• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Exclusive இந்திரனின் சுந்தரி - முழு நாவல்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
1
சுந்தரி நீயும் சுந்தரன் ஞானும்
சேர்ந்நிருந் நாள் திருவோணம்.. ஓஹோ ஓஹோ
சுந்நரன் நீயும் சுந்நரி ஞானும்
சேர்ந்நிருந் நாள் திருவோணம்
ஆஆ ஆஆஆ ஆஆஆஆஆ
ஆ ஆ ஆஆஆ ஆஆஆஆஆ
அழகான இனிமையான பாடல் இசைத்துக் கொண்டிருக்க, அந்த பாடலுடன் சேர்ந்து இரண்டு கட்டைக் குரல்கள் ‘ஆ..ஆ..ஆ..ஆ..’ என்று ராகம் பாடிக் கொண்டிருக்க, ‘களுக்’ என்று ஒரு பெண் சிரிக்கும் சத்தம் கேட்டது.
அந்த சத்தத்தைக் கேட்டதும், காய்கறிகளை அடுக்கிக் கொண்டிருந்தவன், “எவடா அவ என் பாட்டைக் கேட்டு சிரிக்கிறவ?” என்றபடி நிமிர்ந்துப் பார்க்க, அங்கு தேவதை போல ஒரு பெண் நிற்கவும், அவனது கண்களை நம்ப முடியாமல் இமைத்தட்டி விழித்துப் பார்த்தான். பளிங்கினால் செய்த சிற்பம் போல, காலைப் பனியில் கன்னங்கள் சிவந்து, நின்றிருந்தவளைப் பார்த்தவனின் கண்கள் சாசர் போல விரிந்தது.
அந்தக் குரலுக்கு சொந்தக்காரியைப் பார்த்ததும், அவனுக்கு பின்னால் இருந்த ஒரு பெண்ணும் முன்னால் வந்து அவளை வேடிக்கைப் பார்க்க, அந்தப் பெண் இன்னமும் அந்தப் பாடலைக் கேட்டு குறும்பாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
சில நொடிகள் பார்வையிலேயே கடக்க, அருகில் இருந்தவன் கடைக்காரனைத் தட்டவும், தலையை உலுக்கிக் கொண்டவன், “என்ன அம்மணி வேணும்? தக்காளி பிரெஷா இருக்கு.. இதை வாங்கி சாப்பிட்டேன்னு வையேன்.. உன்னோட பளபள கன்னம் கூட இன்னும் பளபளக்கும்.. இதோ வெண்டைக்காய் பிரெஷா இருக்கு பாரு.. இதை வாங்கிச் சாப்பிட்டா உன்னோட விரல் எல்லாம் வெண்டைக்காய்க்கு போட்டியா இருக்கும்.. இதோ பாரு காரட்டு.. இதை சாப்பிட்டா உனக்கு கண்ணு இன்னும் பளபளன்னு இருக்கும்.. ஏற்கனவே உன் கண்ணு பளபளக்குது தான்.. இன்னும் பளபளக்கும்.. நீ அந்த பியூட்டி பார்லருக்கு எல்லாம் போகவே வேண்டாம்.. உண்மையா.. இது எல்லாம் எங்க கடைல ஸ்பெஷலா கிடைக்கிற காய்கறி அம்மணி.. சொல்லு.. என்ன என்ன எவ்வளவு கிலோ வேணும்?” அந்தக் கடைக்காரன் விடாமல் பேசி வியாபாரத்தைப் பார்க்க,
“எனக்கு வீடு வாடகைக்கு வேணும்..” அவளது பதிலைக் கேட்டவன், ‘ஹான்..’ என்று பார்க்க, அவனுக்கு பின்னால் இருந்த பெண்ணோ, கடுப்புடன் அவளைப் பார்த்தாள்.
“என்னம்மா கண்ணு.. எங்களைப் பார்த்தா உனக்கு கேலி செய்யத் தோணுதா? நாங்க இங்க காய்கறி தான் வியாபாரம் செய்யறோம்.. வீடு எல்லாம் கட்டி விக்கற மாதிரி இருந்தா நாங்க ஏன் இங்க இருக்கப் போறோம்? போம்மா.. காலையிலேயே விளையாட ஆள் கிடைக்கலையோ?” என்று சத்தமிட, அந்தப் பெண் அங்கு தொங்க விடப்பட்டிருந்த போர்டைப் பார்த்தாள்.
அவளது அழகான மான் விழிகள் சென்ற திசையைப் பார்த்த அந்த கடையில் இருந்த வாலிபன், அங்கு அவளது பார்வை சென்ற திசையைப் பார்த்து, தலையில் அடித்துக் கொண்டு நெளிந்தான்.
அவனது அந்த நெளியலைப் பார்த்தவளுக்கு மேலும் சிரிப்பு பொங்க, உதட்டைக் கடித்து அவள் சிரிப்பை அடக்கிக் கொண்டிருக்க, அந்த போர்டை அவன் வேகமாக பிய்த்து எடுத்தான்.. அதே வெட்க முறுவலுடன், “இதோ இந்த மாமா தான் எழுதிச்சு.. நான் இல்ல.. எனக்கு எழுத படிக்க நல்லாவே தெரியும்..” அழகான பெண்ணின் முன்னால் தனது மானம் காற்றில் பறக்கவும், அருகில் இருந்த தாசை முறைத்துக் கொண்டே அவன் சொல்ல, அந்தப் பெண்ணவளின் புன்னகை மேலும் விரிந்தது..
அவளது புன்னகையைப் பார்த்தவன், அவளது அழகான ஆராஞ்சு போன்ற உதடுகளைப் பார்த்துவிட்டு, “இதை எப்படிங்க படிச்சீங்க?” என்று கேட்டு மீண்டும் அந்த போர்டைப் பார்க்க, அந்தப் பெண்ணோ அழகாக தோளைக் குலுக்கி, உதட்டைப் பிதுக்கிப் புன்னகைத்தாள்.
‘விட வடகக்கு..’ என்று எழுதி இருந்த அந்த போர்டைப் பார்த்தவன், அதை எடுத்து வைத்து விட்டு, அந்தப் பெண்ணைப் பார்க்க, அந்தப் பெண் கேள்வியாக அவனைப் பார்த்தாள்..
“எனக்கு ஒரு வீடு வாடகைக்கு வேணும்..” அவள் கேட்க, அவளையும் அந்த இடத்தையும் அந்த வாலிபன் ஒரு பார்வை பார்த்தான்.. மார்க்கெட் போன்ற அமைப்பில் இருந்த அந்த சிறிய குறுகலான சந்தில் இருந்தது அந்தக் காய்கறிக் கடை.. அருகில் இருக்கும் ஏரியாக்களில் காய் கனிகளை வாங்க மக்கள் இங்கு வருவது வழக்கம்.. அந்த மார்க்கெட்டின் முடிவில், இருந்த தெருக்களில் சிறிது சிறிதாக குடிசை வீடுகளும், ஓட்டு வீடுகளும், சிறிய அளவிலான கான்க்ரீட் வீடுகள் மட்டுமே நிரம்பி இருந்த இடம் அது.. பொதுவாக அந்த இடத்தில் கடை வைத்திருந்தவர்களும், அருகில் இருக்கும் ஏரியாக்களிலும், பெரிய கடைகளுக்கும் வேலைக்குச் செல்பவர்கள் தான் அங்கு வசித்து வந்தனர்.. தெருவில் ஆங்காங்கு குப்பைக் கூளங்களும், காய்கறிக் கழிவுகள், மாமிசங்களின் கழிவுமாக, இருந்த அந்த இடத்தில் வீடு கேட்டு வந்திருக்கும் அந்தப் பெண்ணை அவன் அதிசயமாக பார்க்காமல் போனால் தானே அதிசயம்..
“இருக்கும்மா.. ஆனா.. அது நீங்க தங்கறது போல இருக்காதே.. ரொம்ப சின்ன வீடு.. பெட்ரூம் கூட இருக்காதே.. ஒரு ரூம் ஒரு சமையல் ரூம் தான் இருக்கும்..” அவளைத் தலை முதல் கால் வரை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவன் சொல்ல, அந்தப் பெண் அவனை நிராசையாகப் பார்த்தாள்.
“சின்னதா இருந்தாலும் பரவால்ல.. நான் மட்டும் தானே..” அவள் முகம் சுண்டக் கேட்க,
“அது உங்களுக்கு சரிப்படாதுங்க.. உங்களைப் பார்த்தாலே பெரிய இடத்து பொண்ணு போல இருக்கீங்க.. அந்த வீடு உங்களுக்கு வசதி போதாது..” அந்த வாலிபன் மறுத்துக் கூறினான்.
அவன் மறுக்கவும், அந்தப் பெண் நகரப் போக, “டேய்.. கொஞ்சம் பேசாம இரு..” அந்தக் கடைக்காரனிடம் நின்றிருந்த பெண் அவனை அடக்கிவிட்டு,
“ஏம்மா.. நில்லும்மா.. வீடு இருக்கு.. ஆனா.. அவன் சொன்னது போல சின்னதா தான் இருக்கு.. உனக்கு உட்கார சேர்.. டேபிள் எல்லாம் இருக்கு.. வாடகை ரெண்டாயிரம்.. அட்வான்ஸ் பத்தாயிரம்.. வீட்டுக்கு உள்ளேயே பாத்ரூம் எல்லாம் இருக்கு..” அந்தப் பெண் ராணி சொல்ல, வாடகைக்கு கேட்ட பெண்ணோ எல்லாவற்றிற்கும் சரி என்று தலையசைத்தாள்..
“எனக்கு எல்லாமே ஓகே.. வீடு எங்க இருக்கு?” அவள் கேட்க,
“யக்கா.. வேணாம்க்கா.. அந்தப் பொண்ணைப் பார்த்தா பெரிய இடம் போல இருக்கு.. அந்த வீடு எல்லாம் செட் ஆகாது.. ஒரே ஒரு ரூம் கூட ஒரு சமையல் ரூம்.. அது எப்படி இவங்களுக்கு சரிபடும்?” அந்த வாலிபன் கேட்க, ராணி அவனை முறைத்தாள்.
“இப்படியே நீ சொல்லிக்கிட்டு இருந்தா யாருமே வாடகைக்கு வர மாட்டாங்க.. இப்போப் பாரு எல்லாத்துக்கும் இந்த பொண்ணு சரின்னு சொல்லுது.. பேசாம வாடகைக்கு விடுவியா.. அந்தப் பொண்ணுக்கு என்ன சவுகரியம் வேணுமோ அதை நாம செஞ்சித் தரலாம்..” அவளை எப்படியாவது அங்கு வாடகைக்கு அமர்த்திவிடுவது என்ற முடிவுடன் ராணி பேச, அந்த வாலிபன் இந்திரன் அவளைப் பார்த்தான்..
அவள் உடுத்தி இருந்த சுடிதாரும், அவள் கையில் இருந்த கடிகாரமும், அவளது விரல் நகங்களை வளர்த்திருந்த நேர்த்தியும், அதன் மேல் தீட்டப்பட்டிருந்த நெயில் பாலிஷும், அவள் காலில் அணிந்திருந்த காலனி, அவள் காதுகளில் மின்னிக் கொண்டிருந்த சிறிய அளவிலான வைர காதணி வேறு அவன் கண்ணில் பட, அவனுக்கு சர்வ நிச்சயமாகத் தெரிந்தது அவள் பெரிய இடத்துப் பெண் என்று..
ராணி அவனது முகத்தையேப் பார்க்க, இந்திரனின் மனதினில் பலவேறு எண்ணங்கள் ஓடிக் கொண்டிருந்தது.. அவள் இது போல ஒரு இடத்தில் வந்து வீடு கேட்பதற்கு ஏதாவது காரணம் இருக்குமோ என்று அவனது உள்ளம் எண்ணத் துவங்கியது.. சினிமாவில் காட்டுவது போல, ஏதேனும் முறைப் பையன் இருந்து.. தாய் தந்தை இல்லாத பெண்ணை கொடுமைப்படுத்தி கட்டாயத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்திருக்க, அது பிடிக்காமல் ஓடி வந்து இங்கு ஒளிந்து கொள்ள நினைக்கிறாளோ? ஒருவேளை அவளுக்கு வீட்டில் பிடிக்காத திருமணம் செய்ய எண்ணுகிறார்களோ? இல்லை அவளது உயிருக்கு ஆபத்தோ?” என்றெல்லாம் நினைத்துக் கொண்டவன்,
“சரி.. வாங்க வீட்டை காட்டறேன்.. ஆமா.. உங்க பேர் என்ன? எந்த ஊர்?” அவன் கேட்க,
“என் பேர் சுந்தரி.. ஊர் எல்லாம் வேண்டாமே.. ஹான்.. அப்பறம் ரொம்ப தேங்க்ஸ்.. வீடு வாடகைக்கு தர ஓகே சொன்னதுக்கு..” என்றவள்,
“எனக்கு இன்னொரு ஹெல்ப் வேணுமே..” அவள் கேட்க, அவன் கேள்வியாகப் பார்த்துக் கொண்டிருக்கும் பொழுதே,
“எனக்கு வீட்டுக்கு தேவையான திங்க்ஸ் எல்லாமே வாங்கணும். கொஞ்சம் எனக்கு ஹெல்ப் பண்ண முடியுமா? இங்க எனக்கு யாரையுமே தெரியாது.. என்ன என்ன வாங்கணும்ன்னு கூடத் தெரியாது..” அவள் கேட்கவும் பட்டென்று இந்திரன் நிற்க, சுந்தரி நின்று அவனைக் கேள்வியாகப் பார்த்தாள்.
“எதை நம்பிம்மா இப்படி வந்திருக்க? ஏதோ கடவுள் அருள் என்கிட்ட வீடு கேட்ட.. இல்ல வேற மாதிரி ஆளுன்னா என்ன ஆகி இருக்கும்?” திகைப்புடன் அவன் கேட்க, சுந்தரி புன்னகைத்தாள்..
“காலைல அஞ்சு மணிக்கு நீங்க கடை திறந்ததுல இருந்து, ஓரமா நின்னு உங்களை நான் பார்த்துட்டு இருந்தேனே.. நீங்க பாட்டுக்கு நீங்க உண்டு உங்க வேலை உண்டுன்னு இருந்தீங்க.. அதனால தான் உங்களை வந்து கேட்டேன். எத்தனை லேடீஸ் வந்து போனாங்க.. ஒருத்தரையும் நீங்க தப்பான பார்வை பார்க்கலையே” என்றவள், அவன் திகைப்புடன் பார்க்கவும்,
“பணம் எல்லாம் இருக்கு.. ஏமாத்த மாட்டேன்..” வாக்கு போல சொல்ல, இந்திரன் மறுப்பாக தலையசைத்தான்..
“இல்லம்மா.. நான் அதுக்காக பார்க்கல.. உன்னைப் பார்த்தா பெரிய இடத்து பொண்ணு போல இருக்கு.. உனக்கு எதுக்கு இந்த இடத்துல வாழ்க்கைன்னு யோசிச்சேன்.. அது தான்.” என்றவன்,
“சரி வா.. உனக்குத் தேவையானது எல்லாம் வாங்கித் தரேன்..” என்று அவளை நேராக அழைத்துக் கொண்டு ஒரு பாத்திரக்கடைக்கு சென்றான். அங்கு தேவனையான சில பாத்திரங்களை வாங்கிக் கொண்டு, அவளை அழைத்துக் கொண்டு அவனுடைய வீட்டிற்குச் சென்றான்..
சிறிது சிறிதாக அடுக்கி வைக்கப் பட்டிருந்தது போல இருந்த, அந்த லைன் வீடுகள் இருந்த இடத்தில், இரண்டு வீடுகள் ஒரே போலவே இருக்க, அதைச் சுற்றி சிறு மதில் சுவர் இருந்தது.. அங்கிருந்த வீடுகளில் அந்த வீடு கொஞ்சம் பார்க்கவும், சுத்தமாகவும் இருக்க, சுந்தரி உள்ளுக்குள் ஆஸ்வாசமாக மூச்சை விட்டுக் கொண்டாள். வீடு கேட்டு இங்கு வந்து விட்டாலும், எப்படி இப்படி ஒரு இடத்தில் வசிக்கப் போகிறோம் என்று அவளுக்கு சிறிது மலைப்பாகவே இருந்தது..
“இது தான் என்னோட வீடு.. இந்த இந்திரனோட மாளிகை.. சொர்க்க லோகம்.. என்ன பிடிச்சிருக்கா? உனக்கு இந்த வீட்டை தான் வாடகைக்கு விடப் போறேன்..” என்றபடி ஒரு சிறிய கேட்டைத் திறந்து அவன் உள்ளே செல்ல, அங்கு இருந்த இடத்தில் சிறிது சிறிதாக பூந்தொட்டிகள் அடுக்கப்பட்டு இருக்க, அதை அதிசயமாக பார்த்துக் கொண்டே சுந்தரி அவனைப் பின்தொடர்ந்தாள்.
“ஆமா.. சுந்தரி.. மனசு ஆறாம கேட்கறேன்.. உனக்கு அப்படி என்ன பிரச்சனை இந்த மாதிரி ஒரு இடத்துல வந்து தங்க ரெடியா இருக்க? சொன்னா என்னால முடிஞ்சது செய்வேன் இல்ல..” இந்திரன் கேட்க, அவள் மெல்ல மறுப்பாக தலையசைத்து அந்த வீட்டிச் சுற்றிப் பார்த்தாள்..
வீட்டிற்கு வாங்கிக் கொண்டு வந்த சாமான்களை அவன் முன்னே இருந்த இடத்தில் வைத்து விட்டு, வெளியில் இருந்த துடப்பத்தை எடுத்து வீட்டை சுத்தம் செய்யத் துவங்க, அவளோ அவனுக்கு உதவி செய்யும் எண்ணமே இல்லாமல், அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கால் மீது காலைப் போட, அந்த சேர் நொடித்துக் கொண்டு சரிந்தது..
“அம்மா..” என்ற அலறல் கேட்கவும், இந்திரன் அவசரமாக திரும்பிப் பார்க்க, கீழே சரிந்துக் கிடந்தவளோ, வலியில் முனகிக் கொண்டிருந்தாள்..
அவளை கைக் கொடுத்து எழுப்பி விட்டவன், “பார்த்து உட்காரலாம்ல.. அது பழைய காலத்து சேர்.. எப்படி உடைஞ்சு போச்சு பாரு..” உச்சுக் கொட்டிக் கொண்டு அதை வருத்தமாக பார்த்துக் கொண்டே கேட்ட அவனது கேள்வியில் அவனை முறைத்தவள்,
“ஹான்.. எனக்கு வேண்டுதல்.. உங்க வீட்டுக்கு வந்த உடனே உங்க பொக்கிஷ சேரை உடைக்கணும்ன்னு.. என்னோட இடுப்பு தான் உடைஞ்சு போச்சு.. அதைப் பத்தி கவலைப்படாம.. இந்த இத்துப் போன சேரைப் பத்தி கவலைப்படற? உனக்கு ரொம்ப கொழுப்பு தான்..” கோபமாக அவனிடம் கேட்டவள், அந்த சேரை எட்டி உதைக்க, அது அவளது காலைப் பதம் பார்த்தது..
‘ஆ..அ.. அம்மா..’ காலை பிடித்துக் கொண்டு அவள் அலற, அதைப் பார்த்து சிரித்த இந்திரன், “உன் டான்ஸ் ரொம்ப நல்லா இருக்கே.. இப்படியே நீ ஆடினா ஒரு நாள் முழுக்க உட்கார்ந்து பார்க்கலாம் போல இருக்கே..” அவளை கேலி செய்தவன்,
அவள் முறைத்து, “யோவ்.. என் காலு வலிக்குதுய்யா.. நீ சிரிச்சிட்டு இருக்க?” கோபமாக அவள் கேட்க,
“உனக்கு ஒரு உண்மை தெரியுமா? அது ஆவி வந்த சேர்.. அதோ அங்க இருக்கற டேபிள் கூட அது தான்.. எங்க அம்மாவோட அம்மா ஆசையா வாங்கிப் போட்டது.. அதை நானும் எங்க அக்காவும் எத்தனையோ கட்டு கட்டி ஒட்டி வச்சிருந்தோம்.. அதைப் போய் உடைச்சிட்டு கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம இப்படி பேசினா... பார்த்தியா? அதைத் திட்டினதும் உன்னை எப்படி பழி வாங்கிருச்சு பாரு..” கேலியுடன் அதை எடுத்து வெளியில் போட்டவன்,
“எங்க அக்கா பார்த்தா கண்ணீர் விட்டு அழும்.. அதை எப்படி சமாளிக்க போறேன்னு தெரியல..” சோகமாக சொல்ல, அவனது முகத்தைப் பார்த்தவள் சிரிக்கத் துவங்கினாள்.
அவள் சிரிக்கவும், அவனுக்கும் தான் சொன்னதை நினைத்து சிரிப்பு தோன்ற, “நீ வேணா சாயந்திரம் எங்க அக்கா கொடுக்கற பில்ட்டப்பை பாரு.. நான் சொன்னது எவ்வளவு உண்மைன்னு..” என்று சொல்லிக் கொண்டே, வேகமாக வீட்டை சுத்தம் செய்தவன், சாமான்களை அடுப்படியில் கொண்டு வைத்தான்.
“சரி.. அட்வான்ஸ் கொடு..” அவன் கேட்க, தனது பையில் இருந்த ஒரு பர்சில் இருந்து பணத்தை எடுத்துக் கொடுத்து விட்டு,
“அப்படியே எனக்கு பார்னிச்சர் சிலது எல்லாம் வாங்கணும்.. கொஞ்சம் அதுக்கும் ஹெல்ப் பண்ணுங்களேன்..” கண்களைச் சுருக்கி கெஞ்சலாகக் கேட்க, இந்திரன் அந்த அழகில் ஒரு நிமிடம் சிலையானான்.
“இந்தர்..” சுந்தரி அவன் முகத்தின் முன் சொடக்கிட்டு அவள் அழைக்க,
தலையை உலுக்கி தன்னை சுதாரித்தவன், “என்ன வாங்கணும்?” என்று கேட்க,
“டிவி.. பிரிட்ஜ்.. ஏசி.. கட்டில்.. வாக்வம் கிளீனர்.. ஓவன்.. அப்பறம் சிமினி.. ஃபேன்.. பாத்ரூம்க்கு ஹீட்டர்.. வாஷிங் மெஷின்...” அவளது பட்டியல் நீண்டுக் கொண்டே போக, அவளது பட்டியலைக் கேட்டவன் தலையில் கை வைத்து அமர்ந்தான்..
“ஏன்? வை யு ஆர் சிட்டிங் லைக் திஸ்?” அவள் கேட்க, அவளைப் பார்த்து கையெடுத்து கும்பிட்டவன்,
“அம்மாடி தாயே.. வந்த உடனே எங்க வீட்டு ஆவி வந்த சேரை உடைச்ச.. இப்போ ஏசி எல்லாம் போட்டு வீட்டையே உடைக்கப் பார்க்கறியே இது நியாயமா? சரி.. நீ சொல்ற பொருளை எல்லாம் கொண்டு வந்து வச்சிட்டு நீ எங்க புழங்கப் போற? நடக்க இடம் வேண்டாமா?” அவன் கேட்கவும், சுற்றி பார்வையை ஒட்டிவளுக்கு கண்கள் கரித்துக் கொண்டு வந்தது..
தனது கண்ணீரை மறைக்க அவள் தலையை குனிந்துக் கொள்ளவும், “பிரிட்ஜ் வேண்டாம்.. தினமும் நான் காலையில புது காய்கறிங்க மூட்டை வந்த உடனே கொடுத்து விடறேன்.. அப்பறம் பால் கூட அப்படி தான்.. காலையில புது பால் வந்த உடனே கொண்டு வந்து தரேன்.. எக்ஸ்ட்ரா பால் எங்க வீட்டு ப்ரிட்ஜ்ல இருக்கும்.. தேவைன்னா அதை உபயோகப்படுத்திக்கோ.. எங்க வீட்ல மாவைத் தவிர அதுல எதுவும் இருக்காது.. அதனால உனக்கு அது தேவைப்படாது.. வேற உனக்கு கீழ படுத்து பழக்கம் இல்ல போல.. அதனால ஒரே ஒரு சின்ன கட்டில் வாங்கலாம்.. அது தான் அடுப்பு இருக்கே.. அப்பறம் எதுக்கு உனக்கு ஓவன்.. இதை வச்சு சமாளி.. என்ன?” அவள் கண்கள் கலங்கவும், அவன் குழந்தைக்கு சொல்வது போல சொல்ல, சுந்தரி மண்டையை உருட்டினாள்.
“குளிச்சிட்டியா? இல்ல எங்க வீட்ல குளி.. நாம போயிட்டு வருவோம்.. அதுக்குள்ள நான் இந்த வீட்ல இருக்கற பாத்ரூம சுத்தம் செய்து வைக்கிறேன்” அவன் சொல்ல,
“இல்ல.. நான் வீட்டுல இருந்து வரும்போதே குளிச்சிட்டு வந்துட்டேன்.. நாம போகலாம்..” என்றவள், தனது துணிப்பையை அங்கிருந்த அலமாரியில் வைத்து விட்டு தயாராக,
“ஒரு முடிவோட தான் வந்திருக்க?” என்று உதட்டைப் பிதுக்கியவன், பாத்ரூமை அவசரமாக சுத்தம் செய்துவிட்டு வர, சுந்தரி அவனைப் பார்த்து முகம் சுளித்து அசையாமல் நிற்க,
“என்ன போக வேண்டாமா?” அவன் புரியாமல் கேட்டான்.
“பாத்ரூம் எல்லாம் கிளீன் பண்ணிட்டு அப்படியே கிளம்பறீங்க? போய் குளிச்சிட்டு வாங்க.. அப்போ தான் நான் உங்க கூட வருவேன்..” அடமாக நிற்க, இந்திரன் அவளைப் பார்த்து முறைத்தான்.
“என்னது? நான் குளிக்கணுமா? நான் எல்லாம் ஒரு தடவ குளிக்கிறதே பெரிய விஷயம்.. இதுல இப்படி எல்லாம் பேசினா.. நான் பாட்டுக்கு போயிடுவேன்.. நீயாச்சு உன் வேலையாச்சு..” என்றவன், அங்கிருந்து நகரப் போக, அந்த வீட்டில் மிஞ்சி இருந்த ஒட்டுப் போட்ட டேபிளின் மீது அவள் ஏறி அமர, அவள் என்ன செய்கிறாள் என்று எட்டிப் பார்த்த இந்திரன், அவசரமாக அவள் அருகில் ஓடி வந்தான்.
“சுந்தரி.. சுந்தரி.. உன்னைக் கெஞ்சிக் கேட்டுக்கறேன்.. கீழ இறங்கிடு தாயே.. அதுவும் உடைஞ்சா நான் என்ன ஆகறது?” அவன் கெஞ்ச, சுந்தரி அசையாமல் அமர்ந்திருக்க,
“இப்போ என்ன நான் குளிக்கணும்.. அவ்வளவு தானே.. இறங்கு.. நான் வரேன்..” என்றவன், அவசரமாக குளித்துவிட்டு வர, சுந்தரி தனது பையுடன் தயாராக நின்றாள்.
அவள் அவ்வாறு நிற்கவும், கடுப்பானவன், “இங்கப் பாரு சுந்தரி.. ஏதோ பெரிய இடத்து பிள்ள நீ.. என்ன சூழ்நிலையோ சந்தர்ப்பமோ இப்படி வந்து இங்க இருக்கறியேன்னு இறங்கிப் போறேன்.. வேற யாராவது இப்படி செஞ்சிருந்தாங்கன்னு வையு.. அடிக்கிற அடில செவுலு பேந்திரும்.. இதோட இதை நிறுத்திக்கோ.. ஜாக்கிரதை..” அவளை மிரட்டிவிட்டு முன்னால் நடக்க, சுந்தரி அவனைப் பின்தொடர்ந்து சென்றாள்.
அவள் சொன்னது போலவே, ஒரு கட்டில், சேர், ஃபேன், வாஷிங் மெஷின் போன்ற பொருட்களை வாங்கி, கையேடு ஒரு வண்டியைப் பிடித்து எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தனர்..
வரும் வழியிலேயே அவளுக்கான உணவை அவள் வாங்கிக் கொள்ள, இந்திரன் அவளைப் புதிதாய் பார்த்துக் கொண்டே மீண்டும் அவளை வீட்டிற்கு கொண்டு விட்டான்..
“ரொம்ப தேங்க்ஸ் இந்தர்.. ஐ வில் மேனேஜ்..” அவள் புன்னகைக்க, இந்திரன் அவளைப் பார்த்து புன்னகைத்து,
“சரி சுந்தரி.. நான் கடைக்கு போயிட்டு வரேன்.. இன்னைக்கு எனக்கு பாதி பொழுது உன்னோட போச்சு.. மீதி வேலையைப் பார்க்கணும்.. அக்கா சாயந்திரம் வரும்.. ஏதாவது வேணும்ன்னா அதுகிட்ட கேட்டுக்கோ..” என்று கூறிவிட்டு, அவன் கடைக்குக் கிளம்ப, அந்த கட்டிலில் விழுந்தவள், தன்னையும் மறந்து நன்றாக உறங்கத் துவங்கினாள்.
மாலையில் டீ போட்டு எடுத்துக் கொண்டு செல்வதற்காக வந்த ராணி, வீட்டின் கதவு திறந்திருக்கவும், உள்ளே மெல்ல தலையை மட்டும் நீட்டிப் பார்க்க, ஹாலில் இருந்த கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்தவளைப் பார்த்தவள், ஒரு பெருமூச்சுடன், கதவை அடைத்துவிட்டு, டீயை எடுத்துக் கொண்டு கடைக்குச் சென்றாள்.
டீயை கப்பில் ஊற்றி இந்திரனிடம் நீட்டிக் கொண்டே, “ஏண்டா தம்பி.. அந்தப் பொண்ணு ரொம்ப வசதியான வீட்டு பொண்ணு மாதிரி தெரியுது.. வீட்டைக் கூட பூட்டிக்காம படுத்து தூங்குது.. அது கூட செஞ்சுப் பழக்கம் இல்லையோ?” சந்தேகமாகக் கேட்க,
“எனக்கு தெரிஞ்சு அவங்களுக்கு ஒண்ணுமே தெரியாதா இருக்கும்.. வீட்டுக்கு என்ன சாமான் வேணும்ன்னு கூடத் தெரியல.. அதை விட இன்னும் மளிகை சாமான் எதுவும் வாங்கல.. அது வாங்கணும்ன்னு கூடத் தெரியுமான்னு எனக்குத் தெரியல.. நல்ல சுகமா வளர்ந்தி இருப்பாங்களா இருக்கும்.. என்ன பிரச்சனையோ.. நம்ம ஏரியால வந்து தங்கி இருக்கா.. நான் பதமா கேட்டுக் கூடப் பார்த்துட்டேன்.. ஒண்ணும் சொல்ல மாட்டேங்குது.. ஆனா.. நல்ல பொண்ணு..” இந்திரன் சொல்லவும், ராணி அவனை சந்தேகமாகப் பார்த்தாள்.
“என்ன? என்ன பார்வை?” அவன் கேட்க, ராணி ஒன்றும் இல்லை என்பது போல தலையசைக்க,
“அக்கா.. ஒண்ணு தெரியுமா? நம்ம இடத்துல காய் வாங்கவே பெரிய வீட்ல எல்லாம் டிரைவரைத் தான் அனுப்புவாங்க.. அந்தப் பொண்ணு இந்த இடத்துல வந்து இருக்கறேன்னு சொன்னதே நிஜமா பெரிய விஷயம் தானே.. அதுவும் நம்ம வீட்டை எல்லாம் பார்த்து அவங்க முகத்தைக் கூட சுளிக்கல தெரியுமா? கொஞ்சம் அந்தப் பொண்ணை பார்த்துக்கோக்கா.. சமைக்க எல்லாம் தெரிஞ்சு இருக்காதுன்னு நினைக்கிறேன்.. அவங்க மேல ஒரு கண்ணு வச்சிக்கோ.. நாளைக்கு ஏதாவதுன்னா நாம தான் பதில் சொல்ல வேண்டி இருக்கும்.. நீ பாட்டுக்கு வாடகைக்கு வீட்டை விட ஒத்துக்கிட்ட..” என்றவன், தனது வேலையை கவனிக்கத் துவங்கினான்.
“என்ன அந்தப் பொண்ணு மேல பாசம் எல்லாம் ரொம்ப பொங்குது?” ராணி கேலியாகக் கேட்க,
“அவளோட நிலைமை என்னவோ அப்படி வளர்ந்துட்டு இருங்க வந்து இருக்கா.. நம்மளைப் போல சேத்துல வளர்ந்திருந்தா நான் கவனிச்சு இருக்க மாட்டேன்.. நகத்துல தூசித் தும்பு கூட பாடாம வளர்ந்திருக்கும் போல.. என்ன கஷ்டமோ என்னவோ போ.. இந்த இடத்துல வந்து இருக்கு.. அதுக்குத் தான் சொன்னேன்.. நீயா கற்பனை கோட்டை எல்லாம் கட்டிக்காதே..” என்றவன், காய்களை எடுத்து அடுக்கத் துவங்கினான்.
“ராணி.. அவனைப் பத்தி உனக்குத் தெரியாதா? அவன் சைட் தான் அடிப்பான்.. இப்படி எல்லாம் எந்தப் பொண்ணைப் பத்தியாவது புகழ்ந்து பேசி இருக்கானா? என்னவோ வேலைப் பொழப்பு இல்லாம.. போ.. போய் வேலையைப் பாரு.” தாஸ் தனது மனைவியிடம் சொல்லவும், நொடித்துக் கொண்டவள், மளிகைக் கடையை கவனிக்கத் துவங்கினாள்..
தேவேந்திரன் என்கிற இந்திரன்.. உழைப்பும், தன்னம்பிக்கையும் மிக்க இளைஞன்.. அவனது அன்னை சிறிய அளவில் பார்த்துக் கொண்டிருந்த காய்கறிக் கடையை அவனது உழைப்பிலும், பேச்சுத் திறனிலும் நல்லமுறையில் விரிவுப்படுத்தி, இன்று அந்த இடத்திலேயே பெரிய கடையாக அவன் உருவாக்கி வைத்திருந்தான். அதோடு மட்டுமின்றி இளநிலை பட்டப்படிப்பையும் அவன் முடித்திருந்தான்..
வாடகைக்கு இருந்த கடையை சொந்த இடமாகவும் அவன் மாற்றிக் கொண்டு அவன் விரிவுப்படுத்தி இருந்தான். அதோடு மட்டும் இல்லாமல் சிறுகச் சிறுக பணம் சேர்த்து அந்த இரண்டு வீடுகளையும் வாங்கியவன், மேலும் தனக்கு சொந்தமாக, அருகில் இருந்த ஏரியாவில் ஒரு வீடு மனையையும் வாங்கிப் போட்டிருந்தான். தனக்கு ஒரே துணையான தனது உடன் பிறந்தவளிடம் மிகுந்த பாசம் வைத்திருந்தவன், அவனது கடையில் வேலை செய்துக் கொண்டிருந்த தாசையே அவர்கள் விரும்புவது தெரிந்து, நல்ல முறையில் திருமணம் செய்து தன்னுடன் வைத்துக் கொண்டான்..
மிகுந்த அன்பானவன்.. அதே நேரம் அவனது கண்டிப்பும் அந்த இடத்தில் இருந்தவர்களுக்கு நன்றாகவே தெரியும்.. கடனை அறவே வெறுப்பவன்.. அவனும் கடன் வாங்க மாட்டான்.. அந்த இடத்தில் வசிப்பவர்கள் அவனிடம் வைத்திருக்கும் கடனையும் சொன்ன தேதியில் கறாராக வசூல் செய்தும் விடுவான்.. சிறிய அளவில் அந்த இடத்தில் வசிக்கும் மக்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வாங்கிக் கொண்டிருந்தான்.. இப்படியாக அவனது வரவுகள் இருக்க, செலவுகளை மிகுந்த சிக்கனமாக பார்த்துக் கொண்டான்.
மாலை வேளையில் கூட்டம் நெரிக்க, காய் விற்பனை அமோகமாக நடந்தேறியது.. இரவு கடையை அடைத்துவிட்டு, மிச்சம் இருக்கும், மறுநாள் வரை தாங்காது என்பது போல இருந்த காய்களை எடுத்துக் கொண்டு மூவரும் வீட்டிற்கு கிளம்ப, “அந்தப் பொண்ணு சமைச்சு சாப்பிட்டு தூங்கி இருக்கும் இல்ல தம்பி.. இவ்வளவு நேரம் எல்லாம் முழிச்சு அதுக்கு பழக்கமே இருக்காது இல்ல..” வீட்டிற்கு கிளம்பவும், ராணிக்கு சுந்தரியின் நினைவு வந்தது..
இந்திரன் திரும்பி அவளை அமைதியாகப் பார்க்க, “இருக்கும்.. இருக்கும்.. ஆமா.. நைட்டுக்கு என்ன சாப்பிடுச்சோ தெரியல.. நீ வேற மளிகை சாமான் எதுவும் இல்லன்னு சொன்னியே..” ராணி கவலையாகக் கேட்க, இந்திரனும் அதே யோசனையுடன் வீட்டிற்கு வந்தான்..
அவளைப் பற்றி நினைத்துக் கொண்டே வீட்டை நெருங்க, வீட்டின் முன்பு பலர் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க, இந்திரனும், ராணியும் அவசரமாக வீட்டிற்கு ஓடி வந்தனர்...
அங்கு அவர்கள் கண்ட காட்சியில் இந்திரன் கண்கள் விரிய நிற்க, ராணி அவசரமாக ஒரு துவாலையை எடுத்து சுந்தரியின் மேல் போட்டுவிட்டு, அங்கிருந்தவர்களை நோக்கித் திரும்பியவள், “ஹே.. இங்க என்ன கும்பல் கூடிக் கிட்டு நிக்கறீங்க? போங்கடி.. போய் வீட்ல பொழப்பு இருந்தா பாருங்க.. வந்துட்டாளுங்க பொம்மையை வேடிக்கைப் பார்க்கற மாதிரி பார்க்க.. யோவ்.. அங்க எவன்டா அவன் மறைஞ்சு நின்னு வேடிக்கைப் பார்க்கறது.. இங்க என்ன பத்து மணிக் காட்சியா காட்டிக்கிட்டு இருக்காங்க.. போங்கடா..” ராணியின் சத்தத்தில் சுந்தரி கண்களை சிமிட்டிக் கொண்டு புரியாமல் நிற்க, இந்திரனோ அவளை பார்வையாலேயே விழுங்கிக் கொண்டிருந்தான்..
“போங்கடா.. போங்கன்னு சொல்றேன் இல்ல.. நல்லா பளிச்சுன்னு ஒரு பொண்னை பார்த்துடக் கூடாதே.. உடனே நாக்கத் தொங்கப் போட்டுக்கிட்டு வந்துடுவீங்களே.. போங்க.. போங்க.. இனிமே எவனையாவது இந்த வீட்டு முன்னால பார்த்தேன்.. அவ்வளவு தான் சொல்லிட்டேன்..” அவள் சத்தமிட,
“ஏய் ராணி.. இப்போ என்னாத்துக்கு இந்த சிலுப்பு சிலுப்பற.. யார் இந்தப் பொண்ணு? நம்ம இந்திரனை கட்டிக்கப் போற பொண்ணா? அப்படியே சினிமாக்காரி மாதிரி இல்ல இருக்கா..” இந்திரனை பல நாட்களாக தனது வலையில் விழ வைப்பதற்காக பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெண் கேட்க,
“ஆமான்னா என்னடி செய்யப் போற? போவியா.. போங்கடி.. போய் வேலையைப் பாருங்க..” ராணி பதிலுக்கு சத்தமிடவும், அவர்கள் மெல்ல கலைந்துச் செல்ல, ‘வாந்துட்டாளுங்க..’ என்று முணுமுணுத்தபடி திரும்பிய ராணி, சிலையென நிற்கும் இந்திரனைப் பார்த்து, அவனது மண்டையில் தட்டினாள்.
“ஹான்.. ஹான்.. நான் எங்க இருக்கேன்..” அவனது கேள்வியில் தலையில் அடித்துக் கொண்டவள்,
“போடா.. போய் குளிச்சிட்டு சாப்பிட வா..” அவனை விரட்ட,
“திரும்பவும் குளிக்கனுமா?” என்றவனைப் பார்த்து சுந்தரி சிரிக்க, அவளைப் பார்த்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்து சென்றான். சுந்தரியின் அருகில் வந்து நின்ற ராணி மேலிருந்து கீழாக அவளைப் பார்த்தாள்.
அவள் அப்படி பார்க்கவும், “என்னக்கா எதுக்கு என்னை அப்படி பார்க்கறீங்க?” சுந்தரி கேட்க,
“இல்ல.. நீ என்ன வெளிநாட்டுலயா இருக்க இப்படி ஒரு உடுப்பை போட்டுட்டு இருக்க? கையும் இல்லாம.. காலும் முழுசா மறைக்காம.. உன்னோட வாழைத்தண்டு காலைக் காட்டிக்கிட்டு, சினிமாக்காரி மாதிரி இந்த கவுனைப் போட்டுக்கிட்டு நின்னா கும்பல் தான் கூடும்..” அவள் சொல்லி முடிப்பதற்குள்,
“இது நைட்டி..” அவளது பதிலில், கொடியில் தொங்கிக் கொண்டிருந்த தனது நைட்டியை எடுத்து அவளிடம் காட்டியவள்,
“இதுக்குப் பேரு தான் நைட்டி..” ராணி காட்டவும், அதை கண்களை விரித்துப் பார்த்தவள், தலையை மேலும் கீழும் ஆட்டினாள்.
“இனிமே இது போல ட்ரெஸ் எல்லாம் போடாதே தாயி.. உன்னை எங்களால காவல் காக்க முடியாது.. எவன் எப்போ பாய்வானுங்கன்னு யாருக்குமே தெரியாது.. போ.. போய் தூங்கற வேலையைப் பாரு..” ராணி அவளையும் விரட்ட, சுந்தரி வீட்டின் உள்ளே செல்லத் திரும்பினாள்.
“ஏய் புள்ள நில்லு.. சாப்பிட்டியா?” ராணியின் கேள்வியில் நின்றவள், ‘இல்லை’ என்று தலையசைக்க, ராணி அவளை முறைத்துக் கொண்டு நின்றாள்.
இதயம் தொடுவான் 💕 💘 💕 💘 💕
 




ப்ரியசகி

இளவரசர்
Author
Joined
May 11, 2020
Messages
19,491
Reaction score
44,953
Location
India
ithu already post pannitu paathila stop pannitanga thane??? yeppo next epi nu kettukkite irunthen.... ini thodarnthu varuma pa
 




Ramya Swaminath

அமைச்சர்
SM Exclusive
Joined
Aug 2, 2020
Messages
2,375
Reaction score
6,292
🏹2💖

சுந்தரி வீட்டின் உள்ளே செல்லத் திரும்ப, ராணி ஏதோ மனதினில் சந்தேகம் தோன்ற அவளைப் பிடித்து நிறுத்தினாள். “சாப்பிட்டியா நீ?” அவளது கேள்விக்கு அவள் மறுப்பாக தலையசைக்க, ராணிக்கு கோபம் வந்தது.

“என்னது? இவ்வளவு நேரம் ஆச்சு.. சாப்பிடாம இருக்கியா? ஏன் ஏதாவது சாப்பிட்டுக்க வேண்டியது தானே..” அவள் கேட்கவும், சுந்தரி தோளைக் குலுக்கி உதட்டைப் பிதுக்கினாள்.

“வெறும் பாத்திரத்தை வச்சு என்ன செய்யறதாம்? குடிக்க தண்ணி கூட இல்ல.. ஏதோ நான் நேத்து வீட்ல இருந்து கிளம்பும்போது எடுத்துட்டு வந்த தண்ணியைத் தான் சொட்டுச் சொட்டா குடிச்சேன்.. அப்பறம் பசில அதுவும் தீர்ந்துப் போச்சு.. அது தான் வெளிய இந்தத் தெருவுல இருக்கற லாஸ்ட் கடைல டீயை குடிச்சிட்டு அங்க இருந்து ஒரு பாட்டில் வாங்கிட்டு வந்தேன்.. அதுவும் தீர்ந்து போச்சு..” பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு அவள் சொல்ல, ராணி தலையிலேயே அடித்துக் கொண்டாள்.

“சரி இரு வரேன்.. அதுக்கு முதல்ல போய் வேற டிரஸ் போடும்மா.. இது உங்க வீட்டுக்கு சரியா இருக்கும்.. ஆனா இங்க சரிவராதும்மா.. போ. போய் மாத்திக்கோ.. நான் ஒரு அஞ்சு நிமிஷத்துல வரேன்..” என்றவள், வேகமாக வீட்டுக்கு சென்றாள்.

அவசரமாக ஒரு ட்ராக் டிஷர்டை எடுத்து அணிந்துக் கொண்டவள், ராணிக்காக காத்திருக்க, இந்திரன் ஒரு தண்ணீர் கேனை தூக்கிக் கொண்டு வந்தான்.

அவனது பார்வை அவளை திருட்டுத்தனமாக தீண்ட, அவள் குழந்தையென முழித்துக் கொண்டு நின்றக் கோலம், அவனது மனதைப் பிசைந்தது. “ஏன் சுந்தரி.. மனசு ஆறாம தான் திரும்பவும் கேட்கறேன்.. உங்க வீடு எங்க இருக்கு சொல்லு.. உனக்கு என்ன பிரச்சனை சொல்லும்மா.. எதா இருந்தாலும் சமாளிக்கலாம்.. நீ இப்படி இந்த ஏரியால எல்லாம் வந்து இருக்கறது கொஞ்சம் கூட என் மனசுக்கு சரியா படல.. சொல்லும்மா.. எவனாவது உன்னை சொத்துக்காக டார்ச்சர் பண்ணறானா? எனக்கு தெரிஞ்ச வக்கீல் இருக்காங்க.. அவங்ககிட்ட சொல்லி கேஸ் நடத்தச் சொல்லலாம்.. இல்லையா போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுக்கலாம்.. என்ன பிரச்சனை சொல்லு.. நாம எதிர்த்து போராடலாம்..” மனமாறாமல் அவன் கேட்க, சுந்தரி அவனைப் பார்த்து புன்னகைத்தாள்.

“எனக்கு அதை எப்படி சொல்றதுன்னு தெரியல.. நீங்க நினைக்கிற மாதிரி எந்தப் பிரச்சனையும் இல்ல.. என்னால உங்களுக்கு எந்தப் பிரச்சனையும் வராது.. அதனால நான் ஏன் இங்க இருக்கேன்னு கேட்காதீங்க ப்ளீஸ்.. எத்தனை தடவ கேட்டாலும் நான் சொல்ல மாட்டேன்..” அடமாக அவள் சொல்ல, இந்திரனுக்கு ஆயாசமாக இருந்தது.

“உனக்கு எதுக்கு இங்க இருக்கற தலையெழுத்துன்னு தான் கேட்டேன்..”

“இங்க இருக்கறவங்களும் மனுஷங்க தானே.. என்னவோ நான் வரக் கூடாத இடத்துக்கு வந்தா மாதிரி பேசிட்டு இருக்கீங்க? நீங்க வாழற இடத்தை இப்படிச் சொல்லலாமா?” அவளது பதிலில், முகத்தில் பட்டென்று புன்னகை அரும்ப,

“சரி வா.. ரொம்ப பசியில இருப்ப.. சாப்பிடலாம்.. என்னோட நம்பரை குறிச்சிக்கோ.. ஏதாவது வேணும்னா ஒரு பிரெண்ட் போல தயங்காம கேளு சரியா?” என்று தனது நம்பரைத் தந்து,

“அப்படியே மிஸ்ட் கால் தா.. நான் குறிச்சு வச்சிக்கறேன்..” என்றவன்,

“வா.. சாப்பிட போகலாம்..” அவளை அழைத்துக் கொண்டு, தனது வீட்டிற்குச் சென்றான். ஒரே ஒரு அறை கொண்ட சிறிய வீடாக இருந்தாலும், வீட்டில் பொருட்கள் அந்தந்த இடத்தில் நேர்த்தியாக அடுக்கப்பட்டிருக்க, சுந்தரி வீட்டைப் பார்த்துக் கொண்டே நின்றாள்.

“இங்க உட்காரு சுந்தரி..” ராணி தட்டையும் உணவையும் எடுத்து வைக்க, சுந்தரி கீழே அமர்ந்த விதத்திலேயே அவளுக்கு அது பழக்கம் இல்லை என்பது நன்றாகவே தெரிந்தது.

“மேல சேர்ல உட்கார்ந்துக்கறியா?” இந்திரன் கேட்டான்.

“இல்ல.. நான் கீழயே உட்கார்ந்துக்கறேன். பழகிக்கறேன்..” என்றவள், கீழே அமர்ந்தாள். ராணி தட்டை வைத்துப் பரிமாற, உணவை எடுத்து சுந்தரி உண்டுக் கொண்டிருக்க,

“ஆமா.. மளிகை சாமான் வாங்கலைன்னு உனக்கு எப்போத் தெரியும்?” இந்திரன் அவளை வம்பு வளர்க்க,

“அதுவா.. அது சாயந்திரம் தூங்கி எழுந்த உடனே ரொம்ப பசிச்சது.. மேகி செஞ்சு சாப்பிடலாம்ன்னு நான் நெட்ல தேடி எல்லாம் பார்த்தேன்.. ஆனா.. கடைசியில பார்த்தா ஒண்ணுமே இல்ல.. நாளைக்கு வாங்கிக்கலாம்..” அவள் சொல்லவும், ராணி அவளைப் பார்த்து சிரித்தாள்.

“சரி.. நீ ஏன் அப்படி உட்கார்ந்து இருந்த?” ராணியின் கேள்விக்கு,

“அது.. எனக்கு இந்த ஃபேன் காத்து போதல.. ரொம்ப வேர்க்குது.. அது தான் ஸ்லீவ்லெஸ் நைட்டி போட்டுட்டேன்.. வெளிய கொஞ்சம் காத்து ஓகே வா இருந்தது.. அது தான் பாட்டு கேட்டுக்கிட்டு உங்களுக்காக வெயிட் பண்ணிட்டு உட்கார்ந்து இருந்தேன்.. அது தப்பா?” அப்பாவியாக அவள் கேட்க, ராணி மறுப்பாக தலையசைத்தாள்..

“இங்க எல்லாம் சினிமா நடிகைங்க தான் இது போல ட்ரெஸ் போட்டு பார்த்து இருப்பாங்க.. உங்க வட்டத்துல வேணா இந்த உடுப்பு எல்லாம் சாதாரணமா இருக்கலாம்.. இங்க அப்படி இல்ல.. இங்க பலதரப்பட்டவங்க இருக்காங்க.. யார் எப்படின்னு சொல்ல முடியாது.. சரியா? உனக்காக நாங்களும் இங்க காவல் காத்துக்கிட்டு இருக்க முடியாது.. கொஞ்சம் புரிஞ்சு நடந்துக்கோ.. என்ன இதுவோ நீ இந்த இடத்துக்கு வந்துட்ட.. நாளைக்கு எங்களுக்கு ஒரு பொல்லாப்பு வரக் கூடாது..” கறாராக ராணி பேச, சுந்தரியின் முகம் சுண்டியது..

“அந்த டீக் கடைக்காரன் கிட்டயும் கொஞ்சம் ஜாக்கிரதையா இரு சுந்தரி.. அவன் கொஞ்சம் ஒரு மாதிரி..” தாஸ் மேலும் அவளுக்கு எடுத்துச் சொல்ல, சுந்தரி தலை குனிந்தாள்.

“அவர் அப்படித் தான்னு நான் புரிஞ்சிக்கிட்டேன்.. ஓரளவு மனுஷங்களை பார்த்தா எனக்கு புரியும்.. பிஸ்னஸ்ல கத்துக்கிட்டது..” மென்மையான குரலில் சுந்தரி சொல்ல, இந்திரன் அவளை ஆராய்ச்சிப் பார்வை பார்க்க, ராணியோ, அவள் சொன்னதன் உட்பொருள் புரியாமல்,

“ஆமா.. உங்க வீட்ல நீ எந்த வேலையும் செய்ய மாட்டியா?” அடுத்த கேள்விக்கு தாவ,

“யார் சொன்னா? செய்வேனே..” அவளது பதிலில் இந்திரன் சுவாரஸ்யமாக அவளைப் பார்த்தான்.

தாஸ் அவளைப் பார்த்து, “அப்படி என்னம்மா வேலை எல்லாம் செய்வ?” என்று கேட்க, சுந்தரி தொண்டையை கனைத்துக் கொண்டாள்.

அதைப் பார்த்ததும் இத்திரன் கேலியாக உதட்டைப் பிதுக்க, “காலைல எழுந்ததும் பிரஷ் பண்ணுவேன்..”

“பெரிய வேலை தான்..” இந்திரன் பின் பாட்டு பாட,

“அப்பறம்.. குளிப்பேன்.. நான் குளிச்சிட்டு வந்த உடனே பியூடிஷியன் ரெடியா இருப்பாங்க.. அவங்க செய்யறதுக்கு எல்லாம் அமைதியா உட்கார்ந்து இருப்பேன்.. அப்பறம் எனக்கு மேக்கப் அன்ட் ஹேர்ஸ்டைல் முடிஞ்ச உடனே டிபன் ரெடியா இருக்கும்.. சாப்பிட்டு ஆபீஸ்க்கு போவேன்.. அப்பறம் சாயந்திரம் வீட்டுக்கு வந்து கொஞ்ச நேரம் மொட்டை மாடியில இருக்கற தோட்டத்துல வாக் போவேன்.. திரும்ப நைட் டின்னர் சாப்பிட்டு ரூமுக்கு போனேன்னா கொஞ்ச நேரம் புக் படிச்சிட்டு தூங்கி போயிடுவேன்.. ரொம்ப நேரம் முழிச்சு இருந்தா அம்மா திட்டுவாங்க.. அதனால சீக்கிரம் தூங்கி போயிடுவேன்..” அவள் போட்ட பட்டியலில், இந்திரன் வாய்விட்டு சிரிக்கத் துவங்கினான்.

“ஏன் சிரிக்கறீங்க?’ அவள் கேட்க,

“இல்ல.. இந்த வீடு கூட்டறது.. துணி துவைக்கிறது.. சமைக்கிறது எல்லாம் எதுல சேர்த்தி?” சிரித்துக் கொண்டே கேட்க,

“அதுக்கு எல்லாம் எங்க வீட்ல ஆள் இருக்காங்க.. வீடு கிளீன் பண்ண.. எல்லா காரையும் கிளீன் பண்ணி எங்களை ஆபீஸ் கூட்டிட்டு போறது எல்லாம் டிரைவர் இருக்காங்க.. சமையல்க்கு மூணு பேர் இருக்காங்க.. அவங்களுக்கு ஹெல்ப் பண்ண ரெண்டு பேர் இருக்காங்க.. அதனால நான் சமையல் ரூம்க்கு போனதே இல்ல.. தோட்டம் எல்லாம் மெயின்டைன் பண்ண ரெண்டு பேர் இருக்காங்க.. எனக்கு ஆபீஸ்ல தான் வேலை..” அவளது பதிலில் இந்திரன் ராணியைப் பார்த்தான்.

ராணியின் பார்வையும் அவனைத் தழுவி மீள, “நீ என்ன படிச்சிருக்க?” இந்திரன் அவளைப் பற்றித் தெரிந்துக் கொள்ளும் ஆவலில் பேச்சை வளர்த்தினான்.

“நானா? நான் வந்து சிங்கப்பூர்ல என்னோட மாஸ்டர்ஸ் பண்ணினேன்.. அப்பறம் யூ.எஸ்.ல மேனேஜ்மெண்ட் படிச்சேன்.. இப்போ எங்க ஆபீஸ்ல நான் வேலை செய்யறேன்..” அவளது படிப்பைக் கேட்ட இந்திரன் வாயைப் பிளந்தான்.

“நிஜமா சொல்லு சுந்தரி.. இங்க எதுக்கு வந்திருக்க?” அவனுக்கு நிஜமாகவே அவளது பேச்சு குழப்பியது.

“என்னோட வாழ்க்கையைத் தேடி..” அவளது பதிலில் அனைவருமே புரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்..

“அப்படி என்ன தான் உனக்கு பிடிவாதமோ? சரி.. ரொம்ப நேரமாச்சு.. போய் படுத்து தூங்கு.. எனக்கும் காலையில எழுந்துக்கணும்.. வேலை இருக்கு..” இந்திரன் தனது தட்டுடன் எழுந்துக் கொள்ள, அவனைப் பார்த்து, அவன் செய்வது போலவே அவளும் உண்டு முடித்து தட்டை எடுத்துக் கொண்டு எழுந்துக்கொண்டாள்.

“குட் நைட்..” அவர்களிடம் இருந்து விடைப்பெற்று அவள் தனது வீட்டிற்கு கிளம்ப, ‘மறக்காம வீட்டை பூட்டிகோ..” ராணியின் குரல் பின் தொடர்ந்தது. தனது பாயில் விழுந்த இந்திரனுக்கோ சுந்தரியைச் சுற்றியே நினைவுகள் சுழன்றுக் கொண்டிருந்தது.. அவள் எதற்கு இங்கே வந்திருக்கிறாள் என்ற எண்ணம் அவனது மனதை நிறைத்தது.

அதிகாலை வேலை.. வீட்டில் வளர்க்கும் சேவல்கள் ஒருபுறம் கூவிக் கொண்டிருக்க, பெரும்பாலும் கடை நிலை வேலைக்கு செல்வபர்கள் நிறைந்த அந்த இடம் அதிகாலை ஐந்து மணிக்கே சலசலவென்று அந்த இடம் நிறைந்து இருந்தது.. கடையைத் திறப்பதற்காக நாலரை மணிக்கே விழித்துக் கொண்ட இந்திரன், இரவு கடையில் இருந்து வரும்பொழுது எடுத்துக் கொண்டு வந்த பால் பேக்கட்டை, தங்கள் வீட்டில் இருந்த பிரிட்ஜில் இருந்து எடுத்துக் கொண்டு சுந்தரியின் வீட்டின் வாயிலில் வைத்து விடலாம் என்ற முடிவுடன், ராணியிடம் ஒன்றை கொடுத்துவிட்டு, அவளுக்கு ஒன்றை எடுத்துக் கொண்டு வந்தான்..

காலையில் ராணிக்கு உதவியாக, வாசலைக் கூட்டித் தெளிப்பது அவனது வழக்கம்.. இன்றும் அந்த வழக்கத்தில் அவன் பால் பேக்ட்டை அவளது படிகளில் வைக்கப் போக, கன்னத்தில் கை வைத்துக் கொண்டு சுந்தரி தனது செல்போனில் பாட்டுக் கேட்டுக் கொண்டிருக்க, இந்திரன் அதிர்ந்து போனான்.

அவனைப் பார்த்ததும், “குட் மார்னிங் இந்தர்.. என்ன இவ்வளவு சீக்கிரம் எழுந்துட்டீங்க?” புன்னகையுடன் அவள் கேட்க, இந்திரனின் மனதில் சுகமான தென்றல்.. காலையிலேயே தேவதை போன்றதொரு பெண் தனக்கு வாழ்த்து சொல்வது ஒரு இனிமையான அனுபவமாக இருந்தது..

புன்னகையுடன், “குட் மார்னிங் சுந்தரி.. என்ன இப்படி காலையிலேயே உட்கார்ந்து இருக்க? தூங்கியனையா இல்லையா?” அவனது கேள்விக்கு,

“இல்ல இந்தர்.. சுத்தமா தூங்கவே இல்ல.. மதியம் தூங்கினதுனாலன்னு நினைச்சேன்.. ஆனா.. அப்படி இல்ல.. ஒரு மாதிரி அன்கம்ஃபர்டபிலா இருக்கு..” அவள் சொல்ல, இந்திரன் அவளைப் பரிதாபமாகப் பார்த்தான்..

“அது தான் நான் உன்கிட்ட திரும்பத் திரும்ப கேட்கறேன்.. சொல்லு.. உங்க வீட்லயே கொண்டு விட்டுடவா?” மீண்டும் அவன் கேட்க,

“இல்ல.. இந்த இடம் எனக்கு அப்படி இல்ல.. எனக்கு ஓபன் பிளேஸ்ல தூங்கி பழக்கம் இல்ல..”

“ஓபன் பிளேசா?” இந்திரன் புரியாமல் கேட்க,

“இல்ல.. அப்படி நான் சொல்லல.. அதாவது ஹால்ல படுத்து தூங்கி பழக்கம் இல்ல.. ரூம்ல தான் தூங்குவேன்.. இதுல நான் மட்டும் தான் இருந்தாலும்.. ஒரு மாதிரி மைன்ட்ல இது ஹால்ன்னு பிக்ஸ் ஆகிடுச்சு.. அது தான் பிரச்சனை..” உதட்டை பிதுக்கி அவள் சொல்லிவிட்டு,

“ரெண்டு நாள் போனா அதுவும் பழகிடும்..” என்றவள்,

“நீங்க என்ன செய்யறீங்க காலையிலேயே..” தனது செல்லை உள்ளே வைத்துவிட்டு அவள் கேட்க, ஒரு பெருமூச்சுடன்,

“வாசல் கூட்டித் தெளிக்கப் போறேன்..” என்று அவன் சொல்ல, அவனைக் கண்கள் விரியப் பார்த்தவள்,

“இதெல்லாம் கூட நீங்க செய்வீங்களா? இன்னைக்கு நான் செய்யவா? எனக்கு சொல்லித் தாங்க..” அவள் கேட்கவும், ஒரு தலையசைப்புடன்,

“இந்தா.. பாலை உள்ள வச்சிட்டு வா..” என்று பால் பேக்ட்டை கொடுக்க, அதை உள்ளே வைத்துவிட்டு வரவும், இந்திரன் அவளுக்கு சொல்லித் தரத் துவங்கினான்.

“வாவ்.. சூப்பர்.. கொடுங்க நான் தெளிக்கறேன்..” என்றவள், தனது உடையை நனைத்துக் கொண்டு ஒரு வழியாக தண்ணீர் தெளித்து முடிக்க, இந்திரனுக்கு அவளது செயலைப் பார்த்து புன்னகை அரும்பியது.. அதே போலவே அவனிடம் வாசல் கூடுவதற்கு கற்றுக் கொண்டு செய்தவள், “நெக்ஸ்ட்?” என்று ஆவலாகக் கேட்க,

“கோலம் போடணும்..” சிரித்துக் கொண்டே அவளை வம்பு வளர்த்தான்.

“சரி.. பொடி கொடுங்க..” அவள் கேட்கவும், அதிசயமாக பார்த்துக் கொண்டே கோலப் பொடியை தரவும், அதை எடுத்துக் கொண்டு அமர்ந்தவள், அழகாக கோலம் போட, இந்திரன் வியந்து போனான்..

“எப்படி சுந்தரி இப்படி? இது உனக்குத் தெரியுமா?” ஆச்சரியமாகக் கேட்க,

“ஹ்ம்ம்.. இது நான் காலேஜ் படிக்கும்போது ஏதாவது ஃபெஸ்ட்க்கு பிரெண்ட்ஸ் போடுவாங்களா.. அப்போ போட கத்துக்கிட்டேன்.. இது எல்லாம் எனக்குத் தெரியும்ன்னு எங்க அம்மாவுக்குத் தெரியாது.. தெரிஞ்சா அதுக்கு ஏதாவது சொல்வாங்க..” சாதாரணமாகச் சொன்னவள், அவன் கையில் கோலப் பொடி டப்பாவைக் கொடுத்து விட்டு, திரும்பி வீட்டுக்கு நடக்க, இந்திரன் அவளைப் பார்த்துக் கொண்டே நின்றான்.

வீட்டின் உள்ளே அவள் நுழையும் வேளையில், “சுந்தரி.. உனக்கு காபி போடத் தெரியுமா?” என்று கேட்க,

“நான் காபி குடிக்க மாட்டேன்.. வெறும் பால் மட்டும் தான்.. அது காய்சிக்கத் தெரியும்.. ஆனா.. எனக்கு இந்த அடுப்பு பத்த வைக்கத் தெரியாது..” அவள் சொல்லவும், அவளுடன் உள்ளே சென்ற இந்திரன் அவளுக்கு அந்த சிலிண்டர் மற்றும் கேஸ் அடுப்பை கையாள சொல்லிக் கொடுத்தான்.

“ஓகே.. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.. நான் உங்களுக்கு காபி போட்டுத் தரேன்..” என்றவளை அவன் மேலும் கீழும் பார்க்க,

“ஹிஹ்ஹி.. அது பிளைட்ல எப்பவும் காபி கலந்துக்க கொடுப்பாங்க.. அதை எடுத்துட்டு வந்து வீட்ல வேலை செய்யற அக்காக்கு கொடுத்தா.. அவங்களுக்கு ரொம்ப பிடிக்கும்.. அதுக்காக எடுத்து வச்சது இருக்கு.. இருங்க.. நான் கலந்துத் தரேன்..” என்றவள், பாலை அடுப்பில் வைத்து விட்டு, தனது மொபைலை எடுக்க, இந்திரன் அவளை கேலியாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“வெயிட் அண்ட் சீ..” தனது தோளைத் தட்டிக் கொண்டவள், யூட்யூபில் இருந்த ஒரு சமையல் சேனலில் காபி போடுவதைப் பார்த்துவிட்டு, அவனுக்கு பால் காய்ச்சி, தனது ஹான்ட்பேகில் இருந்த அந்த சிறிய பொட்டலத்தை எடுத்து, அதில் இருந்த சக்கரையையும் எடுத்து கலந்துக் கொடுக்க, இந்திரன் அவளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்க, ராணி அவனைத் தேடிக் கொண்டு வந்தாள்.

“என்னடா நடக்குது இங்க?” அவள் வாயைப் பிளக்க,

“சுந்தரி இன்னைக்கு புது வீட்டுக்கு பாலைக்காய்ச்சுது.. மதியம் நமக்கு விருந்து வேற வைக்கப் போறாளாம்.. அதுவும் அவ கையாள சமைச்சு.. இப்போ பாரு எனக்கு சூடா காபி வேற போட்டுக் கொடுத்திருக்கா..” என்றவன், தனது கையில் இருந்த காபியை உறிஞ்ச, ஆவலாக அவனது முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஒரு மிடறு காபியை உருஞ்சியவன், புருவத்தை உயர்த்தி “நல்லா தான் இருக்கு..” என்று சொல்லவும்,

“ஹை.. நிஜமா நல்லா இருக்கா? நிஜமாவா? நான் இது தான முதல் தடவ காபியை போட்டு இருக்கேன்.. ஏன் சமையல் ரூம்ல வேலை செய்யறதே இது தான் முதல்முறை..” கையைத் தட்டிக் கொண்டு குஷியாக அவள் துள்ளிக் குதிக்க, இந்திரன் ராணியைப் பார்த்தான்.

“அக்கா.. உங்களுக்கும் கலந்துத் தரேன்..” என்றவள் சந்தோஷத்துடன் அவளுக்கும் கலந்துத் தர, ராணி அதை வாங்கி குடித்து முடித்தாள்.

“நல்லா தான் இருக்கு.. ஆமா.. நீ இன்னைக்கு என்ன சமைக்கப் போற? அதுக்கு முதல்ல மளிகை சாமான் வாங்கத் தெரியுமா?” ராணி கிண்டலாகக் கேட்க,

“இந்திரன் இருக்க பயமேன்.. அவரு எனக்கு வந்து என்ன சாமான் வாங்கணும்ன்னு ஹெல்ப் பண்ணுவார்..” புன்னகையுடன் சொன்னவளைப் பார்த்தவன்,

“உனக்கு வாடகைக்கும் விட்டுட்டு.. ஒண்ணு ஒன்னையும் என்னை வச்சே செய்துக்கற பார்த்தியா.. அங்க நிக்கற நீ.. எனக்கு இன்னைக்கு வேலை இருக்கு.. கடையை எல்லாம் விட்டுட்டு வர முடியாது.. இப்போவே எனக்கு நேரமாகிடுச்சு..” என்றவன், அங்கிருந்து கிளம்பிச் சென்று குளித்துவிட்டு, கடைக்குக் கிளம்ப,

“காலையில நான் இட்லி ஊத்தி சமையல் செஞ்சு வச்சிட்டு கடைக்கு போயிடுவேன்.. காலையில உனக்கும் செஞ்சுத் தரேன்.. மதியம் உன் ஆசைப்படியே எங்களுக்கு சமைச்சு வச்சிடு..” ராணி சொல்லிவிட்டு நகர்ந்து செல்ல, சுந்தரி தோளைக் குலுக்கிக் கொண்டு, மதியம் என்ன செய்வது என்பது போல தனது மொபைலை எடுத்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

ராணி அவளுக்கு டிபனை எடுத்துக் கொண்டு வரும்பொழுது சுந்தரி குளித்துக் கொண்டிருக்க, “சுந்தரி.. மேடை மேல இட்லி வச்சிருக்கேன்.. சாப்பிட்டு வேலையைப் பாரு.. நான் கடைக்கு போய்ட்டு வரேன்..” என்றவள், சுந்தரி, “சரிக்கா..” என்ற பதிலைச் சொல்லவும், கிளம்பி கடைக்குச் சென்றாள்.

“ஏண்டா இப்படி அந்தப் பொண்ணை மாட்டிவிட்டுட்ட.. அந்தப் பொண்ணு போட்ட காபியே ரொம்ப சுமார் தான்.. இதுல மதியம் சமையலை வேற செய்யச் சொல்லிட்ட? மளிகை சாமான் எல்லாம் கூட வாங்கிக்கோன்னு சொல்லிட்டு வந்துட்ட?” என்று கேட்க,

“அந்தப் பொண்ணு தனியா இருந்து எல்லாம் சமாளிக்கிறது ரொம்ப சுலபம்ன்னு நினைச்சிட்டு இருக்கா.. அந்தப் பொண்ணு பணத்துலயே பிரண்டிருக்கும் போல.. என்ன பிரச்சனைன்னு சொல்லு வீட்ல கொண்டு போய் விடறேன்னு சொன்னாக் கூட கேட்கவே இல்ல.. அது தான்.. படட்டும்.. பட்டா திரும்ப வீட்டுக்கு கிளம்பிப் போவா..” இந்திரன் சொல்லிவிட்டு தனது வேலையை கவனிக்கத் துவங்கினாலும், அவனது கண்கள் அடிக்கடி வீட்டில் இருந்து கடைக்கு வரும் வழியிலேயே பதிந்திருந்தது..

மதிய நேரம் ஆகவும், “மாமா.. வாங்க வீட்டுக்கு போய் சாப்பிட்டு வந்துடலாம்..” தாசை அழைத்தவன், ‘யக்கா கொஞ்ச நேரம் கடையை பார்த்துக்கோ நாங்க சாப்பிட்டு வந்துடறோம்..’ பக்கத்து கடையில் இருந்த பெண்ணிடம் சொல்லிவிட்டு, வேகமாக வீட்டிற்குச் சென்றான்..

வீட்டை நெருங்கும் நேரம், வாசம் மூக்கைத் துளைக்க, “என்னக்கா இது? நிஜமாவே இவ சமைச்சிட்டாளா என்ன?” என்றுக் கேட்டுக் கொண்டே வீட்டின் உள்ளே நுழைய, சமயலறையில் சுந்தரி எதுவோ செய்துக் கொண்டிருக்க, இந்திரன் அங்கிருந்த மளிகைப் பொருட்களைப் பார்த்து அசந்து நின்றான்.

“அக்கா.. இவ தான் வீட்டை விட்டு வெளிய போகவே இல்லையே.. எப்படி சாமான் எல்லாம் வாங்கினா?” அவனது விழிகள் ஆச்சரியத்தில் விரிய, அதைக் கேட்டவளோ,

“எல்லாமே ஆன்லைன் தலைவரே.. மொபைல் கையில இருந்தா.. எதை வேணா செய்யலாம்..” என்றவள், எட்டி தனது மொபைலை ஆட்டிக் காட்ட, அவளது செயலில் இந்திரனுக்கு சிரிப்பு வந்தது.

“அப்போ சமையல் கூட அப்படித் தானா? ஹோட்டல சொல்லிட்டியா?” கேலியாக அவன் கேட்க,

“ச்சே.. ச்சே.. மளிகை சாமான் மட்டும் தான் வாங்கினேன்.. சமையல் எல்லாம் நானே தான் மொபைல்ல வீடியோ பார்த்து செஞ்சேன்.. முதல் தடவ சமைக்கிறேனா.. கொஞ்சம் கை சுட்டுடுச்சு..” அவள் யதார்த்தமாக அவள் சொல்ல, ராணி அவசரமாக அவளது கையைப் பிடித்துப் பார்த்தாள்.

“என்ன சுந்தரி இது? இப்படியா கையை சுட்டுப்ப?” அவள் பதறி, அவள் வாங்கி வைத்திருந்த பொருட்களில் தேங்காய் எண்ணெய்யை தேடி எடுத்து அவளது கையில் போட்டுவிட, சுந்தரி அன்புடன் அவளைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இந்திரனுக்கோ அவளது கையில் பட்டிருந்த சிவப்புத் தடம் மனதைச் சுட்டது.. ‘நான் விளையாட்டுக்கு சொல்லி இப்படி ஆகிப் போச்சே..’ மனம் வருந்தியவன், அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல்,

“எனக்கு நின்னு பேச நேரமில்ல.. கடைக்கு போகணும்.. சீக்கிரம் சாப்பாடு போடு..” என்று சொல்லவும்,

“இதோ ரெண்டே நிமிஷம்..” என்றவள், தட்டை எடுத்து வைத்துவிட்டு, தண்ணீரை எடுத்து கொண்டு வர, இந்திரன் அதிசயமாக அவளைப் பார்த்தான்..

“இதுவும் இதுல தான் பார்த்தேன்..” கண்ணடித்துச் சொல்லிவிட்டு, மூவரையும் அமர்த்தி அவள் சமைத்த உணவை பரிமாற, ராணி அவளை அதிசயமாகப் பார்த்தாள்.

“இதெல்லாம் கூடவா அதுல இருக்கும்?” கண்கள் விரிய அவள் கேட்க,

“ஆமாக்கா.. உங்களுக்கு என்ன சமைக்கணும் சொல்லுங்க.. இதுல எல்லாமே நமக்கு செஞ்சு காட்டி சொல்லித்தருவாங்க.. நாம செய்யலாம்..” அவளது பதிலில், உதட்டைப் பிதுக்கியவள்,

“படிச்ச பொண்ணு இல்ல.. அது தான் உனக்கு எல்லாம் தெரியுது.. இவனும் படிச்சு இருக்கானே.. ஒரு நாள் கூட எனக்கு இதெல்லாம் இருக்குன்னு சொல்லித் தரலம்மா..” என்றவள், உணவை எடுத்து வாயில் வைக்க, மேலும் அவளது கண்கள் விரிந்து ஆச்சரியமாக இருந்தது..

“ரொம்ப மோசம் இல்லாம சமைச்சு இருக்கியே.. எப்படி இந்த மளிகை சாமான் எல்லாம் வாங்கின? உனக்கு அளவெல்லாம் தெரிஞ்சதா? எங்க வாங்கின?” ராணி இன்னமும் ஆச்சரியம் விலகாமல் கேட்க,

“அந்த வீடியோல சொன்ன கணக்கு வச்சு போட்டேன்க்கா.. எல்லாமே ஒரு கணக்கு தானே.. அது தான் செஞ்சேன்.. சமையல் நல்லா இருக்கா? எனக்கு பிடிச்சது? என்னோட முதல் சமையல்.. நானே சமைச்சது..” முதலில் சாதாரணமாகச் சொன்னவள், அடுத்து பேசும்பொழுது அவளது முகத்தில் அப்படி ஒரு பெருமை..

“நல்லா இருக்கும்மா.. இன்னும் கொஞ்சம் காரமும் கொஞ்சம் உப்பும் சேர்ந்தா ரொம்ப நல்லா இருக்கும்.. நிஜமாவே முதல்தடவ சமைச்சா போல இல்ல..” ராணி பாராட்டிக் கொண்டே சாப்பிட, இந்திரன் வேகமாக சாப்பிட்டு விட்டு, கடைக்கு கிளம்பினான்.

சுந்தரி அவனது முகத்தை ஆவலாகப் பார்க்க, அவனோ எதுவும் சொல்லாமல், அவசரமாக கடைக்கு கிளம்பிச் சென்றான்.

“நல்லா இருந்துச்சு சுந்தரி.. இப்போ இதுக்கு எல்லாம் டப்பா வாங்கனுமா?” ராணியின் கேள்விக்கு, சுந்தரி புன்னகைத்துக் கொண்டே தனது மொபைலை ஆட்டிக் காட்ட,

“அதுவுமா அதுல வரும்.. அப்போ எனக்கும் அப்பறம் அது எல்லாம் எப்படி பார்க்கறதுன்னு சொல்லிக் கொடு.. எனக்கு மீன்னா ரொம்ப பிடிக்கும்.. ஆனா.. என்னவோ அது சரியாவே வராது.. நீ இதைப் பார்த்து சொல்லு.. நான் செய்யறேன்.. எங்க வீடுக்காருக்கும் உசுரு..” ஆசையாக அவள் கேட்க,

“கண்டிப்பா.. நீங்க மீன் வாங்கிட்டு சொல்லுங்க.. நான் சொல்றேன்.. ரெண்டு பேரும் சேர்ந்தே செய்வோம்..” என்ற சுந்தரியை ராணிக்கு மிகவும் பிடித்துப் போனது.. இருவருக்குள்ளும் அழகான நட்பு ஒன்று துளிர்விட, ராணி சந்தோஷத்துடன் கடைக்குச் சென்றாள்.

அதே நேரம்..

“என்னது? சுந்தரி அங்க வரலையா? அவளை ஏர்போர்ட்ல டிரைவரும் மேனேஜரும் டிராப் பண்ணிட்டு தானே வந்தாங்க? உள்ள அவ செக்இன் பண்ற வரை இருந்துட்டு தானே வந்தாங்க? எப்படி அவ அங்க வராம போவா? பிளைட்க்கு கேட்ல வெயிட் பண்றேன்னு சொன்னாளே..” ஒரு பெண்ணின் குரல் அந்த அறையில் எதிரொலிக்க, அவர் முன்பு அந்த டிரைவரும், மேனேஜரும் நடுங்கிக் கொண்டு நின்றனர்..

“இல்ல.. அவ மாறி எங்கயும் போயிருக்க மாட்டா.. ஒருவேளை வீட்டுக்கு திரும்பிப் போயிருப்பாளா இருக்கும்.. நான் இப்போ ஒரு பிஸ்னெஸ் மீட்டிங்க்காக வெளியூர்ல இருக்கேன்..” ஒருவழியாக சமாளித்து, போனை வைத்தவர், தலையில் கை வைத்துக் கொண்டு அமர்ந்தார்.

அவர்.. சுந்தரியின் தாயார்.. திருமதி வத்சலா ராகவேந்திரன்.. ஒரு புகழ் பெற்ற வைர வியாபாரியின் மகள். ஒரே வாரிசான அவர் தனது தந்தையையின் தொழிலையும் கவனித்து, தனது கணவரின் மென்பொருள் நிறுவனத்தையும் நிர்வகிப்பவர்..

முன்னணி மென்பொருள் நிறுவனத்திற்கு அடுத்தபடியாக, கோவையிலும் சென்னையிலும் கிளைகள் கொண்ட ஒரு முன்னணி மென்பொருள் நிறுவனத்தை நிறுவி, அதை வெற்றிகரமாக நடத்திக் கொண்டு வருபவர்.. அவரது ஒரே வாரிசான சுந்தரி அந்த மென்பொருள் நிறுவனத்தின் எம்.டி.. அவருக்கு அடுத்த படியாக மொத்த பொறுப்பையும் கவனிக்கும் பொறுப்பு சுந்தரியுடையது..

இதயம் தொடுவான் 💘💘💘

🌷🌷🌷🌷 🌷🌷🌷🌷 🌷🌷🌷🌷 🌷🌷🌷🌷 🌷🌷🌷🌷 🌷🌷🌷🌷 🌷🌷🌷🌷
 




  • Like
Reactions: bbk

Ramya Swaminath

அமைச்சர்
SM Exclusive
Joined
Aug 2, 2020
Messages
2,375
Reaction score
6,292
🏹3💖

மாலை வேளையில், கையில் இருந்த கப்பில், பாலை உறிஞ்சிக் கொண்டே, தனது லேப்டாப்பில் சுந்தரி படம் பார்த்துக் கொண்டிருக்க, ராணியிடம் வெளியில் வசூலுக்கு செல்வதாகக் கூறி விட்டு, நைசாக வீட்டிற்கு இந்திரன் வந்தான்..

வீடே அமைதியாக இருக்கவும், வீட்டின் கதவை அவன் மெல்லத் தட்ட, “யாரு..” சுந்தரியின் குரல் உள்ளிருந்து வந்தது..

“நான் தான் இந்த வீட்டு ஓனர் வந்திருக்கேன்..” இந்திரன் குரல் கொடுக்க, புன்னகையுடன் எழுந்து கதவைத் திறந்தவள்,

“வாங்க தலைவரே.. என்ன விசேஷம்? அதுக்குள்ள வாடகை கொடுக்க நாளாகிடுச்சா என்ன?” நக்கலாக அவள் கேட்கவும், இந்திரன் அவளை முறைத்தான்..

“உள்ள வாங்க.. காபி குடிக்கறீங்களா? நான் நேத்தே காபிப் பொடி வாங்கிட்டேன்..” பெருமையாக அவள் சொல்ல..

“சரி தா.. அதுக்கு முன்னால இந்தா..” என்றவன், தனது பணப்பையில் இருந்த மருந்தை எடுத்து அவளிடம் நீட்டினான்.

அவள் அதை வாங்கி அங்கிருந்த டேபிளில் வைக்க, “மொதல்ல இங்க வா.. நீ வாங்கி வைக்கிற லட்சனத்துலயே போடப் போறதில்லைன்னு தெரியுது.. அதனால இங்கக் கையைக் காட்டு..” என்றவன், அவள் கையை நீட்டவும், மென்மையாக அவளது கையைப் பிடித்து, அதில் மருந்திட, சுந்தரி புன்னகையுடன் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“உனக்கு எதுக்கு இந்த தேவை இல்லாத வேலை.. பேசாம அக்காகிட்ட சொல்லிடு.. அக்கா தினமும் உனக்கு செஞ்சித் தருவா.. அதுக்கு நீ வெளிய வாங்கினா எவ்வளவு வருமோ அவ்வளவு தந்திடு சரியா?” அவன் கேட்க, சுந்தரி அவனைப் பார்த்து இப்பொழுதும் புன்னகைத்தாள்.

“என்ன சிரிக்கிற?” இந்திரன் கேட்க,

“இல்ல.. என்கிட்ட அவ்வளவு பைசா இருக்காது.. தினமும் உட்கார்ந்து சாப்பிட்டா எல்லாம் மொத்தமா தீர்ந்து போயிடும்.. எனக்கும் போர் அடிக்குது.. நானே ஏதாவது வேலைக்கு போகலாமான்னு யோசிச்சிட்டு இருக்கேன்..” புன்னகையுடன் சொன்னவளை ஒருமாதிரிப் பார்த்தவன்,

“உனக்கு எங்க வீட்ல சாப்பிடறது பிடிக்கலப் போல.. அது தான் இப்படித் தட்டிக் கழிக்கிற..” பட்டென்று அவன் சொல்ல, சுந்தரி மறுப்பாகத் தலையசைத்தாள்.

“அது அப்படி இல்ல இந்தர்.. உட்கார்ந்து சாப்பிடறதுன்னா நான் எங்க வீட்லயே இருந்திருக்க மாட்டேனா? எனக்கு என் மனசுக்கு தோணினது எல்லாம் செய்யணும்.. ஆசைப்பட்ட வாழ்க்கை வாழனும்.. நான்.. நானா இருக்கணும்.. அது தான் என் வாழ்க்கை.. அது தான் என்னோட சந்தோசம்.. கொஞ்ச நாள்.. கொஞ்சமே கொஞ்ச நாள் நான் எனக்கு ஆசைப்பட்ட மாதிரி இருக்கேனே.. எனக்கு நிஜமா ராணியக்கா சமையல் ரொம்ப பிடிச்சிருக்கு.. இன்னைக்கு காலைல இட்லி கூட வச்ச சட்னி ரொம்ப சூப்பர்.. அதனால அப்படி எல்லாம் நினைச்சுக்காதீங்க.. என்னோட காரணங்கள் இவ்வளவு தான்.. இனிமே என்னோட வாழ்க்கையில இப்படியான நாட்கள் கிடைக்குமான்னு கூட எனக்குத் தெரியாது.. அதனால நான் முழுசா அதை வாழனும்ன்னு ஆசைப்படறேன்.. ஒரு சராசரிப் பொண்ணா.. அது தான்..” தனது காரணங்களை சொல்ல, இந்திரனுக்கு மனதைப் பிசைந்தது.

“சரி.. உன் இஷ்டம்.. இனிமே இப்படி கையை சுட்டுக்காம செய்.. அப்படியே புதுசா ஏதாவது செஞ்சா எனக்கும் கொஞ்சம் தா.. என்ன?” என்று பேசிக் கொண்டே மருந்திட்டு முடிக்க, சுந்தரி புன்னகையுடன் தலையசைத்துவிட்டு, அவனுக்கு காபி கலக்கச் சென்றாள்.

“ஏன் இந்தர்.. உங்க பிசினசை அடுத்த லெவலுக்கு எடுத்துட்டு போகலாமா?” அவள் கேட்க,

“எப்படி? இன்னொரு கடையா? அதை யாரு பார்த்துக்க முடியும்?” அவன் புரியாமல் கேட்க, சுந்தரி மறுப்பாக தலையசைத்தாள்.

அவனது கையில் காபிக் கோப்பையை கொடுத்துவிட்டு, “இப்போ நான் மளிகை வாங்கினேன் இல்ல.. அது போல தினமும் பிரெஷ்ஷா காய் எல்லாம் வீட்டுக்கு கொண்டு போய் சப்ளை செய்ய முடியுமா? உங்களால முடியும்ன்னு சொல்லுங்க.. நான் உங்களுக்கு அதுக்கு வழி பண்ணித் தரேன்.. உங்களுக்கு ஒரு சைட் ஓபன் பண்றேன்.. அதே போலவே மொபைல் ஆப் செய்யலாம்.. ஆன்லைன் ஆர்டர்.. எப்படி வசதி?” அவள் கேட்க,

“காய்கறி எல்லாம் மளிகை சாமான் மாதிரி இல்லம்மா.. தினமும் ரேட் ஏறும் இறங்கும்,. அதை தினமும் மாத்திட்டு இருக்க முடியுமா?” கிண்டலாக அவன் கேட்க,

“உங்களால முடியுமா? முடியாதா? அதை மட்டும் சொல்லுங்க.. நான் உங்களுக்கு அதை செஞ்சித் தரேன்..” அவள் விடாப்பிடியாக கேட்கவும்,

“என்னால முடியும்.. உன்னால அப்படி எல்லாம் செய்ய முடியுமா? வெளியூருக்கு போறது எல்லாம் நமக்கு சரிப்பட்டு வராது.. அதே போல வீட்டுக்கு போக வர வண்டிக்கு பெட்ரோல் காசு இருக்கு.. அதனால ரொம்ப கம்மியா எல்லாம் கொடுக்க முடியாது.. என்னோட காய்கறி தரமா இருக்கும்.. அதுக்கு நான் கேரண்டி..” சவாலாக அவன் சொல்ல, அனைத்தையும் கேட்டுக் கொண்டவள்,

“செஞ்சித் தான் பார்ப்போமே..” என்று கண் சிமிட்ட, இந்திரனுக்கும் அவளது யோசனை பிடித்திருந்தது.. அதே யோசனையுடன் விடைப்பெற்று வந்தவன், அதற்கான சாத்திய கூறுகளை அலசி ஆராயத் துவங்கினான்.

மறுநாள் காலை அவன் வழக்கம் போலவே கண் விழித்து வெளியில் வர, அதற்கு முன்பாகவே தண்ணீர் தெளித்து கோலம் போடப்பட்டிருக்க, திகைப்புடன் அவன் திரும்பி சுந்தரியின் வீட்டின் பக்கம் பார்த்தான்.. உள்ளே இருந்து பாடல் ஒலித்துக் கொண்டிருக்க, பால் பேக்கட்டுடன் அவளது வீட்டின் கதவைத் தட்டினான்.

“வாங்க இந்தர்.. இதோ ஒரு நிமிஷம் வரேன்..” என்றவள், தனது நைட்டியின் மேல் கோட்டை எடுத்து அணிந்துக் கொண்டு கதவைத் திறக்க, அந்த உடையைப் பார்த்த இந்திரனின் கண்கள் அவளிடமே ஓட்டிக் கொண்டது.. எந்த ஒரு அலங்காரமும் இன்றி, துடைத்து வைத்த சிற்பம் போல நின்றவளை அவனது உள் மனம் ரசிக்க, தலையை குலுக்கிக் கொண்டவன், பால் பேக்கட்டை நீட்டினான்.

அதை வாங்கியவள், “உங்களுக்காக நான் செய்திருக்கற சைட்டைப் பார்க்கறீங்களா?” அவள் கேட்க,

அதற்கு பதில் சொல்லாமல், அவளது கண்கள் வீங்கி இருக்கவும், “நீ இன்னைக்கும் தூங்கவே இல்லையா?” அவன் திகைப்புடன் கேட்டான். அவனது கேள்விக்கு உதட்டைப் பிதுக்கியவள்,

“வாங்க.. எனக்கு பசிக்குது.. காபி குடிக்கலாம்.. அப்பறம் எனக்கு நீங்க நைட் வரும்பொழுதும் ஒரு பேக்ட் பால் வேணும்.. நைட் தூங்கலைல.. நடு ராத்திரி பசிக்குது..” பாவமாக அவள் சொல்ல, இந்திரனுக்கு மிகுந்த வருத்தமாக இருந்தது..

“சுந்தரி.. திரும்பவும் சொல்றேன்.. உங்க அம்மா உன்னை ரொம்ப பொத்தி.. ஒரு வேலையும் செய்ய விடாம.. தரையிலேயே கால் படாம பார்த்துட்டு இருந்திருக்காங்க.. நீயானா இப்படி இங்க வந்து தூங்க கூட முடியாம கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கியே.. இது உனக்கே நல்லா இருக்கா.. தயவு செஞ்சு உன் வீட்டுக்கே போயிடேன்..” அவன் கெஞ்ச,

“எனக்கு அது தான் என்னோட பிரச்சனையே.. நான் சொன்னேன் இல்ல.. எனக்கு நான் நானா.. என்னோட சின்னச் சின்ன ஆசைகள் நிறைவேற வாழனும்.. இப்போ நான் வீட்டை விட்டு வெளிய வரலைன்னா இனி எப்பொழுதுமே எனக்கு இந்த சந்தர்ப்பம் கிடைச்சு இருக்காது.. நான் ஒரு தங்கக் கூண்டு கிளியா தான் சுத்திட்டு இருந்திருப்பேன்.. ப்ளீஸ் புரிஞ்சிக்கோங்க இந்தர்.. இதெல்லாம் எனக்கு கஷ்டமே இல்ல.. எனக்கு இப்படியும் இருக்கணும்ன்னு தான் ஆசையே.. எங்க வீட்ல வேலை செய்யறவங்க பேசறதை நான் மாடியில இருந்து கேட்டு இருக்கேன்.. சின்னச் சின்ன விஷயங்களைக் கூட அவங்க அவ்வளவு சந்தோஷமா சொல்றதைக் கேட்கும்பொழுது, எனக்கு அப்படி சொல்லிக்க ஒரு சந்தோஷமும் இல்லையேன்னு நிறைய நாள் ஏங்கி இருக்கேன்.. அந்த ஏக்கத்தை போக்கிக்க வந்திருக்கேன்.. ப்ளீஸ்.. இன்னொரு தடவ இப்படி கேட்காதீங்க..” தனது மனதின் ஆசைகளை அவள் சொல்ல, இந்திரன் ஒரு பெருமூச்சுடன் அவளைப் பார்த்தான்.

“நாங்க எல்லாம் உங்களை மாதிரி ஒரு நாள் வாழ முடியாதான்னு பணத்துக்கு பின்னால ஓடிக்கிட்டு இருக்கோம்.. நீ சொல்றதைப் பார்த்தா.. உனக்கு பின்னால பணம் ஓடி வருது போல.. என்னவோ போ. இது தான் வாழ்க்கை..” என்றவன், சுந்தரி சலித்துக் கொண்டு உச்சுக் கொட்டவும்,

“சரி.. நீ என்ன தான் செய்திருக்கன்னு காட்டு பார்ப்போம்..” என்றவன், அவள் காட்டக் காட்ட, அவனது புருவங்கள் மேலேறியது.

“சுந்தரி.. நிஜமா ரொம்ப அழகா இருக்கு.. பார்க்கவே அப்படி இருக்கு சுந்தரி.. எனக்கு சந்தோஷமா இருக்கு.. சரி.. இதை எப்படி விலையை தினமும் மாத்தறது?” உள்ளம் பூரிக்க அவன் கேட்க,

“இது இன்னும் லைவ் போடல.. உங்களுக்கு ஓகேன்னா இதே போடலாம்.. இல்லையா.. வேற டிசைன் எல்லாம் இருக்கு.. பாருங்க.. இப்போதைக்கு நான் இதை செஞ்சிருக்கேன்.. நீங்க எனக்கு ரேட் எல்லாம் என்னன்னு சொன்னீங்கன்னா.. அது செய்யும்போதே எப்படி அப்டேட் பண்றதுன்னு சொல்லித்தரேன்.. மீதி அதை நான் பார்த்துக்கறேன்..” என்றவள், அதையும் அவனுக்கு படிப்பிக்க, இந்திரனுக்கு சந்தோஷத்தில் ஜிவ்வென்று இருந்தது..

“நிஜமா ரொம்ப நல்லா இருக்கு சுந்தரி. உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?” ஆச்சரியமாக அவன் கேட்க,

“இதுக்கு தான் நான் படிச்சதே.. இது தான் என்னோட தொழிலே..” என்றவள், அதை வைத்துவிட்டு, எழுந்து காபியை கலக்க, இந்திரன் அதை பார்த்துக் கொண்டே இருந்தான்..

இப்பொழுதே அவன் பெரிய தொழிலதிபனாக ஆனது போன்றுத் தோன்ற, சுந்தரியைப் பார்த்தான். முகத்தில் தான் சாதித்த எந்த ஒரு பிரதிபலிப்பும் இல்லாமல் சாதாரணமாக இருக்க, அவனுக்கு அவள் புதிதாகத் தெரிந்தாள்.

அவளைப் பார்க்கும்பொழுதே அவளது குடும்பத்தின் செழுமை நன்றாகவே தெரிந்தது.. எந்த பந்தாவும் இன்றி இப்படி ஒரு இடத்தில் தனது சின்னச் சின்ன ஆசைகளுக்காக அவள் வந்திருப்பது அவனுக்கு புதுமையாக இருந்தது.. தனது வாழ்வில் இப்படி ஒரு பெண்ணை சந்தித்ததே இல்லை என்று நினைத்துக் கொண்டவன், ஒரு புன்னகையுடன் அவள் அருகில் சென்றான்.

அவள் காபியை அவனிடம் நீட்ட, “பரவால்ல நல்லா போடக் கத்துக்கிட்டயே..” என்றவன், அதை குடித்துவிட்டு,

“காலையில என்ன டிபன்..” என்று அவளை வம்பு வளர்க்க,

“சூடா பொங்கல் செய்யப் போறேன்.. கூடவே வடை.. வரீங்களா சாப்பிடலாம்..” அவள் கேலியாகக் கேட்க, இந்திரன் கையெடுத்து கும்பிட்டு,

“இன்னைக்கு நான் கலெக்ஷன்க்கு போகணும்.. இதோட ரேட் எல்லாம் எழுதித் தரேன்.. நீ அதை போட்டுடு சரியா? எனக்கு நேரமாச்சு..” என்றவன், அவளிடம் விடைப்பெற்று கிளம்பிச் செல்ல, சுந்தரி, குளித்து புடவையை எடுத்து உடுத்திக் கொண்டு, மற்ற வேலைகளை கவனிக்கத் துவங்கினாள்.

கடைக்குச் சென்று அவன் வட்டிக்கு கொடுத்த பணத்தை வாங்கிக் கொண்டு வரும் வழியில், அவளுக்கு அந்த ஹாலை தடுத்து ஒரு அறை போல உருவாக்க, மரக்கடையில், மரத்தினால் ஆன தடுப்புகளை செய்யச் சொல்லி, மாலையில் வாங்கிக் கொண்டு வந்தான்.

மாலை அவன் வந்த பொழுது, சுந்தரி ராணியுடன் கடைக்குச் சென்றிருந்தாள். “சுந்தரி.. அவங்ககிட்ட இருபது ரூபாய் வாங்கிக்கோ..” ராணி சொல்லச் சொல்ல, சுந்தரி கல்லாவைப் பார்த்துக் கொள்ள, கடைக்கு வந்த இந்திரன் அங்கிருந்தவளைப் பார்த்து புருவத்தை உயர்த்தினான்.

“என்ன சாஃப்ட்வேர் வெஜிடபிள் கடை பக்கம் வந்திருக்கு?” கேலியாகக் கேட்க,

“எனக்கு ரொம்ப போர் அடிக்குது இந்தர். அது தான் அக்கா சாயந்திரம் வீட்டுக்கு வந்த பொழுது வந்தேன்.. இங்க நல்லா பொழுது போகுது..” குதூகலத்துடன் அவள் சொல்லவும், புன்னகையுடன் இந்திரன் தனது வேலையை கவனிக்கத் துவங்கினான்.

கும்பல் இல்லாத பொழுது ராணியிடம் அவள் கதை பேசி, ராணி சொல்லும் கதைகளை கேட்டுக் கொண்டிருக்க, இந்திரனுக்கு புன்னகை அரும்பியது. ‘இது போல கதை பேசணும்ன்னு தான் ஆசைப்பட்டாளோ? அதுக்குத் தகுந்து அவளுக்கு ஒரு ஃபிரெண்ட் கூடவா இல்ல? இந்தப் பணக்கார பொண்ணுங்களுக்கு தான் நிறைய ஃபிரெண்ட்ஸ் இருக்குமே.. ஷாப்பிங் அது இதுன்னு எப்போப் பாரு சுத்திட்டு இருப்பாங்களே.. இந்தப் பேச்சுக்கு கூடவா ஏங்கி இருந்தா?’ மனதினில் நினைத்துக் கொண்டவன், தோளைக் குலுக்கிக் கொண்டு அன்றைய காய்களின் விலைப்பட்டியலை எழுதத் துவங்கினான்.

“கருமமே கண்ணா இங்க ஒருத்தர் வேலை செய்யறதைப் பாருங்க..” சுந்தரி ராணியுடன் சேர்ந்து இந்திரனை கிண்டல் செய்யத் துவங்கினாள்.

“ஒய் சாப்ட்வேர்.. காய்கறி விக்கறது எல்லாம் சும்மா இல்ல.. உங்கள மாதிரி போட்டியில தட்டறது இல்ல அது..” சவாலாக அவன் சொல்ல,

“கொஞ்ச நேரம் நீங்க செய்ங்க.. நான் அப்பறம் செய்யறேன்..” என்றவள், அவன் விற்பனை செய்வதை கவனிக்கத் துவங்கினாள்.. சில நிமிடங்கள் கடக்க, இந்திரன் நக்கலாக அவளைப் பார்த்து விட்டு திரும்ப, அவன் அருகில் சென்று நின்றவள், அடுத்த வந்தவருக்கு காய்களை எடுத்துக் கொடுத்து, சரியான விலையைச் சொல்லி விற்பனை செய்ய, இந்திரன் புருவத்தை உயர்த்தி உதட்டை பிதுக்கிவிட்டு, தனது வியாபாரத்தை கவனித்தான்.

சிறிது நேரம் அப்படியே செல்ல, சுந்தரிக்கு பொழுது இனிமையானதாக கழிந்தது.. “சுந்தரி.. கொஞ்சம் கடையை பார்த்துக்கோ.. நானும் மாமாவும் கொஞ்சம் வெளிய போயிட்டு வரோம்..” என்றவன், கிளம்பிச் செல்ல, சுந்தரி மிகவும் சிரத்தையாக வியாபாரத்தை கவனித்தாள்..

அவள் விற்பனை செய்வதற்காக வருபர்களிடம் பேசுவதைப் பார்த்து ராணிக்கு சிரிப்பு வர, சிறிது நேரத்தில் இந்திரனும், தாசும் திரும்பி வந்தனர்.. தாசின் பார்வை சுந்தரியிடம் சென்று விட்டு மீள, அதை கவனித்த சுந்தரி, “என்ன அண்ணா?” என்று கேட்கவும், உற்றார் உறவினர் என்று யாரும் இல்லாதவனான தாசிசிற்கு அவளது அண்ணா என்ற அழைப்பு மகிழ்ச்சியைக் கொடுத்தது..

அங்கு வந்த ஒரு பெண், “என்ன மதனி? உங்க வீட்டு மருமகளை அதுக்குள்ள கடைக்கு கூட்டிட்டு வந்துட்டீங்க? பொம்மை மாதிரி இருக்கற பொண்ணு.. வீட்டுக்குள்ள வச்சு பூட்ட வேண்டாமா?” இந்திரனை வெகுநாட்களாக தன்னவனாக்கிக் கொள்ள முயற்சி செய்துக் கொண்டிருக்கும் மலர் கேட்க, சுந்தரி அவளை முறைத்தாள்.

அதற்குள் ராணி, “ஏய்.. வந்தியா.. சாமான் வாங்கிட்டு போவியா.. ஊர் வம்பு பேசிட்டு திரியற.. பேசாம போய் வேலையைப் பாரு.. வந்துட்டா.. என் தம்பிக்கு பொண்ணு பார்க்க.. இந்தப் பொண்ணை உள்ள வச்சு பூட்டனுமா.. இல்ல கடைக்கு கூட்டிட்டு வரதான்னு நாங்க முடிவு செய்துக்கறோம்.. போடி..” என்று சத்தமிட, சுந்தரி ராணியை சுவாரஸ்யமாகப் பார்த்தாள்.

அவளை உண்டு இல்லை என்று செய்து ராணி அனுப்ப, சுந்தரி சிரிப்புடன், “ஹையோ அக்கா.. உங்ககிட்ட மாட்டினா அவ்வளவு தான் போலயே.. அந்தப் பொண்ணு பாவம்.. இந்தர் மேல ஆசையா தானே பேசறா.. அவருக்கும் பிடிச்சு இருந்தா கல்யாணம் செய்யலாம்ல..” அவள் கேட்கவும்,

“யாரு அவளா!! அவ ஏற்கனவே நாலு பேரை லவ் பண்ணி.. ஒருத்தன் கூட ஓடிப் போயிட்டு வந்தவ.. அவளா என் தம்பிக்கு ஜோடி.. அவனுக்கு எல்லாம் பொண்ணு எப்படி இருக்கணும் தெரியுமா? என் தம்பி அவளைத் தங்கமா தாங்குவான்.. அதுக்கு அந்தப் பொண்ணுக்கு தகுதி இருக்கணும் இல்ல..” பெருமையாக ராணி சொல்ல, சுந்தரி அவர்களை கனிவுடன் பார்த்தாள்.

“அக்கா.. இந்தர்க்கு நீங்க எப்படி பொண்ணு பார்க்கப் போறீங்க?”

“அவனோட லட்சணத்துக்கு ஈடாகற மாதிரி.. அந்த சாமி சிலை கணக்கா லட்சணமா.. அம்சமா.. பார்த்தாலே அப்படியே கையெடுத்து கும்பிடத் தோணற அளவுக்கு குணவதியா இருக்கணும்.. கண்டிப்பா என் தம்பி அந்தப் பொண்ணை நல்லா பார்த்துப்பான்.. அந்தப் பொண்ணும் என் தம்பி மேல உயிரையே வச்சுப் பார்த்துக்கணும்.. அப்பா இல்லாம சின்ன வயசுல இருந்தே உழைச்சப் பையன்.. அவனுக்கு உறுதுணையா இருக்கணும்.. அவனுக்கு ஒரு கல்யாணம் காட்சின்னு ஆகிடுச்சுன்னா.. நானும் அவரும் எங்க பொழப்பைப் பார்த்துக்கிட்டு தனிக்குடித்தனம் போயிடுவோம்.. எங்கம்மா.. இவன் தான் எந்தப் பொண்ணை காட்டினாலும் வேண்டாம்.. வேண்டாம்ன்னுட்டு போறானே.. அவனுக்குன்னு பிறந்தவ எங்க இருக்காளோ?” ராணி பட்டியலிட்டு இறுதியில் பெருமூச்சுடன் நிறுத்த, அதைக் கேட்டு சிரித்துக் கொண்டிருந்த இந்திரனை சுந்தரி திரும்பிப் பார்த்தாள்.

நல்ல உயரத்தில், நிறம் குறைவாக இருந்தாலும் கலையாக, அவனது உழைப்பின் உரம் உடலில் தெரிய, கம்பீரமாக, ஆஜானுபாகுவான உடல் வாகுடன் இருந்தவனைப் பார்த்தவள், ராணியைத் திரும்பிப் பார்த்தாள். அவள் பெருமை படக் கூடிய அளவிலான குணம் கொண்டவன் தான்.. என்று எண்ணிக் கொண்டாள். அவனுக்கு வரப் போகும் பெண்ணை, ராணி சொன்னது போல கற்பனை செய்துப் பார்த்தாள்.

ஒரு பெண்ணுக்கு உண்டான அங்க லட்சணங்கள் அனைத்தையும் பொருத்தி கற்பனை செய்துப் பார்த்தவள், தனது முகமே வந்து நிற்கவும், தலையை அவசரமாக குலுக்கிக் கொண்டவள், அவர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

இரவு கவிழவும், “நீ வீட்டுக்கு கிளம்பு.. நாங்க வர லேட் ஆகும்ல.. அவ்வளவு நேரம் இருக்க வேண்டாம்..” ராணி அவளை வீட்டிற்கு கிளப்ப,

“நைட்க்கு என்ன அக்கா செய்யப் போறீங்க?” அவள் கேட்கவும்,

“ஒண்ணும் செய்யல சுந்தரி.. ராத்திரி வந்து தான் ஏதாவது செய்யணும்..” அவளது பதிலில்,

“சரி.. எனக்கு ரெண்டு மாவு பேக்கட் தாங்க.. நான் செஞ்சு வைக்கிறேன்..” என்றவள், சுந்தரி மறுப்பதற்காக வாயைத் திறக்க,

“நான் போய் செய்யறேன்.. நீங்க வாங்க.. காலைல எனக்கும் செஞ்சுத் தரீங்க இல்ல.. அப்போ இப்போ நான் செஞ்சேன்னா நீங்க சாப்பிடனும்..” என்றவள், அவள் கையில் பைசாவைத் திணித்துவிட்டு, மாவு பேக்கட்டை எடுத்துக் கொண்டு வீட்டிற்குச் சென்றாள்.

அமைதியாகவே சுந்தரியின் பேச்சுக்களையும் செய்கைகளையும் பார்த்தவனுக்கு, அவளை நினைத்து சிரிப்பு வந்தது.. ‘இப்படியும் ஒரு பெண்ணா?’ என்று வியந்து போனவன், அவளது செயல்களை ரசிக்கவும் செய்தான்.

வீட்டிற்குள் நுழைந்த சுந்தரிக்கு அங்கு இருந்த மாற்றம் கண்ணில் பட்டவுடன் கண்கள் தெறித்து விடும் போல இருந்தது. அழகாக ஒரு மரத்தடுப்பை வைத்து அவளுக்கு ஒரு அறையைப் போல மாற்றி இருக்க, சுந்தரி அந்த அறைக்குள் சென்று பார்த்தாள். சிறிய இடமாக இருந்தாலும், அந்த இடம் அவளுக்கு வசதியாகவே இருந்தது.. அவளது பெட்டியை வைக்க ஒரு டேபிளும், இன்னொரு பேனும் அந்த அறையில் இருக்க, சுந்தரி துள்ளிக் குதித்தாள்.

“வாவ்.. இந்தர்.. சூப்பர்டா.. எப்படி எல்லாம் எனக்கு சப்ரைஸ் பண்ணி வச்சிருக்கீங்க.. சூப்பர்.. சூப்பர்..” அந்த அறையில் வளம் வந்தவள், அவசரமாக தனது மொபைலை எடுத்து தோசை செய்யவும், அதற்கு தோதாக தொட்டுக் கொள்ளவும் செய்துவிட்டு, அவர்களின் வரவுக்காக காத்திருந்தாள்..

இரவு கடையை அடைத்துவிட்டு வந்த இந்திரனை சுந்தரி ஆவலாகப் பார்க்க, அவனோ சாதாரணமாக நடந்துக் கொண்டான்.. அந்த அறையைப் பார்த்த ராணி, “டேய்.. இது எப்போடா செஞ்ச?” என்று வியந்துக் கேட்க,

“காலைல செய்யச் சொல்லிட்டு வந்தேன்க்கா.. சாயந்திரம் வந்தோமே அதுக்குத் தான்.. அவ ரூம் இல்லாம ரெண்டு நாளா தூங்கவே இல்ல.. ராத்திரி முழுசும் தூங்காம உட்கார்ந்து இருந்தா.. பகல்லையும் தூங்கல.. அது தான்..” என்றவன், உண்ண அமரவும், சுந்தரி அவர்களுக்கு உணவை பரிமாறத் துவங்கினாள்..

பசி காதை அடைக்கும் அளவிற்கு இருக்க, அவசரமாக கை கால் கழுவிக் கொண்டு வந்து உணவை வாயில் வைத்தவன், சுந்தரியை நிமிர்ந்துப் பார்க்க, சுந்தரி கன்னத்தில் கை வைத்துக் கொண்டு அவனைத் தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

வாயின் அருகே கையை எடுத்துச் சென்றும் அவன் உண்ணாமல் இருக்கவும், புருவத்தை உயர்த்தி என்னவென்று கேட்க, “சூப்பரா இருக்கு சுந்தரி.. நிஜமா உனக்கு சமையல் தெரியாதுன்னே யாரும் சொல்ல முடியாது.. சட்னி ரொம்ப நல்லா இருக்கு..” பாராட்டிக் கொண்டே அவன் உண்ண, சுந்தரிக்கு மனம் வானில் றெக்கைக் கட்டிக் கொண்டு பறந்தது..

ராணி அவளுக்கு இடத்தை ஒதுக்கி வைக்க உதவிவிட்டு வீட்டிற்குச் செல்ல, தனது புதிய அறைக்கு வந்தவள், கட்டிலில் விழுந்ததும், உறங்கியே போனாள்..

அதே நேரம்..

ஒரு டிடெக்டிவ் அதிகாரியிடம் பேசிக் கொண்டிருந்த வத்சலா, “அவ அப்படி யாரையும் லவ் பண்ண மாட்டா.. அவ என் பொண்ணு.. இப்படி அவளா ஓடிப் போயிருக்கவும் மாட்டா.. எனக்குத் தெரிஞ்சு யாராவது அவளை கடத்தி இருப்பாங்களோன்னு சந்தேகமா இருக்கு..” பதட்டத்துடன் சொல்ல, அந்த டிடெக்டிவ் அதிகாரி அவரைப் பரிதாபமாகப் பார்த்தார்..

“இல்லங்க.. இப்போ எல்லாம் பொண்ணுங்க எப்படி என்னங்கறது புரியறதே இல்ல.. நிறைய பெத்தவங்க இப்படித் தான் பிள்ளைங்களை நம்பறாங்க.. ஆனா.. கடைசியில அவங்களுகேத் தெரியாம லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டு வந்து நிக்கறாங்க.. அதுக்குத் தான் கேட்டேன்.. சரி மேடம்... நான் கான்பிடன்ஷியலா அவங்களைப் பத்தி கண்டுப் பிடிக்கறேன்.. நீங்க கவலைப்படாதீங்க.” என்றவர் விடைப்பெற்றுச் செல்ல, வத்சலா சுந்தரியின் அறைக்குள் நுழைந்தார்.

அந்த டிடெக்டிவ் சொன்னது போல ஏதாவது இருக்குமோ என்ற சந்தேகம் இப்பொழுது முளைவிட, அவளது அறையில் ஆராயத் துவங்கினார்.. அப்படி எந்த ஒரு துப்பும் இல்லாமல் போகவும், அவளது புகைப்படத்தை கையில் எடுத்தவர், “எங்க போன சுந்தரி? உனக்கு ஏதாவது ஆபத்தா.. இல்ல நீயா போனியான்னே தெரியலையே.. உனக்கு ஏதாவதுன்னா என்னை எல்லாரும் கேள்விக் கேட்பாங்களே.. அது எனக்கு அசிங்கம் தானே.. இப்படி ஒரு அசிங்கத்தை எனக்கு உண்டு பண்ணிட்டியே..” தலையில் அடித்துக் கொண்டு சொன்னவர்,

“இல்ல.. அப்படி உன்னை விட்டுட மாட்டேன்.. நீ எவன் கூடவாவது போயிருந்தா என்னோட ஸ்டேட்ஸ் என்ன ஆகறது? உனக்கு அழகா, மேன்லியா நான் ஒரு பையனைப் பார்த்து வச்சிருக்கேன்.. நீ மட்டும் அதுக்கு எதிரா ஏதாவது செஞ்சிருந்தா.. உன்னை சும்மா விட மாட்டேன்.. உனக்கு நான் பார்த்துக்கிற பையனோட தான் கல்யாணம் நடக்கணும்.. இல்ல.. நீ உயிரோட இருக்கவே தேவை இல்ல..’ மனதினில் சொல்லிக் கொண்டவர், அவளது புகைப்படத்தை வைத்துவிட்டு, தனது அலுவலை கவனிக்கத் துவங்கினார்.

அவரது மனம் முழுவதும் சுந்தரி தவறாக எதுவும் செய்திருக்கக் கூடாதே என்ற சிந்தனையை சுமந்துக் கண்டிருக்க, அது கோபத்தை துளிர்க்கச் செய்துக் கொண்டிருந்தது.. அவளது அக்கவுன்ட்டில் இருந்து ஏதாவது பணம் கையாளப் படுகிறதா என்று அவர் ஆராய, அப்படி எந்த பணமும் எடுத்தது போல இல்லாமல் இருக்கவும், குழம்பிப் போனார்..

ஒருவேளை அவளுக்கு ஏதேனும் ஆபத்தோ? ஒரு பக்கம் அவரது மனம் அடித்துக் கொள்ள, அவளைப் பற்றிய ஏதேனும் துப்பு கிடைக்கிறதா என்று எதிர்ப்பார்த்து காத்திருந்தார்.

மறுநாள் காலையில் எழுந்த இந்திரன், ஆவலாக சுந்தரியின் வீட்டுப்பக்கம் பார்க்க, அங்கு எந்த சத்தமும் இல்லாமல் அமைதியாக இருக்கவும், “நல்லா தூங்கறா போல.. தூங்கட்டும்.. தூங்கட்டும்..” என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன், தனது வேலையை கவனிக்கத் துவங்கினான்.

இதயம் தொடுவான்..💕💕💕

❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣❣
 




  • Like
Reactions: bbk

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top