• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஆண்மையெனப்படுவது யாதெனில்.14.(பேராண்மை)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 46

மண்டலாதிபதி
Author
Joined
Nov 4, 2021
Messages
408
Reaction score
787
Hi friends ❣
நானும் ஒரு வாரத்தில் மூன்று பதிவு போடுவேன் என்று நினைத்துக் கூட பார்த்ததில்லை. தங்களின் ஆதரவில் தான், தைரியமாக எழுதுகிறேன். எப்பவும் போல் தங்கள் அன்பான ஆதரவை வேண்டி, என்றென்றும் ‌அன்புடன் உங்கள் அனாமிகா 46
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰🥰

*14*
"இன்னும் இந்த சகுந்தலாவை பாருய்யா! எப்படிக் கட்டுக் குலையாம இருக்கானு. அன்னைக்கி பாத்த மாதிரியே இப்பவும் அப்படியே இருக்காய்யா!"காரில் சாய்ந்து கொண்டு சிகரெட்டை எடுத்து வாயில் வைக்க, அதைப் பற்றவைத்த தன் அல்லக்கையிடம் முத்துச்சாமி கூறிக் கொண்டிருந்தான்.

காருக்குள் அமர்ந்து சீட் பெல்ட்டைப் போட்டவன் காரை ஸ்டார்ட் பண்ண சாவியில் கை வைக்க, தன் அன்னையின் பெயர் காதில்‌ விழ, அப்படியே தேவாவின் கரம் நின்று விட்டது.

காலையில் கதிரேசனும், சகுந்தலாவும் குவாரி முதலாளிகள்‌ மற்றும் செராமிக் டைல்ஸ் வியாபாரிகள் சங்க உறுப்பினர்கள் மீட்டிங்கில் கலந்து கொள்ள தயாராகி அமர்ந்து இருந்தனர். சென்ற வாரம் தேவாவிடம் கூறிய நிகழ்வு தான்.

இப்பொழுதெல்லாம் மாலை மயங்கும் முன் வீடு வந்து விடுபவனிடம், முன்தினமே அவனுக்கு நினைவு படுத்தியாகியும் விட்டது. எனினும் வருவானா என்ற சந்தேகத்தில் சகுந்தலாதேவி இருக்க,

"அவன் கண்டிப்பா வருவான்!"என கதிரேசன் கூறினார்.

"எப்படி சொல்றீங்க கதிர்?"என ஆவலாகக் கேட்க,

"ஒரு ஆண்‌ மனசு ஆணுக்குத் தானே தெரியும்!"என்று அவர் கூறியவிதத்தில்,

"அப்ப உங்க மனசு எனக்கு தெரியலைனு குத்தி காமிக்கறீங்களா?"என்று முகம் திருப்பிக் கொண்டார்.

"பரவாயில்லையே! மருமக போட்டு வாங்குனதுல மெதுவா பொண்டாட்டி போஸ்ட்டிங்குக்கு ப்ரோமோட் ஆகுறாப்ல இருக்கே?"எ‌ன்று அவரைக் கேலி பண்ணி சிரிக்க, சகுந்தலா கதிரேசனை திரும்பிப் பார்த்து முறைத்தார்.

கதிரேசனும் சகுந்தலாவைப் பார்த்து புருவம் ஏற்றியிறக்க, பக்கென்று சிரித்து விட்டார்.

ஏதோ இருவருக்கும் இடையில் இருந்த இருக்கம் கடந்த சில நாட்களாக சற்றே தளர்ந்த உணர்வு.

இவர்கள் சிரிப்பதைப் பார்த்துக் கொண்டே தேவா முன்னால் இறங்க பின்னாலேயே வள்ளி இறங்கி வந்தாள். சத்தம் கேட்டு திரும்பியவர் இறங்கி வந்த தன் மகனையே பார்த்துக் கொண்டிருந்தார், அவன் மீது வைத்த கண்ணை திருப்ப முடியாமல். கருப்பு கலர்‌பேன்ட் மற்றும் வெள்ளை கலர் முழுக்கை லினன் சட்டையை டக்இன் செய்திருந்தான். அலைபாயும் கேசம். அடர்ந்த புருவத்துடன், மாநிறத்தில், சற்று திமிர் காட்டும் முகம். வலக்கையில் வெள்ளி காப்பு, இடக்கையில்‌ ரோலக்ஸ், கழுத்தில் மெல்லிய செயின்.

இத்தோற்றம் புதிது. எப்பொழுதும் கட்டப்பஞ்சாயத்துக்காரன்‌ மாதிரி வலக்கையில் தடிமனான செயின், அதே போல் கழுத்திலும் ஒன்று. முறுக்கேறிய சதை தெரிய அரைக்கை சட்டை, எப்பொழுதும் திறந்தே கிடக்கும் சட்டையின் இரண்டு மேல் பட்டன்கள் என சுற்றும்‌ மகனின் தோற்ற மாறுபாட்டை பார்த்துக் கொண்டே இருந்தார்.

"உடம்பு ஓகேவா‌ ம்மா?"என கதிரேசன் வள்ளியை விசாரிக்க, அப்பொழுது தான் வள்ளியின் பக்கம் சகுந்தலாவின் கவனம் திரும்பியது.

"வாமிட்டிங் டேப்லட் போட்டிருக்கேன் அங்கிள். மதியம் வரைக்கும் தாங்கும்னு நினைக்கிறேன்,"என்றாள்.

சாம்பல் நிற புடவையில் மெரூன் கலர் பார்டர் கொண்ட காட்டன் புடவையில் திருத்தமாக இருந்தாள். வலக்கையில் ஒற்றை தங்க வளையல், இடக்கையில்‌ கறுப்பு கலர் வாட்ச். நெற்றியில் சிறு‌ பொட்டொடு மெல்லிய விபூதி தீற்றல். வகிட்டில் குங்குமம். தளர‌பின்னிய கூந்தல். முடி ஈரமாக இருப்பதைக் கவனித்தார்.

"ஏன் வள்ளி? தலையைக் காய வைக்கலியா? இவ்ளோ ஈரமாயிருக்கு! இந்த டயத்துல தலைவலியும் சேந்து வரணுமா?" என கடிந்து கொண்டார்.

ஒரு வாரத்தில் இன்று தான் முகம் கொடுத்து பேசுகிறார். குற்ற உணர்வோ அல்லது சிறு பெண் தன் விஷயத்தை எப்படி பேசலாம் என்ற ஈகோவோ ஏதோ ஒன்று அவரை தடுத்தது.

"லேட்டாகுதுன்னு வந்துட்டேன் ஆன்ட்டி!"

"ட்ரையர்‌ போட்டிருக்கலாம்ல?"

"ஒரு சோம்பேறித்தனம் ஆன்ட்டி!"என்று மசக்கையின் அலுப்பை கூற,

"இந்த மாதிரி நேரத்துல அப்படி தான் வள்ளி இருக்கும். வந்தவுடனே அன்னம்மா கிட்ட சொல்லி சாம்பிராணி போட சொல்லணும்,"என்று கூறிக்கொண்டவர்,‌ முன்னே சென்று விட்டார்.

"ஒரு மரியாதைக்காக கொஞ்ச நேரம் இருந்துட்டு வந்துருங்கம்மா! மத்தபடி நானும் ஆன்ட்டியும் பேசிக்கிறோம்,"என்று கதிரேசன் கூற,‌

"சரி அங்கிள்! பாத்துக்கலாம்,''என்றவள்,

"என்ன அங்கிள்? இன்னைக்கு தான் ஆன்ட்டி முகத்துல பல்பு எரியுது?,"என மெதுவாகக் குனிந்து கேட்க,

"எல்லாம் மருமக வந்த நேரம்‌ தாம்மா வீடு களை கட்டுது!"

"வீடு களைகட்டுறது இருக்கட்டும். ராஜமாதா கூட வந்தா நாங்க எல்லாம் வோல்டேஜ் கம்மியான பல்பாட்டம் டல்லடிக்கிறோமே. பாத்து பாத்து கிளம்பி வந்தாலும் ராஜமாதா தான் கெத்தா தெரியுறாங்க,"என அவரின் தோற்றத்தைப் பார்த்தவள் சிலாகித்துக் கூற,

"என்னம்மா மாமியார் கூடவே போட்டியா?"என்றார் கதிரேசனும் சகுந்தலாவின் தோற்றத்தைக் பார்த்துக் கொண்டே.

"அவங்களோட எல்லாம் போட்டி போட முடியாது அங்கிள். ராஜமாதா இஸ் கிரேட்னு சரண்டர் தான்,"என்று கூற சிரித்துவிட்டார். இருவரும் சிரித்தபடியே வெளியே வந்தனர்.

கதிரேசனும், சகுந்தலாவும் முத்துக்கண்ணனோடும், தேவாவும் வள்ளியும் அவனது‌ காரிலும் கிளம்பினர்.

ஸ்டார் ஹோட்டலில் மீட்டிங் ஹால்‌ புக் செய்திருந்தனர். ஹால் புக்கிங் பொறுப்பை டி.எஸ்.பி. கிரானைட்ஸ் சார்பில் இவர்களே ஏற்றுக் கொண்டனர்.

ஒவ்வொருவராக குறிப்பிட்ட நேரத்திற்குள் வந்து சேர்ந்தனர். மூத்த தலைமுறையினர் வேட்டி சட்டையிலும், பொறுப்பிற்கு வந்த அடுத்த தலைமுறையினர் சிலர் ஃபார்மலிலும்‌ வந்திருந்தனர்.
வருடாவருடம் நடக்கும் சம்பிரதாய மீட்டிங் தான் இது. எல்லாம் கொழுத்த பணமுதலைகள் என ஒவ்வொருவரின் தோற்றமே சுட்டியது.

சங்க நிர்வாக உறுப்பினர்கள் மேடையிலும், சங்க உறுப்பினர்கள் இறுக்கையில் கீழே அமர்ந்து இருந்தனர். எத்தனையோ முறை கேட்டுக் கொண்டாலும் சகுந்தலாவும் கதிரேசனும் எங்களுக்கு எந்த பதவியும் வேண்டாம் என வருடா வருடம் மறுத்து விடுவர்.

அவர்கள் நால்வரும் முதல் வரிசையில் அமர்ந்து இருந்தனர்.
சங்க நிர்வாக உறுப்பினர்கள் பதவியில் முத்துச்சாமியும்‌ இருந்ததினால் அவன் மேடையில் இருந்தான். அவன் பார்வை‌ சகுந்தலாதேவியின் மீதும் அவ்வப்பொழுது விழுந்தது.

கூட்டம் தொடங்கியது. வழக்கம் போல் வரவேற்பு,‌ மற்றும் ஆண்டறிக்கை வாசிக்கப்பட்டது. லயன்ஸ் கிளப்பும் குவாரிகள் சங்கமும் இணைந்து செய்த நலத்திட்ட பணிகளும் அறிவிக்கப்பட்டது.
இறுதியாக டி.எஸ்.பி. கிரானைட்ஸ் சார்பில் ஒரு‌ முக்கிய அறிவிப்பு வெளியிட, கதிரேசன் மற்றும் சகுந்தலாதேவியை அழைக்கிறோம் என‌ நிகழ்ச்சி அறிவிப்பாளர் அறிவிக்க இருவரும் மேடை ஏறினர்.

பொதுவாக அனைவருக்கும் கரம்‌ குவித்து இருவரும் வணக்கம் வைத்தனர்.
கதிரேசன் மைக்கின் முன் சென்று பேசத் தொடங்க, சகுந்தலா மேடையில் ஓர் இருக்கையில் அமர்ந்து கொண்டார்.

"அனைவருக்கும் வணக்கம்!"என்று சம்பிரதாயமாக ஆரம்பித்தார்.

"இதுவரை எங்கள் டி.எஸ்.பி.கிரானைட்ஸிற்கு வியாபாரிகள் அழித்து வரும் ஆதரவிற்கு மிக்க நன்றி. இப்பொழுது எங்கள் கிரானைட்ஸ்‌ சார்பாக ஒரு‌ முக்கிய அறிவிப்பு,"என்றவர் சகுந்தலாவை திரும்பி ஒருமுறை பார்த்தார்.
அவர் சம்மதம் அவரது கண்கள் காட்ட,"இதுவரை நானும் என்‌ மனைவியும் வகித்து வந்த டி.எஸ்.பி.கிரானைட்ஸின் பொறுப்பை, இனிமேல் துரைபாண்டி பேரனும் எங்களது மகனுமாகிய தேவசேனாபதியும், எங்களது மருமகளும் ஆகிய வள்ளியம்மையும் அப்பதவியை வகிப்பார்கள் என மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களுக்கும் தங்கள் ஆசியும் ஆதரவும்‌ வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்,"என முடித்துக் கொண்டார்.‌

அவர் ‌பேசி‌ முடிக்க வள்ளியும் தேவாவும்‌ மேடை ஏறினர். அனைவருக்கும் பொதுவாக கரம் குவித்து வணக்கம் வைத்தனர். தேவாவை பேச அழைக்க, மைக்கின் முன்‌சென்று, வணக்கம் கூறி ஆரம்பித்தவன்,

"எங்கள் தாத்தா காலத்திலிருந்து எங்களது டி.எஸ்.பி.கிரானைட்ஸிற்கு தாங்கள் அழித்து வரும் ஆதரவிற்கு மிக்க நன்றி. நான் முதலாளி பொறுப்பை ஏற்றுக் கொண்டாலும், நானும் மூத்தவர்களின் வழி நடத்தலின் பேரில் தொழிலாளியாகவே செயல்பட‌ விரும்புகிறேன்," என சுருக்கமாக முடித்துக் கொண்டான்.

சகுந்தலாதேவியை திரும்பி பார்த்தவர்,
"வார்த்தையைக் கூட கணக்குப் பாத்து தான் பேசுவான் போல,"என்று கூறி சிரித்தார்.
மேடையில் இருந்தவர்கள் வாழ்த்து தெரிவிக்க, இருவரும் மீண்டும் இருக்கைக்கு திரும்பினர்.

அங்கேயே பஃபே முறையில் உணவும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. சகுந்தலாவும் கதிரேசனும் உணவு வகைகளை தட்டில் எடுத்துக் கொண்டு டேபிளில் அமர்ந்து கொண்டனர்.‌

எதுவும் சாப்பிடாமல் வள்ளி சேரில்‌ அமர்ந்திருந்தாள். அவளைப் பார்த்த சகுந்தலா, அவளை நோக்கி எழ,
"எங்க போற தேவி?"எனக் கேட்டவரிடம்,

"அவ அங்க தனியா உட்காந்து இருக்காங்க. சாப்பிட என்ன வேணும்னு கேட்டு வர்றேன்,"என்றார்.

"வேண்டாம் உட்கார்!"என்றவரை வித்யாசமாக பார்க்க,

"நீ கொஞ்சம் விலகியே இரு! வள்ளி மேல கவனம் மட்டும் வச்சுக்கோ!"என்றவரை
ஏதோ புரிந்தாலும் அவரை கேள்வியாக பார்த்தார்.

அங்கு வந்திருந்த தனக்கு அறிமுகமானவர்களிடம் பேசிக் கொண்டிருந்தான் தேவா. அவள்‌ தனியாக அமர்ந்து இருப்பதைப் பார்த்தவன் அவளிடம் வந்தான்.

"என்ன வேணும்னு சொல்லு! எடுத்துட்டு வர்றேன்!" அவளிடம் வந்து கேட்க,

"எனக்கு எதுவும்‌ வேண்டாம்! சீக்கிரம் வீட்டுக்கு போகணும்!" என்றாள்.

"காலையிலும் நீ சரியா சாப்பிடலை. தயிர் சாதம்‌ இருக்கு. எடுத்துட்டு வர்றேன்,"என்றவன் அவள் பதிலைக்கூட கேட்காமல்‌ சென்றவனை,

கதிரேசன் சகுந்தலாவிடம் கண் காமிக்க அவருக்கு புரிந்தது.

'பார்றா! நம்ம சாப்பிடறதைக்‌கூட கவனிக்கிற மாதிரி இருக்கே! என்று யோசித்தவள்,
'க்க்கும்...‌நம்ம‌ மேல‌ அக்கறை வந்துட்டாலும்,'என்றும் சலித்துக் கொண்டாள்.

தட்டில் அங்கிருந்த உணவு வகைகள் அனைத்திலும் சிறிது எடுத்து வந்தான். அதைப் பார்த்தவள்,"எல்லாம் ஆய்லியா‌ இருக்கு. எனக்கு வேண்டாம். இதை‌ சாப்பிட்டு கார்ல‌ ஏறினா, டிரைவர் மகளுக்கு டிரைவர் வேலை பாக்குறதோட க்ளீனர்‌ வேலையும் சேத்து பாக்க‌ வேண்டியிருக்கும். பரவாயில்லையா?"எனக் கேட்டாள். ஏற்கனவே அவளுக்கு‌ அங்கிருந்த ரூம்ஸ்பிரே வாசனையும் அடைக்கப்பட்ட ஹாலின்‌‌ ஏசி குளுமையும் பிடிக்கவில்லை.

"நீ வாந்தி எடுக்க பயந்துகிட்டே, எதுவுமே சாப்பிடாம எம்புள்ளைய பட்டினி போடுற! பரவாயில்லை. க்ளீனர் வேலை தானே? என்‌ பிள்ளைக்காக பாத்துட்டு போறேன். முதல்ல சாப்பிடு! இல்லைனா... என் பிள்ளைக்கு ஊட்றதா நினைச்சு உனக்கு ஊட்டி விடவா? ஊரான் புள்ளைய ஊட்டி வளத்தா என் புள்ள தானா வளரும்!"என்றவன், வலுக்கட்டாயமாக கையில் திணிக்க,

"அட! அக்கறை சிகாமணியே! எனக்கென்ன? கார்ல போகும் போது அசிங்கமாயிரும்னு நான்‌ பாத்தா, என்னமோ இவரு புள்ளைய பட்டினி போடுறாங்களாம்ல.? பிடிச்சா சாப்பிடாம இருக்கோம்? வாய்கிட்ட கொண்டு போனாலே‌,‌ உள்ளே இருக்கறது அப்படியே‌ வெளியே தள்ளுது!"என்று உள்ளே இருக்கும் குழந்தை மீது குற்றப் பத்திரிகை வாசித்தாள், அப்பன்‌காரன் செய்யும் அலும்பு தாங்காமல்.

அவனுக்கு அதைப்பற்றி என்ன தெரியும்? முதல்ல அவள்‌ சாப்பிட வேண்டும் என்று மட்டும் நினைத்தான். அவளும்‌ வேறு வழியில்லாமல், 'பிள்ளைக்காவது அக்கறை காட்ட தெரியுதே?' என்று எண்ணியவாறே சாப்பிட ஆரம்பித்தாள்.‌ அவனும் தனக்கு எடுத்துக் கொண்டு அவளுடன் டேபிளில் அமர்ந்து கொண்டான்.

அவர்களிடம்‌ வந்த கதிரேசன், நீங்க சாப்பிட்டு கிளம்புங்கம்மா! மீதியை நாங்க பாத்துக்கறோம். அப்படியே ஆஃபிஸ் போய்ட்டு வந்துர்றோம்.‌ வீட்ல‌ வந்து பேசிக்கலாம்,"என்று கூற,

"சரி அங்கிள்!" என்றாள்.

ஹோட்டலின்‌ பார்க்கிங் ஏரியாவிற்கு வந்தவர்கள், தங்களது காரில் ஏறிக் கொள்ளவும், வள்ளி தனக்கு கார் ஸ்பிரே வாசனை பிடிக்கவில்லை எனக்கூற, கார் கண்ணாடிகளை முழுவதுமாக இறக்கி ‌விட்டவன், பார்க்கிங் வரிசையிலிருந்த காரை வெளியே எடுக்க ஸ்டார்ட் செய்ய போகும் பொழுது தான் முத்துச்சாமியின் வார்த்தைகள் இருவர் காதிலும் விழுந்தது. கேட்ட வார்த்தைகள் அவனின் மூளையை சூடேற்ற… அடுத்து நடந்த பேச்சு வார்த்தைகளோ சூடேற்றிய‌ மூளையை கொதி நிலைக்கு மாற்றியது.

''இன்னமுமா அண்ணே அவங்களையே நினைச்சுட்டு இருக்கீங்க?"என்ற அல்லக்கை யின் கேள்விக்கு,

"எப்படிடா மறக்கறது? நானும்‌ அவ புருஷன் செத்ததும் குவாரியையும் அவளையும் சேத்து மடக்கிறலாம்னு எவ்வளவோ முயற்சி பண்ணி பாத்தேன்டா. இந்த கதிரேசன்‌ தான் குறுக்க கட்டையா இருந்துட்டான்."

"அது தான் அவங்களுக்குள்ள ஏற்கனவே கசமுசான்னு பேச்சு அடிபட்டுச்சேண்ணே?"

"அட ஏன்டா நீ வேற? அவனுக்கெல்லாம் அதுக்கு ஏதுடா திராணி. எல்லாம் நம்ம கட்டி விட்ட கதை தான்டா அது! அசிங்கப்பட்டு விலகிப் போயிருவான்னு நினைச்சேன். ஆனா அந்த கிழவன் இவங்களுக்கு கல்யாணத்தையே முடிச்சு வச்சுட்டு மண்டயப் போட்டுட்டான்டா. இப்ப என்னடான்னா குடிகார மகன் கையில‌ குவாரியை தூக்கி கொடுக்குறாங்க,"என்று பேசிக்கொண்டே நடக்க ஆம்பித்தான்.

வள்ளிக்கு தேவாவின் முகத்தைப் பார்க்கவே பயமாக இருந்தது. ஏற்கனவே ஒரு முறை அவள்‌ பார்த்த கோர முகம் மீண்டும் தன் கண்முன்.
கோழைக்கும் மீசை துடிக்கும். தன் அன்னையைப்‌ பற்றி இம்மாதிரி வார்த்தைகளைக் கேட்டால்.

வார்த்தைகள் தேவாவின் காதுகளில்‌ காய்ச்சிய ஈயக் குழம்பாய் இறங்க, கோபத்தில் நெற்றி நரம்புகள் விண்ணென்று தெரிக்க, அவன் நிலையறிந்து வள்ளி ஸ்டீயரிங்கை இறுக்கிப் பிடித்திருந்த இடக்கையை வேகமாக உலுக்கினாள்.

பட்டென்று திரும்பியவன் சிறிதும் யோசிக்கவில்லை. காரை ரிவர்ஸ் கியர் போட்டு வரிசையிலிருந்து வேகமாக வெளியே எடுத்தவன், வேகத்தைக் குறைய விடாமல் கடகடவென டாப் கியருக்கு மாற்றியவன், ஆக்சிலேட்டரை மிதித்தான்.
கார் சீறிய வேகமே சொன்னது அவன் செய்ய இருக்கும் காரியத்தை. தனது காரை நோக்கி நடந்து கொண்டிருந்த முத்துச்சாமியை பின்னோடு அடித்து தூக்க நினைத்து இருப்பதை.

"தேவா! வேண்டாம்! ஸ்லோவ் பண்ணுங்க!"என்று வள்ளி கூச்சலிட,‌ அதற்குள் அவனது அல்லக்கைகள் நாலைந்து பேர் முத்துசாமியை சூழ்ந்து கொண்டனர். படக்கென்று காரை இடப்பக்கமாக ஒடித்துத் திருப்ப வேண்டியதாய் போயிற்று. கார் குலுக்கிய குலுக்கலில் வள்ளியின் ஓங்கரிப்பில் தான் தேவா சற்று சுற்றம் உணர்ந்தான்.‌

அப்பொழுது தான் அவனுக்கும் இவளை வைத்துக் கொண்டு கார் வேகம் எடுத்தது உரைக்க,
"ச்சே!"என்று தலையில் அடித்துக் கொண்டான்.

அவளுக்கு தான் தெரியுமே! கோபம் வந்தால் இவனுக்கு மற்றவை எல்லாம் மறந்து விடும் என்று. காரை நிறுத்தி விட்டு கதவைத் திறந்தவன் முகம் கழுவ தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொடுத்தான். இருக்கையின் மீது போட்டிருந்த டர்க்கி டவலை எடுத்து முடிந்த அளவிற்கு துடைத்தவன் அருகில் இருந்த குப்பை தொட்டியில் போட்டுவிட்டு வந்தவன், காரை கிளப்ப,

காரின் அடிக்கடி ஏறி இறங்கும் வேகமே சொன்னது, அவன் வேகத்தைக் கட்டுப்படுத்த எவ்வளவு போராடுகிறான் என்று.

வீட்டிற்குள் வந்தவன் இரண்டிரண்டு படிகளாக தாவி ஏறினான். வள்ளியும் வேகமாக அவன் பின்னாலேயே ஏற, திரும்பிப் பார்த்தவன்,"ஏன் இவ்வளவு வேகமா ஏறி வர்ற?"என்று சீறினான்.

அவள் அதையெல்லாம் கண்டு கொள்ளவில்லை. வேகமாக அறைக்கு வந்தவன் சடசடவென பட்டன்களைப்‌ பிய்த்து சட்டையைக் கழட்டியவன் தன்னை சுத்தம் செய்து கொள்ள பாத்ரூம் சென்றான்.

இவளுக்கு எப்படி இவன் கோபத்தை தணிப்பது என்று ‌புரியவில்லை. தனக்கே அவ்வார்த்தைகள் ஆத்திரமூட்டும் பொழுது அவனை கேட்கவா வேண்டும். இவனது கோபத்தின் யோசனையற்ற விளைவுகளை சந்தித்தவள் ஆயிற்றே!

பாத்ரூம் திறக்கும் சப்தம் கேட்டது.
"போய்‌ முதல்ல சுத்தம் பண்ணு!"என்று கூறினான்.

அவள் கதவை விட்டு நகரவில்லை. உடையை மாற்றிக் கொண்டே சங்கருக்கு கைபேசியில் அழைப்பு விடுத்தான். அழைப்பு ஏற்கப்பட,

"டேய் சங்கர்! நம்ம ஆளுங்கள ரெடியா இருக்க சொல்றா! இன்னும் அரைமணி நேரத்துல அங்க‌ இருப்பேன்!"

"..,......"

"நான் வந்து சொல்றேன்டா!"என்றவன் அவன் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் அழைப்பை துண்டித்தவன், வள்ளியைப் பார்க்க இன்னும் அவள்‌ நகரவில்லை.

"தள்ளு!"என்றான் உக்கிரமாக.

"நான்‌ உங்களை போக விடமாட்டேன் தேவா!"என்றாள் கதவை மறித்துக் கொண்டு.

"உன்‌ நிலமைக்காக பாக்குறேன்! இல்லைனா இழுத்து கட்டில்ல வீசிட்டு போய்க்கிட்டே இருப்பேன்!"என்றான் உக்கிரம் தணியாதவனாக.

"அதைத் தவிர உங்களுக்கு என்ன தெரியும்? கோபம் வந்தால் உங்களுக்கே என்ன பண்ணுவீங்கேனு தெரியாதே?"என்றவளிடம்,

"ஏய்! அவன் பேசியதை நீயும் தானே கேட்டே? எங்க அம்மாவை அப்படி பேசுனவனை சும்மா விடச் சொல்றியா? அப்படி விட்டா நான் ஆம்பளையே இல்ல. வாழ் நாள் முழுக்க ஏன்டா எங்கம்மாவை தப்பா பாத்தோம்னு நினைக்க வைக்கல... நான் சகுந்தலாதேவிக்கு மகனே இல்ல,"என்றான் ஆத்திரம் தணியாமல்.

"இன்னைக்காவது எங்க அம்மான்னு ஒத்துக்க தெரிஞ்சதே! உங்களுக்கு அவனைப் பத்தி இன்னைக்கி தான் தெரியும். பல வருஷமா உங்க அம்மாவும், அங்கிளும் பாத்துகிட்டு தானே இருக்காங்க. அவனை எதுவும் பண்ண தெரியாம தான் இத்தனை நாளா விட்டு வச்சிருக்காங்களா?"என்றாள்.‌

"ஆரம்பத்துலயே அவனை நசுக்கி இருந்தா இன்னைக்கி இப்படி வந்து பேசியிருக்கமாட்டான்! எனக்கு இருக்குற ஆத்திரத்துக்கு அவனை கொலையே பண்ணனும்னு தோணுது. ஆனா அப்படி பண்ணிட்டா ஒரே நாள்ல‌ நிம்மதியா போயிருவான். வாழ் நாள் முழுசுக்கும்‌ அவன் அனுபவிக்கணும்,"என்று குரோதம் காட்ட,

"ஒரே நாள்ல இந்த குதி குதிக்கறிங்களே! ஆனா இத்தனை நாளா இதெல்லாம் தெரிஞ்சும் பொறுமையாத்தானே போயிட்டு இருக்காங்க,"பேசியே அவள் நேரம் கடத்தினாள். அவளுக்கு அவன் கோபம் பார்த்து பயம் இல்லை. ஒரு மகனாக அவன் கோபம் நியாயம் ஆனதுதான். ஆனால் கோபத்தில் யோசிக்காமல் அவன் செய்யும் காரியம்‌ நினைத்து தான் பயம். ஏற்கனவே கட்டப்பஞ்சாயத்து என்று சுற்றுபவன் கத்தியையும் கையில் தூக்கி விடுவானோ‌ என்று பயந்தாள்.

அவள் பேசியதைக் கேட்டவன்,"அதனால் தான் சொல்றேன். இனிமேல் அவன் எங்க அம்மா இருக்கிற திசை பக்கம் கூட திரும்ப கூடாது. அப்படி பண்ணலைன்னா நான் ஆம்பளையே இல்ல. தள்ளி போயிரு. மேலும் எனக்கு ஆத்திரத்தை கிளப்பாதே!"என்றான்.

"அவன் உங்கம்மாவை மட்டும்தான் பேசினானா? அங்கிளையும் தான் பேசினான். அவனுக்கு ஏதுய்யா திராணினு கேட்டான். அதுக்கு என்ன அர்த்தம் தெரியுமா? அவன் ஆம்பளையே இல்லைனு அர்த்தம்! இதே மாதிரி எத்தனை வார்த்தைகளை உங்க அம்மாவும், அங்கிளும் கேட்டிறுப்பாங்க. அவர் ஒன்னும் ஆம்பளைனு நிரூபிக்கிறேன்னு பொம்பளை தேடி போகலை. கூடவே இருந்தவங்க உணர்வுகளுக்கும் மதிப்பு கொடுத்து கன்னியம் காத்திருக்காரு. ஆம்பளைக்கு முதல் தகுதியே நிதானம் தான். என்னைக்காவது உங்க கிட்ட இருந்திருக்கா?"என்றாள் அவனைப் பார்த்து.

அவன் கோபத்தின் விளைவை அனுபவித்தவள் ஆயிற்றே! மூர்க்கத்தனம் முட்டாள் தனத்தின் மூலதனம் என்பதை அவனுக்கு புரிய வைக்க முயற்சி செய்து கொண்டிருக்கிறாள்.

"அவனுடைய கோபத்திற்கு காரணம் உங்க அம்மாவும் குவாரியும் மட்டும் இல்ல. தொழில்ல அவனை மேல எழும்ப விடாம அடிச்ச ஆத்திரம் தான் அவன் இன்னமும் அப்படி பேசுறதுக்கு காரணம். வெளிய தெரியாம அவனை அடிச்சிருக்காரு கதிர் அங்கிள். உங்களுக்கு தெரியுமா?"இன்னமும் அவள் கதவை விட்டு நகராமலே தான் பேசிக் கொண்டு இருந்தாள். இதெல்லாம் தனது தந்தையின் மூலம் அவளுக்கு கொஞ்சம் தெரியும்.

"அதுக்காக இவ்வளவையும் கேட்டுட்டு என்னைய பொறுமையா போக சொல்றியா? என்னால‌ மண்ணு மாதிரி இருக்க முடியாது. அடிக்கிற நேரத்துல அடிக்கணும்."

"உங்களை யாரு மண்ணு மாதிரி இருக்க சொன்னது. கோபம் வந்துட்டா உங்களுக்கு நிதானம் போயிறுது. செய்ற‌ செயலோட வீரியம் தெரியறது இல்லை. அவன் இன்னொன்றும் சொன்னான். கவனிக்கலையா? குடிகாரன் கையில தூக்கி குவாரியை கொடுத்து இருக்காங்கேனு. அதுக்கு என்ன பதில் சொல்லுவிங்க? எவளோ ஒருத்தி கேட்டானு ஆத்திரத்துல அறிவிழந்து என்கிட்ட வீரத்தை காமிச்சிங்கள்ல. புள்ள கொடுக்கறது தான் வீரம்னா, அதுக்கு ஆம்பளை தேவையில்லை. நீங்க சொன்னதே தான். தெருவுக்கு ரெண்டு ஃபெர்டிலிட்டி சென்டர் இருக்கு. முதல்ல நீங்க யாருன்னு காமிங்க. நீங்க உங்க புள்ளைக்கினு மாத்திரை வாங்கிட்டு வந்தீங்களே! நீங்க சம்பாதிச்சதா? உங்களுக்கு வேணா உங்க அப்பா சொத்து பெருமையா இருக்கலாம். ஆனா என் பிள்ளைக்கு அவன் தாத்தா அடையாளம் மட்டும் தேவை இல்லை!"என்றவள், அவன் கோபத்தை சற்று மடை மாற்றியவளாக அவன் இருக்கிறான் என்றெல்லாம் இன்று பார்க்கவில்லை. சரசரவென சேலையை அவிழ்த்தவள், அழுக்கு கூடையில் வீசிவிட்டு குளியலறை சென்று விட்டாள்.

அவன் ஆத்திரம் அடங்க அவகாசம் கேட்டது. முடிந்த அளவுக்கு கட்டுப்படுத்த முயற்சி செய்தான். முதல் முயற்சி. கொஞ்சம் கடினப் பட்டு தான் போனான். அவள் பேசியதை எல்லாம் கேட்டவன் கொஞ்சம் நிதானத்தை கையில் எடுத்தான்.

ஆண்மைக்கு முதல் அடையாளம் நிதானம். இன்று தான் முயற்சி செய்து பார்க்கிறான். நிதானம் தருவது சுய கட்டுப்பாடு. சுய கட்டுப்பாட்டின் விளைவு தீர்க்க சிந்தனை. தீர்க்க சிந்தனை தருவது செயல் தீரம். செயல் தீரத்தின் பலன் காரியசித்தி. எடுத்த காரியத்தை வெற்றியோடு முடிக்கும் திறன்.

கொதித்த மனம் அடங்க அவகாசம் எடுத்துக் கொண்டிருக்க, அடுத்து என்ன செய்வது என சிந்திக்க ஆரம்பித்தான், அப்படியே அவனை விட்டுவிட மனம் இல்லாதவனாக.

சற்று நேரத்தில் சங்கர் கைபேசியில் அழைத்தான்.
"இதோ வர்றேண்டா! வந்து பேசிக்கலாம்,"என்றவன் அழைப்பை துண்டித்தான்.

வெளியே வந்தவள்‌ காதிலும் அவனது பேச்சு விழ, பயத்தோடு பார்த்தாள்.

"நீ நினைக்கிற மாதிரி எதுவும் பண்ண போறதில்லை. டென்ஷன் ஆகாதே. பயந்து பயந்து என்‌ புள்ளையும் உள்ளேயே பயப்பட போகுது என்றவன், அவளது கைபேசியை எடுத்து தனது எண்ணிற்கு அழைப்பு விடுத்தவன்,
"என் நம்பர் இதுல இருக்கு. சேவ் பண்ணிக்கோ. சங்கர் மர மில்லுக்கு தான் போறேன்.‌ சீக்கிரம் வந்துறுவேன்,"என முதன் முதலாக போகும் இடம் வீட்டில் சொல்லி விட்டு சென்றான்.

எனினும் அவன் வீடு திரும்பும் வரை‌ பதட்டத்தோடு தான் இருந்தாள். இரவு வந்தவன், அவள் தரையில் படுத்திருக்க, உடையை மாற்றிக் கொண்டே,

"எந்திரி! பெட்ல படு!,"என்றான் அதிகாரமாக.

"அதெல்லாம் வேண்டாம். நான் இங்கேயே படுத்துக்கிறேன்,"என்றாள்‌ பயத்தோடு.

"நீ சும்மா சும்மா எந்திரிக்கும் போது என் பிள்ளைக்கி சுளுக்கிக்கும்,"என்றவன், இவளிடம் பேச்சு வேலைக்காகாது என நினைத்து, சட்டென்று குனிந்து அவளை தூக்கியவன், கட்டிலில் மெதுவாக கிடத்தினான்.

அவனது செயலில் அதிர்ந்தவள், மலங்க மலங்க விழிக்க, "இப்படி பாக்காதே! கோபத்தைக் கட்டுப் படுத்துன மாதிரி எல்லாத்தையும் கட்டுப் படுத்த முடியாது,"என்றவன் கட்டிலின் மறுபக்கம் சென்று படுத்துக் கொண்டான்.

சற்று நேரத்தில் அவளும் மசக்கையில் கண் அசந்துவிட, அவளுக்கு முதுகு காட்டிப் படுத்திருந்தவன் தான் விடியவிடிய தூங்க முடியாமல் தவித்துப் போனான், அவன்‌ கை அழுத்திய அவளது‌ பெண்மையின் மென்மை கொடுத்த அவஸ்த்தையில்.
 




Nuvali

அமைச்சர்
Joined
Aug 14, 2021
Messages
1,051
Reaction score
2,969
Location
India
Nice ud :love::love::love:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top