ஈசனின் தாமிர சபை

anitha1984

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
1562565258544.png


தாமிரசபை அமைந்த கதை வெகு சுவாரஸ்யமானது.

சிங்கவர்மன் என்னும் மன்னன் சிதம்பரத்தில் ஸ்தாபிதம் செய்ய ஒரு நடராஜர் மூர்த்தத்தை வடிக்க எண்ணி சோழ நாட்டு சிற்பி நமசிவாயமுத்து ஸ்தபதியை கூப்பிட்டு அனுப்பினார். அப்போது என்ன நடந்தது?

( சிங்கவர்மன் அரசவையில் தனது அமைச்சர்களுடன் அமர்ந்திருக்கின்றான் அப்போது அரண்மனை காவலன் வந்து கூறுகின்றான்.)

காவலன் : மன்னர் மன்னா வணக்கம், தங்களைக் காண நமசிவாயமுத்து ஸ்தபதி வந்திருக்கின்றார்.
அரசன்: : அப்படியா? மிக்க நன்று, அவரை உரிய மரியாதையுடன் அவரை உள்ளே அழைத்துவா.

(ஸ்தபதி உள்ளே வந்து மன்னனை தண்டனிட்டு நிற்கின்றார்.)

அரசன்: : வாருங்கள் ஸ்தபதியாரே, தங்களை அழைத்ததற்கு காரணம், ஐந்தொழில் புரியும் எம் ஐயனுக்கு, முக்கண் முதல்வருக்கு, ஆனந்த கூத்தாடும் நடராசருக்கு, பொன்னார் மேனியருக்கு ஒரு அற்புத சிலை வடிக்க வேண்டும், ஆகம விதிப்படி வடிப்பீர்களாக.

ஸ்தபதி : அப்படியே ஆகட்டும் மன்னா.

அரசன் : அமைச்சரே! சிற்பி கேட்கின்ற அளவு பொன்னும் பொருளும் என் பொக்கிஷத்திலிருந்து அளிக்கவும், ஐயனின் சிலை அற்புதமாக அமைய வேண்டும்.

அமைச்சர்: அதில் ஒன்றும் ஐயம் வேண்டாம் அரசே. அடியேனே முன் நின்று சிற்றம்பலவாணருக்கு அருமையான மூர்த்தம் அமைய வேண்டிய உதவிகளை செய்கின்றேன்.

(சிற்பி தமது சீடர்களுடன் வேயுறு தோளி பங்கரின் சிலை வார்க்கும் பணியை ஆரம்பித்தார். (ஒரிரு மாதம் கழித்து )

அமைச்சர்: அரசே! ஒரு மிக நல்ல செய்தி!

அரசன்: என்ன எம் சபாநாயகர் மூர்த்தம் தயாராகி விட்டதா அமைச்சரே ?

அமைச்சர்: ஆம் ஐயனே, அது தான் அந்த ஆனந்த செய்தி.

அரசன்: வாருங்கள் இப்போதே சென்று சிவகாமி மணாளரின் திருவழகைக் கண்டு களிக்கலாம்.

(அரசனும், அமைச்சரும் மற்ற பிரதானிகளும் சிற்பியின் இல்லத்திற்கு செல்கின்றனர்.)

அரசன்: சிற்பியே! எங்கே என் ஐயன், அம்பலத்தரசரின் அருள் வடிவம் எவ்வாறு வார்த்திருக்கின்றீர்கள். அவரைக் காண இத்தனை நாள் தவம் செய்து கொண்டிருக்கின்றேன். உடனே அவரது எனக்கு தரிசனம் செய்து வையுங்கள்.

சிற்பி: வாருங்கள் அரசே, பூசையறை செல்வோம் அங்கு தான் அம்மையப்பரின் அழகிய திருமூர்த்தத்தை அமைத்திருக்கின்றேன்.

(பொன்னம்பலவரின் முதல் சிலையைக் கண்ட மன்னன் முகத்தில் திருப்தி இல்லை.)

அமைச்சர்: அரசே! என்ன தங்கள் முகம் சூரியனைக் கண்ட தாமரை போல மலரவில்லையே, ஆர்த்த பிறவி துயர் கெட ஆடும் ஐயனின் மூர்த்தம் தங்களுக்கு திருப்தியளிக்கவில்லையா? தங்கள் வதனம் வாடியுள்ளதே.

அரசன்: ஆம் அமைச்சரே! எம் ஐயன் தேவாதி தேவன், சகல புவனத்தையும், படைத்தும், காத்தும், அழித்தும், அருளியும், மறைத்தும் விளையாடும் முதல்வர், திருக்கயிலை மலையில் ஆனந்த தாண்டவம் ஆடுபவர். அவருக்கு அமைந்த மூர்த்தம் செப்பு சிலையாக அமைந்துள்ளதே.

அமைச்சர்: ஐம்பொன் சிலை என்றாலும் அதிகம் செம்பு கலந்துள்ளதால் தங்களுக்கு செப்பு சிலையாக தோன்றுகின்றது அரசே.

அரசர்: பொன்னம்பலத்தில் நிருத்தியம் செய்யும் என் பொன்னார் மேனியருக்கு பொன்னால் மூர்த்தம் அமைந்தால் தான் பொருத்தமாக இருக்கும் உயர்ந்த சொக்கத் தங்கத்தில் அல்லவா அமைய வேண்டும் புது சிலை செய்ய உத்தரவிடுகின்றேன். அது பசும்பொன் சிலையாக அமையட்டும்.

(சிற்பி பொன்னால் சிற்றம்பலவாணருக்கு இரண்டாவது சிலை வடிக்க ஆரம்பித்தார். சிலைப்பணிகளும் முடிந்தன. ஆனால்…)

சிற்பி: அமைச்சரே! என்னவென்று தெரியவில்லை. இவ்வளவு பொன் போட்டும் ஐயனின் சிலை மட்டும் செப்பு சிலையாகவே வந்திருக்கின்றது. இது என்ன என்று புரியவில்லை.

அமைச்சர்: அது எப்படி சாத்தியம், தாங்கள் பொன் அனைத்தையும் நடன சிகாமணி சிலை வடிக்கத்தானே பயன் படுத்தினீர்கள்?

சிற்பி: அமைச்சரே அதில் ஒன்றும் ஐயம் வேண்டாம் அமைச்சரே.

அமைச்சர்: நான் அரசரிடம் சென்று அறிவிக்கின்றேன், ஆனால் இராஜ தண்டனைக்கு தாங்கள் தயாராக இருங்கள்.

( சிற்பி மனப்பூர்வமாக அந்த ஆண்டவன் தாள்களையே பற்றி அவரிடம் வேண்டுகின்றார். முக்கண் முதல்வரே தாங்கள் உண்மையை அறிவீர்கள் அரசனுக்கு தாங்கள்தான் உண்மையை உணர்த்த வேண்டும்.)

இரண்டாவது சிலையை வந்து பார்த்த மன்னன் அச்சிலையும் செப்புச்சிலையாகவே இருந்ததையும் கண்டு கோபம் கொண்டு, சிற்பியை சிறையிலிட உத்தரவிட்டு சென்று விடுகின்றார். இரவில் மன்னன் கனவில் வார் சடை அண்ணல் தோன்றி “நான் உன் கண்ணுக்கு மட்டுமே தங்கமாக தெரிவேன். மற்றவர்கள் கண்ணுக்கு தாமிர மாகவே தெரிவேன். இதுவே என் விருப்பம்!” எனக்கூறி மறைந்தார்.)

அரசன்: ஐயனே என்ன மடமை. தங்களின் திருவுள்ளம் இது என்ற உண்மை தெரியாமல் சிற்பியை சிறையிலிட்டுவிட்டேனே. ஆண்டவா! என்னை மன்னித்து விடுங்கள் காலை எழுந்ததும் முதலில் அவரை விடுதலை செய்கின்றேன்.

காலை எழுந்தவுடன் அமைச்சரை கூப்பிட்டனுப்பி சிற்பியை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

அரசர்: சிற்பியே அடியேன் தான் தவறு செய்து விட்டேன் , இவ்வாறு அமைய வேண்டும் என்பது அந்த ஆண்டவன் திருவுள்ளம். தாங்கள் செய்த அற்புத பணிக்கு இதோ பரிசு பொக்கிஷத்திலிருந்து எவ்வளவு வேண்டுமோ எடுத்துக் கொள்ளுங்கள். இதனுடன் தாங்கள் வடித்த முதல் சிலையையும் தாங்களே எடுத்து செல்லுங்கள்.

இவ்வாறு நம் ஆர்த்த பிறவி துயர் கெட கூத்தாடும் நடராஜப் பெருமானுக்காக வடிக்கப்பெற்ற இரண்டாவது சிலை சிதம்பரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. முதல் சிலை என்னவாயிற்று என்று அறிய ஆவலாக உள்ளதே. நமது இந்தப் பதிவின் கரு அதுதானே அடுத்து அதைக் காண்போம்.

முதலில் செய்த சிலையை மன்னன் இறைவனின் கட்டளைப்படி சிற்பி ஒருவனிடம் கொடுத்துவிட்டான். அவனது கனவில் தோன்றிய சிவன், “இந்தச் சிலையை சுமந்துகொண்டு தெற்கு நோக்கிச் செல்,” எனக்கூறி மறைந்தார். அவரும் அச்சிலையை அவர் எழுந்தருளப் பண்ணிக் கொண்டு தென் தமிழ் நாட்டுக்கு சென்றார்.

தாமிரபரணியின் வடகரையில் ராஜவல்லிபுரம் கிராமம் உள்ளது. இவ்வூரிலேயே மன்னர் ராமபாண்டியனின் அரண்மனை இருந்தது. இவர் தினமும் திருநெல்வேலியிலுள்ள காந்திமதி அம்பாள் உடனுறை நெல்லையப்பர் கோயிலுக்கு சென்று வழிபட்ட பிறகே சாப்பிடுவதை வழக்கமாக கொண்டிருந்தார். .

ஒருமுறை தாமிரபரணியில் பெரும் வெள்ளம் வந்துவிட்டதால் அவரால் ஆற்றைக் கடக்க அம்மையப்பரை தரிசிக்க முடியவில்லை. அன்று முழுவதும் ராமபாண்டியன் பட்டினியாக இருந்தார். அன்று இரவில் மன்னர் கனவில் நெல்லையப்பர் தோன்றி, “இனிமேல் உன் மாளிகையின் அருகிலேயே நான் கோயில் கொள்ள முடிவு செய்துள்ளேன். சிதம்பரத்திலிருந்து ஒருவன் எனது நடனமாடும் வடிவுடைய விக்ரகத்துடன் வருவான். அந்த விக்ரகத்தை உன் மாளிகையின் அருகில் பிரதிஷ்டை செய்து கோயில் கட்டு. கோயில் கட்டுமிடத்தின் அருகிலுள்ள குழிக்குள் எறும்புகள் ஊர்ந்துசெல்லும். அந்த இடத்தில் லிங்கம் ஒன்றையும் பிரதிஷ்டை செய்துவிடு,” என கூறி மறைந்தார்.

இவ்வாறு இறைவன் ஆணையிட்ட அதே சமயம் , சோழ நாட்டு சிற்பியும் முதலில் வடித்த நடராஜரின் விக்ரத்தை சுமந்து கொண்டு இறைவனின் விருப்பப்படி தென் திசை நோக்கி வந்தார். வழியில் ஓரிடத்தில் சிலை மிகவும் கனத்தது. அதற்கு மேல் அவரால் சிலையை சுமக்க முடியவில்லை. எனவே அவர் சிலையை அந்த செப்பறை என்ற இடத்தில் வைத்துவிட்டு, களைப்பினால் தூங்கி விட்டார். கண்விழித்து பார்த்தபோது சிலையை காணவில்லை. அவர் பதைபதைத்து மன்னனிடம் முறையிட்டார்.

ராமபாண்டியன் அதிர்ச்சி யடைந்து சிலையை தேடிச்சென்றார். வேணுவனத்தில் ஓரிடத்தில் சலங்கை ஒலியும், யாரோ நடனமாடும் சப்தமும் கேட்டது மேலும் நல்ல அறிகுறிகளும் தென்பட்டன. அந்த இடத்தில் மன்னர் சென்று பார்த்தபோது நடராஜரின் சிலை இருந்ததைக் கண்டார். ஐயன் கனவில் கூறியபடி அதன் பக்கத்திலேயே ஒரு குழியில் எறும்புகள் ஊர்ந்து சென்று மறைந்து கொண்டிருந்தன.

ராமபாண்டியன் மகிழ்வடைந்து லிங்கம் ஒன்றை எறும்புகள் ஊர்ந்த குழியின் மீது பிரதிஷ்டை செய்தார். நடராஜருக்கும் தனி சன்னதி அமைத்தார். அவர் கட்டிய கோயில் வெள்ளத்தால் அழிந்துவிட்டது. அதன்பிறகு ஆரை அழகப்ப முதலியார் என்பவர் இப்போதுள்ள கோயிலைக் கட்டினார். தில்லையில் உள்ளது போலவே இங்கும் நடராஜருக்கு சபை அமைந்துள்ளது ஆனால் இங்கு செப்புத்தகடு வேயப்பட்டுள்ளது. செப்பறை என்றாலும் தாமிர சபை என்றுதானே பொருள். இவ்வாறு இறைவனின் திருவுள்ளப்படி முதல் விக்ரகம் செப்பறையில் வந்து அமர்ந்தது


1562565447100.png

பாலுக்கு பாலகன் வேண்டி அழுதிட பாற்க் கடல்ஈந்த் பிரான்
மாலுக்கு சக்கரம் அன்றருள் செய்தவன் மன்னியத் தில்லை தன்னுள்
ஆலிக்கும் அந்தணர் வாழ்கின்ற திருச்சிற்றம்பலமே இடமாக
பாலித்து நட்டம் பயிலவல்லா னுக்கே பல்லாண்டு கூறுதுமே

திருச்சிற்றம்பலம்
 

srinavee

Author
Author
SM Exclusive Author
#5
தென்னாடுடைய சிவனே போற்றி:love::love:திருசிற்றம்பலம்:love::love:
 
Top