அழகுக்கு அழகு சேர்க்க- தொடர்

#1

பெண்கள் பொதுவாக அழகாகவும், ஆரோக்கியமாகவும் தங்களை வைத்துக் கொள்ள வேண்டும் என்றே விரும்புவார்கள். அவர்கள் அழகிற்கு பெருமதிப்பு கொடுத்து தம் அழகில் ஆண்கள் மயங்க வேண்டும் என்பதும், மற்றைய பெண்கள் தம்மைப் பற்றி பெருமையாக பேசிக்கொள்ள வேண்டும் என்பதும் எல்லாப் பெண்களுக்கும் பொதுவான ஒரு எதிர்பார்ப்பாகும்.

உலகில் எந்த இடத்தில் இருந்தாலும் பெண்கள் அவர்களை அழகுபடுத்தி அதில் மகிழ்ச்சி காண்பார்கள். அதற்காக என்ன விலை கொடுத்தாலும் அழகுதான பொருட்களை பெற்றுக் கொள்ளத் துடிப்பார்கள். தமிழ் பெண்களைப் பொறுத்த வரையில் கலாச்சாரம் கலந்த, நீளமான கூந்தலும், மென்மையான வசீகரமான சருமத்தை கொண்ட தோற்றம் உடையவர்களாக விளங்குவதற்கும், அவர்களின் ஆசைகளை குறைந்த செலவில் நிறைவேற்ற ஊக்குவிப்பதுமே இந்த தொடரின் நோக்கமாகும்.

அழகூட்டும் வைட்டமின்கள்

ஒவ்வொரு வைட்டமின்னுக்கும் உடலைக் கட்டுப்படுத்தும் பல வேலைகள் இருக்கின்றன. இதனால் ஒன்று குறைந்தாலும் சமநிலை இழப்பு ஏற்படும். பி வைட்டமின்கள் நீரில் கரையக் கூடியவை. அதனால் உடலில் சேமித்து வைக்க முடியாது என்பதால் தினமும் அவற்றை சாப்பிட வேண்டியது கட்டாயமாகின்றது.

சிறுவயதிலேயே முதிய தோற்றம் ஏற்படுவதை தயமின் என்ற பிஒரு வைட்டமின் தடுக்கும். வைட்டமின் பிஒரு சிவப்பு அரிசி, கோதுமை, ஈஸ்ட், ஓட்மீல், சோயா பீன்ஸ், முந்திரி போன்றவற்றில் கிடைக்கிறது.

தோல் மற்றும் உடலில் உள்ள எல்லா செல்களும் புதுப்பிக்கப் பயன்படும் ரிபோபிளேவின் என்ற வைட்டமின் பிஇரண்டு பால், முட்டை, இறைச்சி, கல்லீரல், தானியங்கள், பச்சை காய்கறிகளில் கிடைக்கின்றன.

செல் மெட்டாபாலிசம், கார்போஹைட்ட்ரேட் கிரகிப்புக்கு நியாசின் என்ற வைட்டமின் பிமூன்று தேவை. இதன் மூலம் ஆற்றல் கிடைப்பதோடு, இறந்த செல்கள் அழிக்கப்பட்டு அவை நீக்கப்பட்டு, புது செல்கள் உருவாக்கும் மீன், கோழி இறைச்சி, கோதுமை, சிவப்பு அரிசியில் இந்த வகை வைட்டமின் கிடைக்கிறது.

சுழற்சியை தடுத்து, கொழுப்பு உடைதலை வேகமாக்கி பருக்கள் உருவாகாமல் தடுக்கிறது வைட்டமின் பிஐந்து மக்காச்சோளம், முட்டை, சீஸ், இறைச்சி, தக்காளியில் கிடைக்கிறது.

தோலின் எண்ணெய் பசைமிக்க பகுதிகளில் செதில் உரியும் நோயை சரிசெய்ய உதவுவது முழு தானியங்கள், கல்லீரல், பயறுகள், வாழைப்பழம் போன்றவற்றில் கிடைக்கும் பைரிடாக்சின் என்ற வைட்டமின் பி6 ஆகும்.

கூந்தல் வளர்ச்சிக்கும், சருமம், நகங்கள் மெருகேறுவதற்கும் உதவுவது பயோடின் என்ற வைட்டமின் பி7 ஆகும். இவை பயறுவகைகள், பழங்கள், காய்கறிகள், முட்டை, சீஸ் போன்றவற்றில் கிடைக்கிறது.

இரத்த சிவப்பு அணுக்கள் உருவாகி, மெருகேற்றுவதற்கு போலிக் அமிலம் என்ற வைட்டமின் பி9 தேவைப்படுகிறது. இவைகள் கூந்தலின் ஆரோக்கியத்திற்கும், இளநரையை தடுக்கவும் உதவுகிறது. இந்த சத்து வைட்டமின் பசலைக்கீரை, ஈரல், ஆரஞ்சு ஜூஸ், கருஞ்சீரகம் போன்றவற்றில் உள்ளது.

சருமத்தின் செல்களை புதுப்பித்து அழகுப்படுத்தும் வேலையை கோபாலமின் என்ற வைட்டமின் பிபன்னிரண்டு செய்கிறது. இவை முட்டை, கோழி, தயிர், பால் பயறு போன்றவற்றில் கிடைக்கிறது.

உடலில் செல்களைப் பராமரிப்பதற்கான ஆற்றலைத் தருவதற்குத் தேவையான கலோரிகளை பெற பி வைட்டமின்கள் உதவுகின்றன. இறந்த செல்களை மாற்றுவது, சருமத்தை இளமையாகவும், மிருதுவாகவும், வைத்திருக்க உதவும் எண்ணெய் உற்பத்தி செய்வது போன்ற செயல்பாடுகளுக்கு இந்த வைட்டமின்கள் உதவுகின்றன. வைட்டமின் என்பது அழகுக்கு மட்டுமல்ல ஆரோக்கியத்திற்கும் இன்றியமையாதது.

சருமத்திற்கு பொலிவு தரும் பீட்ரூட்

பீட்ரூட் முகப்பருக்களுக்கு எதிராக செயல்படும். சருமத்தில் ஏற்படும் அனைத்து விதமான பாதிப்புகளையும் நீங்கும் சக்தி கொண்டது பீட்ரூட். பீட்ரூட்டை சருமத்திற்கு எப்படி பயன்படுத்தலாம் என்பதை பார்க்கலாம்.

இரண்டு டேபிள் ஸ்பூன் பீட்ரூட் சாறுடன் சிறிது தேன் கலந்து முகத்தில் தடவுங்கள். பதினைந்து நிமிடங்கள் கழித்து கழுவினால் முகம் பளபளக்கும்.

கடலை மாவு - ஒரு ஸ்பூன்

பீட்ரூட் சாறு - ஒரு ஸ்பூன்

யோகார்ட் - ஒரு ஸ்பூன்

ரோஜா இதழ் – சிறிதளவு

ரோஜா இதழை அரைத்து மற்ற எல்லா பொருட்களுடன் சேர்த்து நன்றாக கலக்குங்கள். இதனை முகத்தில் தடவுங்கள். காய்ந்ததும் கழுவுங்கள். முகத்தில் படிந்துள்ள கருமை படிப்படியாக மறைத்து பொலிவு பெற்று நிறம் மாறுவதை காணலாம்.

முல்தானி மட்டி சிறிது எடுத்து அதில் பீட்ரூட் சாறை கலந்து முகத்தில் தடவுங்கள். நன்றாக இறுகியதும் கழுவுங்கள். இதனால் கன்னம் சிவந்த நிறம் பெறும்.

பீட்ரூட் சாறுடன் சில துளி பாதாம் எண்ணெய் கலந்து கண்களைச் சுற்றிலும் தடவுங்கள். காய்ந்ததும் கழுவினால் நாள்டைவில் கருவளையம் மறைந்துவிடும்.

பீட்ரூட் சாறில் சம அளவு முட்டை கோஸ் சாறு மற்றும் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தேய்த்து பத்து நிமிடன் கழித்து கழுவுங்கள். இது சருமத்திற்கு போஷாக்கு அளிக்கும்.
 
Last edited:
#2
சருமத்தைப் பளபளப்பாக்கும் அன்னாசி

சருமத்தைப் பளபளப்பாக்குவதில் அன்னாசிப் பழத்துக்கு நிகர் அதுவேதான். பார்ப்பவர் வியக்கும் வனப்பைத் தரும் அன்னாசிப்பழத்தின் அழகு பலன்களை பார்க்கலாம்.

அரை டீஸ்பூன் ஜாதிக்காயுடன், மாசிக்காய் மற்றும் அன்னாசிப்பழ சாறை சம அளவு கலந்து, முகத்தில் நன்றாகத் தேய்த்துக் கழுவுங்கள். மின்னும் உங்கள் சருமம் மின்னலையும் தோற்கடிக்கும்.

சோற்றுக்கற்றாழை ஜெல்லுடன் இரண்டு டேபிள் ஸ்பூன் அன்னாசிப்பழச் சாறை சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளுங்கள். இந்த விழுதை சோப்பு தேய்ப்பது போல முகத்தில் தேய்த்துக் கழுவுங்கள். முகத்தில் உள்ள கரும்புள்ளி, தேமல், பருக்கள் மாயமாக மறையும். அவை திரும்ப வராமல் தடுக்கும் சக்தியும் இதற்கு உண்டு.

சிலருக்கு முகத்தில் நீர் கோத்து, வீங்கிப்போய் இருக்கும். இதற்கு அன்னாசிப்பழச் சாறு அருமருந்து. அன்னாசிப்பழச் சாறுடன் தேங்காய்ப் பாலை சம அளவு எடுத்து, இவை கலக்கும் அளவுக்கு பயத்தமாவு சேர்த்து முகத்தில் தடவி, ஐந்து நிமிடம் கழித்து கழுவினால் வீக்கம் குறையும். இது வறண்ட சருமம் உள்ளவர்களுக்கான சிகிச்சை. எண்ணெய்ப் பசை சருமம் உள்ளவர்கள் பயத்தமாவுக்கு பதில் கடலைமாவை சேர்த்துக் கொள்ளலாம்.

சிலருக்கு வயதாவதால் முகத்தில் சுருக்கம் விழ ஆரம்பிக்கும். இதற்கு இரண்டு டீஸ்பூன் தேங்காய்ப்பாலுடன், ஒரு டீஸ்பூன் அன்னாசிப் பழச்சாறு கலந்து ஒரு நாள் விட்டு ஒரு நாள் முகத்தில் பூசி கழுவினால், அறுபதிலும் இளமையாக ஜொலிக்கலாம். வயதாவதால் கழுத்துப் பகுதியில் ஏற்படும் சுருக்கத்தைப் போக்கும் வல்லமையும் அன்னாசிக்கு உண்டு.

சருமத்திற்கு பொலிவு தரும் சப்போட்டா


பார்க்க ஒல்லியாக இருப்பவர்கள் பூசினார் போல தோற்றப் பொலிவுடன் மாற சப்போட்டா பழம் மிகுந்த உதவிபுரிகிறது. தோல் நீக்கிய சப்போட்டா பழத்துடன் சிறிதளவு பால் சேர்த்து அரைக்கவும். அந்த விழுதுடன் இரண்டு டீஸ்பூன் வெள்ளரி விதைப் பவுடர் கலந்து குளிப்பதற்கு முன் கை, முழங்கை விரல்களில் நன்றாக பூசி குளிக்கவும். சப்போட்டாவில் உள்ள ஈரப்பதம் கைகளை பொலிவாக்கி, பூசினாற் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும்.

கன்னம் ஒட்டிப்போய் எலும்பு தூக்கிக்கொண்டிருக்கிறதா?

கொழு, கொழு கன்னங்கள் பெற சப்போட்டா பழ சதையை எடுத்து அத்துடன் ரோஸ் வாட்டர், சிறிது சந்தன பவுடர் கலந்து கிரீமாக தயார் செய்து கொள்ளவும். இந்த கிரீமை முகம் முதல் கழுத்து வரை இட, வலமாக தடவ வேண்டும். காய்ந்த பின்னர் இளம் சூடான நீரில் முகம் கழுவ வேண்டும். வாரம் இருமுறை இதுபோல செய்து வர பளபளவென கன்னம் மின்னும்.

ஒரு டீஸ்பூன் பயத்தமாவுடன் அரை டீஸ்பூன் சப்போட்டா பழ விழுது, நான்கு துளி விளக்கெண்ணெய் கலந்து, குளிப்பதற்கு முன் உள்ளங்கை, விரல், நகம், பாதங்களில் தடவி, குளித்து வர அவை வறட்சி நீங்கி மென்மையாக மிளிரும். சப்போட்டா பழம், ரத்த ஓட்டத்தை சீராக்கி, கொழுப்பை கரைக்கிறது. இது வாய்ப்புண்ணுக்கு சிறந்த மருந்து. வயிற்றெரிச்சல், மலச்சிக்கல், மூலநோய்க்கு சிறந்த தீர்வாகிறது.

கொத்து கொத்தாக முடி கொட்டுகிறதா?

கவலைவேண்டாம். உங்களுக்கு கைகொடுக்கிறது ‘சப்போட்டா கொட்டை தைலம்’

ஒரு டீஸ்பூன் சப்போட்டா கொட்டை பவுடருடன், ஒரு கப் நல்லெண்ணெய், கால் டீஸ்பூன் மிளகுத்தூள் கலந்து அடுப்பில் வைத்து கை பொறுக்கும் சூட்டில் காய்ச்சவும். பின்னர் ஆறவைத்து வடிகட்டிக்கொள்ளுங்கள். இந்த தைலத்தை சிறிதளவு பஞ்சில் நனைத்து படிப்படியாக தலையில் தேய்த்து அரைமணிநேரம் ஊறவைக்க வேண்டும். சீயக்காய், கடலைமாவு தேய்த்து குளிக்க ஒரு மாதத்தில் முடி கொட்டுவது நின்றுவிடும்.
 
#3
சருமம், கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் புதினா

புதினா கூந்தல், சருமத்திற்கு நிறைய நன்மைகள் தருகின்றது. பலவிதமாக புதினாவை பயன்படுத்தி உங்கள் அழகை பெருகேற்றலாம்.

இது கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும். ரத்த ஓட்டத்தை தூண்டி, பொடுகை தடுக்கும். புதினா எண்ணெய் சில துளி எடுத்து தேங்காய் எண்ணெயுடன் கலந்து தலையில் மசாஜ் செய்யவும்.

தேவையான பொருட்கள் :

புதினா சாறு

எலுமிச்சை சாறு

தயிர்

இது இயற்கை முறையில் சருமத்தை சுத்தம் செய்கிறது. சோர்வு மற்றும் பொலிவிழந்த சருமத்தை உடனடியாக பளிச்சிட செய்கிறது. புதினா சாறு, தயிர் தலா ஒரு ஸ்பூன் எடுத்து அதில் சில துளி எலுமிச்சை சாறு கலந்து முகம், கழுத்தில் தடவி பத்து நிமிடம் கழித்து கழுவினால் கருமை படிப்படியாக மறைந்துவிடும். இதை தினமும் உபயோகப்படுத்தலாம்.

முகப்பரு இருக்குமிடத்தில் செயல் புரிந்து கிருமிகளை அழிக்கிறது. முகப்பரு மீது தடவுங்கள். ஆனால் முகப்பரு உடைந்திருந்தால் அதன் மீது தடவ வேண்டாம். ஏனென்றால் இது பாதிப்பை அதிகப்படுத்தும்.

நாட்டு சர்க்கரை ஒரு ஸ்பூன், ஆலிவ் எண்ணெய் ஒரு ஸ்பூன் அதனுடன் புதினா சாறு இரண்டு ஸ்பூன் கலந்து ஸ்கரப்பாக முகத்தில் தேய்த்தால் அழுக்கு, இறந்த செல்கள் வெளியேறி சருமம் ஜொலிக்கும்.

ஆலிவ் எண்ணெய் தேங்காய் எண்ணெய் சம அளவு கலந்து அதனுடன் புதினா எண்ணெய் சில துளி கலந்து தலையில் தடவி மசாஜ் செய்தால் வறண்ட கூந்தல் பொலிவு பெறும்.

கூந்தல் வளர, இளநரை மறைய கரிசலாங்கண்ணி

கரிசலாங்கண்ணியை பற்றி தெரியாதவர்களே இல்லை. ஏன் என்றால் இந்த மூலிகை மஞ்சள் காமாலை, ரத்த சோகை, குழந்தை கண்ணுக்கு மை தீட்டுவதற்கு, முடி வளர்ச்சிக்கு, கீரையாகவும் பருப்புடன் மசியலாக சாப்பிடலாம். நிறைய மருத்துவதன்மை வாய்ந்த இந்த மூலிகையை நாம் பயன்படுத்தி பயன் அடைய வேண்டும்.

இளநரை மாற :

கரிசலாங்கண்ணி இலைகளை நிழலில் உலத்தி, தூளாக்கி, சலித்து வைத்துக் கொண்டு, தினமும் காலையில் அரை தேக்கரண்டி அளவு, சிறிதளவு தேனில் குழைத்துச் சாப்பிட வேண்டும். இரண்டு மாதங்கள் வரை இவ்வாறு தொடர்ந்து சாப்பிட வேண்டும்.

தலைமுடி அடர்த்தியாக வளர :

கரிசலாங்கண்ணி இலைகளைப் பசைபோல அரைத்து, அடையாகத் தட்டி வெயிலில் உலர்த்த வேண்டும். இதனை நல்லெண்ணையில் ஊற வைத்து, தலையில் தொடர்ந்து தடவிவர முடி கருமையாக செழித்து வளரும். முடி உதிர்தலும் கட்டுப்படும்.

முடி கருமையடைய
:

ஒரு பிடி கரிசலாங்கண்ணி இலைகளை, இருநூறு மி. லி. தேங்காய் எண்ணெயில் இட்டுக்காய்ச்சி, வடிகட்டி வைத்துக் கொண்டு தலைக்குத் தேய்த்துவர வேண்டும். படிப்படியாக இளநரை மாறி கூந்தல் கருமையாக மாறுவதை காணலாம்.

தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் வெந்தயம்


முடி உதிர்வை தடுக்க:

முதல் நாள் இரவு தண்ணீரில் வெந்தயத்தை ஊற வைத்து, அதிகாலையில் தண்ணீரை வடித்து விட்டு வெந்தயத்தை அரைத்து, அதனுடன் சிறிது எழுமிச்சை சாறு சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

இந்த வெந்தய பசையை உச்சந்த தலையில் அழுத்தி தடவ வேண்டும். தலை முழுவதும் தடவிய பிறகு, சிறிது நேரத்திற்கு நன்கு அழுத்தி மசாஜ் செய்ய வேண்டும். சிறிது நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் தலைக்கு குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வர முடி உதிர்வை தடுக்கலாம்.

முடி வளர்ச்சிக்கு:


ஒரு கையளவு வெந்தயத்தை எடுத்து அதை ஒரு தேங்காய் எண்ணெய் உடன் கலந்து கொள்ள வேண்டும். இதை அடுப்பில் வைத்து நன்கு சூடாக்க வேண்டும். வெந்தயம் சிவப்பு நிறமாக மாறும் வரை சூடாக்க வேண்டும்.

சூடு ஆறியதும் மிக்ஸியில் போட்டு நன்கு பசை போன்று அரைக்க வேண்டும். அதன் பின்னர் அந்தக் கலவையை உச்சந்தலையில் அழுத்தி தடவ வேண்டும்.

சிறிது நேரம் நன்று ஊற வைத்து வெதுவெதுப்பான தண்ணீரில் தலைக்கு குளிக்க வேண்டும். இந்த முறையை அடிக்கடி பின்பற்ற முடி நன்கு வளரத் தொடங்கும்.

தலையில் ஏற்படும் அரிப்பை போக்க:

முதல்நாள் இரவே வெந்தயத்தை நன்கு ஊற வைக்க வேண்டும். மறுநாள் அதிகாலையில் தண்ணீரை வடித்து விட்டு, வெந்தயத்தை நன்கு பசை போல் அரைக்க வேண்டும். அதன் பின்னர் அந்த பசையுடன் ஒரு முட்டையின் மஞ்சள் கருவை கலக்க வேண்டும்.

முட்டை பிடிக்கவில்லை என்றால் அதனுடன் எழுமிச்சை சாறு சேர்த்து கலவையை நன்கு கலக்க வேண்டும். இப்பொழுது இந்தக் கலவையை உச்சந்தலையில் நன்கு அழுத்தி தடவ வேண்டும். பின்னர் நன்கு ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் தலைக்கு குளிக்க வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வர தலையில் ஏற்படும் அரிப்பை தடுக்கலாம்.

பொடுகைப் போக்க:


முதல் நாள் இரவு தண்ணீரில் வெந்தயத்தை ஊற வைக்க வேண்டும். மறுநாள் அதிகாலையில் தண்ணீரை வடித்து விட்டு, வெந்தயத்தை நன்கு பசை போல் அரைக்க வேண்டும். அதன் பின்னர் அந்த பசையுடன் தயிர் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

இந்தக் கலவையை உச்சந்தலையில் முடியின் வேர் வரை படரும்படி தடவ வேண்டும். அதன் பின்னர் சுமார் முப்பது நிமிடங்கள் ஊற வைத்து, பின்னர் குளிர்ந்த நீரில் தலைக்கு குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வர பொடுகுத் தொல்லை நீங்கும்.
 
#4
கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் பூண்டு

நம் வீட்டு சமையலறையில் உள்ள பூண்டு கொண்டு தலைமுடியின் வளர்ச்சியைத் தூண்டலாம். இங்கு அந்த பூண்டை எப்படியெல்லாம் தயாரித்து தலைக்கு பயன்படுத்தலாம் என்று கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றில் உங்களால் முடிந்ததை முயற்சித்து நன்மைப் பெறுங்கள்.

ஒரு டேபிள் ஸ்பூன் பூண்டு சாற்றினை அரை கப் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கலந்து, அடுப்பில் வைத்து குறைவான தீயில் சூடேற்றி இறக்கி, வெதுவெதுப்பான நிலைக்கு வந்த பின், அந்த எண்ணெய் கொண்டு ஸ்கால்ப்பை மசாஜ் செய்து ஒரு மணிநேரம் கழித்து, ஷாம்பு போட்டு அலச, தலைமுடியின் வளர்ச்சியைக் காணலாம்.

பூண்டு எண்ணெயுடன் ஒரு டேபிள் ஸ்பூன் வெங்காய சாற்றினை சேர்த்து கலந்து, பஞ்சுருண்டை பயன்படுத்தி ஸ்கால்ப்பில் படும்படி தடவி, விரலால் சிறிது நேரம் மசாஜ் செய்து, இருபது நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இந்த முறையை ஒவ்வொரு நாள் இரவும் பின்பற்றினால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

ஒரு முட்டையின் வெள்ளைக்கருவை நன்கு அடித்து, அத்துடன் ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் பூண்டு சாற்றினை சேர்த்து கலந்து, தலைமுடி மற்றும் ஸ்கால்ப்பில் தடவி முப்பது நிமிடம் ஊற வைத்து, மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும். இதன் மூலம் தலைமுடியின் வளர்ச்சி தூண்டப்படும்.

ஒரு டேபிள் ஸ்பூன் நறுக்கிய பூண்டு மற்றும் ஒரு டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல் ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைத்து ஃபேஸ்ட் செய்து, இரவில் படுக்கும் முன் ஸ்கால்ப்பில் தடவி இருபது நிமிடம் ஊற வைத்து, அலச வேண்டும். இதனால் ஸ்கால்ப்பில் இருந்த தொற்றுகள் நீங்கி, மயிர்கால்கள் ஆரோக்கியமாக வளர்ச்சி பெறும்.

சரும அழகு தரும் தக்காளி

பொதுவாக தக்காளி அனைத்து வீடுகளிலும் சமையலறையில் பயன்படுத்தும் பொருள். பெண்களின் அழகை கூட்டுவதில் தக்காளி முக்கிய பங்கு வகிக்கின்றது. பெண்கள் தங்களை அழகுப்படுத்திக் கொள்ள பியூட்டி பார்லருக்கு செல்வதை விட வீட்டில் இருக்கும் சில எளிய பொருட்களை வைத்து நம்மை அழகுப்படுத்தி கொள்ளலாம்.

தக்காளியை தோல் மற்றும் விதைகள் நீக்கி கூழாக்குங்கள். ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயை முகத்தில் தடவுங்கள். அதன் மேல் இந்த கூழைத் தடவி பத்து நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் இருமுறை இவ்வாறு செய்தால் ஒட்டிய கன்னங்கள் பூசினாற் போல் ஆகிவிடும்.

ஒரு சிலருக்கு முகத்தில் எப்போதும் எண்ணெய் வடிந்தபடி இருக்கும் மேக்கப் போட்டாலும் தங்காது. இவர்கள் தக்காளி பழத்தை நன்கு அரைத்து, அந்த விழுதை முகத்தில் போட்டு அரை மணி நேரம் கழித்து கழிவினால் முகம் பளபளப்பாகும். எண்ணெய் வடிதலை கட்டுப்படுத்தும்.

தக்காளி விழுது, பாதாம் விழுது தலா அரை தேக்கரண்டி எடுத்து கலந்து முகத்தில் தடவுங்கள். ஒருநாள் விட்டு ஒருநாள் இதைச் செய்தால் முகத்தில் தோன்றும் சுருக்கங்கள் மறையும்.

உருளைக்கிழங்கு துருவல் சாறு ஒரு தேக்கரண்டி, தக்காளி விழுது அரை தேக்கரண்டி இரண்டையும் கலந்து முகத்தில் தேய்த்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து தக தகவென்று மின்னும்.

சருமம் மிருதுத்தன்மையை இழந்து விட்டதா? தக்காளி விழுதுடன் சிறிது தயிர் கலந்து முகத்தில் பூசுங்கள். இவ்வாறு தொடந்து செய்து வந்தால் உங்கள் சருமம் மிருதுவாவதை காணலாம்.

தக்காளிச் சாறுடன் சிறிது ரவையைக் கலந்து முகத்தில் தேய்த்துக் கழுவினால் முகம் பிரகாசிக்கும். இதுதான் இயற்கை ஸ்கரப்பாக உபயோகிக்கலாம்.
 
#5
கண்களை சுற்றியுள்ள சருமத்தை பராமரிப்பது எப்படி?

கண்ணைச் சுற்றிய பகுதி மற்ற பகுதியை விட மெலிதாகவும் எண்ணெய் சுரப்பிகள் குறைவாகவும் கொண்டதாக இருப்பதால் இங்குள்ள தசை நார்கள் உடைந்து கண்களைச் சுற்றிய பகுதி தளர்வாகவும் சோர்ந்து பொலிவின்றியும் காணப்படும்.

கருவளையங்கள், தொய்வடைந்த இமைகள், கண் முடிவில் சுருக்கங்கள் போன்ற இந்த பாதிப்புகளிலிருந்து முடிந்த வரை கண்ணை சுற்றிய சருமத்தைப் பாதுகாக்க பின்வரும் அறிவுரையை கேளுங்கள்.

வெள்ளரிக்காயில் நிறைய நீர்ச்சத்தும் ஆன்டிஆக்சிடெண்டுகளும் நிறைந்துள்ளன. இவை சருமத்தில் சேர்ந்துள்ள நச்சுக்களை களைந்து நீக்கி ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகின்றன. வெள்ளரியில் இரு மெல்லிய துண்டுப்பட்டைகளை வெட்டி அதை பத்து நிமிடம் ஃபிரிட்ஜில் வைத்து பின்னர் அதை கண்கள் மீது வையுங்கள். இந்த குளுமை நீங்கும் வரை வைக்கவும். இதை தினமும் செய்வதால் கண்களைச் சுற்றியுள்ள சோர்வடைந்த சருமம் புத்துணர்வு பெறும்.

உருளைக் கிழங்கை தோலுரித்து துருவி அதை சாறாக பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள். இதை ஃபிரிட்ஜில் பத்து நிமிடம் வைத்து பின்னர் அதை கண்ணை சுற்றித் தடவி மசாஜ் செய்யவும். பின்னர் ஒரு இருபது நிமிடம் கழித்து ஒரு ஈரமான துணி கொண்டு துடைத்தெடுக்கவும்.

நீங்கள் தினமும் பயன்படுத்தும் இந்த க்ரீன் டீ பைகள் ஆண்டிஆக்சிடென்டுகள் மற்றும் டானின் நிறைந்து காணப்படுவதால் இவை உங்கள் தோய்ந்த கண்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். இதற்கு நீங்கள் செய்யவேண்டியது இரண்டு உபயோகித்த டீ பாக்கெட்டுகளை (டீ பேக்) எடுத்து அதிலுள்ள அதிக நீரை வடித்து விடுங்கள். அதை ஃபிரிட்ஜில் பத்து நிமிடம் வைத்து பின்னர் அதை கண்கள் மீது வைத்திடுங்கள். அதன் குளுமை போகும் வரை வைத்து பின்னர் எடுத்து விடுங்கள்.

கண்களின் கீழ் கருவளையம் வரக்காரணமும் - அதற்கான தீர்வும்

உங்களை பளிச்சென்று காட்டுவது முகஅழகு தான். அந்த முகத்தில் வசீகரமான அழகை தருவது கண்கள் தான். சில பெண்களுக்கு அந்த கண்களே மைனஸ் பாயிண்ட் ஆக அமைந்து விடுவது உண்டு. அதற்கு காரணம் கண்ணைச் சுற்றிலும் திடீரென்று தோன்றும் கருவளையம்.

இந்த கருவளையம் ஏற்பட பல காரணங்கள் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். முதல் காரணம், அந்த இடத்தில் தோல் அதிகமாக சுருக்கம் அடைந்து காணப்படுவது தான். அந்த சுருக்கமே கருப்பு நிறமாக மாறி, கருவளையத்தை ஏற்படுத்தி விடுகிறது.

சத்துக்கள் இல்லாத உணவு வகைகளை உண்பது கூட இதற்கு காரணமாக அமையலாம். தோலை வெளுப்படையச் செய்யும் தாது உப்புகளும், புரதமும், கொழுப்புச் சத்தும் உள்ள உணவுப் பொருட்களை அதிக அளவில் சேர்த்துக் கொண்டால் இந்த கருவளையம் நாளடைவில் மறைந்து விடும்.

கண்களுக்கு அதிக வேலை கொடுத்தாலும் கருவளையம் வரலாம். அதாவது, அதிக நேரம் கண் விழித்து படிக்கும் பழக்கம் இருந்தாலோ அல்லது டி. வி. பார்த்து வந்தாலோ கருவளையம் தோன்றலாம். நீண்டகாலம் உடல்நலக்குறைவாக இருப்பதும், உணவு கட்டுப்பாட்டில் இருப்பதும்கூட இதற்கு காரணமாக அமையலாம்.

சில பெண்கள் என்ன வேலையாக இருந்தாலும் இழுத்துப் போட்டுக் கொண்டு தாங்களே செய்வார்கள். வேலையை கொஞ்சமாவது பகிர்ந்து கொள்வோம் என்று எண்ண மாட்டார்கள். இப்படி எல்லா வேலைகளையும் இழுத்துப்போட்டுக் கொண்டு பார்த்தாலும்கூட கருவளையம் வந்துவிடும். அதாவது, அதிகப்படியான வேலையை தொடர்ந்து செய்யும் போது அதிகப்படியான சோர்வு ஏற்பட்டு, இக்குறைபாடு வந்துவிடும். ரத்தசோகை பாதிப்பு உள்ளவர்களுக்கும் கூட கண்ணில் கருவளையம் வரலாம்.

வந்த கருவளையத்தை போக்க அன்றாட சமையலில் கொஞ்சம் அக்கறை காட்டினாலே போதும்.

கண்ணில் உள்ள கருவளையத்தை நீக்க இரும்புச்சத்து அதிகம் கொண்ட காய்கறிகளை அதிகம் உண்ண வேண்டும். முருங்கைக்கீரை, அகத்திக்கீரை, முள்ளங்கி, சின்ன வெங்காயம், பூண்டு, அவரைக்கீரை, ஆப்பிள், நெல்லிக்காய், விளாம்பழம், நாவல்பழம், கமலா ஆரஞ்சு, வாழைப்பழம், வெள்ளரிப்பழம், பாகற்காய், வாழைத்தண்டு போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. பொன்னாங்கன்னி கீரை கூட இதற்கு நல்லது தான்.

இந்த காய்கறிகளை சமையலில் அதிகம் பயன்படுத்தினாலே நாளடைவில் கருவளையத்தின் பாதிப்பில் இருந்து தப்பிவிடலாம். அழகான கண்களுக்கு சொந்தக்காரி ஆகிவிடலாம்.

கருவளையம் உள்ளவர்கள், இதுபோக இன்னொரு முறையையும் பின்பற்றலாம்.

வெற்றிலை போட பயன்படுத்தும் சுண்ணாம்பை ஒரு பட்டாணி அளவு எடுத்துக் கொள்ளுங்கள். அதை ஒரு கப் குளிர்ந்த நீரில் கரைத்து சுமார் ஒரு மணி நேரம் அப்படியே வைத்து விடுங்கள். அந்த சுண்ணாம்பு நீரானது தெளிந்தவுடன், அதில் இருந்து இரண்டு ஸ்பூன் தெளிந்த தண்ணீரை வேறொரு கிண்ணத்தில் பிரித்தெடுத்துக் கொள்ளுங்கள்.

பிரித்தெடுத்த தண்ணீரின் அளவுக்கு எலுமிச்சைச் சாறும் பிழிந்து வடிகட்டிக் கொள்ளுங்கள். தொடர்ந்து, இரண்டையும் ஒன்றாக கலந்து, அதை ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை கண்ணை சுற்றி பூசுங்கள். கண்விழியில் பட்டுவிடக்கூடாது.

இப்படி தொடர்ந்து செய்து வந்தால் சில நாட்களில் கண் கருவளையம் மறைந்து விடும். அதன் பின்னர் கருவளையமே வரக்கூடாது என்று நீங்கள் விரும்பினால், உணவு முறையில் தான் மாற்றம் கொண்டுவர வேண்டும். அதாவது, இரும்புச்சத்து அதிகம் உள்ள காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உங்கள் கண்களை கருவளையத்திலிருந்து பாதுகாப்பது எப்படி?

இரவு கண் விழித்துக் கொண்டிருப்பதால், அதிக நேரம் புத்தகம் படிப்பதால், மன அழுத்தம், வயதாகும்போது, வெளிச்சம் மிகுந்த ஒளியில் தொடர்ந்து கண்கள் படும்போது என பலக் காரணங்களால் கருவளையம் வருகிறது. இறந்த செல்கள் கண்களுக்கு அடியில் குவியும்போது அங்கே கருமை படர்கிறது. அதனை போக்குவது எளிதுதான்.

கண்களுக்கு போதிய பயிற்சி தருவது மிக முக்கியம். இதனால் நரம்புகள் ஊட்டம் பெற்று ரத்த ஓட்டத்தை கண்களுக்கு அளிக்கின்றன. இது பாதிப்படைந்த செல்களை ரிப்பேர் செய்து கருவளையத்தை போக்குகின்றன.

இப்போது உங்கள் கண்களை கருவளையத்திலிருந்து எப்படி பாதுகாக்கலாம் என்பதை பார்க்கலாம்.

உருளைக் கிழங்கின் சாற்றையும், வெள்ளரிக்காய் சாற்றையும் சமஅளவில் எடுத்து கலந்து கண்களுக்கு அடியில் தடவுங்கள். பதினைந்து நிமிடங்கள் அப்படியே கண் மூடி படுக்கவும். பின் குளிர்ந்த நீரில் கழுவுங்கள். இதனால் படிப்படியாக உங்கள் கருவளையம் மறைந்து கண்கள் பிரகாசமாய் தோன்றும்.

பாதாம் எண்ணெய் ஐந்து துளிகள் எடுத்து அதனுடன் சிறிது தேன் கலந்து கருவளையத்தின் மீது தடவுங்கள். பதினைந்து நிமிடங்கள் கழித்து கழுவலாம். இது அற்புத பலன்களைத் தரும்.

புதினா சாறை பிழிந்து அதனுடல் தக்காளி சாற்றினை கலந்து கண்களுக்கு அடியில் தடவவும். லேசாக காய்ந்ததும் கழுவி விடவும். பத்து நிமிடங்களுக்கு மேல் வைத்தால், சருமம் பாதிப்படையும். ஆகவே லேசாக காய்ந்ததும் கழுவிவிடலாம். இது போல் வாரம் இரண்டு முறை செய்து பாருங்கள். கருவளையம் காணாமல் போய்விடும்.

மோர் ஒரு ஸ்பூன் எடுத்து அதில் ஒரு சிட்டிகை மஞ்சள் பொடியை கலந்து கண்களுக்கு அடியில் தடவுங்கள். இதனை கண்களுக்கு அடியில் தடவி பத்து நிமிடங்கள் கழித்து கழுவவும். வாரம் மூன்று முறை செய்து பாருங்கள். கருவளையம் விரைவில் மறைந்து விடுவதை காணலாம்.

இந்த குறிப்புகளை பயன்படுத்தி உங்கள் கண்களை கருவளையத்திலிருந்து பாதுகாத்திடுங்கள்.
 
#6
கண்களை சுற்றியுள்ள கருவளையத்தை போக்கும் பேக்கிங் சோடா

பேக்கிங் சோடா சமையலில் மட்டும் பயன்படுவதில்லை, நம் அழகை பராமரிக்கவும் தான் பெரிதும் உதவியாக உள்ளது. இது சருமத்தில் உள்ள உலர்ந்த தோல், பிம்பிள், செல்லுலைட் மற்றும் கருவளையங்கள் போன்றவற்றை போக்க துணை புரிகின்றன.

தற்போது வேலைப்பளுவின் காரணமாக இரவில் நீண்ட நேரம் வேலை முடித்துவிட்டு, தாமதமாக தூங்கி, காலையில் வேகமாக எழுவதால், சரியான அளவு ஓய்வு கண்களுக்குக் கிடைக்காமல், கண்களைச் சுற்றி கருவளையங்கள் வந்து அழகைக் கெடுக்கிறது. இந்த கருவளையங்களைப் போக்க பேக்கிங் சோடா கொண்டு முயற்சித்தால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும். மேலும் பேக்கிங் சோடா சருமத்தில் எந்த ஒரு பக்க விளைவையும் ஏற்படுத்தாது.

தேவையான பொருட்கள் :

பேக்கிங் சோடா - ஒரு டீஸ்பூன்

சீமைச்சாமந்தி டீ – சிறிது

பேக்கிங் சோடாவை சீமைச்சாமந்தி டீ சேர்த்து கலந்து, கண்களைச் சுற்றி தடவி பதினைந்து நிமிடம் கழித்து, கழுவ வேண்டும். பின் மாய்ஸ்சுரைசர் அல்லது தேங்காய் எண்ணெயை கண்களைச் சுற்றி தடவ வேண்டும்.

இந்த முறை கண்களைச் சுற்றியுள்ள கருவளையங்களைப் போக்குவதோடு, கண்களுக்கு கீழே உள்ள சுருக்கங்கள் மற்றும் கோடுகளைப் போக்கி, கண்களின் அழகை அதிகரித்துக் காட்டும்.

இந்த செயலை வாரத்திற்கு மூன்று முறை இரவில் படுக்கும் முன் செய்யுங்கள். முக்கியமாக கண்களுக்கு போதிய ஓய்வைக் கொடுங்கள்.

அடர்த்தியான புருவத்திற்கு இரவில் செய்ய வேண்டிய மசாஜ்

புருவங்கள் அழகாய் இருந்தால் வசீகரமாக இருக்கும். சிலருக்கு பெரிய கண்கள் இருக்கும். புருவமே இருக்காது. பென்சில், மை போன்றவற்றால் அடர்த்தி செய்து கொள்வார்கள். இது நிரந்தர தீர்வாகாது. புருவங்கள் உங்களால் அடர்த்தியாக மாற்ற முடியும். அதற்கு சின்ன விஷயங்கள் செய்தால் போதும் சில வாரங்களில் முன்னேற்றம் காண்பீர்கள்.

எப்போதும் இரவுகளில் முடி வளர்ச்சி அதிகரிக்கும். ஆகவே இரவுகளில் புருவத்தை மசாஜ் செய்து எண்ணெய் தடவினால் விரைவில் பலனளிக்கும். இந்த குறிப்புகளை செய்வதற்கு முன் புருவ முடிகளை லேசாக கிள்ளி விடுங்கள். இதனால் வேர்கால்கள் தூண்டப்பட்டு, புருவம் வளர உதவும். அதன் பின் கீழே உள்ள குறிப்புகளை செய்து பாருங்கள்.

வெங்காயத்தில் சல்ஃபர் அதிகமாக உள்ளது. சொட்டையான புருவத்திலும் முடி வளரச்செய்யும். இரவு தூங்குவதற்கு முன், புருவத்தை லேசாக கிள்ளி விட்டு, சின்ன வெங்காய சாறை சிறிது எடுத்து ஒரு பஞ்சில் நனைத்து புருவத்தில் தடவுங்கள். காலையில் கழுவுங்கள்.

எலுமிச்சை துண்டை உங்கள் புருவத்தின் மீது வைத்து சில நிமிடங்கள் அப்படியே இருக்கவும். பின்னர் அதன் சாற்றினை தடவி பத்து நிமிடம் கழித்து கழுவுங்கள்.

கற்றாழையின் சதைப் பகுதியை எடுத்து புருவத்தில் தடவி வந்தால் புருவம் அடர்த்தியாக வளரும். தினமும் தடவி வந்தால், ஒரே வாரத்தில் மாற்றம் காண்பீர்கள்.

விளக்கெண்ணெய் மற்றும் நல்லென்ணெய் சம அளவு எடுத்து கலந்து கொள்ளுங்கள். இந்த எண்ணெயை இரவில் தடவி அதன் மேல் ஐ ப்ரோ பென்சிலால் வரைந்தால், சில வாரங்களில் வரைந்த மாதிரியே புருவங்கள் அடர்த்தியாக கிடைக்கும்.
 
#8
முகத்தில் பருக்கள் வரக்காரணமும் – தீர்வும்

முகத்தில் உள்ள சுரப்பிகளில் அடைப்பு மற்றும் பாக்டீரியா தொற்று, ஹார்மோன் மாற்றங்கள், சில வகை மாத்திரைகள், ஒவ்வாமை, அழகு சாதனங்கள் போன்ற காரணங்களால் முகத்தில் பருக்கள் வரலாம். அதைத் தொடுவதோ, கிள்ளுவதோ கூடாது. அதுவே மாறாத தழும்பாகிவிடும்.

சிலருக்கு முழங்கை, இடுப்புப் பகுதியில் பருக்கள் போலவும், தோலில் முட்களும் தோன்றலாம். இதற்கு, ஃபாலிகுலர் ஹைப்பர்கெரட்டோஸிஸ் என்று பெயர். வைட்டமின் ஏ, டி அத்தியாவசியக் கொழுப்பு அமிலம் ஆகியவற்றின் குறைபாட்டால் இது ஏற்படுகிறது.

பரு வராமல் தடுக்க :

அழகுப் பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இதற்குப் பதில், கேலமைன் க்ரீம்களைப் பயன்படுத்தலாம். தினமும் ஐந்து முறை முகத்தை உங்கள் சருமத்துக்கு ஏற்ற சோப்பினால் கழுவ வேண்டும்.

ஜாதிப்பூ மொட்டு, முல்லை மொட்டு இரண்டையும் சம அளவு எடுத்து, பால் விட்டு நைஸாக அரைத்து, பருக்களின் மீது பூசுங்கள். பருக்கள் மறைந்துவிடும். நிறமும் கூடும்.

எலுமிச்சம்பழச் சாறு, பாதாம் பருப்பு, தயிர் மூன்றையும் ஒன்றாகச் சேர்த்து அரைத்து முகத்தில் தடவி வந்தால், முகப்பருக்கள் மறையும்.

ஆறு மாதங்கள் தொடர்ந்து டாக்டரின் அறிவுரையின் பேரில் மாத்திரை, மருந்துகள் மற்றும் களிம்பு பயன்படுத்துவதன் மூலம், முகப்பரு மறுபடியும் வராமல் தடுக்கலாம்.

பருக்களால் முகத்தில் ஏற்படும் தழும்பு, வளரும் தன்மை உள்ள மரு, டாட்டூ மற்றும் பச்சை குத்தியதை நீக்குவதற்கும் நவீன சிகிச்சைமுறைகள் உள்ளன.

அனைத்து விதமான தோல் பிரச்னைகளுக்கும் அழகு கிரீம்களைக்கொண்டு மட்டுமே குணப்படுத்த முடியாது. தோலின் தன்மைக்குத் தகுந்த சிகிச்சைமுறையைத் தேர்வு செய்வதன்மூலம், வாழ்நாள் முழுவதும் தொடரும் சங்கடங்களைத் தவிர்க்க முடியும்

முகப்பருவை விரட்டும் எளிய மூலிகைகள்

வேப்பங்கொழுந்தை மையாக அரைத்து ஒரு சொட்டு நல்லெண்ணெய் விட்டு கலந்து முகப்பருக்களின் மீது பூசி வந்தால் பரு உடைந்து குணம் கிடைக்கும்.

பெரிய அளவில் பருக்கள் வந்தால் வெள்ளைப்பூண்டை அரைத்து பருக்களின் மீது பூசி வர, நிவாரணம் கிடைக்கும்.

சுத்தமான சந்தனத்தையும், கஸ்தூரி மஞ்சளையும் மையாக அரைத்து இரவில் முகத்தில் பூசி காலையில் கழுவி வந்தால் காலப்போக்கில் குணம் கிடைக்கும்.

கருந்துளசி இலைகளை பருக்களின் மீது பற்று போட்டு வந்தாலும் குணம் கிடைக்கும்.

புதினா, செம்பருத்தி இலை, மல்லிகை இலை மூன்றையும் தண்ணீருக்குப்பதிலாக தயிர் விட்டு அரைத்து பூசி வந்தால் நிவாரணம் கிடைக்கும்.

ஜாதிக்காய், சந்தனம், மிளகு மூன்றையும் அரைத்து பருக்களின் மீது பூசி வந்தால் குணம் கிடைக்கும்.

கறிவேப்பிலைக்கொழுந்தை மையாக அரைத்து தினமும் அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர, பருக்கள் குறையும். வேப்பிலைச்சாறு தினமும் குடித்து வந்தால் பருக்கள் வராமல் காத்துக்கொள்ளலாம்.

பருக்களால் வந்த தழும்புகளை நீக்க சில எளிய வழிகள்

பருக்கள் வந்ததும் அதனை கிள்ளுவதால் பருக்கள் போகும் போது தழும்புகளை உண்டாக்குகின்றன. இவ்வாறு ஏற்படும் தழும்புகள், முக அழகையே கெடுத்துவிடும். இதனைத் தவிர்க்க பருக்களை கிள்ளுவதை நிறுத்துவதோடு, வந்த தழும்புகளை மறைய வைக்க ஒருசில எளிய இயற்கை வழிகள் உள்ளன. அவற்றைப் பின்பற்றினால் ஏழே நாட்களில் மறையச் செய்யலாம். இங்கு ஏழே நாட்களில் பருக்களால் வந்த தழும்புகளை நீக்க உதவும் வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

மூன்று டேபிள் ஸ்பூன் கற்றாழை ஜெல்லுடன் ஒரு டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 7- 8 துளிகள் துளசி எண்ணெய் சேர்த்து நன்கு கலந்து, காற்றுப் புகாத டப்பாவில் அடைத்து ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும். பின் முகத்தை வெதுவெதுப்பான நீரில் துடைத்து, பின் இந்த க்ரீம்மை தடவ வேண்டும். இந்த முறையை தினமும் இரவில் படுக்கும் முன் பயன்படுத்தி வந்தால், பருக்களால் வந்த தழும்புகள் விரைவில் மறையும்.

சருமத்தில் உள்ள தழும்புகளை வைட்டமின் சி நிறைந்த பொருட்கள் எளிதில் மறையச் செய்யும். அதற்கு வைட்டமின் சி நிறைந்த எலுமிச்சை அல்லது ஆரஞ்சு பழத்தின் தோலை உலர வைத்து பொடி செய்து, தினமும் இரவில் படுக்கும் முன் ஒரு டேபிள் ஸ்பூன் பொடியில் கால்கப் தண்ணீர் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி பதினைந்து நிமிடம் கழித்து, முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

க்ரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள் வளமாக நிறைந்துள்ளது. எனவே ஒரு பௌலில் ஒரு டேபிள் ஸ்பூன் முல்தானி மெட்டி பொடி, ஒரு டீஸ்பூன் தேன் மற்றும் க்ரீன் டீ சேர்த்து ஃபேஸ்ட் செய்து, முகத்தில் தடவி முப்பது நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி ஒரு வாரம் தினமும் செய்து வந்தால், பருக்களால் வந்த தழும்புகள் மறைந்திருப்பதைக் காணலாம்.

ஒரு முட்டையின் வெள்ளைக் கருவுடன் இரண்டு டீஸ்பூன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து, முதலில் முகத்தை ஈரமான துணியால் துடைத்துவிட்டு, பின் இக்கலவையை முகத்தில் தடவி பதினைந்து நிமிடம் உலர வைத்து, பின் மீண்டும் அதன் மேல் தடவி உலர வைத்து, பின் முகத்தைக் கழுவ வேண்டும்.

இரண்டு டேபிள் ஸ்பூன் புதினா ஃபேஸ்ட்டை, ஒரு டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகருடன் சேர்த்து, அதோடு அரை கப் தண்ணீர் ஊற்றி நன்கு கலந்து, ஒரு பாட்டிலில் ஊற்றி, தினமும் இரண்டு முறை அந்த கலவையை முகத்தில் தடவி பதினைந்து நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இதன் மூலமும் பருக்களால் வந்த தழும்புகளைப் போக்கலாம்.
 
#9
இயற்கை முறையில் கரும்புள்ளிகளை நீக்க வழிகள்

அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள். நாம் வீட்டிலேயே இயற்கையான முறையில் சிக்கனமாகவும், நம்மை அழகுப்படுத்திக் கொள்ளலாம். கரும்புள்ளிகள் பெரும்பாலும் முகத்தில் தான் தென்படும். பெரும்பாலும் எண்ணெய்ப் பசை உள்ள சருமத்தில் தான் தென்படும். இந்த கரும்புள்ளிகள் பருக்களாக மாறும்.

ஆகவே வரும் முன் காப்போம் என்னும் பழமொழிக்கேற்ப, அவை பருக்களாக மாறும் முன், சரியான சிகிச்சைகளை மேற்கொண்டால், நிச்சயம் அந்த கரும்புள்ளிகளை போக்குவதோடு, சருமத்தை பொலிவோடும் அழகாகவும் வைத்துக் கொள்ளலாம். அதற்கான சில வழிகளை இப்பொழுது பார்க்கலாம்.

கருப்பு மற்றும் பச்சை நிறப் புள்ளிகள் இல்லாத உருளைக்கிழங்கை எடுத்து கொண்டு அதை சீவிக் கொள்ளவும். பின்பு அதனை கரும்புள்ளிகள் மீது பதினைந்து நிமிடங்கள் தேய்க்கவும். காய்ந்த பின்பு முகத்தை கழுவி விடவும். இவ்வாறு தொடர்ந்து வாரம் இரண்டு நாள்கள் செய்து வந்தால் விரைவில் நல்ல பலன் கிடைப்பதை காணலாம்.

எலுமிச்சை சாற்றினை முகத்தில் தடவினால் கரும்புள்ளிகளை நீக்குவது மட்டுமல்லாமல், அதிகப்படியான எண்ணெய்ப் பசை சருமத்தில் இருந்தும் விடுபடலாம்.

ஒரு மேஜை கரண்டி சர்க்கரையில் சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து, அதனை மூக்கிலும், கன்னத்திலும் உள்ள கரும்புள்ளிகள் மீது தடவி சிறிது நேரம் மசாஜ் செய்தால் நல்ல பலன் கிடைக்கும். அதுமட்டுமின்றி இந்த கலவை சருமத்தை பளிச்சிட செய்யவும் உதவும்.

இரண்டு மேஜை கரண்டி தயிருடன், இரண்டு மேஜைகரண்டி ஓட்ஸ் பொடி மற்றும் இரண்டு மேஜை கரண்டி எலுமிச்சை சாறு சேர்த்து கலக்கவும். இதனை கரும்புள்ளிகள் மீது தடவி பத்து நிமிடங்கள் காய விடவும். பின்னர் முகத்தை அலம்பவும். இது நல்ல பலனைத் தரும். இதை வாரம் ஒரு முறை செய்யலாம்.

சிறு துளி ஆலிவ் எண்ணெயுடன், எலுமிச்சை சாறு சேர்த்து உபயோகித்தால், அது கரும்புள்ளிகளை நீக்கும். அதற்கு இதனை முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மீது தடவி சில நிமிடங்கள் காய வைக்கவும். பின்னர் முகத்தை அலம்பவும்.

சருமத்திற்கு அழகு சேர்க்கும் மூலிகை மருத்துவ டிப்ஸ்

நன்றாக பழுத்த நாட்டு வாழைப்பழத்தினை ஆலிவ் ஆயில் சேர்த்து நன்றாக மசித்து பின் அதை முகத்தில் மற்றும் கை கால்களில் தடவி முப்பது நிமிடம் உலர விட்டு முகத்தை கழுவினால் போதும் முகம் டாலடிக்கும்.

உடல் மினுமினுப்பாக வேண்டுமானால் வெறும் வெளிப்பூச்சு மட்டும் போதாது. உள்ளுக்குள் கொடுக்கும் உணவும் மிக முக்கியம் என்பதை கருத்தில் கொள்ளுங்கள். இந்த உணவுகள் உடலுக்கு சென்று நமக்கு தேவையான மெலனினை தவிர மற்றவற்றை நீக்கி உடலை மிளிரச் செய்துவிடும் என்பதில் சிறு அச்சமும் கிடையாது.

இரவில் உறங்கச்செல்லுமுன் தேன், குங்குமப்பூ, மஞ்சள் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வரலாம். இவ்வாறு சாப்பிட்டு வர உடல் அழகைப்பெற்று மிளிரும்.

முகத்தினை வசீகரமாக்க நமக்கு தேவையானது சந்தனக்கட்டைதான். சந்தனக்கட்டையை நன்றாக எலுமிச்சை சாறு விட்டு தேய்த்து எடுத்து முகத்தில் பூசி உலர வைத்து கழுவுங்கள். உங்கள் முகத்தை பார்க்க உங்களுக்கே ஆசையாக இருக்கும்.

பலருக்கு கருப்புதான் பிரச்சினை. வெள்ளரிக்காய், கஸ்தூரி மஞ்சள், வேப்பம்பூ இவற்றை வாங்கி வைத்துக்கொண்டு மிக்ஸியில் போட்டு மைய அரைத்து பொறுமையாக தினமும் உடலில் தேய்த்து தடவி உலர வைத்த பின் குளித்து விடுங்கள். இதே போன்று ஒரு மாத காலம் தொடர்ந்து செய்து வாருங்கள். உங்கள் நிறத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும்.

கீரீம்களை தயவு செய்து தவிர்த்துவிடுங்கள். இது போலி தோற்றத்தை மட்டுமே உண்டாக்கும். கற்றாழையை முகத்தில் தடவிவிட்டு காயவிட்டு குளித்து வாருங்கள் முகம் பிரகாசமடையும்.
 
#10
அக்குள் கருமையை போக்க வழிகள்

பெரும்பாலானோரது அக்குள் கருமையாக இருக்கும். அதனால் அவர்கள் வெளியிடங்களுக்கு விருப்பமான ஸ்லீவ்லெஸ் ஆடைகளை அணியமாட்டார்கள். அப்படியே அணிந்தாலும், கைகளை மேலே தூக்கமாட்டார்கள். ஏனெனில் அக்குள் கருமையாக இருந்தால், அது மிகவும் அசிங்கமான தோற்றத்தைக் கொடுக்கும்.

இத்தகைய அக்குள் கருமையைப் போக்குவதற்கு நிறைய வழிகள் உள்ளன. மூலிகைகள் அனைத்தும் எளிதில் கிடைக்கக்கூடிய பொருட்கள் தான். இவற்றில் சில பொருட்கள் ஒருசிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்துவதால், அக்குளில் பயன்படுத்துவதற்கு முன்னர், இதனை ஒருமுறை கைகளில் சோதித்துக் கொள்ள வேண்டும். அக்குள் கருமையைப் போக்கும் சில வைத்தியங்களைப் பார்க்கலாம்.

கற்றாழையின் ஜெல்லை அக்குளில் தடவி மசாஜ் செய்து, ஒரு மணிநேரம் ஊற வைக்க வேண்டும். இப்படி இரண்டு நாட்களுக்கு ஒரு முறை செய்து வந்தால், நிச்சயம் அக்குள் கருமை நீங்கும்.

எலுமிச்சையில் ப்ளீச்சிங் தன்மை இருப்பதால், இதன் சாற்றினைக் கொண்டு, கருமையான அக்குளை மசாஜ் செய்து கழுவ வேண்டும். இதனால் அக்குள் கருமை மறையும். ஆனால் சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள், எலுமிச்சையை பயன்படுத்தக்கூடாது. இதனால் எரிச்சல் ஏற்படுவதோடு, சருமம் மேலும் பாதிக்கப்படும்.

ரோஸ் ஒரு அருமையான நறுமணமிக்க மலர். அத்தகைய மலரின் இதழ்களை அரைத்து அக்குளில் தடவி, ஒரு மணிநேரம் ஊற வைத்து கழுவ வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் படிப்படியாக கருமை மறையும்.

மஞ்சளுக்கு சருமத்தின் கருமையை போக்கும் தன்மை அதிகம் உள்ளது. ஆகவே மஞ்சளை தண்ணீரில் கலந்து ஃபேஸ்ட் போல் செய்து, சருமத்தில் தடவி உலர வைக்க வேண்டும். குறிப்பாக இந்த முறை சென்சிடிவ் சருமத்திற்கு ஏற்றது.

அதிமதுர வேரை தண்ணீர் ஊற வைத்து அரைத்து, அதனை கருமையாக இருக்கும் அக்குளில் தடவி உலர வைக்க வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு ஒருமுறை செய்ய வேண்டும். இதனால் அக்குள் கருமை மறைவதோடு, அக்குளில் துர்நாற்றம் வீசாமலும் இருக்கும்.

சருமத்தில் இருக்கும் பல்வேறு பிரச்சனைகளை போக்குவதில் வேப்பிலை ஒரு சிறந்த மூலிகைப் பொருள். அந்த மூலிகைப் பொருள் சருமத்தை வெள்ளையாக்கவும் பெரிதும் உதவியாக உள்ளது. ஆகவே வாரத்திற்கு ஒரு முறை வேப்பிலையை அரைத்து, அக்குளில் தடவி உலர வைத்து கழுவ வேண்டும்.
 

Sponsored Links

Top