ஆலாபனை-2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Anamika 68

Author
Author
Joined
Nov 13, 2021
Messages
6
Reaction score
7
Points
3
ஆலாபனை- 2

WhatsApp Image 2022-01-14 at 6.36.37 PM.jpeg


Everybody has a chapter they don't read out loud


நான் ஒரு கனவு கண்டேன். வெகு விநோதமான கனவு அது! முதுகுத் தண்டில் குளிர் கம்பிகளைப் படரவிடும் கனவு. நிதர்சனத்திற்கு அப்பாற்பட்ட நிலை. அது நிதர்சனம் ஆகிடவே கூடாதென்று எவரும் அஞ்சும் நிலை. அதுவே இன்றென் நிலை. கரைகளைக் கடந்துவிட்ட கனவிடமிருந்து தப்பி ஓடுகிறேன் வருவது ஆழிப்பேரலை என்றறியாமல்.


விழிகளை விரித்தவனின் பார்வையில் பளீர் வானும் அதில் ஆங்காங்கே வென்பஞ்சு மேகங்களுமாய் வெளிச்சத்தின் ராகத்திற்கேற்ப இயைந்துகொண்டிருப்பது விழுந்தது, மேல் நோக்கியிருந்த பார்வையை அப்படியே சற்றே தாழ்த்தினான். கண்களைக் கூசச் செய்யும் வெளிர் நிறத்தில் மிளிரியபடி அவ்வானை முட்டி நிற்கும் கட்டிடம் கண்ணில் பட்டது. தலையைக் குனிந்து தானிருக்கும் நிலையைக் கண்டான். அதலபாதாளத்தில் நின்றிருந்தான். ஆம்! அதல பாதாளமேதான். கொஞ்சம் கொஞ்சமாய் தங்கத் திரவமாய் நெருப்பு அவன் நின்றிருந்த ஒற்றை பாறையையும் தன் தாகத்திற்குப் பருகிக்கொண்டிருந்தது. மறுபடியும் அவன் விழிகள் இரண்டும் மேலே ஏறிட்டன. ஆகாயத்தில் அத்தனை ஆனந்தம்! அங்கிருந்த மக்களின் சிரிப்பொலியின் எச்சத்தைக் காற்றின் அதிர்வலை இவன் காதுகளில் முணுமுணுத்துவிட்டு செல்லும்பொழுது ஒரே வார்த்தையில் அது யுடோபியா! அதாவது சொர்க்க புரி! என்று அவனைச் சீண்டிச் சென்றது. கால்களுக்குக் கீழே வெப்பத்தின் சதவிகிதம் அதிகமாகிக்கொண்டே போனது. அவன் நினைத்தால் அந்த பளீர் கட்டிடத்தை ஏற முயற்சி செய்யலாம். முடிந்தால் சொர்க்க புரி, இயலாவிடில் இதே தங்கக் கிணற்றுக்கு தீனியாவான்! இல்லை கால்வரை எட்டிவிட்ட முடிவைக் கண்மூடி உள்ளிழுத்துக்கொள்ளலாம். ஒரு கணம்தான் யோசித்தான். ஒரே எட்டில் கட்டிடத்தின் கம்பிகளைப் பற்றிக்கொண்டவன் திரும்பி பாராமல் விடுவிடுவென ஏறத்தொடங்கினான்.

இடையில் பல தடங்கல்கள் வந்தன. கடுமையான வெய்யில் காலங்கள் அவன் தேகத்தை காந்த செய்தன. திடீரென மழை பொழிந்து அவனை பின்னுக்கு இழுத்தன. அவன் காயங்களைக் கண்டு படுத்திய பல பறவைகளையெல்லாம் கடந்து, இதோ.. இதோ.. இன்னும் சில அடிகளில் அவன் கண்ட சொர்க்க புரி! இதோ.. இதோ.. இன்னும் சில எட்டுகளில் அவன் எட்டிவிடுவான்! இன்னும் மூன்றே எட்டுகள்.. இன்னும் இரண்டே எட்டுகள்.. இன்னும்.. சட்டென அவனை பின்னிருந்து ஏதோ கீழ் நோக்கி இழுத்தது. அதன் அழுத்தம் தாளாது அவன் தலையைத் திருப்பி பார்க்க முயற்சி செய்கிறான், அதே நொடியில் அவன் கீழே இழுத்து வீசப்பட்டான். அவனுடல் அவன் மீண்டு வந்த பாதாளத்தை நோக்கிப் பறக்கிறது. அவன் பார்வை சொர்க்கபுரியையே வெறிக்கிறது. கதற நினைப்பவனுக்குத் தொண்டையில் இறுக்கம். காற்றில் மிதக்கும் கைகளை அகல நீட்டி விழிகளை மூடிக்கொள்கிறான்.

"எழுந்திரு அவிரா.." எனும் சில்லென்ற குரல் காற்றில் மிதந்து அவன் செவி வழி கனவினுள் நுழைகிறது. சட்டெனப் படுக்கையில் எழுந்தமர்ந்தவனுக்கு மேல் மூச்சும் கீழ் மூச்சுமாய் வாங்கியது. குரல் வந்த திசையைக் கணிக்க முயற்சி செய்தான். தூக்கத்தில் கிடந்து விழித்தவனின் புலன்கள் இன்னும் சோம்பலாய் கிடந்தது. சட்டெனப் பார்வை பால்கனி,சன்னல் கதவுகளிடம் கவனமாகிறது. அவன் எப்படி இறுக பூட்டினானோ அப்படியே இருந்தது. ஆனால் அவிரனின் மனம் ஆயிரம் தரம் அடித்துச் சொல்லியது அக்குரல் கனவில்லை என. இது முதல் முறையல்லவே! அவனால் நிச்சயமாய் உணர முடிந்தது! அவ்விடத்தில் அவனைத் தவிர்த்து வேறு யாரோ இருந்தனர். அவனால் இன்னொரு உயிரின் அலைகளை உணர முடிந்தது! தன் மீது விழுந்த பார்வையின் வெப்பத்தால் உள்ளெழுந்த குளிர் பரவலை நூறு சதவிகிதம் உணர்ந்தான். அடிக்கடி இந்த அறியா பார்வையின் ஊசிக் குத்தலை உணர்ந்திருக்கிறான். சட்டென எழுந்து சென்று பால்கனியை திறந்து பார்த்தான். திறந்ததும் காற்றில் ஆடத் தொடங்கிய திரைச்சீலை தீண்டியதே தவிர அங்கு வேறெவரும் வந்து சென்ற தடம் கூட இருக்கவில்லை. தெரு விளக்கின் ஒளியில் குளித்திருந்த பால்கனியையும் தெரு முக்கையும் இன்னொரு முறை சந்தேகமாய் பார்த்தவன் கதவை இறுக அடைத்துவிட்டு சன்னலையும் ஒரு முறை சரிபார்த்துவிட்டு வந்து படுக்கையில் அமர்ந்தான்.

ச்சே! என்று தலையை உலுக்கி எண்ணங்களை பின்னுக்குத் தள்ளி, ஆழ மூச்சிழுத்து தன்னிலை திரும்பியவன் மணி பார்த்தான். அது அதிகாலை நாலென்றது. படுக்கையில் சரிந்தவனுக்கு மறுபடியும் விழிப்பு தட்டியபொழுது மணி ஆறைக் கடந்திருக்க அவசர அவசரமாய் அதே அறையிலிருந்த குளியலறை நோக்கி ஓடினான் அவிரன்.

அவசரகதியில் குளித்தவன் அதே அவசரம் குறையாதவனாய் சமையலறை நோக்கி வர ஒரு கணம் அவன் இதயம் குட்டி ஜம்பொன்றுடன் பழைய நிலை சென்றது. அங்குச் சாப்பாட்டு மேசையில் கால்களைத் தூக்கி வைத்துக்கொண்டு நாற்காலி பிடியில் கழுத்தை நிறுத்தி முகத்தை ஏதோ ஒரு புத்தகத்தால் மூடியபடி அமர்ந்திருந்தவனைக் கண்டு.

WhatsApp Image 2022-01-14 at 6.36.37 PM (1).jpeg

இவன் காலடிச்சத்தத்தை கவனித்துக்கொண்டிருந்திருக்க வேண்டும்! சரியாய் இவன் நின்றதும், "காலை வணக்கங்கள் பேப்!" என்று அத்தனை பற்களும் தெரிய கைகளை அகல விரித்து அதி பிரகாசமாய் புன்னகைத்தான் வீ எனும் வீயன்.

எல்லாம் சில நொடிகளே! அவனைக் கண்டும் காணாததுபோல சுற்றிக்கொண்டு சென்று அடுப்பில் காபிக்குத் தண்ணீரை வைத்தான் அவிரன். அதை எதிர்பார்த்திருந்தவனைப் போல அமர்ந்திருந்த இருக்கையில் இருந்து எழுந்துகொண்டவன் அவனுக்கு நேர் பின்னால் முதுகை காட்டிக்கொண்டு காபிக்குக் கோப்பைகளைத் துடைத்துக்கொண்டிருந்தவனின் தோளில் தனது தாடையை வைத்தபடி பார்த்துக்கொண்டிருக்க, அவிரன் தன் தோளை லேசாய் உதறி அவன் தாடையைத் தள்ளிவிட்டான்.

அதில் முகத்தைத் தூக்கி வைத்தவனாய் போலி எரிச்சலுடன், "என் பொண்டாட்டி கூட இவ்ளோ கோவப்பட மாட்டாடா!" என்று வீயன் சொல்லவும் சட்டென அவிரனின் கூர் பார்வை வீயனிடம் சந்தேக ரேகைகளைப் படரவிட அதில் நம்ப மாட்டாத திணறல் சிரிப்பு ஒன்றை வெளியிட்டவனோ, "டேய்.. ஓஹ்.. தெய்வமே! சொந்த வீட்டுக்கே கேமியோ குடுத்திட்டிருக்கேன். என்னமோ உனக்கு தெரியாம நான் ரகசியமா கல்யாணம் பண்ணி மறைச்சு வச்சிருக்கறா மாதிரி பாக்கற.." என்க மற்றவனின் பார்வை 'நீ செஞ்சாலும் செய்வ' என்பதைப் போல விழ, வாய் மீது கை வைத்து பேச்சற்று நிற்பதாய் பாவனை செய்தான் வீயன்.

அவிரனும் வீயனும் பல வருடங்களாக ஒன்றாய் தங்கியிருக்கும் நெருங்கிய நண்பர்கள். அவிரன் ப்ரஃபஸர். வீயன் வெளியுலகிற்கு வெட்டி ஆஃபிஸர் அதற்கடியில் டிடெக்டிவ் வீ. அவன் வேலை காரணமாகச் சொந்த வீட்டிற்கே எப்பொழுதாவது ரா கொள்ளையனைப் போல் வந்து போய்க் கொண்டிருக்கிறான். அவனும் அந்த வீட்டில்தான் இருக்கிறான் என்று அவனாய் போய் சொன்னால் ஒழிய வெகு சிலரைத் தவிர யாருக்கும் தெரியாது. இத்தனை வருடங்களில் அவிரனுக்கு அது சராசரி ஆகிவிட்டிருந்தது.

"சரீ.. சரீ.. அடுத்த வாட்டி தகவல் சொல்ல ட்ரை பண்றேன். இவ்ளோ இழுக்கும்னு எதிர்ப்பார்க்கல" என்று சமரசம் பேசினான் வீயன்.

"ம்ம்.. எங்க இருந்த?" என்ற அவிரனின் சாதாரண குரலில் இட வலமாய், "அது கான்ஃபிடெஷியல்!" என்று தலையாட்டிய வீயனின் வலக்கை பேண்ட் பாக்கெட்டிலிருந்து எதையோ உருவியது மெல்ல. ஒரே மாதிரியான அழகான பீடட் ப்ரேஸ்லெட்டுகள் இரண்டு வெளி வந்தன.

"வாய் கான்ஃபிடென்ஷியல்னு சொல்லுது ப்ரேஸ்லெட் கோவானு கத்துதே!" என்று கேலியாய் கேட்டவனுக்கு

"நான்தான் சொல்ல மாட்டேனு சொன்னேன். நீ கண்டுபிடிக்க கூடாதுனு சொன்னேனா?" என்று அதே குரலில் பேசியவன் சட்டென ஒரு காலில் முழந்தாளிட்டு அவிரனின் முன் ஒரு ப்ரேஸ்லெட்டை நீட்டியபடி, "அவி மேரி மீ!!" என்றான் நாடக பாணியில்.

அவிரன் சிறிதும் யோசியாமல், "உன்னலாம் மனுஷன் கட்டுவானாட?" என்றுவிட்டு இது எப்பொழுதும் நடப்பதுதான் என்பதைப்போலத் திரும்பிக் கொதித்திருந்த வெந்நீரைக் கவனிக்கவும், "அதனாலதான் உன்ட்ட கேட்டேன். வேண்டாம்னா போ நீ குடுத்து வச்சது அவ்ளோதான்!" என்றுவிட அவிரனோ, "இப்ப புரியிதா நீ ஏன் சிங்கிளா இருக்கனு?" என்றான் விடாமல்.

"உன்ன கூட வச்சிட்டு எப்படி பேப் கமிட்டாக முடியும்? பேச வர பொண்ணுங்களலாம் வாத்தி பார்வை பார்த்தே விரட்டிருவ!"

"ஹ! நான் ஹாண்ட்சமான ப்ரஃபஸர்னு நீதானடா சொன்ன?" என்கவும் பட்டென எழுந்த வீயன் கைகள் இரண்டையும் அவிரனுக்கு இரு புறமும் வைத்து அவனையே மேலும் கீழுமாய் அளவெடுத்தான்.

அந்த திடீர் அதிரலில் அவிரன், "வெண்ணீர கொட்டிருப்பேன்!" என்று திட்ட தொடங்க "ஷ்!" என்று தன்னிதழில் ஒற்றை விரலை வைத்து அமைதி காக்கும்படி சொன்னவன் சில கணங்களுக்குப் பிறகு, "சாரி பேப் ஏதோ போதைல ஒளறிட்டேன்" என்று சிரிக்காமல் சொல்லக் கையில் இருந்த வெந்நீர் பாத்திரத்தால் மற்றவனின் கையில் இடித்து நகர்த்திய அவிரன் வேலையில் கவனமாகிட வீயன், "ஹ்ம்.. தி க்ரேட் வீயன டேமேஜ் பண்ணிட்ட.." என்று போலி பெரு மூச்சொன்றுடன் அவிரனின் கையில் அந்த ப்ரேஸ்லெட்டை கட்டிவிட்டு மறுபடியும் அதே நாற்காலியில் சென்று அமர்ந்தான்.

உண்மையிலேயே அவர்களது கல்லூரி காலங்களில் அவன் "தி க்ரேட் வீயன்" தான். அவிரனின் பெயர் பேராசிரியர்களின் வாயில் சில சமயம் அகப்படுமென்றால் வீயனின் பெயர் மாணவர்களிடையே பிரசித்தி பெற்றது. அவிரன் படிப்பில் கெட்டி. வீயனின் புத்திக் கூர்மை அவனது மதிப்பெண்களைத் தாண்டியது. அவன் மாணவர்களிடையே பிரபல்யமானவன். அவிரன் அளந்து பேசும் ரகமெனில் வீயன் அவிரனுக்கும் சேர்த்து ஊரை வாங்கும் ரகம்.

அவிரன் காபியைக் கலக்கிக் கொண்டிருக்க திடீரென வீயன், "பேப்" என்றான் ஒரு கையை அவன் புறம் நீட்டி அசையாது நிற்கும்படி. அவன் உடல்மொழி அவன் எதையோ கவனித்துக் கேட்க முயற்சி செய்கிறான் என்று சொல்ல என்னவென்று தெரியாவிட்டாலும் அமைதிகாத்தான் அவிரன். மெல்ல எழுந்துகொண்ட வீயன் கதவிடம் நகர்ந்தான், அவனைத் தொடர்ந்து அவிரனும். சரியாய் வீயன் கதவில் கை வைக்கவும் வெளியில் "ஆ" என்ற அலறல் சத்தம் கேட்கவும் சரியாய் இருக்க படாரென கதவைத் திறந்தவன் முதல் தளத்தில் இருந்து குதித்து வெளியில் ஓட அவனை பின் தொடர்ந்த அவிரனின் பார்வையில் அக்காட்சி விழுந்தது. நடுத்தர வயது பெண்மணி ஒருவரின் வாயை ஒரு கையால் மூடியபடி மறுகையால் கழுத்துச் சங்கிலியை இழுத்துக்கொண்டிருந்த ஒருவனும் அவனருகே பைக்கில், கையில் கத்தியுடன் தயார் நிலையில் அமர்ந்திருந்த இன்னொருவனும்.

கதவு படாரென திறக்கப்பட்ட சத்தத்தில் அவர்களது கவனம் இவர்களிடம் திரும்பியது. பைக்கில் இருந்தவன் வீயன் தங்களை நோக்கி ஓடி வருவதைக் கண்டு வண்டியைக் கிளப்ப அப்பெண்மணியோ மற்றவனின் கரத்தை இறுகப் பிடித்திருந்தார். உடன் வந்தவனை விட்டுவிட்டு அந்த பைக்காரன் வேகமெடுத்தான். வீயன் பைக்காரனை துரத்த ஒரு கணம் கண்ட காட்சியில் நின்றுவிட்ட அவிரன் மறு கணமே அப்பெண்மணியை தாக்கிக்கொண்டிருந்தவனிடம் விரைய அவன் அவிரனின் கையை கிழித்துவிட்டு மறு பக்கமாய் ஓடிவிட்டான். அது ரெஸிடென்ஷியல் ஏரியா. பெரிதாய் ஸிஸிடீவி கேமராக்கள் என்று எதுவும் இருக்கவில்லை, சற்றே அமைதியான தெருவும்கூட! நடந்த களேபரத்தில் அதற்குள் சிலர் வீட்டினுள் இருந்து வெளியில் வரத்தொடங்கியிருந்தனர். அப்படியே தரையில் சரிந்து அமர்ந்துவிட்ட பெண்மணியிடம் விரைந்தான் அவிரன்.

"உங்களுக்கு ஒன்னுமாகலையே?" என்று அமர்ந்து அவர் புறம் குனிந்தவன் அப்பொழுதுதான் கவனித்தான். நடந்த போராட்டத்தில் அவர் கழுத்தில் ஏற்பட்டிருந்த காயத்தை. அது அவரது ரவிக்கையை ரத்த கோடுகளால் நனைக்கத் தொடங்கியிருக்க அவர் சுய நினைவை இழந்து கொண்டிருந்தார். நொடியில் சுதாரித்தவன் மற்றவர்களின் உதவியோடு அவரை ஆட்டோவில் ஏற்றியனுப்பிவிட்டு போலீஸிற்கு அழைத்தான்.

அங்கு பைக்காரனை துரத்திக்கொண்டு சென்ற வீயன் குறுக்கு வழியில் காம்பொண்ட்டை ஏறிக் குதித்துக்கொண்டிருந்தான் ஒரு, "சாரி! எமர்ஜென்ஸி!!" என்று பதறி விலகிய அவ்விடத்து உரிமையாளரிடம் சொல்லியபடி. பாரலெல் ரோட்டிற்குள் நுழைந்தவனை சில நொடி வித்தியாசத்தில் கடந்து சென்றிருந்த பைக்காரனை கண்டுவிட்டுத் துரத்த எத்தனிக்க அதற்குள் பைக்காரனை மறித்தபடி மற்றொரு சைக்கிள் வந்து நின்றது. சைக்கிளில் அவிரன்.

அப்படியே முட்டியில் உள்ளங்கைகளை ஊன்றியபடி நின்று மூச்சு வாங்கிக்கொண்ட வீயன், "சீரியஸ்லி பேப்? சைக்கிள்?" என்க அதற்கு அவி அங்கிருந்து 'அத ஓடியே வந்த நீ சொல்ற' என்ற பார்வை பார்த்தான்.

பைக்காரனை போலீஸார் கூட்டிச்சென்றுவிட. அவர்களிடம் பேசிவிட்டு நேராய் அவிரனை நோக்கி வந்தான் வீயன்.

"பேப்! உனக்கெதுவுமில்லையே?" என்று ஆராய்ச்சியாய் பார்த்துக்கொண்டே வந்தவனின் பேச்சு பாதியிலேயே நின்றது.

"ரத்தம் அவி!" என்றவன் கையை திருப்பி பார்த்தவன் வேறெங்கும் பட்டிருக்கிறதா என்று அவனை அங்குமிங்குமாய் திருப்பி பார்த்து உறுதி செய்துகொண்டான்.

"பெருசா எதுவுமில்ல வீயா" என்று வீட்டினுள் நுழையப் போனவனைப் பிடித்து நிறுத்தியவனின் இறுகிய உருவத்தில் அவிரனால் எதையும் கண்டுகொள்ள இயலவில்லை, "வா ஹாஸ்பிடல் போவோம்" என்றான்.


"அதெல்லாம் வேணாம் வீயா" என்று விலகியவனைப் பிடித்து நிறுத்திய வீயனின் பிடியில் அத்தனை அழுத்தம் இருந்தது.

"வா"

அவிரன், "கையெடு வலிக்குது.. வீட்ட லாக் பண்ணிட்டு வரேன்" என்றதும் சட்டென வீயன் பிடி தளர்ந்தது. முகத்தில் இருந்த இறுக்கமும் இலகிவிட வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பக்கத்து வீட்டுப் பாட்டியிடம் திரும்பி, "ஸ்வீட்ஹார்ட் எனக்காக வீட்ட பூட்டிருவீங்களாம்" என்று விரியப் புன்னகைத்தவன் அவரும் அதே சிரிப்பைப் பிரதிபலிக்கவும் அப்படியே அவிரனை அருகிலிருந்த க்ளீனிக்கிற்கு தள்ளிச் சென்றான். காயம் ஆழமாய் இல்லாததால் தையல் எதுவும் தேவையிருக்கவில்லை. அவனைத் திருப்பி வந்து வீட்டில் விட்டவன் உடனே வெளியில் கிளம்பிவிட்டான்.
பல மணி நேரங்கள் கடந்தும் வரவேயில்லை.

அன்று கல்லூரிக்கு விடுப்பு எடுத்துக்கொண்ட அவிரன் வாரம் இரு முறையென மாலையில் எடுக்கும் ட்யூஷனுக்கு கிளம்பிவிட்டான். வகுப்புகள் முடிந்து அடுத்த நாளைக்குத் தேவையான காய்கறிகளையும் தீர்ந்து போயிருந்த இன்ஸ்டன்ட் உணவு வகைகளையும் வாங்கிக்கொண்டு பொறுமையாய் அவன் வீடு திரும்பும்பொழுது வானம் இருளுடன் பிணைந்துவிட்டிருந்தது. அவன் வீடிருக்கும் தெரு மட்டுமின்றி அந்த பகுதியே சற்று ஆட்கள் நடமாட்டம் குறைவானதுதான். இல்லை என்றே சொல்லிவிடலாம். இரு புறங்களும் மரங்கள் அடர்ந்து வானுக்கு இன்னும் இருளும் குளுமையும் சேர்த்தது. தெருவிளக்கின் வெளிச்சத்தில் மஞ்சள் குளித்திருந்த தெருவில் அந்த இரவு நேரத்தில் தனியாய் நடக்கையில் அத்தனை குளுமையாய் இருந்தது. அது அவனை மீண்டும் அந்த ஊசி பார்வை உறுத்தும்வரை! யாரோ தன்னை பின் தொடர்வது போலிருக்கச் சட்டென நின்றவன் திரும்பிப் பார்த்தான். அவனைத் தவிர்த்து அங்கு வேறெவரும் இருக்கவில்லை. பார்வையைச் சுற்றிலும் சுழலவிட்டவன் திரும்பி நடந்தான். அவன் நடையில் வேகம் கூடியிருந்தது. வீடிருக்கும் தெருவில் திரும்பியவனின் தோளில் திடீரென்று ஒரு கை விழ பதறித் திரும்பினால் பெரிய சிரிப்பொன்றுடன் வீயன் நின்றிருந்தான் "ஹே பேப்" என்று.


சிறு ஆசுவாச மூச்சுடன் திரும்பி நடந்தவனுக்கு மறுபடியும் அதே உணர்வு!

சட்டென நின்றவன் திரும்பி மறுபடியும் பார்த்தான். யாருமில்லை. இவனையே கவனித்துக்கொண்டிருந்த வீயனின் நெற்றி சந்தேகத்தில் சுருங்கின.

"என்னாச்சு அவி? ஏதாவது பிரச்சனையா?" என்றான்.


"இல்ல யாரோ அங்க இருந்தா மாதிரி இருந்துச்சு" என்று இருளடர்ந்த திருப்பத்தைச் சுட்டிக்காட்டியவன், "ப்ச் நீ வா" என்று திரும்பி வீட்டை நோக்கி நடக்க, வீயன்,"இரு ஒரு நிமிஷம்" என்றுவிட்டு அந்த தெரு முனை வரை சென்று பார்த்துவிட்டு வந்தான்.

"யாருமில்லையே அவி" என்று சிந்தனையாய் சொல்லியவனிடம், "ஏதாவது பூனையா இருக்கும்" என்று முடித்துவிட்ட அவிரன் அதற்கு மேல் அதைப் பற்றி பேசவில்லை.

அவிரன், "எங்க போன?"

வீயன்,"சின்ன வேலையிருந்தது"

அவிரன், "ஓஹ்.."

வீயன்,"பேப் நாளைக்கு என்ன ப்ளான்? லீவ்தானே?"

அவிரன், "ம்ம்.. லைப்ரரி போகனும்" என்றதும் அவன் கழுத்தில் கைபோட்டு தன்புறமாய் இழுத்தவன், "லைப்ரரிக்காக ரெண்டு மணி நேரம் ட்ராவல் பண்றது நீயாதானிருப்ப!" என்க அவிரன் முழங்கையால் மற்றவனின் இடையில் இடித்துத் தள்ளிவிட்டுவிட அரை நொடி நின்று இவனையே பார்த்தவன் மறுகணமே இவனை பின்னிருந்து அணைப்பதுபோல கழுத்தோடு சேர்த்து இறுக்கித் தவ்விக்கொள்வதும் அதற்கு இவன் தள்ளிவிடுவதுமாய் மெல்லிய சிரிப்பு சத்தத்துடனேயே வீட்டை நோக்கி நடந்தனர் இருவரும்.


அதிகாலை எழுந்து தனது வழமையான ஜாகிங்கிற்கு கிளம்பி வெளியில் வந்த அவிரனின் கவனம் கவ்ச்சில் அப்படியே சரிந்து உறங்கியிருந்த வீயனிடம் சென்றது. அவனது உடையும், அறைகுறையாகக் கழட்டப்பட்டிருந்த சாக்ஸீம், வாசலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக கிடந்த அவனது ஷூவும் அவன் இரவு மறுபடியும் வெளியில் சென்றுவிட்டு வந்திருப்பதை உரைத்தது. அந்த குளிரிலும் ஏதோ கடலோரம் சன் பாத் எடுப்பது போலப் படுத்திருந்தவனைக் கண்டவன் அவன் அறையிலிருந்து ஒரு கம்ஃபட்டரை எடுத்து வந்து போர்த்திவிட்டு கிளம்பிவிட்டான். திரும்பி வந்தபொழுது கவ்ச்சில் கம்ஃபட்டர் மட்டுமே கிடந்தது. சாப்பாட்டு மேசையிலிருந்து உணவு வாசம் இழுத்தது. அருகில் சென்றான், அதனுடனே இருந்த ஸ்டிக்கி நோட்டில் "ஃபூடீஸ்க்கு நேரமாச்சு! இதை சாப்டுட்டு லைப்ரரி கிளம்பு. லவ் யூ பேப்!" என்றது வீயனின் கோழி கிறுக்கல் கையெழுத்து. அவன் பகுதி நேரமாய் ஃபூடீஸ் எனும் கஃபே ஒன்றில் பேரிஸ்டாவாக வேலை செய்தான். ஸ்டிக்கி நோட்டை மடித்து ஓரமாய் வைத்த அவிரன் காலை உணவை முடித்துக்கொண்டு லைப்ரரி கிளம்பினான்.

WhatsApp Image 2022-01-14 at 6.36.37 PM (2).jpeg

அவன் இரண்டு மணி நேரம் பயணிப்பது இதோ இந்த பிரமாண்டமான புத்தக உலகினுள் மூழ்கத்தான். அந்த பழமை வாய்ந்த நூலகத்தின் அமைப்பு அப்படி. காகித வாசம் அவனை விழுங்கிக்கொண்டது. எத்தனை மணி நேரங்களை அந்த ரேக்குகளுக்கிடையில் கழித்தானோ தெரியவில்லை! ஆனால் அவன் ஆழ்நிலை மயக்கத்தை கலைப்பதுபோல யாரோ அவனுக்கு மறுபுறம் இருந்த பகுதியில் பெரிய சைஸ் ஹார்ட் கவர் புத்தகம் ஒன்றை தவறவிட்டனர். ஒரு நொடி கவனம் சிதறினாலும் திரும்பி புத்தகத்தினுள் புக இருந்தவனின் கவனத்தில் விழுந்தது அந்த காட்சி. அந்த புத்தகங்களுக்கு இடையே தெரிந்த ஒரு பெண். அறைகுறையாய் தெரிந்ததில் யாரென்று அவனால் முகம் பார்க்க இயலவில்லை. ஆனால் அவனது கவனம் ஈர்த்தது அவளது உடல் மொழி. ஏதோ ஒருவித பதட்டத்தில் கீழே விழுந்த புக்கினருகே மண்டியிட்டமர்ந்திருந்தாள். இவனது உள்ளுணர்வு இவனை உந்தித் தள்ளியது. மிருதுவான காலடி சத்தத்துடன் அவளிருக்கும் பகுதியில் நுழைந்தவன் மறுபுறம் திரும்பி இருப்பவளிடம் மெல்லிய கரிசனக் குரலில், "எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்?" என்றான். அவன் குரல் கேட்டு விருட்டென திரும்பியவளின் உடலெங்கும் மெல்லிய உதறல். விழி முழுதும் பயம் சூழ்ந்திருக்க வெறித்தவளின் பார்வை அவனுள் எதையோ அசைத்தது. அவள் முகத்தை அப்பொழுதுதான் கூர்ந்து கவனித்தான். அவளும் அப்பொழுதுதான் கிரகித்தாள்

"மிளிரா?"

"அவிரன்?"


எங்கோ,


மிதுனா மூச்சுக் காற்றுக்குத் திணறிக்கொண்டிருந்தாள். அவள் கழுத்தில் இருந்த கையின் இறுக்கம் நொடிக்கு நொடி கூடிக்கொண்டே போனதே தவிர இலகவேயில்லை. இன்னும் சிறு கணங்களில் அவள் கழுத்து எலும்புகள் நொறுங்கப்போகிறது என்பதை உணர்ந்தாள். வழமைபோல வீடு திரும்பிக்கொண்டிருந்தவளைச் சட்டென ஒரு உருவம் இருளடர்ந்த பகுதிக்குள் இழுத்துக்கொண்டிருந்தது. இது வரை ஒரு வார்த்தை பேசியிருக்கவில்லை. இவளது கழுத்தோடு சேர்த்து சில இஞ்ச் உயரம் தூக்கி நெறித்துக்கொண்டிருந்த உருவத்தின் அதீத மூச்சுக் காற்றின் சத்தம் மட்டுமே அவ்விருளையும் கிழித்துக்கொண்டு இவள் செவியில் விழுந்தது. கறுப்பு ஹூடி, கறுப்பு தொப்பி, மாஸ்க் என எல்லாம் கறுப்பில் மறைத்திருக்க அவ்விருளோடு இருளாய் கலந்து நின்ற உருவத்தை யாரென இவள் அடையாளம் காண்பாள்? இவள் எவ்வளவு திணறியும் முடியாமல் போக, மிதுனா உள்ளங்கை நுனியில் பிடித்து வைத்திருந்த வாழும் ஆசையை விட்டுவிட்டாள். இவளது போராட்டம் மெல்ல மெல்லக் குறைந்தது. என்ன நினைத்ததோ அவ்வுருவம் சட்டென தன் பிடியை விலக்கிவிட தொப்பென சுவரில் சாய்ந்து தரையில் இவளது சக்தியற்ற கால்கள் பதிந்தது. இவளுடல் மெல்லச் சரிய அதைத் தடுப்பதுபோல இவளது இரு புறங்களிலும் தன் கைகளை வைத்து அணை கட்டியபடி இவளது செவிக்கு வெகு அருகே குனிந்த உருவத்தின் உணர்வுகளற்ற சில்லென்ற குரல் இவள் முதுகுத் தண்டில் மின்னலை பாய்ச்சியது.

"அவிரா இஸ் மைன் அண்ட் மைன் அலோன்"

WhatsApp Image 2022-01-14 at 6.36.37 PM (3).jpeg
 
Shasmi

Well-known member
Joined
Jul 31, 2018
Messages
846
Reaction score
997
Points
93
Location
USA
ஃபர்ஸ்ட், படிச்சிட்டு வரேன் 🥰🥰🥰
 
Saki B

Well-known member
Joined
Nov 12, 2021
Messages
329
Reaction score
315
Points
63
Location
Tamilnadu
neenga nalu epi podunga athu nan vanthu athuku apuram padikuren ivalo suspense thangathu.... viyan ah pidichurukku (y) mysterious guy
 
Shasmi

Well-known member
Joined
Jul 31, 2018
Messages
846
Reaction score
997
Points
93
Location
USA
வாவ் செம்ம, உங்க வே ஆஃப் ரைடிங் எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்கு🥰🥰🥰🥰

அவி & வீ, சூப்பர் ரெண்டு பேரும் 👌👌👌🤩🤩🤩

மிளிரா முதல் எபிசோட் லா வந்த கனவு கானரா பொண்ணு தானே.....

இப்ப மிதுனா வா அடிச்சது, அவி பார்க்கும் கண்களுக்கு சொந்த காரிய/காரன் ஆ?????

வெயிட்டிங் பார் நெக்ஸ்ட் எபிசோட் ரைட்டர் ஜீ
 
Advertisements

Latest Episodes

Advertisements