• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

உத்தரகாண்டம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 18


இந்த வருசம் மழைக்காலம் என்று பெய்யவேயில்லை. அவர்கள் கிணறு, கைவிட்டு வாளியில் எடுக்குமளவுக்கு நீர் ஏறும். உள்வரையோடு நிற்கிறது, நீர். மார்கழிக்குளிர் என்று குளிரும் இல்லை. பக்கத்தில் காடாய்க்கிடந்த இடங்களைத் துப்புரவு செய்ய ரங்கனுடன் இரண்டு ஆட்கள் வருகின்றனர். நாரத்தை வேம்பு, கொவ்வைக் கொடிகள், நொச்சி, ஆடாதொடை, கீழாநெல்லி என்று மருந்து தேடுபவர்கள் இங்கே வருவார்கள்.

எல்லாம் இப்போது குவியல்களாகக் கழிக்கப்படுகின்றன. ‘பாம்பு...!’

தப்பி ஓட முயன்ற உயிர்களைத் தடியால் அடித்துக் கொல்கிறார்கள். ஒரு பன்றி அங்கே குட்டிக் குடும்பம் வைத்திருக்கிறது போலும்? அவைகளும் குடுகுடென்று எதிரே அரையும் குறையுமாக நிற்கும் சுவர்களுக்கிடையே ஒடுகின்றன. அந்த அறை சுவர் கட்டுமானங்களை ஒட்டி, பழைய கீற்று, சாக்கு, சிமந்துப்பலகை என்று மறைப்பு களுடன் ஒரு இடம் பெயர்ந்த கும்பல் குடியேறி இருக்கிறது.

“நாங்கள் எல்லாருமே, கிராமங்களை விட்டு, வியாபாரம் படிப்புன்னு, இடம் பெயர்ந்தவங்கதான்” என்று அய்யா சொன்ன குரல் ஒலிக்கிறது. ஆனால் இப்படிப் பிழைக்க வழியில்லாமலா வந்தார்கள்? இப்படிக் குஞ்சும் குழந்தையுமாகவா வந்தார்கள்?

சைக்கிளில், சுருக்கு வளையக்கம்பி, கயிற்றுடன் இரண்டு பேர் அங்கே போகிறார்கள்.

சற்றைக்கெல்லாம் பன்றியின் மூர்க்கமான பிளிறல் அந்தப் பக்கம் மெங்கும் எதிரொலிக்கிறது.

தாயம்மாளுக்கு வயிற்றை சங்கடம் செய்கிறது.

“கிறிஸ்துமஸ் வருதில்ல?..” என்று சொல்லிக் கொண்டு ரங்கசாமி பீடிக்காரலை உமிழ்கிறான்.

“கிழக்கால பெரிய ஜபக்கூடம் கட்டுறாங்க.”

“புதிசில்ல. அது கூரைக் கொட்டாயா இருந்திச்சி; அத்தப் பெரிசா கட்டுறாங்க. வெளிநாட்டுலேந்து பணம் கொட்டுதையா...” இவள் பார்த்துக் கொண்டிருக்கையிலேயே இரண்டு கார்கள் வந்து நிற்கின்றன. முதலில் வந்து நிற்கும் காரின் கதவைத் திறந்து கெண்டு ஒரு பெண் இறங்குகிறாள். நல்ல வெளுப்பாக, உயரமாக, கிராப்தலையும், நீண்ட தொங்கட்டானும், மூக்குக்கண்ணாடியுமாக இருக்கிறாள். சல்வார் கமிஸ், பாதம் துக்கிய செருப்பு... பின்னால் பருமனாக... ஓ, சந்திரி... கரையில்லாத இளநீலப் பட்டுச் சேலை, கரேலென்று சாயம் போட்டமுடி. அச்சாக அப்பனே போல், ஒரு பையன் கருப்புக் கண்ணாடியைக் கழற்றிக் கையில் வைத்துக் கொண்டு, அந்த வீட்டை மேலும் கீழுமாகப் பார்க்கிறான். இவன் ரஞ்சிதத்தின் பையனா? ரங்கன் பரபரவென்று வந்து கதவை நன்றாகத் திறந்து “வாங்க... வாங்கம்மா, வாங்க...! முன்னியே ஒரு போன் போட்டு சொல்லிருக்கலாமில்ல?” என்று மாடிக்கு ஏறிச் செல்கிறான்.

இவள் மூச்சடைக்க நிற்கையில், மின்னும் காசாய பட்டு ஜிப்பாவுடன், அதே பட்டு வேட்டியும், வெளியில் துலங்கும் உருத்திராட்ச தங்க மணிகளும் மார்பில் புரள, பிடரியில் விழும் எள்ளும் அரிசியுமான முடி தாடியுடன் அவன்... பராங்குசம் இறங்குகிறான். நல்ல கருப்பில், சேலை உடுத்திய பருமனான ஒரு பெண், சிவந்த கழுத்தில் மெல்லிய சங்கிலியில் கோத்த சிலுவை, வயிரத் தோடுகள், புதையப்புதைய வெள்ளை மஸ்லின் ரவிக்கை...

“அம்மா எப்படி இருக்கிற? ரெண்டு மாசம் முன்ன நீ வந்திருந்தியாம், உடனே போயிட்டியாம். மஞ்சு சொல்லிச்சி. எனக்கும் உன்னை ஒரு நடை வந்து பார்க்கணும்னதா, மகளிரணிப் பொறுப்பு வந்த பிறகு நிக்க நேரமில்ல. எப்படியோ பொழுது ஒடிப் போயிடுது. எனக்கும்” சந்திரி முடிக்கு முன் “போதும்” என்று சொல்வது போல் கையைக் காட்டுகிறாள்.

அவள் மகன் வீட்டு பந்தம் நினைக்கவே கசப்புப் பந்தாகத்திரளுகிறது. இவள் அங்கு சென்று வந்தபின் மகன் மாரடைப்பு வந்து ஆஸ்பத்திரியில் படுத்திருந்ததாகச் செய்தி வந்தது. குழந்தைவேலுவே வந்து சொன்னான். இவள் அசையவில்லை.

“அம்மா, எப்படி இருக்கிறீங்க..?”

பராங்குசமா, அம்மா என்று கேட்டு, கை குவிக்கிறான்? இது கனவா நினைவா? ஒருகால் தேர்தலுக்கு நிற்கிறானா? “தாயி, மாடிய வந்து பெருக்கிட்டுப்போ! துடப்பம் எடுத்திட்டு வா? இங்க ஏன் நிக்கிற, போ!’ என்று பேசிய பராங்குசமா? காசாயத்தின் மர்மம் என்ன ? அந்தக் காலத்தில் நாடகங்களில் ஆசாடபூதி வேசம் கட்டுவார்கள் அப்படியா?...

இவள் திகைத்து நிற்கையில் அந்த அரும்பு மீசை இவள் காலைத் தொட்டுக் கும்பிடுகிறது. அந்த லோலக்கு சுந்தரியும் அதைச் செய்கிறது.

“என்னம்மா, திகச்சிப் போயிட்டீங்க? இவ என் மக அர்ஷிதா. யு.எஸ்.ல மெடிசின் முடிச்சிட்டு வந்திருக்கா. இவன் தமிழ்ச் செல்வன், ரஞ்சிதத்தின் இரண்டாவது பையன். என்ஜினிரிங் முடிச்சிட்டு, நம்ம கம்பெனிலியே இருக்கிறான். கூடப்படிச்ச சுதாவயே கட்டிக்கிட்டான்...”

“ஏம்மா வாசல் லியே பேசுறிங்க ? உள்ள வாங்க. எல்லாம் உள்ளே வாங்க... அம்மா, வாங்க!” மேலிருந்து விரிசமக்காளம் தட்டிப் போடப்பட்டிருக்கிறது.

“உக்காருங்க. முன்னமே ஒரு ஃபோன் போட்டு...” என்று ரங்கன் சொல்லும் போதே, இன்னொரு மஸ்லின் ஜுப்பா, உருத்திராட்சம் வருகிறது. பள்ளிக் கூடத்துப் பத்மதாசன்.

“அடாடா... வாங்க, வாங்க ஸார், வணக்கம்...”

“நமஸ்காரம். சாமிஜிய நம்ம ஸ்கூல்ல ஒரு நாள் சிறப்புச் சொற்பொழிவுக்குக் கூப்பிடணும்னு அப்பாயின்ட்மெண்ட் நேரம் கேக்க நேத்துக்கூட ஃபோன் போட்டேன்...”

“...நா இப்பல்லாம் குருகுலம் சென்டரில இருக்கிற தில்ல - சாமிஜி ஆசிரமத்திலதான் என்ன இருக்கும்படி உத்தரவு. இன்னைக்குக்கூட அவங்க அனுமதியில்தான் வந்திருக்கிறேன். எல்லாம் இவங்கதான் நிர்வாகம். டாக்டர் எமிலி, லட்ச லட்சமா புரளும் டாக்டர் தொழில வுட்டுட்டு, இங்க கல்விச் சேவைக்காக வந்து வாழ்க்கையையே கொடுத்திருக்காங்க. இதும் சாமிஜியின் ஆணைதான்.”

அந்தப் பூசணி முகம் கை குவிக்கிறது.

இதற்குள் ஓராள் ஆப்பிள் ஆரஞ்சு மலை வாழை அடங்கிய தட்டு, பெப்சி, கோலா, பான வகைகள் எல்லாம் கொண்டு வந்து வைக்கிறான்.

அவள் சுவரில் இருக்கும் அந்தப் படங்களை நிமிர்ந்து பார்த்த வண்ணம் சுவரோடு சாய்ந்து நிற்கிறாள். கண்களில் நீர் மல்குகிறது. ராஜலட்சுமி சொன்ன செய்திகள் முட்டுகின்றன.

இந்தப் பத்மதாசன்... ஜயந்தி டீச்சர் சொன்ன செய்திகள், சங்கரி... சங்கரி, அடேய் பொறுக்கிகளா, இந்தப் புனிதமான இடத்தை மாசு படுத்தவந்திருக்கீறீர்களா? எந்திருங்கடா? என்று கத்த வேண்டுபோல் இருக்கிறது. ஆனால், அவள் யார்? இந்த வீட்டின் உண்மையான உரிமையாளர் யார்? எங்கே! ராதாம்மாவின் பையன், விக்ரம், சுருண்ட முடியுடன் துருதுருவென்று இருக்கும். ராம்துன் பாடினால், அழகாகத் தாளம் போடும்...

ஏக் தோ... ஏக் தோ...

காந்தியடிகளின் ஒரே பிரார்த்தனைக் கூட்டம்தான் அவள் பார்த்தாள். அப்போது, பையன் பிறக்கவில்லை. ராதாம்மா பாவாடை சட்டை போட்டுக் கொண்ட வயசு. காந்திஜி இந்தி பிரசார சபைக்கு வந்திருந்தார். அதுதான் அவர் கடைசியாகச் சென்னைக்கு வந்த நேரம். அம்மா அய்யா எல்லோரும் பிரார்த்தனைக் கூட்டத்துக்கு முன்பு போய்விட்டார்கள். சந்திரி, பஞ்சமி, ராதாம்மா, எல்லோரையும் சுசீலா தேவி, மீனாட்சி என்று குருகுலத்தில் சேர்ந்த குழந்தைகளுடன் முன்பே கூட்டிக் கொண்டு போய் விட்டார்கள். குருகுலத்தில் அந்தக் காலத்தில் டயர் போட்ட பெரிய ரெட்டை மாட்டு வண்டி ஒன்று உண்டு. அதை அவள் புருசன்தான் ஒட்டுவான். ஆனால் அன்று அந்த வண்டியைச் சுப்பய்யா ஒட்டிக் கொண்டு போனதாக நினைவு. இவளும் இவள் புருசனும் சாயங்காலமாகச் சென்றார்கள்.

என்ன கூட்டம் ?

ஒரே தலைகள். சேவாதள தொண்டர்கள். கூட்டத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தார்கள். இளமஞ்சள் கதர்ச் சேலையும் ரவிக்கையும் அணிந்த பெண் தொண்டர்கள். அம்மாவும் இந்தக் கூட்டத்தில் தான் இருப்பாா்... என்று நினைத்துக் கொண்டு தெரிந்த முகத்தைத் துழாவினாள். ஆங்காங்கு மரங்கள் இருந்தன. அந்த மரங்களிலெல்லாம் மக்கள்... நடுவே உயரமாக ஒரு மேடை போடப்பட்டிருந்தது, ஏணி போன்ற படிகளில் காந்தி ஏறியது தெரிந்தது. மேடையில் பெண்கள், ஆண்கள் இருந்தார்கள். மாயமந்திரம் போல் இருக்கிறது.

ஏக் தோ... ஏக் தோ... என்று அவர் சொன்ன மந்திரக் குரலில் கூட்டம் அப்படியே கட்டுப்பட்டுத் தாளம் போட்டது. அந்த சுருதி, தாளம், எல்லாம் தாறுமாறாகி விட்டன. அவளுக்குக் கண்ணீர் வடிந்து கன்னங்களை நனைக்கிறது. சூழலை மறந்து அவள் நின்ற நிலையில் யார் என்ன பேசினார்கள் என்று புரியவில்லை.

“அப்பா... நான்... வரேன். ரிபப்ளிக்டே செலிப்ரேஷனுக்கு எப்படியானும் சாமிஜியக் கூட்டிட்டு வரணும்...”

“நிச்சியமா. நான் தகவல் சொல்றேன். நீங்க வந்து பாருங்க...” அவர் சென்ற பிறகு, பராங்குசம் தாடியை உருவிக் கொள்கிறான். பிறகு எமிலியிடம் எதோ பேசுகிறான். லட்ச லட்சமாகப் புரளும் மருத்துவத் தொழில் ஏதாக இருக்கும்? இந்தப் பொறுக்கிகளின் அநியாயங்களைக் கரைக்கும் மருத்துவத் தொழிலாகத்தான் இருக்கும். இப்போது, பொட்டைப் பிள்ளைகளே வேண்டாம் என்று கருவிலேயே பெண் குழந்தைகளைத் தாய்மார் அழித்துக் கொள்ளும் முன்னேற்றம் வந்திருக்கிறது. ‘ஏண்டி, உனக்குப் புருசன், பிள்ளை இல்லாது போனாலும், பெண் என்ற ஈவு இரக்கம், நியாய அநியாய மனசும் இல்லையா? ராஜலட்சுமி பெண்ணுக்கு இடம் இல்லைன்னு சொல்லவா இந்த அய்யா இப்படி ஒரு நிறுவனத்தை உண்டாக்கினார்?... இந்த இடம், அந்த மாதிரி ஒரு குருகுலத்துக்கு உதவனும் என்றிருந்தாலும் ராதாம்மாவின் அந்தப் பையன், விக்ரம்... தம்பி, குழந்தே, நீ எங்கப்பா இருக்கிற? பன்னிகளையும் பாம்புகளையும் விடக் கீழான சன்மங்கள் பெருகவா அய்யா இந்த மண்ணைத் தத்தம் செய்திட்டுப் போனாங்க?...’

கண்ணிரை அவளால் கட்டுப்படுத்த முடியவில்லை.

“அம்மா. அம்மா...?...”

சந்திரிதான் எழுந்து நின்று அவள் கையைப் பற்றுகிறாள்.

“ஏனிப்ப அழுவுற? நீ எதுக்கு அழணும்? உம்மகன் செத்துப் புழச்சிருக்கு. அவ மனசுக்குள்ள, அம்மா கிட்டேந்து ஒரு இதமான பேச்சு வரலன்னு தாபந்தான் அதிகமாயிருக்கு. நீ யாரோ ஒரு பொறுக்கிப் பயலுக்காக, வீடு தேடி வந்து, அவங்கள அவமானம் செய்திட்டுப் போனத ரஞ்சிதத்தால கூடத் தாங்க முடியல. ஆசுபத்திரிக்கு ஒரு எட்டு வந்து பாத்திருக்கலாமில்ல? நா அங்கதா இருந்தே...”

“சந்திம்மா, அதெல்லாம் இப்ப எதுக்குச் சொல்லுறீங்க? அது உங்க குடும்ப விசயம்... அதெல்லாம் இப்ப வாணாம். ”

“... தாயம்மா, இப்ப நான் நேரா விசயத்துக்கு வரேன்...” என்று பராங்குசம் அவளைப் பார்த்து உட்காருகிறான். தாடியைத் தடவிக் கொண்டு, மேலே பார்க்கிறான்.

“அய்யா. தியாகி எஸ்.கே.ஆர். என் கனவுல வந்தாங்க. புழுதில தேய வேண்டிய என்னை, சேவையில் புடம் போட்டு இன்னிக்குக் கல்விக்குன்னு ஒரு வாழ்நாள் தொண்டுக்கு அர்ப்பணிக்க ஆளாக்கியவரு, அந்த வள்ளல். உனக்கு நா ஏன் காசாயம் போட்டுக்கணும்னு தோணியிருக்கணும். அது நியாயமானது தான். ‘தம்பி, நான் தோற்றுவித்த குருகுலக் குடிலை நீ பெரிய கல்வி சாம்ராச்சியமா வளர்த்திட்டே. மக்கள் குலத்துக்கு நீ இன்னும் சேவை செய்யணும். ‘ஆன்மிகம்’ இல்லாத வாழ்க்கை இல்ல. நீ முழுசா அதில் ஈடுபடனும்...’ன்னாங்க. எனக்கு முதல்ல ஒண்னும் புரியல. சாமிஜிகிட்ட ஒடினேன். நம்ப அய்யா படம் அங்கேயும் ஆசிரமத்துல இருக்கு இப்ப அவங்கதான் சொன்னாங்க நீ... காவி உடுத்தணும்னு உத்தரவாயிருக்குன்னு... இந்த பாரத தேசம் மகான்கள் உருவான தேசம். சுவாமி ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர், காந்திஜி, நம் தியாகி, எல்லோரும் வழிகாட்டி இருக்காங்க. அந்த வழியில் நீ இன்னும் சேவை செய்யணும்னாங்க. இப்ப, நகரத்தில் மூலைக்கு மூலை ஆஸ்பத்திரி இருந்தாலும், நோய்க்கூட்டம் பெருத்துப் போச்சு. இப்ப இந்த இடம் முழுதுமாக, எல்லா வசதிகளையும் அடக்கிய நவீன சிகிச்சைகள் செய்யுமளவுக்கு ஒரு ஆஸ்பத்திரி கட்டணும்னு இருக்கிறோம்...” அவன் நிறுத்துகிறான்.

சந்திரி தொடருகிறாள். “ஆமாம்மா. இப்ப தம்பி, ‘ஹார்ட்ஃபெய்லியர்’ன்னான பிறகு பிழைச்சு நடமாடுறான்னா, அது நவீன மருத்துவம்தான். அமெரிக்காவுல இருக்கிற மாதிரியே அத்தனை வசதிகளுடன், அங்கேயே பயிற்சி பெற்ற டாக்டர்கள், அதுக்கு வேண்டிய சாதனங்கள் எல்லாம் வரவழைச்சி உருவாக்கும் திட்டத்தில இறங்கி இருக்கிறாங்க. என்னிக்கிருந்தாலும், உங்களுக்கும் வயசாவுது எண்பதுக்குமேலே ஆயிட்டுது. எதுக்கு இங்கே கஞ்சி காச்சிக் குடிச்சிட்டுத் தனியே இருக்கணும்?... சொல்லுங்க?”

தாடி உருவல், அவளுக்கு மிக அருவருப்பாக இருக்கிறது. “நீங்க உங்க மகன் வீட்டுக்குப் போக இஷ்டப் படலன்னா வேணாம். பேசாம, குருகுலம் ‘கார்னரில்’ உங்களுக்குன்ன ஒரு ரூம் வசதியா, இப்படியே காந்திபடம், அய்யா படம் மாட்டி, வச்சிக் குடுத்துடறோம். உங்களுக்கு என்ன வசதி வேணுன்னாலும் அப்படி...”

அவளுள் ஒரு பிரளயமே நடக்கிறது.

‘தாயம்மா, சத்தியம் மயிரிழை போல் இருந்தாலும் அதன் வலிமை பெரிது. விடாதே. அந்தக் கல்விச்சாலை போல்தான் இந்த ஆஸ்பத்திரியும் இயங்கும். எந்த ஏழைக்கும் இங்கே இடம் இருக்காது. ஜயந்தியின் பழைய வீட்டில், அந்த கிறிஸ்தவ டாக்டர், தொள தொளவென்று வெள்ளைச் சராய் போட்டுக் கொண்டு வரும் பஞ்சைப் பராரிகளுக்கு வைத்தியம் செய்கிறாரே, அதற்கு மாற்றில்லை இது. இது முதலைகளுக்கு...’

“என்னம்மா? யோசிக்கிற ? இப்ப உலகமுச்சூடும், ரொம்ப வேகமா வளர்ச்சியும் மாறுதலும் வந்திருக்கு. 2005க்குள், சர்க்கரை நோயும் மூட்டு வாதமும் மிக வேகமா வளரும்னு சொல்றாங்க வசதி, சவுரியங்கள் இப்படியும் பாதிப்பை உண்டாக்குது. நான் இப்ப எத்தினி கிராமங்களுக்குப் போறேன்? நிலத்துல வேல செய்யிறவங்களுக்கு அந்த காலத்துல கஞ்சி, கூழுன்னு குடுத்திருப்பீங்க. இப்ப ரஸ்னா, கோக்னு கேக்குறாங்க. பொம்புளங்க களிமண்ணத் தேச்சித் தலகசக்குவாங்களாம். இப்ப.? சில்க்சாம்பு, கிளின் சாம் புன்னு விதவிதமா பாக்கெட் வாங்கித் தலை கசக்குறாங்க. டி.வி. இல்லாத குடிசை இல்ல. அதுனால, வளர்ச்சியோட, பாதிப்புகளையும் நாம நிணச்சிப் பார்க்க வேண்டி இருக்கு...”

இப்போது, குழந்தைவேலு கூடத்து வாயிலில் தென்படுகிறான். சந்திரியைப் பார்த்து, கூழையாகவே கும்பிடு போடுகிறான்.

“வணக்கம் டாக்டரம்மா!...”

ஒரே மலர்ச்சி உருவம். “வாய்யா, மண்ணாங்கட்டி! எப்டீயிருக்கே?”

“வணக்கம் சேர்மன் ஐயா !”

பராங்குசத்துக்கு ‘சேர்மன்’ பதவியா?

இவன் வருகை இறுக்கத்தைத் தளர்த்துகிறது.

“யோவ், வீனஸ் ஆஸ்பத்திரியைவிட மிகப் பெரிசு இங்க ஒரு ஆஸ்பத்திரி வரப்போகுது.”

அவன் முழுதாக மலர்ந்து, “சந்தோசம் அய்யா, வரட்டும்” என்று ஆமோதிக்கிறான்.

இளைய தலைமுறைகள் இரண்டும் அதற்குள் பின்புறம் சென்று சுற்றிவிட்டு வருகிறார்கள்.

“வணக்கம், சந்திரிம்மா மகளா?...” அதற்கு ஒரு சிரிப்பு, கைகுவிப்பு.

“அச்சா புரவலரய்யா மாருதியே கிறாரு... வணக்கமையா, இளைய புரவலர்...” என்று மீண்டும் சிரிப்பு.

அரசியல் கட்சி என்பது இப்படி ஒரு பலாப்பழமாக ஈக்களைக் குந்தவைக்குமோ?

“என்ன, ப்பா! பாத்தியா?...”

“பின்னாடி ஒரு ரோ பழைய வீடுங்க இருக்கு... அதையும் சேத்துக்கிட்டா, இந்த இடம் ஒரு ஃபைவ் ஸ்டோரி பில்டிங்கா, பேஸ்மென்ட் - காலேஜ், பெரிய ஓபன் ஸ்பேஸ், எல்லாம் செய்துக்கலாம். அந்தப் பக்கம் எதோ சர்ச் கட்டுறாங்க போல...”

“அதெல்லாம் தொல்லையில்ல. நாம ஒரு பிள்ளையார் கோயில் மாஸ்க் - எல்லாமே பக்கத்துல ஏற்பாடு பண்ணிடலாம - ஏன்னா, நோய்ன்னு வரவங்க எல்லாருமே கடவுள் நம்பிக்கையத்தான் வச்சு வருவாங்க. நாமும் ‘கடவுள்’ அருளைத்தான் வைக்கிறோம். எம்மதமும் சம்மதம்...”

சந்திரியும் இளையவர்களும் ரங்கன் உடைத்துத் தரும் பானத்தைக் குடிக்கிறார்கள்.

“.... உம், வரட்டுமா?” என்று உறுத்துப் பார்ப்பது போல் பராங்குசம் கேட்டுவிட்டுப் போகிறான்.

“அம்மா, நீ ஒண்ணும் யோசனை பண்ணாதே. நீரடிச்சி நீர் விலகாது. இப்பவே நீ வந்தாகூட கூட்டிட்டுப் போயிடுவ. அப்பிடி நினைச்சிட்டுத்தா வந்தே.”

“சரி சரி, நீ போயிட்டுவா!” எல்லோரும் போகிறார்கள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 19


முதலை... முதலைதான் அவளை விழுங்கக் கவ்வி விட்டது. யானையை முதலை கவ்விய போது, யானை ஆதி மூலமே என்று துதிக்கையை உயரத் துரக்கிப் பிளிறியதாம். துதிக்கையா, தும்பிக்கையா?... இவளுக்கு எந்தத் துதிக்கையும் தும்பிக்கையும் தெரியவில்லை...

குறைந்தபட்சம் மன வேதனையைச் சொல்லிக் கொள்ளக் கூட யாரும் இல்லை. அந்தத் தலைமுறையே பட்டுப் போய்விட்டதா? புதிய தளிரே வராதா?...

கடைசி காலத்தில், அய்யா, மன உளைச்சலோடு உடலும் பாதிக்கப்பட்டிருந்தார். நோயென்று எதுவும் இல்லாமலே படுக்கையோடு இருக்க வேண்டிய அளவுக்கு நலிந்து போனார். ஆதிநாட்களில் அக் குடும்பத்தில் சமையல்காரராக இருந்த சிங்காரம் அம்மா இறந்தபின் வந்திருந்தான். என்றாலும், அவனுக்கும் வயதாகி கண் பார்வை மங்கி இருந்தது. “தாயம்மா, நா அடுப்பு வேலய பாத்துக்கிறேன், கஞ்சியோ, இட்டிலியோ எதுன்னாலும் செய்துதாரேன், மத்ததெல்லாம் நீ பாத்துக்க” என்று சொல்லி விட்டான்.

குளிக்க நீர் எடுத்து வைத்து, துண்டு, வேட்டி வைத்துப் பணி செய்வது, அவரைக் கை பிடித்துக் குளியலறைக்குக் கூட்டிச் செல்வதாயிற்று. குச்சியை ஊன்றிக் கொண்டு வீட்டைச் சுற்றி, எதிரே விரிந்த தோப்புத்திடலில் அவர் காலையில் நடந்தால் இவள் உடன் செல்வாள். இந்த நடமாட்டமும் குறைந்து, இறுதியில் வீட்டோடு முடங்கி, படுக்கையிலும் தள்ளிவிட்டது. அப்போது காமத் டாக்டர் இருந்தார். பர்மாலட்சுமியின் தம்பி நிரஞ்சன், இவர்கள் எல்லோரும் வருவார்கள். பிடிவாதமாக மருந்து சாப்பிட மறுத்துவிட்டார். பர்மாலட்சுமி, தீங்குரலில் பாடுவாள். ‘மந்திரமாவது நீறு; வானவர்தாமுள நீறு’ என்று அவள் பாடும் போது கண்களில் எல்லாருக்குமே நீர் கசியும்.

அவர்கள் வந்து சென்றதும், “தாயம்மா...” என்று கூப்பிடுவார். குரல் தழுதழுக்க, என்னைத் துரக்கி விடுறியா? என்பார். முதுகில் திருநீற்றைத் தடவுவாள். படுக்கை யோரத்தில் வேப்பிலைதான் வைத்திருப்பாள். அவர் எழுந்து இயற்கைக் கடன் கழிக்கும் பாண்டத்தில் அமரும்போது அவள் உதவ வேண்டி இருக்கும். ஏறக்குறைய ஒரு மாத காலம் அதுவும் தெரியாமலே இயலாமலே இருந்தார். கைக் குழந்தையைப் பேணுவது போல் அவள் தொண்டாற்றிய போது, “தாயம்மா, நீ என் தாய், தெய்வம்” என்று விம்முவார். அவளோ, “அப்படி எல்லாம் சொல்லாதீங்கய்யா, என்னைப் பெத்த அப்பனுக்கு நான் செய்யும் கடன் இது. இது செய்ய நான் குடுத்து வச்சிருக்கணும்” என்பாள்.

“தாயம்மா, அய்யாவக் கவனிச்சிக்கோம்மா?” என்று அம்மா சொன்ன சொல் ஒலிக்கும்...

‘பராங்குசத்தை சத்தியத்துரண் என்று கபடில்லாமல் நம்பினர்களே... அதனால்தான் அவன் கனவில் வந்தீங்களா, அய்யா? எனக்கு ஒருநாள் கூடக் கனவில் வரவில்லையே? அவன் கனவில் வந்து, ஆஸ்பத்திரி, விருந்தினர் விடுதி, அமெரிக்கா போல வசதின்னு, அமெரிக்காவை இங்கு கொண்டு வரச் சொன்னிங்களா?... புரியவில்லையே?’
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 20


மார்கழிக்குளிர் என்பார்கள். எதிரே அரைகுறைக் கட்டிடம் ஒன்றில் ஐயப்ப பூசைக்கு பெரிய பந்தல், தீபாலங்காரங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. இவர்கள் தெருவில், பள்ளிக்கூட முக்கிலிருந்து வாழைத் தண்டு விளக்குகள்; முருகன், கணபதியின் தீபக்கோலங்கள் விளங்கும் தோரண வாயில்கள். கருப்பு வேட்டிகள், அச்சிட்ட தாள்கள், ரசீது புத்தகங்கள், உண்டியல்கள், சந்தன குங்குமக் கீற்றுகள், உருத்திராட்சமாலைகளின் பவனிகள் சூழலையே எப்போதும் இல்லாத வகையில் இந்த ஒதுக்குப் புறத்தைக் கலகலக்கச் செய்கிறது.

ஒலி பெருக்கியை இவர்கள் வீட்டுப் பக்கம் திருப்பி வைத்திருக்கிறார்கள். தேனினும் இனிய குரலில் வரும் பக்திப் பாடலும் இவளுக்கு நாராசமாக ஒலிக்கிறது. காலையில் வாழை மரங்களைக் கொண்டு வந்து வெட்டி, ‘ஐயப்பன் எழுந்தருளத்திருக்கோயில்’ அமைத்த பிறகு, அந்தக் கழிவுகளை இவர்கள் வீட்டின் இன்னொரு பக்கத்தில் குவியலாகப் போடுகிறார்கள். அங்கேயே எங்கோ அடுப்பு மூட்டியோ காஸ் கொண்டு வந்தோ காலைப் பலகாரம் செய்து சாப்பிட்டபின் அந்த எச்சில் இலைகளும் கழித்த வாழைக் குவியல்களில் விழுகின்றன. பின் பக்கமும், கிழக்கேயும் உருவாகும் குடியிருப்புகளுக்குச் செல்லும் வழித்தடம் அது. இன்னமும் அதிகார பூர்வமான வழித்தடமாகவில்லை.

எப்போதும் போல் ரங்கன், பின்புறம் மாட்டுக்கு வைக்கோல் உதறிப் போட்டுவிட்டுப் பின் கதவைப் பூட்டிக் கொண்டு சாவியை மாட்டுகிறான். பிறகு போகிறான். இப்போதெல்லாம் அவன் எதுவும் பேசுவதில்லை.

பாட்டொலியும் பஜனையின் சரணக் கூவலும் மண்டை கனக்கச் செய்கின்றன. அய்யா காலத்திலும் இது போன்ற பூசை உண்டு. மணிக் கூண்டுக்குப் பக்கத்தில் ஐயப்ப பக்த சமாஜம் கட்டுவதற்காக ஓமியோபதி டாக்டர், சிவராமன் அன்பளிப்பு வாங்கிச் சென்றதும் கூட நினைவி ருக்கிறது. அவரே இங்கும்கூட வெள்ளிக்கிழமை பஜனைக்கு வருவார்... இப்போது அவர் குடும்பமே இங்கு இல்லை. காவி, கருப்பு, பக்தி, வாழ்வு, எல்லாமே, இலக்கு எது என்று தெரியாமலாகிவிட்டன...

ராதாம்மா சீக்காகப்படுத்திருந்த நாட்களில், அம்மாவும் அய்யாவும் இங்கே சேர்ந்தாற்போல் ஒரு மாதம் கூடத் தங்கியதில்லை. மாற்றி மாற்றி இரத்தம் கொடுக்கும் நோயாக இருந்தது. அவர்கள் ஒரு சமயம் அவசரமாக விமானத்தில் பம்பாய் கிளம்பும் நேரத்தில், பராங்குசம் ஒரு பெண்ணை அழைத்துக் கொண்டு வந்தான். முடியை முழுசாக வெட்டிக் கொண்டு காதில் ஒரு சிறு சிவப்பு நட்சத்திரம் மின்ன, மெலிதான ஒரு நூல் சேலை உடுத்திக் கொண்டிருந்தாள். நெற்றியில் சிறு குங்குமப் பொட்டு. “என்னைத் தெரிகிறதா மாமா ?...’ என்று இருவர் கால்களையும் தொட்டுக் கும்பிட்டாள்.

“ஏய், அநு இல்ல? எப்ப வந்தே?” தன் நீ முடிய வெட்டிட்டாலும் சாடை மாறிடுமா?... கிரண் எப்படி இருக்கிறான்? குழந்தை... நிசா இல்ல? குழந்தையக் கொண்டு வரலியா?”

“ராதா பத்திக் கேள்விப்பட்டேன், கஷ்டமா இருக்கு மாமா, கிரன் பார்டர்ல இருக்கார். எனக்கு போரடிச்சிப் போச்சு. குழந்தையோட தான் வந்திருக்கேன். உங்க குருகுலத்துல எனக்கு இப்ப அவசியமா வேலை வேணும். தரீங்களா?...

“என்னம்மா இப்படிக் கேட்டுட்டு? உனக்கில்லாத வேலையா?”

“அப்பா எப்படி இருக்காங்க?...”

“இருக்காங்க. சின்னண்ணா, அக்கா யாரோடும் ஒத்து வரல. அம்மா எல்லாத்துக்கும் ஈடு குடுத்திட்டிருந்தா. இவரால யாரோடும் அட்ஜஸ்ட் பண்ணிக்க முடியாது... சரி, மாமா, குழந்தைய அங்கேயே ஹோம்ல விட்டுட்டு வந்தேன்...”

“நீயும் அங்கேயே தங்கிக்கிறியா?...”

“ஆமாம். எனக்கு அந்தச் சூழல் புடிச்சிருக்கு...”

பேசிக் கொண்டே அவர்கள் காரிலேயே ஏறிக் கொண்டு போனாள்.

அந்தத் தடவை மகளை வாரிக் கொடுத்து விட்டுத்தான் அவர்கள் வந்தார்கள். சோலையில் பாய்ந்த மின்னல், இளநீர் குலுங்கும் மரத்தைக் கருக்கிவிட்டாற் போல் துயரம் படிந்தகாலம். துயரம் விசாரிக்க வருபவர்கள் மாற்றிமாற்றி சோகக் குழியைக் கிளர்த்திக் கொண்டிருந்தார்கள். அப்போது அரசியல் சூழலும் ஏதோ கிரகணம் பிடித்தாற்போலிருந்தது. இந்திரா காந்தி ஆண்ட நாட்களில் ஏற்பட்ட நெருக்கடிகளில் அவர்கள் மிகவும் மனம் நொந்து சோர்ந்தனர்.

அன்று காலை... ஆனி, ஆடி என்று நினைவு. விடியும் நேரத்தில் முன் வாசல் தெளித்துப் பெருக்கிக் கொண்டி ருந்தாள். சோகம் சுமக்கும் வீடாதலால் கோலம் போடுவதில்லை. அப்போது, மொட்டைத் தலையில் சிறுகுடுமியும், காவித்துணி ஜிப்பாவும் வேட்டியும், தோளில் மாட்டிய பையுமாக ஒருவர் வந்து நின்றார்.

“மாதாஜி, பாக்கி பாய் இருக்கிறாரா?” என்று கேட்டார். அவர் தமிழ் இந்திக்காரர் பேசுவதுபோல் இருந்தது.

அவள் தலை அசைத்தாள். ஆனால் அவர் இவள் எதுவும் பேசுவாள் என்பதை எதிர்பாராதவர் போல், விடு விடென்று உள்ளே நுழைந்து விட்டார். அவள் கொஞ்சம் வெலவெலத்துப் போனாள். நாட்டு நடப்பு, அப்போதைய அரசியல் பின்னணி எதிலும் இவள் சிந்தை செல்லவில்லை. வீட்டின் ஒளியே மாய்ந்திருந்தது. வரமிருந்து பெற்ற மகள் கண்களை மூடி வீட்டை மீளாத் துயிலில் ஆழ்த்திவிட்ட தாகவே இப்போதும் தோன்றுகிறது.

இந்த சாமியாரின் பின் அவளும் உள்ளே விரைந்தேகினாள். அம்மா அப்போது தான் எழுந்து பின் பக்கம் கிணற்றடியில் பல்துலக்கிவிட்டு அடுப்படிக்கு வந்து கொண்டிருந்தார். அய்யாவுக்குக் கொத்துமல்லி-- சுக்குக் காபிக்கு நீர் வைக்கையில் இவள் சேதியைச் சொல்ல சமையல் கட்டின் பின் புறமாக வந்தாள். ‘பால் கறந்திட்டு வரியா தாயம்மா?’

இவள் எதுவும் பேசாமல் கொட்டிலுக்குப் போனாள். கைகழுவிவிட்டு, மடிகழுவ நீரும், செம்புமாகப் பால் கறக்கப் போனாள். பாலைக் கறந்து கொண்டு வருகையில், அந்தச் சாமியார், கிணற்றடியில் நீரிழுத்து, பல்பொடியில் பல்துலக்குவதைப் பார்த்தாள். இப்போது மாடுகள் நின்ற அந்தப் பெரிய கொட்டில் இல்லை. கிணற்று முற்றத்தில் முன்பிருந்த துளசி மடம் மட்டும் இருக்கிறது.

குளிப்பறையில் பெரிய தண்ணீர் தொட்டி உண்டு. அதன் பக்கச் சுவரில், கிணற்றில் நீரிழுத்து, உள்ளே தொட்டி நிரப்பும்படி விடுவதற்கு ஒரு கோமுகம் போன்ற ‘வாய்’ உண்டு. குளிப்பறையில் சென்று தண்ணிர் இருக்கிறதா என்று பார்த்துவிட்டு நடையைப் பெருக்கிச் சுத்தம் செய்தாள். அப்போது அவர் கிணற்றில் இருந்து நீரிறைத்து அங்கேயே நீராடலானார்.

“அம்மா, ரூமில் தொட்டில தண்ணிர் இருக்கே?” என்று மெதுவாகச் சமையலறையில் வந்து தெரிவித்தாள்.

அம்மா பேசவில்லை.

அவருக்கு அறுபது வயசுக்கு குறையாது. நல்ல உயரம். குளித்து முடித்து துண்டை உடுத்த கோலத்தில் தம் சட்டை, வேட்டி எல்லாம் சோப்புப் போட்டுத் துவைத்து ஒரமான கொடியில் உலத்தினார். பிறகு, நின்ற கோலத்தில், கண்களை மூடி தியானம் செய்தார். இவள் குளிப்பறை வாயிலிலேயே நின்றாள். முற்றத்துக்கு வராமல் பிறகு தண்ணிரை எடுத்து இரு கைகளாலும் சூரியனை நோக்கிக் காட்டி விழச் செய்தார்...

அம்மா உள்ளே காபி வடிகட்டிக் கொண்டிருந்தார். அய்யாவும் நடை வழியாகப் பின்புறம் சென்ற போது, இவள் கேட்டாள்.

“எதுக்கம்மா அப்படித் தண்ணியை மேலே காட்டி, விடுறாங்க?”

“சூரியனுக்கு அர்க்கியம் விடுவதாகச் சொல்வாங்க. வடக்கே பெண்கள்கூட இதைச் செய்வாங்க. தாயம்மா... சந்நியாசிகள் நெருப்பு மூட்ட மாட்டார்கள். ஏன்னா, அவங்களே நெருப்புன்னு அர்த்தம். அதுக்குத்தான் காவி உடுத்துறாங்க. எல்லா ஆசைகள், பந்தங்கள் பொசுங்கிய நெருப்பு...”

அவள் எதுவும் சொல்லவில்லை. அவர் மீது மிகுந்த மரியாதை ஏற்பட்டது. கூடத்தில் வந்து வானொலிச் செய்தியைக் கேட்டார் அவர். அம்மா, பின்பக்கம், அய்யாவிடம், “யாருன்னு தெரியல, இங்க வந்திருக்காரே ?” என்று மெதுவாகக் கேட்டார்.

அய்யா, “இப்ப என்ன ? பயமாயிருக்கா? என்ன பயம்? நடப்பது நடக்கட்டும், நாம் ஒரு சதியும் பண்ணல...” என்றார். பூடகமாகவே இருந்தது.

“யாருன்னு உங்களுக்கே தெரியலியா?” எந்த பதிலும் வரவில்லை.

“தாயம்மா, அவர் என்ன சாப்பிடுவார்னு தெரியல. கோதுமை வாங்கி வச்சிருக்கு. தட்டிப்புடைச்சிட்டு மிசினில கொண்டு போய் அரைச்சிட்டு வா!’ என்றார் அம்மா.

“கேப்பை மா இருக்கில்ல? அதையே ரொட்டியோ, தோசையோ செய்யலாமே?” என்றார் அய்யா.

அப்போதெல்லாம், இப்போது போல் அரசியல் அன்றாட மனிதர் வாழ்க்கையில் மலினப்பட்டு இரைந்து கிடக்கவில்லை என்று தோன்றுகிறது. அவள் கோதுமை அரைத்து வந்தாள். சாமியாரும் அய்யாவும் இந்தியில் பேசிக் கொண்டார்கள். அம்மா ரொட்டி சப்ஜி செய்தார். சோறும் வடித்தார். நடையில் மெத்தைப்படி வளைவில் உள்ள அறை மிகப் பெரியது என்று சொல்லலாம். அங்கே ஒரு பெஞ்சு, அலமாரியில் புத்தகங்கள், கீழே உட்கார்ந்து எழுத படிக்க சாய்வு மேசை எல்லாம் உண்டு. சாமியார் பத்தரை மணிக்கே, ரொட்டியும் சப்ஜியும் சாப்பிட்டு விட்டு அந்த அறைக்குத் தூங்கப்போய்விட்டார்.

மாடிக்குச் செல்ல வெளிப்புறத்தில் ஒரு படி உண்டு. இப்போது அது இல்லை. அய்யா காலமாகு முன்பே, அது பத்திரமில்லை என்பது போல் தகர்த்து, வாசலைப் பூசிவிட்டார்கள்.

சாமியார், தூங்கினார், தூங்கினார், அப்பிடி உள்ளே தாழ்போடவில்லை. அய்யாதான் பார்த்து விட்டுத் தூங்குவதை அறிந்து ஒசையின்றி வந்து கூடத்துப் பாயில் அமர்ந்தார்.

அந்த நேரத்தில் அநு பரபரப்பாக வந்தாள். அவள் வேலை ஒப்புக் கொண்டபின், இவர்கள் துயரப்பட்டிருந்த காலத்தில்தன் குழந்தையையும் எடுத்துக் கொண்டு அடிக்கடி வந்தாள். மகள் போன சோகத்துக்கு, இவள் வந்து பழகியது ஆறுதலாக இருந்தது. குழந்தை நிசா நல்ல அழகு. சுருண்ட முடி. கருவண்டுக் கண்கள். எல்லோரிடமும் மழலை சிந்திப் பழகும். இவள் விரலைப் பற்றிக் கொண்டு “போலாமா?” என்று கேட்கும்.

“நான் கடைக்குப் போறேன், நீ வரியாடா கண்ணு?” என்பாள்.

“தாயம்மா, அவ கடையில் வந்து கண்டதையும் வாங்கிக் குடுன்னு கேப்ப... எங்கும் போவாணாம். உக்காரு. பாட்டிக்கு காக்கா வட கத சொல்லு” என்று அநு பேச்சை மாற்றுவாள்.

ஆனால் அப்போது குழந்தை வரவில்லை... அவள் மட்டுமே வந்திருந்தாள்.

“அப்பா?...” என்றாள்.

“வாம்மா?...”

அவர் அருகில் பாயில் உட்கார்ந்தாள்.

“வெரி ஸாரி அப்பா, எனக்கு வழி தெரியல. அங்கே வந்திட்டார்.” கூடத்துத் தூணில் சாய்ந்தவாறு நின்ற அம்மாவுக்கு அப்போதுதான் புரிந்தது போலும்!

“அநு... உன் சித்தப்பாவா?”

“ஆமாம். சத்தம் போடாதீங்கம்மா. இவர் போலீசுக்குப் பயந்து வந்திருக்கிறார். காலேஜில படிக்கிறபோதே ஆர்.எஸ்.எஸ்.ல சேர்ந்திட்டாரு. எங்க பாட்டி, நினைச்சா கண்ணீர் விடுவா. அப்பவே சந்நியாசம் வாங்கிட்டாங்க. ருஷிகேசத்தில இருந்தார். இப்ப கிளம்பிட்டாரு...”

“ஏம்மா, உன் கல்யாணத்துல வந்திருந்தாரே? டில்லில... ராதா கூட வந்திருந்தா. எல்லாரும் காவி - சந்நியாசின்னா விழுந்து விழுந்து நமஸ்காரம் பண்ணினாங்க...” என்று அய்யா நினைவூட்டினார்.

“அம்மா பேரில தனி விசுவாசம். மாதாஜி, மாதாஜிம் பாரு... பெரியப்பா, அத்தை அவங்க வீட்டுக்கெல்லாம் போக மாட்டாங்க.’

“உங்கம்மாக்கு அந்தக் காலத்து தேசிய ரத்தம்...”

“இப்ப ஒண்ணும் பேச வாணாம்” என்பது போல் அய்யா சாடை காட்டினார்.

“அப்பா, நீங்க மொள்ள எதானும் சொல்லி அனுப்பிச்சிடுங்க. நீங்க என்னதான் அரசியல்லேந்து விலகிட்டாலும், அரசியல்கட்சி, தேசியம்னு ஊறினவர். அடிமரம். பழசு புதுசுன்னு முகத்துல போட்டுக்கலன்னாலும், இந்த நேரத்தில் என்ன நடக்கும், நடக்கிறதுன்னு தெரியாது. உங்களுக்கு எந்தக் கஷ்டமும் வரக்கூடாது அப்பா!”

அவர் கைகளைப் பற்றிக் கொண்டு சொல்லிவிட்டு அவள் கண்களைத் துடைத்துக் கொண்டாள்.

“நா வரேம்மா..!” எழுந்து நின்ற அம்மாவைத் தழுவிக் கொண்டாள். தாயம்மாளின் கையைப் பற்றி “வரட்டுமா தாயம்மா” என்று விடை பெற நின்றாள்.

“எதும் சாப்பிடாம போறீங்களே அநும்மா ?”

“ரிக்ஷா நிக்குது வாசல்ல, குழந்தைய விட்டுட்டு ஓடி வந்தேன்... நீங்க நல்லா இருக்கணும்... எதும் வரக்கூடாது.”

விடுவிடென்று அவள் வாசலில் சென்று ரிக்‌ஷாவில் அமர்ந்தாள். அய்யாவும் அம்மாவும் பிடித்து வைத்த சிலை போல் அமர்ந்திருந்தார்கள். துயரம் கவ்வியபோது, அச்சம் தெரியவில்லை. இப்போது, இனம்புரியாத கருமை சூழ்ந்தாற்போல் இருக்கிறது.

எத்தனை முறைகள் சிறைக்குப் போயிருக்கிறார்கள்? போலீசே வந்து முன்னெச்சரிக்கை செய்தும் தடைமீறி அச்சமில்லை அச்சமில்லை என்று சிறை சென்றார்கள்.

இப்போது... நேரு மகள் ஆட்சியில்... அவளுக்குப் புரியவுமில்லை; புரியாமலும் இல்லை. காந்தியைச் சுட்ட கட்சி. ஆனால் அப்போதெல்லாம், இத்தனை நாட்கள் இல்லாமல் இப்போதென்ன கெடுபிடி?... இவளுடைய பையன் வீட்டிலும் கூடச் சோதனைகள், அதிரடி நடவடிக்கைகள், சிறை என்று பராபரியாகக் கேள்விப் பட்டிருந்தாள். வானொலி இருபது அம்சத்திட்டப் பாடல்களும் கிளிப் பிள்ளைச் செய்திகளுமாக அவிழ்க்கின்றன. பட்டென்று மூடுகிறாள். அவள் மகன் வீட்டில் சோதனை, காவல், சிறை என்ற செய்தியில்கூட அவளுக்குச் சங்கடம் அழுத்தவில்லை. ஏனெனில் அவர்கள் உப்பைத் தின்பவர்கள், தண்ணிர் குடிக்கிறார்கள் என்று பதிவாகி இருக்கிறது. காலையில் நீராடி, சூரியனுக்கு அர்க்கியம் விட்டு... பிராமணர்... பிராமணர்களை அடி உதை என்று கட்சி கட்டிய நாட்களில்கூட, அதற்குச் செயல் வடிவம் வரவில்லை. அந்தப் பகுத்தறிவுப் பெரியாரும், எதிர்துருவமான ராஜாஜியும் இதயம் தொட்ட நண்பர்களாகத்தானே இருந்தார்கள்?... இந்த சந்நியாசி என்ன செய்துவிட முடியும்?

அவர் மாலை ஆறுமணிக்குத்தான் உறங்கி எழுந்து வந்தார். கிணற்றடிக்குச் சென்று தூய்மை செய்து கொண்டு கூடத்துக்கு வந்தார்.

“யார் வந்திருந்தார்...?” என்று அய்யாவிடம் கேட்டார். அங்கே அது தவறவிட்டிருந்த வெள்ளைக் கைக் குட்டை கிடந்தது.

“நல்லாத் துரங்கிட்டீங்க போலிருக்கு ?”

“ஆமாம். ஒரு வாரமாத் தூங்காத, ஒய்வெடுக்க முடியாத நடை, அலைச்சல். உங்கள் மகள் தவறிவிட்டதைக் கேள்விப்பட்டேன்... அநுதான் சொன்னா. பாத்துட்டுப் போகலான்னு வந்தேன். கன்யாகுமரி போறேன்” என்றார்.

அம்மாவும் அய்யாவும் பேசவில்லை.

இவள் சமையலறை வாசற்படியில் நின்றாள். அம்மா விளக்கேற்றினார். கீதை தியான சுலோகம் சொன்னார். கண்களை மூடி மவுனப் பிரார்த்தனை செய்தார்கள்.

இரவு கஞ்சி அருந்தும் போது,

“அநு வந்திருந்தாளோ?” என்று கேட்டார். இவர்கள் ஏதும் விடையளிக்கு முன் அவரே, “நான், நீங்கள் அங்கே இருப்பீர்கள் என்று போனேன். பிறகுதான் தெரிந்தது. இங்கே வந்தேன். ரெண்டு நாள்... தங்கலாமா?”

“தாராளமா... உங்களை அது கல்யாணத்தில் பார்த்தது.”

“ஆமாம்... அப்ப பங்களாதேஷ். அது ரொம்ப விவேகமாகச் செய்தா... இப்ப இது விவேகம் இல்ல. பயம்... எல்லாம் பயம், ஆசை, அதீதமான ஆசை, பயம்...”

யாரைச் சொன்னார், எதற்குச் சொன்னார் என்று அவளுக்குப் புரியவில்லை...

“பாவம் அநு. இந்த வயசில் குழந்தையை வச்சிட்டுத் தனியாக...”

“அதென்னமோ, ராதா போனபிறகு, இப்ப இவ வந்து அம்மா, அப்பான்னு பழகுவது மனசுக்கு ஆறுதலாக இருக்கு.”

“அந்தப் பையன் நல்லவன். ஏர்ஃபோர்ஸ் எல்லை, நெருக்கடின்னு வாழ்க்கை. இளவயசுப்பிடிவாதம், வீம்பு. ரெண்டுபேருக்கும் பொருந்தல. அவன் அம்மா அப்பா ரெண்டு பேரும், ருஷிகேசத்திலதான் இருக்கா. இவ டிவேர்ஸ் அது இதுன்னு குழந்தையத் தூக்கிட்டு நாக்பூர் வந்திட்டா. எனக்கு இப்ப அவகிட்ட இதெல்லாம் பேச சந்தர்ப்பம் இல்ல. இங்க இருக்கட்டும். பத்திரம்தான்...”

யாருமே பேசவில்லை...

அந்த நெருக்கடி காலத்தின் ஒரு முகத்தை இப்போது நினைத்துப் பார்க்கிறாள்.

இரவு முழுவதும் துணுக்குத் துணுக்காக நினைவுகள், மயக்கமா, கனவா என்று புலராத காட்சிகள்.

ராதாம்மா பம்பாயில் ஸ்டேஷசனில் வாங்கிக் கொடுத்ததாகக் குழந்தை விக்ரம் ஒரு பூதக்கண்ணாடி கொண்டு வந்திருக்கிறான். அந்தக் குழாயில் பொருந்திய கண்ணாடியில் கண்ணை வைத்துத் திருப்பிக் கொண்டே இருந்தால், அழகழகாக, புதிசு புதிசாக கோல மாதிரிகள் வருகின்றன. வண்ண வண்ணக் கோலங்கள்.

“பாட்டி, பயாஸ்கோப் பாக்குறீங்களா ?...” அவள் கண்களில் பொருத்தி, குழந்தையே திரும்புகிறான்.

தொடர்ச்சியாகத் தெரியவில்லை. பையனில்லை. அவளே வைத்துப் பார்த்துவிட்டு வைத்து விடுகிறாள். குரு குலக்குடிலில், அது இருக்கிறது. அவள் பிள்ளை... படிப்பவன், “அக்கா, சோறு வை!” என்று வருகிறான்... பஞ்சமி தான் தையல் இலை போட்டு, பொங்கல் போன்ற சோற்றை வைக்கிறாள். அவன் எழுந்து காலால் இடறுகிறான்.

“இது என்ன சோறு? ஒரு முட்டை கிட்டை பொரிச்சு வய்க்கிறதில்ல? மனசுக்குள்ள பாப்பாரசாதின்னு நினப்போ? ஆதிக்க சாதி - திராவிடக் குடிமக்களை மிதித்துக் கொக்கரிக்கும் சாதி...” என்று அந்தக் குழாயைத் துாக்கி எறிகிறான். அது உடைந்து சிறுசிறுவெனும் கண்ணாடித் துண்டுகளாகச் சிதறுகிறது.

“அய்யோ...” என்று கண்விழிக்கிறாள்.

சட்டென்று எழுந்து உட்காருகிறாள்.

கனவா... கனவு...? பஞ்சமி இல்லை. ராதாம்மா இல்லை, குடில்வாழ்வு எதுவுமில்லை. அந்தக் குழாய் கண்ணாடி, குழந்தை வைத்து விளையாடியது உண்மை. அது கீழே விழுந்து உடையவில்லை. விக்ரமே காகிதங்களை உரித்து, கண்ணாடியை வெளிப்படுத்திவிட்டான். பிறகு பொருத்த முடியவில்லை. வெறும் கண்ணாடித் துண்டுகள்.

குழந்தை விளையாட்டுத் தனமாக அந்தப் பொருளை வீணாக்கிவிட்டு மறுபடியும் பொருத்த முடியாமல் அழுதான்.

“வேறு வாங்கிக் கொடுக்கிறேன்...” என்று சமாதானம் சொன்னார்கள்.

குழந்தை விளைவு தெரியாமல் விளையாடியது.

நல்லதொரு கோலம் காட்டிய பொருள் அழிந்தது.

குழந்தை அந்த ஒட்டுக்காகிதங்களை விளையாட்டாகப் பிரித்தது. இப்போது இவர்களும் அதே போன்ற விளையாட்டில்தான் ஈடுபட்டிருக்கிறார்களா? இந்திரா அம்மை அஞ்சிக் கரித்துக் கொட்டி சிறையில் தள்ளியவர்கள் ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள். நாட்டில் என்னென்னமோ நடக்கிறது. கண்ணாடித் துண்டுகள் சிதறி விழுந்தாற் போல், அத்தனை வண்ணங்களும் இந்த தேச மக்களை, வாழ்க்கையை பொய், கபடு, சூது, வன்முறை இரத்தக்கறை என்றாக்கிவிட்டு அழிந்துவிட்டன.

அவள் இப்போது என்ன செய்ய வேண்டும்? குருகுலத்தில் அவர்கள் காட்டும் மூலையில் குடிபெயர வேண்டுமா? சந்திரி கூப்பிட்டதை ஏற்று, நீரடித்து நீர் விலகாது என்பதை நிரூபிக்க வேண்டுமா?...

ஒன்றும் புரியவில்லை. அந்தக் காலத்தில் தேசாந்தரம் போவது என்பார்கள். எல்லாவற்றையும் துறந்து காசிக்கு நடந்தே போனார்களாம்! கேதர்நாதம், பத்ரிநாதம் என்று போவார்கள், திரும்பி வரமாட்டார்கள் என்பார்கள். ஏன்? இந்த அய்யப்பர்கள் கறுப்பைக் கட்டிக் கொண்டு தொண்டை கிழிய காது செவிடு படச் சரணம் கூவுகிறார்கள். கோயிலுக்குப் புறப்படுமுன் வாய்க் கரிசி போடுகிறார்கள்... காரணம் அவ்வளவு அபாயங்களையும் கடந்து போகிறவர்கள் திரும்பி வரமாட்டார்கள்...

காலையில் இவள் வாசல் தெளிக்கும் போது, மாலை போட்ட பக்தர்கள் சுமையுடன் கிளம்பிவிட்டார்கள். கண்எரிச்சல் தீர இவள் நீராடுகிறாள். அடுப்பு மூட்டவோ சமைத்துச் சாப்பிடவோ மனமில்லை. கதவைப் பூட்டிக் கொண்டு கிளம்புகிறாள். ரங்கனிடம் பூட்டுக்கு வேறு சாவி உண்டு.

அவள் எங்கே போகிறோம் என்ற சிந்தனை இல்லாமல், பெரிய சாலையில் நடந்து, போகிறாள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 21


புதிய புதிய கட்டிடங்கள், வணிக வளாகங்கள்... நெருக் கடிகள் குறைந்து, வேற்றுார் செல்லும் வண்டித்தடம் தெரிகிறது. இளவெயில் இதமாக இருக்கிறது.

‘அய்யாவும் அம்மாவும் அவளிடம், வீட்டை விட்டுப் போகிறாயா, தாயம்மா ?’ என்று கேட்பது போல் தோன்றுகிறது.

என்னை மன்னிச்சிடுங்க... எனக்கு எதுவும் தெரியல. நீங்க காட்டிய சத்தியம் இப்ப என்னை வெளியேறச் சொல்கிறது.

அப்போதுதான் கையில் மாற்றுச் சேலை கூட இல்லாமல் வந்திருப்பது உணர்வில் தைக்கிறது... ‘காஞ்சி’ என்று ஊர் பேர் விளங்கும் பின்புறம் காட்டிக் கொண்டு ஒரு பேருந்து போகிறது.

ஒரு காலத்தில். இரண்டு புறங்களிலும் பசிய வயல்களாக இருந்தன. இப்படி நல்ல சாலையாக அப்போது இல்லை... ஆனால், இருபுறங்களிலும் ஏதேதோ பேர் போட்ட குடியிருப்புகளுக்காக, வீட்டுமனை எல்லைக் கற்கள் முட்டுமுட்டாகத் தெரிகின்றன.

ஒரு பெரிய சுற்றுச்சுவருக்கு இடையே மேலே வெண்மையான தூபியும் சிலுவைச் சின்னமும் தெரிகிறது. சாலையில் இருந்து அந்தக் கோயிலுக்குச் செல்ல ஒழுங்கான வழியும், பூச்செடிகளும் அமைந்திருக்கின்றன. சட்டென்று இடது கைப் பக்கம் பார்க்கிறாள். பசிய மரங்கள் தெரிகின்றன. சாலையின் எல்லையில் பாதுகாப்பான முட்கம்பி வேலிக்குள், சிவந்த தெச்சிப்பூக்கள் குலுங்கும் பசுமையான அரண். பெரிய எழுத்துக்களில் ‘சிவசக்தி ஆசிரமம் பசுஞ்சோலை’ என்று எழுதப்பட்டிருக்கிறது. பெரிய வாயிலின் அகன்ற கதவுகள் திறந்திருக்கின்றன. உள்ளே, மிக அமைதியான சூழல், மாமரங்களில் பூமித் தாயைப் பாதுகாக்கும் பசுங்குடைகள் போல் சூழ்ந்தி ருக்கின்றன. இன்னும் பூக்கத் தொடங்கவில்லை. மிகப் பெரிய பரப்பு. பல்வேறு வண்ண மலர்களின் தோட்டம்.

ஆங்காங்கு ஒன்றிரண்டு பேர் தோட்ட வேலை செய்பவர் தெரிகின்றனர்... பாதையில் அம்புக்குறி காட்டும் இலக்குகள். சிவசக்தி ஆலயம்... கிணறு... பொதுக்குடில்...

“ஆச்சி, காஞ்சி ரோடில சிவசக்தி ஆசிரமம்னு ஒண்ணு இருக்குதாம். மனசுக்கு ஆறுதலா இருக்குமாம். ரொம்ப அழகா, அம்பாளின் பதினாறு வடிவங்களை அமைச்சி ருக்காங்களாம். ஒருநா போவலாமா? வரியளா?”

சங்கரி... சங்கரி... நீ இங்கு வந்தாயா?...

ஒரு கால் இங்கு இருப்பாளோ? கேள்விப் பட்டதெல்லாம் பொய்யாகப் போகட்டும்.

சங்கரி... உடன் பிறந்தவனின் குடும்பம், மக்கள் என்று உழைக்கவே, அக்கினிமேல் நின்று தவம் செய்தாயே அம்மா ?...

நெற்றியில் திருநீறும், கீழே குங்குமமும் துலங்கும் முகமும் ஒடிசலான, மாநிறமேனியில் கழுத்து மூடிய ரவிக்கையும் கைத்தறிச் சேலையுமாக அவள் “ஆச்சிம்மா!” என்று கூப்பிடுவ்துபோல் தோன்றுகிறது.

வெண்மையும் நீலம் சிவப்பு அழகு விளிம்புகளுமாகத் தெரியும் தேவியின் ஆலயம். முன்புறம் எதிரே ஒரு பாதாம் மரம், அழகிய தீபாராதனைத் தட்டுகளைப் போல் கிளை பரப்பிக் கொண்டிருக்கிறது. அதைச் சுற்றி வழுவழுப்பான மேடை அதில் வெறும் காவித் துண்டணிந்த, சிவப்புக் கயிறில் கோத்த ஒற்றை உருத்திராட்சம் அணிந்த சாமியார் இருக்கிறார். தாடி மீசை இல்லை. சற்று தொலையில் ஒட்டுக்கூரை கொட்டடிகள் தெரிகின்றன.

பளபளப்பாய் இழைக்கப்பட்ட படிகள்.

பட்டும் பளபளப்புமாக ஏழெட்டு ஆண் பெண்கள், பக்தர்கள் தெரிகின்றனர். மிகப் பெரிய சலவைக்கல் கூடத்தில் ஓர் அழகிய விதானமுடைய மண்டபத்தில் தேவி சலவைக் கல்லில் எழுந்தருளி இருக்கிறாள். சரிகைக்கரையிட்ட மஞ்சள் அரக்குச்சேலை. பச்சை ரவிக்கை. முத்தும் இரத்தினங்களுமான மாலைகள். சிம்ம வாஹினியாக, அபயம் கொடுத்து அருள் புரியும் அம்பிகை. இந்தப் பிரதானமான அம்பிகையைச் சுற்றி, பதினாறு தூண்களில், மாடங்களில் அம்மனின் வெவ்வேறு திருக்கோலங்கள். காயத்ரி, சண்டிகை, துர்க்கை, என்றெல்லாம் பெயர் எழுதியிருக்கிறார்கள். ஆனால் அவளுக்கு எந்த வடிவிலும் சங்கரியே தெரிகிறாள்.

கொத்துக் கொத்தாக வெண்மையும் சிவப்புமாக மலர்கள் அலங்கரிக்கும் பிரதிமைகளில், கண்களைத் திறந்து கொண்டாலும் மூடிக் கொண்டாலும் அவளே தெரிகிறாள்.

சங்கரிக்கு நாற்பது, நாற்பத்தைந்து வயசிருக்குமா?

எத்தனை பூக்களை இந்தப் பூமி பிரசவிக்கின்றன?

எல்லாமே காயாகின்றனவா? காயாகாத பூக்கள் தாம் கடவுளுக்கு என்று அருள் பெறுகின்றன... ஆனால் கடவுளுக்கு மட்டுமே பூசனைக்குரிய பூக்கள், ஆணையும் பெண்ணையும் தெய்வ சாட்சியாக இணைத்து, உலகை வாழவைக்கும் ஒரு தொடக்கத்துக்கான மணமாலைக்கும் பயன்படும் பூக்கள்... ஆனால், மாலைகள் கட்சிகளின் வெற்றிச் சின்னங்களாக, அழுக்குப் பிரதிமைகளை அலங்கரிக்கும் கட்சி மாலைகளாக... மிதிபடும் பூக்களாக, புழுதியில் வீசப்பட்டுக் கருகும்...

நெஞ்சைச் சுமை அழுத்துகிறது. இலக்குத் தெரியாமல் ஒவ்வொரு பிரதிமையின் முன்னும் நின்று மீள்கிறாள்.

பெரிய இடமாக இருப்பதால், கூட்டம் இல்லை போல் தோன்றுகிறது. ஆனால், பிரதான மண்டபத்தின் முன் ஐம்பது பேருக்குக் குறையாமல் வந்திருப்பது தெரிகிறது.

வெள்ளை வேட்டி அணிந்த ஒரு பிரும்மசாரி போன்ற இளைஞர் பூசை செய்கிறார். அவர் என்ன மந்திரம் சொல்கிறார் என்பது செவிகளில் விழவில்லை.

பிரதானமான இராஜராஜேசுவரி - அம்மனைப் பூசித்த பிறகு, பதினாறு வடிவங்களுக்கும் அவர் பூசை செய்கிறார். ஆங்காங்கு அவருடன் பூசையைப் பின்பற்றுவதுபோல சில பக்தர்கள் நகர்ந்த வண்ணம் இருக்கின்றனர். அப்போது, வெளிப்பக்கம், திண்ணை விளிம்பில் நின்று, பார்க்கும் வித்தியாசமான ஒருவனை அவள் பார்க்க நேரிடுகிறது. ஒல்லியாக, கூன் விழுந்த முகம். வெள்ளை வேட்டி... கதர்... கதர்சட்டை வழுக்கையில்லை; முடி தும்பைப் பூவாக இருக்கிறது.

அவன் முகத்தைப் பார்க்கும் ஆவலில் அவள் அதே இடத்தைச் சுற்றி வலம் வருவது போல் வருகிறாள். முன்பக்க வாயிலில் பெரிய மணி தீபாராதனை என்றழைக்க சுநாதமாக ஒலிக்கிறது. அவன் திரும்புகிறான். அவளும் பார்க்கிறாள்.

கழுத்துமணி தெரிய... நெற்றியில் பச்சைக்குத்துடன்...

“என்னம்மா, பாக்குறீங்க?... எனக்கும் பாத்தாப்புல இருக்கு..."

“நா. தாயம்மா... குருகுலம்... எஸ்.கே.ஆர். தியாகி.”

“அம்மா..! நான் சுப்பய்யா, தெரியல...?”

ஏதோ பிடிகிடைத்தாற்போல் மனம் சிலிர்க்கிறது.

பேசவில்லை. தீபாராதனைக்குப் போகிறார்கள்.

இவன் அம்மா அஞ்சலை. அப்பா கிடையாது. சேவா கிராமம் போய் பராங்குசம் வந்து ஆசிரியப் பொறுப்பேற்ற போது இவனும் வந்தான். ராதாம்மாவுக்கு இந்தி பேசப் பயிற்சி கொடுத்திருக்கிறான். நல்ல கறுப்பு; இப்போது, உடல் வெளுத்து சோகை பாய்ந்தாற்போல் இருக்கிறான்.

திடுமென்று ஒருநாள், குடிலைவிட்டுப் போய்விட்டான். அம்மா அஞ்சலை குருகுலத்தில்தான் பின்னர் வேலை செய்தாள்.

பேச்சே எழவில்லை. வெகுநாட்கள் சென்றபின் அறிமுகமானவர்களைப் பார்த்த மகிழ்ச்சி பிரதிபலிக்கவில்லை.

தனியாகத்தான் வந்திருக்கிறானா? எங்கிருந்து எங்கு வந்து முளைத்திருக்கிறான்? பிரதான தேவிக்குப் பின் சுற்றிலும் வந்து தீபாராதனை முடிகிறது. கர்ப்பூரத்தட்டை அங்கேயே நடுவில் பீடமொன்றில் வைத்து விடுகிறார் பூசாரி.

பக்தர்களுக்கு அந்தப் பூசாரி இளைஞரே, பூக்களும் தீர்த்தப் பிரசாதமும் தருகிறார்.

குங்குமப்பூ, கர்ப்பூர மணமும் கரைந்த தீர்த்தம் நாவுக்குப் புனிதம் கூட்டுகிறது. புலன்கள் ஒடுங்கிவிட்டால் எந்தச் சுவையும் கவர்ச்சி கொடுக்காது அய்யா. ராதாம்மா வின் மறைவுக்குப் பிறகு, வழக்கமாக, கீதைபடித்துச் சொல்வார். அம்மாவுடன் அவளும் கேட்பாள்.

யோகத்தில் ஒடுங்கியவர் அம்மா. ஒரு குழந்தை வேண்டுமென்று, காந்திஜியைத் தனியாகச் சந்தித்து, புருசனின் பிரும்மசரிய விரதத்தை மாற்றிக் கொள்ள அறிவுரை பெற்றார். முத்தாக ஒன்று பெற்றதை இழந்த சோகம்... ஒரே வருசம்தான்...

இரவு படுத்தவர், உறக்கத்திலேயே இறைவனடி சேர்ந்தார். நோய், நொடி, எதுவுமே அநுபவிக்கவில்லை... ஆனால், அய்யாவுக்குத் துயரம் இல்லையா?...

புரியவில்லை.

அவள் அந்தப் பிரசாத தீர்த்தத்திலேயே, கனவில் மிதப்பது போல் நிற்கிறாள்.

ஒரு பெரிய ‘ஸில்வர்’ அடுக்கில் சர்க்கரைப் பொங்கல் தேவிக்கு நிவேதனமாயிருக்கிறது.

எல்லோருக்கும் வாதா மரத்தடியில் கண்ட சாமியார் வாழை இலைத் துண்டுகளைக் கொண்டு வந்து கொடுக்கிறார். பூசாரி ஒரு வாளியில் பொங்கலை எடுத்து வந்து பெரிய கரண்டியால் ஒரு கரண்டி எடுத்துப் போடுகிறார். பட்டுக்கரை வேட்டிகள், சரிகைப் புடவைகள், குழந்தைகள் என்று எல்லோருமே அந்த விசாலமான கூடத்தில் பளிங்குத் தரையில் அமர்ந்து பிரசாதம் உண்ணுகின்றனர்.

“அம்மா, நீங்களும் வாங்கிக்குங்க?”

இலையில் சர்க்கரைப் பொங்கல். நெய் மணக்கும், முந்திரி திராட்சை தெரியும் பொங்கல். சுவாமியும் பக்தர்களும் மட்டும் செழிப்பில்லை; பிரசாதமும் செழிப்புத்தான்.

பொங்கலுடன் அவள் படியில் இறங்குகையில், படிக்குக் கீழே உள்ள சுத்தமான கடப்பைக்கல்லில், சாமியார் ஒரு வாளிப் பொங்கலைப் போடுமுன், ஏழெட்டு நாய்கள் வருகின்றன.

எல்லாமே ‘அநாதைகள்’தாம். தாமே தெருப் பொறுக்கி இன விருத்தி செய்யும் உயிர்கள். அவற்றில் ஒன்று சொறி நாய். அது அவசர அவசரமாக விழுங்கிவிட்டு, இன்னும் இன்னும் என்று குலைக்கிறது. சுப்பய்யா, தன் இலையில் இருந்து கொஞ்சம் போடுகையில் சாமியார் ஓடி வருகிறார். “நீங்க போடாதீங்க சுவாமி. அது பசியில்லை; வெறி” என்று கையால் விரட்டி, “போ” என்று துரத்துகிறார். ஆனால் அது சுப்பய்யாவைக் குறி வைத்து ஓடிவர, தாயம்மா, தன் இலையில் இருந்து கொஞ்சம் கீழே போடுகிறாள். அதற்கு அது அடங்கவில்லை.

“நீங்க சாப்பிடுங்கம்மா..?” என்று சுப்பய்யா வற்புறுத்துகிறான். ஆனால் தாயம்மாவைத் துரத்தி, அவள் காலில் பாய்ந்து புடவையை இழுத்துக் கடித்ததும் அவள் பொங்கலை அப்படியே இலையுடன் நழுவவிட்டதும் மின்னல் வெட்டாக நிகழ்ந்து விடுகின்றன.

“அடாடா... நான் சொன்னேனே, கேட்டிங்களா?”... ஒண்ணும் ஆகாது தாயே, குழாயடியில் புண்ணைக் கழுவிக் கொள்ளுங்கள்.”

“சாமி! கொஞ்சம் குங்குமம் குடுங்க, கடிவாயில் வைக்கட்டும்” சுப்பய்யா குங்குமத்தை வாங்கி வருகிறான்.

அவளுக்கு ஒன்றும் புரியவில்லை. மண்ணில் பொங்கல் சிதறி இருக்கிறது. நாய் வெறி தணிந்தாற் போல் ஒடியிருக்கிறது.

“தாயே, இப்படி உக்காருங்க, கொஞ்சம் பிரசாதம் தரச்சொல்றேன், சாப்பிடுங்க!” என்று பாதாம் மரத்தடி மேடையில் அமர்ந்த அவர்களைச் சாமியார் உபசரிக்கிறார்.

“இருக்கட்டுங்க. இத இவரே வச்சிருக்காரு...” சுப்பய்யாவின் பிரசாதத்தில் இருந்து சிறிதளவு உண்கிறாள். அவளுடைய உறுதி, துணிவு எல்லாம் நைந்து கரைகின்றன. வெறிநாய், சொறி நாய் கடித்திருக்கிறது... இதுவும் ஊழ்வினையா?

குடிலில் ஒரு பையனை நாய் கடித்துவிட்டது. உடனே அய்யா அவனை ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்றார். தொப்புளைச் சுற்றி பதினாறு ஊசிகள் போடவேண்டும் என்று போட்டார்கள் ‘அம்மா மாதிரி’ உறக்கத்தில் பிராணன் போகுமா?

பசி, பட்டினி, எல்லாம் உச்சக் கட்ட மரண பயத்தில்தான் கொண்டுவிடுமோ? சாயபு, சிறை உண்ணா விரதத்தில் எப்படியெல்லாம் ஆசை காட்டி அதை முறிக்கச் சொல்வார்கள் என்று கூறியிருக்கிறார். ராமுண்ணி...? சே! அந்த நெஞ்சுரம் ஏனில்லை?

மவுனமாக அவர்கள் அந்தப் பெரிய ஆசிரமத்தைச் சுற்றி வருகிறார்கள். ஆங்காங்கே நின்ற கார்களில், வந்திருந்த பக்தர்கள் போகிறார்கள்.

மவுனம் கனத்திருக்கிறது.

“நீங்க எங்கியோ, வடக்கு அப்பவே போயிட்டதாச் சொன்னாங்க? இங்க வந்து எத்தினி நாளாச்சு? இப்பதா எங்கியும் இந்தி இல்ல. எங்க இருக்கிறீங்க? உங்கம்மா...”

“அவங்க அப்பவே ஊருக்குப் போனாங்க. அஞ்சாறு மாசத்துல போயிட்டாங்க இருபது வருசமாச்சு. நீங்க எப்படி இங்க? பெரிய வீட்டில இல்லியா?”

அவள் அதற்கு விடை கூறாமல், “குருகுலம் போனிங்களா? பராங்குசத்தைப் பாத்தீங்களா?” என்று கேட்கிறாள்.

“என்ன என்னத்துக்கு வாங்க போங்கன்னு சொல்லுறீங்க? நா உங்க மகன் போல. சும்மா, சுப்பய்யா, இங்கு எங்க வந்தேன்னு கேளுங்க...”

அவள் மனம் இலேசாகிறது. “என்ன இருந்தாலும் நான் படிச்சு வேல பாக்குற கவுரவம் இல்லாதவ. எதோ நல்லவங்கள அண்டி ஊழியம் செய்ததில் பூப்பந்த வச்சிட்ட எலச்சருகுபோல. இப்ப இதுல பூவும் இல்ல; பசுமையும் இல்ல. நொறுங்கிப் போனாலும், உசுரு உணர்வு, அடங்கல...”

கண்ணிர் பொங்க, குரல் கரகரக்கிறது.

“இதபாருங்க, விதின்னு சொல்றத இப்ப நானே நம்புறேன்... ராதாம்மா ஆஸ்பத்திரில இருந்தப்ப பார்த்தேன். பிறகும் - கடைசில, அய்யா அம்மாளையும் பார்த்தேன். அந்த இந்திக்களேவரத்துல, உங்க பய்யன் என்னை நேராக அடிச்சி, சட்டையக் கிழிச்சி, அவமானம் பண்ணினான். அப்புறமும் இங்கே இருந்தேன். அதுக்கும் மேலான அவமானம் வந்தது. ஒடிப்போனேன். எது அவமானம், எது இழுக்கு, எது தர்மம்னு ஒண்ணும் இப்ப புரியல. விதியின் கை எழுதிச் செல்லும் வாழ்க்கை...”

‘ஏம்பா, சுப்பய்யா, ராதாம்மா வீட்டுக்காரர், பையன்லாம் எங்க இருக்காங்க தெரியுமா?...”

“அவங்க அப்பவே நேவிலேந்து ரிடயராகிட்டாங்க. வடக்கே இமாலயப் பக்கம், போனாங்க. சிப்கோ மூவ்மெண்ட்ல தீவிரமா இருந்தாதா கேள்விப்பட்டேன்.”

“அது என்னப்பா?...”

“அதுவா, அங்கே பெரிய மரத்தெல்லாம் வெட்டிக் காடுகளை அழிச்சி, பரிசுத்தங்களை மாசுபடுத்துவதை எதிர்த்து ஒர் இயக்கம். ‘சிப்கோ’ன்னா ஒட்டிக்கிறதுன்னு அர்த்தம். கன்டிராக்ட் தடியங்க மரம்வெட்ட வரச்ச உங்கள மாதிரி பொம்பிளங்க அதை அப்படியே கட்டிட்டு ஒட்டிட்டு, எங்கள வெட்டிட்டு பின்னால மரத்த வெட்டுங்கன்னு சொல்ற இயக்கம்...”

நெஞ்சு உருகுகிறது “அய்யா, பய்யன்...?”

“பையன் அமெரிக்காவுல பி.எச்.டி. பண்றான்னு சொன்னாங்க அவங்க அத்தை இறந்து போனாங்க. வேற சேந்த மனிசங்க யாரையும் நான் பார்க்கல...”

“விக்ரம். அதுக்கு ஒரு கல்யாணம் காட்சி பண்ணிலியா ?”

“தெரியல. இப்ப உலகமே கிராமம் மாதிரி சுருங்கிப் போச்சின்னு சொல்றாங்க. வியாபார, அதர்மத் தொடர்பு கள்தா இறுக்கிப் புடிச்சிட்டிருக்கு. அதுக்குள் மனுசங்க ஒருத்தொருத்தர் தெரியாம வலைக்குள் இறுகிப் போயிட்டாங்க. எங்கியோ இருந்து வந்து கடை துறந்து கோழிக்கறி பண்ணி விக்கிறான்...”

“அய்யோ, அதெல்லாம் சொல்லாதீங்க...”

நிகழ்காலமே வேண்டாம் என்று சொல்வது போல், மரங்களினூடே வந்து வெளியே நிற்கிறார்கள். வரிசையாகச் செருப்புகள் வைத்திருந்த இடத்தில் சுப்பய்யா தன் செருப்பை இனம் கண்டு மாட்டிக் கொள்கிறான். அவளுக்குச் செருப் பணிந்து பழக்கமில்லை. வெளியேறுகிறார்கள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 22


அவர்கள் சாலையில் அடிவைக்கையில் ஒரு பஸ் வருவது தெரிகிறது இந்த ஆசிரமத்துக்கே ஒரு கும்பல் இறங்குகிறது.

“வாங்க ஏறுங்க; நாம போகலாம்?”

“வாணாம்பா, ஒரெட்டு நடந்து போயிரலாம்?”

“இப்ப இந்தப் புடிவாதம் வாணாம். ஏறுங்க” அவன் பலவந்தமாக அவளைப் பஸ்ஸில் ஏற்றுகிறான். “கே.ஜி. ஆஸ்பத்திரி. ரெண்டு டிக்கெட்” என்று சொல்லிவிட்டு மகளிர் இருக்கையில் காலியாக இருந்த இடத்தைப் பார்த்து உட்கார்த்தி வைக்கிறான்.

“கே.ஜி. ஆஸ்பத்திரியா? அங்கெ எதுக்கப்பா போவணும்? நாம மின்னாடியே எறங்கிட்டா குறுக்குச் சந்தில புகுந்து ஸ்கூல் பக்கம் திரும்பிடலாமே?”

“கொஞ்சம் வாய மூடிட்டு வரீங்களா ?”

அவன் முகம் ஏணிப்படிக் கடுப்பாக மாறவேண்டும்?

பெரிய சாலையில் அந்த ஆஸ்பத்திரி இருக்கிறது. வெகு நாட்களாகச் செயல்படும் ஆஸ்பத்திரி என்று பெயர். ஆனால் சென்று நெருங்கும் பிரபலம் பற்றி அவளுக்குத் தெரியாது.

சாலையில் அவர்கள் வந்திறங்கும் போது, பிற்பகல் மூன்று மணி இருக்கலாம். கிறிஸ்துமஸ், புத்தாண்டு பொங்கல் என்று எங்கே பார்த்தாலும் தள்ளுபடி விழா. ஃபிரிட்ஜ், வாஷிங் மிசின் கிரைண்டர் என்று நடுத் தெருவுக்கே வருவதுபோல் கடைபரப்பி இருக்கிறார்கள். துணிக்கடைகளோ, பழக்கடையில் மொய்க்கும் ஈக்களைப் போல் மக்களைக் கவரும் பரபரக்குள்ளாக்கி இருக்கின்றன. ஒரு புறம் தலையணை மெத்தை விரிப்பு என்று மக்களைக் கூவி அழைக்கும் வாணிபம். இடைஇடையில் சிக்கன், மட்டன் மசாலா நெடி வீசும் உணவுக்கடைகள். குப்பைத் தொட்டிகளும் நிரம்பி வழியும் கழிபட்ட பிளாஸ்டிக் குப்பைகள்... ஏதோ தோசைக்கு இடையே வைக்கப்பட்ட உருளை மசாலா போல் உயர்ந்து போயிருக்கும். ஆஸ்பத்திரிக்குள் அவன் அவள் கையைப் பற்றிக் கொண்டு அழைக்கிறான்.

“யே, இப்ப எதுக்கு ஆசுபத்திரி? வுடுங்க!”

‘எதுக்கா? சொறி நாய்; வெறி நாய், விசம் நீரை உறிஞ்சி, நீர்சுண்ட, எச்சிமுழுங்க முடியாம, நாயபோல” அவள் விலுக்கென்று கையை உதறிக் கொள்கிறாள்.

“அதெல்லாம் ஒண்ணுமாகாது. அதான் அம்பாள் குங்குமம் வச்சாச்சே!”

“எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கை இல்ல. முரண்டு புடிக்காம உள்ள வாங்க... எதோ சக்தி உங்களையும் தள்ளிட்டு வந்திருக்கு என்னையும் தள்ளிட்டு வந்திருக்கு. காரண காரியம் புரிபடல; வாங்க..."

ஆஸ்பத்திரியிலும் அந்த நேரத்தில் கெடுபிடி தெரியவில்லை. ஒரு பழைய வீடுதான். நுழைந்ததும் கூட மறைப்பில் தட்டி போல் ஒரு தடுப்பு. ஒழுங்கை போல் பின்புறம் செல்லும் இடத்தில் ஒரு கட்டிலில், நோயாளிப் பெண் படுத்திருக்கிறாள். சொட்டு இறங்கும் அந்த நிலையருகில் ஒரு பெண் கவலையுடன் நிற்கிறாள். பெஞ்சியில் வரிசையாக நோயாளிகளோ உறவினர்களோ குந்தியிருக்கின்றனர். எங்கோ ஒரு குழந்தை வீரிட்டுக் கத்தும் குரல் செவியில் விழுகிறது.

மருந்தகமும் உள்ளே இருக்கிறது. அருகில் உள்ள திட்டி வாசலில் சுப்பய்யா தலை நீட்டி “ஒரு நாய்கடி கேஸீங்க. ஊசி போடணும்” என்று சொல்வது செவியில் விழுகிறது.

“வளர்ப்பு நாயா, தெரு நாயா ?” என்று நர்ஸ் கேட்கிறாள்.

“தெரியல. ஆனால் அது கோயில் நாய்!”

“என்னய்யா ? வெளயாடுறியா? கோயில்ல நாய் வளக்கிறாங்களா ?”

“ஏன், கூடாதா?’ என்று கேட்டுவிட்டு, “அது சொறிநாய், வெறிநாய்...” என்று முடிக்கிறான்.

அவள் அவன் சட்டையைப் பற்றி இழுக்கிறாள். “ஒண்ணும் வாணாம்பா !”

“அப்ப, அந்தப்பக்கம் போயி சீட்டுப் போட்டுட்டு வாங்க. அஞ்சு ஊசி போடணும்; ஆயிரம் ரூபாய் ஆகும்.”

“இப்பவே அஞ்சு ஊசியும் போட்டுடுவீங்களா? ஆயிரம் ரூபாயும் குடுத்திட...?”

“என்னய்யா, எகன முகனயா பேசுறீங்க. இவ்வளவு ஆகும்னு சொன்னேன். சொறிநாய், வெறிநாய்னு சொன்னீங்க. அஞ்சு ஊசி போட்டாத்தான் பத்திரம். இப்ப முதல்ல முந்நூறு கட்டிட்டுச் சீட்டு வாங்கிட்டு வாங்க!”

அவன் அந்தப் பக்கம் நகர்ந்ததும் இவள் வந்த வழியில் நடையைக் கட்டுகிறாள். கோயிலுக்குப் போனாள், நாய் கடித்தது, சரி. இவனைப் பார்த்து எத்தனை வருசம் ஆயிருக்கிறது? இப்ப தீரும் என்று வந்த வழியில் ஆயிரம் ரூபாய்க்கு ஊசியா? முருகா? இவள் மாசச் செலவு கூட அவ்வளவு ஆகாதே?

விடுவிடென்று கடைகளுடே அவள் நடக்கையில் அவன் விரைந்து வந்து அவள் கையைப் பற்றி நிறுத்துகிறான். கைப்பிடி இறுகுகிறது எலும்பும் நரம்புமாகத் தெரியும். அந்தக் கைக்கு இத்துணை வலிமையா?

‘என்னம்மா? திரும்பப் பாக்குமுன்ன எதோ பி.டி. உஷான்னு ஒடுறீங்க ? நா முந்நூறு கட்டிச் சீட்டு வாங்கிட்டே! வந்து ஊசி போட்டுக்குங்க?”

“எனக்கு ஊசிகீசி ஒண்ணும் வாணாய்யா, நா அப்படி நாய் மாதிரி ஊளையிட்டுச் சாவணும்னு விதியிருந்தா, சாவறேன். என்ன வுடய்யா !” -

அவன் விடையே கூறாமல் அவளை இழுத்து வருகிறான்.

கட்டுக்கட்டும் இடத்தில் ஒரு நர்ஸ் பெண், அவள் சேலையை அகற்றி, காலில பட்ட கடிக்காயத்தைப் பார்க்கிறாள். முழங்காலுக்குக் கீழ் ஆடு சதையில் கவ்வி இருக்கிறது. இரண்டு சுற்றுச் சீலையும் கிழிபட்டிருக்கிறது. இரத்தம் பட்டிருக்கிறது.

கடிவாயை மருந்து நீர் போட்டுக் கழுவிச் சுத்தம் செய்கிறாள்.

‘பல் ஆழமா முனெடத்துல பதிஞ்சிருக்கு பாரு... ஏம்மா போயி சொறி நாயக்கடிக்கிறீங்க இந்த வயசில...?” அவள் சிரிக்காமலே கடிபட்ட இடத்தில் மருந்துத் துணி வைக்கிறாள்.

“இந்தம்மாக்கு, புள்ள குட்டி, பேரன் பேத்தின்னு இல்ல. பொழுது போகல நேரா கோயிலுக்குப் போயி, சொறி நாயக் கடிச்சிட்டாங்க, போனாப் போவுதுன்னு, நா கோயிலுக்கு வந்தவ, இவங்கள தத்து எடுத்துக்கலான்னு இருக்கே...”

“அதும் சரிதா. வயசு எழுபத்தெட்டுன்னு போட்டிருக்கிங்க. இது இரண்டாவது குழந்தைப் பருவம். தத்தெடுக்கிறது சரிதான்..”

பஞ்சால் நன்றாகத் துடைத்து, பதமாக பிளாஸ்திரி போடுகிறாள்.

பிறகு, இடது கையில் ஊ சியும் போடுகிறாள் இன்னொரு நர்ஸ்.

“ரொம்பத் தண்ணி படாம வச்சுக்குங்கம்மா ? நாளக்கழிச்சி வாங்க. அடுத்த ஊசி போட்டுக்கலாம்.”

வெளியே வருகிறார்கள்.

சுப்பய்யா ஒர் ஆட்டோவைக் கூப்பிடுகிறான்.

“ஏம்ப்பா, உங்கிட்டக் காசு ரொம்ப இருக்குதா? பொடி நடையா நடந்து போயிரலாமே?”

“உங்க கால்ல செருப்பில்ல. கால்ல காயம். ஏறி உக்காருங்க..” அவள் உட்காருகிறாள்.

“பள்ளிக்கூட வாசலில் கலகலப்புக் கூட்டம் இல்லை.

திரும்பும்போது, சங்கரி இருந்த வீட்டுக்கூரை ஒடுகள் பிரிக்கப்பட்டிருக்கின்றன... சொரேலென்கிறது...

“ஏம்ப்பா. கொஞ்சம் நிறுத்து?...”

அவன் தாண்டிப் போய் விடுகிறான். வீட்டுப் பக்கத்தில் அய்யப்பன் வாழைகள் இலைக்குப்பைகள் அலங் காரங்களை இரண்டு மூன்று நோஞ்சான் மாடுகள், பன்றிகள் இழுத்துப் போட்டிருக்கின்றன.

அவள் வண்டியில் இருந்து இறங்குகிறாள்.

“த...சூ.” என்று கை ஓங்கிப் பன்றிகளை விரட்டுகிறாள்.

இடுப்பில் இருந்த சாவியை எடுத்துக் கதவைத் திறக்கிறாள். வீட்டில் அடி வைத்ததுமே, வயிறு கூவுகிறது.

“உள்ள வாங்க... வாப்பா...’ என்று திருத்திக் கொண்டு, பின் புறமிருந்து துடைப்பம் எடுத்து வந்து முன் வாசல் அலங்கோலங்களைப் பெருக்குகிறாள். அந்த வாழைக் கழிவுகளை உண்ணும் மாடுகளில் கொல்லையில் கட்டப்பட்டிருந்த செவலையும் இருக்கிறது. இவளைக் கண்டதும் அது தானாக வீட்டுப் பக்கம் போகிறது. உள்ளே வந்து பின்புறக்கதவைத் திறந்து அழைத்துக் கொள்கிறாள். சேலை நுனியில், இரத்தக் கறை தெரிகிறது. கசக்கியும் முழுதும் போகவில்லை.

வேறு சேலை மாற்றிக் கொண்டு, அடுப்பைப் பற்ற வைக்கிறாள். அரிசியைக் களைந்து வைத்துவிட்டு, சேலையை சோப்புப் போட்டுத் துவைத்து உலர்த்துகிறாள். அரைமூடி தேங்காய் இருக்கிறது. அதை நசுக்கி வற மிளகாய், புளி வைத்து அறைக்கிறாள்.

சமையலை முடித்துவிட்டு அவள் வெளியே வந்து பார்க்கிறாள். மாடிப்படி அறை பூட்டி இருக்கிறது. கூடத்தில், வெளித்திண்ணையில் இல்லை. எங்கே போய்விட்டான்?

பக்கத்து மனைக்கட்டில் செங்கல் வந்து இறங்கி அடுக்கி இருக்கிறார்கள். தெருவில் கம்பி கொண்டு போகும், சிமிட்டி மூட்டை சுமந்து செல்லும் ஏதேதோ வண்டிகள் செல்கின்றன.

“எங்கே போனான், சொல்லாமல் கொள்ளாமல் ? ஆனால், எங்கிருந்து எப்படி வந்தான்?...”

சூனியமாக இருக்கிறது கனவா, நிகழ்வா?

உள்ளே சென்று சாப்பிடவும் பிடிக்கவில்லை. வாயிலிலேயே நிற்கிறாள். கறுத்து வாடிய முகத்துடன் வருகிறான்.

“ஏம்ப்பா? எங்கே போயிட்டே? நா ஒரு சோத்தப் பொங்கி வச்சிட்டுக் காத்திருக்கிறேன். பொழுது சாஞ்சு போச்சி ஒருவேள சாப்புடத்தான் போனிங்களோ?...” வேகமாகச் சொற்கள் வருகின்றன.

“வந்து... அந்த ஒட்டு வீடு பிரிக்கிறாங்களே, அங்க யார் இருந்தாங்க?” சுருக்கென்று நெஞ்சில் கத்தி குத்திவிட்டாற் போல் வேதனை தோன்றுகிறது.

“வயசான ஓமியோபதி டாக்டர், ஏழைகளுக்கு வைத்தியம் பண்ணிட்டிருந்தார். இப்ப வரமுடியல போல இருக்கு அவரு படப்பை பக்கத்திலேந்து வருவார்... சாப்பிட வரியா?”

“ஒரம்மா கிரீச் நடத்திட்டிருந்தாங்கன்னு சொல்றாங்களே, சங்கரின்னு...”

“அ... ஆமாம்.. அவளத்தான் நாலு மாசமாக் காணல. புறந்தவன் வந்து கூட்டிட்டுப் போயிட்டாப்பல...”

‘நீ முதல்ல சாப்புட வா. எனக்குப் பசிக்கிதப்பா, ஊசிபோட்டதோ என்னமோ, என்னிக்கும் தெரியாத பசி...”

“நீங்க அவுங்களப் பாத்திருக்கீங்களா தாயம்மா...”

“முதல்ல நீ பசியாறு. பிறகு பாக்கலாம்...” இலையைப் போட்டு மணை போடுகிறாள். அவன் முகம் கழுவிக் கொண்டு வருகிறான்.

சோறு ரசம், துவையல்... மோர்...

அவன் இலையை எடுத்துக் கொண்டு செல்கிறான். இவள் கரைத்துக் குடிக்கிறாள்.

அப்போது ரங்கன் உள்ளே வருகிறான். பெஞ்சியில் கிடந்த தந்தி பேப்பரைப் பார்த்துக் கொண்டு நிற்கும் சுப்பய்யாவைப் பார்க்கிறான். என்னம்மா, சொல்லாம கொள்ளாம கதவப் பூட்டிட்டுப் போயிட்ட காலம இல்ல, மத்தியானம் இல்ல, புள்ள வீட்டுக்குத் தான் போயிட்டியோன்னு போன் போட்டுப் பார்த்தேன், சரி வித்யாலயா வுக்குத்தான் போயிட்டியோ மனசுமாறின்னு விசரிச்சேன், அங்கும் இல்ல. எங்க போயிட்டு வரே! இவுரு யாரு?”

இவன் இப்போது எஜமானனாகிவிட்டான். வரீங்க, போறீங்ககூட இல்லை...

“இவுரு யாரு?”

“இவுரு, அந்தகாலத்து ஆளு. குருகுலத்துல வேலை செய்தவரு. பேரு சுப்பய்யா...”

சுப்பய்யா நிமிர்ந்து பார்க்கிறான்.

“வணக்கமுங்க. நீங்களே சொல்லுங்க. என்ன இந்த இடமெல்லாம் பொறுப்பா பாத்துக்க சேர்மன் அய்யா, வச்சிருக்காங்க. இப்படித்தா. சொல்லாம கொள்ளாம திடுதிடுன்னு போயிடறாங்க, வயிசாயிடுச்சி. மகன் கூப்பிடுறாங்க. அங்க போகணும். இல்லன்னா குருகுலம் பக்கமே அவுட் அவுஸ் தாரேன்னு கூப்பிடுறாங்க. அதுவும் மாட்டேன்னு இப்புடி நடக்குறாங்க. எனக்குத்தானேய்யா, பொல்லாப்பு? நீங்க எந்த டிரெயின்ல, எங்கேந்து வாரீங்க? எனக்கு ஒரு சேதி சொன்னா டேசனுக்கு வந்திருப்பேன்ல? தியாகி அய்யா சொந்தக்காரங்களா?” ரங்கனின் நிலை கொள்ளாத பரபரப்பு வெளிப்படுகிறது.

“அவங்களுக்கு ரொம்ப வேண்டியவன்தான். இப்பதா அவங்க யாரும் இல்லையே?”

“அது சரி. நீங்க எந்துரிலேந்து வந்திருக்கிறீங்க?”

“புனா... ஒரு காரியமா வந்தேன். இந்தம்மாவை எதிர்பாராம கோயில்ல பார்த்தேன். அங்க இவங்கள ஒரு நாய் கடிச்சிட்டது. கூட்டிட்டுப்போயி ஆசுபத்திரில ஊசி போட்டுக் கொண்டாந்துவிட்டேன்.”

‘அடாடா... என்னம்மா ? இதுக்குத்தா நான் சொல்லிட்டேருக்கிறன். எந்த கோயிலுக்குப் போனீங்க? திருநீர்மலையா? ஏகாதசி கூட இல்லியே?...”

“இதபாரு ரங்கா. நா ஒண்ணும் வீட்டுக் கைதி இல்ல. உன் சோலியப் பார்த்திட்டுப் போ. அப்பிடிப் போனா போயிட்டுப் போறன்...”

அவன் ஒன்றும் பேசாமல் போகிறான். முகம் உப்பியிருக்கிறது.

சுப்பய்யா விளக்கு வைத்து, பிரார்த்தனை என்று அரைமணி உட்கார்ந்திருக்கிறான்.

“ஏம்ப்பா, நீ என்ன காரியமா வந்தேன்னே சொல்லல. அய்யா பாட்டுக்கு டிரஸ்ட்னு, எல்லாம் வச்சிருக்கிறதா சொல்றாங்க. ஆனா, கடைசி மூச்சை அவங்க வுடறப்ப நாந்தா இருந்தே. சுத்தப் பாலிலும் விசம் சேந்திடும்னு அப்பவே புரிஞ்சிட்டாங்க. இந்த இடத்துல, சத்தியமா, ஏழை எளிசுங்களுக்குக் கல்வியோ வைத்திய சேவையோ பண்ண, அம்மா பேரை வச்சி நடத்தணும்னு அவங்க எண்ணம். மாடில பீரோல, அம்மா, ராதாம்மா உபயோகிச்ச சாமான்கள், போட்டோ படங்கள், துணிமணி, வீணை எல்லாம் இருக்கு. அப்பவே பராங்குசம், என்னை அவங்க நெருக்கத்திலேந்து விலக்கணும்னு பார்த்தான் சுப்பய்யா. அய்யா, அம்மாவும் போன பிறகு, இந்த தேசத்த நினச்சி மனசொடிஞ்சி போனாங்க...”

“புரியிது...”

“என்னமோ, உன்னக் கண்டது எனக்கு இப்ப தெம்பா இருக்கு. முந்தாநா வந்து... அவ... என்ன மிரட்டுறாப்பல சொல்லிட்டுப் போயிருக்கிறா. இந்த இடம் மிச்சூடும் வளைச்சி பெரிய ஆஸ்பத்திரி, கெஸ்ட் அவுஸ், அது இதுன்னு அமெரிக்காவுக்கு மேல வரப்போவுதாம். இதபாரு, கிழக்கால, குடும்பம் குடும்பமா பொழப்பத் தேடி வந்து அல்லாடுதுங்க. எதுக்கால, அங்க பழைய பங்களா ஒண்ணு இருந்திச்சே, அதை இடிக்க வந்த சனங்களப் பாத்தேன். கடப்பாறய வச்சிட்டு வெயில்ல இடிப்பானுவ. அஞ்சும் குஞ்சுமாக இடிச்சத எடுத்து அடுக்கும். காலம அரிசி பருப்பு, கறி மீனு வாங்கி வந்து அடுப்பு வச்சிப் பொங்கும். தின்னும். எண்ணெய் காணாத முடி அழுக்கு. சாங்காலமா தண்ணி சேந்திக் குளிக்கும். ஆம்புளங்க ராத்திரி குடிச்சிப் போட்டு கட்டயா தரயில கெடப்பானுவ ஒரு பொம்புள, பாவம், ரெண்டு புள்ள, இங்க திண்ணையில படுக்கிறேம்பா... படுத்துக்கம்பேன்... இதையும் அப்படி இடிப்பாங்க...”

இவளுக்குத் தொண்டை கம்மிப் போகிறது. “எல்லா இடத்திலும் இதே வரலாறுதாம்மா. நா. இப்ப ஒரு முக்கிய விசாரணையா நேத்துதா வந்தே வந்ததும், விசாரிச்சேன். இந்த இடம், வீதி எனக்கு நல்லா தெரியுமே? ஆனா, இந்தத் தெருவுக்கு இப்ப, மயில் ரங்கம் தெருன்னல்ல போட்டி ருக்கு! புதுநகர் காலனி அதுவும் தெரியல. மணிக்கூண்டு கிட்ட விசாரிச்சேன். அங்கே மெஸ் வச்சிருக்கிற அம்மா, அட்ரசப் பாத்திட்டுச் சொன்னாங்க. அந்த வீட்டக் காட்டினாங்க. வூடு டீச்சர் வீடு, வித்திட்டாங்க. மூணு லட்சம்னு வாங்கி ரிஜிஸ்தர் ஆயிடிச்சின்னாங்க. அப்பதா அங்க டாக்டர் இருந்ததா- வயித்தியம் பண்ணுவாருன்னு பூவிக்கிற பொம்புள சொல்லிச்சி. டீச்சரத் தேடிட்டுப் போகு முன்ன, ஸ்கூல்ல விசாரிச்சேன். வாச்மேன் சொன்னான், நீங்க விசாரிக்கிற பொம்புள, இங்க நாலு மாசமா இல்ல. அவங்க, சிவசக்தி ஆசிரமம் போகணும்னு சொன்னாங்க. அப்படியே போய்த் தங்கிட்டதாக் கேள்வி. நீங்க யாருங்கன்னு கேட்டான். நான் புனாவிலேந்து வந்திருக்கிறேன். அவங்க... அண்ணன்னேன். அப்ப நீங்க வேறயா? முன்ன கூட ஒரண்ணன் இப்படித்தா வந்து விசாரிச்சாரு. அந்தப்பொம்புள ஒரு மாதிரின்னு இழுத்தா... பளார்னு அவன் கன்னத்துல ஒரு அறை விட்டிருப்பேன். அடக்கிக்கிட்டு ஆசிரமத்துல போய்ப் பார்ப்போம்னு தா வந்தே. அங்க யாரும் தங்கறாப்புலவே தெரியலேன்னாங்க...”

“சுப்பய்யா...!” என்று பீறிடும் அவள் குரல் அலறலாக ஒலிக்கிறது. அப்போது அவன் சட்டை உள் பையில் இருந்து அந்தக் கடித உறையை அவளிடம் கொடுக்கிறான். கை நடுங்குகிறது. அவள் பிரிக்கிறாள்.

தேவரீர், உயர்திரு, சுப்பய்யா வாத்தியார் அவர்களுக்கு, அடியாள் சங்கரி, அநேக கோடி நமஸ்காரங்கள். என்னைத் தங்களுக்கு நினைவிருக்கும். நான் இப்போது, 13 மயில்ரங்கம் வீதி, பாரதி புது காலனி என்ற விலாசத்தில் இருந்து இந்தக் கடிதம் எழுதுகிறேன். என் பெரியண்ணன் ராஜஸ்தானிலும் சின்னண்ணன் சிங்கப்பூருக்கும் போய்விட்டார்கள். அம்மாவும் காலமான பிறகு என் நிலை மோசம். நான் உங்களை அநுமான் செளக்கில் பார்த்துப் பேச முயற்சி செய்தேன். கண்டு கொள்ளாமல் போய்விட்டீர்கள். பிறகு அண்ணன் மகனுக்கு இங்கே இன்ஜினியரிங் காலேஜில் இடம் கிடைத்தது. ஒரு வீடு எடுத்துக் கொண்டு அவனைப் படிக்க வைக்க - அவனுக்கு சமையல் பண்ணிப்போட என்று முடிவு செய்து என்னை இங்கே கொண்டு வைத்தார்கள். முதலில் மூன்று வருசம் ஒருவீட்டில் மாடியில் இருந்தோம். பிறகு அவர்கள் காலி செய்யச் சொன்னதால், பக்கத்திலேயே சிறு வீடொன்றில் இப்போது இருக்கிறேன். அண்ணன் பையன் படிப்பு முடிந்து சிங்கப்பூர் போய் விட்டான். எனக்கு அவன் இருந்த வரையிலும் பாதுகாப்பாக இருந்தது. பிறகு, நானே ஒரு ஜீவனம் தேட வேண்டி, இதே இடத்தில, வேலைக்குப் போகும் தாய்மாரின் சிறு குழந்தைகளைப் பார்த்துக் கொள்கிறேன். இந்த வீட்டின் வாசல் புறத்தில் ஒரு நல்ல டாக்டர், வயசானவர், ஏழைகளுக்கான வைத்தியசாலை நடத்துகிறார். இரவு எட்டு மணிக்கு அவர் போய்விடுவார். காலை பத்தரை மணிக்கு வருவார். அதனால் இரவு நேரங்களில் எனக்குப் பயமாக இருக்கிறது. இங்கே யாரையும் நம்ப முடியவில்லை. எனக்குத்திக்கு இல்லை. இந்தக் கடிதம் கண்டவுடன் என்னை வந்து ஏற்றுக் கொள்ளுங்கள். என்னைப் போன்ற ஆதரவற்ற பெண்களுக்கு இங்கே எந்தப் பாதுகாப்பும் இல்லை. உங்களைத் தான் தெய்வரூபமாக நம்பியிருக்கிறேன். உடனே தந்திபோல் பாவித்து வந்து தயவு செய்து ஏற்றுக் கொள்ளவும். தாள் பணிந்து கேட்டுக் கொள்கிறேன். அடியாள், சங்கரி...
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 23


ஜயந்தி டீச்சர் தெரிவித்த விவரங்கள் இரத்தக் கோடுகளாய் மின்னுகின்றன. தெய்வத்துக்கே உரியதாகப் புனிதம் காத்த மலரைக் கசக்கிப் புழுதியில் தேய்த்துவிட்டு, அதன் மீது, நாக்கூசும் அபவாத முட்களைப் படரவிட்ட கயவன் அரக்கனாக நின்று கொக்கரிக்கிறான். காவிப்பட்டு மணிமாலைகள்... சிவசக்தி ஆசிரமம் எப்படி?

பெத்த தாய், கூடப்பிறந்தவங்க, உழைப்பை வாங்கிட்டாங்க. யாருமே அவளைக் காப்பாற்றவில்லை. ஆனும் பெண்ணுமாக அஹிம்சைப் போராட்டத்தில் பங்குபற்றிச் சிறை சென்றார்கள்...

யு.ஜி.ல இருப்போம். சாப்பாடு கொண்டு வருவாங்க. சிநேகமாகப் பழகுவோம். தப்பு அபிப்பிராயம் வரக் கூடாதுன்னு கல்யாணம் பண்ணிக் கொள்வோம்...

பெண் நெருப்புத்தான். ஆனாலும் அவளைத் தவறாக ஆண் பயன் படுத்தினால், அழிவுதான். அந்த நெருப்பைப் பாதுகாக்க வேண்டும்.

சுப்பய்யா எங்கோ பார்த்துக் கொண்டு பேசுகிறான்.

இருபத்தஞ்சு வருசத்துக்கு முன்னே, குடில்ல, மருத முத்து ரயில் தண்டவாளத்துல தலைகொடுத்தான். நினப்பிருக்கா?

மைதானத்தில் பிள்ளைகளைக் கூட்டிப் பிரார்த்தனை செய்வதில் இருந்து உடற்பயிற்சி மேற்கொள்வது, தேசியகீதம், வந்தே மாதரம் இசைப்பது முதல் அனைத்துச் செயல் பாட்டு ஒழுக்கங்களும் அவன் தலைமையில்தான் நெறிப் படுத்தப்பட்டன. அப்பழுக்குத் தெரியாத உடை; தோற்றம். மாநிறம் தான். அவன் ஒழுக்கக் குறைவானவன் என்று கரும்புள்ளியை வைக்கவே முடியாது...

“ஏன்பா ?”

“சுசீலா தேவியத் தெரியுமில்லையா?”

“தெரியும். ரொம்பத் துவக்க காலத்திலேயே இங்கே வந்து சேந்தாங்க. புருசன் சிறுவயசிலேயே போயிட்டான். ஒரு குழந்தை, மூணு வயசு, அதுவும் நம்ப ஸ்கூலுக்கு வரும். சுசீலாவின் அக்கா, வாரம் ஒருமுறை கூட்டிட்டு வருவாங்க. அம்மாவும் அய்யாயும் கூடக் கொஞ்சுவாங்க. வந்தே மாதரம் நல்லாப் பாடும்...”

“நீங்கல்லாம் குடிலை விட்டுப் போன பிறகு, கபட மில்லாம இருந்த சூழல்ல, ஒரு துரும்பப் பத்த வச்சி எறிஞ்சாங்க. ஒரு தடவை சுசீலா லீவுக்குப் போயிட்டு வந்தாங்க என்ன நடந்திச்சின்னு தெரியல. மத்தியானம் சாப்பாட்டு நேரத்துக்குக் கிளம்பிப் போயிட்டாங்க. அன்னிக்கு சாயுங்காலம் அவங்கண்ணன் மட்டும் வந்தாங்க. என்ன நடந்திச்சின்னு தெரியல. விடுதியிலே இருந்த சரஸ்வதி டீச்சரையும், ஜானம்மா டீச்சரையும் கூப்பிட்டுப் பராங்குசம் விசாரணை செய்தாராம். இதெல்லாம் எனக்குக் கவனமே இல்ல. ஆனா, மாலைப் பிரார்த்தனைக்கு மருதமுத்து வரல. மறுநா காலையிலே சைதாப்பேட்டைத் தண்டவாளத்துல, எக்ஸ்பிரஸ் வண்டிக்குத் தலை கொடுத்திட்டார்.

ஆசிரமமே கொல்லுனு ஆயிட்டது. ரயில் பாதையைக் குறுக்கே தாண்டிப் போயிருக்காரு, விடியக்காலம் பாதையோரம் நடக்கப் போவாரு, விபத்துன்னு பேப்பர்காரங்க தகவல போட்டாங்க - அய்யாகூட இரங்கல் கூட்டத்துக்கு வந்து கண்ணீர் விட்டார். பராங்குசம் உருகினான். சுசீலா டீச்சர் பிறகு வரவேயில்லை...”

‘அட...பாவி...? இ...இது கொலையில்லியா? ஒரு அகிம்சைக் கோயிலில கொலைகாரப் பாவி அப்பவே உருவாயிட்டானா?...”

“ஆமாம்மா. இவன் சுசீலா டீச்சருக்கு மருதமுத்து சகவாசம் நெருக்கமாக இருப்பதாகவும், அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்து ஆசிரமத்தின் பேரைக் காப்பாற்றுங்கள் என்று ஒரு சக டீச்சர் எழுதுவதுபோல் மொட்டைக் கடிதாசி அண்ணன் பேருக்கு எழுதி இருக்கிறான். அவங்க உசந்த சாதி. சநாதனக் குடும்பம். இவரு தாழ்ந்த சாதி. அதுவும் விதவா விவாகத்தை ஏத்துக்காத வங்க. குழந்தை வேற இருக்கு. மருதமுத்துவை விசாரணை என்ற பேரில் என்ன சொன்னானோ? அவரு உசிரையே தியாகம் செய்தாரு... அடுத்த இலக்கு நான்.”

ஏலக்காயும் கிராம்பும் கர்ப்பூரமும் மணக்கும் பெட்டி என்று நினைத்திருந்தாளே? அதன் உள்ளிருந்து மோசமான பாச்சைப் புழுக்கையும் கரப்பான் புழுக்கைகளும் வெளியாகின்றன.

“அம்மா போயி, அய்யாவும் ஒய்ந்து போயிருந்தாங்க. இவன் அவங்க வரபோதெல்லாம் பிரமாதமா சத்திய ஜோடனை செய்து வச்சிருப்பான். எனக்கே ஒண்ணும் அப்பல்லாம் தெரியலன்னா பாருங்க? நிர்வாகமே கொஞ்சம் கொஞ்சமா காந்தி சத்தியத்தில் இருந்து நழுவி, கறைபடிய ஆரம்பித்திருக்கு - கணக்கு வழக்கெல்லாம், அவன் பேரில் தனிச் சில்லறை சேரும் வழி கண்டு பிடிக்கச் சொல்லிக் கொடுத்தது. எல்லோரையும் கைக்குள் போட்டுக் கொள்ளும்

சாதுரியங்கள் சேர்ந்தன. அதனால அடுத்த களை எடுத்தல் நான்தான்...”

“என்னமோ இந்தி எதிர்ப்புச் சூழலில் ஒட்டாம வடக்கே போயிட்டன்னு தான் நினைச்சிருந்தேன். அய்யாவிடம் வந்து நீ அப்படித்தான சொல்லிட்டுப் போனே?”

“ஆமாம்மா. இதெல்லாம் மோசமான பண்பாட்டு ஒழுக்கச் சிதைவுகளில் கட்டிய அரசியல் ஆட்சிகளில் விளைந்த பயன்கள். மது விலக்கை எடுத்து, கண்ட கண்ட இடங்களிலெல்லாம் கடைதிறந்து மது சாரத்தை ஓட விட்டது, சினிமா கடைவிரித்த இழிவுகள், ‘கற்பழிப்பு’ என்ற சொல்லே உச்சரிக்கச் கூசிய ஒழுக்கங்களை பத்திரிகைளெல்லாம் ‘மஞ்சளாக’ மாறியதால் சுத்தமாத் துடைத்தன. (ஏ) சினிமாங்கற முத்திரைதான் பணத்தை அள்ளித்தரும்னு, இந்த சென்னைப் பட்டினத்து சாலை, மூலைமுக்குக ளெல்லாம் விளம்பரங்கள்... மருதமுத்து, மயிர்நீப்பின் உயிர் வாழாக் கவரிமானானார். எனக்கு உயிரை விடுவது கோழைத்தனம்னு பட்டது. மழலைப்பள்ளி இருந்தது. அய்யா இருந்த நாளில் பக்கத்தில் இருந்த குப்பத்துக் குடிசைப் பிள்ளைகள் கூட வரும். அது அம்மா வந்த காலத்தில் மழலைப்பள்ளிக்குக் குடிசைக் குழந்தைகள் வருவதில்லை. ஓரளவு வசதியாக இருக்கும் குழந்தைகள் வந்தன. எல்லாக் குழந்தைகளும் வெளியே இருந்து தான் வந்தார்கள். தோட்டக்காரன், காவலாளி யாருக்குமே உள்ளே குடும்பம் இல்லை. அநேகமாகத் தங்கும் பிள்ளைகள், டீச்சர்களுக்கு மட்டுமே விடுதி. அது அம்மா இங்கே வரும் நாட்களில் குழந்தையை விட்டுவிட்டு வருவார்கள். அது தானாக ஆடிப்பாடிட்டிருக்கும். அநுசுயா டீச்சர், நான், ஆபீசில் இருந்தால் அது அங்கேயே இருக்கும். திடும்னு ஒருநாள் வித்யாலயாவின் வெளிப்புறச் சுவரில், என்னையும் அநுவையும் பற்றி, கேலிப்படம் போட்டிருந்திச்சி. அது சுப்பய்யான்னு எழுதி, “நாங்க புதிசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க”ன்னு பாட்டுப் போட்டிருந்திச்சி. குழந்தை திகைச்சுப்போயி பாக்குறப்பல...

“நல்ல வேளையா, நான் காலம சூரியன் உதிக்கும் போதே நடக்க வெளியே வந்தவன் பாத்திட்டேன். ஒடனே உள்ளே கொட்டடிக்குப் போயி தேங்கா மட்டையக் கொண்டு வந்து அழிச்சேன். நேரா பராங்குசத்து வீட்டுக்குப் போனேன். உள்ளாறதான அப்ப வீடு? அவங்க சம்சாரம், வாசல்ல கோலம் போட்டிட்டிருந்தாங்க. ‘இந்தாங்கம்மா, மருதமுத்துகிட்ட யாரோ வெளயாடினாங்க, அந்த நெருப்புல அவரு உசிரைக் குடுத்தாரு. இப்ப ஏங்கிட்டயும் அதே வெளயாட்ட ஆரோ ஆடுறாங்க? நானொண்ணும் உசுரவுடமாட்டேன். சத்தியத்த நிரூபிக்க, குத்தம் பண்ணுறவங்களக் கொண்டு வர எனக்கு முடியும். ஆனா, சம்பந்தபட்ட, ஒரு அப்பாவித் தாய்க்கு அது கேடாக முடியும் ? என்று சொல்லிவிட்டு, சுண்ணாம்பை எடுத்து நானே அழித்தேன். அடுத்த நாளே கால் கடுதாசிய நீட்டிட்டு இங்கே அய்யாட்ட வந்து சம்பிரதாயமாச் சொல்லிட்டுப் போனேன்...

“அப்ப போனவன், இந்தப் பட்டணத்து மண்ணை இப்படி வந்து மிதிப்பேன்னு கொஞ்சமும் நினைக்கல...”

அவன் குலுங்கிக் குலுங்கி அழுகிறான்.

“அட... சுப்பய்யா? சுப்பையா? என்ன இது? ஏம்ப்பா, ஏதோ நடந்திச்சி. அதுக்குப் போய் இவ்வளவு வருத்தப்படுற? அது பிறகும் இங்கு வந்திட்டுத்தானிருந்தா. ரெண்டு வருசத்துல அவளும் புருசன் கூடப் போறதாச் சொல்லிட்டுப் போனா. அய்யா இறந்தபோது அவ பேப்பரில ‘தியாகின்’னு கட்டுரை எழுதியிருந்ததா நிக்கெலஸ் டாக்டரு படிச்சிச் சொன்னாரு, கூட்டத்துல...”

அவன் தேறி முகத்தைத் துண்டால் துடைத்துக் கொள்கிறான்.

“தாயம்மா, நா இப்ப போறேன். மணிக்கூண்டு பக்கத்துலதான் பழைய ஆளு, ராமலிங்கம்னு, அங்க தங்கியிருக்கிறேன். நா வரேன், நாளைக்கு. நீங்க மறுக்க ஊசி போட்டுக்கணும்” என்று சொல்லிவிட்டு எழுந்திருக்கிறான்.

“இரப்பா ஏ, இங்க ரா தங்கக்கூடாதா? இப்ப கூட அவதூறு கட்டுவாங்கன்னு பயமா?...”

“பயந்துகிட்டு ஒடல. இன்னும் கொஞ்சம் விவரம் விசாரிக்க வேண்டியிருக்கு வரேன்...”

அவன் சென்ற பிறகு, அவளுக்கு கையகல இருளை விரட்டியடித்த ஒளித்திரியும் அணைந்துவிட்டாற்போல இருக்கிறது.

பராங்குசத்தின் அசாத்திய வாதனைகளால் மட்டும் அவன் காயப்பட்டிருக்கவில்லை.

சங்கரி விசயத்திலும் காயப்பட்டிருக்கிறான்.

‘அடியாள் சங்கரி’ என்னை உடனே வந்து ஏற்றுக் கொள்ளவேண்டும்; பாதுகாவலில்லை...

அப்படி என்றால், இவன் அவளைத் திருமணம் செய்து கொண்டானா ? வரதட்சணைக்கோ எதற்கோ அவளை இம்சைப்படுத்துபவன் இல்லை. இவனைச் சேர்ந்த தாயும் அப்படிப்பட்டவள் இல்லை. நினைத்துப் பார்க்கிறாள். சங்கரியின் கழுத்தில் தாலிச்சரடு இருந்ததாகத் தெரிய வில்லை. ஒரு சிறு மண்பவழ மாலை மட்டுமே தெரியும். கழுத்து இறங்காத ரவிக்கை; விலகாத மாறாப்புச்சேலை. தலைப்பு, தொங்காது. இழுத்து மடி உடுத்தி இருப்பாள்...

அவன் மறுநாள்தான் அவளை ஊசிபோட, வந்தழைத்துச் செல்வதாகக் கூறி இருக்கிறான்.

ஆனால், ஒருகால் வருவானோ என்று வாசலிலேயே நின்று பார்க்கிறாள்.

ஒடுகள் எடுத்த பிறகு அந்த வீடு இடிக்கப்படுகிறது.

குழந்தைவேலு வருகிறான்.

நடையில் சோர்வு. எப்போதும் போல் சிரிப்பு இல்லை; பொங்கி வரும் பெருமிதம் இல்லை. வந்து வராந்தா திண்ணையோரம் குந்துகிறான்.

“ஏம்பா, சோர்வா இருக்கிற? நீ இப்படி இருந்து நா பார்க்கலியே ?”

‘தல நோவுதும்மா. டீ வாங்கிக் குடிச்ச. மருந்து கடக்காரரு ஒரு மாத்திரை குடுத்தாரு கேக்கல...”

“ஏம்பா..? உங்களப் பாத்தாலே இருக்கிற துக்கம் பறந்து போகும்? பனி வெயிலோ ...”

‘இன்னாவா ? வூட்லே ஆரும் இல்ல. மன்சே செரியில்லிங்க.”

“ஏ, உங்க சம்சாரம் இல்லியா?”

“அவ மவன் ஆட்டோடு போயி குந்திகினா...”

“ஓ, மகனுக்குக் கலியாணம் ஆயிட்டுதா?”

“ஒரு புள்ளயும் கீது!”

“மகன் வேலையாயிருக்கிறாரா?”

“கீறாரு இன்சினிரு வேல...”

“அப்ப சந்தோச சமாசாரம்தான். நீங்க எம்புட்டுக் கஷ்டப்பட்டு, பொண்ணு புள்ளயப் படிக்க வச்சி ஆளாக்கி நல்ல நெலமைக்குக் கொண்டாந்திருக்கிய பொண்ணு பெரி...ய ஆஸ்பத்திரில வேல பாக்குது, அப்பாவுக்கு ஒடம்பு ‘சுகமில்லன்னா, பாக்காதா?”

அவன் பேசவில்லை. சிறிது நேரம் மெளனம்.

‘அம்மா, உங்களக்கும் புடுட்டுக்கிற, நாங்கூட எத்தினியோ தபா நெனச்சிட்டுகிற. இந்தம்மா, அமைச்சர் புள்ளிய வுட்டு, இப்டீ வந்து குந்தினுகிதேன்னு. பொண்ணாவுது, புள்ளியாவுது!”

இவளுக்கு ஒன்றும் தோன்றவில்லை.

‘உங்கிட்ட சொல்றதுக்கிண்ணாம்மா; சருக்கார் ஆசுபத்திரி வேல வந்திச்சி. எனக்கு ஒரு நோவுன்னா, போயி வயித்தியம் பாத்துக்கலாம்... இப்ப... அந்த ஆசுபத்திரி வாசலுக்கே போவுறதுக்கில்ல...”

“வாரம் ஒரு தபா உங்கள வந்து பாக்குறதில்ல?”

“அதும் பேச்ச வுடும்மா. நா. நெனச்சாப்புல அது இல்ல. போன வாரம் வந்திச்சி. நா, கல்யாணம் கட்டிக்கிறேன்னு சொல்லிச்சி. நா ஒண்ணும் பேசல. அந்தப்பய இன்னா செஞ்சான் ? படிக்கிறப்பவே, லவ்வுன்னு ஆயி அப்பனுக்குத் தெரியாமயே கட்டிக்கிட்டான். பொண்ணுகூட பெரி...வூடு புருசன் பொஞ்சாதி ரெண்டு பேரும் வேலைக்குப் போவணும். அப்ப வந்து ஆயியக்கூப்புடுறான். இவ, மண்ணத்தட்டிட்டுப் போறா... தனி வூடுதான வச்சிகிறாங்க? அப்பா, நீங்க வாங்கன்னு கூப்புடல. போம்மா...”

குறையே சொல்லாத மனிதன். தன் மக்கள் கடைத்தேற கூழையாகி எங்கெங்கோ கவடு தெரியாமல் புகுந்து புறப் பட்டவன். அவனுக்கும் தன் மான உணர்வு, காயப்பட்டிருக்கிறது.

“ஆரோ ஒரு பெரி... டாக்டராம். வயசு அம்பதாவுதாம். இது. தேவையாம்மா? எங்கூரு பையனே ஒருத்தன் மருந்து கடை வச்சிகிறான், கன்டோன்மென்ட் பக்கம். ‘மாமா, எப்டிகிறே’ன்னு விசாரிப்பன். இது எப்பவானும் வந்து கண்டா, கேலி பேசுவா. ஒரு அஞ்சு சவர அப்டி இப்டியா சேத்து வச்சிகிறே. நெல்ல படியா ஒரு கலியாணம் கட்டி வச்சி, கெடக்கலான்னு நெனச்சது கெனாவாப்பூட்டுது.”

“நீங்க கலியாணத்துக்கே போவலியா?”

“நா புள்ளவூட்ல போயி, என் சம்சாரம் கையில அத்தக் குடுத்தே... ஒரு சவரன் மோதிரம், மூணுசவரன் செயின். ஒரு சவரன் காதுக்குத் தொங்கட்டானும், பூமாதிரி தோடும். எனக்குத் தெரிஞ்ச சேட்டு கடயிலதா சீட்டுப் போட்டு வாங்கின. புள்ள கலியாணம் போவல. பேரப் புள்ளிக்குக் காது குத்து வைப்பாங்கன்னு நெனச்சே ஒருநா பய்ய காருல வந்தா. புள்ள பாத்துக்கணும். தனி ஆடு வச்சிகிறேன்னு இட்டுகினு போனா.”

“நீங்க போகலியா?”

“ஒரு வாட்டி போன. நம்ம புரவலர் அய்யா வூட்டுக்குக் கூடதா போவ. அங்க இன்னான்னாலும் கச்சின்னு ஒரு மருவாதி உண்டு. ஒடனே ஃபோன் போட்டு சீட்டு வாங்கிக் குடுத்தாங்க... அங்க மதிக்கலன்னாக்கூட, அட போன்னு வுட்டுடல... என் சம்சாரம்கிறாளே, அவக்கு ஆருமில்ல. எங்க சொந்த ஊரு, திருச்சி பக்கம், சிமிட்டி ஃபாக்டரிக்குப் பக்கம். மானம் பாத்த சீம. சிமிட்டி பாட்டரி கட்டுறப்ப அங்க வேல செய்யிற பங்காளியோட சண்ட போட்டுட்டு அடிச்சிட்டே போல்சில சொல்லிடுவான்னு ஒடியாந்தே. இங்க அப்ப லீக்கோ கரி ஏசண்டு ஒருத்தர் இருந்தாரு. அவுரிட்ட மூட்ட செமப்பே. அப்படி உருண்டு வந்த மண்ணாங்கட்டி நானு. மூட்ட செமக்கிற பயலுவல்லாம் குடிப்பானுவ கண்ட பொம்புள சாவாசமும் வச்சிப்பானுவ. நா... இத இது போல, இப்ப ஏ.ஜி. ஆசுபத்திரி கிதே, அதுக்குப் பின்னால, ஏசன்டு அய்யா ஆடு. நாயுடு... ராமம்போட்டுட்டு செழுப்பாருப்பாரு... பீடி சிகரெட்டு ஒண்னும் தொட மாட்டே... காலம் பெரி...கெணறு. அதுல தண்ணி எறச்சிக் குளிச்சிப்பேன். வாரத்தில ரெண்டு வாட்டி, சினிமாக்குப் போவ. எம்.ஜி.ஆர். படம்னா, மொத்தல் போவ... கலியாணம் காச்சின்னு நெனக்கல. அப்ப, இவ கலியாணங்கட்டி புருசன் செத்திட்டான். ஆருமில்லாம தா இருந்தா. அப்ப, ரயில் பாலம் புதிசா கட்டுறாங்க. எல்லாப் பொம்புளக கூடவும் போவா வருவா. நா அம்பது கிலோ மூட்டையச் செமந்து வண்டில வைப்பேன். குடோனிலேந்து வாரப்ப, பாப்பா ஒரு நா. ராத்திரி பொம்புளகளோடு சினிமா போயிகி நானும் அடுத்தாவுல குந்திகிறே. எவனோ இவகிட்ட வி

பண்ணிகிறான். அயுதுகினே வெளியே போயிட்டா. அப்பால, மக்யா நா போயி, நாஞ்சொன்ன, உன்னிய கல்யாணம் பண்ணிகிறே சம்மதமான்னே.

“நாயுடு சாருக்கு ரொம்ப சந்தோசம். “மண்ணாங்கட்டி, நீதா நல்ல மனிசன். நீ வெறும் மண்ணில்ல. தங்கக் கட்டி!”ன்னு சொல்லி, அவுருதா இருநூறு ரூவா செலவு செஞ்சி, திருநீர்மலைக்கு இட்டுப் போயி கட்டி வச்சாரு. அவ, அவங்க வீட்ல வேல செஞ்சா. நல்ல மனிசன். லீக்கோ கரியுமில்ல. அவுரு, அந்தம்மால்லாம் பூட்டாங்க. வூட்டையும் இடிச்சிட்டாங்க...”

“சுவரோடோனும் சொல்லி அழு” என்று மனச் சுமையைக் கொட்டுகிறானோ?

“அவ இப்ப, புருசன் பெரிசில்ல, வசதியாகிற மகம்வூடுதா பெர்சுன்கிறா. மருமகப் பொண்ணு டக்குபுக்குனு வூட்டுக்குள்ளாறவே ஷூ போட்டுகினு தஸ்ஸாபுஸ்ஸு இங்கிலீசில பேசுறா. ‘செவுந்தி, உனுகு இது தேவயா? யார் யாரோ, எசமானுங்க, வூட்ல, சம்பளத்துக்கு வேல செஞ்சம். அல்லாருமே நன்னி விசுவாசமா கீறாங்க. ஆனா, பெத்தவங்கள வேலக்காரங்கன்னு நெனக்கிற எசமானுவ தேவயா? வா, போவலாம்’ன. அட, போய்யா, நம்ம புள்ளிங்கதான். எனக்கு ஒண்ணும் கொறயில்லன்னிட்டா. பெத்த புள்ளிங் களே நம்ம மதிக்கல. பேரப்புள்ளிங்களா மதிக்கப்போவுது?... சரி, வாரம்மா. உங்கிட்டப் பேசுன. தலவலி கொறஞ்சா போல கீது... வாரம்மா...”

“ஏய்யா, கெளம்பிட்டீங்க? அப்ப தனியே சமையல் பண்ணி சாப்பிடுறீங்களா?”

அவன் திரும்பிப் பார்க்கிறான். “இல்ல, நானும் தனியாதா இருக்கிற. அட, வயிசான காலத்துல, ஒரு பிடி சோறு, தண்ணி நான் குடுக்கமாட்டனா? ஒரு கஞ்சி, கசாயம் எதுன்னாலும்...” அந்தச் சிரிப்பு எட்டிப் பார்க்கிறது.

கையெடுத்துக் கும்பிடுகிறான். “ஒங்க நெல்ல மன்சு புரியிது. என்னிக்காலும் வுயுந்து போனா, வாரன், வார பெரி...ம்மா?” என்று செல்கிறான்.

பொய்யும் களவும் வஞ்சகமும், கஞ்சிக்கில்லாத வறுமையிலும் உடலுழைப்பிலும் பிறக்கவில்லை.

உலகில், இன்னமும் பரிசுத்தங்களும் தன்மான உணர்வுகளும், நேர்மைகளும் இருக்கின்றன. காந்திஜியின் சத்திய வாழ்வைப்போலவே இந்த மண்ணாங்கட்டியின் வாழ்வும் சத்தியமானதுதான். இந்த சத்திய அப்பனின் பரம்பரை, பொய்ம்மைகளால் கவரப்பட்டு அந்த மாயை யிலேயே முழுகுகிறது. ராதாம்மாவின் பையன் எப்படி இருப்பான்?

.....

அன்றும் மறுநாள் காலையிலும் சுப்பய்யா வரவில்லை.

ஆஸ்பத்திரிக்குக் கூட்டிப்போக நிச்சயம் வருவான் என்று நம்பியதும் நடக்கவில்லை.

மாலை ஐந்து மணிக்குத் தன் ஜோல்னாப்பையுடன் வருகிறான்.

“வாப்பா, நேத்திலிருந்தே எதிர்பார்த்திட்டிருந்தேன். ஆசுபத்திரிக்கு ஊசி போட கூட்டிட்டுப் போறேன்னு சொன்ன நெனப்பு...”

“...அடடா... மறந்துபோயிட்ட. இப்ப கெளம்புங்க போயி ஊசி போட்டுட்டு வந்திடலாம்?”

“அட... அதெல்லாம் வாணாம். நீ இப்ப உக்காரு. ஒரு டீ போட்டாந்து குடுக்கட்டுமா ?”

“அதெல்லாமும் வச்சிருக்கீங்களா?...”

“நான் சாப்பிடுறதில்லன்னாலும் வச்சிருப்பேன். யாருன்னாலும் வந்தா கெடக்கட்டும்னு ஒரு துாள் பாக்கெட்...”

“அதெல்லாம் வாணாம். அப்ப உங்களுக்கு இப்ப ஆசுபத்திரிக்குப் போக வாணாமா?”

“எனக்கு ஒண்ணும் ஆகாது. ஒரு ஊசி போட்டாச்சி, போதும். அம்பாள் குங்குமமே போதுன்னே, கேக்கல. சரி, நீங்க எங்க போயி என்ன விசாரிச்சிங்க?...”

“எல்லாம் விசாரிச்சேன்... நான் பாவி, பாவி, மன்னிக்க முடியாத பாவி!” என்று தலையில் அடித்துக் கொண்டு முகத்தை மூடிக் கொண்டு விம்முகிறான்.

பிரும்மசரியம். அது ஒழுக்கம். என்ன ஒழுக்கம்?

“நான் எங்கே போய் இந்த மகாபாவத்துக்குக் கழுவாய் தேடுவேன் ? உயர்குன்றில் தீபமாக என்னை நினைத்து இறுமாந்திருந்தேன். குழியில் விழுந்திருக்கிறேன். அந்தத் தீபம் பெருந்தீயாய் என்னைச் சூழ்ந்து கருக்குகிறது. எங்கே போய் இறக்கிவைப்பேன்? காவிப்பட்டு, மஞ்சள்பட்டு, ஸ்படிகம், உருத்திராட்சம், திருநீறு குங்குமம், சந்தனம் எல்லாமே கறை பிடித்துப்போன, சீழ்பிடித்துப்போன சமூக அடையாளங்களாய்விட்டது தாயே, இதைக் கீறி யாரே வைத்தியம் செய்யப் போகிறார்கள்? தீவிரவாதிகளா? வெடி குண்டுக் காரர்களா ?...

“கடைசி காலத்தில் பாபுஜியிடம், அமெரிக்கப் பத்திரிகைக்கு ஃபோட்டோ எடுக்கும் பெண் ஒருத்தி வந்து கேட்டாளாம். அணுகுண்டு வந்துவிட்டது; உங்கள் அஹிம்சை நெறி தாக்குப் பிடிக்குமா என்றாளாம். உண்டு - அணுகுண்டைப் போட வருபவன், கடைசி நிமிடத்தில் மனம் மாறிவிட முடியும. அணுகுண்டைவிட அஹிம்சை சக்தி வாய்ந்தது என்றாராம். அன்று மாலையே, அவரைச் சுட்டுப் பொசுக்கிவிட்டோம்...”

முதல் நாள் மண்ணாங்கட்டியாகிய குழந்தைவேலு, காட்டிய சோகமுகத்துக்கும் இதற்கும் வேறுபாடு இல்லை என்று அவளுக்குத் தோன்றுகிறது.

“அம்மா, சங்கரியைத் துடிதுடிக்க வதைத்து அழித்தவன் நான், நான்தான். பாவி, ஆண் என்ற கருவம், இறுமாப்பு. அகங்காரம். சாந்தி, சத்தியம், அஹிம்சை, பிரம்மச்சாரியம் எல்லாமே ஆண் அகங்காரங்கள்... இவனுக்குத்தான் பிரம்ம சாரியமா? அவளுக்கும் உண்டு. ஆனால், இந்த ஆண் வருக்கம் அவளை விடுவதில்லை. அபலையாக என்னிடம் புகலிடம் கேட்டாள். ஒரு பெண்ணாகப் பிறந்த குற்றத்துக்காகவே, ... ஐயோ, ஐயோ” என்று அறைந்து கொள்கிறான்.

அவள் அவன் கையைப் பற்றி இதம் செய்கிறாள். நெற்றிப் பொட்டைத் தடவுகிறாள்.

“தம்பி, நீ தெரிந்து செய்யல. வருத்தப்படாதே. எதுவும் நம் இச்சையில் நடக்கவில்லை. விதியின் கை என்று நீதானே சொன்னாய்? ஆறுதல் கொள்...”
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 24


குருகுலத்தில் இருந்து சென்ற சுப்பய்யா, புனேயில் ஒரு வித்யாலயத்தில் இந்தி கற்பிக்கச் சேர்ந்தான். தமிழர் அதிகமாக வசிக்கும் பேட்டை ஒன்றில், ஒரு வீட்டு மாடியறையில் குடியிருந்தான். அவர்கள் தாம் அந்தப் பகுதிக்குச் சொந்தக்காரர். கீழ்த்தளத்தில்தான் சங்கரியின் அண்ணன் குடும்பம் இருந்தது. வாயில்புறம் கடப்பைக் கல் வரந்தாவில் மரத்தாலான மாடிப்படி வராந்தாவில் இருந்து நேராகத் தெருவுக்குக் குழந்தைகள் போக முடியாதபடி, கம்பியழிப் பாதுகாப்பும் கதவும் இருந்தன. அந்த வீட்டுப் பின்புறம் செல்ல, பின்புறம் முற்றத்துக்குக் கொண்டு செல்லும் படிகளும் இருந்தன. அது மராத்திய தம்பதியின் பகுதியில் இருந்தது. முற்றத்தில் தகரக்குடிசைகளில் சில எளிய குடும்பங்கள் இருந்தன. இடையில் பெரிய பொதுத் தண்ணிர்த் தொட்டி; குளிக்க, துவைக்க வசதிகள். சுப்பய்யா அந்தப் பகுதியில் இறங்கி தன் தேவைகளை நிறைவேற்றிக் கொள்வான். மேல் தளத்தில் பொதுவான கழிப்பறை வசதி இருந்தது. கீழ்த்தள முற்றத்திலும் அந்த வசதி இருந்தது. சங்கரியின் குடும்பம் குடியிருந்த பகுதி முன் கூடம், ஒரு படுக்கையறை, சமையல், சாப்பாட்டுக்கான கூடம், குளியல், கழிப்பறை வசதிகள் கொண்டிருந்தன. அவர்கள் முற்றத்துக்கு வரவேண்டாம், என்றாலும் மேல் தளத்திலும், கீழ்த் தளத்திலும் வேலை செய்த ஹீராபாய், அவர்கள் வீட்டுத் துணிகளை முற்றத்தில் துவைத்து உள் வராந்தாவில் உலர்த்துவாள். ஏற்கெனவே ஒரு சூடு விழுந்த உணர்வில் இருந்த சுப்பய்யா, அக்கம் பக்கம் தமிழர் குடும்பங்களில் பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ளக் கூடக் கூசியிருந்தான். அவன் கற்பித்த வித்யாலயத்தில் மராத்தி மொழி பிரதானமாக இருந்தாலும் அந்த மொழியும் அவனுக்கு நன்கு தெரிந்திருந்தாலும், அவனுக்கு அந்தப் பிரதேசமும் சமூகமும் அந்நியப் பட்டிருக்கவில்லை. அவன் கற்பித்த வித்யாலயத்தில் இருபாலரும் படித்தார்கள்.

அவன் அன்றாட நியமங்களுக்கப்பால், எந்தத் திசையிலும் கருத்தைச் செலுத்தியிருக்கவில்லை. தானே தன் உணவை அநேகமாகத் தயாரித்துக் கொள்வான். ரொட்டி, காய், பருப்பு... ஸ்டவ்வில் இதைத் தயாரித்துச் சாப்பிட்டு விட்டுப் போவான். அங்கே காலை, ஏழரைக்கு ஒரு பகுதியும், பிற்பகல் இரண்டு மணிக்கு ஒரு பகுதியும் - இரண்டு அடுக்குகளாகப் பள்ளி வகுப்புகள் நடைபெறும். மேல்தளத்து தம்பதி அடிக்கடி கதவைப் பூட்டிக் கொண்டு மாலை வேளைகளில், பஜன், பூஜா என்று போய் விடுவார்கள். அவர்களுடைய மகள் ஒருத்தி கோலாப்பூரில் இருந்தாள். இரண்டு மகன்களும் வெளிநாட்டில் இருந்தனர். இராணுவம் தொடர்பான கணக்குத் தணிக்கை அலுவலராக வேலை பார்த்து அவர் ஒய்வு பெற்றவர். அந்த அம்மையாரும் வீட்டிலிருந்தபடி படித்து மராத்தியில் எம்.ஏ. பட்டம் பெற்றவர். அவர்கள் அவன் மீது அளவிறந்த அன்பு காட்டி னார்கள். ‘கீர்’ ‘கடி’ என்று ஒற்றையாக இருக்கும் அவனுக்கு அந்த அம்மை சிறு கிண்ணத்தில் ஏதேனும் கொண்டு வந்து கொடுப்பாள். அவர்கள் கோலாப்பூருக்குப் போகும்போது, வாயில் முன் கதவுச்சாவி ஒன்றை அவனிடம் கொடுத்து வைப்பார்கள்.

அவனுக்குத் தெரியும் போது, சங்கரியின் அண்ணனும் அண்ணியும் வேலைக்குப் போய்க் கொண்டிருந்தார்கள். மூன்று வயசில் ஒரு பெண் குழந்தை. இன்னும் கொஞ்சம் பெரியவனாக ஒரு பையன்; கைக்குழந்தை என்று மூன்று குழந்தைகள் இருந்தார்கள். அண்ணன் கறுப்பாக, தாட்டி யாக இருப்பான். மனைவியும் பருமன்தான். காலையில் எட்டரை மணிக்கு அவர்கள் பைக்கில் வேலைக்குச் செல்வார்கள். கைக்குழந்தை சங்கரியின் இடுப்பில் இருந்து அழும். பிறகு டாடா சொல்லும்.

இதெல்லாம் செவிவழிக்காட்சிகள் தாம். முன் கூடத்தில் ஒரு கட்டிலில் பெரியம்மா, படுத்திருப்பார். நலிந்த குரலில் அவள், “சங்கரி, புள்ள தொட்டில்ல என்ன பண்ணிருக்கான் பாரம்மா, முருகா, என்னிய இப்படிச் சோதிக்கிறியே?” என்று புலம்புவது செவிகளில் விழும்.

அவனையும் அறியாமல், அந்தக் குடும்பத்தில் உள்ள சங்கரி யார் என்று தெரிந்து கொள்ளும் ஈர்ப்பு... குடியேறியது என்று இப்போது தோன்றுகிறது.

அந்த மூன்று வயதுக் குழந்தை அருகேயுள்ள ஒரு பாலபவனத்துக்குப் போய்க் கொண்டிருந்தது. ஐந்தாறு வீடுகள் தள்ளி உள்ள அந்த மழலைப் பள்ளிக்குக் காலையில் அம்மாவோ, அப்பாவோ கொண்டு விடுவாரோ, அல்லது ஆயா யாரேனும் இருந்தார்களோ? ஒருநாள் மதியம், சங்கரி இடுப்பில் கைக்குழந்தையுடன் இந்தக் குழந்தையைப் பள்ளியில் இருந்து அழைத்து வந்ததை அவன் பார்த்தான். அவள் தலை குனிந்து நடந்தாள்.

அந்தக் குழந்தை ‘பாட்டி’ என்றழைத்துக் கொண்டு மேலே வரும். குழந்தை பெயர் பவானி. “பவானி காய்காதோ ?” என்பார்.

தாத்தா “மீ ஜேவ்லா” என்று அது மராத்தியில் பதில் சொல்லும். தன் கவனம் சிதறக்கூடாதென்று அவன் கதவை ஒருக்களித்துக் கொள்வான்.

மாலையில் சில தமிழ் மாணவர்கள் அவனிடம் வந்து இந்தி கற்றுக் கொண்டார்கள். எல்லோரும் பையன்கள். ஒரு தடவை அந்தக் குழந்தை அப்போது அவன் அறைக்குள் வந்தது. “பாட்டி இல்லே?”

“இல்ல. அவங்கல்லாம் ஊருக்குப் போயிருக்காங்க. நீ இப்ப சமர்த்தா, நல்ல பிள்ளையாக் கீழே போயிடம்மா, கிளாஸ் நடக்குதில்ல?” என்று அனுப்பி வைத்தான்.

அப்போது குளிர்காலம். விடுப்பு நாட்கள். வீட்டுக்காரர்கள் ஊரிலில்லை. அவன் அறையை ஒட்டடை அடித்துச் சுத்தம் செய்தான். போர்வை தலையணை உரை, சட்டை எல்லாவற்றையும் கீழே கொண்டு சென்று சோப்புப் போட்டுத் துவைத்துப் பிழிந்து விட்டு நீராடினான். சில்லென்று நீராடிவிட்டு வருகையில் கீழ்த்தளத்து சமையலறையில் இருந்து குழந்தை அலறும் ஒலி கேட்டது. ‘ஒண்ணுமில்ல... இதபாரம்மா...’ என்ற சமாதானங்கள் எடுபடவில்லை. தாளாத நோவில், குழந்தை துடிக்கிறது; தவிக்கிறது. அவன் மேலே துணியைக் கொண்டு செல்கையில் பின் வாயில் கதவு திறந்தது. ஹீரா... ஹீரா...? யாருமில்லை. அவள் அலறிப் புழுவாய்த் துடிக்கும் குழந்தையை எடுத்துக் கொண்டு முன்புறம் போகையில், தொட்டில் குழந்தையும் சேர்ந்து அழுதது.

“குக்கரை இறக்கிட்டு, பருப்பை எடுத்திட்டிருந்தேம்மா, சீலயப்புடிச்சி இழுத்து வம்பு பண்ணினா. அண்ணி அவளுக்கு வயிறு மந்தமா இருக்கு, உடம்பு சுடுது, ரசஞ்சோறு தவுர எதும் குடுக்காதன்னு சொல்லிட்டுப் போயிருக்காங்க காலம எந்திரிச்சி பேடா வோணும் சேவு வோணும்னு தொந்தரவு பண்ணுனா. ரெண்டு கிண்ணத்துல போட்டுக் குடுத்தே. திங்கியவுமில்ல. வாரி எறச்சிருக்கா... இப்ப கைப்பருப்பு இடுக்கிலேந்து நழுவி, இவகையில கொட்டிடிச்சி... தேங்காண்ணை ஒறஞ்சி கெடக்கு. என்ன பண்ணுவே...” என்று சங்கரி பிரலாபிக்கும் குரலில் விசிறிக் கொண்டிருந்தாள்.

“இப்படிப் புள்ளிகள வுட்டுப்புட்டு பெரிச மட்டும் கூட்டிட்டு இவுங்க போயிடறாங்க. சங்கரி, தோசமாவு இருக்கில்ல, பூசு. வாடிகண்ணு, பாட்டி விசரறேன்...”

அந்த நேரத்தில்தான் அவன் சென்றான்.

“என்னம்மா? என்ன ஆச்சி?...”

“அத்தே. அத்த. பருப்பக் கொட்டிட்டா. அடுப்பி லேந்து கொட்டிட்டா...”

“அடி செருப்பால, கேக்குறவங்க என்ன நெனப்பாங்க? அம்மயோட துக்கிரித்தனம் அப்பிடியே வருது?” என்று பாட்டி பாய்ந்தாள்.

“அம்மா நீ எதுக்கு இப்பிடி எல்லாம் பேசுற? புள்ளக்கு வலி எரிச்சல்...”

தோசை மாவை எடுத்து வந்து அவள் போட முனைந்த போது, அவன் பாட்டியின் பக்கத்தில் உட்கார்ந்திருந்த குழந்தை பவானியைப் பார்த்தான்.

புறங்கை, பிஞ்சு விரல்கள், மணிக்கட்டுப் பின்புறம், முழங்கைக் கீழ்ப்பகுதிகளெல்லாம் சிவந்து ரணம் பட்டிருந்தது. “தோசை மாவெல்லாம் வேணாம். சில் தண்ணி கொண்டாங்க... இருங்க, ஐஸ் வாங்கிட்டுவரேன்!” என்று அவன் எதிர்ப்பக்கம் இருந்த கடையில் இருந்து ஐஸ் துண்டுகள் வாங்கி வந்து தடவினான். பிறகு அவனே டாக்டரிடம் துரக்கிச் சென்றான்.

அவர் பார்த்துவிட்டு “நல்லவேளை, குளிர்ந்த ஐஸ் வைத்தீர்கள்” என்று சொல்லி, களிம்பு தடவி, பாதுகாப்பாக ஆங்காங்கு மருந்துத்துணி வைத்து பிளாஸ்திரி போட்டார். கையில் ஒரு சாக்லேட் கொடுத்தார்.

“யார் பெத்த புள்ளயோ ? சமயத்துக்கு வந்து உதவி பண்ணின. இல்லேன்னா, என்ன செய்யும் அது?... அவுங்க ரெண்டுபேரும் பெரி புள்ளயக் கூட்டிட்டு ஹாயா லீவுன்னு பம்பாய் போயிட்டாங்க. நாளக்கி மதியம் வராங்க. தம்பி சமயத்துல உதவின...” என்று நன்றி சொன்னாள் பெரியவள்.

இப்படித்தான் பரிசயம் தொடங்கியது. மறுநாள் பம்பாயில் இருந்து வந்த மகன், காத்திருந்து, இவன் வாசகசாலைக்குப் போகும் நேரத்தில் வாயிலில் மகளுடன் நின்றிருந்தான்.

“ரொம்ப தேங்க்ஸ் ஸார் ! நீங்க தமிழ்க்காரர்னு இப்பதாந் தெரியும். அம்மா சொன்னாங்க. ரொம்ப ரொம்ப தேங்க்ஸ் ஸார். ரோட்டில விழுந்தாலே கவனிக்காம போற காலம் இது... டாக்டருக்கு என்ன ஆச்சு ஸார்?”

“நோநோ... அதெல்லாம் ஒண்ணுமில்ல. நீங்க ஒண்ணும் குடுக்க வாணாம். பாப்பா, எப்படியிருக்கு?” என்றான்.

“அங்கிளுக்குத் தேங்க்ஸ் சொன்னியா?... நீங்க சாக்லேட் வாங்கிக் குடுத்தீங்களாமே? ரொம்ப சேட்ட ஸார்.”

அவன் உள்ளே அழைத்ததை மென்மையாக மறுத்து விட்டு வெளியேறினான்.

பொள்ளிக் கொப்புளம் கிளம்பாமல் சூட்டுக்காயம் ஆறிவிட்டது. அதிகம் சிவப்பில்லை என்றாலும் இளந் தோலில் தேங்காயெண்ணெய் பளபளக்க குழந்தை வருவாள். இதற்காகவே அவன் மிட்டாய் வாங்கி வைத்தி ருப்பான்; கொடுப்பான்.

பத்து நாட்கள் சென்ற பின் ஒரு நாள், வெயில் படும் படி, பெரியவள் வாயிலுக்கு நேராகக் காலில் எண்ணெய் தடவிக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். அவன் ஏழரைக்குச் சென்றுவிட்டு, பதினொன்றரை இடைவேளையில் வந்திருந்தான். காலை உணவு எதுவும் தயாரித்திருக்கவில்லை. சில நாட்களில் நேரமாகிவிவிட்டால், இந்த நேரத்தில் ஏதேனும் ‘கிச்சடி’ தயாரித்து உண்டுவிட்டு இரண்டு மணிக்குப் போவான்.

அவன் வரும்போது, ஸ்டவுக்கு எண்ணெய் வாங்கி வருவதைப் பார்த்து, “தம்பி? என்ன, இப்ப வரீங்க?” என்று கேட்டாள்.

“இல்லீங்க, ஸ்டவ் எண்ணெயாயிட்டுது. அதான் வாங்கிட்டு வந்தேன்.”

“அடாடா, நீங்க ஏன் சிரமப்படுறீங்க?... எங்க வீட்டுல எண்ணெய் இருக்கு. இங்க காஸ் அடுப்பானதால, எண்ணெய் உபயோகமில்ல. ஹீராகிட்ட சொன்னா, வாங்கிட்டு வாரா, கார்டுதான். ஆமாந் தம்பி, நா கேக்குறேனேன்னு தப்பா நினைச்சிக்காதீங்க, தனியா சமச்சி சாப்பிடுறீங்க...? வீட்ல... யாரும் இல்லியா?... பொறந்த வூட்டுக்குப் போயிருக்காங்களா?... இல்லாட்டி இப்பதா, புருசன் பொஞ்சாதி ரெண்டு பேரும் வேலை செய்யிறாங்க. ஒரே எடத்துல இருக்க முடியாம...”

“...சே, சே அதெல்லாம் இல்லம்மா. நான் தனி ஆள்...” என்று சொல்லிவிட்டு விடுவிடென்று மேலேறி வந்து விட்டான். இப்படி ஆரம்பித்து அந்தம்மாள் அதிகமாகப் பேச்சுக் கொடுக்கலானாள்.

“தம்பி, செத்த நில்லுங்க...” குழந்தை பவானி ஒரு டப்பியை எடுத்து வந்து கொடுக்கும்.

“இன்னிக்குப் பொங்கல்... உள்ள வாங்க... ஏனிப்படி ஒட்டிக்கிடுமோன்னு போறீங்க?...” “...அதெல்லாம் ஒண்ணுமில்லம்மா” என்றான் அவன். சாரதா!... அம்மா... மருமகள் வந்தாள். “உள்ள வாங்க ஸார். எங்களுக்கு டயம் இல்லாம போயிடுது. வாரத்தில ஒரு நாதா லீவு... அம்மா சொல்லிட்டே இருக்காங்க. பையனக் கூட்டிட்டு அவுங்க ‘டென்டிஸ்ட்’ கிட்டப் போனாங்க. எனக்கு வாஷிங், அது இதுன்னு வேலை. சங்கரி மட்டும் இல்லன்னா இந்தக் குடும்பம் நாறிப்போகும்.” மாமி யாருக்காகத்தான் அவள் அழைத்திருக்கிறாள்.

மேலே சாவித்திரி அம்மாவும் சுக்டன்கர் பாயும் ஊரிலிருந்து வந்தார்கள். அவர்களிடம் சங்கரியின் தாயார் எல்லாம் பேசியிருக்கிறாள். அவர்கள் இருவரும் அவனிடம் வந்து பேசினார்கள்.

‘சங்கரிக்கு வயதுக்கு வந்த நேர சாதகம் சரியில்லையாம். இதனால் பெண் கேட்டு வரும் இடங்களில் வரன் அமையவில்லை. சங்கரியின் தங்கைக்கும் கூடக் கல்யாணமாகி விட்டது. சுக்டன்கரும், சங்கரியின் அப்பாவும் ஒரே தணிக்கைத் துறையில் வேலை செய்தவர்களாம். இந்த வீட்டுக்கு அவர்கள் வந்த போது சங்கரிக்குப் பதினைந்து வயசிருக்குமாம். அவர் வெவ்வேறு இடங்களுக்கு மாற்றலாகிப் போன போதெல்லாம் குடும்பத்தைத் துரக்க முடியாமல், சங்கரியையும் அண்ணன்களையும் வைத்து விட்டுப் போயிருக்கிறார்கள். அவர் ஒய்வு பெற்று ஒரு வருசம் கூட இருக்கவில்லை. இங்கே இருக்கும் அண்ணன் இரண்டாவது அண்ணன். மூத்தவன் டெல்லியில்-ஒர் அக்கா-தங்கை. தங்கைக்கு இங்கே வந்து தான் கல்யாணம் செய்தார். அவர் இறந்து போன மறுவருடமே, அந்தம்மா ‘ஸ்ட்ரோக்’ வந்து படுத்துவிட்டார். கை கால் அசைக்க முடியாமல் இருந்தது. அவன் பார்த்தபோது - இப்போது தேவலையாக இருக்குது.

சங்கரிக்குக் கல்யாணம் என்று யார் மூலமாக வேனும் வரன் வந்தாலும், அண்ணனும் அண்ணியுமே தடுத்து விடுவதாக, அவள் அம்மா சொல்லி வருந்தினார்களாம். ஏதோ, நகை, பாத்திரம் என்று சேகரித்து வைத்திருக்கிறாளாம். தான் கண் மூடுமுன் கெட்ட பழக்கம் எதுவும் இல்லாத நல்ல பையனைப் பார்த்து ஒப்புவிக்க வேண்டும் என்று இருக்கிறார்களாம்.

“சுப்பய்யா, சங்கரி ரொம்ப நல்ல பெண். இங்கே வந்து தான் தமிழ் ஸ்கூலில் எஸ்.எஸ்.எல்.ஸி. முடித்தாள். உனக்கும் ஒரு துணை. அவளுக்கும் ஒர் ஆதரவு. மாட்டேன்னு சொல்லாம ஏத்துக்கப்பா...ன்னு சொன்னாங்க.”

அவன் கண்களில் நீரருவி வழிகிறது.

சூடுபட்ட குரங்கு போல் அவன் அந்த இடத்தைவிட்டு அடுத்த வாரமே காலி பண்ணிக் கொண்டு வேறு பேட்டைக்குப் போனான். அங்கிருந்து பஸ்ஸில் பள்ளிக் கூடம் வருவான். யார் கண்ணிலும் படக் கூடாது என்ற மாதிரி ஒடிப்போனான்.

ஒருநாள், பஸ்ஸில் சுக்டன்கர் அவனைப் பார்த்து விட்டார்.

“சுப்பய்யா!” என்று கத்திவிட்டு அவன் இறங்கும் இடத்தில் இறங்கினார்.

“என்னப்பா? என்ன ஆச்சு, உனக்கு? எதுக்காக இப்படி ஒடுற?... இப்ப நாங்கல்லாம் கல்யாணம் பண்ணிட்டு குடும்பம்னு சுகமா இருக்கலியா? உனக்கு என்ன பிரச்னை?” என்று கேட்டார். அவன் அறைக்கு வந்தார். ஏதேதோ ஊகங்களைக் கிளப்பி அவனைச் சந்தேகக்கண்ணால் ஆராய்ந்தார். “ஒ, அதெல்லாம் இல்ல சார், என்னை மன்னிச்சிடுங்க. கல்யாணம் குடும்பம்னு இல்லாம, ஆசாரிய வினோபா பாவே போல மனித குலத்துக்கு சேவை பண்ணனும்னு...”

அவர் ஆத்திரத்துடன் பல்லைக் கடித்துக் கொண்டு போனார். பிறகு, சுக்டன்கர், மகள் வீட்டுக்குச் சென்ற இடத்தில் மாரடைப்பு வந்து காலமானார் என்று கேள்விப் பட்டான்.

நன்றி கொன்ற பாவியாக, சாவித்திரியம்மாளைப் பார்க்கக்கூட அவன் போகவில்லை.

மேலும் ஒரு வருசமாயிற்று. ஒருநாள் அநுமான் மந்திர் பக்கம் ஒரு மாணவனுடன் நடந்து கொண்டிருந்தான்.

சங்கரி கையில் காய்கறிப் பையுடன் குறுக்கிட்டாள்.

“மன்னிச்சுக்குங்க..” என்றாள் தலை நிமிராமல்.

“அம்மா இறந்து போயிட்டாங்க சாவித்திரி அம்மா தான் சொன்னாங்க, உங்களை வீட்டுக்கு வரச் சொன்னாங்க..” என்றாள்.

“ம்... அதுக்குன்னு வழில வந்து மறிக்க வேணாம்...” என்றான். அப்படி ஏன் கடுமை காட்டினான் ? பொறிகடலை நடுவே கருக்கென்று கடிபடாமல் ஒன்று இருக்குமே? அப்படி... ஏன்? ஏன் அப்படி வெடுக்கென்று பேசினான்? என்ன காரணம்? பயமா? பயம் அவன் மீதே அவனுக்குப் பயம். ஏனென்று தெரியவில்லை. பயத்தில் எழுந்த வீம்பா, வீம்பில் எழுந்த பயமா? புரியவில்லை.

அந்த வருசமே மராத்வாடா கிளைக்குப் போனான். எதிர்பாரா விதமாக பேஷ்வா பார்க்கில் சாவித்திரி அம்மாவைப் பேரக் குழந்தைகளுடன் பார்த்தான்.

“சுப்பய்யா?... எப்படி இருக்கே?... உனக்குத் தெரியுமா? நீ வருவேன்னு அந்தப் பொண்ணு சங்கரி ரொம்ப எதிர்பார்த்திட்டிருந்தா. இப்ப அவங்களே இத்தனை வருசமா இருந்த வீட்டைக் காலி பண்ணிட்டுப் போயிட்டாங்க. புருசன் பெண்சாதி இரண்டு பேருக்கும் டிரான்ஸ்ஃபர் கிடச்சிடிச்சு. டெல்லிக்குப் போயிட்டாங்க...” என்றாள் வருத்தத்துடன்.

சிறிது காலத்துக்குப் பிறகு அவனும் நாக்பூர் வித்யா பீடத்துக்குப் போனான். இத்தனை வருசங்களுக்குப் பிறகு, புனேயில் ஒரு கருத்தரங்கில் கலந்து கொள்ள வந்தான். பழைய பள்ளித் தலைவர் கங்காதர் சர்மா, “சுப்பய்யா, உனக்கு ஒரு லெட்டர் வந்திருக்கு மூணு நாலு மாசமிருக்கும். வச்சிருக்கிறேன். ஸ்கூல் பக்கம் வா, நாளைக்கு!” என்றார்.

அந்தக் கடிதம் ஏதாக இருக்கும் என்ற யோசனையே அவனுக்கு எழவில்லை. பழைய பள்ளிக்கூடம் பத்து வருசமாகுது, பார்ப்போம் என்றுதான் போனான்.

அந்தக் கடிதம்தான் அவள் பார்த்த கடிதம்.

“அம்மா, நான் வந்து விசாரித்து மணிக்கூண்டு பக்கம் மெஸ் அம்மா சொன்னதும், இங்கே ஸ்கூலுக்குத்தான் வந்து நேராகப் போனேன். தாய்மார், பிள்ளைகளைக் காலையில் பள்ளியில் விட்டுவிட்டுப் போனால், இவள்தான் அந்தக் குழந்தைகளைத் தன் வீட்டுக்கழைத்து வந்து தாயோ தகப்பனோ மாலை, ஆறு அல்லது ஏழு மணிக்கு அழைத்துச் செல்லும் வரை வைத்துக் கொள்வாளாம். பள்ளியில் விசாரியுங்கள் என்றார்கள். நான் வாட்ச்மேன் தடுத்ததைப் பொருட்படுத்தாமல் உள்ளே போனேன். அந்த ஆபீசில், பட்டுஜிப்பா உருத்திராட்சம் ஸ்படிகம், திருநீறு குங்குமம் என்று உட்கார்ந்திருந்தான். ‘சங்கரின்னு இங்க கிரீச் வச்சிருந்தாங்களாமே’ன்னு வாயெடுத்ததும், அவன் முகம் சிவந்து விட்டது.

“யார்ரா இவங்க? ஏய்யா? எங்கேந்து வரீங்க, சங்கரி, கிங்கரின்னு, கழுத்தப் புடிச்சி வெளியே தள்ளுய்யா, வாட்ச் மேன்! வாட்ச்மேன்! சீய்! ஒரு நடத்தை கெட்ட கழிசடை, அதைத் தேடிட்டு ஆளாளா, இங்க வரானுவ? நானே அவளக் காணமேன்னு சொல்லி, அண்ணன்காரன் யாருன்னு கண்டு தகவல் சொல்லச் சொன்னேன். கேடு கெட்டது ஸ்கூலுக்குக் கெட்ட பேரு. எவங்கூட ஓடினாளோ?. உடம்பு சரியில்லன்னு டாக்டர்ட்ட சொன்னாளாம். எச்.ஐ.வி. இருந்திச்சின்னு சொல்லிகிறாங்க... கருமம்..." அவன் கழுத்தைப் பிடிக்கப் போயிருப்பான். அதற்குள் வாட்ச்மேன் இவனை வெளியில் கொண்டு வந்து தள்ளி விட்டான்.

“என்னால தாங்க முடியல... தாங்க முடியல. கத்தியால் குத்திச் செய்யும் கொலையைவிட மாபாதகம் இது. இந்தப் பாதகத்தைச் செய்தவன் நான். நான். அவளுடைய நெருப்புப் புனிதத்துக்குக் குலைத்து அழித்த பின்னும் களங்கம் கற்பிக்கிறாங்களே? எந்த டாக்டர்... எவன்... இவனுகளை சம்ஹாரம் பண்ணனும்...”

கண்கள் சிவந்து வெறிபிடித்த நிலையில் அவன் வெளியே பாய்கையில் நல்ல வேளையாக ரங்கன் எதிரே வருகிறான்.

“இன்ன சாரு?... எதானம் போட்டுட்டாயா?” என்று குடிப்பது போல் சாடை காட்டுகிறான்.

அவனை ஒரு தள்ளுத்தள்ளும் போது, அவள் விரைந்து முன் வாயில் கதவைச் சாத்துகிறாள்.

“சுப்பய்யா, வேண்டாம், போவுதுப்பா, அது அவ விதி... ஆறுதல் கொள்ளு. ரங்கா, உனக்கு ஒண்னுமில்ல, நீ போ.” மாடிப்படி அறைக்கதவைத் திறந்து அங்கே அமரச் செய்கிறாள்.

“சுப்பய்யா, இப்படிப் பொங்குவதால தீர்வு இல்லலட்சோப லட்சம் பெண்கள், படிக்கிறாங்க வேலைக்குப் போறாங்க. ஆனா, அவுங்களுக்கு வேணுங்கற மனிச மரியாதை கிடைக்கல... ஆறுதல் கொள்ளப்பா...”

அவன் பேசாமல் உட்கார்ந்திருக்கிறான். கதவை மெள்ளச் சாத்திக் கொண்டு வருகிறாள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 25


சுப்பய்யா வந்து போனது விடியற்காலைக் கனவு போல் நம்பிக்கையளிப்பதாக இருக்கிறது.

“நீங்க இங்க விட்டுப் போகாதீங்க. கையில் பிடிக்க வேண்டியதை முழுகவிட்டுட்டேன். இப்ப ஒரு துரும்புதா இது. இதைப் புடிச்சிட்டுப் போராடணும். பழசெல்லாம் அழுகல். இருங்க. இங்கேயே இருங்க. நான் வருவேன். அய்யாவின் வழி... வரும் இளம்பயிரைத் தேடிட்டுப் போறேன். நம்புங்க...” என்று சொல்லிவிட்டுப் போய் ஒரு மாதத்துக்கு மேலாகிவிட்டது. இவளை ரங்கன் இப்போதெல்லாம் அதிகமாகக் கண்காணிக்கிறான். லாரியில் செங்கல் வந்து பக்கத்தில் அடுக்குகிறார்கள். தை பிறந்து, மா, புதிய மொட்டுகள் குலுங்க நிற்கிறது. அடிபருத்து வாடிய இலைச்சருகுகளும் பூச்சியும் ஒரு பக்கம் இருந்தாலும், நம்பிக்கை உண்டு என்று பூத்திருக்கிறது. அதைப் பார்த்து விட்டு நம்பிக்கை கொள்கிறாள்.

வங்கிக்குச் சென்று செலவுப் பணம் எடுத்துக் கொண்டு வருகையில், காந்திபிறந்த மாநிலத்தில், பூகம்பம் வந்து குஞ்சு குழந்தை நல்லவன் கெட்டவன் என்று பாராமல் பலி கொண்டது போதாதென்று மதக்கலவரம் பற்றி எரியும் செய்திகளை தொலைக்காட்சி, பத்திரிகைத் தலைப்பு என்று கடை விரிக்கின்றன. வெளியில் வரும் போதுதான், அன்றாட, வண்டி சாவு, தீப்பற்றி எரிதல், குத்து வெட்டு கொலை கொள்ளை எல்லாம் உணர்வில் குத்துகின்றன. இப்போது எல்லாம் கேட்டுப்பழகினாற்போல், மரத்துப் போயிருக்கிறது. முன்பெல்லாம், அங்கே அநீதி இங்கே அக்கிரமம் என்று போராட்டங்கள் பற்றிக் கேள்விப் படுவாள். சர்வோதய அமைப்பைச் சேர்ந்தவர்கள், இவளை அழைத்துக் கொண்டு கோட்டை முன் போராட்டத்தில் கலந்து கொள்ள வைத்தனர். “அணுகுண்டு வேண்டாம்; இன்னொரு சண்டை வேண்டாம். மனிதர் ஒற்றுமையுடன் வாழ்வோம்...” என்றெல்லாம் கோசங்கள் வைத்தனர். யார் யாரோ இவளுக்கு முகமறியாத ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், வேலை செய்யும் பெண்கள். ராமலிங்கம்தான் இவளை வந்து கூட்டிச் சென்றார். அந்த ஏழைத்தாயின் மகனுக்கு நியாயம் வேண்டி அழைத்து வந்த இராமலிங்கம். மணிக்கூண்டின் பக்கம் ஒரு கடை மாடியில் இருக்கிறார். அவர்தாம் சுப்பய்யாவுக்குச் செய்தி தெரிவித்தவர். மனைவியும் இறந்து, மகனும் வேற்று மதத்துக்காரியைத் திருமணம் செய்து கொண்டு போனபின் ஒற்றையாக, ‘சர்வோதயம்’ என்ற இயக்கத்தில் தன்னை ஆட்படுத்திக் கொண்டு இருக்கிறார். அவரைப் பார்க்கப் படி ஏறுகையில், கீழே வரிசையாக இருக்கும் கடைகளில் ஒன்றான ‘பேக்கரி’யின் ஆள், “யாரம்மா? மேலே எங்கே போறீங்க?” என்று கேட்கிறான்.

“ராமலிங்கம்னு வழுக்கைத் தலை; உயரமா, முன்ன வங்கில இருந்தாங்க...”

“அவுரு இப்ப இங்க இல்லம்மா. ரூமைக் காலி செய்திட்டுப் போயிட்டாங்க!”

‘போன மாசம் பாத்தேனே?”

“ஆமாம்மா, அவுரு சொந்த ஊருக்குப் போயிட்டாரு. இப்ப அந்த ரூமெல்லாம், ‘பிரைட்’ ஒட்டல்காரரு எடுத்திருக்காரு...”

சுப்பய்யா துரும்பு என்றான், துரும்பும் நழுவிவிட்டதா? மனது சோகமாக இருக்கிறது.

திடீரென்று ஏன் போனார்? செய்யாத குற்றத்தைப் போட்டு ஒரு ஏழைப்பையனுக்குக் கடுங்காவல் தண்டனை கொடுத்ததை எதிர்த்துக் கேட்கச் சொன்னாரே, அதற்காக அவரையும் வெருட்டினார்களா? இந்த இடம் வேண்டாம் என்று போய்விட்டாரா?

அவள் மடியில் பணத்துடன் உச்சி வேளை கடந்து விடுவிடென்று வீடு திரும்புகையில், உள்ளே ஆளரவம் கேட்கிறது. வாயில் வராந்தா கம்பிக் கதவு உள் பக்கம் பூட்டியிருக்கிறது. சுற்றிக் கொண்டு அவள் பின்புறம் செல்கிறாள். இரண்டு மூன்று ஆட்கள் வந்திருக்கின்றனர். பெரிய மாமரத்தின் கிளைகளை வெட்டிச் சாய்த்திருக்கின்றனர். பூவும் இலைகளுமாக ஒட்டக்கழிபட்டு மொட்டையாக நிற்கிறது. ரங்கன் பெரிய கிளையை இழுத்துக் கொண்டி ருக்கிறான். அவளுக்குப் பகீரென்கிறது.

பின்பக்கம் செல்லும் போதெல்லாம் சிநேகமாக விசாரிக்கும் மாமரம். அது எத்தனை, காய், கனிகள் கொடுத்திருக்கின்றன ? கண்ணமங்கலத்திலிருந்து வந்த சொத்து அது. காய் குடம் குடமாக இருக்கும். பழுத்தால் அப்படி ஒரு இனிப்பு. ஊரிலிருந்து வந்த பழத்தைத் தின்று, கொட்டையை ராதாம்மா குழந்தையாகப் புதைத்துத் துளிர்த்து வளர்ந்து கனி கொடுத்த மரம்.

“ஏம்ப்பா இதை வெட்டுறீங்க? நிறுத்துங்க? ஆயியப்பனை வெட்டுறதுக்குச் சமானம். ஏன் ரங்கா ? இப்படி அழிச்சாட்டியம் பண்றே? அது உன்னை என்ன செய்தது?”

“சேர்மன் சார்தான் வெட்ட சொன்னாரு. இது பூச்சி புடிச்சிப் போயி நிக்கிது. வெறும் குப்பை, கிட்ட போக முடியல...”

“அதுக்காவ? உன் ஆயியப்பனுக்கு நோவு வந்தா இப்பிடித்தான் வெட்டுவீங்களா? சேர்மன் சொன்னாராம்? யார்ரா அது சேர்மன், போர்மன் ? விட்டுடுங்கையா, உங்கள கையெடுத்துக் கும்புடறேன்!” அவள் அந்தக் கிளைகளின் நடுவே நின்று கையெடுத்துக் கும்பிடுகிறாள்.

“கிழவி, இந்த சென்டிமண்ட், நாடகமெல்லாம் எங்கிட்ட வச்சிக்காத நா அவுரு ஆளு. அவுரு சம்பளம் குடுக்கிறாரு இன்னிக்கு மரத்த வெட்டுன்னாரு நா செய்யிறேன். நீ தடுக்கணும்னா அவருகிட்டப் போயி இதெல்லாம் சொல்லு...”

துயரம் தாளாமல் மண்டுகிறது.

‘மரத்தை வெட்டுற கன்ட்ராக்டர்கள் வந்தால், பொம்புளங்க சுத்தி மரத்தைக் கட்டிப்பாங்க. எங்கள வெட்டிட்டு மரத்தை வெட்டுங்கம்பாங்க... அப்படி ஒரு இயக்கம் இருக்கு. அதுல தான் ராதாம்மா புருசன் இருக்கறதாச் சொன்னாங்க...’

“தம்பி! இங்க வாங்க! எங்கேயோ நடக்குற அநியாயம் இல்ல. உங்க வூட்டிலியே நடக்குது.” என்று அழுகிறாள்.

சோறு பொங்கி வைத்துவிட்டுப் போனாள். சோறெடுக்கத் தோன்றவில்லை. இன்று மரத்தை வெட்டுகிறார்கள். நாளைக்கு என்ன நடக்கும்?...

வாசலில் நின்று வெறித்துப் பார்க்கிறாள். வெயில். பார வண்டிகள், கட்டடம் கட்டும் சாதனங்கள் சுமந்து செல்லும் அந்த கிளப்பும் புகை, புழுதி எல்லாம் அவள் இயலாமையை மேலும் கூர்மையாக்குகின்றன. அப்போது தெருவில் செல்லும் பெண் ஒருத்தி, புன்னகையுடன் அவளை நோக்கி, ‘நமஸ்தே’ என்று கைகுவிக்கிறாள். கருத்து, மெலிந்த உடல், கன்னங்கள் பூரித்தாற்போல் முகம் இருந்தாலும், தாடை எலும்புகள் துருத்திக் கொண்டு தெரிகின்றன. அடர்த்தியில்லாத முடி பின் கழுத்தோடு கத்திரிக்கப் பட்டிருக்கிறது. கண்களில் ஒரு நம்பிக்கையொளி. கைத்தறிச் சேலை; வெட்டு, ஃபிட்டிங் இல்லாத ரவிக்கை நகை நட்டு எதுவும் இல்லை. காதுகளில் சிறு வளையங்கள்.

“நா உள்ள வரட்டுமா?...”

கம்பிக் கதவை நன்றாகத் திறக்கிறாள். “வாம்மா, நீ யாருன்னு எனக்குத் தெரியல. இந்தப் பக்கத்தில பார்த்ததா நினப்பில்ல. புதிசா, அங்கே கிழக்கே நிறைய வீடுகள் கட்டி வந்திருக்காங்க. நீ யாரத் தேடி வர ? யாரும்மா ?”

இவள் ஆவலும் பரபரப்பும் கட்டுக்கடங்காமல் போகிறது.

“நாங்க மேற்கே, புதிசா இருக்கும் எக்ஸ் ஸர்விஸ் காரங்களுக்கான காலனிக்கு வந்திருக்கிறோம். வந்து ஒரு மாசம் தானாகுது...”

“ஓ, அப்ப... உங்க...” என்று கேட்குமுன் இதயம் வலிப்பது போல் இருக்கிறது. கார்கில், அங்கே இங்கே என்று போர் வந்து அன்றாடம் வீரர்களின் உடல்களைச் சுமந்து பெட்டிகள் வந்தன. இந்தக் குழந்தையைப் பார்த்தால் முப்பது வயசு இருக்காது. அதற்குள்...

“இங்க யாரம்மா இருக்காங்க?”

“அம்மா இருக்காங்க. அவங்களுக்கு நடக்க முடியிதில்ல. அதா என்ன அனுப்பிச்சாங்க. வாசல்ல வராந்தா இருக்கும். எதிரே மரமெல்லாம் இருக்கும். சோலையில் நடுவே பெரிய வீடுன்னு சொன்னாங்க. ராம்ஜி மாமா, நா அப்பான்னு கூப்பிடுவேன்னாங்க...”

“கண்ணு? உங்கம்மா பேரு அநுதானே? அநு... அநு... குருகுலத்துல வேலை செய்ய வந்தா. இந்தப் படுபாவி பண்ணின தில்லுமுள்ளுல, குழந்தையத் தூக்கிட்டுப் போயிட்டா. அப்ப, உங்கப்பா உங்கப்பா, ரிடயராகி வந்திட்டாங்களா? நீ... நீ... எப்படிடா, அடயாளம் தெரியாம ஆயிட்ட சிவப்பா, தலைநிறைய சுருட்டை முடியும், ரோஜாப்பூ மாதிரி முகமும் இருப்பே... கறுத்து மெலிஞ்சி... கல்யாணம் ஆயிருக்காம்மா?”

“உம். ரெண்டு குழந்தை இருக்கு...”

“அம்மாடி, அந்த ஆண்டவனே, முருகனே உன்னிய இங்க அனுப்பியிருக்காரு. என்ன செய்யுறதுன்னு திண்டாடிட்டிருந்தேன். உங்கம்மாவ நான் இப்பவே பார்க்கணும். இதே வரேன்...”

“இருங்க தாதிமா, நான் போயி ஒரு ஆட்டோ கூட்டிட்டு வரேன்?”

“ஆட்டோவெல்லாம் எதுக்கு? இந்தப் பக்கம் தானே? நான் நடப்பேன்மா ?”

“இல்ல தாதிமா, கொஞ்ச தூரம் போகணும். நீங்க வயசானவங்க.”

“வயசா? ஏம்மா, நீ வரச்சே, நான் நடப்பேன். அந்தப் பக்கம் தானே போகணும்? அவன் அம்பது நூறும்பான். அடாவடி... அடாடா, உன்னை உள்ளே கூப்பிட்டு ஒரு வாய் தண்ணி கூடக் குடுக்காம. கிளம்புறேன் பாரு’ என்று சொல்லி உள்ளே அழைக்கிறாள்.

கூடத்தில் அந்தப் படங்களை அவள் பார்க்கிறாள்.

“ஒ... எனக்கு மங்கலா நினப்பு வருது. இங்கே பெரிய பிரம்பு சோபா... அதில தாத்தா... மடில உக்காத்தி வச்சிப்பாங்க. நான் அவர் கண்ணாடிய எடுத்துத் திறப்பேன்...”

அவள் கண்களில் நீர்மல்க, அந்தக் கன்னங்களை வழித்து, நெற்றியில் பொட்டில் சொடுக்கிக் கொள்கிறாள்.

“கண்ணு, பொழுது உச்சிக்கு வந்து இறங்குது. நீ சாப்பிட்டியோ ...”

“இனிமேத்தான். குழந்தைகள் ஸ்கூல்லேந்து வர ரெண்டு மணியாகும். சப்ஜி பண்ணி சோறு பண்ணி வச்சிருக்கு. காலம ப்ரக்ஃபாஸ்ட் ஆயிருக்கு...”

‘கண்ணு, ஒரு வாய் தயிர் சோறு தாரேன். சாப்பிடுடா...” அவசரமாகப் பொங்கிய சோற்றில் உறை தயிரையும் உப்புக்கல்லையும் போட்டுப் பிசைகிறாள். ஒரு லில்வர் தட்டு இருக்கிறது. பின்னே சென்று இலையறுக்கும் மனம் இல்லை. இப்படியே, இப்படியே கிடைக்கும் இலக்கு...

தட்டில் சோறும், அப்போது போட்ட நார்த்தங்காய் ஊறுகாயும் வைத்துக் கொடுக்கிறாள். பின்புறம் குளியலறையில் அவள் கைகழுவச் செல்கையில் கொல்லையில் மரம் வெட்டுவது தெரிகிறது.

பெஞ்சில் அமர்ந்து கையில் தட்டை வைத்துக் கொண்டு அவள் சாப்பிடுவதைப் பார்த்துக் கொண்டே நிற்கிறாள். இளநீல வண்ணச் சேலை. தூய வெண்மை ரவிக்கை. ‘சத்திய தேவதையா?’

“நீங்க சாப்பிடுங்க, தாதிமா !”

அவள் சாப்பிட்டு முடிக்கும் வரை நெஞ்சு நெகிழப் பார்க்கிறாள்.

மனது நிறைந்தவளாகத் தானும் மீதிச் சோற்றைப் பிசைந்து சாப்பாட்டை முடித்துக் கொள்கிறாள். அவள் பாத்திரங்களைக் கழுவும் வரை, அந்தப் பெண் கூடத்திலேயே படங்களைப் பார்த்துக் கொண்டு நிற்கிறாள். இவள் கிளம்பும் போது, ரங்கன் மரக்கிளைகளை அப்புறப்படுத்தும் வேலையில் ஊன்றியிருக்கிறான் “சீ! பூச்சிங்க... உடம்பெல்லாம் தடிச்சிப் போச்சி!” என்று கிளைகள் இழுக்கும் ஆள் சொல்கிறான்.

“இதை எப்பவோ வெட்டிப் போட்டிருக்கணும். அப்படித் தள்ளிப்போடு. கிரசின் ஊத்தி எரிச்சிடலாம்.”

காதில் கேட்டும் கேட்காமலும் அவள், “ரங்கா, நா கொஞ்சம் வெளியே போறன். சொல்லாம போயிட்டேன் காத! வாசக்கதவப் பூட்டிக்க!” என்று சொல்லிவிட்டு நடக்கிறாள். அப்போதுதான், அவன் அநுவின் மகளைப் பார்க்கிறான்.

“யாரிவங்க? அன்னிக்கு வந்திட்டுப் போனாரு... இது...? என்று அவன் யோசனையுடன் “எங்கேம்மா, இந்த பக்கம்?” என்று கேட்கையில் அவள் விடை கொடுக்காமல் நடக் கிறாள்.

“ஏம்மா, உம் பேர் மறந்திட்டது, உம் பேரென்ன?”

அவள் புன்னகை செய்கிறாள். “நிசா... நிசாந்தினின்னு பேரு. இரவு பூக்கும் பூன்னு எங்கப்பா பேரு வச்சாராம். நான் ராத்திரிதான் பிறந்தேனாம்...”

“ஆமா, பாரிஜாதப்பூ ராத்திரிலதான் பூக்கும். பக்கத்தில் அந்த மரம் இருந்திச்சி. ஒம்பது மணிக்கு கும்முனு வாசனை வரும். இப்பக்கூட இருந்திச்சி. பாம்புவந்திச்சின்னு வெட்டிப் போட்டானுவ... உங்கப்பா இப்ப வீட்டோட இருக்காரா? ரிடயராகி இருப்பாங்க...”

“இல்ல... அப்பா போயிட்டாங்க..”

அவளுக்கு அந்த சாமியார், சித்தப்பா என்று சொன்ன உறவு முறை, அவர் தங்கிய போது, கூறிய செய்தி ஊசிக்குத் தாய்த் தைக்கிறது. இவளிடம் அதையெல்லாம் கேட்கத் தெரியவில்லை. நீள நெடுக சாலையே வந்து இரு புறங்களிலும் குடியிருப்புகள். இடையே வேலைக்காக இடம் பெயர்ந்து குடும்பமும் குட்டியுமாகத் தங்கும் முட்டு முட்டான குடிசைகள்; சாக்கடைகள். ஊர்க்குப்பைகளை எல்லாம் கொண்டு கொட்டும் இடம். ஒரு காலத்தில் ஏரியல்லவா? ‘பாவிகளா! சுற்றுச்சூழல் மாசு என்று சொல்லிக் கொண்டு ! ஈக்கள் மொய்க்கின்றன. நிசா முகத்தை வாயை சேலைத்தலைப்பால் மூடிக் கொள்கிறாள். “சீ, எந்த ஊரிலேந்து இவ்வளவு கழிவையும் கொண்டு கொட்டுறாங்க?...”

‘முகத்தை அதான் மூடிட்டேன். அதனாலதான் ஆட்டோ வச்சிட்டு வரலான்னே...”

அந்த இடம் தாண்டிய பிறகு, சாலையோரங்களில் மரங்களின் பசுமை விரிகிறது. ஒரு பக்கம் கல்லூரி...”

‘இது இன்ஜீனியரிங் காலேஜ், இதுக்குள்ளதான் அம்ரித்ஸிங் அங்கில் இருக்கிறாங்க. அவருதான் இங்க... எங்களுக்கு இடம் ஏற்பாடு பண்ணினார். இதோ. இதான், வாங்க...”

“பரம்வீர் முன்னாள் ராணுவ வீரர் குடியிருப்பு” என்று எழுதிய வளைவு வாயிலுக்குள் நுழைகிறார்கள். பத்துப் பதினைந்து வீடுகள் தாம் முழுமை பெற்றிருக்கின்றன. வீடுகளைச் சுற்றிய தோட்டங்கள் இப்போதுதான் உருவாகி வருகின்றன. வரிசையாகத் தெரியும் வீடுகளில் ஒன்றில் நிசா வாயில் மணியை அடிக்கிறாள். தோட்டத்துக்கு நீர் பாய்ச்சுவதற்காக வாயிலில் ஒரு குழாய் இருப்பதை அவள் பார்க்கிறாள். திருகுகிறாள். தண்ணீர் வருகிறது. கால்களைக் கழுவிக் கொள்கிறாள். கதவை உச்சியில் கைக்குட்டை போன்ற ஒன்றால் முடியைக் கட்டிக் கொண்டிருக்கும் ஒரு சிங் பையன் திறக்கிறான். ஐந்து வயசு ஆறு வயசு மதிக்கத் தகுந்த ஒரு பெண், பையன் இருவரும் தாயின் மீது கோபம் காட்டும் படி இந்தியில் பேசிய படி அவளுடைய சேலையைப் பற்றிக் கொள்கிறார்கள. “உள்ள வாங்க தாதிமா! நிகில், நித்யா, தாதிமாக்கு பிரணாம் பண்ணுங்க!...”

“அட கண்ணுகளா?” என்று குழந்தைகளைத் தழுவி முத்தமிட்டுக் கொள்கிறாள். மட்டியாக, வெறுங்கையுடன் வந்திருக்கிறாளே?. அடாடா, ஏம்மா, இங்கே பக்கத்தில கடை ஏதானும் இருக்கா? நீ கூப்பிட்ட, உடனே ஓடி வந்திட்டேன்...”

“இங்க பக்கத்தில காலேஜ் காம்பஸில இருக்கு...”

“அப்ப, நீ வழிகாட்டுறியா போயி மிட்டாய் வாங்கிட்டு வாரேன்...”

“நோ, தாதிமா, நானே சைகிள்ள போயி வாங்கிட்டு வாரேன். என்ன வாங்கட்டும், கேக், மிட்டாய்...”

“எதுனாலும் வாங்கிட்டு வா தம்பி” என்று ஒரு நூறு ரூபாய் நோட்டைக் கொடுக்கிறாள். அதற்குள் அநு, அவளைப் பற்றிக் கொண்டு, முன்னறைக்கு வந்து விடுகிறாள்.

“அம்மா என்ன இது....?”

“தாயம்மா...”

அவள் தாவிப் பற்றிக் கொள்கிறாள்.

அநும்மா...!

அடர்ந்து கறுத்த முடி, நரைத்து முன்புறம் மண்டை தெரிய, முகம் முழுதும் வாழ்க்கையின் அதிர்வுகளையும் சோகங்களையும் தாங்கிய கீறல்களுடன்... பல்வரிசை பழுது பட்டு... அந்த அநுவா?...

“அம்மா...? என்னம்மா இப்படி? அடையாளமே தெரியலியே முன்னறைச் சோபாவில் உட்கார்த்தி வைக்கிறாள்.

நிசா குழந்தைகளை அழைத்துச் சென்று, ரொட்டி தயாரிக்க முனைகையில், “நாங்க ரொட்டி சப்ஜி சாப்டாச்சி?” என்று குழந்தைகள் குரல் கேட்கிறது.

“நிசா, அமர் என்னமா ரொட்டி பண்ணுறான்? நாங்க எல்லாம் சாப்பிட்டாச்சி. உனக்குப் பரோட்டா பண்ணி வச்சிருக்கிறான் பாரு!”

“அட...?”

நிசா ரொட்டி சப்ஜி தட்டுடன் வருகிறாள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 26


"நீங்க சாப்பிட்டீங்களா, அம்மாஜி ?”

“ஆச்சும்மா. நீதான் மாவு பிசைஞ்சு வச்சிட்டுப் போயிருந்தே. அவன் மடமடன்னு ஃபுல்கா பண்ணிப் போட்டுட்டான். உனக்கு பரோட்டா பண்ணி வைக்கிறேன்னான். வாணாம்பா, அவ வந்தா சூடா பண்ணிப்பான்னேன். கேக்கல. பைங்கன் பர்த்தா பண்றேன்னு பண்ணி வச்சிருக்கு பாரு?” இவளுக்கு பக்கத்தில் குடியிருந்தவருக்கு நண்பராக வரும் சிங் குழந்தைகள், மனைவி நினைவு வருகிறது.

“ஏம்மா, இந்தப் புள்ள யாரு?”

அதற்குள் சைகிளில், கேக், மிக்ஸ்சர் வாங்கிய பையுடன் அமர் வந்து விடுகிறான்.

“டபிய்...? ப்ளம் கேக் வேணுமா, செர்ரி கேக் வேணுமா? இவன் துக்கிப் பிடிக்குமுன் இரு குழந்தைகளும் ஒடி வருகிறார்கள்.

“எனக்கு...! எனக்கு...!”

“தாதிமாக்கு!”

அவள் வாங்கிக் கொள்கிறாள்.

பையில் ஒரு பெட்டியில் இருவகை கேக்குகள் - ஆறு - ஆறு என்று பன்னிரண்டு இருக்கின்றன. ஒன்றை எடுத்து அவள் பெண் குழந்தையிடம் - நித்யா - வாயைக் காட்டு கிறது, அவள் ஊட்டுவது போல் கொடுக்க, பற்றிக் கொள்கிறது. பிறகு பையனுக்கு. இந்தா தம்பி - உன்பேர் அமாரா?.... அவனும் வாயில் வாங்கிக் கையில் பற்றிக் கொள்கிறான். “நிசாம்மா?” என்று கூப்பிட்டு அவளுக்கு ஒன்றைக் கொடுக்கிறாள். அவளும் வாயில் வாங்கிக் கொள்கிறாள். பிறகு இன்னொரு துண்டை அதுவின் வாயில் வைக்க, அது கண்ணீருடன் கையில் எடுத்துக் கொண்டு இன்னொரு துண்டை அவளுக்கு ஊட்டுகிறாள்.

ஆண்டவனே! நீ இத்தனை கருணையுள்ளவனா? இந்தச் சின்னச்சின்ன செய்கைகளில், இவ்வளவு மனநிறைவு கிடைக்குமா?

“இந்தப் புள்ள யாருன்னு சொன்னம்மா?.”

“பக்கத்து இன்ஜீனியரிங் காலேஜ் இல்ல; அதுல புரொபசரா இருக்காரு. இவங்க மாமா கிரணோட நெருங்கிய சிநேகிதர். ஏர்ஃபோர்ஸில் இருந்தார்... அவர் மூலமாத்தான், இந்த இடமே எனக்கு செய்து குடுத்தாங்க..”

“அப்படியா ? இவுங்க எத்தினி நாளா இங்க இருக்காங்க?”

“இருக்கும் எனக்கே தெரியாது. பத்து வருசமிருக்கும்னு நினைக்கிறேன். தாயம்மா...?”

குரல் உடைந்து கண்ணீர் வழிகிறது.

“கடைசில ஒரு தீச்சொல்லைச் சொல்லி... நானே என் தலையில் மண்ணை அள்ளிப் போட்டுக்கிட்டேன். நானே... நானே...” அவள் குலுங்கும்போது இவளுக்கு ஏதோ புரிகிறது; புரியவுமில்லை.

“நீ என்னம்மா சொல்ற...”

“ஆமாம் தாயம்மா, இனி உங்களுக்கும் எனக்கும் பந்தம் இல்லை. என் குழந்தையை எடுத்திக்கிட்டு நான் போறேன். இனிமே நமக்குள் எந்தத் தொடர்பும் வேண்டாம். நீங்க என் புருசனும் இல்ல, என் குழந்தைக்கு அப்பாவும் இல்லன்னு கத்தினேன். தாயம்மா, உனக்கு மன்னிப்பே இல்லைன்னு போயிட்டாங்க. அவரை நான் மன்னிக்க மாட்டேன்னேன். அவரு நீ மன்னிக்க வேண்டாம், உனக்கும் மன்னிப்பில்லேன்னு...” குலுங்கிக் குலுங்கி அழுகிறாள்.

தோட்டக்கதவுத் தாழ் அகற்றும் ஒலி கேட்கிறது.

உள்ளே வருபவர்கள், சிங்கும் மனைவியும்...

“பிரணாம் மாதாஜி! ஞாபகம் இருக்குதா? நீங்க கோலம் போடச் சொல்லிக் குடுத்தீங்களே...?”

“அம்மா... தேவா அங்கே வந்திருந்தபோது வருவோமே?...”

அப்ப... அப்ப... அநும்மா... அந்த அவரு...

மீசையைப் பல்லால் கடித்துக் கொண்டு அரும்புப் பற்கள் தெரியச் சிரிக்கும் கோலம் தோன்றுகிறது.

“உங்களுக்கு, மக்க மனுசங்க? ...”

“எல்லாம் இருக்காங்க...”

அதற்குமேல் அவள் கேட்கவில்லை. கேட்கவில்லை...

“அநுவுக்கும் புருசனுக்கும் சரியில்லை. அவங்க பிரிஞ்சிட்டாங்க..” சாமியார் சொன்ன சொல்...

“அப்பா, அவர் திடும்னு வந்துட்டார். எனக்கு என்ன பண்ணுவதுன்னு தெரியல. அனுப்பி வச்சேன்...”

“அநும்மா, நிசாவின் அப்பா பேரு என்ன சொன்ன ?...”

“கிரண்ணு வீட்ல சொல்லுவாங்க. சூர்ய கிரண் தேவ்னு பேரு. இவங்கல்லாம் தேவான்னு தான் கூப்பிடுவாங்க.”

“சிங்கு, ஏம்மா, உங்க பேரு தெரியல. நீங்கல்லாமும் எனக்கு எதுவும் சொல்லாம இருந்திட்டீங்களே?...”

“எங்களுக்கு எப்படித் தெரியும் மாதாஜி?... அவரே அங்கே வந்து தனியா இடம் பார்த்துக்கிட்டு வந்துதான் சொன்னது.”

“எல்லாம் என் பாவம்...”

“மாதாஜி, நீங்க இப்பவும் இங்கே இருக்கலாம். பக்கத்தில் வந்திருக்கிறீங்க. அநுபஹன் ரொம்ப ஒடிஞ்சி போயிட்டாங்க பாவம்... ரொம்ப... அவங்களுக்கு வந்த மாதிரி கஷ்டம் ஆருக்கும் வராது, வரக்கூடாது...”

நாங்க அந்தப் பக்கம் பைக்ல போவோம், நீங்க சில நாளைக்கு நிப்பீங்க.

“ரொம்ப நன்றி அய்யா. இந்த தேசத்துல, எல்லாம் கந்தலா குளறு படியா மனுச உறவே இல்லாம போகும் போது, நீங்கல்லா இருக்கீங்க. உங்க பய்ய ஒடிப் போயி கேக்கு வாங்கியாந்து வாயக்காட்டி வாங்கிட்டா. நல்லா இருக்கணும்... புது நாத்துங்க. நா இனி அடிக்கடி வருவே...”

“நாங்க வரோம் மாதாஜி.”

அவர்கள் மறுபடியும் வணங்கி விடைபெறுகிறார்கள்.

அவர்கள் சென்றபின், இறுக்கம் தளர்ந்து, மீண்டும் இறுக்கமாகும் உணர்வுகளில் நினைவுகளில் அவள் மிதக்கிறாள்.

“தாயம்மா, எங்கள்ள எந்த பூசை வழிபாடு செய்தாலும் ஒருவரி கடைசியில் வரும். தெரிந்தும், தெரியாமலும் அறிந்தோ அறியாமலோ நான் செய்த பாவங்களை எல்லாம் மன்னித்து விடுங்கள் என்று கடவுளிடம் சரணடைவது போல் இருக்கும். சிறுபிள்ளைகளில் தும்பியைப் பிடித்து சிறகடித்துத் துடிப்பதைப் பார்க்க, பசுங்கன்றின் உடலில் சிறு கல்லை வீசி அதன் உடலில் சிலிர்ப்பலைகள் பரவுவதைப் பார்க்க என்று துன்பம் செய்வார்கள். நானோ...

“தாயம்மா, உங்களுக்குத் தெரியுமோ, என்னேமா? உயர் குலத்துக்கும் ஒரு மனிதரின் நடத்தைக்கும் சம்பந்தமே இல்லை என்று சிறுவயதிலேயே நான் அறிஞ்சுகிட்டேன். என் அம்மா எனக்கு அஞ்சு வயசாக இருக்கும் போதே ‘பிலட்கான்சர்’ வந்து போயிட்டா. என் சித்தியையே அப்பா கல்யாணம் பண்ணிக் கொண்டார். சித்திக்குத்தான் இரண்டு பிள்ளைகள். என் அப்பாவின் தம்பிதான் அந்தக் காலத்தில் ஆர்.எஸ்.எஸ்.ஸில் சேர்ந்து, சாமியாராகப் போனவர். என் அம்மா மேல் அவருக்கு ரொம்பப் பிரியம். நான் குழந்தையாக இருந்த போது அடிக்கடி வருவார். அவரைக் கண்டால் சித்திக்கும் பிடிக்காது, அப்பாவுக்கும் பிடிக்காது. அப்பாவுக்கு டெல்லி, மேல் தட்டு சமூக-பார்ட்டி, ஆடம் பரம் எல்லாம் பிடிக்கும். அம்மாவுக்கு அந்த வாழ்க்கையில் பிடிப்புக்கிடையாது என்று சித்தப்பா சொல்வார். ஆனால் ரொம்ப நாள் இருக்கல. அப்பா அம்மா செத்துப் போகு முன்பே சித்தியை வீட்டில் கொண்டு வைத்துக் கொண்டிருந்தாராம். எனக்கும் நினைவு இருக்கு. அப்பா குடித்து விட்டு வருவார். சின்ன வயசிலேயே எனக்கு அந்த சமாசாரம் மனசில் பதிஞ்சுடுத்து. என் வாழ்க்கை பின்னால் இடிஞ்சு போனதுக்கே அதுதான் காரணம்... தாயம்மா...!”

முகத்தை மூடிக் கொண்டு அவள் விம்முகிறாள்.

“அவுரு குடிக்கிறாரு பாட்டில் இருக்கு...”

“அந்த பாட்டில்ல இஞ்சி பூண்டு மிளகு சீரகம் தட்டிப் போட்ட ரசம் குடுப்பேன்...”

பனிப்புகையாய் காட்சிகள்.

“மக்க மனிசா இருக்காங்களா?”

“இருக்காங்க... அந்தச் சிரிப்பில் எதுவுமே தெரியவில்லை. பழகுபவரிடம் அந்தச் சிரிப்பே ஒட்டிக்கொண்டது.”

“சித்தி அவரைக் கல்யாணம் பண்ணின்ட பிறகு, என்னை ஆயாவிடம் விட்டுவிட்டு அவளும் அப்பாவுடன் வெளியே போவாள். அப்பதான் மாமா என்னை நாக்பூருக்குக் கூட்டி வந்தார். அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்து தங்கவில்லை. அவர் அங்கே ‘இங்கிலீஷ்’ ஹைஸ்கூலில் டீச்சராக இருந்தார். மாமியும் சரஸ்வதி வித்யாலயத்தில், பிறகு, எனக்குப் பத்து வயசான பின் வேலை செய்தார். கிரண் குடும்பம் ஒரு வகையில் மாமிக்கு உறவுதான். கிரண் அப்பா பண்டாரா கார்டைட் ஃபாக்டரியில் வேலையாக இருந்தார். கிரண் ஐ.ஐ.டியில் படித்துவிட்டு, ஏர்ஃபோர்ஸில் சேர்ந்தான். என் தம்பிகள் இரண்டு பேரும் படித்துக் கொண்டிருந்தார்கள். நான் படிப்பு முடித்து, லிட்டரேச்சர் எம்.ஏ. பண்ணினேன். டெல்லியிலேயே பப்ளிக் ஸ்கூலில் வேலைக்குச் சேர்ந்தேன். அப்ப, அப்பாவுக்குக் குடியினால், உடம்பு கெட்டுவிட்டது. பி.பி., ஷூகர்... ஏறி, ஒருதரம் ‘மைல்ட்’ அட்டாக்கும் வந்ததால், சித்தி ரொம்பக் கட்டுபாட்டில் வைத்திருந்தாள். அதோடு, பக்தி மஞ்சரியாகி விட்டாள். பெரிய மனிதர் வீட்டு, மேம் சாப்கள், பஜனை செய்வார்கள். ‘கிட்டி பார்ட்டி’ சீட்டாட்டம், இதெல்லாம் தலைநகர் நாகரிகம். கிரண் அப்போது டெல்லியில் இருந்தான். சாதாரணமான பழக்கம், அவனை, சித்தியின் பஜனைக் குழுவில் ஒருத்தனாக அடிக்கடி ஞாயிறு பஜனைகளில் வரச் செய்தது. நல்ல குரல். தமிழ், ஹிந்தி, வெஸ்டர்ன் என்று பாடுவான். எனக்கு மிக ஆச்சரியமாக இருக்கும். நாக்பூர் வாழ்க்கை, எளிய நூல் சேலை வாழ்க்கை அது ஒரு ‘மிடில் கிளாஸ்’, சாதாரண, பந்தா இல்லாத மனிதர் கொண்டது, எனக்கு அது பிடித்திருந்தது. ஞாயிறென்றால் கிரண் காலையிலேயே வருவான். நாங்கள், கலை இலக்கியம், சினிமா என்று பேசுவோம். ‘பிடிச்சிப் போச்சு, கல்யாணம் பண்ணிடுவோம்’னு தீர்மானித்து, டெல்லியிலேயே நடத்திவிட்டார்கள். அப்ப என் தாத்தா கூட இருந்தார். ஆறுமாசம் கழிச்சுத்தான் செத்துப்போனார்.

“ஆனால், அவருடன் டெல்லி குவார்ட்டர்ஸில் குடித்தனம் பண்ணப்போன பிறகுதான், அந்த வாழ்க்கை புரிந்தது.”

“என்ன சொல்ல தாயம்மா! சாயங்காலம்னு ஒண்ணு வரதே, கிளப்புக்குப் போகத்தான். என்னைப் போலிருந்த மனைவிகளும் போவார்கள். பார்ட்டி... குடி, கூத்து...

“முதல் நாள் ‘திருமண பார்ட்டி’ கொண்டாட்டமே எனக்கு வெறுப்பாகிவிட்டது. ‘என்னை ஏமாத்திட்டீங்க! சீட், ரோக்’ன்னெல்லாம் கத்தினேன். அழுதேன். வீட்டுக்கு வந்து சித்தியிடமும் அப்பாவிடமும் சண்டை போட்டேன். ‘ரிலாக்ஸ், அது, ராணுவம் கட்டுப்பாடான வாழ்க்கை. பார்டர் ஏரியாவில், அவர்கள் இந்த நாட்டைக் காக்கிறார்கள். உத்தமமான பணி. கிரண் நல்ல பையன். நீ அவனோடு இருந்து மாற்றலாம். எதோ கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிக் கொள்வது உள்ளதுதான்...”

கிரண் அன்றே வந்து, அவளைச் சமாதானப் படுத்திக் கூட்டிச் சென்றான். அப்படியும் இப்படியுமாகச் சில மாசங்கள்...

கர்ப்பமானாள். அப்போது பங்களாதேஷ் நெருக்கடி. இவளுக்கு சித்தி வளை காப்பு செய்தாள். பட்டு சரிகை, நகை, எதுவும் இவளுக்குப் பிடிக்காது. அதனாலேயே ராம்ஜி மாமா குடும்பம் அவளுக்குப் பிடிக்கும். அவளுடைய வளைகாப்பு சமயத்தில் அவர் டெல்லி வந்திருந்தார். சித்தி திட்டினாள். “காது மூக்குன்னு ஒரு நகை இல்லை. அந்த காலத்துலதான் கதர் கட்டிண்டு அழுமூஞ்சி மாதிரி இருந்தே, இந்தப் பட்டெல்லாம் நம் நாட்டுதுதானே? காது வளையத்தைக் கழற்றி எறி. உன் அம்மாவின் தோடு, நகை எல்லாம் போட்டுக்கணும்” என்று போட்டாள். அப்ப கூட அழுதேன்.

“ராம்ஜி மாமா, நீங்க சொல்லுங்க! இந்த சமயம் என் சந்தோசம் முக்கியமா, அவங்க சந்தோசமா ?”

“ரெண்டும்தான். ஒரு நாளைக்குத்தானேம்மா ? ‘விட்டுக் கொடு’ன்னார். அந்த முதல் பிரசவம், ஏழு மாசத்திலேயே குழந்தை பிறந்து தங்கல. கிரண் சண்டிகர்ல. இருந்தார். இதே வாழ்க்கைதான். “இனி இல்லைம் பாரு. குவார்ட்டர்ஸ். காலைக்கெடுபிடி... ஒரே மாதிரி சூழல், தடித்த லிப்ஸ்டிக், கையில்லாத ரவிக்கை, பளிரென்ற ஆடைகள், கம்பளிப் பின்னல்கள், பார்ட்டி, டின்னர், அது, இது... எல்லாம். உடனே மறுபடி கர்ப்பம். அப்போது மாமா வந்து நாக்பூருக்கு அழைச்சிட்டுப் போனார். அங்கேதான் ஆஸ்பத்திரியில் இவள் பிறந்தாள். ஒடி வந்தார். சந்தோசமாக, குழந்தையைத் தூக்கினார். “அநு, பழைய கிரண் இல்ல. புதியவன், நான் ஒரு தந்தை, நீ அம்மா”ன்னு கண் கசிந்தார், ‘புதியதோர் உலகு செய்வோம், கெட்ட போரிடும் குணமதை வேறொடு சாய்ப்போம்’ன்னு பாடினார். அந்தக் குரலில் மயங்கிப் போனேன். புதிய நம்பிக்கையுடன், குழந்தையையும் எடுத்துக் கொண்டு, பெங்களுருக்குப் போனேன். மாமாவும் மாமியும் கொண்டு விட்டார்கள். இரண்டு மூன்று நாட்கள், புதிய இடத்தில் எதுவும் தெரியல. சண்டைக்காலத்தில், எல்லைப் புறங்களில் ‘டென்ஷன்’ ஆனால் அதெல்லாம் இல்லாத போதுமா?

“மாலை நெருங்கும்போதே எனக்கு டென்ஷன். இரவு வரும் வரையிலும் அது ஏறி வெடிக்குமளவுக்கு வரும். அழுவேன். திட்டுவேன். குழந்தைக்கு ஒன்றரை வயசு முடிந்த சமயம். ஒருநாள் இரவு குடிச்சிட்டு டுவீலர்ல வரப்ப எங்கேயோ மோதி, தலையில இரத்தக்காயம். கட்டோடு வந்தார். நான் எப்படித் துடிச்சிருப்பேன்னு பாத்துக்குங்க! நான் எந்த முடிவும் எடுக்க வேண்டி இருக்கல. அன்னிக்குத்தான் அப்பா ‘அட்டாக்’ வந்து செத்துப் போன தகவல் வந்தது. சித்திக்கு நான் கிரண் மேல் குற்றம் சாட்டியது பிடிக்கல. எல்லாம் சரியாயிடும். உங்கப்பா, ஒண்னுமில்லாம வீட்டில வச்சிண்டே குடிச்சார். ஒரு அட்டாக் வந்தப்புறம் நானும் எப்படி எப்படியோ வழிக்குக் கொண்டு வந்தேன். இந்தக் காலத்தில் காந்தி சமாசாரம் எதுவும் செல்லு படியாகாது. நிவீணா உன் தலையில் மண்ணள்ளிப் போட்டுக்காதே. சர்வீஸ்ல இருக்கறதுன்னா இப்படி இருக்கத்தான் இருக்கும்...”

“ஆனால், என்னால சகிச்சிக்க முடியல. ஒரு நாள் கண்டபடி திட்டிட்டு, ‘நீ சத்தியத்தை மீறுறவன். எனக்குப் புருசனும், என் குழந்தைக்கு அப்பாவும் வேண்டாம்னு கிளம்பிட்டேன். நாக்பூருக்குப் போனேன். மாமாவின் உபதேசம் பிடிக்கல. அப்ப பவனாரில் வினோபா இருக்கிறார். அங்கே போய் ஒரு மாசம் இருந்தேன். பிரஸ்ஸில் வேலை செய்தேன். பஜாஜின் மனைவி, பெரியம்மா இருந்தார். பிரார்த்தனை, கூட்டு யோகம். எதிலும் மனசு ஈடுபடல... அங்கேருந்து தான் ராம்ஜியின் குருகுலத்துக்கு வந்தேன்...”

அவள் எங்கோ பார்க்கிறாள்.

“ ‘இன்னும் ஒரே ஒரு தடவை எனக்கு சந்தர்ப்பம் குடு அநு, ஒரே ஒரு தடவை!’ன்னு கெஞ்சினார், நாக்பூர் வந்து. நான் கேட்கல தாயம்மா, கேட்கல... ‘சந்நியாசி’ சித்தப்பாக்கு நான் கடைசி காலத்துக்கு ஒரு கால் கட்டா இருந்தேன் காங்டா குருகுலத்தில் நான் டீச்சராகச் சேர்ந்தேன். இதுவும் படிச்சது... அதுக்கப்புறம்...”

“அம்மாஜி, கஸ்தூரி வீட்டுக்குப் போறேன்றா...!” நிமிர்ந்து பார்க்கிறாள்.

“ஓ... மணி ஆறரை ஆயிட்டுதா? மணி ஆனதே தெரியல... தாயம்மா, உங்களுக்கு இன்னிக்குப் போகனுமா? இங்கே இருங்களேன்?"

இவள் சங்கடப்படுகிறாள். அவள் நினைத்து வந்த இலக்கு இப்போது இன்னும் சிக்கலாக இருக்கிறது. என்றாலும், இப்போது முடிவெடுக்க முடியாது. “நா, நாளைக்குக் காலம வரேன் அநும்மா, அங்க ஆளுவ வந்து மரம் வெட்டிட்டிருந்தானுவ ஆள்தான் பாத்துக்கறான். நா, உதவாம என்ன செய்யப் போற? கடசீ காலத்துல, அந்தத் தம்பி...”

நெஞ்சு கமறிக் கண்ணிர் தழுதழுக்கிறது.

“சொக்கத்தங்கம். இந்தக் கேடு கெட்ட உலகத்துல, இப்பிடி ஒரு மனிசன் இருக்க முடியாதுன்னு ஆண்டவன் அழச்சிட்டாருன்னு நெனப்பே... விதி... விதிம்மா!... பக்கத்துல தோட்டம் போட்டு கிளி கொஞ்சும். ஒரு நாயி. சக்தின்னு பேரு வாரா வாரம் பஜனைல வந்து அருமையாப் பாடுவாரு. பானைய வச்சிட்டு தாளம் தட்டுவாரு... உடம்புகென்னு தெரியாத பேச்சேம்மா...!” என்று வருந்துகிறாள்.

குழந்தைகள் டாடா காட்டி விடை கொடுக்க, நாள வரேன் என்று சொல்லி வெளி வருகிறாள்.

இருட்டு வரும் நேரம். அவள் சூழலின் நினைவின்றி நடக்கிறாள்.
 




sarayuvetri

Moderator
Staff member
Joined
Jul 28, 2018
Messages
2,806
Reaction score
1,352
அத்தியாயம் 27


பின்னால் விடுவிடென்று சத்தம் அவளைத் திரும்பிப் பார்க்கச் செய்கிறது...

“மாதாஜி, பிரணாம். நான்தான்!” தாடி, தலைப்பா... “அமாரின் அப்பா.”

“நான் கூடவரேன். இருட்டிப் போச்சி. வழியில கண்ட கஸ்மலங்கள்...”

அவள் சிரிக்கிறாள். “சிங்கு, நீங்க இந்தத் தமிழெல்லாம் பேசுறீங்க?” அவனும் சிரிக்கும் ஒலி கேட்கிறது. “கஸ்மலம்’ங் கறது சமஸ்கிருத வார்த்தை மாதாஜி. அப்படின்னா அழுக்கு, கச்சடான்னுதான் அர்த்தம். இங்க சென்னை பாஷையில, எல்லாம் இருக்கு. “டாப் கயன்டுபூடும், வெத்ல பேட்டுக்குவ... தெரிமா...!” என்று சொல்லி ரசித்துச் சிரிக்கிறான்.

“அதெல்லாம் வாணாம் சிங்கு, எனக்கு இத்தினி நாள் நீங்க இங்க இருக்கிறதே தெரில... இங்க ஏரி இருந்திச்சி. ஏரிவரையிலும் கூட வருவேன். இந்த வூடு இடிக்கிற சனங்கள்ளாம் அங்கங்க கீத்து மரச்சிட்டு குடி இருக்கும்.”

நாற்றம் வந்து விட்டது. முகத்தை மூடிக் கொண்டு நடக்கிறார்கள்.

ஆட்டோ. இரண்டு சக்கர வண்டிகள் போகின்றன. ஒரு பாரவண்டி பளிரென்று ஒளி காட்டி வருகிறது...

“சிங்கு, நீங்க எங்க கடவீதிக்கா வரீங்க? நீங்க பைக்குல போவீங்கல்ல? நடந்து வாரீங்க?”

“உங்களுக்காகத்தா வாரேன், மாதாஜி. உங்ககிட்டப் பேசணும்னு...”

“அப்பிடியா! அநும்மா பத்தித்தான பேசப் போறீங்க? எனக்கு அங்க ஒண்ணும் சரில்ல, சிங்கு. கடசி காலத்துல இவங்களுக்குத் துணையா இருக்குறதுன்னு முடிவு பண்ணிட்டிருக்கிறன். அவுங்க இன்னைக்கு மரத்த வெட்டுறானுக. நாளைக்கே கடப்பாரைய எடுத்திட்டு விட்ட இடிக்க வரமாட்டானுவன்னு என்ன நிச்சியம்...?ஆமா, சிங்கு, நிசாப் பொண்ணு புருசன் எங்கே இருக்காரு, இப்பல்லாம் துபாய், சவுதின்னு பணம் சம்பாதிக்கப் போறாங்க, அப்படியா?...”

“அதைச் சொல்லதா வந்தேன். மாதாஜி. அநுகிட்ட எதும் கேட்காதீங்க. மனசு சரியில்லாம ஒரு மாதிரி இருந்து இப்பதா நல்லாயிருக்காங்க. தேவா போனபோது, அவங்க அங்கிளுக்கு நாங்க சேதி அனுப்பினோம். அநுவோட பிரதர்ஸ் ரெண்டு பேரும், யு.எஸ். போயிட்டாங்க. அவங்க சித்தியும் டில்லில இல்ல. கருணானந்த சாமியும் போயிட்டாங்க. நிசா, படிச்சிட்டு, ‘நியூதியேட்டர்’னு, கிராமங்களிலெல்லாம் ‘அவேர்னெஸ்’ கொண்டாரத்துக்காக தெருவோர நாடகம் எல்லாம் நடத்திட்டிருந்திச்சி. அதில ஒரு பிஹாரி பையன்... அவனுக்கும் இதுக்கும் லவ்னு சொன்னாங்க. ஆனா, கல்யாணம் பண்ணல. ஒருநா, பிஹார்லதா, தாகூர் ஆளுங்க நாடகம் நடக்கிறபோதே குத்திட்டாங்க. அநு... டெல்லிலதா இருக்கா... எங்க அங்கில் பாத்து, பென்சன், அது இதுன்னு எல்லாம் ஏற்பாடு பண்ணிட்டிருக்காங்க. அப்ப இந்த ஷாக்..” இது நடப்பா, கனவா, எங்கே என்று புரியாது அதிர்ச்சியால் அவளுக்கும் கால்கள் இயங்காமல் உறைகின்றன. சில விநாடிகளில் சமாளிக்கிறாள்... முருகா...!

ரெண்டு புள்ளிங்க...

“அது, அநு, வளர்ப்புக்கு எடுத்திட்ட பிள்ளைங்க. தீவிரவாதிங்களால அப்பா அம்மாவைப் பறி கொடுத்தப் பச்சைப் பிள்ளைங்க. பஞ்சாபில ஒரு ஸ்தாபனத்து மூலமா இவ வளக்க எடுத்துக்கிட்ட பிள்ளைகள். அநுவும் நிசாவின், அவ லவர் பையன் சுதாகர் எல்லாரும் சேர்ந்து தான் எடுத்திட்டாங்க...”

எதுவும் பேசத் தோன்றவில்லை.

“மாதாஜி, நீங்க வந்திருந்தால் ஆறுதலாக இருக்கும். இப்பவும், நிசா, அந்த அதிர்ச்சிலேந்து மீளல. பீஹாரிங்க, இதையும் தீவிரவாதின்னு, முத்திரை குத்தி அரெஸ்ட் பண்ணிருப்பாங்க. ஆனா, நல்ல வேளையா, அதெல்லாம் நடக்காதபடி, வேற ஸ்தபானங்கள், சுதாகர் கொலைக்காகக் கண்டனம் செய்த இயக்கங்கள் பாதுகாத்திருக்கு. நிக்கலஸ் சாபுக்குத் தெரியும். நிசாவின் குழந்தைகள்னு சொல்லும். புருசன் இறந்திட்டார்னு, சொல்லும். இந்தப் பக்கம் ஒதுக்குப் புறமா இருக்குன்னாலும், நிசா இப்பகூட ஒரு’என்.ஜி.ஒ.’ இயக்கத்துல இருக்கு. இங்க இன்னும் பழகல. நேத்துத்தாஎங்கோ, ‘எய்ட்ஸ்’ குழந்தைகளுக்கு ஒரு பராமரிப்பு ஹோம் இருக்குன்னு போயிட்டு வந்தா. அப்பதா உங்களப் பார்க்கச் சொல்லி நான் அனுப்பினேன்.”

வீடு வருகிறார்கள். சிங்கும் வருகிறார்.

“ஏம்மா, காலம போனவங்க... எங்க போறீங்க, யாரு வராங்கன்னு புரியல. ஆட்டுக்கு ஆடு தீவிரவாதி ஒளிஞ்சிட்டிருக்கிறானான்னு தேடுறாங்க. அன்னைக்கு ஒராளக் கூட்டிட்டு வந்து குசுகுசுன்னு பேசிட்டிருந்தீங்க. சோறு பண்ணிப் போட்டீங்க. அவரு பைய எடுத்திட்டுப் போனாரு ஆரைத் தேடிட்டு வந்தாரு, எதுக்கு வந்தாருன்னு புரியல. இப்ப இந்த ஆளு ஆரு?...”

சிங்கு பார்க்கிறார். “க்யாஜி? என்னத் தெரியல? பொத்துரி காலேஜில இருக்கிறேன். தேவா சாப் இருக்கிறப் பஜனைக்கு வந்திருக்கிறேன். புரியல?... நா தீவிரவாதி இல்லப்பா?...”

“இல்ல... இல்ல சாரு, ரொம்ப நாளாயிட்டுதா? அதாகப் போகுது பத்து வருசம். வந்திட்டுப் போயிட்டு இருந்தாதான் புரியும் ஒரு பொண்ணு வந்திச்சி. அதும் ஆருன்னு தெரியல...”

“இது பாரு ரங்கா, அது யாரும் இல்ல. உங்க சேர்மன் அய்யா கிட்ட சொல்லு. அன்னிக்கு வந்தது, சுப்பய்யா. இங்க இருந்த அய்யாவின் தொண்டர். குருகுலத்தில் சேவை பண்ணினவரு, மத்தியானம் வந்தது, அநும்மாவின் மக. போதுமா?...’

‘எனக்கொண்ணுமில்லம்மா, நீங்க சொன்னதை அவங்க கிட்டப் போயிச் சொல்றேன். எனக்கென்ன ?...”

“மாதாஜி, நா வரேன். உலகம் எப்பிடியோ போயிட்டிருக்கு. கவலைப்படாதீங்க... வரேன்...”

சிங்கு போகிறார்.

அவள் அந்தப் படங்களைப் பார்த்துக் கொண்டு நிற்கிறாள். உலகில் எத்தனை விதமான துன்பங்கள்! தலை முறைகள் தாருமாறாக வளர்ந்திருக்கின்றனவா ? சாலையில் போகும் பெண்ணைக் கையைப் பிடித்து இழுத்துக் கொலை செய்துவிட்டு அந்தப் பழியை ஒரு ஏழையின் தலையில் சுமத்திப் பாவத்தைக் கொட்டிக் கொள்ளும் தலைமுறை. ஆட்சிக்காரர்களின் அக்கிரமங்களைப் புரிந்து கொண்டு, உரிமைகளுக்குப் போராட இந்த ஏழைகளுக்கு விழிப் பூட்டுவது பற்றிப் பேசுகிறார்கள். வழக்கமாக நடக்கும் கட்சிக் கூட்டங்களில், ஆனால் கட்சிக்கு எதிர்க்கட்சிகள் மேடை போட்டுப் பேசும் போது இந்தச் சொற்கள் செவியைப் பிளக்கும். இங்கேயும் கூட நாலைந்து ஆண்டுகள் எதிரே மைதானத்தில், ஜனவரி ஒன்றாந்தேதிக்கு முந்தையராவில் ‘கலை இரவு’ என்று நாடகங்கள், பேச்சு பட்டி மன்றம் என்று நடத்தினார்கள். இவளும் பார்த்திருக்கிறாள். தப்பட்டையைத் தட்டிக் கொண்டு சட்டையின் மேல் இடுப்பிலும் தலையிலும் சிவப்புத் துணியைச் சுற்றிக் கொண்டு பாடுவார்கள். நடிக நடிகையர் பேரைச் சொல்லி, அவருக்குப் பொண்ணு பிறந்தா கொண்டாட்டம், இவங்களுக்குப் பொண்ணு புறந்தா கோலாகலம். ஆனா குடிசையிலே குப்பாயிக்குப் பொண்ணு புறந்தா கள்ளிப் பாலும் நெல்லுமணியுமா?ன்னு கேப்பாருக. ஏழையின் முன் கடவுள் ரொட்டி ரூபத்தில தான் வருவாருன்னாரு காந்தி. எங்க கட்சியே ‘பிரியாணி’ப் பொட்டலத்தாலதா வளருது’ம்பான். ஆனால் இந்த நாடகங்கள் நடக்கும்போதே அக்கிரமங்கள் நடக்கும். விழிப்புணர்வு வந்ததாக இவளுக்குத் தெரியவில்லை. இப்படி நாடகம் போட்டு, மக்கள் விழிப்புணர்வு கொண்டு, ஆதிக்கக்காரர்களை எதிர்க்க மக்கள் கிளம்பி விடுவார்களோ என்றுதான் குத்தினார்களா?...

அந்தக் காட்சியைப் பற்றிக் கற்பனை செய்தாலே உடல் சிலிர்க்கிறது. துவளுகிறது. சங்கிரியைக் குலைத்துக் கொலை செய்த பாதகம்...

இந்த மண்ணுக்கே தஞ்சம் என்று வந்திருக்கிறார்களா?

சூது வாதறியாத பெண், தீவிரவாதிகளால் பெற்றோரை இழந்த பச்சைக் குழந்தைகளைக் கை நீட்டி அரவணைத்து வளர்க்கும் பெருங்கருணை, இந்தக் ‘கசுமால’ மண்ணில் பிழைத்திருக்குமா? இவர்களுக்கும் தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி உள்ளே தள்ளி விடாதா?

இரவு முழுவதும் உறக்கம் பிடிக்கவில்லை. மண்டை நரம்புக்குள் பல முரண்கள் பிய்த்துப் பிராண்டுகின்றன. பயங்கள், சோகங்கள், இழப்புகள்... ஏன் இப்படி? மண்ணில் விளையாடியது, அப்பனின் தோள் மீது அமர்ந்து திருவிழா பார்த்து, பரிசலில் ஏறிச் சென்றது, சம்பு அம்மா பிசைந்து ஊட்டிய தயிர்ச்சோறு, மொடமொடவென்ற கதர்ச்சீலை -யணிந்து, ஒரு துணையைக் கைபிடித்தது, பசுமையான தாலி அளித்த பாதுகாப்பு, முதல் பிரசவத்தின் போது, சரோ அம்மாவின் மாமியார் இவளைப் பிடித்துக் குடிலுக்குள் பிரசவம் பார்த்தது, அந்த முதல் அழுகை...

எல்லாமே இன்பமான பொழுதுகள். மாலையில் அந்தக் குழந்தைகள் கழுத்தைக் கட்டிக் கொண்டது, வாயில் கேக் வாங்கிக் கொண்டு, அவளையும் ருசிக்கச் செய்தது, எல்லாமே மனசில் பரமசுகம் அளித்த அநுபவங்கள். ஆனால், ஒரு கையகலத்துணிக்குள் பெண்ணுடம்பின் மானத்தை மறைக்கப் போராடும், அபலையாய், மூர்க்க, வெறியர்களின் சூழலில்... சத்தியங்கள்.

எப்படி? எப்படி?... முருகா! முருகா... முருகா... கண்களை மூடித் தூங்க முயற்சி செய்கிறாள். எல்லாவற்றையும் மறக்க வேண்டும். காலையில் எழுந்து கோபமோ, ஆத்திரமோ படாமல் வீடு துப்புரவாக்க வேண்டும். முருகா, உன்னைக் கூப்பிடுவதைத் தவிர எனக்கு ஒன்றும் புரியவில்லை.

முருகன் சூரனை ‘சம்ஹாரம்’ செய்யப் பிறப்பெடுத்தார். சம்பு அம்மாவுடனும் கமலியுடனும் சிவன் கோயில் முன்நடக்கும் இந்தக் காட்சியைப் பார்ப்பார்கள். சூரனுக்கு ஒவ்வொரு தலையா முளைக்கும். பிறகு, எல்லாம் போகும். மயில் வாகனத்தில் முருகன் அங்கிருந்த வீதிகளில் மட்டும் உலா போவார். இவர்கள் இருந்த தெருவுக்கு வராது. அதனால் சம்பு அம்மா அவர்களை இரவு அழைத்துப் போவாள். அந்த சிவன் கோயில் முன் மைதானத்தில்தான் காங்கிரஸ் கூட்டங்கள் ஏற்பாடு செய்வார்கள்... பத்துப் பேர்கூட இருக்கமாட்டார்கள். பயம் தெரியாது. அவளும் கமலியும் உரத்து வந்தே மாதரம் என்று கத்துவார்கள். கமலி இப்போது எங்கு இருக்கிறாள்?

சிறிது நேரம் கூடக் கண்கள் சோரவில்லை. இப்படி இருந்ததே கிடையாது... வாசலில் அடிச் சத்தங்கள் கேட்கின்றன.

பால்வண்டியா போகிறது? பள்ளிக் கூடத்துக்குப் பக்கத்தில் பிளாஸ்டிக் தொட்டிகளை அப்படியே இறக்குவார்கள். அருகில் சாக்கடை இருக்கும். வீட்டிலேயே மாடு கறந்தார்கள். இப்போது இல்லை. பின்புறம் நாடார் கடை ஆச்சி மாடு வைத்திருக்கிறாள். அவளிடம் தான் இப்போது உழக்குப் பால் வாங்கி தோய்க்கிறாள்... ஏதேதோ எண்ணங்கள் ஓடுகின்றன...

பேசாமல் கண்ணமங்கலம் போனால் என்ன ?... அழகாயி கோயில் இருக்கும். ஆத்தில் குளித்துவிட்டு அங்கேயே ஏதேனும் வேலை செய்து, பொங்கித் தின்றால் என்ன?...

இரவு முழுவதும் புடைத்த நரம்புகள், மண்டை கனக்கச் செய்கிறது ஊர்... கண்ணமங்கலம் எப்படி இருக்கும்? அய்யாவின் மூதாதையர் ஊர். அங்குதான் அவள் திருமணம் நடந்தது. அழகாயி, ஊர்த் தெய்வம். பக்கத்தில் பாமணி வாய்க்கால். அடுத்த பக்கத்தில் காலம் காலமான பண்ணையடிமைகளின் குடில்கள் இருந்தன. ஊர்ப் பெரியதனக்காரர்கள், மேல சாதி என்பவர்கள், ஒரே ஒரு தெருதான் ஐயமார் தெரு என்று ஒன்று இருந்தது.

நாலைந்து வீடுகள் தாம். ஏறக்குறைய அம்பது அம்பத்தைந்து வருசங்கள். அய்யாவின் பங்காளி - வகை, பெரியப்பா மகன் ஒருத்தர் தான் ஊரோடு இருப்பதாக ராஜலட்சுமி சொன்னாள். இது மிக உகப்பாக இருக்கிறது. விட்டபந்தம் - மீண்டும் தொற்றிக் கொள்ள வேண்டாம். வாய்க்கால்; காவேரி முங்கிக் குளித்து, சீலையைத் துவைத்து மரத்தில் கட்டி உலரவைத்துக் கல்லைக் கூட்டி சட்டியில் பொங்கி...

உடனே வண்டியேறிவிட வேண்டும் என்ற கிளர்ச்சியில் அவள் எழுந்திருக்கிறாள். உட்காரும் போதே தலை சுற்றுகிறது.

இதென்ன.. இப்படி? ஆட்சி...!

கையை ஊன்றிக் கொண்டு சமாளிக்கிறாள். இரவு உறக்கமில்லை என்றால், பின் கட்டைத் திறந்து கொண்டு இயற்கை வாதனையைத் தீர்த்துக் கொள்ளக் கழிப்பறை நாடும் தொல்லை வரும். ஆனால் முதல் நாள் அவள் அப்படியே படுத்திருந்திருக்கிறாள். சுவரைப் பற்றிக் கொண்டு விளக்கைப் போடுகிறாள். கதவுத் தாழைத் திறக்கிறாள். வாயில் படியைக் கடந்தாள். தலை கிர்ரென்று சுற்ற, நிலை தடுமாறுகிறது. விழுந்தது நினைவில்லை.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top