• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

அவனும் நானும் அனலும் பனியும்...13

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Tamilchelvi

இணை அமைச்சர்
Author
Joined
Aug 17, 2019
Messages
681
Reaction score
1,291
Location
Erode
வணக்கம் தோழமைகளே!
சென்ற பதிவிற்கு கருத்துக்களை தெரிவித்தவர்களுக்கு நன்றி! இன்றைய பதிவுக்கும் உங்கள் கருத்துகளை அறிய ஆவலாக உள்ளேன், அடுத்த பதிவு வரும் வெள்ளியன்று வரும், நிச்சயம் வாரம் இரு பதிவுகள் வரும்! உங்கள் ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றி!

eiQNZBU76529.jpg

அவனும் நானும் அனலும் பனியும்..13
..............................

ஆட்டோவில் வந்து இறங்கிய பாரதி கடும் கோபத்தில் இருந்தாள் , திறந்து கிடந்த கதவை வேகமாய் தள்ளியவள், "உனக்கு கொஞ்சமாவது அறிவு இருக்கா விக்ரமா? இப்படித்தான் தனியா விட்டுட்டு வருவியா? கூட்டிட்டு போனோமே திரும்ப கூட்டிட்டு வரணும்னு அறிவு உனக்கு இல்லையா? என திட்டியபடியே உள்ளே வந்தாள் பாரதி..


ஆனால் அவள் திட்டியது எதுவும் காதில் விழாதாவாறு இலக்கின்றி எதையோ வெறித்தபடி, வேதனை வழிந்த முகத்தோடு அமர்ந்திருந்தான் மாறன்..


உன்கிட்ட தானே கேட்கிறேன்? எதுக்கு என்னை விட்டுட்டு வந்த... என அவன் எதிரே வந்து நின்று, இடுப்பில் கைவைத்து கேட்டவள்,அப்போதுதான் அவன் முகத்தில் படிந்திருந்த மட்டற்ற வேதனையை பார்த்தாள், திடுக்கிட்டவளாக, அவன் மேல் இருக்கும் கோபம் வடிந்தவளாக," என்னாச்சு? என்னாச்சு விக்ரமா? ஏன் இப்படி இருக்க.. ஹோட்டல்ல என்ன நடந்துச்சு... திடீர்னு ஏன் இப்படி ஆகிட்ட... என அவனை உலுக்கினாள்..


அவள் உலுக்கியதில், சுற்றம் உணர்ந்தவன், மெல்ல நிமிர்ந்து அவளைப் பார்த்தான், அந்தப் பார்வை ஆயிரம் அர்த்தங்களை உள்ளடக்கியது, ஆனால் அதன் அர்த்தம் விளங்கவில்லை அவளுக்கு...


நான் பொண்ணுங்க பின்னால சுத்துற பொறுக்கியா? திடீரென அவளைப் பார்த்துக் கேட்டான் மாறன், அவன் கேள்வியில் துணுக்குற்றவள்

ஏன் இப்படி கேக்குற? ஹோட்டல்ல என்ன நடந்துச்சு?.. ப்ளீஸ் சொல்லுங்க.. என அவள் கேட்க...


அதற்குமேல் தாளாமல், வேதனை நிறைந்த குரலில், வார்த்தைகள் வலியோடு வர அங்கே நடந்ததை அப்படியே சொன்னான் மாறன்.


அதைக்கேட்ட பாரதிக்கு அவனைவிட வேதனை தொற்றிக்கொண்டது, அவனுக்கு இப்படி ஒரு அவப்பெயர் வர காரணம் அவளல்லவா… அறியாத வயதில் புரியாமல் செய்ததின் விளைவு பூதாகரமாய் இருந்தது.. அவனை என்ன சொல்லி சமாதானப்படுத்துவது என்றே அவளுக்கு புரியவில்லை, அவளும் எத்தனையோ முறை இந்த பிரச்சினை பற்றி பேச நினைத்து இருந்தாள், ஆனால் சரியான வாய்ப்பு கிடைக்காமல் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது இன்று அதைப் பற்றி பேசியே ஆக வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது, ஒரு பெருமூச்சோடு பேச்சைத் தொடங்கினாள் பாரதி..


" என்னை மன்னிச்சிடு விக்ரமா! எல்லாத்துக்கும் நான்தான் காரணம், நான் அப்ப பத்தாவது படிக்கிற பொண்ணு தானே பார்த்ததை தப்பா புரிஞ்சுகிட்டு அதை அப்படியே சொல்லிட்டேன், அந்த சரவணன் சார் உன் மேல என்ன கோபத்தில் இருந்தாரோ நான் சொன்னதை அவருக்கு சாதகமாக எடுத்துட்டு சூழ்நிலையை உனக்கு எதிராக திசை திருப்பி விட்டார், நீ அவ்வளவு பெரிய இக்கட்டுல மாட்ட முழுக்க முழுக்க நான் தான் காரணம், சத்தியமா எனக்கு அது அப்ப புரியல! இப்ப மனசார அதுக்கு மன்னிப்பு கேட்கிறேன், தயவு செய்து என்னை மன்னிச்சிடு.. எப்பவோ நடந்ததற்கு இனிமே பிராயச்சித்தம் செய்ய முடியாது, அதை மறந்து விடு ப்ளீஸ்.. என தன் குணாதிசயத்தை மீறி பணிவாக வேதனையோடு கேட்டாள் பாரதி..


மறக்குற மாதிரியா நீ செஞ்சு வச்சு இருக்க? என்மேல கொலைப்பழி போட்டு இருந்தா கூட மன்னித்து விடுவேன்.. ஆனால் நீ போட்ட பழி.., அது தந்த காயம் இன்னும் அப்படியே ஆறாத வடுவாய் மனசுல இருக்கு, உனக்கு அன்னைக்கு நடந்தது மட்டும் தானே தெரியும், அதுக்கப்புறம் நான் அதனால எத்தனை பிரச்சினையை வாழ்க்கையில சந்தித்தேனு உனக்கு தெரியுமா? நான் அந்த காயத்ரிக்கு உடம்பு சரியாகி திரும்ப வந்து விட்டால், எல்லா உண்மையும் எல்லோருக்கும் தெரிந்துவிடும் , என் மேல எந்த தப்பும் இல்லன்னு எல்லோருக்கும் புரிந்திடும்னு நெனச்சேன், ஆனா அந்த பொண்ணு திரும்ப வரவேயில்லை ,ஹாஸ்பிடல்ல இருந்து அப்படியே சொந்த ஊருக்கு போயிட்டா, அவளோட டீசி கூட வந்து வாங்கிக்கலை.. நானும் அவளை கண்டுபிடிக்க எவ்வளவோ முயற்சித்தேன், ஆனால் முடியவே இல்லை, ஊர்ல எல்லோருமே என்னை தப்பா பேச ஆரம்பிச்சுட்டாங்க, என்னால வெளியில் தலை காட்டவே முடியல , எங்க அப்பாகிட்ட சரவணன் ஒரு நாள் இதப் பத்தி பேசி வம்பிழுக்க..அவங்களுக்குள்ள அடிதடி ஆயிருச்சு.. ரொம்ப வேதனையோடு பைக்ல வந்துட்டு இருந்தவரு எதிர்ல வந்த லாரில மோதி விபத்தாகிடுச்சு,தலைல நல்ல அடி, பெரிய ஆபரேஷன் பண்ணி தான் அவரை காப்பாற்ற முடிந்தது, ஆனால் அந்த ஆபரேஷனுக்காக எங்களுக்கு சொந்தமான வயலை விற்க வேண்டியதா போய்டுச்சு, சொந்த ஊரில் சொந்த நிலத்தில் விவசாயம் பார்த்து பெரிய ஆளா ஆகணும்ன்னு ஆசைப்பட்ட என்னோட நினைப்பு வீணா போச்சு, சுத்தி இருக்கிறவங்க கேலி பேச்சு கேட்க முடியாமல், வெளியூரில் போய் பிடிக்காத இன்ஜினியரிங் படித்து, பாசைபுரியாத ஊர்ல வேலை பார்த்து எத்தனையோ கஷ்டப்பட்டேன், லீவுல ஊருக்கு போக கூட யோசிப்பேன் எவனாவது அதை பத்தி எதாவது கேட்பான்னு பயந்து? ... இப்ப நீ கேக்குற மன்னிப்பு அது எல்லாத்தையும் சரி பண்ணிடுமா? சொல்லு.. என கோபமாய் மூச்சு வாங்க பேசியவனக்கு பதில் சொல்ல முடியாமல் தலை கவிழ்ந்தாள் பாரதி.. அவளை மீறி விழிகள் கசியத் தொடங்க..இமை கொட்டி அதை அடக்கினாள், சில நேரம் சிலர் தரும் காயங்கள், எத்தனை காலம் கடந்தாலும் மறையாமல் வடுவாக மாறிவிடுகிறது, எதைச் சொல்லி அவனைத் தேற்றவென தெரியவில்லை அவளுக்கு,


தனக்குள் படிந்த வேதனையை அடக்கியவள், தன்னை நிதானப் படுத்திக் கொண்டு சோபாவில் அமர்ந்திருந்த அவன் எதிரில், கால்களை மடக்கி அமர்ந்து மெதுவாக," இங்க பாரு விக்ரமா நடந்த எதையுமே என்னால மாத்த முடியாது, அந்த வயசுல எதுவும் புரிஞ்சுக்க முடியாம நான் செஞ்ச தப்பு அது, உன்னோட எந்த இழப்பையும் என்னால ஈடு செய்ய முடியாது, நான் ஏதாவது செஞ்சா அதை எல்லாம் நீ மறந்திடுவேன்னா நீ சொல்லு, நான் என்ன வேணா செய்ய தயாரா இருக்கேன், ஆனா நீ அதையே நினைச்சு வேதனைப்பட்டு எதுவும் ஆகப்போவதில்லை,, நான் தப்பு பண்ணியதா நீ நெனச்சா அதற்காக மனம் வருந்தி உன்கிட்ட மன்னிப்பு கேட்டுக்கறேன், இழந்த நாட்களை நினைத்து, இருக்கிற நாட்களை இழந்த நாட்களாய் மாற்ற நினைக்காதே, இன்னையோட இந்த பழசை மறந்துட்டு புதுசா வாழலாம்.. என பேசியவள், அவன் மடி மீது இருந்த கைகளின் மேல் தன் கையை வைக்க வெடுக்கென அந்த கைகளை உதறியவன்,


கூடப் படிச்சவன் ரொம்ப நாள் கழிச்சு பார்த்தப்ப கூட என் கூட பேச விரும்பாம, அவன் மனைவியை அறிமுகப்படுத்த கூட தகுதி இல்லாதவனா, ஒரு பொம்பள பொறுக்கியா என்னை ட்ரீட் பண்ணா எனக்கு எப்படி இருக்கும்? உன்னை மன்னித்து விட்டால், இந்த அவமானம் எல்லாம் காணாமல் போய்விடுமா என்ன? என மீண்டும் சீறினான் மாறன்..


சும்மா அந்த யுவராஜ் சொன்னதையே நினைச்சு பீல் பண்ணாத விக்ரமா, ஒரு பேச்சுக்கு சொல்றேன் நீ தப்பானவனாகவே இருந்துட்டு போ, உன் கிட்ட அவன் மனைவியை அறிமுகப்படுத்த கூடாதா? அதனாலே என்ன? அவனுக்கு பயம், இந்த மாதிரி ஆளுங்க சிலர் இருக்காங்க பொண்டாட்டி எந்த ஆம்பிளை கூடவும் பேசக் கூடாது, அப்படி பேசி பழகினா அவன் கூடவே போயிடுவாங்கனு நினைக்கிற கேவலமான பிறவிங்க..அந்த மாதிரி ஆளு சொன்னதற்காக நீ எதுக்கு இப்படி ஃபீல் பண்றே.. நான் தானே நீ தப்பானவன்னு பழியைப் போட்டேன், இப்ப நானே உன்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டு வாழ்ந்துட்டு இருக்கேன், அது போதாதா நீ நல்லவன்னு ப்ரூவ் பண்ண? எவனோ என்னமோ சொன்னான்னு, எதுக்கு நீ இவ்ளோ ஃபீல் பண்ற.. இப்படி ஒவ்வொருத்தங்க பேசுவதற்கும் ,தப்பா நினைக்கிறதுக்கும் நாம பதிலும் விளக்கமும் சொல்லிட்டு இருந்தா, நாம வாழற வாழ்க்கை அர்த்தம் இல்லாம, சந்தோஷம் இல்லாம போய்விடும், எந்த நல்லவங்களும் தங்களை நல்லவங்கன்னு நிரூபிக்க தேவையில்லை, நீ எதையும் போட்டு குழப்பிக்காதே, இப்போ உன் முன்னால அழகான வாழ்க்கை காத்துக்கிட்டு இருக்கு, என்னைக்கோ நடந்ததை நினைச்சு கவலைப்பட்டு, வரும் காலத்தையும் சிக்கலாக்கிக்காதே!
விக்ரமா! பிளீஸ்.. எல்லாத்தையும் மறந்திடு .. சந்தோசமா புதுசா வாழ ட்ரை பண்ணு...மிக பொறுமையாக அவனிடம் பேசினாள் பாரதி!


முடியாது! உன்னால எப்படி எதையும் மாற்ற முடியாதோ! அதே மாதிரி என்னால எதையும் மறக்க முடியாது! எப்படி மறக்க..? அதான் அதை எப்பவும் ஞாபகப்படுத்துற மாதிரி நீ கூடவே இருக்கியே.. நான் உன்னை பழிவாங்க தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன் ஆனால் ... என எதையோ சொல்ல வந்தவன், அதை அப்படியே தொண்டைக்குள் விழுங்கி கொண்டு எழுந்தான்,


தயவு செய்து என்னை தொந்தரவு பண்ணாதே! முடிஞ்சா உன் முகத்தை என் முன்னால் காட்டாமல் இரு, அதுவே போதும்.. லீவ் மீ அலோன்.. என கத்தியபடி தன் அறைக்குள் சென்று படாரென கதவை அறைந்து சாத்தினான்..


அது அவள் முகத்தில் அடித்தது போலவே இருந்தது பாரதிக்கு.. வெகுநேரம் வரை அந்த மூடிய கதவையே பார்த்து இருந்தவள், ஒரு பெருமூச்சோடு எழுந்து , நீண்ட நாட்களாய் பயன்படுத்தாமல் இருந்த தன் அறையை திறந்தாள், ஏனோ அதுவும் அவள் மனதைப் போலவே வெறுமையாய் தெரிந்தது அவளுக்கு..


இனி தான் பேசி புரிய வைக்க எதுவுமே இல்லை, அவனாகவே புரிந்து நிதர்சனத்தை ஏற்றுக் கொண்டால்தான் உண்டு , எப்படியும் எல்லாத்தையும் உணர்ந்து கொள்வான் என நம்பிக்கையோடு நினைத்துக் கொண்டவள், கட்டிலில் படுத்து இமை மூடிக் கொண்டாள், இரவின் நிசப்தத்தில் தன் காதுகளில் தாலாட்டாய் கேட்கும் அவனின் சீரான மூச்சு சத்தம் கேட்காமல் உறக்கமும் அவளைத் தழுவ மறுத்தது!


புலர்ந்ததும் புலராத காலையில் எழுந்து கொண்டவள், வெளியே வந்ததும் எதிர் அறையை நோக்கினாள், ஆனால் அது மூடியே இருந்தது, பாரதி இரவெல்லாம் யோசித்து ஒரு முடிவுக்கு வந்திருந்தாள், பழைய விஷயங்களை இனி பேசக்கூடாது, முடிந்தவரை மாறனை மாற்ற முயற்சிக்க வேண்டும் என முடிவெடுத்திருந்தாள், வேகமாக சமையலறைக்கு சென்றவள், அவனுக்கு பிடித்ததாய் சமைக்கத் தொடங்கினாள், சமையல் முடியும் தருவாயில், அறை வாயிலில் வந்து நின்றான் மாறன்!


" குட் மார்னிங்!" என முகம் முழுக்க புன்னகையோடு அவனுக்கு தேனீர் கோப்பையை தந்தாள் பாரதி, அவனோ தேநீர் குவளையையும், குவளை மலர் போல் இருந்த மங்கையையும் மாறி மாறி பார்த்தான், பின் அவளை முறைத்துக் கொண்டு உள்ளே சென்று தண்ணீர் பருகி விட்டு வெளியேறினான்.


துரை இன்னும் கோபத்தில் தான் இருக்காரு போல...வழக்கமா வேதாளம் தான் முருங்கை மரம் ஏறும், ஆனா நம்ம கதையிலே இந்த விக்கிரமாதித்தன் தான் அடிக்கடி முருங்கை மரம் ஏறுகிறான்,எப்படி இறக்கறதுன்னு தான்தெரியல.. என மனதோடு புலம்பியவள், சமைத்ததை எல்லாம் டைனிங் டேபிளில் கொண்டு வந்து வைத்தாள்..


சற்று நேரத்தில் அலுவலகம் செல்ல கிளம்பி வந்த மாறன், சாப்பிடாமல் வெளியேற, அதுவரை பொறுமை காத்த படி இருந்த பாரதி கோபமாய் அவன் முன்னே சென்று,"இன்னைக்கு சமைக்கிறது உங்க டர்ன், ஆனா நீங்க மூட் ஆப்ல இருக்கீங்கன்னு தான் நானே உங்களுக்கு புடிச்சதா சமைத்தேன், ஆனா அது எதையும் சாப்பிடாமல் நீங்க பாட்டுக்கு போறீங்க?.. என்றவள் ,பின் அவனருகே வந்து, கோபமும், சோகமும் அழுகிய தக்காளி மாதிரி, அதை உங்க பாக்கெட்டிலேயே வச்சுட்டு சுத்துனா நாளாக நாளாக அது அழுகி நாறி, உங்க மனசு, உடம்பு எல்லாமே அழுக்கு ஆயிடும், அதனால அதை தூக்கி தூர வீசுங்க.. கடந்த காலம் கடந்ததா இருக்கட்டும், டைம் மிஷினில் ஏறிப் போய் அதுல எதையும் மாற்ற முடியாது! புரியுதா.. சோ வாழ்க்கையை சந்தோசமா வாழ.. என பேசிக் கொண்டே சென்றவளை இடை மறித்த மாறன்..


நான் நேத்து மனசு உடைஞ்சு அவ்வளவு பேசியும், நீ இப்ப இவ்வளவு கேஷுவலா பேசுற, உன்கிட்ட ஷட் அப் சொல்றதுக்காக கூட பேச எனக்கு பிடிக்கல, உன்ன பார்க்கவும் பிடிக்கல.., இது வரைக்கும் யாரையும் நான் கைநீட்டி அடித்ததில்லை, என்னை அடிக்க வைத்து விடாதே! என்கிட்ட ஒதுங்கி நிற்பது தான் உனக்கு நல்லது, என கை நீட்டி மிரட்டியவன், தனது இரும்புக் குதிரையை ஸ்டார்ட் செய்ய, அதுவும் அவனை போல் முறுக்கிக்கொண்டு புகையைக் கக்கியபடி வேகமாய் பாய்ந்தது..


பாவம் என்று பார்த்து கொஞ்சம் விட்டுகொடுத்து பொறுமையா பேசினா ரொம்பத்தான் சீன் போடற.. இங்க தானே திரும்பி வருவே.. வா உன்னை என்ன பண்றேன்னு பாரு! என அவன் போன திசையை பார்த்து சத்தமிட்டு கொண்டிருந்தாள் பாரதி.. கோபமாய் பேசினால் அடங்கி அமைதியாக மாறுபவளா அவள்…அவள் பயந்து பதுங்குற முயல் குட்டியா? பதுங்கி பாய்கிற பெண் புலியன்றோ?...


…….
தன் சீட்டில் அமர்ந்து வேண்டாவெறுப்பாய் வேலை பார்த்துக் கொண்டிருந்த மாறனை கவனித்த ராகவ், அவனருகே சென்று ஆதுரத்துடன் தோளை தொட்டு,' என்ன ஆச்சு, ஏன் ஒரு மாதிரி டிஸ்டர்புடா இருக்க.. கான்சன்ட்ரேட் பண்ண முடியலைன்னா வேலையை செய்யாதே, என்று சொல்ல..


"டேய் அப்படின்னா நான் என்னைக்குமே வேலை செய்ய முடியாது! என பக்கத்து சீட்டில் இருந்து குரல் கொடுத்தான் மகேந்திரன்..


அடேய் நான் சொன்னது உண்மையா வேலை செய்றவங்களை.. வேலை செய்யற மாதிரியே காலமெல்லாம் பாவ்லா காட்டற உன்னை மாதிரி ஆளுக்கு இது ஒத்துவராது கண்ணா…! என்று மகேந்திரனிடம் சொன்னவன், மாறனிடம் திரும்பி," நீ சொல்லு.. என்னாச்சு? எப்பவும் உற்சாகமாக இருப்ப.. இன்னைக்கு ஏன் இவ்வளவு டல் அடிக்கிற.. பாரதி கூட ஏதாவது பிரச்சனையா? அதனால்தான் மூட் அவுட்டா இருக்கியா? என்று கேட்டான்..


"போடா டேய்! பொண்டாட்டி கூட சண்டை போட்டா மூட் அவுட்டா இருக்கணும்னா நான் காலமெல்லாம் அப்படித்தாண்டா இருக்கணும், மின்சாரத்தை விட மோசமானது சம்சாரம், என்னதான் ஹேர் ஃபுல்லா ஹேண்டில் பண்ணினாலும் அது ஷாக் அடிக்கும், அடிச்சுகிட்டே தான் இருக்கும்... என மகேந்திரன் கவுண்டர் கொடுக்க..


நீ கொஞ்சம் பேசாம இருக்கியா மகி,அவன்கிட்ட நான் கேட்டுட்டு இருக்கேன் என்றவன், , நீ எழுந்திரி மாறா, நாம கேண்டீனில் போய் பேசலாம், இங்க கொசு தொல்லை அதிகமா இருக்கு! என மகேந்திரனை பார்த்தபடி சொன்னான் ராகவ்..


அதான் கொசுத்தொல்லைன்னு ஒரு கூலிங்கிளாஸ் போட்ட ஈ சொல்லுதல்ல...நீ கேண்டீன் போ மாறா அங்க தான் இந்த ஈ யோட சொந்தகாரங்க நிறைய பேர் இருப்பாங்க! என்று சொன்னான் மகி…


அடிங்க... என்ன பாத்தா ஈ மாதிரி தெரியுதாடா உனக்கு? என்று ராகவ் சீற..


அப்ப நா மட்டும் சிக்கன்குனியா கொசு மாதிரி தெரியறனா உனக்கு? என பதிலுக்கு எகிறினான் மகி..


இருவரின் கத்தலும் தாங்க முடியாத மாறன்," தயவு செஞ்சு ரெண்டு பேரும் கொஞ்சம் அந்தப் பக்கம் போய் சண்டை போடுங்க! ஏற்கனவே நான் கடுப்புல இருக்கேன், மேற்கொண்டு வெறுப்பேத்தாம போங்கடா!" என திட்டினான்..


அடுப்புல வெந்ததை வயித்துல போட்டா கடுப்பு எல்லாம் காணாமப் போயிடும், மனசுல இருக்குறத அப்படியே கொட்டி கவுத்துட்டா வெறுப்பு எல்லாம் கரைஞ்சி போய்டும், நீ வா மாப்பு, ராகவ் சொன்னமாதிரி கேண்டீனுக்கே போலாம்! என மாறனை வலுக்கட்டாயமாக இழுத்துக் கொண்டு சென்றான் மகேந்திரன், ராகவும் சிரித்துக்கொண்டே அவர்கள் கூட சென்றான்..


மாறனுக்கும் தன் மனதில் இருப்பதை எவரிடமாவது கொட்டினால் நன்றாக இருக்கும் என தோன்ற, தன் இரு நண்பர்களிடமும் நடந்த அனைத்தையுமே பகிர்ந்து கொண்டான்.


பாரதி சொன்ன மாதிரி சின்ன வயசுல அவங்க பண்ணதுக்கு இப்ப என்னடா பண்ண முடியும்? இது ரொம்ப சின்ன விஷயம் டா! அதை நீ இவ்வளவு தூரம் மனசுக்குள்ள போட்டு குழப்பி கவலைப்பட தேவையே இல்லை, பாரதி மாதிரி ஒரு அருமையான பொண்ணு உனக்கு கிடைத்து இருக்கா, அவ கூட சந்தோஷமா வாழ்வதை விட்டுட்டு, ஏண்டா எப்பவோ நடந்ததை நினைச்சு உன் நிம்மதியையும் கெடுத்து, அந்த பொண்ணு வாழ்க்கையும் கெடுத்துட்டு இருக்கே.. என மாறனை கடிந்து கொண்டான் ராகவ்..


அதுவரை மாறனை கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்த மகேந்திரன், "உண்மையைச் சொல்லு மாறா!! உனக்கு பாரதியை ரொம்ப பிடிச்சிருக்கு தானே? உன் வாழ்க்கையில நடந்த அத்தனையும் மீறி அவங்க மேல உனக்கு காதல் இருக்குதானே? எனக்கேட்க..


ஆமாம் என்பது போல் மெதுவாக தலை ஆட்டினான் மாறன்..


அப்புறம் என்னடா பிரச்சனை உனக்கு சந்தோசமா வாழ்க்கைய ஸ்டார்ட் பண்ணு, எப்பவோ நடந்ததை நினைச்சுட்டு கல்யாணமாகியும் பிரம்மச்சாரி மாதிரி ஏன் இப்படி கஷ்டப்பட்டுட்டு இருக்க.. மச்சி வாழ்க்கை ஒருமுறைதான், உனக்கு மறு ஜென்மம் இருக்கு, மறுபடியும் நீ மாறனா பிறப்பேன்னு எந்த கேரண்டியும் கிடையாது, சும்மா தேவையில்லாத டென்ஷனை திரும்பத் திரும்ப மண்டைல ஏத்திக்கிட்டு என்னடா சாதிக்க போற, எல்லாத்தையும் விட்டுட்டு சந்தோசமா வாழப் பாரு! என மகேந்திரன் கூட பொறுப்பாய் அறிவுரை கூற, ராகவும் அதை ஆமோதித்து அவனும் மாறனிடம் பல விஷயங்களை பேசி குழப்பத்தில் இருந்தவனை தெளிவிக்க முயற்சித்தான்..


அவன் தெளிந்தானோ இல்லையோ, பக்கத்து டேபிளில் இருந்த சுபா இந்த பேச்சைக் கேட்டு ஒரு தெளிவான முடிவுக்கு வந்தாள்..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top