• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ஆயுட்காரகனே 14

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 76

புதிய முகம்
Author
Joined
Nov 15, 2021
Messages
14
Reaction score
39
அழகியான
அரக்கியவளில்
ஆளை தகர்த்திடும்
புயல் மறைந்திருப்பதை
எப்போது உணர்வேன்...

யூ.எஸ் இல்.....

மறுநாள் காலை கண்விழித்த சஹஸ்ராவிற்கு வழமைக்கு மாறாக அதிக புத்துணர்ச்சியுடன் இருப்பது போல் தோன்றியது.
நேற்று இரவு நடந்த சம்பவங்கள் அனைத்தும் இப்போதுவரை அவளுக்கு புரியாத புதிராகவே இருந்தது.

சில நாட்களிலேயே அதிரனிடம் அதிக நெருக்கம் ஏற்பட்டதற்கான காரணம் புரியாது குழம்பித்தவித்தவள் நிச்சயம் இப்படி ஒரு காரணம் இருக்குமென்று எதிர்பார்க்கவில்லை.
பல வருடங்களுக்கு முன் நடந்த சம்பவங்களை அவள் மனது அசைபோடத்தொடங்கியது.

சஹஸ்ரா தன் அன்னை நிவேதிதாவுடனும் அர்ஜூனனுடனும் மகிழ்வாய் வாழ்ந்த நாட்கள் அவை.
அர்ஜூனனுடைய குடும்பம் பரம்பரை பணக்காரர்கள். பல தலைமுறைகளாக அவர்களது குடும்பத்திற்கென்று தனி பெயரும், மரியாதையும் உண்டு. அதோடு அவர்களுக்கென்று சில கட்டுப்பாடுகளும் இருந்தது. அக்கட்டுப்பாடுகளே அவர்களின் குடும்ப பாரம்பரியத்தை காப்பாற்றும் என்ற அவர்களின் நம்பிக்கையே பலரின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியதை அக்குடும்பத்தை சேர்ந்தவர்கள் உணர்ந்துகொள்ள தவறிவிட்டனர்.

அக்குடும்பத்தின் வாரிசான அர்ஜூனனும் அவர்களின் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்படவேண்டுமென்ற அவர்கள் எதிர்பார்க்க அர்ஜூனனோ குடும்பத்திற்காக தன் கொள்கைகளையும் தனித்துவத்தையும் மாற்றிக்கொள்ள விரும்பவில்லை.

நந்தி குடும்பத்தினரின் முறைப்படி திருமணங்களின் அடிப்படை குடும்பத்தின் செல்வாக்கை பெருக்குவதற்காக நடைபெறும் ஒரு வியாபார பரிமாற்றமே. இங்கு எந்தவித விருப்பு வெறுப்புகளுக்கும் இடமில்லை. ஆனால் அர்ஜூனனுக்கோ இந்த நடைமுறையில் துளியும் விருப்பமில்லை. தன் வாழ்க்கையையும்,ஆசாபாசங்களையும் பணத்திற்கு அடகு வைக்க அவர் மனசாட்சி ஒத்துக்கொள்ளவில்லை.
அதனாலேயே நிவேதிதாவை காதலித்து கரம்பிடித்தார்.

அவர்களது திருமணத்திற்கு காதல் மட்டுமே அடிப்படையாக அமைந்திட நந்தி குடும்பத்தினரோ அதை ஏற்றுக்கொள்ள மறுத்தனர்.

ஆனால் அவர்களால் அர்ஜூனனை மறுக்க முடியவில்லை. காரணம் அவரது அசாத்திய திறமை. பொறுப்பை ஏற்றுக்கொண்ட சில நாட்களிலேயே பல அசாத்தியங்களை நிகழ்த்தியவரால் குறுகிய காலத்திலேயே அக்குடும்பத்தின் செல்வநிலையையும் மதிப்பையும் மேலும் அதிகரிக்கமுடிந்தது. அவரின் விவேகமும் வேகமும் ஈட்டிக் கொடுத்த லாபத்தை அக்குடும்பத்தினரால் புறக்கணிக்கமுடியவில்லை.

ஆகவே அவரது முடிவுக்கு ஒப்புக்காக சம்மதித்தவர்களின் மனதில் வேறு திட்டங்களிருந்தது.
இப்படி தான் இருக்குமென்று அர்ஜூனனும் அறிந்திருந்ததால் நிவேதிதாவை தன் கண்பார்வையிலேயே வைத்திருந்தார்.

பெரிய பின்புலமில்லாத நிவேதிதாவிற்கோ இவர்களது சக்கரவியூக திட்டங்கள் எதுவும் புரியவில்லை. ஆனால் அர்ஜூனனின் எச்சரிக்கைகளை மனதில் கொண்டு அனைத்து விஷயங்களிலுமே கவனமாக இருந்தார்.
அர்ஜுனன் மற்றும் நிவேதிதாவின் காதல் வாழ்க்கைக்கு அத்தாட்சியாக பிறந்தவளே சஹஸ்ரா.

அர்ஜூனனின் குடும்பம் நிவேதிதாவை ஏற்க மறுத்ததுபோல் சஹஸ்ராவின் வரவை எதிர்க்கவில்லை. அவர்களை பொறுத்தவரை சஹஸ்ரா அர்ஜுனனின் மகள். அவ்வீட்டின் வாரிசு. அதனால் அவளுக்குரிய வரவேற்பு மரியாதையென்று அனைத்தும் கிடைத்தது.

ஆனால் அர்ஜுனன் சஹஸ்ராவிற்கு சாதாரண வாழ்க்கையை வாழ்ந்திட சந்தர்ப்பம் வழங்கிட விரும்பினார்.
எனவே சஹஸ்ராவையும் நிவேதிதாவையும் வேறொரு ஊரில் குடியமர்த்தினார்.

இதன் மூலம் தன் வீட்டு ஆட்களால் நிவேதிதாவுக்கும் எந்த தொந்தரவும் வராதபடி பார்த்துக்கொள்ளலாமென நம்பினார்.

நிவேதிதாவிற்கு தன் காதல் கணவனை விட்டு தனியே வர விருப்பமில்லாத போதிலும் அர்ஜுனனின் வேண்டுகோளை அவரால் மறுக்க முடியவில்லை.

சஹஸ்ராவையும் நிவேதிதாவையும் அங்கு குடியமர்த்திய அர்ஜூனன் வாரம் இருமுறை அவர்களை காண அங்கு வந்திடுவார்.

குழந்தையான சஹஸ்ராவிற்கும் அந்த ஆடம்பர வாழ்க்கையை விட இவ் சாதாரண வாழ்க்கை முறை பிடித்தமாக இருந்தது.
அங்கு அவர்களோடு அர்ஜூனனின் தோழனான திரவியனின் குடும்பமும் இருந்தது.

இரு குடும்பமும் ஒருவருக்கு மற்றவர் உதவியாக இருக்க எவ்வித பிரச்சினையுமின்றி வாழ்க்கை சுமூகமாக சென்றது.

சஹஸ்ராவும் ஆதீபனும் உடன்பிறந்தவர்களாய் வலம் வர அவர்களின் தோழனாய் இணைந்திருந்தான் அதிரன்.
அதிரனின் தந்தை மாற்றுதல் பெற்று அவ்வூரிற்கு வந்திருந்தார்.

பள்ளியில் தொடங்கிய அவர்களின் நட்பு இரண்டு வருடங்கள் நீடித்தது.
மீண்டும் அதிரனின் தந்தைக்கு மாற்றுதலாகிட அவர்கள் வேறு ஊரிற்கு சென்றுவிட்டனர்.
ஆனால் அவ்விரண்டு வருடங்களில் அவர்கள் மூவரும் செய்யாத சேட்டைகளில்லை.

அதிரன் எப்போதுமே சஹஸ்ராவை போனி என்றே அழைப்பான். சஹஸ்ராவிற்கு அவன் கூப்பிடும் விதம் பிடித்துப்போக அவளும் அவளை கூப்பிட அனுமதித்தாள்.
மாங்காய் திருடுவது,ஆற்றில் குளிப்பது, காத்தாடி விடுவது,வரப்பில் விளையாடுவது என்று மூவருமே எப்போதும் ஒன்றாகவே சுற்றுவர்.

மூவரும் சேட்டைக்கும் எல்லையில்லையென்று சொல்லும் அளவிற்கு அவர்களது சேட்டைகள் இருந்தது.

சிறியவர்களின் சேர்க்கை பெரியவர்களிடமும் இணக்கத்தை கொண்டு வந்திருந்தது.

பழைய நினைவுகளில் மூழ்கியிருந்தவளை கலைத்தது கதவு தட்டும் சத்தம்.

உடை மாற்றிவிட்டு கதவை திறந்தவளின் முன் கையில் காபியுடன் நின்றிருந்தான் அதிரன்.

அவனை பார்த்ததும் சிரித்தபடியே புருவம் உயர்த்தியவளிடம்
“குட்மார்னிங் போனி.”என்றவன் அவள் முன் காபி கோப்பையை நீட்ட அதை நன்றியுடன் வாங்கிக்கொண்டாள் சஹஸ்ரா.

நின்றபடியே காபி அருந்தியவளிடம்
“உனக்கு இன்னைக்கு டைம் இருக்குமா போனி?”என்று கேட்க

“ஏன் கேட்குற தீரா?” என்று நெடுநாட்களுக்கு பின் கேட்ட அவளின் அழைப்பில் உள்ளம் மகிழ்ந்தவன்

“என்னோட மேடம் பாஸ் ப்ரீயாக இருந்தால் இன்னைக்கு இன்-இங் ப்ளான் பண்ணலாம்னு யோசிச்சேன்.” என்று அதிரன் கூற

“அது என்ன இன்-இங்?”என்று தன் சந்தேகத்தை சஹஸ்ரா கேட்க

“அவுட்ல பண்ணா அது அவுட்டிங். வீட்டு உள்ளுக்கு பண்ணா அது இன்-இங்.” என்றவனை போலியாக முறைத்தாள் சஹஸ்ரா.

“கொஞ்சம் வேலை இருக்கு. நாளைக்கு ப்ளான் பண்ணலாம்.” என்று கூற சற்று யோசித்தவன் சரியென்று கூறினான்.
பின் இருவரும் பழைய கதைகளை பேசியபடியே காலை உணவை முடித்தனர்.
சஹஸ்ரா அங்கிருந்து கிளம்பும் போது அங்கு வந்தாள் தான்வி.

தான்வியை பார்த்ததும் கேள்வியாய் புருவம் உயர்த்திய சஹஸ்ரா அதிரனை பார்க்க அவனோ அவளை கவனிக்காது தான்வியை கவனிப்பதில் மும்முரமானான்.

“வாங்க தான்வி. இவ்வளவு நேரம் உங்களை தான் எதிர்பார்த்திட்டு இருந்தேன். போ.. சாரா இவங்களை உனக்கு தெரியும் தானே.” என்றவன் தான்வியோடு கதையடிக்க தொடங்கிவிட்டான்.
சஹஸ்ராவிற்கோ காதில் புகை வராத குறைதான்.

ஏற்கனவே அவளுக்கு அதிரன் தான்வியோடு பேசுவது பிடிக்காது. இப்போது அவளை இங்கே வரவைத்ததோடு அவள் முன்னே இருவரும் அரட்டையடிப்பதை அவளால் ஜீரணிக்கமுடியவில்லை.
என்ன செய்வதென்று ஒரு கணம் யோசித்தவளுக்கு சட்டென்று ஒரு யோசனை தோன்றியது.
உடனேயே தன் மொபைலை எடுத்து தன்னுடைய பி.ஏவிற்கு அழைத்து இன்று தான் அலுவலகம் வரவில்லையென கூறியவள் ஏதும் அவசரமென்றால் மட்டும் தன்னை தொடர்பு கொள்ளுமாறு கூறிவிட்டு அழைப்பை துண்டித்தாள்.

இவை அனைத்தையும் அதிரன் கவனித்தபடியே தான்வியிடம் பேசிக்கொண்டிருந்தான்.

இதனை கவனித்த தான்வி
“அதிரன் அவங்க ஆபிஸ் போக மாட்டாங்க போலயே...” என்று கேட்க

“அது தான் தெரியுமே. உங்களை பார்த்த பிறகு அவ ஆபீஸ் போயிருந்தா தான் அதிசயம்.” என்றவனை முறைத்தாள் தான்வி.

“இன்னும் எத்தனை நாளைக்கு இந்த நாடகம். உங்களுக்கு நடந்தது ஒரு மைனர் ஆப்பரேஷன். அதுக்கு இத்தனை நாள் ஆஸ்பிடலில் இருந்ததே அதிகம். இப்போ என்னையும் வரவச்சிருக்கீங்க. உங்க பிளான் தான் என்ன?” என்று தான்வி கேட்டபடியே குரலை தாழ்த்தினாள்.

அவர்களருகே சஹஸ்ரா வந்துவிட்டாளென்று உணர்ந்துகொண்ட அதிரனும்
“பிளான் ஏதும் இல்லைங்க. சஹஸ்ரா மேடமுக்கு இன்னைக்கு வேலையாம்.அதான் நீங்க இருந்தா பொழுது போகும்னு வரச்சொன்னேன்.” என்றவனை முறைத்தபடியே அவனுக்கு எதிரே அமர்ந்தாள் சஹஸ்ரா.

அவளை அப்போது தான் கவனிப்பது போல்
“சாரா நீ ஆபிஸ் போறேன்னு சொன்ன போகலையா?” என்று அக்கறையுடன் நடித்தவனின் நடிப்பை உணராதவள்

“இன்னைக்கு ஒரு மீட்டிங் மட்டும் தான் அட்டென்ட் பண்ண வேண்டி இருந்தது. அதுவும் கேன்சல் ஆகிடுச்சு. அதனால ஆபிஸ் போகவேண்டிய அவசியமில்லை.”என்று கூறியவளை பார்த்தவன் மனதினுள் அவளை கேலி செய்தான்.

“நல்லா பொறாமையில் புகை வரட்டும். பிகுவா பண்ணுற பிகு. இன்னைக்கு உன்னை என் பின்னாடியே சுத்தவைக்கல என் பேரு அதிரனில்லை.” என்று மனதினுள் எண்ணிக்கொண்டவன்

“தான்வி பேண்டேஜ் மாத்திடலாமா?” என்று கேட்க தான்வியும் சரியென்று விட்டு எழுந்தாள்.

சஹஸ்ராவோ அவர்களிருவரையும் ஒன்றாக இருக்க அனுமதிக்கக்கூடாதென்ற முடிவில்
“நானும் உங்களுக்கு உதவி பண்றேன்.” என்று கூற அதிரனோ அவளை வெறுப்பேற்றவென்று

“நீ கஷ்டப்படவேண்டாம் சாரா. தான்வியே அதை சரியா பண்ணிடுவாங்க. அதுவும் நான் டீசர்ட் இல்லாமல் இருப்பேன். உன் முன்னாடி அன்கம்பர்டபலாக இருக்கும்.” என்றவனை முறைத்தபடியே மனதினுள்

“அவ முன்னாடினா ஓகேவாம். அதே என் முன்னாடினா கஷ்டமாம்.” என்று கடுகடுத்தவளை அவளின் மனசாட்சி அதட்டியது.

“பொறாமைப்பட வேற விஷயமே கிடைக்கலையா உனக்கு. அவங்க நர்ஸ். அவங்க தொழிலே நோயாளியை கவனிக்கிறது தான். அதை போய் தப்பா பேசுற. நீ இப்படி நினைக்கிறது வெளியில் தெரிஞ்சிது உன்னை பத்தி என்ன நினைப்பாங்க இரண்டு பேரும்... ஆத்திரத்தில் அறிவை இழந்து பேசாத.” என்று அதட்ட அப்போது தான் சஹஸ்ராவிற்கு தன் முட்டாள்தனமான சிந்தனையின் அபத்தம் புரிந்தது.
அதற்கு சற்று மனம் வருந்தியவள் வேறு ஏதும் கூறாது அங்கிருந்து சென்றுவிட்டான்.

அதிரனோ சஹஸ்ராவை வம்பிழுக்க சந்தர்ப்பத்தை எதிர்பார்த்திருக்க அவளின் இந்த செயல் அவனை ஏமாற்றி விட்டது.
அதனை தான்வியிடம் பகிர்ந்துகொள்ளவும் அவன் தவறவில்லை.

“என்னங்க அடம்பிடிச்சு கூட வருவான்னு பார்த்து அமைதியாக போய்ட்டா.” என்று கேட்டவனை

“அப்படி சொன்னா யாரு தான் கூட வருவாங்க. அவங்க பொண்ணு தான். ஆனா அவங்களுக்கும் பகுத்தறிவு இருக்குல்ல?” என்று தான்வி கூற

“அப்போ எனக்கு அறிவே இல்லைனு சொல்லுறீங்க மா?” என்று அதிரன் கேட்க

“நான் ஏதும் சொல்லலைப்பா.” என்று கேலியாக சொன்ன தான்வியை இப்போது அதிரன் முறைத்தான்.

“சரி வாங்க. இந்த பேண்டேஜை ரிமூவ் பண்ண ஹெல்ப் பண்ணுங்க.” என்று கூறி தான்வியை அறைக்குள் அழைத்து சென்றான் அதிரன்.

அவன் காயத்தின் பேண்டேஜை மாற்றியபடியே
“இன்னும் இரண்டு நாள்ல பேண்டேஜை முழுசா எடுத்திடலாம்.” என்று தான்வி கூற

“ஏது இரண்டு நாளா?” என்று அதிர்ச்சியாக பார்த்தவனை விசித்திரமாக பார்த்த தான்வி

“இந்த சின்ன காயத்துக்கு இத்தனை நாள் பேண்டேஜ் போட்டிருந்ததே அதிகம்.” என்று தான்வி கூற

“இப்போவே எடுத்துட்டா அந்த போனி என்னோட தில்லாலங்கடி வேலையெல்லாம் கண்டு பிடிச்சிடும். இன்னும் இரண்டு வாரத்துக்கு இதை கண்டினியூ பண்ணியே ஆகனும். நீங்களும் இதுக்கு காப்பரேட் பண்ணித்தான் ஆகனும்.” என்றவனை பார்த்து தலையை இருபுறமாக அசைத்தாள் தான்வி.

“இது சரிவரும்னு எனக்கு தோணல அதிரன்.” என்று யோசனையுடன் கூறியவளிடம்

“இது எங்களுக்கு கிடைச்சிருக்க ஒரு சந்தர்ப்பம் தான்வி. அவளோட சுயத்தை முழுசா மறைச்சிட்டு வாழனும் சாரா நினைக்கிறா. ஆனா அது அவளுக்கு சரியான பாதையில்லைனு அவ புரிஞ்சிக்கனும். ஆதீயும் இதை தான் எதிர்பார்க்கிறான். இவளோட மாற்றம் அங்கிளையும் மாற்றும்னு அவன் எதிர்பார்க்கிறான். அதுக்கு என்னால் முடிந்த ஒரு சின்ன உதவி தான் இது. இது அவளுக்கு தெரிய வரும்போது அவ எப்படி எடுத்துப்பானு தெரியலை. ஆனா அவளுக்கு எங்களோட திட்டம் தெரியிறதுக்கு முன்னமே அவ மாறியிருக்கனுங்கிறது தான் என்னோட எதிர்பார்ப்பு.” என்று கூறியவனின் வார்த்தைகளிலிருந்த ஏக்கமும் எதிர்பார்ப்பும் எதிரிலிருந்தவளுக்கு புரிந்த போதிலும் அதை எதேச்சையாக கேட்க நேர்ந்த சஹஸ்ராவின் உள்ளமோ உலைக்களமாக கொதித்தது.

இவனும் தன்னை ஏமாற்றியிருக்கிறான் என்ற எண்ணமே அவள் மனம் முழுதும் பரவி படர்ந்திருந்தது.

ஆனால் அவனின் எண்ணத்தையும் அக்கறையையும் அவள் மனம் உணர்ந்திட முயலவில்லை.
பாதியை மட்டுமே கேட்டவளுக்கு அதிரனின் எண்ணம் தெரிந்திட வாய்ப்பில்லை.

தன் அறைக்கு வந்து குறுக்கும் நெடுக்குமாக நடந்தவள் மனதில் பல திட்டங்கள் வரிசை கட்டின.

தன்னுடைய உணர்வுகளையும் நேர்மையையும் ஏமாற்ற முயன்றவனை சாதாரணமாக தண்டிக்க கூடாதென்று தடாலடியாக களத்தில் இறங்க முடிவு செய்தாள்.
தன் முடிவினை மீண்டுமொருமுறை உறுதி செய்துவிட்டு வீட்டிலிருந்து கிளம்பி நேரே அலுவலகத்திற்கு சென்றாள்.

இங்கு அதிரனோ சஹஸ்ராவை தேடிக்கொண்டிருந்தான்.

அவள் போனிற்கு அழைக்க அவளோ அவனது அழைப்பை ஏற்கவில்லை.

இரவு வரை காத்திருந்தவன் அவள் வராது போக வீட்டிலிருந்த வேலைக்காரர்களிடம் அவளை தொடர்பு கொள்ள வேறேதும் வழியுள்ளதா என விசாரிக்க அவர்களோ சஹஸ்ராவின் ஆபிஸ் தொலைபேசி இலக்கத்தையும், அவளின் பி.ஏ இன் இலக்கத்தையும் கொடுத்தனர்.

அதனையும் தொடர்பு கொள்ள முயற்சிக்க எந்தவித பலனும் இல்லை.

இனி வீட்டில் காத்திருப்பது சரிவராது என்று எண்ணியவன் உடையை மாற்றிக்கொண்டு வெளியே செல்ல எத்தனித்த போது சஹஸ்ராவின் கார் வாசலில் வந்து நின்றது.
அதை கவனித்த அதிரனும் வாசலிற்கு வந்திட சஹஸ்ராவோ அவனை கண்டு கொள்ளாது விடுவிடுவென அறைக்குள் சென்று அடைந்து கொண்டான்.

அவளின் நடவடிக்கை சற்று வித்தியாசமாக இருந்தபோதிலும் அவளுக்கு ஓய்வு தேவையென்று எண்ணியவன் அவளை தொந்தரவு செய்யாது தன்னறைக்கு சென்றான்.

அறைக்குள் வந்து அடைந்து கொண்ட சஹஸ்ராவிற்கு கோபம், வெறுப்பென்று அனைத்தும் ஒன்றாக குவிந்து அவளை அலைக்கழித்தது.

அதிரன் பற்றிய அவளின் எண்ணங்களும், எதிர்பார்ப்புகளும் பொய்த்து போனதே அவளின் இந்நிலைக்கு காரணம்.
அதிரனுடனான உறவு மீண்டும் உயிர்ப்படைந்த போது அவளுள் மீண்டிருந்த பூரிப்பு அவனும் தன்னை மாற்றுவதற்காகவே தன்னை அணுகியிருக்கிறானென்று அவன் வாய் வழியே கேட்டபோது காணாமல் போயிருந்தது.

இது அவளின் முடிவு. அதனை மாற்றுவதோ மீள்பரிசோதனை செய்வதோ அவளின் உரிமை. அதில் உறவு, நட்பு என்ற பெயரில் யாரும் தலையிடுவதை அவள் விரும்பவில்லை.
மென்மையான அவளின் மனதை அன்னையின் இறப்பும் தந்தையும் செயல்களும் பெரிதும் பாதித்திருந்தது.

அவள் மனம் நம்பியிருந்தவை பொய்த்து போனதன் விளைவே இந்த விரக்தி.

அவளை பலவீனமானவளென்று எண்ணியவர்கள் முன் தன் அதீத திறனையும் ஆளுமையையும் வெளிப்படுத்தவே அவள் இத்தனை ஆண்டுகளாய் கடுமையை கடமையாய் செய்தாள்.

தன் நம்பிக்கைக்கு விரோதியாகி மாறிய தன் தந்தையின் செயலுக்கு பதிலடி கொடுக்கவே இத்தனை கொடுமைகளையும் அவள் செய்திட வேண்டியிருந்தது.
ஆனால் இது எதனையும் அறிந்திடாமல் தன்னை மாற்றிட நெருங்க முயன்ற அதிரனின் செயல் அவளுக்கு விரக்தியை கொடுத்தது.

யோசனையின் பிடியிலிருந்தவளுக்கு உறக்கம் வரமாட்டேனென்று அடம் பிடிக்க அறையிலிருந்து வெளியேறி கார்டன் ஏரியாவிற்கு வந்தாள்.

மணி இரவு பன்னிரெண்டை நெருங்கியிருக்க இரவின் கருமை ஏனோ அவளுக்கு அரவணைப்பாயிருந்தது.
சுற்றுப்புறத்தை நிதானமாக அளந்தபடியே நடந்து வந்தவளை தடுத்தது அதிரனின் குரல்.

“போனி நீ இன்னும் தூங்கலையா?” என்றவனின் குரல் வந்த திசையை திரும்பி பார்த்தவள் பதிலேதும் கூறாது தன் நடையை தொடர்ந்தாள்.

அதிரனுக்கு ஏதோ சரியில்லையென்று புரிந்திட அவளை அழைத்தபடியே பின்னாலேயே சென்றான்.

சஹஸ்ராவோ அதிரனை கண்டுகொள்ளாது தன் நடையை தொடர அதிரன் பின்னாலிருந்து அவள் கையை பற்றினான்.

அவன் கையை பற்றிய மறுகணம் அவன் கையினை வளைத்து பிடித்து கீழே அழுத்தினாள் சஹஸ்ரா.

அவளின் இந்த திடீர் தாக்குதலை எதிர்பாராத அதிரனுக்கு வலியொரு பக்கம் அதிர்ச்சியொருபக்கமென்று என்ன நடக்கிறதென்று புரியவே சில விநாடிகளானது.

“ஆ... வலிக்கிது சாரா. விளையாடாத. ஆ...” என்று வலியில் அலறியவனை கடுமையாக பார்த்தபடியே

“நீ விளையாடாத விளையாட்டையா நான் விளையாடிட்டேன்.” என்றவளின் வார்த்தைகளில் இருந்து அழுத்தம் அவளது பிடியிலும் இருந்தது.

அதிரனோ
“ஐயோ.. நான் எப்போ உன்கூட விளையாண்டேன். அப்படியே விளையாடியிருந்தாலும் மன்னிச்சிரு. ஆ... வலிக்கிது. தயவு செய்து கையை விட்டுடு சாரா. சத்தியமா முடியல.” என்று வலியில் கூச்சலிட்டவனின் பிடியை தளர்த்தினாள் சஹஸ்ரா.

அவள் பிடியை தளர்த்தியதும் தரையில் உருண்டபடியே கையை அழுத்துவிட்டான் அதிரன்.

ஆனால் சஹஸ்ராவோ அவனை பற்றிய கவலையின்றி அங்கிருந்து சென்றுவிட்டாள்.

அதிரனுக்கு அவளின் அழுத்தம் இப்போது மிரட்சியூட்டியது.

ஏற்கனவே சஹஸ்ரா பற்றி ஆதீபன் கூறியது, இதற்கு முன்னால் அவளை பற்றி தெரிந்து கொண்டது என்று அனைத்துமே உண்மையென்று இன்று அனுபவத்தில் உணர்ந்து கொண்டான் அதிரன்.

“நிஜமாகவே இவ ஆதி சொன்ன மாதிரி பயங்கர பிட்டா தான் இருக்கா. ட்ரெயினிங் எடுத்தான்னு சொன்னவன் எது எதுல ட்ரெயினிங் எடுத்திருக்கானு தெளிவா சொல்லியிருந்தா நானும் கொஞ்சம் உஷரா இருந்திருப்பேனே. ஒரு ஆக்ஷனுக்கே கண்ணுல தண்ணி வந்திருச்சே. மொத்தமா இறக்குனானா நம்ம நிலைமை... ஆத்தாடி குடும்பமே ரௌடி பரம்பரை போலயே. ஆனால் இப்போ எதுக்கு நம்மளை திடீர்னு அட்டாக் பண்ணா? ஒருவேளை உண்மை ஏதும் தெரிஞ்சிடுச்சோ... “ என்று மனதினுள் யோசித்தவனுக்கு அது தான் காரணமாக இருக்குமென்று புரிந்தது.

இங்கு வந்ததிலிருந்து அவன் அவளை எவ்வளவோ கேலி செய்து சேட்டை செய்திருக்கிறான். ஆனால் என்றுமே அவளின் நடவடிக்கைகள் இத்தனை அழுத்தமாக இருந்ததில்லை. இன்றும் வீட்டில் இருக்கிறேனென்று கூறியவள் திடீரென சொல்லாமல் வெளியே சென்றதோடு இவ்வாறு நடந்துகொள்கிறாளென்றால் நிச்சயம் அவளுக்கு உண்மை தெரிந்திருக்குமென்று நம்பினான் அதிரன்.

ஆனாலும் அதை உறுதிப்படுத்திய பின்பே அது செய்யவேண்டியவற்றை திட்டமிட வேண்டுமென எண்ணியவன் தன் கரத்தினை தேய்த்துவிட்டபடியே உள்ளே சென்றான்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top