• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

இராமானுஜர் 1000---பகுதி-9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
இராமானுஜர் பகுதி-9



பெரியநம்பியும், திருக்கோட்டியூர் நம்பியும் மட்டுமல்ல, இன்னும் சில சீடர்களும் ஆளவந்தாரின் மறைவுக்கு பிறகு தற்கொலை செய்து விடுவதென முடிவெடுத்திருந்தனர். சில சீடர்கள் அவரிடம், தாங்கள் மறைந்த பிறகு எங்களை வழிநடத்திச் செல்ல யார் இருக்கிறார்கள்? எங்களுக்கு உபதேசம் செய்பவர் யார்? கலங்கரைவிளக்கை காணாத கப்பல் போல இவ்வுலகக் கடலில் நாங்கள் தத்தளிக்க இயலாதே, என புலம்பினர். ஆளவந்தார் அவர்களுக்கு அறிவுரை கூறினார்.


சீடர்களே! யாரும் மனம் உடையக்கூடாது. நம் ரங்கநாதன் எல்லாரையும் காப்பாற்றுவான். அவனுக்கு நீங்கள் தினமும் தொண்டு செய்யுங்கள். திருப்பதிக்கும், காஞ்சிபுரத்துக்கும் அவ்வப்போது சென்று வாருங்கள். ஸ்ரீரங்கம் அவனது சொந்தவீடு என்றால், திருப்பதி அவனது மலர்ப்பாதங்களில் நம்மைக் கொண்டு சேர்க்கும் சிறந்த ஸ்லோகத்திற்கு ஈடானது. காஞ்சிபுரம் நமக்கு விடுதலையளிக்கும் மந்திரமாகும், என்றார். திருவரங்க பெருமாளரையர் வருத்தத்துடன் அவர் அருகில் சென்றார்.


சுவாமி! தங்கள் திருமேனியை அடக்கம் செய்ய வேண்டுமா, தகனம் செய்ய வேண்டுமா? என்றார். இதற்கு ஆளவந்தார் எந்தப்பதிலும் சொல்லவில்லை. மறுநாள் ரங்கநாதர் திருவீதி உலா வந்தார். ஆளவந்தாரின் சீடர்கள் ரங்கநாதனை தரிசிக்க சென்று விட்டனர். அப்போது ஒரு சீடருக்கு தெய்வ அருள் வந்தது. பெரியநம்பியும், திருக்கோஷ்டியூர் நம்பியும் எக்காரணம் கொண்டும் ஆளவந்தாருக்கு பின் தற்கொலை செய்து கொள்ளக்கூடாது, என அருள்வாக்கு தந்தார் அவர்.


இவ்விஷயம் ஆளவந்தாரின் காதுகளை எட்டியது. அவர் தன் சீடர்களிடம், தற்கொலை கொடிய பாவமல்லவா? இது இறைவனுக்கே பிடிக்கவில்லை. அதனால் தான் அவன் திருவீதி உலா வரும் போது, சீடன் மூலமாக பேசியிருக்கிறான். உங்கள் யார் வாயிலும் இனி தற்கொலை என்ற சொல்லே வரக்கூடாது. உங்கள் அகங்காரம் ஒழிய வேண்டும். பரமனின் அடியவர்களுக்கு தொண்டாற்ற வேண்டும். எம்பெருமான் ரங்கநாதனின் திருவடிகளில் மலர் சூட்டவேண்டும், என்றெல்லாம் அறிவுரை சொன்னார்.



சிலகாலம் இப்படியே நீடித்தது. உடல்நிலை சற்றே தேறிய நிலையில் ஒருநாள் இறைவனின் திருவீதி உலாவையும் ஆளவந்தார் பார்த்தார். தன் சீடர்களை எல்லாம் திருவரங்கப் பெருமாள் அரையரை கவனித்துக் கொள்ளும்படிச் செய்தார். இவர் சுகமில்லாமல் இருக்கும் செய்தி காஞ்சிபுரத்திலுள்ள இரண்டு அந்தணர்களுக்கு தெரியவந்தது. அவர்கள் ஆளவந்தாரைப் பார்க்க வந்தனர். காஞ்சிபுரத்திலிருந்து இருவர் வந்திருக்கிறார்கள் எனத்தெரிந்தவுடனேயே ஆளவந்தார் மகிழ்ச்சிக் கடலில் மூழ்கினார்.


இராமானுஜரைப் பற்றித் தெரிந்து கொள்ளும் ஆவல் அவர் முகத்தையே பிரகாசமாக்கியது. அவர்களை வரவேற்ற அவர், ராமானுஜர் பற்றி விசாரித்தார். ராமானுஜர் யாதவப்பிரகாசரின் பள்ளியிலிருந்து விலகியதும், பின்னர் திருக்கச்சிநம்பியை குருவாக ஏற்க கேட்டதும், சாலக்கிணற்றில் இருந்து பெருமாளின் அபிஷேகத்திற்கு தண்ணீர் எடுத்து வருவதும் அறிந்து மகிழ்ச்சியடைந்தார். தன் சீடர் பெரியநம்பியை அழைத்தார். நம்பி! நீ உடனே காஞ்சிபுரம் போ. ராமானுஜனை அழைத்துக் கொண்டு விரைவில் வா,என்றார். குருவின் கட்டளைக்கு தலைவணங்கி பெரியநம்பி காஞ்சிபுரத்துக்கு புறப்பட்டார்.



ஆனால், என்ன செய்வது? அவர் திரும்புவதற்குள் ஆளவந்தாரின் உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டது. இம்முறை பாதிப்பு மிகக்கடுமையாக இருந்தது. ஆனாலும், மனம் கலங்காத அவர், ரங்கநாதனை தரிசிக்க தினமும் கோயிலுக்கு சென்றார். ஒருநாள் கோயிலுக்கு சென்று திரும்பியதும் சீடர்களை அழைத்தார். அன்புச் சீடர்களே! நான் இதுநாள் வரையில் உங்களிடம் தவறாக நடந்திருந்தால் என்னை மன்னிக்க வேண்டும், என்றார். சீடர்கள் உருகிப் போனார்கள். தெய்வம் தவறு செய்யுமென்றால், தாங்களும் செய்திருப்பீர்கள், என்றபடியே கண்ணீர் உகுத்தனர்.



திருவரங்கப்பெருமாள் அரையர் அழைக்கப்பட்டார். எல்லாரும் ரங்கநாதனுக்கு சேவை செய்யுங்கள். உங்கள் குருவிடம் பக்தி கொள்ளுங்கள். இங்கு வரும் விருந்தினர்களுக்கு தொண்டு செய்யுங்கள், என்றார். பின்பு பத்மாசனத்தில் அமர்ந்தார். தன் மனத்தை அடக்கி பரமனிடம் நினைவைக் கொண்டு சென்றார். அவரது கபாலம் வழியே உயிரை செல்லவிட்டார். அவரைச் சுற்றிநின்று பாடிக் கொண்டிருந்த சீடர்கள் பாட்டை நிறுத்தினர்.



திருக்கோஷ்டியூர் நம்பியும், இன்னும் சில சீடர்களும் தங்கள் உயிருக்குயிரான குரு பரமனடி சேர்ந்தது கண்டு, மயங்கி விழுந்து விட்டனர். சிலர் ஆளவந்தார் துறவறத்துக்கு வரும் முன்பு அவரது மகனாக இருந்த பிள்ளைக்கரசு நம்பியை தேடிச் சென்றனர். அவரைக் கொண்டு அந்திமக்கிரியைகள் செய்ய முடிவெடுத்தனர். கொள்ளிடக்கரையில் அவரது அந்திமக்கிரியை நடந்தது. இதற்கிடையே, பெரியநம்பி காஞ்சிபுரத்தை நோக்கி நடந்து கொண்டிருந்தார்.



ஸ்ரீரங்கத்தில் இருந்து காஞ்சிபுரம் வெகு தூரத்தில் அல்லவா உள்ளது? நான்கு நாட்கள் நடந்து காஞ்சிபுரத்தை அடைந்த நம்பி, முதலில் வரதராஜப் பெருமாளைத் தரிசித்தார். பின்னர் திருக்கச்சிநம்பியை தேடிச் சென்று அவரைப் பணிந்தார். அவரது ஆஸ்ரமத்தில் இரவில் தங்கினார். மறுநாள் காலையில், ராமானுஜரைப் பார்க்க புறப்பட்டார்.



திருக்கச்சிநம்பி கோயிலுக்கு போய் விட்டார். சாலக்கிணற்றில் இருந்து ராமானுஜர் பெருமானின் அபிஷேகத்திற்கு தண்ணீர் எடுத்து வந்து கொண்டிருந்தார். அவர் தூரத்தில் வருவதைப் பார்த்த பெரியநம்பி, அயர்ந்து நின்று விட்டார். அவரைக் குறித்து சில சுலோகங்களைப் பாடினார். இதற்குள் அருகில் வந்து விட்ட ராமானுஜர், அந்த ஸ்லோகங்களைக் கவனித்துக் கேட்டார்.

மேலும் ராமானுஜர் தொடரும்
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top