ஆப்பம்
பச்சரிசி - 1கப்
புழுங்கலரிசி (இட்லி அரிசி) - 1கப்
உளுத்தம்பருப்பு - 1 கைப்பிடியளவு
வெந்தயம் - 2 டீஸ்பூன்
மேலே சொன்ன எல்லா பொருட்களையும் 4 மணிநேரம் ஊற வைத்து மிக்சியிலோ கிரைண்டரிலோ அரைத்துக் கொள்ளவும்.
முக்கால்வாசி அரைத்த பிறகு ஒரு கைப்பிடியளவு சாதத்தை அதனுடன் சேர்த்து அரைக்கவும்.
பின்னர் உப்பு கலந்து மாவை புளிக்க விடவும் (8மணிநேரம்).
பின்னர் மாவில் தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து, சோடா உப்பு 1 டீஸ்பூன் சேர்த்து கலந்து கொண்டு ஆப்ப சட்டியில் ஆப்பமாக ஊற்றி எடுக்கவும். (Flower shapeல் ஊற்றினால் நன்றாக இருக்கும்).
தேங்காய் பால் எடுத்து, அதனுடன் சர்க்கரை, ஏலக்காய் தூள் சேர்த்து கலந்து, ஆப்பத்தில் ஊற்றி சாப்பிடலாம்.
கடலைப்பருப்பு குருமா
(ஆப்பத்திற்கு இந்த குருமா மிகவும் ருசியாக இருக்கும். வித்தியாசமான சுவை. முயற்சித்து பாருங்கள்)
கடலைப்பருப்பு - 1 வீசம்படி
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 2
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1டீஸ்பூன்
தேங்காய் - பாதி மூடி
பட்டை - சிறு துண்டு
கிராம்பு - 2
சோம்பு - 2 டீஸ்பூன்
பூண்டு - 4 பல்
முதலில் கடலைப்பருப்பை 2 மணிநேரம் ஊற வைத்து குக்கரில் குழைவாக வேக வைத்து கொள்ளவும்.
வாணலியில் 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பட்டை, கிராம்பு, 1 டீஸ்பூன் சோம்பு போட்டு தாளித்து, நீள நீளமாக நறுக்கிய பெரிய வெங்காயத்தை போட்டு வதக்கவும்.
பூண்டை சின்னதாக நறுக்கி சேர்க்கவும்.
வெங்காயம் சிறிது வதங்கவும், பொடியாக நறுக்கிய தக்காளி மற்றும் கீரிய 2 பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.
தக்காளி வதங்கியதும் மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு போட்டு வதக்கவும்.
தேங்காயுடன் 1 டீஸ்பூன் சோம்பு சேர்த்து அரைத்து ஊற்றவும். தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும்.
நன்கு கொதித்ததும் எடுத்து குக்கரில் கடலைபருப்போடு ஊற்றி 1 விசில் வரும் வரை வேக விடவும்.
இறங்கியதும் நறுக்கிய கொத்தமல்லி தழை தூவி விடவும்.