இயற்கை முறையில் விவசாயம் செலவின்றி விவசாயம்

#1
இயற்கை விவசாயம் செய்வது எப்படி

இயற்கை முறையில் விவசாயம் செலவின்றி விவசாயம் செய்வது. தமிழகத்தில் இந்த பழைய முறை புதிய மாற்றத்தை அளித்துவருவது மகிழ்ச்சியான விஷயம். நானும் ரசாயன உரங்களை பயன்படுத்தாமல் 24 ஏக்கரில் இயற்கை முறையில் விவசாயம் செய்கிறேன்” என்கிறார் மதுரை வாடிப்பட்டி திருவாலவாய நல்லூரைச் சேர்ந்த விவசாயி பார்த்தசாரதி.இயற்கை விவசாய அனுபவங்களை கூறியதாவது:

8 ஏக்கரில் நெல், 2 ஏக்கரில் காய்கறி, 7 ஏக்கரில் தென்னை விவசாயம் நடக்கிறது. இரண்டு கிணறு, 2 போர்வெல் மூலம் தண்ணீர் வசதியும் உள்ளது. 7 ஏக்கரில் 600 தென்னை மரங்கள் உள்ளன. 60 நாட்களுக்கு ஒரு முறை 8,000 தேங்காய்கள் எடுக்கின்றேன். நான்காண்டுகளாக சரியான மழையில்லாததால் தென்னைகளை காப்பாற்றுவதே கஷ்டம். அந்த சூழ்நிலையில் இந்த விளைச்சல் போதும் தான். கடுமையான வறட்சியை தாங்கியதற்கு ஒரே காரணம் மூடாக்கு முறையே. தென்னை மட்டைகளை மரங்களுக்கு கீழே மூடுவதால் வெயிலிலும் நிலம் குளிர்ச்சியாக இருக்கும்.

நிலத்தின் தன்மை மற்றும் வீரியத்தை குறையாமல் பாதுகாக்க மாற்றுப்பயிர் செய்ய வேண்டும். 2 ஏக்கர் நிலங்களாக வேறு வேறு இடங்களை தேர்ந்தெடுத்து புடலை, கத்தரி, தக்காளி, வெண்டைக்காய் சாகுபடி செய்கிறேன். கால்நடை தீவனங்களான கோ4, வேலிமசால் வளர்க்கிறேன். இயற்கை காய்கறிகள் என்பதால் மதுரையில் இயற்கை அங்காடி அமைத்து விற்பனை செய்கிறேன். இயற்கை விவசாயிகளும் இங்கு வந்து காய்கறிகளை கொடுக்கின்றனர்.

என்னுடைய நிலத்தில் 8 ஏக்கரில் ஏடிடி45, நாட்டு நெல் கவுனி, சீரகச் சம்பா நெல் ரகங்களை பயிருட்டுள்ளேன். தற்போதைய விலை நிலவரப்படி ஏடிடி45 ரூ.60 முதல் ரூ.70 வரையும், கவுனி ரூ.150, சீரகசம்பா ரூ.100க்கும் விற்பனை ஆகிறது. வறட்சியை தாங்கும் நெல்ரகங்கள் என்பதால் காய்ச்சலும், பாய்ச்சலுமாக வாரம் ஒருமுறை தண்ணீர் விடுகிறேன்.
ஜீரோ பட்ஜெட் விவசாயத்திற்கு இயற்கை உரம் தான் முக்கியம்.

10 மாடுகள் மூலம் உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை இயற்கையாக தயார் செய்கிறேன். ஜீவாமிர்த கரைசலை வாரம் ஒருமுறை தண்ணீரில் கலந்து தெளிக்கிறேன். இதனால் நெல்லுக்கு தேவையான அனைத்து சத்துகளும் சீராக சென்றடைகிறது. இதனால் களைகள் வளரவே இல்லை, எந்தநோயும் நெற்கதிர்களை தாக்கவில்லை. நெல்லாக விற்பனை செய்வதில்லை. அரிசியாக மாற்றி மொத்தமாகவும், சில்லரையாகவும் கொடுக்கின்றேன்.

நம்பிக்கையுடன் சரியான முறையில் கையாண்டால் விளைச்சல் பாதிக்காது. ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்து வாங்கத் தேவையும் இல்லை. அதற்கான செலவும் இல்லை. இதற்கு விவசாயிகள் செய்யக்கூடிய ஒரே வேலை, மாடுகள் வளர்ப்பது தான். ரசாயன உரத்தில் இருந்து விடுபட நினைத்தால் நிலத்தை ஆறு முறைக்கு குறையாமல் நன்றாக உழ வேண்டும். இயற்கை குப்பைகள் கலந்த புதிய மண்ணைக் கலந்து உழுத பிறகு 15 நாட்களுக்கு ஆறவிட வேண்டும். ஒரு விதை, இரு விதை, காய்கறிகளின் விதைகளை பயிரிட்டு பூக்கும் தருணத்தில் அவற்றை மடக்கி உழ வேண்டும். இதனால் மண்ணுக்கு தேவையான இயற்கை சத்துக்கள் முழுமையாக கிடைக்கும். ரசாயன உரத்தின் வீரியம் குறைந்துவிடும்.
இரு ஆண்டுகளில் நிலத்தின் தன்மை மாறி மீண்டும் பழைய மகசூல் இயற்கை முறையில் கிடைக்கும் என்கிறார் பார்த்தசாரதி.

படித்ததைப் பகிர்ந்தேன்
 
Top