• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அழகான ராட்சசியே-17

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Padmini Selvaraj

மண்டலாதிபதி
Author
Joined
Mar 31, 2021
Messages
220
Reaction score
1,159
Location
Bangalore
அத்தியாயம்-17

ன்று சனிக்கிழமை...

அதிகாலையிலயே எழுந்தவள் உற்சாகத்துடன் தன் ஜாகிங் ஐ முடித்து விட்டு வீடு திரும்பினாள் சந்தியா...

மகிழன் மீதான நேற்றைய கோபம் எல்லாம் நேற்று இரவோடு மறைந்திருக்க, இன்றைய நாளை உற்சாகமாக ஆரம்பித்தாள் சந்தியா...

சந்தியா எப்பொழுதுமே அப்படித்தான்..

தினமும் அன்றைய நல்ல விசயங்களை மனதில் இருத்தி கொண்டும் கெட்ட, மறக்க வேண்டிய விசயங்களை அந்த நிமிடம் மட்டும் அலசி ஆராய்ந்து விட்டு அப்புறம் அதை தூக்கி குப்பை தொட்டியில் போடுவதை போல மனதில் இருந்து அழித்து விடுவாள்..

மனம் என்பது கெட்டவைகளை நிரப்பும் குப்பை தொட்டியாக இருக்க கூடாது என்பதை பின்பற்றி அதையே மற்றவர்களுக்கு அறிவுறுத்துவாள்..

அதோடு எப்பவுமே தன்னை மகிழ்ச்சியாகவும் சுற்றி இருப்பவர்களையும் மகிழ்ச்சியாக வைத்து கொள்ள வேண்டும் என்ற கொள்கை உடையவள்.. அதனாலயே அவளை சுற்றி இருப்பவர்கள் எப்பொழுதும் சிரித்து கொண்டே இருப்பர்..

மற்ற நாட்களில் காலையில் நீண்ட நேரம் இழுத்து போர்த்தி உறங்குபவள் வார விடுமுறையில் மட்டும் படு உற்சாகமாக இருப்பாள்..

அதி காலையில் எழுந்து காலை ஓட்டத்தை ஓடுவதில் இருந்தும் சில உடற்பயிற்சிகளை செய்வதும் பின் தன் அன்னையிடம் சிறிது நேரம் வம்பிழுத்த பின் 10 மணி அளவில் கிளம்பி வெளியில் சென்று விடுவாள்..

சனிக்கிழமை முழுவதுமே அவள் அடாப்ட் பண்ணி இருக்கும் அந்த குட்டி பெண் செல்வி உடன் நேரத்தை செலவிடுவாள்.. அவளுமே இவள் வருகைக்காக காத்திருப்பாள்..

ஞாயிற்றுகிழமை ஏதாவது சமூக சேவை என்று ஓடி விடுவாள்..வேலையே இல்லை என்றாலும் எதையாவது இழுத்து கொண்டு தனக்கான வேலையை உருவாக்கி கொண்டு தன்னை பிசியாக வைத்து கொள்வாள்..

அவள் பெற்றோர்களும் ஆரம்பத்தில் சொல்லி பார்த்தனர்..

அதுவும் அவள் அன்னையை பொருத்தவரை இந்த இரண்டு நாட்களும் அவள் ஊரை சுற்ற சென்று விடுகிறாள் என சொல்லி திட்டுவார் அவள் அன்னை ருக்மணி...

அவள் தந்தைக்கு அவள் மீது நம்பிக்கையும் அளவு கடந்த பாசமும் இருப்பதால் அவர் தன் மனைவி தன் செல்ல மகளை திட்டும் பொழுதெல்லாம் அவர் வாயை அடைத்து விடுவார்..

சந்தியாவும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் தன் மனம் விரும்பியதை தயங்காமல் செயல்படுத்துவாள்..

இன்று காலை வழக்கம் போல தன் காலை ஓட்டத்தை முடித்து வீடு திரும்பியவள் வரவேற்பறையில் அமர்ந்து தங்களுக்குள் வாக்குவாதம் பண்ணி கொண்டிருந்த அவள் பெற்றோர்களை கண்டதும் நேராக அங்கு சென்றாள்..

“ஹாய் மணிவேல்.. ஹாய் ருக்கு... குட்மார்னிங்..” என்றவாறு சிரித்து கொண்டே அங்கு சென்றவள் தன் தந்தையின் அருகில் நெருங்கி அமர்ந்து அவர் கழுத்தில் கையை போட்டு கொண்டாள் சந்தியா..

“ஏய் பாப்பா.. எத்தனை தரம் சொல்லி இருக்கேன்.. என்னை மணிவேல் னு கூப்பிடாதனு..

எங்க அப்பனும் ஆத்தாவும் எவ்வளவு அழகா ஆசையா வேல்மணி னு பேர் வச்சிருக்காங்க.. அதை இப்படி கொலை பண்ணறயே.. “ என்று முறைத்தார் சந்தியாவின் தந்தை வேல்மணி...

வேல்மணி- ஈரோடு அருகில் இருக்கும் கோபி செட்டி பாளையத்தின் அருகில் இருக்கும் ஒரு சின்ன கிராமத்தை சேர்ந்தவர்..அவர் பெற்றோர்களுக்கு விவசாயமே பிரதான தொழில். அதுவும் பல ஏக்கர் நிலத்தில் மஞ்சள் பயிரிடுவர்...

ஏனோ சிறு வயதில் இருந்தே அவருக்கு விவசாயத்தில் நாட்டம் இல்லை.. எப்படியாவது அதில் இருந்து தப்பித்து பட்டணத்துக்கு வந்து விட வேண்டும் என்ற எண்ணத்தில் நன்றாக படித்து சதர்ன் ரயில்வேயில் ஒரு வேலையையும் தேடி கொண்டார்..

அதை சாக்காக வைத்து சென்னைக்கு குடியேறிவிட்டார்..

அவர் பெற்றோர்களுக்கு தங்கள் தொழிலை பார்த்து கொள்ளாமல் மகன் பட்டணம் போகவும் வருத்தமானது..

ஆனாலும் தன் மகனின் விருப்பத்துக்கு குறுக்க நிற்கவில்லை அவர்கள்.. வேல்மணி விரும்பியபடியே சென்னைக்கு வேலைக்கு அனுப்பி வைத்தனர்...

ஆனால் மகன் பட்டணத்துலயே யாரையாவது பார்த்து கட்டிக்க போறான் என்று எண்ணி அவசரமாக வேல்மணியின் தந்தையின் தங்கை மகள் ருக்மணியை கட்டாய படுத்தி கல்யாணம் பண்ணி வைத்தனர்...

தனக்கு 25 வயதுதான் ஆகிறது. இன்னும் கொஞ்சம் நாள் போகட்டும் என்று வேல்மணி மறுக்க, தங்கள் மகன் மனதில் யாரையோ நினைத்து விட்டதால் தான் திருமணத்தை மறுக்கிறான் என்று எண்ணி அவரை கட்டாயபடுத்தி அவர் அன்னை அழுது புரண்டு அவர் திருமணத்தை நடத்தி வைத்தனர்..

அவர் அத்தை மகள் ருக்மணியும் பக்கத்து கிராமத்தை சேர்ந்தவர் தான்.. அவருக்குமே அப்பொழுது 19 வயதுதான் முடிந்திருந்தது..

கிராமத்தை விட்டு வெளியில் சென்றிராதவருக்கு திடீர் என்று திருமணத்தை முடித்து பட்டணத்தில் குடி வைக்க, கண்ணை கட்டி காட்டில் விட்டதை போல இருந்தது அவருக்கு...

நல்ல வேளையாக சண்முகம் மற்றும் சாரதா குடும்பத்தினர் வேல்மணி வீட்டிற்கு அடுத்த வீடு என்பதாலும் அவர்களும் கோயம்புத்தூர் பக்கம் என்று தெரிய வர, மெல்ல சாரதாவுக்கும் ருக்மணிக்கும் நட்பு ஆரம்பமானது..

சாரதா மற்றும் சண்முகம் ஒரு வருடம் முன்னதாகவே அந்த பகுதியில் குடியேறி இருக்க, சாரதாவுக்கு ஓரளவுக்கு அந்த இடம் பழகி இருந்தது.. அதனால் ருக்மணிக்கு அவர் எல்லாம் சொல்லி கொடுத்தார்..

அந்த சென்னையில் யாரிடம் எப்படி பழகவேண்டும், எப்படி விழிப்புடன் இருக்க வேண்டும் யாரையும் எளிதாக நம்பி விடக் கூடாது என்று அறிவுரைகள வழங்கி ருக்மணியின் பயத்தை போக்கினார்...

தனியார் வங்கியில் வேலை பார்த்தாலும் விடுமுறை நாட்களில் ருக்மணியை பார்க்க வந்து விடுவார் சாரதா..ருக்மணி பன்னிரண்டாம் வகுப்பு மட்டுமே படித்து இருந்ததால் வீட்டோடு இருந்தார்..

குறுகிய காலத்திலயே இரு குடும்பமும் நட்பால் இணைந்தனர்.. எங்கு சென்றாலும் இரு குடும்பமே சேர்ந்து செல்வர்..

சில வருடங்கள் ஓடிச் சென்றன..

இந்த நிலையில்தான் இரு தம்பதியருக்குமே திருமணம் ஆகி நீண்ட நாட்களாக குழந்தை இல்லாமல் இருக்க, ருக்மணியின் மாமியார் ருக்மணியை கட்டாயபடுத்தி கோவில் கோவிலாக ஏற வைத்தார்...

அவருடன் சேர்ந்து சாரதாவையும் அழைத்து சென்றார்.. அந்த வேலனின் அறுபடை வீட்டிற்கும் இரு தம்பதியரையும் அழைத்து சென்று மனம் உருகி வேண்டி கொள்ள, அடுத்த மாதமே சாரதா உண்டாகி இருந்தார்..

அதை கண்டு அவரை விட ருக்மணிதான் துள்ளி குதித்தார்...

சாரதாவை பக்கத்தில் இருந்து பார்த்து கொண்டார்...முதல் மூன்று மாதங்கள் சாரதா மசக்கை உபாதையில் அவதி பட, ருக்மணி தான் ஒரு தங்கையாக நின்று அவரை கவனித்து கொண்டார்..

சண்முகமும் சாரதாவும் அதை கண்டு நெகிழ்ந்து போயினர்..

அவர்கள் வீட்டு பெரியவர்கள் யாரும் உதவ முடியாத சூழ்நிலையில் இருக்க, ருக்மணியின் அந்த உதவி பெரும் துணையாக இருந்தது அவர்கள் இருவருக்கும்..

ருக்மணி மற்றும் வேல்மணிக்கு தங்கள் நன்றியை தெரிவித்தனர்...அவர்களும் சிரித்து கொண்டேநன்றியெல்லாம் எதற்கு என்று கடிந்து கொண்டனர்..

எந்த ஒரு பிரதிபலனும் எதிர்பாராமல் ருக்மணி சாராதா க்கு உதவ அடுத்த மூன்றாவது மாதத்தில் ருக்மணியும் கருவுற்றார்....

இப்பொழுது இரண்டு பேருமே நெருங்கிய தோழிகளாகி விட இருவருமே ஒருவருக்கொருவர் உதவி கொண்டனர்..

பத்தாவது மாதத்தில் சாரதாவுக்கு மதுவந்தினி பிறந்திருக்க, அடுத்த மூன்றாவது மாதத்தில் ருக்மணிக்கு சந்தியா பிறந்தாள்...

சாரதா மற்றும் ருக்மணி இருவரையும் போல அவர்கள் மகள்களும் எப்பவும் ஒட்டி கொண்டே இருப்பர்.. மதுவும் சந்தியாவும் பிறந்ததில் இருந்தே இரட்டை பிள்ளைகள் போல ஒன்றாகவே சுற்றுவர்..

ஆனால் குணம் மட்டும் வேறு வேறாக போய் விட்டது..

சிறுவயதில் இருந்தே மதுவந்தினி ரொம்ப அமைதியாக இருக்க, அவளுக்கும் சேர்த்து வச்சு சந்தியா குறும்பு செய்தாள்...

சாரதா மற்றும் ருக்மணி எப்பவும் ஒருவர் வீட்டுக்கு மற்றவர் தன் மகளை தூக்கி கொண்டு வந்து அவர்களை ஒன்றாக விளையாட விட்டுட்டு கதை அடிக்க ஆரம்பிச்சுடுவாங்க..

சந்தியா விளையாட்டில் கவனம் செலுத்த, மது அவர்கள் பேசுவதை ஆவலுடன் பார்த்து பார்த்து சீக்கிரம் பேச ஆரம்பித்து விட்டாள்.... ஆனால் சந்தியா விளையாட்டில் மும்முரமாகி விட, கிட்டதட்ட மூனு வருசம் வரைக்கும் வாயே பேசலை...

அதை கண்ட சந்தியாவின் குடும்பத்தினர் அவர் பொண்ணு வாய் பேச மாட்டேங்கிறா என்று வருந்தி வேண்டாத கோவில் இல்லை...

வேல்மணியின் அன்னை மீண்டும் தன் மகன், மருமகள், பேத்தி என மூவரையும் கோவில் கோவிலாக ஏற வைத்தார்...

சமையபுரம் அழைத்து சென்று வாய் மாதிரி பொம்மை எல்லாம் கூட வாங்கி உண்டியல் ல போட்டு தன் பேத்திக்கு சீக்கிரம் பேச வந்திடணும் என மனம் உருகி வேண்டி கொண்டார்..

ருக்மணியும் அவள் விளையாட்டு பொருட்களை எல்லாம் பிடுங்கி வைத்து கொண்டு மதுவுடனே முழு நேரம் இருக்க விட்டு அவளுடன் தொடர்ந்து ஏதாவது பேசி கொண்டிருப்பார்...

மது தன் அன்னையிடம் நன்றாக சிரித்து பேசுவதை கண்ட சந்தியாவும் கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பித்தாள்..

அதை கண்ட அனைவரும் மகிழ்ந்து போயினர்...

அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பித்த சந்தியா அதற்கு பிறகு மதுவை பேச விடாமல் அவளே அதிகம் பேச, மது சந்தியா பேச்சை கேட்டு அமைதி ஆகி விட்டாள்...

அது அப்படியே வளர்ந்து எங்க போனாலும் மதுவுக்கும் சேர்த்து சந்தியா பேசிடவும் அதோடு இயல்பிலயே மது அமைதியான குணம் கொண்டவள் என்பதால் அது அப்படியே வளர்ந்து கொஞ்சம் பயந்த சுபாவமாகவும் மாறி விட்டது...

இரண்டு வருடம் பேசாமல் இருந்த சந்தியா குட்டி பின் ஏன் பேச ஆரம்பித்தாள் என்று ஃபீல் பண்ணும் வகையில் சிறு வயதிலயே நன்றாக வாயடிக்க ஆரம்பித்தாள் சந்தியா...

யாரையும் கண்டு பயப்படாமல் தைர்யமாக நின்று பேசுவாள்..

மதுவந்தினி என்ற பெயர் சந்தியாவின் வாயில் வராமல் மந்தி என்றே அழைக்க, மதுவும் அவளை சந்தி என்றே அழைப்பாள்...

சொல்லி வைத்த மாதிரி இருவருமே ஒரே பிள்ளையாக நின்று விட தங்களுடன் விளையாட தம்பி யோ தங்கையோ இல்லாததால் இருவருமே ஒருவருக்கொருவர் மற்றவளை கூட பிறந்தவளாக எண்ணிக் கொள்வர்..

ஆரம்ப பள்ளியில் இருந்து 12 ஆம் வகுப்பு வரைக்குமே இருவரும் ஒன்றாக படித்தனர்.. சந்தியா 12 ஆம் வகுப்பு முடிக்கவும் அவள் தந்தை சென்னையின் வேறு பக்கத்தில் அபார்ட்மென்ட் ஒன்றை வாங்கி கொண்டு அங்கு குடி பெயர்ந்தனர்...

இரு பெண்களும் அவர்கள் பிரியும் நாளில் பயங்கர அழுகை.. அதுவும் மது இரண்டு நாள் சாப்பிடவே இல்லை...

ஒரு வழியாக அவளை சமாதான படுத்துவதற்குள் சாரதாவுக்கு போதும் போதும் என்றாகியது...

அப்புறம் இருவரும் வேறு வேறு கல்லூரியில் சேர்ந்து விட, அவரவர் வாழ்க்கையில் பிசியாகி விட்டனர்.. ஆனாலும் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் நேரில் சந்திப்பதும் அலைபேசியில் பேசிக் கொண்டும் தங்கள் நட்பை தொடர்ந்தனர்...

இப்பொழுதும் சந்தியா தான் அதிகம் பேசுவாள்.. மது அவள் சொல்லும் கதைகளை எல்லாம் ஆவலுடன் கேட்பாள்..

வேல்மணியின் பெற்றோர்கள் அவர்கள் குடும்ப தொழிலை விட்டு விடாமல் அவர்களாகவே விவசாயம் பார்த்து வருகின்றனர்..

இப்பொழுது அவர்களுக்கு வயதாகி விட, முன்பு போல வயலில் இறங்க முடியவில்லை என்றாலும் அவர்கள் நிலங்களையும் விற்கவும் ஒத்து கொள்ளாததால் வேல்மணியே வேலையாட்களை அமர்த்தி தன் பெற்றோருக்கு உதவி வருகிறார்..

அதனால் நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் தன் கிராமத்திற்கு சென்று விடுவார்..

சமீபத்தில் தான் தன் வேலையில் இருந்து ஓய்வு பெற்றதால் தன் மகளுக்கு ஒரு நல்ல இடத்தில் கல்யாணத்தை பண்ணி கொடுத்து விட்டு தன் கிராமத்திற்கே சென்று விட திட்ட மிட்டிருக்கிறார்..

சிறுவயதில் பிடிக்காத அந்த மண் வாசனையும் மஞ்சள் வாசனையும் ஏனோ இந்த வயதான காலத்தில் பிடிக்க ஆரம்பித்து விட்டது..

அதற்கு முழு காரணம் அவர் பெற்றோர்கள் தான்...

பட்டணத்தில் வேலை செய்தாலும் ஏதாவது விசேசத்தை சொல்லி வேல்மணியை குடும்பத்துடன் கிராமத்துக்கு வரவைத்து விடுவர்..

முதலில் வெறுப்புடன் சென்று வந்தவர்க்கு அங்கு வீசும் சுத்தமான காற்றும் அமைதியான சூழலும் பிடித்து விட, இப்பொழுதெல்லாம் அவரே விரும்பி மாதம் ஒருமுறை அங்கு சென்று விடுவார்..

தொடந்து விடுமுறை வரும் நாட்களில் சந்தியாவையும் அங்கு இழுத்து கொண்டு சென்று விடுவார்...

கிராமத்தில் பிறந்திருந்தாலும் அவர் எண்ணம் எல்லாம் நகரத்தை சார்ந்து இருந்தது..

அதனால் கிராமத்தில் பெண்ணிற்கு 19 அல்லது 21 வயது ஆன உடனே திருமணத்தை முடிப்பதை போல அவசரபடாமல், தன் மகளுக்கு அவள் நன்றாக முதிர்ந்த பிறகே திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று முடிவு செய்திருந்தார்...

தங்களை போல அறியாத சிறு வயதில் திருமணத்தை பண்ணி கொண்டு குடும்ப பாரத்தை சுமந்து அவள் கஷ்ட படக் கூடாது என்றே அவள் படிப்பு முடித்ததும் மனதுக்கு பிடித்த வேலையை செய்து நன்றாக உலகத்தை புரிந்து கொண்ட பிறகே திருமணம் என்று உறுதியாக இருந்தார்..

அதோடு அவர் மகள் கொஞ்சம் விளையாட்டு பிள்ளையாக இருப்பதாலும் அவளுக்கு கொஞ்சம் பொறுப்பு வர வேண்டும்.. அப்பொழுதுதான் அவள் போகும் புகுந்த இடத்தில் மற்றவர்களை அனுசரித்து செல்வாள்.. தன் குடும்பத்தையும் பொறுப்பாக பார்த்து கொள்வாள்...

அதற்கு அவள் நன்றாக பழகி வெளி உலகம் தெரிய வேண்டும் என எண்ணியே அவள் திருமண பேச்சை எடுக்கவில்லை...

அவர் பெற்றோர்களும் எவ்வளவோ தரம் சொல்லிவிட்டார்கள் தங்கள் பேத்திக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி பார்க்க வேண்டும் என்று..

அதே போல சொந்தத்தில் மாப்பிள்ளையும் இருக்க, அவர் பெற்றோர்கள் அவரை கட்டாயபடுத்தியதை போலவே இப்பொழுது தன் பேத்தி கல்யாணத்துக்கும் வற்புறுத்த, வேல்மணியோ சொந்தத்தில் கொடுக்க மாட்டேன் என்று மறுத்து விட்டார்...

ருக்மணியும் சந்தியாவுக்கு வயதாவதாக சொல்லி அவளுக்கு சீக்கிரம் கல்யாணத்தை பண்ண சொல்லி தன் கணவனிடம் குறை பட்டு வந்தார்....

சந்தியாவும் அப்பப்ப தன் தந்தையிடம் தனக்கு சீக்கிரம் திருமணம் செய்து வைக்க சொல்லி கிண்டல் அடித்து வருவாள்...!
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top