
அப்பொழுது அங்கு வந்த திவாகர், ரோனைப் பார்த்து முறைக்க, “உங்களைத் தொல்லை செய்ய வேண்டாம்னு தான்...” ரோன் நக்கலாகச் சிரித்தான்.
“இங்க எதுக்கு மாப்பிள்ளை சார் வந்திருக்கீங்க... மாமனார் வீட்டு விருந்தா... பார்த்துப் பொலி போடப்போறாங்க....” பதிலுக்குத் திவாகர் நக்கலாகக் கேட்க, சிரிப்புடன் ரோன் வீரத்தியனைப் பார்த்தான்.
இருவரும் பேசுவதை வாய் திறந்துக் கேட்டுக்கொண்டிருந்த வீரத்தியனையும், அவரது இரு மகன்களையும், பார்த்த திவாகர், “என்னங்கய்யா விருந்துக்குக் கூட்டியாந்தீங்களா... தின்ணையில உட்கார வச்சிருக்கீக...” அவரிடம் திவாகர் பேச்சுக் கொடுக்கத் துவங்கினான்.
வீரத்தியன் மீண்டும் சாமியாடியிடம் கூறியதையேக் கூற, திவாகர் அதனை ஆங்கிலத்தில் ரோனிடம் கூறினான். “அதெல்லாம் நான் ஒண்ணும் எடுத்துக்கலை...” ரோன் சொல்ல, திவாகர் அவருக்கு மொழி பெயர்த்தான்.
“நல்ல பொழப்புடா இது...” திவாகர் சலித்துக்கொள்ள, அப்பொழுது ஒரு குவளையில் தண்ணீர் எடுத்துக்கொண்டு ஜோதி வந்தாள். ரோனின் கண்கள் ஜோதியைக் கண்டு சிரிக்க, ஜோதி குனிந்த தலை நிமிராமல் அவனிடம் நீட்ட, ரோனின் பார்வையைக் கண்ட திவாகர், அவன் தொடையில் தட்டி, “ரோன் பார்க்காத... அவர் பார்த்துட்டா பிரச்சனை ஆகும்...” எச்சரிக்கை செய்ய, வீரத்தியனைப் பார்த்துக் கொண்டே கூறினான்.
ஆனாலும் ரோனின் பார்வை ஜோதியை விட்டு நீங்க மறுத்தது. ஜோதி அமைதியாக உள்ளே செல்ல, “சரிங்கய்யா... நாங்க புறப்படறோம்... அவன் தப்பா எடுக்கலைங்க... அவனுக்கு இது புதுசில்ல...” திவாகர் கூறி, கைக்கூப்ப, அவனைப் பார்த்துத் தலையசைத்த வீரத்தியன், “நான் கடுமையா பேசிருந்தா மன்னிச்சுக்குங்க....” அவரும் கையெடுத்து கும்பிட்டுக் கூற, ரோன் திவாகரைப் பார்த்தான்.
“இல்லைங்க... அவன் மனசுல ஏதும் வச்சிக்க மாட்டானுங்க... நீங்க விசனப்படாதீங்க.... நாங்க வரோம்....” சொல்லிவிட்டு, திவாகர் ரோனை அழைத்துக்கொண்டு அங்கிருந்து நகர்ந்தான்.
ஜோதியை மீண்டும் காணும் ஆவலில் ரோன் திரும்பிப் பார்க்க, அங்கு வீரத்தியன் நின்று தலையசைத்தார். வீட்டிற்குள் நுழையும் போதே அங்கு அமர்ந்திருந்த பரமேசனைப் பார்த்த ரோன், தான் கேட்க நினைத்தது நினைவில் வர, “அங்கிள்... ஒரு அஞ்சு நிமிஷம் வரேன்... உங்க கிட்ட பேசணும்...” கூறிவிட்டு, வேகமாகச் சென்று உடை மாற்றிக்கொண்டு, ஒரு வாய்ஸ் ரெக்கார்டரை கையில் எடுத்துக்கொண்டு வந்தான்.
அதைப் பார்த்தவர், சந்தேகத்துடன் புருவம் உயர்த்த, “இந்த ஊரைப் பத்தி சொல்லுங்க.... இதுல நிறைய மர்மம் இருக்கே... அது எல்லாம் என்ன... நிஜமாவே சாமி செய்யறதுன்னு நீங்க நம்பறீங்களா? நீங்கப் பாரஸ்ட்ல இருக்கீங்க... அப்படியும் இது சாமி தான்னு சொல்றீங்களா?” வரிசையாகத் தனது முதல் வரிசைக் கேள்விகளை முன் வைத்தான்.
“ஏன்பா அதுல உனக்கு என்ன சந்தேகம்... சாமிய சந்தேகப்படக் கூடாது....” நேரிடையாக, தெளிவாக வந்தது பரமேசனின் பதில்.
“சாமி ஒரு உயிரைக் கொல்லுமா...”
“ஏன் ரொனால்டோ.... நாம புராணத்துல படிக்கறது இல்லையா... அவதாரம் எடுத்துச் சாமி கெட்டவங்கள சம்ஹாரம் செய்யதது தானே... அப்போ செய்தது... இப்போ செய்யாதா... இந்த ஊரு காளி ரொம்ப சக்தி வாய்ந்தது. அதை நாம பழிக்கக் கூடாது....” வேகத்தில் பேசியதில் அவருக்கு ஆங்கிலம் தடுமாற... அதைக் கேட்ட திவாகர், ரோனுக்கு ஆங்கிலத்தில் விளக்கினான்.
“ஹும்... இருக்கலாம்... ஆனா சாமியக் கண்ணால பார்த்த சாட்சி இருக்கா.... இது சாமி தான் செய்யுதுன்னு கட்டாயமா சொல்லறீங்களா?” மீண்டும் ரோன் அதேக் கேள்வியில் நின்றான்.
“இல்லை தான்... பார்த்தது இல்லை தான்.... ஆனா நம்மளால உணர முடியும் தானே... எப்படி காற்றை நம்மளால உணர முடியுமோ, அதே போலத் தான் கடவுளும்... அவ இருக்கறத நம்மளால கட்டாயம் உணர முடியும்...”
“அப்போ இந்தக் கொலைகளையும் கடவுள் தான் செய்யுதுன்னு சொல்றீங்களா? நீங்கப் பாரஸ்ட்ல இருக்கீங்க... உங்களால ஏன் அந்தக் கொள்ளையர்களையும், இந்த ஊருல பொண்ணுங்கள துன்பப்படுத்தரவங்களையும் பிடிக்க முடியலை...”
“பிடிக்க முயலலைன்னு உனக்கு யாரு ரொனால்டோ சொன்னது... அவங்கள பிடிக்கக் காட்டுக்குள்ள போய்க் கிட்டத்தட்ட பத்து பேருக்கு மேல இறந்திருக்காங்க... ஏன்... நான்... எனக்கு...” என்று கூறி, தனது வேஷ்டியை உயர்த்திக் காட்டினார்.
ஆடு சதையில் ஒரு இடம் சற்று உள்குவிந்து, காணப்பட்டது. இன்னும் சற்று மேலேற்றி தனது தொடையைக் காட்ட, அங்குப் பெரிய தழும்பு, கத்தியால் வெட்டப்பட்ட தழும்பு காணப்பட்டது.
திவாகரே அதை இப்பொழுது தான் பார்க்கிறான்... “அப்பா... என்னங்கப்பா.... என்ன இது...” பதட்டத்துடன் கேட்க, “அங்கிள்...” ரோன் அதிர்ந்தான்.
“அவனுங்கள பிடிக்கப் போன இடத்துல, என்னை ரெண்டு இடத்துல வெட்டிட்டானுங்க.... இங்க இருக்கற வைத்தியரும், காளியாத்தாலும் தான் காப்பாத்தினாங்க... என்னால எழுந்து நடக்கவும் முடிஞ்சது...” பரமேசன் சொல்ல, திவாகர் அதே அதிர்ச்சியுடன், தனது அன்னையைப் பார்த்தான்.
அவர் ‘ஆம்’ என்று தலையசைக்க, “அதும் இல்லாம.... வீடு புகுந்து உங்க அம்மாவையும் அடிச்சி.... உங்க அம்மானால பேச முடியாமையும் போயிடுச்சு...” வருத்தத்துடன் பரமேசன் சொல்ல, ரோன் அவரை ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தான்.
“அப்போ... அம்மைக் கண்டு... அம்மா குரல் போயிடுச்சுன்னு சொன்னது...” அதிர்ச்சியின் உச்சத்தில் திவாகர் கேட்க
“ஆமா... உனக்கு எப்படி... உண்மையைச் சொல்றது.... சொல்லவும் முடியும்.... நீ பயந்துப்பயேப்பா... இத்தனை நடந்தும் நான் இந்த ஊருல இருக்கற காரணம்... என் உயிரையும்... உங்க அம்மா உயிரையும் காப்பாத்தி... கஷ்டப்பட்ட காலத்துல பொங்கிப் போட்டு... என்னைப் பார்த்துக்கிட்டது இந்தச் சனங்க தான்.... அதுனால நான் இங்க விட்டு எங்கயும் போகலை... இந்த ஊர் நம்பிக்கைய நானும் கடைப்பிடிக்கிறேன்....” பரமேசனின் குரல் தீர்க்கமாக வெளிவந்தது.
“எப்படிப்பா.... நான் இத்தனை வருஷம் கவனிக்காம இருந்திருக்கேன்...” வருத்தத்துடன் திவாகர் கேட்க
“நீ வரும்போது நான் வேட்டி இல்ல பேன்ட் தான் போடுவேன்... அதும் உனக்குத் தெரியாம கவனமா பார்த்துப்பேன்....” பரமேசன் கூறி தனது மனைவியைப் பார்த்தார். அவர் முகத்தில் தெரிந்த கலக்கமே, அவர் அந்த நாள் நினைவுகளில் இருப்பது போலத் தோன்றியது.
“அங்கிள் அப்போ இருந்தே இந்த மாதிரிக் கொலை நடக்குதா...” ரோன் சந்தேகமாகக் கேட்க
“ஹ்ம்ம்... அது நடந்துட்டு தான் இருக்கு... ஆனா அதையும் மீறி அவங்க கொள்ளையும் அதிகரிச்சிக்கிட்டு தான் இருக்கு... அப்போ பொண்ணுங்கள இந்த அளவுக்குத் துன்பப்படுத்த மாட்டாங்க... இப்போ தான்...” வருத்தத்துடன் கூறிவிட்டு, அங்கிருந்து எழுந்து சென்றார்.
அவர் கூறியவற்றை ரோன் குறிப்பெடுத்துக்கொள்ள, திவாகர் தன் அன்னையிடம் சென்று, அவரின் கையைப் பற்றிக்கொண்டு நின்றான்.
“கவலைப்படாத...” என்று சைகையில் காட்டிவிட்டு, மேல் நோக்கித் தனது கரங்களைக் காட்டிவிட்டு, அவரும் மதிய உணவிற்கு தயார் செய்யக் கிளம்பினார்.
ரோன் அமைதியாக இருக்க, ஆனால் அவன் மனமோ இன்னும் பல கேள்விகளுக்கு விடை தெரியாமல் குழம்பியது.
ஒரு பெருமூச்சுடன் மீண்டும் சென்று, தனது கணினியை இயக்கி, அதில் தனது அறிக்கையைப் பதியத் தொடங்கினான். பின்பு அவன் எடுத்த போட்டோக்களைப் கணினியில் மாற்றி, ஜோதியின் புகைப்படத்தைப் பார்க்கத் தொடங்கினான்.
*******காளிப்பாவை கோவிலினுள் நுழைந்த சாமியாடி, காளியின் முன்பு அமர்ந்தார். காளியை வெறித்த அவரின் பார்வை மாறி, சிறிது நேரத்தில் அவர் கண்களிலிருந்து கண்ணீர் இறங்கத் துவங்கியது. அந்தக் கண்ணீர் அதிகரித்து, பெரும் சத்தமாக மாற, அவர் தன் கை விரல்களை மடக்கி, தன் நெஞ்சில் குத்திக்கொண்டு அழத் தொடங்கினார்.
அங்கு வந்திருந்தவர்கள் சிலர் வேடிக்கைப் பார்க்க, அவரை நெருங்கிச் சமாதானப்படுத்தவும் முடியாமல், நெருங்கப் பயந்து, அனைவரும் வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றனர்.
சிறிது நேரத்தில் அழுது ஓய்ந்தவர், தனது அழுகையை நிறுத்தி, கண்களைத் துடைத்துக்கொண்டு, பூக்களைக் காளியின் மீது வாரி இறைத்தார். சாமியாடியின் அழுகை எதற்கென்று புரியாதவர்கள், சிறிது கலக்கத்துடனும், அச்சத்துடன் அங்கிருந்து சென்றனர். அன்று முழுவதும் சாமியாடி காளியின் முன்பே அமர்ந்திருந்தார்.
குடி முழுவதும் சாமியாடியின் அழுகை பரவலாகப் பேசப்பட்டது. அதை அறிந்த பரமேசன், ஒரு பெருமூச்சொன்றை வெளியிட்டு, “என்ன கெடுதி நடக்கப் போகுதோ.... கடவுளே...” என்று புலம்பினார்.
மறுநாள் காலைப் பரமேசன் வேலைக்குச் செல்ல, திவாகரும் செல்வாவும், வீட்டிற்குப் பின் இருந்த தோட்டத்தில், அவனது தாய்க்கு உதவியாகக் காய்களைப் பறித்துக்கொண்டிருக்க, செல்வாவைத் தேடி ஜோதி வந்து சேர்ந்தாள்.
“செல்வா...” ஜோதி அழைக்க, அவள் குரல் கேட்டு, மேலிருந்த ரோன் எட்டிப்பார்த்தான். அவனைப் பார்த்தவள், தலைகுனிய, “ஜோ... கம் அப்...” ரோன் கூற, புரியாமல் ஜோதி அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
‘மேலே வா...’ என்று அவன் கைகாட்ட, மெதுவாக அவளது கொலுசின் சத்தம் வராமல் ஜோதி படியேறி ரோன் அருகே சென்றாள்.
பாதி பிரித்திருந்த சாக்லேட்டைப் பார்த்த ஜோதி, “ஹை... முட்டாய்...” சிறு குழந்தையென ஆர்ப்பரித்தாள். “உனக்குப் பிடிக்குமா....” ரோன் ஆவலுடன் கேட்க, “ரொம்பப் பிடிக்கும்... அண்ண வாங்கிட்டு வந்துச்சே...” ஆசையுடன் கூறினாள்.
“இந்தா இன்னும் கொஞ்சம் சாப்பிடு....” ரோன் அவள் கை நிறைய சாக்லேட்டைத் திணித்தான். ஆசையுடன் வாங்கிய ஜோதி, அதை வாயில் போட்டுக் குதப்ப, சாக்லேட் கடைவாயில் வழிந்தது. அதைத் துடைத்துக்கொண்டே, மீண்டும் அவன் கொடுத்த ஒரு பிடி சாக்லேட்களையும் அவள் தின்றுகொண்டிருக்க, அதைப் பார்த்த ரோனோ, அவள் அழகில் தன்னை மறந்து நின்றான்.
வழியும் சாக்லேட்டை, தன் கைக்குட்டையால் ரோன் துடைக்க, அதைப் பார்த்து, “ரொம்ப நல்லா இருக்குது... எனக்கு நிறையத் தருவியா...” ஜோதி கேட்க, தன்னைக் கட்டுப்படுத்த முடியாமல், ரோன் அவள் இதழ் நோக்கிக் குனிந்தான்.
அவன் கைகள் முகத்தைத் தாங்கவும், ஜோதி, விழி விரித்து அவன் முகம் பார்க்க, அவன் இதழை நோக்கிக் குனிந்து, இதழோடு இதழ் உரச, விழி விரித்துப் பார்த்துக்கொண்டிருந்தவள், அந்த உணர்வு தாளாமல், தன் கண்களை இறுக மூடிக்கொண்டாள்.
அவளிடம் எதிர்ப்பு இல்லாமல் போக, அவள் இதழில் உரசிய இதழை மென்மையாக அவள் இதழில் ஒற்றி எடுத்தான். அந்த உணர்வும் ஜோதியைக் கொல்லாமல் கொல்ல, அவளின் இதழ் மேலும் துடிக்கத் துவங்கியது. அதைப் பார்த்த ரோன், விழித்துக்கொண்டு தடுமாறிய அவன் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முடியாமல், மேலும் அவளை நெருங்கி, அவள் இதழுக்குள் புதையத் தொடங்கினான்.
உணர்வுகள் எல்லை மீறத் துவங்கி, அவன் கைகள் அவளது மேனியில் அலைபாய்ந்த பின்பு பதிய, அதை உணர்ந்த ஜோதியின் உடல் விரைக்கத் தொடங்கியது. அவன் கைகளில் நெகிழ்ந்திருந்தவள், சட்டென்று அவனை உதறித் தள்ளி, அவன் நெஞ்சினில் பலமாகக் குத்தினாள். சுகமான உணர்வுகளிலிருந்து வெளியே வந்தவன், அவளைப் புரியாமல் பார்க்க, அவனை முறைத்த ஜோதியின் முகம், தீக்கங்குகளில் மூழ்கி வெளி வந்தது போல் இருக்க, ரோன் அதிர்ச்சியில் உறைந்து நின்றான்.
அவளது பார்வை நிலைகுத்த, அவள் உடல் வெட்டி இழுத்தது போல் நடுங்க, அப்படியே மடிந்து அமர்ந்து அழுதவளை நெருங்கவே ரோன் பயந்து நின்றான். அழுதவள், அழுதுகொண்டே மயங்கிச் சரிய, ரோன் அதைப் பார்த்து நடுங்கியேவிட்டான். உடனே ஓடிச்சென்று அவளை மடிதாங்கினான்.
அதிர்ச்சியுடன், பதட்டமும் சேர்ந்துகொள்ள, தன் அருகே இருந்த பாட்டிலில் இருந்த தண்ணீரை எடுத்து அவள் முகத்தினில் தெளித்து, துடைத்துவிட்டான். மெல்ல ஜோதி கண்விழித்துப் பார்க்க, “ஜோ... உனக்கு ஒண்ணும் இல்லையே... ஐ ம் சாரி...” ரோன் தவிப்புடன் மன்னிப்பை வேண்ட, அவன் கண்களில் இருந்த தவிப்பைக் கண்டவள், அங்கிருந்து வேகமாக வெளியேற, ரோன் திகைத்து நின்றான்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் - 9


ஜோதி எழுந்து ஓட, அப்பொழுது தான், தான் செய்த காரியத்தின் விளைவு புரிந்தது. தலையில் கைவைத்து அவன் அமர, அவனது மனமோ பந்தயக் குதிரையின் வேகத்தில் ஓடித் துடித்தது. ‘ஊருக்குள் சென்று அவள் கூறிவிட்டால், ஏதாவது விபரீதம் வருமா?’ அவன் மனம் கேட்க, “வந்தால் வரட்டும்.... நான் அவளைத் திருமணம் செய்ய விரும்புகிறேன்... என்று கூறி, அவளை அழைத்துக்கொண்டு இங்கிருந்து சென்றுவிடலாம்....” அவன் திடமுடன் நினைத்து, அந்த ஊரின் தாக்குதலுக்குத் தயாரானான்.
ஆனாலும் அவன் மனதில் ஜோதி, தீப்பிழம்பாக நின்றது கண்முன் ஆடியது. “என்ன ஆச்சு அவளுக்கு... நல்லா தானே இருந்தா... அப்பறம் ஏன்... ஒருவேளை இயல்பான தற்காப்பு குணமா? நாம கொஞ்சம் அவசரம் தான் பட்டுட்டோம்... அவ இன்னும் மனசளவுல இதற்குத் தயாராக இருக்க மாட்டா.... நாம இன்னும் காதல கூடச் சொல்லலையே... அதுக்குள்ள இப்படி நடந்தது தப்புத் தான்...” யோசனையில் ஆழ்ந்திருக்க, அவன் முன்பு திவாகர் வந்து நின்றான்.
அருகே செல்வாவும் நிற்க, அவர்களைப் பார்த்துப் புன்னகைக்க முடியாமல், ரோன் தலைகவிழ்ந்தான். திவாகரின் பார்வை அவனைச் சுட, அவனும் எதுவோ தெரிந்து தான் வந்திருக்கிறான் என்று புரிந்த ரோன், “டிவா... நான் அவளை ஏமாத்த அப்படிச் செய்யலை.... ஐ லவ் ஹேர் அ லாட்...” தவறிழைத்த குழந்தைபோல, ரோன் வருத்தத்துடன் கூறினான்.
“என்ன செஞ்ச அவள... அவ ஏன் அழுதுட்டே போறா...” திவாகர் குரலில் கடுப்புடன் கேட்டான்.
“இல்ல டிவா... கிஸ்...” திக்கித் திணறிச் சொல்லி, அவசரமாக “நான் அவளைத் தப்பா யூஸ் பண்ணலை டிவா.... நான் என் மனதார லவ் பண்றேன்... அவ தான் என் வைப்...” உறுதியுடன் திவாகரின் கைப்பற்றிக்கொண்டு கூறினான்.
“அதுக்கு.... நீ செய்தது சரி இல்ல ரோன்... இதை நான் உன்கிட்ட எதிர்ப்பார்களை...” திவாகர் கோபமாகக் கூற, இருவரையும் பார்த்துச் செல்வா விழித்துக்கொண்டு இருந்தாள்.
எதுவோ கோபமாகத் திவாகர் பேசுவதும், ரோன் கெஞ்சுவது மட்டுமே அவளுக்குப் புரிந்தது. இருவரையும் மாறி மாறி அவள் பார்த்துக்கொண்டு இருக்க, திவாகர் தலையில் அடித்துக்கொண்டு அமர்ந்தான். அவன் மனதிலோ ஊரில் என்ன நடக்கப் போகிறது என்ற பயமே எஞ்சி இருந்தது.
“சாரி டிவா....” வருத்தத்துடன் மன்னிப்பு வேண்டினான் ரோன்.
“சரி விடு... பார்க்கலாம்...” நம்பிக்கையின்மையுடன் திவாகர் கூறிவிட்டு, ஜோதியைக் காணச் சென்றான்.
ஜோதி வீட்டின் வாயிலில் சிலர் அமர்ந்திருக்க, பரமத்தியும், வீரத்தியனும் நின்று கொண்டிருந்தனர். கொடிவஞ்சி அவர்களுக்குக் குவளையில் நீராகாரம் கொடுக்க, அனைவரும் பருகிக்கொண்டிருந்தனர். குழப்பத்துடன் திவாகர் பார்க்க, அவன் மனதோ ரோனுக்கு ஏதாவது ஆபத்து வந்து விடுமோ என்று அஞ்சியது.
தனது காலை எட்டிப்போட்டு, திவாகர் அவர்கள் வீட்டு வாயிலுக்குச் செல்ல, “வாத்தம்பி... இங்கன உட்காருவியாம்...” வீரத்தியன், திவாகரை தன் அருகில் அமர்த்திக்கொண்டார்.
திவாகர் அமர்ந்து திரு திருவென்று பார்க்க, “சோதிய கட்டிக்கக் கேட்டு வந்திருக்காவ... நல்ல இடமாத்தான் தெரியுது... சாமியாடிகிட்ட குறி கேட்கணும்....” வீரத்தியன் மெதுவாகத் திவாகரிடம் கூறினார்.
அவனின் மனதில் ஒருவித நிம்மதி பரவ, அவர்கள் கிளம்பும்வரை அமைதியாக இருந்த திவாகர், “அய்யா... ஜோதி எங்கய்யா... வீட்டுக்குத் தேடி வந்துச்சு போல... நான் வேலையா இருந்தேன்... அதுதான் என்ன விஷயமா வந்துச்சுன்னு கேட்க வந்தேன்... நீங்க நல்ல செய்தியா சொல்லிட்டீங்க...” திவாகர் நிம்மதியுடன் கூறினான்.
“புள்ள சோதி... இங்கன உன்னப் பார்க்க, உன்ற அண்ண வந்திருகாவ பாரு...” வீரத்தியன் கத்தி அழைக்க, குனிந்த தலை நிமிராமல் வந்து நின்றாள் ஜோதி.
“நீங்கப் பேசிட்டு இருவ... நான் கழனி வரை போயிட்டு வரேன்.... அங்கன இருக்க மரம் வெட்டுதாக...” கூறிவிட்டு வீரத்தியன் அங்கிருந்து நகர்ந்தார். கொடிவஞ்சியும், பரமத்தியும் உள்ளே செல்ல, “ஜோதி...” திவாகர் அழைத்தான்.
ஜோதி நிமிர்ந்துப் பார்க்க, அவள் கண்கள் சிவந்து இருந்தது. “அழுதியா ஜோதி...” திவாகர் கேட்கவும், அவனைப் பார்த்து ‘ஆம்’ என்று தலையசைத்தாள்.
“ரோன நீ தப்பா எடுத்துட்டியா...” திவாகர் தொடங்க, “இல்ல... இல்ல...” அவசரமாக ஜோதி மறுத்தாள்.
“ரோன் உன்னை ஏமாத்திருவான்னு பயமா இருக்குதா...” அடுத்த கேள்வியை அவள் முன்னே வைத்தான்.
“இல்ல அண்ண... அவுக நல்லவுக.... நான் மயங்கி விழுக, பதறிட்டாக....” உண்மையைச் சொல்ல முடியாமல் தவித்தாள் ஜோதி.
“ஜோதி...” அதிர்ச்சியும் ஆச்சரியமும் சேர திவாகர் அழைக்க, ஜோதி அவனைப் பார்க்க, “அதுக்குள்ள உனக்கு அவன் மேல அவ்வளவு நம்பிக்கையா... அப்பறம் எதுக்கு ஜோதி அழுதிருக்க...”
“ஆமாண்ண அவுகள பார்த்த அப்பவே நல்லவரா தான் தோணிச்சு... நான் அழுதது.... நான் செய்த பாவமண்ண.... இங்கன கிடந்து மறுகறேன்.... அவுகள இங்கன சேர்த்துக்குவாகளா.... அண்ண வேற எதுனாச்சும் நடந்துச்சு... என்ன உசிரோடவே பார்க்க முடியாதுண்ண.... அவுகள ஊருக்குப் போகச் சொல்லுண்ண...” பயம் கலந்து வெளிவந்தது ஜோதியின் குரல்.
“ஜோதி.... அதெல்லாம் நான் பார்த்துக்கறேன்... உனக்கு ரோனை பிடிச்சிருக்கா...”
“இங்கன கல்லாணம் பேசராக... இப்ப இதக் கேட்கற....” விரக்தி நிரம்பி வழிந்தது அவள் குரலில்.
“உனக்கு அவன் மேல நம்பிக்கை இல்லையா...”
“இருக்குண்ண... இருந்து என்ன செய்ய.... சாமியாடி குறி சொல்லணுமே.... என்னால... என்னால யாரையும் கல்லாணம் செய்ய முடியாது போலண்ண... என் விதிபோல...” கண்ணீர் அவள் தாவணியை நனைக்க, அவளது அழுகை அதிகரித்தது.
“ஏன் புள்ள அப்படி சொல்ற... நாம நம்பிக்கையா இருப்போம்... எல்லாம் சரியாகும்... நீ விசனப் படாத...” அவளுக்கு ஆறுதலாகத் திவாகர் கூறினாலும், அவன் மனதிலும் அதே கலக்கம் தான் நிரம்பி இருந்தது.
நம்பிக்கையில்லாப் பார்வைப் பார்த்த ஜோதி, “போய்ச் சோலியப் பாருண்ண... எனக்கு நல்லதே நடக்காது...” கூறிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள். அதற்கு மேல் அவளை அழைத்து மீண்டும் பேசினால், சந்தேகம் வரும் என்று தோன்ற, அங்கிருந்து எழுந்து, வீட்டை நோக்கி நடந்தான்.
அவனுக்காகச் செல்வாவும் ரோனும் காத்திருக்க, ரோனின் முகத்தில் தெரிந்த கலக்கத்தைப் பார்த்தவன், அவன் தோளில் அழுத்தி, “ஜோதிய பொண்ணு கேட்டு வந்திருக்காங்க.... அனேகமா சாமியாடி குறி சொல்லுவாரா இருக்கும்... பார்ப்போம்...” அடைத்த தொண்டையை சரி செய்துகொண்டு, திவாகர் ரோனிடம் கூறினான்.
அதிர்ந்த ரோன், “ஜோ என் மேல கோபமா இருக்காளா?... அவ சரின்னு சொல்லிட்டாளா? எனக்கு அவகிட்ட மன்னிப்பு கேட்கணும் டிவா... ப்ளீஸ் எனக்கு அவளைப் பார்க்கணும்....” கெஞ்சினான் ரோன்.
“அழுதுட்டே உள்ள போயிட்டா ரோன்... நான் என்ன பேச... அவளுக்கும் பிடிக்கலை தான்...”
“என்னைப் பிடிக்கலையா டிவா... நான் அப்படி செய்திருக்கக் கூடாது... ஜோவோட நம்பிக்கைய கெடுத்துட்டேன்...” ரோன் புலம்ப
“அவ உன்னை நம்பரா ரோன்... இது வேற... மனசுல எதையோ போட்டுக் குழப்பிக்கிறா... நீ வருத்தப் படாதே... முடிஞ்சா உன்னை ஊருக்குக் கிளம்பச் சொல்ரா...” திவாகர் அவனிடம் கூறினான்.
“நான் ஜோதி இல்லாம போகமாட்டேன்...” திட்டவட்டமாக ரோன் சொல்லிவிட்டு, மச்சிற்குச் சென்று படுக்க, “நீ வா செல்வா... கோவிலுக்குப் போயிட்டு வரலாம்...” திவாகர் செல்வாவை அழைத்துக்கொண்டு கோவிலுக்குச் சென்றான்.
“என்னங்க நடந்துச்சு... அவுக இப்படி கலங்குறாக...”
“ஹ்ம்ம்... ரோன் ஜோதிய விரும்பறான்..” அவன் சொல்லி முடிக்கும்முன்
“என்னது... அவிக சோதியவா... என்ன மாமா இது.... அவுகள எப்படிச் சோதி சேர்த்துக்கும்.... அவிக என்ன சாதி நாம என்ன சாதி... அதை விடுங்க... ஊருக்குத் தெரிஞ்சா அவிக நிலைமை என்ன... எதுனா பண்ணிப்புடுவாங்களே.... இது சரிவராது சொல்லிடுங்க மாமா... எனக்கு வவுறு கலங்குது” படபடவென பயத்தினில் பொரிந்து தள்ளினால் செல்வா.
“அது விடுங்க... மாமாக்கு தாக்கல் போச்சு... வீட்டுல சேர்த்துக்குவாகளா... ஏன் சோதிய பிடிக்குதாம்... அவிக மெத்த படிச்சவக... பெரியாளு இல்ல... சோதி இது தெரிஞ்சா அழுகும் மாமா...” மேலும் தனது கலக்கத்தை வார்த்தையில் தொடர்ந்தாள்.
“ஜோதியும் அவன விரும்புறா...” அடுத்த குண்டை திவாகர் போட, செல்வா வாய்மீது கையை வைத்துக்கொண்டு அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.
அவளைப் பார்த்துவிட்டு, “ஜோதிய கல்யாணத்துக்கு கேட்டு, முத்திரகுடியில இருந்து வந்திருக்காக... அது தான் ரோன் கலங்குறான்...” பாதையில் கவனம் போல, அவளைப் பார்க்காமல் சொல்ல, செல்வா அவனைப் பிடித்து நிறுத்தினாள்.
“இன்னிக்கு வீட்டுல, சோதி எதுக்கு அழுதிட்டு ஒடிச்சு... எதுனா தப்பா... எல்லை மீறிட்டாகளா?” பயத்துடன் செல்வா கேட்டாள்.
அவளின் கண்களில் தெரிந்த மிரட்சியே அவளின் பயத்தின் அளவு புரிய, “என்ன செல்வா... ரோன பார்த்தா உனக்கு அப்படியா புள்ள தோணுது.. அவன் ரொம்ப நல்லவன் செல்வா...”
“எனக்குத் தெ...ரி...யும்.... ஏங்க... நீங்க இங்க உள்ளது தெரிஞ்சிட்டே எப்படி ஒத்துக்கிட்டீக... எனக்கு நடுங்குது... நம்மள இல்ல ஊருல காயுவாங்க” மனதில் குடைந்துகொண்டிருந்ததை கேட்டாள்.
“ரோனுக்கு யாரும் இல்ல செல்வா... அம்மா அப்பா தனியா பிரிஞ்சி வேற கல்யாணம் கட்டிக்கிட்டாங்க.... இவன் தனியா இருந்து படிச்சி வளந்தான். நம்ம ஊர போலச் சொந்தபந்தம் நிறைய இருக்கணும்னு அவனுக்கு ஆச.... நம்ம ஊரையும் அதுக்குத் தான் பார்க்க வந்தான்.
அவன் தனியா இருந்து ரொம்ப கஷ்டப்பட்டிருக்கான்... கல்லாணம்னாலே இவனுக்குப் பிடிக்காது... அப்படி இருக்கறவன், ஜோதிய விரும்பினா, நான் எப்படி மறுப்பு சொல்லுவேன்... அவன் மனச காயப்பட வைக்க வேணாமேன்னு இருந்துட்டேன்... ஜோதியும் இவன ரொம்ப விரும்புறா.... அவளுக்கும் எத்தன கஷ்டம் சொல்லு...
ரோன கட்டிகிட்டா சந்தோஷமா இருப்பா தானே... அது தான் பேசாம இருந்தேன்... எனக்கும் சாமியாடிய நினைச்சா பயமா தான் இருக்கு... ரெண்டு மனச பிரிச்சா... ஒரு உசுரு கட்டாயம் தாளாது... இன்னொன்னு மீண்டும் கூட்டுக்குள்ள போயிடும்...” வருத்தத்துடன், தான் அவர்கள் காதலை ஏற்றுக்கொண்டது பற்றிக் கூறினான்.
செல்வாவின் கண்கள் கலங்க “பாவமுள்ள அண்ண... அங்கனயும் இப்படி வருந்துவாகளா... நாம இருக்கோம்னு சொல்லுங்க... ஜோதி நல்ல புள்ளை தான்... ஊரு என்ன சொல்லுமோ?” செல்வா கவலையுடன் கோவிலுக்குள் நுழைந்தாள்.
“ஆத்தா... சோதிப் புள்ள பாவமுங்க... அது மனசுல ஆச வர வச்சது நீ தானே தாயி... அதுக ஒண்ணுக் கூடணும்...” செல்வா மனமுருகி வேண்டிக்கொண்டாள்.
அதே வேண்டுதலையே திவாகர் வைத்து, அதனுடன், “ரோனுக்கு எந்த ஆபத்தும் வரக் கூடாது... அவங்க சேர நீ தான் காக்கணும் சாமி...” அவனும் வேண்டிக்கொண்டான்.
இருவரும் அமைதியாக அமர்ந்திருக்க, இருவர் மனமும் அதே வேண்டுதலை முன் வைக்க, சாமியாடி திவாகரைப் பார்த்துக்கொண்டே காளியிடம் சென்றார்.
குங்குமம் வாங்கி செல்வா நெற்றியில் வைத்தவன், “என் தங்கைக்கு ஒரு நல்ல வாழ்க்கை, அவ மனசு படியே தா தாயே...” என்று சத்தமாகவே வேண்டிக்கொண்டான். அவனைத் திரும்பிப் பார்த்த சாமியாடி, தீப் பார்வை பார்க்க, அந்தப் பார்வையின் பொருளைப் படிப்பதற்குள், அவர் சாதாரணம் போல, அங்கிருந்த ஒரு மரத்தடியில் அமர்ந்தார்.
அப்பொழுது வீரத்தியன் அங்கு வந்து ஜோதியின் திருமண விஷயத்தைச் சொல்ல, திவாகரைப் பார்த்துக்கொண்டே சாமியாடி வீரத்தியனிடம் தலையசைத்துக் கொண்டிருந்தார்.
திவாகர் மனதில் பயம் பரவ, “இவருக்கு ஏதேனும் தெரிந்திருக்குமோ?” என்று எண்ணம் எழுந்தது.
செல்வாவுடன் அவன் வீட்டிற்குக் கிளம்ப, “ஏனுங்க மாமா... நாங்க எதுனா சொன்னாலே அவுக பேய் முழி முழிப்பாக.... எப்படி அவிக பேசறத இவு புரிஞ்சி... இவ பேசுத அவிக புரிஞ்சி.... கல்லாணம் கட்டின புரவு எப்படி பேசுவாங்க...” செல்வா முக்கியமான கேள்வியைக் கேட்க, அதுவரை யோசனையுடன் வந்த திவாகர் அந்தக் கேள்வியில் சிரிக்கத் தொடங்கினான்.
“எதுக்கு இப்ப சிரிக்குதீக... நான் என்ன இல்லாததையா கேட்டுபுட்டேன்...” செல்வா சோகமாகக் கேட்க, அவள் மண்டையைப் பிடித்து ஆட்டி, “அது எப்படின்னு நான் சொல்லித்தரவா...” கேட்டு, ஆள் இல்லாத இடத்தில் மரத்தின் பின்னால், அவளைத் தள்ளிக் கொண்டு போனான்.
அதுவரை எதுவோ சொல்லப் போகிறான் என்று நினைத்த செல்வா, அவன் உதடு குவித்து அவளை நெருங்கவும், “அய்யே... சீ... போங்க மாமா...” என்று அவனைத் தள்ளிவிட்டு, வீட்டிற்கு ஓடினாள்.
திவாகர் அவளைத் துரத்த, இருவரும் சிரித்துக்கொண்டு வீட்டிற்கு வர, தீவிர யோசனையில் ரோன் அங்கு அமர்ந்திருந்தான்.
“என்னடா... என்னாச்சு...” திவாகர் அவனருகில் சென்று அமர, செல்வா அவனுக்கு வரக்காபி கொண்டு வந்தாள். அவள் கண்கள் ரோனை குறுகுறு என்று பார்க்க, அந்தப் பார்வையில் சிறிது வெட்கத்தையும் கண்டவன், அவளின் பார்வையின் மாறுபாட்டை உணர்ந்து, “செல்வாகிட்ட சொல்லிட்டியா டிவா..” என்று ஈன ஸ்வரத்தில் கேட்டான்.
“ஹ்ம்ம் சொல்லிட்டேன்... ஜோதிக்கு ஒரு துணை வேணும் இல்ல... நீ காபி குடி...” திவாகர் சொல்ல, அதைப் பருகியவன், நிமிர்ந்து, “ஜோதி நிஜமா என்னை நம்பராளா டிவா... அப்போ என் கூட இந்த ஊரை விட்டு வருவாளா?” முடிவு தெரிந்தே கேட்பது போல இருந்தது அவன் கேள்வி.
“அவ வரமாட்டா ரோன்... இந்த ஊர பகைச்சிகிட்டு வர மாட்டா...” திட்டவட்டமாகத் திவாகர் கூறினான்.
“அப்போ நான் மீண்டும் தனியா...” ரோன் வருந்த
“உனக்கு நான் இருக்கேன்... உன் தங்கை செல்வா இருக்கா... அப்பா இருக்காங்க... அம்மா இருக்காங்க...” பட்டியலிட, விரக்திப் புன்னகையுடன், “என்னோட பேபி.... மை ஹனி..” என்று வருத்தத்துடன் ரோன் கேட்டான்.
அதற்குப் பதில் இல்லாத காரணத்தினால் திவாகர் அமைதியாக, அப்பொழுது வீரத்தியன் அங்கு வந்தார்.
“தம்பி அய்யா வந்தாச்சா... முக்கிய தாக்களுங்க...”
“என்ன வீரத்தி... இதோ வந்தேன்... என்ன முக்கிய தாக்கல்...” கேட்டுக்கொண்டே பரமேசன் வந்து சேர்ந்தார்.
“சோதிய கல்லாணம் கட்டிக்க கேட்டு வந்தாக.... சாமியாடிட்ட பேசிட்டேனுங்க.... எப்போ சாமி இறங்கி குறி சொல்லுதோ தெரியலைங்க... இதுவாச்சும் முடியனும்...”
“எல்லாம் நல்லா நடக்கும்.... நம்ம புள்ள என்ன... தங்கமுள்ள...” பரமேசன் பாராட்டுப் பத்திரம் வாசிக்க, திவாகர் செய்வதறியாது முழித்தான்.
ரோன் திவாகரைப் பார்க்க, “ஜோதி கல்யாணம் பத்தி பேசறாங்க...” கூறிவிட்டு, “பையன் நல்லவனுங்களா... நம்ம ஜோதிய சந்தோஷமா பார்த்துக்குவானுங்களா...” திவாகர் கேட்க
“ரொம்ப தங்கம்.... சூது வாது தெரியாதுங்க... என்ன கொஞ்சம் முரடு போல... அதுக்கென்னங்க... கல்லாணம் கட்டினா சரியாகுங்க...”
“முரடா...” செல்வா அஞ்ச, திவாகர் அதிர, “பார்த்துச் செய்யு வீரத்தி... ஜோதி ரொம்ப சாது... பல முற யோசனை செய்” பரமேசன் கூறி, வீரத்தியனை அனுப்பி வைத்தார்.
இவர்களைப் புரியாமல் ரோன் பார்க்க, “சாப்பிட வா ரோன்... ஜோதிக்குப் பார்த்திருக்க பையன பத்தி சொல்லிட்டு போறாங்க...” திவாகர் சொல்ல, “நல்லவனா...” ரோனின் கேள்வி வந்து விழுந்தது.
“முரடாம்... ஆனா நல்லவனாம்...” திவாகரின் குரலில் என்ன இருந்தது என்று விளங்க முடியாமல் ரோன் நின்றான்.
“ஜோ ரொம்ப சாஃப்ட் டிவா...” ரோனின் கவலைக்கு, திவாகர் பதில் கூறாமல், சாப்பிட அமர்ந்தான். ரோன் மனதில் கவலை அரிக்கத் தொடங்கியது.
மறுநாள் காலை விடியும் பொழுதே சாமியாடியின் உடுக்கைச் சத்தம் விண்ணை முட்டியது. அந்தச் சத்தத்தில் விழித்த ரோன், எழுந்து வேடிக்கைப் பார்க்க, அனைவரும் கூட்டம் கூட்டமாக, பதட்டமாகச் செல்வது தெரிந்தது.
ரோன் எழுந்து கீழே வர, “வா ரோன்... சாமியாடி மேல ஆத்தா இறங்கிட்டா போல... ஜோதிக்குக் குறி சொல்லுவாங்க.. போய்ப் பார்க்கலாம்.. “ திவாகர் சொல்ல, ரோன் பயத்துடன் அவனைப் பார்த்தான். அவன் பயம் தெரிந்த திவாகர், அவன் கைப்பிடித்து அழைக்க
“டிவா... என்னை விடு... என்னால ஜோவ அப்படிப் பார்க்க முடியாது... ஷி இஸ் மைன்.....” கலக்கத்துடன் ரோன் கூறினான்.
“நீவா... இதெல்லாம் பார்க்கத் தானே வந்த... வா ரோன்...” விடாப்பிடியாக ரோனை அழைத்துக்கொண்டு திவாகர் கோவிலுக்குச் சென்றான்.
ஜோதியையும் அங்கு வீரத்தியன் அழைத்து வந்தார். ஜோதியின் பார்வை, பயத்துடன் நின்றிருந்த ரோனைத் தழுவி மீண்டது. அவள் கண்கள் கலங்க அங்கு நிற்க, “சோதி...” சாமியாடியின் குரல் ஓங்கி ஒலித்தது.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் - 10


“சோதி...” சாமியாடியின் குரலில், பறவைகள் கூடத் தங்கள் கீச்சுக் குரலை நிறுத்தி அமைதியாக, அங்கு வந்திருந்தவர்களைக் கேட்கவா வேண்டும்? அனைவரும் பயபக்தியுடன் அவரைப் பார்க்க, சோதி ரோனைத் திரும்பிப் பார்த்தாள்.
ரோனின் மனம் அடித்துக்கொள்ள, தான் இதுவரை ஆராயச் சென்ற இடத்தில் கூட இப்படியொரு பதட்டமோ, பயமோ இல்லாமல் தைரியமாக எதிர்கொண்டிருக்க, இந்தக் குறுகிய நாட்களில் தன்னுளே வந்தக் காதல் படுத்தும் பாட்டை எண்ணி தன்னையே நொந்துக்கொண்டான்.
சாமியாடி அவனுக்கு எதிரான விஷயத்தைக் கூறினால்?, அந்தக் கேள்வியே அவனைத் துவளச் செய்ய, நிற்க முடியாமல் அங்கிருந்து நகரப் போனான். திவாகர் அவன் கையை இறுகப் பற்றி இருக்க, அவனால் அங்கிருந்து ஓரடி கூட நகர முடியாமல் போனது.
நரபலியை நேரில் பார்ப்பதை விடக் கொடுமையாக ரோன் உணர, “என்னை விடேன்... எனக்கு இங்க நிக்க முடியலை...” இறைஞ்சும் குரலில் ரோன் திவாகரிடம் கேட்டான்.
“கொஞ்சம் பொறு...” திவாகர் கட்டளையாகச் சொல்ல, ரோன் அதற்கு அடிபணிந்து நின்றான். திவாகருக்கும், செல்வாவிற்கும் அதே போன்ற நிலை தான்.
இத்தனை நாட்கள் இதுபோல நிகழ்வுகளை, சர்வ சாதாரணமாகப் பார்த்த செல்வாவிற்கு, இன்று தன் தோழியின் மனதை குழி தோண்டி புதைக்கும் நிகழ்ச்சியாகவே அது தோன்றியது. அத்துடன் சேர்த்து, திவாகர் முன்தினம் கூறியதும் நினைவில் ஆடியது. ‘ஒரு உயிர் தங்காது...’, ‘அது சோதியா....’ பதட்டம் ஒட்டிக்கொள்ள, தனது சேலை முந்தானையைக் கையில் சுற்றித் திருகத் தொடங்கினாள்.
அனைவரும் ஒவ்வொரு மனநிலையில் இருக்க, ஜோதி ரோனைப் பார்த்துவிட்டு, அவர் முன்பு நின்றாள். “காளையனுக்கு மலையன் புள்ள செவ்வந்திய கட்டிவைங்க... அவனுக்குப் பொஞ்சாதி அவ தேன்....” என்று ஜோதியைப் பிடித்துக்கொண்டே சாமி ஆடினார்.
அவர் இழுத்த இழுப்பிற்கு ஜோதி நகர, அவள் கைகள் பிய்ந்து வரும் போல வலித்தது. அவளின் வலி முகத்தினில் தெரிய, ரோன் அவளைப் பரிதாபமாகப் பார்க்க, திவாகர் சாமியாடி சொல்லியதைக் கேட்டு, நிம்மதி பெருமூச்சு விட்டான்.
“டிவா.... அவர் என்ன சொன்னார்.... ஏன் ஜோவ இப்படி இழுக்கறார்... அவளுக்கு வலிக்குது டிவா...” ரோன் இங்குத் துடிக்க, “ரோன்... அவரு அந்த ஆளுக்கு வேற பொண்ண கல்யாணம் செய்யச் சொல்லிட்டார்....” சந்தோஷத்தை முகத்தில் காட்டாமல் அடக்கிக்கொண்டே ரோனிடம் திவாகர் முணுமுணுக்க, செல்வா சந்தோஷத்தில் திவாகரின் கையைப் பற்றி அழுத்தினாள்.
“நிஜமா... நிஜமாவா டிவா....” ரோன் சந்தோஷ மிகுதியில், அத்தனை நேரம் பட்ட மனக் கஷ்டம், பனியாக மறைய, தனது முகம் நிறைந்த புன்னகையைப் பூசிக்கொண்டு கேட்டான்.
“ரோன்... அமைதியா இரு.... இன்னும் முடியலை...” திவாகர் அவனை அடக்கிவிட்டு, வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினான்.
ஜோதி, என்றும் போல இன்றும் நிம்மதியாய் உணர்ந்தாள். சாமியாடியின் குறி கேட்ட வீரத்தியனும் பஞ்சமத்தியும் அவர் காலில் விழுந்து, “ஆத்தா... நல்ல வாக்கே வரமாட்டிக்குதே.... சோதி புள்ளைக்கு எப்பத்தான் கல்லாணம் நடக்கும்.... ஒரு நல்ல தாக்கல் சொல்லிபுட்டு போத்தாயி...” இருவரும் கதறினர்.
“எதுக்கு டிவா அவங்க அழுவறாங்க...” ரோன் புரியாமல் கேட்க
“ஜோதிக்கு எப்போ கல்யாணம் நடக்கும்ன்னு கேட்கறாங்க... அதுக்கு தான் அழறாங்க...” திவாகர் விளக்கம் சொல்லி, செல்வாவைப் பார்த்தான்.
“ஓ..” ரோன் அமைதியாக, வேறு ஏதாவது சொல்லிவிட போகிறார் என்ற புதிய கவலை பிறந்தது.
“நடக்கும்... நடக்கும்... வெரசா நடக்கும்... ஆனா....” சாமியாடி இழுக்க, “என்ன ஆத்தா.... பரிகார பூச போடணுமா....” அவசரமாக வீரத்தியன் கேட்டார்.
“அதுக்கு முன்ன புயல் போலச் சோதன வரும்..... ராசா வருவான்...” கூறிவிட்டு, ஜோதியைப் பிடித்துத் தள்ள, அவள் தடுமாறி விழ, சாமியாடி மயங்கிக் கீழே சரிந்தார்.
“ஆத்தா... என்ன சோதன ஆத்தா... ஏன் இப்படி சொல்லிப்புட்டீக... என்ன சோதன....” வீரத்தியன் அழ, கீழே விழுந்த ஜோதி எழுந்து நின்றாள்.
ஜோதி கீழே விழவும் ரோன், அவளைப் பிடிக்க நகரப் போக, திவாகர் அவன் கைப்பற்றி நிறுத்தினான்.
“டிவா என்ன.... என்ன.. ஏன் ஜோதிய தள்ளிவிட்டார்... என்னாச்சு ஜோ... என்ன சொன்னார்...” தெரிந்துகொள்ளும் ஆவலில் ரோன், பதட்டத்துடன் கேட்க
“ஜோதிக்கு நிறையச் சோதனைக்கு அப்பறம் கல்யாணம் நடக்குமாம் ரோன்... ராஜா மாதிரி வருவாங்கலாம்...” திவாகர் குழப்பத்துடன் கூறினான். சாமியாடி மயக்கம் தெளிந்து எழுந்து, நேராகக் கோவிலுக்குள் செல்ல, கூட்டம் அங்கிருந்து கலையத் துவங்கியது.
ஜோதியைப் பெண் கேட்டு வந்த காளையனின் பார்வை ஜோதியை மொய்க்க, அவனுக்குப் பேசப்பட்ட செவ்வந்தியோ நாணிக் கோணி, நாணத்தில் நெளிந்தாள். அதைக் காணாத ஜோதி, பஞ்சமத்தியின் கைப் பற்றி எழுப்பி, “என்ன ஆத்தா.... ரோதனை நமக்கு என்ன புதுசா...” விரக்தியுடன் கூறிவிட்டு, அங்கிருந்து நகர்ந்தாள்.
ரோன் அதே இடத்திலேயே நிற்க, அவன் கண்களில் தெரிந்த பயத்தைப் பார்த்தவள், “உனக்கு இதும் புதுசுல்ல... குடிய விட்டுப் போயிடு.... இதுவே எனக்குப் பழகிப் போச்சு...” சொல்லிவிட்டு, நேராக வீட்டிற்கு ஓடினாள்.
ரோன் திவாகரைப் பார்க்க, அவனது கண்களோ கலங்கி இருந்தது. “அவளுக்கு இது பழகிப் போச்சாம்... உன்னை இங்க இருந்து போகச் சொல்றா....” சொல்லிவிட்டு, ரோனை அழைத்துக்கொண்டு வீட்டிற்குச் சென்றான்.
ரோனின் மனதில் ஆயிரம் குழப்பங்கள்... ஜோதி தன் மீது உள்ள கோபத்தில் தான் இவ்வாறு சொல்வதாகவே எண்ணினான். ஒருபுறம் அவளது திருமணம் தள்ளிப் போனது நிம்மதியாக இருந்தாலும், அவளுக்கு என்ன ஆபத்து வரும்... மனதில் அதுவே பலமாகக் குழப்பியது.
திவாகரும் அவனைப் பார்த்துக்கொண்டே, அவனைத் தனியே விடாமல் இருந்தான். தனியே விட்டுச் செல்ல, அவன் மனதின் நெருடல் அனுமதிக்கவில்லை. அவனின் முகத்தில் தெரிந்த அனைத்து உணர்வுகளையும் பார்த்துக்கொண்டிருந்தவன், ரோனின் வலியைப் போக்கும் வழியை யோசிக்கத் தொடங்கினான்.
நூற்றில் ஒரு பங்காக ஜோதி அவனுடன் ஊரை விட்டேச் செல்ல ஒத்துக்கொண்டால்?, அதுவே அவனுக்குச் சரியென்று பட்டது. ஜோதியிடம் பேசிவிடுவது என்ற முடிவுடன் நகரப் போனவனின் கண்களில் பட்டது, கண்ணாடியில் தெரிந்த ரோனின் உருவம்.
ரொனால்டோ ஆறடிக்கும் அதிகமான உயரம்.... நல்ல நிறம், ஒல்லியும் அல்லாமல், குண்டும் அல்லாத நடுத்தர தேகம்.... கருப்பு நிற கேசம், மீசை மழிக்கப்பட்ட மொழு மொழு முகம்..... சிறிய கண்களாக இருந்தாலும் கூர் கண்கள்... அணிந்திருந்த உடை சாதாரணமாக இருந்தாலும் அதில் உள்ள நேர்த்தி.... அழகனாகவே இருந்தான்.
திவாகர் அவன் முகத்தைக் கூர்ந்து பார்க்க, “டிவா.... நீ என்னைப் பார்த்ததே இல்லையா...” ரோன் அவனிடம் கேட்க, திவாகர் அவனை அருகே இழுத்து, “செல்வா... மை எடுத்துட்டு வா... வெரசா...” அவளை விரட்ட, செல்வா, எதற்கென்று புரியாவிடினும், ஓடிச்சென்று எடுத்து வந்தாள்.
ரோனை கண்ணாடி முன்பு நிற்க வைத்தவன், அவனுக்கு மீசை வரைய, ரோன் மிக அழகாக இருந்தான். அவனைப் பார்த்த செல்வா, “அண்ண.... அப்படியே ராசா போல இருக்கீக...” என்று வாய் பிளக்க, “எஸ்...” திவாகர் குதித்தான்.
செல்வாவைப் பார்த்த ரோன் முழிக்க, திவாகரின் சந்தோசம் புரியாத செல்வாவும் முழிக்க, திவாகர் குதித்து ஓயும் வரை, ரோன் தன் பிம்பத்தைக் கண்ணாடியில் பார்த்தான். இப்படியே மீசையுடன் சென்றால், கண்டிப்பாக அவனை அந்த நாட்டவன் என்று நம்புவது கடினமே...
“ரோன்..... புரியலையா... எனக்கு என்னவோ சாமியாடி சொன்னது உன்னைத் தானோன்னு தோணுது... தொண்ணூறு சதவிகிதம் எனக்கு நம்பிக்கையா இருக்கு... எப்படி இருந்தாலும் உன்னைக் கல்யாணம் செய்துக்க ஜோதி நிறைய எதிர்ப்பச் சந்திக்கணும்... அது தான் அவர் சொல்லி இருப்பாரோ... நீ இப்போ செல்வா சொன்னது போல ராஜா மாதிரி இருக்க...” திவாகர் குதூகலத்துடன் சொல்லிக்கொண்டிருக்க, ரோன் அவனை முறைத்தான்.
“இதுக்கும் முன்ன நான் நல்லா இல்லையா...” ரோன் முறையலுடன் கேட்க
“இருந்த தான்... ஆனா இப்போ இன்னும் ரொம்ப அழகா இருக்க... பாரு செல்வா ராஜா மாதிரி இருக்கன்னு சொல்றா... சோ...” திவாகர் சந்தோஷத்துடன் இழுத்தான்.
“ஹே... டிவா... கொஞ்சம் பொறு...” ரோன் இப்பொழுது திவாகரை நிறுத்த, “என்ன ரோன்... என்னாச்சு...” திவாகர் கேட்டான்.
“டிவா.... ஆனா அவர் சொன்னது வருவான்னு தானே... நான் தான் ஏற்கனவே வந்துட்டேனே...” ரோன் கண்ணாடியில் தனது உருவத்தைப் பார்த்துக் கொண்டே தனது சந்தேகத்தைக் கேட்க, திவாகர், “எஸ்... ஆனா நீயும் புது ஆளு தானே...” என்று குழப்பத்துடன் இழுத்தான்.
ரோன் மேலும் குழப்பிக்கொள்ளாமல், “நான் கொஞ்சம் வெளிய சுத்திட்டு வரேன் டிவா...” என்று கூறிவிட்டு, தனது கேமராவுடன் வெளியில் கிளம்ப, திவாகர் செல்வாவை அணைத்தான்.
“செல்வா... நான் இப்போ ரொம்ப சந்தோஷமா இருக்கேன்.... ஆனா இவன் ஏன் இப்படி குழப்பறான்...” திவாகர் அவளிடம் கேட்டுக்கொண்டே அவளை நெருங்கினான். “மாமா... வேணாம்...” செல்வா பின்னால் நகர, அவளை நகர விடாமல் செய்தவன், தன்னுள் சிறையெடுத்து, அவளுள் தஞ்சம் புகுந்தான்.
ரோன் கலவையான உணர்வுகளுடன், ஓடைக்கருகில் அமர்ந்திருக்க, நிமிடங்கள் பல கடந்து மணித்துளிகளாக மாறியது. அவனுக்குச் சற்றுத் தள்ளி, ஒரு பாறைக்குப் பின் ஜோதி அமர்ந்து அழுதுகொண்டிருந்தாள். “எனக்கு ஏன் இப்படி ஆகிடுச்சு... எனக்கு விருப்பமே கூடாதா... எனக்கு ஆசையே இருக்கக் கூடாதா...” மனதினுள் மறுகிக்கொண்டிருக்க, ரோன் விரக்தியுடன் ஒரு கல்லை நீரில் விட்டெறிந்தான். அது நீரில் விழுந்து, ஜோதியின் மீது தண்ணீரைத் தெளிக்க, “யாருலே அது...” கோபத்துடன் ஜோதி எழுந்து நின்றாள்.
அவளின் குரல் கேட்டு ரோன் திரும்பிப் பார்க்க, அவனைப் பார்த்தவள், அவன் முகத்தில் வரைந்திருந்த மீசையைப் பார்த்து, தனது கவலைகள் மறந்து சிரிக்கத் தொடங்கினாள். அவள் சிரிப்பதை ஆசையுடன் பார்த்த ரோன், “ஜோ...” என்று கை நீட்டினான்.
“என்ன இது மீச... கருப்ப சாமி மாதிரி...” மீசை போன்று சைகை செய்து ஜோதி கேட்க, தனது உதட்டின் மீது கை வைத்துப் பார்த்தவன், சிரித்துக்கொண்டே, அதைத் துடைக்கத் தொடங்கினான்.
அவன் கையை விலக்கிவிட்டு, தனது முந்தானையால் ஜோதி துடைத்துவிட, “டிவா... இப்படிப் போட்டான்...” சந்தோஷத்துடன் ரோன் கூறினான்.
“அவுக போட்டா... நீ காட்டிட்டு இருந்தியாக்கும்... சரி.... வெளிய வரும்போது முகத்த கழுவலாம்ல...” உரிமையுடன் ரோன் முகத்தைப் பற்றித் துடைத்துக்கொண்டே கேட்க, ரோன் புரியாமல் அவள் முகம் பார்த்தான்.
முகம் கழுவுவது போலச் சைகை செய்து, ஜோதி தலையில் அடித்துக்கொள்ள, “வேண்ணாம்.... நோ...” முதல் முறை தமிழிலும் ஆங்கிலத்திலும் கூறினான்.
அவனின் தமிழ் வார்த்தையைக் கேட்ட ஜோதி, விழி விரித்து அவனைப் பார்க்க, “உனக்காகக் கத்துக்கறேன்...” ஆங்கிலத்தில் சொல்லி, அவளைச் சுட்டிக் காட்ட, ஜோதியின் கண்களில் கண்ணீர் சரம் கோர்த்தது.
“நான் உனக்கு என்னைய்யா செய்தேன்.... என் மேல இத்தன ஆச வச்சிருக்க..... நான் அதுக்கு லாயக்கே இல்லையே... நான் படிக்காத கழுத... நீ மெத்த படிச்சவக.... இதெல்லாம் சரிப்படுமா...” ஜோதி அழ, அவளை அணைத்தவன், அவள் தலையை ஆறுதலாகத் தடவிக்கொடுத்தான்.
“நான் ரொனால்ட்டோ எட்வர்ட்... எனக்குன்னு யாரும் இல்ல... நீயும் என்னை விரும்பற தானே... என் லைப் உன்கூட வாழணும்னு ஆசையா இருக்கு.... என் கூட வருவியா....” அவளை அணைத்தபடி, தனது காதலைக் கூறினான். எதுவும் புரியாமல் ஜோதி அவன் முகத்தைப் பார்க்க, “நீ டிவா வீட்டுக்குவா...” ரோன் கூறி, சைகை செய்தான்.
“வாரேன்... ஆனா அங்கன அண்ணன பாத்தா எனக்கு வெட்கமா இருக்கு...” அவன் தோளில் முகம் புதைத்துக் கொண்டே அவள் கூறினாள். ரோன் அவள் கன்னத்தைத் தட்டி, முன்னே போகுமாறு சைகை செய்ய, ஜோதி அவனைப் பார்த்துவிட்டு, முன்னே நடந்தாள்.
அவனை விட்டுத் தள்ளி நடக்கவும், மீண்டும் அவளது மனக் குழப்பங்கள் நியாபகம் வர, தான் அழுதுக்கொண்டிருந்ததும் நினைவு வர, ஜோதி, தன்னையே திட்டிக்கொண்டாள். “கூரு கெட்டவதேன் நான்... அழுத காரணத்த மறந்துபுட்டேனே..” என்று யோசிக்க, அவள் பின்னால் ரோன் வருவது தெரிந்தது.
நன்கு முகம் கழுவி, எதிர்ப்பட்டவரிடம் ஒரு பளிச் புன்னகையைச் சிந்திக்கொண்டு வந்தவனைப் பார்த்த ஜோதியின் மனதில், அவன் மேலுள்ள காதல் அதிகரித்தது.
இவர்கள் குடியைப் பார்த்துச் சிறிதும் முகம் சுளிக்காமல், முகத்தில் அருவெறுப்பையும் காட்டாமல், அந்த இடத்திற்குத் தகுந்தாற்போல் தன்னை மாற்றிக்கொண்டு, அனைவருடனும் இயல்பாகப் பழகும் அவன் குணம், ஜோதியின் மனதைக் கவர்ந்தது. தனது செல்வ நிலையையும், படிப்பையும் என்றுமே அவன் பெரிதாகப் பறை சாற்றி மற்றவர்களிடமிருந்து ஒதுங்காதது... மேலும் அவன்மேல் காதல் வரக் காரணமாக அமைந்த காரணிகள்.
அவன் குண நலன்களை அசைபோட்டுக்கொண்டு வந்தவள், இன்னொன்றும் அவள் மூளையில் உதிக்க, ரோனைத் திரும்பிப் பார்த்தாள். தனது அனைத்துத் துன்பங்களும், அவன் அருகில் ஒன்றுமே இல்லாமல், பனித்துளியாய் கரைவது போல இருந்தது. மனதில் பாரத்தோடு அழுதவள், அவனைப் பார்த்த மறுநொடியே அவனிடம் தன் மனம் தஞ்சம் புகுவது நன்கு விளங்கியது.
‘கல்லாணம் கட்டிக்கிட்டு ஓடிப்போயிரலாமா?’ ஓரிரு வினாடிகள் உதித்த கேள்வியில் திடுக்கிட்டு நின்றாள் ஜோதி.... “என்ன நனப்பு இது... அவுகளுக்கு நல்ல பொஞ்சாதி வரும்... நான் வேணாம்... ஆடு மேய்க்கிற கழுத...” என்று தன்னையே அவள் தரம் தாழ்த்திக்கொண்டாலும், அவளது கால்கள் திவாகரின் வீட்டில் சென்று நின்றது.
செல்வா அமர்ந்து, காய் வெட்டிக்கொண்டிருக்க, ஜோதி உள்ளே நுழைந்து அவள் அருகில் அமர்ந்து, அவளுக்குக் காய் வெட்ட உதவினாள். அவள் பின்னோடு வந்த ரோன், “டிவா...” என்று அழைக்க, திவாகர், கையில் முயலுடன் வந்தான்.
“முயல் கறியா...” ஜோதி கேட்க, அவளுக்கு ஆம் என்று தலையசைத்து, “என்ன ரோன்.. என்ன விஷயம்...” திவாகர் கேட்டுக்கொண்டே அவன் அருகில் அமர்ந்தான். வைஜயந்தி முயலை எடுத்துக்கொண்டு பின்புறம் செல்ல, ரோன் ஜோதியிடம் ஓடைக்கரையில் பேசியதைக் கூற, திவாகர் ஜோதியைத் திரும்பிப் பார்த்துச் சிரித்தான்.
“எதுக்குண்ண இளிக்கிற...”
“இல்ல இவரு உன்னைக் கல்யாணம் கட்டி, தன்னோட வாழ்க்கைய உன்னோட வாழ விரும்புறாங்களாம். உனக்குச் சம்மதமான்னு கேட்குறார்... என்ன ஜோதி... உனக்கு இஷ்டம் தானே...” திவாகர் சந்தோஷத்துடன் சொல்ல, ஜோதி வெட்கத்துடன் தலைகுனிந்தாள்.
“என்னைப் பத்தி சொல்லு டிவா...” ரோன் தன்னைப் பற்றிய எந்த ரகசியமும் அவளுக்குத் தெரியாமல் இருக்கக் கூடாது என்று கூற, திவாகர், அவனது படிப்பு, தாய் தந்தையர், என்று கூறிக்கொண்டே வந்து, “என் நண்பன் ரொம்ப நல்லவன் ஜோதி... உனக்கு எங்கத் தேடினாலும் அமையாது...” நெகிழ்ச்சியுடன் கூறி, தன் மனையாளைப் பார்த்தான்.
ஜோதியின் பார்வை ரோனிடம் இருக்க, “உனக்குத் தாயா இருக்க எனக்கு ஆசைதேன்... என்னால முடியாதே... நான் விளங்காத மூதி...” என்று மனதினில் அவனை எண்ணி ஏங்கினாள். அவனை அணைத்து அவன் கைகளுக்குள் சரண் புகுந்து, அவன் ஏக்கங்களை எல்லாம் தீர்த்து, அவன் துன்பம் துடைக்க, அவள் மனம் பரபரத்தது.
ரோன் அவள் சம்மதம் சொல்லும் வார்த்தைக்காகக் காத்திருக்க, தன் மனதின் காதல், நிறைவேறாத ஆசைகள் பாரங்களாக மாறி, அவள் மனதை அழுத்த, அவனை ஏற்கவும் முடியாமல், விலக்கவும் முடியாமல் தடுமாறினாள். ‘இது சரியாவருமா.. என் வாழ்க்க மாறுமா..” ஜோதி குழம்பிக்கொண்டிருக்க, ரோனின் கண்களில் தெரிந்த ஏக்கம் அவளைச் சுட்டது.
“அண்ண... பூசை முடியட்டும்... அவுகளுக்கு முடிவு சொல்லுதேன்... இந்தக் குடி... இது சனங்க விட்டு எனக்கு வேற தெரியாதுண்ணே... எனக்குப் பயமா இருக்கு...” ஜோதி, தனது மனதில் உள்ள பயத்தை சொல்ல, ரோன் அவள் முகத்தை ஆராய்ந்துவிட்டு, திவாகரைப் பார்த்தான்.
திவாகர் ஜோதி கூறியதைக் கூற, ரோனின் கூர் கண்கள் ஜோதியைத் துளைத்தது. அந்தத் துளைப்பில் ஜோதி தவிக்க, ரோன் தனது பார்வையைத் திருப்பிக்கொண்டு, தனது கேமராவுடன் வெளியில் நடந்தான். அவனது கோப முகத்தைப் பார்த்த ஜோதி சற்று மிரண்டு தான் போனாள்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top